கிழவனல்ல, கிழக்குத் திசை.

periyar.gif
வார இறுதியில் வாசிக்க நேர்ந்தது “கிழவனல்ல, கிழக்குத் திசை” நூல்.

பெரியாரின் உரைகளும், ஓவியர் புகழேந்தி அவர்களின் பெரியார் ஓவியங்களும் என சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த சிறு நூல்.

பிரமிப்பூட்டும் பல விஷயங்களின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.

வியப்பு ஒன்று : புத்தக தயாரிப்பு. கருப்பு வண்ணத்தில் தங்க நிற பெரியாரின் முகம், பெரிய நூல்களுக்கான தடிமனான அட்டை, அடையாள நூல் என வியக்க வைக்கிறது செலவைப் பற்றிக் கவலைப்படாத தயாரிப்பு.

வியப்பு இரண்டு : ஓவியங்கள். “திசை முகம்” என்னும் தலைப்பில் ஏற்கனவே பல ஓவியக் கண்காட்சிகளைக் கண்ட ஓவியங்கள் இவை. தாடிக் கிழவரின் வயதான முகத்தை இருபத்து ஐந்து விதமாக மிகச் சிறப்பாக வரைந்திருக்கிறார் ஓவியர்.

வியப்பு மூன்று : உரைத் தேர்வு. பெரியாரின் உரை எதை எடுத்தாலும் சிறப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இந்த நூலுக்காக பெரியாரின் பன்முகப் பார்வையை வெளிப்படுத்தும் விதமாக இருபத்து ஐந்து உரைகளைத் தொகுத்திருக்கின்றார் பெ. மணியரசன்.

சுமார் எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே “எதிர்காலத்தில் எல்லோர் சட்டைப்பையிலும் கம்பியில்லா சாதனம் இருக்கும்” என்று பெரியார் சொல்லியிருப்பதை வாசிக்கும் போது செல்பேசி செல்லமாய் சிணுங்குகிறது.

தனது மனைவியின் மறைவு பற்றிப் பேசும்போது பெரியாரின் துணிச்சல் வியக்க வைக்கிறது. தன் மனைவி வீட்டில் ஓர் அடிமை போலவே இருந்தார் எனவும், பேச்சில் பெண்களை உயர்த்திய அளவுக்கு வீட்டில் பெண்ணை நான் உயர்த்தவில்லை, நான் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாய் இருக்கவில்லை என உண்மையை சற்றும் தயக்கமின்றி பேசும் பெரியாரின் துணிச்சல் இன்றைய தலைவர்களிடம் காண முடியாதது.

காந்தியடிகளுடனான உரையாடலில், பார்ப்பனர்கள் யாருமே நல்லவர்கள் இல்லை என பெரியார் சொல்ல, காந்திஜி அதை மறுக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பார்ப்பனரைச் சொல்லவா என காந்திஜி கோபால கிருஷ்ண கோகலே பெயரைச் சொல்கிறார். உடனே பெரியார், மகாத்மா கண்ணுக்கே ஒரு பார்ப்பனர் தான் நல்லவராய் தெரிகிறார் எனின் என்னைப் போன்ற சாதாரண பாவியின் கண்ணுக்கு யாரும் தெரியாததில் ஆச்சரியமில்லை என்கிறார். பெரியாரிடம் இருந்த சூழலுக்கு ஏற்ப சட்டென, தன் நிலையை விட்டுக்கொடுக்காமல் பதிலிறுக்கும் தன்மை இந்த உரையாடலில் வெளிப்படுகிறது.

வள்ளுவரும், பாரதியாரும் பழமைக் கருத்துக்களைச் சொன்னவர்களே, பாரதி தாசன் தான் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர் என்று பாரதி – பாரதிதாசன் மீதான தனது பார்வையை வைக்கிறார்.

இப்படி பெரியாரின் மாறுபட்ட குணாதிசயங்களையும், பார்வைகளையும் இந்த நூல் ஒரு பருக்கைப் பதம் பார்த்திருக்கிறது.

பெரியாருடைய வாழ்க்கையின் பரிமாணங்களையோ, அவருடைய கொள்கைகளின் ஆழத்தையோ அறிந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கில் அணுகவேண்டிய நூல் அல்ல இது. ஓவியங்களால் பெரியாருக்குச் செய்யப்பட்டிருக்கும் மரியாதை என்றே கொள்ளவேண்டும்.

வெளியீடு : தோழமை
விலை ரூ. 110/-
9444302967

“கதவு சந்தானத்தின்” கண்காட்சி சென்னையில்.

kathavu.jpg
ஓவியங்கள் ஒரு முழுமையான கலைக்குரிய அந்தஸ்தையும், முக்கியத்துவத்தையும் பெறவில்லையோ எனும் சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு.

