பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது

டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துதலும், மன உளைச்சலும் மனசு முழுக்க நிரம்பி
இருந்தது. இரயில்வே கேட்டைக் கடக்கும்போது ரயிலுக்கு இடையே குதிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிற்கும் போது சட்டென காருக்கு இடையே குதித்து விட வேண்டுமென்றும் மனம் நினைக்கிறது. இன்று அப்படி எந்த எண்ணமும் வரவில்லை. இப்படி அடிக்கடி மனம் அழுத்தமடைகிறது என கண்ணீரோடு தன்னைப் பார்க்க வந்த ஒரு பதின் வயதுப் பெண் சொன்னதாகச் சொல்கிறார் “TeTeenager’s Guide to the Real World” எனும் நூலின் ஆசிரியர் பிரைன் மார்ஷல்.

teen என்னை எப்போதும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு மட்டுமே பார்க்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கிறேன். கெட்ட பழக்கங்கள் எதுவுமே கிடையாது. ஆனாலும் என்னை அவர்கள் நம்புவதில்லை. எந்த ஒரு சுதந்திரமும் எனக்குத் தராமல் ஒரு ஒன்பது வயதுக் குழந்தையைப் போல நடத்துகிறார்கள். எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், பெற்றோரின் மீதும் மிகப்பெரிய வெறுப்பு வந்துவிட்டது. என்ன செய்யவேண்டும் என தன்னிடம் பல பதின் வயதுப் பெண்கள் வந்து அழுவதாகக் கூறுகிறார் மருத்துவர் டாக்
ஜெர்ரி.

பதின் வயதுப் பருவம் கலவை உணர்ச்சிகளால் வனையப்பட்ட ஒரு மண்பாண்டம் போன்றது. இந்த பருவத்தில் தான் கிளர்ச்சி, வளர்ச்சி, பயம், தைரியம், ஆர்வம் என என்னென்ன உடலியல், உளவியல் மாற்றங்கள் உண்டோ அவை அனைத்துமே வந்து பற்றிக் கொள்கின்றன எனலாம்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பதின் வயது என்பது கண்ணாடிக் குடுவை போன்றது. கர்வமும், அதீத துணிச்சலும் அவர்களை ஆட்கொள்ளும் அதே வேளையில் சமூகத்தின் வல்லூறுக் கண்களுக்கும் அவள் தப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறாள்.

பதின் வயதுப் பருவத்தில் தான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மன அழுத்தம் கொள்வதும், தற்கொலை செய்து கொள்ளவேண்டும் எனும் எண்ணம் அடிக்கடி தலை தூக்குவதும் அதிகம் என்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார்.

இந்த எண்ணங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு நாள் தற்கொலை செய்ய வேண்டும் என மன அழுத்தம் அலைக்கழிக்கும், ஆனால் மறு நாள் தெளிந்த வானம் போல எல்லாம் மறைந்து விட்டிருக்கும். இவையெல்லாம் இந்த வயதுக்கே உரிய இயல்பான மாற்றங்கள் என்பதை பெண்களும், பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த பருவத்தைக் கையாள என்பது இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் லாவகம் தேவை.  ஏனெனில் இந்த பருவம் தான் பாதையைத் தேர்வு செய்யும் பருவம். போதைக்கு அடிமையாகும் மக்கள் தங்களுடைய முதல் சுவடை பதின் வயதில் தான் பதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. சரியான வழிகாட்டுதலும், பெற்றோரின் கண்காணிப்பும் பதின் வயதினருக்கு மிக முக்கியமாகிப் போனதன் காரணம் இது தான்.

வாழ்க்கையில் பல விஷயங்களின் “முதல் சுவடு” இங்கே தான் வைக்கப்படுகிறது.  அந்த முதல் சுவடை லாவகமாய் வகைப்படுத்துவது தான் பெற்றோரின் கவலைக்குரிய பணியாக இருக்கிறது.

பெண்களின் உடல் ரீதியான வளர்ச்சியும் அவர்களை பல வேளைகளில் மன அழுத்தத்துக்கும், பயத்துக்கும், குழப்பத்துக்கும் இட்டுச் செல்கிறது. காரணம் பாலியல் ஹார்மோன்கள் உடலுக்குள் பாய்வது அந்தப் பருவத்தில் தான். இயற்கையின் இந்த மாற்றம் உடலுக்கும் மூளைக்குமிடையேயான தகவல் பரிமாற்றங்களை இன்னோர் தளத்துக்கு மாற்றி வைக்கிறது.

இரவில் தூக்கமில்லாமல் புரள்வதோ, அல்லது விடிந்தபின்னும் எழும்பாமல் தூங்குவதோ என இவர்களுக்குள் இனம் புரியாத மாற்றங்களை இந்த மாற்றங்கள் விதைத்து விடுகின்றன.
அதீத கோபம் சிலரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. யார் என்ன செய்தாலும், பேசினாலும் கோபமடைவது இந்த பருவத்தில் பலருக்கும் வரக்கூடிய நிலை மாற்றம். தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்கலாம். இல்லையேல் குறைந்த பட்சம் அவர்களுடைய கோபத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

புதியதை அறியும் ஆர்வம் சிலருக்கும், புதியதால் விளையும் பயம் மற்றவர்களுக்கும் என இந்த வளர்ச்சி மாற்றங்கள் பதின் வயதுப் பெண்களை அலைக்கழிக்கின்றன.

பன்னிரண்டு வயதுக்குப் பிறகு தான் மூளை முதன் முதலாக ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுகிறது என்கின்றனர் உளவியலார்கள். இந்த காலகட்டத்தில் தான் இவர்கள் சமூகத்தின் தவறான கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர். ஊடகங்கள், திரைப்படங்கள், இணையம் என இவர்களுக்காய் தூண்டிலுடன் காத்திருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

அதுவரை மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை என அலையும் களங்கமற்ற ஒரு சிறுமி, சட்டென்று அழகு குறித்த கவலையும், அடுத்தவர்களின் அபிப்பிராயங்களின் மீதான கவலையையும் கொள்கிறாள்.

எனவே பதின் வயதுப் பெண்ணை எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் தரக் குறைவாகப் பேசவே பேசாதீர்கள். அவர்களுடைய நடவடிக்கை, தோற்றம், திறமை எதைக் குறித்தும் இருக்கலாம் இந்த உரையாடல்.

தன் எடை மீதான கவலை பெண்களை பற்றிக் கொள்ளும் காலமும் இது தான். ஆரோக்கியமான வழிகளை யோசிப்பதை விட, தனது எடை அதிகரித்து விட்டதே அல்லது குறைந்து விட்டதே என பெண்கள் வருந்துவது பதின் வயதின் படிகளில் தான்.

கண்ணாடிகளில் அதிக நேரம் செலவிடும் இந்த பதின் வயதினர் தாங்கள் அழகாய், அங்கீகரிக்கப்படும் விதமாய் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென எப்போதும் நினைப்பார்கள். எனவே இவர்களை எந்தக் காரணம் கொண்டும் அவர்களுடைய தோற்றத்தைக் குறித்து கிண்டலடிப்பதே கூடாது! அது அவர்களுடைய தன்னம்பிக்கையையும், நிம்மதியையும் குலைத்து வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடக் கூடும்.

