தாவீது மன்னனின் சலனம்

king-david-and-bathsheba
ஒரு நாள் மாலைப் பொழுது, தாவீது குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். மெல்லிய குளிர்ந்த காற்று அவருடை ஈர மேனியைத் தொட்டுச் செல்ல மிகவும் உற்சாகமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு வீட்டருகே ஒரு இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைத் தாவீது பார்த்தார். அவளுடைய கொள்ளை அழகு தாவீதை மொத்தமாய்க் கொள்ளையடித்து விட்டது. இனிமையான மாலை வேளையும், சுகமான காற்றும் கொடுக்கும் உற்சாகத்தோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று தாவீது தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, வைத்த கண் வாங்காமல் அந்தப் பெண் குளிப்பதையே பார்த்துக் கொண்டே நின்றார். அவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

‘சொல்லுங்கள் அரசே….’, பணியாளன் ஒருவன் ஓடி வந்து பவ்யமானான்.

‘அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை என் அந்தப் புரத்துக்கு வரச் சொல்’ மன்னன் ஆணையிட்டான்.

‘அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் உரியா என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

‘நான் விரும்பும் பெண் யாருடைய மனைவியாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று அவள் என்னோடு மஞ்சத்தில் படுக்கவேண்டும்’ தாவீது அழுத்தமாய்ச் சொல்ல பணியாளன் அகன்றான்.

அரசனின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது ? பத்சேபா அரண்மனை அந்தப் புரத்துக்கு வரவழைக்கப் பட்டாள். அங்கே தாவீது அவளுடன் உறவு கொண்டார். மன்னனின் ஆசைக்கு மறுப்புச் சொல்ல இயலாத பத்சாபா உடைந்த மனதோடு ஏதும் பேசாமல் தன்னுடைய இல்லம் சென்றாள். பத்சேபாவின் கணவன் உரியா யோவாபு என்னும் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான். அரசின் மேலும், அரசர் மேலும் மிகவும் மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார் அவர்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன்,
காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.
உரியா அதை அப்படியே யோபாவுவின் கைகளில் கொடுத்தான்.

யோபாவு அதை வாசித்துப் பார்த்தார். ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. அவனை எதிரிகள் கொல்லட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் பணிவுடன் உரியா நின்றுகொண்டிருந்தான்.

அமலேக்கியரோடு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

தாவீதின் படை மீண்டும் அமலேக்கியரை அழிப்பதற்காகப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாகவேண்டும்’  மன்னன் தனக்கிட்டிருந்த ஆணை அவனுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது.

எல்லோரும் அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்
யோபாவு உரியாவை அழைத்தான்.

‘உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்’ யோபாவு சொன்னார்.

‘சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’ உரியா பணிவானான்.

‘நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

‘மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்’ உரியா கூறினான்.

‘கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’ யோபாவு சொன்னான்.

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா மகிழ்ச்சியுடன் தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கிப் புறப்பட்டான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா கலங்கிய விழிகளோடு தாவீது மன்னனின் முன்னிலையில் வந்து நின்றாள்.

தாவீது அவளிடம் ‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவே… இனிமேல் நீ எனக்கு மனைவியாகி என் அந்தப்புரத்தில் இரு’ என்றார். பத்சேபா மறுத்துப் பேசும் உரிமையற்றவள். மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி அவருடன் வாழ்ந்து ஒரு மகனுக்கும் தாயானாள்.

தாவீதின் இந்தச் செயலைக் கண்ட கடவுள் கோபம் கொண்டார். அவர் நாத்தான் என்னும் இறைவாக்கினரை தாவீதின் அரண்மனைக்கு அனுப்பினார்.
நாத்தான் தாவீது மன்னனின் முன் வந்து நின்றார்.

‘அரசே வணக்கம்…. நீங்கள் நீடூழி வாழவேண்டும்’ நாத்தான் வாழ்த்தினான்.

தாவீது மகிழ்ந்தார். ‘சொல்லுங்கள் நாத்தான்… தங்கள் வருகையின் நோக்கம் என்னவோ ?’ தாவீது கேட்டார்.

‘அரசே நான் ஒரு வழக்கோடு வந்திருக்கிறேன்… ‘ நாத்தான் சொன்னான்.

‘வழக்கோடு வருவது தானே உங்கள் வழக்கம். சொல்லுங்கள். உங்கள் வழக்கு எதுவானாலும் தீர்த்து வைப்பேன்’ தாவீது உறுதியளித்தார்.

