தன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க !

சிலர் வெற்றி பெறவேண்டுமென கனவு காண்பார்கள். சிலர் விழித்தெழுந்து கடின உழைப்பால் வெற்றியின் பாதையில் நடப்பார்கள். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு ! ஆனால் அதைவிடக் கடினமானது கிடைத்த வேலையில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விடுவது ! 

சிலரைப் பாருங்கள். அலுவலகத்தில் நுழைந்த சில வருடங்களிலேயே வெற்றிப் படிகளில் தடதடவென ஏறிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ முதல்படியிலேயே முடங்கி விடுவார்கள். 

வெற்றி எட்டாக்கனியுமல்ல, கைகளில் கிட்டாக்கனியல்ல. சரியான முறையில் வேலையை அணுகினால் உயர் பதவிகள் உங்களுக்கே !

வேலையில் நுழைந்ததும்அப்பாடா.. எல்லாம் முடிந்து விட்டதுஎன நினைத்து விடாதீர்கள். இப்போது தான் கதவு திறந்திருக்கிறது, இனிமேல் தான் உங்கள் பயணம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 

புதிதாக அலுவலகத்துக்குள் வரும் நபரை எல்லோரும் கவனிப்பார்கள். கவனமாய் இருக்க வேண்டிய தருணம் இது. உஷாராய் வேலையிலேயே லயித்திருங்கள்.

கேள்வி கேட்காதவர்கள் பதில்களைப் பெற்றுக் கொள்வதில்லை. உங்களுக்குத் தெரியாததைத் தயக்கமின்றிக் கேளுங்கள். புதிதாய் வேலையில் சேர்ந்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் எல்லோருமே பொறுமையாய்ப் பதில் சொல்வார்கள். ஆனால் துவக்கத்தில் தயக்கம் காட்டிவிட்டு நாலு மாதம் கழிந்து கேள்விகள் கேட்டால்இன்னுமா இதையெல்லாம் கத்துக்கல ?” என ஒரு வில்லன் லுக் விடுவார்கள். 

உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையைக் கவனமாகச் செய்யுங்கள். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலையை எவ்வளவு நேர்த்தியாக, விரைவாக, அழகாகச் செய்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களைப் பெரிய வேலைகள் வந்தடையும். இந்த அடிப்படை விஷயத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

புரோ ஆக்டிவ்னெஸ்எனப்படும் தாமாகவே முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும், ஐடியாக்கள் சொல்வதும் உங்களைக் கவனிக்க வைக்கும்.“ சுறுசுறுப்பு பார்ட்டிஎனும் இமேஜ் உங்களுடைய வளர்ச்சிக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

 காலம் காலமா இப்படித் தான் …..” என்று பல வேலைகள் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும். அதை சீர்திருத்தவோ, புது மாதிரியாக முயற்சி பண்ணவோ பலரும் தயங்குவார்கள். நீங்கள் அந்த விஷயத்தில் தயக்கம் காட்டக் கூடாது. “இப்படிச் செஞ்சா என்ன ?” என்பன போன்ற புதுப் புது ஐடியாக்களை மேலதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். “நமக்குத் தோணாம போச்சேஎன உங்கள் மேலதிகாரி எப்போதேனும் நினைத்தால் உங்களுக்கு ஜாக்பாட் தான்.

உங்க வேலைகள், கடமைகள் இவை தான்என மேலதிகாரி ஒரு லிஸ்ட் கொடுப்பார். ஒருவேளை அப்படி ஏதும் தரப்படவில்லையேல் அமைதியாக இருக்காதீர்கள். நீங்களாகவே ஒரு லிஸ்ட் தயார் செய்து கொண்டு மேலதிகாரியின் கதவைத் தட்டுங்கள். “சார்.. என்னோட பணிகள் இவையென நினைக்கிறேன். சரிதானே ? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா ?” என தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் ! சபாஷ் பெறுவீர்கள் !

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் மேனேஜரிடம் போய் உங்களைப் பற்றிய அவருடைய அபிப்பிராயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த பணிகளில் நீங்கள் சரியாகச் செயல்படுகிறீர்கள், எந்த இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது எனும் இரண்டு பிரிவுகளில் உங்களுடைய உரையாடல் இருப்பது நல்லது.

உசுரைக் கொடுத்து உழைக்கிறது நான் ! பேரெடுக்கிறது அவனா ? ” என்பது அலுவலகத்தில் உலவும் கற்காலக் கம்ப்ளையிண்ட். உங்கள் மேலதிகாரியுடனான இத்தகைய உரையாடல்கள் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் ஒரு நல்ல முடிவாக அமையலாம்.

தவறுவது இயல்பு ! தவறு செய்தால் அதை மறைக்காத துணிச்சலும் நேர்மையும் உங்களுக்கு இருக்கட்டும். முதலில் நீங்கள் குற்றவுணர்வுக்குள் குறுகி விடாதீர்கள். இரண்டாவது, அதை மேலதிகாரியிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள். இதே தவறை அடுத்தவர்களும் செய்யாமல் தடுக்க ஏதேனும் வழிவகை இருந்தால் அதையும் கூடவே யோசியுங்கள். ! உங்கள் நெகடிவ் விஷயத்தை பாசிடிவ் ஆக்கும் சூட்சுமம் அது !

சின்னச் சின்னப் பிரச்சினைகளையெல்லாம் மேலதிகாரியிடம் கொண்டு போய்ப் புலம்பாதீர்கள். அது உங்களை திறமையற்றவராய்ச் சித்தரிக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை நீங்களாகவே தீர்க்க முயலுங்கள். முடியாத பட்சத்தில் மேலதிகாரியிடம் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட, “இவையெல்லாம் எனக்குத் தெரிந்த தீர்வுகள்என சில ஐடியாக்களை அவிழ்த்து விட்டால் மதிக்கப்படுவீர்கள்.  

கிசுகிசு, கோள் மூட்டுதல், புறணி பேசுதல் இத்யாதிகளெல்லாம் அலுவலகத்தில் வேண்டாம். அதே போல உங்களிடம் மேலதிகாரி ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் அதை முரசு கொட்டி விளம்பரப்படுத்தாதீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை உயரும்.

தரம்நேரம்விலை !  இந்த மூன்றும் தான் எந்த ஒரு வேலைக்கும் அடிப்படை சங்கதிகள். செய்ய வேண்டிய வேலையை அட்சரசுத்தமாய் உயர் தரத்தில் செய்து முடிக்கவேண்டும். செய்வதைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். செலவு அதிகம் ஆகாமல் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று சங்கதிகளையும் மனதில் கொண்டிருங்கள். இதுவே சர்வ வேலைகளுக்குமான உலகப் பொது விதி !

உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். “ரொம்ப அவசரம்”, “கொஞ்சம் அவசரம்”, “அப்புறம் பாத்துக்கலாம்எனும் மூன்று பிரிவுகளில் உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். ரொம்ப அவசரமான செயல்களிலிருந்து உங்கள் வேலைகளைத் துவங்குங்கள். மிக முக்கியமான வேலையை நழுவ விடாமலிருக்க அது உதவும்.

வேலை சம்பளத்துக்கானது எனும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். வேலையும் வாழ்க்கையின் ஒரு அழகான பகுதி எனும் சிந்தனையை மனதில் கொண்டால் வேலை உங்களுக்கு சுமையற்ற பணியாகிவிடும். 

உங்களுக்கென நீங்களே உருவாக்கிய இலட்சியம் ஒன்று இருக்கட்டும். அதை அடைய என்னென்ன செய்யவேண்டுமென பட்டியலிடுங்கள். உங்கள் வேலை அந்த இலட்சியத்தை நோக்கி உங்களை இட்டுச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வேலையில் தயக்கம் காட்டுவது உயர்வுக்கு உதவாது. புதிய வேலைகள் வந்தால் அதை சவாலாக எடுத்துச் செய்யுங்கள். கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதிக்க வேண்டுமென்பதல்ல அதன் அர்த்தம். செய்யப் போகும் வேலைக்கான தயாரிப்புகள் அவசியம். அதையெல்லாம் தாண்டி முதல் சுவடை தைரியமாக எடுத்து வையுங்கள். முதல் சுவடு வைக்காத எந்த ஒரு பயணமும் இலக்கை அடைவதில்லை.

எந்தக் காரணம் கொண்டும், அலுவலகத்திலுள்ள பேனா, பேப்பர், பென்சில் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகாதீர்கள். செலவு விஷயத்தில் பொய்க் கணக்கு காட்டவே காட்டாதீர்கள். நேர்மைக்கு உதாரணமாய் இருங்கள், உயர்வு தேடி வரும்.

அலுவலகத்திலுள்ள எல்லா சட்டதிட்டங்களும் உங்களுக்குப் பிடிக்க வேண்டுமென்றில்லை. ஆனால் நிச்சயம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க முடியாது என தீர்க்கமாய்த் தோன்றினால் வேறு வேலை தேடுவது மட்டுமே ஒரே வழி. 

நிச்சயமாய்ச் செய்ய முடியாத வேலைகளை, “சாரி.. என்னால முடியாதுஎன சொல்லலாம் தப்பில்லை. ஆனால்செய்கிறேன்என ஒத்துக் கொண்டால் உங்கள் முழு திறமை, நேரம் என எல்லாவற்றையும் பயன்படுத்தி அதைச் செய்து முடியுங்கள். உங்கள் பெயர் நிலைக்கும்.

அலுவலகத்தில் சக நண்பர்கள் ஏதேனும் உதவி கேட்டால் தயங்காமல் செய்யுங்கள். சின்ன உதவியை யாரேனும் செய்தால் கூடநன்றிசொல்லத் தவற வேண்டாம். அதே போல தவறுகளுக்கு மனப்பூர்வமான மன்னிப்புக் கேட்பதும் சக மனித நட்பை வலுவாக்கும். அலுவலகத்தில் ஆத்மார்த்தமான ஒரு நட்பாவது உங்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். 

