நெடுங்கவிதை : என்ன செய்யப் போகிறாய் ?

நம்ப முடியாத … என்று சொல்வார்களே ! அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது !  

1.

கீழே தூரத்தில்
மேகங்கள்
வானத் தடாகத்தின்
தலை கீழ் தாமரைகளாய்
மிதந்தன.

மேலும் கீழும்
அசைவதற்கு இசையாத
மேக வீரர்களின்
அணிவகுப்புக்கிடையே
சத்தத்தைத் துரத்தியபடி
நின்ற நிலையிலேயே
ஓடிக் கொண்டிருந்தது
அந்த விமானம்.

அதிகாலைச் சூரியன்
மேகம் துளைத்து
மெலெழும்பும் காட்சியை
சன்னலோரம் அமர்ந்து
ரசித்துச் சிலிர்த்தாள்
மலர்விழி.

பூமியிலிருந்து பார்த்தால்
பயணித்துக் கொண்டிருக்கும்
மேகங்கள்
இங்கே
கலையாத் தவங்களாய்
கலைய மறுத்து
வெள்ளைப் புற்றுக்குள்
பிள்ளைக் காளான்களாய்
குடைபிடித்துக் கிடக்கின்றன.

மேகம் ஓர்
அற்புத அனுபவம் தான்,
வானக் கானகத்தின்
வெள்ளை மலைகளாய்,

வானக் கடல்
அலையடிக்காமல் ஒதுக்கிய
நுரை மிச்சங்களாய்,

வான வயலில்
நட்சத்திரத் தானியங்களை
கதிரடித்துக் கொட்டி முடித்த
வெள்ளை வைக்கோல்
குவியல்களாய்,

யுகம் யுகமாய் வாழ்ந்த
பிரபஞ்சத் தாயின்
நரைத்த தலையாய்…

கற்பனைகளை
கவிதைகளும்,
கவிதைகளை கற்பனைகளும்
துரத்தி ஓடும் ஓர்
வெள்ளாட்டு மந்தையில்
முதுகுப் பிரதேசமாய்
பரவிக் கிடந்தது ஆகாயம்.

மலர்விழியின் அருகே
அமர்ந்து,
மேகத்தின்
உருவமற்ற உருவங்களின்
பருவப் பயிர்த்தோட்டத்தில்
பார்வை விரித்து
அமர்ந்திருந்தாள் சுகந்தி.
மலர்விழியின் தாய்.

விமானம்
ஏதோ ஓர் அட்சக் கோட்டின்
எல்லையில் துவங்கி,
சில
தீர்க்கமான தீர்க்கரேகைகளைக்
கடந்து
அமெரிக்கா நோக்கி
பறந்து கொண்டிருந்தது.

காற்றில் யாரும்
ஓவியம் வரைய முடியாது
என்பதை கொஞ்சம்
மறந்துதான் ஆகவேண்டும்,
இங்கே
காற்றில் சாலையே
சாத்தியமாகிறதே !

நாளை,
வானத்தில் சில நிறுத்தங்கள்
நிறுவி,
தேனீர்க் கடைகளையும்
நியமிக்கலாம் !

ஓடுதளத்தை
பசிபிக் கடல் மேலான
மேகத்தின் மேல் அமைக்கலாம்,
கனவுகளை
கண்டு விழிக்கும் முன்
நிஜமாக்கத் துடிக்கும்
விஞ்ஞானத்தின் முன்னாலே
வறுமையைத் தவிர
அத்தனை இயலாமைகளும்
மொத்தமாய் தீர்க்கப் படுகின்றன.

விமானம்
இமைக்க மறுக்கும்
இறக்கைகளோடு
பறந்துகொண்டிருக்க,
இருக்கையில் இருந்த
சுகந்தியின்
சிந்தனைகள் மட்டும்
இறந்த காலத்துக்குள்
இமைகளை இறக்காமல்
விழித்துக் கிடந்தது.

இந்த பயணத்தில்,
வின்சென்ட் மட்டும்
அருகில் இருந்திருந்தால் …
எத்தனை
அற்புத அனுபவமாய்
இருந்திருக்கும் ?

0

 

2

நினைத்துப் பார்க்கவே
முடியவில்லை வின்செண்ட்,
நாம்
பதிவுத் திருமணம்
பண்ணிக் கொண்டதை.
சுகந்தி கண்ணீரோடு கிசுகிசுத்தாள்.

வின்சென்ட் சிரித்தான்,
சில முடிவுகள்
எடுக்காவிட்டால்,
சில ஆரம்பங்கள்
ஆரம்பிக்காமலேயே போகலாம்.

நம் காதலுக்கு
நீ
பிள்ளையார் சுழி போட்ட
கணத்திலேயே தெரியும்,
நம் காதல்
அங்கீகரிக்கப் படாது என்பது.

உங்கள்
கர்ப்பூரத் தட்டுகள்
என்
சிலுவைச் சமாச்சாரங்களை
சம்மதிக்கப் போவதில்லை என்பதும்.

எங்கள் வீட்டு
விவிலிய விரல்கள்,
கீதையின் பக்கங்களை
புரட்டிப் பார்க்க அனுமதிக்காது
என்பதும்,
புலரும்போதே புரிந்தவை.

காதலுக்கே கருப்புக் கொடி காட்டும்
நம் உலகத்தில்,
மதத்தின் மதில் சுவர் தாண்டிய
மனங்களை
எந்த வீட்டில் தான்
விட்டு வைத்திருக்கிறார்கள்.

முதலில் எதிர்ப்புகள்,
பின் சில எதிர்பார்ப்புகள்
பின்
மீண்டும் நம் பழைய தொட்டில்…

கொஞ்சம் பொறுத்திரு,
கடல் தான் மேகத்தின் தாய்
ஆனாலும்
கடலிலிருந்து புறப்படும் போதே
மேகத்தை
பார்க்க முடிவதில்லை.

பொறுத்திருக்க வேண்டும்,
மேகம்
கார்மேகமானபின்பே
மீண்டும் அது
பூமிக்குத் திரும்ப இயலும்.

நமக்கு ஓர்
மழலை மலரட்டும்,
அப்புறம் பார்,
அணைகளைத் தேடாத வெள்ளம்
அணைத்துக் கொள்ள
ஓடிவருவதை…

சொல்லிக் கொண்டே
வின்சென்ட் சுகந்தியின்
கூந்தல் கரையில்
முத்திருக்கிறதா என்று
மூழ்கித் தேடினான்.

காதலின் கவலைகள்
எல்லாம்
கூந்தலின் வருடலில்
திருடப்பட்டுவிடும் என்பதை
இன்னுமொருமுறை
அவர்கள்
உறுதிப் படுத்திக் கொண்டனர்.

மதங்களின் துரத்தல்கள்
எட்ட முடியா எல்லையில்
ஓர்
வாடகை வீட்டில் வாழ்க்கை
வேர்களில்லா விழுதுகளாய்
விழ ஆரம்பித்தது.

ஆனாலும்,
சுகந்தியின் சிந்தனைகளும்
வின்சென்ட் – ன் நினைவுகளும்
தங்கள் வீட்டுக்
கொல்லைப் புறத்திலேயே
குட்டி போட்ட பூனையாய்
சுற்றிச் சுற்றி நடந்தன.

காலங்கள் வந்து
வாசலில்
கோலம் போட்டு வரவேற்கும்,
பிரிவுகள் வந்து
கதவு தட்டி
பிரியம் கொண்டாடும் என்ற
கனவுகள் எல்லாம்
காவிரித் தண்ணி போல
எல்லைக்கு வெளியே நின்றுபோயின.

மாதங்கள் சில
மூலையில் முக்காடிட்டுத்
தூங்கிப் போன
ஒரு பொழுதில்,
வின்சென்ட்-ன் காது கடித்தாள் சுகந்தி…

சொந்தங்கள் சொந்தங்கொண்டாட
ஓர்
புதிய சொந்தம் எனக்குள்
பதியம் கொண்டுவிட்டது.

நம்
காதல் கொடியில் இப்போது
ஓர்
புதிய கிளை
உதயமாகி இருக்கிறது.

நமக்கே நமக்கான
நாம்
இனிமேல்
ஓர் குழந்தைக்குச்
சொந்தமாகப் போகிறோம்.

0

3

வின்சென்ட்
ஆச்சரியப் போர்வையை
விலக்கி வெளியே குதித்தான்,

அவன் மனம்
வானவெளியிலிருந்து
பாராசூட் கட்டாமல்
குதித்து மிதந்தது.

சுகந்தியைத் தூக்கி
ஓர்
குழந்தையாய் கொஞ்சினான்.

நிலாவுக்குள் இன்னோர்
பௌர்ணமியின் பிரவாகமா ?

நம்
எதிர்பார்ப்புகளின் தூரம்
எதிர் வீட்டு
தூரத்திலா ?

உப்புக் கடலில் வீசப்பட்ட
சிறு
தெப்பப் படகாய்
மனம் அலைந்தாடியது.

சுகந்தி
புதிதாய் உணர்ந்தாள்.
விழிகளின் ஓரங்களில்
சில
நாணத்தின் நாணல்கள்
வளைந்தாடின,
சில வெட்கத்தின் விரால் மீன்கள்
வழுக்கி ஓடின.

அத்தனை ஜனத்தொகை
இருந்தாலும்,
ஒவ்வோர் ஜனனமும்
இத்தனை பரவசமா ?

உலகுக்கு ஓர்
புள்ளி விவரக் கணக்காய்
தெரிவது தான்,
என் வாழ்வின்
மையப் புள்ளியா ?

தனக்குச் சொந்தமான
மழலையின் விரல் தொடுவது
மனித மகிழ்வில்
முதன்மையானது !
அவை
எந்த அளவைக்குள்ளும்
அடங்கிப் போவதில்லை.

அப்படித்தான்
சிலிர்த்துப் போனார்கள்,
சில
இலவசச் சிறகுகள்
இணைந்து கொள்ள,
உயர உயரப் பறந்தார்கள்.

சந்தோஷத்தின்
சாயங்காலங்கள் சில
சென்றபின்,
வின்சென்ட்,
இன்னோர் சந்தோஷத்தை
சுமந்து வந்தான்.

ஓராண்டு
அமெரிக்கப் பயணம்,
வயிற்றில் குழந்தையோடு
வரப்போகிறது
நம் தேனிலவுப் பயணம்,
சொல்லிவிட்டுக் கண்ணடித்தான்.

சுகந்தியின் சிறகுகளில்
அப்போதே
சில
பனித்துளிகள் பறந்து வந்து
ஒட்டிக் கொண்டன,
குளிர் அகலுமுன் அவள் அவனை
கட்டிக் கொண்டாள்.

0

  
4

நாளை
விமானப் பயணம்.
இந்த ஓர் இரவு மட்டும் தான்,
நாளைய இரவு
விமானத்தினுள் தான்.

ஆடம்பர பூமிநோக்கி
ஓர்
உல்லாசப் பயணம்.

இத்தனை சந்தோஷங்களை
எப்படித் தாங்குவது ?
என்று தெரியாமல்
திணறினாள் சுகந்தி,

சுகந்தி
சந்தோஷ மூட்டைகள்
சுமந்து கூட
கால் வலிக்கக் கூடாதென்று
தோளில் தாங்கினான்
அவன்.

அத்தனை பெட்டிகளிலும்
ஆடைகள் நிறைத்தாயிற்று,
மனசின்
அத்தனை அடுக்குகளிலும்
உற்சாகப் புத்தகங்களை
அடுக்கியாகி விட்டது.

கொஞ்ச நாள்
தொலைதூரப் பயணம்,
பின்
சொந்தங்களை சந்தித்து
மழலையை அறிமுகப் படுத்தி
சமாதானக் கொடி
தயாரிக்கத் திட்டம்.

வின்சென்ட்
சுகந்தியின் கன்னம் தொட்டான்,
ஓர்
வண்ணத்துப் பூச்சி
தென்றலை தன்
சிறகால் அடிக்கும் மென்மையில்,

பனித்துளி ஒன்று
புல்லில் புரண்டு படுக்கும்
மென்மையில்,

சுகந்தி விழிகளை மூடி
தவம் செய்தாள்,
வின்சென்ட்ன் விரல்கள்
வரங்களை
வருவித்துக் கொண்டிருந்தன.

அவர்களின்
காதல் இசைகளில் ஓர்
சுரம் கெட்ட ஓசையாய் விழுந்தது
தொலைபேசியின்
அழைப்பு.

வின்சென்ட் – ன்
நண்பன் விக்னேஷ் தான்.
அமெரிக்க அண்ணனுக்கு
சில பொருட்களை
வாங்கிச் செல்ல வருவாயா ?
எனும் மனுவின் முனையில்.

வின்சென்ட்,
மறுப்புச் சொல்லப் பழகாதவன்,
புன்னகையோடு புறப்பட்டான்.

சுகந்தி சிணுங்கினாள்,
சீக்கிரம் வரணும்..

விட்ட இடத்திலிருந்து
தொடராமல்,
ஆரம்பத்திலிருந்தே
ஆரம்பிக்கிறேன்.
கண்ணடித்து,
சுகந்திக்குள் கொஞ்சம்
வெட்கம் வளர்த்துப் போனான்
அவன்

0

  
5

இரவு,
மணித்துளிகள் மெல்லமெல்ல
இரவின் ஆழத்தை
அறிவித்து நகர்ந்தன.

இன்னும்
வின்சென்ட் ஐ காணவில்லை.
வினாடிகளைத் தின்று
நிமிடங்களும்,
நிமிடங்களை விழுங்கி
மணித்துளிகளும்
வயிறு வீங்கி நகர்கின்றன.

இரவு பத்துமணி,
ஆறு மணிக்குக் கிளம்பியவனை,
இன்னும் காணவில்லை.
கொஞ்சம்
பதட்டத்தின் விட்டம்
அகலமானது.

மணி பதினொன்று,
கொஞ்சம் கோபமும்,
கொஞ்சம் பயமும்
மனசின் கூட்டுக்குள் வந்து
குடியேறின.

நேரமாகிறது என்றால்
ஒரு
போன் செய்யலாமே ?
இத்தனை நேரத்துப் பதட்டத்தை
எப்படித் தான்
தாங்கிக் கொள்வது ?

மணி பன்னிரண்டு,
இன்னும் வின்சென்ட் வரவில்லை.
சுகந்தியின்
கூட்டுக்குள் குடியேறிய
பயத்தின் எலி,
பயங்கர சிங்கமாய் உறுமியது.

அவள் தொலைபேசி,
தெரிந்த எண்களையெல்லாம்
தடவித் தடவி எழுப்பின,
எங்கும்
விக்னேஷ் பெயர் இல்லை !

மத்தியானம் வரை
விடியாமல் கிடந்தால்,
சேவல் சங்கடப் படுமோ ?
கால்கள்
வாசலுக்கும் தெருவுக்குமாய்
நடந்து நடந்து தேடின.

மணி ஒன்று,
உச்சகட்ட பயம் ஒன்று
உள்ளுக்குள் மையம் கொண்டு
எந்நேரம் வேண்டுமானாலும்
இமைகளை இடித்து
தரையிறங்கலாம் என்ற நிலை.

காவல் துறைக்கு
தகவல் தரலாம்…
யோசனையில் தொலைபேசி
தொட்டாள் சுகந்தி.

அதே நேரம்
வாசல் கதவு
தட்டப் பட்டது !

சுகந்திக்கு
போன உயிரில் பாதி
உற்சாகத்தோடு உள்ளுக்குள்
வந்தது.

கவலைகளின் கால்கள்
சட்டென்று விலகின,
உதடுகளின் இறுக்கம்
மெல்ல விலக
கதவை நெருங்கி,
தாழ் விலக்கினாள்.

வின்சென்ட் இல்லை,
யாரோ இருவர்,

வின்சென்ட் உங்களுக்கு
யாரம்மா ?
விசாரிப்பின் தோரணை
சுகந்தியின் உள்ளுக்குள்
புதிதாய் ஓர்
கண்ணிவெடியை மிதித்தது.

நான் அவரோட மனைவி,
என்ன விஷயம் ?
பரபரப்பு வார்த்தைகள்
வாசல் முழுதும் சிதறின.

வின்சென்ட் க்கு ஒரு விபத்து,
அரசு மருத்துவமனையில்
அனுமதி,
வருகிறீர்களா ?
அழைத்துச் செல்கிறோம்.
நாங்கள் காவல் துறையினர்.

வார்த்தைகளின் ஆணிகள்
சுகந்தியின் காதுகளில்
ஆழமாய் இறங்கின,
கண்களுக்குள் ஓர்
பெருங்கடல் கொந்தளித்தது,
இதயத்தின் உள்ளே
பயத்தின் குதிரைக் குளம்படிகள்
வேக வேகமாய் குதித்தன.

நிஜம் தானா,
இவர்கள்
ஏமாற்றுக் காரர்களின் எஜமானர்களா ?
காக்கி உடை இல்லை,
வந்திருப்பது காவல் வாகனமும்
இல்லை,

வினாடி நேர யோசனையில்
சுகந்தி சொன்னாள்,

நானே வருகிறேன்
நீங்கள் செல்லுங்கள்.

வின்சென்ட்,
ஒரு போன் செய்யேன்,
உனக்கொன்றுமில்லை என்று…
சுகந்தியின் மனம் கதறியது.
உள்ளுக்குள்
திகில் புயல் ஒன்று
திசை தெரியாமல் வீசியது.

வந்தவர்களின் வாகனம்
விலகியபின்
வெளியே வந்தாள் சுகந்தி.

0

  

 
6

வீதிகளெங்கும்
கணக்கில்லா கருப்பு மேகம்,
யானைகளின்
ஊர்வலம் போல்
திட்டுத் திட்டாய் இருட்டு.

தன்னைச் சுற்றி மட்டுமே
ஒளி வட்டம் வரையும்
மின் மினி வாலாய்
சாலை விளக்குகள்.

சுகந்தியின் சுவாசப் பைக்குள்
ஆக்சிஜன் வரத்து
நின்று போன உணர்வு.

உதவிக்கு அழைக்க
யாரையும் காணவில்லை.
உறவுக்குள்
இருந்தவர்கள் யாரும்
அந்த இரவுக்குள் இல்லை.

காதல் திருமணத்தின்
ஓர்
கவலைப் பக்கத்தை
அப்போது தான் அவள் விரல்கள்
புரட்டிப் படித்தன.

அதுவரை
உலகத்தோடு இருப்பதாய்
தோன்றிய அவள்,
இப்போது
தனிக்கிரகத் தவளையாய்
தடுமாறினாள்.

ஆதரவுக்கு யாருமே
அருகில்லா நிலையை
அக்கணம் தான்
அவளுக்கு
அறிவித்துப் போனது.

வண்டுகளும் பூக்களுமே
வாழ்க்கையென்று
இருந்தவர்கள்
கிளைகளைக் கவனிக்காத
தவறை
அப்போது தான் அறிந்தாள்.

ஏதேனும்
ஆட்டோ  கிடைக்குமா என
அங்குமிங்கும்
துழாவினாள்.

அதுவரை
இரைச்சலைத் தின்ற சாலை
இரவைச் செரிக்க
கோணி போர்த்திச்
சுருண்டு கிடந்தது.

எங்கும்
நிசப்தத்தின் நிழல்கள்
நெடிதுயர்ந்து நின்றன.

இருசக்கர வாகனத்தின்
பின்னால்
பயணித்து பயணித்து
நேற்று வரை
ஆட்டோ ப் பயணம்
அவசியமற்ற ஓர்
ஆறாம் விரலாய் இருந்தது.

இப்போது அதுவே
உள்ளங்கை போல
அத்தியாவசியத் தளமாய்
மாறியது அவளுக்கு.

பதட்டத்தின் வேகத்தில்
வாகனத்தைக் காணாத
படபடப்பும் சேர்ந்து கொள்ள
செய்வதறியாது விழித்தாள்
சுகந்தி.

கணநேர மின்னல் ஒன்று
காரிருட்டை
வினாடி நேரம் விலக்கிவைப்பது
போல,
கண்களுக்குள் விழுந்தது
அந்த சாலையோர ஆட்டோ .

நள்ளிரவின்
பயமுடிச்சுக்களோடும்,
வின்சென்ட் பற்றிய
பதட்ட முடிச்சுகளோடும்
நின்ற அவளை
ஓர்
மூன்றிலக்க கட்டணம் பேசி
ஏற்றிக் கொண்டது வாகனம்.

மருத்துவமனை நோக்கிய
பயணம்,
கல்வாரியில் இயேசுவின்
சிலுவைப் பயணமாய்
கனத்தது அவளுக்கு.

தலைகளில் முள்முடியும்
முதுகில்
சாட்டையின் நகக் கீறல்களும்,
சுய இரத்தம்
அங்கங்களெங்கும் தங்க
வலியில் நிற்கும்
இயேசுவின் உருவம்
ஏனோ
அவள் விழிகளுக்குள்
வலுக்கட்டாயமாய் வந்து விழுந்தது.

வின்சென்ட் சொல்லியிருக்கிறான்,
சுயமாய்
செத்துப் போகச் சம்மதிக்கும்
நிலை,
மனதை அடக்குவதின்
உயர்ந்தபட்ச நிலை என்று.

ஆட்டுக் கூட்டம் புகுந்த
தொட்டாச் சிணுங்கித்
தோட்டமாய்,
உள்ளம் விரிய மறுத்து
சுருண்டு கிடந்தது சுகந்திக்கு.

யார் தான் சிரிக்க முடியும்
பலிபீடத்தில்
தலைவைத்தபின் ?
சிரச்சேதச் சக்கரம்
கழுத்தை நோக்கிப்
பாயும் போது,
எந்த அவஸ்தையோ
அந்த அவஸ்தையே
அப்போது அவளுக்கும்.

தூரத்தில்,
மருத்துவமனை !

0

 

 
7

தூரத்தில்,
மருத்துவமனை !

வாசலிலேயே குதித்து
‘காத்திருங்கள்’ என்னும்
ஒற்றை வார்த்தையை
ஆட்டோ க்காரர் கையில் திணித்து,
உள்ளுக்குள்
ஓடினாள் அவள்,
புள்ளிமானைத் துரத்தும்
புலியின் பாய்ச்சலில்.

எதிர்பட்ட அறைகளிலெல்லாம்
பார்வை அறைந்து,
வரவேற்பறை நோக்கி
கால்களை எறிந்தாள்.

விண்சென்ட் ஐக் காணவில்லை.

வரவேற்பறையில்,
ஒரு வெள்ளைத் தூக்கம்
சிவப்புக் கண்களோடு
சாய்ந்திருந்தது.

அவசரமாய் உலுக்கி,
விஷயம் உதிர்த்தாள் சுகந்தி.
அந்த
மருத்துவப் பறவை
அப்போது தான் வந்ததாம்,
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து
இல்லையே என்று
அமைதியாய் சிறகடித்தது.

சுகந்தியின் பதட்டம்
இருமடங்கானது !,
ஒருவேளை
தகவல் பொய்யா ?

அனுமதி வாங்கி
வீட்டுக்கு தொலைபேசினாள்,
அது
கிணற்றுக்குள் விழுந்த
வாயில்லாப் பூனையாய்
தீண்டுவாரில்லாமல்
கதறித் தீர்ந்தது.

அதுவரை இமைகளுக்குள்
வரப்புகட்டி பாதுகாத்த
உப்பு நீர்
உடைபட்டுக் கொட்டியது.

மருத்துவமனையின்
அத்தனை அறைகளிலும்
தேடினாள்,
எதிர்பட்ட அத்தனை பேரையும்
மன்றாடினாள்.

போர்க்களத்தில் தொலைந்த
கத்தியைத் தேடுவதாய்,
பிணியாளர் கூட்டத்தில்
துணையாளனைத் தேடினாள்
சுகந்தி.

எங்கும் அவன் இல்லை,
திசைகளின்
கதவுகளெல்லாம்
தாழ் போட்டுப் பூட்டிய அவஸ்தை,
கண்ணீர் வழிய
ஆட்டோ வுக்குத் திரும்பினாள்.
இரவு
மணி இரண்டு என்றது.

ஆட்டோ  ஓட்டுனர்,
களைப்பின் படுக்கையில்
இருந்தார்,
சுகந்தியின் விழிநீர் அவரை
விசாரிக்க வைத்தது.

சுகந்திக்கும்,
இதய பாரத்தை எங்கேனும்
இறக்கி வைக்கவேண்டி
இருந்தது.

சொன்னாள்
கேட்டான்.
ஆச்சரியமானான்.

