சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

Image result for church mass

என்ன செய்வது ?
இங்கே,
அர்த்தங்களைவிட
அர்த்தப்படுத்தப் பட்டவை தான்
அதிகமாய்
விலை போகின்றன.

இரவல் கண்­ணீரை
கண்களுக்கு வழங்கி
மரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,
மதக்கூட்டம்.
மதிப்பிழந்த மதிப்பீடுகளை
மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு.

எனக்குப்
புனிதநூல்கள் பிடிக்கும்
கடவுளர்களையும் பிடிக்கும்
அதற்குப் பிறகு பிடிப்பதெல்லாம்
மதச் சாயம் வடியாத
மனித முகங்கள் தான்.

சிலுவையில்
இரண்டு கரம் விரித்த இயேசு
சிலுவை நிழலில்
இரு கரத்தையும் இறுக்கக் கட்டி
மனசை
விரிக்க மறுக்கும் மதக்கூட்டம்.

வலக்கரம் செய்வது
இடக்கரம் அறிய வேண்டாம்,
ஜெபிக்கும் போது
தனிமை போதும்,
விளக்கைக் கொளுத்தி
மரக்காலுக்குள் மறைக்காதீர்கள்,
இவையெல்லாம்
இன்னும்
விவிலியத்தின் வார்த்தைகளில் மட்டும் தான்
வாழ்க்கைக்கு வரவில்லை.

கழுத்துச் சங்கிலியில்
தங்கச் சிலுவை சுமப்பவர்களுக்கு
மரச் சிலுவையின்
பாரம் புரிவதில்லை.

மத விற்பன்னர்கள்
புனித நூல்களைப் படிப்பதைவிட
விற்பதையே அதிகம் விரும்புகிறார்கள்..

ஆன்மீகவாதிகளோ
ஆயிரம் பேருக்குத் தெரிவித்துத் தான்
ஆறு பேருக்கு
அன்னதானம் செய்கிறார்கள்.

பாவம் பரமன்,
இன்னும் சிலுவையில்
பாவிகளை மன்னிக்கச் சொல்லி
தொடர்ந்து மனுச்செய்கிறார்.
மதமோ
பாவிகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

மனிதமும், மன்னிப்பும்
ஆலயத்துள் பெறப்பட்டு
ஆலயத்துக்குள் விவாதிக்கப்பட்டு
ஆலயத்துக்குளே விட்டுச் செல்லப் படுகிறது.

காய்கள் கனியாகும்
எனும் நம்பிக்கையில்
சிலுவை மட்டும் இன்னும் காயவில்லை.

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்,
இன்னும்
சிலுவை கதறிக் கொண்டிருக்கிறது
காதுகளைக் கழற்றிவிட்ட மனிதர்களைப் பார்த்து.

பாவம்…

Image result for sin

முண்டியடிக்கும்
குழப்பக் கண்களோடு
கேட்டேன்….
பாவம் என்றால் என்ன ?

சட்டத்தின் முதுகெலும்புடைத்து
சமுதாயத்தைக் குழப்பி
சச்சரவு செய்வது பாவம்
என்றான்
அரசு ஊழிய நண்பன்.

ஆண்டவனின்
வார்த்தைகளை வாழாமல்,
கேட்டுவிட்டுக் கடப்பவன்
பாவி என்றார்
மரியாதைக்குரிய மதகுரு ஒருவர்.

கத்தி வீசாமல்
பிறர் மனம் காயம் செய்வதும்
வார்த்தை வாளெடுத்து
இதயம் சொருகுவதும் பாவம்,
என்றாள் குடும்பத் தலைவி ஒருத்தி.

பாவமில்லா இதயங்களை
பாவத்துக்குள் விழத்தாட்டுவது பாவம்,
படித்ததைச் சொன்னான்
பெரியவன் ஒருவன்.

நீ
என்ற ஒன்றே இல்லாத போது
பாவம் என்பதெல்லாம் இல்லை.
பார்வையில் தான் பழுது.
உன்னைச் சுற்றி இருப்பதெல்லாம்
நீர்க்குமிழிகளின் நிரந்தர அரங்கம்.
மேதாவித்தன குழப்பவாதி சொன்னான்.

உன் பார்வையில் தவறாய் தெரிவது
இன்னொரு பார்வையில்
பழுதாயில்லை என்றால்
பாவம் என்பதை எப்படி
பட்டியல் படுத்துவாய் ?
கேள்விக்குக் கேள்வியை பதிலாய் சொன்னார்
பேராசிரியர் ஒருவர்.

