Digital Addiction : வினையாகும் விளையாட்டு

Image result for digital addiction

கடந்த வாரம் தனது ஆறு மாதக் கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்திருந்தார் உறவினர் ஒருவர். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் கையிலிருந்த குழந்தை அழத் துவங்கியது. உடனே குழந்தையின் அப்பா தனது ஸ்மார்ட்போனை ஆன் பண்ணிக் குழந்தையின் கையில் கொடுத்தார். சட்டென அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தது குழந்தை.

சமீபத்தில் இரண்டு செய்திகளைப் படித்தேன். பப்ஜி விளையாட்டில் ஆர்வமாயிருந்தான் ஒரு பதின் வயது சிறுவன். அவனைப் பெற்றோர் கண்டித்தார்கள் என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு செய்தியில், தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டே இருந்த இளைஞனை பெற்றோர் கண்டித்தார்கள். விளைவு தனது தந்தையையே கொலை செய்து விட்டான் மகன்.

இரண்டாவது பத்தியில் எழுகின்ற அதிர்ச்சிகளுக்கான பிள்ளையார் சுழியை முதல் பத்தியில் எழுதப்பட்டிருக்கின்ற நிகழ்வு இடுகிறது. மழலைப் பருவத்தில் விதைக்கின்ற தவறுகள் பதின் வயதுகளில் விளையத் துவங்குகின்றன. கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என படித்த காலங்கள் எல்லாம் பழசாகிப் போய்விட்டன. இப்போது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஸ்மார்ட்போன்கள் தான்.

ஜவுளி கடைகளில் பெற்றோர் துணி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஓரமாய் இருக்கைகளில் அமர்ந்து பிள்ளைகள் போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். துணி எடுக்கும் பெற்றோருக்கு தொந்தரவு இருக்கக் கூடாதாம். இரயில் பயணங்களில் பிள்ளைகள் கைகளில் ஸ்மார்ட்போனோடு இருக்கைகளில் ஒட்டவைக்கப்பட்டிருப்பார்கள். அங்குமிங்கும் ஓடிட்டு திரியக் கூடாதாம்.

“பையன் அழுவான், கொஞ்ச நேரம் விளையாடட்டும்”. ” போனை குடுக்கலேன்ன ஒரு வேலை செய்ய முடியாது.. சத்தம் போட்டுட்டே இருப்பான்”. “அவன் ரொம்ப சேட்டை, போனை குடுங்க அவன் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கட்டும்” என்பன போன்ற சிந்தனைகள் தான் பிற்காலத்தில் பிள்ளைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்குகிறது. முதலில் பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கும் சங்கிலியாய் இருக்கும் போன்கள், பின்னர் அவர்களுடைய வாழ்வின் குரல்வளையை நெரிக்கும் தூக்குக் கயிறுகளாய் மாறிவிடுகின்றன.

பிள்ளைங்க கொஞ்ச நேரம் விளையாடினா என்ன தப்பு ? எனும் அலட்சியப் போக்குகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு அடிமையாக்குகின்றன. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘கம்ப்யூட்டர் விளையாட்டு அடிமைத்தனம்’ என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் இன்று அது சீரியஸ் விஷயமாக மாறியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நலவாழ்வு நிறுவனம் ( ) தனது பட்டியலில் விளையாட்டு அடிமைத்தனம் (கேமிங் அடிக்ஷன்) என்பதையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதே இதன் காரணம். இப்போது பல நாடுகள் இதை “மென்டல் டிஸார்டர்” அதாவது மனக் குறைபாடு என்று ஒத்துக் கொண்டு அதற்கான சிகிச்சைகளையும் அளிக்கின்றன.

எனவே இது விளையாட்டு சமாச்சாரமல்ல, சீரியஸ் சமாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும். பிள்ளைகளுக்கு கேம்ஸ் அடிக்சன் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும், அதிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டுவருவதும் அவசியம்.

முதலில் அதை நம்மிடமிருந்து துவங்க வேண்டும். நமது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் குழந்தைகளோடு இருக்கும் போதாவது செல்போன்களை மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட வேண்டும். பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்பதை உணரவேண்டும்.

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாய் இருக்கிறார்களா என்பதைச் சோதித்தறிய சில வழிகள் உண்டு. கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

1. விளையாட்டைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்ற விஷயங்களைப் பேசும்போது கூட விளையாட்டு நினைவாகவே இருப்பது.

2. விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையேல் வருந்துவது. எரிச்சல் படுவது. கோபப்படுவது. எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் தீவிரமாய்க் காட்டுவது.

3. விளையாட ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது. இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என நீடிப்பது.

4. முன்பு ஈடுபட்டிருந்த மற்ற செயல்களிலெல்லாம் ஆர்வம் குறைவது. அல்லது வேறெதிலும் ஆர்வமே இல்லாமல் போவது.

5. படிப்பில் ஆர்வம் குறைவது. கவனம் செலுத்த முடியாமல் போவது. கவனச் சிதைவு ஏற்படுவது.

6. மற்ற விஷயங்களிலுள்ள பாதிப்பு எதையுமே கருத்தில் கொள்ளாமல் விளையாட்டின் மீது மீண்டும் மீண்டும் வேட்கை கொள்வது.

7. விளையாடுவதற்காக பொய் சொல்வது. எப்படியாவது விளையாட விரும்புவது. முக்கியமான தேர்வு நேரங்களில் கூட விளையாட விரும்புவது.

8. எல்லாவற்றையும் விட முதன்மையானதாக விளையாட்டு மாறிப் போவது. விளையாட்டில் மட்டுமே மன திருப்தி கிடைப்பது.

9. பிறரோடு உள்ள உறவுகள் குறைந்து குறைந்து, டிஜிடல் உறவு அதிகரிப்பது. மற்ற நேரங்களில் அமைதியாய் இருக்க நினைப்பது. குணாதிசயங்களில் மாறுதல்கள் நிகழ்வது.

10. உடல் எடை குறைதல், தூக்கம் தடுமாறுதல், சாப்பாடு குறைவது, மயக்கம் வருவது போன்ற உடல் பாதிப்புகள்.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது என்று பொருள். அந்த ஆர்வம் வளர்ந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர உதவுங்கள்.

அதற்காக உடனே ஓடிப் போய் எல்லா டிஜிடல் கருவிகளையும் உடைத்து விட்டு, “சுபம்” போட நினைக்காதீர்கள். அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

1. எதுவும் அளவோடு இருப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு விளையாட குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். உதாரணமாக, வார இறுதிகளில் தினம் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் கொடுக்கலாம். எவ்வளவு நேரம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் விளையாடும் நேரத்தை நாள்காட்டியில் குறித்து வைக்க வேண்டும்.

2. இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கவே கூடாது. அதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

3. கணினியையோ, விளையாட்டு கருவியையோ, மொபைலையோ விளையாட அனுமதித்தால் அது பெற்றோரின் முன்னால், பொது இடத்தில் இருக்க வேண்டும். தனியறைகளில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.டிஜிடல் நேரத்தைக் குறைத்து பிள்ளைகளை வேறு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்வது. பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவற்றின் மூலம் டிஜிடல் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

5. வீட்டுப்பாடம், படிப்பு போன்றவற்றை முதன்மையாய் வைத்திருப்பது. அதை எல்லாம் முடித்த பின்பே விளையாட அனுமதிப்பது மிக முக்கியம். விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். மீறினால் டிஜிடல் டைம் குறையும் என சொல்லுங்கள்.

6. டிஜிடல் விளையாட்டுகளினால் நிகழ்கின்ற உடல், உளவியல் பிரச்சினைகளை பிள்ளைகளிடமும், அவர்களுடைய நண்பர்களிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவது. அதை தகவல் பகிர்தலாகவோ, ஒரு நண்பனின் அறிவுரை போலவோ சொல்வது பயனளிக்கும்.

7. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். உடல் உற்சாகமாக இருக்கும் போது டிஜிடல் ஆர்வம் குறையத் துவங்கும். உடலின் சோர்வும், உடலின் ஆக்சிஜன் குறைபாடும் டிஜிடல் ஆர்வத்தை அதிகரிக்கும்.

8. குடும்ப நேரம், நண்பர்களின் நேரம், உறவினர்களின் நேரம் இவற்றை அதிகரிக்க வேண்டும். உறவுகளைக் கட்டியெழுப்பும் போது மாற்றங்கள் உருவாகும்.

9. ‘இந்த ஒரு கேமையும் முடிச்சுட்டு வரேன்’ போன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித்து விட்டு, அல்லது ‘சேமித்து’ விட்டு வெளிவர குழந்தைகளைப் பழக்குங்கள். ‘இன்னும் பத்து நிமிசம் தான் இருக்கு… கேமை சேவ் பண்ணிக்கோ’ என அன்பாய் அறிவுறுத்து அவர்களை மெல்ல மெல்ல பழக்குங்கள்.

10. தொடர் விளையாட்டுகள், நண்பர்களோடு ஆன்லைனில் இணைந்து விளையாடுவது, அடிமைத்தனத்துக்கு மிக எளிதில் கூட்டிச் செல்லும் விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வேறு விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விளையாடச் சொல்லுங்கள்.

டிஜிடல் விளையாட்டுக்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பது எளிதான செயல் அல்ல. ஆனால் மிகவும் தேவையான செயல். மது, போதை, புகை போன்ற அடிமைத்தனங்களைப் போலவே வலிமையானது டிஜிடல் அடிமைத்தனம். ஒருவேளை உங்களால் உங்கள் குழந்தையை வெளிக்கொணர முடியவில்லையேல் உளவியலார்களின் ஆலோசனையை நாடுங்கள். சிறுவர் கவுன்சிலிங் பயனளிக்கும்.

ஸ்மார்ட்போன்களும், டிஜிடல் கருவிகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிச்சயம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவையே. தடுமாறாமல் இருப்போம், தலைமுறையைக் காப்போம்.

*

சேவியர்

Block Chain : 14

Image result for blockchain

ஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை நம்புவதற்கு சில அறிகுறிகள் உண்டு. அதில் ஒன்று, வர்த்தக நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன என்பது. ஒரு தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது எனும் உத்தரவாதம் இருந்தால் தான் பண வரிவர்த்தனை சார் நிறுவனங்கள் அதை அங்கீகரிக்கும்.

அப்படி பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் தொழில்நுட்பங்களே காலம் செல்லச் செல்ல பலவீனமடைந்து விடுவது தனிக்கதை. காரணம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அடுத்த நாள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு படு வேகமாக இருப்பது தான்.

இன்றைய பிளாக் செயின் தொழில்நுட்பத்திலும் அத்தகைய ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. வழக்கமான வங்கிகள் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கின்றனவா ? வெறும் வாயளவிலோ, காகித அளவிலோ இல்லாமல் பரீட்சை பார்த்து வெற்றியடைந்திருக்கின்றனவா ? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறது “வேர்ல்ட் வயர்” எனும் பிளாக் செயின் கட்டமைப்பு. இது பிரபல ஐபிஎம் நிறுவனக் கட்டமைப்பில் உருவாகியிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ தங்களுக்கிடையேயான பண பரிவர்த்தனையை நிறைவேற்றிக் கொள்ள இது வழி வகை செய்திருக்கிறது. பொதுவாக நாடுகளுக்கிடையேயான பரிவர்த்தனைகள் உடனடி நடப்பதில்லை. காரணம் ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையேயான எக்ஸ்சேஞ்ச் ரேட் மற்றும் எந்த கரன்சியில் செட்டில்மென்ட் செய்யவேண்டும் எனும் பிஸினஸ் முடிவுகள்.

