தன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது 

பதின்வயது பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என மாறி மாறி வித்தை காட்டும் அவர்களுடைய மனம் புதிர்களின் புகலிடம். “தன்னம்பிக்கையெல்லாம் பெரியவர்களுக்கான விஷயம்என பல வேளைகளில் நாம் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின் வயதுப் பெண்களுக்குத் தான் ரொம்பவே தேவை. 

இன்றைய வாழ்க்கைச் சூழல் பதின் வயதுப் பெண்களின் மீது ஏகப்பட்ட சுமைகளை இறக்கி வைக்கிறது. அவர்களுக்கு முன்னால் விளம்பர மாடல்களும், திரை நட்சத்திரங்களும் ரோல் மாடல்களாக விரிகிறார்கள். நட்சத்திரங்களின் உடலமைப்பு, நிறம், குணாதிசயம் இவையெல்லாம் இருந்தால் தான் அங்கீகரிக்கப்படுவோம் எனும் தப்பான எண்ணம் அவர்களுடைய மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து விடுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கையின் மேல் விழும் மிகப்பெரிய அடி இது ! 

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இன்றைய முகப்பூச்சு விளம்பரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். கறுப்பு நிறம் நல்லதென்று ஏதேனும் ஒரு முகப்பூச்சு சொல்கிறதா ? கறுப்பிலிருந்து எப்படி வெளியே வரலாம் என்பதை மட்டுமே அது பேசுகிறது. அதாவது சிவப்பு நிறம் மட்டுமே அழகானது, மற்ற எந்த நிறமானாலும் பூச்சுகளைக் கொண்டு சரி செய்யப்பட வேண்டும் என்பதே அவை போதிக்கும் பாடம். இந்தியாவில் எத்தனை கருப்பு நிறப் பெண்கள் இருப்பார்கள் ! அவர்களில் எத்தனை பேருடைய தன்னம்பிக்கையை இத்தகைய விளம்பரங்கள் தவிடு பொடியாக்கியிருக்கும் ?

இப்படி சமூகமும், ஊடகங்களும், சக மனிதர்களும் இடுகின்ற பட்டியலுக்குள் அடங்க முடியாமல் போகும் போது பதின் வயதினரின் தன்னம்பிக்கை தவிடு பொடியாகி விடுகிறது.

பதின்வயதினரின் தன்னம்பிக்கை உடைந்து போக சின்னச் சின்ன விஷயங்களே போதுமானது ! நண்பர்கள் மத்தியில் பாப்புலராய் இருப்பது பதின் வயதினருக்கு இனிமை தரும் சமாச்சாரம். அந்த பாப்புலாரிடி இல்லாமல் போகும் போது கூட அவர்களுடைய தன்னம்பிக்கை சிதைந்து போய் விடுகிறதாம். ஃபேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் சேரவில்லை என்றாலே கவலைப்பட்டு அப்செட் ஆகி விடும் இளம் பெண்கள் இருக்கிறார்கள். 

எட்டு, ஒன்பது வயதுகளில் பெண்களிடம் தன்னம்பிக்கை அபரிமிதமாக இருக்கும் என்கின்றன பல்வேறு ஆய்வு முடிவுகள். அதே பெண்கள் சில ஆண்டுகள் கழிந்து பதின் வயதுக்குள் நுழையும்போதோ தன்னம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்து விடுகிறது. இதற்கு அவர்களுடைய உடல் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

பெரியவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தன்னம்பிக்கையை அவர்களே தான் கட்டி எழுப்ப வேண்டும். பதின் வயதுப் பெண்களுக்கோ, பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தோர் ஆகியோருடைய உதவியும் வெகுவாகத் தேவைப்படுகிறது. அதற்காக அட்வைஸ் மழையை அவிழ்த்து விடவும் முடியாது. காரணம் பதின் வயதுப் பெண்களுக்கு அட்வைஸ் என்பது உலக மகா அலர்ஜி. எனவே சொல்ல வேண்டியதை அவர்களுடைய பாணியில், அவர்களுடைய மொழியில் நாசூக்காகச் சொல்ல வேண்டும் !. 

குறிப்பாகப் பெற்றோர் தங்கள் பதின் வயதுப் பிள்ளைகளிடம் நதியில் மிதக்கும் படகைப் போல மிதந்து வாழ்வைப் புரிய வைக்க வேண்டும்.

எங்க காலத்துல பன்னிரண்டு முழம் புடவை கட்டினோம்…” என கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சக தோழிகளெல்லாம் ஜீன்ஸில் சுற்றும் போது, உங்கள் மகள் புடவையில் போனால் அவளுடைய தன்னம்பிக்கை தான் பாதிக்கப்படும். எனவே குணாதிசயம் சிதையாமல் சில அடையாளங்கள் மாறிப் போவதைக் கண்டு பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. 

குறிப்பாக தலை முடியை ஸ்டைலாக வெட்டுவது, நிறம் மாற்றுவது, தங்க நகையை கழற்றி வைத்து விட்டு தோசைக் கல் கம்மல் மாட்டுவது, இதெல்லாம் பதின் வயது பேஷன். தன்னைச் சுற்றியிருக்கும் நண்பர்களைப் போல உடையணியாவிடில் நிராகரிக்கப்பட்டு விடுவோம் எனும் பயம் அவர்களிடம் இருக்கும். எனவே அவர்களுடைய மாற்றத்தின் நிலையறிந்து அனுசரித்துப் போவது அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும்.

உங்கள் மகள் செய்யும் அனைத்தையும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் பதின் வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என நினைவு வருகிறதா ? ! பெரும்பாலும் தனிமையிலும், குழப்பத்திலும் கழிந்திருக்கத் தானே வாய்ப்பு அதிகம். அதே உணர்வுகள் உங்கள் மகளுக்கும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மகளை ஏதாவது ஒரு நல்ல பொழுதுபோக்கில் ஈடுபட வையுங்கள். அது அவளுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்குப் பிடித்ததை அவளிடம் திணிக்காதீர்கள். அது அவளுக்கு ஹாபியாய் இருக்காது ! வேலையாய் மாறிப் போய்விடும். அதே போல சமூகக் குழுக்கள், பள்ளிக் குழுக்கள், ஆலயக் குழுக்கள் போன்றவற்றில் ஈடுபட வையுங்கள். அவர்களுடைய தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்ப இவையெல்லாம் உதவும்.

எந்தக் காரணம் கொண்டும் பதின் வயதினரை இளக்காரமாய்ப் பேசாதீர்கள். அவளுடைய நடை உடை பாவனைகளைக் கிண்டலடிக்கவே அடிக்காதீர்கள். குறிப்பாக பிறருக்கு முன்னால் வைத்து அப்படி ஒரு சிந்தனையே உங்களுக்கு வர வேண்டாம். அவளுடைய தன்னம்பிக்கையின் வேர்களில் அது கோடரியாய் விழும்.

உங்கள் மகள் தவறான வழியில் செல்கிறாள் எனில் அவளுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டியது உங்கள் கடமை. அதில் இரண்டு வகை உண்டு. “நீ செய்வது தவறுஎன்று தவறைச் சுட்டுவது ஒரு வகை, எது சரியானது  என வழிகாட்டுவது இன்னொரு வகை. நீங்கள் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலார்கள்.

உங்கள் மகளிடம் நிறைய நேரம் செலவிடுங்கள். பெரும்பாலான பெற்றோர் செய்கின்ற மிகப்பெரிய தவறு மகள் வளர்ந்து விட்டால் தனியே விட்டு விடுவது. இது பெற்றோர் குழந்தைகளிடையே பெரிய இடைவெளியை உருவாக்கி விடும். பதின் வயதினருக்கு அது மிகுந்த மன உளைச்சலைத் தரும். எனவே உங்கள் மகளுடன் போதுமான நேரம் செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அது அவளுடைய பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். அந்தப் பாதுகாப்பு உணர்வே அவளுடைய தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்பும்.  

உங்கள் மகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாய் இருங்கள். உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். சரியான உடற்பயிற்சி உங்கள் மகளுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளுடைய மன அழுத்தம், தடுமாற்றம் போன்ற பல விஷயங்கள் மறையும். ஏழைகளுக்கு உதவுவது, நேர்மையாய் இருப்பது, நல்ல கல்வி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களிலெல்லாம் உங்கள் மகளை ஈடுபடுத்துங்கள். இவையெல்லாம் உங்கள் மகளை தன்னம்பிக்கையில் வளர்த்தெடுக்கும் விஷயங்கள். 

பாராட்டுங்கள். உங்கள் மகளின் சின்னச் சின்ன நல்ல விஷயங்களுக்கெல்லாம் அவளைப் பாராட்டுங்கள். அவளுக்குத் தன்னம்பிக்கை தரக் கூடிய எந்த விஷயத்தையும் பாராட்டத் தயங்காதீர்கள். ஒருவேளை உங்கள் மகள் குண்டாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவளுடைய தோற்றம் அழகாக இருக்கிறது என பாராட்டுங்கள் !

விளையாட்டில் ஆர்வமுடைய பிள்ளைகளைத் தடுக்காதீர்கள். விளையாட்டு அவர்களுடைய உடல் ஆரோக்கியம், குழு மனப்பான்மை போன்ற பல விஷயங்களுக்கு நல்லது. கூடவே அவர்களுடைய மன அழுத்தங்களும் இதனால் அடிபட்டுப் போய் விடும்.

இந்தப் பதின் வயது தான் பாலியல் ஈர்ப்பு, போதை, அதீத பொழுது போக்கு என எல்லை தாண்டிச் சென்று சிக்கி விடும் அபாயம் உண்டு. குறிப்பாக தந்தையின் வழிகாட்டுதல் இல்லாத பெண்களும், தன்னம்பிக்கை இல்லாத பெண்களும் தான் இத்தகைய சிக்கல்களில் போய் சிக்கிக் கொள்வார்கள் என்கின்றன ஆய்வுகள். எனவே பதின் வயது மகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வழிகளை விட்டு விடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

சினிமா பிரபலங்கள், விளம்பர மாடல்களெல்லாம் உண்மையைப் பிரதிபலிப்பதில்லை எனும் விஷயத்தைப் புரிய வையுங்கள். அதீத மேக்கப், லைட்டிங், கேமரா கோணம், கிராபிக்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் இதில் உண்டு. இவற்றை உங்கள் மகளிடம் இயல்பாக விளக்கலாம். இவர்களைப் போல ஆக வேண்டுமென பதின் வயதினர் பலரும் டயட், ஸ்லிம் மாத்திரை என தப்பாய் குதிக்கும் போது அவர்களுடைய உடலும் மனமும் பாதிப்படைகிறது. பலர் உயிரை இழக்கவும் இது காரணமாகி விடுகிறது.

முக்கியமாக பதின் வயதுப் பெண்கள் தன்னைப் பற்றி அறிந்து கொண்டிருப்பதும், தங்களால் எதையும் செய்ய முடியும் என ஆழமாய் நம்புவதும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் எல்லைகளில் உலவ முடியும் எனும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டியதும் அவசியம். பதின் வயதினரின் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்புவது வலுவான ஒரு இளைய சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்குச் சமம்.