எந்தப் பதிலும் பதிலாய் முடியாமல்
கேள்வியோடு கேள்விகள்
கேள்விகள் தொடுக்க,
பதிலாய் நான் படுக்கையில் விழுந்தேன்…

மனசாட்சியின் தூங்காக் கண்கள்
உங்களை
தூங்கவிடாமல் செய்கிறதென்றால்,
நீங்கள் செய்தது பாவம் என்றாள்
கிசுகிசுப்பாய்
காதருகே என் மனைவி.
திரும்பிப் படுத்தேன்.

கனவுகளோடு சிரித்துப் பேசி
தூங்கிக் கொண்டிருந்தது
என் குழந்தை.

ஒரு தேவாலயம்

Image result for church mass

ஆலயத்தில் பெரும்பாலும்
ஆட்கள்
குறைவாகத் தான் இருப்பார்கள்.

பலர்
வெளிப்பக்கப் படிக்கட்டுகளில்
இளைப்பாறிக் கிடப்பார்கள்.

காற்றில் பறக்கும்
காகிதங்களை கவனித்துக் கொண்டோ,
விளையாடித் திரியும்
அணில்களை ஆராய்ந்து கொண்டோ,
சிறு சிறு
கற்களை எண்ணிக் கொண்டோ
வெளிப்பக்க மணல் திடலில்
சிதறிக் கிடப்பவர்களே அதிகம்.

நலம் விசாரிப்புகளுக்காகவும்,
சந்திப்புகளுக்காகவும்
தொடரும்
பலருடைய தேவாலயப் பயணம்.

சிலருக்கு ஞாயிறு காலை
திருப்பலி
கட்டாயமாகிப் போன
ஒரு வலி.

கடன் பாக்கி கேட்கவும்,
பொருட்கள் கை மாற்றவும் கூட
அந்த
ஆலய வளாகம் அவசியமானது
அனேகருக்கு.

சுவரில் கிறுக்கும்
சிறுவர்களை
மிரட்டி விரட்டி விட்டு
மீண்டும் விட்ட இடத்திலிருந்து
கதை தொடர்கிறார்கள்
சுவரில் சாய்ந்திருக்கும் பெண்கள்.

ஏலக் கணக்கை
எழுதிக் கொண்டிருக்கிறார் ஒருவர்,
அடுத்த வார அறிவிப்புகளை
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்
இன்னொருவர்.

இத்துடன் இத்திருப்பலி
நிறைவுற்றது என்கிறார்
பாதிரியார்.

வாரங்கள் தொடர்கின்றன,
அர்த்தங்களற்ற அடையாளங்களோடு.

 

மதம்

 

Image result for religion

என் மதத்தை
நான்
தாக்கிப் பேசினால்,
மதச்சார்பற்றவன் என்கிறீர்கள்,

உன்
மதத்தைத் தாக்கினால்
மத வெறியன் என்கிறீர்கள்,

இரண்டையுமே
எதிர்த்துப் பேசினால்
நெற்றிக்கு நாத்திக நாமம்
பூசுகிறீர்கள்.

என்ன தான் செய்வது ?

மாற்றுக் கருத்துகளை
மறைத்து வைத்துச்
சிரித்தால் மட்டுமே
என்னை
நானாய்
ஏற்றுக் கொள்வீர்கள்
போலிருக்கிறதே.

சப்தம் செத்த ஓர் சனிக்கிழமை…

Image result for Jesus on Cross

 

இப்படி ஒரு நாள்
இல்லாமலேயே போயிருக்கலாம்.

நேற்று மதியம்
சூரியனைக் கட்டி,
முள்முடி சூட்டி
மரச் சிலுவையில்
மரணிக்க வைத்தனர்.

போதனைகளின்
முடிவில்,
போதகனின் உயிர்
முற்றுப்புள்ளியாய்
குத்தப்பட்டு விட்டது.

எங்கேனும்,
சீசாத் தண்ணீ­ரில்
சூரியன் அணைந்ததாய்
வரலாறுண்டா?

மூச்சுக் காற்றில்
மலைகள் சரிந்ததாய்
சரித்திரமுண்டா ?

நாளை !
மண்ணில் புதைத்த
விண்ணகம் ஒன்று
விஸ்வரூபம் கொள்ளும் நாள்.

விதைகளின் வேலை
மரணிப்பதல்ல
பயணிப்பதென்பது
புரியப்போகும் நாள்.

இதற்கிடையில்
தனியாய்
சனி-யாய் ஏன் நான் ?

உலர்வுக்கும்
புலர்வுக்கும்
சாட்சியாக நிற்கும்
சபிக்கப்பட்டவனா நான் ?

இல்லை,
மனுக்குல மகத்துவம்
மண்ணுக்குள் இருப்பதால்
காவல் செய்யும்
ஏவல்க் காரனா நான் ?