உங்களுடைய திறமைகளை நீங்கள் கூர்தீட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் திறமைகளை துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்க. படித்துக் கொண்டே இருங்கள்., பட்டை தீட்டிக் கொண்டே இருங்கள் அப்போது தான் திடீரென வரும் ஒரு வாய்ப்பில் நீங்கள் வால்நட்சத்திரமாய் மின்ன முடியும்,

கடின உழைப்பு ரொம்ப முக்கியம். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க மறக்காதீர்கள். சரியான தூக்கம், அளவான உடற்பயிற்சி இவை தாண்டித் தான் அலுவலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அலுவலகத்துக்குரிய மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுக்க எப்போதும் மறக்காதீர்கள். நல்ல நேர்த்தியான தூய்மையான ஆடை அணிவது, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்வது, தேவையற்ற அரட்டைகள் தவிர்ப்பது, அலுவல் நேரத்தில் சொந்த வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது, இணையத்தில் உலவாமல் இருப்பது, என இந்தப் பட்டியல் நீளும். இவை ஒரு பணியாளனின் அடிப்படை பண்புகள் என்பதை மறக்கவேண்டாம்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டிருந்தால் வெற்றியின் சாவி உங்களுக்கு வசப்படும்.

உள்ளம் வேட்கை கொள்ளட்டும்

துள்ளும் வெற்றி அள்ளட்டும்.

தன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே !

நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சேஎன்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.  

உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனுக்கு ஒரு கோழிப் பண்ணையின் விலை இருக்கலாம் என்பது தான் பதறடிக்கும் உண்மை ! நண்பனிடம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள்.   

தாங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக் கூடாதுஎன பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். புழுதியில் புழங்கினாலும் பிள்ளை ஏசியில் உறங்க வேண்டுமென விரும்புவார்கள். பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகிவிடுகிறது. 

இளம் பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம் ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது. மேக்கப் பொருட்களை அதிகமாய்ப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய்க் கத்தினாலும் பலரும் பொருட்படுத்துவதில்லை. 

அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம் பெண்கள் உணர்ந்தாலே போதும். குறைந்த பட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள.

ஹேய்என்னோட சட்டை எப்படி இருக்கு ? லூயி பிலிப் பிராண்ட்இரண்டாயிரம் ரூபாய்..” என பந்தா விடுவதில் பல இளைஞர்களுக்கு சில வினாடி சுகம் கிடைக்கிறது. இது தன்னம்பிக்கைக் குறைபாடின் வெளிப்பாடு என்கிறது உளவியல். 

பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மனம் இவர்களுடையது. தனது பணத்தை வீணாக பிறருடையஅபிப்பிராயத்துக்காகச்செலவிடும் அப்பாவிகள் என்று வேண்டுமானால் வைத்துக்  கொள்ளலாம். நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப் படுத்த அல்ல ! எனும் அடிப்படை உண்மை உணர்தல் முக்கியம்.

பலர் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்து விடுகிறார்கள். நண்பர்களுடன் உயர் ஹோட்டல்களில் உணவருந்துவதே ஸ்டேட்டஸ் என கருதிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்காக கடற்கரை ஓரங்களிலோ, ஹோட்டல்களிலோ அவர்கள் செலவு செய்யும் பணத்தில் பல ஏழைகளின் பட்டினியை பல வாரங்களுக்கு விரட்டலாம். வீடுகளில் சாப்பிடுவது உங்கள் பர்ஸை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தையும், குடும்ப உறவையும் வலுவாக்கும். 

சில சமயங்களில் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து இந்தப் பழக்கம் இளம் வயதினருக்குத் தொற்றுவதுண்டு. பல அம்மாக்களும், ஐயாக்களும் விளம்பரங்களைக் கண்டால் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இலவசமாய்க் கிடைக்கும் கரண்டிக்காக பட்டு சேலை வாங்க முண்டியடிப்பார்கள். 

சூப்பர் ஆஃபர்என அடித்துப் பிடித்து வாங்கிய பொருட்களில் எத்தனை பொருட்கள் நமக்குத் தேவையானவை ?  கண்டிப்பாக வேண்டும்என வாங்கிக் குவித்த பொருட்களை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஒரு ஆண்டில் எத்தனை முறை அது பயன்பட்டது ? அதை வாங்காமல் இருந்திருந்தால் என்னென்ன இழப்புகள் நேரிட்டிருக்கும் ? வாங்கியதால் என்னென்ன நன்மைகள் வந்திருக்கின்றன ? என கொஞ்சம் யோசியுங்கள் ! பாதிக்கு மேல் பொருட்கள்ஏண்டா வாங்கினோம் ?” என நம்மை யோசிக்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்பும் பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம். 

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உதாரணமாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன் பில், இத்யாதி என பட்டியலிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கட்சிதமாக நிறுத்துங்கள். “எது ரொம்ப முக்கியம்என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள். மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள். 

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் என முடிவெடுங்கள். அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள். சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல, சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது.

புத்திசாலித் தனமான இளைஞர்கள் வேலை கிடைத்த உடனேயே தங்கள் ரிட்டையர்மெண்ட் க்காக சேமிக்கத் துவங்குவார்கள். சின்னத் தொகையாக இருந்தாலும், பணிவாழ்க்கை முடிந்தபின் அந்தப் பணம் நமக்கான பொருளாதார ஊன்று கோலாய் உருமாறும்.  

இளைஞர்கள் சிக்கிக் கொள்ளும் இன்னொரு இடம் கிரடிட் கார்ட். கிரடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது. சரியாகக் கையாளவில்லையேல் காயம் நிச்சயம். சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான ஒரே அட்வைஸ், “என்ன செலவு செய்தாலும் பணப் பரிமாற்றமே வைத்துக் கொள்ளுங்கள்என்பது தான். செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம். 

பிரியத்துக்குரியவர்களுக்குகிஃப்ட்கொடுப்பதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பரிசுப் பொருட்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அன்பில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பல வேளைகளில் கையால் நாம் உருவாக்கும் கடிதங்களோ, கைவினைப் பொருட்களோ தரும் ஆத்ம திருப்தி போகும் வழியில் வாங்கிச் செல்லும் விலையுயர்ந்த பொருட்களுக்கு இருப்பதில்லை !

அப்படியே ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் அலைபாயும் போது செலவு அதிகமாகும். சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக்குப் பொருட்கள் கிடைக்கக் கூடும்.

இன்றைக்கு உங்கள் பின்னால் ஓடி ஓடி வரும்பர்சனல் லோன்புதைகுழியில் மறந்தும் விழுந்து விடாதீர்கள். கால் வைத்து விட்டால் அப்படியே உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். முதலில் வசீகரமாய்ப் பேசி பின் கோரமாய்ப் பல்லிளிக்கும். அதீத எச்சரிக்கை தேவை ! பலரும் நண்பர்களை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என லோன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை டைனோசர் மாதிரிக் கடித்துக் குதறிவிடும்.

பல இளைஞர்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்பதற்காக ஜிம், டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப், நீச்சல் கிளப்  என ஒரு பந்தாவுக்காக எல்லாவற்றிலும் உறுப்பினர் ஆகி விடுவார்கள். ஆனால் எதிலும் உருப்படியாகப் போவதில்லை. தேவையற்ற இடங்களில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தாலே கணிசமான பணம் சேமிக்கலாம்.

உங்களிடம் உறைந்து கிடக்கக் கூடிய ஏதோ ஒரு திறமையைக் கூர்தீட்டினால் கிடைக்கக் கூடிய மரியாதை அலாதியானது. எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் ஸ்பெஷாலிடி இருக்கலாம். உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கவுரவம் நீங்கள் நல்ல ஓவியர் என்பது ! இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.

  • உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்ன இருக்கிறது என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
  • அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை விடுங்கள். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும் தவிருங்கள்.
  • என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு துளிப் பணமும் பலகோடி மக்களுக்கு எட்டாக் கனி என்பதை நினைவில் எப்போதும் வைத்திருங்கள். 
  • சூதாட்டம், மது, போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள். உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு.
  • பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு நேரம் ஹோட்டலில்  சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுங்கள், கொடுப்பதில் இருக்கும் சுகம் வாங்கிக் குவிப்பதில் இருப்பதில்லை எனும் உண்மை உணர்வீர்கள்.

பொருட்கள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆழமான நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் தருபவை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.

வீணான செலவுகளை விலக்கு

அன்பே உலகத்தின் விளக்கு

தன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும்.

அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே !

பல முதியவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடந்த காலத்தை அசை போடுகையில் வெப்பப் பெருமூச்சையே வெளி விடுவார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்எனும் உச்சுக் கொட்டல் பலருடைய சிந்தனைகளிலும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

விட்டுக் கொடுத்தல் முன்னேற்றத்தின் முகவரி. மண் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் முளை உதயத்தைக் காண்பதில்லை. முட்டை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஒரு உயிர் உதயமாவதில்லை. மேகம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பூமியின் முகத்தில் மழையின் முத்தங்கள் இல்லை. எதையும் இறுகப் பற்றிக் கொள்வதிலல்ல, விட்டுக் கொடுப்பதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்.

குடும்பத்தில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் என்ன செய்யலாம் என எல்லோரும் அமர்ந்து பேசுவீர்கள். “ புதுப் படம் பாக்க போலாம்என்பான் தம்பி. “அதெல்லாம் வேண்டாம் கோயில் போகலாம்என்பார் அம்மா. “பீச் போகலாம்என்பது உங்களுடைய கருத்தாய் இருக்கும். “எங்கே போலாம்ன்னு முடிவு பண்ணிச் சொல்லுங்கஎன ஹாயாக அமர்ந்து விடுவார் அப்பா !

இந்தச் சூழலின் முடிவு என்ன? இங்கே ஒவ்வொருவரும் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை வைத்தே விட்டுக் கொடுத்தலைப் புரிந்து கொள்ளலாம். 

