Seven Pounds : விமர்சனம்

ws

சிறிது நாட்களுக்கு முன் பார்த்த மனதை ரொம்பவே நெகிழச் செய்த The Pursuit Of Happyness  படத்தை மனதில் வைத்துக் கொண்டு கடந்த வார இறுதியில் செவன் பவுண்ட்ஸ் படத்தைப் பார்த்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இரண்டு மணிநேரங்கள் படத்தைப் பார்த்தபின் தான் புரிந்தது.

ஒரே இயக்குனர், ஒரே நடிகர் என்பதற்காக படமும் அதே தரத்துடன் இருக்காது என்பது நம்ம ஊர் பி.வாசு முதல் ஹாலிவுட் பட இயக்குனர்  Gabriele Muccino  வரை செல்லுபடியாகிறது.

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என அவசர போலீசுக்கு அழைப்பு விடும் திடுக் நிமிடத்துடன் ஆரம்பிக்கும் படம், முதல் அரை மணி நேரம் கதாநாயகன் என்ன செய்கிறான், எங்கே போகிறான் என்பது புரியாத புதிராக குழப்பமாக விரிகிறது.

பல இடங்களில் இதென்ன இப்போ நடப்பதா, முன்னரே நடந்ததா என்பதே கூட புரியவில்லை. ஏதோ மிகப்பெரிய சஸ்பென்ஸ் உள்ளுக்குள் உறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து உற்று உற்றுப் படத்தைப் பார்த்ததில் கண் வலி தான் மிச்சம்.

தனது வாழ்வில் ஏற்பட்ட ஒரு சோகத்தினால் மனம் உடைந்து போன வில் ஸ்மித், நல்லவர்களாய் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்கிறார் என்பதே கதை.

எப்படி உதவி செய்கிறார் என்பது திடுக். தனது உடல் உறுப்புகளையே வழங்குகிறார் நாயகன். கடைசியில் தான் தற்கொலை செய்து கொண்டு தனது இதயத்தை இதய நோயாளியான ஒரு பெண்ணுக்கு வழங்குகிறார்.

நம்ம எஸ் ஏ சந்திரசேகர் கூட இப்படி ஏதோ ஒண்ணு எடுத்திருக்காரேன்னு யோசிக்கிறீங்களா ? படம் முழுக்க அழுகாச்சி தமிழ் சீரியலுக்கு சவால் விடும் காட்சிகள்.

தொட்டால் வெடித்து விடும் அழுகையுடன் படம் முழுக்க வில் ஸ்மித்தைப் பார்ப்பதே சகிக்கவில்லை. முழுக்க முழுக்க அழுகாச்சி முகத்துடன் வருவதால் மனதில் எழவேண்டிய ஒரு கனமான உணர்வுக்குப் பதில் சலிப்பே மிஞ்சுகிறது.

ஏன் ஏழுபேருக்கு உதவ வேண்டும், ஏழு என்பதை மதப் பின்னணியில் தேர்ந்தெடுத்தாரா ?எப்படி அந்த ஏழுபேரும் கவனத்துக்குரியவர்களாகிறார்கள் ? , அவர்கள் நல்லவர்கள் தானா என ஏன் கதாநாயகன் சோதிக்கிறான்  ? என்பதெல்லாம் விடை பெறாத கேள்விகள். 

காதலன் தன் காதலியை விபத்தில் இழப்பது கூட, காரோட்டும் போது பிளாக் பெர்ரியை நோண்டும் கதாநாயகன் மீது கோபத்தை ஏற்படுத்துமளவுக்கு சோகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம்.

பார்வையிழந்தவர் நல்லவரா என சோதிக்க சகட்டு மேனிக்குத் திட்டும் கதாநாயகன், தன்னை உயிராய் நேசிக்கும் புதுக் காதலிக்காக இதயத்தையும் கூடவே வலியையும் கொடுத்துச் செல்லும் கதாநாயகன், தன்மீது அதீத பாசம் வைத்திருக்கும் சகோதரனை மட்டும் கண்டுகொள்ளாத கதாநாயகன் என ஒரு வரையறையற்ற பிம்பம் கதாநாயகனைச் சுற்றி விழுகிறது.