பயனர்களுக்கு ஆன்லைனில் உடனுக்குடன் பரிவர்த்தனை நடப்பது போலத் தோன்றினாலும், வங்கிகளுக்கு இடையே அப்படி நடப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு வங்கியின் அட்டையை வைத்துக் கொண்டு இன்னொரு வங்கியின் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம். உங்களுக்கு பணம் உடனே கிடைக்கும். ஆனால் அந்த இரண்டு வங்கிகளும் தங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனையை, கணக்கு வழக்குகளை உடனே தீர்ப்பதில்லை. அதை மறு நாளோ, அதற்கு அடுத்த நாளோ தான் தீர்த்து வைக்கின்றன. இதை செட்டில்மென்ட் என்பார்கள்.

டிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ? வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன ? எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது ? என்பதெல்லாம் இந்த செட்டில்மென்ட் பிரிவின் அம்சங்கள்.

உதாரணமாக கடையில் நடக்கும் ஒரு பி.ஓ.எஸ் மெஷின் பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றன என பார்ப்போம். இதன் முதல் கட்டம் பி.ஓ.எஸ் மெஷினுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கும் இடையே நடக்கும். இதை ரீகன்சிலியேஷன் அதாவது சரிபார்த்துக் கொள்தல் என்பார்கள். ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பமாகும் அத்தனை பரிவர்த்தனைகளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்தாக வேண்டும். அது அடிப்படை விதி ! இதைத் தான் முதலில் வங்கிகளும், பி.ஓ.எஸ் மெஷின் வைத்திருக்கும் கடைகளும் செய்யும்.

ஒருவேளை இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். வேறுபாடு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலோ, பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றின் மதிப்பிலோ இருக்கலாம்.

இப்போது அக்யூரர் ( வாங்கும் வங்கி ) வங்கிக்கும், இஷ்யூயர் (வழங்கும் வங்கி ) வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இது எப்படி நடக்கிறது ?

வங்கிகளில் ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிவர்த்தனை வாங்குபவர் வங்கியிலிருந்து பேய்மென்ட் சிஸ்டம் வழியாக இஸ்யூயர் வங்கிக்குச் செல்கிறது. அங்கிருந்து “அங்கீகரிக்கலாம்” எனும் பதிலோடு திரும்பி வருகிறது. அப்போது அந்த பரிவர்த்தனையில் ‘செட்டில்மென்ட்க்கு எடுக்கலாம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்படும்.

இப்படி சரி செய்யப்பட்ட தகவல்கள் தினம் தோறும் செட்டில்மென்ட் நிலைக்குள் வரும். செட்டில்மென்ட் மென்பொருள் வங்கி வாரியாக கணக்கை பிரித்து தெளிவான அறிக்கைகளாய் மாற்றும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன என்பது முடிவு செய்யப்பட்டபின் அவை வங்கிகளுக்கும், வங்கிகளின் மேலாண்மை அமைப்புக்கும் ஃபைல்களை அனுப்பும்.

வங்கிகள் அந்த ஃபைலை எடுத்து தங்களுடைய மர்ச்சன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (எம்.எம்.எஸ்) எனும் மென்பொருளுக்குக் கொடுக்கும். அது ஒவ்வொரு பி.ஓ.எஸ் கணக்குக்கும் உரிய பணத்தை அவரவர்க்கு அனுப்பும்.

வெளிநாடுகளில் இதே கார்ட் பரிவர்த்தனையைச் செய்யும் போது அந்தந்த நாட்டு பணத்துக்கு ஏற்ப ‘கன்வர்ஷன் ரேட்’ பயன்படுத்தப்பட்டு செட்டில்மென்ட் நடக்கும். உதாரணமாக அமெரிக்காவில் நாம் நூறு டாலருக்கு ஒரு பொருளை வாங்கினால் அது நமது அக்கவுண்டில் வரும்போது அதற்குரிய கன்வர்ஷன் முடிந்த இந்திய ரூபாயாக வரும். அதே நேரத்தில் வழங்குநர் வங்கியும் பேய்மென்ட் சிஸ்டமும் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒரு கரன்சியை முடிவு செய்து கொள்ளும். அது டாலராகக் கூட இருக்கலாம்.

இந்த பரிவர்த்தனைகளை செய்கின்ற பேய்மென்ட் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கும். உதாரணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நாள் ஐந்து கோடி பரிவர்த்தனைகள் நடந்தால், நிறுவனம் தினமும் ஐந்து கோடி ரூபாய்களை சம்பாதிக்கும்.

வங்கிகளுக்கு இடையே நடக்கும் இத்தகைய செட்டில்மென்ட் விஷயங்கள் தினம் ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தான் நடைபெற்று வருகின்றன. ஆனால் சமீபகாலமாக அந்த செட்டில்மென்ட் சைக்கிள் எனப்படும் கால அளவு குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, மூன்று முறை என்றெல்லாம் வங்கிகள் தங்கள் மென்பொருட்களை வடிவமைக்கின்றன.

ஆனால் பரிவர்த்தனை நடக்கும் போதே அது செட்டில்மென்ட் வட்டத்துக்குள் நுழைகின்ற “ரியல் டைம் செட்டில்மென்ட்” இன்னும் வரவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அந்த மென்பொருள் மிகவும் வரவேற்பைப் பெறும். இத்தகைய சூழலில் தான், “நான் வந்துட்டேன்னு சொல்லு” என குதூகலமாய்க் குதித்திருக்கிறது ஐபிஎம் நிறுவனத்தின் வேர்ல்ட் வயர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்கின்ற பிளாக் செயின் வலையாக இது களம் கண்டிருக்கிறது. இதன் பரிவர்த்தனை கிரிப்டோகரன்சி ( குறியீட்டு நாணயம் ) மூலமாகத் தான் இப்போதைக்கு நடக்கிறது. ஸ்டெல்லர் எனப்படும் அந்த கரன்சி அமெரிக்க டாலருடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.

இதைப் பயன்படுத்தி உலகம் முழுதும் பரிவர்த்தனைகளை ரியல் டைமில் செய்கிறது இந்த உலக வயர் எனும் புதிய பிளாக்செயின் கட்டமைப்பு. அக்டோபர் 2007ல் சிந்தனையாக உருவான இந்த கட்டமைப்பு இப்போது பயன்பாட்டில் நுழைந்திருக்கிறது.

சரியாகச் சொல்லவேண்டுமெனில் 72 நாடுகளில், 48 கரன்சி வகைகளில், 44 வங்கிகளில் இந்த வேர்ல்ட் வயர் கட்டமைப்பு கண நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகிற பணம் மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் என்கிறது உலக வங்கி அறிக்கை. அப்படி அனுப்பும் பணம் சென்று சேர்வதும், பயன்பாட்டுக்கு வருவதும், அதை அனுப்பும் நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வதும் எல்லாமே கணிசமான கால இடைவெளியில்தான் நடந்து வருகின்றன.

அந்த கால இடைவெளியைக் குறைக்கவும், அழிக்கவும் செய்கின்ற முயற்சியாகத் தான் வேர்ல்ட் வயர் நுழைந்திருக்கிறது. இது ஒரு துவக்கம் மட்டுமே, சர்வதேச பண பரிவர்த்தனை முதல் பக்கத்து வீட்டுப் பரிவர்த்தனைகள் வரை எல்லாமே பிளாக்செயின் நுட்பத்துக்குள் நிச்சயம் நுழைந்து விடும் என அடித்துச் சொல்கிறது ஐபிஎம் நிறுவனம்.

இதே காலகட்டத்தில் இப்போது பரிசீலனையில் இருக்கின்ற மிகப்பெரிய விஷயம், ஃபேஸ் புக் கொண்டு வரப் போகின்ற ” ஃபேஸ்காயின்”. கிரிப்டோகரன்சியாக வரப்போகின்ற இந்த பணம் அமெரிக்க டாலருக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாய் வரும் என வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து எங்கும் வியாபிக்க ஃபேஸ்காயின் முயலும் என அவர்கள் கணிக்கின்றனர்.

இப்படி, பிளாக் செயின் குறித்து வருகின்ற புதிய தகவல்கள் எல்லாமே மிகப்பெரிய புரட்சிகளாகவே இருப்பது பிளாக் செயினின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் கட்டியம் கூறுகிறது.

( அடுத்த வாரம் முடிப்போம் )

*

பிளாக் செயின் 13

பிளாக்செயின் மொபைல்

Image result for blockchain

இன்றைய தொழில்நுட்ப உலகின் மாபெரும் வளர்ச்சி என ஸ்மார்ட்போன்களைக் குறிப்பிடலாம். கடந்த சில ஆண்டுகளில் அது கடந்துவந்த விஸ்வரூப வளர்ச்சி வியக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டின் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு வசீகரமான தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் களமிறங்குகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஸ்மார்ட்போன் ஒரு காட்டுத் தீயைப் போல ஏகப்பட்ட கருவிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

கடிதம்,மின்னஞ்சல், ஆடியோ சிஸ்டம், வீடியோ பிளேயர், கேமரா, பிரவுசிங் சென்டர்கள் என இவை விழுங்கிய கருவிகள் எக்கச்சக்கம். இப்போது கணினிகளையும் இது தேவையற்ற பொருளாக மாற்றியிருக்கிறது என்பதே நிஜம். எனினும் இந்த மொபைல் தொழில்நுட்பத்தில் இதுவரை பிளாக்செயின் நுழையவில்லை. அந்த முதல் சுவடை, முதல் வெள்ளோட்டத்தை சமீபத்தில் ஹைச்.டி.சி நிறுவனம் நிகழ்த்தியிருக்கிறது.

தனிநபர் தகவல் பாதுகாப்பின்மை என்பது இப்போது சர்வதேசப் பிரச்சினையாகியிருக்கிறது. பிரபல நிறுவனங்களெல்லாம் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கின்றன. ஆளானப் பட்ட சுந்தர் பிச்சையே கைதி போல கோர்ட் முன்னால் விளக்கமளிக்க வேண்டிய சூழலை இது உருவாக்கியிருந்தது.

நமது மொபைலில், இணையத்தில் நாம் நிகழ்த்தும் எல்லாம் பரிவர்த்தனைகளும் திருடப்படலாம் எனும் சூழலே இன்று நிலவுகிறது. நமது மொபைலில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான சென்சார்கள், ஜிபிஎஸ் டிராக்கர்கள், ஆப்கள் போன்றவையெல்லாம் நமது தகவலை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பிரபல நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கின்றன நமது தகவல்கள். பதிலுக்கு நமக்கு என்ன பயன் ? இந்த தகவல்களின் உரிமையாளர்கள் நாம் தானே ? சொந்தக்காரனுக்கு எந்த காப்பிரைட்டும் இல்லையா ? நமது தகவல்களினால் நமக்கு எந்த வருமானமும் இல்லையா ? இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்பு. இவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் தீர்த்து வைக்கலாம் என்பது தான் வசீகர அம்சம்.

