அபூர்வமான பல பறவையினங்கள் வரும் என்றும், ஒருமுறையேனும் சென்று பார்க்கவேண்டும் என்றும் மனசுக்குள் பலமுறை முடிவெடுத்து முடியாமல் போயி, கடைசியில் போய் வந்தேன் வேடந்தாங்கலுக்கு.
சுமார் தொன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வேடந்தாங்கல். சுமார் எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து போகும் சரணாலயம் !
சென்னையிலிருந்து உள்ளே நுழைந்ததும் மனதை கொள்ளை கொண்ட விஷயம் அருமையான காற்று, சில்லென்ற சூழல். மாலை நேரத்தில் பொழுதைக் கழிக்க பொருத்தமான இடம். அரசும் பார்வையாளர்கள் அமர்ந்து செல்ல நல்ல இருக்கைகளையும், சிறப்பான நிழல் பிரதேசங்களையும் உருவாக்கியிருப்பது மெலிதான வியப்பு. இத்தனைக்கும் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 5, சிறியவர்களுக்கு 2 தான்.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை, வங்காளதேசம் உட்பட பல நாடுகளிலிருந்தும் பறவைகள் வருகின்றன. Herons, Pelicans, Spoonbills, open-billed Storks, Swans, White Ibis, Darters போன்ற அபூர்வமான பறவைகள் எல்லாம் வருமாம். நான் பறவை ஆராய்ச்சியாளன் இல்லை என்பதால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை.
அழகான ஒரு மாலைப் பொழுதை மனைவியுடனும், மகளுடனும் செலவிட்ட திருப்தி அலாதியானது. அதுவும் மகளின் சிரிப்புக்கும், சிலிர்ப்புக்குமிடையே வேடந்தாங்கல் பறவைகளை நலம் விசாரித்த நிகழ்ச்சி பிரமிப்பு.
கணிப்பொறிச் சாளரங்கள் வழியே உலகை ரசிக்கும் வாழ்க்கைக்கு இடையே இயற்கையின் கூடாரத்துக்குள்ளேயே சென்று இயற்கையின் வாசகங்களையும், கவிதைகளையும் விழிபெயர்த்து மனதில் வரைந்து கொண்டது நல்ல ஒரு அனுபவம். பறவைகளோடு பறவைகளாக பறந்து திரிந்து இலேசாகிப் போனது மனசு.
பிரமாதமா இருக்கு. இங்கே அடிக்கடி வரவேண்டும் என்று வழக்கம் போல சொல்லிக்கொண்டோ ம். வாழ்நாளில் இப்படி எத்தனையோ இடங்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று சொல்லி பின் சந்திக்காமலேயே இருந்து விடுதல் நம் எல்லோருக்கும் பரிச்சயமானது தானே !