நீ.. நான்… அவன்…

Brown Wooden Armchair on Brown Wooden Floor

 

நின்று தொலையாத
துன்ப அலையிலும்,
ஆலயம் பற்றிக் கிடப்பவனே
ஆத்திகன்.

நாளை செத்துப் போவேனென்று
சேதி வந்தபின்னும்
நாத்திகனாகவே
இருப்பவன் தான்
நாத்திகன்.

எந்த நிலை நாளையானாலும்
இன்றின் பகுதியில்
மனிதாபிமானக் கரங்களை
உலரவிடாதவனே
முழு மனிதன்.

வாய்ப்பில்லா இடத்தில்
வாய்மூடிக் கிடப்பதல்ல தூய்மை.

தப்பிக்கும் வாய்ப்புகள்
சுற்றிலும் கிடந்தாலும்,
தப்பு செய்யாததே
ஒப்பில்லா உயர்ந்தது.

நேர்மையின் நிலத்தில் வேர்விடு,
இல்லையேல்
இருக்கும் வேர்களுக்கு
நீர் விடு.

தோற்றுப்போகாதே.

stock photo, daytime, outdoors, view-from-above, urban-scene, city, architecture, building, building-exterior, part-of, people, men, one-person, aerial-view, cropped, adult, male, street, love, glass, low-section, modern, height, chicago, shoes, legs, feet, fall, above, man, stand, suicide, skydeck

தற்கொலை.
இது
கோழைகளால் எழுதப்பட்டு
கோழைகளால்
வாசிக்கப்படும் வாக்கியம்.

சுண்டெலித் தொல்லைக்குத்
தீர்வு
குடிசைக்குத் தீயிடுவதா?
விட்டில்களோடு பயமென்றால்
விளக்குகளைப் பலியிடுவதா ?

தோல்விகள் வந்து
தோல் கிழித்தால்
பாம்புகளாய் மாறி
தோலுரிக்கக் கற்றுக் கொள்வது தான்
வீரம்.

ஏமாற்றத்தின்
சந்தை தான்
கலாச்சாரத்தின் கடைசித் தெரு.
சூழ்நிலைகள் உன்னை
சுற்றிக் கிழித்தால்
சுருக்கு மாட்டுவதா வீரம் ?

ஒவ்வோர் மனசுக்குள்ளும்
ஓராயிரம் ஆசைகள்
நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால்
ஆவியால் அலைவோமாம்!
அது சரி,
எவனிங்கே நிறைவேறிய ஆசையோடு
மரித்துப்போனது ?

ஒவ்வோர்
கனவுக்கும் முற்றுப்புள்ளி
இன்னோர் கனவு,
ஒவ்வோர்
ஆசைக்கதவுக்கும் அப்பால்
இன்னுமோர் வாசல்.
யாரிங்கே
திருவோடுகளோடு திருப்திப்படுவது ?

பட்டுப்பூச்சி
தேடிப்போனவன் கைகளுக்குள்
பட்டுப்போன பூச்சிகள்,
அர்ச்சுனர் மார்பில்
அல்லியரின் அம்புக்காயங்கள்,
யாரிங்கே
வெற்றிகளோடு மட்டும் சுற்றித்திரிவது ?

தற்கொலை
இன்னொரு தோல்வி.

தோல்விக்குப் பயந்து
தோல்விக்கு வெற்றிகொடுக்கும்
இன்னொரு தோல்வி.

உனக்குத் தேவை
தோல்விகளோடுள்ள
தொடர் ஒப்பந்தமல்ல.

துடுப்புகள் தொலைந்துபோனால்
உள்ளங்கையை விரித்துக் கொள்,
இலக்குகளை
இறுக்கமாய் பற்றிக்கொண்டால்
பனிப்பாறை ஓரத்திலும்
பாதைகள் புலப்படும்.

இல்லையேல்,
காலில் சிக்கும் பாசிகள் கூட
சவக்குழிகள் செய்து குவிக்கும்.

மானிடச் சட்டங்கள்

Man Walking Near Aligned Lamp Post

 

உன்னைச் சுற்றிய
சட்டங்கள்
உன்னை ஒருவேளை
இமைக்க விடாமல் இறுக்கலாம்.
உனக்காய் நீயே
சட்டங்களைத் தயாரி.

உனக்கான ஆடைகளை
நீயே
தேர்ந்தெடுக்கும் போது,
உனக்கான செருப்புகளை
நீயே
சரிபார்த்து எடுக்கும்போது
உனக்காய் சில
சட்டங்களையும் செய்யலாமே ?

