ஆண்டு இறுதித் தேர்வு வந்தாலே போதும் பள்ளி மாணவர்களெல்லாம் எதோ கொள்ளி வாய்ப் பிசாசு கொல்லையில் காத்திருப்பது போல வெலவெலக்கத் துவங்குவார்கள். அரக்கப் பரக்க ஓடுவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும்.
“பையனுக்கு எக்ஸாம் இருக்குல்ல..” என்று தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருப்பார்கள். அந்த பரபரப்பை அப்படியே பிள்ளைகளுடைய தலையிலும் ஏற்றி விடுவார்கள். ஒரு துரும்பைத் தூக்கி தூரமாய்ப் போடும் வேலையைக் கூட பிள்ளைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். “படி.. படி” என்று பிள்ளைகளுடைய காதைச் சுற்றி பெற்றோரின் குரல் ஸ்டீரியோ சரவுண்ட் சிஸ்டம் போல ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அத்துடன் விட்டாலாவது பரவாயில்லை. மாமா பையன் மகேஷை விட நீ ஒரு மார்க்காவது அதிகம் வாங்கணும்டா. அத்தை பொண்ணு இலக்கியாவைக் காட்டிலும் அரை மார்க்காவது அதிகம் வாங்கணும்டி என தங்கள் பழி தீர்க்கும் படலத்துக்கு பிள்ளைகளை வைத்துக் காய் நகர்த்துவார்கள்.
“கிளாஸ்ல நீ தான் ஃபஸ்ட்டா வரணும், ஸ்டேட் ரேங்க் வரணும், கணக்குல நூத்துக்கு நூறு வாங்கணும்” இப்படி இந்த தேர்வுக் காலம் முழுவதும் மாணவர்களைச் சுற்றி எப்போதும் இல்லாத அழுத்தமான சூழல் உருவாகிவிடும். பெரும்பாலும் இத்தகைய அழுத்தங்களில் விழுந்துவிடும் மாணவர்கள் தங்கள் திறமையை விடக் குறைவான மார்க்கையே வாங்குவார்கள் என்கிறது உளவியல்.
கல்வி ரொம்ப முக்கியமானது. ஆனால் கல்வி என்பதை மார்க் ஷீட் தீர்மானிப்பதில்லை. முன்பெல்லாம் மாணவர்கள் குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு குருவைக் கண்டு பிடித்தால் அந்த குருவுடனே பல ஆண்டுகாலம் தங்கினார்கள். அங்கேயே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கல்வி கற்றார்கள். அப்போது கல்வி என்பது நல்லொழுக்கம், பணிவு எனும் இரண்டு படிகளைத் தாண்டியபிறகே கலைகள் கற்கும் நிலைக்கு வரும் !
“ஒரு வருடம் கல்வி. அதன்பின் தேர்வு. தேர்வு முடித்ததும் புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு மூளையைக் கழுவிக் காயப் போடும்” இன்றைய கல்வி முறை அன்றைக்கு இல்லை. வாழ்க்கைக்குக் கல்வி எனும் அடிப்படை விஷயத்தையே அன்றைய பாடம் போதித்தது !
கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகவானாக மாற்ற வேண்டும். சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குரிய நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டும் என்பதே பால பாடம். அந்தக் கல்வி அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டப் பயன்படுவது அடுத்த கட்டம்.
இந்த வரிசை மாறும் போது தான் சிக்கல் உருவாகிறது. கல்வி என்பது வேலைக்கான சாவி என்று இன்றைய மாணவர்கள் நினைக்கிறார்கள். சுரண்டிப் பார்த்து நம்பர் வந்தால் வெற்றி என கொண்டாடும் லாட்டரிச் சீட்டு போல சிலர் பார்க்கிறார்கள். அதனால் தான் மதிப்பெண் குறைந்து விட்டால் கற்ற கல்வியே பயனில்லாதது என கருதி விடுகிறார்கள்.
“இந்த மார்க் எடுக்கவா உன்னை விழுந்து விழுந்து கவனிச்சேன் வெளங்காதவனே” என வசவுகள் வருவதன் காரணமும் இது தான்.
இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. காரணம் இன்றைய சமூகம் அதை எதிர்பார்க்கிறது. ஆனால் அதையே வெற்றியின் எல்லைக் கோடாகக் கருதிவிட வேண்டாம் என்பதே நான் சொல்ல வரும் விஷயம்.
மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டும் எனும் ஆர்வம் ஆயிரம் பேருக்கு இருக்கலாம். ஓரிருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக மிச்சம் தொள்ளாயிரத்துத் தொன்னூற்றுச் சொச்சம் பேரும் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லையே ! எனவே வெற்றி என்பதை மதிப்பெண் கொண்டு அளக்காதீர்கள். உங்கள் குணாதிசயங்கள், இயல்புகள், அறிவு, தன்னம்பிக்கை இவற்றைக் கொண்டு அளக்க வேண்டும்.
தன்னம்பிக்கை உடைய இளைஞன் பள்ளியில் தோற்றால் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுவான். அவன் தன்னுடைய கல்வியின் மூலமாக பெற்ற மூலதனம் அவனுடைய தன்னம்பிக்கை ! காகிதத்தில் எழுதி வைத்த மதிப்பெண் அல்ல.
அறிவியல் மேதை ஐன்ஸ்டீனை உலகமே கொண்டாடுகிறது. காரணம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகள். ஆனால் அவர் படிப்பில் சுமார் தான் தெரியுமா ? ஐன்ஸ்டீனை உலகுக்கே தெரியும். அவருடைய காலத்தில் ஸ்டேட் ஃபஸ்ட் வாங்கிய மாணவன் பெயர் உங்களுக்குத் தெரியுமா ?
ஐசக் நியூட்டனைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அவரொன்றும் வகுப்பில் முதல் மாணவனாக வந்தவரல்ல. அவருடைய பள்ளியில் முதல் மாணவன் யார் என்பது யாருக்காவது தெரியுமா ?
தாமஸ் ஆல்வா எடிசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் “முட்டாள்” என்று பள்ளிக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் காலத்தில் படித்து முதல் மாணவனாக வந்து பதக்கம் குத்திக் கொண்டவர்களில் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம் !
வாழ்க்கை தான் ஒரு மனிதனுடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையை அவன் எப்படி அணுகுகிறான் என்பதில் தான் வெற்றி தோல்வி இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியடைந்தவனிடம் யாரும் போய் “உனக்கு ஸ்கூல்ல என்ன மார்க் ?” என கேட்பதில்லை. வாழ்க்கையில் தோல்வியடைந்தவன், “நான் ஸ்கூல்ல கோல்ட் மெடலிஸ்ட்டாக்கும்” என்று சொல்லிக் கொள்வதிலும் பயனில்லை ! போன வருஷம் பதக்கம் வாங்கியவனைக் கூட யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை.
கல்வி நமக்கு அறிவைத் தரவேண்டும். வாழ்க்கையில் நிகழ்கின்ற சிக்கல்களைப் பக்குவத்துடன் கையாளும் மனநிலையைத் தரவேண்டும். உலகமும் அதைத் தான் எதிர்பார்க்க்கிறது. அதனால் தான் படித்தவன் ஒருவன் தப்பு செய்யும் போது, “படிச்சவன் மாதிரியாய்யா நடந்துக்கறே” எனும் கோப வாக்கியங்கள் எழுகின்றன.
கல்வியில் தோற்றதற்காகவோ, மதிப்பெண் குறைந்ததற்காகவோ ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுடைய கல்வியால் என்ன பயன் ? அவனுடைய கல்வி அவனுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் தரவில்லை ! வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைத் தரவில்லை. மொத்தத்தில் அவனை ஒரு கோழையாய் உருவாக்கியிருக்கிறது.
கல்வி எப்போதும் முடிவதில்லை. கடைசிப் பரீட்சையுடன் அது முடிகிறது என்று கருதுவோர் அறிவிலிகள். கல்வி வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தரும். அந்த அனுபவப் பாடத்துக்கு வலிமை அதிகம்.
நீதிக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும் நமக்கு ஏன் கற்பிக்கிறார்கள் ? நமது குணாதிசயம் மனித மதிப்பீடுகளின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்பப் பட வேண்டும் என்பதற்காகத் தான். வாழ்வின் ஒவ்வோர் தருணத்திலும் சரியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சக மனித கரிசனையில் வாழவேண்டும் என்பதற்காகத் தான்.