பெரும்பாலும் விட்டுக் கொடுத்தல் என்பது அன்பின் வெளிப்பாடே ! யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்கள் அடுத்த நபர் மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம். முதலில் விட்டுக் கொடுப்பது பெரும்பாலும் பெற்றோர் தான் ! அவர்களுடைய அன்பு நிபந்தனைகளற்ற அன்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

நமது உரையாடல்கள் பெரும்பாலும் ஒரு குத்துச் சண்டை போலவே நடக்கும். சண்டையில் எதிராளி தாக்கப்படுவதில் நமது வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் குடும்ப விவாதங்களில் அடுத்த நபர் காக்கப் படுவதில் தான் வெற்றி இருக்கிறது. 

விட்டுக் கொடுப்பது என்பது நமது ஈகோவை விட்டுக் கொடுப்பதிலிருந்து துவங்குகிறது. விட்டுக் கொடுக்காத மனநிலைக்குள்நான் பெரியவன்எனும் கர்வம் ஒளிந்திருக்கிறது. “என் மகிழ்ச்சியே முக்கியம்எனும் சுயநலம் அதற்குள் விழித்திருக்கிறது. ‘நான் தோற்று விடக் கூடாதுஎனும் பிடிவாதம் அதற்குள் படுத்திருக்கிறது. 

அமெரிக்காவின் பல பள்ளிக்கூடங்களில் ஒரு பழக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை வெற்றி பெறும். ஒரு குழந்தை தோல்வியடையும். வெற்றியடைந்த குழந்தைநான் தான் ஜெயிச்சேன்என்றோ, தோல்வியடைந்த குழந்தைநான் தோற்று விட்டேன்என்றோ சொல்லக் கூடாது. இருவரும் கைகளைக் குலுக்கிக் கொண்டுவிளையாட்டு நல்லா இருந்ததுஎன்று தான் சொல்ல வேண்டும் ! சின்ன வயதிலேயே வெற்றியின் மமதையோ, தோல்வியின் அவமானமோ மனதில் ஆக்கிரமிக்காமல் இருக்க அவர்கள் சொல்லும் வழி இது !

இத்தகைய பாடங்கள், அடுத்தவருடைய உணர்வுகளை மதிக்க குழந்தைகளைப் பக்குவப்படுத்தும். விட்டுக் கொடுத்தலின் அடிப்படை அடுத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பதே !

விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என்பதே பொதுவான கருத்து. உண்மையில் விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வியல்ல ! விட்டுக் கொடுத்தல் என்பதே  வெற்றி. “வாழ்வின் உயர்ந்த மகிழ்ச்சி அடுத்தவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதில் தான் இருக்கிறதுஎன்பார்கள். விட்டுக் கொடுத்தல் அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது. 

நான் விட்டுக் கொடுத்ததால தான் அவன் இன்னிக்கு இந்த நிலைமைல இருக்கான். இல்லேன்னா இன்னிக்கு அவன் அடையாளம் தெரியாம போயிருப்பான். ” என்றெல்லாம் பலர் புலம்புவதுண்டு. தயவு செய்து அதை நிறுத்துங்கள் !  

விட்டுக் கொடுத்தலின் மிக முக்கியப் பண்பே அதை ஆனந்தமாய்ச் செய்ய வேண்டும் என்பது தான். சிலர் பிறருடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே விட்டுக் கொடுப்பதுண்டு. உண்மையான விட்டுக் கொடுத்தல் அடுத்தவர்களுடைய பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காது.  

ஒரு சின்ன விட்டுக் கொடுத்தல், ஒரு நாளையோ, ஒரு வருடத்தையோ, ஒரு வாழ்க்கையையோ அழகாய் எழுதி விட முடியும். பெரும்பாலான மண முறிவுகளையோ, நட்பு முறிவுகளையோ எடுத்துப் பாருங்கள். கோபமாய் வீசும் வார்த்தைகள். பிடிவாதமாய் பிடித்துத் தொங்கும் ஈகோ. விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை. இவையே காரணமாய் இருக்கும்.  

விட்டுக் கொடுத்தல் இரண்டு தரப்பிலிருந்தும் வரும். “நாம ஒரு படி கீழே இறங்கிப் போனால், எதிராளி இரண்டு படி கீழே இறங்கி வருவான்என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

நாம் ஒரு படி கீழே இறங்க மறுத்து ஒரு படி மேலே ஏறினால், எதிராளி இரண்டு படி மேலே ஏறுகிறார். கடைசியில் ஒரு சின்ன விஷயம், இறங்கி வர முடியாத ஈகோவின் உச்சத்தில் நம்மைக் கொன்டு போய் நிறுத்தி விடுகிறது. எனவே விட்டுக் கொடுத்தலுக்கான முதல் சுவடை எடுத்து வைக்க தயங்கவே தயங்காதீர்கள்.

பெரும்பாலான சண்டைகளின் முதல் புள்ளி மிகவும் சின்னதாகவே இருக்கும். ஒரு சின்ன நெருப்பு ஒரு வைக்கோல் காட்டையே பொசுக்குவது போல, சண்டை பற்றிப் படர்ந்து விடுகிறது. துளியாக இருக்கையில் நெருப்பை அணைப்பது எளிது. விட்டுக் கொடுத்தல் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

நான் செய்வதெல்லாம் சரிஎனும் மனநிலையை விட்டு வெளியே வருவது  விட்டுக் கொடுத்தலுக்கு முக்கியமான அம்சம். நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனும் சிந்தனை நமக்கு இருக்க வேன்டும். அடுத்தவர் சரியானவற்றைச் செய்வார் எனும் சிந்தனையை அது தான் கற்றுத் தரும். தனக்கு பலவீனம் உண்டு என்பதை உணரும் போது தான், பிறருடைய பலவீனங்களை ஒத்துக் கொள்வதும் எளிதாகும்.

பல சண்டைகள் தேவையற்ற காரணங்களுக்காக நடப்பவையே. கருத்து வேறுபாடு நிகழும் போது, இந்த விஷயம் சண்டையிடுவதற்குத் தகுதியுடையதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சண்டைக்கான விஷயத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, சண்டையிடும் நபரை வைத்து அந்த விவாதத்தை எடை போடக் கூடாது அடடாஇந்த விஷயத்துக்கா இவ்ளோ எனர்ஜி வேஸ்ட் பண்ணினேன்என்று தான் பல வேளைகளில் உள்மனசு சொல்லும்.

அது உண்மையிலேயே மிக மிக முக்கியமான விஷயமெனில் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த விவாதத்தை நடத்தலாம். இதை வின்வின் அதாவது வெற்றிவெற்றி விவாதம் என்பார்கள். இருவருக்கும் வெற்றி எனும் விவாதங்களில் விட்டுக் கொடுத்தல் சர்வ நிச்சயம். !

நமது பேச்சில் கவனம் செலுத்தினாலே பாதிப் பிரச்சினைகள் ஓடிப் போய் விடும். பலரும், அடுத்தவர்களைக் காயப்படுத்தவேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் சுருக் சுருக் என பேசுவார்கள். அப்படிப்பட்டவர்கள் விட்டுக் கொடுத்தலைக் கற்றுக் கொள்வது பிரபஞ்சத் தேவையாகும். பரபரவென பேசிக் கொண்டே இருக்காமல் ஒரு முப்பது வினாடிகளேனும் அமைதி காப்பது விட்டுக் கொடுத்தலுக்கான முதல் படியாய் அமையும்.

சாலையில் வாகனம் ஓட்டும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் மனதில் சுருக்கென கோபம் வருகிறதா ? அடுத்த சிக்னலுக்குள் அவனை முந்திச் செல்லும் ஆவேசம் எழுகிறதா ? கொஞ்சம் ஆர அமர, இதனால் என்ன பயன் விளையப்போகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றுமே இல்லை. முந்திச் செல்பவர் முந்திச் செல்லட்டும் என விட்டுக் கொடுத்தால், பல்வேறு விபத்துகளை நாம் தவிர்க்கவும் முடியும்.

விட்டுக் கொடுத்தலை பலவீனத்தின் அடையாளமாகவே பலரும் பார்க்கிறார்கள். உண்மையில் அது ஆன்ம பலத்தின் அடையாளம். மன உறுதியற்றவர்களால் விட்டுக் கொடுக்க முடியாது. பலவீனருடைய மனம் அடுத்தவர்களின் விமர்சனங்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ ? தன்னை இளக்காரமாய் நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் சஞ்சலப்படும். மன உறுதி படைத்தவர்களுக்கு இத்தகைய கவலைகள் இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு விட்டுக் கொடுத்தல் சாத்தியமாகிறது.

விட்டுக் கொடுத்தல் நமது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மன பாரத்தை அகற்றி நம்மை இலகுவாக்குகிறது. மன்னிப்பும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும் நபர்களிடம் மன அழுத்தம் வந்து குடியேறுவதில்லை. மன அழுத்தமில்லாத உடல் ஆரோக்கியமானது என்பது மருத்துவம் அடித்துச் சொல்லும் உண்மையாகும்,

உறவுகள் வளர்ந்திட விட்டுக் கொடு

பிறர்க்கும் அதையேக் கற்றுக் கொடு.

தன்னம்பிக்கை : கர்வம் தவிர்

கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தனக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்என்கிறார் கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய ஐரிஸ் நாட்டு எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை !  மனிதனுடைய வளர்ச்சியின் படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இது தான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும் போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும். கர்வம் மனிதனின் வேகக் கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.

கொஞ்சம் நடுநிலமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால் கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.

எனக்கு எல்லாம் தெரியும்என்பது கர்வக் கிரீடத்தின் குரல். ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும். எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும். பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கி விடும். மரியாதையை எதிர்பார்க்கும் மனம் பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும் என்பது தான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

நான் எல்லோரையும் விட பெரியவன்என கர்வம் தனது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும். தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும். அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டு மொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.

இதோ என் சாதனைகளின் பட்டியல்என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும். தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடி துடிக்கும்.

நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லைஎன்னைத் தவிர ! என்று கர்வம் கொக்கரித்துத் திரியும். 

என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனேஎன கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால் தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

என்னைப் பாராட்டுங்கள் ! நான் அதற்குத் தகுதியானவன்என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத் திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்து விட்டால், அது நல்லபடியாய் முடிந்து விட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனித நேயத்தின் இயல்பே அரவணைத்தலில் தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது !

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வது தான். தன்னம்பிக்கை வேறு கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக் கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும் தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்குமான ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும் !

கர்வத்தைக் கழற்றி வைத்து விட்டு சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனுக்குலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார் ? எனது மனம் மனித நேயத்தின் தாழ்வாரங்களில் தான் நடக்கிறதா ? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன ? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப் பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையை கூர் தீட்டும். 

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல ! அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே ! அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஒரு ஏழை மனிதர் வந்தார். நெடு நேரக் காத்திருப்புக்குப் பின் அவருக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள். “அவன் ஒரு ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே ?”

மன்னன் சொன்னான், “வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்து விட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது”.

தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவது தான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல. 

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம்  இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.

விலக்கி விட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம் தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும் போது கூட, ‘நான் தாழ்மையின் சின்னம்என கர்வம் கொள்ள முயல்கிறது மனது !” என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்கிளின்.

கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. “நான் நல்லவன்”, “நான் பிறரை மதிப்பவன்”, ‘நான் எளிமையானவன்”, “நான் கடவுள் பக்தி நிறைந்தவன்”, “நான் ஏழைகளுக்கு உதவுபவன்என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அது தான்.

தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பது தான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் தான் ஆழமான ஆன்மீகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது !

சின்னச் சின்ன விஷயங்களிலிருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.

பிறர் மீதான உண்மையான கரிசனை அவனையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது,

கர்வப் பிழைகள் அழியட்டும்

தாழ்மை மழையாய் பொழியட்டும்.

தன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்

மரியாதைப் பூக்கள் மலரட்டும்

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் ஆயுள் காலத் தயக்கம் காட்டுவார்கள். அப்பாவைஐயாஎன பணிந்து கைகட்டி மதிக்கும் பழக்கம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணம்.

இப்போதைய ஹைடெக் யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும் தலை முறை தலைமுறையாக தரப்பட்டுக் கொண்டிருந்த மரியாதையிலும் விரிசல் விழுந்திருக்கிறது. அவர்கள் வேண்டாத சுமைகளாகப் பார்க்கப்படும் துயரமான நிலையும் உருவாகிவிட்டது.

மீண்டும் ஒரு களங்கமற்ற, அன்பிலும் மரியாதையிலும் பிணைக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனும் ஆதங்கம் நமக்குள் எழாமலில்லை.  

பிறருக்கான மரியாதை நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து துவங்க வேண்டும். வெற்று வார்த்தைகளால் வரும் மரியாதைப் பூக்கள், தொட்டால் சிணுங்கியைப் போன்றவை. சட்டென வாடி விடும். உள்ளத்தில் வேர்விடும் மரியாதையின் வாடாமல்லிகள் விழிகளில் பூக்கும் போது இதயத்தையே வசீகரிக்கும். ஒரு புன்னகையில் முதல் சுவடில் இருந்தும் துவங்கலாம் பிறருக்கான நமது மரியாதை.

யாருக்கு மரியாதை செலுத்த வேண்டும் ? எனும் கேள்விக்கு, “எல்லோருக்கும்என பதில் சொன்னால் முறைப்பீர்கள். உண்மையில் அது தான் சரியானது. நம்மை விட உயர்ந்தவர்களை மதிக்க வேண்டும் என்பது சமூகம் கற்பித்த தவறான பாடம். குறைந்தவர்களாய் கருதப்படும் நபர்களுக்கும் அதே மரியாதையை வழங்க வேண்டும். வயதிலோ, பெருமையிலோ, பொருளாதாரத்திலோ, எதில் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்திருக்கலாம். ஒரு இரவலரோ, மனநோயாளியோ, சிறுவனோ எல்லோருமே மரியாதைக்குரியவர்களே !  

தனது குழந்தை சமூகத்தில் மரியாதை கொடுப்பவனாகவும், மரியாதை பெறுபவனாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமான கனவு. ஆனால் உண்மை என்ன தெரியுமா ? மரியாதை செலுத்தத் தெரிந்த பெற்றோருடன் வளரும் குழந்தைகள் மட்டுமே மரியாதையைக் கற்றுக் கொள்ளும்.  

வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, வீட்டு வேலைக்கு வரும் நபருக்கோ பெற்றோர் எப்படி மரியாதை செலுத்துகிறார்கள் என்பதைக் குழந்தை பார்த்துப் படிக்கும். குழந்தைகள் வார்த்தைகளிலிருந்தல்ல, வாழ்க்கையிலிருந்தே பாடங்களைப் பெற்றுக் கொள்ளும். 

உங்களிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து, உங்கள் வீட்டுக்கு தினமும் கீரை கொண்டு வரும் பாட்டியின் பெயரையோ, அல்லது அலுவலகத்தில் கழிவறை சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயரையோ எழுதச் சொன்னால் எத்தனை பேர் சரியான விடை எழுதுவீர்கள். மிக எளிய கேள்வி. ஆனால் நாம் மனிதனை, மனித நேயத்தை எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதற்கான விடை அந்தக் கேள்வியில் இருக்கிறது !.

ஒருவரைத் தூக்கி விடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அந்த நபரைக் குனிந்து பார்க்கக் கூடாதுஎன்றார் ஜெஸி ஜேக்ஸன். மரியாதைக்கு உரியவர்கள் யார் யார் என்பதை இந்த வாசகம் நமக்கு விளக்குகிறது.

குழந்தைகளுக்கான கல்வி எப்போதுமே வழிகாட்டுதல், பாராட்டுதல் எனும் தொடர்ந்த இரண்டு செயல்களின் மூலமாகவே நடக்கும். சரியானதைச் செய்ய வழிகாட்டுவதும், சரியானதைச் செய்யும் போது பாராட்டுவதும் அவர்களை மரியாதைக் காரர்களாக வளர உதவும். 

பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனும் அடிப்படை இயல்பை அவர்களுக்குப் போதியுங்கள், மரியாதை செயல்கள் என்பவை அன்பின் மையத்திலிருந்து வெளிவரும் கிளைகளே. மரியாதை என்பது சின்னச் சின்ன செயல்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக பிறருடைய பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அனுமதி கேட்பது கூட மரியாதையின் ஒரு வடிவமே.

ஒருவேளை நீங்கள் மரியாதைக் குறைவாக நடப்பதைக் குழந்தை உங்களிடம் சுட்டிக் காட்டினால் எந்தக் காரணம் கொண்டும் சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். “சாரி.. தப்பு தான்என ஒத்துக் கொண்டு அதை விலக்கி விடுங்கள்.  

மரியாதை என்பது கைகட்டிஏனுங்க ? வெட்டணுமுங்களா ?” எனக் கேட்கும் சினிமா டயலாக் அல்ல. அதற்குப் பல்வேறு முகங்களும், அகங்களும் உண்டு. 

பிறர் சொல்லும் விஷயங்களைக் கவனமுடன் கேட்பது அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதைகளில் ஒன்று. நாம் பேசுவதைப் அடுத்தவர் கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம் இல்லையா ? அதே போலதான் பிறருடைய மனநிலையும் இருக்கும். அவர்களுடைய பேச்சை ஈடுபாட்டுடன் கேட்கும் போது அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துபவர்கள் ஆகிறோம்.

எனக்கு நாக்கு ஒண்ணு தேன், வாக்கும் ஒண்ணுதேன்என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அடுத்த நபருக்கு நீங்கள் கொடுக்கும் உயரிய மரியாதை இது. உதாரணமாக, நீங்கள் குறைந்த விலைக்கு ஒரு பொருளை விற்க வாக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது அதிக விலைக்கு ஒரு பொருளை வாங்குவதாய் வாக்குக் கொடுத்தாலும் சரி. அதைக் காப்பாற்றுங்கள். நீங்கள் அடுத்த நபரை மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளமே இது !

உங்கள் மரியாதையை அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதிலும் வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதானாலும் சரி, குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடித்துக் கொள்வதானாலும் சரி. அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதன் மூலம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள். !

சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுடைய கரிசனையைக் காட்டுங்கள். “நன்றி”, “ சாரி.. மன்னியுங்கள்எனும் ஆத்மார்த்த வார்த்தைகள் மரியாதை கலந்த அன்பின் வெளிப்பாடுகளே.  

உரையாடல்களில் அடுத்த நபரைப் பேச விடாமல் இடைமறிப்பது அவரை அவமானப் படுத்துவது போன்றது. பிறருடைய கருத்தை மதிப்பதும், அவர்களுடைய ஐடியாக்களை வரவேற்பதும், அதுகுறித்து விவாதிப்பதெல்லாம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளங்கள். 

சின்னச் சின்ன விஷயங்களை வைத்து விமர்சிப்பது, பொதுவில் தவறைச் சுட்டிக் காட்டி அவமானப் படுத்துவது, அடுத்தவர்களைக் குறித்து கிசு கிசுக்கள் பரப்புவது போன்றவையெல்லாம் மரியாதையைத் தூக்கி ஓடையில் போடுவதைப் போன்ற விஷயங்கள். நிறம், குணம், உடல் எடை, மதம் என எதை வைத்தும் பிறரைக் கிண்டலடிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். பிறரை அவருடைய இயல்போடே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது நாம் அவருக்கு வழங்கும் மரியாதை.

பிறருடைய தோற்றத்தைக் கண்டு கிண்டலடிக்கும் கொடூர மனப்பான்மையை பல திரைப்படங்கள் தங்களையறியாமலேயே செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பலவீனமான மனநிலையிலிருந்து நமது சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியதும் நமது கடமையாகும்.

வயதில் பெரியவர்கள் நம்மிடம் எதையாவது சொல்லும் போது மரியாதையுடன் அவர்களை அணுக வேண்டும். உங்கள் அறிவையெல்லாம் கழற்றி வைத்து விட்டு,  ஒரு சின்ன மழலையாய் மாறி அவர்களுடைய அறிவுரைகளைக் கேளுங்கள். அவர்களுடைய வாழ்த்து உங்களை வளர்த்தும்.

