Poem : திசை திருப்பு

 

திசை திருப்பு

Image result for confusion fantasy

கொழுந்து விட்டெரியும்
பிரச்சினையை
முடிப்பது மிக எளிது.

முதலில்
அந்தப் பிரச்சினையின்
மீதிருந்து
பார்வையைத் திருப்ப வேண்டும்.

அதற்கு
சும்மா கிடக்கும்
இன்னோர் இடத்துக்கு
நெருப்பு மூட்ட வேண்டும்.

அந்த இடம்
நரம்புகளுக்குள்
சட்டென
வெறியேற்றுவதாய்
இருக்க வேண்டும்.

ஒரு
சாதியின் மீதான
சம்மட்டியாகவோ,

ஒரு
மொழியின் மீதான
அவமானமாகவோ,

ஒரு
மதத்தின் மீதான
வன்முறையாகவோ
இருக்கலாம்.

இப்போது
மீடியாக்களின்
முதுகு தண்டில்
பரவசத் தீயை
பற்ற வைக்க வேண்டும்.

புதிய நெருப்பை
அவர்கள்
ஊதி ஊதிப் பற்ற வைப்பார்கள்.

சோசியல் மீடியாக்களின்
கோரத்தாண்டவத்தில்
ஹேஷ் டேக் கள் கதறும்.

முதல் பிரச்சினை
முழுதாய்
மறக்கடிக்கப்பட்டு விடும்.

இப்போது
பற்ற வைத்த
இரண்டாவது நெருப்புக்கு
ஒரு
புது விளக்கம் கொடுத்து
பிரச்சினையை முடித்துக் கொள்.

எது
எப்படியெனினும்,

நெருப்புகள்
அணையாமல் பார்த்துக் கொள்
அவை
கூடுவிட்டுக் கூடு
பாய்ந்து கொண்டே
இருக்க வேண்டும்.

*

 

காற்றும், கிருமியும் அப்புறம் கடவுளும்

காற்றும், கிருமியும் அப்புறம் கடவுளும்

+

+

கண்ணுக்குத் தெரியாத
கிருமி ஒன்று
கண்ணுக்குள் விரலை விட்டு
ஆட்டுகிறது !

வான்வெளித் தாக்குதலில்
உலகம்
அண்ணாந்துக் கிடந்த போது
வாய்வழித் தாக்குதலில்
களமிறங்கியது கிருமி !

சாதியென்றும் மதமென்றும்
சண்டைபோட்டவனை
புறங்கையால்
அடித்து
பரணுக்குள் அடக்கியது.

வல்லரசென்றும்
நல்லரசென்றும்
மேடைகளில் முழங்கியவனை
பகலிலும் திகிலோடு
பதுங்க வைத்தது.

அது
அரிவாள்களின் கூர்மையிலோ
துப்பாக்கிகளின்
வேர்வையிலோ
வீழ்ந்து விடவில்லை.

தொழில்நுட்பத்தின்
சிகரங்களில் அவை
சிலந்திவலை கட்டி
சிரித்துக் கிடந்தன.

மனிதத்தைக் கைகழுவிய
மனுக்குலத்தை
மணிக்கொரு முறை
கைகழுவ வைத்தது !

கூடி வாழ்ந்தால் கோடிநன்மை
உட்பட
ஆயிரத்துச் சொச்சம்
பழமொழிகளை
பள்ளத்தாக்கில் புதைத்துச்
சிரித்தது.

வெட்ட வெட்ட முளைக்கும்
ராவணத் தலையாய்
காற்றின் கால்பிடித்தும்
அது
நுரையீரலின் தரையீரத்தில்
கூடாரம் கட்டிக் குடியேறியது.

இது,

அகிலத்தின்
ஆயுதப் போர் என்றும்
சர்வாதிகாரத்தின்
ஆணவப் போர் என்றும்
ஆண்டவரின்
அச்சுறுத்தல் போர் என்றும்
வாட்சப்கள் மூச்சு வாங்குகின்றன.