பல பதின் வயதினர் தோல்விகளை எளிதாய் எடுத்துக் கொள்வதில்லை. தேர்விலானாலும் சரி, காதலில் ஆனாலும் சரி, போட்டிகளில் ஆனாலும் சரி தோல்வி வந்தால் துவண்டு சட்டென உடைந்து போகும் மனம் பதின் வயதுக்கு உரியது. இதைப் பெற்றோர் உணர்ந்து செயல்படுதல் அவசியம். தோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் நீங்கள் குழந்தையை முழுமையாய் அங்கீகரித்துக் கொள்கிறீர்கள் எனும் நம்பிக்கையை அவர்களிடம் ஊட்ட மறவாதீர்கள்.

குறிப்பாக மகளிடம் அவளுடைய பள்ளிக் கூட நிகழ்வுகளையும், அன்றைய தினம் நடந்தவற்றையும் பகிரச் சொல்லிக் கேளுங்கள். அவர்கள் பேசினால் முழுமையாய் ஈடுபாட்டுடன் கேளுங்கள். பெற்றோர் மகளுக்கிடையேயான உறவு வளர்ச்சிக்கும், மகளுக்கு எங்கேனும் ஏதேனும் உதவி தேவையா என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளவும் இந்த வெளிப்படையான உரையாடல் வழிவகுக்கும்.

வீடுகளில் ஏதேனும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியிருந்தால் உங்கள் பதின் வயது மகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். தன்னை பெரியவளாய் கவனிக்கிறார்கள், தனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதே உங்கள் பதின் வயது மகளை உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கையான மனநிலைக்கும் இட்டுச் செல்லும்.

பதின் வயதுப் பருவம் பக்குவம் வந்த தங்களைப் போல எதையும் ஒழுங்குடனும், திட்டமிட்டும் செய்யும் வயதல்ல என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். சீப்பை இடம் மாற்றி வைப்பதற்கெல்லாம் சத்தமிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, சில குறைகளை ஏற்றுக் கொண்டு பக்குவமாய் அவர்களைப் பழக்கவேண்டும்.

அதை விடுத்து குழந்தைகள் தங்களிடம் குறைகள் இருப்பதாகப் பேசினால், அவற்றுக்கு மாறாக மிகவும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவே பேசவேண்டும். சலிப்பு ஏற்படும் வரை குழந்தைகள் கேட்டால், சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே சூட்சுமம்.

இந்த மாற்றமும், இது தரும் கவலையும் இலட்சியங்களின் மீதான பார்வையை விலக்கி விடும் அபாயமும் உண்டு. எதிர்காலத்தைக் குறித்த பயமற்றுத் திரிவது, எதிர்காலத்தைக் குறித்து பயந்து நடுங்குவது என இருவேறு மனநிலை இவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அதீத ஈகோ இந்த வயதில் இந்த வயதினரை ஆக்கிரமித்திருக்கும். சிலருக்கு தான் எதற்கும் பயனற்றவள் எனும் சிந்தனை மேலோங்கியிருக்கும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் பதின் வயதினரை எள்ளி நகைக்காமல் இருப்பதே நல்லது.

அடிக்கடி பதின் வயதினரை பாராட்டுவதும், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்துப் பாராட்டுவதும் என தன்னம்பிக்கையை பெற்றோர் ஊட்ட வேண்டும். அவர்கள் ஏதேனும் நல்ல செயல் செய்யும் போதெல்லாம் வெகுவாய் ஊக்கப்படுத்தி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தக் காலகட்டம் அதீத தன்னம்பிக்கையையும், உயர்வு உணர்வையும் பெரும்பாலும் பதின் வயதுக்குள் புகுத்தி விடுகின்றன. இன்னும் குறிப்பாக பதின் வயதின் கடைசிக் கட்டத்தில் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் முடிவெடுப்பதெல்லாம் வெகு சரியான முடிவுகள் எனவும் அசைக்க முடியாத ஒரு உறுதி இவர்களுக்குள் முளைவிடும்.

தன்னோடு அன்பாகப் பழகிய மழலை சட்டென தன்னை வெறுக்கிறாளோ எனும் நினைப்பே பெற்றோரின் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. இந்த காலகட்டத்தில் தான் பெற்றோரின் கவனமான அணுகுமுறை அவசியப்படுகிறது.

உண்மையில் தன் மகள் தன்னை வெறுக்கவில்லை. அவள் தனது வாழ்வில் பதட்டமான ஒரு பாதையைக் கடந்து கொண்டிருக்கிறாள் என உணர்ந்து கொள்ளவேண்டும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய காலம் இது என்பதைப் புரிந்து கொள்ளல் வெகு அவசியம் என்கிறார் அட்லாண்டா மன நல மருத்துவர் நாடின் காஸ்லோ. ஆற்றோடு நீந்தி ஆற்றின் போக்கை மாற்ற வேண்டுமே தவிர ஆற்றுக்குக் குறுக்கே வலுக்கட்டாயமாய் அணைகள் கட்டுதல் கூடாது. அவை  இழப்புகளைச் சம்பாதித்து விடக் கூடும்.

குறிப்பாக பல்வேறு விதமான தகவல்களைக் கேட்கிறது பதின் வயது. ஆனால் கடைசியில் எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் குழம்புகிறது. நண்பர்கள் செய்கிறார்கள் என்பதனாலேயே பல பழக்கங்களுக்கு அடிமையாவது இந்த இடத்தில் தான். உதாரணமாக 80 விழுக்காடு மக்கள் புகைப் பழக்கத்தை ஆரம்பிப்பது பதின் வயதில் தான் !

அமெரிக்காவில் உடலுறவு கொள்ளாமல் பள்ளி இறுதியாண்டை முடிப்பது என்பது அவமானச் செயலாக பள்ளி மாணவர்களால் பேசப்படுகிறது. இந்தத் தவறான பழக்கம் பெண்களை பெரிதும் பாதித்து பலரை ஏதும் அறியாப் பருவத்திலேயே தாய்மையடையவும் வைக்கிறது.

இன்றைய நவீன உலகம் நமது படுக்கையறைகளில் கூட கணினியை கொண்டு வைத்திருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் கைகளில் ஒரு ஆறாவது விரலாய் கைப்பேசியும் தொங்கிக் கொண்டிருக்கிறது. பதின் வயதுப் பருவம் இந்த நவீனத்தின் மூலம் தவறான வழிகளுக்குள் வழுக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது.

கணினி பயன்படுத்தும் நேரத்துக்கு வரையறைகள் விதிப்பதும், கணினியை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் என பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதேபோலதான் தனது பதின்வயதுக் குழந்தையின் நண்பர்கள் குறித்த விழிப்புணர்வும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளையின் நண்பர்கள் மோசமானவர்களாக இருப்பதாக கவலைப்படுகின்றனர். பதின் வயதுப் பிள்ளைகள் தங்கள் நண்பர்களை பெற்றோரே கூட திட்டுவதை விரும்புவதில்லை என்கிறார் உளவியல் நிபுணர் பார்டெல். தன் குழந்தையின் நலனில் அக்கறை கொள்கிறோம் என்பதையே முதன்மைப் படுத்தி குழந்தைகளிடம் பேசவேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

பதின் வயதுப் பருவம் குழப்பங்களும், பதட்டங்களும் நிறைந்த பருவம். இந்த பருவத்தினர் கவனிக்க வேண்டியவை.