உங்களைப் போல பெரியவர்கள் எல்லோருமே ஷார்ப் ஆக இருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். மழலையாய் இருந்தபோது நீங்கள் உங்கள் தந்தையிடம் ஒரே கேள்வியை ஆயிரம் முறை கேட்டிருப்பீர்கள். இப்போது அவர்களுடைய முதுமையில் அவர்கள் ஒரே கேள்வியைப் பலமுறை கேட்டால் எரிச்சல் படாதீர்கள். அவர்கள் உங்களை எப்படி அணுகினார்களோ அதே ஆனந்தத்தோடும், விருப்பத்தோடும் அணுகுங்கள். 

ஒவ்வொருவருடைய விருப்பமும், வெறுப்பும் தனித்தனியானவை. அவைகளைக் குறித்த விமர்சனங்களைத் தவிருங்கள். புறணி பேசுவது பிறரை மரியாதைக் குறைவாய் நடத்துவதன் அப்பட்டமான வெளிப்பாடு. அவரவர் எல்லைக்குள் அவரவர் மரங்கள் பூக்கள் பூக்கட்டும். எங்கும் உங்கள் பூக்களே விளைய வேண்டுமென பிரியப்படுவதே தவறு தான்.

பிறருக்காக கொஞ்சம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அன்பினால் நிறைந்தவர் என்று பொருள். நடுவழியில் லிப்ட் கேட்கும் நபரை ஏற்றிக் கொள்வது கூட அவரை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள், அவர்களுக்காக கரிசனை காட்டுகிறீர்கள் என்பதையே காட்டும். 

போகும் வழியில் அவர்களை இறக்கி விடுவதற்குப் பதில் இன்னும் கொஞ்சம் சிரமம் தாங்கி, அவருக்கு வசதியான ஒரு இடத்தில் இறக்கி விட்டால் நீங்கள் உங்கள் மரியாதைத் தன்மையில் இரண்டு படி மேலேறிவிட்டீர்கள் என்று பொருள். அன்பு சின்னச் சின்ன விஷயங்களில் வெளிப்படட்டும் என்கிறார் அன்னை தெரேசா.

இரண்டு நபர்களுக்கிடையேயான இடைவெளியை இறுக்கிக் கட்டும் ஒரு அழகிய மந்திரம் மரியாதை. இந்த மரியாதை என்பது வீட்டுக்கு வெளியே மட்டும் செலுத்த வேண்டிய சமாச்சாரமல்ல வீட்டுக்கு உள்ளேயும் பரிமாறப்பட வேண்டிய விஷயம் என்பதை மறக்காதீர்கள்.

பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களை நடத்துங்கள் !” இந்த வாக்கியம் எப்போதும் மனதில் இருந்தால் உங்கள் செயல்கள் வாசம் வீசும்.

மதியாப் பிழைகள் அழியட்டும்

மரியாதை மழையாய்ப் பொழியட்டும்

தன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம்

சமீபத்தில் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது இரவிலேயே வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. வெற்றிக் கொண்டாட்டங்களை தேசம் நிறுத்தவே சில வாரங்களானது. “இந்தியன் என்பதில் பெருமைப்படு”, “நான் இந்தியன் என்பதில் கர்வமடைகிறேன்போன்ற வாசகங்கள் நாடுமுழுவதும் ஒலித்தன. மக்கள் புளகாங்கிதமடைந்தார்கள்.

எல்லாம் நல்லது தான். ஆனால் பெரும்பாலான மக்களுடைய தேசப்பற்று விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டிலேயே முடிந்து போய்விடுகிறதே என்பது தான் துயரம். உண்மையில் இது தான் தேசப் பற்றா ? 

நாட்டுப் பற்று என்பது நாட்டின் மீது நாம் வைக்கும் பாசம். உதாரணமாக, ஒரு தாய் குழந்தையின் மீது பாசம் வைத்தால் அந்த அன்பு எப்படிப்பட்டதாய் இருக்கும் ? அந்த குழந்தை முன்னேற வேண்டும். அதற்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது ! அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் ! அதன் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் !! இப்படித் தானே ?. இதே பாசத்தை தேசத்தின் மீது வைப்பதற்குப் பெயர் தான் தேசப்பற்று. 

இப்போது நமது வாழ்க்கையைக் கொஞ்சம் ரிவைண்ட் செய்துப் பார்ப்போம். நமது தேசப்பற்று எப்படி இருக்கிறது ? உண்மையிலேயே நாம் தேசத்தின் மீது பாசம் வைத்திருக்கிறோமா ? அல்லது அப்படி ஒரு பாசம் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா ?

இந்திய தேசத்தின் வரலாறைப் புரட்டிப் பார்த்தால் தேசப்பற்றின் வலிகள் புரியும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன் நமது வீதிகளில் வீசிய அடிமைக் காற்றின் குருதி வாசனையை நுகர முடியும். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரம் பிறவிப் பரிசு. ஆனால் இரு தலைமுறைக்கு முன் அப்படியல்ல. மக்கள் அடிமை முத்திரையுடன் இந்தியாவில் பிறந்தார்கள். அன்றைய தேசப்பற்று சுதந்திரத்தின் மீதான தாகமாய் இருந்தது.

பல தலைவர்களும், கோடிக்கணக்கான மக்களும் சுதந்திரத்தை மீண்டெடுக்க என்ன செய்தார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வது தேசத்தின் மீதான நேசத்தின் முதல் படி. 

பிரசவ வலியைப் புரிந்து கொள்ளும் போது ஒரு பெண் தனது தாயின் மகத்துவத்தை அறிந்து கொள்கிறாள்”. ஒரு தேசம் கடந்து வந்த வலிகளைப் புரிந்து கொள்ளும் போது ஒருவன் சுதந்திரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறான். எனவே தான் தேச வரலாற்றையும், தேசத் தலைவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம்மைப் பொறுத்தவரையில் அது வெறும் பாடநூலில் வரும் சில பாடங்களாய்ச் சுருங்கி விட்டது தான் வேதனை.

தேசத்தின் மீது ராணுவ வீரர்கள் வைக்கும் பாசமே நமது தேசத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது. நாம் பல வேளைகளில் பணிகளை வெறும் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடும் தவறைச் செய்கிறோம். மேலை நாடுகளில் ராணுவத்தில் பணி புரிவதை பெரும் கவுரவமாகவும், கடமையாகவும் கருதுகிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை வேறு வேலை கிடைக்காதவர்களின் புகலிடமாகவே பலருக்கும் ராணுவ வேலை வாய்க்கிறது.

ஒரு தினம் எப்படிப் புலருமோ, எப்படி முடியுமோ என்பதைக் கணிக்கவே முடியாத ஒரு துறை காவல் துறை. தேசத்தின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே மனதில் கொண்டு உழைக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தருகிறோமா ? பத்திரிகை நகைச்சுவைக் கார்ட்டூன்கள் தொடங்கி, திரைப்பட வில்லன்கள் வரை அவர்கள் நேர்மையற்றவர்களாக வலம் வரக் காரணம் என்ன ?

பதில், “நாம் குறைகளை மட்டுமே கவனிக்கும் வித்தியாசமான அன்னப் பறவைகள்என்பது தான். நமது கண்ணுக்கு நல்ல விஷயங்கள் பலவும் தெரிவதில்லை. அதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். நல்ல விஷயங்களை அதிகம் பேசும்போது நமது சிந்தனைகளும் நல்லவற்றை நோக்கியே நடைபோடும். குறைகளைக் களைய வேண்டியது எவ்வளவு அவசியமோ, நல்லவற்றைக் கண்டுணர்ந்து அதை வளர்க்க வேண்டியதும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

தேசப் பற்று என்பது ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும். ஆனால் அடிப்படை விஷயம் ஒன்று தான். “நாட்டை எப்படி அடுத்த நிலைக்கு உயர்த்துவது !”. அடிமை நிலையில் இருந்தால் சுதந்திர நிலை. சுதந்திர நிலையில் இருந்தால் அதன் அடுத்த படியான வளமான நிலை. இதுவே உண்மையான தேசப்பற்றின் வெளிப்பாடு.

குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதில் பலர் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்த முயல்வதுண்டு. ஒரு குழந்தை தவறிப்போய் குழியில் விழுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உடனே குழந்தையையும், பள்ளம் தோண்டியவர்களையும் குறை சொல்லிக் கொண்டு கடந்து போய் விட்டால் என்ன பயன் ? முதல் தேவை அந்தக் குழந்தையைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுப்பது தான் ! அதைத் தான் எந்த ஒரு வளரும் தேசமும் எதிர்பார்க்கும். குறைகளைச் சொல்லும் போதெல்லாம் அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய்வதும், குறை தீர்க்க நமது பங்களிப்பையும் செலுத்துவதும் அவசியம்.  

நாளைய தேசம் இன்றைய இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பார்கள். தேச அக்கறை என்பது சட்டையில் தேசக் கொடியைக் குத்தி வைப்பதிலோ, ஆகஸ்ட் பதினைந்தாம் தியதி தொலைக்காட்சியில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் பார்ப்பதிலோ முடிந்து போய்விடக் கூடாது. 

தேசப் பற்று முதலில் தேசத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதில் துவங்க வேண்டும். சட்டத்தை மீறும் சூழலைக் காணும்போது தார்மீகக் கோபம் உள்ளுக்குள் உருவாக வேண்டும். 

சமூக, தேச நலனுக்காய் உருவாகும் இயக்கங்கள், முயற்சிகள் போன்றவற்றில் பங்களிப்புகளைச் செலுத்துவது, இன்னொரு நாட்டுக்காரரிடம் பேசும்போது நமது நாட்டின் பெருமைகளையும், உயர்வுகளையும் பேசுவது என சின்னச் சின்ன செயல்களிலும் தேசப்பற்று வெளிப்பட வேண்டும்.  

நாம் இன்றைக்குத் தயாராக்கும் தேசமே நமது பிள்ளைகளின் கரங்களில் நாளை இருக்கப் போகிறது. எதிர்கால சந்ததிக்காய் மரம் நடுவது போலவே, தேசத்தையும் தயாராக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. நாளைய இந்தியாவின்  இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, எரிச்சலுடன் எட்டிப் பார்க்கக் கூடாது ! 