இலக்கியத்தின் பிற படைப்புகளை முன்னிறுத்தும் ஒரு கருவியாகத் தான் படங்களை அல்லது ஓவியங்களை நூல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஓவிய உலகமும் இலக்கிய உலகைப் போன்றே சண்டைகளுடனும், சச்சரவுகளுடனும், கருத்து வேறுபாடுகளுடனும் தான் இயங்கி வருகிறது என்பதையும் ஓவியர்களோடான அறிமுகம் கிடைத்த பின் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பது ஒரு பிரபலமான வாசகம். ஓவியங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை என்றாலும் அதனோடு சிறு அறிமுகம் உண்டு.

அமெரிக்காவில் வாழ்ந்த வருடங்களில் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த ஓவியர் புகழேந்தியும், அதன் பின்னர் அவரோடு நடந்த சில ஓவிய கலந்துரையாடல்களும் ஓவியங்கள் குறித்து சற்று சொல்லிக் கொடுத்தன.

அத்தகைய ஒரு சூழலில் அறிமுகமானவர் தான் சந்தானம். ஓவிய வட்டாரத்தில் கதவு சந்தானம் என்று அழைக்கப்படுகிறார். அதற்குக் காரணம் கதவுகள் குறித்து அவர் ஓவியம் வரைவது தான்.

ஓவியர் சந்தானம் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் இலட்சியமே கதவுகளைக் குறித்த ஓவியங்களை மட்டும் வரைவது என்பது தான்.

கதவுகள் என்பது கலாச்சாரத்தின் அடையாளம் என்கிறார் சந்தானம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இளங்கலை பயின்ற இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (மாஸ்டர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) பெற்றார்.

இவர் ஓவியம் வரையும் விதம் வித்தியாசமானது. கதவுகளை முதலில் சிறிதாக ஒரு மாடல் செய்கிறார். அதில் பாதி கதவு திறந்திருப்பது போல அமைத்து வீட்டின் உள்ளே இருப்பவற்றைக் கற்பனையில் வரைகிறார். இந்த சிறு மாடல் கதவுகளைச் செய்யும் போதும், உண்மையான கதவுகள் செய்யும் போது செய்கின்ற அத்தனை பூஜைகளையும் செய்கிறார் என்பது விசேஷம்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஸ்பெயின் , பார்சிலோனா போன்ற வெளிநாடுகளிலும் கண்காட்சிகள் நடத்தியிருக்கும் சந்தானம் சில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணம் அவருடைய ஓவியங்களின் கண்காட்சி ஒன்று “லலித் கலா அகாடமியில்” இப்போது நடந்து கொண்டிருப்பது தான்.

kathavu2.jpg

நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்

thalai.jpg 

பைம்பொழில் மீரான் அவர்கள் எழுதிய “தலை நிமிர்ந்த தமிழச்சிகள்” எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

இலக்கியம், திரைத்துறை, அரசியல் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய தமிழச்சிகளைப் பற்றிய ஒரு அறிமுகமாக மலர்ந்துள்ளது இந்த நூல்.

ஒளவையார் (அவ்வப்போது அவ்வையார் என்கிறார்) , காரைக்காலம்மையார், ருக்மணி தேவி அருண்டேல், வீணை தனம், கே.பி. சுந்தராம்மாள், குந்தவை, மனோரமா, மணியம்மையார் நாகம்மையார் உட்பட சுமார் ஐம்பது பேரைக் குறித்த விளக்கமான குறிப்புகள் இந்த நூலில் கிடைக்கின்றன.

ஒரு அவசரமான தகவல் புரிதலுக்கு இந்த நூல் பெருமளவில் உதவி செய்கிறது. தேர்ந்தெடுத்த நபர்களைக் குறித்த தகவல்களைச் சேமித்திருப்பதிலும், சலிக்காத நடையைக் கொண்டிருப்பதிலும் நூலாசிரியரின் உழைப்பு தெரிகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் பதிவு செய்ய மறந்து போன பெண்களைக் குறித்த வரலாறுகள் என்று முன்னுரையில் சொல்லும் பைம்பொழில் மீரானின் கூற்று முழுமையாக ஒத்துக் கொள்வதற்கில்லை. நூலில் இருக்கும் ஒளவையாரோ, மனோரமாவோ, கே.பி சுந்தராம்மாளோ மற்ற பல நபர்களோ இருட்டடிப்பு செய்யப்பட்ட நபர்கள் அல்ல என்பது கண்கூடு.

எனினும், ஒரு தொகுப்பாகக் கிடைக்கும் போது பல செளகரியங்கள் உள்ளன. பாதுகாத்து வைப்பது உட்பட.

ஓர் அவசர தகவல் சரிபார்த்தலுக்கு உதவும் நூலாகவும் இதை கணக்கில் கொள்ளலாம்.

நூலில் உள்ளடக்கம் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை. அதிலும் குறிப்பாக இத்தகைய தொகுப்புகளில் உள்ளடக்கம் மிக மிக தேவையானது.