வெளியே பார்.
குருவிகள்,
பல நூறு தலைமுறையாய்
கூடுகளின் வடிவத்தைக்
கூட
மாற்றிக் கட்டவில்லை.

சிங்கங்களும்
சைவமாய்
மாறிக் கொள்ளவில்லை.

நீ மனிதன்,
உன் வாசல்
குகைகளிலிருந்து
பிடுங்கப்பட்டு
நகரத்தில் நடப்பட்டிருக்கிறது.

இது தான் நேரம்,
உனக்கு நீயே சில
சட்டங்களைச் செய்.
அவை
உரிமை மீறாது என
உத்தரவாதம் செய்.

மீறல்களை மட்டுமே
அரசியல் சட்டங்கள் பேசும்.
நீ
மனதின் நீறல்களைப் பேசு.

விலகலைப் பற்றிப் பேசிப் பேசி
விலங்குகளாய்
ஆனது போதும்.
அகலாதிரு என்னும் சட்டமே
அவசியம் இப்போது.

செய்யாதே எனும்
சட்டங்களை விட,
செய்
எனும் சட்டங்களே
மானிட வளர்ச்சிக்குத் தேவை
இப்போது.

இமைதிறந்தால் மட்டுமே
தெரியும்,
உன்னைச் சுற்றிலும்
நீளும் பட்டினிக் கரங்கள்.

ஒரு விலைமகள் விழித்திருக்கிறாள்

 

Image result for prostitute india paintingஎன்
படுக்கை விழித்திருக்கிறது…

என் கதவு,
தாழ்ப்பாள் விலக்கிக் காத்திருக்கிறது.
எந்தக் கோவலனால்
அழியப்போகுதோ
இன்றைய என் அலங்காரம்.

உணர்வுகள் எல்லாம்
ரணமாகி,
பின் மரணமாகிப் போயின.
இப்போது இருப்பதெல்லாம்
இரவுக்குக் காத்திருக்கும்
இந்த
தற்கொலைத் தாமரை மட்டும் தான்.

பகலில்
புரவிச் சவாரி செய்யும்
பல பாண்டிய மன்னர்கள்
இரவில் மணிமுடி கழற்றிவிட்டு
என்
கொல்லைப்படி தேடி வருவதுண்டு.

பகலில்
தோளில் கம்பீரமாகும் துண்டு
இரவில் சிலருக்கு இடம்மாறி
தலையிலும் முகத்திலும்
தற்காப்புக்கவசம் ஆவதுண்டு.

மனைவியின் சண்டையும்,
பிரிவின் வலியும்,
சுமந்து சுமந்தே
இந்த உடம்பு
கட்டில் கால்களுக்குள் கசங்கிப் போனது.

இயலாமையில் இதயம்
எரியும் போதெல்லாம்
வயிற்றுத்தீ வந்து
தண்­ணீர் வார்த்துப் போகும்.

கேலிகளின் நீள் நாக்கு குத்தி
காதுகள் கிழியும் போதெல்லாம்
கண்ணீ­ர்க்கால்வாய்கள் ஓடி வந்து
ஒட்டுப்போடும்.

அம்மா
எனும் மழலைக்குரலுடன்
என் முந்தானை முனை இழுக்கும்
மூன்று வயது மூத்தமகன்.

கணவன் வரவுக்காய்
இருண்ட வாசலில் வெளிச்சமாய்
விளக்கேற்றிக் காத்திருக்கும்
என் முகம்.

கனவுகள் அவ்வப்போது வந்து
கதவு திறக்கும் போது
அவிழ்க்க மட்டுமே பழக்கப்பட்ட
ஏதோ ஒரு பாம்புக் குரல் வந்து
முடிச்சிட்டு இழுக்கும்.

மாங்கல்யக் கனவுகளின்
முற்றுப்புள்ளியாய்
என் முந்தானை முடிச்சுகள்
மீண்டும்
கழன்று வீழும்.
*

வெள்ளையடிக்கப்பட்ட

art, beautiful, bloom

வேஷதாரிகளே
உங்கள் அங்கிகளை எப்போதுதான்
அகற்றப் போகிறீர்களோ ?

பொதுவிடங்களில்
உங்கள் உதடுகளுக்கு
மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள்
உள்ளுக்குள்
கசாப்புக் கடை நடத்துகிறீர்கள்.