சமூக விரோதச் செயல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் தேசத்துக்குமான நட்புறவை உடைக்கின்றன. பொதுச் சொத்துக்களின் மீதான சேதமானாலும் சரி, வன்முறையானாலும் சரி, விதி மீறல்களானாலும் சரி, சட்ட விரோதமானாலும் சரி, எல்லாமே தேசப்பற்று மனதில் இல்லை என்பதன் வெளிப்பாடுகளே.

சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் சட்டை செய்யாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு போவது கூட உங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பதன் அறிகுறியே !

வரிகளை ஒழுங்காகச் செலுத்துவது, சொத்துக் கணக்குகளைச் சரியாகக் காட்டுவது இவையெல்லாம் உங்களுடைய தேசப் பற்றின் சில அடையாளங்கள். இவற்றில் தில்லு முல்லு செய்வது என்பது அப்பாவின் பர்சுக்குள் கையை விட்டுத் திருடுவது போன்றது !

இன்றைக்கு நமது தேசப்பற்று பெரும்பாலும் எமோஷனல் வெளிப்பாடு தான். அது ஜெய்ஹிந்த், ஹெய்ஹோ என்றெல்லாம் வசீகர வார்த்தைகளை வீசுவதில் வெளிப்படுகிறது. அது விரைவிலேயே மங்கிப் போய்விடும். “ஆண்டுக்கு ஒரு முறை நினைத்து விட்டுப் போகும் நினைவுநாள் அல்ல தேசப்பற்றுஎன்பதை இளைஞர்கள் உணரவேண்டும். 

நான் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்னவாகப் போகிறது ? நான் மட்டும் வண்டியை சிக்னலில் நிறுத்தாவிட்டால் என்னவாகப் போகிறது ? நான் மட்டும் லஞ்சம் கொடுக்காவிட்டால் என்னவாகப் போகிறது ? எனநான் மட்டும்…” எனும் வாசகங்கள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் முட்டுக் கட்டைகள். இத்தகையநான் மட்டும்..” சங்கதிகள் ஒரு சீனப் பெருஞ்சுவராய் இந்திய வளர்ச்சியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது ! 

தேசம் என்பது எந்த ஒரு சின்ன எல்லைக்குள்ளும் அடைக்க முடியாதது. பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் எனும் சர்வ சங்கதிகளின் கூட்டுத் தொகையாய் தேசத்தைப் பார்ப்பதே முழுமையான பார்வையாகும். அப்போது தான் சமத்துவ சிந்தனையும், சகோதர உணர்வும் ஊற்றெடுக்கும்.

தேசத்தின் மீதான நம்பிக்கை என்பது தேசத்திலுள்ள மண்ணிலும், கல்லிலும் வைக்கும் நம்பிக்கையல்ல. தேச மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை எனும் உயரிய சிந்தனை உருவாக வேண்டும். அது தான் நம்மைச் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்கவும், ஓர் மனிதநேயச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் நமக்கு உதவும்.

தேசத்தை நேசிப்போம்

சேதத்தை சீர்செய்வோம்

தன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.

இளம் வயது என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு உற்சாகம் கரை புரள்கிறது. இளமை எதையும் சாதிக்கும் வயது. தொழில் நுட்பங்களின் பின்னணியில் பரபரப்பதும், வீரத்தின் முன்னணியில் பயணிப்பதும், சமூகத்தின் மையத்தில் இயங்குவதும் இளமையே ! திகைப்பூட்டும் வேகமும், வியப்பூட்டும் விவேகமும் கலந்த கலவை தான் இளமை. 

பத்து இளைஞர்களை என்னிடம் தாருங்கள், உலகை மாற்றிக் காட்டுகிறேன்எனும் விவேகானந்தரின் கூற்று நூறு முறையேனும் நமது காதுகளை எட்டியிருக்கும். முதுமைக்கும் இளைமைக்கும் ஒரே ஒரு வேறு பாடு தான். இளமை ஒரு செயலைச் செய்து முடிக்கும் போது களைப்படையும், முதுமை ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே களைப்படையும் என்பார் பிரபல எழுத்தாளர் எலியட். 

இன்றைய சமூகம் இளைஞர்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. தொழில்நுட்பம் எனும் டைனோசர் இன்றைய இளம் வயதினரைத் தூக்கிச் சுமக்கிறது. அதன் முதுகிலிருந்து தவறி விழுபவர்கள் அதன் காலில் மிதிபட்டு அழிந்து போகும் ஆபத்தும் நேர்ந்து விடுகிறது.

உதாரணமாக இணையம் எனும் டிராகன் உங்களை எங்கே வேண்டுமானாலும் சுமந்து திரியும். ஏழு கடல் ஏழு மலை தாண்டியும் அதில் நீங்கள் பயணிக்கலாம். ஆனால் தவறான முறையில் நீங்கள் இந்த டிராகனை எதிர்கொண்டால் அதன் மூக்கிலிருந்து எழும் தீச் சுவாலை உங்களைக் காயப்படுத்தலாம். அல்லது எரித்து அழிக்கலாம் !  

இளைஞர்களின் வலிமையையும், திறமையையும் செயலிழக்கச் செய்யும் வலிமை சில விஷயங்களுக்கு மட்டுமே உண்டு. போதைப்பழக்கம், கூடா நட்பு, பாலியல் போன்றவை அந்தப் பட்டியலில் பிரதானமானவை.

சில தலைமுறைகளுக்கு முன்னால் ஆண்களும் பெண்களும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகளே அபூர்வம். தரையில் கோலம் போட்டுக் கொண்டே முந்தானை முனை கடிக்கும் அரை தாவணிகளின் காலம் இப்போது முடிந்து போய் விட்டது. இப்போது ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பழகும் நிலை உருவாகியிருக்கிறது.

ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்களும், நட்பு உரையாடல்களும், உதவும் மனநிலைகளும் மிகவும் ஆரோக்கியமானவை. இணைந்தே படித்து, இணைந்தே பணிசெய்யும் சமூகத்தில் அது மிகவும் அவசியமானதும் கூட.  

எனினும் ஒரு எல்லைக் கோடு எல்லாவற்றுக்குமே அவசியமாகிறது. எல்லைக் கோட்டைத் தாண்டிப் போனால்அவுட்என்கிறது விளையாட்டு. எல்லைக் கோட்டைத் தாண்டிப் போனால்ஆபத்துஎன்கிறது ராமாயணம். ஆனால் எல்லைக் கோட்டைத் தாண்டுவது தான்திரில்என்கிறது இளைய சமூகம். 

மாற்றம் என்பது மாற்ற முடியாதது. ஆனால் எல்லா மாற்றங்களுமே வளர்ச்சிக்கானவை அல்ல. ரிவர்ஸ் கியரில் ஓடும் வண்டி முன்னோக்கிப் போவதில்லை. 

இளைஞர்கள் மிகவும் கவனமாக அணுக வேண்டிய ஒரு விஷயம் ஊடகங்கள். அன்றைய நாடகங்கள் இளைஞர்களுக்கு வீரத்தைப் போதித்தன, இன்றைய ஊடகங்கள் இளைஞர்களுக்கு காமத்தைப் போதிக்கின்றன. அவை சொல்லும் பல விஷயங்கள் இளைஞர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியில் மயங்கும் போது வளர்ச்சி தயங்கி விடுகிறது.  

திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதே தவறுஎனும் காலகட்டத்திலிருந்து, ‘திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது சரியேஎனும் இடத்துக்கு இன்றைய சமூகம் இடம் பெயர்ந்திருப்பதாய் கட்டுரைகள் கவலை தெரிவிக்கின்றன. 

அதனால் தான் விவாகரத்து என்றால் அலறிய சமூகம், இன்று வானிலைச் செய்தியைப் போல அதை வாசித்துக் கடந்து போகிறது. எவ்வளவு தூரம் ஆண் பெண் இடைவெளி குறைகிறதோ அந்த அளவுக்கு மணமுறிவு எண்ணிக்கை அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.

பாலியல் தவறுஎன்று யாரும் சொன்னதில்லை. ஆனால் சரியான நேரத்தில் செய்யப்படாத எதுவுமே தவறாகிப் போய்விடும். 

திருமணத்துக்கு முன்பே பாலியல் உறவு வைத்துக் கொள்வது இளம் வயதினரிடையே அதிகரித்திருக்கிறது என்பது கவலையளிக்கும் செய்தி. ‘புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றோ, வரம்பு மீறித் தான் பார்ப்போமேஎனும் ஆர்வம் காரணமாகவோ தவறிழைத்து விடுகிறார்கள். 

யாருக்குமே தெரியாது என ரகசியமாய் பரிமாறப்படும் அன்னியோன்ய விஷயங்களினால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். .டி.எம் அறைகளில், இணைய நிலையங்களில், ஹோட்டல்களில் என தவறிழைக்கும் தருணங்களையெல்லாம் ரகசிய கேமராக்கள் கண்காணிக்கின்றன என்பதையே இணையத்தில் வெளியாகும் படங்களும், வீடியோக்களும்  சொல்லிச் செல்கின்றன. சைபர் கிரைம் படியேறி கண்ணைக் கசக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கையே இதன் சாட்சி. 

உங்களைக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கும் செயல்களைச் செய்யாமல் இருப்பது உங்களுடைய தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரிக்கும். ரகசியச் செயல் வெளியே தெரிய வந்தால் அதனால் நேரும் அவமானமும், பின் விளைவுகளும், தலைகுனிவுகளும் உங்களுடைய எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும்.

மன அழுத்தம் இளம் வயதினரைத் தாக்க பாலியல் ஈடுபாடும் ஒரு காரணம் என்கிறது மருத்துவம். தவறு செய்த உணர்வோ, தவறிழைக்கத் தூண்டிய உணர்வோ மனதில் அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. மன அழுத்தம் எப்போதுமே தனியே வருவதில்லை, நோய்களின் பட்டியலோடு தான் வருகிறது. தவறுகள்தாய்மையைத் தந்து சென்றால் அதன் பின் நடக்கும் சிக்கல்களைப் பற்றித் தனியே சொல்லத் தேவையில்லை.  