நமது நடத்தை, நமது ஷாப்பிங், நமது ஹெல்த், வங்கி பரிவர்த்தனை, நமது இணைய பயன்பாடு எல்லாமே ஏதோ ஒரு நிறுவனத்திடம் இருக்கிறதே தவிர, நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய தகவலை இன்னொருவர் பயன்படுத்தினால் உங்களுக்கு அதற்குரிய ஒரு பலன் கிடைக்கிறது. எனில், உங்களுடைய தகவல் திருடப்படும் சூழல் மாறி நீங்களே உங்கள் தகவலை பகிரும் சூழல் உருவாகும் இல்லையா ? இதைத் தான் பிளாக் செயின் மொபைல் செய்யும் என்கிறார் ஹைச்.டி.சி நிறுவன தலைமை அதிகாரி ஃபில் சென்.

உங்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை யாரேனும் ஆக்கிரமித்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பீர்களா ? அப்படியானால் உங்களுடைய தகவலை யாரோ ஆக்கிரமித்தால் மட்டும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ? என அவர் கேள்வி எழுப்புகிறார். எப்படி கற்காலத்தில் உடல் வலிமை ஒரு மனிதனுடைய மதிப்பை நிர்ணயித்ததோ, இன்றைய யுகத்தில் தகவல்களே ஒரு மனிதனுடைய வலிமையை நிர்ணயிக்கின்றன. ஆனால் இதை யாரும் உணர்வதில்லை. தங்களுடைய தகவலினால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அத்தகைய உதாசீனமே பெரும் நிறுவனங்களின் பலம்.

ஹைச்.டி.சி தனது மொபைலுக்கு எக்ஸோடஸ் 1 என பெயரிட்டிருக்கிறது. பைபிளில் எக்ஸோடஸ் என ஒரு நூல் உண்டு. எகிப்தில் அடிமைகளாய் இருந்த சுமார் இருபது இலட்சம் எபிரேயர்களை மோசே எனும் விடுதலை வீரர் விடுவித்துக் கொண்டு வரும் நிகழ்வு தான் அந்த நூலின் அடிப்படை. அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் இந்த மொபைலுக்கு எக்ஸோடஸ் எனும் பெயரை இட்டிருக்கின்றனர். இன்றைக்கு பல நிறுவனங்களுக்கு அடிமைகளாய் இருக்கும் பயனர்களை சுதந்திரமாக்கி விடும் புதிய தொழில்நுட்பம் இது என்கின்றனர்.

இந்த மொபைலில் நமது தகவல்கள் வேறெந்த நிறுவனத்துக்கும் செல்லாது. பேங்க் லாக்கர்களைப் பயன்படுத்துவோருக்கு தெரிந்திருக்கும். நம்மிடம் ஒரு சாவி இருக்கும். வங்கியில் ஒரு சாவி இருக்கும். இரண்டு சாவியையும் போட்டால் தான் லாக்கர் திறக்கும். இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் அத்தகைய ஒரு சாவியை பயனரிடமே கொடுக்கிறது. தேவையானவற்றை அந்த பாதுகாப்புத் தளத்தில் நாம் போட்டு வைக்கலாம். நாம் விரும்பாமல் அந்த தகவல்களை யாரும் எடுக்க முடியாது என்பது தான் எளிமையான புரிதல்.

பகிரப்படுகின்ற தகவல்கள் எல்லாமே யாரும் பிரதியெடுக்க முடியாத தொழில்நுட்பத்திலும், செக்யூரிடி கீ யுடனும் தான் பகிரப்படும் என்பதால் தகவல் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இது டிஜிடல் உலகில் இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாய் இருந்தது. பிளாக் செயின் தான் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாடகர்கள், எழுத்தாளர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் போன்றோர் தங்களுடைய தகவல்களை சொந்தம் கொண்டாடவும், லாபம் பார்க்கவும் முடியும். சைபர் தகவல் திருட்டு குறையும்.

மொபைல் கேமிங் எனப்படும் விளையாட்டு ஏரியாவிலும், பல சீரியசான வேலைகளை பிளாக் செயின் செய்யப் போகிறது. கிரிப்டோகிட்டீஸ் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாகிறது. அதில் நீங்களே டிஜிடல் பூனையை வளர்க்கலாம். விளையாடலாம். அதன் மதிப்பு பயன்பாட்டுக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு பூனை ஒருவரிடம் மட்டும் தான் இருக்கும். காப்பியடிக்கவும் முடியாது. இதை நீங்களே டிஜிடல் வெளியில் விற்கலாம், உண்மையான பணத்துக்கு ! என விளையாட்டு ஏரியாவையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டங்களுடன் பிளாக்செயின் களமிறங்குகிறது.

இலட்சக்கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டன. இலட்சக்கணக்கான ஆதார் திருடப்பட்டன போன்ற தகவல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். அத்தகைய சிக்கல் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழாது. ஒட்டு மொத்த தளத்தை முடக்குவதோ, ஒட்டு மொத்த தகவல்களையும் திருடுவதோ சாத்தியமே இல்லை.

இப்போதைக்கு ஒரே ஒரு சிக்கல் தான் இந்த பிளாக் செயின் போன்களில். ஒருவேளை உங்கள் போன் திருடப்பட்டால் என்னவாகும் ? உங்களுடைய டிஜிடல் பணம் அதில் மட்டுமே இருக்கும். உங்கள் டிஜிடல் சாவி அதில் மட்டுமே இருக்கும். எனில் என்ன செய்வது ? அதுவே இப்போதைய மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக, சாவி தொலைந்து போனால் மீட்டெடுக்கும் வழிமுறையான சோஷியல் கீ ரெக்கவரி முறையை கொண்டு வருகிறது. இதொன்றும் கம்பசூத்திரமில்லை. பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஒரு மேப்பை பல துண்டுகளாகக் கிழித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டை கொடுத்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சேர்த்தால் தான் முழு மேப் கிடைக்கும். அதே போல, நமது கீயை சின்னச் சின்ன துண்டுகளாகப் பிரித்து பலரிடம் கொடுத்து வைக்கும் வழிமுறையே இது.

ஒருவேளை கீ தொலைந்து போனால் நாமாகவே எல்லா துண்டுகளையும் எடுத்து, இணைத்து, கீயை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொருவரிடமும் ஒரு பாகம் மட்டுமே இருப்பதால் அவர்களால் அதை பயன்படுத்த முடியாது. யாரிடமெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதும் நமக்கு மட்டுமே தெரியும். இது தான் அந்த சாவியை மீண்டெடுக்கும் வழிமுறை.

இந்த பிளாக் செயின் மொபைலுக்கென தனியே புதிய ஆப்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை டிஆப்ஸ் ( டி சென்ட்ரலைஸ்ட் ஆப்ஸ்) என்கிறார்கள். இவை ஒரு தனிநபர் என்றில்லாமல் பீர் டு பீர் எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதனால் வேகமான சந்தைப்படுத்தல் சாத்தியமாகும்.

இந்த பிளாக்செயின் தொழில்நுட்ப போன் என்பது எதிர்காலக் கனவுகளுடன் சுவடு பதித்திருக்கும் அதி நவீன நுட்பம். இது வேகமெடுக்க நீண்ட காலம் ஆகலாம், ஆனால் ஒட்டு மொத்த மொபைல் பயன்பாட்டையே புரட்டிப் போடும் வலிமை அதற்கு உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம்

*

சேவியர்

Block Chain – 12

பிளாக் செயின் : புதிய இன்டர்நெட்

 

Image result for blockchain

பிளாக் செயின் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் ஜான்பவான்கள் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை, “நாளைய இணையம்” பிளாக் செயினில் தான் என்பது. அதற்கான மிக முக்கியமான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இரண்டு விஷயங்களை.

ஒன்று பில்ட் இன் இன்டெலிஜென்ஸ், அதாவது புதிய இன்டர்நெட் வெறுமனே தகவல்களை அள்ளி வருவதாக இல்லாமல் அறிவார்ந்த ஒரு தேடலாக இருக்கும் என்பது. அறிவார்ந்த மென்பொருட்களினால் கட்டமைக்கப்படுவது என வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று, பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ‘பல பிரதிகள்’ தேவையில்லை என்பது.

‘அறிவு புகுத்தப்பட்ட’ இணையம் என்ன செய்யும் ? அங்கே தான் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் வருகிறது. தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, மென்பொருள் மூலமாகவே சரியான பதில்களைத் தரும் என இவற்றைப் பற்றி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, உங்களுடைய ஐடன்டிட்டி அதாவது தனிநபர் அடையாளம் பிளாக் செயினில் பாதுகாப்பாய் சேமிக்கப்படும். பின்னர் நீங்கள் ஒரு வங்கியை தொடர்பு கொண்டாலோ, ஒரு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டாலோ உங்கள் அடையாளத்தை தனியே நிரூபிக்கத் தேவையில்லை. பிளாக் செயினே உங்களுடைய அடையாளத்தை சோதித்தறியும்.

உங்களுடைய வங்கிப் பரிவர்த்தனையை பாதுகாப்பாய் மாற்றும். இதே போல பல ஸ்மார்ட் கான்ட்ராக்ட்கள் மூலம் பல நிறுவனங்களை இணைக்கும். வங்கியிலிருந்து பணம் எடுத்து, அப்படியே லேன்ட் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, அதை அங்கேயே பரிசோதித்து, அப்படியே ஒரு கார் வாங்கி, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து, என பல நிறுவனங்களில் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படு வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.

இப்படி இணையத்தை ஒரு புதுமையான தளமாக மாற்ற பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பது நவீனத்தின் சிந்தனை. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை தனியே ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் ( பிரித்து வைக்கப்பட்ட) மென்பொருள் லேயர் (அடுக்கு ) கவனிக்கும். சேமிப்பை இன்னொரு அடுக்கு கவனிக்கும். செயல்பாட்டை இன்னொரு அடுக்கு கவனிக்கும் என பல விதங்களில் இதன் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.

பல பிரதிகள் தேவையற்ற இணையம் என்பதன் பொருள் என்ன ? நீங்கள் யூடியூபில் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் அந்த வீடியோவின் ஒரு பிரதியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது பொருள். வீடியோக்கள் எல்லாமே யூடியூப் நிறுவன சர்வர்களில் பாதுகாப்பாய் இருக்கும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஒரு வீடியோ பகிரும் தளம் இருந்தால் அது வீடியோக்களை ஒரே இடத்தில் வைக்காது. கட்டுப்பாட்டையும் அது எடுத்துக் கொள்ளாது.பல பிரதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.

ஒரு முறை இணையத்தில் அப்லோட் செய்து விட்டால் அதை வேறு யாரும் டெலீட் செய்யவும் முடியாது. அதை அந்த இணையத்தோடு இணைந்திருக்கும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அது ஒரே இடத்தில் இல்லாமல் உலகின் பல பாகங்களிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். வீடியோவை உருவாக்குபவர்கள் இதன் மூலம் நல்ல லாபத்தையும் சம்பாதிக்க முடியும். அதாவது, ஒட்டு மொத்த வருமானமும் யூடியூப் போன்ற ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்காமல், சார்ந்திருக்கும் பங்களிப்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பது தான் இதன் வசீகர சிந்தனை.

பிட்டியூப்.காம் எனும் தளம் முழுக்க முழுக்க பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது அதை சென்று பாருங்கள். அதன் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். காப்புரிமை வீடியோக்களின் மூலம் உண்மையான தயாரிப்பாளர்கள் பயனடைய அந்த தொழில்நுட்பம் நிச்சயம் கைகொடுக்கும்.