தோழமை வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தகவல் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தோழமை வெளியீடு
பக்கங்கள் 320
விலை ரூ.150/-
தொடர்பு எண் : 944302967

பாலாஜி சக்திவேல் vs பாலு மகேந்திரா

balumahendra.jpg

சாருநிவேதிதாவின் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.

எஸ்.ரா, அழகிய பெரியவன் என எழுத்தாளர்களும், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என இயக்குனர்களும் நிரம்பியிருந்த விழாமேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது நடிகை ஜோதிர்மயி அருகிலேயே அவருடைய காதைக் கடித்தபடி சாரு நிவேதிதா.

சாருநிவேதிதாவின் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கியம் குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவின் இலக்கணங்களை மீறாமல் எல்லோரும் சாருவின் அருமை பெருமைகளை மேடையில் முழங்கிக் கொண்டிருந்தனர்.

சொல்லி வைத்தது போல எல்லோருமே சாரு திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தனர்.

விழாவில் பாலுமகேந்திராவின் பேச்சு ஒரு நிஜமான கலைஞரின் உணர்வு பூர்வமான வெளிப்பாடாக இருந்தது.

சாரு நிவேதிதா தன்னுடைய நூலில் பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பாரதிராஜா எடுத்தால்( கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா ?) அவை அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களோடு ஒரே தராசில் வைத்து எடையிடப் படக்கூடிய வலிமை படைத்ததாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதை சுட்டிக் காட்டிய பாலுமகேந்திரா, என்ன சாரு, என்னுடைய வீடு சந்தியாராகம் எனும் இரண்டு படங்களுமே பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது தான். அவை பெருமைக்குரிய படங்கள் இல்லையா ? அவற்றைக் குறித்த ஒரு தகவல் கூட இல்லையே என்று பேசியபோது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுத்தார். அழுகையை மறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது அவருக்கு.

ஒரு நிஜமான கலைஞர் தன்னுடைய படைப்பிற்குக் கிடைக்க வேண்டிய கவுரவத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவருடைய பேச்சு சுட்டிக் காட்டியது.

ஒரு நியாயமான விமர்சகன் ஒரு விஷயத்தை வெளிப்படையாய் எழுதும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உரக்கச் சொல்வதாகவும் அமைந்தது அது.

அவர் சொன்ன இன்னொரு விஷயம் மிகவும் கனமானது.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை டிரைலரில் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால், ஒரு சண்டை, ஒரு  பாடலுக்கு இடையே அந்த நிகழ்வும் காட்டப்பட்டிருந்தால் அதன் அழுத்தம் எவ்வளவு மலினப்பட்டிருக்கும் என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பாலுமகேந்திராவின் மீது நான் வைத்திருந்த மரியாதையை சற்று அதிகரிக்கச் செய்தது அவருடைய வெளிப்படையான பேச்சு. அதுவும் பாலுமகேந்திரா எனக்கு குரு என்று பாலாஜி சொல்லியிருக்கும் சூழலில் தைரியமாக மேடையிலேயே பாலு பேசியது அவருடைய கருத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியைக் காட்டியது.

பல வேளைகளில் திரையுலகம் செய்கின்ற பிழை இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வியாபார நோக்கத்துக்காக சோகமான நிகழ்வுகளை கமர்ஷியல் அம்சமாக்கி விடுகின்றனர்.

படுகொலைகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அனைத்துமே ஆடல் பாடல்களுடன் அரங்கேறும் போது அந்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழும் சோகம் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படித்தான் நான் எப்போதும் மதிக்கும் பிரமிப்புக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை எழுதினார்…

சுனாமி சீற்றத்தினால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டதற்கு கண்ணீர்க் கவிதை வடித்த கையோடு ஒரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதினார்.

சின்னச் சின்னச் சிகரங்கள் காட்டி
செல்லக் கொலைகள் செய்யாதே

எனும் சில்மிஷப் பாடல்.

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ? என்று.

சுனாமி ஏற்படுத்திய சோகம் சற்றும் விலகாத சூழலில் எப்படி ஒரு கவிஞரால் கட்டும் ஆடையைக் களவாடப் பார்க்கும் காமுகனாக, சில்மிஷத் தென்றலாக சுனாமியை பார்க்கத் தோன்றியது என்னும் அதிர்ச்சி எனக்குள் இப்போதும் உண்டு.

பாலுமகேந்திராவின் நியாயமான கேள்வியும், சமூகப் பிரக்ஞையும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வேண்டும். தங்கள் படைப்புத் திறனும், வியாபாரமும் மட்டுமே பேசப்பட வேண்டும் எனும் வேட்கையை இத்தகைய துயரத் தருணங்கள் குறித்த நிகழ்வுகளிலேனும் சற்று குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் அமர்ந்து படைப்புகளைச் செய்யும் சமூக பங்களிப்பும் மனித நேயமும் வளர வேண்டும்.