இந்த சிந்தனைகளை மாணவர்கள் முதலில் மனதில் இருத்த வேண்டும். பெற்றோர் அதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதை மாணவர்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அப்போது தான் கல்வி தன் முழு பயனை அடையும்.
வளமான தேசத்தை கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்டு தான் எடை போடுவார்கள். அதிகம் கல்வியறிவு பெற்ற மக்கள் இருக்கும் தேசம் வளர்ச்சியான பாதையை நோக்கிச் செல்கிறது. கல்வியறிவில் பின் தங்கும் தேசம் தனது தோல்விகளை நோக்கிய பயணத்தையே தொடர்கிறது !
கல்வி நமது மூடநம்பிக்கைகளை அகற்றி அனைத்தையும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் அணுகும் மனநிலையைத் தரவேண்டும். கண்மூடித்தனமாக அனைத்தையும் பின்பற்றாமல் அனைத்தையும் தெளிவான மனநிலையில் கேள்வி கேட்கும் அறிவையும் அது தரவேண்டும். அது மாணவர்களிடையே பொறாமையையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடாது. ஒருவரை விட இன்னொருவர் சிறந்தவர், உயர்ந்தவர், வல்லவர் எனும் சிந்தனைகளை உருவாக்கும் பணியைச் செய்யவே கூடாது.
அதே போல கல்வி என்பது வெறுமனே வாசித்து விட்டு, அதைப் பிரதியெடுக்கும் ஜெராக்ஸ் வேலையைச் செய்யக் கூடாது. புரிந்து படிக்கும் நிலை உருவாக வேண்டும். கல்வி முறையின் மாற்றம் மாணவர்களை, தலைமைப் பண்புகள், குழுவாய் இணைந்து செயல்படும் தன்மை, நிர்வாகத் திறமை போன்றவற்றிலும் சிறந்தவர்களாக்க வேண்டும். என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாடங்கள் வசீகரிக்காதபோது மாணவர்கள் அதை அரவணப்பதில்லை. மாணவர்களுடைய விருப்பம் பெரும்பாலும் பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை. “நாளைக்கு நாலு பேரு மதிக்கணும்” என்பது தான் பெற்றோருடைய தாரக மந்திரம். அதனால் தான் குழந்தைகள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற துறைகளை விட்டு விட்டு வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தால் பெற்றோர் குதிக்கிறார்கள்.
சமூகம் தன் பங்குக்கு மன அழுத்தங்களை இளைஞர்களின் மனதில் திணிக்கிறது. மாய பிம்பங்களையே மாணவர்கள் பெரும்பாலும் பார்க்கின்றனர். வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்களுக்கு பெற்றோரும் சமூகமும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சில வேளைகளில் அந்த அழுத்தம் சக மாணவர்களிடமிருந்தும் வருவதுண்டு. அத்தகைய நண்பர்களைவிட்டு விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்களும் மாணவர்களை விமர்சிக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தும் செயலையே முக்கியமாய்ச் செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை இத்தகைய செயல்பாடுகள் கழுவிக் கரைத்து விடும்.
கல்வி நமக்கு அறிவைத் தருகிறது. அத்துடன் நமக்கு நல்ல சிந்தனைகளும், உணர்வுகளும் இருக்கும் போதுதான் கற்ற கல்வி முழுமையடைகிறது. வெறுமனே அடைத்து வைக்கும் அறிவு, மூளையை ஒரு லைப்ரரி ஆக்கலாம். ஆனால் ஒரு முழுமையான மனிதனாக்க முடியாது. படித்தவர்கள் சமூக விரோதிகளாகவும், வங்கிக் கொள்ளையர்களாகவும், மக்களை ஏமாற்றும் மனிதர்களாகவும் மாறும் போது கல்வி கேலிக் கூத்தாகி விடுகிறது இல்லையா ?
எனவே நல்ல குணாதிசயங்களையும், தன்னம்பிக்கையையும் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கி வையுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ஆனந்தமான சாலைகளை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது. நம்பிக்கையுடன் பயணியுங்கள்.
தோல்வி என்பது மரணமல்ல.
மரணம் என்பது தான் தோல்வி