விபத்தில் அடிபட்ட ஒருவரை
இந்த வாகனம் தானம்மா
இங்கே சுமந்து வந்தது,
பின்
அவரை
அடுத்த மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தார்கள்.
அங்கும் நான் தான் போனேன்.

அவராய் தான் இருக்கும்
வாருங்கள்
அழைத்துப் போகிறேன்.


8

பாதாள அறைக்குள்
சிறைவைக்கப் பட்ட கிளிக்கு
ஓர்
சின்ன ஜன்னல்
திறக்கப் பட்டதாய் தோன்றியது
அவளுக்கு.

அவருக்கு என்னவாயிற்று
ஏதேனும் தெரியுமா ?
சொல்லுங்களேன்.
வார்த்தைகளை கண்ணீரும்
கண்ணீரை வார்த்தைகளும்
போட்டி போட்டு
முன்னேற
முகம் பொத்திஅழுதாள் சுகந்தி.

விஷயம் முழுதாய்
விளங்கிக் கொள்ள இயலவில்லை,
ஆனால்
உயிர் இருப்பதை மட்டும்
உணர்ந்து கொண்டேன்.

நீங்கள்
ஆட்டோ வில் ஏறிய சாலையில்
தானே
அடிபட்டுக் கிடந்தார் !
அருகே தான் உங்கள் வீடா ?

கவலையை விடுங்கள்,
நல்லதே நடக்கும்,
அனாதைக் கவலைகளுக்கு
ஆறுதல் சொன்னான் அவன்.

வீட்டுக்கு அருகே
விபத்து நடந்திருக்கிறது !
சாலையில் அவன்
சிதறிய நேரம் நான்
கூப்பிடு தூரத்தில்
செவிகளில்லாமல் கிடந்திருக்கிறேன்.

அந்த நினைவு
அவளுக்குள் மேலும்
ஓர் அணுகுண்டின்
கனத்தை தந்து போனது.

ஆட்டோ வின் இருக்கையின்
ஓரமாய்,
ஈரமில்லாமல் இருதுளி இரத்தம்
சுகந்தியின் கண்களில்
விழ,
அடக்கி வைக்க முயன்ற
கண்ணீர் நதி மீண்டும்
அருவியாய் ஆர்ப்பரித்தது.

“என்
ஒவ்வோர் இரத்தத் துளிகளிலும்
நம்
காதலைத் தான்
சேமித்து வைத்திருக்கிறேன்”,
வின்சென்ட் முதன் முதலாய்
எழுதிய காதல் கவிதை.

நம் காதலின்
எத்தனை சொட்டுகளை
சாலைக்குத் தந்தாய்
காதலா ?

என் உயிரின் கடைசிச் சொட்டும்
உன்
நினைவுகளைத் தானடி
ஈரமாய் சுமக்கும்….,
நினைவுகள் அவளை
பாரமாக்கியது.

அவர் பேசினாரா ?
சுகந்தியின் உதடுகள்
தொண்டைக்குள்ளிருந்து
வார்த்தைகளை துழாவின.

‘பேசவில்லை… ஆனாலும்
 உயிருக்கு மோசமில்லை’
வருத்தங்கள் எதையும் தருவதில்லை
தைரியமாய் இருங்கள்.

அம்மாவின் தோள் சாய்ந்து
அழ வேண்டும்
போலிருந்தது அவளுக்கு.
இயலாமையின்
ஆமைஓட்டுப் பாரம்
அசுர பலத்தோடு அழுத்தியது.

0

 

 
9

தூரத்தில் மருத்துவமனை
இருளுக்குள் ஓர்
மெழுகு வர்த்தியாய் ஒளிர்ந்து
நின்றது.

அவசரமாய்
ஓடினாள்,
வரவேற்பறை அடைந்து
விசாரிப்பு மனுவை
அவசரமாய் வாசித்தாள்.

எத்தனை பதட்டங்களைப்
பார்த்ததோ
அந்த வெள்ளைக் குயில்,
பதட்டமில்லாமல்
பதில் சொன்னது.

‘அவசர சிகிச்சைப்
பிரிவுக்கு செல்லுங்கள்’

சுகந்திக்குள்
சின்னதாய் ஓர் நிம்மதி இழை
நீண்டது,
உயிருக்கு உத்தரவாதம்
இருக்கிறது !.

அவசர சிகிச்சைப் பிரிவின்
கண்ணாடிச் சன்னல்
வழியாக
கண்களை உள்ளே வீசினாள்.

அதோ,
வின்சென்ட்.

தேர்ச்சக்கரம் நசுக்கிய
சிறு
வெள்ளை முயலாய்
அங்கமெங்கும்
திட்டுத் திட்டாய் இரத்தக் காயம்.

சுகந்தியின் அழுகை
சத்தத்தையும்
துணைக்கு அழைத்தது.

சிகிச்சை ஆரம்பித்ததாய்
சுவடுகளே இல்லை!
அவளுக்குள் இருந்த
உயிர்க் குயிலுக்குள்
வெடுக்கென்று
இறகுகள் பிடுங்கிக் கொண்டன.
0

 

  

10

ஓடினாள்,
விசாரித்தாள்…

‘முதலுதவி முடிந்து விட்டது,
மருத்துவர்
நாளை காலை வருவார்,
அவருக்கு
முதல் வேலை இது தான்’

நாளைக் காலையா ?
போய்க்கொண்டிருக்கும் உயிரை
அழைத்து வரச் சொன்னால்,
சமாதிக்கு அனுப்ப
நேரம் குறிக்கிறீர்களா ?

அவசியமாய் ஓர்
அவசர உதவி
தேவைப்படும் ஒருவருக்கு
அவசரமில்லாமல் தான்
உதவிகள் வருமா ?

எத்தனை பணம் வேண்டும்
தருகிறேன்,
யாரையேனும் வரவழையுங்கள்.

நினைவிழந்த அவரை
உயிரிழக்கச் செய்யாதீர்கள்.

சுகந்தி
மண்டியிட்டு அழுதாள்.
ஆட்டோ  டிரைவர்
உதவிக்கு வந்தார்.

தொலைபேசிகள் ஆங்காங்கே
இரவுப் படுக்கைகளில்
சிணுங்கின,
இறுதியில்
ஒருமணி நேரத்துக்குள்
ஒருவர் வருவதாய்
உத்தரவாதம் வந்தது.
மணி மூன்று !

காலம்
தூக்கத்தில் நடக்கும் நத்தையாய்
மிகவும் மெதுவாய்
நகர்ந்தது.

ஒருமணி நேரம்
ஒரு யுகத்தின் பாரத்தோடு
கரைந்து மறைந்தது.
யாரும் வருவதற்கான
தடையங்கள் இல்லை.

காரிருள் சாலையில்
ஏதேனும்
வாகனக் கண் விழிக்காதா
என்று
ஈர விழிகளோடு இருந்தாள்
சுகந்தி.

விடியல் கதிர்கள் மெல்ல
சாலைகளில்
வந்த போது தான்
அவர் வந்தார்.
ஐந்து மணி அப்போது !.

0

 

11

வின்சென்ட்
கண்ணாடிக் கூட்டுக்குள்
பறக்க இயலாமல்
படுக்கையில் கிடந்தான்.

மருத்துவர்
நிதானமாய்
அவசர உதவிகளை
ஆரம்பித்து வைத்தார்.

சுகந்தியின் இதயம்
அத்தனை தெய்வங்களையும்
துணைக்கு அழைத்தது.

இன்று ஒரு நாள் மட்டும்
எல்லா தெய்வங்களும்
மற்ற பணிகள் நிறுத்தி,
கணவனைக்
கண்விழிக்கச் செய்யட்டுமே
என்று
இரத்த அணுக்கள் கத்த
பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினாள்.

உயிரை
மருத்துவர் கையில் கொடுத்துவிட்டு
சேதாரம் வராமல்
சேர்ப்பிக்கும் வரத்தை
கடவுளிடம் வேண்டி நின்றாள்.

மருத்துவப் பணி
மணித்துளிகளை
உறிஞ்சிக் குடித்து தொடர்ந்தது.

மேலும் சில
மருத்துவர்கள் சேர்ந்து கொள்ள,
வின்சென்ட் – ன்
உயிர் காக்கும் பணி
தொடர்ந்தது.

நான்கு மணி நேர
தொடர் போராட்டத்தின்
முடிவில்,
சுகந்தி
மருத்துவரின் அறைக்கு
வரவழைக்கப் பட்டாள்.

காதுகளிலும் கண்களிலும்
விழப் போவது,
எரி கற்களா ? இல்லை
சிறு பூக்களா ?

ஓர்
ஆனந்த சங்கீதம் கேட்குமா ?
என்
காதுகளுக்குள் மீண்டும்
சின்னக் குயிலின்
சிணுங்கள் கொஞ்சல்கள்
கேட்கவேண்டுமே…

சுகந்தியின் கண்ணீர்
அடர்த்தியாய் கசிந்தது.

மருத்துவரின் முகத்தில்
புன்னகைத் தென்றல் கடந்துபோன
பாதத் தடங்கள் இல்லை.
புயலடித்து ஓய்ந்து போன
அழிவுத் தடயங்களும் இல்லை.

சம்பிரதாய சிரிப்பு மட்டுமே
சிறு
சிலந்தி வலையாய்
பிய்ந்து தொங்கியது உதடுகளில்.

0

 

 
12

“அமருங்கள்…”
மருத்துவர்
இருக்கையை நோக்கி
ஒரு கையை நீட்டினார்.

“அவருக்கு எப்படி இருக்கிறது ?..”

நான் நினைக்கும் பதில்
வரவேண்டுமே என்னும்
நிர்ப்பந்த வேண்டுதல்களோடு
விழுந்தது
சுகந்தியின் வினா.

உயிருக்கு ஒன்றுமில்லை.
மருத்துவர்
சிக்கனப் பதிலை சரித்தார்.

சுகந்திக்கு
போன உயிர்
தெருமுனை சென்று
திரும்பி வந்ததாய் தோன்றியது.

நன்றி டாக்டர்..

மேலும் சொல்லுங்களேன்…
என்னும் வினாவின் தூண்டிலோடு
பார்வையை
மருத்துவருக்குள் இட்டாள்
சுகந்தி.

அம்மா, அப்பா
யாரேனும் அருகிருந்தால்
அனுப்புங்களேன்,
மருத்துவர் சொன்னார்.

யாரும் இல்லை டாக்டர்,
நாங்கள் இருவரும்
காதலித்ததால்
தொப்புள் உறவை
துண்டித்துக் கொண்டவர்கள்.

நேசம் வைத்த காரணத்துக்காய்
எங்கள்
பாசத்தின் தேசம் விட்டு
துரத்தப் பட்டவர்கள்.

இப்போது
எங்கள்
நாடோ டி தேசத்தின்
மன்னர்களும்
பிரஜைகளும் நாங்கள் மட்டுமே.

எதுவானாலும்
என்னிடம் சொல்லுங்கள்.

சுகந்தி
நகங்களின் இடையிலும்
நடுக்கத்தை இருத்தி
நடுங்காமல் கேட்டாள்

சொல்வதை
பதட்டப் படாமல் கேளுங்கள்,

மருத்துவர்கள் அனைவரும்
சொல்லும்
தவறாமல் சொல்லும்
தவறான வார்த்தை இது.

கழுத்துக்குச் சுருக்கு
இறுக்கும் போது,
கவலைப் படாதே என்று
தூக்குத் தண்டனை கைதியிடம்
காவலர் சொல்வது போல,

தூண்டில் மீனை
தூக்கிப் பிடித்து
கவலைப் படாதே என்று
மீனவன் சொல்வது போல,

விலாவில் அம்பு விட்ட வேடன்
புறாவோடு
சிரிக்கச் சொல்வது போல,

அந்த இடத்துப் பதட்டத்தை
அந்த
முன்னெச்சரிக்கை வார்த்தை
வேங்கையைக் கண்ட
வெள்ளாட்டுக் குட்டியாய்
வெலவெலக்க வைத்தது.

தற்கொலை முனையில்
சறுக்கத் தயாராய் நிற்கும்
கால்களைப் போல கவலை தந்தது.

உங்கள் கணவருக்கு
மிகப் பலத்த அடி.
குருதி அதிகம் கொட்டியதால்
உயிரின் உறுதி குலைவு,

சாலையிலேயே
அதிக நேரம் கிடந்திருக்கிறார்,
என்று
காவலர் குறிப்பு
சொல்கிறது.

ஆறு மணிக்கு
அடிபட்டவருக்கு,
மூன்று மணி நேரத்திற்குப் பிறகே
முதலுதவி கிட்டியிருக்கிறது.

தலையில் பலத்த அடி.
தலையின் அடி
தண்டுவடத்தை உடைத்து விட்டது.

மருத்துவக் கவனிப்புகளால்
சரிக்கட்ட முடியாத
இக்கட்டான நிலை.

மருத்துவர் சொல்லச் சொல்ல
சுகந்திவின்
இதயம் வேக வேகமாய் துடித்தது.

தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர்
பாறையாய் உருகி
உள்ளுக்குள் ஏதோ ஓர்
அச்சத்தின் விமானம்
எச்சரிக்கை விடாமல்
விழுந்து நொறுங்கியது.

டாக்டர் தொடர்ந்தார்.
அவருக்கு உயிர் இருக்கிறது.

உயிர்
மட்டும் தான் இருக்கிறது !

0

 

13

டாக்டர் தொடர்ந்தார்.
அவருக்கு உயிர் இருக்கிறது.

உயிர்
மட்டும் தான் இருக்கிறது !

அவரால்
பேசவோ, பார்க்கவோ
ஏன்
உடலின் ஒருபாகத்தையும்
மெல்லவேனும் அசைக்கவோ இயலாது.

கண்ணாடியைக் கழற்றிவிட்டு
கவலைகளை
இறக்கிய தோரணையில்
மருத்துவர் பார்த்தார்.

சுகந்தியின்
இதயம்,
அதுவரை இருந்த கட்டுப் பாட்டை
உடைத்து விட்டு
உடைந்து நொறுங்கியது.

இப்படி ஒரு வார்த்தை
வருமென்று
எதிர்பார்க்கவில்லை அவள்.

அத்தனை தெய்வங்களும்
கூட்டு சேர்ந்து
ஒரு
பக்தனைப் புதைக்குமென்று
அவள்
சிந்தித்திருக்கவேயில்லை.

தன்
உள்ளத்தின் ஆழத்தில்
கிச்சு கிச்சு மூட்டிய
தூக்கணாங் குருவி ஒன்று
சத்தமிட முடியாமல்
முடங்கிக் கிடக்கிறதே.

தன்
காதுகளுக்குள்
காதல் ஊற்றிப் போன
காற்று
உறைந்த நிலையில்
உலர்ந்து கிடக்கிறதே .

வார்த்தைகள் வரவில்லை
கண்ணீர் வரவில்லை
சுவாசம் கூட
வந்து செல்வதாய் நினைவில்லை.
தன்
பூமியின் அச்சு மாறியதாய்
அச்சம் மட்டும் வந்தது.

டாக்டர்….

ஒற்றை வார்த்தை தான் அழைத்தாள்
அதற்குள்
ஓராயிரம் கேள்விகள்.

பார்வைகளைப் படிப்பதற்குத் தான்
டாக்டப் பட்டம்
போலிருக்கிறது.
மருத்துவர் தொடர்ந்தார்.

உங்கள் நிலமைக்கு
வருந்தாமல் இருக்க இயலவில்லை.
இந்த நிலை
எந்த நாட்டின் மருத்துவராலும்
சரிசெய்ய இயலாத
நிலை.

அமெரிக்காவின்
மில்லியன் செலவுகளாலும்
இதை
மில்லி மீட்டர் கூட
சரி செய்ய முடியாது.

இது,
மருத்துவர் முன்னேற முடியா
ஓர்
முற்றுப் புள்ளி முனை.

சுகந்தியின்
நரம்புகள் வேலை நிறுத்தம் செய்தன.
நாக்கும் விரல்களும்
இருந்த இடத்திலேயே
வேர்விடத் துவங்கின.

என்ன செய்வது டாக்டர்.
ஏதேனும் சொல்லுங்களேன்.
எப்படி சரி செய்வது ?

மருத்துவர் பார்த்தார்.

நீங்கள் அவரை
மிகவும் நேசிக்கிறீர்களா ?

சுகந்தி விசும்பினாள்.
என் புன்னகையின் பூமியிலும்
என்
கண்ணீரின் தேசத்திலும்,
எல்லா
அணுக்களின் துணுக்குகளிலும்,
அவர் மட்டும் தான்.

அப்படியானால்
அவரைக் கொன்று விடுங்கள்.

0

 

 
14

மருத்துவரின் வார்த்தை
சுகந்தியின்
உச்சந்தலையில் ஓர்
சுத்தியலாய் விழுந்தது.

டா…க் டர்…
எழுத்துக்களும் எழும்பமுடியாமல்
பக்கவாட்டில் சரிந்து
ஊர்ந்தன.

பதட்டப் படாதீர்கள்.
உங்கள் கணவரின் வாழ்க்கை
இனிமேல்
ஓர்
பறிக்கப்பட்ட காய்கறி போல தான்.

படுக்கையில் கிடக்கும் ஓர்
துணி போல தான்.
எந்த உணர்வுகளும்,
எந்த செயல்பாடுகளும் இங்கே
சாத்தியப் படுவதில்லை.

மூளையின் பாகம் மட்டும்
விழித்திருக்க இயலும்,
அதுவும்
சாவு வேண்டுமென்று சத்தமிடும்.

உங்கள்
அழுகையை உணரும்போது
உங்களை
அழைக்கவோ,
தோள் தொட்டு ஆறுதல் சொல்லவோ
இயலாமல்,
அவஸ்தைப் புதைகுழிக்குள்
மூச்சு முட்ட திணறும்.

அந்த வலி,
கொஞ்ச நஞ்சமல்ல.
மூளை அதைச் செய் என
சொல்லும்போது
உடல் ஒத்துழைக்காத நிலை
மரணத்தை விட
ஆயிரம் மடங்கு அவஸ்தையானது.

நீங்கள்
செய்யப் போகும்
நல்ல செயல்
கருணைக் கொலை
ஒன்று தான்.

‘முடியாது….’
சுகந்தி அலறினாள்.

என்னால்
இதற்கு சம்மதிக்க முடியாது.
முடியவே முடியாது…
சுகதியின் மறுப்பு
அலறலாய் அவதாரமெடுத்தது.

பாசமாய் சிறகுக்குள்
பதுக்கி வைத்திருந்த
கோழிக் குஞ்சு ஒன்றை
பலவந்தப் பருந்தொன்று
பறித்துச் செல்வதாய்,
உயிர் துடித்தது அவளுக்கு.

“நீ மட்டும்
என்னோடு பேசாமல் இரு..
உன்னைக்
கொன்று விடுவேன்”
சுகந்தி அவ்வப்போது
கட்டிலில் சொல்லும் வார்த்தை.
தேவையில்லாமல்
இந்த நேரத்தின் பாரத்தை அதிகரிக்க
அவளுக்குள் வந்தது.

உண்மையிலேயே
அவனைக் கொன்று விடுவதா ?
முடியாது,
அவனைப் பார்த்துக் கொண்டாவது
பொழுதை ஓட்டுவேன்.

அவனை
கொன்று விடுங்கள் என்று
என்னைக் கொன்றாலும்
சொல்லமாட்டேன்.

சுகந்தியில்
உள்ளுக்குள் முள்ளுக்காடு
ஈவு இரக்கமில்லாமல்
ஆயிரம் கைகள் கடன் வாங்கி
குத்திக் கிழித்தது.

0

 
15

அவசர பிரிவுக்கு ஓடினாள்.

அங்கே
அசைவுகளை அறியாமல்
கிடந்தான் வின்சென்ட்.

அவனைக் கண்டதும்,
சுகந்திக்குள் சேர்த்து வைத்திருந்த
கண்ணீர் துளிகளெல்லாம்
பாரம் தாங்காமல்
பாய்ந்து வந்தன.

அவன் கன்னங்களைத் தடவி,
என்னை
பயணிக்கச் சொல்லிவிட்டு
பாதியிலேயே
துடுப்போடு இறங்கிக் கொள்கிறாயே,
நியாயமா?

நீ
இல்லாமல்
சாலைக்கு வரவே தெரியாது,
வாழ்க்கைக்கு எப்படி
வருவேன்.

காதலின் அடையாளத்தை
எனக்குள் இருத்திவிட்டு
முகம் காணாமல்
மூடிக் கொண்டாயே
நியாயமா ?

வா வின்சென்ட்,
நீ இல்லாமல்
என்னைச் சந்திக்கும் வலிமையே
என்
விழிகளுக்கு இல்லை.

வின்சென்ட்  – ன்
உள்ளுணர்வுக்குள்
சுகந்தியின் கண்ணீர் வார்த்தைகள்
கணீரென்று விழுந்தன.

விரல்களை விலக்கி,
அவள் கூந்தலை கலைத்து
அழாதே என்று
இமைகளைத் துடைக்க
ஆசைப்பட்டான்.
முடியவில்லை.

குறைந்த பட்சமாய்
இமைகளைப் பிரித்து
ஒரு முறை
அவளைப் பார்க்க,
சின்னதாய் ஒரே ஒருமுறை
புன்னகைக்க
ஆசைப்பட்டான். நடக்கவில்லை.

ஆவியாய் அலைபவர்களுக்கும்
இதே
நிலை தானோ ?
கத்தினாலும் யாருக்கும்
கேட்பதில்லை,
கரம் பற்றினாலும் யாரும்
உணர்வதில்லை.

வின்சென்ட் ன் உள்ளுக்குள்
இயலாமையின் வலிகள்
அழுத்தின,
நிலமையின் வீரியம்
அவனுக்குள் வீழ்ந்தது.

சுகந்தி…
என் கண்ணே.
உன் தொடர் கண்ணீரைக் கண்டு
ஒன்றும் செய்ய முடியாமல்
கிடக்கும் படி
என்னைத் தண்டித்து விடாதே.

என்
நினைவுகளே என்னை விட்டு
விலகிப் போங்கள்,
முடிந்தால் என்னை
குணப்படுத்துங்கள்,
இல்லையேல் என்னை
மரணப்படுத்துங்கள்.

மரணத்துக்கும் வாழ்வுக்கும்
இடையேயான
ஓர்
பள்ளத்தாக்கில் பிடித்துத் தொங்கும்
ஒற்றைக் கை
பிராணியாய் கிடப்பதுவா
வாழ்க்கை ?

மரணமே வா,
என் தவறுகளுக்குத் தன்டனையாய்
உயிரைத் திருடு,
நற்செயல்களின் மிச்சமாய்
உயிரை விட்டு விட்டுச்
சென்று விடாதே…
வின்சென்ட்,
வெளியே வராத வார்த்தைகளால்
வேண்டுதல் நடத்தினான்.

0

16

சுகந்தியின்
கதறல் நிற்கவில்லை,
வின்சென்ட் – ன்
விழிவருடி அழுதாள்.

என் உயிரே,
உடல் வேண்டாமென்று
எந்த ஜன்னல் வழியாய்
நீ
வெளியேறி ஓடினாய் ?

அழுதாள் அழுதாள்
பின்,
உள்ளுக்குள் முடிவெடுத்து
வின்சென்ட் – ன் காதுகளில்
ஓதினாள்.

வின்சென்ட்.
என் காதலனே.
எந்தக் காதலியும் செய்யாத
ஒன்றைச் செய்ய
காலம் என்னைக் கட்டாயப்
படுத்துகிறது.

போய் விடு,
மயானத்தின் புதைகுழியில்
உயிரோடு கிடக்கும்
உயிரின் நிலமை உனக்கெதுக்கு ?

தவறாமல் வா,
நம்
திருமணத்தின் முத்திரை
மழலை முகமாய்
தெரியும் நாள் தொலைவில் இல்லை.

அழுகையின் ஆழத்தில்
சுகந்தியின் விழிகள்
நிறமிழந்தன.
வின்சென்ட் உள்ளுக்குள்
அழுதான்.

நன்றி என் செல்வமே,
என்னை
உயிரோடு படுக்கையிலே
புதைக்காமல்,
உயிர் விலக்கி
பூமிக்குள் புதைக்க சம்மதித்தாய்.

இங்கே தானடி
உன்
உண்மைக் காதல் இன்னும்
உயரமாய் வருகிறது.

உன் சந்தோஷத்தை விட
என்
கவலையில்லா மரணத்தை
கண்ணோக்கினாயே,
உன்னை
அணைத்துக் கொள்ள முடியாமல்
அணைந்து போய் கிடக்கிறேனே.