நீளமான வீடியோக்களை அப்லோட் செய்யலாம், விளம்பரம் இல்லாத வீடியோக்களைப் பார்க்கலாம், என்கிரிப்டட் நுட்பத்தில் பாதுகாக்கலாம் உட்பட பல்வேறு வசீகர அம்சங்களை பிட்.டியூப் தளம் தருகிறது.

இப்போதைய இணையம் வெப்2.0 என அறியப்படுகிறது. இந்த பெயரைச் சூட்டியது ஓரெய்லி மீடியா. 2004ம் ஆண்டு இந்த பெயர் வந்தது. இன்றைக்கு நாம் பார்க்கும் இணையம், அது சார்ந்த சமூக வலைத்தளங்கள் என ஒட்டு மொத்தமும் வெப் 2.0 ல் அடங்கி விடுகிறது. இதற்கு அடுத்த கட்டம் வெப் 3.0. இது அறிவார்ந்த இணையம் என அழைக்கப்படுகிறது. இதுவும் 2006ம் ஆண்டே ஜான் மார்க் ஆஃப் என்பவரால் எழுதப்பட்டது தான். ஆனால் அந்த கனவின் முழுமையான செயல்பாட்டை உருவாக்கும் நிலை இப்போது இந்த பிளாக் செயின் மூலமாக உருவாகியிருக்கிறது.

இந்த வெப் 3.0, பழைய முறையில் இருந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யும் எனும் நம்பிக்கை தொழில்நுட்ப உலகில் உள்ளது. இது பயனர்களை மையப்படுத்திய இணையம் என்பதால் அங்கீகரிக்கப்படாத, போலி பயனர்களையும் தகவல் திருட்டுகளையும் தடுக்க முடியும்.

இந்த புதிய இணையத்தில் தகவல்களின் பரிமாற்றத்தைப் பார்க்க வேண்டுமெனில், முழுமையாக டிராக் செய்யவும் முடியும். எளிமையாகவும் ஒளிவு மறைவற்றதாகவும் இந்த செயல்பாடு அமையும்.

தகவல்கள் அழியவே அழியாது எனும் அதிகபட்ச உத்தரவாதம் இன்றைய இணையத்தை விட பிளாக் செயின் சார் இணையத்தில் உண்டு. அதன் காரணம் மையப்படுத்தப்படாத தகவல் சேமிப்பு. அதே போல, இணையம் முழுமையாய் ஸ்தம்பிக்கும் வாய்ப்பு இதில் இல்லை. அதன் காரணமும் இந்த டிசென்ட்ரலைஸ்ட் முறை தான்.

இன்னொன்று நாம் பலதடவை பேசிய பாதுகாப்பு அம்சம். இதன் தகவல் பரிமாற்றங்களில் கிடைக்கக் கூடிய பாதுகாப்பானது மிகவும் வலுவானது.

பிளாக் செயின் தான் அடுத்த இணையம் என்று பேசும்போது ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். இன்டர்நெட் எனும் அடிப்படை விஷயம் இல்லாமல், பிளாக்செயின் இன்டர்நெட் இல்லை. இது அந்த அஸ்திவாரத்தில் கட்டியெழுப்பப்படப் போகும் வலுவான இணையம் அவ்வளவு தான்.

இந்த நுட்பத்தின் மூலம் அதிக பயனடையப் போகும் தளங்களில் மீடியா முக்கியமானது. காப்பிரைட்டட் பிரச்சினைகளை இது வெகுவாகக் குறைக்கும். தயாரிப்பாளர்களின் பண இழப்பு குறையும்.

இன்னொரு தளம் விளையாட்டு. பயனர்கள் பலர் இணைந்து விளையாடுவதும், அதன் மூலம் அவர்களுடைய பரிவர்த்தனைகளில் லாபம் பார்ப்பதும் என இதன் சாத்தியங்கள் அதிகம்.

அதே போல சட்டம் சார்ந்த விஷயங்களில் இது மிகவும் அதிகமாய் பயனளிக்கும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட் எனும் அறிவார்ந்த மென்பொருட்கள் மூலம் இல்லீகல் டாக்குமென்ட்களை விலக்கவும், பயனர்களுக்கு சரியான வழிகளைக் காட்டவும் பயனளிக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக பொருளாதாரம் சார்ந்த ‘பைனான்ஸ்” தளம் மிகவும் பயன்பெறும்.

இந்த வெப் 3.0 முழுமூச்சில் வரும்போது ஆப் களும் சென்ட்ரலைஸ்ட் ஆக இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டட் ஆக உருமாறும். அது இன்னொரு வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். அத்தகைய ஆப்களும், பரிவர்த்தனைகளும் இணையத்தின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது இணையத்தின் வேகம் குறைகின்ற சர்வதேசச் சிக்கல் இதன் மூலம் தீரும் என நம்பப்படுகிறது.

பிளாக் செயின் ஓவர் ஹைப் என கூறுவோரும் உண்டு. அவர்களுக்கான எனது டாப் 2 பதில்கள். உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவை இப்போது பிளாக் செயினை அரவணைத்திருக்கின்றன. துபாய், சீனா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் வணிகத்தை முழுக்க முழுக்க பிளாக் செயினில் நடத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கின்றன.

பிளாக் செயின் ஓவர் மிகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது உண்மையானால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்க சாத்தியமே இல்லை.

*

BLOCK CHAIN 11

Image result for blockchain

11

மாஞ்சு மாஞ்சு பிளாக் செயினைப் பற்றி இத்தனை வாரங்கள் எழுதக் காரணம் அது தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது தான். இன்னும் அது தொடர்ந்து வளரும் என்பதிலும் சந்தேகமில்லை. அதை ஒரு சின்ன புள்ளிவிவரத்தின் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருந்த பிளாக் செயின் வேலைவாய்ப்புகள், சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு 207 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 631% வளர்ச்சியடைந்திருக்கிறது. புள்ளிவிவரங்களின் அனுமானத்தின் அடிப்படையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதிர்காலத்தில் பிளாக் செயின் ஒட்டு மொத்த மக்களையும் இணைக்கின்ற ஒரு பாலமாக இருக்கும் என கணிப்புகள் சொல்கின்றன. வங்கிகளையோ, ஷாப்பிங் தளங்களையோ தனித்தனியே தொடர்பு கொள்ளும் நிலையைத் தாண்டி, பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் நிலைக்கு பிளாக்செயின் பெரிதும் கைகொடுக்கும்.

கிரவுட் சோர்சிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பல இடங்களிலிருக்கின்ற, வல்லுநர்கள் இணைந்து ஒரு பணியைச் செய்வது இந்த கிரவுட் சோர்சிங் என சுருக்கமாய்ச் சொல்லலாம்.

ஒரு நிறுவனத்துக்கு ஆள் தேவையெனில் அதற்காக விளம்பரம் கொடுத்து, பயோடேட்டாக்களை பரிசீலித்து, ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, அவர்களின் தகுதியை பரிசோதித்து, வேலைக்கு ஆர்டர் கொடுத்து, அவர்களை வேலையில் சேர்த்து , என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி, வேலையை முடிப்பது ஒரு வகை. அதாவது, இப்போது இருக்கின்ற முறை. இது வழக்கமான முறை.

இன்னொரு வழி என்னவென்றால், “எனக்கு இந்த வேலையை முடிக்க வேண்டும். விரும்புவோர் முடித்துத் தரலாம்” என கேட்பது. உதாரணமாக் ஒரு மொபைல் ஆப் டெவலப் பண்ண வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை பொதுவில் சொல்லலாம். உலகின் ஏதோ மூலையில் இருக்கின்ற ஒருவர் ஒத்துக் கொண்டு அந்தப் பணியைச் செய்வார், இன்னொரு மூலையில் இருக்கின்ற ஒருவர் அதை பரிசோதித்துப் பார்த்து ஓக்கே சொல்வார். உங்களுடைய வேலை முடிந்து விடும்.

இதன் மூலம் உங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் தலைவலியே இல்லை. வேலையும் சுமூகமாக நடக்கும். அமெரிக்காவிலுள்ள டெவலப்பரும், கனடாவிலுள்ள டெஸ்டரும் சேர்ந்து லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்துக்காக வேலை பார்க்கலாம். நேரமும் மிச்சம். சம்பளம் அவரவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பவும் செய்யலாம்.

இந்த கிரவுட் சோர்சிங் முறை சில இடங்களில் நன்றாக செயல்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் இது மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதன் முழு வீச்சுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல கிரவுட்ஃபண்டிங் என்பது இன்னொரு விஷயம். இது உலகெங்கும் இருக்கிற மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் வாங்கி, ஒரு பெரிய தொகையை உருவாக்கி, அதன் மூலம் ஒரு தொழிலைச் செய்வது. அதில் கிடைக்கின்ற லாபத்தை அப்படியே முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது. அத்தகைய கிரவுட் ஃபண்டிங் முறைக்கு இப்போது பிளாக் செயின் தொழில்நுட்பம் பெருமளவில் கை கொடுக்கிறது.

இதை ஒருமுறை வெள்ளோட்டம் விட்டபோது சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரண்டே மாதங்களில் மக்களிடமிருந்து பெற்று சாதித்துக் காட்டியது ஒரு நிறுவனம். வாங்கியவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் லாபம் அவர்களை வந்தடையும் என்பது திட்டம். செயல்படுத்திய விதங்களில் சில சவால்களை சந்தித்தாலும், இத்தகைய தொழில்நுட்பத்தால் கிரவுட் சோர்சிங் நிச்சயம் வெற்றியடையும் என்பதையே அது நிரூபித்துக் காட்டியது.

ஷேரிங் எக்கணாமி , பகிரும் பொருளாதாரம், முறையில் நம்மிடம் இருப்பதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து உதவுகின்ற ஒரு முறையை பிளாக் செயின் உருவாக்கும். கடையில ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும்போது கைமாத்தாக பணத்தை பக்கத்தில் இருப்பவரிடம் வாங்குவது போல, டிஜிடல் வெளியில் யாரிடமிருந்து வேண்டுமானாலும் டிஜிடல் பணத்தை வாங்கி, பின்னர் திரும்பச் செலுத்தும் முறையை இது உருவாக்கும்.

டிஜிடல் பரிவர்த்தனை ஏற்கனவே பணமற்ற சமூகத்தை நோக்கி நடக்கிறது. இனிமேல் அது ஏடிஎம், கிரடிட் டெபிட் கார்ட் போன்றவை ஏதும் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகரும். இந்த மாற்றத்தின் பின்னணியிலும் முன்னணியிலும் பிளாக் செயின் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

எந்த நிறுவனத்துக்கும் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டாக்குமென்ட் மேனேஜ்மென்ட், அல்லது ஃபைல் மேனேஜ்மென்ட். பத்திரமாகவும் வைக்கவேண்டும், அழிக்கவும் முடியாது, கவனமில்லாமல் வைத்திருந்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். என இது பல முனைகளிலும் கூர்மையாக இருக்கக் கூடிய விஷயம். அதை கவனமாகவும், பாதுகாப்பாகவும்,எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் கையாள பிளாக் செயின் உதவுகிறது.