புண்ணியங்கள்
விற்பனை செய்து
புண்ணிய பூமி வாங்குகிறீர்கள்
அங்கே
மனிதாபிமானத்தைப் புதைக்கிறீர்கள்.

தெருச்சந்திப்புகளில்
தகரத்தட்டுகளுக்குச்
சில சில்லறைகள்,
சில
சம்பிரதாயச் சமாதானங்கள்.
உள்ளுக்குள் உங்களுக்கே
பிணவாடை அடிக்கவில்லையா ?

விளம்பரம் செய்து செய்தே
நீங்கள்
புனிதனாகப் பார்க்கிறீர்கள்.

எப்போதேனும்
இடக்கைக்குத் தெரியாமல்
தானம் தந்திருக்கிறீர்களா ?

தோப்புக்கு
விளம்பரம் செய்யாமல்
குருவிகளுக்கு
கூடு கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா ?

போதுமே.

எட்டாத உயரத்தில்
சிம்மாசனம் செய்தாகிவிட்டது.
புதைந்துபோன
மனிதாபிமானத்தைக்
கொஞ்சம்
தோண்டி எடுக்கத் துவங்குங்களேன்.

அலுவல் விவாதம்

Image result for conference room discussion

 

முனை மழுங்கிய சதுர வடிவில்,
இல்லையேல்
முனை உடைந்த முட்டை வடிவில்,
ஏதோ
ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை.

பெரிய தேனீர் கோப்பைகளோ
குளிர்பான பாட்டில்களோ
கைகளில் ஏந்தி,
சிரித்துக் கொண்டே
ஏதேதோ பேசுவார்கள்.

புரியக்கூடாதென்று
பிரம்ம பிரயர்த்தனம் பண்ணியும்,
தங்கள்
அறிவுக்கு அங்கீகாரம் வாங்கவும்.

கேள்வி கேட்பதற்கென்றே
கேட்பவர்களும்,
பொழுதுகளை போக்குவதற்கென்றே
வருபவர்களும் உண்டு.

சொல்லாமல் கொள்ளாமல் வரும்
கொட்டாவி மட்டும்
கைகளால் மறைக்கப்படும்.

கொஞ்சம் விட்டால்
தூங்கி வழியும்
அபாயம் இருப்பதால்,
தேனீர் குவளை தேவையாகிறது.

முடிவுகளை எடுப்பதைவிட
எடுத்த முடிவுகளை
அறிவிப்பதற்காகவே கூடும்
சில அவசர ஆலோசனைகள்.

பெரும்பாலும்,
எடுக்கப்படுபவை என்னவோ,
வாய்தா வழங்கும்
வழக்காடுமன்றங்களாக,
அடுத்த உரையாடல் எப்போதெனும்
தீர்மானங்கள் மட்டுமே.

 

மன வயிறுகள்.

Image result for village tree

ஈரமாய் ஓடும் ஆறு
எங்களூருக்கு அது ஒரு வரம்.
கம்பீரம் இழந்தாலும்
ஓடிக்கொண்டேயிருக்கும்
எப்போதும்.

அதைக் கடக்க வேண்டிய
தருணங்களிலெல்லாம்,
கால் நனைத்துக் கொள்ளாமல்,
அதை
நேசத்தோடு அள்ளாமல்
கடந்து போனதே இல்லை.

அது
செதுக்கிப் போட்டிருக்கும்
கூழாங்கற்களும்,
வழவழத்த பாறைகளும்,
சாய்ந்து கிடக்கும்
ஒற்றைத் தென்னை மரமும்,
எப்போதும் என்
விசாரிப்புக்குத் தப்பியதில்லை.

இப்போதும்,
என் வெற்றுக் கால்களின் கீழ்
நதி ஈரமாய்
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கையருகே,
ரேஷன் அட்டையும், பையும்.
காத்திருக்க வேண்டும்
வரிசையில், வெயிலில் சாலை ஓரத்தில்.

ரசனைகளும்
நிர்ப்பந்தங்களும்
இணைந்து ஓடுகின்றன
தனித் தனியாய்..
தடுமாறாமல் ரயில் ஓட்ட
கற்றுக் கொள்ள வேண்டும் தான்.
ஒவ்வொருவரும்.

எல்லோருமே அப்படித்தானா ?

Related image

எல்லோரும் அப்படித்தான்
என்போரெல்லாம்,
கவசம் தேடும்
கறை முகம் உடையோர் தான்.

கடமைத் தவறல்கள்,
சட்ட மீறல்கள்,
மனிதாபிமான தவறுகள்,
எங்கும்
‘எல்லோரும் அப்படித்தான்’
எனும் வாசகம்.