மிக அதிகமாய் எதிர்பார்க்க வைக்கும் முதல் பாதிக் காட்சிகள், அதை நிவர்த்தி செய்ய வலுவற்ற அழுத்தமற்ற பின்னணி என படம் அல்லாடுகிறது. அதனால் தான் கடைசியில் கதாநாயகன் தற்கொலை செய்யும் போதும் … ம்ஹூம்….

கடவுளைக் கழுவி வைத்தது போல ஒரு கதாநாயகன் படம் முழுக்க ஒரே செண்டிமெண்ட் மழை.

சேரனை வைத்து யாரேனும் தமிழில் இயக்கலாம்.

பாலாஜி சக்திவேல் vs பாலு மகேந்திரா

balumahendra.jpg

சாருநிவேதிதாவின் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.

எஸ்.ரா, அழகிய பெரியவன் என எழுத்தாளர்களும், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என இயக்குனர்களும் நிரம்பியிருந்த விழாமேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தது நடிகை ஜோதிர்மயி அருகிலேயே அவருடைய காதைக் கடித்தபடி சாரு நிவேதிதா.

சாருநிவேதிதாவின் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கியம் குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் என மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வழக்கமான புத்தக வெளியீட்டு விழாவின் இலக்கணங்களை மீறாமல் எல்லோரும் சாருவின் அருமை பெருமைகளை மேடையில் முழங்கிக் கொண்டிருந்தனர்.

சொல்லி வைத்தது போல எல்லோருமே சாரு திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தனர்.

விழாவில் பாலுமகேந்திராவின் பேச்சு ஒரு நிஜமான கலைஞரின் உணர்வு பூர்வமான வெளிப்பாடாக இருந்தது.

சாரு நிவேதிதா தன்னுடைய நூலில் பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டு பாடல்கள் இல்லாத திரைப்படங்களை பாரதிராஜா எடுத்தால்( கேப்டன் மகள் – என்று ஒரு படம் வந்ததை சாரு மறந்து விட்டாரா ?) அவை அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களோடு ஒரே தராசில் வைத்து எடையிடப் படக்கூடிய வலிமை படைத்ததாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதை சுட்டிக் காட்டிய பாலுமகேந்திரா, என்ன சாரு, என்னுடைய வீடு சந்தியாராகம் எனும் இரண்டு படங்களுமே பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்டது தான். அவை பெருமைக்குரிய படங்கள் இல்லையா ? அவற்றைக் குறித்த ஒரு தகவல் கூட இல்லையே என்று பேசியபோது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுத்தார். அழுகையை மறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது அவருக்கு.

ஒரு நிஜமான கலைஞர் தன்னுடைய படைப்பிற்குக் கிடைக்க வேண்டிய கவுரவத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவருடைய பேச்சு சுட்டிக் காட்டியது.

ஒரு நியாயமான விமர்சகன் ஒரு விஷயத்தை வெளிப்படையாய் எழுதும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை உரக்கச் சொல்வதாகவும் அமைந்தது அது.

அவர் சொன்ன இன்னொரு விஷயம் மிகவும் கனமானது.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இத்தகைய துயரமான நிகழ்வு ஒரு கனமான ஆவணப் படமாக எடுக்கப்பட வேண்டியதேயன்றி ஆடல் பாடல்களுக்கு இடையே காட்டப்பட வேண்டியதல்ல. என்னை பல நாள் தூக்கமிழக்கச் செய்த அந்த மாணவிகளின் ஓலத்தை இப்படி வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது சரியல்ல என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை டிரைலரில் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால், ஒரு சண்டை, ஒரு  பாடலுக்கு இடையே அந்த நிகழ்வும் காட்டப்பட்டிருந்தால் அதன் அழுத்தம் எவ்வளவு மலினப்பட்டிருக்கும் என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பாலுமகேந்திராவின் மீது நான் வைத்திருந்த மரியாதையை சற்று அதிகரிக்கச் செய்தது அவருடைய வெளிப்படையான பேச்சு. அதுவும் பாலுமகேந்திரா எனக்கு குரு என்று பாலாஜி சொல்லியிருக்கும் சூழலில் தைரியமாக மேடையிலேயே பாலு பேசியது அவருடைய கருத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியைக் காட்டியது.