தலைமுறை : நூல் விமர்சனம்

img_3166-small.jpg

( சுந்தர புத்தன் )
கூட்டமாக இருக்கும் ரயில் பெட்டியில் நெருக்கி நுழைகையின் உரசிச் செல்லும் மக்களில் சில கவிஞர்கள் இருக்கக் கூடும், சில ஓவியர்கள் இருக்கக் கூடும், சில விமர்சகர்கள் இருக்கக் கூடும்.

தூரத்து புதர்மறைவில் கிடக்கும் பொருளை மோந்து பார்த்து முன்னேறும் மோப்ப நாயின் சக்தியுடன், முகத்தைப் பார்த்து கலைஞர்களை அடையாளம் காணும் வலிமை மனுக்குலத்துக்கு வாய்க்கவில்லை.

எனவே தான் அறிமுகங்கள் அவசியமாகின்றன. பாட்டியின் சுருக்குப் பைக்குள் துழாவும் விரல்களுக்கு சுருக்குப் பையே உலகம். இந்த சுருக்குப் பைகளைப் போல உலகம் அமைந்து போன கலைஞர்கள் ஏராளம் ஏராளம்.

அத்தகையவர்களை அறிமுக வெளிச்சத்தில் பிடித்து நிறுத்தும் பணியைச் செய்ய பெரும்பாலான திறமை சாலிகளால் முடிவதில்லை. மனிதாபிமானமும், சக கலைஞனை மதிக்கும் பரந்த மனமும் இருப்பவர்களால் மட்டுமே அத்தகைய பணியைச் செய்ய இயலும்.

அந்த வகையில் இலக்கிய உலகின் முன்னால் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்திருக்கிறது சுந்தர புத்தன் அவர்களின் “தலைமுறை”.

புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்த நூலில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் சிலர் வெளிச்சப்பரப்புக்குள் வந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய தொல் குடிகளின் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டும் குமார் அம்பாயிரம், கார்ட்டூன்களை வீரியக் கருவியாய் பயன்படுத்தும் முகிலன், மலையாள கலாகிராமத்து உஞ்ஞி கண்ணன், குறும்பட ரேவதி, கிழக்கு பதிப்பக பத்ரி என சம்பந்தம் இல்லாத பல துறைகளிலுள்ளவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.

சுந்தரபுத்தன், பேராச்சி கண்ணன், ரவி சுப்ரமணியம், கார்முகில், அண்ணாமலை, கனகசபை என ஆறு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த நூலில் சுமார் முப்பது பேருடைய அறிமுகம் கிடைக்கிறது.

இந்த நூலை பலர் எழுதியிருந்தாலும் கட்டுரைகளுக்கிடையே மிகப்பெரிய நடை வித்தியாசம் இல்லாமல் இருப்பது உறுத்தலற்ற வாசிப்புக்கு பெரிதும் உதவுகின்றது. எனினும் எழுத்தாளர்களின் கட்டுரைக் கட்டமைப்பில் மெலிதான ஒரு வித்தியாசத்தை உணராமல் இருக்க முடியவில்லை.

அறிமுக நூலுக்குரிய ஒரு சலிப்புத் தன்மை ஏற்படாமல் இலக்கியக் கட்டுரைகளை எழுதும் நேர்த்தியுடன் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது ரசிக்கும் படி அமைந்திருக்கிறது.

எனினும் அறிமுகமாகாத இளைஞர் அறிமுகம் என்னும் கொள்கையுடன் வெளிவந்திருக்கும் நூலில் ஜாக்குவார் தங்கம், பிரான்சிஸ் கிருபா போன்ற பரவலாய் அறியப்பட்ட நபர்களும் இடம் பெற்றிருப்பது சற்றே முரண்.

அருவி வெளியீடாய் வெளி வந்திருக்கும் இந்த நூல் கட்டமைப்பு, வடிவமைப்பு நேர்த்தியில் குறைபாடுகளின்றி சிறப்பாக வந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அருவி வெளியீடு
பக்கம் 112
விலை ரூ. 40
9444302967

வேட்டி கட்டிய இயேசு ! :

img_3808-1.jpg
பல் சமய அடையாளங்களுடன் மிளிரும் கிறிஸ்தவ ஆலயங்கள்

மதங்களைக் கடந்த மனித நேயம் சமுதாயத்தில் உலவ வேண்டும் என்பது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் சிந்தனை கொண்ட அனைவருடைய ஆசையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தகைய சிந்தனையோடு கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சில குமரி மாவட்டத்தின் கிராமங்களில் காணக் கிடைக்கின்றன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

பரக்குன்று, நாகர்கோவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் (மார்த்தாண்டத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் ) தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். இங்கே அமைந்திருக்கிறது “இயேசுவின் திரு இருதய ஆலயம்”. இந்தியக் கலாச்சாரங்களின் அடையாளங்களோடு மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

 img_3033-small-2.jpg

ஜெர்மனியிலிருந்து கிறிஸ்தவ மதப் பணிக்காக இந்தியா வந்த ஜேம்ஸ் தொம்பர் எனும் கிறிஸ்தவப் பாதிரியாரால் 1957ல் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

ஆலயத்தில் நுழைவதற்கு முன் தெப்பக்குளம் ஒன்று இந்துக் கோயில்களில் காணப்படுவது போல படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.