பதின் வயதினர் தங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குழப்பங்கள் அலைக்கழித்தால் நம்பிக்கைக்குரிய, பக்குவம் வாய்ந்த ஒரு நபரிடமோ, மருத்துவரிடமோ தனது குழப்பங்களைப் பேசலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் தெளிவைத் தர முடியும்.

மனம் குழப்பத்தில் இருக்கும் போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒரு டைரியை எடுத்து நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, எந்தெந்த அழுத்தங்களில் இருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் எழுதுங்கள். எழுதும் போது மூளை தெளிவடையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

நடங்கள். ஒன்றோ இரண்டோ கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து நடந்துவிட்டு திரும்பி வாருங்கள். உங்கள் மனம் தெளிவடைந்திருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏதாவது வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கடினமாய் உழையுங்கள். அல்லது நீண்ட நேரம் உழையுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலையாய் இருந்தால் மிகவும் நல்லது. இது உங்கள் கவனத்தை முழுக்க முழுக்க மாற்றிவிடும்.

பிறருக்கு உதவுங்கள். அடுத்தவர்களுடைய குறைகளைக் கேட்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும் உங்கள் பிரச்சினையிலிருந்து உங்களை விடுவிக்கும்.

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்

 

( World Breastfeeding Week Special )

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆராய்ச்சிகள், பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளன.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைவதாக ஒரு ஆராய்ச்சி குறிப்பிட்டிருந்தது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

அது மட்டுமன்றி தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. எனவே தான் எல்லா நாடுகளும் அன்னையர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கின்றன.

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்துவதை ஸ்காட்லாந்து நாடு சட்ட விரோதமாக அறிவித்திருக்கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன என்பது கனடாவில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

SIDS (Sudden Infant Death Syndrome)  எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.

பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். உலகிலுள்ள சுமார் 4000 வகையான பாலூட்டிகளின் பாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்

பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்..

எனினும் தாய்ப்பாலில் இருக்கும் சுமார் நூறு மூலக்கூறுகள் கடைகளில் கிடைக்கும் செயற்கை உணவுகளில் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

குழந்தைகள் தாய்ப்பாலின் வாசனையை விரும்புகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. பிறந்த ஒரு வாரத்திலேயே தாய்ப்பாலின் வாசனையை குழந்தைகள் கண்டுபிடித்து விடுகின்றனவாம்.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மருத்துவரின் உரிய ஆலோசனைப்படி மட்டுமே செயல்படுத்த வேண்டும். தாய்ப்பாலை பாதுகாக்க பல மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தை குடிக்கக் குடிக்க சுரந்து கொண்டே இருப்பது தான் தாய்ப்பாலின் தனித்துவம். ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாட்டில் பாலுக்குப் பழகிய குழந்தைகளை மீண்டும் தாய்ப்பால் பழக்கத்திற்குக் கொண்டு வருதல் மிகவும் கடினம்.

உலகிலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராத ஒரே உணவு தாய்ப்பால் தான் என்பதை இயற்கையின் கொடை என்றோ, இறைவனின் படைப்பின் உன்னதம் என்றோ விருப்பப்படி அழைத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் தாய்க்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் உன்னதமான கொடை என்பதை உணர்ந்து செயல்படுதல் தாய்க்கும், குழந்தைக்கும் ஓர் ஆரோக்கியமான, உறவுப் பிணைப்பான எதிர்காலத்தை பரிசளிக்கும்.

காலமாற்றமும், குழந்தையின்மையும்.

( இந்த மாத பெண்ணே நீ இதழில் வெளியானது )

வாழ்வின் ஆனந்தம் என்பது மழலைகளின் சிரிப்பிலும், கூட்டுக் குடும்ப உணர்விலும் எனும் நிலையிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் கேளிக்கைகளும், பொருளீட்டுதலும், மனம் போன போக்கில் வாழ்தலும் எனும் நிலை உருவாகிவிட்டது.

கணினித் துறையின் மறுமலர்ச்சி இளைஞர்களையும் இளம் பெண்களையும் குடும்பம் எனும் ஆனந்தமான சூழலை விட்டு தூரமாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட மனிதன், இப்போது குடும்பத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டான்.

எனவே தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மென்பொறியாளர் தம்பதியினரிடையே மனக்கசப்பும், மணமுறிவும் அதிகரித்திருக்கிறது. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவெனில் கூடி வாழும் தம்பதியினருக்கும் கொஞ்சி மகிழ குழந்தையில்லை எனும் இன்னலும் உருவாகியிருக்கிறது.

திருமணமான தம்பதியினரில் ஐந்து பேருக்கு ஒருவருக்கு கருத்தரிப்பதில் தாமதமும், சிக்கலும் நிலவுகிறது. இதன் முதல் காரணம் மன அழுத்தம், இரண்டாவது காரணம் அலுவலகத்துக்கும், பணத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை. இப்போது இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்களின் வயது !

பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருப்பது இப்போது நகைச்சுவையாகி விட்டது. திருமணத்துக்கான வயது பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுமார் முப்பது வயதை நெருங்கும் நிலையில் பெண்களும், முப்பதைத் தாண்டிய பிறகே ஆண்களும் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

இப்படி இளைஞர்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பின்னர் குழந்தைப் பிறப்பைச் சிலகாலம் தள்ளிப் போடுவதே குழந்தையின்மைக்கும், குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவுக்கும் முதன்மையான காரணமாகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமான அளவுக்குக் குறைகின்றன எனவும்,  கருவுறும் பெண்களுக்குக் கருச்சிதைவு நேர்வதற்கும் ஆண்களின் வயது காரணமாகி விடுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி அதிர்ச்சித் தகவலை அறிவித்திருக்கிறது.
சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டு முப்பதுகளின் கடைசியில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் உட்பட பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.  நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிக்கலின்றி குழந்தை பிறக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறதாம்.

பெண்களின் வயது மட்டுமே குழந்தைப் பிறப்புக்குத் தேவை, ஆண்களின் வயது ஒரு பொருட்டல்ல, 90 வயதிலும் ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்றிருந்த ஆண்களின் மீசை முறுக்கலுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

கூடவே குடும்ப உறவுகளைக் குறித்த ஆழமான உணர்வு இல்லாமல், மேனாட்டுக் கலாச்சாரத்தின் வால்பிடித்து, கேளிக்கைகளுக்கும், பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அலையும் இளம் வயதினருக்கு இந்த ஆராய்ச்சி ஓர் எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.

பெண்களும், மன அழுத்தமும்.

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.

குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !

kid_medicine.jpg

(இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

நமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.

இத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான பரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.

மருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.

சுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.

1.        முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.

2.        மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.

3.        எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.

 சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4.        மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

5.        பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.

6.        மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.
 முக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

7.        மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.

 மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.

8.        மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.