டிஜிடல் பிரார்த்தனைகளும்
காற்று புகா
கதவடைப்புகளும்
மதில்களின் இருப்பையே
கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஆய்வுகளின் அந்தரங்க
அறைகள்,
கண்தெரியா
கலிங்கப் போருக்கு
கவசங்கள் நெய்கின்றன.

சமூக இடைவெளியின்
துயரங்கள் பற்றி
சமூக வலைத்தளங்கள்
மீம்ஸ் பந்தி வைக்கையில்,

குடிசைகளின்
குளிர்ந்து கிடக்கும்
அடுப்பங்கரைகளில்,
சுருண்டு கிடக்கும்
பட்டினி வயிறுகளில்
கானக நெருப்பு பற்றி எரிகிறது.

*

சேவியர்

பொய்கள்

பொய்கள்

Image result for Lie

அப்போதெல்லாம்
பொய் சொல்வது
கடினமாய் இருந்தது.

சொல்வது
பொய் என்பது
தெரியக்கூடாதெனும்
கட்டாயம் இருந்தது.

சொல்லும் பொய்
உண்மைக்கு
மிக நெருக்கமாய்
இருக்க வேண்டிய
அவசியம் இருந்தது.

தங்கத்தில்
செம்பு கலப்பது போல
பொய்களைக்
கலக்க வேண்டிய
நிலை இருந்தது.

வீட்டுப் பாடம்
செய்யாத பொழுதுகளில்
பிரம்புகளின்
காதுகளில் ஊற்ற
பரிசுத்த பொய்கள்
தேவைப்பட்டன.

மாலைநேரத் தாமதங்களில்
அப்பாவின்
பார்வைகளுக்குத் திரையிட
பதட்டமற்ற பொய்கள்
தேவைப்பட்டன.

இப்போது
பொய்கள் சொல்வது
எளிதாகிவிட்டது.

அது நானல்ல
கிராபிக்ஸ்
என சொல்லலாம்.

அது நானல்ல
என் உதவியாளர்
என பகிரலாம்.

அது என்குரலல்ல
டெக்னாலஜி
என்று சொல்லலாம்.

இப்போது
பொய்கள்
உண்மைகளைப் போல
இருக்க வேண்டியதில்லை.

ஏனெனில்
உண்மைகளே பொய்களென
மக்கள்
நம்பத் துவங்கி விட்டனர்.

ஏனெனில்
உண்மைகளே பொய்களென
மக்கள்
நம்பத் துவங்கி விட்டனர்.

*

பயம்

பயம்

Image result for fear

விதைத்துக் கொண்டேயிரு
பயத்தை !

ஒரு பயத்தின்
மூட்டில்
இன்னொரு பயம்
முளைக்க வேண்டும்
வாழையடி வாழையாக.

பதட்டத்துடனே
வைத்திரு அவனை.
இயல்பாய் நடக்கும்
விஷயங்களில் கூட
திகிலைத் திணித்து வை.

உண்ணவும்
உறங்கவும்
பயம் வந்து
பிராண்ட வேண்டும்.

பேசும் போது
தொண்டைக்குழியில்
ஆலகாலம் போல
வார்த்தைகள்
அடக்கமாக வேண்டும்.

பிரிவினைகளுக்கு
திரி போடு
வெறுப்புகளின் கிண்ணத்தில்
எண்ணை ஊற்று
கொழுத்து விட்டு எரியவேண்டும்
கோபம்.

யாரோ
முதுக்குப் பின்னால்
முறைத்துப் பார்ப்பதாய்
முதுகுத்தண்டு சில்லிட வேண்டும்.

தன்
நிழலைக் கூட
சந்தேகப்படும் சூழலை
சதியுடன் கட்டமை.

இந்தப்
பயம் தான் நம் ஆயுதம்
இந்தப்
பயம் தான் நம் கேடயம்.

வாழ்வதே
போராட்டமானால் தான்
வாழ்க்கையில்
போராடமாட்டான்.

