பிளாக் செயின் 13

பிளாக்செயின் மொபைல்

Image result for blockchain

இன்றைய தொழில்நுட்ப உலகின் மாபெரும் வளர்ச்சி என ஸ்மார்ட்போன்களைக் குறிப்பிடலாம். கடந்த சில ஆண்டுகளில் அது கடந்துவந்த விஸ்வரூப வளர்ச்சி வியக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டின் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு வசீகரமான தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் களமிறங்குகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஸ்மார்ட்போன் ஒரு காட்டுத் தீயைப் போல ஏகப்பட்ட கருவிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

கடிதம்,மின்னஞ்சல், ஆடியோ சிஸ்டம், வீடியோ பிளேயர், கேமரா, பிரவுசிங் சென்டர்கள் என இவை விழுங்கிய கருவிகள் எக்கச்சக்கம். இப்போது கணினிகளையும் இது தேவையற்ற பொருளாக மாற்றியிருக்கிறது என்பதே நிஜம். எனினும் இந்த மொபைல் தொழில்நுட்பத்தில் இதுவரை பிளாக்செயின் நுழையவில்லை. அந்த முதல் சுவடை, முதல் வெள்ளோட்டத்தை சமீபத்தில் ஹைச்.டி.சி நிறுவனம் நிகழ்த்தியிருக்கிறது.

தனிநபர் தகவல் பாதுகாப்பின்மை என்பது இப்போது சர்வதேசப் பிரச்சினையாகியிருக்கிறது. பிரபல நிறுவனங்களெல்லாம் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கின்றன. ஆளானப் பட்ட சுந்தர் பிச்சையே கைதி போல கோர்ட் முன்னால் விளக்கமளிக்க வேண்டிய சூழலை இது உருவாக்கியிருந்தது.

நமது மொபைலில், இணையத்தில் நாம் நிகழ்த்தும் எல்லாம் பரிவர்த்தனைகளும் திருடப்படலாம் எனும் சூழலே இன்று நிலவுகிறது. நமது மொபைலில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான சென்சார்கள், ஜிபிஎஸ் டிராக்கர்கள், ஆப்கள் போன்றவையெல்லாம் நமது தகவலை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பிரபல நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கின்றன நமது தகவல்கள். பதிலுக்கு நமக்கு என்ன பயன் ? இந்த தகவல்களின் உரிமையாளர்கள் நாம் தானே ? சொந்தக்காரனுக்கு எந்த காப்பிரைட்டும் இல்லையா ? நமது தகவல்களினால் நமக்கு எந்த வருமானமும் இல்லையா ? இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்பு. இவற்றையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் தீர்த்து வைக்கலாம் என்பது தான் வசீகர அம்சம்.

நமது நடத்தை, நமது ஷாப்பிங், நமது ஹெல்த், வங்கி பரிவர்த்தனை, நமது இணைய பயன்பாடு எல்லாமே ஏதோ ஒரு நிறுவனத்திடம் இருக்கிறதே தவிர, நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய தகவலை இன்னொருவர் பயன்படுத்தினால் உங்களுக்கு அதற்குரிய ஒரு பலன் கிடைக்கிறது. எனில், உங்களுடைய தகவல் திருடப்படும் சூழல் மாறி நீங்களே உங்கள் தகவலை பகிரும் சூழல் உருவாகும் இல்லையா ? இதைத் தான் பிளாக் செயின் மொபைல் செய்யும் என்கிறார் ஹைச்.டி.சி நிறுவன தலைமை அதிகாரி ஃபில் சென்.

உங்களுக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதை யாரேனும் ஆக்கிரமித்தால் சும்மா பார்த்துக் கொண்டிருப்பீர்களா ? அப்படியானால் உங்களுடைய தகவலை யாரோ ஆக்கிரமித்தால் மட்டும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ? என அவர் கேள்வி எழுப்புகிறார். எப்படி கற்காலத்தில் உடல் வலிமை ஒரு மனிதனுடைய மதிப்பை நிர்ணயித்ததோ, இன்றைய யுகத்தில் தகவல்களே ஒரு மனிதனுடைய வலிமையை நிர்ணயிக்கின்றன. ஆனால் இதை யாரும் உணர்வதில்லை. தங்களுடைய தகவலினால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அத்தகைய உதாசீனமே பெரும் நிறுவனங்களின் பலம்.

ஹைச்.டி.சி தனது மொபைலுக்கு எக்ஸோடஸ் 1 என பெயரிட்டிருக்கிறது. பைபிளில் எக்ஸோடஸ் என ஒரு நூல் உண்டு. எகிப்தில் அடிமைகளாய் இருந்த சுமார் இருபது இலட்சம் எபிரேயர்களை மோசே எனும் விடுதலை வீரர் விடுவித்துக் கொண்டு வரும் நிகழ்வு தான் அந்த நூலின் அடிப்படை. அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் இந்த மொபைலுக்கு எக்ஸோடஸ் எனும் பெயரை இட்டிருக்கின்றனர். இன்றைக்கு பல நிறுவனங்களுக்கு அடிமைகளாய் இருக்கும் பயனர்களை சுதந்திரமாக்கி விடும் புதிய தொழில்நுட்பம் இது என்கின்றனர்.

இந்த மொபைலில் நமது தகவல்கள் வேறெந்த நிறுவனத்துக்கும் செல்லாது. பேங்க் லாக்கர்களைப் பயன்படுத்துவோருக்கு தெரிந்திருக்கும். நம்மிடம் ஒரு சாவி இருக்கும். வங்கியில் ஒரு சாவி இருக்கும். இரண்டு சாவியையும் போட்டால் தான் லாக்கர் திறக்கும். இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் அத்தகைய ஒரு சாவியை பயனரிடமே கொடுக்கிறது. தேவையானவற்றை அந்த பாதுகாப்புத் தளத்தில் நாம் போட்டு வைக்கலாம். நாம் விரும்பாமல் அந்த தகவல்களை யாரும் எடுக்க முடியாது என்பது தான் எளிமையான புரிதல்.

பகிரப்படுகின்ற தகவல்கள் எல்லாமே யாரும் பிரதியெடுக்க முடியாத தொழில்நுட்பத்திலும், செக்யூரிடி கீ யுடனும் தான் பகிரப்படும் என்பதால் தகவல் பாதுகாப்புக்கு உத்தரவாதம். இது டிஜிடல் உலகில் இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாய் இருந்தது. பிளாக் செயின் தான் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் பாடகர்கள், எழுத்தாளர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் போன்றோர் தங்களுடைய தகவல்களை சொந்தம் கொண்டாடவும், லாபம் பார்க்கவும் முடியும். சைபர் தகவல் திருட்டு குறையும்.

மொபைல் கேமிங் எனப்படும் விளையாட்டு ஏரியாவிலும், பல சீரியசான வேலைகளை பிளாக் செயின் செய்யப் போகிறது. கிரிப்டோகிட்டீஸ் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாகிறது. அதில் நீங்களே டிஜிடல் பூனையை வளர்க்கலாம். விளையாடலாம். அதன் மதிப்பு பயன்பாட்டுக்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு பூனை ஒருவரிடம் மட்டும் தான் இருக்கும். காப்பியடிக்கவும் முடியாது. இதை நீங்களே டிஜிடல் வெளியில் விற்கலாம், உண்மையான பணத்துக்கு ! என விளையாட்டு ஏரியாவையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டங்களுடன் பிளாக்செயின் களமிறங்குகிறது.

இலட்சக்கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டன. இலட்சக்கணக்கான ஆதார் திருடப்பட்டன போன்ற தகவல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். அத்தகைய சிக்கல் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழாது. ஒட்டு மொத்த தளத்தை முடக்குவதோ, ஒட்டு மொத்த தகவல்களையும் திருடுவதோ சாத்தியமே இல்லை.

இப்போதைக்கு ஒரே ஒரு சிக்கல் தான் இந்த பிளாக் செயின் போன்களில். ஒருவேளை உங்கள் போன் திருடப்பட்டால் என்னவாகும் ? உங்களுடைய டிஜிடல் பணம் அதில் மட்டுமே இருக்கும். உங்கள் டிஜிடல் சாவி அதில் மட்டுமே இருக்கும். எனில் என்ன செய்வது ? அதுவே இப்போதைய மிகப்பெரிய சவால். அதற்கான தொழில்நுட்ப தீர்வுகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக, சாவி தொலைந்து போனால் மீட்டெடுக்கும் வழிமுறையான சோஷியல் கீ ரெக்கவரி முறையை கொண்டு வருகிறது. இதொன்றும் கம்பசூத்திரமில்லை. பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஒரு மேப்பை பல துண்டுகளாகக் கிழித்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு துண்டை கொடுத்து வைப்பார்கள். எல்லாவற்றையும் சேர்த்தால் தான் முழு மேப் கிடைக்கும். அதே போல, நமது கீயை சின்னச் சின்ன துண்டுகளாகப் பிரித்து பலரிடம் கொடுத்து வைக்கும் வழிமுறையே இது.

