கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம்.
சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும் ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது துயரத்தின் உச்சம்.
பொம்மைக்காகவோ, சாக்லெட்டுக்காகவோ சின்ன வயதில் போடும் சண்டைகளின் நீளம் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ தான். வயது ஏற ஏற சண்டைகளின் நீளமும் வளர்ந்து கொண்டே போகிறது. பெரியவர்களானபின் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ பிணக்கு நீடிக்கிறது. சில சமயங்களில் வருடங்களையும் விழுங்கி இது நிரந்தரப் பிரிவாய் நிலைத்தும் விடுகிறது.
அரையடி நிலத்துக்காக அண்ணனை வெட்டும் தம்பி. சொத்துக்காக தம்பியின் குடும்பத்தையே காலி பண்ணும் அண்ணன் என தினசரிகள் குடும்ப உறவின் பலவீனங்களை சோகமாய் எழுதிச் செல்கின்றன. குடும்ப உறவுகளெல்லாம் பின் வரிசைக்குத் தள்ளப்பட வெறும் பொருளாதார வசீகரங்கள் வாழ்வின் முன் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன
சகோதர பாசம் எப்படி இருக்கிறது என இங்கிலாந்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதில் தெரிய வந்தது இது தான். மூன்றில் ஒரு பங்கு சகோதரர்கள் தங்கள் கல்லூரி காலத்திலும் நெருங்கிய ஸ்னேகமாய் இருக்கிறார்கள். இன்னொரு 33 சதவீதம் பேர் “ரொம்ப நெருக்கமும் இல்லை, ரொம்பத் தூரமும் இல்லை” ரேஞ்சுக்கு இருப்பவர்கள். மிச்சமுள்ளவர்களோ தொடர்பில்லாமல் இருப்பவர்கள் அல்லது எதிரிபோலவே முறைத்துக் கொள்பவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சுமார் 70 சதவீதம் பேர் ஆழமான சகோதர உறவு இல்லாமல் தான் இருக்கிறார்களாம் !
குடும்பம் மனிதனின் முதல் தேவை. சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர் எனும் உறவுகள் அவர்களுடைய வேர்களைப் போன்றவர்கள். சமூகத்தில் கிளை பரப்பும் மரம் பூக்களையும், கனிகளையும் கிளைகளில் தாங்குகிறது. பிறருடைய பார்வைக்குத் தெரிபவை இந்த பூக்களும் கனிகளும் தான். ஆனால் வேர்களின் பலத்தைப் பொறுத்தே கிளைகளின் வசீகரம் இருக்கும். வெற்றிகளின் பச்சையத்தைத் தாவரங்கள் தயாரிக்க வேர்கள் மண்ணில் இறுக்கமாக இருக்க வேண்டும். தண்ணீரை அவை இலைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
அத்தகைய சகோதர, சகோதரிகள் அமைந்தால் வாழ்க்கை சுவர்க்கமாகும். அவர்களைத் தோல்விகள் அச்சுறுத்துவதில்லை. அவர்கள் தங்களுடைய இளைப்பாறுதலை சகோதரர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இங்கே தற்கொலைகள் தலை தூக்குவதில்லை.
சகோதரர்களிடையே ஆழமான அன்புறவைக் கட்டியெழுப்புவதன் முதல் பங்கு பெற்றோரைச் சார்கிறது. சின்ன வயதில் குழந்தைகளைச் சமமாய்ப் பாவிப்பதும், பகிர்தல் மனப்பான்மையைக் கற்றுக் கொடுப்பதும், தவறுகளைச் சுட்டி காட்டுவதுமாய் நல்ல பெற்றோர் நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்புவார்கள். அந்த குடும்பம் சகோதர பாசத்தில் வலுப்படும்.
சின்ன வயதிலேயே குழந்தைகளிடையே வேறுபாடு காட்டி வளர்க்கும் பெற்றோர் தங்களை அறியாமலேயே தவறிழைக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் அவர்களிடையே அந்த வெறுப்புணர்வு பெரிதாகிறது. “நான் தான் பெரியவன்” என்றோ, “நானும் பெரியவன் தான்” என்றோ ஒருவருக்கொருவர் முறுக்கிக் கொள்ள அடிப்படை குடும்ப பந்தம் உடைந்து போய்விடுகிறது.