ஒரு துளி
கண்ணீராவது என்
இமைகளை விட்டு வெளியேறி
உன்னிடம்
போய் வருகிறேன் என்று சொல்லாதா ?
புலம்பினான் உள்ளுக்குள்.
அவன்.

இரண்டு உயிரை
ஒற்றை உயிருக்குள் அடைத்துவிட்டு
அவன் உடலை
கருணைக் கொலைக்கு
கையளித்து விட
கையொப்பமிட்டது அவள்
மனசு.

0

  

 17

மலர்விழி
மூன்றாம் முறையாக
அம்மாவை அழைத்தாள்.
“அம்மா…”

பழைய நினைவுகளுக்குள்
மூழ்கிக் கிடந்ததில்
சுகந்தியின் விழிகள்
ஈரமாகி இருந்தன.

விமானம்
அமெரிக்கா நோக்கி
ஆயிரம் கிலோ மீட்டர்
வேகத்தில்
ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தது.

இருபது வருடங்களுக்கு
முன்னால்,
ஓர்
அமெரிக்க பயண நாள்
வாழ்வின் அத்தனை வசந்தங்களையும்
முரட்டுத் தனமாய்
மோதித் தள்ளிய நினைவுகள்,
புதியனவாகவே
சுகந்திக்குள் இருந்தன.

என்னாச்சு ?
ஏன் அழறீங்க ?
விமானப் பயணம் பயமா ?
மலர்விழி
அம்மாவின் தோள்தொட்டாள்.

அவளுக்குத் தெரியாது,
சுகந்தியின்
அந்த ஒரு நாள் பயங்கரமும்
அதன்
பாதாளப் பாதிப்பும்.

அவளுக்குத் தெரிந்ததெல்லாம்,
முகம் மலரும் முன்
அப்பா ஓர்
விபத்தில் இறந்தார் என்னும்
ஒற்றை வாக்கியம் தான்.

பயமெல்லாம் ஒன்றுமில்லை,
இதயமெல்லாம்,
உன்
அப்பாவின் நினைவுகள்
தப்பாமல் வருகின்றன,
சுகந்தி சிரிக்க முயன்றாள்.

மலர்விழி ஒரு
சின்னப் புன்னகையோடு
பேசினாள்.


இறந்தகால நினைவுகளின்
இடுக்குகளில் கிடந்தால்,
நிகழ்காலத்தின் மிடுக்கு
உடைபட்டுச் சிதறும்.
நிகழ்காலத்தின் நிமிடம் மட்டுமே
நிஜமென்று கிடந்தால்
எதிர்கால வாழ்வு தவறாமல் இடறும்.
இறந்தகால வரலாறுகளை
அறி,
நிகழ்கால நிமிடங்களை செலவழி
எதிர்கால
வாழ்க்கைக்கு சந்தோசத்தை சேமி’

மலர்விழி சொல்லச் சொல்ல
ஆச்சரியமானாள்
சுகந்தி.

இது,
வின்சென்ட் அடிக்கடி
சொல்லும் ஒரு வசனம்.

இதெப்படி உனக்குத் தெரியும்,
விழிகளை விரித்து
ஆச்சரியமாய் கேட்டாள் சுகந்தி.

அப்பாவின் பழைய டைரியின்
கிழிந்துபோன
ஓர் காகிதத்தில்
கிழியாமல் கிடந்தன இவை.
இவற்றையே
எனக்கு அப்பா தந்த அறிவுரையாய்
வரைகிறேன் உள்ளுக்குள்.

சிரித்தாள் மலர்விழி.
அந்த சிரிப்பிற்குள்
வின்சென்ட் ன் வாசம் வீசியது.

விமானம்
உயரத்தை அதிகரித்தது,
சுகந்தியின் பாரம்
இதயம் விட்டு கீழிறங்கியது.

மெல்லமாய்
மலர்விழியின் கரம் தொட்டு
மெதுவாய் சொன்னாள்.
நீ
என்றும் எனக்கு வேண்டும்.

0

நெடுங் கவிதை : கதை எழுதும் நேரம்

42-18501868.jpg

1

முடியாது என்றால்
அதன் அர்த்தம்
முடியும் என்று என்றுமே
முடிந்ததில்லை…

நிமிராமல் எழில் சொன்ன
பதில்,
திமிரால் சொன்னதாய்
தோன்றியது தந்தைக்கு.

மறுப்புக்குக் காரணம்
வெறுப்பா ?
மனசுக்குள் மறைந்திருக்கும்
ஏதேனும் நெருப்பா ?

உனக்கு
மனைவியாகும் தகுதி
அவளுக்கு இல்லையா ?
அவளை உனக்கு
மனைவியாக்கும் தகுதி
எனக்குத் தான் இல்லையா ?

தந்தையின் கேள்விகள்
எழிலை
எழுந்திருக்க வைத்தன.

திருமணம் வேண்டாம் என்றது
என்
தனிப்பட்ட கருத்து.
நெருப்புக்குள் இருந்து கொண்டு
என்னால்
பட்டம் விட இயலாது.

திருமணம் எனும் மாலையை
என்
எழுத்து என்னும் கழுத்துக்கு
பட்டாக்கத்தியாய்
தொங்கவிட நான்
தயாராய் இல்லை.

என் மூச்சு
இலக்கியத்தின் இழைதான்
கன்னியின் இடை அல்ல.

எனக்குத் தேவை
காவியத்தின் அழகு தான்,
இந்த
சேலைச் சங்கதிகளுக்குள்
சிக்கிக் கொள்ள சம்மதமில்லை.
எழில் குரல் உயர்த்தினான்.

அவள் உன்
அத்தை மகள் தானே,
உன் நாடி பிடித்தவள் தானே
உன்
கரம் பிடிக்க ஆசைப்பட்டது
தவறா ?

பேனாவுக்குள் புகுந்துகொண்டு
அவளை நீ
காகிதமாய் கிழிப்பது
அழகா ? சொல்
அப்பாவும் குரல் உயர்த்தினார்.

உங்கள்
கட்டாயத்தின் சங்கிலிகளை விட
என்
இலக்கியத்தின் அரவணைப்பு
வலிமையானது அப்பா.
திருமணம் எனக்கு
நீங்கள் தரும் சாபம்.

வரத்தை விற்று விட்டு
சாபத்தை வாங்கி
சகித்து வாழ்வது சுகிப்பதில்லை.

இது
என்னுடைய முடிவு.
முற்றுப் புள்ளி தாண்டி
வாக்கியங்கள்
குதித்தோடாது.

எழில் முடிவாய் சொன்னான்.

2

couple2.jpg

மகிழ்வின் மலைஉச்சியில்
மோதி மோதி
என்
மேகக் கண்கள்
அழுகின்றன எழில்…

என் பெயரை
உங்கள் புனைப் பெயராய்
உலகுக்கு
அறிமுகப் படுத்துவீர்கள் என்று
கனவிலும் நினைக்கவில்லை.

என் பெயருக்குள்
உங்கள் படைப்புகள்,
என் உயிருக்குள்
உங்கள் உயிர் துடிப்புகள்,

இந்தக் கணம் மட்டுமே
இன்னும் சில
யுகங்களுக்கு நீளாதா ?
துளசி தழுதழுத்தாள்.

எழிலின் எழுத்துக்கள்
தங்கக் கிரீடம் சூடி
வெள்ளி வீதியில் வலம் வரும்
கனவுகள் தான்
துளசியின் மனமெங்கும்.

அந்த எழுத்துக்களுக்கு
தன் பெயரையே
அணிந்து கொண்டு
அழகுபார்த்த
பெருமிதத் தோணி தான்
அவளுக்குள் அசைந்தாடியது.

எழில்
விரலால் அவள்
விழியோரம் தீண்டினான்,
விழியால் அவள்
உதடுகளை தோண்டினான்.

உன்னை விட அழகாய்
உன் பெயரை விட சுவையாய்
என்
பிரபஞ்சத்துப் பந்தியில்
பரிமாறப்பட்டவை
எதுவுமில்லையே.

என் எழுத்துக்களை உழுதால்
உன்
நினைவுகளும் கனவுகளுமே
விளைகின்றன,

என்
கவிதைகளைக் கடைந்தால்
அங்கே
அமுதமாய் நீதானே
திரண்டு வருகிறாய்,

உனக்குச் சொந்தமானவற்றை
எழுதி,
எனக்குச் சொந்தமான
உன் பெயரையும் திருடினேன்.

நீயும் நானும்
இரண்டல்ல என்தற்கு,
ஒரு உதாரணம் போதாதா
உலகுக்கு ?

சிரித்தான் எழில்,

ஆனாலும்,
என் நம்பூதிரித் தந்தைக்கும்,
உங்கள் தந்தைக்கும்
இது ஓர்
அதிர்ச்சியாய் இருக்கும் இல்லையா?
கவலையாய் கேட்டாள் துளசி.

எழிலுக்கும்
அப்போது தான் அது
இறுக்கமாய் உறுத்தியது.

3.jpg

3

இலக்கியம் உனக்கு
இலை போடலாம்
சோறு போடாது,
அப்பா பொருமினார்.

உங்களுக்கு
இலக்கியம் என்பது இலைமாதிரி
எனக்கு
அது மலை மாதிரி,
இலைகள் உதிர்ந்தால்
மறு வசந்தத்தில்
மறுக்காமல் வளரும்,
மலைகள் உருண்டால் பின்
அதற்கு தொடர்
தலைகள் முளைப்பதில்லை.
எழில் சொன்னான்.

கல்யாணம் செய்யாமல்
வாழ்வது அவமானம்,
என் காலத்தின் கால்கள்
முடமான பின்
நீ
எப்படி நடக்கப் போகிறாய் ?

உன்னை கவனிக்கும்
தோள்களுக்காகவேனும் ஓர்
திருமணத்துக்கு சம்மதி.

இல்லை அப்பா,
திருமணம்
போலித் தனங்களின்
பொதுக்கூட்டம்.

அவளுடைய பிறந்தநாளுக்கு
பூ அனுப்புவதும்,
மறந்து போனால்
படுக்கையறையில் அவள்
தீ அனுப்புவதும்,

என் எழுத்துக்களின்
நேரத்தை புதைத்து விட்டு,
வீட்டைச் சுற்றி
விட்டிலாய் சுற்றுவதும்,

உறவினரின் நெருக்கத்துக்குள்
என்
கதைகளை
மூச்சுத் திணறி மரிக்க வைப்பதும்
என்னால் இயலாது.

தமிழ் எனக்கு தாய்,
இலக்கியம் என் மனைவி,
இனிமேல் நான்
இரண்டாவது மணம் செய்ய
எத்தனிக்கவில்லை.
எழில் சொல்லி நிறுத்தினான்.

திருமணம் என்பதை
ஏன்
வேலி என்று கொள்கிறாய் ?
நிழலோடு ஏன் நீ
நீள் யுத்தம் செய்கிறாய் ?

திருமணம் கடிவாளம் அல்ல
அடையாளம்,
உன் துயரங்களின்
தீக் காயத்துக்கு,
களிம்பு காத்திருக்கிறதெனும்
அடையாளம்,
களிம்பை நீ காயம் என்கிறாய்.

திருமணம் என்பது
அவசியமற்ற
ஆறாவது விரல் அல்ல,
அது
குயிலுக்குள் குடியிருக்கும்
குறையாத குரல்,

இருக்கும் துளைகள் கொண்டு
இசையை செய்யும்
புல்லாங்குழல் தான் இலக்கியம்,
இதயத்தின் உள்ளே
இசையைக் கொத்தி
துளைகள் செய்யும்
மரங்கொத்தி தான் திருமணம்.

நீ
இசையை நேசிக்கிறாய்
தவறில்லை,
புல்லாங்குழலாவதை
புறக்கணிக்கிறாயே !

வீட்டுக்கு வெளியே
பிறரைச் சம்பாதிக்கலாம்,
ஆனால்
வீட்டிற்குள்ளே தான்
நீ
உன்னை சம்பாதிக்க முடியும்.

ஒத்துக் கொள்
இல்லையேல்
அழுத்தமான காரணம் சொல்…
அப்பா நிறுத்தினார்.

அழுத்தமான காரணம்
வேண்டுமா ?
நான் காதலிக்கிறேன்,
துளசியை.

0

couple2.jpg

4

திருமணத்திற்கு
சம்மதம் கிடைக்குமா ?

காலங்காலமாய்
காதலர்
தவறாமல் கேட்கும் கேள்வியை
துளசியும் கேட்டாள்.

சம்மதம் கிடைப்பது
சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறது,

உன் நம்பூதிரிக் குடும்ப
பூஜையறைக்குள்
என்
ஆண்டவன் பிரவேசிக்க
அனுமதி கிடைக்காது,

ஆண்டவனையே அனுமதிக்காதவர்
என்னையா
அனுமதிப்பார் ?
ஆனாலும்
நம் திருமணம் நடக்கும்.
சொல்லிவிட்டு எழில்
விரல் நகம் கிள்ளினான்.

பதட்டம் என்
கால்களைச் சுற்றி
சர்ப்பமாய் சீறுகிறது,
எப்போது தான்
குழப்பங்களின் தலைகள்
கொய்யப்படுமோ ?

அனுமதி இல்லையேல்
என்ன செய்வது எழில் ?
வீட்டை விட்டு
வெளியேறவா ?

கருவறை வாசல் முதல்
கல்லூரி வாசல் வரை
கவலைகளை
மடியில் கட்டி,
என்னை பூக்களோடு அனுப்பி வைத்த
பெற்றோருக்கு
அவமானம் தேடித் தருவது
நியாயமா எழில் ?

இருபது வருடத்திய
வியர்வைத் துளிகளை
ஓர்
ஒற்றை ராத்திரியில்
அடுப்பில் போடுதல் அடுக்குமா ?

நீ
என் சிறகு என்றால்
அவர்கள் என் கூடு,
நீ
என் கூடு என்றால்
அவர்கள் என் மரம்,
உன்னை
என் மரம் என்றால்
அவர்கள் என் வானம்.

எது ஒன்றை இழந்தாலும்
என்
பறவை வாழ்க்கை
பிடிமானம் இழக்காதா ?

கேள்விகளின் கொத்துகளோடு
தலை கவிழ்ந்து,
பதில் கிடைக்குமா என
தரையைத் தோண்டினாள்
துளசி.

பதில்களின் வால் தொங்குதா
என
வானம் பார்த்தான் அவன்.

3.jpg
5

துளசியைக் காதலிக்கிறேன் !
எழிலின் வார்த்தைகள்
தந்தையின் உள்ளத்தில்
ஓர்
பிரளயத்தின் பிடிமானத்தை
அறுத்து விட்டது.

என்ன ???
துளசியையா ?
உனக்கென்ன பைத்தியமா ?
அப்பா பதட்டமானார்.

ஆமாம் அப்பா,
இதொன்றும்
ஒரு நாள் இரவில் பூத்து
மறு நாள்
வரவேற்பறைக்கு வந்ததல்ல.

சிறுவயதில்
நம் மாடிவீட்டில்
ஓடி விளையாடிய நட்பு,

சின்னச் சின்ன
சந்தோஷங்களில்
சண்டைபோட்டு அழுது,
பின்
மன்னிப்புக் கேட்க
முண்டியடித்த நட்பு,

வருடத்தின் வயதும்
பருவத்தின் பயிரும்
எங்களுக்குள்
காதல் தானியங்களை
விளைவித்தது.

இது
இருபதாண்டு
நேசம் அப்பா,
இலையைக் கிள்ளி
வாடவிட
இதொன்றும்
முந்தா நாளைய முளையல்ல.
எழில் உறுதியானான்.

நடக்காத ஒன்றைத் தேடி
நடக்கப் போகிறாயா?
என்ன ஆயிற்று உனக்கு ?
அப்பாவின் பதட்டம்
அதிகமானது.

என் காதல் நிஜம்,
எனக்குள் அவள் இருக்கும் வரை
இன்னொரு
கால்சுவடு
கடந்து வர இயலாது.
எழில் அமைதியானான்.

அதெல்லாம் சரி எழில்,
சாத்தியமில்லாததை ஏன்
சிந்திக்கிறாய் ?

துளசி இறந்து போய்
வருடங்கள் ஆறு
முடிந்து விட்டதே !

couple2.jpg
6

எனக்கென்னவோ
கவலையாய் இருக்கிறது
எழில்,

எந்தப் பக்கம் திரும்பினாலும்
உயரம் தெரியா
மதில் சுவர்கள் மட்டும்,

நீந்த நினைத்தால்
ஆழமான நீர் நிலையும்,
நீந்தத் தெரியா
என் நிலையும்.

நீ மட்டும் இல்லையேல்
நான் இல்லை எழில்,
வேர்கள்
எத்தனை தேவையானாலும்
பூக்கள் இல்லாத ரோஜா
இலை வளர்த்து
ஆவதென்ன சொல் ?

துயரம் தொலை துளசி,
துயரங்களில்
தொங்கிக் கிடந்தால்
உயரங்கள் அருகே வராது.

எதிர்ப்புகளின் அழுத்தம்
இல்லாமல்,
இங்கே பருவமழைகூட
பெய்ததில்லையடி,

நம் மேல் நமக்கிருக்கும்
நம்பிக்கைகள் தானே
காதலுக்கு
காதல் மேல் இருக்கும் காதல்.

அது சரி எழில்,
ஏதாவது
புரியாமல் பேசி சமாளி,
சிரித்தாள் துளசி.

எழிலும் சிரித்தான்,
அவர்கள்
பரிமாறிக் கொண்ட
கடைசிச் சிரிப்பு
அது என்பதை
அப்போது இருவருமே
அறிந்திருக்கவில்லை.

3.jpg
7

இரவைக் கிழித்து
விரைவாய் உயர்ந்தது
அந்தச் சத்தம்.

கோழிகளின் தூக்கம் கூட
கலையாத
அதிகாலை அமைதியில்
யாரோ
ஒப்பாரிச் சத்தத்தை
ஒப்புவிக்கிறார்களே,

கனவுகளின் நிஜமா
இல்லை
நிஜங்களின் கனவா ?
போர்வை விலக்கவும் முடியாமல்
இமைகளில்
தூக்கப் பசு
தறியறைந்து கட்டப்பட்டிருக்க
தடுமாறிப் புரண்டான்
எழில்.

என்னை
விட்டுட்டுப் போயிட்டியே
துளசிஈஈஈஈ….

துளசி !!!
ஒரே வினாடி நேரத்தில்
ஆகாயத்தில்
நின்று போன விமானமாய்
எழிலின்
அத்தனை தூக்கமும்
ஒரே வினாடியில் விழுந்து
உடைந்தன !

துளசி…
துளசிக்கு ஏதோ ஆகியிருக்கிறது.
அவன் கால்கள்
படுக்கையை விட்டு
பதட்டமாய் எழுந்து ஓடின,

அவசரத்தில்
கதவில் மோதி
மேஜைமீது உருண்டான்.

எழில்….
அப்பா தான்
ஓடி வந்தார்.

என்னாயிற்று அப்பா
ஒப்பாரிச் சத்தம் ?
வார்த்தைகளின் உள்ளே
வார்த்தைகளே
வலைபோட்டு இழுத்தன
அவன் நாக்கை.

துளசி
இறந்துட்டாளாம்,
பாவம் சின்னப் பொண்ணு…
அப்பாவின் அடுத்த வாக்கியங்கள்
எழிலுக்குள்
விழவில்லை.

அவன் கால்களுக்குக் கீழே
பிறந்தது முதல்
தொடர்ந்த
புவியீர்ப்பு விசையின் இழை
சிறுத்தை பாய்ந்த
சிலந்தி வலையாய்
அறுந்து வீழ்ந்தது.

இப்படி ஒரு
நில அதிர்வை
அவன் மனம் உணர்ந்ததில்லை,

இப்படி இரு
பாறைச் சரிவை
அவன் இதயம் சந்தித்ததில்லை,

கைகளும் கால்களும்
வல்லூறுகள்
கொத்தித் தள்ளிய
சதைத் துண்டங்களாக
வெறுமனே தொங்கின.

பிடிமானமற்றுப் போன
பனை மரமாய்,
நெடுஞ்சாண் கிடையாக
சாய்ந்தான் அவன்.

 couple2.jpg
8

அவன் நெஞ்சக் கூண்டு
அந்த
யதார்த்தப் பறவையை
சிறைப் பிடிக்க அஞ்சியது.

துளசி சாகவில்லை,
அவள் சாக முடியாது என்னும்
எண்ணம் மட்டுமே
உள்ளுக்குள் எரிந்தது,
அணைந்து அணைந்து எரிந்தது.

ஆனால்
நிஜத்தின் ஒப்பாரிகள்
அவன் ஜன்னலை
மூர்க்கத் தனமாய் மோதின.

அவனுக்குள்ளே சோகம்
வேலடிபட்ட வேங்கையாய்
துடித்தது,
வேரறு பட்ட மரமாய்
சரிந்தது.

என்னவாயிற்று ?
எப்படி இந்தத் தோணியை
தவிக்க விட்டு விட்டு
துடுப்பு மட்டும்
தரையிறங்கிப் போனது ?

இறுதி வரை
வருவேன் என்று சொல்லி விட்டு
என் சிறகுகள்
ஏன் வானத்தை எட்டியதும்
வெட்டுப் பட்டுச் சாய்ந்தது ?

நன்றாகத் தானே இருந்தாள்
நேற்று மாலை வரை ?
விடியும் முன் எப்படி
மடிய முடிந்தது
அத்தனை சந்தோஷங்களும் ?

துளசியின் வாசலுக்குச்
செல்ல
எழிலின் கால்களுக்கு
வலு இருக்கவில்லை.

சுற்றி வந்த துளசியை
சுட்டுச் செல்ல மனம்
ஒப்புக் கொள்ளவில்லை.

மரணத்தின் பற்கள்
இத்தனை கொடூரமானவை
என்பதை
குதறப் பட்டபின்பு தான்
புரிய வருகிறது.

அழுவதற்கும் திராணியில்லை,
உறைந்து போன நிலையில்
பனி
உருகிப் போவதில்லையே.
உருக்கிப் போகும் வெப்பம்
இனி
நெருங்கப் போவதில்லையே.

வாசல் கடந்து
யாராரோ பேசிப் போகிறார்கள்,
கண்ணீரையும் கொஞ்சம்
அழவைக்கும் ஒப்பாரி
நான்கு வீட்டுக்கு அப்பால்
துளசிக்காய் அழுதது.

எழில் வெளியேறி
எதிரே வந்த காரில் ஏறி
எங்கேயோ போனான்.

துளசியின்
ஈரப் புன்னகையை மட்டுமே
முத்தமிட்டுக் கிடந்த
எழிலின் விழிகள்,
அவள் அசையா உதடுகளைக்
காண இசையவில்லை.

0

3.jpg
9

இனி என்ன செய்வதாய்
உத்தேசம் ?

மரணம் வலியானது
தெரிகிறது,
உன் காயத்தின் ஆழம்
தெரிகிறது,
அதற்காக இறந்த காலத்திலேயே
இறந்து கிடப்பதா ?

வாழ்க்கை
சிலருக்கு பரிசுகளையும்
சிலருக்கு
போட்டிகளையும் தந்து செல்கிறது.

பரிசு கிடைத்தவன்
வெல்லும் வலிமை பெறாமல்
வெறுமனே போகிறான்,
தரிசு கிடைத்தவன்
அதை பரிசுக்குரியதாக ஆக்குகிறான்.

கடந்து போனவற்றை
வாழ்வின்
பாடங்களாக்க வேண்டும்,
அதுவே
வாழ்க்கையாகக் கூடாது.

நேற்றைய வானம்
அமாவாசை என்றால்,
இன்னும் சில நாட்களில்
அது
பௌர்ணமியை பரிசளிக்கும்,

நேற்றைய மரம்
நிர்வாணமாய் இருந்தால்,
வரும் வசந்தம்
அதற்கு
ஆடை நெய்து செல்லும்.

விழுவது மனித இயல்பு,
எழுவதே மனித மாண்பு.

நீ
எழுத்தாளன்,
அத்தனை பேருக்கும்
நம்பிக்கை விற்கும் நீ,
உனக்கு மட்டும்
அவநம்பிக்கை வாங்கி வரலாமா ?

அப்பா குரலை தாழ்த்தி
அறிவுறுத்தினார்.

அப்பா,
யுகங்கள் கடந்தாலும்
என்னால்
துளசியை மறக்க முடியாது.