ஒருவேளை கீ தொலைந்து போனால் நாமாகவே எல்லா துண்டுகளையும் எடுத்து, இணைத்து, கீயை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொருவரிடமும் ஒரு பாகம் மட்டுமே இருப்பதால் அவர்களால் அதை பயன்படுத்த முடியாது. யாரிடமெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதும் நமக்கு மட்டுமே தெரியும். இது தான் அந்த சாவியை மீண்டெடுக்கும் வழிமுறை.

இந்த பிளாக் செயின் மொபைலுக்கென தனியே புதிய ஆப்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை டிஆப்ஸ் ( டி சென்ட்ரலைஸ்ட் ஆப்ஸ்) என்கிறார்கள். இவை ஒரு தனிநபர் என்றில்லாமல் பீர் டு பீர் எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதனால் வேகமான சந்தைப்படுத்தல் சாத்தியமாகும்.

இந்த பிளாக்செயின் தொழில்நுட்ப போன் என்பது எதிர்காலக் கனவுகளுடன் சுவடு பதித்திருக்கும் அதி நவீன நுட்பம். இது வேகமெடுக்க நீண்ட காலம் ஆகலாம், ஆனால் ஒட்டு மொத்த மொபைல் பயன்பாட்டையே புரட்டிப் போடும் வலிமை அதற்கு உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம்

*

சேவியர்

Block Chain – 12

பிளாக் செயின் : புதிய இன்டர்நெட்

 

Image result for blockchain

பிளாக் செயின் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் ஜான்பவான்கள் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை, “நாளைய இணையம்” பிளாக் செயினில் தான் என்பது. அதற்கான மிக முக்கியமான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இரண்டு விஷயங்களை.

ஒன்று பில்ட் இன் இன்டெலிஜென்ஸ், அதாவது புதிய இன்டர்நெட் வெறுமனே தகவல்களை அள்ளி வருவதாக இல்லாமல் அறிவார்ந்த ஒரு தேடலாக இருக்கும் என்பது. அறிவார்ந்த மென்பொருட்களினால் கட்டமைக்கப்படுவது என வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று, பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ‘பல பிரதிகள்’ தேவையில்லை என்பது.

‘அறிவு புகுத்தப்பட்ட’ இணையம் என்ன செய்யும் ? அங்கே தான் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் வருகிறது. தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, மென்பொருள் மூலமாகவே சரியான பதில்களைத் தரும் என இவற்றைப் பற்றி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, உங்களுடைய ஐடன்டிட்டி அதாவது தனிநபர் அடையாளம் பிளாக் செயினில் பாதுகாப்பாய் சேமிக்கப்படும். பின்னர் நீங்கள் ஒரு வங்கியை தொடர்பு கொண்டாலோ, ஒரு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டாலோ உங்கள் அடையாளத்தை தனியே நிரூபிக்கத் தேவையில்லை. பிளாக் செயினே உங்களுடைய அடையாளத்தை சோதித்தறியும்.

உங்களுடைய வங்கிப் பரிவர்த்தனையை பாதுகாப்பாய் மாற்றும். இதே போல பல ஸ்மார்ட் கான்ட்ராக்ட்கள் மூலம் பல நிறுவனங்களை இணைக்கும். வங்கியிலிருந்து பணம் எடுத்து, அப்படியே லேன்ட் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, அதை அங்கேயே பரிசோதித்து, அப்படியே ஒரு கார் வாங்கி, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து, என பல நிறுவனங்களில் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படு வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.

இப்படி இணையத்தை ஒரு புதுமையான தளமாக மாற்ற பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பது நவீனத்தின் சிந்தனை. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை தனியே ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் ( பிரித்து வைக்கப்பட்ட) மென்பொருள் லேயர் (அடுக்கு ) கவனிக்கும். சேமிப்பை இன்னொரு அடுக்கு கவனிக்கும். செயல்பாட்டை இன்னொரு அடுக்கு கவனிக்கும் என பல விதங்களில் இதன் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.

பல பிரதிகள் தேவையற்ற இணையம் என்பதன் பொருள் என்ன ? நீங்கள் யூடியூபில் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் அந்த வீடியோவின் ஒரு பிரதியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது பொருள். வீடியோக்கள் எல்லாமே யூடியூப் நிறுவன சர்வர்களில் பாதுகாப்பாய் இருக்கும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஒரு வீடியோ பகிரும் தளம் இருந்தால் அது வீடியோக்களை ஒரே இடத்தில் வைக்காது. கட்டுப்பாட்டையும் அது எடுத்துக் கொள்ளாது.பல பிரதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.

ஒரு முறை இணையத்தில் அப்லோட் செய்து விட்டால் அதை வேறு யாரும் டெலீட் செய்யவும் முடியாது. அதை அந்த இணையத்தோடு இணைந்திருக்கும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அது ஒரே இடத்தில் இல்லாமல் உலகின் பல பாகங்களிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். வீடியோவை உருவாக்குபவர்கள் இதன் மூலம் நல்ல லாபத்தையும் சம்பாதிக்க முடியும். அதாவது, ஒட்டு மொத்த வருமானமும் யூடியூப் போன்ற ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்காமல், சார்ந்திருக்கும் பங்களிப்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பது தான் இதன் வசீகர சிந்தனை.

பிட்டியூப்.காம் எனும் தளம் முழுக்க முழுக்க பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது அதை சென்று பாருங்கள். அதன் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். காப்புரிமை வீடியோக்களின் மூலம் உண்மையான தயாரிப்பாளர்கள் பயனடைய அந்த தொழில்நுட்பம் நிச்சயம் கைகொடுக்கும்.

நீளமான வீடியோக்களை அப்லோட் செய்யலாம், விளம்பரம் இல்லாத வீடியோக்களைப் பார்க்கலாம், என்கிரிப்டட் நுட்பத்தில் பாதுகாக்கலாம் உட்பட பல்வேறு வசீகர அம்சங்களை பிட்.டியூப் தளம் தருகிறது.

இப்போதைய இணையம் வெப்2.0 என அறியப்படுகிறது. இந்த பெயரைச் சூட்டியது ஓரெய்லி மீடியா. 2004ம் ஆண்டு இந்த பெயர் வந்தது. இன்றைக்கு நாம் பார்க்கும் இணையம், அது சார்ந்த சமூக வலைத்தளங்கள் என ஒட்டு மொத்தமும் வெப் 2.0 ல் அடங்கி விடுகிறது. இதற்கு அடுத்த கட்டம் வெப் 3.0. இது அறிவார்ந்த இணையம் என அழைக்கப்படுகிறது. இதுவும் 2006ம் ஆண்டே ஜான் மார்க் ஆஃப் என்பவரால் எழுதப்பட்டது தான். ஆனால் அந்த கனவின் முழுமையான செயல்பாட்டை உருவாக்கும் நிலை இப்போது இந்த பிளாக் செயின் மூலமாக உருவாகியிருக்கிறது.

இந்த வெப் 3.0, பழைய முறையில் இருந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யும் எனும் நம்பிக்கை தொழில்நுட்ப உலகில் உள்ளது. இது பயனர்களை மையப்படுத்திய இணையம் என்பதால் அங்கீகரிக்கப்படாத, போலி பயனர்களையும் தகவல் திருட்டுகளையும் தடுக்க முடியும்.

இந்த புதிய இணையத்தில் தகவல்களின் பரிமாற்றத்தைப் பார்க்க வேண்டுமெனில், முழுமையாக டிராக் செய்யவும் முடியும். எளிமையாகவும் ஒளிவு மறைவற்றதாகவும் இந்த செயல்பாடு அமையும்.

தகவல்கள் அழியவே அழியாது எனும் அதிகபட்ச உத்தரவாதம் இன்றைய இணையத்தை விட பிளாக் செயின் சார் இணையத்தில் உண்டு. அதன் காரணம் மையப்படுத்தப்படாத தகவல் சேமிப்பு. அதே போல, இணையம் முழுமையாய் ஸ்தம்பிக்கும் வாய்ப்பு இதில் இல்லை. அதன் காரணமும் இந்த டிசென்ட்ரலைஸ்ட் முறை தான்.

இன்னொன்று நாம் பலதடவை பேசிய பாதுகாப்பு அம்சம். இதன் தகவல் பரிமாற்றங்களில் கிடைக்கக் கூடிய பாதுகாப்பானது மிகவும் வலுவானது.

பிளாக் செயின் தான் அடுத்த இணையம் என்று பேசும்போது ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். இன்டர்நெட் எனும் அடிப்படை விஷயம் இல்லாமல், பிளாக்செயின் இன்டர்நெட் இல்லை. இது அந்த அஸ்திவாரத்தில் கட்டியெழுப்பப்படப் போகும் வலுவான இணையம் அவ்வளவு தான்.

இந்த நுட்பத்தின் மூலம் அதிக பயனடையப் போகும் தளங்களில் மீடியா முக்கியமானது. காப்பிரைட்டட் பிரச்சினைகளை இது வெகுவாகக் குறைக்கும். தயாரிப்பாளர்களின் பண இழப்பு குறையும்.