பல வேளைகளில் திரையுலகம் செய்கின்ற பிழை இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வியாபார நோக்கத்துக்காக சோகமான நிகழ்வுகளை கமர்ஷியல் அம்சமாக்கி விடுகின்றனர்.

படுகொலைகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அனைத்துமே ஆடல் பாடல்களுடன் அரங்கேறும் போது அந்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழும் சோகம் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படித்தான் நான் எப்போதும் மதிக்கும் பிரமிப்புக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து ஒருமுறை எழுதினார்…

சுனாமி சீற்றத்தினால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டதற்கு கண்ணீர்க் கவிதை வடித்த கையோடு ஒரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதினார்.

சின்னச் சின்னச் சிகரங்கள் காட்டி
செல்லக் கொலைகள் செய்யாதே

எனும் சில்மிஷப் பாடல்.

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ? என்று.

சுனாமி ஏற்படுத்திய சோகம் சற்றும் விலகாத சூழலில் எப்படி ஒரு கவிஞரால் கட்டும் ஆடையைக் களவாடப் பார்க்கும் காமுகனாக, சில்மிஷத் தென்றலாக சுனாமியை பார்க்கத் தோன்றியது என்னும் அதிர்ச்சி எனக்குள் இப்போதும் உண்டு.

பாலுமகேந்திராவின் நியாயமான கேள்வியும், சமூகப் பிரக்ஞையும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வேண்டும். தங்கள் படைப்புத் திறனும், வியாபாரமும் மட்டுமே பேசப்பட வேண்டும் எனும் வேட்கையை இத்தகைய துயரத் தருணங்கள் குறித்த நிகழ்வுகளிலேனும் சற்று குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் அமர்ந்து படைப்புகளைச் செய்யும் சமூக பங்களிப்பும் மனித நேயமும் வளர வேண்டும்.

சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன்

நேற்று சத்யம் திரையரங்கில் சிவாஜி பிரிவ்யூ பார்த்தேன்… அதுகுறித்த எனது பதிவு இதோ !

http://sirippu.wordpress.com/2007/06/15/sivaji-11/

லேடி இன் த வாட்டர்


நைட் ஷாமளானின் படங்களை நான் தவற விடுவதேயில்லை. நம்ம ஊர்காரர் என்னும் பாசமும் ஒரு காரணமாக இருக்கலாம் சைன்ஸ் படம் வெளியான போதும், இந்த படம் வெளியான போதும் அமெரிக்காவிலே இருந்ததால் முதல் நாளே படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆதியில் மனித இனம் தண்ணீருக்குள் வாழ்ந்ததாகவும், பின் தரையை நோக்கி ஒரு பகுதியினர் இடம் பெயர்ந்ததாகவும் ஆரம்பிக்கிறது கதை. தரையில் வாழும் மனிதர்கள் சுயநல எண்ணங்களினால் கறைபடிகிறார்கள். தண்ணீருக்குள் வாழ்பவர்கள் இன்னும் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள். நீரில் வாழும் அவர்கள் தரையில் வாழும் மனித குலத்தை மீட்பதற்கான செய்திகளுடன் அவ்வப்போது வருகிறார்கள் ஆனால் தகவல் சொல்ல முடியாமலேயே போய்விடுகிறது. காரணம் தண்ணீர் உலகிலிருந்து தரை உலகிற்கு வருபவர்களைத் தடுப்பதற்காக ஸ்க்ரண்ட் என்னும் விலங்கும் தண்ணீர் தேசத்திலிருந்து வருகிறது.