“நான்
மறக்கச் சொல்லவில்லையே,
பிடிவாதமாய் அந்த நினைவுகளில்
படுத்துக் கொள்ளாதே
என்கிறேன்”

இல்லை அப்பா,
காலங்கள் காயங்களை
ஆற்றும் என்று கேட்டிருக்கிறேன்,
அது இல்லை
அது
தோலில் காயமென்றால் தீர்க்கும்
இரத்தக் குழாய்களின்
காயமென்றால் அடைக்கும்,
காதலின் காயம் மட்டும்
எங்கே என்று தேடி
அடைக்க முடியாமல் அடங்கும்.

” இல்லை எழில்,
இது
நீயாய் உருவாக்கும் கற்பனை வளையம்,
உன்னால்
இன்னொரு பெண்ணைச்
சந்திக்க இயலும்” – அப்பா.

துளசி இருந்த அறைகளில்
இன்னொரு கொலுசொலியா ?
அதற்கு ஒப்புக் கொள்வதும்
சாவுக்கு சம்மதிப்பதும்
என்னைப் பொறுத்தவரை
சரி சமம்….

0

 couple2.jpg
10

நம்ப முடியவில்லை,
துளசியிடமிருந்து கடிதம்.

அவள் மரணத்தின் வாசனை
இன்னும்
தெருக்களை விட்டுச்
செல்லத் துவங்கவில்லை,

அதெப்படி சாத்தியம் ?
மடிந்தபின்
கடிதம் ?

அவள் மரணத்தின்
வேல் குத்திய இடங்களிலெல்லாம்
தேன் ஊற்றிய அவஸ்தை
அவனுக்கு.

ஏராளமாய் வலித்தது,
அவசரமாய்,
கடிதத்துக்குக் காயம் தராமல்
கிழித்தான்.

துளசி தான்
எழுதியிருந்தாள்.

பிரிய எழில்,

இது உனக்கு நான் எழுதும்
கடைசிக் கடிதம்.

உனக்கு
ஓர்
இனிய விஷயம் சொல்லவா ?
அப்பா
நம் திருமணத்திற்கு
சம்மதித்தார்.

உன்னிடம் அதை
காலையில் வந்து
காதைக் கடித்துச் சொல்ல
இரவுகளில்
இமை மூடாமல் காத்திருந்தேன்.

எழில்,
நீ எனக்கே சொந்தமா ?
என்
கனவுகளின் கல்தூண்களில்
எல்லாம்
நம் காதலின் கல்வெட்டுக்களா ?

இனி
என் ஆனந்த விளக்கில்
நீ
சங்கீதமாய் ஆடுவாயா ?

உன்னை
உரிமையோடு முத்தமிடும் அந்த
அதிசய நாள்
அருகிலா ?

இப்படி
ஆயிரம் கனவுகளோடு
இரவைக் கடிந்து கொண்டு
காத்திருந்தேன்.

நள்ளிரவின் நிசப்தம்
இருட்டைவிட அடர்த்தியாய்
வீதிகளில் உலாவியபோது,
என்
அந்தப்புரம் கடந்து வந்தான்
பாலன், என் மாமன்.

அப்பாவின் நம்பூதிரித்
திருநீறு
என்
குங்குமப் பொட்டால்
கறைபடியும் என்ற கவலையாம்.

என்னை
படுக்கையறையில் வந்து
குடித்துப் போனது
அந்த
மிருகப் புயல்.

எழில்,
உனக்காய் காத்திருந்த
என் தேகம்,
களவாடப் பட்டு விட்டது,

எனக்குத் தெரியும்,
உன்னிடம் சொன்னால்
“நடந்தது விபத்து, மறந்துவிடு.
” என்பாய்.

என்னை
உன் உயிரின் உயரத்திலிருந்து
இம்மியளவும்
இறக்க மாட்டாய்.

ஆனால்
என்னால் முடியாதுடா…

நீ
பெரிய எழுத்தாளனாக வேண்டும்,
துளசி
என்னும் பெயர்
அத்தனை பத்திரிகையிலும்
வரவேண்டும்.

நான் பார்ப்பேன்,
வானத்தின் ஓரத்தில் ஓர்
நட்சத்திரத்தின் அருகே அமர்ந்து
உன்னைப் பார்ப்பேன்,
உன் புகழில் மகிழ்வேன்.

எழில்,
எழுதிக் கொண்டே இருக்கத்
தோணுது எழில்…

ஆனால்
இப்படி ஒரு நிலமை
யாருக்கும் வரவேண்டாம்.

என்
உடலை அழிக்கப் போகிறேன்
எழில்,

நான் இறந்தபின்
என்
உடலைப் பார்க்க வரமாட்டாய்
என்று தெரியும்,

என்
புன்னகையற்ற உதடுகள்
உன்னை
புண்ணாக்கி விடக் கூடும்.

ஒரு வேளை
நீ
வருவாயோ எனும் கவலையில்
நான்
சிரித்தபடியே சாகப் போகிறேன்.

உன்
துளசி…

கடிதம் ஓர்
கண்ணீர் துளியோடு  முடிந்தது,
அது
எழிலின் கண்களிலிருந்து
விழுந்தது.

0

3.jpg
11

எழில்…,

அப்பா நெருங்கி வந்து
நெருக்கமாய் அமர்ந்தார்.

கவலைகள் இல்லாத
மனிதன் இல்லை,
அந்த கவலைகளிலிருந்து
மீளாதவன்
மனிதனே இல்லை.

வா,
போதும்
ஆறு ஆண்டுகால அழுத்தங்கள்
இப்போதேனும் கொஞ்சம்
இளகட்டும்.

எழில் பேசினான்,
இல்லை அப்பா,
என்னால் ஓர்
உண்மையான புருஷனாகவோ,
சாதாரண மனுஷனாகவோ
இருக்க இயலாது.

துளசி என்னும் பெயரில் எழுதி
வித்யா என்னும்
மங்கையை நான்,
மலையிலிருந்து தள்ளல்
இயலாது.

என்
மனசாட்சிக்கு விரோதமாய்
நான்
மௌனியாக இருப்பதும்,
மனசாட்சிக்கு ஆதரவாய்
காதலில் கலந்திருப்பதும்
வித்யாவை காயப் படுத்தும்.

திருமணம் என்பது
ஒரு பெண்ணின் கனவுகளுக்கு
கோடரி வைப்பதாய்
இருக்கலாமா ?
யோசியுங்கள் அப்பா….

எழில்,

நீ
அவளுக்கானவள் என்னும்
ஒப்பந்தத்தை,
வித்யாவின்
உள்ளம் எழுதி
கையொப்பமும் இட்டு விட்டது.

நீ,
துளசியின் பெயரில்
கதை எழுதுவதோ,
துளசியின் நினைவுகளில்
கவிதை எழுதுவதோ
தவறில்லை,

பிரேதப் பரிசோதனைகளில்
யாருக்கும்
உயிர் வந்ததில்லை,
புரிந்து கொள்.

எழில் மௌனியானான்
அப்பா தொடர்ந்தார்.
 couple2.jpg
12

உன் கடந்தகாலக்
காதல் தோல்வி,
நிகழ்காலத்தின் உன்
அத்தைமகள் வித்யாவின்
காதலை
நிராகரிப்பது தகுமா ?

துளசியின் இழப்பில்
நீ
இறங்கிய தீக் குழியில்,
வித்யாவும்
விழ வேண்டுமா ?

நீ இல்லையேல்
வித்யா வாடுவதும்,
துளசி இல்லாமல்
நீ வாடுவதும்
இரு உள்ளங்களில் விழும்
ஒரே உணர்வு அல்லவா ?

யோசி,
துளசி
உன்னுள் கரைந்து போன
உணர்வாய் இருக்கட்டும்,

வித்யா
உன் வருங்கால வாழ்வின்
வழித்துணையாய்
தொடரட்டும்.

கடந்த கால
அகழ்வாராட்சிகளில் இருந்து
தடயங்களைத்
தோண்டித் தோண்டி,
நிகழ்கால கட்டிடங்களை
கடலுக்குள் தள்ளாதே.

அப்பா
சொல்லிவிட்டு நகர்ந்தார்..

‘இப்படி ஒரு நிலமை
யாருக்கும் வரவேண்டாம்…”
துளசியின்
கடைசிக் கடித வரிகள்
எழிலை எரித்தன.

வித்யாவை
வேண்டாமென்பது,
அவளுக்கு வலியைத் தருமா ?

வித்யாவிற்கு
என்மேலான காதல்,
எனக்கு
துளசிமேலான காதல் போல
இருந்தால்,
அவளுக்கும் எதிர்காலம்
தனிமையாகுமா ?

விடைதெரியா
விலாங்குமீன் கேள்விகள்
விரல்களிடையே
வழுக்கி ஓடின.

துளசி…
நான் என்ன செய்யட்டும் ?
உன் நினைவுகளை
ஓரமாய் கொட்டிவிட்டு
இன்னோர்
செடியை நடவா ?

இல்லை
உன் நினைவுகளின்
பூக்களைச் சூடியே
செடிகளை எல்லாம்
பிடுங்கி எறியவா ?

நீண்ட நாட்களுக்குப் பின்
எழிலின் கண்கள்,
இறுக்கத்தை விட்டு
உருகத் துவங்கின.

இரவு வெகுநேரம்
வானத்தைப் பார்த்தபடி
வெறித்திருந்தான்.

பின்,
காகிதத்தை எடுத்து
‘வித்யா நீ விடையா ?’
என்று தலைப்பிட்டு
கதை எழுத ஆரம்பித்தான்.

மேற்கு அடிவானத்தில்
ஓர்
விண்மீன் மின்னி மின்னி
ஆமாம் என்று ஆமோதித்தது.

0

சதுரங்கக் காதல்

love2.jpg
1

வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.

கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.

குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.

என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.

ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!

ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.

அவள் தானா ?
சந்தேகப் பூனை ஒன்று
மனசின் மதிலிலிருந்து
உள்ளுக்குள் குதித்து
சில
பாத்திரங்களை உருட்டி விட்டு
பாய்ந்தோடியது.

அதன் விடையை,
நெற்றிமுடியை மெல்லமாய்,
மிக மிகச் செல்லமாய்
விலக்கி விட்ட அவள்
விரல்கள் விளக்கிவிட்டன.

அவளே தான்.
வித்யா !
அத்தனை பெண்களுக்கும்
கூந்தல் இருந்தாலும்
எந்தக் கூந்தல் தன்
காதலிக் கூந்தல் என்பதை மட்டும்
கண்மூடினாலும்
சொல்லிவிடும் காதலின் காற்று.

கண்ணனின் எண்ணங்கள்
தாழ்பாள் விலக்கித்
தாவி ஓடின.

சிகாகோவின் உள்ளே
குற்றாலம் வந்து
குடியேறியதுபோலவும்,
வயல்க்காற்று சட்டென்று
விமானம் விட்டிறங்கி வந்து
ற்பது போலவும்
சிந்தனைகள் சிலிர்த்தன.

பேசலாமா ?
வேண்டாமா ?

விமான லையத் தரையை
சுத்தம் வந்து
முத்தமிட்டுச் சென்றிருக்க,
விமானம் வெளியே வந்து
சத்தமிட்டுக் கொண்டிருக்க,
கண்ணனின் கேள்விகள்
சுத்தமற்றச் சத்தங்களோடு
உள்ளுக்குள் புரண்டன.

ஒரு முறை கூட
அவளைக் காதலிப்பதாய்ச்
சொன்னதில்லை.

தாமரை மீது
கோடரி வைக்கப் போகிறாயா ?
என்னும்
நண்பனின் கேள்விகள் தான்
அப்போது
தடுத்து றுத்தின.

உண்மை தான்,
மோகத்தின் முகவுரையோடு
முகம் காட்டும் காதலும்,
தேகத்தைத் திருடாத
மனம் நீட்டும் நட்பும்,
இரு வேறு மனலைகளின்
இனிய வெளிப்பாடுகள் தானே.

நட்பின் பாத்திரம்
நீட்டுபவளிடம்,
காதலின் விண்ணப்பத்தை
போட
கை நடுங்காதா என்ன ?

அதுவும்,
அவள் இன்னொருவனின்
காதல் உடைகளில்
கட்சிதமாய்க்
கலந்திருக்கும் போது ?

love41.jpg

2

சாரதி !
அவன் தான் அந்தக்
கண்ணம்மாளின் பாரதி.

சாரதியின்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் தான்
அந்த
வித்யா எனும் பூ
தவறாமல் பூத்தது.

திரையரங்குப் படிக்கட்டுகளில்
சாரதி எனும் செடி
சாய்ந்திருந்தால் மட்டுமே
அங்கே
வித்யா எனும் கொடி
விடாமல் சுற்றிக் கொண்டது.

காதலர்களின்
அந்தி நேரத்துச்
சந்திப்புக் கூடமான,
அந்த சத்தமிடும் கடலின் கரையில்
வித்யா எனும் அலை
சாரதி எனும் சிப்பிக்குள் மட்டுமே
றுத்தாமல்
அடித்துக் கிடந்தது.

அவர்களைக் காணும் போதெல்லாம்
பார்வைக்குள் யாரோ
பஞ்சைக் கொளுத்திப்
படுக்கப் போட்டதாய்
எரிந்தன விழிகள்.

என்ன செய்வது ?
காதல் என்னும் கல்லை
சிலையாய் வடிக்கும் பொறுப்பு
ஏதோ ஓர்
பாக்கியவானுக்குத் தானே
பரிசாய்க் கிடைக்கிறது.

கிழிக்காமல்
காதலை காகிதத்தில் எழுதிய
ஏதேனும் மனிதனை
காணக் கிடைக்குமா ?

வெட்டாமல் வரிகள் எழுதிய
காதல் கவிதை தான்
இருக்க இயலுமா ?

கண்ணனும் தன்
காதலைச் சொல்ல
மூச்சை
உள்ளிழுக்கும் போதெல்லாம்
சாரதியின் முகம் வந்து
அதை
உடைத்துப் போடும்.

சிலநேரங்களில்
வித்யாவின் மழலைச் சிரிப்பும்
அவன்
வார்த்தைகளைக் கொய்து
மடியிலே போட்டுவிட்டு
மறைந்து விடும்.

சொல்வது
நாகரீகம் தானா ?
நதியிடம் போய்
திசை மாறி ஓடச் சொல்லலாமா ?
கடலிடம் போய்
வேறு
புகலிடம் தேடு என்று
கூறல் தான் யாயமா ?

அத்தனை சுயநலவாதியா
நான் ?
அடுத்தவனின் மார்பில்
அம்பு எய்து தான்
என் காதல் படத்தை
மாட்டி விட ஆசைப்படுகிறேனே !

தன் கேள்விகளின் பற்களே
தன் பதில்களை
கொத்தித் தின்னும்
அவஸ்தைப் புற்றுக்குள்
அமிழ்ந்து கிடந்தான் அவன்.

காலம் அவனுடைய
காதல் பூவை
இலைகளுக்குள்ளிருந்து
வெளியே எடுத்து
மொட்டுக்குள் போட்டு
பூட்டி விட்டுப் போனது.

சிந்தனைகளின் ஓட்டத்தை
விமான லையப்
பரபரப்பு
மீண்டும் திசை திருப்பியது.

வித்யா இன்னும் அந்த
பைகள் பரிசோதிக்கும்
இடத்தில் தான்
கைகளை வைத்துக்
காத்திருக்கிறாள்.

இப்போதெல்லாம்
பாதுகாப்புகளின் அடர்த்தி
காது ஜிமிக்கிகளைக் கூட
கழற்றாமல் விடுவதில்லை.

கால்களின் செருப்புமுதல்
தலையின் கொண்டை வரை
தனிச் சோதனைக்குத்
தப்புவதில்லை.

வித்யாவும் அங்கே தான்
ன்றிருந்தாள்.

போய்ப் பார்த்து
பேசிவிடலாம்,
கண்ணன் முடிவெடுத்தான்.

காலங்கள் கடந்தபின்னும்
இந்த
காதலின் இழை முழுதுமாய்
அறுந்து போகவில்லை என்பது
ஆச்சரியமற்ற ஓர்
ஆச்சரியம் தான் !

அவளுக்குத் திருமணம்
ஆகியிருக்குமா ?
ஆறு வருடங்கள்
முடிந்தபின்னும் அந்த
பழைய நட்பு இருக்குமா ?

கேள்விகளோடு
வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.

வித்யா
பரிசோதனை முடித்து
கைப் பையோடு மெல்ல
அந்த ஆமை வரிசையை விட்டு விட்டு
வெளியே வர,
செல்ல அழுகையோடு
அவளைத் தொடர்ந்து
அழகாய் ஓடியது
அந்தக் குழந்தை !

love2.jpg

3

கண்ணனின் கால்கள்
அனிச்சைச் செயலால்
அரைவினாடி நின்றன !

வித்யாவிற்குக்
கல்யாணம் ஆகியிருக்கிறது.
ஒரு
குழந்தையும் இருக்கிறது !

கண்ணனின் சிந்தனைகள்
மீண்டும்
கல்லூரியில் விழுந்தன.

காதலின் குழப்பங்கள்தான்
ஆயிரம் ஆலோசனை கேட்டு
தன்
சுய விருப்பத்தை மட்டுமே
சம்மதிக்கும்.

காதலிக்கும் அத்தனை பேருக்கும்
ஏதோ ஓர்
நண்பன் தேவைப் படுகிறான்.

கண்ணனும் அப்படித்தான்,
மோகனைப் பிடித்து
பிராண்டி எடுப்பான்.

என் காதலை
நான் சொல்வதில் என்ன
தவறிருக்க முடியும் ?
கண்ணன் கேட்டான்.

காதலா ?
இன்னொருவனை
உயிருக்குள்
உருக்கி ஊற்றியிருக்கும்
ஓர்
பெண்ணிடமா நீ
கண்ணியம் உடைக்கப் போகிறாய் ?

சாரதிக்கும் அவளுக்கும்
காதலென்று
நீ எப்படி சொல்கிறாய் ?

மோகன் சிரித்தான்,
அதோ
அது வானமில்லை என்று சொல்,
அதன் கீழே
மிதப்பவை மேகமல்ல
காயப் போட்ட சேலை என்று சொல்
நம்புகிறேன்.

சாரதி அவளை
காதலிக்கவில்லை என்று
சொல்லாதே.

விளைந்து நிற்கும் வயலில்
போய்
விதைகள் முளைத்தனவா
என்று
விசாரிப்பவன் முட்டாள்.
மோகன் சொன்னான்.

விளைந்து நிற்பவை
களைகளா இல்லை
அறுவடைக்கான தானியமா என்று
தூரத்திலிருந்து பார்த்தால்
துல்லியமாய் தெரிவதில்லையே !

அருகில் சென்று விசாரிக்கலாமா ?
கண்ணன் கேட்டான்.

காதலின் கிளைகளை காட்டினால்
அவள்
நட்பின் இழைகளையும்
அறுக்க நேரிடலாம்.

ஏன் இந்த வேண்டாத சிந்தனை ?
அவளை நீ
தோழியாய் பார்ப்பதே தகும்.
காலம் உனக்கு
உரிய பதிலை தரும்.

இப்போது என்னுடைய
வார்த்தைகள்,
உன்னுடைய கருத்துக்களை
நேருக்கு நேர்
தலைகளால் மோதுகின்றன,

இவை எல்லாம்
உன் நன்மைக்கானவை
என்பதை
வருடங்கள் போனபின்
விளங்கிக் கொள்வாய்.

உன் மீதான அவளின்
நம்பிக்கைகளை
நீயாய் போய்
வெட்டிக் கொள்ளாதே,
ஸ்நேகப் பறவையை
வெட்டிக் கொல்லாதே.

மோகன் சொல்லிவிட்டு
நகர்ந்தான்.

காதலிப்பவனுக்குத் தானே
அதன் வலி தெரியும்.
முட்டை ஓடு
உடைய மறுத்தால்
வெளிவரும் வரை குஞ்சு
வேதனைப் படாதா ?

நிறை மாத தாய்மை,
கரங்களில்
மழலையை அள்ளும் வரை
கலங்கியே புலம்பாதா ?

அப்படித்தான் புலம்பினான்
கண்ணன்.

அப்படியே போயிற்று,
கண்ணன் எனும் கார்மேகம்
நிறம் மாற்றி
பின் தேசம் மாறிப்
போயே விட்டது.

இப்போது தான்
மீண்டும் அந்த ஈரத்தை
அவன் மேகங்கள்
மீண்டும் உணர்கின்றன.

விமான நிலையத்துக்கும்
கிராமத்துக்கும் இடையே
பறந்து கொண்டிருந்தன
சிந்தனைகள்.

வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.

‘வித்யா.’

இயல்பாய் கூப்பிட்டாலும்
கடைசியில் கொஞ்சமாய்
பிசிறடித்ததாய்
பிரமை பிடித்தது அவனுக்கு.

வித்யா திரும்பினாள்,
‘கண்ணன்ன்ன்ன்’ .
ஆச்சரியக் குரலோடு
அருகில் நெருங்கினாள்.

கண்ணனுக்குள் இருந்த
நட்போ காதலோ
ஏதோ ஒன்று
போர்வை விலக்கி
எட்டிப் பார்த்தது.

love41.jpg

4

வித்யாவின் விழிகள் முழுதும்
மகிழ்வின் மின்மினிகள்
மின்னின.

கண்ணன்
ஆச்சரியப் பட்டான்.

இது தான் நட்பா ?
ஆறாண்டு கடந்தபின்னும்
வினாடி நேரத்தில்
எப்படி என்பெயரை
நினைவுப் பரலிருந்து
தூசு தட்டி எடுக்க முடிகிறது ?

எப்படி இருக்கே வித்யா ?
கண்ணனின்
கண்ணுக்குள் இருந்து
கால்முளைத்த கனவுகள்
இமை மயிர்களைப் பிடித்திறங்கின.

நான் நல்லா இருக்கேன்
நீங்க ?

வித்யாவின் விழிகளும்
கேள்விகளை
மனசுக்குள்ளிருந்து
வரவழைத்துக் கொடுத்தன.

நீண்ட நாட்களுக்குப் பின்
அருவியில்
சந்தித்துக் கொண்ட
நதிகள் போல
அகம் ஆரவாரமாய் இருந்தது
இருவருக்கும்.

வருடங்களுக்குக் கொஞ்சம்
வயதாகி விட்டது
வித்யா,

கல்லூரி வாழ்க்கையில்
பருந்துகளாய் பறந்தவர்கள்
பின்
எருதுகள் போல
உருமாற வேண்டி இருக்கிறது.

காலத்தின் கட்டாயம்
வயிற்றின் கட்டளை
வாழ்க்கையின் அழைப்பு !
எப்படி வேண்டுமானாலும்
பெயரிட்டழைக்கலாம்.

எனக்கு அயல் தேச வாழ்க்கை
சிலருக்கு
தாய் மண்ணின் மீது
பாதம் பதித்து நடக்கும் பணி.

நீ.
எப்படி இங்கே ?
எப்போ திருமணம் ஆச்சு ?

வித்யா சிரித்தாள்.
கல்லூரிக்கு வெளியே
கால் வைத்ததும்
கால்க்கட்டும் வந்தது.

காதல் கல்யாணம் அல்லவா ?
அதனால்
மோதித் தான் எங்களால்
தீபம் கொளுத்த முடிந்தது.

உங்கள் காதல்
வெற்றியில் முடிந்ததில்
எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி !
பொய் சொல்லி சிரித்தான்
கண்ணன்.

திருமண வாழ்க்கை எப்படி
போகிறது  வித்யா ?

வாழ்க்கைக்கு என்ன ?
பழக்கப் பட்ட பாய்மரக் கப்பல்
அது.
காற்று வீசும் திசையில்
காதல் துணிகளை
கட்டி வைக்கிறேன்.
பயணம் போகிறது.
புன்னகைத்தாள் வித்யா .

சரி,
உமா எப்படி இருக்கிறாள் ?
உங்கள் மனைவி?

எதிர்பாராத கேள்வியில்
ஒருவினாடி
உறைந்தான் கண்ணன்.

love2.jpg

5

உமா !

கண்ணனின் மாமன் மகள்.
கண்ணனை
நேசித்து வந்த
கன்னிகை.

கல்லூரி கால
நினைவுகளின் உலுக்கலால்
உதிர்ந்து போன
காதல் பூக்களை
மீண்டும் பொறுக்கி
தன் கிளைகளுக்குத் தந்தவள்
அவள் தான்.