இன்னொரு தளம் விளையாட்டு. பயனர்கள் பலர் இணைந்து விளையாடுவதும், அதன் மூலம் அவர்களுடைய பரிவர்த்தனைகளில் லாபம் பார்ப்பதும் என இதன் சாத்தியங்கள் அதிகம்.

அதே போல சட்டம் சார்ந்த விஷயங்களில் இது மிகவும் அதிகமாய் பயனளிக்கும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட் எனும் அறிவார்ந்த மென்பொருட்கள் மூலம் இல்லீகல் டாக்குமென்ட்களை விலக்கவும், பயனர்களுக்கு சரியான வழிகளைக் காட்டவும் பயனளிக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக பொருளாதாரம் சார்ந்த ‘பைனான்ஸ்” தளம் மிகவும் பயன்பெறும்.

இந்த வெப் 3.0 முழுமூச்சில் வரும்போது ஆப் களும் சென்ட்ரலைஸ்ட் ஆக இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டட் ஆக உருமாறும். அது இன்னொரு வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். அத்தகைய ஆப்களும், பரிவர்த்தனைகளும் இணையத்தின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது இணையத்தின் வேகம் குறைகின்ற சர்வதேசச் சிக்கல் இதன் மூலம் தீரும் என நம்பப்படுகிறது.

பிளாக் செயின் ஓவர் ஹைப் என கூறுவோரும் உண்டு. அவர்களுக்கான எனது டாப் 2 பதில்கள். உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவை இப்போது பிளாக் செயினை அரவணைத்திருக்கின்றன. துபாய், சீனா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் வணிகத்தை முழுக்க முழுக்க பிளாக் செயினில் நடத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கின்றன.

பிளாக் செயின் ஓவர் மிகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது உண்மையானால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்க சாத்தியமே இல்லை.

*

இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..

Image result for future relationship robo

ஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.

முன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.

இப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

வீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.

கொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குகள் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.

பின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.

இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.

கூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.

அன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.

திருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.

“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.

ஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் என எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.

நட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.

“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ?” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.

மனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.

வர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.

நம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவும் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.

ஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை என்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும்.

அழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.

நாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.

நின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.

அந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.

மனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.

அவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை !

*

சேவியர்

பேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி

Image result for microsoft hologram japanese

மும்மொழியல்ல, எம்மொழி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர் நுட்பம் இன்றைய வசீகர அம்சமாய் மாறியிருக்கிறது.  ஒரு காலத்தில் புனைக்கதை போல இருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் யதார்த்தமாகிக் கொண்டிருக்கின்றன.

ஹோலோபோர்டேஷன் என்ன என்பதை விளக்க, எந்திரன் படத்திலுள்ள ஒரு காட்சியை நினைத்தாலே போதும். மேடையில் ரஜினியின் ஒளி உருவம் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளிக்குமல்லவா ? அது தான் ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பத்தின் காட்சியமைப்பு. நமது உருவத்தை எங்கிருந்தும், எங்கே வேண்டுமானாலும் தோன்றச் செய்வது தான் இதன் அடிப்படை.

இந்த ஹோலோபோர்ட்டேஷனை இன்னும் வசீகரமாக்கி, தரத்தை அதிகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வியக்க வைத்திருக்கிறது மைக்ரோசாப்ஃட் நிறுவனம். நினைத்த இடத்தில் உருவத்தை தோன்றச் செய்வது மட்டுமல்லாமல், இடத்துக்குத் தக்கபடி மொழியைப் பேசச்செய்வது என நவீனம் புகுத்தியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஆற்றுகின்ற உரையை எப்படி ஹோலோகிராம் உருவம் ஒன்று அப்படியே ஜப்பானிய மொழியில் பேசும் என்பதை செயல்படுத்திக் காட்டினார் மைக்ரோசாஃப்டின் அஸூர் கார்ப்பரேன் வைஸ் பிரசிடென்ட் ஜூலியா வயிட் அவர்கள். ஹோலேலென்ஸ் 2 எனப்படும் ஹெட்செட்டை மாட்டியபடி, தனது உருவத்தையே மேடையில் ஹோலோகிராமாக தோன்றச் செய்து, அதை ஜப்பானிய மொழி பேச வைத்து கூட்டத்தை வியக்க வைத்தார் அவர்.

செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வெகு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது என்பதை இத்தகைய தொழில்நுட்ப வருகைகள் நிரூபிக்கின்றன.

பிற தொழில்நுட்பங்களை எல்லாம் இப்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தன்னோடு அரவணைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

உதாரணமாக, நாம் டைப் செய்வதை வாசித்துக் காட்டும் (டெக்ஸ்ட் டு ஸ்பீச் ) தொழில்நுட்பம். இதை அஸூர் ஸ்பீச் சர்வீசஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அஸூர் கொண்டு வந்த தயாரிப்பான “அஸூர் டிரான்ஸ்லேட்” தான் இதன் இன்னொரு முக்கியமான நுட்பம். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மொழி மாற்று மென்பொருளாகும். எந்த மொழியில் பேசுகிறோம், எந்த மொழிக்கு உரை மாற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் மென்பொருளே நமது மொழியை மாற்றித் தரும். இந்தத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தை ஜெப்பானிய மொழியாக மாற்றியதன் பின்னணியில் இயங்கும் மென்பொருள்.

குறிப்பிடவேண்டிய வியப்பூட்டும் அம்சம் என்பது “நியூரல் டெக்ஸ் டு ஸ்பீச் ” தொழில்நுட்பம் தான். இது தான் வெறுமனே உயிரற்ற வகையில் மொழி மாற்றம் செய்யாமல், நாம் எப்படிப் பேசுவோமோ அதே குரலில், அதே உச்சரிப்பில், அதே அழுத்தத்தில் உரையை மாற்றுகிறது. சொல்லப்போனால் நாமே முன்னின்று பேசுவது போன்ற ஒரு அக்மார்க் உணர்வைத் தருவது இது தான். இப்போதைக்கு நாற்பத்தைந்து மொழிகளில் பேசுவதற்கான கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

ஹோலோகிராம் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியைப் போல‌ ‘மிக்சட் ரியாலிடி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எதார்த்தமான உருவ வடிவமைப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “மிக்சட் ரியாலிடி கேப்சர் ஸ்டுடியோஸ்” செய்கிறது.

இது உருவாக்கியிருக்கும் எதிர்காலம் வியப்பானது. உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள ஒரு பேராசிரியர் நடத்துகின்ற பாடம், உலகின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்களின் இருப்பிடங்களில், அவர்களுடைய மொழியில் அவர் நேரடியாக வந்து பேசுவது போல் அமைந்தால் எப்படி இருக்கும் ? அந்தக் கனவை இது சாத்தியமாக்கித் தரும்.

Block Chain – 10

தேர்தலும், பிளாக் செயினும்

Image result for blockchain AND ELECTION

இப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாய் இருக்கக் கூடிய விஷயம் தேர்தலும், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரமும் தான். எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் தவறாய்ப் பயன்படுத்தலாம் என்றும், தொழில்நுட்ப அறிவுடையவர் யார் வேண்டுமானாலும் அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கலாம் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவதை அறிவோம்.

சிலர் அதை நிரூபித்ததாய் அடித்துச் சொல்கிறார்கள். சிலர் அப்படி ஒரு விஷயத்துக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். எது எப்படியானாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அமெரிக்காவில் இன்னும் டிஜிடல் வாக்குகள் அமல்படுத்தவில்லை என்பதை காரணம் காட்டுகிறார்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், பரந்து விரிந்த இந்தியா போன்ற தேசத்தில் டிஜிடல் வாக்களித்தலின் தேவை அதிகமாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனில், என்ன செய்யலாம் ? அதற்கான நம்பிக்கையையும் பிளாக் செயின் தருகிறது !

வாக்கெடுப்பில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை இணைத்து வெள்ளோட்டம் விட்டிருக்கிறது தாய்லாந்து தேசம். தாய்லாந்தின் நேஷனல் எலக்ட்ரானிக் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி சென்டர் அத்தகைய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. வாக்களிப்பில் நடக்கின்ற தில்லு முல்லுகளைத் தடுக்கவும், தகவல்களின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவும் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாக இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்தில் இதை கல்லூரிகள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றில் பரீட்சித்துப் பார்த்து பின்னர் பொதுத் தேர்தல் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு தென்கொரியாவும் இதே போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது நினைவிருக்கலாம். எல்லா ஆன்லைன் வாக்களிப்புகளும் பிளாக் செயின் தொழில் நுட்பக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

அமெரிக்காவிலுள்ள மேர்கு விர்ஜீனியாவிலும் இராணுவ வீரர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து தங்கள் வாக்கைப் பதிவு செய்ய ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கலாம் எனும் நிலை உருவானது. ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்ட இந்த முயற்சி விரைவில் அடுத்த கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இது எளிதான பணியல்ல, ஒட்டு மொத்த மென்பொருள் அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். வாக்களிப்பவரின் அடையாளங்களை உடனுக்குடன் சோதித்தறியும் நிலை வேண்டும் இப்படி பல நடைமுறை சவால்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் மீறி ஜனநாயகத்தின் மையத்தைக் காப்பாற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்தால் இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும் வரலாம்.