குழந்தைகளாக இருக்கும் போதே வாழ்வின் மதிப்பீடுகள், குடும்ப உறவுகள், அன்பு போன்றவற்றின் தேவையைப் போதிக்க வேண்டும். அத்தகைய செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். நாம் பெரும்பாலும் குழந்தைகளைப் பாராட்டுவது அவர்கள் தேர்வில் சாதிக்கும்போதோ, அல்லது போட்டிகளில் வெல்லும் போதோ தான். அது தவறு. குழந்தைகள் சகோதர பாசத்துடன் இருப்பதையோ, பகிர்ந்தலில் மிளிர்தலையோ, அன்புச் செயல்கள் செய்வதையோ பாராட்டுங்கள். ஊக்கப்படுத்துங்கள். அவர்களுடைய ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அது உதவும்.
கணவன் மனைவியரிடையே உண்மையான அன்பும் ஆழமான குடும்ப உறவும் இருந்தால் குழந்தைகளிடமும் அந்த அன்பு இருக்கும் என்கின்றனர் உளவியலார்கள். பெற்றோரிடையே சண்டை, விவாகரத்து போன்றவை எழும்போது குழந்தைகள் தங்களுக்குள்ளே ஆழமான அன்பை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. சகோதரர்களிடையே அன்பாய் இருக்க முடியாத குழந்தைகள் பல வேளைகளில் பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என தொடரும் இடங்களில் பிறருடனான நட்புறவில் தடுமாறிவிடுகிறார்கள்.
சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அவை அதிக நேரம் தொடராமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். “விட்டுக் கொடுத்தலைக்” கற்றுக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். மகிழ்ச்சி என்பது பெற்றுக் கொள்வதிலல்ல, பிறருக்குக் கொடுப்பதில் என்பதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டும்.
சகோதரர்களிடையே ஆழமான அன்பு இருப்பது உடலுக்கும் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.” ஆழமான சகோதர உறவு இருந்தால் முதுமையில் உளவியல் பாதிப்புகள் ஏற்படாது” என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக அறுபது வயதைத் தாண்டியவர்கள் அமைதியான முதுமையை அனுபவிக்க அவர்களுடைய இளம் வயதில் ஆரோக்கியமான சகோதர உறவு இருந்தால் போதும் என்கிறது இந்த ஆய்வு.
பெய்லார் பல்கலைக்கழகத்தின் மார்க் மார்மன் என்பவர் சகோதரத்துவம் சார்பான ஆராய்சிகளை மேற்கொள்பவர். “மன அழுத்தமற்ற வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான இதயத்துக்கும் ஆழமான சகோதர பந்தம் அவசியமானது” என்கிறார் இவர்.
உரையாடல்கள் சகோதரர்களிடையே அன்பையும் நெருக்கத்தையும் காப்பாற்றும். இன்றைய தகவல் யுகம் நமக்கு எப்போதும் பிறருடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பைத் தருகிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நண்பர்களுடனோ, காதலருடனோ மணிக்கணக்கில் மெய் மறந்து பேசும் நாம் பல வேளைகளில் ஒரு போன் போட்டு சகோதரனை நலம் விசாரிக்க மறந்து போய்விடுகிறோம்.
நண்பர்களுடன் மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகும் நாம் சகோதரனுடனான சண்டையை ஒரு மன்னிப்பின் மூலம் தீர்க்க மறுக்கிறோம் என்பதே உண்மை. நமது இதயத்தின் ஆழத்தில் வேர்விட்ட சகோதர பாசம் எந்த நட்பினாலும் நிரப்பி விட முடியாதது. பல ஆண்டுகளாக சண்டையில் இருக்கும் சகோதரனின் வீட்டுக் கதவை ஒரு முறை அன்பினால் தட்டிப் பாருங்கள். நேசத்தின் நீரூற்று அங்கே புறப்படத் தயாராக இருக்கும்.
குடும்ப உறவுகள் உங்களுக்கான வேடந்தாங்கல் போல. மகிழ்வு வரும்போது குடும்பம் அந்த மகிழ்ச்சியை பலமடங்காக்கி உங்கள் சிறகுகளை உயரப் பறக்க வைக்கிறது. சோகம் வரும்போது குடும்பம் அதைத் தனது தோள்களில் ஏந்தி உங்கள் கால்களை இளைப்பாற விடுகிறது.
ஆத்மார்த்தமான குடும்ப உறவும், அன்பும் இருக்கின்ற வாழ்க்கையில் எது இல்லாவிட்டாலும் ஆனந்தம் நிலை பெறும். குடும்ப அன்பு பலவீனமானால் வேறு என்ன இருந்தாலும் ஓட்டை விழுந்த படகாகவோ, வேர்கள் வெட்டப்பட்ட மரமாகவோ அழிவை நோக்கியே வாழ்க்கை செல்லும்.