9.         மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

10.      வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.

இத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்.

kid.jpg

( இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் இணைப்பில் வெளியான எனது கட்டுரை ) சமீபத்தில் அமெரிக்க அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டுப் பொருட்களை திரும்ப அனுப்பி விட்டது. இந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதே இந்த முடிவின் காரணமாகும். 

. நச்சுத்தன்மை அதிகமான வர்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துதல், பென்சில் போன்றவற்றில் குழந்தைகளுக்கு ஊறு விளைவிக்குமளவுக்கு லெட் தன்மை அதிகம் இருத்தல் உட்பட பல்வேறு காரணங்கள் இந்த தடைக்குக் காரணமாக வெளியிடப்பட்டுள்ளன. உலகெங்கும் பெற்றோரின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தச் செய்தி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் போது செயல்பட வேண்டிய எச்சரிக்கை உணர்வை அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன ? 

  1. முதலில் விளையாட்டுப் பொருள் எந்த வயதினருக்கானது என்பதைக் கவனியுங்கள். விளையாட்டுப் பொருளின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது குழந்தைகளின் பாதுகாப்போடும் தொடர்புடையது. ஐந்து வயது குழந்தைக்கான விளையாட்டுப் பொருள் இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
  2. விலைகுறைந்த உலோகப் பொருட்களை வாங்கி குழந்தைகளுக்கு அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஆபரணங்களை குழந்தை வாயில் வைத்துக் கடித்தால் நச்சுத் தன்மை உடலில் பரவும் அபாயம் உண்டு.
  3. காந்தப் பொருட்கள் இணைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். தவறுதலாக விழுங்கப்படும் காந்தப் பொருட்கள் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
  4. குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமான விளையாட்டுப் பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்கள் கூட விளையாட்டுப் பொருட்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  5. மூன்று வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டுப் பொருட்கள் சிறு சிறு பாகங்களாக இல்லாமல் பெரியதாக, நன்றாக இணைக்கப்பட்டதாக இருக்கும் படி வாங்க வேண்டும்.
  6. .குழந்தைகளுக்கு பென்சில், வர்ணமடிக்கும் பொருட்கள், வர்ண பென்சில்கள், சாக்பீஸ்கள் வாங்கும்போது தரமானதாக குழந்தைகளுக்காகவே உருவானதாக இருக்க வேண்டியது அவசியம்.
  7. பலூன்கள் எச்சரிக்கையுடன் விளையாடப்பட வேண்டியவை. பலூன்களினால் உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளன. எனவே சிறுவர்களுக்கு பலூண்களை விளையாடக் கொடுப்பதை தவிர்த்தல் நலம்.
  8. இணையத்தில் பொருட்கள் வாங்கினால் அந்த பொருள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்த பின்பே வாங்குங்கள். வாங்கிய விளையாட்டுப் பொருள் உடைந்து விட்டால் வீணாகிறதே என்று கவலைப்படாமல் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லையேல் அவை குழந்தைகளைக் காயப்படுத்திவிடக் கூடும்.
  9. தீப்பிடிக்காத விளையாட்டுப் பொருளாக வாங்குங்கள். அதிலும் ரோமம் போன்றவை உள்ள விளையாட்டுப் பொருட்கள் ஒவ்வாமை, வயிறு சம்பந்தமான நோய்களை உண்டு பண்ணும் என்பதால் அவற்றைத் தவிருங்கள்.
  10. நச்சுத்தன்மையுடைய பெயிண்ட்கள் உள்ள விளையாட்டுப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். விலை அதிகமான விளையாட்டுப் பொருட்கள் தரமானவை என்னும் பொதுவான எண்ணத்தையும் ஒழிக்க வேண்டும்.

 குழந்தைகளின் பொழுதுகளை ஆக்கப்பூர்வமாகச் செலவிடும் விதமான விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. 

. குழந்தைகள் இன்றைய நவீன உலகின் ஊடகங்களுக்கு அடிமையாகி விடாமல் தவிர்க்க அவர்களுக்கு நல்ல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதும், விளையாட்டுகளில் ஊக்கப்படுத்துவதும் அவசியம். அதே நேரத்தில் அவற்றில் உள்ள சிக்கல்களைக் குறித்த விழிப்புணர்வை பெற்று எச்சரிக்கையுடன் இருத்தலும் இன்றியமையாதது.

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்

kid.jpg

( இந்த மாத பெண்ணேநீ இதழில் வெளியான கட்டுரை )

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை.

ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது.

குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.

2

குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்த சிறு வயதிலேயே குழந்தைக்கு வாய்த்து விடுகிறது.

3

குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறை சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

அதிக எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட திட்டுவது மேல் என்றே குழந்தைகள் நினைக்கின்றனவாம்.

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால் தான். எப்படியேனும் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே குழந்தையின் செயல்களை ஆழமாகக் கவனியுங்கள். ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.

4

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும், வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள்.

குழந்தைகள் பேசுவதை கவனமுடன் கேட்டு பதிலளியுங்கள். அதை குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவை மனரீதியான பாதிப்பை அடைகிறதாம்

5

நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு உங்கள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.

வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ‘ஒழுங்கா சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்’, ‘அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கி தரேன்’ என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள்.

நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும் போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.

6

குழந்தைகளுக்கு சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள், முடிந்த மட்டும்.

7

உங்கள் குழந்தை ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காதவரையில் கண்டு கொள்ளவேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம்.

குழந்தை ஒரு எறும்பை பின் தொடர்வதை பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து ‘அதெல்லாம் பண்ணாதே’ என்ற அதட்டல் தேவையில்லை.

குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மன வருத்தம் வருவதையும் தவிர்க்கும்.

8

குழந்தையிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி ‘செய்யாதே’ என்று சொல்ல, கணவன் ‘செய்யட்டும் பரவாயில்லை’ என்று சொல்லி குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள்.

செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சில விஷயங்களை குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்ளும். அதை தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.

9

குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையை குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாலோசிப்பதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும்.
கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வை குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் பலமான குடும்ப உறவின் பாலங்க

10

குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித் தேர்வில் வரும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள்.

எனவே தோல்விகளையும் பழக்குங்கள். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை எனும் தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம்.


 

சேர்ந்து வாழ்வோம் தனித் தனியாக.

ss.jpg

மனித வாழ்வின் அடிப்படையே உறவுகளால் இறுக்கமாய்ப் பின்னப்பட்ட குடும்பங்களில் தான் இருக்கிறது. இந்தியக் கலாச்சாரம் அழுத்தமான குடும்ப உறவுகளால் தான் கட்டி எழுப்பப்பட்டிருந்தது.

வெளிநாட்டுக் கலாச்சாரங்களின் தாக்கங்களும், அவற்றின் வசீகரங்களும் இந்தியக் கலாச்சாரத்தின் வேர்களின் கோடரிகளால் இறங்கி சில ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்த கலாச்சார இணைவின் விளைவுகளாய் ஒரு நம்பிக்கையற்ற சூழல் குடும்பங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

கலாச்சாரத் தாக்கங்கள் ஊடகங்களின் வழியாகவும் வினியோகிக்கப்பட்டு தவறுகள் எல்லாம் சரியானவை என்பது போன்ற ஒரு மாயை இன்றைய மக்களிடம் வளர்ந்து வருவதையும் நாம் மறுக்க முடியாது.