பிளாக் செயின் தொழில்நுட்பம் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையோ, தகவல்களையோ பார்த்துக் கொள்வது எனும் நிலையிலிருந்து மாறி, ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று எனும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

இன்னொரு மிகப்பெரிய மாற்றமாக இ.பில் மூலம் ஷிப்பிங் நடத்தும் முறையை ஐபிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் 28 டன் எடையுள்ள மேன்ட்ரின் ஆரஞ்ச் பழங்களை சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பியிருக்கிறது. முழுக்க முழுக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த இந்த பரிவர்த்தனை மிக சுமூகமாக முடிந்திருக்கிறது.

பொதுவாக கப்பல் பரிமாற்றங்களின் மிகப்பெரிய தலைவலி பேப்பர் ஒர்க், பில்லிங் போன்ற விஷயங்கள். இதன் மூலம் பரிவர்த்தனைகள் நீண்ட தாமதமாகும். தாமதத்துக்கு ஏற்ப பொருட்களைப் பாதுகாப்பது, அவற்றை சேமித்து வைப்பது என எல்லாமே ஏகப்பட்ட செலவுகளையும் இழுத்து வைக்கும். இப்போது இந்த பிளாக் செயின் தொழில்நுட்பத்தினால் அந்த சவால்கள் எல்லாம் மிக எளிதாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

கப்பல் சரக்கு பரிவர்த்தனைகளில் சுமார் 40 விழுக்காடு டாக்குமென்ட் ஃப்ராடுகள் நடக்கும் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்பம் அந்த சிக்கலை முழுமையாக தடை செய்து விட்டது. முழுமையான வெளிப்படையான தகவல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு பிளாக் செயின் வழிவகை செய்து விட்டது.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் பிளாக் செயின் தனது பாதங்களைப் பதித்தது என்பதை நாம் முன்பே பார்த்தோம். ஒரு மிகப்பெரிய பரிமாற்றத்தை அது வெள்ளோட்டம் விட்டு மிகத் துல்லியமாக வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை இப்போது அறிகிறோம். வழக்கமான முறைகள் எல்லாம் விரைவில் காலியாகி பிளாக் செயின் இந்தத் துறையில் கோலோச்சும் என்பதையே இது அழுத்தம் திருத்தமாய் நிரூபித்திருக்கிறது.

Block Chain – 9

பாட்ஸ் & பிளாக் செயின்

Image result for block chain bots

இன்றைய தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் நுட்பங்களில் ஒன்று பாட்ஸ். இந்த 2019ம் ஆண்டு தொழில் நுட்ப உலகில் கோலோச்சப் போவது பிளாக் செயின் மற்றும் பாட்ஸ் இணைந்த தொழில்நுட்பம் தான் என பல அறிக்கைகள் கற்பூரம் அடிக்காமல் சத்தியம் செய்கின்றன. எனவே இந்த இணையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அதென்ன பாட்ஸ் என தலையைச் சொறிய வேண்டாம். ரோபாட்ஸ் என்பதின் சுருக்கம் தான் பாட்ஸ். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் மென்பொருட்களை பாட்ஸ் என சுருக்கமாகச் சொல்லலாம்.

உதாரணமாக பேஸ்புக் போன்ற தளங்களில் உங்களுக்கு தகவல்களைத் தர உரையாடல் (சேட்) வசதிகள் இருக்கும். பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை சுடச் சுட அது தரும். அது மென்பொருளின் கைவரிசை என்பது தெரிந்திருக்கும். அதில் இருக்கும் நுட்பம் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் தான். அந்த பாட்ஸ் களை சேட் பாட்ஸ் என்று சொல்வார்கள். அதாவது சேட் செய்ற பாட்ஸ். இப்படி ஒவ்வொரு வேலை செய்யும் பாட் களையும் அந்த செயலோடு இணைத்து அழைப்பார்கள்.

வங்கிகள் போன்ற தளங்களில் இத்தகைய பாட்ஸ்களின் தேவை ரொம்ப அதிகம். வாடிக்கையாளர்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டியது இத்தகைய தளங்களில் ரொம்ப அவசியம். ஆனால் ஒரு சிக்கல்.

தொழில் நுட்ப உலகில் எதையுமே நம்ப முடிவதில்லையே. இந்த காலகட்டத்தில் “பாட்ஸ்” ஐ மட்டும் எப்படி நம்புவது ? ஒருவேளை நாம் ஒரு வங்கியின் தளத்துக்குச் சென்று பேசும் போது அங்கே நம்முடன் உரையாடுகின்ற பாட்ஸ் உண்மையில் ஒரு உளவாளியாய் இருந்தால் என்ன செய்வது ? உண்மையான வெப்சைட்டைப் போலவே போலிகள் உலவுகின்ற காலத்தில், உண்மையான பாட்ஸைப் போல ஒரு போலி உருவாவதில் ஆச்சரியம் இல்லையே.

உங்களுடைய வங்கிக்கணக்கு, பிறந்த நாள் உட்பட பல விஷயங்களை சேட் பாட்கள் கேட்கும். அவை போலியாய் இருக்கும் பட்சத்தில் நமது தகவல்களெல்லாம் திருடப்பட்டு விடும். அது நமக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஒரு ஆபத்தை எப்படித் தவிர்ப்பது ? நமது உரையாடல் பாதுகாப்பாய் தான் இருக்கிறது என்பதை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது ?

அதற்குத் துணை செய்கிறது பிளாக் செயின் தொழில்நுட்பம். பிளாச் செயினுடன் பாட்ஸ்களை இணைத்தால் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாய் இருக்கும். இந்தப் பாதுகாப்புக்காகத் தான் இன்றைக்கு பாட்ஸ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு கைகுலுக்குகிறது. பல நிறுவனங்கள் ஏற்கனவே பிளாக்செயினுக்குள் கட்டப்பட்ட நிலையில், மற்ற நிறுவனங்களும் மும்முரமாய் பிளாக் செயினை இழுக்க ஆரம்பித்திருக்கின்றன.

பிளாக் செயின் நுட்பம் டிஸ்ட்டிரிபியூட்டர் முறையில் அமைவதால் எத்தனை பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன, உண்மையான பரிவர்த்தனைகள் தானா என்பதையெல்லாம் அந்த வலைப்பின்னல்கள் சான்றளிக்கும். அத்தகைய பணிகளில் அமர பாட்ஸ்கள் சரியான நபர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது பிளாக் செயினில் நடக்கின்ற பரிவர்த்தனைகளை சோதித்தறிவது எல்லாம் பெரும்பாலும் ஆட்கள் தான். பாட்ஸ் தொழில்நுட்பம் அதை விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். பிளாக் செயினில் நடக்கின்ற ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் அலசி ஆராய்ந்து, தேவையான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த பாட்ஸ்கள் வடிவமைக்கப்படும். இரண்டு கட்ட பரிசோதனை இதில் நடக்கும். ஒன்று, பாட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட பாட்ஸ் தானா என்பது. இன்னொன்று, பரிவர்த்தனை சரியானது தானா என்பது. இந்த சோதனைகள் பாட்ஸ், பிளாக்செயின் இணைப்பினால் மட்டுமே சாத்தியமாகும்.

பிளாக் செயினில் பாட்ஸை இணைத்து ‘லாயர் பாட்ஸ்’ ஒன்றை ஸ்டார்ன்ஃபோர்ட் மாணவர் ஒருவர் உருவாக்கியிருந்தார். பார்க்கிங் டிக்கெட்களை அது அலசி ஆராய்ந்து வழக்குகள் ஏற்பதற்குத் தகுதி உடையவை தானா இல்லையா என்பதை கண்டறிந்து சொல்லும். அப்படி அந்த பாட்ஸ் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வழக்குகளை திருப்பி அனுப்பியது. பாட்ஸ்களின் பயன்பாடு எல்லா இடங்களிலும் இருக்கலாம் என்பதன் ஒரு சின்ன உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு படி மேலே போய் பிளாக் செயினின் வளர்ச்சியாக பாட் செயின் என ஒரு அமைப்பும் உருவாகியிருக்கிறது. பிளாக் களை வைத்து பிளாக் செயின் உருவாக்குவது போல பாட்ஸ்களை இணைத்து பாட்ஸ் செயின் உருவாக்குவது தான் இதன் எளிமையான சிந்தனை.

உலகெங்கும் தொழில்நுட்பத்தின் கிளைகள் பாட்ஸ்களை அதிக அதிகமாய் முளைப்பித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பாட்ஸ்களை ஒரு பாதுகாப்பான கட்டமைப்புக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான தேவை. சிறப்பான தரக் கட்டுப்பாட்டை பாட் செயின் தரும் என்கிறார் அந்த சிந்தனையை உருவாக்கிய ராய் மே.