சிறு வயதிலெல்லாம்
சின்னச் சிரிப்போடு
சந்தித்துக் கொண்டவர்கள்,
இப்படி
வாழ்வில்
சங்கமித்துக் கொள்ள
சம்மதிப்பார்கள் என்று
சத்தியமாய் யாரும்
சிந்தித்திருக்கவில்லை.

உமாவிற்கு வீட்டில்
வரன் வேண்டுமென்ற
வரம் தேடும் பிரார்த்தனைகளும்,
பயணங்களும்
நடந்தபோது,
உமாதான் மெல்லமாய்
தன் தாயின் காதுகளுக்குள்
கண்ணனை ஊற்றியிருக்கிறாள்.

வெண்ணை திருடிய
கண்ணனைக் கும்பிட்டுக் கிடந்த
தாய்,
தன் பெண்ணின் கண்களிலும்
கண்ணனே
காதல் திருடியதைக் கண்டு
கண் விரித்தாள்.

சொந்தத்தில் திருமணமா ?
அது
வியாதிகளின் விளை நிலமம்மா,
வேண்டாம்.
தடுத்தாள் தாய்.

சொந்தங்களை மீறிய
திருமணங்களுக்கு
நோய் ஒன்றுமே நேர்வதில்லையா ?
சொந்தத்தில் திருமணம்
என்றால் அது
சொர்க்கத்தில் நடப்பது போல,

திருமணங்களால் உருவாகும்
சொந்ததை ஆதரிப்பீர்கள்,
சொந்தங்களால் உருவாகும்
திருமணத்தை மட்டும்
எதிர் விசையாய் எதிர்ப்பீர்களோ ?

சரமாரிக் கேள்விகள்
அம்மாவைச் சரிக்க,
கண்ணனின் வீட்டோடு
கல்யாணப் பேச்சுகளும்
துவங்கின.

கண்ணனும் முதலில்
தயங்கினான்,
காதல் கவலைகள் ஒருபுறம்
கல்யாணக் கவலைகள்
ஒருபுறம் என்று,
இரு சிறகுகளிலும்
பாரம் இறக்கிவைத்த
பட்டாம் பூச்சியாய் படபடத்தான்.

இறுதியில்,
உமா கண்ணனைத் திருடினாள்,
திருமணம் செய்து
தாலியை வருடினாள்.

திருமணத்துக்கு
நண்பர்கள் யாரையுமே
கண்ணன் அழைக்கவில்லை.

விஷயம் எப்படி
வித்யா வரை எட்டியது ?

ஆச்சரியப் புதிருக்கு
விடை தேடி
வித்யாவின் விழி தீண்டினான்.

யார் சொன்னது ?
கல்லூரியின் படிதாண்டியபின்
நான்
நண்பர்களோடு எந்த
தொடர்பும் இல்லாமல்
துண்டிக்கப் பட்டேன்.

வேண்டுமென்றே தான் நான்
அப்படி இருந்தேன்,
ஆனால்
நண்பர்கள் வேண்டாமென்பதல்ல
அதன் விளக்கம்.

உனக்கு எப்படி
சேதி வந்தது ?
கண்ணன் மீண்டும் கேட்டான்.

என் கணவன் தான்
எனக்குச் சொன்னார்.

கண்ணனுக்கு மீண்டும் ஆச்சரியம்.
அதெப்படி ?
மூடி வைத்த
சீசாவுக்குள் இருந்து
மூவாயிரம் மைல் தூரம்
வாசம் கசிந்தது ?

சாரதிக்கு இது எப்படி
தெரியும் ?
கண்ணக் கேட்டான்.

வித்யா விழிகளில்
குழப்ப முடிச்சுகள் இறுகின.

சாரதியா ?
அவனுக்கும் தெரியுமா ?

என்னிடம் சொன்னது
என் கணவர் மோகன்.
உங்கள் நண்பர் தான்,
தெரியாதா ?

love41.jpg

6

வினாக்களின் முடிவில் இருந்த
முற்றுப் புள்ளி
ஓர்
மலையாய் மாறி
தலையில் விழுவதாய் தோன்றியது
கண்ணனுக்கு.

சாரதி தான்
காதலித்துக் கொண்டிருந்ததாய்
னைத்திருந்தான்,
இதென்ன புதுக் கரடி ?

சாரதிக்கும் வித்யாவிற்கும்
காதலென்று
கதைவிட்டவனா
இவள் கணவன் ?

தன் காதல் எண்ணங்களை
எல்லாம்
கல்லில் துவைத்துக்
காயப் போட்டவனா ?
இவள் மனசுக்குள்
காதல் போட்டான் ?

சாரதிக்கும் வித்யாவுக்கும்
காதலென்று
கதைகட்டியதெல்லாம்
என்னை
வித்யாவிடமிருந்து விலக்கவா ?

நினைக்க நினைக்க
கண்ணனுக்குள்
ஆத்திரம் மையம் கொண்டது.
அது
கரை கடக்காமல் கட்டுப்படுத்தியபடி
கதை கேட்க ஆரம்பித்தான்.

எப்போது நீங்கள்
காதலெனும்
சிங்கக் கூட்டுக்குள்
சிக்கிக் கொண்டீர்கள் ?
சிரித்தபடியே கேட்டான் கண்ணன்.

காதலொன்றும் சிங்கக் கூடல்ல
சிங்கக் கூட்டில்
எலும்புக் கூடுகள் மட்டும் தானே
மிஞ்சும்!,

அப்படியென்றால்
காதல் என்னும் சிலந்தி வலையா ?

இல்லையே.
காதல் சிலந்தி வலையுமல்ல,
அது
பல பூச்சிகளின் புகலிடமல்லவா ?
சிரித்தாள் வித்யா.

சிரிப்பிக்கிடையே கேட்டான்
கண்ணன்,
உங்களுக்குள் எப்போ
காதல் அத்யாயம் ஆரம்பமானது ?

வித்யா
சிரித்தாள்.
ஏன் கேட்கறீங்க ?
பதிலுக்கு முன்னெச்சரிக்கையாய்
ஒரு
கேள்வியை வைத்தாள்.
சதுரங்கத்தில் அரசனைக் காப்பாற்றும்
படைவீரனைப் போல,

இல்லை.
சும்மாதான் கேட்டேன்.
கல்லூரிகாலத்திலெல்லாம்
உன் காதலன்
சாரதி என்று தான்
சிந்தித்துக் கிடந்தேன்.

சாரதியா ?
அவன் என் கிராமத்து நண்பன்,
தூரத்து சொந்தமென்று கூட
அவனை
சொந்தம் கொண்டாடலாம்.

நானும் அவனும்
பள்ளிக்கூடப் பிராயத்திலேயே
பரிச்சயம்,
ஒரு
சகோதர நேசத்தின் சொந்தக்காரன்,

இத்தனையும் என்ன
அவன்
கல்லூரி கால என்
ராக்கி சகோதரன்.

வித்யாவின் வார்த்தைகள்
கண்ணனை கன்னத்தில்
அறைந்தன.

ஒரு சகோதரனையா
காதலன் என்று நினைத்தேன்,

கடற்கரைக்குச் சென்றால்
காதலன் என்று ஏன்
கற்பித்துக் கொண்டேன் ?

என் தோன்றல்களையெல்லாம்
நிஜமென்று ஏன்
நிறுத்தாமல் தின்றேன் ?

கண்ணனுக்குள்ளே
வெட்கமும் இயலாமையும்
இரு மலைகளாய் உயர்ந்தன.

பாலம் இல்லா பாதையில்
மனக் கால்கள்
முள்ளிடையே சிக்கிய
வெள்ளாடாய் தவித்தது.

வார்த்தைகள் தடுமாற
கண்ணன் கேட்டான்,

சாரதி மோகனை
சந்தித்திருக்கிறானா ?

வித்யா சிரித்தாள்.
என்னவாயிற்று கண்ணன் ?
சாரதியையே சுற்றுகிறீர்கள்.

சாரதியும் மோகனும்
கல்லூரியில் நுழையும் போதே
நண்பர்களாய்
நுழைந்தவர்கள் தான்.

சாரதிக்கு நான் கட்டிய
ராக்கி கூட,
மோகன் வாங்கி தந்ததே.

love2.jpg
7

கண்ணனுக்கு
தலை சுற்றியது.

சாரதியை
வித்யா காதலிக்கவில்லை
என்பதை
மோகன் மறைத்திருக்கிறான்.

என்
காதல் பனித்துளியை
வலுக்கட்டாயமாய் என்
இலைகளிலிருந்து
துடைத்தெறிந்திருக்கிறான்.

நான்
காதலைச் சொல்ல
காலடி வைத்தபோதெல்லாம்
கட்டுப் போட்டு
அதை முடக்கியிருக்கிறான்.

இதற்கெல்லாம் பின்னயில்
மோகனின்
காதல் எண்ணங்கள் தான்
காவலாய் நின்றிருக்கின்றன.

என்னை
தவறான முகவரிக்கு
அனுப்பி விட்டு,
அவன் அவள் முகவரிக்குள்
குடியேறியிருக்கிறானே.

ஏமாற்ற உணர்வு
கண்ணனின் கழுத்தில்
கூடாரமடித்துக் குடியேறியது.

திட்டமிட்டே
என் காதலை
வெட்டிவிட்டாயே,
தேடி வந்த சிட்டைப் பிடித்து
சமைத்து விட்டாயே,
நம்பி வந்த நண்பனை
நாகரீகமாய் நறுக்கிவிட்டாயே.

கண்ணனின் இதயம்
இயல்பை மிறி
அதிகமாய் இடித்தது.
தமனிகளுக்குள் கவனிக்காமல்
குருதிக் குதிரைகள்
தாறுமாறாய் ஓடின.

எதையும் வெளிக்காட்டாமல்
இதமாய் சிரித்தான்.

எப்போது
முதல் காதல் கடிதத்தை
கை மாற்றிக் கொண்டீர்கள்,
இதயத்தின் துடிப்புகள்
எப்போது
இடம் மாறக் கண்டீர்கள் ?
கண்ணன் வினவினான்.

வித்யா சிந்தித்தாள்.
கல்லூரி கடைசியாண்டில் தான்,
அது வரை
நண்பனாய் தான் இருந்தார்.
பலமுறை
காதல் பேச்சை எடுத்தாலும்
நான் அதற்குப் பாலம் கட்ட
பிரியப்படவில்லை.

ஆனாலும்
என்னை அளவுக்கு அதிகமாய்
நேசித்தார்,
என் இதயத்தின்
அத்தனை கனவுகளையும் வாசித்து,
வாசித்தவற்றை தேடிப்பிடித்து
எனக்கு பரிசளித்தார்.

நட்பு
காதலாய் உருமாறிய நிமிடமும்,
குரங்கு மனிதனான
பரிணாம காலமும்
சரியாய் சொல்லல் சாத்தியல்லவே.

ஆனாலும் அது
கல்லூரி கடைசியாண்டின்
கடைசி நாட்களில் தான்,

வித்யா சொல்லச் சொல்ல
கண்ணனுக்குள் மீண்டும்
கனல் அடித்தது.

love41.jpg

8

அப்படியானால்,
வித்யா மீதான
என் காதலை
தடுக்கும் மதகாக மோகன்
இருந்திருக்கிறான்.

சாரதிக்கு
வித்யா கட்டிய ராக்கி கூட
மோகன் முன்வைத்த
ஏதேனும்
முன்னெச்சரிக்கை முனையா ?

அத்தனை காதலையும்
தற்கொலை முனையில்
தள்ளிவிட்டு,
தன்மீதான நட்பை
காதலாக நிறமாற்றம் செய்திருக்கிறான்.

கடலை நோக்கிய
எனது பயணம்
அவனுடைய வாய்க்காலால்
எப்படி திசைமாறியது ?

அவன் நீட்டிய
பூக்களில் எல்லாம்
செயற்கை வாசனை தான்
செலுத்தப்பட்டிருந்ததா ?

அவன் தந்த
நட்பில் எல்லாம்
மதில் சுவர் கட்டுதல் தான்
மறைந்திருந்ததா ?

நினைக்க நினைக்க
கண்ணனால்
நம்ப முடியவில்லை.

ஆறுதலாய் தோள் தடவி,
என்
ஏமாற்றத்தில் கலங்கி
பாசமாய் பேசியவனா
என் நிழல் நீங்கியதும்
புது முகத்தைப் போட்டுக் கொண்டான் ?

கல்லூரியின்
முதல் நாளில்
நான் விதைத்த காதல் விதை,
கடைசியாண்டில்
அவன் நிலத்தில் விளைந்ததா ?

நான் தான்
முதலில் நேசித்தேனா ?
எத்தனை சாமர்த்தியமாய்
ஏமாற்றப் பட்டுவிட்டேன் ?

கண்ணன்,
இயலாமையில் விழுந்தான்.

வித்யா அவனை
மீண்டும்
நிகழ்காலத்துக்கு இழுத்தாள்.

என்ன கண்ணன் கனவா ?

இல்லை வித்யா
கல்லூரி கால நிஜங்கள்,
இப்போது தான்
மெல்ல மெல்ல வருகின்றன
கண்ணன் சொன்னான்.

என்ன நிஜங்கள் ?
வித்யா கேட்டாள்.

ஒன்றுமில்லை வித்யா.
யாருக்கு யார் என்பதெல்லாம்
இறைவன் எழுதுவது,
மனிதன் வைத்திருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
வாழ்க்கையின் அடுத்த நிமிடத்தை
எழுத இயலாதே.

கணிப்புகளும்
கவனிப்புகளும் எல்லாம்
பொய்யாய் போகக் கூடும்.
சாத்தியக் கூறுகளை
சொல்வதெல்லாம்
சாமர்த்தியத்தனம் தான் இல்லையா.

சிலர்
பலிக்கும் கனவுகளை
மட்டுமே பார்க்கிறார்கள்.
பலருக்கு
பார்க்கும் கனவெதுவுமே
பலிப்பதில்லை,
எல்லாம் நிகழ்வுகளின் நியதி.

உதாரணமா பாருங்க கண்ணன்,
நீங்களும்
உமாவும்
நாலுவருஷமா காதலிச்சு
கல்யாணம் பண்ணிகிட்டீங்க.

நாலு வருஷமா ?
கண்ணனுக்குள்
இன்னொரு அதிர்ச்சி விழுந்தது.
உமாவை
தான்
காதலிக்கவே இல்லையே !
அப்படி ஒரு பொய் வேறு
வித்யா நரம்பில்
செலுத்தப்பட்டிருக்கிறதா ?

வித்யா தொடர்ந்தாள்
கல்லூரிக்கு வரும் முன்னரே
நீங்கள்
காதலில் வகுப்பெடுத்து நடந்தவராமே,
மோகன் தான்
சொல்லுவார் கல்லூரி காலத்தில்.

வித்யா
விஷயம் புரியாமல்
விளக்கிக் கொண்டிருந்தாள்.

love2.jpg

9

கண்ணனுக்கு
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

வயலுக்கு வரும்
அத்தனை வாய்க்காலையும்
புற்களையும் கற்களையும் போட்டு
அடைத்திருக்கிறான் மோகன்.

விழுந்த மழையையும்
வடிகட்டிய பின்னே
நிலத்துக்கு வழங்கியிருக்கிறான்.

காதல் வந்தால்
நட்பு எல்லாம் சும்மா தானா ?

நட்பின் வார்த்தைகளை
நட்பின் முனகல்களை
காதலின் சிறகுகள்
கவனிப்பதில்லையா ?

கனவுகளுக்கு
சிறகு தயாரிக்கும் அவசரத்தில்
காதல்
நட்பின் கால்கள்
நடமாட முடியாமல்
முடமாகிக் கிடந்தாலும்
கவனிக்காமல் கடந்து போகுமா ?

ஆயிரம் பொய் சொல்லி
கல்யாணம் பண்ணலாம்
என்பார்கள்,
இங்கே
ஆயிரம் பொய்சொல்லி
ஒரு காதலைக் கொன்றிருக்கிறான்,
ஒரு
காதலில் வென்றிருக்கிறான்.

அவனுடைய
நந்தவனத்துக்குள்
வேறு வண்டுகளை வரவிடாமல்
தடுத்துவிட்டு
நகர முடியா பூவோடு
சமரசம் செய்திருக்கிறான்.

வலுக்கட்டாயமாய்
ரோஜாவை
இதழ் திறக்க வைத்திருக்கிறான்,
சட்டென்று கிடைத்த
மின்னல் சந்தர்ப்பத்தில்
மகரந்தம் திருடி
காதலை விளைவித்திருக்கிறான்.

தனித்தீவுக்குள் அவளைத்
தள்ளி,
சமயம் பார்த்து
தாமரையைக் கிள்ளியிருக்கிறான்,

முதலில் மறுத்தவள்
பிறகு எப்படி சம்மதித்தாள் ?
எல்லாம்
மூளைச் சலவையா ?

கேள்விகளின்
கோடிக் கால்கள்
கண்ணனின் பிரதேசங்களில்
அங்குமிங்கும்
அலைந்தன.

என்ன கண்ணன்.
அடிக்கடி அமைதியாயிடறீங்க ?
வித்யா தான் மீண்டும்
கண்ணனை இழுத்தாள்.

கண்ணன்
தலையைக் குலுக்கி
வார்த்தைகளை எடுத்தான்.

ஆமா.
உமாவோட அப்பா
என்னோட மாமா.

பால்ய சினேகிதம்
பிரியமாகி காதலாகியது,
அது பிறகு
பிரிக்க முடியா
பந்தமாகி விட்டது.

பொய் தான்.
அந்தத் திருமணம்
காதலில் துவங்கி திருமணத்தில்
முடியவில்லை,

வித்யா மீதான காதல்
முடிந்ததால்,
அல்லது
துவங்கும் முன்பே துவண்டதால்
உருவான பந்தம் அது.

நல்லது கண்ணன்,
இப்போது நினைத்தால்
சிரிப்பு தான் வருகிறது.

மோகன் தான்
நம் நட்பைக் காப்பாற்றினான்.
இல்லையேல்
உங்களிடம் வந்து
உங்களைக் காதலிப்பதாய்
சொல்லி
நம் நட்பைக்
கொச்சைப் படுத்தியிருப்பேன்.

கொஞ்சமும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளில்
கண்ணன்
ஏகமாய் அதிர்ந்து நிமிர்ந்தான்.

love41.jpg

10

என்ன சொல்றீங்க வித்யா ?
அதிர்ச்சியின் துளிகள்
தெறிக்க,
படபடப்பாய் கேட்டான் கண்ணன்.

வித்யா சிரித்தாள்.
இளமைக் காலத்தின்
பிள்ளைத் தவறுகள் அவை.
தப்பா நினைக்காதீர்கள் கண்ணன்.

உங்க மேலே ஒரு
ஈர்ப்பு இருந்தது,
ஆனால்
உங்கள் காதலின் நிழல்
உமாவின் தேசத்தில்
விழுவதை அறிந்தபின் நான்
என் நிழலை
தரை விழ அனுமதிக்கவில்லை.

உங்கள் காதலின் ஆழமும்,
வருடங்கள் விலகும் தோறும்
அடர்த்தியாகும்
உங்கள் அன்பும்,
வார இறுதிகளுக்காக நீங்கள்
தவமிருக்கும் வாரங்களும்
எல்லாம் எனக்குத் தெரியும்.

அடிப்பாவி,
அப்படியெல்லாம் சொன்னானா
அந்த அயோக்கியன் ?
உன்னைப் பார்க்காத வார இறுதிகள்
எனக்கு
சாபங்களடி,
அதை வரங்களென்று வர்ணித்தானா ?
உமா என்பவளை நான்
காதலிக்கவே இல்லை,
அன்பு
பாதரச அடர்த்தி என்றானா ?

தொண்டை வரைக்கும் தான்
வந்தன வார்த்தைகள்
பின்
கரைந்து போய்
புன்னகையாய் தான் வெளிவந்தன.

இப்போதெல்லாம் அவை
பிள்ளை விளையாட்டுகளாய்
தோன்றுகின்றன,
ஒரு காலத்தில்
விலக்க முடியா வலியாய் இருப்பவை
காலங்கள் கடந்தபின்
வேடிக்கை நிகழ்வுகள் ஆகின்றன.

பட்டியல் பட்டியலாய்
சேகரித்து வைக்கும் கவலைகள்,
வருடங்கள் வளர்ந்தபின்
நகைச்சுவைச் சம்பவங்கள்
ஆகிவிடுன்றன.

காதல் தோல்வியும் அப்படித் தான்,
தாடியும்,
தனிமைக் கண்ணீரும்
எல்லாம்,
அந்த தவிப்பின் மாதங்கள்
மறையும் வரை தான்.

பிறகு
தாலி, தாய்மை என்று
பயணம் தொடர்ந்தபின்
பழைய நிறுத்தங்களிலெல்லாம்
இறங்கிக் கொள்ளத்
தோன்றுவதில்லை.

வித்யா பேசிக் கொண்டே
போனாள்.

love2.jpg

11

எத்தனை இரவுகளை
மொட்டை மாடியில் படுத்து
தின்றிருக்கிறான்,

எத்தனை நாட்கள்
விண்மீன் எண்ணி எண்ணியே
கண்களை
எரித்திருக்கிறான்,

எத்தனை இரவுகள்
மேகத்தின் மீது ஓர்
காதலின்
தூக்கணாங்குருவிக் கூடு
தொங்காதா என்று
தவமிருந்திருக்கிறான்.

வரம் வந்ததை
அர்ச்சகர் தடுத்திருக்கிறார்.
பின்
வேறு முத்திரை குத்தி
பத்திரப் படுத்தியிருக்கிறார்.

என் கிளைகளைத் தேடி
நடந்த கிளியை
நான்
வேடந்தாங்கல் விருந்தாளி
என்று
தவறாய் எண்யிருக்கிறேன்.

இல்லாத கூட்டுக்குள்
இருவருமே அடைபட்டு
இருந்திருக்கிறோம்.

நினைக்க நினைக்க
கண்ணனுக்கு
ஆச்சரியமாய் இருந்தது.

காதலிப்பவர்கள் எல்லாம்
காதலைச் சொல்லுங்கள் !
எதிர்ப்பு வந்தாலும்
எதிரே பூ வந்தாலும்,
சொல்லாமல் செல்வதை விட
சிறப்பானதே.

சிந்தனைகளை
தற்காலிகமாய் நிறுத்திவிட்டு
தற்காலத்துக்கு வந்தான்
கண்ணன்.

ஆமாம் வித்யா,
நானும் உமாவும் காதலித்து
திருமணம் செய்தோம்.

மகிழ்வின் விடியல்,
புன்னகைப் பகல்,
சந்தோஷத்தின் சாயங்காலம்,
இன்பத்தின் இரவு
என்று
நாட்காட்டிகளும் கடிகாரங்களும்
வாழ்வின்
சிரிப்பை மட்டுமே தருகின்றன.

நீயும்
மகிழ்வாக இருப்பதில்
மிகவும் மகிழ்கிறேன்.
சொல்லி நிறுத்தினான் கண்ணன்.

நான்
சந்தோஷம் தான் கண்ணன்,
ஆனாலும்
கல்லூரி கால கதைகளைக்
கேட்டால்
மோகன் மௌனியாகி விடுகிறான்.

விஷயம் தெரியாமல்
வினவியிருக்கிறேன்,
எதையும் அவர் சொன்னதில்லை,
ஆனாலும்
ஏதோ கவலையின் வலையில்
சிக்கியிருக்கிறார்,
அது மட்டும் தெரிகிறது.

வித்யா சொல்ல
கண்ணன் சிரித்தான்.

சிரித்து நிமிரவும்,
அதுவரை
தொலைவில் தொலைபேசியில்
பேசி நின்ற மோகன்
வித்யாவை நெருங்கவும்,
சரியாக இருந்தது.

கண்ணனைக் கண்ட
மோகன்
அதிர்ச்சிக் கடலில் விழுந்தான்.

love41.jpg

12

எப்படி இருக்கே மோகன் ?
நலமா ?
காதல் கைகூடி விட்டது போல
தெரிகிறதே.

வார்த்தைக் கொடுக்குகளால்
கண்ணன் தீண்டினான்,
வித்யா
உள் அர்த்தம் விளங்காமல்
சிரித்தாள்.

மோகனின் உதடுகளுக்குள்
வார்த்தைகள் உலர்ந்தன,
ஈரப்பதமில்லாததால்
வார்த்தைக்குப் பதில்
எழுத்துக்களே எழுந்து வந்தன.

அ து  வ ந் து.
ஆ.மா.
மோகன் திணறினான்.