வெளிநாடுகளில் மட்டுமே அதிகமாய் நிகழ்ந்து வந்த மணமுறிவுகள் இன்று இந்தியக் குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்வதற்கும் இந்த கலாச்சார இணைப்பே காரணம் என்பதில் பிழையில்லை.

வெளிநாட்டுக் குடும்பங்களின் இன்றைக்கு ஒரு சமூக கவலையாக உருவாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைதான் “சேர்ந்து வாழ்வோம் தனித்தனியாக” என்னும் கலாச்சாரம்.

திருமணமாகி கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் ஆனந்தத்தையும், கவலையும் பகிர்ந்து கொள்வதே குடும்பத்தின் ஆதாரம். குழந்தைகளின் அருகாமையின் சின்ன சுவர்க்கத்தின் வடிவத்தைக் குடும்பங்களில் தரிசிப்பதே ஆழமான குடும்ப ஆனந்தத்தின் அடிப்படை.

ஆனால் சேர்ந்து வாழ்வோம் தனித்தனியாக என்னும் வழக்கம் திருமணமான ஆணும் பெண்ணும் தனித் தனியாக வேறு வேறு வீடுகளின் வசிப்பதாகும். இது மேல் நாட்டு பெண்களையும் ஆண்களையும் வெகுவாக வசீகரித்திருக்கிறது. இதன் விளைவாக இன்று யூ.கேவில் மட்டுமே இருபது இலட்சம் குடும்பங்கள் இப்படி வாழ்கின்றன.

குடும்பமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கையும், திருமணமாகி தனித்தனியே வாழ்பவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று என்பது குடும்ப மதிப்பீடுகளின் மேல் அக்கறை கொள்பவர்கள் அனைவரையுமே அதிர்ச்சியடைய வைக்கும் செய்தியே.

தனித் தனியே வாழ்வதால் எங்கள் தனி மனித சுதந்திரங்களை வாழ்க்கைத் துணைக்காக தியாகம் செய்யும் துரதிஷ்டம் நேர்வதில்லை என்று பலரும் தெரிவித்திருப்பது குடும்ப வாழ்க்கையின் மையத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் இருவரும் மாறி மாறி கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களும் அடிப்படையான குடும்ப அன்பை அறிந்து கொள்ள வழியின்றி அலைந்து எதிர்காலத்தில் இதே போன்ற ஒரு வாழ்க்கையையே நாடுவார்கள் என்பதும் சர்வ நிச்சயம்.

மணமுறிவு நிகழ்வதற்குக் காரணம் சேர்ந்து வாழ்தல் தான் என்றும் தனித்தனியே வாழ்வதால் அந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மணமுறிவு நடந்தால் சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சட்டம் மேலை நாடுகளில் அமலில் இருப்பதால் மண முறிவை விட தனித் தனியே வாழ்தலை அவர்கள் விரும்புகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழும் வழக்கம் மேலை நாடுகளில் மிகவும் சாதாரணமாக இருப்பது போல, திருமணத்திற்குப் பின்பு பிரிந்து வாழும் வாழ்க்கை முறையும் வெகு வேகமாகப் பரவுகிறது.

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழும் இணை கூட தங்களுக்குள் பிரிவு வந்தால் சட்டத்தின் முன் நின்று சொத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியும் எனும் புதிய சட்டமும் சில மேலை நாடுகளில் தற்போது அமலில் உள்ளது. இதன் மூலம் திருமணத்திற்கு முன்பே கூட அவர்கள் சொத்தில் உரிமை கோர முடியும்.

மணமுறிவிற்கான காரணம் பெரும்பாலும் சந்தேகம் என்பதை சமீபத்திய புள்ளி விவரங்கள் மேலும் ஒருமுறை தெளிவு படுத்தியுள்ளன. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான வழிகளில் செல்கிறாரா என்பதைக் கண்டறிய மேலை நாடுகளில் முப்பது விழுக்காடு மக்கள் உளவுப் பணி செய்பவர்களை நாடுகின்றனராம். குடும்ப வாழ்க்கையில் இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ளதனால் எதற்கு வீண் வம்பு என்று தனித்தனியே வாழ்தலை மக்கள் விரும்புகின்றனர்.

திருமணமான பின் தனித்தனியே வாழ்வதெனில் எதற்குத் திருமணங்கள் ? அங்கீகாரம் பெற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவா ? தங்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லிக் கொள்ளவா ?

குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யங்களான விட்டுக் கொடுத்தல், ஊடல், குழந்தைகளோடான பொழுதுகள், சேர்ந்து உணவு உண்தல், கூட்டுக் குடும்பமாக உறவுகளைப் பேணுதல் எனும் முக்கிய அம்சங்களை விட்டு விட்டு தனித் தனித் தீவுகளாக குடும்பங்கள் செயல்படுவதில் என்ன இன்பம் இருக்கிறது ?

மேலை நாட்டுக் கலாச்சாரமான சேர்ந்து வாழ்வோம் தனித்தனியாக என்னும் விஷ நீர் தமிழர்களின் ஆழமான கலாச்சார வேர்களை எட்டிவிடக் கூடாதே எனும் கவலை குடும்பத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் எழும், எழ வேண்டும்.


 

பெண்கள் மீதான வன்முறை

pen.jpg

இந்த மாத பெண்ணே நீ – இதழில் வெளியான எனது கட்டுரை…

பெண்களின் முன்னேற்றம் இன்று பல துறைகளில் வளர்ந்து வருகிறது என்பதை ஆனந்தத்துடன் ஒத்துக் கொள்ளும் நாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தீரவில்லை என்பதை அவமானத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்று நம்பச் செய்வது கூட ஒரு வகையில் ஆணாதிக்கச் சிந்தனையின் தப்பித்தல் வார்த்தைகளே. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பெண்கள் ஆண்கள் அளவுக்கு ஊதியம் வாங்க இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆகும் என்கிறது.

இன்று கலவரங்கள், போர், வன்முறை என எந்த பிரச்சனை நடந்தாலும் அங்கே பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக் களமாக பல வன்முறைகள் இருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே பல உதாரணங்கள் குறிப்பிட முடியும்.

குறிப்பாக மத சம்பந்தமான வன்முறைகள் நிகழ்கையில் எதிர் மதத்தின் பெண்களைப் பலாத்காரப் படுத்தும் நிகழ்வுகள் நமது நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. இவை ஒரு வகையில் தாம் சார்ந்த மதத்திற்கும், கடவுளுக்கும் செய்யும் நற்செயல் என்றே மூளைச் சலவை செய்யப்படுகிறது. ஈராக் போரில் அமெரிக்கப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள் உலகறிந்தவை. இலங்கைப் பிரச்சனையிலும் பெண்கள் அதிகமாக பாலியல் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகின்றார்கள் என்பது கண்கூடு.