பல நிறுவனங்களிலுள்ள பாட்ஸ்களை ஒரு செயினில் இணைத்து, பாட்ஸ்களின் செயல்பாடுகளை வரையறைக்குள்ளும், பாதுகாப்பான கண்காணிப்புக்குள்ளும் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம். நம்பிக்கைக்குரிய வகையில் பாட்ஸ்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை உருவாக்குவது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.

உலகெங்கும் உள்ள நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பாட்ஸ்கள் இருக்கின்றன. அவை எதிர்காலத்தில் மில்லியன் கணக்கான பாட்ஸ்களாக மாறும். அவற்றின் மூலமாக பல பில்லியன் தகவல்கள் பரிமாறப்படும். அத்தகைய சூழலில் பாட்ஸ்களை கண்காணிக்க வேண்டியதும், வரையறைப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

பாட்ஸ்களெல்லாம் ஒன்றிணையும் போது அவற்றுக்கிடையே உள்ள பரிமாற்றங்களை பிளாக்செயின் நுட்பம் பாதுகாப்பானதாய் மாற்றும். பாட்ஸ்களின் தகவல் பரிமாற்றங்களை அழிக்கவோ, மாற்றவோ முடியாது என்பதால் தகவல் திருட்டு நடக்காது. பாட்ஸ்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றின் நிலை என்ன என்பதையெல்லாம் ஒரு முழுமையான பார்வைக்குள் கொண்டு வரவும் முடியும் என்பதால் அங்கீகாரமற்ற பாட்ஸ்களின் தலையீடு இருக்காது.

பிளாக் செயினும், பாட்ஸ்களும் இணைந்து தொழில்நுட்ப உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடினமான பரிவர்த்தனைகளுக்கு பாட்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பழக்கம் இப்போதே ஆரம்பித்து விட்டது.

உதாரணமாக உங்கள் தொலைக்காட்சியின் வாரன்டி கார்டை பாட்ஸ் மற்றும் பிளாக்செயினில் சேமித்து வத்தால் அது பாதுகாப்பாய் இருக்கும். சில வருடங்களுக்குப் பிறகு அது தேவைப்பட்டால் “என்னோட டிவி வாரன்டி கார்டை குடு” என உங்கள் மொழியிலேயே கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய கேள்வியை நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் மூலமாக பாட்ஸ் அலசும். சில கேள்விகளைக் கேட்கும். அதற்குப் பதில் சொன்னால் போதும். தகவல் கடலில் தேடி உங்கள் தகவலை அது எடுத்துக் கொண்டு வரும். இது ஒரு சின்ன உதாரணம்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை மையமாய்க் கொண்டு நடக்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிளாக் செயினின் தேவையும், பங்களிப்பும் கணிசமாய் இருப்பதை அறிவோம். அத்தகைய இடங்களில் இன்னும் தரத்தையும், வேகத்தையும் அதிகப்படுத்த பாட்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கின்றனர். அது பரிமாற்றத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யவும், பண இழப்பு நேரிடாத பரிவர்த்தனைகள் செய்யவும் உதவியாய் இருக்கிறது.

பாட்ஸ்களைக் கற்றுக்கொள்ள இப்போது இணையத்திலும், நூல்களிலும் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. யூடியூப் தளத்தில் நிறைய அறிமுகப் பாடங்கள் இருக்கின்றன. இலவசமாகவே பாட்ஸ் உருவாக்கும் மென்பொருட்கள் கிடைக்கின்றன. பாட்ஸ்களை மாற்றியமைத்துப் பயன்படுத்தும் மென்பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிக் கற்றுக் கொள்வது பயனளிக்கும்.

பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என விருப்பம் உடையவர்கள் பிளாக் செயினுடன் சேர்த்து பாட்ஸ் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டால் வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ?

இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது ?

Image result for How to escape from social media threat

இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிடல் வெளியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது. இணைய பயன்பாட்டின் போது மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றையும் மீறி சில வேளைகளில் நமது ஆபாசப் படமோ, அல்லது ஆபாசமாய் மார்ஃபிங் செய்யப்பட்ட படமோ இணையத்தில் வரும் வாய்ப்புகளும் உண்டு.

அப்படி ஒரு அதிர்ச்சிச் சிக்கல் நம் முன்னால் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

முதலில் பதட்டத்தையும், பயத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகம் என்ன நினைக்கும், உறவினர் என்ன நினைப்பார்கள், எனது பெயர் என்னவாகும் என்பது போன்ற சிந்தனைகள் எதுவுமே தேவையற்றவை. வருகின்ற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் எனும் மனநிலை தான் முதல் தேவை. நாம் தவறான முடிவெடுத்தால் தான் நமது பெயர் எல்லோருக்கும் தெரியவரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் வருவது அச்சுறுத்தலாக இருந்தால், கொஞ்சமும் பயத்தை வெளிப்படுத்தாமல் பேசவேண்டியது மிக மிக அவசியம். நமது பயம் தான் எதிராளியின் ஆயுதம். உங்கள் படத்தையோ, வீடியோவையோ, உரையாடலையோ இணையத்தில் பதிவு செய்வேன், சமூக ஊடகங்களில் பகிர்வேன் என யாராவது மிரட்டினால் துணிச்சலாய் பேசுங்கள். இப்படிப்பட்ட பகிர்வுகள், மிரட்டல்கள் எல்லாமே சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டிஜிடல் மிரட்டல் வந்தால் அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வையுங்கள். குரலில் மிரட்டல் வந்தால் அதை ரிக்கார்ட் பண்ணி வையுங்கள். நபரைத் தெரிந்தால் அவரைப் பற்றிய தகவல்களைச் சேமியுங்கள். முதலில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லுங்கள். மீண்டும் மிரட்டல் தொடர்ந்தால் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யுங்கள்.

ஒரு வேளை உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராமலேயே உங்களுடைய படம் ஏதேனும் தளத்தில் பதிவானாலும் பயப்படத் தேவையில்லை. எல்லா வலைத்தளங்களுக்கும் ஒரு “காண்டாக்ட்” பகுதியும், மின்னஞ்சலும் இருக்கும். அனுமதியற்ற உங்களின் புகைப்படம் அவர்களுடைய பக்கத்தில் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் போன்ற ஆதாரங்களுடன் அவர்களுக்கு சமர்ப்பியுங்கள். விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை ‘அப்யூஸ்’ பகுதியில் விளக்குங்கள். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் படத்தை முற்றிலுமாக அழிக்க கேட்டுக் கொள்ளுங்கள்.

வீடியோ தளங்களிலும் உங்களுடைய வீடியோக்களை பதிவுசெய்திருந்தால், அது அனுமதியற்ற, சட்ட விரோதமானது என்பதை விளக்கி கடிதம் எழுதுங்கள். அது நிச்சயம் நீக்கப்படும். நீக்கப்படாவிடில் சைபர் கிரைமில் உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள். இன்றைக்கு சைபர் கிரைம் துறை வலுவடைந்திருப்பதால் இத்தகைய சட்ட விரோத விஷயங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

இப்போது தொழில் நுட்பத்தின் மூலமாக போட்டோ செர்ச், வீடியோ செர்ச் செய்து உங்களுடைய படங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடவும் முடியும். கேம் ஃபைண்ட் போன்ற பல ஆப்களும் இந்த பணியைச் செய்கின்றன. தவறான இடங்களில் இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுங்கள்.

இத்தகைய படங்கள், வீடியோக்களை இணையத்திலிருந்து அழிக்கவும், அவை ‘தேடுதல்’ களில் வராமலும் இருக்கவும் கூகிள் உதவும் என 2015ம் ஆண்டு கூகிள் நிறுவனம் அறிவித்திருந்தது கவனிக்கத் தக்கது. கூகிளின் ரிவர்ஸ் கூகிள் இமேஜஸ் ஆப்ஷன் இதற்கு உதவும். ஒரு வேளை ஃபேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக்குக்கு தகவல் கொடுங்கள், போட்டோ மேட்டிங் டெக்னாலஜி மூலம் அது அகற்றப்படும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படமாய் இருந்தாலும் கூட உங்கள் அனுமதியில்லாமல் ஒருவர் அதை பிற இடங்களில் பகிர்வது சட்டத்தை மீறும் செயல்.

எனவே இத்தகைய சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது வருமுன் காப்பது என்பதையும் மறக்க வேண்டாம்.

*

சேவியர்

#dailythanthi #writerxavier

பிளாக் செயின் 8

Image result for block chain engineers

பிளாக் செயின் என்பது தகவல்களைப் பல இடங்களில் சேமித்து வைக்கும் நுட்பம் என்பதையும், மிகவும் பாதுகாப்பானது என்பதையும், எப்படி ஒவ்வொரு பிளாக்கும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தைச் செய்கிறது என்பதையும், எந்தெந்த தளங்களில் இது பயன்படுகிறது என்பதையும் கடந்த வாரங்களில் பார்த்தோம்.