பயங்களின்
மீதான
அவனது பயமே
நம் ஆதாயம்.

காலங்களின்
கடைசிப் படிக்கட்டுகளில்
பயங்கள்
அவனுக்குப்
பயமற்றதாகிவிடக் கூடும்

அப்போது
பேசலாம்
நிம்மதியாய் இருப்பதன்
பேரச்சம் பற்றி !

*

சேவியர்

அக்மார்க் போலிகள்

 

Image result for sharing in fb

நீ
பகிர்வது பொய் என்பது
உனக்கும் தெரியும்.
ஆனாலும் பகிர்கிறார்

உண்மையின்
அனலை விட
பொய்யின் குரூரமே
உனக்குப் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து
சொல்லப்படும் பொய்கள்
உண்மையின்
ஆடை போர்த்தும் என
அரசியல் பேசுகிறாய்.

நவீன யுகத்தில்
பொய்களின் முட்டைகளே
விரைவாய்
பொரிக்கும் என
மூட்டைகளை அவிழ்க்கிறாய்

நிழல் கூட
வண்ணமாய் விழுகிறதென
டிஜிடல் வெளியில்
தொடர்ந்து சாதிக்கிறாய்.

நிஜத்தின்
சித்திரங்களை
பனிக்கட்டியில் வரைந்து
வெயிலில் வைக்கிறாய்

பொய்யின் பிதற்றல்களை
கல்வெட்டில் எழுதி
கடற்கரையில்
வைக்கிறாய்.

இன்றைய சமூகத்துக்கு
வெளிச்சத் திரைகளிலிருந்து
விழிகளை விலக்கவே
நேரம் இல்லை.

துயரத்தின் உச்சத்தையும்
மீம்களில் வரைந்து
மீட்படைகின்றனர்.

குனிந்த
தலைகளை
நிமிர்த்த
மறுத்து விடுகின்றனர்.

நிஜமா பொய்யா
என
மூளையைக் கேட்பதை
மறந்து விட்டனர்.

என்ன செய்ய,

இவர்களின்
மனதை
மாற்றும்
போட்டோஷாப்களை
இன்னும் தொழில்நுட்பம்
இறக்குமதி செய்யவில்லை.

*

சேவியர்

கைது செய்

கைது செய்

Image result for man arrested shadow

 

பயத்தை விதைப்பது
மிக முக்கியம்.

உடைந்து சிதறி
பல இடங்களில்
முளைக்கும் முன்
கொளுத்த வேண்டியது
அவசியம்.

துணிச்சலின்
துகிலுரிந்து
நிர்வாணமாக்க வேண்டியது
மிகவும் அவசியம்.

அதுவும்
பொதுவெளியில் அவனை
அச்சுறுத்துவது
மிக மிக முக்கியம்.

நீட்டிய விரலை
நறுக்கி நகர்ந்தால்
மறு விரலை
நீட்டுவான்.
கழுத்தை உடை !

வாலை நறுக்கினால்
பல்லியாய்
மூண்டும் முளைத்தெழுவான்
தலையை நறுக்கு.

வாட்ஸப்பில் வதந்தி
பரப்பியதாய்
வன் சிறையிலடை.

ஃபேஸ்புக்கில்
புலம்பினானென
பட்டென
முதுகெலும்பு உடை.

தேச துரோகமென
ஊடகங்களில்
வசனம் பிறழாமல்
விவாதம் நடத்து

மொத்தமாய்ப் பிடுங்கு
அவன்
பட்டினியால்
கதறும் போது
கஞ்சி ஊற்று.

ஜனநாயகம்
ஆபத்தானது
பயநாயகமே வசதியானது.

ஒருவனுக்கு
நிம்மதி வழங்க
அவனுடைய
தேவைகளை நிறைவேற்ற
வேண்டியதில்லை.

இருப்பதைப்
பிடுங்கினாலே
போதுமானது.