பதின் வயதை உரமூட்டுவோம்

எதிர் காலத்தை நிறமூட்டுவோம்

தன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது

நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்..” என உள்ளுக்குள்ளே ஒரு குரல் உங்களிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதா ? உஷார் ! நீங்கள் தாழ்வு மனப்பான்மை எனும் பசித்த சிங்கத்தின் பற்களுக்கு இரையாகக் கூடும். 

தாழ்வு மனப்பான்மை என்பது படிகளற்ற படுகுழி. அதற்குள் குடியிருப்பவர்கள் கால்களற்ற மனிதர்கள். அவர்களால் வாழ்வின் சமவெளியையோ, வெற்றியின் சிகரங்களையோ பார்க்கவே முடியாது !.

தாழ்வு மனப்பான்மைக்கும், தன்னம்பிக்கைக் குறைவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்களால் தன்னம்பிக்கை வாதிகளாக பரிமளிக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வெற்றியாளராகும் சாத்தியம் இல்லை.

தாழ்வு மனப்பான்மை உருவாக பல காரணங்கள் இருக்கலாம். சின்ன வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அவமானங்கள். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையே எனும் ஏக்கம். யாரும் அங்கீகரிக்கவில்லையே எனும் ஆதங்கம். அம்மா அப்பாவால் கைவிடப்பட்ட நிலை. அல்லது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை இப்படி ஏதோ ஒரு சில காரணங்கள் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை விதையை நட்டிருக்கக் கூடும். அவை உங்களுக்குள்ளேயே வேர்விட்டுக் கிளை விட்டு தாழ்வு மனக் கானகமாக  பிற்காலத்தில் வளரும். எதையும் முளையிலேயே கிள்ளி எறிவது மிகவும் சுலபம். தாழ்வு மனப்பான்மையும் அப்படியே !

சிலருக்கு இப்படி எந்த சிக்கலும் இல்லாத மழலைக்காலம் வாய்த்து விடும். வளர்ந்தபின்நான் கருப்பா பயங்கரமா இருக்கேன்”, “நான் குண்டா அசிங்கமா இருக்கேன்”, “நான் குள்ளமா கொடூரமா இருக்கேன்”, “நால் ஒல்லியா பல்லி மாதிரி இருக்கேன்இப்படியெல்லாம் தன் தோற்றம் குறித்த எதிர் சிந்தனைகள் கூடு கட்டிக் குடியேறிவிடும். இந்த சிந்தனைகளெல்லாம் தாழ்வு மனப்பான்மையை கம்பளம் விரித்து வரவேற்கும் சக்தி படைத்தவை. நாளடைவில் மற்ற எல்லோருமே தன்னை விடப் பெரியவர்கள், தான் மட்டும் உதவாக்கரை எனும் நினைப்புடன் ஓட்டுக்குள் மறைந்து கொள்ளும் ஆமை போல ஆகி விடுவார்கள்.

இன்னும் சிலருக்கு தாழ்வு மனப்பான்மை என்பது அடுத்தவர்களுடைய வசதி வாய்ப்பைப் பார்த்து வந்து விடும். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கார் வாங்கினால் இவருடைய மனசில் இவர் தன்னையே சின்னவராய்ப் பார்க்க ஆரம்பித்து விடுவார். எதிர் வீட்டுக்காரர் ஒரு எல்..டி டிவி வாங்கினால் தாழ்வு மனம் கொஞ்சம் கூடும். அலுவலகத்தில் அடுத்து இருப்பவர் லூயி பிலிப் சட்டை போட்டால், தோழி புதிதாய் சங்கிலி வாங்கினால், சக பணியாளன் ஒரு நிலம் வாங்கினால் இப்படி அடுத்தவர்களுடைய பொருளாதார பலங்களெல்லாம் இவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். அவர்களைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே எனும் துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.

வேறு சிலருக்கு எல்லா வசதிகளும், வாய்ப்பும் இருக்கும். படித்திருப்பார்கள். வேலையில் இருப்பார்கள். காரில் பயணிப்பார்கள். அவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை வரும். பல வேளைகளில் அறிவு ரீதியான தாழ்வு மனப்பான்மை. தன்னை விட அறிவாளியாய் மற்றவர்கள் இருக்கிறார்களே எனும் சிந்தனை. குழுக்களில் தனது கருத்தைப் பரிமாற ஆயுட்கால தயக்கம், மீட்டிங்களில் வாய் மூடி மௌனித்திருப்பது, தனது எழுத்துக்களை வெளியே காட்டுவதற்குக் கூட வெட்கம் என இவர்களுடைய தாழ்வு மனப்பான்மை இன்னொரு விதமானது !

இன்னும் சிலருக்கு அடுத்தவர்களுடைய வெற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வரும். “அவனைப் பாரு ஆறே மாசத்துல கடனை எல்லாம் அடச்சுட்டான். நானும் இருக்கேனேஎனும் சுய பச்சாதாபம் தாழ்வு மனப்பான்மையாய் மாறி விடும். எல்லோரும் தங்களைப் பார்த்தே சிரிப்பது போலவும், தங்களை நக்கலடிப்பது போலவும் கனவுகள் வரும். 

தாழ்வு மனப்பான்மையின் வடிவங்களையும், முகங்களையும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், “நமது மனதில் நாமே நம்மைக் குறித்த தாழ்வான ஒரு சிந்தனையை உருவாக்குவதுதான் தாழ்வு மனப்பான்மை. அதை உருவாகும் காரணிகள் நமக்கு உள்ளேயோ வெளியேயோ இருக்கலாம்.  

தாழ்வு மனப்பான்மை மனதளவிலான பாதிப்புகளை உண்டாக்குவதுடன், உடலையும் வெகுவாகப் பாதித்து விடுகிறது. தாழ்வு மனப்பான்மையுடையவர்களுடைய மூளைத் திறன் குறைந்து அவர்கள் பெரும் மறதிக்காரர்களாகி விடுவார்கள் என்கிறது கனடாவிலுள்ள மாண்ட்ரீயலில் நடந்த ஆய்வு முடிவு ஒன்று. இது தவிர மன அழுத்தம், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, இதய நோய், தலை வலி, உடல் வலி, கான்சர் என தாழ்வு மனப்பான்மை தரும் நோய்களின் பட்டியல் அச்சுறுத்துகிறது ! எனவே தாழ்வு மனப்பான்மை எனும் புதை குழியில் விழாமல் கவனமாய் நடப்போம்.

சரி தாழ்வு மனப்பான்மை எனும் கூட்டிலிருந்து வெளியே வர முடியுமா ? 

நிச்சயமாக ! என்பது தான் அழுத்தமான பதில்.

முதலில் உலகத்தில் எல்லோருமே தனித்துவமானவர்கள் எனும் உண்மையை மனதில் தெளிவாக எழுதிக் கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் சில திறமைகள் நிச்சயம் உண்டு. சில குறைபாடுகளும் நிச்சயம் உண்டு. ஒரு காளானைத் தொட்டுப் பார்த்து நல்ல காளானா விஷக் காளானா என கண்டுபிடிக்கும் பாட்டியின் திறமை தனித்துவமானது. கணினியில் உலகைக் கண்டு பிடிக்கும் பேரனின் திறமை இன்னொரு விதமான தனித்தன்மை ! இந்த உண்மையை உணர்தல் முதல் தேவை.

இந்த நடிகனெல்லாம் வெற்றி பெற வாய்ப்பே இல்லைஎன ஒரு நடிகனைப் பார்த்து கிண்டலடித்தார் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவின் துணை ஜனாதிபதி ஒரு முறை ! பிற்காலத்தில் அந்த நடிகர் ஹாலிவுட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கக் கூடியவராய் மாறினார். அவர் ஹாரிசன் ஃபோர்ட் ! அவருடைய திறமை மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது ! “இவரே சொல்லிட்டாரே.. இனிமே நான் அவ்ளோ தான்…” என தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்து விடவில்லை.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் தங்களுடைய வெற்றிகளைக் கொண்டாடமாட்டார்கள். மாறாக அதை விடப் பெரிய பெற்றி பெற்றவர்களை நினைத்து தங்களைத் தாங்களே சோர்வாக்கிக் கொள்வார்கள். அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். நமது சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட மனதளவில் கொண்டாட வேண்டும். யாராவது பாராட்டினால் ஏற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுக்கு நன்றி சொல்லுங்கள். வெற்றிகளின் விளக்கு வெளிச்சத்தின் முன் தன்னம்பிக்க இருட்டால் தாக்குப் பிடிக்க முடியாது.

யாராவது ஏதாவது ஒரு எதிர் கருத்துச் சொன்னால் உடனே எல்லாம் மூழ்கி விட்டது போல இடிந்து போய் விடாதீர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொள்ளுங்கள். விமர்சனங்களின் உண்மைத் தன்மையை அறியுங்கள். அவை நல்லவையெனில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் விட்டு விடுங்கள். எக்காரணம் கொண்டும் விமர்சனங்களின் அடிப்படையில் உங்களை நீங்களே சிறுமைப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

பள்ளிக்கூடத்தில் மோசமாகப் படிக்கிறான் என்று அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு மாணவர். கணக்குப் பாடத்தில் அவர் படு வீக். சரி வீட்டிலிருக்கும் தோட்டத்தைப் பராமரிக்கலாமென்றால் அங்கும் தோல்வி. எங்கும் விமர்சிக்கப்பட்ட அவர் தான் பிற்காலத்தில் உலகை பிரமிக்க வைத்த ஐசக் நியூட்டன். 

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கான பொறுப்பு உங்களுடையது என்பதை உணருங்கள். அப்போது தான் உங்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கான வலிமையும் உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள். அது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் செயல்களிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வர இன்னொரு முக்கியமான தேவை பழைய நினைப்புகளிலிருந்து வெளியே வருவது தான். குறிப்பாக உங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் தோல்விகள், பிறருடைய கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் மூட்டையாய்க் கட்டி இந்தியக் கடலில் எறிந்து விடுங்கள். 

இன்னொரு முக்கியமான விஷயம், தோல்வி என்பது சகஜம் எனும் வாழ்க்கையின் உண்மையைப் புரிந்து கொள்வது. பிறப்பைப் போல, இறப்பைப் போல தோல்விகளும் மாற்ற முடியாதவை. ஏதோ ஒருவகையில் எல்லோருமே தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம் எனும் உண்மையைப் புரிந்து கொள்வது அவசியம். தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டால் அந்தத் தோல்விகள் உங்களுடைய தன்னம்பிக்கையை உடைப்பதில்லை !

ஜான் கிரிஸாம் எனும் எழுத்தாளரை அறிந்திருப்பீர்கள். நாவல் உலகில் பல கோடி பணம் சம்பாதித்தவர். அவருடைய நூல்கள் சுமார் 25 கோடி பிரதிகளுக்கு மேல் உலகெங்கும் விற்றுத் தீர்ந்தது. ஆனால் அவருடைய முதல் நாவலை வெளியிட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 12 பதிப்பகங்கள் அவரை நிராகரித்தன. 16 பதிப்புலக ஏஜெண்ட்கள் அவரை ஏளனம் செய்தனர் ! அவர் அசரவில்லை. தோல்விகள் ஒரு நாள் வெற்றியாய் மாறும் எனும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிறரோடு இணைந்து வாழப் பழகுங்கள். பிறரைப் பார்த்துப் புன்னகைப்பது கூட தாழ்வு மனப்பான்மையை உடைக்கும் என்கின்றனர் உளவியலார்கள். புன்னகையுடன் வாழ்க்கையை அணுகுங்கள் இது உங்களை வலுவாக்கும்.