மடியலுக்கும்
விடியலுக்குமிடையே
ஏன் ஓர்
இயலாமையின்
இடைச்சொருகல் ?

என்
இரு கரத்தையும்
விரித்துப் பிடிக்கிறேன்.

இடது ஆள்காட்டி விரலில்
கல்வாரிக் காயங்களால்,
குருதித் தூறல்களாய்
ஓர்
பாவத்தின் பலிபீடம்.

வலது கை விரல் நுனியில்
நெருஞ்சிகள்
மெழுகை நெரித்தாலும்
சுடர் கிழிவதில்லை
எனும்
நம்பிக்கையின் பேரொளி.

அழிவின் ஆரம்பம்

Image result for crusades

 

மதவாதிகளே
நீங்கள்
மிதவாதிகளாவது எப்போது ?

ஜ“ரணிக்கும் முன்
மரணிக்கும் வாழ்க்கை
இன்னுமா
பயணிக்கிறது ?

மனித அறுவடைக்காய்
அயோத்திக்கு ஆயுதம்
அனுப்புகிறீர்கள்.

சாவின்
புள்ளிவிபரங்கள் பொறுக்கி
வெற்றி அட்டவணை
வரைகிறீர்கள்.

உங்கள்
குடிசைக் கதவுகளை
கரையான் அரிக்கிறது.
வேதனை வேல்கள்
பொருளாதார விலா இடிக்கிறது !

எப்போதேனும்
இதை உணர்ந்ததுண்டா ?

மதத்தின் மையத்தில்
மனிதாபிமானப் புயல் தானே
மையம் கொண்டிருக்கிறது
பின் ஏன் அது
பிசாசுகளை கரை கடத்துகிறது ?

வெறியின் கிண்ணத்தில்
ஊறிக்கிடக்கும் மனசை
எந்த கங்கை வந்து
கழுவப்போகிறது ?

ஏன்
கடவுளைக் கொளுத்தி
மதத்தை வெளிச்சப்படுத்துகிறீர்கள் ?
ஆண்டவனை
கொன்றுவிட்டுக்
கோயில் கட்டுகிறீர்கள் ?

வீடு பேறு கோரி விட்டு
ஆண்டவனுக்கே
வீடு தரப் போகிறாயா ?

தவமிருக்கும் பக்தன் நீ
வரம் வினியோகிக்கிறாயா ?

தீட்டி வைத்த
ஆயுதங்களை ஆராயும் முன்
கொஞ்ச நேரம்
பூட்டி வைத்த மத நூல்களை
ஆராய்ந்து பார்.

எங்கேனும்
அடுத்த மதத்தை
அழிக்கச் சொன்னால்
வா.
எனக்கும் ஓர் அரிவாள் கொடு.

 

ஆண்டவனைப் பூட்டிய சாவிகள்…

Image result for Poor man in front of church

 

அந்த உண்டியலுக்கும்
இந்த
பிச்சைப்பாத்திரத்துக்கும்
தூரம் அதிகமில்லை.

தூரம் மட்டும் தான்
அதிகமில்லை.

அந்த தேவாலயத்தின்
மதில் சுவரும்,
அந்த தொழுகைக் தளமும்,
கோவில் தெப்பக் குளமும்
எல்லாம்
எல்லாம் பெரிது தான்

கருணை தரும்
கடவுளோடு மக்களுக்கு
கருணை அதிகம்.

கடவுளோடு மட்டும் தான்
கருணை அதிகம்.

தெருக்கள் தோறும்
கும்பாபிஷேகம் தொடரும்,
இடையூறாய் இருந்தால்
சேரிகள் மட்டும்
சரிக்கப்படும்.

அச்சத்தின் அடிமைகள்
மதவாதிகளா ?
இல்லை
பத்தியின் உச்சத்தால் மதவாதிகளா ?

மனிதாபிமானம்
மிச்சமில்லா தேசத்தில்
ஆண்டவனைப் பூட்டிய
சாவிகளும் தொலைந்துவிட்டனவா?

மனிதனுக்காக
கடவுள் வந்ததே
மதங்களென்று பெயரிடப்பட்டன.
அதனால் தானோ என்னவோ
எப்போதுமே
மனிதனுக்காக மனிதன்
வர மறுக்கிறான்.

எல்லா உறிகளும்
வெண்ணை தாங்குகின்றன,
திருடச் சொல்லி
கண்ணனுக்கு கருணை மனுவும்
தருகின்றன.

ஆனால்,
கண்ணனோ
கொள்ளையிட
கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களை
மட்டுமே தேடுகிறான்.
வெண்ணை உறிகளை அல்ல.