*

சேவியர்

கலைஞர் : ஆளுமையும், தோழமையும்

உடன்பிறப்பின், கடைசிப் பயணம்

Image result for மு கருணாநிதி

கடலை நோக்கி
நதிகள் செல்வது தான் மரபு
இங்கே
கடலை நோக்கி
கண்ணீர்க் கடல் பயணிக்கிறது.

உதயத்தைத் தன்னுள்
புதைத்துக் கொள்ள
கரையோரம் காத்திருக்கிறது
கடல்.

பெரும்பான்மையை
நிகழ்த்திக் காட்டிய
சிறுபான்மையின்
குரல் இது.

எப்போதும்
ஈரக் கடலில் பயணிக்கும்
கட்டுமரம்
ஓரக் கடலில் பயணிக்கிறது.

நீள்கடலில்
மூழ்கி எழும்பும் உதய சூரியனை
தரைமீதில்
விதைத்துக் கொள்ள
விழித்திருக்கிறது மெரினா.

நூறாண்டை நெருங்கும்
முதியவருக்காய்
தேசமே கதறுவதன் காரணம்
கலைஞரின் ஆளுமை மட்டுமல்ல,
தோழமையும் தான்.

ஆதிக்கத்தின் வில்யுத்தத்தில்
சாமான்யனாய்
சாதித்த
மல்யுத்த வீரர் இவர்.

காற்றை யாரும்
உதைக்க முடியாது !
தமிழை யாரும்
புதைக்க முடியாது !

எத்தனையோ
கண்ணி வெடிகளை
கண்ணியத்துடன் கடந்த
காலத்தின்
கருப்புக் கண்ணாடி இது !

எத்தனையோ வன்மங்களை
புன்னகையுடன்
புறந்தள்ளிய
திருவாரூர் திராவிடம் இது !

விரல்களில்
இலக்கியத்தின் இழை பிரித்து
குரல்களில்
தமிழினத்தின் உரிமை உரைத்தவர்
இவர்

கலைகளில் கரைந்து
தமிழன்
நிலைகளில் உயர
பேனாவையும் போராளியாக்கியவர்

எதையும் போராடிப் பெற்ற
கலைஞர்
தன்
மரணப் படுக்கையையும்
போராடியே பெற்றார் !

காலம்
கலைஞரின் உயிரை
இடம் மாற்றி வைக்கலாம்
அவர்
தடம் பதித்த வரலாற்றை
இடம் மாற்ற முடியாது !

வரலாற்றில் வாழ்வது எளிது
வரலாறாய் வாழ்வது அரிது
வரலாற்றையே
வாழவைப்பது அரிதிலும் அரிது !
அதுவே கலைஞரின் வாழ்க்கை.

இவரது மரணம்
அழ வைக்கிறது
இவரது வாழ்க்கை தொழ வைக்கிறது

மாலையில் மறைந்தான்
இந்த சூரியன்
மரணத்திலும் பிசகவில்லை
கலைஞரின் கணக்கு.

காலத்தின் கருப்புக் கண்ணாடி
களையிழந்தது
ஞாலத்தில் தமிழினம்
நிலைகுலைந்தது.

கலைஞரின்
இமைகள் துயில் கொள்ளும்
வரலாற்றில்
அவர் விழிகள் விழித்திருக்கும்.

விடை பெற்றாய்
நீ
கேள்வி பெற்றோம் யாம்
இனி எப்படி எம் வாழ்க்கை ?

*

சேவியர்

விவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்

விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்

Image result for tamil nadu paddy field

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

கருவறை தாண்டிய பாதங்கள்
மண்ணின் முதுகு மிதித்து
புழுதி பிடித்து
உரண்டு புரண்டு உறவாடுகின்றன !

கல்லறை நோக்கிய பயணங்கள்
மண்ணின் அறை திறந்து
நிரந்தர நித்திரையில்
சலனம் தொலைத்து துயில்கின்றன !

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !

*

கடவுள்
மண்ணின் முதல் விவசாயி !

மனிதன்
கடவுள் படைத்த முதல் விவசாயி !

