பிளாக் செயின் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இரண்டு விஷயங்களால் புரிந்து கொள்ளலாம். ஒன்று, எல்லா நிறுவனங்களும் பிளாக் செயின் படித்தவர்களை வேலைக்கு அமர்த்தத் துவங்கியிருக்கிறது. இரண்டு, பல நிறுவனங்கள் தங்களுடைய புதிய வேலைகளை பிளாக் செயின் அடிப்படையில் தான் செயல்படுத்துகிறது.
இந்த டிரென்ட் விரிவடையும் போது நிறுவனங்களெல்லாம் பிளாக் செயின் வல்லுநர்களை வலைவீசித் தேடும், மிகப்பெரிய அளவில் இந்த தொழில்நுட்பத்துக்கான வேலைவாய்ப்புக் கதவுகள் திறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த தொழில்நுட்பம் எந்தெந்த டொமைன்களில் பயன்படுத்தப்படுகிறது, எந்தெந்த வகைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இதன் வீச்சைப் புரிந்து கொள்ள முடியும்.
சர்வதேச அளவிலான ‘லாஜிஸ்டிக்’ நிர்வாகத்தில் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் வலுவாக நுழைந்திருக்கிறது. லாஜிஸ்டிக் என்றால் வேறொன்றுமில்லை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பொருட்களையோ, ஆட்களையோ, தகவல்களையோ அனுப்பும் முறை. அதற்கு என்னென்ன கவனிக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் , இதை எப்படி நிர்வகிக்க வேண்டும், எப்படி கண்காணிக்க வேண்டும் எனும் சகல விஷயங்களும் இப்போது பிளாக் செயின் நுட்பத்துக்குள் வந்திருக்கிறது.
இதையெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டிய பெருமை எசன்ஸியா நிறுவனத்தைச் சேரும். அவர்கள் தான் உலகின் முதல் லாஜிஸ்டிக் பிளாக் செயின் தீர்வை உருவாக்கியவர்கள். இன்றைக்கு லாஜிஸ்டிக் துறையில் பிளாக் செயின் தொழில்நுட்பம் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
வாக்காளர் பெயர்கள் மாயமாய் போவது, வாக்காளர்கள் திடீரென நுழைவது போன்ற சிக்கல்களெல்லாம் வாக்காளர் பட்டியலுக்கு உண்டு. அது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நம்மைச் சுற்றி எழுவதுண்டு. இத்தகைய சிக்கல்களைச் சரிசெய்ய சுவிட்சர்லாந்து தேர்ந்தெடுத்த நுட்பம் இந்த பிளாக் செயின். யூபோர்ட் நிறுவனம் அந்த கட்டமைப்பையும், மென்பொருளையும் உருவாக்கிக் கொடுத்தது. இதன் மூலம் தவறான வாக்காளர்கள் நுழையாமலும், சரியான வாக்காளர்கள் வெளியேற்றப்படாமலும் இருக்கும் வழி பிறந்திருக்கிறது.
அரசு சார்ந்த மென்பொருட்கள், அமைப்புகள், நிறுவனங்களெல்லாம் பிளாக் செயினை நோக்கி நகர இத்தகைய உதாரணங்கள் தூண்டுதலாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பேய்மென்ட் துறை மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருவது நாம் அறிந்ததே. இந்தியாவின் யூபிஐ பேய்மென்ட் சமீப காலமாகா அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. சமீபத்தில் யூ.பி.ஐ 2.0 வெளியாகி வாடிக்கையாளர்களை வசீகரித்து வருவதும் நாம் அறிந்ததே. இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் தவிர வேறெங்கும் நாம் பேமென்ட் செய்வதில்லை. ஜப்பானில் இப்போது மொபைல் பேமென்ட்ஸ் பாதுகாப்பாகவும், வேகமாகவும் நடக்க பிளாக் செயினின் உதவியை நாடியிருக்கிறார்கள். ஜப்பான் வங்கிகள் இந்த நுட்பத்தில் நுழைய ரிப்பில் எனும் நிறுவனம் உதவுகிறது.
இன்சூரன்ஸ் டொமைன் எப்போதுமே வளர்ந்து வருகின்ற ஒரு துறை. அது மெடிக்கல் இன்சூரன்ஸ், ஆட்டோ இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் என பல வகைகளில் இயங்குகின்றன. இந்த துறையில் பிளாக் செயினின் ஆதிக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் இங்க் எனப்படும் ஏ.ஐ.ஜி. வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான தகவல்கள் அளிப்பது, குறைவான பிரீமியம் வாங்குவது என இந்த நுட்பம் வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஒழுக்கமைக்கப்படாத துறை தான் ரியல் எஸ்டேட் எனலாம். அதையும் பிளாக் செயின் நுட்பத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது கிவி நாட்டின் பிராப்பி நிறுவனம். இந்த துறையின் முதல் முயற்சி இது எனலாம். எந்த துறைக்கும் பிளாக் செயின் ஒரு வரப்பிரசாதம் என்பதையே இது சொல்லாமல் சொல்கிறது.