படிப்பறிவற்ற, அல்லது வறுமையில் உழலும் பெண்களை நோக்கியே பெரும்பாலான அச்சுறுத்தல்கள் நீள்கின்றன. வீட்டு வேலை செய்யும் சிறுமியர் மீதான மீறல்கள் தினசரி நாளிதழ்களின் சிந்துபாத் கதை போல தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கிராமங்களிலும், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களிடமும் நிகழும் சமத்துவமற்ற பார்வை உயர் மட்டங்களிலும் நிலவுகிறது என்பது கல்வியும், வாழ்க்கைத் தரமும் மனிதனின் அடிப்படை இயல்பை பெருமளவில் மாற்றிவிடவில்லை என்றே கவலைச் செய்தி சொல்கின்றன.

சென்னையில் இயங்கிவரும் குடும்ப நல ஆலோசனை மையங்களில் வருகின்ற பெரும்பாலான பிரச்சனைகள் பெண்கள் ஆண்களின் அடக்குமுறைக்குள் நிற்கவில்லை என்னும் மையத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் அலோசனை மையத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஒருவர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன. இப்படிப்பட்ட வன்முறைகள் நடைமுறை வாழ்வின் யதார்த்தம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆணாதிக்க சிந்தனையினர். இந்த சிந்தனையை பெண்ணடிமை பழகிப் போன பெண்களும் கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.

கல்வியிலும், தொழில் துறையிலும், பொருளாதார சூழலிலும், வாழ்க்கைத் தரத்திலும் என எல்லா நிலைகளிலும் வளர்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் வாழும் இந்த நாட்டில் தான் வருடம் தோறும் சுமார் இருபதாயிரம் இளம் பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு தொன்னூற்று ஐந்து விழுக்காடு ஏதோ ஒரு குடும்ப உறவினரே காரணமாய் இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகளை நடத்துவதில் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த கருத்துக் கணிப்பு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டுகிறது.

திருமணமாகி கணவனின் வீட்டிற்குள் வரும் பெண் எப்போது வேண்டுமானாலும், எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும், எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்னும் அச்சம் காரணமாகவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வெளிச்சத்துக்கு வராமல் குடும்பச் சுவர்களில் கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.

‘என் பொண்டாட்டியை அடிக்கக் கூடாதா’ எனும் ஆணாதிக்கக் குரலின் ஆணவமும், ‘உன் புருஷன் தானே அடிச்சான் வேற மனுஷன் இல்லையே ‘ என்னும் பெண்ணடிமை பழகிப்போன குரலும் இந்த சமூகத்தில் பெண்கள் சுயமாய் சிந்தித்து முடிவெடுத்து செயலாற்றும் தன்மையற்றவர்கள் என சித்தரிக்கிறது.அதனால் தான் தமிழக கிராமங்களில் அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைச் சொல்லக் கூடாது எனும் சட்டம் இருந்தபோதிலும் வட இந்தியாவில் பல மருத்துவ மனைகளில் சில குறிப்பிட்ட செய்கைகளின் மூலம் இவர்கள் இதைத் தெரியப்படுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபல பத்திரிகைகள் அம்பலப் படுத்தியிருந்தன.

பிறக்கப் போவது ஆண்குழந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பார்க்கும் படி சொல்வதும், லட்டு கொண்டு வாருங்கள் என்று சொல்வதும் என அவர்கள் கொண்டிருந்த செயல்முறை இன்னும் முழுமையாக ஒழிந்தபாடில்லை. இதன் காரணமாகத் தான் இன்னும் நூறு ஆணுக்கு எழுபத்தைந்து பெண்கள் என்னும் விகிதத்தை குஜராத் போன்ற மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.

தேசிய குடும்பநல அமைப்பு ஒன்று நிகழ்த்திய ஆய்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பத்து ஆறு விழுக்காடு பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவரால் கொடுமைப்படுத்தப் படுவதாகவும், மத்தியப் பிரதேசத்தில் நாற்பத்தைந்து , திரிபுராவில் நாற்பத்து நான்கு, மணிப்பூரில் நாற்பத்து மூன்று, பீகார் மாநிலத்தில் நாற்பது, தமிழகத்தில் இது நாற்பத்து இரண்டு விழுக்காடு என்றும் அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டுள்ளது.

அலுவலகங்களிலும் பெண் அலுவலர்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் பெரும்பாலும் வெளிவராமலேயே போய்விடுகின்றன. மேலதிகாரிகளின் பார்வையும், பேச்சும் காயப்படுத்துவதால் தான் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் மன அழுத்தம் அடைவதாக ( National Institute for Occupational Safety and Health ) NIOSH தெரிவிக்கிறது.

மன அழுத்த நோய்களுக்கு உள்ளாகும் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. இந்த மன அழுத்தம் அவர்களுக்கு பல விதமான நோய்களையும் கொடுக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்குக் கூட இவை காரணமாகி விடுகின்றன.

பெண்கள் மீதான வன்முறையும், பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கும் நமது பழைய கலாச்சாரங்களோடும், இலக்கியங்களோடும் இணைந்தே வளர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் கொடுமைகளின் வேர்களை வினாடி நேரத்தில் வெட்டி விடுதல் சாத்தியமில்லை.

மதங்களும் பெண்களைப் பார்க்கும் பார்வைக்கும், ஆண்களைப் பார்க்கும் பார்வைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்த மத நூல்கள் எல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட சூழலில் எழுதப்பட்டவை என்பதைத் தவிர வேறெதுவாகவும் இருந்து விட முடியாது.

பெண்களின் உடலின் இயற்கைச் சுழற்சிகளையே சகித்துக் கொள்ள முடியாமல், கல்வியறிவில் முன்னேறிய பின்னும் இன்றும் சபரிமலைக்குச் செல்வதற்கும், மசூதிக்குச் செல்வதற்கும் பெண்கள் மறுக்கப்படுகின்ற சூழலே இருக்கிறது.

கடவுளுக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்கும் கீழ்ப்படியுங்கள் என்று கிறிஸ்தவமும், தன் முகத்தை ஆடவர் கண்டால் கூட பெண்கள் வெட்கப்பட வேண்டும் என புத்த மதமும், பெண்கள் நம்பத்தகாதவர்கள் என்று ரிக் வேதமும், பெண்கள் பாலியல் மோகத்தால் துரோகிகளாகிவிடுவார்கள் என்று மனுதர்மமும் கூறுவது அவை ஆணாதிக்கச் சூழலில் எழுதப்பட்டவை என்பதையே உணர்த்துகின்றன.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் நிகழ்வதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐநா சபை முதல் இந்தியாவின் நாடாளுமன்றம் வரை இன்னும் பாலின சமநிலை ஏற்படவில்லை என்பதே நிஜம்.

அமெரிக்காவில் தினமும் நான்கு பெண்கள் வன்முறைக்குப் பலியாகிறார்கள். சுமார் ஆறு இலட்சம் பெண்கள் தாங்கள் அலுவலகங்களில் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆண்டுதோறும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். இவர்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் உடல்காயமும் படுவது குறிப்பிடத் தக்கது. ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இன்னும் பல இலட்சம் பேர் இத்தகைய நிகழ்வுக்குப் பலியானாலும் வெளியே சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்.

முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் பரிமளிக்கும் மனங்கள் அதிகரிக்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் போகின்றன. அத்தகைய சூழலை உருவாக்காமல் மனிதநேயம், உரிமை என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

0

குடும்ப வாழ்க்கை பலவீனமடைகிறதா ?

(இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)
வாழ்க்கை உறவுகளின் மீது கட்டப்பட்ட புனிதமான ஆலயத்தைப் போன்றது. இந்த ஆலயம் சிதிலமடைகையில் மனித மாண்புகளும், வாழ்வின் புரிதல்களும் அர்த்தமிழந்து போகின்றன.

உயரிய பண்பாடுகளினாலும், அடர்த்தியான கலாச்சார வாழ்க்கை முறையினாலும் உலகின் கவனத்தைக் கவர்ந்த இந்திய குடும்ப வாழ்க்கை முறை சமீபகாலமாகச் சரிவடையத் துவங்கியிருப்பது குடும்ப உறவு முறையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது.

பலவீனமான குடும்ப வாழ்க்கைக்கு மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டிய நிலை இன்று மாறி அடுத்த வீட்டு வாசலை நோக்கி விரல் நீட்டும் நிலை உருவாகி வருகிறது. விவாகரத்து விண்ணப்பங்களோடு வழக்கறிஞர்களைச் சந்திக்கும் நகர்ப்புறவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவர் புள்ளி விவரங்களோடு விளக்கி அதிர்ச்சியளித்தார்.

ஆழமாய் சிந்திக்கையில் பெரும்பாலான விவாகரத்துக்கள் மிகவும் சாதாரண காரணங்களுக்காகவே கோரப்படுகின்றன. மிக மிக முக்கியமான காரணம் கணவன் மனைவியரிடையே இன்றைக்கு குறைந்து போயிருக்கின்ற உரையாடல்கள்.

மாலை நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டுப் பேசும் குடும்பங்களில், ஒன்றாக இரவு உணவு அருந்தி குழந்தைகளோடு அளவளாவும் இல்லங்களில் உறவு விரிசல்கள் பெரும்பாலும் நிகழ்வதேயில்லை. கிராமப் புறங்களில் விவாகரத்து குறைவாய் இருப்பதற்கு இந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும், மனம் விட்டுப் பேசுவதற்கு அவர்களுக்கு வாய்க்கின்ற சந்தர்ப்பங்களுமே காரணமாகி விடுகின்றன.

இன்றைய அவசர உலகின் மாலை நேரங்களை தொலைக்காட்சியின் தொடர்கள் திருடிக் கொண்டிருப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் என்பதையும் மறுக்க முடியாது. இன்றைய தேதியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு தொலைக்காட்சித் தொடரிலேனும் பலமான அடித்தளமுள்ள ஒரு குடும்ப உறவு சித்தரிக்கப்படவேயில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

திருமணத்துக்கு முன் தாய்மை அடைவதும், மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொள்வதும், கணவனுக்குத் தெரியாமல் மனைவி இன்னொருவனை நேசிப்பதும் என தொலைக்காட்சித் தொடர் சித்தரிக்கும் கதா பாத்திரங்கள் எல்லாம் வாழ்வின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

தேவையற்ற சந்தேகங்களையும், ‘இப்படி இருப்பதில் தவறில்லை’ என்னும் சஞ்சல மனப்பான்மைகளையும், இதெல்லாம் சகஜம் போலிருக்கிறது என்னும் கலாச்சாரச் சீரழிவிற்குத் துணைபோகும் எண்ணங்களையுமே இவை பரப்புகின்றன.

கணவன் மனைவிக்கிடையேயான புரிதலும், விட்டுக் கொடுத்தலை தோல்வி என்று கருதாத மனப்பான்மையும் இருத்தலே போதுமானது குடும்ப உறவு பலமடைய. மனைவியின் கருத்துக்களைக் கேட்பது தவறென்று கருதும் ஆணாதிக்க சிந்தனையும், கணவனின் பேச்சைக் கேட்பது பெண்ணடிமையோ என குழம்பும் பெண்களின் மனநிலையும் குடும்ப உறவின் விரிசலுக்கான முக்கிய காரணிகள்.

பொருளாதார, உடலியல் சார்ந்த, முரண்பாடுகளுடைய எந்த பிற சிக்கல்கள் இருந்தாலும் உயரிய புரிதலுடைய குடும்பத்தில் உறவுகள் விரிசலடைவதில்லை என்கிறார் அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் கெஸ்லர்.

புதிதாக திருமணமானவர்களைப் பொறுத்தவரையில் பணம், நேரம், பாலியல் போன்றவை உறவு பலவீனத்துக்கான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணத்து முன்பாக திருமணத் தயாரிப்பாக உளவியல் மருத்துவரிடமோ, அல்லது பிரத்யேக ஆலோசனை மையங்களிலோ சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கின்றனர். இது புரிதலுடன் கூடிய மணவாழ்க்கையின் ஆரம்பத்துக்கு உதவும் என்பது அவர்களின் நம்பிக்கை. காரணம் தற்போதைய அமெரிக்கா பலமான குடும்ப உறவுகளைக் கட்டியெழுப்ப முடியாமல் திண்டாடி வருகிறது.

மணமுறிவு பிரச்சனைகளின் முடிவு என்று பலர் நினைக்கிறார்கள். அது பெரும்பாலான வேளைகளில் பிரச்சனைகளின் துவக்கம் மட்டுமே. பிரச்சனைகள் வரும்போது எதிர்கொண்டு அதை சுமூகமாக முடிப்பதற்காகத் தான் மனிதர்களுக்கு ஆறாவது அறிவு தரப்பட்டிருக்கிறது. மண முறிவு செய்து கொண்டபின் ஏற்படும் மன அழுத்தமும், அதனால் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும், சார்ந்திருப்போருக்கும் ஏற்படும் மன உளைச்சலும் மண முறிவு செய்தவர்களுக்கு மட்டுமே புரியும் விஷயம்.

மணவாழ்க்கை துன்பத்தை மட்டுமே தரும் குடும்பங்களுக்கு விவாகரத்து ஒரு நோய் நிவாரணி என்று எழும் கோஷங்களை ஐரிஸ் மருத்துவர் டொனாச்சா ஓ ஹோதா கடுமையாக எதிர்க்கிறார். நோயை விடக் கொடுமையான தீர்வு தான் நோய் நிவாரணியா ? என்று அவர் எதிர்கேள்வி விடுக்கிறார்.

அலுவலகங்களின் சுமையை குடும்பங்களுக்குத் தூக்கிச் செல்வதும், அலுவல் அழுத்தங்களை குடும்பத்திலுள்ளவர்கள் மீது காட்டுவதும் கூட உறவு விரிசலுக்குக் காரணமாகி விடுகின்றன. குடும்பம் என்பது சோகங்களை அடுக்கி வைக்கும் சரக்கு அறையோ, எரிச்சல்களை எறிந்து விளையாடும் இடமோ அல்ல. குடும்பம் அலுவலக அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமே தவிர அலுவலக அழுத்தம் குடும்பத்தைச் சிதைக்கக் கூடாது. இன்றைக்கு மென்பொருள் துறையினரிடையே அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு இதுவே பிரதான காரணம்.