இன்றைக்கு ‘இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ்” எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் இந்த பிளாக் செயின் எப்படி இணைகிறது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

இணையம் என்பது தகவல்களின் அடிப்படையில் இயங்கக் கூடிய ஒரு தொழில்நுட்பம். டிஜிடல் தகவல்களே அதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. இப்போது நமக்கு என்ன தேவையென்றாலும் கூகிளில் சென்று தேடுகிறோம், அது எங்கெங்கோ இருக்கின்ற தகவல்களை எல்லாம் அள்ளிக் கொண்டு தருகிறது. எங்கோ ஓரிடத்தில் உள்ளீடு செய்யப்படுகின்ற டிஜிடல் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த செயல் நடக்கும். எங்கும் பதிவு செய்யப்படாத தகவல்களை கணினி தராது. இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா என வைத்துக் கொள்ளலாம்.

அப்படியானால் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என்பது என்ன ?. சுருக்கமாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமெனில் உலகிலுள்ள பொருட்களை இணைக்கும் ஒரு இணைய வலை என சொல்லலாம். அதாவது உலகிலுள்ள பொருட்களையும் இணையத்தில் இணைக்கும் வசதி.

உதாரணமாக் அகூகிளில் சென்று என்னோட கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலை, பாத்து சொல்லு என கேட்டால், கூகிளால் பதில் சொல்ல முடியாது. காரணம் கார் சாவி எந்த ஒரு வகையிலும் இணையத்தோடு இணைக்கப்படவில்லை. ஒருவேளை கார்சாவியில் ஒரு சென்சாரைப் பொருத்தி, அந்த சென்சார் தரும் தகவலை இணையத்தில் சேமித்தால், கார்சாவியை கூகிள் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

அதாவது, கார்சாவியிலிருந்து வருகின்ற சிக்னல் தகவலைப் பயன்படுத்தி, கூகிள் தனது ஜிபிஎஸ் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது நுட்பத்தின் மூலமாகவோ சாவியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துக் கொடுக்கும். இப்படி சாதாரண பொருட்களை இணையத்தோடு இணைக்கும் நுட்பம் தான் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்.

அந்த தொழில்நுட்பம் இப்போது பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு இணைந்து ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக செக்யூரிடி சார்ந்த விஷயங்களில் இந்த இணைப்பு மிகப்பெரிய பலனைக் கொடுத்திருக்கிறது. ஐ.ஓ.டி கருவிகளிலிருந்து பெறப்படுகின்ற தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பிளாக் செயின் கை கொடுக்கிறது.

இதன் மூலம் மனித வேலை எதுவும் இல்லாமல், கருவிகளே தங்களுக்குள் பேசிக்கொண்டு, தேவையான விஷயங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கின்ற சூழல் உருவாகும். இது மனித தவறுகளை முற்றிலும் அழித்து விடும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட்களை ஐ.ஓ.டி வலைப்பின்னலிலேயே உருவாக்கி ,மனித பரிசீலனைகள் இல்லாமலேயே மெஷின்களே ஒத்துக் கொள்ளும் நிலை உருவாகும்.

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்தை பிளாக் செயினில் இணைக்கலாமா எனும் சிந்தனைக்கு சர்வதேச அளவிலான பெரும்பாலான நிறுவனங்கள் வலிமையான ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கின்றன. அதை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

முதலில் இதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரைவெட் பிளாக் செயினில், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸை இணைத்து சில நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக மூன்று விஷயங்களில் இந்த முயற்சி பெரும் பயன் அளித்திருக்கிறது. ஒன்று, பாதுகாப்பு. இரண்டு, குறைந்த செலவு. மூன்று, வேகமான செயல்பாடு.

இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கொண்டு வருகின்ற தகவல்கள் திருடப்படக் கூடியவையாக இருப்பது இன்றைய தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சவால். அந்த சவாலைத் தான் பிளாக் செயின் முதலில் மேற்கொள்கிறது.

உதாரணமாக, நிறுவனங்கள் தங்களுடைய இ.ஆர்.பி தகவல்களை எப்போதுமே மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென விரும்பும். அவை இப்போது இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே பிளாக் செயின் கட்டமைப்பில் கட்டி வைத்தால் பாதுகாப்பானது ஊர்ஜிதப்படுத்தப்படும் என்பதே பெரிய நிறுவனங்களின் சிந்தனை.

இன்டர் நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பம் என்பது தனித்து இயங்க முடியாது. இன்னொரு தொழில்நுட்பத்தோடு இணைந்து தான் எப்போதுமே இயங்கும். பிற நவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான தகவல்களை அளித்துக் கொண்டே இருக்கும். எனவே தான் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்தோடு பிளாக் செயின் இணையும் போது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கின்றன.

இன்றைய மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் அவை ஸ்மார்ட் ஹாஸ்பிடல்ஸ் என உருமாறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கருவிகள் தகவல்களை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஐசியு போன்ற அறைகளில் சென்சார்கள் நோயாளியின் உடல் நிலையையும், சூழ்நிலையையும் கவனித்து தகவல்களை மருத்துவர்களுக்கும் கணினிகளுக்கும் ஆட்டோமெடிக்காக அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

அதே போல பெரிய டிராபிக் சிக்னல்கள் சென்சார்களின் உதவியுடன் தன்னிச்சையாக டிராபிக் ஒழுங்கை அமைக்கிறது. விதிமீறல்களைப் பதிவு செய்கின்றன. அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஸ்மார்ட்டாக இவை எடுக்கின்ற இந்த முடிவுகளால் டிராபிக் சிக்னல்களெல்லாம் ஸ்மார்ட் சிக்னல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் பிலடெல்ஃபியா டிராபிக் சிக்னல்கள் முழுவதும் ஸ்மார்ட் சிக்னல்களாக மாறியிருப்பது ஒரு உதாரணம்.

அதே போல வீடுகளும் ஸ்மார்ட் ஹோம்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வீட்டின் கதவுகள் உரிமையாளர்களின் முகம் கண்டவுடன் திறக்கின்றன. அறையின் தட்ப வெப்பம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. வெளிச்சம் தேவைக்கு ஏற்ப தானாகவே மாறிக் கொள்கிறது. டிவி, காபி மெஷின், ஏசி என சர்வமும் சென்சார்கள் மூலமாக இணைந்து கொள்கின்றன.

இப்படி “ஸ்மார்ட்” ஆக மாறிக் கொண்டிருக்கும் எல்லா இடங்களிலும் கோலோச்சும் தொழில்நுட்பம் இந்த ஐ.ஓ.டி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தான். வயர்லெஸ் சென்சார்ஸ் நெட்வர்க் மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடன்டிஃபையர் போன்றவை இந்த தொழில்நுட்பத்துக்குத் துணை செய்கின்றன. . Wireless Sensors Networks (WSN) &Radio Frequency Identification (RFID)அதனால் தான் அதன் வீச்சும் தேவையும் அதிகமாக இருக்கிறது. இப்படி இவை சகட்டு மேனிக்கு குவித்துக் கொட்டப்படும் தகவல்களில் ஏராளமான சென்சிடிவ் தகவல்களும் அடக்கம். அவை இப்போது ‘சென்ட்ரலைஸ்ட்’ தகவல் தளங்களில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன.

இந்த தகவல்கள் திருடப்படுமாயின் அது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்கமாகவே அமையும். எனவே தான் இத்தகைய முக்கியமான புராஜக்ட்களை பிளாக் செயின் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது புரிந்திருக்கும் ஏன் பிளாக் செயினுடன், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில் நுட்பம் இணைய விரும்புகிறது என்பதன் அடிப்படை நோக்கம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், நிறுவனங்களிலுள்ள ஒட்டு மொத்தத் தகவல்களைப் பதிவு செய்வதையும், அதை உடனுக்குடன் கணினிக்குக் கொண்டு வருவதையும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கவனித்துக்கொள்ளும். அதை பாதுகாப்பாய் வைப்பதையும், நம்பிக்கைக்குரிய வகையில் பயன்படுத்துவதையும் பிளாக் செயின் எடுத்துக் கொள்ளும். அதற்காக வலுவான ஒரு என்கிரிப்ஷன் நுட்பத்தை அது பயன்படுத்தும். இப்படி இரண்டும் இணையும் போது முழுமையான பலனைப் பெற முடியும்.

பிளாக் செயினைப் படிக்க விரும்பும் மாணவர்களும்,வல்லுநர்களும் இன்நெட் ஆஃப் திங்க்ஸ் குறித்த படிப்பையும் படிப்பது மிகவும் பயனளிக்கும். எப்படியெல்லாம் பிளாக் செயினை பயனுள்ள வகையில் ஐ.ஓ.டி யுடன் இணைக்கலாம் போன்ற தெளிவு அப்போது தான் கிடைக்கும்.

லிப்ரா ! அடங்குமா ? அதிரவைக்குமா ?

லிப்ரா ! அடங்குமா ? அதிரவைக்குமா ?

Image result for libra currency

லிப்ரா, நாளைய உலகை ஆட்டிப் படைக்கும் என கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யும் பொருளாதார வல்லுநர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். லிப்ரா என்றதும், ஏதோ துலாம் ராசி காரர்களுக்குக் கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம் என நினைக்காதீர்கள், இந்த லிப்ரா வேறு சமாச்சாரம். டிஜிடல் உலகின் பொருளாதாரச் சிம்மாசனத்தை ஆக்கிரமிக்கப்போகும் புதிய பணம்.