எல்லாவற்றுக்கும் மேலாக இவை கொண்டு வரும் உடல் ரீதியிலான நோய்கள். எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் தவிர இவை கொண்டு வரும் தொற்று நோய்கள் கணக்கில் அடங்காதவை. கருப்பை வாய்ப் புற்று நோய் போன்ற நோய்களுக்கும் திருமணத்துக்கு முந்தைய தவறுகள் மிக முக்கியக் காரணம் என்கிறார் கயா நாட்டு மருத்துவர் பிலோமினா மிராகு. 

இந்தியாவில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டதிருமணத்துக்கு முந்தைய உறவுவைத்துக் கொள்பவர்களில் 52 சதவீதம் பேருக்கு தொற்று நோய் வருகிறது என்கிறது அவிஷ்கார் புள்ளி விவரம். ‘முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதும், டென்ஷனும், நண்பர்களின் உசுப்பேற்றலும்தவறுகளின் முக்கிய காரணங்களாம் !

ஆரோக்கியமான நட்பாய் தோன்றும் பல நட்புகள் பின்னர் தனிமையில் சிக்கல்களுக்குரியதாய் விஸ்வரூபம் எடுப்பதுண்டு. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன் எனும் திருமண ஆலோசகர். ஆண்கள் காதலைப் பெரும்பாலும் படுக்கையில் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள் என்கிறார் அவர்.

இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க ஆண் பெண் நண்பர்களுக்கு இடையேயான தொட்டுப் பேசும் வழக்கத்தை விட்டு விடலாம். தொட்டுப் பேசுவது தவறில்லை, ஆனால் அது ஹார்மோன்களை விழிப்படையச் செய்யும் என்கிறது அறிவியல். ஹார்மோன்கள் விழித்துக் கொண்டால் உங்கள் சிந்தனைகளில் அதுவே வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே தொடுதல், முத்தமிடுதல், அன்பாய் கண்டியணைத்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது பாதுகாப்பானது . 

சிற்றின்பச் சோதனைகளைக் கடந்து வருவது இளம் வயதினரின் முன்னால் நிற்கும் மிகப் பெரிய சவால். இந்த சோதனையைக் கடந்து வர வேண்டுமெனில் அத்தகைய சோதனைகளுக்குள் உங்களைத் தள்ளி விடும் விஷயங்களை ஒதுக்குவது அவசியம். குறிப்பாக விரும்பத் தகாத புத்தகங்கள், இணையப் பக்கங்கள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது மனதில் களங்கம் புகாமல் இருக்க உதவும்.

முன்கூட்டியே சில விஷயங்களை நண்பர்களுக்குள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக இந்த இந்த இடங்களை நான் தவிர்ப்பேன், இந்த இந்த நேரங்களைத் தவிர்ப்பேன், இப்படிப்பட்ட சூழல்களைத் தவிர்ப்பேன் என முன்கூட்டியே நண்பர்கள் பேசிக்கொள்வது தவறான சூழலில் சென்று தவறிழைப்பதைத் தடுக்கும்.,

சின்னச் சின்னத் தீண்டல்கள் கூட உங்களைப் பெரும் ஆபத்தில் தள்ளிவிடக் கூடும். ‘இதற்கு மேல் நடக்காதுஎனத் துவங்கும் எல்லா விஷயங்களும் அதைத் தாண்டிப் போகும் என்பதே அசைக்க முடியாத உண்மை ! தோளில் சாய்ந்து தூங்குவதோ, தனிமையில் கரம் கோத்துத் திரிவதோ கூட ஹார்மோன்களை உசுப்பேற்றலாம் !

டேட் ரேப்எனப்படும் போதை மாத்திரைகள் கொடுத்து தவறிழைக்க வைக்கும் நிகழ்வுகளைப் பற்றி அடிக்கடி செய்தித் தாள்கள் பேசுகின்றன. எனவே அத்தகைய தனிமை, மதுச் சூழல்களை அறவே ஒதுக்குங்கள். ஒருவேளை நண்பருடனோ, தோழியுடனோ சகஜமான நட்புறவு வைக்க முடியாது என்று தோன்றினால் நட்புக்குக் கொஞ்சம் இடைவெளி விடுங்கள். தப்பில்லை !

நண்பர் சொல்லும்வார்த்தைகளைமட்டும் வைத்து அவரை எடை போடாதீர்கள். அவருடைய செயல்பாடுகளும், சிந்தனைகளும், என்ன என்பதை அவருடைய உடலசைவுகள், பார்வை இவற்றின் மூலம் படித்தறியுங்கள். அது உங்களை விழிப்புடன் வைக்கும். உங்கள் நண்பரோ தோழியோ உங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க வையுங்கள். நட்பைத் தாண்டிய பொறுப்புணர்வும், மரியாதையும் உங்கள் மீது உருவாகும். 

கடைசியாக ஒன்று. பாலியல் வலையில் விழுந்து விடாமல் தப்புவது உங்களுடைய மன உறுதியைச் சார்ந்தே இருக்கிறது. குடும்ப உறவுகள் மீது அதிக மதிப்பு வைப்பது, நல்ல ஆன்மீகச் சிந்தனைகள் வளர்த்துவது, நல்ல ஒரு வழிகாட்டியை வாழ்வில் கொண்டிருப்பது, பெற்றோரை மதித்து நடப்பது போன்றவையெல்லாம் உங்களை சரியான வழியில் பயணிக்க வைக்கும். 

நல்ல பாதையில் பயணியுங்கள், தேசத்தின் நம்பிக்கைகள் உங்கள் மீதே இருக்கின்றன.

உறுதி மனதில் கொள்ளுங்கள்

இறுதி வரை வெல்லுங்கள்

தன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.

கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த தலைவராய் இருக்க முடியாதுஎன்கிறார் அரிஸ்டாட்டில். 

நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப் பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது கண்ணுக்குப் புலப்படுவார்கள். நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில் புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய கண்களுடன் ஹிட்லரும் வரலாம். அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த வினாடியில் ராஜபக்சேவும்  எட்டிப் பார்க்கலாம். சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர் அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும் நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ இருக்கலாம். ஒல்லிப் பிச்சானாய், ஆறடி உயரத்தில் மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும் இருக்கலாம், வீல் செயரில் வலம் வரும் ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம். முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும் கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச் ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம். 

தலைவர்கள் யாரும் ரெடிமேடாய் செய்யப்படுபவர்கள் அல்ல. மக்களிடையே இருந்து புறப்பட்டு வருபவர்கள் தான். ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர் தலைவராகிவிடுவார். ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இருப்பார்கள் ஒரு சிலர் தலைவர்களாகிவிடுவார்கள். அந்த குறிப்பிட்ட மனிதர்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடம் ஏதோ ஒருஸ்பெஷாலிடி  இருப்பது புரியும். தலைவர்களாக வேண்டுமெனும் விருப்பம் நம்மிடம் இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது !

மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது தலைவருடைய முதல் பண்பு. உற்சாகமாக இல்லாத ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக வைத்திருக்க முடியாது. ஏகப்பட்ட எரிச்சல்கள், கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று.  

கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால் நிர்ணயிக்கப் பட்டனர். தற்காலத்திலோ, மக்களோடு இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்என்கிறார் மகாத்மா காந்தி. தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன் எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.

 சாரிமறந்துட்டேன்என நாம் சகஜமாகச் சொல்லும் வார்த்தை தலைவருடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது. ரொம்ப நேர்த்தியாக எல்லா செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான திட்டமிடல் ரொம்ப அவசியம்.

தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர் அல்ல ! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர். யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம். எந்த வேலையைக் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும் சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின் அடையாளங்கள்.

ஜெய் தீசன் என்பவர் ஐந்து மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர். நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம் யாராவது ஃபைல் கொண்டு வந்து கையொப்பமிடச் சொன்னாலோ, மெயில் வாசித்து பதில் போடச் சொன்னாலோநேரமில்லை அப்புறம் பார்க்கலாம்என்று ஒதுக்கி வைப்பார். அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில் வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டார். “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது !”. உடன் பணிசெய்தவர்களெல்லாம் அதிர்ந்தனர். இப்படி ஒரு குறையை வெளியே தெரியாமல் எப்படி மறைத்தார் என ரொம்பவே வியந்தனர். தனது 56வது வயதில் தான் கொஞ்சம் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.

மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், எப்படிச் செய்ய வேண்டுமென சொல்லாதீர்கள். அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக நடக்கும்என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன். இது மக்களுடைய உண்மையான திறமைகளை வெளிகொணரும் நல்ல முயற்சி என்பதைத் தலைவர்கள் அறிவார்கள்.

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் தைரியம். சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே தேவைப்படும். தோல்வியை நேர்மையாய் ஏற்றுக் கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே !

சொல்லப் படாத ஒரு விஷயம் எப்போதும் கேட்கப்படுவதில்லை. தேவையான விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப் பண்பு. அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன் கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி. அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். மக்களும் உற்சாகமடைவார்கள்.

தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களையும்  தெரிந்திருப்பது தலைவருக்கும், அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும். 

தன்னம்பிக்கையும், பாசிடிவ் சிந்தனையும் தலைவருக்குத் தேவையான இரண்டு விஷயங்கள். தலைவருக்கே தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை இல்லாமல் தான் இருக்கும். 

குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது தலைவருடைய இன்னொரு பணி. மற்றவர்களை உற்சாகப் படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. வேலையைச் சரியாய் செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச் செய்வதும் ஒரு தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும். 

தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப் பரிமளிக்க முடியாது.  

எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். எனவே தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும், அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களாகும்.

பல தலைவர்கள் திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. தனது மக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க வேண்டியதும், அப்படிச் செயல்படும் போது மனம் திறந்து பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின் அம்சங்களாகும். தனது குழுவின் செயல்பாடை வைத்து தான் தலைவரின் மதிப்பு கணக்கிடப்படும் எனும் எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.