உங்களுடைய குறைகளைக் குத்திக் காட்டி உங்களைச் சிறுமைப்படுத்துவோரை விட்டு தூரமாய் போய் விடுங்கள். அதாவது உங்களை ஏதாவது ஒரு வகையில் தாழ்வு  மனப்பான்மையில் உழலச் செய்யும் மனிதர்களை அறவே தவிர்த்து விடுங்கள். அதே போல நீங்களும் பிறரைச் சிறுமைப்படுத்தும் குணாதிசயங்களை விட்டு விடுங்கள். பிறரைக் கிண்டலடிப்பது, ஏளனமாய்ப் பார்ப்பது போன்றவை உங்களிடம் இருந்தால் அதை நிறுத்தி விடுங்கள்.

பேசுங்கள், உங்களுடைய மனதில் பூட்டப்படும் சிந்தனைகள், விமர்சனங்கள், பதில்கள் கூட உங்களைக் கடுமையான மன அழுத்தத்தில் தள்ளிவிடும். எனவே பேசவேண்டியவற்றைப் பேச வேண்டிய இடத்தில் பேசிப் பழகுங்கள் ! ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காத, உங்கள் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு வேலையில் நீங்கள் இருந்தால் அதை விட்டு விடுங்கள். வாழ்க்கை ஆயிரம் கதவுகளோடு காத்திருக்கிறது எனும் உண்மை உணருங்கள்.

தாழ்வுமனம் தோல்வியின் வீடு

தோல்வியற்ற மனதையே நாடு

தன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு  

வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பதை எப்போதுமே நமது மனம் தான் முடிவு செய்கிறது. சிலர் காலையில எழும்பும்போதேஎன்னத்த எழுந்து.. என்னத்த கிழிச்சு..” என்று உற்சாகத்தை முழுமையாய் போர்வைக்கு அடியில் புதைத்து விட்டுத் தான் எழும்புவார்கள். அவர்களிடம்எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டுப் பாருங்கள்என்னத்த சொல்ல, ஏதோ வண்டி ஓடுது..” என்பார்கள்.

சிலர் அப்படியல்ல, காலையில் எழும்பும் போதே ஒரு புதிய நாளைத் தரிசிக்கப் போகிறோம் எனும் பூரிப்பில் எழும்புவார்கள். சூரியக் கதிர்கள் அவர்களுக்கு வரவேற்புக் கம்பளம் விரிப்பதாய் தோன்றும். உற்சாகத்தை உடுத்திக் கொண்டு தான் படுக்கையிலிருந்தே குதித்தெழுவார்கள். அவர்களிடம் போய்எப்படி இருக்கிறீங்க ?” என்று கேட்டால்சூப்பரா இருக்கேங்க. எனக்கென்ன குறை ? வாழ்க்கை ரொம்ப அழகா இருக்குஎன்று புன்னகைப்பார்கள்.

இந்தகைய உற்சாக மனம் உடையவர்கள் தான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெற்றியாளர்கள். அவர்கள் காலை முதல் மாலை வரை உற்சாகமாகவே இருப்பார்கள். எதையும் ஆனந்தமாய் அணுகுவார்கள். அன்றைய இரவு வரை அவர்களுக்கு வாழ்க்கை ஆனந்த நிகழ்வுகளையே கொடுத்துக் கொண்டிருக்கும். அவர்களுடைய இரவு செபம் கூடஆண்டவா, அழகான இந்த நாளுக்காக நன்றிஎன்பதாகத் தான் இருக்கும்.

தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு உற்சாகம் வருவதில்லை. எப்படியோ ஒரு நாளை ஓட்டிட்டேன் என படுக்கையில் சரியும் அவர்களுடைய இரவு செபம் பெரும்பாலும்ஆண்டவா, நாளைக்காவது நல்ல நாளா இருக்கட்டுமேஎன்பதாகத் தான் இருக்கும். 

தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் கட்டளை என்ன தெரியுமா ? நம்மை நாமே நேசிப்பது. அடுத்தவர்களை நேசிப்பதைப் பற்றி நமக்குத் தெரியும். பெரும்பாலான நேரத்தை அதற்காகத் தான் செலவிடுகிறோம். பெற்றோரை நேசிக்க, வாழ்க்கைத் துணையை நேசிக்க, பிள்ளைகளை நேசிக்க, நண்பர்களை நேசிக்க. இப்படியே ஓடிப் போகும் வாழ்க்கையில் நாம் நேசிக்க மறந்து போகும் ஒரு அப்பாவி நபர் நாம் தான் !

நம்மை நேசிப்பதற்கு முதல் தேவை நம்மை ஏற்றுக் கொள்வது. எப்படி இருக்கிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்வது. கண்ணாடியில் காலையில் நம் முகத்தைப் பார்க்கும்போதே அந்த பிம்பம் நமக்கு உற்சாக மூட்டவேண்டும். நமது நிறம், தோற்றம், குரல், திறமைகள், இத்யாதிகள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். 

உங்கள் குழந்தை எந்த நிறமாக இருந்தாலும், எப்படி இருந்தாலும் கொஞ்சமும் தயக்கமில்லாமல் உற்சாகமாய் கட்டி அணைப்பீர்களல்லவா ? அந்த உற்சாகத்துடன், அதே ஆத்மார்த்தமாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் இயல்புகளோடு தன்னை ஏற்றுக் கொள்வது தன்னம்பிக்கைக்கான முக்கியத் தேவை.  

பெரும்பாலும் தன்னம்பிக்கைக் குறையாடுகள் நான்கு காரணங்களால் வரலாம் என்கின்றனர் உளவியலார்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் பயம், ஒரு சூழலை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் எனும் பயம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறைச் சிந்தனைகள்.

இவற்றை எதிர்கொள்வதும், தன்னம்பிக்கை மனிதனாக துளிர் விடுவதும் கடினமான விஷயமல்ல. எத்தனை வேகமாய் தண்ணீர் ஓடினாலும் எதிரேறிச் செல்லும் சின்ன மீன்களைப் போல, உங்களைச் சுற்றி என்ன சூழல் ஓடினாலும் நீங்கள் எல்லாவற்றையும் கடந்து தன்னம்பிக்கை மனிதனாய் நிலை பெற முடியும். அதற்கு நிரூபிக்கப்பட்ட ஒரு சின்ன பயிற்சி உண்டு.

முதலில் உங்களுடைய சிறந்த பண்புகள் என்னென்ன என்பதை நீங்கள் பட்டியலிடுங்கள். உங்களுக்குத் தெரிந்த, நீங்களே மறந்து போயிருந்த பல விஷயங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெறட்டும். பின்பு உங்கள் நெருங்கிய நண்பர்களிடம்என்னிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன ?” என்று கேளுங்கள். அவர்கள் சொல்வதையும் குறித்துக் கொள்ளுங்கள். 

எல்லோருக்கும் உங்களிடமிருக்கும் ஏதோ ஒரு விஷயம் பிடித்துப் போகலாம். இப்படிப் பட்டியலிடுகையில் உங்களுடைய வலுவான நல்ல விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். “அட ! நானா இப்படி ?” என உங்களுக்கே ஒரு வியப்பு மேலிடும். உங்கள் தன்னம்பிக்கை முனை கூர்மையாகும். 

நேர்மறைச் சிந்தனைகளை அதிகரிப்பது ஒரு வகை. எதிர்மறைச் சிந்தனைகளை அழிப்பது ஒரு வகை. மனதில் எதிர் மறைச் சிந்தனைகள் அழிய அழிய, நேர் சிந்தனை மனதில் நிரம்பும். எதிர் சிந்தனைகளைக் கொட்டி நிரப்பி வைத்திருக்கும் குடுவையில் நேர் சிந்தனைகளை ஊற்ற முடியாது. எனவே எதிர் சிந்தனைகளை வெளியே கொட்டுவது ரொம்ப முக்கியம்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சேஎல்லாமே வேஸ்டாப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க உதவுகிறது 

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. இந்தப் பார்வை தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

உங்களால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற வேண்டிய விஷயத்தை மாற்றுங்கள். இரண்டுக்குமிடையேயான வேறுபாடைக் கண்டறியும் ஞானம் பெற்றிருங்கள்.” இதுவே மகிழ்வான வாழ்க்கையின் அடிப்படை. தன்னம்பிக்கைக்கான வலுவான சிந்தனையாக இன்றும் போற்றப்படும் இது  1800களில் ரெயின்ஹோல்ட் என்பவரால் எழுதப்பட்டது.

சில விஷயங்கள் நம்மால் மாற்ற முடியாது. உதாரணமாக நீங்கள் குள்ளமாய் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏகப்பட்ட தம் அடிப்பீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை மாற்றியாக வேண்டும். ஏனெனில் அது மாற்ற முடிகிற விஷயம். இந்த இரண்டுக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ! 

இந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளாமல் குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வேண்டுமென லேகியம் சாப்பிடுவதுண்டு. புகை பிடிப்பவர்கள்தம்மெல்லாம் விட முடியாத பழக்கம்பா…” என சொல்லித் திரிவதுண்டு. இது இரண்டுமே தப்பான அணுகு முறை. ஏற்றுக் கொள்ள வேண்டியதை ஏற்றுக் கொள், மாற்றிக் கொள்ள வேண்டியதை மாற்றிக் கொள். ஆனந்த வாழ்க்கையின் அடிப்படை இது.

நீங்கள் உங்களுக்குள்ளே நல்ல சிந்தனைகளை வளர்ப்பது ஒரு நிலை. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நல்ல நேர் சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டியது இன்னொரு நிலை. ஒரு நல்ல காமெடி படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனநிலை உற்சாகமாய் இருக்கிறது. ஒரு சோகமான படத்தைப் பார்த்து முடிக்கும் போது உங்கள் மனம் பாரமாய் இருக்கிறது இல்லையா ? இதே போல தான் உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களும் உங்களை மகிழ்ச்சியாகவோ, துயரமாகவோ வைத்திருக்க முடியும்.

என்னய்யா வாழ்க்கை…?” , “என்னய்யா பொழப்பு இது…” என்றெல்லாம் வாழ்வில் பிடிப்பே இல்லாதவர்கள் உங்களைச் சுற்றியிருந்தால் உங்களுக்குள்ளும் அந்த சிந்தனை நிச்சயம் புகுந்து விடும். எனவே அப்படிப்பட்ட நண்பர்களை கொஞ்சம் விலக்கியே வைத்திருங்கள். 

சில நண்பர்கள் அதற்கு நேர் எதிராக இருப்பார்கள். அப்பப்போ மனசு கஷ்டமாயிருந்தா உங்களுக்கே ஒரு சில நண்பர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். சரிதானே ? அவர்களுக்குப் போன் பண்ணத் தோன்றும். அவர்களைப் போய்ப் பார்க்கத் தோன்றும். காரணம் அவர்களுடைய பாசிடிவ் அணுகு முறை. 