பரவாயில்லை மோகன்,
காதல்
புனிதமானது,
அது
முன் ஜென்ம பாவங்களைக் கூட
கழுவி விடும்
கவலைப் படாதே.

வித்யா எனும்
வரம் கிடைத்திருக்கிறது,
வித்யா மூலம் ஓர்
வரம் வந்திருக்கிறது,
இனியும் என்ன
கலையாத் தவங்கள் ?

சாரதி நலமாய் இருக்கிறானா ?
கண்ணன்
மோகனின் முகம் நோக்கி
கேள்வியை வைத்தான்.

தெரியவில்லை,
சாரதியைச் சந்தித்தபின்
பல
வருடங்கள் உருண்டுவிட்டன.

கண்ணன் சிரித்தான்.
அவன்
வித்யாவின் ராக்கி சகோதரனாமே !
ஆச்சரியம் மோகன்.
சுவாரஸ்யமான ஆச்சரியம்.

மோகனுக்கு
கால்களுக்குக் கீழே
நிலம் வழுக்கியது,
விமானத்தின் இறக்கை தொற்றி
பறப்பதாய் உணர்ந்தான்,
எந்நேரமும்
விழுந்து விடக் கூடும்.

மோகனின் அவஸ்தை
கண்ணனுக்கு விளங்கியது,
சரி.
எங்கே பயணம் ?
பேச்சை மாற்றினான் கண்ணன்.

ஆள்குறைப்பில் நான்
அகப்பட்டு விட்டேன்,
இப்போது
தாயகம் திரும்பும் கட்டம்.
வேலை தேடும் காலம்
மீண்டும் ஆரம்பம்.
மோகன் புன்னகைக்க முயற்சித்து
முடியாமல் போகவே
பாதியில் நிறுத்தினான்.

love2.jpg

13

வேலை கிடைக்கும் மோகன்,
கவலை எதற்கு ?

இவையெல்லாம்
தற்காலிகத் தோல்விகள் தான்.

கற்காலக் தவறுகளுக்காய்
கவலைப் படுவதும்,
தற்காலத் தோல்விகளுக்காய்
தற்கொலை செய்வதும்,
மனித வாழ்வின் பலவீனங்கள்.

உனக்குத் திறமை
இருக்கிறது,
மேகத்தை உருவாக்கியே
நீர் பிழியும் திறமைசாலி நீ.

இன்னொரு கிரகத்தைக் கூட
நீ நினைத்தால்
உருவாக்கலாம்,
வானத்தின் ஒரு துண்டை இழுத்து
அதன் மேல் போர்த்தவும் செய்யலாம்.

உனக்குத் தான்
பயிர்களைப் பாதுகாக்கும்
வித்தை தெரியுமே.

எங்கே எதை எப்படி
நகர்த்தவேண்டும் என்பதில்
உனக்கு
சதுரங்கச் சாமர்த்தியம்.

விதை முளைக்கும் வரை
மூச்சு விடாமல் காத்திருக்கும்
பூமியின்
பொறுமை உனக்கு.

வருத்தப்படாதே
வருத்தங்கள் எதையும்
வருவித்து விடாது,
நோய்களைத் தவிர.

சிந்தி,
சவால்களை சந்தி.

உன்னுடைய விவரங்களை
எனக்கும் கொடு,
தெரிந்த இடத்தில் நுழைந்து
உனக்கான வேலை வேட்டையில்
நானும் சில
அம்புகளை விடுகிறேன்

சிரித்தபடியே
கண்ணன் சொல்லச் சொல்ல
மோகனின் மனசில்
பாரம் கூடியது.

மோகன் கண்ணனின்
கரம் பற்றினான்,
விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

அது சரி கண்ணன்,
நீ என்ன இங்கே ?
மோகன் கொஞ்சம் இயல்புக்கு
வந்து வினவினான்.

என் மனைவி
இன்று அமெரிக்கா வருகிறாள்.
என்
சுவாசத்தின் சரிபாதியைச் சந்திக்க
இதோ
விமானங்களின்
முதுகைப் பார்த்தபடி
நகம் கடித்துக் காத்திருக்கிறேன்.

உனக்கு
கல்யாணம் ஆயிடுச்சா
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
மோகன் உற்சாகமானான்.

யாருடா பொண்ணு ?

வேற யாருடா ?
நான் காதலித்துக் கொண்டிருந்த
என்
மாமன் வீட்டு மல்லிகை
உமா தான்.

கண்ணன் சொல்லி முடித்ததும்
உமாவா ???
என்று ஆச்சரியத்தில் அலறிய
மோகனை
வித்யா  வித்தியாசமாய் பார்த்தாள்.

சலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )

கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல கவிஞர்களின் மனம் திறந்த பாராட்டுகளைப் பெற்ற கவிதைக் குறு நாவல் உங்கள் பார்வைக்கு.

அனைவருக்கும் val.jpgகாதலர் தின நல் வாழ்த்துக்கள் )

 சலனம் : கவிதைக் குறு நாவல்.

smoke.jpg

சலனம் : 1

நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது.

திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பயவிதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்

மனசு நிறைய காதலித்தாளே
மவுனமாய் மனசை பரிசளித்தாளே
அவள்
பிறப்பித்தவை எல்லாம் போலிகளா ?
இல்லை அவள் பிம்பம் கூட
அவளுக்கு உரியதில்லையா ?

இதயம்
இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து
அவளை சுற்றிக் கொண்டிருந்தது.

அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
தமிழகத்தின் தலைநகரில்
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.

அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.

ஊட்டி மலையில் பறந்து திரியும் ஒரு
நாகரீக நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !

கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.

கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது
கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.
மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.

அவளோடு நட்புச் சுவர்கட்ட
அவன்
சீனப் பெருச்சுவரைத்
தாண்டவேண்டி இருந்தது.

பேசினான்.
பேசினாள்.
காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.

அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!

நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்
அவன் மனம் திறந்தான்.

உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்
இது காதலாய் இருக்குமோ எனும்
கவலையும் இருக்கிறது !!!

தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.

புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.

விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.

நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் விழி.

மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.
சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் நின்றான்.

சலனம் : 2

girl8.jpg

அவள் சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?

உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
வாரங்கள் தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?

நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்

நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!

உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.

அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.

சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்

கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.

விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.

நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.

நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.

இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.

நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.
மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.

இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்

என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை  வேண்டியிருப்பேன்
ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.

சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.

எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.

சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!

அவன் பார்த்தாள்.
அவள் விழிகள் அகலமானவை.
மரங்கொத்தியின் அலகுபோல அது அவனை
ஆழமாய் கொத்தியது.

வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்

சலனம் : 3

girl8.jpg
ஏன் என்னைப் பிடிக்கலியா ?
மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்

பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!

ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்

அவள் சொன்னாள்.
ஆழமாய் அவனைப் பார்த்துவிட்டு
அழுத்தமாய் சொன்னாள்.

இல்லை !!!
காதல் எனக்கு பிடிக்கும்.
சொல்லவேண்டாமென்று நினைத்தேன்
சொல்லவைத்துவிட்டீர்கள்.
எனக்கு காதல் முளைத்து
நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது !!!

ஜாலியன் வாலாபாக் படுகொலை
அவன்
இதய செல்கள் மொத்தமும்
வினாடிநேரத்தில்
நடந்துமுடிந்துவிட்டது !!!

தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.

நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.

ஆமாம்.

ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
ஓரமாய் நடக்கத்துவங்கினாள் சுடர் விழி.
சலனம் : 4

girl61.jpg
வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?

அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?

சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?

ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?

புரியவில்லை அவனுக்கு.
முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.

மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.

சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?

கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.

தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்

காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே
அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.

பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.

தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.

வேண்டாம்.
இன்னும் இந்த நினைவுகள்.
அவள் காதலிக்கிறாள்.
காதலிக்கப் படுகிறாள்.

பக்கத்து தோட்டத்தில்
வேர்விட்ட மல்லிகையை
என் தோட்டத்தில்
பூ பூக்க நிர்ப்பந்திக்க முடியாது.

முடிந்தாலும் அது கூடாது.
முடிவெடுத்துவிட்டு மெதுவாய் எழுந்தான்.

தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.

களைப்பு
கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.

என்ன இனியன்,
கண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா?
இல்லை
கண்ணில் கடித்த கொசுவை
அங்கேயே நசுக்கிவிட்டாயா ?
சிரித்தபடி கேட்டாள் சுடர்.

அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.

நேற்று நடந்ததை மறந்துவிடு சுடர்
நீ காதலித்துக்கொண்டிருக்கிறாய் என்பது
எனக்கு தெரிந்திருக்கவில்லை

 இழுத்துப் பிடித்து வார்த்தையை நிறுத்தினான்.

என்ன சொல்றீங்க இனியன் ?
காதலி யாய் இருக்கிறேனா ?
யார் சொன்னது ?
புன்னகையைப் படரவிட்டு கேட்டாள்.

நீ தானே
நேற்று கூறினாய்
நான்கு ஆண்டுக்காதல் பற்றி ?

கேட்பதைச் சரியாகக் கேட்கவேண்டும்.

காதல் எனக்கு
அறிமுகமாகி நான்கு ஆண்டு
ஆனதென்று தான் சொன்னேன்.
மூன்று ஆண்டுகளில்
முடிந்துபோனதைச் சொல்லவில்லையே.

சலனம் : 5

girl1.jpg

மின்னல் ஒன்று மிகச்சரியாக
கண்ணின் கருவிழிக்குள் விழுந்து
கதவடைத்துக் கொண்டது இனியனுக்கு.

அத்தனைக் கதவுகளும்
மொத்தமாய் திறந்ததாய்
இதயத்துக்குள் காற்று நுழைந்தது.

அட என்ன இது
இன்னொருவன் தோல்வியில்
எனக்கு மகிழ்ச்சியா ?

எனக்கே தெரியாமல்
எனக்குள் ஒரு
சுயநலச் சுரங்கம் இருக்கிறதா ?
விழுந்துவிட்டதைச் சொன்னவுடன்
விலாவிற்குள் குளிர் விளைகிறதே ?

என்ன சொல்றே சுடர்.
ஏன் ? என்ன ஆச்சு ?
வார்த்தைகள் நொண்டியடிக்காமல்
நடந்துவந்தன.

கல்லூரி நாட்களில் எனக்கு அறிமுகமானவன் இருதயராஜ்.
பள்ளிக் கூடத்தின் படிதாண்டிவந்த எனக்கு
கல்லூரியின் சாலைகள் கனவுகளை வளர்த்தன.
அது காதலா
இல்லை இனக்கவர்ச்சியா என்று
இனம் காண இன்னும் என்னால் இயலவில்லை.
காதலித்தேன்.
மனசு நிறைய
எனக்காய் அவன் எடுத்துக்கொண்ட அக்கறை
எனக்காய் பூக்களால் பாதை அமைத்த இவனுடைய அன்பு
என் தேவைகளை விழிகளால் கேட்டு
வினாடியில் முடித்த அவன் நேசம்.
இன்னும் ஏதேதோ இருக்கிறது இனியன்.

அப்புறம் என் விலகினாய் ?
மூன்று ஆண்டுக்காதல் என்பது
விளையாட்டல்லவே.

மனசின் செல்கள் கூட
மறுத்திருக்குமே ?

வேலிதாண்டியதாய் காரணம் காட்டி
வெட்டப்பட்டாயா ?
தந்தைக்கும் உனக்கும் இடையே
தலைமுறை இடைவெளி தலை தூக்கியதா ?
சொல் சுடர்
என்ன நடந்தது ?

பழையதைக் கிளறி
மனசைக் கீறிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.
பிரேதப் பரிசோதனையில்
காரணங்கள் விளங்கலாம் ஆனால்
பிணக்கிடங்கில் படுத்துக்கிடக்க எனக்கு மனமில்லை.

அவள் உணர்வுகள் புரியவில்லை.
ஆனால் ஆணிவேர் வெட்டப்பட்டுவிட்டது.
மரமும் பட்டுவிட்டது
இனி விறகுகளுக்கிடையே பச்சையம் பிறக்காது
என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

அப்போதைக்கு அது அவனுக்கு
போதுமானதாய் இருந்தது.

 சலனம் : 6

girl9.jpg

சிலநாட்கள் சிறகுகட்டிப் பறந்தபின்
கண்களில் சோகச் சுடர் உமிழ
வினாக்களை விழிகளில் பூசி அமர்ந்திருந்த
அவளிடம் கேட்டான்.

என்ன ஆயிற்று உனக்கு.
உன் கண்களுக்கு இன்று
ஒளியடைப்புப் போராட்டமா ?
இருள் நிறைந்திருக்கிறதே ?

என்ன சொல்வது இனியன்.
இது
காதலித்த என் மனசுக்கு
காதலன் தரும் பரிசு.
உளறி வைத்தாள்.

ஏன் ?
பழையவை மனசில்
பதிந்துவிட்டதா ?
விலகியபின் எண்னங்கள்
விசுவரூபமெடுக்கிறதா ?
கவலை தோய கேட்டான் இனியன்.

இல்லை .
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இனியன்.

நான் காதலித்தபோது
அவன் என்னைக் காதலித்தான்.
ஆனால்
என் சுதந்திரங்களைச் சிலுவையில் அறைந்தான்.

ஆண்களோடு பேசினால்
அநியாயம் என்றான்.

என் சிறகுகளுக்கு தங்கம் பூசினான்
ஆனால்
என்னைக் கூண்டுக்குள் அடைத்தான்.

அவன் நேசம் எனக்குப் பிடித்திருந்தது
ஆனால்
என் எல்லைகளை சுருக்கிக் கொள்வதில்
எனக்கு உடன்பாடில்லை.

புரியும் நிலையில் அவனில்லை
அது தான்
பிரியும் நிலைக்குக் காரணம்.

நண்பர் கூட்டத்தில் சிரித்தால்
நண்பர்களை மிரட்டினான்.

பேருந்தில் வந்தால்
ஆண்கள் இருப்பார்களென்று
அவன் வண்டியில் தான் அழைத்து வருவான்.

ஆரம்பநாட்களில் பெருமையாய் நினைத்தேன்
நாட்கள் நகர நகர
நந்தவனக் குயிலை
நடைவண்டியில் நடக்கவிடுவதாய்
உணரத்துவங்கினேன்.

வண்ணத்துப் பூச்சியாய் இருக்க பிரியப்பட்டேன்
அவன்
கூண்டுப்புழுவாய் இருக்க மட்டுமே அனுமதித்தான்.

அவனை மாற்ற பிரியப்பட்டு,
சிரமப்பட்டு
இறகுகளின் இறுக்கத்தை இழந்தேன்.

பிறகு
என் வட்டத்தைக் காப்பாற்ற
அவன் வட்டத்திலிருந்து வெளியே வந்தேன்.

இப்போது
தொலைபேசித் தொல்லை தொடர்கிறது.

மணியடித்தாலே
மாதாவை வேண்ட ஆரம்பித்துவிடுகிறேன்.
முதலிரண்டு வார்த்தைக்குள்
முழுவதுமாய் வியர்த்து விடுகிறேன்.

கவலைகளை வேதனைகளை இயலாமையை
இறக்கி வைத்துவிட்டு
மௌனத்தை இதழ்களில் பூட்டி அமர்ந்தாள்.

 சலனம் : 7

girl10.jpg

சில நேரம் மௌனம் அதிகம் பேசும்
இன்றும் அப்படித்தான்.
நிமிடங்கள் விரைவாய் கரைய,
அவளருகில் அமர்ந்து
மௌனத்தைக் கேட்டு
மௌனமாய் இருந்தான்.

அன்று முதல்
அவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.
பேசுவதிலேயே பாதி நாள் கரையும்,
இ-மெயிலில் மீதிநாள் கரையும்.

இன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.
காதலை !
இன்னும் காதலிப்பதாய்.

அவள் மௌனமானாள்
கடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.
சுதந்திரம்,
நிம்மதி,
பெற்றோரிடம் எனக்கிருந்த நம்பிக்கை !
இனி
அவர்கள் விழிகளில் என் விரல்கள்
கவலைச் சாயம் பூசாது.

அவர்கள் சொன்னால்
முதுமக்கள் தாழிக்குள்
முடங்கிவிடவும் எனக்கு சம்மதமே.

உங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஆனால்
அம்மாவுக்கு உங்களைப் பிடிக்குமென்று
நம்பிக்கையில்லை.

அவர்கள்
கலாச்சாரக் குடையுடன் நடப்பவர்கள்
நீங்கள் கிராமிய இசையில் நனைபவர்.

அவர்கள் பார்வையின் அழகை அங்கீகரிப்பவர்கள்
சாப்பிடுவதில்,
நடப்பதில்,
உட்காருவதில்,
ஏன் நகங்களில் கூட நாகரீகம் பார்ப்பவர்கள்.

அவர்களுக்கு உங்களைப் பிடித்திருந்தால்
நான் அதிஷ்டசாலி.
சொல்லிவிட்டு நிமிர்ந்தாள்

அவன் மனதுக்குள் திடீர் அலை ஒன்று
திசை மாறி வீசியது
எண்ணங்களில்
பல்லாயிரம் புறாக்கள்
படபடவென இறகு அடித்து பறந்தன.

அவ்வளவு தானே
அவர்களே உன்னிடம் சொல்வார்கள்
என்னைப் பற்றி
பொறுத்திரு.

சொல்லிவிட்டு
வானவில்களை விழிகளில் பொருத்தி
கலையும் முன் கண்மூடினான்.
 
 சலனம் : 8

girl3.jpg

இனியனுக்கு ஒன்றும் புரியவில்லை
சுடரின் அம்மாவோடு உரையாடிய வேளைகளில்
வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட
மேஜை நாகரீகம்
உடை நாகரீகம்
நடைநாகரீகம் என்று
ஒன்றுவிடாமல் நடித்துவிட்டான்.

காதல் நிஜமானது !
ஆனால் அதை அடைய
எத்தனை நிறம் மாற வேண்டி இருக்கிறது ?

உண்மையைப் பெற
போலிகளோடும்
உறவாட வேண்டியிருக்கிறதே !!

இன்னும் ஒன்றும் தெரியவில்லை.
சுடரைக் காதலிக்கிறேன் என்று
சுற்றிவளைத்துச் சொல்லிவிட்டான்

அம்மாவைப் பற்றி சுடர் சொன்னவற்றை
உள்வாங்கி சரியாகச் நடந்து விட்டேனா ?
இல்லை இல்லை
சரியாக நடித்து விட்டேனா ?

நேராய் நடந்தால் தான்
அம்மாவுக்குப் பிடிக்கும்

சாப்பாட்டு மேஜையில்
வாயசைவில் வாய்தவறியும்
சத்தம் வரக்கூடாது.

உட்காரும் போது
முதுகெலும்பு
வளைந்துவிடக் கூடாது !

நகத்தின் நுனிகள்
விரலை மீறி
மயிரிழை கூட
முன்னேறக்கூடாது !!

அடடா
என் சொந்த முகம்
செல்லுபடியாகாத ஒன்றா ?

பிடித்தபடி வாழ்ந்த வாழ்க்கை
பிறருக்குப் பிடிக்கவில்லை
பிடிக்கவேண்டுமென்பதற்காகவே
சிலநாள் எனக்குப்
பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது !

இன்னும் ஒன்றும் தெரியவில்லை.

பறித்துக் கொள் என்று
பூ சொன்னபின்னும்
தோட்டக்காரனோடு
மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது !

சுடரை இன்னும் காணவில்லை
கவிதைகள் சொல்வது நிஜம் தான்.
காத்திருக்கும் நிமிடங்கள்
நொண்டியடிக்கும்
கேள்விக் குறியோடு காத்திருந்தாலோ
அது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்

அதோ வருகிறாள் சுடர்
எழுந்துவிட்டான்
இனம் புரியாத ஒரு பதட்டம்..

இதென்ன
நாக்கு கரைந்து கொண்டிருக்கிறதா
உள்ளுக்குள் உமிழ்நீர் ஊற்றெடுக்கிறதே !

நாக்கு நகரமறுத்து
நங்கூரமாக வடிவெடுத்ததாய்
ஒரு பிரமை !

அவள் முகத்தைப் பார்த்தான்.
முகம் மனசின் கண்ணாடி தான்
பெண்களின்
முகம் கூட ஆழமானது !

எதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை !!

 சலனம் : 9

girl6.jpg

சுடர்
அம்மா எப்படி இருக்காங்க ?
ஒரு வார்த்தை கேட்டான்.

அம்மா நலமா இருக்கிறாங்க.
அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவதற்காகவே
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

உங்கள் குழுவில் பலர்
வெளிநாடு போவதாய் கேள்விப்பட்டேன்
தூதரக வாசலில் யாராரோ
தூக்கம் தொலைத்தார்களாமே ?
சுடர் கேட்டாள்.

குளியலறைத்தொட்டியில்
தூண்டில் போடுவதுபோல்,
நேரம் வீணாகிக் கொண்டிருப்பதாய்
தோன்றியது அவனுக்கு !

அம்மா
வேற எதாவது சொன்னாங்களா?

ம்..ம் சொன்னாங்க
உங்களுக்கு பிடிக்கிறமாதிரி
 ஒரு வார்த்தை சொன்னாங்க.

சொல்லிவிட்டு
பூக்களை உதடுகளில் உட்கார்த்தினாள் சுடர்.

அவன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக் காற்றை
மெதுவாய் வெளிவிட்டபடி கேட்டான்
என்ன சொன்னாங்க.
என்னைப் பிடித்திருப்பதாகவா ?

இல்லை.
வேறு வார்த்தை சொன்னார்கள்.

அதை சொல்வதற்கு முன்
நம் உறவை
ஒரு அவசரப் பரிசோதனை
செய்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.

நட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய
நம்பிக்கை இருக்கிறது !!

ஐயோ
இமயமலை ஏறும்போது
கால்களில் ஆணி அறையாதே.

நட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.
கடலிலிருந்து நதியை
வடித்தெடுக்க முடியாது.
அம்மா என்ன சொன்னாங்க.
அது மட்டும் சொல்லிவிடு.
கொஞ்சம் பதட்டம்
கொஞ்சம் கேள்விக்குறியோடு சொல்லி முடித்தான்.

“புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ”
அது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி.

நான் நம்பவில்லை !!
உங்கள் கண்களில்
உண்மைக்காதல் உருகி வழிந்ததாம்

நாகரீக மணம்
அவர்கள் நாசிக்கு எட்டியதாம்

தெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம்
இதற்கெல்லாம் மேல்
மதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும்
உண்மைகூட ஒளிந்திருக்கிறது இனியன்.

இனியன் மகிழ்வின் விளிம்பிற்கு வழுக்கினான்.
அவனுடைய கரங்கள்
சட்டென்று சிறகுகளானதாய் உணர்ந்தான்

இரத்த அணுக்களின் அத்தனை துணுக்கிலும்
சந்தோஷ மின்னல் ஒன்று
சத்தமின்றி முத்தமிட்டுக் கொண்டது !!

சுடர்ர்ர்ர்..
உதடுகளோடு சேர்ந்து அவன் கண்களும்
சந்தோஷத்தில் கத்தின !!!

சுடர் சிரித்தாள்

அவன் மெதுவாக
அவளுடைய கரம் பற்றினான்.

தீண்டல் என்பது
உடல் சம்பந்தப் பட்டதில்லை என்பதை
முதன் முதலாய் உணர்ந்தான்.

பல பெண்களின் கரங்களைப் பற்றியிருக்கிறான்
வாழ்த்துச் சொல்லவும்
வரவேற்புச் சொல்லவும்
ஆனால் இப்போது தான் விரல்களின் வழியே
உணர்வுகளின் ஊர்வலத்தை உணர்கிறான்

இரத்தத்தில் புது அணுக்கள் பிறந்ததாய்
அவனைச் சுற்றி
ஆக்சிஜன் மட்டுமே அடைபட்டுக்கிடப்பதாய்.

உலக உருண்டையை உள்ளங்கைக்குள்
சிறைப்பிடித்ததாய்.
ஏதேதோ உணர்வுகள்.

பல தேர்வுகளில் வென்றிருக்கிறான்
ஆனால்
இப்போதுதான்
தேர்வாளர்களையே வென்றதாய் மகிழ்கிறான்.
 
காதல்
உடலின் எல்லா உணர்வுகளுக்கும் உறவா ?
காதல் வந்தவுடன்
பெருமிதம் அவனுக்கு தலைதூக்கியது !!!