மெர்ஸ்க் மிகப்பெரிய ஷிப்பிங் நிறுவனம். உலக அளவில் முன்னணியில் இருக்கின்ற இந்த நிறுவனம் இப்போது பிளாக் செயினை தான் இறுகப் பிடித்திருக்கிறது. மெரைன் லாஜிஸ்டிக்ஸ் எனும் பிரிவு மிக எளிதாகவும், அதிக பயனுள்ள வகையிலும் பிளாக் செயினை பயன்படுத்தக் கூடிய ஒரு துறை. மற்ற ஷிப்பிங் நிறுவனங்களும் இந்த முறையை நோக்கி நகர்கின்றன.
ஹெல்த்கேர் இன்னொரு முக்கியமான துறை. மெட்ரெக் நிறுவனம் தனது மருத்துவ கட்டமைப்பை பிளாக் செயினைக் கொண்டு வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது. மருத்துவத் தகவல்களைச் சேமிக்க இப்போது பல்வேறு ஹெல்த்கேர் நிறுவனங்கள் பிளாக் செயின் நுட்பத்தை வரவேற்கின்றன. இந்தத் துறை அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது திண்ணம்.
எனர்ஜி உருவாக்குதல், பகிர்ந்தளித்தல் போன்ற துறைகளில் இப்போது பிளாக் செயின் நுட்பம் வருகிறது. எஸன்சியா நிறுவனம் வெற்றிகரமாக இதை வெள்ளோட்டம் விட்டிருக்கிறது. இது நமது மின்வாரியத் துறையில் வந்தால் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழும் என்பது திண்ணம். உதாரணமாக, மின்சாரம் எவ்வளவு செலவிடுகிறோம், அதற்கு என்ன விலை என்பதையெல்லாம் நேரடியாகக் கண்காணிக்கலாம்.
விளம்பரத் துறையிலும் பிளாக் செயின் பாதம் பதித்திருக்கிறது. விளம்பரங்களை கஸ்டமைஸ் செய்து வெளியிடுவதில் இதை பயன்படுத்துகின்றனர். நியூயார்க் இன்டராக்டிவ் விளம்பர பிரிவு இதை செயல்படுத்தத் துவங்கியிருக்கிறது. நியாக்ஸ் எனும் நிறுவனத்தின் உதவியோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் விளம்பரத் துறை மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது. இன்னும் அது வலுவடைய இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும்.
மயோகோய் நெட்வர்க் சீனாவிலுள்ள முக்கியமான நெட்வர்க் நிறுவனம். சீனாவிலுள்ள அரசு வரி சார்ந்த விஷயங்களையெல்லாம் பிளாக் செயின் நுட்பத்துக்குள் கொண்டு வர இந்த நெட்வர்க் உதவி செய்கிறது. அரசின் வரி திட்டங்களும், வரி சார்ந்த தகவல்களும் இந்த பிளாக் செயினுக்குள் வருகின்றன.
ரயில்வேக்களிலும் பிளாக் செயின் நுழைந்திருக்கிறது. ஏற்கனவே ரஷ்யா பிளாக் செயின் நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறது. தகவல்களை சேமித்து வைக்கவும், அதைக் கொண்டு முடிவுகளை எடுக்கவும் பிளாக் செயினை அவர்கள் நாடுகின்றனர். இந்திய ரயில்வேயும் பிளாக் செயின் நுட்பத்துக்குள் நுழையும் என்பது தவிர்க்க முடியாத ஊகம்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை பிளாக் செயினைத் தான் நம்புகிறது. ‘டிப்பார்ட் மென்ட் ஆஃப் ஹோம்லேன்ட் செக்யூரிடி” யானது கண்காணிப்புக் கேமராக்களிலிருந்து வருகின்ற தகவல்களை பாதுகாக்கவும், அலசவும் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இதே போல வேஸ்ட் மேனேஜ்மென்ட், பத்திரிகைத் துறை, கலை, சுற்றுலாத் துறை என எல்லா இடங்களிலும் பிளாக் செயினின் பாதிப்பும், இருப்பும் வலுவடைந்திருக்கிறது.
இதையெல்லாம் விளக்கமாகச் சொல்ல முக்கியமான காரணங்கள் இரண்டு.
1, பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள் நுழைய முடியாது என்கின்ற டொமைன் ஏதும் இல்லை. எல்லா இடங்களிலும் அது நுழைய முடியும்.
2. வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்கள் தங்களுடைய டொமைன் எதுவோ, அல்லது தங்களுக்குப் பிரியமான டொமைன் எதுவோ அதிலிருந்து விலகாமலேயே இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நுழையலாம்.
( தொடரும் )