10ம் வகுப்பு, சி பிரிவு
என்
பால்யத்தின் பரவசத்தை
அந்த
வகுப்பறை
சன்னல்கள் தான்
திறந்து வைத்தன.
பாடங்களைக்
கேட்டுக் கேட்டு
உறைந்து போயிருந்த
சன்னல்களுக்கு
அந்த தேவதை விரல்களே
ஆறுதல் அளித்தன.
அவள்
நகக் கீறல்களில்
சன்னல்கள்
சன்னமாய்ச் சிலிர்த்தன
அவளது
மூச்சுக் காற்றின்
வெப்பத்தை
பத்திரமாய்ப் பொத்தி வைத்தன
அவளது
சிரிப்பொலிகளை
அந்தக்
கம்பிகள் கொஞ்சம்
களவாடிக் கொண்டன.
அவள்
பார்வைகள்
வருடும் போதெல்லாம்
சன்னல் ஒரங்களில்
சொல்லாமல் குளிரடித்தது.
மூடப்படாத
அந்த
சன்னல்களின் உள்ளே
திறக்கப்படாத
கனவுகள்
விளையாடித் திரிந்தன.
பால்யம்
பள்ளி தாண்டியது.
காலங்கள்
கதவடைத்தன.
கால்முளைக்காத
கனவுகள்
நிஜத்தின் வீதிகளில்
வருடங்களை விதைத்து
மறைந்தன.
இப்போதும்
கிராமத்துச்
சாலையைக் கடக்கையில்
அனிச்சைச் செயலாய்
திரும்பிப் பார்க்கிறேன்
இடிபாடுகளில்
இடையே
காணாமல் போயிருந்தது
அந்த சன்னல்.
சேமித்து வைத்தவற்றை
எங்கே
ஒளித்து வைத்ததென
அது
யாருக்கும் சொல்லவில்லை.
*
சேவியர்