கடவுள்
மண்ணில் கைதொட்டு
உயிரை உருவாக்கினார் !
மனிதன்
மண்ணில் கைதொட்டு
பயிரை உருவாக்கினான் !

கடவுளே
உலகின் முதல் விவசாயி !
மனிதன்
உலகின் இரண்டாம் விவசாயி.

*

மனிதனுக்கு
கடவுள் தந்த முதல் வேலை
விவசாயம் !

நிலத்தைப் பண்படுத்து !
என்பதே இறைவன் கொடுத்த வேலை
அவனோ
படைப்பைப் பண்படுத்தாமல்
படைத்தவனைப் புண்படுத்தினான்.

ஏதேன் எனும்
மண்ணக சொர்க்கம் விடைபெற்றது
இனி
மண்ணை சொர்க்கமாக்கு
வியர்வையை விலையாக்கு
என
அனுப்பி வைத்தார் ஆண்டவர் !

முதல் விவசாயி
களமிறங்கினான் !
நிலமிறங்கினான்

*

விவசாயி
இறைவன் எனும் முதலாளியின்
முதல் ஊழியன் !

விவசாயம்
மனிதன் எனும் படைப்பாளியின்
முதல் ஊழியம்!

விவசாயம்
ஆதி மனிதனின்
நீதித் தொழில் !

மண்ணின் மைந்தனின்
வியர்வைத் தொழில் !

விழுந்த மனிதன்
உழுத தொழில் !

விவசாயம்
இறைவனால் எழுதப்பட்ட பணி !

விவசாயம்
மனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் !

இன்று ??

*

இன்று
விவசாயம்,

தற்கொலையின் திறவுகோல் !
பட்டினியில் படுக்கை !
துயரத்தின் இருக்கை !
கண்ணீரின் அருவி !

பயிர்களின் வேர்களில்
புதைபடுகிறான் விவசாயி !

நீரற்ற பூமியில்
வேரற்ற நிலங்களில்
சோறற்ற வயிறுடன்
வதைபடுகிறான் விவசாயி !

வெடித்த வயலின்
வறண்ட நாக்குகளில்
அவனது
உயிரின் கடைசிச் சொட்டும்
உலரத் துவங்குகிறது !

நீர் வற்றிய
ஆறுகளில் அவனது கனவின்
முதல் சுவடும்
களவாடப்பட்டு விட்டது !

ஆறுகள்
நீரைத் தொலைத்தன !
நீரற்ற ஆறுகள்
தம்மையே தொலைத்து விட்டன.

சுயநலச் சுருக்குப் பைகள்
மணலை அகழ்ந்தன !
தன்னல மனங்கள்
ஆக்கிரமித்து நகைத்தன !
விழுகின்ற மழையும்
தங்க இடமின்றி
அழுதழுது அலைந்து திரிகிறது !

இன்று விவசாயம்
நிச்சயத் தோல்வியின்
நிதர்சன வெற்றி !

*

இறைவன்
நீரையும் நிலத்தையும் பிரித்தார் !
மனிதன்
நீரை நிலத்தினில் ஒளித்தான் !

கர்நாடக எல்லையில்
தண்ணீருக்குக் காவல்
தமிழக எல்லையில்
கண்ணீருடன் காவல் !

இறைவன் மழையை
பொதுவாய்ப் பொழிந்தார் !
மனிதன்
பொதுவை தனியே பிரித்தான்

இறைவன் வளங்களை
பொதுவாய் வைத்தார்
மனிதன்
வளங்களை களவில் வைத்தான்.

கடலுக்கு அனுப்ப
அனுமதிக்கும் நீர் கூட
தமிழனின்
உடலுக்கு அனுப்ப
அனுமதிக்கவில்லை மனிதன் !

அணைகளில் துயிலும் நீரை,
மனிதனின்
துணைக்கு அனுப்ப
துளியும் விரும்பவில்லை
சுயநல மனிதன் !