இந்தப் பணத்தை அறிமுகப்படுத்தப் போவது பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம். உலகிலுள்ள இருபத்தேழு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இந்த டிஜிடல் பணத்தை அவர்கள் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.

ஏன் இந்த லிப்ரா எனும் பெயர் ? ஒருவேளை ஃபேஸ் புக் நிறுவனரான மார்க் ஸூக்கர்பர் க்கின் ராசி இதுவாக இருக்குமோ என குழம்ப வேண்டாம். லிப்ரா என்றால் நீதி என்று பொருள், பிரஞ்ச் மொழியில் இதற்கு ‘சுதந்திரம்’ எனும் பொருளும் உண்டு. அதனால் தான் இந்த பெயரை தேர்வு செய்தோம் என்கிறார் லிப்ரா டிஜிடல் பணத்தின் திட்ட வல்லுநர்.

ரூபாய், டாலர், பவுண்ட், திராம்ஸ் போன்ற பண வகைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன டிஜிடல் பணம் ? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் டிஜிடல் உலகில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை நிறைவேற்ற உருவாக்கப்படுகின்ற ஒரு புதிய வகை குறியீட்டுப் பணம் எனலாம். இந்தப் பணத்தை எந்த ஒரு நாட்டின் அரசும் உருவாக்காமல் தொழிலதிபர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பது தான் இதில் விசேஷம்.

கிரிப்டோகரன்சி (குறியீட்டு நாணயம்) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி இன்றும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு டிஜிடல் கரன்சி. இதை சர்வதேசப் பயன்பாட்டுக்கும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொடுக்கலும், வாங்கலும் அனுமதிக்கப்படுகின்ற நிறுவனங்களுக்கிடையே இது பயன்படுத்தப்படுகிறது.

பழையகாலத்திலுள்ள பண்டமாற்று முறையை கொஞ்சம் யோசியுங்கள். என்னிடம் அரிசி இருக்கிறது, உன்னிடம் கோதுமை இருக்கிறது. நான் அரிசியைக் கொடுக்கிறேன். எனக்கு கோதுமையைத் தருகிறீர்கள். அளவு எவ்வளவு என்பதை நாமே முடிவு செய்து கொள்கிறோம். இந்த பண்டமாற்று முறையின் ஒரு அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வடிவமாகத் தான் கிரிப்டோகரன்சி இருக்கிறது.

கிரிப்டோகரன்சிக்கும் லிப்ராவுக்கும் சம்பந்தமில்லை. காரணம் கிரிப்டோகரன்சி “மக்களால் நான், மக்களுக்காக நான்” எனும் சிந்தனையின் அடிப்படையிலானது. இதற்கு எந்த தனி நிறுவனமும் பொறுப்பல்ல. பயன்பாட்டுக்கு ஏற்ப இந்த கிரிப்டோகரன்சியின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.

லிப்ராவோ, “நிறுவனங்களால் நான், நிறுவனங்களுக்காக நான்” எனும் சிந்தனையின் அடிப்படையிலானது. நிறுவனங்கள் தங்களுக்குள்ளே இந்த கரன்சியைப் பயன்படுத்தும். நாம் கொஞ்சம் பணம் கொடுத்து அதற்கு இணையான லிப்ராவை வாங்கிக் கொண்டால் அதைக் கொண்டு நாம் அங்கீகரிக்கப்படும் இடங்களிலெல்லாம் இணையப் பரிவர்த்தனை நடத்த முடியும். இதை செயல்படுத்த சர்வதேச அளவில் “லிப்ரா அசோசியேஷன்” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்.

இந்தப் பரிவர்த்தனையை சர்வதேச அளவிலும் நாம் நடத்த முடியும். பத்து லிப்ரா என்பது இந்தியாவிலும், அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் ஒரே மதிப்பு தான். எனவே மற்ற பண வகைகளைப் போல, “கன்வர்ஷன்” மதிப்பு பற்றிய கவலை இதில் இல்லை. இந்த லிப்ரா பணத்துக்கு இணையான பணமோ, சொத்தோ இந்த நிறுவனங்களால் முதலீடு செய்யப்படும் என்பது தான் கிரிப்டோகரன்சிக்கும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம்.

இரண்டுக்கும் இடையேயான மிகப்பெரிய ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டுமே ‘பிளாக்செயின்’ எனப்படும் மென்பொருள் கட்டமைப்பில் இயங்குகின்றன என்பது தான் அது. பிளாக்செயின், இன்றைய தொழில்நுட்ப உலகை வசீகரித்து, ஆக்கிரமித்து, ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். ஏராளமான வேலை வாய்ப்புகளையும், புதுமைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற தொழில்நுட்பம்.

பேஸ்புக் நிறுவனமும், வாட்ஸப் நிறுவனமும் இப்போது ஒரே நிறுவனம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகில் எல்லா மூலை முடுக்கிலும் உள்ளவர்கள் இந்த வாட்ஸப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். குத்துமதிப்பாக சுமார் 250 கோடி பயனர்கள் வாட்ஸப்புக்கு இருக்கிறார்கள். இந்த லிப்ரா குறிவைத்திருப்பது இவர்களைத் தான். வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்புவது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிதாக இந்தப் பணப் பரிவர்த்தனையை பேஸ்புக் நிறுவனம் கட்டமைக்கிறது.

வங்கிக்கணக்கு ஏதும் தேவையில்லை, நிஜப் பணத்தைக் கையில் வைத்திருக்கவும் தேவையில்லை, லிப்ரா மட்டும் இருந்தால் போதும் எனும் சூழலை உருவாக்க ஃபேஸ்புக் நிறுவனம் முயல்கிறது. அதற்காக ஒரு டிஜிடல் பர்ஸையும் அது தருகிறது. அதற்கு கேலிப்ரா என பெயரிட்டிருக்கிறார்கள். அந்த டிஜிடல் பர்ஸில், டிஜிடல் பணத்தைச் சேமித்து, டிஜிடல் பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். தேவை ஒரு ஸ்மார்ட்போனும், இன்டர்நெட் கனெக்ஷனும் மட்டுமே.

கிரிப்டோகரன்சியை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதே போல இந்த லிப்ராவையும் அவை நிராகரிக்கலாம். அப்படிப்பட்ட நிராகரிப்பு நேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக பயனாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதத்தை நல்கும் திட்டத்தையும் ஃபேஸ்புக் வகுத்து வருகிறது. கிரிப்டோகரன்சியைப் போல அதிரடி ஏற்ற இறங்கங்கள் இல்லாமல், சர்வதேச பண மதிப்புக்கு ஏற்ற வகையிலான மாறுதல்களே லிப்ராவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல எப்போது வேண்டுமானாலும் லிப்ராவை டாலர் போன்ற பிற பணமாகவோ, பிற பணங்களை லிப்ராவாகவோ மாற்றிக் கொள்ளலாம் என்பதும் ஒரு வசீகர அம்சம்.

இது நிச்சயம் வெற்றியடையும் எனும் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் இத்துடன் விசா, மாஸ்டர்கார்ட், உபர், பேயூ, வோடபோன், ஈபே, ஸ்போர்ட்டிஃபை போன்ற பிரபல நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. இவையெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்திலும், பணப் பரிவர்த்தனை தளத்திலும், நெட்வர்க்கிங்கிலும் கோலோச்சுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர்கள் உருவாக்கும் இந்த லிப்ராவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த பணம் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் எனவும், தீவிரவாதச் செயல்களுக்கு இந்தப் பணம் துணை செய்யலாம் என்பதும் இதை எதிர்ப்பவர்களின் வாதமாக இருக்கிறது. அதே போல தனிநபர் தகவல்களை வைத்து பேஸ்புக் நிறுவனம் வர்த்தகம் செய்கிறது எனும் குற்றச்சாட்டும், இந்த லிப்ராவுக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது.

ஒருபுறம் இது சர்வதேச பணத்தையெல்லாம் சுருட்டிப் பரணில் போட்டு அரசாளும் என சொல்லப்படுகிறது. இன்னொரு புறம், இதெல்லாம் ஓவர் பில்டப். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றும் வாதங்கள் எழுகின்றன.

ஃபேஸ்புக் இப்படி பணப் பரிவர்த்தனைக்குள் நுழைய முயல்வது இது முதல் முறையல்ல. 2011 ல் ஃபேஸ்புக் கிரடிட்ஸ் எனும் முறையை அறிமுகப்படுத்தியது. அது வெற்றியடையவில்லை. 2012ல் ஃபேஸ்புக் கிஃப்ட்ஸ் எனும் முறையை அறிமுகப்படுத்தியது, அதுவும் வெற்றியடையவில்லை. 2015ல் ஃபேஸ்புக் பேய்மென்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இப்போது லிப்ரா நுழைகிறது. இது வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

*

சேவியர்

பிளாக் செயின் 7

Image result for block chain engineers

பிளாக் செயின் பற்றி ஆஹா ஓஹோன்னு சொல்றீங்க, சரி ! அதெல்லாம் இருக்கட்டும். இப்போ நான் பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்குள்ள போணும். அதைக் கத்துக்கணும். பிளாக் செயின் டெவலப்பர் ஆகணும். அதுக்கு என்ன வழி ? இந்த வாரம் அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

நவீன தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட், மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எல்லாமே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள். அதே போல தான் இந்த பிளாக் செயின் தொழில்நுட்பமும் கணினி சார்ந்த தொழில் நுட்பமே.