நிறுவனத்தில் இலட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள், வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப் பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.

ஆப்பிள் நிறுவன சி.. கடந்த பத்து ஆண்டின் சிறந்த சி.. ஆக சமீபத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை, சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும் புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர். காரணம் இவரிடமிருந்த தனித்துவமான வித்தியாசமான சிந்தனைகள்.

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில்கால்குலேட்டட் ரிஸ்க்எனப்படும் கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத் தயங்காதவர் தான் தடைகளைத் தாண்டி முன்னேற முடியும். எல்லோரையும், எப்போதும் திருப்திப் படுத்துவது தலைவருடைய வேலையல்ல. எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக் கொள்வதும் தலைவருடைய பணியல்ல என்பதை ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் திறமைகளை உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச் செய்யுங்கள். விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை வந்தடையும் !

உங்களுடைய வெற்றிக்கான காரணம் என்ன ?” 

வெற்றிகரமான ஒரு நிறுவனத் தலைவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

சரியான முடிவுகள் ! . சரியான முடிவுகளை எடுப்பதால் தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்.” அவர் பதில் சொன்னார்.

சரி, எப்படி உங்களுக்குச் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை கிடைத்தது

அனுபவம் ! அனுபவமே எனக்கு சரியான முடிவுகளை எடுக்கக் கற்றுத் தருகிறது.

அது சரி.. அனுபவத்தை எப்படிப் பெற்றுக் கொண்டீர்கள்

சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அவர், தவறான முடிவுகளை எடுப்பதனால் அனுபவம் கிடைக்கிறது”.

துணிவும், பணிவும் தலைமைக்கு

இருந்தால் வாழ்க்கை வளமைக்கு !

தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான்.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, “டைம் செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குதுஎன காலத்தைக் குறை சொல்கிறோம் 

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்தில் எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள். ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள் ? பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது என்பது தானே பலருடைய மனநிலை ?

மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்ததுஎன்கிறார் சேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி. 

பங்சுவாலிடி என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடை பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம் தான். 

நேரம் தவறாமைக்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். ஒரு முறை அவர் தேர்தலில் ஜெயித்த உறுப்பினர்களை இரவு உணவுக்கு அழைத்தார். குறித்த நேரத்தில் யாருமே வரவில்லை. வாஷிங்டன் அமைதியாக மேஜையில் அமர்ந்து உணவு உண்ணத் துவங்கினார். அவர் சாப்பாட்டை முடிக்கும் தருவாயில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களுக்கு வியப்பு. விருந்தினர்கள் வரும் முன்னால் விருந்துக்கு அழைத்தவர் சாப்பிடுகிறாரே என்று முணு முணுத்தனர்.

வாஷிங்டன் நிதானமாய்ச் சொன்னார். “நான் காலம் தவறுவதில்லை. என்னுடைய சமையல்காரரும் நேரம் தவறுவதில்லை. எனவே அவர் சரியான நேரத்தில் பரிமாறினார், நான் குறித்த நேரத்தில் சாப்பிடுகிறேன்”. வந்தவர்கள் வெட்கப்பட்டார்கள். நேரம் தவறாமையை அதிபர் எந்த அளவுக்கு பின்பற்றினார் என்பதைக் கண்டு கொண்டனர்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.

பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள்என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள். உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள் என்பது தான்.  

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். 

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது. சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது. ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது, இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். 

டயானா டிலோன்சர் எனும் எழுத்தாளர்நெவர் பி லேட் எகைன்எனும் நூலை எழுதினார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக சுவாரஸ்யமானது. “நேரம் தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்குமே அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லைஎன்கிறார் அவர். 

தாமதமாய் வருவது தவறு, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் எனும் சிந்தனை உங்கள் மனதில் முளைக்க வேண்டியது முதல் தேவை. அப்போது தான் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை நீங்களே கொஞ்சம் அலசுவீர்கள். காலையில் ஏன் தினமும் லேட்டாகிறது ? கொஞ்சம் சீக்கிரம் எழும்பினால் என்ன ? போன்ற சிந்தனைகள் உங்களிடம் அப்போது தான் எழும்.

சரியான நேரத்தில் கலந்து கொள்ளவேண்டும்என எப்போதுமே நினைக்காதீர்கள். பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும். 

நேரம் தவறாமை நமது திட்டமிடுதலைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு மணிநேரத்தை ஒதுக்காதீர்கள்.  முடிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கால இடைவெளிகளில் நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அது எப்போதுமே உங்களைச் சிக்கலில் தள்ளி விடும்.

பலருக்கும் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யத் துவங்குவது. சட்டென ஒரு முறை மின்னஞ்சலைப் பார்த்து விடுவோம், ஒரு நபருக்கு போன் செய்து முடித்து விடுவோம் என கடைசி நிமிட பரபரப்பை உருவாக்குவார்கள். உங்களைத் தாமதப்படுத்தும் மிக முக்கிய காரணியே இந்த கடைசி நிமிட திடீர் வேலை தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள். அப்போது தான் முக்கியமான நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்.

எதிர்பாராத வேலைகளுக்காகவென கொஞ்சம் நேரத்தை எப்போதுமே ஒதுக்கி வைத்திருங்கள். போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், டயர் பஞ்சராகலாம், எதிர்பாராத ஒரு அழைப்பு வரலாம், இப்படி எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கொஞ்சம்கூடுதல்நேரத்தை ஒதுக்கி வையுங்கள். 

இப்போதைய தொழில் நுட்பம் உங்களுக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்து தருகிறது. செல்போன் அலாரம், ரிமைண்டர்கள், கணினி மென்பொருள்கள் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்கள் நேரத்தைத் திட்டமிடலாம். அதே போல வீட்டில் எல்லா அறைகளிலும் ஒவ்வொரு கடிகாரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அது ரொம்பவே உதவும்.

சீக்கிரமே போய்விட்டால் என்ன செய்வது எனும் எண்ணம் பல வேளைகளில் தாமதத்தை உருவாக்கிவிடும். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட உங்களை சலிப்படைய வைக்காது. 

தாமதமாய் வருவது பெரிய மக்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப் படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில், நேரம் தவறாமை தான் உங்களை தலைமைப் பண்பு உடையவராய்ச் சித்தரிக்கும். பல வாய்ப்புகளின் கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும். 

சிலவேளைகளில் தாமதம் தவிர்க்க இயலாததாகி விடும். அந்த நேரத்தில் சம்பந்தப் பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள். தாமதமாய் நுழையும் போது, மன்னிப்புக் கேட்கவும் மறக்க வேண்டாம். ஒருவேளை கலந்து கொள்ளவே முடியாத சூழலெனில்  சாரிஎன முன்னரே மறுத்து விடுதல் நல்லது.

சிலருடைய தாமதத்துக்கான காரணங்கள் சின்னபுள்ளத் தனமானவை. “குழந்தை அழுதுடுச்சு”, “காபி கொட்டிடுச்சு”, ”ஒரு போன் கால் வந்துடுச்சுஎன உச்சுக் கொட்டுவார்கள். இவையெல்லாம் காரணங்களல்ல, உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு, “லேட்டா வருபவர்களால்மேலாளர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று அடித்துச் சொன்னது. லேட்டா வருபவர்கள் சொல்லும்காரணங்கள்பெரும்பாலும் பொய்களாகவே பார்க்கப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத் தான் எதையும் கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நீங்களே குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு லேட்டாய் கொண்டு விட்டீர்களெனில் குழந்தையும் அதையே தான் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள் !

கடைசியாக, நேரம் தவறாமையை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நீங்கள் வென்று விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும் உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.

காலம் தவறா ஆச்சரியம்

வெற்றிக் கிளையில் பூச்சொரியும்

தன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது !

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மாஎன்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. 

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். “கூடா நட்பு கேடாய் முடியும்என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அது தான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்தநட்புத் தேர்வுஏரியாவில் தவறி விடுகிறார்கள். “வாடாதண்ணியடிக்கலாம்என்று அழைப்பது தான் உண்மை நட்பின் அடையாளமென என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவது தான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப் படுத்துவதல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள். 

நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பா கிட்டே சொல்லாதேஎன்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும். 

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா ? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா ? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். ஒரு இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கி விட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை. 

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாகப் விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்குஎன கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில்மட்டுமேஉங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்களல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே !. 

தப்பானஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே ! நண்பர்களல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.  

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா ? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். 

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்களெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. 

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள் !

அன்னை தெரசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியர்களில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என தெரசாவின் தாய் முடிவெடுத்தார்.. 

ஒருநாள் அவர் தெரசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட தெரசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப் போன தெரசாவை தாய் நிறுத்தினாள். தனியே வைத்திருந்த ஒரு அழுகிய பழத்தை எடுத்தாள் தாய். தெரசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை அழகிய பழங்களின் நடுவே வைத்தாள். 

ஏம்மா ? நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள் ?” தெரசா கேட்டாள்.

எல்லாம் ஒரு காரணமாய் தான். இதை அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும்போது எடுத்து வாஎன்றார் தாய்.

தெரசா அப்படியே செய்தார். 

சில நாட்களுக்குப் பின் தாய் தெரசாவை மறுபடியும் அழைத்தாள். அந்த பழக் கூடையை எடுத்து வரச் சொன்னாள். பழக்கூடையை தெரசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தாள். அந்தக் கூடையிலிருந்த பழங்கள் எல்லாம் அழுகிப் போய் இருந்தன.

தெரசா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது. 

தாய் தெராவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னாள். “பார்த்தாயா ? ஒரு அழுகிய ஆப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்து விட்டது. தீய நட்பும் இப்படித் தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். விஷம் ஒருதுளி போதும் ஒரு மனிதனைக் கொல்ல. எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை”. 

நட்பில் உண்மை நிலவட்டும்

வாழ்வின் கிழக்கு புலரட்டும் !