வரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க
வரப்பு மட்டும் உயருது நீரைக் காணல
புதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க
வெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல
மனிதனோட முதல் தோழன் மண்தானே
மண்ணோட மடிமீதே வீழ்ந்தோமே
*
மும்மாரி மழை பொழிந்த
நிலம் அழித்தோம்
ஈரத்தை தரை இறக்கும்
மரம் அழித்தோம்
நீருக்காய் யார் காரோ
கரம் பிடித்தோம்
காவிரியும் கை விரிக்க
தினம் அழிந்தோம்
ஊருக்கே சோறு போட கை நீட்டினோம்
சாவுக்கு வழிசொல்லி கதவடைத்தான்
கடலுக்கும் நீர் செல்ல அனுமதித்தான்
உடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்
அணைக்கு நீருண்டு
துணைக்கு நீரில்லை !
இறைவன் கொடுத்தானே
மனிதன் கெடுத்தானே.
விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா
*
நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த
இனம் யாமோ
புலன் தனையும் கூடவே யாம்
இழந்தோமோ
வளம் அழிந்தால் தலைமுறையும்
அழியாதோ
நிலம் அழிந்தால் நிலவாழ்வும்
அழியாதோ !
நீரின்றி அமையாது நிலம் என்றேன்
பயிரின்றி அமையாது உயிர் என்றேன்
வேருக்கு நீரினிலே பேதம் இல்லை
வயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை
மனிதம் உலர்ந்தால்
நிலமும் உலரும்
மழைக்கென்றும் ஈரமுண்டு
மனதிலும் அதுவருமா ?
விழித்தெழு விழித்தெழு என் தோழா
செயல்படு செயல்படு என் தோழா
*