இந்த டிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ? வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட் நிறுவனத்துக்கு பணத்தை கொடுக்கின்றன ? எப்படி இந்தப் பணம் பயனாளரிடமிருந்து பெறப்படுகிறது, எப்படி இது கடை உரிமையாளர்களுக்குச் சென்று சேர்கிறது ? என்பதெல்லாம் இந்த செட்டில்மென்ட் பிரிவின் பாகங்கள்.
இதன் முதல் கட்டம் பி.ஓ.எஸ் மெஷினுக்கும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கும் இடையே நடக்கும். இதை ரீகன்சிலியேஷன் (reconciliation) அதாவது சரிபார்த்துக் கொள்தல் என்பார்கள். ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பமாகும் அத்தனை பரிவர்த்தனைகளும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியில் இருந்தாக வேண்டும். அது அடிப்படை விதி ! இதைத் தான் முதலில் வங்கிகளும், பி.ஓ.எஸ் மெஷின் வைத்திருக்கும் கடைகளும் செய்யும்.
ஒருவேளை இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். வேறுபாடு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலோ, பரிவர்த்தனை செய்யப்பட்டவற்றின் மதிப்பிலோ இருக்கலாம்.
முதலில் எந்த பரிவர்த்தனை தொலைந்து போயிருக்கிறது, அல்லது தவறாய் பதிவாகி இருக்கிறது என்பதைப் பார்ப்பார்கள். அதைக் கண்டுபிடித்தபின் அதைத் தவிர மற்ற பரிவர்த்தனைகளை செட்டில்மென்ட்க்காக ஃபைல்களாக சேமிப்பார்கள். பிரச்சினைக்குரிய பரிவர்த்தனைகள் எக்ஸப்ஷன் எனப்படும் விதிவிலக்கு செயல்பாட்டுக்குள் செல்லும்.
இப்போது அக்யூரர் வங்கிக்கும், இஷ்யூயர் வங்கிக்கும் இடையேயான பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும். இது எப்படி நடக்கிறது ?
வங்கிகளில் ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிவர்த்தனை வாங்குபவர் வங்கியிலிருந்து பேய்மென்ட் சிஸ்டம் வழியாக இஸ்யூயர் வங்கிக்குச் செல்கிறது. அங்கிருந்து “அங்கீகரிக்கலாம்” எனும் பதிலோடு திரும்பி வருகிறது. அப்போது அந்த பரிவர்த்தனையில் ‘செட்டில்மென்ட்க்கு எடுக்கலாம்’ எனும் ஒரு குறிப்பும் இணைக்கப்படும். ஆனால் முதலில் அதன் நிலை ‘என்’ (N – No) என இருக்கும்.
இப்போது வங்கி பி.ஓ.எஸ் மெஷினுடைய ரிகன்சிலியேஷன் ஃபைலுக்காகக் காத்திருக்கும். அது ஒவ்வொரு நாளும் இரவில் தான் கிடைக்கும். இரவில் பி.ஓ.எஸ் மெஷின் பரிவர்த்தனைகளை கேகரித்து ஒரு ஃபைலாக அதன் வங்கிக்கு அனுப்பும். அது மெசேஜ் எண் 500 எனும் பெயரில் செல்லும். அதை வங்கி சரிபார்த்தபின் 510 என ஒரு பதிலை அனுப்பும்.
இந்த செயல் முடிந்தால் தான், ‘செட்டில்மென்டுக்குத் தகுதியானது’ என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் “என்” எனும் அடையாளத்தை மாற்றி “ஒய்” (Y – Yes ) என எழுதிக்கொள்ளும். அப்போது செட்டில்மென்ட் கட்டத்துக்குள் அவை நுழையும்.
இந்த என் நிலைக்கும் ஒய் நிலைக்கும் இடையே பல செயல்பாடுகள் நடக்கலாம். குறிப்பாக ஒரு பரிவர்த்தனை சரியாக இல்லை என புகார் வரலாம், சந்தேகம் எழலாம், வழக்கு நடக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் “என்” என்பது “டபிள்யூ” என மாறும். அதாவது வெயிட்டிங் நிலை. எல்லா குழப்பங்களும் முடிந்த பின்பே “ஒய்” நிலைக்கு வரும்.
இப்படி சரி செய்யப்பட்ட தகவல்கள் தினம் தோறும் செட்டில்மென்ட் நிலைக்குள் வரும். செட்டில்மென்ட் மென்பொருள் வங்கி வாரியாக கணக்கை பிரித்து தெளிவான அறிக்கைகளாய் மாற்றும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன என்பது முடிவு செய்யப்பட்டபின் அவை வங்கிகளுக்கும், வங்கிகளின் மேலாண்மை அமைப்புக்கும் ஃபைல்களை அனுப்பும்.
வங்கிகள் அந்த ஃபைலை எடுத்து தங்களுடைய மர்ச்சன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (எம்.எம்.எஸ்) (MNS – Merchant management System ) எனும் மென்பொருளுக்குக் கொடுக்கும். அது ஒவ்வொரு பி.ஓ.எஸ் கணக்குக்கும் உரிய பணத்தை அவரவர்க்கு அனுப்பும்.
வெளிநாடுகளில் இதே கார்ட் பரிவர்த்தனையைச் செய்யும் போது அந்தந்த நாட்டு பணத்துக்கு ஏற்ப ‘கன்வர்ஷன் ரேட்'(Conversion Rate) பயன்படுத்தப்பட்டு செட்டில்மென்ட் நடக்கும். உதாரணமாக அமெரிக்காவில் நாம் நூறு டாலருக்கு ஒரு பொருளை வாங்கினால் அது நமது அக்கவுண்டில் வரும்போது அதற்குரிய கன்வர்ஷன் முடிந்த இந்திய ரூபாயாக வரும். அதே நேரத்தில் வழங்குநர் வங்கியும் பேய்மென்ட் சிஸ்டமும் தங்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஒரு கரன்சியை முடிவு செய்து கொள்ளும். அது டாலராகக் கூட இருக்கலாம்.
இந்த பரிவர்த்தனைகளை செய்கின்ற பேய்மென்ட் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு ஏற்ப ஒரு சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கும். உதாரணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாய் கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நாள் ஐந்து கோடி பரிவர்த்தனைகள் நடந்தால், நிறுவனம் தினமும் ஐந்து கோடி ரூபாய்களை சம்பாதிக்கும்.
பேய்மென்ட் டொமைன் தொடர்பான மேலோட்டமான ஒரு புரிதலை இந்த குறுந்தொடர் உங்களுக்குத் தந்திருக்கும் என நம்புகிறேன். நன்றிகளும், வாழ்த்துகளும்.
*