இப்போதும் தண்ணீருக்கும் வாழும் பெண்ணொருத்தி ஒரு அப்பார்ட்மெண்ட் நீச்சல் குளத்தில் வருகிறாள். சேதியைச் சொல்லிவிட்டு இவள் திரும்பவேண்டும். அதற்குத் தடையாய் இருக்கும் விலங்கிடமிருந்து தப்பவேண்டும். வந்த விஷயம் நிறைவேறியவுடன் ஒரு கழுகு வந்து இவளைக் கூட்டிச் சென்றுவிடும். கழுகிடம் இவளை பத்திரமாக ஒப்படைக்கும் வேலை டைரக்டருக்கும் சகாக்களுக்கும்.

இப்படி ஒரு சிறுவர் கதை தான் லேடி இன் த வாட்டர்.

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகிறவர்கள் ஆவியால் அலைவார்கள். அவர்களுடைய விருப்பம் நிறைவேறிய பின்பு தான் அவர்கள் ஆவி வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள் என்ற ஆயிரங்கால நம்ம ஊர் கதையை சிக்த்ஸ் சென்ஸ் ஆக்கி வெற்றி கண்ட இயக்குனர், இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்களை இன்னொரு விதமான அனுபவத்துக்கு இட்டுச் செல்ல முயன்று தோல்வியடைந்திருக்கிறார்.

நைட் ஷாமளானின் சிக்ஸ்த் சென்ஸ், அன்பிரேக்கபிள், சைன்ஸ், வில்லேஜ் போன்ற நான்கு படங்களுக்கும் இந்த படத்துக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், முதல் நான்கு படங்களும் படம் முடிந்தபின் ஒரு வியப்பை நமக்குள் விட்டுச் சென்றன. இந்த படம் ஒரு சின்ன சலிப்பை விட்டுச் சென்றிருக்கிறது.

இயக்குனரும் நடித்திருக்கிறார். பேரரசுகளுக்கு அவர் எவ்வளவோ பரவாயில்லை. ஆனாலும் அவருக்கு அது தேவையில்லை என்பதே என்னுடைய கணிப்பு. நடித்திருப்பவர்கள் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலொன்றும் பிழையில்லை ஒட்டு மொத்தமாய்ப் பார்க்கையில் தான், இதற்குப் போய் எதற்கு இத்தனை பில்டப் என்று தான் தோன்றுகிறது.

மனிதர்களின் இயல்பின் மேல் பல்வேறு அடுக்குகள் படர்ந்திருக்கின்றன. அது அனுபவமாகவோ, புகழாகவோ, பணியாகவோ, பெற்றுக் கொண்ட அறிவாகவோ இருக்கிறது. அது நம் இயல்பின் தன்மைகளைச் சிதைத்து நம்முடைய உண்மையான வாழ்வின் அர்த்தத்தை கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது என்பது தான் இந்தப் படத்தில் இழையோடும் செய்தி.

திடீரென்று முன்னால் குதிக்கும் மிருகம், அதிர வைக்கும் இசை என்பதைத் தவிர வேறேதும் திருப்திகரமான விதத்தில் இந்தப் படத்தில் இல்லை. சிறுவர்கள் இது பெரியவர்களுக்கான படம் என்று நினைக்க, பெரியவர்கள் இது சிறுவர்களுக்கான படமோ என்று ஒதுங்க, சிறுவர்களுக்குமில்லாமல், பெரிவர்களுக்குமில்லாமல் இந்த படம் தோல்வியில் விழுந்துவிட்டது. அடுத்த படத்தை கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார்.
 
படம் முடிந்தபின்பும் யாரும் நகரவில்லை, காரணம் படம் முடிந்துவிட்டது என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை.
திரை வெள்ளையான பின் பார்வையாளர்களிடமிருந்து ஒலித்த சில வார்த்தைகள், ‘what ?’ ..’Is that it ?’