அந்த நண்பர்களுடைய வார்த்தைகளுக்கு உங்களை சோர்வுச் சரிவிலிருந்து தூக்கி விடும் கைகள் இருக்கும். வைக்கோல் போரில் விழுந்த ஒரு துளி நெருப்பாக அவர்களுடைய வார்த்தைகள் உற்சாக நெருப்பைப் பற்ற வைக்கும். அப்படிப்பட்ட நண்பர்களோடு நெருக்கமாய் இருங்கள். தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருங்கள். அவர்களுடைய சுறு சுறுப்பு உங்களையும் பற்றிக் கொள்ளும். 

ஜிம் கேரிஎன்ற பெயரைச் சொன்னாலே ஒரு சின்னப் புன்னகை உங்களுடைய உதடுகளில் வந்து அமர்ந்து கொள்ளலாம். ஹாலிவுட்டின் கவுண்டமணி அவர். சின்னப் பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் அவருடைய நடிப்பு அத்தனை நகைச்சுவை நிறைந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் விருதுகளை வாங்கியும் ஹாலிவுட்டில் நிரந்தர இடம் பிடித்தவர் இவர். 

இவருடைய இளமைக்காலமோ சோகமானது. கனடாவில் மூன்று சகோதர சகோதரிகளுடன் வறுமையில் உழன்றவர். படிப்பதற்குப் பணமில்லாததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டார். அந்த வறுமையிலும் தனது நகைச்சுவைத் திறன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். உள்ளூர் நகைச்சுவைக் குழு ஒன்றில் இணைந்து சிரிப்பூட்டினார். பொருளாதாரம் எவ்வளவு தான் இறுக்கினாலும் தன் மீதான நம்பிக்கையை அவர் சற்றும் தளர விடவில்லை. 

காலம் அவரை அமெரிக்காவுவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி பெயர வைத்தது. அங்கும் அதே தொழிலைத் தொடர்ந்தார். படிப்படியாய் தனது எல்லையை விரிவாக்கி இன்று ஹாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவராக பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கிறார். உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது ஜிம்கேரியின் வியப்பூட்டும் வாழ்க்கை.

படிப்பில் அதிக ஆர்வமில்லாத  அந்தச் சிறுவனுக்கு ஆடை வடிவமைப்பதில் அலாதியான ஆர்வம். நியூயார்க்கில் வசித்து வந்த அவனுடைய வீட்டில் ஒன்பது சகோதர சகோதரிகள். பள்ளி இறுதியாண்டுகளில் படிக்கும்போது நகருக்குச் சென்று ஜீன்ஸ்கள் வாங்கி வந்து அதை மாடர்ன் ஸ்டைலில் மாற்றியமைத்து விற்பான். ஒரு சின்ன கடையையும் ஆரம்பித்தார். இருபத்தாறாவது வயதில் அந்தக் கடை ஏழு கிளைகளுடன் சர சரவென வளர ஆரம்பித்தது. 

ஆனால் அதிக நாள் அந்த பிஸினஸ் நிலைக்கவில்லை. தொழில் முற்றிலுமாய் வீழ்ச்சியடைந்தது. அவர் மனம் தளரவில்லை. அவரை வேலையில் அமர்ந்த கால்வின் கிளைன், பெரி எலிஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் முன்வந்தன. அவரோ தன்மீதான நம்பிக்கையை விட்டு விடவில்லை. தன்னால் மீண்டும் ஜொலிக்க முடியும் என நம்பினார். படிப்படியாய் அதற்கான வேலைகளில் இறங்கினார். புதிய நிறுவனம் ஒன்று உதயமானது. 

முதலில் ஆண்களுக்கான ஃபேஷன் ஆடைகளில் ஆரம்பித்து பின் பெண்களுக்கானது, குழந்தைகளுக்கானது என விரிவாக்கினார். படிப்படியாய் வளர்ந்தார். அந்தத் துறையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகியிருக்கும் டாமி ஹில்பிகர் (Tommy Hilfiger) தான் அந்த நிறுவனம். தன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வில் ஜெயித்துக் காட்டியவருடைய பெயரிலேயே அது இயங்குகிறது ! உன்னை நீயே நம்பாவிடில் வேறு யார் நம்புவார் ? என நம்மைப் பார்த்துக் கேட்கிறது இவருடைய வியப்பூட்டும் வாழ்க்கை.

உன்னை உளமார நேசி

உயர்வு அதில்தானே யோசி !

தன்னம்பிக்கை : திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு. 

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானதுதயாராதல்எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும்.  

ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும் உலகப் புகழ் பெற்றவர். மிகத் திறமையான ஜனாதிபதி, தலை சிறந்த தலைவர் என உலகின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய பெயரை எழுதியவர். ஒரு முறை அவர் வழக்கம் போல அசத்தலான ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் ரொம்பவே வசீகரிக்கப்பட்டான். பேச்சு முடிந்தபின் அவன் அவரிடம் கேட்டான்

சார். ரொம்ப ரொம்ப பிரமாதமா பேசறீங்க. இதன் ரகசியத்தைச் சொல்ல முடியுமா ?”. ஆபிரகாம் லிங்கன் சிரித்துக் கொண்டே சொன்னார்

நான் மேடையில் அரை மணி நேரம் பேசினதைத் தான் கேட்டாய். அதற்காக அரை நாள் நான் தயாரானதைப் பார்க்கவில்லையே” !

அவருடைய அந்தப் பதிலில் அடங்கியிருந்தது அவருடைய வெற்றிக்கான ரகசியம் !. “தயாராதல் ! “

ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஒவ்வோர் மேடைப்பேச்சுக்கும் முன்பும் தன்னை மிகச் சிறப்பாகத் தன்னைத் தயாரித்துக் கொள்பவர். எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கில்லாடிகளாய் இருக்க முடிவதில்லை. எனவே ஆபிரகாம் லிங்கனுக்கே தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு தான் அவருடைய உரையை வசீகரிக்கும் விதமாக மாற்றியமைக்கிறது. அந்த தயாரிப்பு தான் அவரை மேடைப் பயமின்றி பேச வைக்கிறது. அந்தத் தயாரிப்பு தான் அவரை உலகத் தலைவருக்குரிய குணாதிசயத்தோடு பணியாற்ற வைக்கிறது.

அவர் மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லா பேச்சாளர்களுடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான தயாராகும் வழிகள் அடங்கியிருக்கின்றன. கண்ணாடியின் முன் நின்று பேசுவது, வீட்டில் உள்ள நபர்களை கூட்டமாய் நினைத்து அவர்கள் முன் உரையாற்றுவது, டேப் ரிகார்டரில் ரெக்கார்ட் பண்ணிப் பழகுவது என ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவமும் சொல்லும் பாடம் ஒன்று தான். தயாராதல் மிக முக்கியம் !

 வெற்றிக்கு மிக மிக முக்கியமான தேவை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு முக்கியத் தேவை தயாராதல் !” என்கிறார் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆர்தர் ஆஷே. வெற்றிக் கோப்பைகளுடன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடைய தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இது ! தயாரிப்பு இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் ஜொலிக்க முடியாது.

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சில நிமிட விளையாட்டுக்காக ஆண்டுக் கணக்கில் தங்களைத் தயாரித்துக் கொள்வார்கள். அந்தத் தயாரிப்பு தான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை அவர்களுடைய கையைப் பிடித்து உள்ளங்கைக்குள் வெற்றிக் கோப்பையைத் திணிக்கிறது. 

தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டு பேர் மலையேறச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மலையேற்றத்துக்குரிய உபகரணங்களோடு மலையேறச் செல்கிறார். இன்னொருவர் எந்த ஒரு உபகரணமும் எடுக்காமல் மலையேறச் செல்கிறார். இது தான் தன்னம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம். 

ஒரு செயலைச் செய்யும் முன் அந்தச் செயலுக்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வது தன்னம்பிக்கையாளரின் வழக்கம். அதீத நம்பிக்கை உடையவர்களோ சரியான தயாரிப்புகள் இல்லாமல் களமிறங்குவார்கள். தயாரிப்புகள் இல்லாமல் இறங்கும் மனிதர்கள் கடைசியில் அதிர்ஷ்டத்தைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்காரருடைய வெற்றியோ முழுக்க முழுக்க அவரைச் சார்ந்தே இருக்கிறது.  !

குடும்ப வாழ்க்கையிலும் இந்த அதீத நம்பிக்கை சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உதாரணமாக, காதலிக்கும் போது தங்கள் வாழ்க்கையில் காதலிக்கும் நபரை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம், வசீகரிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஒரு காதல் கடிதத்தை எழுதவே இராத்திரி முழுதும் விழித்திருந்து பேப்பர் கிழிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது. காதல் வாழ்க்கை தென்றலாய் வீசுகிறது. 

அதே நேரம், அவர்கள் திருமணத்தில் இணைந்தபின்இனிமேல் இவர் நமக்கேஎனும் அதீத நம்பிக்கை எதையும் தயாரிக்காத ஏனோ தானோ எனும் சூழலுக்குத் தம்பதியரைத் தள்ளி விடுகிறது. வாழ்க்கை தன்னுடைய சுவாரஸ்யத்தையும், பிடிமானத்தையும் இழந்து தத்தளிக்கத் துவங்குகிறது.

எனக்கு இதெல்லாம் தெரியும் என தம்பட்டம் அடிப்பதை தன்னம்பிக்கை என பலர் நினைக்கிறார்கள். அது தன்னம்பிக்கையல்ல. தன்னம்பிக்கை வார்த்தைகளில் மிளிர்வதல்ல, அது செயல்களில் ஒளிர்வது. 

சரியாய் தயாரானவன் தேர்வுக்கு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் செல்வான். அவனுடைய கண்களில் தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விடும். தயாராகாமல் ஏனோ தானோ என்று செல்பவனோ அதிர்ஷ்டத்தையும், அடுத்தவனையும் நம்பியே தேர்வு எழுதச் செல்வான். வெற்றி எப்போதுமே தயாராய் இருப்பவனுக்காய் தயாராய் இருக்கிறது !

ஒரு வெற்றிக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் தயாராய் வைத்திருக்கும் போது நமக்கு முன்னால் இருக்கும் பணி எளிதாக முடிந்து விடுகிறது. உதாரணமாக ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே எளிதான வேலை. அதே நேரம் ஒரு கால் ஊனமாய் உள்ள மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அந்த வேலை மிகக் கடினமானதாகி விடுகிறதல்லவா ? இந்த ஊனம் தன்னம்பிக்கைக்கு ஒரு வேகத் தடையையும் தந்து விடக் கூடுமல்லவா ? எனவே தயாராதல் என்பது ஒவ்வோர் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது !

ஐந்து மணி ரயிலைப் பிடிக்க நான்கு மணிக்கே கிளம்புவது ரொம்ப எளிதான வேலை. ஆனால் அதே ரயிலைப் பிடிக்க ரொம்பவே தாமதமாய்க் கிளம்பும் சூழலை நினைத்துப் பாருங்கள். எத்தனை பரபரப்பு, எவ்வளவு கஷ்டம் ! சரியாய்த் திட்டமிடுதல், சரியாகத் தயாராதல் இவை இல்லாவிடில் தேவையற்ற மன அழுத்தம் நம் முதுகில் ஏறி அமர்ந்து விடுகிறது. அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது.