அதன் ஒரு பாகமாக நமக்குச் சொந்தமானவற்றை காப்புரிமை போல இணையத்திலும் பகிர ஒரே வழி இந்த பிளாக் செயின் நுட்பம் தான். பல ஆல்பம் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பாடல்களை இணையத்தில் பகிர இந்த தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்துகின்றனர். மைசிலியா ஆப் இதன் ஒரு சரியான உதாரணம் எனச் சொல்லலாம்.

மின்சாரத்தின் தேவை உலகெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல விதங்களில் மின்சாரத்தை தயாரிக்கும் முறைகளும் பரவிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை எல்லா இடங்களிலும் படுவேகமாக பரவுகிறது. அப்படி சேமிக்கின்ற மின்சாரத்தை மற்ற இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முறைக்கும் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. அமெரிக்காவிலுள்ள கான்சென்சிஸ் நிறுவனம் இதை வெள்ளோட்டம் விட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.

தனிமனிதனுடைய அடையாளங்களை சோதித்தறிவது இப்போது மிகப்பெரிய சவால். ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மிகப்பெரிய சவாலே இது தான். இதை நிவர்த்தி செய்யும் வழிகளைத் தான் எல்லோரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்த ரேஸில் முன்னால் இருப்பது பிளாக் செயின் தான். இப்போது ஏ.எம்.ஒய் எனப்படும் ஆன்டி மணி லான்டரிங், கே.ஒய்.சி எனப்படும் நோ யுவர் கஸ்டமர் போன்றவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு இணைத்து அதை வலுப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

இதைவிட பெரிய முயற்சியாக ஸ்டாக் எக்சேஞ்ச், பங்கு பரிவர்த்தனைகள் போன்றவற்றில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியைச் சொல்லலாம். ஒருவருக்கொருவர் இதில் இணைந்திருக்க முடியும் என்பதால் செட்டில்மென்ட் விஷயங்களுக்கெல்லாம் நாள் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உடனுக்குடன் நடக்கும் என்பதை இதன் வலிமையாகச் சொல்கின்றனர்.

நம்பிக்கையின் அடிப்படையில் பண பரிவர்த்தனைகள் நடப்பது சவாலானது. சோதிக்கப்பட்டு, ஊர்ஜிதப்படுத்தப்பட்ட வழிவகைகளில் நடப்பதே பாதுகாப்பானது. காரணம் டிஜிடல் பரிவர்த்தனை என்பது இணைய வெளியில் நடப்பது. இங்கே ரகசியம் எனும் பேச்சுக்கே இடமில்லை. தகவல்களிலும், நாட்டின் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தும் நாடுகள் பிளாக் செயினை வரவேற்கின்றன. உதாரணமாக சீனா தனது நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் என எல்லா இடங்களிலும் பிளாக் செயினை பயன்படுத்த தீவிர அலசல்களை மேற்கொண்டிருக்கிறது.

ஏன், அமெரிக்காவின் மிகப்பெரிய அரசு அமைப்பான எஃப்.டி.ஏ ஃபுட் அன்ட் ட்ரக் அட்மினிஷ்ட்ரேஷன் இப்போது பிளாக் செயினை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

பிளாக் செயின் இப்படி பல்வேறு இடங்களில் புதிதாக மூக்கு நுழைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை தொழில்நுட்ப உலகமும் வரவேற்கிறது. இவையெல்லாம் தொழில்நுட்ப உலகில் பிளாக் செயினின் ஆதிக்கத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.

*

சேவியர்

Block Chain – 10

தேர்தலும், பிளாக் செயினும்

Image result for blockchain AND ELECTION

இப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாய் இருக்கக் கூடிய விஷயம் தேர்தலும், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரமும் தான். எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் தவறாய்ப் பயன்படுத்தலாம் என்றும், தொழில்நுட்ப அறிவுடையவர் யார் வேண்டுமானாலும் அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கலாம் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவதை அறிவோம்.

சிலர் அதை நிரூபித்ததாய் அடித்துச் சொல்கிறார்கள். சிலர் அப்படி ஒரு விஷயத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். எது எப்படியானாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அமெரிக்காவில் இன்னும் டிஜிடல் வாக்குகள் அமல்படுத்தவில்லை என்பதை காரணம் காட்டுகிறார்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், பரந்து விரிந்த இந்தியா போன்ற தேசத்தில் டிஜிடல் வாக்களித்தலின் தேவை அதிகமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனில், என்ன செய்யலாம் ? அதற்கான நம்பிக்கையையும் பிளாக் செயின் தருகிறது !

வாக்கெடுப்பில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை இணைத்து வெள்ளோட்டம் விட்டிருக்கிறது தாய்லாந்து தேசம். தாய்லாந்தின் நேஷனல் எலக்ட்ரானிக் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி சென்டர் அத்தகைய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. வாக்களிப்பில் நடக்கின்ற தில்லு முல்லுகளைத் தடுக்கவும், தகவல்களின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவும் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாக இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்தில் இதை கல்லூரிகள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றில் பரீட்சித்துப் பார்த்து பின்னர் பொதுத் தேர்தல் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு தென்கொரியாவும் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது நினைவிருக்கலாம். எல்லா ஆன்லைன் வாக்களிப்புகளும் பிளாக் செயின் தொழில் நுட்பக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

அமெரிக்காவிலுள்ள மேர்கு விர்ஜீனியாவிலும் இராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து தங்கள் வாக்கைப் பதிவு செய்ய ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கலாம் எனும் நிலை உருவானது. ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்ட இந்த முயற்சி விரைவில் அடுத்த கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இது எளிதான பணியல்ல, ஒட்டு மொத்த மென்பொருள் அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். வாக்களிப்பவரின் அடையாளங்களை உடனுக்குடன் சோதித்தறியும் நிலை வேண்டும் இப்படி பல நடைமுறை சவால்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் மீறி ஜனநாயகத்தின் மையத்தைக் காப்பாற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்தால் இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும் வரலாம்.

பிளாக் செயின் தொழில்நுட்பம் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையோ, தகவல்களையோ பார்த்துக் கொள்வது எனும் நிலையிலிருந்து மாறி, ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று எனும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

இன்னொரு மிகப்பெரிய மாற்றமாக இ.பில் மூலம் ஷிப்பிங் நடத்தும் முறையை ஐபிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் 28 டன் எடையுள்ள மேன்ட்ரின் ஆரஞ்ச் பழங்களை சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பியிருக்கிறது. முழுக்க முழுக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த இந்த பரிவர்த்தனை மிக சுமூகமாக முடிந்திருக்கிறது.

பொதுவாக கப்பல் பரிமாற்றங்களின் மிகப்பெரிய தலைவலி பேப்பர் ஒர்க், பில்லிங் போன்ற விஷயங்கள். இதன் மூலம் பரிவர்த்தனைகள் நீண்ட தாமதமாகும். தாமதத்துக்கு ஏற்ப பொருட்களைப் பாதுகாப்பது, அவற்றை சேமித்து வைப்பது என எல்லாமே ஏகப்பட்ட செலவுகளையும் இழுத்து வைக்கும். இப்போது இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தினால் அந்த சவால்கள் எல்லாம் மிக எளிதாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

கப்பல் சரக்கு பரிவர்த்தனைகளில் சுமார் 40 விழுக்காடு டாக்குமென்ட் ஃப்ராடுகள் நடக்கும் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் அந்த சிக்கலை முழுமையாக தடை செய்து விட்டது. முழுமையான வெளிப்படையான தகவல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு பிளாக் செயின் வழிவகை செய்து விட்டது.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் பிளாக் செயின் தனது பாதங்களைப் பதித்தது என்பதை நாம் முன்பே பார்த்தோம். ஒரு மிகப்பெரிய பரிமாற்றத்தை அது வெள்ளோட்டம் விட்டு மிகத் துல்லியமாக வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை இப்போது அறிகிறோம். வழக்கமான முறைகள் எல்லாம் விரைவில் காலியாகி பிளாக் செயின் இந்தத் துறையில் கோலோச்சும் என்பதையே இது அழுத்தம் திருத்தமாய் நிரூபித்திருக்கிறது.

Block Chain – 9

பாட்ஸ் & பிளாக் செயின்

Image result for block chain bots

இன்றைய தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் நுட்பங்களில் ஒன்று பாட்ஸ். இந்த 2019ம் ஆண்டு தொழில் நுட்ப உலகில் கோலோச்சப் போவது பிளாக் செயின் மற்றும் பாட்ஸ் இணைந்த தொழில்நுட்பம் தான் என பல அறிக்கைகள் கற்பூரம் அடிக்காமல் சத்தியம் செய்கின்றன. எனவே இந்த இணையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அதென்ன பாட்ஸ் என தலையைச் சொறிய வேண்டாம். ரோபாட்ஸ் என்பதின் சுருக்கம் தான் பாட்ஸ். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் மென்பொருட்களை பாட்ஸ் என சுருக்கமாகச் சொல்லலாம்.

உதாரணமாக பேஸ்புக் போன்ற தளங்களில் உங்களுக்கு தகவல்களைத் தர உரையாடல் (சேட்) வசதிகள் இருக்கும். பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை சுடச் சுட அது தரும். அது மென்பொருளின் கைவரிசை என்பது தெரிந்திருக்கும். அதில் இருக்கும் நுட்பம் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் தான். அந்த பாட்ஸ் களை சேட் பாட்ஸ் என்று சொல்வார்கள். அதாவது சேட் செய்ற பாட்ஸ். இப்படி ஒவ்வொரு வேலை செய்யும் பாட் களையும் அந்த செயலோடு இணைத்து அழைப்பார்கள்.

வங்கிகள் போன்ற தளங்களில் இத்தகைய பாட்ஸ்களின் தேவை ரொம்ப அதிகம். வாடிக்கையாளர்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டியது இத்தகைய தளங்களில் ரொம்ப அவசியம். ஆனால் ஒரு சிக்கல்.

தொழில் நுட்ப உலகில் எதையுமே நம்ப முடிவதில்லையே. இந்த காலகட்டத்தில் “பாட்ஸ்” ஐ மட்டும் எப்படி நம்புவது ? ஒருவேளை நாம் ஒரு வங்கியின் தளத்துக்குச் சென்று பேசும் போது அங்கே நம்முடன் உரையாடுகின்ற பாட்ஸ் உண்மையில் ஒரு உளவாளியாய் இருந்தால் என்ன செய்வது ? உண்மையான வெப்சைட்டைப் போலவே போலிகள் உலவுகின்ற காலத்தில், உண்மையான பாட்ஸைப் போல ஒரு போலி உருவாவதில் ஆச்சரியம் இல்லையே.

உங்களுடைய வங்கிக்கணக்கு, பிறந்த நாள் உட்பட பல விஷயங்களை சேட் பாட்கள் கேட்கும். அவை போலியாய் இருக்கும் பட்சத்தில் நமது தகவல்களெல்லாம் திருடப்பட்டு விடும். அது நமக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஒரு ஆபத்தை எப்படித் தவிர்ப்பது ? நமது உரையாடல் பாதுகாப்பாய் தான் இருக்கிறது என்பதை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது ?

அதற்குத் துணை செய்கிறது பிளாக் செயின் தொழில்நுட்பம். பிளாச் செயினுடன் பாட்ஸ்களை இணைத்தால் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாய் இருக்கும். இந்தப் பாதுகாப்புக்காகத் தான் இன்றைக்கு பாட்ஸ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு கைகுலுக்குகிறது. பல நிறுவனங்கள் ஏற்கனவே பிளாக்செயினுக்குள் கட்டப்பட்ட நிலையில், மற்ற நிறுவனங்களும் மும்முரமாய் பிளாக் செயினை இழுக்க ஆரம்பித்திருக்கின்றன.

