உன்னுடன் சில பொழுது..

 

உன்னை நேரில் பார்த்ததில்லை.
ஆனாலும் பிடித்திருக்கிறது.

உன் பெற்றோர் என்னையும்
என் பெற்றோர் உன்னையும்
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்ததேயில்லை.
திருமணம் மட்டும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

பூமிக்கோளத்தின் ஒரு எல்லையில் நான்
இன்னொரு எல்லையில் நீ
நம் தாய் நாடோ
தகவல் தொடர்புகளால் மட்டுமே
தொட்டுக்கொள்ளும் தொலைவில்.

உன் பெயரை முதலில் கேட்டது
தொலைபேசியின் துவாரங்கள் வழிதான்.
உன் புகைப்படங்களைப் பார்த்ததெல்லாம்
இணைய இழைகளின்
மின்னஞ்சல் மழைகளில் தான்.

உன் ஒவ்வொரு புகைப்படத்திற்கும்
ஒரு ஒற்றுமையேனும் இருக்கிறதா என்று
உற்று உற்றுப் பார்த்ததில்
காது வரைக்கும் வலிக்கிறது.

நீ ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும்
புத்தம் புதிதாய்
ஒரு விதை எனக்குள் வெடிக்கிறது,
ஒரு பூ, புது வாசனை பெறுகிறது.

எதுவுமே இல்லாமல்
மணிக்கணக்கில் பேசுவதும்,
சமையல்ச் செய்திகளைப் பரிமாறுவதும்,
நிகழ்வுகளைப் பிரதியெடுப்பதும் தான் செய்கிறோம்.
ஆனாலும்
ஒவ்வொரு முறை பேசும் போதும்
உனக்குள் இன்னும் கொஞ்சம் அமிழ்ந்து போகிறேன்.

அர்த்தங்களின் அடர்த்தி அதிகமாகியதில்..
நமக்கிடையே இருந்த
தூரங்களின் இடைவெளி இறுகிவிட்டது.

இப்போதெல்லாம் நான்
புகைப்படங்கள் பார்ப்பதில்லை
காரணம் இருக்கிறது என் கண்மணி..
என்
காதுகளுக்கு இப்போது
கண்கள் முளைத்திருக்கிறது.

காதல் பயணம்

Image result for Love satellite painting

அந்த
வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.

நானும்,
என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.

பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர வைக்கும்
இந்த
உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.

பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்று
கால்கள் கூட கத்துகின்றன.

அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய்
அரிவாள் தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.

எனவே,
தேடாதீர்கள் என்று
žட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.

செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி
சரித்திரத்திலிருந்து துரத்தப்படும்.

எங்கள்
இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.

விண்கலம்
ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.

காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.

மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர்
சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.

வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்
மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?

சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன சரிந்தென்ன ?

முடிவெடுக்கிறோம்,
இனி,
வெளவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.

விண்கலம்,
மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.

பிடி நழுவிய விண்கலம்
கீழ் நோக்கிப் பா.ய்ந்து
கடலில் . . . . .

திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது
‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று
நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.

யாரும் எழுதாத கவிதைகள்

Image result for window girl painting

 

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.

கவிதைக்குத் தலைப்பு செவ்வாய்

Image result for Girl in dream

கல்லூரியில்
ஓர் கவிதைப் போட்டி
செவ்வாய் என்றொரு
தலைப்பு
தலைகால் இல்லாமல் தரப்பட்டது.

பூமி ஓர் நீலப்பந்து,
செவ்வாயோ சிவப்புப் பந்து.
சுடச் சுடப் புழுதி தெறிக்கும்
ஓர்
தூசுத் துயரம் செவ்வாய்.

விஞ்ஞானி மகன்
எழுதி முடித்தான்.

செல்வத்தை எல்லாம்
செவ்வாய்க்கே செலுத்தினால்
ஊர் வாய் என்ன
பட்டினி தின்று தான்
படுத்திட வேண்டுமா ?

இளைஞன் ஒருவன்
கோபத்தை எழுதினான்.

மேகத்தோடு மோத ஓடும்
கடல்கள் இல்லாமல்,
பூக்களோடு மோகத்தில் மோதும்
வண்டுகள் வாழாமல்,
என்
கவிதைக்கு கருச்சிதைவு தரும்
செவ்வாய் என்ன சொல்வாய் ?

கனவுகளின் மையெடுத்து
கவி எழுதினான் ஒருவன்.

அங்கேயும் பாறைகள் உண்டாம்
அவை
காலமாற்றத்தின் கல்வெட்டுக்களாம்,
இலட்சம் ஆண்டுகள்
பாறை பின் சென்று
வரலாறு வாசிக்க இயலுமாம்.

எழுதியவன்
புதை பொருள்
ஆராய்ச்சியாளனின் புதல்வன்.

வங்கிகளோ
வர்த்தக மையங்களோ இன்றி,
செவ்வாய் செல்வதில்
வருவாய் என்னடா ?
மண்ணில் நீ
முதலீடு செய்யடா ?

