பொய்கள்
அப்போதெல்லாம்
பொய் சொல்வது
கடினமாய் இருந்தது.
சொல்வது
பொய் என்பது
தெரியக்கூடாதெனும்
கட்டாயம் இருந்தது.
சொல்லும் பொய்
உண்மைக்கு
மிக நெருக்கமாய்
இருக்க வேண்டிய
அவசியம் இருந்தது.
தங்கத்தில்
செம்பு கலப்பது போல
பொய்களைக்
கலக்க வேண்டிய
நிலை இருந்தது.
வீட்டுப் பாடம்
செய்யாத பொழுதுகளில்
பிரம்புகளின்
காதுகளில் ஊற்ற
பரிசுத்த பொய்கள்
தேவைப்பட்டன.
மாலைநேரத் தாமதங்களில்
அப்பாவின்
பார்வைகளுக்குத் திரையிட
பதட்டமற்ற பொய்கள்
தேவைப்பட்டன.
இப்போது
பொய்கள் சொல்வது
எளிதாகிவிட்டது.
அது நானல்ல
கிராபிக்ஸ்
என சொல்லலாம்.
அது நானல்ல
ஏதோ ஹேக்கர்
என பகிரலாம்.
அது என்குரலல்ல
டெக்னாலஜி
என்று சொல்லலாம்.
இப்போது
பொய்கள்
உண்மைகளைப் போல
இருக்க வேண்டியதில்லை.
ஏனெனில்
உண்மைகளே பொய்களென
மக்கள்
நம்பத் துவங்கி விட்டனர்.
*
சேவியர்