பிளாக் செயின் நுட்பம் டிஸ்ட்டிரிபியூட்டர் முறையில் அமைவதால் எத்தனை பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன, உண்மையான பரிவர்த்தனைகள் தானா என்பதையெல்லாம் அந்த வலைப்பின்னல்கள் சான்றளிக்கும். அத்தகைய பணிகளில் அமர பாட்ஸ்கள் சரியான நபர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது பிளாக் செயினில் நடக்கின்ற பரிவர்த்தனைகளை சோதித்தறிவது எல்லாம் பெரும்பாலும் ஆட்கள் தான். பாட்ஸ் தொழில்நுட்பம் அதை விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். பிளாக் செயினில் நடக்கின்ற ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் அலசி ஆராய்ந்து, தேவையான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த பாட்ஸ்கள் வடிவமைக்கப்படும். இரண்டு கட்ட பரிசோதனை இதில் நடக்கும். ஒன்று, பாட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பாட்ஸ் தானா என்பது. இன்னொன்று, பரிவர்த்தனை சரியானது தானா என்பது. இந்த சோதனைகள் பாட்ஸ், பிளாக்செயின் இணைப்பினால் மட்டுமே சாத்தியமாகும்.

பிளாக் செயினில் பாட்ஸை இணைத்து ‘லாயர் பாட்ஸ்’ ஒன்றை ஸ்டார்ன்ஃபோர்ட் மாணவர் ஒருவர் உருவாக்கியிருந்தார். பார்க்கிங் டிக்கெட்களை அது அலசி ஆராய்ந்து வழக்குகள் ஏற்பதற்குத் தகுதி உடையவை தானா இல்லையா என்பதை கண்டறிந்து சொல்லும். அப்படி அந்த பாட்ஸ் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வழக்குகளை திருப்பி அனுப்பியது. பாட்ஸ்களின் பயன்பாடு எல்லா இடங்களிலும் இருக்கலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு படி மேலே போய் பிளாக் செயினின் வளர்ச்சியாக பாட் செயின் என ஒரு அமைப்பும் உருவாகியிருக்கிறது. பிளாக் களை வைத்து பிளாக் செயின் உருவாக்குவது போல பாட்ஸ்களை இணைத்து பாட்ஸ் செயின் உருவாக்குவது தான் இதன் எளிமையான சிந்தனை.

உலகெங்கும் தொழில்நுட்பத்தின் கிளைகள் பாட்ஸ்களை அதிக அதிகமாய் முளைப்பித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பாட்ஸ்களை ஒரு பாதுகாப்பான கட்டமைப்புக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான தேவை. சிறப்பான தரக் கட்டுப்பாட்டை பாட் செயின் தரும் என்கிறார் அந்த சிந்தனையை உருவாக்கிய ராய் மே.

பல நிறுவனங்களிலுள்ள பாட்ஸ்களை ஒரு செயினில் இணைத்து, பாட்ஸ்களின் செயல்பாடுகளை வரையறைக்குள்ளும், பாதுகாப்பான கண்காணிப்புக்குள்ளும் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம். நம்பிக்கைக்குரிய வகையில் பாட்ஸ்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை உருவாக்குவது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.

உலகெங்கும் உள்ள நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பாட்ஸ்கள் இருக்கின்றன. அவை எதிர்காலத்தில் மில்லியன் கணக்கான பாட்ஸ்களாக மாறும். அவற்றின் மூலமாக பல பில்லியன் தகவல்கள் பரிமாறப்படும். அத்தகைய சூழலில் பாட்ஸ்களை கண்காணிக்க வேண்டியதும், வரையறைப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

பாட்ஸ்களெல்லாம் ஒன்றிணையும் போது அவற்றுக்கிடையே உள்ள பரிமாற்றங்களை பிளாக்செயின் நுட்பம் பாதுகாப்பானதாய் மாற்றும். பாட்ஸ்களின் தகவல் பரிமாற்றங்களை அழிக்கவோ, மாற்றவோ முடியாது என்பதால் தகவல் திருட்டு நடக்காது. பாட்ஸ்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றின் நிலை என்ன என்பதையெல்லாம் ஒரு முழுமையான பார்வைக்குள் கொண்டு வரவும் முடியும் என்பதால் அங்கீகாரமற்ற பாட்ஸ்களின் தலையீடு இருக்காது.

பிளாக் செயினும், பாட்ஸ்களும் இணைந்து தொழில்நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடினமான பரிவர்த்தனைகளுக்கு பாட்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பழக்கம் இப்போதே ஆரம்பித்து விட்டது.

உதாரணமாக உங்கள் தொலைக்காட்சியின் வாரன்டி கார்டை பாட்ஸ் மற்றும் பிளாக்செயினில் சேமித்து வத்தால் அது பாதுகாப்பாய் இருக்கும். சில வருடங்களுக்குப் பிறகு அது தேவைப்பட்டால் “என்னோட டிவி வாரன்டி கார்டை குடு” என உங்கள் மொழியிலேயே கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய கேள்வியை நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் மூலமாக பாட்ஸ் அலசும். சில கேள்விகளைக் கேட்கும். அதற்குப் பதில் சொன்னால் போதும். தகவல் கடலில் தேடி உங்கள் தகவலை அது எடுத்துக் கொண்டு வரும். இது ஒரு சின்ன உதாரணம்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை மையமாய்க் கொண்டு நடக்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிளாக் செயினின் தேவையும், பங்களிப்பும் கணிசமாய் இருப்பதை அறிவோம். அத்தகைய இடங்களில் இன்னும் தரத்தையும், வேகத்தையும் அதிகப்படுத்த பாட்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கின்றனர். அது பரிமாற்றத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யவும், பண இழப்பு நேரிடாத பரிவர்த்தனைகள் செய்யவும் உதவியாய் இருக்கிறது.

பாட்ஸ்களைக் கற்றுக்கொள்ள இப்போது இணையத்திலும், நூல்களிலும் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. யூடியூப் தளத்தில் நிறைய அறிமுகப் பாடங்கள் இருக்கின்றன. இலவசமாகவே பாட்ஸ் உருவாக்கும் மென்பொருட்கள் கிடைக்கின்றன. பாட்ஸ்களை மாற்றியமைத்துப் பயன்படுத்தும் மென்பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்வது பயனளிக்கும்.

பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என விருப்பம் உடையவர்கள் பிளாக் செயினுடன் சேர்த்து பாட்ஸ் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டால் வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிளாக் செயின் 8

Image result for block chain engineers

பிளாக் செயின் என்பது தகவல்களைப் பல இடங்களில் சேமித்து வைக்கும் நுட்பம் என்பதையும், மிகவும் பாதுகாப்பானது என்பதையும், எப்படி ஒவ்வொரு பிளாக்கும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தைச் செய்கிறது என்பதையும், எந்தெந்த தளங்களில் இது பயன்படுகிறது என்பதையும் கடந்த வாரங்களில் பார்த்தோம்.

இன்றைக்கு ‘இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ்” எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் இந்த பிளாக் செயின் எப்படி இணைகிறது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

இணையம் என்பது தகவல்களின் அடிப்படையில் இயங்கக் கூடிய ஒரு தொழில்நுட்பம். டிஜிடல் தகவல்களே அதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. இப்போது நமக்கு என்ன தேவையென்றாலும் கூகிளில் சென்று தேடுகிறோம், அது எங்கெங்கோ இருக்கின்ற தகவல்களை எல்லாம் அள்ளிக் கொண்டு தருகிறது. எங்கோ ஓரிடத்தில் உள்ளீடு செய்யப்படுகின்ற டிஜிடல் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த செயல் நடக்கும். எங்கும் பதிவு செய்யப்படாத தகவல்களை கணினி தராது. இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா என வைத்துக் கொள்ளலாம்.

அப்படியானால் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என்பது என்ன ?. சுருக்கமாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமெனில் உலகிலுள்ள பொருட்களை இணைக்கும் ஒரு இணைய வலை என சொல்லலாம். அதாவது உலகிலுள்ள பொருட்களையும் இணையத்தில் இணைக்கும் வசதி.

உதாரணமாக் அகூகிளில் சென்று என்னோட கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலை, பாத்து சொல்லு என கேட்டால், கூகிளால் பதில் சொல்ல முடியாது. காரணம் கார் சாவி எந்த ஒரு வகையிலும் இணையத்தோடு இணைக்கப்படவில்லை. ஒருவேளை கார்சாவியில் ஒரு சென்சாரைப் பொருத்தி, அந்த சென்சார் தரும் தகவலை இணையத்தில் சேமித்தால், கார்சாவியை கூகிள் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

அதாவது, கார்சாவியிலிருந்து வருகின்ற சிக்னல் தகவலைப் பயன்படுத்தி, கூகிள் தனது ஜிபிஎஸ் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது நுட்பத்தின் மூலமாகவோ சாவியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துக் கொடுக்கும். இப்படி சாதாரண பொருட்களை இணையத்தோடு இணைக்கும் நுட்பம் தான் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்.

அந்த தொழில்நுட்பம் இப்போது பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு இணைந்து ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக செக்யூரிடி சார்ந்த விஷயங்களில் இந்த இணைப்பு மிகப்பெரிய பலனைக் கொடுத்திருக்கிறது. ஐ.ஓ.டி கருவிகளிலிருந்து பெறப்படுகின்ற தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பிளாக் செயின் கை கொடுக்கிறது.

இதன் மூலம் மனித வேலை எதுவும் இல்லாமல், கருவிகளே தங்களுக்குள் பேசிக்கொண்டு, தேவையான விஷயங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கின்ற சூழல் உருவாகும். இது மனித தவறுகளை முற்றிலும் அழித்து விடும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட்களை ஐ.ஓ.டி வலைப்பின்னலிலேயே உருவாக்கி ,மனித பரிசீலனைகள் இல்லாமலேயே மெஷின்களே ஒத்துக் கொள்ளும் நிலை உருவாகும்.

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்தை பிளாக் செயினில் இணைக்கலாமா எனும் சிந்தனைக்கு சர்வதேச அளவிலான பெரும்பாலான நிறுவனங்கள் வலிமையான ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கின்றன. அதை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

முதலில் இதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரைவெட் பிளாக் செயினில், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸை இணைத்து சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக மூன்று விஷயங்களில் இந்த முயற்சி பெரும் பயன் அளித்திருக்கிறது. ஒன்று, பாதுகாப்பு. இரண்டு, குறைந்த செலவு. மூன்று, வேகமான செயல்பாடு.

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கொண்டு வருகின்ற தகவல்கள் திருடப்படக் கூடியவையாக இருப்பது இன்றைய தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சவால். அந்த சவாலைத் தான் பிளாக் செயின் முதலில் மேற்கொள்கிறது.

உதாரணமாக, நிறுவனங்கள் தங்களுடைய இ.ஆர்.பி தகவல்களை எப்போதுமே மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென விரும்பும். அவை இப்போது இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே பிளாக் செயின் கட்டமைப்பில் கட்டி வைத்தால் பாதுகாப்பானது ஊர்ஜிதப்படுத்தப்படும் என்பதே பெரிய நிறுவனங்களின் சிந்தனை.