சிலர் வேலையில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றி வானில் வட்டமிடுவார்கள். அதற்குக் காரணம் சிறப்பான திட்டமிடுதலும், அதற்காகத் தயாராவதும் தான். வந்தோமா, போனோமா என்று இருப்பவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்வதில்லை. அவர்கள் காற்றில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள். எப்போதும் நிலத்திலுள்ள கயிறோடு கட்டப்பட்டு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு  இலக்கு இருப்பதில்லை. எனவே அவர்களால் எந்தத் திசையில் பறக்க வேண்டுமென முடிவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சொந்தமாகச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே சுயமாக செயல்பட முடிவதில்லை. அவர்கள் எப்போதும் இன்னொருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.

திட்டமிட்டுப் பறப்பவர்கள் கழுகைப் போன்றவர்கள். அவர்களுடைய சிறகுகள் அவர்களுக்கு வலுவூட்டும். அவர்களுடைய பார்வை அவர்களுக்குத் திசைகளைக் காட்டும். அவர்களுடைய பயணம் அவர்கள் திட்டமிட்ட திசையில் நடக்கும். அவர்களுடைய வெற்றியையோ, தோல்வியையோ இன்னொருவர் நிர்ணயிக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை மொத்தத்தில் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

வெற்றியின் ரகசியங்களில் ஒன்று இது தான். வெற்றி என்பதைப் பெற ஏதேதோ வேண்டுமென நாமாகவே கருதிக் கொள்கிறோம். ஆனால் சில வேளைகளில் வெற்றிக்காக சரியான திட்டமிடுதலும், தயாரித்தலுமே போதுமானதாக இருக்கிறது. 

உட்கார்ந்து எழுதவே ஒரு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார் ஒரு எழுத்தாளர். வெளியே உறைய வைக்கும் குளிர். கையில் போதுமான அளவு பணம் இல்லை. ஒரே ஒரு காபி வாங்கிக் கொண்டு அந்த காபி ஷாப்பில் பல மணிநேரம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாவலுக்கான முயற்சியில் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தத் தயாரிப்பு தான் அந்த எழுத்தாளரை உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக்கியது. இன்று அவருடைய நாவலுக்காய் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே கடைகளில் நிரம்பி விடுகிறது கூட்டம். அவர்தான் ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.ஜே ரௌலிங்கர். 

வெற்றியை நோக்கிய பயணத்தில் இந்த தயாரிப்பு ரொம்பவே அவசியம். இன்றைக்கு வெற்றியாளர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும்போது புலப்படும் விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்கள் இலட்சியத்துக்காக தங்களைத் தயாரித்துக் கொண்டார்கள்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிடம் ஒருமுறை கேட்டார்கள்உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ?” 

வேறொன்றுமில்லை, சிறப்பாகத் தயாராவதே எனது வெற்றியின் ரகசியம்என்று பளிச் எனப் பதிலளித்தார் அவர். 

தயாராதல் வெற்றியின் ரகசியம்

தயாராவோம் வெற்றிகள் அவசியம்.

தன்னம்பிக்கை : அடுத்தவன் என்ன சொல்வானோ ?

அடுத்தவன் என்ன நினைப்பானோஎன்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் அமைத்துக் கொள்பவர்களால் வெற்றி பெற முடியாது.  அடுத்தவர்கள் உங்களை விமர்சிக்கிறார்களென்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் உளவியலார்கள். ஒன்று அவர்களுக்குத் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கிறது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். 

ஒருவர் ஒரு பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை புதுசு புதுசாக ஐடியாக்கள் தயாராக்குவது. அவரும் உற்சாகமாக அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வேலையிலிருந்து அவரை கொஞ்ச நாளிலேயே துரத்தி விட்டார்கள். “உன்னோட ஐடியாக்களெல்லாம் சின்ன புள்ளத் தனமா இருக்குஎன்பது தான் அவர்கள் சொன்ன காரணம். 

அந்த நபர் அவர்களுடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. அந்த சின்ன புள்ளைத் தனத்தை வைத்தே மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அவர் தான் வால்ட் டிஸ்னி. மிக்கி மவுஸ்ஐத் தெரியாத குழந்தைகளும், பெரியவர்களும் இன்று இல்லை என்பதே நிலை ! சின்னப்புள்ளத் தனம் என விமர்சிக்கப்பட்டவர் வரலாற்றின் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அடுத்தவர்களுடைய விமர்சனத்தை தலையில் ஏற்றி தன்னுடைய தன்னம்பிக்கையை உடைத்திருந்தாரெனில் இன்று வால்ட் டிஸ்னி எனும் உலகப் பிரம்மாண்டம் இல்லாமலேயே போயிருக்கலாம்.

தண்ணி அடிக்கலேன்னா பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. தம் அடிக்கலேன்னா பசங்க நக்கல் அடிப்பாங்கஎன்பதற்காகவே அந்த கெட்ட பழக்கங்களில் விழுந்து விடும் இளைஞர்கள் எக்கச் சக்கம். அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்காக தீய வழியில் செல்வதை விட, தனக்காக நேர் வழியில் நடப்பது எவ்வளவோ மேல் அல்லவா ?

தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது மகுடி ஊதும் பாம்பாட்டிக்கு முன்னால் தலையாட்டும் பாம்பைப் போல இவர்கள் விமர்சனங்களுக்குத் தக்கபடி தலையாட்டுகிறார்கள். கடைசியில் பாம்பாட்டியின் பெட்டிக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள். வாழ்க்கை எனும் வசந்தத்துக்குள் உற்சாகமாய் உலவ இவர்களால் முடிவதில்லை. சுதந்திரச் சிறகுகளை பிறருக்காய் முறித்துக் கொண்டு வானத்தையே தொலைத்து விடுபவர்கள் இவர்கள்.

மைக்கேல் ஜோர்டன் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர். அவரைத் தெரியாத விளையாட்டு வீரர்கள் இருப்பார்களா ? கிரிக்கெட் உலகின் பிராட்மேன் போல கூடைப்பந்து உலகின் ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். அவர் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை கூடைப்பந்து அணியில் சேர்க்காமல் விரட்டி விட்டனர். சோகத்தில் வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அழுதார். ஆனாலும் தனது கனவை அவர் கலைத்து விடவில்லை. தன்னால் நன்றாக விளையாட முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விளையாடினார். சாதனைகளின் எல்லைகள் வரை சென்றார். இன்று அவருடைய நுணுக்கங்கள்  விளையாட்டு வீரர்களுக்குப் பாடமாக இருக்கிறது ! பார்வையாளர்களுக்குப் பிரமிப்பாய் இருக்கிறது !! காரணம் அவர் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை ! நத்தை ஓட்டுக்குள் தன்னுடைய திறமையை அடகு வைக்கவும் இல்லை.

“:ஐயோ இவன் ஒரு மக்குப் பையன். இவனுக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்க முடியாது. இப்படி ஒரு மக்குப் பையனை நான் பாத்ததேயில்லைஎனும் விமர்சனத்தை வாங்கியது யார் தெரியுமா ? தாமஸ் ஆல்வா எடிசன் ! “ஒழுங்கா காது கேக்காத இவனெல்லாம் என்னத்தை சாதிக்கப் போறான்என்று அவரைப் பற்றிப் பேசினார்கள். அவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. இன்று உலகிலேயே அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பவர் அவர் தான். 1093 பொருட்களுக்கான காப்புரிமை அவரிடம் இருக்கிறது. புகைப்படக் கருவி, மின்விளக்கு, வீடியோ கருவி என பல வியத்தகு விஷயங்களின் காரண கர்த்தா இவர் தான். இப்போது சொல்லுங்கள், அடுத்தவர்கள் சொல்வதற்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா ?

விமர்சனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று நம்மை ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க வைக்கும் விமர்சனங்கள். அவை நமக்கு தூண்டுதலாய் இருக்கும். இதைத் தருபவர்களெல்லாம் நமது நலம் விரும்பிகள். பெற்றோர், நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களெல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவற்றைக் கவனமுடன் கேட்டு நம்மை சீர் தூக்கிப் பார்ப்பது பயனளிக்கும். 

இன்னொரு வகை குதர்க்க விமர்சனங்கள். இவை பெரும்பாலும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களிடமிருந்தே வரும். அடுத்தவர்களை மட்டம் தட்டி நிம்மதி அடைவர்கள் இவர்கள். ஒருவகையில் தங்களுடைய இயலாமையை மறைக்க அடுத்தவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பவர்கள் இந்த வகை மனிதர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய விமர்சனங்களை அப்படியே அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ள சிறந்த வழி நகைச்சுவைதான் ! நகைச்சுவை உணர்வு இந்த நேரத்தில் உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அவமானப் படுத்துபவர்களுடைய நோக்கம் நாம் காயப்பட வேண்டும் என்பது தான். நாம் காயமடைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அர்த்தம். அதை விட்டு விட்டு நாம் கொஞ்சம் நகைச்சுவையாய் பதிலளித்தால் பல அவமானங்கள் அப்படியே அமுங்கிப் போய்விடும்.

என்னடி, இவ்ளோ குண்டாயிட்டேஎன யாராவது நக்கலடித்தால், “அப்படியா ? நல்ல வேளை சொன்னேடி. நான் என்னவோ சைஸ் சீரோ ரேஞ்சுக்கு ஒல்லியா இருக்கிறதா நெனச்சேன்என்று சிரித்துக் கொண்டே கடந்து போனால், இன்னொரு முறை அந்த நபர் அவமான வார்த்தைகளோடு வரமாட்டார். அப்படியே வந்தாலும் உங்களிடம் அடுத்த ஜோக் தயாராய் இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் !

விமர்சனங்களிலிருந்து எதையேனும் கற்றுக் கொள்ள முடிந்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்த வினாடியின் முடிவிலேயே அதை உடைத்து எறிந்து விட்டு புன்னகையுடன் நடையைக் கட்டுங்கள். 

நீங்களாகவே உங்களை செல்லாக்காசு, திறமை இல்லாதவன், உருப்படாதவன், அழகில்லாதவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களும் அப்படியே சொல்லும்போது சோர்ந்து விடுவீர்கள். மாறாக நீங்கள் உங்களை திறமைசாலியாக, ஸ்பெஷல் மனிதனாக, அழகானவனாக நினைத்துக் கொள்ளும் போது மற்றவர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்யும் போது அது உங்களைப் பாதிக்காது. 

ஒரு சிறுவன் இசை கற்றுக் கொள்ள ஆர்வமாய் வந்தான். கொஞ்ச நாட்கள் பயிற்றுவித்த ஆசிரியர் சொன்னார், “இசையில இவன் படு வேஸ்ட். இவனெல்லாம் இசையில எதையுமே கற்றுக் கொள்ள முடியாது !” அந்த சிறுவன் யார் தெரியுமா ? உலகின் மூலை முடுக்கெல்லாம் இசையால் பிரமிப்பூட்டிய பீத்தோவான். இசையில் அவர் எப்படி என்பதை உலகமே அறியும். இவன் லாயக்கில்லாதவன் என்று சொன்ன ஆசிரியரை யாரும் அறியமாட்டார்கள் என்பது தான் நிஜம்.