அதைக் கடந்து பல படிகள் ஏறி ஆலய முற்றம் சென்றால் ஆலயம் அழகுணர்ச்சியுடன் தெரிகிறது.

ஆலயத்தின் உச்சியில் இஸ்லாமிய மசூதியின் வடிவத்துடன் கோபுரம் அமைந்துள்ளது.

உள்ளே நுழைந்தால் நீரிலிருந்து வெளிவரும் தாமரை மலர் போல ஆலயத்தினுள் திருமுழுக்குத் தொட்டி ஒன்று வசீகரிக்கிறது.

திராவிடக் சிற்பக்கலை அழகுடனும், வாழ்வுக்கும் வளத்துக்கும் அடையாளமான வாழைப்பூக் குலையுடனும் ஆலயத்தின் உள்ளே கருப்பு நிறத் தூண்கள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.

ஆலயத்துள் நுழைபவர்களுக்கு இந்துக் கோயிலா, கிறிஸ்தவக் கோயிலா, இஸ்லாமியத் தொழுகைக்கூடமா என வியப்பு ஏற்படும் விதத்தில் இந்த ஆலயம் அமைந்துளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆலய விழாவில் சர்வ சமைய தினம் ஒன்று சிறப்பிக்கப்பட்டு பல் சமைய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் சிறப்புற நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

img_3805.jpg

இந்த ஆலயத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லாயன் புரம் ஆலயம். 1965களில் ஜேம்ஸ் தொம்மரால் கட்டப்பட்ட இன்னொரு ஆலயம் இது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கோபுர அழகில் வசீகரிக்கப்பட்ட பாதிரியார் இந்த ஆலயத்தை அதே வடிவில் கட்ட நினைத்தார். வாய்ப்புகளும், வருவாயும் அதற்குப் போதாமல் போகவே சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோபுர வடிவில் இது அமைக்கப்பட்டது.

உள்ளே தோளில் ஆடு சுமக்கும் இயேசு வேட்டி சட்டையில் காட்சியளிப்பது வியப்புக்குரியது !

இந்த ஆலயம் தனது இரண்டு பக்கமும் இஸ்லாமிய தொழுகைக்கூட அமைப்பையும், தூண்களில் இந்துக் கோயில்களின் அமைப்பையும் கொண்டுள்ளது.

சாதீய வேறுபாடுகளில் ஊறிக்கிடந்த மக்களை ஒன்று சேர்த்தது இந்த ஆலயம் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இது குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதிரியார்.

அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல்பாலை எனும் கிராமத்திலும் பாதிரியார் ஒரு ஆலயத்தைக் கட்டினார் அது பத்மநாதபுர அரண்மனையின் கூரை வடிவை உள்வாங்கி கட்டப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் தொம்மர் தன்னுடைய பணிக்காலத்தில் எழுப்பிய ஆலயங்களில் இந்திய கலாச்சாரங்களையும், பிறர் மத அடையாளங்களையும் வெறுமனே வசீகரத்துக்காகக் கொண்டிருக்கவில்லை.

பல் சமய மக்களையும் கலந்தாலோசித்தே தன்னுடைய நிர்வாக முடிவை எடுக்கும் பரந்த மனத்தையும் கொண்டிருந்தார் அவர்.  இவருடைய பணிக்காலத்தில் அடித்தளமிடப்பட்ட சமூக நல்லுறவும், பல்சமைய ஒருமைப்பாடும் அந்த கிராமங்களில் இன்றும் செழித்து வளர்ந்து வருவது அவருடைய பணியின் வெற்றி எனக் கொள்ளலாம்.

இந்தியாவின் தெற்கு ஓரத்தில் கிராமத்து வீதிகளில் சமய ஒற்றுமைக்குக் கரம் கொடுக்கும் ஆலயங்கள் இருப்பது உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருக்கிறது.

பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை

2.jpg
பத்மநாபபுரம் அரண்மனை
வியப்பூட்டும் வரலாற்றுச் சின்னம்

இந்த முறை விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றிருந்த போது எங்கள் ஊருக்கு அருகிலே உள்ள பத்மநாமபுரம் அரண்மனைக்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அந்த அரண்மனை.