‘நானாவது அப்படி இல்லாமல்’
எனும் வார்த்தைகள்
பொதுவாக
பொது வாழ்வில்
சிரமத்தோடே சிரமெடுக்கும்.

இறுதியில்,
எல்லாக் கண்களிலும்
பாவத்தின் பாடை.

உங்களில்
பாவமில்லாதவன்
கல்லெறியட்டும் என்றால்,
இன்றும்
கல்லை கீழே போட்டு
வெட்கித் திரும்பத் தான்
என்னாலும் முடியும்.

 

பயம்

Image result for father and son

சில பயங்களின்
சிறகு பிடித்துச்
சிறகு பிடித்து,
பறக்கப் பழக்கப்பட்டது தான்
மனித இனம்.

அப்பாவின் குரலின்
கம்பீரத்தில்
மருளும் விழிகள் வழிய
அவசர அவசரமாய்
இரவு உணவு அருந்திய
சிறு வயதுப் பயம்.

வகுப்புக்கணக்கைப்
போட மறந்து
கணக்கு வாத்தியாரின்
பிரம்பின் நினைவில்
காய்ச்சல் வருத்திக்கொண்ட
பள்ளிக்கூடப் பயம்.

தேர்வு முடிவுக்கு
முன்னிரவில்
துரத்தும் யானைமுன்
நகர்த்தமுடியா கால்களுமாய்
விழுந்துகிடப்பதாகவும்,

ஏதோ ஓர் நீர்நிலைக்குள்
கால்கள் கட்டப்பட்டு
மூழ்கித்தவிப்பதாகவும்
கனவு கண்டு பயந்து,

வேலை
குடும்பம்..
எதிர்காலம் என்று
பக்கத்துக்குப் பக்கம் பயத்தை
பிள்ளையார் சுழியாய்ப்
போட்ட வாழ்க்கை.

என்
சிறுவயது மகனாவது
இந்த பயமில்லாத
வாழ்க்கை வாழவேண்டும்,
கோலி விளையாடிக் கொண்டிருந்தவனை
அணைத்துக் கொண்டு சொன்னேன்.

மெதுவாய் என்
முகம் பார்த்தான்.
அப்பா சொல் காப்பாற்ற முடியுமா
என்னும் பயம்
அவன் கண்களில் மிதப்பது தெரிந்தது.

அழிவின் ஆரம்பம்

Image result for crusades

 

மதவாதிகளே
நீங்கள்
மிதவாதிகளாவது எப்போது ?

ஜ“ரணிக்கும் முன்
மரணிக்கும் வாழ்க்கை
இன்னுமா
பயணிக்கிறது ?

மனித அறுவடைக்காய்
அயோத்திக்கு ஆயுதம்
அனுப்புகிறீர்கள்.

சாவின்
புள்ளிவிபரங்கள் பொறுக்கி
வெற்றி அட்டவணை
வரைகிறீர்கள்.

உங்கள்
குடிசைக் கதவுகளை
கரையான் அரிக்கிறது.
வேதனை வேல்கள்
பொருளாதார விலா இடிக்கிறது !

எப்போதேனும்
இதை உணர்ந்ததுண்டா ?

மதத்தின் மையத்தில்
மனிதாபிமானப் புயல் தானே
மையம் கொண்டிருக்கிறது
பின் ஏன் அது
பிசாசுகளை கரை கடத்துகிறது ?

வெறியின் கிண்ணத்தில்
ஊறிக்கிடக்கும் மனசை
எந்த கங்கை வந்து
கழுவப்போகிறது ?

ஏன்
கடவுளைக் கொளுத்தி
மதத்தை வெளிச்சப்படுத்துகிறீர்கள் ?
ஆண்டவனை
கொன்றுவிட்டுக்
கோயில் கட்டுகிறீர்கள் ?

வீடு பேறு கோரி விட்டு
ஆண்டவனுக்கே
வீடு தரப் போகிறாயா ?

தவமிருக்கும் பக்தன் நீ
வரம் வினியோகிக்கிறாயா ?

தீட்டி வைத்த
ஆயுதங்களை ஆராயும் முன்
கொஞ்ச நேரம்
பூட்டி வைத்த மத நூல்களை
ஆராய்ந்து பார்.

எங்கேனும்
அடுத்த மதத்தை
அழிக்கச் சொன்னால்
வா.
எனக்கும் ஓர் அரிவாள் கொடு.