விமர்சனங்களை எடுத்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழி உண்டு. ஒரே விமர்சனம் பலரிடமிருந்து வந்தால் அதில் உண்மை இருக்கலாம் ! ஒரு நபரே அடிக்கடி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் அதில் பெரும்பாலும் உண்மை இருக்காது. அந்த நபரை நீங்கள் தவிர்ப்பதே நல்லது.

காயப்படுத்தும் கிண்டலும் கேலியும் பொறாமையின் வெளிப்பாடுகளே. பொறாமை தாழ்வு மனப்பான்மையின் பிள்ளை. தாழ்வு மனப்பான்மையோ தன்னம்பிக்கை இல்லாத மனிதனின் குணம். இப்படி சங்கிலித் தொடரைப் பிடித்துப் பார்க்கும் போது, கிண்டல், கேலி போன்றவற்றின் பின்னால் பதுங்கியிருப்பவன் தன்னம்பிக்கை இல்லாத மனிதனே என்பது எளிதில் புரியும். எனவே அவனுடைய வலையில் விழாமல் தண்ணீரைப் போல நழுவி விடுங்கள்.

விமர்சனங்களைப் புரிந்து கொள்ள ஒரு மூன்று நிலை சோதனையை நீங்கள் செய்யலாம். 

ஒன்று, யாரோ உங்களை எப்படியோ விமர்சித்திருந்தால், கண்களை மூடி அந்த விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக மனசுக்குள் ஓடவிடுங்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கண்டறியுங்கள். அந்த விமர்சனத்தின் வேர்கள் உங்களுக்குப் புரியவரும். ஒருவேளை அந்த விமர்சனம் உங்களுக்கு உங்களைப்பற்றிய சில புதையுண்ட உண்மைகளைக் கூட புரியவைக்கலாம்.

இரண்டு, விமர்சனம் சொன்ன நபரின் இடத்தில் நீங்கள் அமர்ந்து யோசியுங்கள். அந்த நபர் ஏன் இந்த விமர்சனத்தைச் சொன்னார் என்பதை நிதானமாய் யோசியுங்கள். உங்கள் மீதான அக்கறையா, கோபமா எது அவரை அந்த விமர்சனத்தைச் சொல்லத் தூண்டியது ? அந்த விமர்சனம் சொன்னதால் அவருக்கு என்ன லாபம் என யோசியுங்கள். பல புதிய விஷயங்கள் புரியக் கூடும். 

மூன்றாவது, ஒரு மூன்றாவது நபராய் நீங்கள் மாறி அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்கள் மீதான அந்த விமர்சனம் மூன்றாவது நபர்டைய பார்வையில் ஏற்புடையதா என்பதை அலசுங்கள்.  

கடைசியாக நீங்கள் மீண்டும் உங்கள் இடத்துக்கு வரும்போது அந்த விமர்சனத்தில் உண்மை உண்டா இல்லையா என்பது புரிந்திருக்கும். 

அதில் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்களில் உண்மை இல்லையேல் முழுமையாய்க் கை கழுவி விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுங்கள். அவர்களுடைய குற்றம் குறை பேச்சுகளுக்கு நீங்கள் வளைந்து கொடுத்தால், உங்களுடைய தன்னம்பிக்கை எனும் குதிரையின் கடிவாளத்தை அவன் கையில் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். சொந்த வீட்டை யாராவது வழிப்போக்கனுக்குக் கொடுப்பார்களா ?

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நிர்ணயிக்க வேண்டியது நீங்கள் தான். மற்றவர்கள் அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றி வசப்படும்.

நிறுத்த முடியுமா வருகிற விமர்சனம்அதில்

நிஜங்கள் குறைவு என்பதே நிதர்சனம்

தன்னம்பிக்கை : பலவீனங்களை பலங்களாக்குவோம்

எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம். பலவீனங்கள் இல்லாத மனிதன் இல்லை. ஆனல் பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் பலங்களை நோக்கிய படிக்கட்டுகள் எனும் உண்மை புரியும்.

உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்திடம் போய் ஆல்பம் போடுவதற்கான வாய்ப்பைக் கேட்டார்கள். பாட்டைக் கேட்ட நிறுவனத்தினர்பாட்டு பரவாயில்லை. ஆனா உங்க கிட்டார் சவுண்ட் மண்டையைப் பொளக்குது. அதனால இதை தேர்வு செய்ய முடியாதுஎன அனுப்பி வைத்தனர். இன்றைக்கு பீட்டில்ஸ் குழுவினரின் பலமாகக் கருதப்படுவதே அந்த கிட்டார் இசை தான் ! அந்த அதிரடிக்கும் சத்தத்துக்காகவே அவர்கள் உலகம் முழுவதும் பிரபலமானார்கள் ! அந்த கிடார் இசையை கழித்துப் பார்த்தால் பீட்டில்ஸ் இன்று இல்லை !

ஐயோ நாலு பேரு சொல்லிட்டாங்களேஇது ஒரு பெரிய குறை போல இருக்கு. இனிமே கிட்டார் இசையை கம்மியா வைச்சு மியூசிக் போடுவோம்என்று அவர்கள் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவர்களுக்கென ஒரு தனி அடையாளம் இல்லாமலேயே போயிருக்கும். எது பலவீனம் என்று மற்றவர்கள் நினைத்தார்களோ அதையே தங்களது பலம் என அவர்கள் நிரூபித்தார்கள் .!

நம்முடைய வாழ்க்கையிலும் பல விஷயங்களை நாம் பலவீனம் என நினைத்திருப்போம். ஆனால் அதே விஷயங்கள் தான் நமக்கு பலமான விஷயங்களாக மாறிவிடும். “சே என் பல்லு கொஞ்சம் அசிங்கமா இருக்குஎன புலம்பிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திடீரென வாய்ப்பு வரும்உங்க பல்லு ரொம்ப அழகா இருக்கு. மாடலா நடிக்க முடியுமா ?”. அல்லது காதலன் கசிந்துருகி சொல்வான், “உன் பல்லு தான் எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்”. 

எனக்கு பலவீனம் இருக்கிறது என புலம்புவதால் உண்மையில் எதையுமே சாதிக்க முடியாது. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்நூல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்அதிகம் விற்பனையாகும்புத்தகமாக இருந்தது. தமிழில் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என வெளியான இந்த நூல் இன்றும் உலகின் பெஸ்ட் நூல் என பாராட்டப்படுகிறது. 

இவர் உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருப்பவர். வீல் சேரில் தான் வாழ்க்கை. உடல் பாகங்கள் ஏதும் அசையாது. பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும் எனும் நிலை ! ஆனாலும் இவருடைய சாதனைகளின் தாகம் மட்டும் குறையவே இல்லை. இந்த நோய் இருப்பதனால் முழு நேரத்தையும் சிந்தனையிலும், வாசிப்பிலும் செலவிடுகிறேன் என்கிறார் இவர் தன்னம்பிக்கையாக. பலவீனத்தை பலமாய்ப் பார்க்க மனம் பலமாய் இருக்க வேண்டும். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்டம் அந்த மனம் இருக்கிறது. அதனால் தான் அவர் இன்னும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார்.

ஒருவருடைய பலம் இன்னொருவருக்கு பலவீனமாகும். ஒருவருடைய பலவீனம் இன்னொருவருக்கு பலமாய் இருக்கும். புல்லாங்குழலை எடுத்துக் கொள்ளுங்கள். துளைகள் இல்லையேல் அதில் இசை இல்லை. மிருதங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் துளைகள் இருந்தால் அதில் இசை இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம், அடுத்தவருடன் ஒப்பிட்டு நம்முடைய பலங்களை பலவீனமாய்க் கருதாமல் இருக்க வேண்டியது முக்கியம்.

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்

குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். 

பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்

குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனேஎன்றான்

புன்னகைத்தபடியே குரு சொன்னார்உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு.

பல வேளைகளில் நம்மால் எதைச் செய்ய முடியாது என்பதைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் அது சமூகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களுடனான ஒப்பீடாகவே இருக்கும். பிறர் பலவீனமாய் நினைக்கும் விஷயம் தான் நம்மை உலகுக்கே கொண்டு போய் சேர்க்கும் பலமான விஷயமாய் இருக்கும்.

இது என்னோட பலவீனம் என நாம் நம்பும் வரை அது நம்முடைய பலவீனமாய் தான் இருக்கும். இது பலவீனமல்ல பலம் என நாம் நம்பும் வினாடியில் நமது பலவீனமே நமது மிகப்பெரிய பலமாய் மாறிவிடும். 

பலவீனம் இல்லாமல் வாழ்வில்லை

பலமாய் மாறிடில் தாழ்வில்லை.

 0 

தன்னம்பிக்கை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.

எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம். 

இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.

நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.

ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு பெண் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மாஎன்று கூறி திருப்பி அனுப்பினார். பெண்கள் கேட்க விரும்பாத ஒரு அவமான வார்த்தைநீ அழகா இல்லைஎன்பது தான். அந்தப் பெண்ணோ அந்த அவமானத்தை போர்த்துக் கொண்டு சோர்ந்து போய் படுத்து விடவில்லை. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார்.

ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் மர்லின் மன்றோ. இன்னிக்கு கூட நம்ம சினிமா பாடலாரிசியர்கள்நீ மர்லின் மன்றோ குளோனிங்காஎன அவரை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே !

அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.

பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?

பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.

தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள். 

சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்குஎன பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான்சிக்கன் சூப் ஃபார் சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.

140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.

ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைஎன்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்குஎன்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. 

யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காதுஎன்றாராம். 

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார். 

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.

வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்

வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

Digital Addiction : வினையாகும் விளையாட்டு

Image result for digital addiction

கடந்த வாரம் தனது ஆறு மாதக் கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்திருந்தார் உறவினர் ஒருவர். கொஞ்ச நேரத்தில் அம்மாவின் கையிலிருந்த குழந்தை அழத் துவங்கியது. உடனே குழந்தையின் அப்பா தனது ஸ்மார்ட்போனை ஆன் பண்ணிக் குழந்தையின் கையில் கொடுத்தார். சட்டென அழுகையை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்தது குழந்தை.

சமீபத்தில் இரண்டு செய்திகளைப் படித்தேன். பப்ஜி விளையாட்டில் ஆர்வமாயிருந்தான் ஒரு பதின் வயது சிறுவன். அவனைப் பெற்றோர் கண்டித்தார்கள் என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு செய்தியில், தொடர்ந்து பப்ஜி விளையாடிக்கொண்டே இருந்த இளைஞனை பெற்றோர் கண்டித்தார்கள். விளைவு தனது தந்தையையே கொலை செய்து விட்டான் மகன்.

இரண்டாவது பத்தியில் எழுகின்ற அதிர்ச்சிகளுக்கான பிள்ளையார் சுழியை முதல் பத்தியில் எழுதப்பட்டிருக்கின்ற நிகழ்வு இடுகிறது. மழலைப் பருவத்தில் விதைக்கின்ற தவறுகள் பதின் வயதுகளில் விளையத் துவங்குகின்றன. கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என படித்த காலங்கள் எல்லாம் பழசாகிப் போய்விட்டன. இப்போது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஸ்மார்ட்போன்கள் தான்.