பலமுறை பார்த்த இடம் என்றாலும் இன்னும் கம்பீரம் குறையாமல் கேரள அழகு மிளிர வசீகரிக்கிறது பத்மநாபபுரம் அரண்மனை.

கிபி 1592 முதல் 1609 வரை திருவிதாங்கோட்டை ஆட்சி செய்த இரவி வர்மா குலசேகர பெருமாள் இந்த அரண்மனையை கிபி 1601ல் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

சுமார் எண்பத்து ஆறு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாக பரந்து விரிந்து இருந்த இந்த பத்மநாபபுரம் கோட்டைப் பரப்பு தற்போது ஆறரை ஏக்கர் எனுமளவில் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் இருந்தாலும் இந்த ஆறரை ஏக்கர் நிலப்பரப்பையும், அரண்மனையையும் கேரள அரசு தான் பராமரித்து வருகிறது.

உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் நிசப்தமான அறையைக் குறித்து ‘இங்கே தான் வருஷம் பதினாறு படத்தை எடுத்தார்கள்’ என்று வழிகாட்டி சொல்லும்போது எரிச்சல் மேலிடுகிறது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் வரலாற்றை விளக்க ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தொன்னூறு வகையான பூக்களை கூரையின் மரவேலைப்பாடுகளாய் சித்தரித்திருக்கும் இடம், ஒரே மரத்தில் கடைந்தெடுத்த பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் உள்ள கூரை, கூரை முழுவதும் செதுக்கப்பட்டிருக்கும் தாமரைப் பூக்கள் என மரவேலைப்பாடுகள் அரண்மனையை ஆக்கிரமித்திருக்கின்றன.

மன்னனின் ஆலோசனைக் கூடம் திரைப்படங்களில் மிகைப்படுத்தப்படும் விதத்தில் இல்லாமல் சிறு அறை போல அமைந்திருந்து வியப்பூட்டுகிறது. அதே போல பிரஞ்ச் சன்னல் போன்ற அமைப்புடன் அமைந்துள்ள இடம் அம்பாரி முகப்பு என்றழைக்கப்படுகிறது. இது மன்னன் தேரோட்டம் பார்க்கவும், மக்களுக்கு தரிசனம் கொடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

அரசியின் அந்தப்புரம், கட்டில், அறைகள் என இன்னொரு புறம் அமைந்துள்ளது. அங்கே கிருஷ்ணரின் லீலைகள் படம் பிடித்து வைக்கப்பட்டிருப்பது மெலிதாக புன்னகைக்க வைக்கிறது.

பெண்கள் எந்த உரிமைகளும் இல்லாமல் இருந்த நிலை இங்கும் புலனாகிறது. அவர்கள் அரண்மனை நாட்டிய அறையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளைக் கூட மேல் தளத்திலிருந்து சிறு துளை வழியாகவே பார்த்து ரசிக்க முடியும்.

இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய பெரிய இரண்டு அறைகள் அன்றைய அரசர்களின் அன்னதான பணிகளை விளக்கும் விதத்தில் இருக்கிறது.

மலையாளமும் தமிழும் கலந்த அரண்மனைப் பணியாளர்கள் அந்த அரண்மனையில் பதினான்கு மன்னர்கள் வாழ்ந்ததையும், கடைசியாக ஆண்ட மார்த்தாண்ட வர்மாவின் கதைகளையும் சுவாரஸ்யமாய் விளக்குகின்றனர்.

பெரிய அறை ஒன்றில் வரையப்பட்டுள்ள பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டுவீட்டுப் பிள்ளைமார் செய்யும் சதிச் செயல்களையும் படம் பிடிக்கிறது.

ஒருமுறை கோயிலில் தனியே கடவுளைத் தரிசிக்க வரும் மன்னனைக் கண்டு கொண்டு அவரைக் கொல்ல வாசலில் வாள்களோடு காத்திருக்கின்றனர் எதிரிகள். உள்ளே மன்னனுக்கு விஷயம் புரிந்து விடுகிறது. ஆனால் மன்னனும் பூசாரியும் தவிர யாரும் உள்ளே இல்லை.

மன்னன் வெளியே வந்தால் தலை உருள்வது நிச்சயம். பூசாரி மன்னனைப் பணிகிறான். மன்னர் பூசாரியின் ஆடையை அணிந்து வெளியே வந்து தப்பிச் செல்கிறார். பூசாரி மன்னனின் ஆடையுடன் வெளியே வந்து வாளுக்கு இரையாகிறார்.

இப்படி பல கதைகள் ஓவியங்களில் உயிரோட்டமாய் உலவுகின்றன. பெரும்பாலும் மன்னனின் உதவிகளும், பரிசுகளும் பிராமணர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

127 அறைகள் கொண்ட அரண்மனையில் பல அறைகள் இன்று பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. கீறல் விழுந்த சுவர்களும், வசீகரம் இழந்த பாதையுமாக பல இடங்கள் பராமரிப்பை கெஞ்சும் நிலையில் இருப்பது வேதனை.