தப்பில்லை உங்கள் கற்பனை
இது
தொழிலதிபர் தனையன்
எழுதியது தான்.

பரிசு யாருக்கோ கிடைத்தது
எனக்கு இல்லை.
எழுதாத கவிதைக்கு
விருது தருதல் வழக்கமில்லையே.

வேறு தலைப்பு தந்திருக்கலாம்,
செவ்வாய் என்றதும்
சிதறிய சிந்தனைகள்,
அன்று மட்டுமே
உன்னைச் சந்திக்கும்
அந்த
அம்மன் கோயில் வாசலில் தானே
அசையாமல் அமர்ந்திருந்தது.

நீயாவது ..

Image result for Girl in dream

நான்
உன்னிடம் சொன்னதில்லை
காதலுக்கு
வார்த்தைகள் விளக்கவுரை
சொல்வதில்லையே.

உன்னுடன் பேசும்போதெல்லாம்
எனக்குள்
அன்னியோன்யமாய்
ஓர்
அணில் கூட்டம் ஓடித்திரியும்.

உன் கண்களில்
படபடக்கும் பட்டாம் பூச்சிகளுக்காய்
என் மனம் முழுதும்
ஈரப் பூக்கள்
இறக்குமதியாகும்.

உன் புன்னகைத் தட்டுகளில்
என் இதயம்
கால் தடுக்கி விழுந்து கிடக்கும்.

பிடிவாதப் புயலாய்
என்
புலன்கள் கொந்தளிக்கும்.

விரலுக்கும் மூளைக்கும்
இடைவிடாமல்
ஓர்
இழுபறி நடக்கும்.

எனக்குள் நடக்கும்
பூகம்பங்களைப் புரியாமல்
நீ
தொடர்ந்து புன்னகைப்பாய்.
நான்
உடைந்துபோன உறுதியுடன்
இடிபாடுகளில் இறுகிக் கிடப்பேன்.

உன் கூந்தல்க்காட்டுக்குள்
சில
மின்னல் பூக்கள் நட்டு,
உன் கண்களுக்குள் அதை
அறுவடை செய்ய ஆசை வரும்.

உன் ஆடைகளுக்குள்
என் ஆசைகளை ஊற்றி வைக்க
சிறு
மோகச் சிந்தனை முளை விடும்.

விரல் அழகா
உன்
நகம் அழகா என்று,
பூக்களும் காற்றும்
நதிக்கரையில் பேசுதோ என்று
சங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.

நீ
அருகிலிருந்தால்
நான் கனவுகளில் விழுந்து
மௌனமாய் கலைகிறேன்.

நீ
விலகியிருந்தால்
நிஜத்துக்கு வந்து
உன்னுடன் பேசிப் பேசியே
சத்தத்தில் கரைகிறேன்.

கவிதைகளுக்கு சொன்னவற்றை
நான்
உனக்குச் சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் ஒருவேளை
என் வீட்டுப் பூக்களுக்கு
நீ
வாசனை வகுப்பு எடுத்திருப்பாய்.

சொல்லவில்லையே..

காதலுக்கு
வார்த்தைகள் முக்கியமில்லை.
கல்யாணத்துக்கு
மௌனம் முக்கியமில்லை என்று
வார்த்தையில்லாமல் சொல்லிவிட்டுச்
செல்கிறாய் நீ..

இப்போதும் என்னிடமிருந்து
எழுத்துக்கள் கூட எழவில்லை.
உன் மொழி பெயர்ப்புக்காய்
ஒரு துளி
விழிநீர் மட்டும் விழுகிறது.

ஈரம் தொலைத்த இதயம்

Image result for guy sad
பிரிவதற்குப் பிரியப்பட்ட
என் பிரியமானவனே.

வருவாயா என்று
திசைகள் மொத்தத்தையும்
வாசலாய் திறந்து
விழிவிதைத்துக் காத்திருக்கிறேன்

புரியவில்லை எனக்கு.

முல்லை இதழ்களின்
வெள்ளை சிதைய
ஏன்
முள்ளைச் சொருகினாய் ?

இதயம் என்னும்
என்னும் இலவங்காய்
உடையும் வரை விசிறிவிட்டு
உடைந்தபின்
ஏன் விதறிச் சென்றாய் ..

கானல் மட்டுமே
காட்சிக்குள் விழும்
பாலை மணல் வெளியாய்
இந்தப் பாவி மனம்.

துளித் துளியாய்
நேசம் வார்த்து
மொத்தமாய் நீ
உடைத்துச் சென்றதால்
கீறல்களில் உப்பைக் காய்ச்சியதாய்
வெம்மை விரிக்கிறது உயிர்.

உனது விரல்கள் பிடித்து
நடந்தபோது
தொடர்ந்த என் சுவடுகள்
இப்போது
கள்வனைக்கண்ட புள்ளிமானாய்
பதறி நிற்கிறது.

உன் பாதம் பார்த்துக் காத்திருக்கும்
என் பார்வைதேசத்தின் எல்லையில்
கண்­ர்க் குமிழிகள் உடைவதால்
மங்கலாய்க்
கன்னங்களில் கசியுது காதல்.