ஜவுளி கடைகளில் பெற்றோர் துணி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஓரமாய் இருக்கைகளில் அமர்ந்து பிள்ளைகள் போனில் கேம் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். துணி எடுக்கும் பெற்றோருக்கு தொந்தரவு இருக்கக் கூடாதாம். இரயில் பயணங்களில் பிள்ளைகள் கைகளில் ஸ்மார்ட்போனோடு இருக்கைகளில் ஒட்டவைக்கப்பட்டிருப்பார்கள். அங்குமிங்கும் ஓடிட்டு திரியக் கூடாதாம்.

“பையன் அழுவான், கொஞ்ச நேரம் விளையாடட்டும்”. ” போனை குடுக்கலேன்ன ஒரு வேலை செய்ய முடியாது.. சத்தம் போட்டுட்டே இருப்பான்”. “அவன் ரொம்ப சேட்டை, போனை குடுங்க அவன் ஏதாச்சும் பண்ணிட்டு இருக்கட்டும்” என்பன போன்ற சிந்தனைகள் தான் பிற்காலத்தில் பிள்ளைகளை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக்குகிறது. முதலில் பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கும் சங்கிலியாய் இருக்கும் போன்கள், பின்னர் அவர்களுடைய வாழ்வின் குரல்வளையை நெரிக்கும் தூக்குக் கயிறுகளாய் மாறிவிடுகின்றன.

பிள்ளைங்க கொஞ்ச நேரம் விளையாடினா என்ன தப்பு ? எனும் அலட்சியப் போக்குகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளை விளையாட்டுகளுக்கு அடிமையாக்குகின்றன. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘கம்ப்யூட்டர் விளையாட்டு அடிமைத்தனம்’ என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் இன்று அது சீரியஸ் விஷயமாக மாறியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக நலவாழ்வு நிறுவனம் ( ) தனது பட்டியலில் விளையாட்டு அடிமைத்தனம் (கேமிங் அடிக்ஷன்) என்பதையும் புதிதாகச் சேர்த்திருக்கிறது. சர்வதேச அளவில் விளையாட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதே இதன் காரணம். இப்போது பல நாடுகள் இதை “மென்டல் டிஸார்டர்” அதாவது மனக் குறைபாடு என்று ஒத்துக் கொண்டு அதற்கான சிகிச்சைகளையும் அளிக்கின்றன.

எனவே இது விளையாட்டு சமாச்சாரமல்ல, சீரியஸ் சமாச்சாரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும். பிள்ளைகளுக்கு கேம்ஸ் அடிக்சன் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும், அதிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டுவருவதும் அவசியம்.

முதலில் அதை நம்மிடமிருந்து துவங்க வேண்டும். நமது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் குழந்தைகளோடு இருக்கும் போதாவது செல்போன்களை மூட்டை கட்டி ஓரமாய் வைத்து விட வேண்டும். பெற்றோரின் நடவடிக்கைகளைப் பார்த்தே பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்பதை உணரவேண்டும்.

பிள்ளைகள் வீடியோ விளையாட்டுகளுக்கு அடிமையாய் இருக்கிறார்களா என்பதைச் சோதித்தறிய சில வழிகள் உண்டு. கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

1. விளையாட்டைப்பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்ற விஷயங்களைப் பேசும்போது கூட விளையாட்டு நினைவாகவே இருப்பது.

2. விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லையேல் வருந்துவது. எரிச்சல் படுவது. கோபப்படுவது. எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் தீவிரமாய்க் காட்டுவது.

3. விளையாட ஆரம்பித்தால் நிறுத்த முடியாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது. இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என நீடிப்பது.

4. முன்பு ஈடுபட்டிருந்த மற்ற செயல்களிலெல்லாம் ஆர்வம் குறைவது. அல்லது வேறெதிலும் ஆர்வமே இல்லாமல் போவது.

5. படிப்பில் ஆர்வம் குறைவது. கவனம் செலுத்த முடியாமல் போவது. கவனச் சிதைவு ஏற்படுவது.

6. மற்ற விஷயங்களிலுள்ள பாதிப்பு எதையுமே கருத்தில் கொள்ளாமல் விளையாட்டின் மீது மீண்டும் மீண்டும் வேட்கை கொள்வது.

7. விளையாடுவதற்காக பொய் சொல்வது. எப்படியாவது விளையாட விரும்புவது. முக்கியமான தேர்வு நேரங்களில் கூட விளையாட விரும்புவது.

8. எல்லாவற்றையும் விட முதன்மையானதாக விளையாட்டு மாறிப் போவது. விளையாட்டில் மட்டுமே மன திருப்தி கிடைப்பது.

9. பிறரோடு உள்ள உறவுகள் குறைந்து குறைந்து, டிஜிடல் உறவு அதிகரிப்பது. மற்ற நேரங்களில் அமைதியாய் இருக்க நினைப்பது. குணாதிசயங்களில் மாறுதல்கள் நிகழ்வது.

10. உடல் எடை குறைதல், தூக்கம் தடுமாறுதல், சாப்பாடு குறைவது, மயக்கம் வருவது போன்ற உடல் பாதிப்புகள்.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தை விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கிறது என்று பொருள். அந்த ஆர்வம் வளர்ந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர உதவுங்கள்.

அதற்காக உடனே ஓடிப் போய் எல்லா டிஜிடல் கருவிகளையும் உடைத்து விட்டு, “சுபம்” போட நினைக்காதீர்கள். அது எதிர் விளைவுகளைக் கொண்டு வரும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

1. எதுவும் அளவோடு இருப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு விளையாட குறிப்பிட்ட நேரம் கொடுங்கள். உதாரணமாக, வார இறுதிகளில் தினம் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் கொடுக்கலாம். எவ்வளவு நேரம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் விளையாடும் நேரத்தை நாள்காட்டியில் குறித்து வைக்க வேண்டும்.

2. இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்கவே கூடாது. அதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

3. கணினியையோ, விளையாட்டு கருவியையோ, மொபைலையோ விளையாட அனுமதித்தால் அது பெற்றோரின் முன்னால், பொது இடத்தில் இருக்க வேண்டும். தனியறைகளில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.டிஜிடல் நேரத்தைக் குறைத்து பிள்ளைகளை வேறு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும். வெளியே அழைத்துச் செல்வது. பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்றவற்றின் மூலம் டிஜிடல் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

5. வீட்டுப்பாடம், படிப்பு போன்றவற்றை முதன்மையாய் வைத்திருப்பது. அதை எல்லாம் முடித்த பின்பே விளையாட அனுமதிப்பது மிக முக்கியம். விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். மீறினால் டிஜிடல் டைம் குறையும் என சொல்லுங்கள்.

6. டிஜிடல் விளையாட்டுகளினால் நிகழ்கின்ற உடல், உளவியல் பிரச்சினைகளை பிள்ளைகளிடமும், அவர்களுடைய நண்பர்களிடமும் வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவது. அதை தகவல் பகிர்தலாகவோ, ஒரு நண்பனின் அறிவுரை போலவோ சொல்வது பயனளிக்கும்.

7. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். உடல் உற்சாகமாக இருக்கும் போது டிஜிடல் ஆர்வம் குறையத் துவங்கும். உடலின் சோர்வும், உடலின் ஆக்சிஜன் குறைபாடும் டிஜிடல் ஆர்வத்தை அதிகரிக்கும்.

8. குடும்ப நேரம், நண்பர்களின் நேரம், உறவினர்களின் நேரம் இவற்றை அதிகரிக்க வேண்டும். உறவுகளைக் கட்டியெழுப்பும் போது மாற்றங்கள் உருவாகும்.

9. ‘இந்த ஒரு கேமையும் முடிச்சுட்டு வரேன்’ போன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விளையாட்டை முடித்து விட்டு, அல்லது ‘சேமித்து’ விட்டு வெளிவர குழந்தைகளைப் பழக்குங்கள். ‘இன்னும் பத்து நிமிசம் தான் இருக்கு… கேமை சேவ் பண்ணிக்கோ’ என அன்பாய் அறிவுறுத்து அவர்களை மெல்ல மெல்ல பழக்குங்கள்.

10. தொடர் விளையாட்டுகள், நண்பர்களோடு ஆன்லைனில் இணைந்து விளையாடுவது, அடிமைத்தனத்துக்கு மிக எளிதில் கூட்டிச் செல்லும் விளையாட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வேறு விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விளையாடச் சொல்லுங்கள்.

டிஜிடல் விளையாட்டுக்கு அடிமையாகிப் போன சிறுவர்களை மீட்பது எளிதான செயல் அல்ல. ஆனால் மிகவும் தேவையான செயல். மது, போதை, புகை போன்ற அடிமைத்தனங்களைப் போலவே வலிமையானது டிஜிடல் அடிமைத்தனம். ஒருவேளை உங்களால் உங்கள் குழந்தையை வெளிக்கொணர முடியவில்லையேல் உளவியலார்களின் ஆலோசனையை நாடுங்கள். சிறுவர் கவுன்சிலிங் பயனளிக்கும்.

ஸ்மார்ட்போன்களும், டிஜிடல் கருவிகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிச்சயம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவையே. தடுமாறாமல் இருப்போம், தலைமுறையைக் காப்போம்.

*

சேவியர்

தன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை

ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த மருத்துவமனை வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு ஒரே சந்தோசம். கொஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982ம் ஆண்டு டிசம்பர் 4 பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.

ஐயோ இவன் என்ன செய்வான் ? இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். குழந்தை சிறுவனானான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன. எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா ? “கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே என்பது தான்”.

முடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும். ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன. 

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர்லைஃப் வித்தவுட் லிம்ப்எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

கணினி மென்பொருள் போன்ற நிறுவனங்களில் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் தடுமாறி கீழே விழுந்தால் கைகளை ஊன்றி எழுவோம். அல்லது கால்களைக் கொண்டு எழுவோம். காலும் கையும் இல்லாத அவர் விழுந்து விட்டு எழும் காட்சியை வீடியோவில் பார்க்கும் போது தன் மேல் குறையிருக்கிறது என்று நினைக்கும் எல்லோருமே அந்த நினைப்பை மாற்றிக் கொள்வது உறுதி !

தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ ? இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ ? என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம். 

நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது ? “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும்  இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “  என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். 

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

தான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்என்பதுதான் உளவியலின் பால பாடம்.

ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடையபேரடைஸ் லாஸ்ட்எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை தெரியாது என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் ஊற்றி கொடுத்தால், அடடா பாதி காலியா இருக்கே என்று சொல்வது சோர்ந்தவர்களின் சிந்தனை. ஆஹா, பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வது தான் நிக் போன்றவர்களின் சிந்தனை. எந்தக் குறை உடலில் இருந்தாலும் மனம் வலுவாய் இருந்தால் சாதிப்பதற்குத் தடை ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா ? செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமாஎன்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

எது இல்லாமலும் ஒரு மனிதனால் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் எனும் வேகமும், சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதுமானது. 