எனினும் அரண்மனையில் புராதனம் கெடாமல் பார்த்துக் கொள்ளும் விதம் உண்மையிலேயே பாராட்டுதற்குரியதே. குதிரைக்காரன் விளக்கு, சீனாவிலிருந்து வந்திருந்த ஊறுகாய் பானைகள், வித்தியாசமான பூட்டுகள், ஆட்டுரல், என எல்லாமே ரசிப்பதற்குரியனவாக இருக்கின்றன அரண்மனையில்.

முந்நூறு வருடங்களுக்கு முந்தைய கடிகாரம் ஒன்று இப்போதும் உயிர்த்துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பூட்டப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை இக்கட்டான சூழல் வந்தால் மன்னனின் குடும்பம் தப்பிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.

குறுகிய படிக்கட்டுகளும், நல்ல சில்லென பாதங்களை குளிர்விக்கும் தரையும் என மாறி மாறி வரும் அறைகளில்  சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை கற்பனைகளில் கொண்டு வந்து பார்த்தால் சிலிர்க்கிறது.

முப்பத்து எட்டு கிலோ எடையுள்ள உருண்டையான கல் ஒன்று முற்றத்தில் இருக்கிறது. அரச படையில் சேர விரும்புபவர்கள் அந்த கல்லைத் தூக்க வேண்டும். ஒருமுறை இருமுறை அல்ல, நூறு முறை தொடர்ந்து தூக்க வேண்டுமாம் !

ஒரு அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் அது. வரலாறுகளின் மடியில் காலம் எப்படி புரண்டு விளையாடியிருக்கிறது என்பதை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

செயற்கை விளக்குகள் ஏதும் பொருத்தப்படாததால் அரண்மனை அனுமதி மாலை நான்கரை மணியுடன் முடிவடைந்து விடுகிறது. அற்புதமான வேலைப்பாடுகளுடன் வரலாற்றின் விரல் பிடித்து நடக்கும் சுக அனுபவம் இந்த அரண்மனை தரிசிப்பில் கிடைக்கிறது. அந்த அனுபவத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக போய் வரலாம்.


 

சார்த்தரின் சொற்கள் : நூல் விமர்சனம்

sar.jpg
பிரஞ்ச் தத்துவஞானியான ஜீன் பால் சாத்ரூ ( சார்த்தர் ) வைப் பற்றியும் அவருடைய எழுத்துக்களைக் குறித்தும் எனக்குக் கிடைத்த முதல் அறிமுகம் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களிடமிருந்து தான். அவர் மிகவும் சிலாகித்துப் பேசும் சார்த்தர் எனக்கு பிடிபடாதவராகவே இருந்தார்.

‘மனிதனின் இருத்தல் அவனைச் சுற்றிலுமுள்ள உலகத்தைப் படைக்கிறது’ என்பது போன்ற ஆழப் பரந்து விரியும் தத்துவார்த்த சிந்தனைகளின் சொந்தக்காரர் அவர் என்பதனாலேயே அவர் மீதான பிரமிப்பு விரிவடைந்தது. எனினும் அவருடைய நூல்கள் எதையும்  முழுமையாய் வாசித்ததில்லை.

சமீபத்தில் தான் அவருடைய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சொற்கள்’ எனும் நூலைப் படிக்க நேர்ந்தது. ஐம்பத்து ஒன்பதாவது வயதில் சார்த்தர் எழுதிய “The Words” எனும் நூலின் தமிழாக்கத்தை எழுத்தாளரும், மருத்துவருமான திரு வசந்த் செந்தில் தந்திருக்கிறார்.

ஐம்பத்து ஒன்பது வயதான ஒருவருடைய மழலைக்கால நிகழ்வுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நூலைக் கொள்ளலாம்.

சார்த்தரின் மழலைக்காலக் கனவுகளில் அன்றைய சமூக அரசியல் முகமும் கூடவே வருவது அவருடைய அனுபவத்தின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.

தன்னுடைய தத்துவார்த்த சிந்தனைகளை மழலைக்கால அனுபவங்களின் வாயிலாகவும் அவர் சொல்ல முயற்சித்திருப்பது சார்த்தரின் ஆளுமையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதனாலேயே அவருடைய மழலைக்கால நினைவுகள், மழலைக்காலத்துக்கே உரிய துடிப்பை சற்று இழந்து விடுகிறது.