அன்பான சகோதர, சகோதரிகளைப் பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கை மிக அதிகமாக இருக்கும். வேலையிலோ, கலைகளிலோ அவர்கள் சாதிக்கும் உயரம் அதிகமாக இருக்கும். வலுவான அஸ்திவாரத்தைக் கொண்ட கட்டிடம் போல அவர்களுடைய வாழ்க்கையும் உயரும் என்கின்றனர் குடும்ப நல ஆய்வாளர்கள்.
அன்பு சிறக்க நம்பிக்கை ரொம்ப முக்கியம். சகோதரர்களுக்கிடையே வலுவான ஒரு நம்பிக்கையை நிலைபெறும் போது பிறர் அந்த உறவை உடைக்க முடியாது. தாயின் அன்பைப் போன்ற நம்பிக்கையை சகோதர சகோதரிகளிடையே வைத்துப் பாருங்கள். பிறர் உங்களுடைய பாசக் கூட்டுக்குத் தீ வைக்க நினைத்தாலும் அது உங்களுடைய நம்பிக்கை நதியினால் அணைக்கப்படட்டும்.
மனம் விட்டுப் பேசிச் சிரிப்பது சகோதரர்களிடையேயான அன்புறவைக் கட்டியெழுப்ப உதவும் என்கின்றனர் உளவியலார். பேசும்போது இதயத்தைத் திறந்தும், கேட்கும் போது மனதைத் திறந்தும் வைத்திருப்பதே சகோதரர்களுக்கு இருக்க வேண்டிய உரையாடல் பாணி.
சேர்ந்து நேரம் செலவிடுங்கள். அடிக்கடி போனில், மின்னஞ்சலில் என பாசத்தைப் பரிமாறிக் கொண்டாலும் அவ்வப்போது சந்தித்து, இணைந்து உண்டு, நினைவுகள் பரிமாறிக் கொள்வது சகோதர பாசத்தை ரொம்பவே வலுவாக்கும்.
சகோதரர்களுடைய தேவையில் கேட்காமலேயே உதவுங்கள். உங்கள் சகோதரரின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். அவருடைய வாழ்க்கை ஆனந்தமாய் இருந்தால் மகிழுங்கள். கடினமாய் இருந்தால் உதவுங்கள். இதுவே அடிப்படைக் குணாதிசயம்.
பல சிக்கல்களின் தீர்வு ஒரு சின்ன “விட்டுக் கொடுத்தலில்” இருக்கிறது. அன்பாய் நெருங்குவதில் இருக்கிறது. ஒரு சின்ன மன்னிப்பில் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை அழகாகிறது.
இரண்டு சகோதரர்கள் அருகருகே தோட்டம் அமைத்து பயிர்செய்து வந்தார்கள். தோட்டத்துக்கு இடையே ஒரு சின்ன நதி ஓடியது. பல காலம் அன்பாக வாழ்ந்த சகோதரர்களிடையே திடீரென பிணக்கு. சின்னவன் அண்ணனை ரொம்பவே திட்டி விட்டான். கோபம் கொண்ட அண்ணன் ஒரு பணியாளரை அழைத்து தனது எல்லையில் மதில் கட்டச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
சில நாட்களுக்குப் பின் அவர் திரும்பி வந்து பார்த்தபோது தனது தோட்டத்திலிருந்து தம்பியின் தோட்டத்துக்கு ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. மதிலுக்குப் பதிலாக பாலம் கட்டியிருந்தார் பணியாளர். அண்ணன் அமைதியாக பாலத்தின் மேல் நடந்தார். தூரத்தில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்த தம்பி ஓடோடிச் சென்று அண்ணனைக் கட்டியணைத்தார். “நான் இவ்வளவு திட்டியும் நீ அன்பாக பாலம் கட்டினாயே. நீ என்மேல எவ்ளோ பிரியம் வைத்திருக்கிறாய் அண்ணா” என கண் கலங்கினார்.
அண்ணன் நெகிழ்ந்தார். தம்பியை இறுக அணைத்துக் கொண்டார். மதிலுக்குப் பதிலாய் பாலம் கட்டிய பணியாளருக்கு மானசீகமாய் நன்றி சொன்னார்.
பாசக் கூடு பின்னுங்கள்
நேசத் தோடு நில்லுங்கள்