1880ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஆர்தர்கேட் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அழகான குழந்தை ஒன்றரை வயது வரை வெகு சாதாரண குழந்தையாய் தான் இருந்தது. திடீரென வந்த ஒரு நோய் குழந்தையின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. பார்வை போய்விட்டது. கேட்கும் திறனும் போய்விட்டது. பார்க்காமல், கேட்காமல் இருந்த அந்தக் குழந்தையை எப்படி வளர்த்துவதென திகைத்தனர் பெற்றோர்.

படிக்க வைப்பது எப்படி ? பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி ? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனி சுலிவன் எனும் பெண் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிந்தார். எப்படி ? ஒரு கையில் பொம்மையை வைப்பார், மறு கையில் பொம்மை என ஆங்கிலத்தில் என எழுதுவார். ஆனால் குழந்தையால் ஒரு கையில் இருக்கும் பொருளுக்கான வார்த்தை தான் மறுகையில் எழுதப்படுவது என்பது மட்டும் புரியவேயில்லை. ஒரு நாள் ஒருகையில் குளிர்ந்த நீரை திறந்து விட்டுவிட்டு மறுகையில்வாட்டர்என எழுதியபோது தான் குழந்தைக்கு பளிச் என மனசுக்குள் பல்ப் எரிந்திருக்கிறது. பின் அசுர வேகத்தில் வார்த்தைகள் கற்பிக்கப்பட்டன.

இவளால் என்ன செய்ய முடியும் என பரிதாபமாய்ப் பார்க்கப்பட்ட அந்த பெண் உலகையே பிரமிக்க வைத்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார். உலகிலேயே கேட்கும் திறன் மற்றும் பார்வை இரண்டும் இல்லாமல் பட்டம் பெற்ற முதல் நபர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் முன்னேற்றக் குழுக்கள் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினரானார். மிகச் சிறந்த பேச்சாளராகவும், அசத்தலான எழுத்தாளராகவும் பரிமளித்தார். பன்னிரண்டு நூல்கள், பல நூறு கட்டுரைகள் என அவருடைய எழுத்துப்பணி பிரமிப்பூட்டுகிறது. அமெரிக்க அரசு சிறப்பு நாணயம் வெளியிடுமளவுக்கு பெருமையடைந்த அந்தப் பெண்மணி தான் ஹெலன் கெல்லர்.

நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது. நமது உடல் தான் நமது மனத்தைத் தூக்கிச் சுமக்கிறது என நாம் தவறாக நினைத்து விடுகிறோம். இல்லை ! நமது மனம் தான் நம்மை அதன் விருப்பத்துக்கு ஏற்ப அழைத்துச் செல்கிறது. 

உறுதியான மனமே சாதனையின் ஆதாரம்.

அதுமட்டும் இல்லையேல் வாழ்வே சேதாரம்.

Article : உனக்கு நீயே நீதிபதி.

Image result for man thinking

சொர்க்கத்தில் நுழைவதற்காக கடவுளின் முன்னால் எல்லோரும் வந்து நிற்கின்றனர். அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது. “சொர்க்கத்தில் உள்ள சட்டதிட்டங்களில் ஒரு சின்ன மாறுதல். அதன் படி பாலியல் குற்றம் என்பது குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. பூமியில் பாலியல் குற்றம் செய்தவர்களும் சுவர்க்கத்தில் நுழையலாம்”

அறிவிப்பைக் கேட்டவுடன் கூட்டத்தில் நின்றிருந்தவர்களில் பாதி பேர் , “அட… சே.. நல்ல வாய்ப்பை வீணடிச்சுட்டோமே” என மனதில் நினைத்தார்கள். உடனே அடுத்த அறிவிப்பு வந்தது.

“வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என நினைத்தவர்களெல்லாம் நரகத்துக்கும், மற்றவர்களெல்லாம் சொர்க்கத்துக்கும் வரலாம் “

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும் இது சொல்ல வருகின்ற அடிப்படைக் கருத்து என்னவென்றால், “நமது மனதை நாமே வகைப்படுத்தாவிடில் அதனால் பயனில்லை” என்பது தான். வேர்களைக் கவனிக்காவிடில் கனிகள் சுவையாக இருக்காது என்பது தான்.

வெளிப்புறமான சட்டங்களோ, திட்டங்களோ, கட்டாயங்களோ, கண்டிப்புகளோ கொண்டு வருகின்ற மாற்றமானது உள்ளார்ந்த மாற்றத்தை உருவாக்குவதில்லை. மாற்றம் என்பது உள்ளில் உருவாகி வெளிப்படும் போது தான் அது மிகுந்த கனிகொடுக்கின்ற வாழ்க்கையை நமக்குத் தருகிறது.

நமக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்கக்கூடியவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒன்று கடவுள், இன்னொன்று நாம். காரணம், பிறர் நம்மை கணிப்பது நமது வெளிப்படையான செயல்களை வைத்துத் தான். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும் நமது உள்ளார்ந்த சிந்தனைகள்.

ஒருவரை நோக்கிப் புரிகின்ற புன்னகையை மொழிபெயர்த்தால் என்ன கிடைக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும். அதன் பின்னால் விகாரத்தின் கோரப் பற்கள் மறைந்திருக்கலாம். எரிச்சலின் எரிதழல் ஒளிந்திருக்கலாம். வெறுப்பின் குத்தீட்டிகள் குனிந்திருக்கலாம். பொறாமையின் புலி நகங்கள் புதைந்திருக்கலாம். அது நமக்கு மட்டுமே தெரியும். ஒரு புன்னகை புனிதமானது, அதன் பின்னணி புனிதமா என்பதை யாரும் அறிவதில்லை.

அல்லது நாம் ஒருவருக்கு உதவி செய்ய முன்வரலாம். அதன் பின்னால் மனிதத்தின் இழைகள் இருப்பதாகவே சமூகம் கருதிக் கொள்ளும். ஒருவேளை அதன் பின் நமது பெருமையின் வேர்கள் பற்றியிருக்கலாம். சுயநலத்தின் சன்னல்கள் திறந்திருக்கலாம். அல்லது கட்டாயத்தின் சட்டங்கள் கூட மறைந்திருக்கலாம். அதை அறிவது நாம் மட்டுமே.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நம்மைப் பற்றிய தெளிவான குற்றப்பத்திரிகையை எழுத நம்மால் மட்டுமே முடியும். தெளிவான குற்றப்பத்திரிகைகளே நமது வாழ்வில் இருக்கின்ற குற்றங்களைக் குறித்த புரிதல்களை நமக்குத் தரும். குற்றங்கள் குறித்த தெளிவே அதை விலக்க வேண்டும் எனும் உந்துதலைத் தரும். அந்த உந்துதலே புனிதத்தை நோக்கிய நமது பயணத்தின் அடிப்படை விஷயம்.

தவறு செய்யவே வாய்ப்பில்லாத ஒரு இடத்தில் நேர்மையாளனாய் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தவறு செய்ய அத்தனை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்ற ஒரு இடத்தில் நேர்மையாளராய் இருக்கிறீர்களா என்பதில் தான் நமது வாழ்க்கை அளவிடப்படுகிறது.

அது அலுவலக பேனாவை சொந்த வேலைக்காகப் பயன்படுத்துவதாய் இருந்தாலும் சரி, நேசித்த ஒருவரை உள்ளூர வெறுப்பதானாலும் சரி. சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ நமது மனமே நம்மை இயக்குகிறது.

மனம் எனும் குதிரைக்கு இடுகின்ற கடிவாளங்கள் வாழ்க்கை எனும் பயணத்தில் வெளிப்படுகின்றன. அந்த கடிவாளங்கள் நமது இயல்பிலிருந்து வெளிப்படும் போது வாழ்க்கை இனிமையாகிறது. அந்த கடிவாளங்கள் கட்டாயத்தின் கட்டுகளாகும் போது வாழ்க்கை வலிமிகுந்ததாகிறது.

நமது வாழ்க்கைக்கு நாமே நீதிபதியாக இருக்க வேண்டும். நம்மை வனையும் குயவனாக நாமே இருக்க வேண்டும். நம்மைச் செதுக்கும் சிற்பியாக நாமே இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை அர்த்தமுடையதாகும்.

நமக்கு நாமே நீதிபதியாக இருக்கும்போது, சட்டங்கள் இல்லாவிட்டாலும் நேர்மையாக வாழவேண்டுமெனும் உந்துதல் இருக்கும். யாரும் பார்க்காவிட்டாலும் நம்மை நாமே பார்த்துக் கொள்கிறோம் எனும் எச்சரிக்கை உணர்வு இருக்கும். நமது தவறுகளுக்கான தண்டனையை நாமே பெற்றுக் கொள்ளவேண்டும் எனும் தார்மீக சிந்தனை இருக்கும்.

நமக்கு நாமே நீதிபதியாகும் போது, பிறருக்கு எதிராக நாம் தீர்ப்புகளை எழுத மாட்டோம். அவர்களுக்கு எதிராக அவர்களே வாதிடுவார்கள், தீர்ப்பிடுவார்கள். பிறருடைய வாழ்க்கையில் தேவையற்ற தலையீடுகளைச் செய்யாமல் இருக்கும் போது சமூக பிணைப்பு வலுவடையும்.

ஒவ்வொரு மரமும் செழிப்பாக இருக்கும்போது கானகம் செழிப்பாக இருக்கும். ஒவ்வொரு துளியும் புனிதமாக இருக்கும் போது நதியின் மொத்தமும் தூய்மையாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன்னைத் தானே செதுக்கும் போது சமூகம் வலிமையாய் இருக்கும்.

நமது பலவீனங்களை மன்னிக்கும் நீதிபதியாக நாம் மாறும் போது, பலவீனங்களை பலங்களாய் மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். நமது பலங்களை நாமே பாராட்டிக் கொள்ளும் போது நமது பலங்களை பயன்களாக மாற்றிக் கொள்ளும் உறுதி உருவாகும். நமது குறைகளை நாமே செதுக்கும் போது நமது வாழ்க்கை அர்த்தம் பெறும்.

ஆனால் ஒன்று, நமக்கு நாமே நீதிபதியாய் மாறுவது, நமது தவறுகளுக்கு அனுமதி வழங்க அல்ல, நமது பிழைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அல்ல, நமது குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்க அல்ல. நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து சரிசெய்ய.

ஒவ்வொரு நாளும் நமது செயல்களை நமக்கு முன்னால் கொண்டு நிறுத்தி வாதியாகவும், பிரதிவாதியாகவும் நாமே வாதிடுவோம். அந்த வாதம் நேர்மையாய் இருக்கட்டும். அப்போது நமது பிழைகளும், நமது நல்ல செயல்களும் நமக்கே புரியவரும். அதற்கான தீர்ப்பை நாமே எழுதுவோம்.

நம்மை நாமே சரியாகத் தீர்ப்பிடும்போது சமூகம் நம்மை தவறாகத் தீர்ப்பிடுவதில்லை. நம்மை நாமே திருத்திக் கொள்ளும் போது சமூகம் நம்மை உடைப்பதில்லை. அந்த பணியை நாம் கைக்கொள்ள வேண்டும்.

நமக்கு நாமே நீதிபதியானால்
பிறருக்கு நாம் குற்றவாளியாவதில்லை.

*