வசந்த் செந்தில் தன்னுடைய கவிதைகளுக்கு துள்ளல் நடையையும், கட்டுரைகளுக்கு எள்ளல் நடையையும் கொண்டிருப்பவர். இந்த மொழிபெயர்ப்புக்கு அவர் கடினமான ஒரு நடையை பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு வேகமான வாசிப்பை அவருடைய மொழிபெயர்ப்பும், பக்கங்கள் கணக்காக விரியும் பத்திகளும் தடுத்து நிறுத்திவிடுகின்றன. ஒருவகையில் நிதானமான வாசிப்பையே சொற்கள் எதிர்பார்க்கின்றன என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

ஆனால் ஒரு டப்பிங் ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு மேலிடுவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பே முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நினைவுகளை மீண்டெடுப்பது சுவாரஸ்யம். அதுவும் மழலைக்கால நினைவுகளை திரும்பிப் பார்ப்பது அதைவிட சுவாரஸ்யம். அந்த சுவாரஸ்யத்தையும் சீரியஸாகச் செய்து பார்த்திருக்கிறார் சார்த்தர்.

சார்த்தர் என்னும் தத்துவ மேதையின் பாசாங்கற்ற மழலைக்கால அனுபவங்களை தத்துவ வெளிச்சத்தில் வாசித்துப் பார்க்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த நூல் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பக்கம் 238 : விலை 125/-
தோழமை வெளியீடு
5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே. நகர்,
சென்னை 78
9444302967

என்னைப் பற்றி நானே பெருமையாய் நினைக்கும் 8 விஷயங்கள் !

xvr.jpg
என்னைப்பற்றி நானே பெருமையாய் நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. கிராமத்தில் பிறந்ததும், கிராமம் சார்ந்த வாழ்க்கையை அன்பான குடும்பத்தினரோடு கால் நூற்றாண்டு காலம் செலவிட்டதும், ( பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி படித்ததன் அருமை இப்போது தான் புரிகிறது ! )

2. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்னுடைய கவிதை ஒன்றைப் பாராட்டி அனுப்பிய மடல்.

3. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் சிறந்த கவிஞராக எனை தேர்வு செய்து என்னுடைய கவிதைகள் அனைத்தையும் தொகுத்தது. ‘சேவியர் கவிதைகள் காவியங்கள்’ எனும் தலைப்பில் அது ஆயிரம் பக்க புத்தகமாக என்னை சிலிர்க்க வைத்தது.

4. கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு என பத்து புத்தகங்களை இதுவரை வெளியிட்டிருப்பது. மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி ஒளிபரப்பானது.

5. சுஜாதாவின் புது நானூறு பகுதியில் எனது கவிதை இடம் பிடித்தது. ‘இயேசுவின் கதை’ நூலுக்கு விருது வாங்கியது. இன்னும் பல போட்டிகளில் பரிசுகள் வென்றது.  கல்கி, குமுதம், புதிய பார்வை, சண்டே இந்தியன் உட்பட பல வெகுஜன இதழ்களிலும், நிறைய இணைய இதழ்களிலும் படைப்புகள் வெளியானது. ஜெர்மனியிலிருந்து வெளியான ‘காதல் வேகம்’ ஆல்பத்திற்குப் பாடல்கள் எழுதியது

6. மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜராய் முழுநேர வேலையாய் இருந்தாலும் குடும்பத்தினரோடு செலவிடவும், இரண்டு தளங்களை தினமும் அப்டேட் செய்யவும், இதழ்களுக்குக் கட்டுரை எழுதவும், நூல் எழுதவும் நேரம் கண்டு பிடிப்பது.

7. நேரில் பார்க்காமலேயே உள் மனதின் ஆழமான நம்பிக்கையின் துணையோடு திருமணம் செய்தது. ஜாதகம், ஜோசியம், நாள், நேரம் என எந்தவிதமான பழக்கங்களையும் பார்க்காமல் திருமணத்தை நடத்தியது. ( ஆனந்தமான வாழ்க்கை வாழ்வது )

8. நல்ல பொறுமை சாலியாக இருக்க முடிவது. ( சென்னை டிராபிக்கில் யாரையும் திட்டாமல், எரிச்சலடையாமல் ஒரு மணி நேரம் காரோட்ட முடிவது ஒரு உதாரணம் 🙂  . எல்லாவற்றையும் விட முக்கியமாய் ஐகாரஸ் பிரகாஷ் போல நிறைய நல்ல நண்பர்களைச் சம்பாதித்திருப்பது.

அட !! சுய தம்பட்டம் அடிப்பது நல்லா தான் இருக்கு !

சரி.. என் பங்குக்கு நானும் எட்டு பேரை அழைக்கிறேன்.
சிரில் அலெக்ஸ் 
நேர்மை
கலை அரசன்
நவீன் பிரகாஷ்
ரவி
உண்மைத் தமிழன் 
செல்வேந்திரன்
நளாயினி 
 

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன்

நேற்று சத்யம் திரையரங்கில் சிவாஜி பிரிவ்யூ பார்த்தேன்… அதுகுறித்த எனது பதிவு இதோ !

http://sirippu.wordpress.com/2007/06/15/sivaji-11/