இன்டர் நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பம் என்பது தனித்து இயங்க முடியாது. இன்னொரு தொழில்நுட்பத்தோடு இணைந்து தான் எப்போதுமே இயங்கும். பிற நவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான தகவல்களை அளித்துக் கொண்டே இருக்கும். எனவே தான் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்தோடு பிளாக் செயின் இணையும் போது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கின்றன.

இன்றைய மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் அவை ஸ்மார்ட் ஹாஸ்பிடல்ஸ் என உருமாறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கருவிகள் தகவல்களை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஐசியு போன்ற அறைகளில் சென்சார்கள் நோயாளியின் உடல் நிலையையும், சூழ்நிலையையும் கவனித்து தகவல்களை மருத்துவர்களுக்கும் கணினிகளுக்கும் ஆட்டோமெடிக்காக அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

அதே போல பெரிய டிராபிக் சிக்னல்கள் சென்சார்களின் உதவியுடன் தன்னிச்சையாக டிராபிக் ஒழுங்கை அமைக்கிறது. விதிமீறல்களைப் பதிவு செய்கின்றன. அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஸ்மார்ட்டாக இவை எடுக்கின்ற இந்த முடிவுகளால் டிராபிக் சிக்னல்களெல்லாம் ஸ்மார்ட் சிக்னல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் பிலடெல்ஃபியா டிராபிக் சிக்னல்கள் முழுவதும் ஸ்மார்ட் சிக்னல்களாக மாறியிருப்பது ஒரு உதாரணம்.

அதே போல வீடுகளும் ஸ்மார்ட் ஹோம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வீட்டின் கதவுகள் உரிமையாளர்களின் முகம் கண்டவுடன் திறக்கின்றன. அறையின் தட்ப வெப்பம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. வெளிச்சம் தேவைக்கு ஏற்ப தானாகவே மாறிக் கொள்கிறது. டிவி, காபி மெஷின், ஏசி என சர்வமும் சென்சார்கள் மூலமாக இணைந்து கொள்கின்றன.

இப்படி “ஸ்மார்ட்” ஆக மாறிக் கொண்டிருக்கும் எல்லா இடங்களிலும் கோலோச்சும் தொழில்நுட்பம் இந்த ஐ.ஓ.டி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தான். வயர்லெஸ் சென்சார்ஸ் நெட்வர்க் மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடன்டிஃபையர் போன்றவை இந்த தொழில்நுட்பத்துக்குத் துணை செய்கின்றன. . Wireless Sensors Networks (WSN) &Radio Frequency Identification (RFID)அதனால் தான் அதன் வீச்சும் தேவையும் அதிகமாக இருக்கிறது. இப்படி இவை சகட்டு மேனிக்கு குவித்துக் கொட்டப்படும் தகவல்களில் ஏராளமான சென்சிடிவ் தகவல்களும் அடக்கம். அவை இப்போது ‘சென்ட்ரலைஸ்ட்’ தகவல் தளங்களில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன.

இந்த தகவல்கள் திருடப்படுமாயின் அது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்கமாகவே அமையும். எனவே தான் இத்தகைய முக்கியமான புராஜக்ட்களை பிளாக் செயின் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது புரிந்திருக்கும் ஏன் பிளாக் செயினுடன், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில் நுட்பம் இணைய விரும்புகிறது என்பதன் அடிப்படை நோக்கம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், நிறுவனங்களிலுள்ள ஒட்டு மொத்தத் தகவல்களைப் பதிவு செய்வதையும், அதை உடனுக்குடன் கணினிக்குக் கொண்டு வருவதையும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கவனித்துக்கொள்ளும். அதை பாதுகாப்பாய் வைப்பதையும், நம்பிக்கைக்குரிய வகையில் பயன்படுத்துவதையும் பிளாக் செயின் எடுத்துக் கொள்ளும். அதற்காக வலுவான ஒரு என்கிரிப்ஷன் நுட்பத்தை அது பயன்படுத்தும். இப்படி இரண்டும் இணையும் போது முழுமையான பலனைப் பெற முடியும்.

பிளாக் செயினைப் படிக்க விரும்பும் மாணவர்களும்,வல்லுநர்களும் இன்நெட் ஆஃப் திங்க்ஸ் குறித்த படிப்பையும் படிப்பது மிகவும் பயனளிக்கும். எப்படியெல்லாம் பிளாக் செயினை பயனுள்ள வகையில் ஐ.ஓ.டி யுடன் இணைக்கலாம் போன்ற தெளிவு அப்போது தான் கிடைக்கும்.

பிளாக் செயின் 7

Image result for block chain engineers

பிளாக் செயின் பற்றி ஆஹா ஓஹோன்னு சொல்றீங்க, சரி ! அதெல்லாம் இருக்கட்டும். இப்போ நான் பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள்ள போணும். அதைக் கத்துக்கணும். பிளாக் செயின் டெவலப்பர் ஆகணும். அதுக்கு என்ன வழி ? இந்த வாரம் அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

நவீன தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட், மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எல்லாமே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள். அதே போல தான் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் கணினி சார்ந்த தொழில் நுட்பமே.

எனவே, கணினி சார்ந்த ஒரு பட்டம் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களின் அடிப்படைத் தேவை. ஒருவேளை எம்சிஏ போன்ற முதுகலைப் படிப்பு இல்லாதவர்கள் கணினி இளங்கலையை வைத்துக் கொண்டு பிளாக் செயினுக்குள் நுழையலாம். பி.ஈ போன்ற எஞ்சினியரிங் படிப்பு படித்தவர்களும், எம்.ஈ போன்ற முதுகலை எஞ்சினியரிங் படித்தவர்களும் இதில் தாராளமாக நுழையலாம்.

கணினி மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் இந்த துறையில் நுழையலாம். ஒருவேளை அவர்கள் கணினி பட்டப்படிப்பு பெறாதவர்களாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், கணினி பட்டப்படிப்பு அவசியம். அது இல்லாத பட்சத்தில் கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்த நல்ல அனுபவங்கள் இருந்தாலும் போதுமானது.

பழைய காலத்தில் ஒரு விதமான ஹேர்ஸ்டைல், ஜீன்ஸ் எல்லாம் வைத்திருந்தோம். பிறகு அவையெல்லாம் பழைய சங்கதிகளாகி, புதிய ஸ்டைல்கள் இடம்பிடித்தன. காலச் சுழற்சியில் பழைய ஸ்டைல்கள் புதிதாக மீண்டும் முளைத்து வரும். இது வாடிக்கை !

அதே போல, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கணினி மென்பொருள் சி++. பிறகு வந்த புதிய தொழில்நுட்பங்களின் அலையில் கொஞ்சம் அமுங்கிக் கிடந்தது. இப்போது மீண்டும் முளைத்து வந்து பிளாக் செயினுக்கு கைகொடுக்கிறது.

பிளாக் செயினில் அதிக சர்வர் சைட் ப்ரோக்ராமிங் தேவைப்படுவதால் இந்த சி++ மென்பொருள் முக்கியமானதாய் மாறிவிட்டது. அந்த மென்பொருளை கற்றுக் கொள்ளுங்கள். அது ரொம்பவே பயனளிக்கும். கணினி பாடம் படிப்பவர்கள் கல்லூரியிலேயே சி++ படித்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு அது பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சி++ தெரியாதவர்களெனில் ஜாவா படித்திருந்தாலும் பயனளிக்கும். ஜாவா மென்பொருளும், சி++ மென்பொருளும் ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் கான்செப்ட் என்பது மென்பொருட்களோடு பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். எனவே சி++ தெரியாதவர்கள் ஜாவா மென்பொருளைக் கற்றுக் கொள்ளலாம்.

கிரிப்டோகிராஃபி (Cryptography) பற்றி தெரிந்து கொள்வது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு நிச்சயம் கைகொடுக்கும். கிரிப்டோகிராபி தான் பிளாக் செயின் பரிவர்த்தனையின் மையமாய் இழையோடும் விஷயம். எனவே அதைக் குறித்த பயிற்சிகளை எடுக்கலாம். பாதுகாப்பு விஷயங்களைப் பொறுத்தவரை பிளாக் செயின் முன்னிலையில் இருப்பது நாம் அறிந்ததே. கிரிப்டோஎக்கனாமிக்ஸ் பற்றி படிப்பது பிளாக் செயின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு வலுவூட்டும்.

என்கிரிப்ஷன், டிகிரிப்ஷன் (Encryption, Decryption) தொழில்நுட்பம் இன்றைக்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்களை அடைந்துள்ளது. தகவல்கள் எல்லாம் டிஜிடல் மயமானதால் அதை பாதுகாக்க இந்த என்கிரிப்ஷன் நுட்பங்கள் தேவைப்படும். இவை மிகப்பெரிய மதிப்பு மிக்கவை. பிட்காயின் பயன்படுத்தும் என்கிரிப்ஷன் அல்காரிதத்தின் விலை 30 ஆயிரம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, டிஸ்ட் ரிபியூட்டட் கம்ப்யூட்டிங் (distributed computing) பற்றித் தெரிந்து கொள்வதும், அதைக் குறித்த பாடங்களைப் படிப்பதும் பயனளிக்கும். டோரண்ட் இணையதளங்களைப பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். அது பீர் டு பீர் (peer-peer) எனப்படும் டிஸ்றிபியூட்டர் முறை தான். ஆனால் டோரண்ட் வசீகரிக்கவில்லை. அதிக பயன்பாடு இருந்தும் அது அதிக அளவு நம்பிக்கைக்குரியதாக மாறவில்லை. காரணம் பீர் கணெக்ஷன் கொடுப்பவர்களுக்கு அது எந்த பயனையும் அளிக்கவில்லை. அதே போல, வைரஸ்கள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை.

டோரண்ட் என்றாலே இன்றைக்கு எல்லோரும் பயந்தடித்து ஓடக் காரணம் அது ஆபத்தானது எனும் சிந்தனை தான். பாதுகாப்பானதாகவும், பயனுள்ள வகையிலும் அது இருந்திருந்தால் இன்று அது மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த டிஸ்ட்டிரிபியூட்டர் குறித்துப் படித்திருப்பது, அதைக் குறித்து அறிந்திருப்பது இவையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

மெக்கானிசம் டிசைனர்ஸ் குறித்துப்( Mechanism designers ) என்பவர்கள் கிரிப்டோகிராஃபியையும், டிஸ்றிபியூட்டட் கம்ப்யூட்டிங்கையும் இணைக்கின்ற பணியைச் செய்பவர்கள். அதை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது பிளாக் செயின் துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். அறிவியல் துறையில் இருப்பவர்கள் பயாலஜிகல் மெக்கானிசம் பற்றி தெரிந்திருப்பார்கள். நமது உடல் மிகப்பெரிய ஒரு பிளாக் செயின் அமைப்பு. நமது டி.என்.ஏ, உயிரியல் மெக்கானிசம் போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள் எளிதில் பிளாக் செயினையும் புரிந்து கொள்வார்கள்.

ஹைச் டி எம் எல் (HTML) பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதைப் படித்து வைத்துக் கொள்ளுங்கள். எளிதான விஷயம். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் இந்த ஹைச்.டி.எம்.எல் பயன்படுகிறது. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் எனப்படும் சி.எஸ்.எஸ் (CSS) பற்றிய அறிவும் உங்களுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் உதவும். அதே போல ஸ்மார்ட் கான்றாக்ட் (Smart Contract) பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.