சிரித்துக் கொண்டிருந்தவன்
சட்டென்று நிறுத்தினான்
என் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே !!!!

சலனம் : 10

 girl4.jpg
வீட்டில் என்ன சொன்னாங்க இனியன் ?
இரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த
அதே பரபரப்பு.
இன்று சுடரின் விழிகளில்.

இப்போது தான் ஊரிலிருந்து வருகிறான்
காதலைச் சொல்ல கிராமம் சென்றுவிட்டு

அவன் பேசவில்லை
அவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்
சுடர்
என்னை மன்னிச்சுடு
வீட்டில் ஒத்துக்கலை

சட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல
அவள் விழிகள் வழிந்தன

அதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்
இதயம் உடைந்தான்
என்ன சுடர்
வீட்டில எல்லோருக்குமே சம்மதம் தான்.
சும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .

உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.
உங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் ?
காதல் என்பது வேப்பங்காய்
கிராமத்து மனிதருக்கு.
கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் அழுகையாய் சொல்லிவைத்தாள்.

எனக்கும்
என் அப்பாவுக்கும்
தலைமுறை இடைவெளி பிரச்சனை பிறந்ததே இல்லை.

அவர் கிராமத்தின் வரப்புகளில் நடக்கிறார்
நான் நகரத்தின் சாலைகளில் நடக்கிறேன்.
அவர் சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்
நான் சுவாசிக்க
டீசல் புகையை வடிகட்ட வேண்டியிருக்கிறது.

ஆனாலும்
நான் இருக்கும் வருடத்தில் தான் அவரும் வாழ்கிறார்.
என் விருப்பங்களை காயவைத்து
அவருடைய எண்ணங்களை வாழவைப்பதில்லை.

எங்கள் கிராமத்தின் தரைகள் கூட
பச்சையம் தயாரிப்பவை
பச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்
அதனால் தானோ என்னவோ
நம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காட்டினார்.

இருந்தாலும் அங்கீகாரம் பெற
அம்மாவின் முந்தானையோடு தான் நான்
முன்னேற வேண்டியிருந்தது.
தொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.

அவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை
சிரித்தாள்.

இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது இனியன்
எதிர்ப்புகள் இல்லாமல்
விதிமுறைகள் விதிக்கப் படாமல்…

நன்றி இனியன்.
என்னுடைய சுதந்திரத்துக்கு
சிறையிடாமல்

சிரிப்பதற்கு மட்டுமே எனைப்பழக்கிய
நீங்கள் தான் என் உலகம்

உங்கள் அறிமுகம் இல்லாவிட்டால்
நான் ஒரு
சிரிப்பு சொர்க்கத்தை சந்தித்திருக்க முடியாது.

சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்
எதிர்பாராத விதமாய் காதலுக்கு
எமன் வருவான் என்பதை இருவருமே அறியவில்லை !!!
 
சலனம் : 11

 girl5.jpg
போய்த்தான் ஆகவேண்டுமா ?
பொடிப் பொடியாய் உதிர்ந்தபடி
கேட்டாள் சுடர்.

ஆறுவாரங்கள் தானே
அமெரிக்கப் பயணம்.

இரண்டு ஆண்டுகள் என்றதை மறுத்துவிட்டேன்
ஆறுவாரங்கள் என்பது கூட
எனக்கு
ஆறு வருடங்களாய் தான் தோன்றுகிறது.

உன் முகம் பார்க்காத நாட்கள்
எனக்கு விடிந்ததாகவே தெரிவதில்லை.

உன்னோடு பேசவில்லை என்றால்
என் உதடுகள் என்னோடு
கோபித்துக் கொள்கின்றன
நீ அலுவலகத்துக்கு வராத நாட்கள் மட்டும் என்
கடிகாரம் உறைந்துபோகிறது.

நண்பர்கள்
உனக்கு இருக்கிறார்கள் சுடர்
அவர்களோடும் நேரம் செலவிட
உனக்கு இது ஒரு சந்தர்ப்பம்

மறுக்க முடியாத அழைப்பு
ஆனாலும் நீ சொன்னால் மறுத்துவிடுவேன்.
சொல்லிவிட்டு முகம் பார்த்தான்.

மொத்த அலுவலகமும்
அழைப்பு வருமா என்று ஏங்கிக்கொண்டுருக்க
வந்த அழைப்பில்
வாடிப்போயிருந்தான் இனியன்.

இல்லை இனியன்
போய் வாருங்கள்.
பிரிவு காதலை வலுவாக்கும்.
உடல்கள் விலக விலக காதல் அடர்த்தியாகும்.
இது நமக்கு
பரிச்சயமில்லாத பரிசோதனைக்காலம்
பக்குவப் பட பழகிக்கொள்ளலாம்..
ஆறுதல் சொல்லிவிட்டு ஆகாயம் பார்த்தாள்.

அந்த நாள் வந்தது.
பெற்றோர் பெருமைப்பட்டார்கள்.
கிராமத்து சாலைகளில்
அப்பா தகவல் விதைத்துக் கொண்டுருந்தார்.

சகோதரர்களும் சகோதரிகளும்
சந்தோஷப் பட்டார்கள்
உறவினர்ப் படை விமானநிலையத்தை ஆக்ரமித்துக் கொண்டது
ஆனால்
இரண்டு உயிர்கள் மட்டும்
திரும்பி வரும் நாளை மட்டுமே
திரும்பத்திரும்ப நினைத்தார்கள்.

புது உலகம்
சாலைகளைப்
பனிக்குவியலுக்குள் புதைத்து வைத்திருந்தது அமெரிக்கா.

மேகம் கரைவதை மறந்து
உடைந்து விழுந்து கொண்டிருந்தது.

காற்று குளிர்சாதன அறைக்குள் உருவாக்கப்பட்டு
நாட்டுக்குள் அனுப்பப்படுவதுபோல்
உறையவைக்கும் குளிர்.

அவள் இருக்கும் இதயம் தவிர
உடலின் மற்ற பாகங்களின் மொத்த வெப்பத்தையும்
செதுக்கி எடுத்துச் சென்றுவிட்டது
நாட்டுக்குள் விரிக்கப்பட்டிருந்த பனிக்காற்று.

விலக விலக
காதல் வலிதாகும் என்பது உண்மைதான்.
ஆனால் அந்த வலி கொஞ்சம் அதிகமாய் தோன்றியது.

தினமும் காலையில்
தொலைபேசிக்குள் இசைகேட்டான்
இ-மெயிலுக்குள் இதயம் அனுப்பினான்
ஓநீ சுவாசிக்கும் காற்றின் மறுநுனியைத்தான்
நானும் சுவாசிக்கிறேன் ஓ
என்று கவிதை சொன்னான்
சிந்தனைகளில் அவள் மட்டுமே
சிறைபட்டுக் கிடந்தாள்.

அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்
இத்தனை ஆண்டு அம்மாவிடம் இருந்தேன்
அம்மா நினைவுகளையே
இவள் நினைவு ஓரங்கட்டிவிட்டதே
இது தான்
மாமியார் சண்டையின் முதல் படியா ?
சுடருக்குப் பிடிக்காததைச் செய்ததில்லை
அவளுக்காய் செய்ததெல்லாம்
இவனுக்கும் பிடித்திருந்தது.

அம்மாவுக்குப் பிடித்ததைச் செய்ததாய்
அவனுக்கு நினைவில்லை
ஆனால் அவன் செய்ததெல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது
தாய்ப்பாசம் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
 
நினைவுகளில் மூழ்கி மூழ்கி மூச்சடைத்துப் போனதாய்
மூச்சுவிட மறந்து யோசித்துக் கொண்டிருந்ததாய்
நாள்காட்டியை தினமும் நானூறுமுறை பார்ப்பதாய்
வார்த்தைக்கு வார்த்தை நேசத்தைக்கொட்டினாள் சுடர்

இவன் எதைச் செய்தாலும்
அவளுக்குப் பிடிக்குமா என்று யோசித்துச் செய்தான்.
நண்பர்கள் நூறுமுறை சொல்லியும் கேட்கவில்லை
இப்போது
புகை பிடிப்பவர்களைப்
பார்ப்பது கூட இல்லை.
அவளுக்காகச் செய்வதில் ஆனந்தம் இருந்தது !!!

அதோ இதோ என்று ஆறுவாரங்கள் முடிந்தே விட்டது.
இருவர் செல்களிலும்
சிறகுமுளைக்கத் துவங்கியது.

ஆறு வாரங்கள் பொறுத்தாகிவிட்டது
இந்த அரை வாரம் நகர மறுக்கிறதே

சலனம் : 12

girl2.jpg

அதுவும் நகர்ந்தது
விமான இருக்கையில்
இருக்கை வார்ப்பட்டையோடு
அவள் நினைவுகளியும் சேர்த்துக் கட்டினான்.

அவளுக்காக வாங்கியிருப்பவற்றை கொடுக்கும் போது
அவள் முகத்தைப் பார்க்கவேண்டும்.
ஒரு மழலைப் புன்னகை நிரந்தரமாய் நிறைந்திருக்கும்
அவள் உதடுகளைப் பார்க்கவேண்டும்
சிரிக்க மட்டுமே தெரிந்த அவள்
கண்களைப் பார்க்கவேண்டும்.

திடீரென்று விமானம் நடுங்க ஆரம்பித்தது
ஆகாயக் குளிர் அதன்
இறக்கைகளை உறைய வைத்துவிட்டதா ?
இல்லை !!!
ஆகாய அழுத்தம் அதன் போக்கை
சிதைக்கப் பார்க்கிறதாம்

ஒரே ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்கவேண்டும் எனும்
ஒரு சுயநல விண்ணப்பத்தோடு
கண்மூடினான்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது
பயணத்தின் சாலைகளில் பழுதுகள் நீங்கின

இரவின் கடைசித்துளியில் வீடுசேர்ந்து
விடியலின் முதல் துளியில்
அவள் வீட்டுக் கதவு தட்டினான்.

தூக்கம் தொலைத்து விழித்திருந்தாளா ?
வினாடியில் கதவுதிறக்க
தாமரை மலர் நடந்து வந்தது

இனியன்ன்ன்.
பாதங்களில் சக்கரம் கட்டியதாய்
பாய்ந்துவந்தவள் கட்டிக்கொண்டாள்.

அடடா
இதயப் பந்துக்குள் திடீர் தீ பாய்கிறதே.
விலக மறுத்து விரல்கள் கோர்த்து
உதடுகள் தேடி முத்தமிட்டாள்.

முத்தம்..
அது இரத்தத்தை உறையவும் வைக்கும்
உருகவும் வைக்கவும்.

இதயப் பள்ளத்தில்
வெள்ளைப் பூக்களை விளையவைக்கும்

இலக்கணப் பிழை செய்து
இலக்கியத்தை ஜெயிக்கும்

இது அதரங்களில் அரங்கேறும்
அகழ்வாராட்சி

முத்தமிடாதவன் மனசுக்குள்
மூங்கில்கள் குழலாவதில்லை

முத்தம் அது ஒரு இசை
கொடுத்தாலும் பெற்றாலும் ஒரே சுவை !!!
முத்தம் அது ஒரு கவிதை
எழுதுவதிலும் இன்பம் படிப்பதிலும் இன்பம்.

இருதிசை வீசிய
தென்றல்கள் இரண்டு
சந்தித்துக் கொண்ட சந்தோஷம் அவர்களுக்கு.

மீண்டும் நாட்கள் ராக்கெட் பயணத்தை துவங்கின
மாதங்கள் உருண்டபின்
சம்பிரதாய சடங்குகள்.
இருவீட்டிலும் விருந்து.

திருமண நாளை சீக்கிரம் பாருங்கள்.
என் வயதுப் பெண்கள்
குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள்
நீங்கள் இன்னும் 
என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இசையாய் சொன்னாள்

 சலனம் : 13

girl9.jpg
அவன் குரலின் மீது அவளுக்கு தீராத தாகம்.
அவன் பாடல் கேட்டு
அவள் தூங்கியிருக்கிறாள்

இன்னொருநாள்
அவன் குரல் கேட்க தூக்கத்தைத் துறந்திருக்கிறாள்.

காதலில் மட்டுமே
எதிர் துருவங்கள் ஒருபுள்ளியில் உற்பத்தியாகும்
பஞ்சும் நெருப்பும் இணைந்தே வளரும்

அந்த நாள் வந்தே விட்டது.
குமரிமண்ணின் கிராமம் தேடி
நாகரீக மக்கள் நடந்தார்கள்.

இனியனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
நூலில்லாப் பட்டம் போல பறந்தான்
ரோஜாவின்
இதழ்கள் பொறுக்கி புத்தகம் செய்து
மகரந்தம் கொண்டு கவிதை எழுதினான்.

சம்பிரதாயப் பேச்சுக்கள்
சங்கடமின்றி முடிந்தன.
திருமண நாளை முடிவுசெய்வது மட்டுமே
பேசப் பட்ட ஒரே பொருள் !!

காதல் மட்டுமே
சமுதாயக் கீறல்களை ஒட்டவைக்கும்
வரதட்சணைக் கவலைகளை விலக வைக்கும்.

திருமண நாள் நிச்சயமாகிவிட்டது.
இனியனின் எல்லைகள் வளர்ந்தன.
அவன் மகிழ்ச்சி
பசிபிக் கடல்போல ஆழமாய் அவதாரமெடுத்தது.

நண்பர்களிடம் சொன்னான்
திருமண மண்டபம் தேடினான்
உறவினர்களிடம் மகிழ்ச்சியை தெளித்தான்

எல்லாம் முடிந்து
கவலை என்பதை மறந்து போன ஒரு காலைப் பொழுதில்
அவன்
சுடரைத் தேடி சென்னை வந்தான்.

வழியில் எதிர்பட்ட நெருங்கிய நண்பன்
வித்யாசாகரிடம் விளக்கமாய் சொல்லமறுத்து
இருவரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டு
சுடரைத் தேடி ஓடினான்.

சுடர்ர்.
சந்தோசம் தானே ?
பொத்திவைத்த சந்தோஷச் சிறகுகள்
திடீரென வானம் கண்ட மகிழ்ச்சியில்
விரிந்தன அவனுக்கு.

அப்போது தான் அந்த எதிர்பாராத பதில்
அவளிடமிருந்து முளைத்தது

எனக்கு கல்யாணம் வேண்டாம் இனியன்
திருமணத்தை நினைத்தாலே
பயமாக இருக்கிறது !!!

சலனம் : 14

smoke.jpg

நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது .
திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பய விதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்

முதலில் அதை பொருட்படுத்தவில்லை !!!

உங்களைப் பார்க்க அம்மா வந்தபோது
உங்கள் வீட்டில் யாரும்
நாகரீக உடை அணியவில்லையாமே ?
அம்மா சொன்னாங்க

அதிச்சியாய் இருந்தது இனியனுக்கு.
சுடர்
நீ என்னைக் காதலிக்கிறாயா
இல்லை
என் மேல் பூசப் பட்ட சாயத்தைக் காதலிக்கிறாயா ?

அர்த்தங்களை விட
அடையாளங்கள் தான்
அதிகமாய் விலை போகிறதா ?

என் கிராம மக்கள்
சேரியில் சரிந்திருக்கும்
சாராயக் கடைகளில்
வாழ்க்கையைத் தேடுவார்கள்

அவர்களுக்கு
மதுக்கோப்பை வாங்க பணமும் இருப்பதில்லை
நாகரீக உணவருந்த நேரமும் இருப்பதில்லை

அவர்கள்
வயல்களில் வாழ்க்கையைத் தொலைப்பதால் தான்
நாம்
கணிப்பொறியில் கவிதை எழுத முடிகிறது.

உன்னை நான் கிராமத்து மண்ணில்
நாற்று நடச் சொல்லப் போவதில்லை

நீயும் நானும் நகரத்து ஓரத்தில்
மாத வாடகை கட்டிதான்
வாழ்க்கை நடத்தப் போகிறோம்

அவர்கள் நாகரீகமாக இல்லாதது தான்
உன் காதல் உருமாறக் காரணமா ?
கொஞ்சம் அதிர்ச்சி தொனிக்க கேட்டான்.

ஐயோ
அதெல்லாம் ஒன்றும் இல்லை
சத்தியமாக நான் அதை
குறையாகக் கருதவில்லை

அப்படியென்றால்
பெற்றோரைப் பிரிவதில் மனசு கனக்கிறதா ?
நண்பர்களை பிரிவோம் என்று
உள்மனது கவலைகொள்கிறதா ?
சுதந்திரச் சிறகுகள் வெட்டப்படுமோ
எனும் நிழல் யுத்தமா ?
குடும்ப வாழ்க்கை என்றதும்
பொறுப்புக்களை சுமக்க பயப்படுகிறாயா ??

அடுக்கடுக்காய் கேட்ட
அத்தனை கேள்விகளுக்கும்
இல்லை என்னும் பதில் மட்டுமே
அவளிடமிருந்து வந்தது.

புரியவில்லை
நண்பர்களிடம் ஓடினான்

இது திருமணம் என்றதும் மனதுக்குள் தோன்றும்
மனோதத்துவ மாற்றமா ?
அவள் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
அவள் மாற்றம் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையே
புலம்பினான்.

நண்பா,
உனக்குத் தான் எங்கள் காதலின் ஆழம் புரியும்
காதல் விதையாக இருந்த நாளிலிருந்து
நீ
எங்களுடன் இருக்கிறாய்

நான் என் உயிரையும் அவளையும்
இரண்டாகப் பார்க்கவில்லை
இரண்டறக் கலந்தபின் இல்லை என்கிறாள்
காரணம் கேள்

வித்யா சிரித்தான்
அவளுக்கு பயமா ?
தைரியத்தின் பிம்பமாய் தான்
நான் அவளைப் பார்க்கிறேன்.

உறுதியான உள்ளம் அவளுக்கு
நம்பிக்கை தான் வாழ்க்கையின் துடிப்பு
அதை நிறுத்திவிடாதே
நிச்சயமாக ஒத்துக் கொள்வாள்

 சலனம் : 15

girl10.jpg

தெரியவில்லை எனக்கு
அவள் அம்மாவிடம் பேசினேன்
ஆச்சரியப் பட்டார்கள்.
அப்பாவிடம் பேசினேன் அதிர்ச்சி அடைந்தார்கள்.
காரணம் புரியாமல் கலங்குகிறேன்.
அழுகை இதயத்தை
அடைக்க பேசினான் இனியன்.

கவலைப் படாதே
உன் காதலின் ஆழம் எனக்குத் தெரியும்
உண்மைக்காதல் உடைபடாது
உனக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்கிறேன்
கரம் பற்றி நம்பிக்கை விதைத்தான் வித்யா.

மீண்டும் மீண்டும் பேசினான்
என்னைச் சோதிக்காதே சுடர்
காரணம் இல்லாமல்
முடிவெடுப்பவளல்ல நீ.
உனக்கு கல்யாணமே பிடிக்கவில்லையா
இல்லை
என்னைப் பிடிக்கவில்லையா ?

உனக்கு இன்று இருக்கும்
எந்த ஒரு சுதந்திரமும் அடிமைப்படாது
நம்பிக்கைகொள் என் பிரியமே
என் மீதும்
நம் வாழ்க்கையின் மீதும்
அடைபட்ட மனதோடு பேசினான் இனியன்.

உங்களை எனக்கு பிடிக்கும்
ஆனால்
திருமணம் செய்யுமளவுக்கு பிடிக்கவில்லை

என்ன சொல்கிறாய் சுடர்
நீ தான் காதலிப்பதாய் சொன்னாய்
திருமணம் செய்ய சம்மதம் என்றாய்
வீட்டில் பேச துரிதப் படுத்தினாய்
ஏன் ?
திட்டமிட்டே என்னை பழிவாங்கவா ?
இல்லை
என் உணர்வுகளின் வலிமையை
உரசிப் பார்க்கிறாயா ?

மனிதனின்
தாங்கும் சக்தியை பரிசோதனை செய்கிறாயா ?
சுடர்
என்னை இருளச் செய்யாதே சுடர்.
இதயம் கனக்க பேசினான்.

என்ன சொல்கிறீர்கள் இனியன்
ஒரு வருடக் காதலில்
உயிர்நேசம் விளைந்துவிடாது.

என்
உணர்வுகள் மாறிவிட்டது
என் உணர்வுகளை மாற்றிக் கொள்ள
எனக்கு உரிமை இல்லையா ?
திருமணம் வேண்டாம் என்றால் விட்டு விடுங்களேன்.

என்ன சொல்கிறாய் சுடர்?
ஒரே ஒரு முறை சொல்லிவிடு
காரணம்.

உனக்கு பிடிக்காதது என்ன ?
நேற்று வரை என்னை உலகம் என்றாய்
இன்று என் துருவங்களைக் கூட
துருப்பிடிக்க வைத்துவிட்டாய்.

சொல்
காரணம் மட்டும் சொல்லி விடு.
பாறை சுமக்கும் பாரத்துடன் கேட்டான்.

சொல்லலாம் என்றால் வருத்தப் படுவீர்கள்
அதுதான் கவலையாய் இருக்கிறது

இப்போது நான்
சந்தோசப் படுகிறேன் என்கிறாயா ?

இன்று எனது பிறந்தநாள்.
ஆனால்
என் மனம் முழுவதும்
கவலைக் கற்கள் தான் குவிந்து கிடக்கின்றன

என் கால்கள் வேர் விட்டதாய் பூமியைவிட்டு
நகர மறுக்கின்றன.
என் சுவடுகள் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது..
என் நிழலின் நீளம் கூட குறைந்துவிட்டது
சொல்..
எதுவானாலும் சொல்
பொதிமாட்டு மனசோடு நடப்பது கடினம்
சொல்லிவிடு.
காதைத் தீட்டி அமைதியானான்.

சுடர் வாய் திறந்தாள்
நான்
நான்.வித்யாசாகரைக் காதலிக்கிறேன்.

 சலனம் : 16

girl5.jpg
இடி ஒன்று
இதயமையத்தைக் குறிவத்துத் தாக்கியதாய்
தோன்றியது அவனுக்கு

வானம் வெறிச்சோடிப் போயிருக்க
கண்களில் பெருமழை பெருக்கெடுத்தது

அருவி ஒன்று சூரியனை உருக்கி
தலைமேல் கொட்டியது போல்
சட்டென்று எரிந்தான் .

இதயத்தின் எல்லைகளெங்கும்
எரிமலைக் குழம்பு பீறிட்டுக் கிளம்பியது.

வார்த்தைகள் புதைபட்டுப் போக
கால்கள் நிலைதடுமாற
இதயத்துடிப்பு இருமைல் தூரம் கேட்க
மயக்கத்தின் முதல் நிலைதொட்டதாய் உணர்ந்தான்

வித்யாவிடம் சொல்லிவிட்டேன்
அவனும் ஒத்துக்கொண்டான்.
என்னை மன்னித்துவிடுங்கள்.

அவள் வார்த்தைகள்
ஏதோ ஏழ்கடல் தாண்டிய
தீவுக்குள்ளிருந்து வருவதாய்
தோன்றியது அவனுக்கு

பிறகு என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கவில்லை..

சலனம் : 17

girl8.jpg
எதையும் அவனால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை

காதல் மேல்
எனக்கு சந்தேகமில்லை
அதில்
உன் பிம்பம் மட்டுமே உருமாறி விழுந்தது

கவிதை எழுதினான்
டைரியின் பக்கங்களில் கண்ணீர் தெளித்தான்.

கவிதைக் காகிதத்தில்  கண் துடைத்தான்.
கவலைகளை கொட்ட கவிதை போல் சிறந்த
ஒரு வடிகால் இல்லை.

வலிகளை வார்த்தையில்
விளக்க அவனால் முடியவில்லை.

மாலை நேரம் வந்தால் கூடவே கண்னீரும் வந்துவிடுகிறதே
நேற்றுவரை என் கரம் கோர்த்து
மாலைகளைத் துரத்தியவள்
இன்று
என் நண்பனின் கரம் சேர்த்து என் எதிரில் சிரிக்கிறாள்.

நண்பா
நட்பின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை
மறுபரிசீலனை செய்யவைத்தாயே.

உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
உபயோகித்துக் கொண்டாயே.

விடியலின் முதல் நிமிடம் முதல்
கடைசிநிமிடம் வரை
கணிப்பொறியோடு கண்விழித்துக் கிடந்தான்.