உனது எண்ணக் குவளைகளில்
குவளையாய் மலர்ந்த நான்
உன் பிரிவால்
ஓணான்கள் ஒளிந்துகொள்ளும்
கள்ளியாய்
உள்ளப்பரப்பில் முள்ளை விளைவிக்கிறேன்..

உன் மேல் விளைந்த காதலில்
மரத்துப் போகத் தெரிந்த மனசுக்கு
நீ விதைத்த காதலை
மறந்து போக மனமில்லாமல்
இறந்துகொண்டிருக்கிறது
உலையில் வீசப்பட்ட ஒற்றை ஆமையாய்.

ஒரே ஒரு முறை..

Image result for girl talking over phone

நகத்துக்கே வலிக்குமளவுக்கு
கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.
அவள் தான் பேசுகிறாள்.

என்
காதலுக்குக் கீழே
கண்ணிவெடி வைத்தவள்
நீண்ட நாட்களுக்குப் பின்
தொலைபேசியில்.

ஏதேதோ பேசுகிறாள்.
அம்மாவைத்
தனிமை வாட்டுவதாய்,
அப்பாவோடு பேசியதை,
அக்காவிற்குக்
குழந்தை பிறக்க இருப்பதை,
பேசுகிறாள்.
பேசிக்கொண்டே இருக்கிறாள்.

கடந்த காலத்தில்,
என்
நேசத்தின் எல்லைக்குள் எரிகல்லாய்
விழுந்து எரித்தவள்,
பள்ளத்தின் சுவடுகளே தெரியாதபடி
பேசுகிறாள்.

என் மனம் முழுசும்
தீக்குளித்த தேசத்தின்
வேர்வைத்துளிகள்.

நன்றாக இருக்கிறாயா ?
ஒரு கேள்விதான் கேட்டேன்.
இன்னும் பிடிவாதக்காரிதான் அவள்.

சின்னதாய் ஒரு சிரிப்பு
நீங்க ?
என்றொரு பதில் கேள்வி.
என் கேள்விகளை விழுங்கும் கேள்வி.

என்ன சொல்லச் சொல்கிறாய்.
மாற்றத்தின் சிறகுகளால் எனக்கு
நீ
வலி வலை விரித்தபிறகு
அதில் மகிழ்ச்சி விழவேயில்லையே

நீண்ட நாட்களுக்குப் பின்
இப்போது தான்
நான் வலை பின்னியிருக்கிறேன்.
திருமணம் செய்யப் போகிறேன்.

மெதுவாகச் சிரிக்கிறாள்.
இப்போது கூட
அவள் சிரிப்பில் படர்ந்திருப்பதை
புரிய முடியவில்லை.
வேதனையா,
விரக்தியா,
இயலாமையா
இல்லை
மகிழ்வின் சத்தமில்லாத முகமா ?

வருடங்களுக்குப் பிறகு பேசுகிறாய்.
என்ன செய்தி ?
இன்னொருமுறை
நினைவுகளின் பலிபீடத்தில்
கழுத்தை வைத்துக் கேட்கிறேன்.

‘சும்மா தான்’ என்கிறாய்.
இது கூட
வழக்கம் போல பொய்தான் என்பது புரிகிறது.

மனசு மட்டும் கெஞ்சுகிறது
ஒரே ஒரு முறையாவது
உண்மை பேசேன்.

 

காதல் செய்(வ்)வாய் ..

Image result for Love painting
எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

சொல்ல மறந்த கவிதை

Image result for cute girl fantasy

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.

தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.

நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.

கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.

வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?

தூரிகையுடன் ஓர் காரிகை

Image result for Girl in dream

யாரடி நீ.

எப்போதேனும் என்
கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய்.

தூரிகை தொட்டெடுத்து
முத்தச்சாயம் பூசி
என்னை
நித்திரைத் தொட்டிலில்
விட்டுச் செல்கிறாய்.

கனவுகளில்
பேருந்துகள் நகர்ந்தால்
நீ
பயணியாகிறாய்,
நதி நடந்தால்
ஈரமாய் ஓர்
ஓரமாய் கரையேறுகிறாய்.

அலுவலகக் கனவுகளில்
நீ
எப்போதேனும்
எட்டிப் பார்த்துச் செல்கிறாய்,

கடற்கரைக் கனவுகளில்
சிலநேரம்
மணல் கிளறி நடக்கிறாய்.

விளையாடினாலும்,
உரையாடினாலும்
நீ
விலகாதிருக்கிறாய்.

ஆனாலும்,
உன் முகத்தை
பகல் வெளிச்சத்தில்
மீண்டும் மனசில்
பிரதியெடுக்க முடிந்ததில்லை.

ஓர் பனிக்கால
மேகமூட்டத்தில் ஒளியும்
வெள்ளைப் பூவாகவே
நீ
விளையாடுகிறாய்.

இன்றேனும்
சரியாய்ப் பார்க்கவேண்டும்
எனும்
கனவுடன் தான்
என்
கனவுகள் ஆரம்பமாகின்றன.
தினந்தோறும்.