டிஜிடல் சிக்னேச்சர், சிக்னேச்சர் வெரிபிகேஷன் போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு உதவும். பிளாக் செயினில் டெவலப்பிங் ஸ்டைலை ‘டிட்டர்மினிஸ்டிக்’ ஸ்டைல் என்பார்கள். அதாவது மாறாத நிலையான ஒரு கட்டமைப்பு. ஒரு பரிவர்த்தனை எப்படி செயல்பட வேண்டுமோ அப்படித் தான் இன்றும் செயல்படும், நாளையும் செயல்படும். அதில் மாற்றம் இருக்காது. அதற்கேற்ப மென்பொருள் எழுதவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விஷயத்தைக் கற்றுக் கொள்ளப் போனாலும், அந்த தொழில்நுட்பத்தைக் குறித்த தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும். இன்றைக்கு பிளாக் செயின் குறித்த கட்டுரைகள், நூல்கள், விளக்கங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. நமது தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். பிளாக் செயின் நுட்பத்தில் நுழையும் முன் இந்த கட்டுரைகள், வீடியோக்கள் பார்த்து அதைக் குறித்த ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமது டொமைன் பிளாக் செயினுக்கு ஒத்து வருமா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள இது பயன்படும். எங்கெல்லாம் பிளாக் செயின் பயன்படும், எங்கெல்லாம் பயன்படாது ? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் போன்ற விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

சுருக்கமாக, ஒரு கணினி பட்டப்படிப்பு அல்லது கணினி துறையில் அனுபவம். கூடவே பிளாக் செயின் குறித்த புரிதல், அதன் தேவைகள் குறித்த புரிதல். அத்துடன் சி++, ஜாவா போன்ற மென்பொருள்களின் பரிச்சயம். இவை இருந்தால் போதும் பிளாக் செயினுக்குள் நுழைந்து பிரகாசிக்கலாம்.

பிளாக் செயின் 6

Image result for block chain

நமக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாக ஒரு போன் வந்தால் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என நினைப்போம். அதே போல தான் தொழில்நுட்ப உலகிலும் பல நிறுவனங்கள் உண்டு. ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால், அதை தனது நிறுவனத்தில் பயன்படுத்த வேண்டும் என சட்டென முடிவு செய்து விடுகின்றனர். அப்படிப் பயன்படுத்துவது தான் சந்தைப்படுத்தலுக்கு உதவும் என்பது அவர்களுடைய கணிப்பு. அல்லது ஸ்ட் ராட்டஜி.

புதிய தொழில்நுட்பங்களை ஒரு நிறுவனத்தில் இணைப்பதால் மட்டும் ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதில்லை. என்னதான் ஆனானப் பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும், சில இடங்களுக்கு ஒத்து வராது. அதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். நிறுவனத்துக்கு அந்த புதிய தொழில் நுட்பங்கள் பயனளிக்குமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். நிறுவனத்துக்கு பிளாக் செயின் பயனளிக்குமா என்பதை சில கேள்விகளின் மூலமாகவும், சில அலசல்களின் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம்.

நிறுவனம் இரண்டுக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறதா ? அந்த நிறுவனங்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும், அதற்கேற்ப சில முடிவுகளையும் எடுத்துக் கொண்டும் இருக்க வேண்டியிருக்கிறதா ? அப்படியெனில் பிளாக் செயின் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் உடனே முடிவு செய்து விட முடியாது. அடுத்த கேள்விக்குத் தாவ வேண்டும்.

இப்போது இருக்கின்ற சிஸ்டம் எப்படிப்பட்டது ? நீண்டநாள் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கிறதா ? அதை பயன்பாட்டில் வைத்திருக்க அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறதா ? ரொம்பவே கடினமான கட்டமைப்பாக, (காம்ப்ளக்ஸ் ஆர்கிடெக்சர் ) இருக்கிறதா ? அப்படியெனில் ஒருவேளை பிளாக் செயின் கைகொடுக்கலாம். அருத்த நிலை கேள்வியைக் கேட்கலாம்.

இன்றைய மென்பொருள் கட்டமைப்பின் பாதுகாப்பு எப்படி ? எதிரிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுமா ? இப்போது இருக்கின்ற அமைப்பு நிறைய மனித தவறுகள், பிழைகள் நடக்க ஏதுவாக இருக்கிறதா ? ஒருவேளை இன்னொரு அமைப்பு வந்தால் நம்பிக்கையும், வெளிப்படைத் தன்மையும், பாதுகாப்பும் அதிகரிக்கும் என தோன்றுகிறதா ?

அதேபோல இப்போது இருக்கின்ற மென்பொருள் தேவையான வேகத்தில் செயல்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். தேவையான அளவுக்கு வேகம் இல்லாவிட்டால் மென்பொருளையோ, கட்டமைப்பையோ மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படிப்பட்ட சூழலில் பிளாக் செயின் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கலாம்.

நிறுவனம் அதிக அளவு டிஜிடல் பரிவர்த்தனைகளையும், டிஜிடல் சொத்துகளையும் வைத்திருக்கிறதா ? அப்படி இருக்கின்ற டிஜிடல் தகவல்களையெல்லாம் ஒரு நிலையான ரிக்கார்ட் ஃபார்மேட்டில் கொண்டு வர முடியுமா ? என்பதும் பிளாக் செயினை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கியமான ஒரு தகவல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படி படிப்படியாகக் கேட்கின்ற கேள்விகள் ஒரு நிறுவனத்துக்கு பிளாக்செயின் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய உதவும். நிறுவனத்தை முழுமையாக கேள்விகளால் அலசும்போது பிளாக் செயின் தொழில் நுட்பம் தேவையா இல்லையா எனும் தெளிவு கிடைக்கும்.

சரி, இப்போது உங்களிடம் சில கேள்விகளும் அதற்கான விடைகளும் இருக்கின்றன. உங்களுடைய மென்பொருள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இல்லை, பிளாக் செயின் பயனளிக்கும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தால் அடுத்த நிலை கேள்விக்குத் தாவுங்கள்.

1. தற்போதைய கட்டமைப்பிலும், மென்பொருளிலும் இருக்கின்ற குறைகள் என்ன ?
2. எப்படிப்பட்ட தீர்வை நான் எதிர்பார்க்கிறேன் ?
3. பிளாக் செயின் அந்த தீர்வைத் தர வலிமையுடையதா ?

இந்த மூன்று கேள்விகளுக்கும் நிச்சயம் விடை இருக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிளாக் செயின் இருப்பதாக நிச்சயப்படுத்திக் கொண்டால் மட்டுமே அந்த தொழில்நுட்பத்தை நோக்கி உங்கள் பார்வையைச் செலுத்தலாம்.

ஒரு நிறுவனத்துக்கு பிளாக் செயின் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய பல சோதனை முறைகளை வைத்திருக்கிறார்கள். பிர்க் மாடல், பிர்க் பிரவுன் பருலாவா மாடல், சூய்சீஸ் மாடல், ஐபிஎம் மாடல், லூயிஸ் மாடல், மார்கன் ஈ பெக் மாடல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இவையெல்லாம் ஒரு நிறுவனத்தில் பிளாக் செயின் மாடல் தேவைப்படுமா என்பதைக் கண்டறிய உதவுகின்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகள். ஃப்ளோசார்ட், அல்காரிதம் போன்றவற்றின் உதவியுடன் இந்த முடிவை எடுக்க இவை உதவுகின்றன. வெறுமனே ‘நால்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்’ என ஒரு தொழில்நுட்ப மாற்றத்தைச் செய்யக் கூடாது. அதை அறிவியல் ரீதியாக பரிசோதித்த பின்பே கால் வைக்க வேண்டும்.

ஏன் இந்த முடிவு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ? காரணம் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அந்த தொழில்நுட்பத்துக்கு நிறைய பணமும், நேரமும் அளிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் நிதானமான முடிவுகள் தேவைப்படுகின்றன.

பிளாக் செயினில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெர்மிஷன்லெஸ் பிளாக் செயின். அதாவது அனுமதி தேவையில்லாமல் யார் வேண்டுமானாலும் இணையக்கூடிய பிளாக் செயின் அமைப்பு. பிட்காயின் போன்றவை இத்தகைய பெர்மிஷன்லெஸ் பிளாக்செயினாகத் தான் இருக்கின்றன.

இன்னொரு வகை பிளாக் செயின் பெர்மிஷண்ட் பிளாக்செயின். இதில் பொது நபர்கள் யாரும் இணைய முடியாது. அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே இந்த பிளாக் செயினுக்குள் நுழைய முடியும். இதில் ஒரு நபர் கண்காணிப்பாளராகவோ, அனுமதியளிப்பவராகவோ இருந்து பிளாக் செயின் பயன்பாட்டாளரை நிர்வகிப்பார். யாருக்கு என்னென்ன அனுமதி வழங்கலாம் என்பதை அவர் செயல்படுத்துவார்.

அனுமதியற்ற பிளாக் செயின் தான் முதலில் உருவான கான்சப்ட். பிட்காயின் போன்றவை இன்னும் அதே வழியைத் தான் பின்பற்றுகின்றன. அதில் இன்னும் கொஞ்சம் தனிமை சேர்க்க விரும்பியவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அனுமதியுடைய பிளாக் செயின். பல நிறுவனங்கள் இன்று பெர்மிஷண்ட் பிளாக் செயினைப் பயன்படுத்துகின்றனர். ஒரு வகையில் இது கொஞ்சம் பழைய சென்ட் ரலைஸ்ட் முறை தான். அனுமதியும் கட்டுப்பாடும் ஒரு இடத்தில் இருக்கும்.

ஒரு நிறுவனத்துக்கு பிளாக் செயின் தேவை என முடிவு செய்தால் அடுத்த படி இது தான். எந்த பிளாக்செயின் வேண்டும் ? அனுமதியற்றதா ? அனுமதியுடையதா ?

அடுத்ததாக அவை ஸ்மார்ட் கான்ட் ராக்டை ப் பற்றி சிந்திக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் பிளாக் செயினை வரவேற்கக் காரணமே இந்த ஸ்மார்ட் கான்ட் ராக்ட் தான். ஒப்பந்தமிடப்பட்டுள்ள நிறுவனங்களை ஸ்மார்ட் கான்றாக்ட் மூலம் பிளாக் செயினுக்குள் இணைக்க வேண்டும்.

பல நிறுவனங்கள் தங்களுக்கு இடையே உள்ள இடைநிலை நிறுவனங்களை , புரோக்கர்களை, மாற்றுவதற்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கின்றன. இதன் மூலம் நிறுவனங்கள் நேரடியாகக் கைகுலுக்கிக் கொள்ளும் நிலை வரும். தேவையற்ற செலவினங்களை குறைக்க இது பயன்படும்.

இன்றைய தேதியில் ஆர்டிபிஷியல் இண்டெலிஜெண்ட்க்கு அடுத்தபடியாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பம் இந்த பிளாக் செயின் தான். அதை ஒரு நிறுவனம் பரிசீலிக்க வேண்டுமா வேண்டாமா என்பதையே நாம் பார்த்தோம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் ? என்ன படித்திருக்க வேண்டும் ? போன்றவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

( தொடரும் )