ஜாதகப் பொருத்தம், ஜாதிப் பொருத்தம் பார்க்கும் நமது திருமணங்கள் பெரும்பாலும் தம்பதியரின் இயல்புகளைப் பார்ப்பதில்லை. திருமணத்திற்குப் பிறகு கணவனை மாற்றிவிடலாம் என்று மனைவியும், மனைவியை மாற்றி விடலாம் என்று கணவனும் கருதிக் கொள்வது ஒரு தவறான அணுகுமுறையாகும். மனித குணங்களில் சிலவற்றை மாற்றிவிட முடியும், ஆனால் இயல்பை யாரும் மாற்றி விடமுடியாது.

இந்தியாவில் மணமுறிவு என்பது மிகவும் அரிதாக இருந்த காலம்  மலையேறிவிட்டது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயிரம் பேருக்கு ஐந்து முதல் ஏழுவரை இருந்த இந்த மணமுறிவு, இன்று பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

மணமுறிவு நிகழ்வதில் ஸ்வீடன் நாடு முதலிடத்தைப் பிடிக்கிறது. இங்கு சுமார் அறுபத்து நான்கு சதவீதம் திருமணங்கள் மணமுறிவில் முடிகின்றன. பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாடுகளும் ஏறக்குறைய அதே இடத்தில் இருக்கின்றன.

பின்லாந்தில் சுமார் ஐம்பத்து ஆறு சதவீதம் திருமணங்களும், அமெரிக்காவில் சுமார் ஐம்பத்து மூன்று சதவீதம் திருமணங்களும், கனடாவில் நாற்பத்து ஐந்து சதவீதம் திருமணங்களும், பிரான்ஸ் நாட்டில் சுமார் நாற்பத்து மூன்று சதவீதம் திருமணங்களும், சிங்கப்பூரில் சுமார் பத்து சதவீதம் திருமணங்களும், ஜப்பானின் சுமார் இருபத்து ஏழு சதவீதம் திருமணங்களும் மண முறிவில் போய் முடிகின்றன.

அமெரிக்க திருமணங்கள் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை சுமூகமாக செல்கின்றன. அமெரிக்காவில் மண முறிவு அதிகமாக இருப்பதைப் போல மறுமணமும் அதிகமாகவே இருக்கிறது. மணமுறிவு செய்பவர்களில் சுமார் எண்பது சதவீதத்தினர் மறுமணம் செய்து கொள்கிறார்கள். முக்கால் வாசி மணமுறிவு வழக்குகளில் பெண்களே விண்ணப்பிக்கிறார்கள் என்கிறது சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஆய்வுகளின் அடிப்படையில் மண முறிவிற்கான காரணங்களை ஆராய்கையில் தம்பதியினரிடையே போதிய அளவுக்கு உரையாடல்கள் இல்லாமப் போதல், வேறு நபர்கள் மீது எழும் சபலம், மன அழுத்தம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுதல், போதைகளுக்கு அடிமையாதல், அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தல், குடும்ப வாழ்வில் நம்பிக்கையிழத்தல் போன்றவை மிக முக்கியமான காரணங்களாக கோடிடப்படுகின்றன.

கிறிஸ்தவ மதம் திருமண உறவை புனிதமான உறவாக மையப்படுத்துகிறது. கத்தோலிக்கத் திருச்சபை மணமுறிவைக் கடுமையாக எதிர்க்கிறது. எனினும் கிறிஸ்தவ நாடான அமெரிக்கா மணமுறிவில் முன்னிலையில் இருப்பது ஆன்மீக சிந்தனைகள் மக்களை நெறிப்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மணமுறிவினால் தம்பதியரை விட அதிகம் பாதிப்புக்குள்ளாவது அவர்களுடைய குழந்தைகள் தான். பெரும்பாலும் தந்தையை விட்டு தாயுடன் வாழ்க்கை நடத்தும் பிள்ளைகள் தங்கள் வாழ்வின் நிஜமான அக்கறை கொண்ட ஒரு வழிகாட்டியை இழந்து விடுகிறார்கள். வாழையடி வாழையாக இந்த உறவு விரிசல் குழந்தைகள் மனதிலும் பதிந்து விடுகிறது.

உலகளாவிய புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியா குடும்ப உறவில் பலமான நாடாகத் தோன்றினாலும் இன்றைய கலாச்சார மாற்றங்கள் தொடருமானால் இன்னும் ஓரிரு தலைமுறைகளுக்குப் பின் இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உறவுகள் நிலைக்க வேண்டுமானால் அன்றாடம் நிகழும் சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதுமானது. குடும்பம் என்பது தம்பதியர் தோழர்களாக வாழ்வது. இதில் ஆணாதிக்க சிந்தனைகளோ, ஆண் பெண் பாகுபாடுகளோ எழாமல் பார்த்துக் கொள்தல் அவசியம்.

தம்பதியரிடையே ஆழமான மனம் திறந்த உரையாடல்கள் நிகழ வேண்டியது அவசியம். நிகழும் கருத்து மோதல்களில் பேசும் வார்த்தைகள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மனதில் ஆறாத வடுவாக மாறிவிடக் கூடும் என்னும் கவனத்தோடு உரையாட வேண்டும். இருபுறமும் கூரான வாளைக் கையேந்தும் கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்.

தம்பதியர் வார்த்தைகளாலோ, செயல்களாலோ தங்கள் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்துவது உறவு ஆழமாக வழி வகுக்கும். அலுவலக வேலைகளுக்கு பாராட்டு எதிர்பார்க்கும் நாம் குடும்பம் சார்ந்த பணிகளைச் செவ்வனே செய்யும் போதும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதே சரியானதும் கூட.

முடிந்து போன பிரச்சனைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசாமலிருப்பதே பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்த்துவிடும். தேவையற்ற மூட்டைகளைத் தூக்கிச் சுமக்கும் கழுதைகளாக மாறாமல், ஆனந்த நிகழ்வுகளை மனதில் சுமந்து பறந்து திரிவதே சிறந்தது.

தேவையற்ற ஆசைகளுக்கு இடம் கொடாமலும், மற்றவர்களோடு தங்களை ஒப்பீடு செய்யாமலும் இருக்கப் பழக வேண்டும். ஆசைகள் என்பவை கடல் அலைகள் போல ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என விடாமல் வந்து கொண்டே இருக்கும். அவற்றில் விழுந்து விடாமல் நம் மனதை நாமே காத்துக் கொள்வது மிக அவசியம்.

ஒருவருக்கொருவர் புரிந்து நடப்பது மிகவும் முக்கியம். தவறு செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, தவறு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதிகாலை முதல் இரவு தூங்குவது வரை தன் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்தே நாட்களை செலவிட வேண்டும்.

இருவருமாக சேர்ந்து உணவு உண்பது, தனியே நடப்பது, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்பது போன்ற சிறு சிறு செயல்கள் எல்லாம் உறவின் உறுதிக்கு வலுசேர்க்கும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், உங்களை உங்கள் வாழ்க்கைத் துணை எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி நீங்கள் அவர்களை நடத்துங்கள். அது எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

·