காதல்
சொருகும் போது ரோஜா
உருவும் போது உதிரம் தோய்ந்த ஆணி

சிலுவைக்குக் கூட மூன்று ஆணிகள்
காதலுக்கு
அளிக்கப்படுவதெல்லாம் ஆணிகளே

வார்த்தைகளில் கூர்தீட்டி
வடுக்களை
எனில் தொடுத்தவளே

என்
சலனங்களின் சொந்தக்காரியே
இதோ என் மனம்
சலனமற்றுக் கிடக்கிறது
உன் நேசம் நிறம் மாறிவிட்டதால்

என் இதயத்தோட்டம்
அயலானின் அரிவாள்மனையில்
அறுவடையாகிறது

ஈரமணலில்
கோழிக்குஞ்சு கிளறிய நிலமாய்
என் மனசு

மௌனத்தில் கூட நிறைய வாசித்த நான்
இன்று
நினைவுகளால் மூச்சுத்திணறுகிறேன்

நிழலாய் வந்தால்
இருளில் கரைவாய் என்றுதான்
நினைவாய் வரமட்டுமே
உன்னை அனுமதித்தேன்.

இன்று நீ.
நினைவுகளில் , கனவுகளில் என்னுடன்
நிஜத்தில் நீ நிலம் மாறி விதைக்கப்பட்டாய்.

பேனாவும் விரலும் மறுக்கும் வரை
கவிதை எழுதினான்.

கவலைகளின் சாயங்களை
முதன் முதலாய் உணந்தான்.

ஏனோ தெரியவில்லை
அவள் மீது இம்மியளவும் கோபம் வரவில்லை.
நடந்ததெல்லாம் கனவாகக் கூடாதா என்று
கனவு கண்டான்.

என் சாலைகளெங்கும்
ஏன் பூவியாபாரிகள்
முட்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள் ?

அரளிப் பூக்கள்
 தங்களை ஏன்
ஆம்பல் என்று அறிமுகம் செய்கின்றன ?

நீ விலகிய நான்
ஓட்டை விழுந்த ஓசோன் போல
என்னாலேயே ஒதுக்கப் படுகிறேனே.

ஒரு மாறுதல் வேண்டும்
இதயம் கதறியது
தீக்குழியில் இருந்துகொண்டு
தாகம் தீர்க்க முடியாது

இன்னொரு முறை
அமெரிக்க வாய்ப்பு வராதா என்று வேண்டினான்.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு செய்தி
இருவேறு மனநிலையில் இருபொருள் சொல்கிறதே.
ஆறுவாரப் பயணத்திற்கே அலறியவன்
இன்று
வருடப் பயணம் வேண்டுமென்கிறான்.

 சலனம் : 18

girl5.jpg

நம்பிக்கை சிதைவது தான்
வாழ்வின் மிகப் பெரிய வேதனை

நண்பனும் காதலியும்
ஒருசேர விலாவில் ஈட்டி பாய்ச்சிய வேதனை !!!
நண்பா.

எதற்காக இந்த
விஷம புன்னகை ?

என் ரோஜாக்களைக்
களவாடியதற்கா ?

என் வானவில்லைக் கிழித்து
எனக்கே மலர்வளையம் நெய்ததற்கா ?

என் பூக்களை எரித்து
நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் நடத்தியதற்கா?

இல்லை
என் நதிகளை கடல்பாதையிலிருந்து கடத்தி
பாலைவனத்துகுப் பரிசளித்ததற்கா?

புரிந்துகொள்  நண்பனே

நீ
என் மேகத்திலிருந்து
நீர்த் துளிகளைத் திருடினாய்

எனக்கு இன்று
வண்ணங்களிலிருந்து வண்ணத்துப் பூச்சியை
வடித்தெடுக்கும் வலிமை கிடைத்திருக்கிறது.

உன் தலைக்குமேலும்
வல்லூறுகள் ஒர்நாள் வட்டமிடும்
நீ
சாகவில்லை என்பதற்கு அப்போது
சான்று தேவைப்படும்.

கவிதை எழுதிய மறுநாள் அவனுக்கு
ஆறுதல் செய்தி.
ஓராண்டு அமெரிக்கப் பயணம்.

இட மாற்றம் என்பது இல்லையென்றால்
மனமாற்றம் மலராது

மாதங்கள் உருண்டோ டின.
நினைவுகளின் பிடியிலிருந்து அவன் மெல்ல மெல்ல
விலகிக் கொண்டிருந்த ஒர் பொழுதில்
நண்பன் சொன்னான்
சுடருக்குக் கல்யாணமாம்.

சலனம் : 19

girl8.jpg

சுருக்கென மனதுக்குள் கூர் ஈட்டி பாய்ந்தது.
மனசு மட்டும்
கண்களுக்குள் ஈரமாய் கவிதை எழுதியது.

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து மட்கிப் போய்விட்டன.

தொடுவானம் தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம் உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின் வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்

எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

கவிதை வடிய
கண்களை மூடினான்

அவன் இதயத்துக்குள் ஓர்
இதிகாசம் இறக்கத் துவங்கியிருந்தது.
இன்னொரு வரலாறு படைக்க
அவன் விரல்கள் விழித்திருந்தன.

 —

நன்றி.

நோவாவின் க(வி)தை

noah.jpg

ஆதாமின் பத்தாவது
தலைமுறையின்
தலை மகன் நோவா !

அந்தக் காலகட்ட
மனிதர்கள்
ஆயிரம் ஆண்டுகள்
ஆயுள் கொண்டிருந்தனர்.

பின்
மனிதர் பெருகுதல்
அதிகரித்தபின்,
அவர்கள்
தீய வழிகளை அதிகமாய்
தீண்டினர்.

பார்த்த பெண்களை எல்லாம்
மனைவியராய்
ஆக்கினர்.

கடவுளின் கோபம்,
அவர்களின் ஆயுளை
நூற்று இருபதாய் சுருக்கியது.

தன் திட்டங்களை எல்லாம்
மனிதன்
காலில் மிதித்து
புதைத்ததை எண்ணி
கடவுள் கலங்கினார்.

எங்கும்
தீமையின் ஆறுகள்
திமிறி ஓடுவதைக் கண்டு
துயரம் அடைந்தார்.

இனிமேல்
இந்த மனித குலமே
மரணிக்க வேண்டும் என்று
தீர்மானித்தார்.

அத்தனை உயிர்களையும்
அழிக்கும் கோபம்
ஆண்டவருக்குள்
மையம் கொண்டது.

பூமியின் மீது
நல்லவராய் இருந்த
நோவாவை ஆண்டவர்
கருணைக் கண் நோக்கினார்.

நோவாவை நோக்கி,
போ,
முந்நூறு முழம் நீளம்
ஐம்மது முழம் அகலம்
முப்பது முழம் உயரமாய்
கோபர் மரக்
கொம்புகளைக் கொண்டு
ஓர் பேழைசெய்.

பேழையின்
உள்ளும் புறமும்
தார் பூசி சீராக்கு.

உள்ளுக்குள் மூன்றடுக்கு
உண்டாக்கு,
ஒரு பக்கம் மட்டுமே
கதவை வை.

நீ, உன் மனைவி,
உன் புதல்வர் அவர்கள் மனைவியர்,
ஆண் பெண்ணாய்
எடுக்கப் பட்ட எல்லா
உயிரினப் பிணைகள்,
உணவுகள் இவற்றோடு
உள்ளுக்குள் செல்.

என்
கோபத்தின் கொந்தளிப்பை
அவிழும் மேகம்
அறிவிக்கும்

வானம் சரிக்கும் நீரில்
பூமி செரிக்கும்.
பெருமழை இப் பூமியை
விழுங்கும்.

தீமை செய்த
இத் தலைமுறை
அழியட்டும் என்றார்.
noah.jpgநோவா
கீழ்ப்படிந்தார்

ஆண்டவர்
ஓர்
பெருமழையை
வருவித்தார்.

பூமியின் தலையை
அது
தனக்குள் அமிழ்த்தியது.

மலைகளும்
கானகமும்
தண்ணீரில் மூழ்கின.

மூச்சு விடும்
ஜீவராசிகள் எல்லாம்
நாசிகளில் நீர் நிறைய
அத்தனையும் மாண்டன.

சதையுள்ள அத்தனையும்
செத்து மடிந்தன.

நோவாவின் பேழை மட்டும்
தண்ணீரில்
மெல்ல மெல்ல மிதந்து
அலைந்தது.

நோவாவுக்கு
அப்போது அறுநூறு வயது.

நாற்பது நாளைய
பெருமழை,
நூற்றைம்பது நாளைய
வெள்ளப் பெருக்கை
உருவாக்கியது.

பின் மழை மெல்ல ஓய்ந்தது.
மழையின் மதகுகள்
அடைக்கப் பட்டன.

ஏழு மாதங்கள்
கழிந்தபின்,
பேழை அராரத்து மலைத்தொடரில்
மெல்ல மெல்ல
தங்கியது.

பத்தாம் மாதத்தில்
மலைகளின் தலைகள்
மெல்ல
வெள்ளத்தை விட்டு
வெளியே வந்தன.

நாற்பது நாளுக்குப் பின்
நோவா,
சாரளத்தை சமீபித்து
ஓர்
காகத்தை வெளியே அனுப்பினார்.

அது
போவதும் வருவதுமாய்
இருந்ததைக் கண்டு
தண்ணீர்
காயவில்லை என்று
தீர்மானித்தார்.

நிலப்பரப்பு வெள்ளம்
வடிந்து விட்டதா என்றறிய
ஓர்
புறாவை நோவா
தூதனுப்பினார்.

மாலையில் வந்த புறா
தன்
அலகுக்குள்
ஓர்
ஒலிவ கிளையை
எடுத்து வந்தது.

பூமி உலர்ந்ததை
நோவா
புரிந்து கொண்டார்.

இன்னும் ஓர்
ஏழு நாளுக்குப் பின்
அவர்
மீண்டுமொரு புறாவை
பூமிக்கு அனுப்பினார்.

அது,
திரும்பவும் பேழைக்கு
திரும்பவேயில்லை.

மீண்டும் இரண்டு மாதங்கள்
பேழைக்குள் வாழ்ந்தபின்
நோவா
கூரை விலக்கி
தரை பார்த்தார்.

பூமி,
உலர்ந்து போய் இருந்தது.

ஆண்டவர் அப்போது
அவர்களை
வெளியே வரச் செய்தார்.

பின் ஆண்டவர்
நோவாவிடம்,
உன் சந்ததியை நான்
கடல் மணலைப் போல
பெருகச் செய்வேன்

பூமியின் அத்தனை
பிரதேசங்களும் வளங்களும்
உங்கள்
கட்டளைகளுக்குள் கிடக்கும்.

தாவரங்களும்
விலங்குகளும் இனிமேல்
உங்கள்
உரிமையாகும்.

யாருடைய
இரத்தம் சிந்தலுக்கும்
நீங்கள் காரணமாக வேண்டாம்,
சிந்த வைப்பவன் தானும்
இரத்தம் சிந்துவான்.

வெள்ளப் பெருக்கு
இனிமேல்
பூமையைப் புதைக்காது.

மனித சிந்தனைகள்
சிறு வயதிலிருந்தே
அவனுள்
தீயவற்றை திணிக்கிறது.

இனிமேல்,
என் கோபம் பூமியை அழிக்காது.

மண்ணுலகு
இருக்கும் வரைக்கும்,
விதைக்கும் நாளும்
அறுவடைக் காலமும்,
பகலும், இரவும்
வருவது தவறாது.

இனி பூமி
பூக்களின் தேசமாகும்,
அங்கே
என் அக்கினிப் பார்வை
அழிவை தராது என்றார்.

நோவாவின் தலைமுறை
உலகமெங்கும்
தன் கிளைகளை
வளர விட்டுப்படர்ந்தது.

நோவா
தொள்ளாயிரத்து ஐம்பதில்
ஆண்டவர் அடி சேர்ந்தார்.

ஆதாம் க(வி)தை

வெறுமையிலிருந்து
உலகைப் படைக்கிறார்
கடவுள்.

உருவமற்ற
ஏதும் பருவமற்ற
வெற்றிட இருள் கிடங்காய்
பூமி கிடந்தது.

தண்ணீரின் மேல்
அசைவாடிக் கொண்டிருந்தது
ஆண்டவரின் ஆவி.

கடவுள்
‘ஓளி தோன்றுக’ என்றார்.
இரவின்
கர்ப்பத்தைக் கீறி
சட்டென்று எங்கும்
வெளிச்சக் கீற்றுகள்
விளைந்தன.

ஒளி,
நல்லதென்று கண்டார்
கடவுள்.

ஒளியையும் இரவையும்
இரண்டாய் உடைத்து
அதற்கு
இரு பெயரிட்டார்.
பகல் – இரவு.
அங்கே
முதல் நாள் முடிவுற்றது.

நீர்த்திரை
நடுவே வானம் வளரட்டும்.
அது
நீரிலிருந்து நீரைப் பிரிக்கட்டும்
என்றார் கடவுள்.

அப்படி,
பூமியின் முகத்திலும்,
வானத்தின் முதுகிலுமாய்
தண்ணீர்
இரண்டாய் பிளவுற்று முடிந்தபோது
இரண்டாம் நாள்
நிறைவுற்றிருந்தது.

வானுக்கு விண்ணுலகம் என்றும்
பூமிக்கு
மண்ணுலகம் என்றும்
நாமம் இட்டார் நாதன்.

மண்ணின் நீரெல்லால்
ஓரிடம் கூடி
உலர்ந்த தரை
உருவாடட்டும் என்றார்.
உருவாயிற்று.

தரைக்கு நிலமென்றும்
நீருக்குக் கடலென்றும்
பெயர் சூட்டி
பகிழ்ந்தார் கடவுள்.

அப்போது
மூன்றாம் நாள் முடிவுற்றது.

பகலை ஆள
பகலவனும்,
இரவை ஆள
நிலவுமாக,
இரு பெரும் ஒளிக் கோளங்களை
உருவாக்கினார் கடவுள்.

காலங்களை
கணக்கெடுக்கும் கருவியாய்
அது
பயன்படட்டும் என்றார்.

நல்லதென்று அவற்நறைக்
கண்டபோது
நான்காம் நாள் நிறைவுற்றது.

திரளான உயிர்கள்
உருவாகட்டும் கடலில்,
சிறகுள்ள பறவைகள்
தோன்றி பறக்கட்டும் வானில்
என்று
உயிரினங்களை உருவாக்கினார்.

ஐந்தாம் நாள்
அப்பணியில் அடங்கியது.

ஆறாம் நாள்,
அத்தனை விலங்குகளும்
ஊர்வன இனங்கள் யாவும்
உருவாகட்டும் என்றார்.
உருவாயிற்று.

பின்,
மனிதனை என்
சாயலில் செதுக்குவேன்.
பூமியின் அத்தனையையும்
அவன்
ஆளுகைக்குள் அடக்குவான்.

அனைத்து உயிரினங்கள்
தாவரங்கள் எல்லாம்
அவனுக்கு
உணவாய் அளிப்பேன் என்றார்.

அவ்வாறே,
மண்ணுலகின் மண்ணெடுத்து
ஓர்
மனித உருவம் வனைந்து
தன்
மூச்சுக் காற்றை ஊதி
சுவாசம் பகர்ந்தார் பரமன்.

மண்ணின் உருவம்
மனிதனாய் ஆனது.
ஒரு
சகாப்தத்தின் ஆணிவேர்
அங்கே ஆரம்பமானது.

மனிதனை கடவுள்
அத்தனை வளங்களும்
மொத்தமாய் உள்ள
ஏதேன் தோட்டத்தில்
அவனை வைத்தார்.

ஏழாம் நாள்
படைப்பின் பணியை
முடித்த திருப்தியில்
ஓய்வு எடுத்தார்.

பூமியின் ஆடையாய்
மூடுபனி மட்டுமே
முளைத்திருந்தது அப்போது.

இன்னும்
மழை தன்
முதல் பிரசவத்தை
நடத்தவில்லை.

தன் முதல் மனிதனுக்கு
ண்டவர்
ஆதாம் என்று பெயரிட்டார்.

ஏதேனில் அத்தனை
ஏற்றங்களையும் அவனுக்காய்
ஏற்படுத்தி,
ஒரு மரத்தை மட்டும்
தடை விதித்தார்.

அதை உண்டால்
நீ
சாகவே சாவாய் என்று
முதல் எச்சரிக்கையை
விடுத்தார்.

அதுவே
மனுக்குலத்தின் மீது
விடுக்கப் பட்ட
முதல் எச்சரிக்கை.

அதுவே
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட
முதல் பணி.

அதுவே
நகர்த்தி வைக்கப்பட்ட
முதல் நம்பிக்கை.

விலங்குகள்
பறவைகள் அனைத்துக்கும்
தாம்
இட்ட பெயரே
சொந்தப் பெயராயிற்று.

அப்படி,
அத்தனை உயிர்களுக்கும்
தாம்
முதல் தந்தையானான்.

ஆனால்,
தனக்குச் சரியான
துணை ஒன்றும் அவனுக்கு
தட்டுப் படவில்லை.

தன் சாயலை
எந்த பறவையும்,
எந்த விலங்கும்
சார்ந்திருக்கவில்லை.

கடவுள்,
அவனுக்கோர்
துணை செய்ய திட்டமிட்டார்.

அவன் கண்களின் கீழ்
ஆழ் உறக்கம்
ஒன்று
தோன்றச் செய்து,

பின்
அவன் விலா எலும்பொன்றை
உருவி அதை
பெண்ணாய் படைத்து
துணையாய் தந்தார்.

ஆணிலிருந்து
பிறந்ததால் அவள்,
பெண் எனப் பட்டாள்.

ஆண்டவர் அவளை
தாமுக்கு
துணையாய் அளித்தார்.

காலெலும்பை எடுத்தோ,
தோளெலும்போ எடுத்து
பெண்ணைப் படைக்காமல்,
இருவரும்
சமமாய் இருக்கக் கருதி
விலா எலும்பை தேர்ந்தெடுத்தார்
கடவுள்.

இருவருமே
நிர்வாணத்தை அணிந்திருந்தனர்
ஆனால்
அவர்கள்
வெட்கத்தை அறிந்திருக்கவில்லை.

சூழ்ச்சிக்கார பாம்பு
மெல்ல
ஓர் நாள் பெண்ணைச் சந்தித்தது.

விலக்கப்பட்ட மரத்தின்
கனியைத் தின் என்று
விஷ ஆலோசனை அளித்தது.

பெண்ணோ,
அது விலக்கப்பட்ட கனி
தொடுதல் தகாது என்றாள்.

பாம்போ,
நீ ஏதும் அறியாதவள்,
அது
சுவைகளின் சிகரம்,
அழகின் ஆதாரம்.

அக்கனி தீக்கனி அல்ல
அதை உண்டால்
நீ
கடவுளைப் போல் ஆவாய்.

ஏமாந்த பெண்,
அதைத் தின்று,
கணவனுக்கும் கொடுத்து
தின்னச் சொன்னாள்.

பாம்பின் திட்டம்
பலித்து விட்டது.

முதல் நம்பிக்கைத் துரோகம்,
முதல் வாக்கு மீறல்,
முதல்
மனித சிந்தனை அங்கே
நடந்து முடிந்தது.

அப்போது
வெட்கம் அவர்களை
வட்டமிட்டது.
முதன் முதலாய்
நிர்வாணம் என்ன என்பது
நிர்ணயமானது.

இலைகளை அடுக்கி
ஆடை உடுத்தினர்.

ஆண்டவர் வரும்
ஓசை கேட்டதும்
மரங்களின் முதுகில்
மறைந்தனர்.

ஆண்டவர்,
மனிதனை கூப்பிட்டு
‘நீ எங்கே இருக்கிறாய் ?’
என்று கேட்க,

எனக்கு
கூச்சமாய் இருக்கிறது.
நான்
வெட்கத்தின் வெளிச்சத்தில்
மறைவாய் இருக்கிறேன்
என்றான்.

தன்
கட்டளையின் கதவுகள்
உடைக்கப் பட்டதை
கடவுள் அறிந்து சினந்தார்.

நான் விலக்கியதை
நீ புசித்தாயா ?
யார் உனக்கு
அந்த சிந்தனை தந்தது ?
கடவுள் கர்ஜித்தார்.

நீர் தந்த பெண்
என்னை
உண்ணச் செய்தாள்.

பெண்ணோ,
ஆண்டவரே
பாம்பு என்னை
பாடாய்ப் படுத்திற்று என்றாள்.

குற்றத்தை
ஏற்றுக் கொள்ளாமல்
பிறர் தோளில் திணிக்கும்
ஓர்
மன நிலை
ஆதாம் காலத்திலேயே
அரங்கேறிவிட்டது.

பரமனின் பார்வை
பாம்பை எரித்தது.

நீ,
அற்பப் பிராணியாய்
அறியப்படுவாய்,
தவழ்ந்து தவழ்ந்தே வாழ்வாய்.
புழுதிக் கிடையில்
ஊர்ந்து வருந்துவாய் என்றார்.

பெண்ணைப் பார்த்து,
உன்
பிரசவ வலியை பெரிதாக்குவேன்.
ஆண் உன்னை ஆள
ஆணையிடுகிறேன் என்றார்.

மனிதனைப் பார்த்து,
என்
கட்டளையை நீ
விட்டு விட்டாய்.

நிலம் உன்னால் பாழடையும்.
உன்
வியர்வை விழ உழை !
அப்போது தான்
உனக்கு உணவு வழங்கப் படும்.

நீ
மண்ணாய் இருக்கிறாய்
மண்ணுக்கே திரும்புவாய்.

போ,
ஏதேனுக்கு வெளியே
பாழ் வெளியை
நீ
ஆழ உழுது ஆகாரம் தேடு.
என்று அனுப்பினார்.

ஆதாம், பெண்ணை
ஏவாள் என்றழைத்து
ஏதேனை விட்டு வெளியேறினான்.

ஆதாமும் ஏவாளும்
கூடி வாழ்ந்தனர்.
காயீன் என்னும் குமாரனை
ஏவாள்
ஈன்றெடுத்தாள்.

பின்
ஆபேல் என்னும் மகனை
பெற்றாள்.

காயீன்,
நிலத்தில் உழைக்கும்
பணிசெய்தான்.

ஆபேல்
ஆடுகளை மேய்க்கும்
ஆயனானான்.

இருவரும் ஒருநாள்
ஆண்டவரிடம்
காணிக்கை படைக்க
காத்து நின்றனர்.

ஆபேலின் கரத்தில்
கொழுத்த ஓர் ஆடு,
காயீன் பக்கமோ
உழுத்த சில காய்கறிகள்.

பேலின் காணிக்கை
ஆண்டவரால்
ஆனந்திக்கப் பட்டு,
காயீன்
நிராகரிக்கப் பட்டான்.

காயீனை நோக்கிய கடவுள்
உன் காணிக்கை
உன்னதமானதாய் இருக்கட்டும்.
என்றார்.

கோபத்தின் கடலில்
காயீன்
எரிந்தான்.

ஒரு நாள்
ஆபேலை அழைத்துக் கொண்டு
நிலத்துக்குச் சென்றான்.

பழி வேகம்
அவன் மனம் முழுதும்
படர்ந்து வளர்ந்தது.

அவன்
ஆபேலின் மேல் பாய்ந்து
ஆபேலைக் கொன்றான்.

முதல் கொலை
அங்கே
அரங்கேறியது.

நல்ல இதயம் கொண்ட
மனிதனுக்கு
சோதனைகள்
ஆதாம் காலத்திலேயே
ஆரம்பமாகி விட்டது !

ஆண்டவர்
காயீனை அழைத்து,
‘ஆபேல் எங்கே ?’ என்றார்.

காயீனோ,
நான் என்ன அவனுக்கு
காவலாளியா ?
அறியேன் ஆபேல் இருக்குமிடம்
என்றான்.

கடவுளோ,
யாரிடம் மறைக்கிறாய்
நீ.
ஆபேலின் இரத்தம்
இதோ
என்னை நோக்கி கதறுகிறது.

மொத்த உலகமும்
என் கண்களுக்கு கீழ்
விரிந்து கிடக்க
நீ
மறைக்க முயல்வது
மதியீனம் அல்லவா ?

போ,
நாடோ டியாய் அலை.
இன் இங்கே
உனக்கு அனுமதி இல்லை
என்றார்.

ஆதாம் பரம்பரை
தழைக்கலாயிற்று.

ஆதாம்
தொள்ளாயிரத்து
முப்பது ண்டுகள் வாழ்ந்தார்.
0