ஆண்டவன் பேசுகிறேன்…

Image result for chappal in front of temple

 

பிரிய பக்தனே…

வா.
வந்தமர்.

ஏன் இத்தனை
அவசரம் ?
வாசலில் நீ போட்ட
செருப்பு
அங்கேயே தான் கிடக்கும்.

உட்காரேன்.
கொஞ்ச நேரம்.

இங்கே
வருவோரெல்லாம்
கூடை நிறைய
கோரிக்கைகளோடும்,
வண்டி நிறைய
வேண்டுதல்களோடும் வரும்
வாடிக்கையாளர் தான்.

ஓர்
வேண்டுதலுக்கு முன்புதான்
என்றோ பெற்றவற்றுக்கு
நன்றி சொல்ல
நினைக்கிறார்கள்.

வேடிக்கை பார்ப்பதற்கும்
சுய புராணம்
வரைவதற்கும்
வருபவர்கள் தான் ஏராளம்.

நூல் கையிலிருந்தாலும்
ஏங்கோ பறக்கும்
பட்டம் போல,
எண்ணங்களை எங்கோ
எறிபவர்கள் தான் ஏராளம்.

வேண்டுதல் பயத்தின்
வெளிப்பாடுகளாய்,
நேர்த்திக் கடனின்
வேண்டா வெறுப்புடன்
வந்து நிற்பவர் தான் ஏராளம்.

எனக்கு
லஞ்சம் தருவதாய் சொல்லி
நச்சரிக்கும்
பக்தர்கள் தான் ஏராளம்.

தப்பிப் பிழைக்கும்
மற்ற மக்கள் எல்லாம்,
என் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி
கண்ணீ­ர் துளி விதைத்து
ஈரமாக்கி நகர்கிறார்கள்.

கடிகார ஒப்பந்தத்தோடு
தான்
முடிந்து போகிறது
அத்தனை பேரின்
ஆலய சம்பந்தமும்.

யாரேனும்,
வருவார்களா ?

சும்மா..
உன்னை பார்க்க வந்தேன்
எனும் ஸ்நேகத்தோடு.

பிரார்த்தனை

Image result for south indian Old lady praying

விறகு உலர்த்திக் கொண்டே
அம்மா
மழை வரக்கூடாதே
என்றும்,

நடவு முடித்த மாமா
கொஞ்சமாய்
தூறலேனும் விழட்டுமே என்றும்.

ஒரே கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்
தனித் தனியாய்.

நான் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறுமனே.

 

விசுவாசம்

கிறிஸ்தவத்தின் வேர்கள்
நம்பிக்கையின்
மீது
நங்கூரமிறக்கியிருக்கிறது.

கவலை இருட்டின்
கூர் நகங்கள் நகரும்
புலப்படாப்
பொழுதுகளின் வெளிச்சமும்,

தோல்வித் துடுப்புகள்
இழுத்துச் சென்ற
பேரலைப் பொழுதுகளின்
இரையும் கரையும்.

பயங்கள் படுத்துறங்கும்
படுக்கையின் நுனிகளில்
தூக்கம் தொலைக்கும்
இரவுகளின் முடிவுகளும்,

இறையில் வைக்கும்
நிறைவான நம்பிக்கையே.

விசுவாசமே
பார்வையைப் பரிசளிக்கிறது
விசுவாசமே
நோய்கள் பாய்களைச் சுருட்டியோட
பணிக்கிறது.

தனிமனிதன்
நம்பிக்கை இழக்கையில்
பாதைகள் புதைகுழிகளாகின்றன.

குடும்பம்
நம்பிக்கை இழக்கையில்
சின்ன சொர்க்கம் ஒன்று
செத்துப் போகிறது.

நாடு
நம்பிக்கை இழக்கையில்
நல்லரசுக் கனவுகள்
நழுவி உடைகின்றன.

கிறிஸ்தவன்
நம்பிக்கை இழக்கையில்
சிலுவை மரம்
இயேசுவை அறைகிறது.

விசுவாசம்
மலைகளை நகரச் செய்யும்
மரங்களைப் பெயரச் செய்யும்
வாழ்க்கையை
உயரச் செய்யும்.

விசுவாசம் இருக்கையில்
நாம்
சிங்கத்தின் மீதிருக்கும்
சிற்றெறும்பாவோம்,
விசுவாசம் விடைபெறுகையில்
நம்மீது கவலைச் சிங்கங்கள்
கூடாரமடிக்கும்.

ஆன்மீகத்தின் வாசலில்
சந்தேகம் வந்து
சம்மணமிடுகையில்
சத்தமாய் சொல்லிக் கொள்வோம்
என்னை
காணாமல் விசுவசிப்பவன் பாக்கியவான்