எனவே, கணினி சார்ந்த ஒரு பட்டம் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களின் அடிப்படைத் தேவை. ஒருவேளை எம்சிஏ போன்ற முதுகலைப் படிப்பு இல்லாதவர்கள் கணினி இளங்கலையை வைத்துக் கொண்டு பிளாக் செயினுக்குள் நுழையலாம். பி.ஈ போன்ற எஞ்சினியரிங் படிப்பு படித்தவர்களும், எம்.ஈ போன்ற முதுகலை எஞ்சினியரிங் படித்தவர்களும் இதில் தாராளமாக நுழையலாம்.

கணினி மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் இந்த துறையில் நுழையலாம். ஒருவேளை அவர்கள் கணினி பட்டப்படிப்பு பெறாதவர்களாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், கணினி பட்டப்படிப்பு அவசியம். அது இல்லாத பட்சத்தில் கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்த நல்ல அனுபவங்கள் இருந்தாலும் போதுமானது.

பழைய காலத்தில் ஒரு விதமான ஹேர்ஸ்டைல், ஜீன்ஸ் எல்லாம் வைத்திருந்தோம். பிறகு அவையெல்லாம் பழைய சங்கதிகளாகி, புதிய ஸ்டைல்கள் இடம்பிடித்தன. காலச் சுழற்சியில் பழைய ஸ்டைல்கள் புதிதாக மீண்டும் முளைத்து வரும். இது வாடிக்கை !

அதே போல, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கணினி மென்பொருள் சி++. பிறகு வந்த புதிய தொழில்நுட்பங்களின் அலையில் கொஞ்சம் அமுங்கிக் கிடந்தது. இப்போது மீண்டும் முளைத்து வந்து பிளாக் செயினுக்கு கைகொடுக்கிறது.

பிளாக் செயினில் அதிக சர்வர் சைட் ப்ரோக்ராமிங் தேவைப்படுவதால் இந்த சி++ மென்பொருள் முக்கியமானதாய் மாறிவிட்டது. அந்த மென்பொருளை கற்றுக் கொள்ளுங்கள். அது ரொம்பவே பயனளிக்கும். கணினி பாடம் படிப்பவர்கள் கல்லூரியிலேயே சி++ படித்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு அது பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சி++ தெரியாதவர்களெனில் ஜாவா படித்திருந்தாலும் பயனளிக்கும். ஜாவா மென்பொருளும், சி++ மென்பொருளும் ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் கான்செப்ட் என்பது மென்பொருட்களோடு பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். எனவே சி++ தெரியாதவர்கள் ஜாவா மென்பொருளைக் கற்றுக் கொள்ளலாம்.

கிரிப்டோகிராஃபி (Cryptography) பற்றி தெரிந்து கொள்வது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு நிச்சயம் கைகொடுக்கும். கிரிப்டோகிராபி தான் பிளாக் செயின் பரிவர்த்தனையின் மையமாய் இழையோடும் விஷயம். எனவே அதைக் குறித்த பயிற்சிகளை எடுக்கலாம். பாதுகாப்பு விஷயங்களைப் பொறுத்தவரை பிளாக் செயின் முன்னிலையில் இருப்பது நாம் அறிந்ததே. கிரிப்டோஎக்கனாமிக்ஸ் பற்றி படிப்பது பிளாக் செயின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு வலுவூட்டும்.

என்கிரிப்ஷன், டிகிரிப்ஷன் (Encryption, Decryption) தொழில்நுட்பம் இன்றைக்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்களை அடைந்துள்ளது. தகவல்கள் எல்லாம் டிஜிடல் மயமானதால் அதை பாதுகாக்க இந்த என்கிரிப்ஷன் நுட்பங்கள் தேவைப்படும். இவை மிகப்பெரிய மதிப்பு மிக்கவை. பிட்காயின் பயன்படுத்தும் என்கிரிப்ஷன் அல்காரிதத்தின் விலை 30 ஆயிரம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, டிஸ்ட் ரிபியூட்டட் கம்ப்யூட்டிங் (distributed computing) பற்றித் தெரிந்து கொள்வதும், அதைக் குறித்த பாடங்களைப் படிப்பதும் பயனளிக்கும். டோரண்ட் இணையதளங்களைப பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். அது பீர் டு பீர் (peer-peer) எனப்படும் டிஸ்றிபியூட்டர் முறை தான். ஆனால் டோரண்ட் வசீகரிக்கவில்லை. அதிக பயன்பாடு இருந்தும் அது அதிக அளவு நம்பிக்கைக்குரியதாக மாறவில்லை. காரணம் பீர் கணெக்ஷன் கொடுப்பவர்களுக்கு அது எந்த பயனையும் அளிக்கவில்லை. அதே போல, வைரஸ்கள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை.

டோரண்ட் என்றாலே இன்றைக்கு எல்லோரும் பயந்தடித்து ஓடக் காரணம் அது ஆபத்தானது எனும் சிந்தனை தான். பாதுகாப்பானதாகவும், பயனுள்ள வகையிலும் அது இருந்திருந்தால் இன்று அது மிகப்பெரிய உயரத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த டிஸ்ட்டிரிபியூட்டர் குறித்துப் படித்திருப்பது, அதைக் குறித்து அறிந்திருப்பது இவையெல்லாம் பிளாக் செயின் தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

மெக்கானிசம் டிசைனர்ஸ் குறித்துப்( Mechanism designers ) என்பவர்கள் கிரிப்டோகிராஃபியையும், டிஸ்றிபியூட்டட் கம்ப்யூட்டிங்கையும் இணைக்கின்ற பணியைச் செய்பவர்கள். அதை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது பிளாக் செயின் துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். அறிவியல் துறையில் இருப்பவர்கள் பயாலஜிகல் மெக்கானிசம் பற்றி தெரிந்திருப்பார்கள். நமது உடல் மிகப்பெரிய ஒரு பிளாக் செயின் அமைப்பு. நமது டி.என்.ஏ, உயிரியல் மெக்கானிசம் போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொண்டவர்கள் எளிதில் பிளாக் செயினையும் புரிந்து கொள்வார்கள்.

ஹைச் டி எம் எல் (HTML) பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அதைப் படித்து வைத்துக் கொள்ளுங்கள். எளிதான விஷயம். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் இந்த ஹைச்.டி.எம்.எல் பயன்படுகிறது. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் எனப்படும் சி.எஸ்.எஸ் (CSS) பற்றிய அறிவும் உங்களுக்கு பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் உதவும். அதே போல ஸ்மார்ட் கான்றாக்ட் (Smart Contract) பற்றியும் தெரிந்து வைத்திருங்கள்.

டிஜிடல் சிக்னேச்சர், சிக்னேச்சர் வெரிபிகேஷன் போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது பிளாக் செயின் தொழில்நுட்பத்துக்கு உதவும். பிளாக் செயினில் டெவலப்பிங் ஸ்டைலை ‘டிட்டர்மினிஸ்டிக்’ ஸ்டைல் என்பார்கள். அதாவது மாறாத நிலையான ஒரு கட்டமைப்பு. ஒரு பரிவர்த்தனை எப்படி செயல்பட வேண்டுமோ அப்படித் தான் இன்றும் செயல்படும், நாளையும் செயல்படும். அதில் மாற்றம் இருக்காது. அதற்கேற்ப மென்பொருள் எழுதவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விஷயத்தைக் கற்றுக் கொள்ளப் போனாலும், அந்த தொழில்நுட்பத்தைக் குறித்த தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும். இன்றைக்கு பிளாக் செயின் குறித்த கட்டுரைகள், நூல்கள், விளக்கங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றன. நமது தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். பிளாக் செயின் நுட்பத்தில் நுழையும் முன் இந்த கட்டுரைகள், வீடியோக்கள் பார்த்து அதைக் குறித்த ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமது டொமைன் பிளாக் செயினுக்கு ஒத்து வருமா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள இது பயன்படும். எங்கெல்லாம் பிளாக் செயின் பயன்படும், எங்கெல்லாம் பயன்படாது ? எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் போன்ற விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

சுருக்கமாக, ஒரு கணினி பட்டப்படிப்பு அல்லது கணினி துறையில் அனுபவம். கூடவே பிளாக் செயின் குறித்த புரிதல், அதன் தேவைகள் குறித்த புரிதல். அத்துடன் சி++, ஜாவா போன்ற மென்பொருள்களின் பரிச்சயம். இவை இருந்தால் போதும் பிளாக் செயினுக்குள் நுழைந்து பிரகாசிக்கலாம்.