பலருக்கு
தண்ணீர் என்பது
அரசியல் சதுரங்கம் !

விவசாயிக்கோ
தண்ணீர் என்பது
இசையின் மிருதங்கம் !

நீரற்ற நிலம்
இசையற்ற கருவியாய்
சலனமற்றுக் கிடக்கிறது !

இறைவன்
படைத்தான் !
மனிதன்
உடைத்தான் !

*

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

புலம் பெயர்ந்தவன் கூட
புலன் பெயரவில்லை

நீ
நிலம் பெயராமல் இருக்கிறாய்
ஆனால்
நிஜம் உணராமல் இருக்கிறாயே !

வரப்புயர நீருயரும்
பொய்யாகிறதே !
இங்கே வரப்புகள் மட்டும் தானே
உயர்கின்றன !

வளங்கள் அழிகையில்
தலைமுறை அழியும்!
நிலங்கள் அழிகையில்
நிலவாழ்வு அழியும் !

முகசாயம் அழிகையில்
நாடகம் முடியும் !
விவசாயம் அழிகையில்
தேசம் அழியும் !

நிலத்தில் காங்கிரீட் நட்டோம்
மழை விடைபெற்றது !

நிலத்தில் முட்களை நட்டோம்
வளம் விடைபெற்றது !

நிலத்தை கவனிக்காமல் விட்டோம்
உறவு விடைபெற்றது !

இன்று
நிலங்கள் அனாதைகளாகிவிட்டன.
அதன் தொப்புள் கொடிகளுக்கு
நீரில்லை !

ஒளிச்சேர்க்கைக்கு
வழியில்லாமல்
இலைகளெல்லாம் தலையிழந்தன.
மரங்களெல்லாம் களையிழந்தன.

எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !

*

ஒன்று படுவோம் !

பூமி என்பது
தன்னலத் தாழ்பாழ்களில்
சிரச்சேதம்
செய்யபடுவதற்கானதல்ல !

பூமி என்பது
வெறுப்புகளின் விதைகளினால்
உயிர்சேதம்
செய்வதற்கானதல்ல !

நீரின்றி அமையாது
நிலம் !
பயிரின்றி அமையாது
உயிர் !

இணையம்
தகவலைத் தரலாம்
வலைத்தளம்
கலைகளைத் தரலாம் !
அரிசியை எங்கே
டவுன்லோட் செய்வது ?
தண்ணீரை எங்கே
தரவிறக்கம் செய்வது ?

ஒன்றுபடுவோம் !

வேர்கள்
நீரில் வித்தியாசம் பார்ப்பதில்லை !
மனிதர்கள் ஏன் பார்க்கவேண்டும் ?

தமிழகப் பசிக்கும்
கர்நாடகப் பட்டினிக்கும்
வித்தியாசம் இல்லை
பகிர்தலில் எதற்கு பதட்டம் ?

ஒன்றுபடுவோம் !

எங்கே விழுந்தாலும்
மழை ஈரமாகவே விழுகிறது !
எங்கே இருந்தாலும்
மனம் ஈரமாகவே இருக்கட்டும் !

நிலம் உலர்வது
மனிதம் உலர்வதின் அடையாளம் !
நிலம் செழிப்பது
மனிதம் செழிப்பதன் உத்தரவாதம் !

ஒன்றுபடுவோம்
உணர்வுகளால் ஒன்றுபடுவோம் !
அரசியல்
நில
இன எல்லைகள் களைவோம் !

மனிதம் என்பது
நமக்குள் இருப்பது
பிறரின் வார்த்தைகளால்
அதை கொல்லாமல் இருப்போம் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !

அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !

வரப்புயர

Image result for agriculture tamil nadu village

வரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க
வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல
புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க
வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல

மனிதனோட முதல் தோழன் மண்தானே
மண்ணோட மடிமீதே வீழ்ந்தோமே

*

மும்மாரி மழை பொழிந்த
நிலம் அழித்தோம்
ஈரத்தை தரை இறக்கும்
மரம் அழித்தோம்
நீருக்காய் யார் காரோ
கரம் பிடித்தோம்
காவிரியும் கை விரிக்க
தினம் அழிந்தோம்

ஊருக்கே சோறு போட கை நீட்டினோம்
சாவுக்கு வழிசொல்லி கதவடைத்தான்
கடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்
உடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்

அணைக்கு நீருண்டு
துணைக்கு நீரில்லை !
இறைவன் கொடுத்தானே
மனிதன் கெடுத்தானே.

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த
இனம் யாமோ
புலன் தனையும் கூடவே யாம்
இழந்தோமோ
வளம் அழிந்தால் தலைமுறையும்
அழியாதோ
நிலம் அழிந்தால் நிலவாழ்வும்
அழியாதோ !

நீரின்றி அமையாது நிலம் என்றேன்
பயிரின்றி அமையாது உயிர் என்றேன்
வேருக்கு நீரினிலே பேதம் இல்லை
வயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை

மனிதம் உலர்ந்தால்
நிலமும் உலரும்
மழைக்கென்றும் ஈரமுண்டு
மனதிலும் அதுவருமா ?

விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா

*

பிரதிபா, 1125

Image result for பிரதீபா

அவளுக்குள்
ஒரு
கனவு இருந்தது.

கீழ்வானத்தைக் கிழித்துக்
கிளம்பும்
கதிரவனைப் போல
அவளுக்குள் அது நிரம்பியிருந்தது.

பள்ளத்தை நோக்கிப்
பாய்ந்து நிரம்பும்
அருவியைப் போல அதன்
ஆர்வம் அவளை எரித்தது !

அவளது கனவு
ஒரு
அழகான கனவு !

அவளுடைய கனவில்
வஞ்சனையின்
அம்சம் கலந்திருக்கவில்லை.

அவளுடைய கனவு
யார் முதுகையும்
குத்தவில்லை.

அவளுடைய கனவில்
வன்முறையோ
மதவெறியோ
ஊறியிருக்கவில்லை.

அதை
இலட்சியம் என
பச்சை குத்தி வைத்தாள்

கனவு
என
வானவில் ஊற்றி வளர்த்தாள்.

அவளுக்குத் தெரியவில்லை !
அவள்
குழந்தை தானே !

கனவு காண்பதற்கு
தகுதிச் சான்றிதழ் வேண்டும்
என்பதும்,
இலட்சியங்கள் கொள்ள
இலட்சங்கள் தேவை என்பதும்

அவளுக்குத் தெரியவில்லை
பாவம்
அவள் குழந்தை தானே !

ஏழைகள்
வாய் திறந்தால்
தோட்டாக்கள் நிரப்புகின்றன.

கனவுகள் திறந்தால்
தூக்குக் கயிறுகள் தொங்குகின்றன.

அவளுக்குள்
ஒரு கனவு இருந்தது.

கனவை விதைத்த
குற்றத்துக்காக
தலையிலடித்துக் கதறுகிறான்
ஒரு தந்தை.

இலட்சியத்தை விதைத்த
பாவத்துக்காய்
படிக்கட்டில் பதறுகிறாள்
ஒரு தாய்.

யாருக்கும் தெரியவில்லை
கனவுகளுக்கும்
வரிவிதிக்கும் இந்த யுகத்தில்
சுவாசிப்பதற்குக் கூட
பதுங்கு குழிகளே தேவைப்படுகின்றன.

தோட்டாக்களையும்
தூக்குக் கயிறுகளையும்
பூஜிக்கும்
எதிரிகளின் பாசறையில்

மனித நேயம்
இரத்தம் வடியும் கழுத்தோடு
பிணவறையில்
இறுதி மூச்சை இழுக்கிறது.

நாளை விடியும்
எனும் கனவு
நம்பிக்கையற்ற நம்பிக்கையாய்
நடு வீதியில்
தெருநாய்களோடு அலைந்து திரிகிறது.

*