‘அரசே… ஒரு நகரில் ஒரு செல்வந்தனும், ஒரு வறியவனும் வாழ்ந்து வந்தார்கள். செல்வந்தனிடம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் நிறைந்திருந்தன. அவனுக்குத் தேவையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அந்த ஏழையிடமோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் மிகவும் அன்பாக நேசித்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை தன்னுடன் அணைத்துக் கொண்டு, தான் உண்ணும் உணவில் முதல் தரமானதை அதற்கும் அளித்து அதனோடு விளையாடி மகிழ்ந்திருந்தான். அந்த ஆட்டுக்குட்டியும் தன் எஜமானனிடம் ஒரு நண்பனைப் போல மிகவும் அன்புடன் இருந்தது… ஒரு நாள் அந்த செல்வந்தனைத் தேடி ஒரு விருந்தாளி வந்தான். அந்த செல்வந்தனோ, தன்னுடைய மந்தைகளை விட்டு விட்டு, அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்துக் கொன்று சமைத்து விட்டான்….’ நாத்தான் நிறுத்தினார்.

தாவீதின் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘என்னுடைய ஆட்சியில் இத்தனை பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறானா ? யாரவன் ? இப்போதே வெட்டிக் கொன்று விடுகிறேன்… ‘ தாவீது சினந்தான்.

‘அது நீர் தான் மன்னா….’ நாத்தான் அரசனின் முன் நேராக நின்று கொண்டு தன்னுடைய ஆட்காட்டி விரலை தாவீதின் முகத்துக்கு நேராக நீட்டினார்.

தாவீது திடுக்கிட்டார். ‘ என்ன… நானா ? நான் எப்போது அப்படி நடந்து கொண்டேன்’ தாவீது கேட்டார்.

‘புரியவில்லையா மன்னா ? உமக்கு எத்தனையோ மனைவிகள் இருக்க, ஒரு ஏழை உரியாவின் மனைவியை நீ கவர்ந்து கொள்ளவில்லையா ? அவனை சதித்திட்டம் தீட்டிக் கொன்று விடவில்லையா ? …’ நாத்தான் தொடர்ந்தார்.

தாவீது திகைத்துப் போய் நின்றார்.

‘உம்முடைய இந்த செயலினால் கடவுள் மிகவும் கோபமடைந்து விட்டார். உன் மீது அவர் எத்தனை அன்பு வைத்திருந்தார். நீ நடத்திய அனைத்து போர்களிலும் வென்றாயே ! உன் வேண்டுதல்கள் ஏதும் நிராகரிக்கப் படவில்லையே ! ஒரு ஆடு மேய்ப்பவன் என்னும் நிலையிலிருந்து அரசன் என்னும் இருக்கைக்கு உன்னை அழைத்து வந்தது அவர் தானே… அவருக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கிறாயே… தவறில்லையா ?’ நாத்தான் தைரியமாய் பேசினார்.

தாவீது தம்முடைய தவறை உணர்ந்தார். உடனே மண்டியிட்டு அழுதார். ‘கடவுளே… என்னுடைய அறிவீனத்தினாலும், பலவீனத்தினாலும் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னியும்’ என்று கதறினார்.

தாவீது மனம் திருந்தியதை அறிந்த கடவுள் நாத்தான் வழியாக தாவீதிடம் மீண்டும் பேசினார்.
‘அரசே… கடவுள் இன்னும் உங்களை மிகவும் அன்பு செய்கிறார். ஆனால் நீர் செய்த தவறுக்குத் தண்டனையாக உமக்கும் பத்சேபாவுக்கும் பிறக்கும் முதல் மகன் இறந்து போவான்’.

இந்த வார்த்தைகளைக் கேட்ட தாவீது இன்னும் அதிகமாக வருந்தினான். தன் தவறினால் பத்சேபாவும் வருத்தப் படுவாளே என்றெண்ணி அழுதார்.

பத்சேபாவின் பிரசவ காலம் நெருங்கியது. தாவீது தொடர்ந்து ஆண்டவரிடம் தன் மகனை மீட்குமாறு வேண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் கடவுளின் தீர்ப்பு மாறவில்லை.

குழந்தை பிறந்தது ! பிறந்த மறுதினமே நோய்வாய்ப் பட்டது ! ஏழாம் நாளில் இறந்துபோனது.

தாவீது மனம் திருந்தினார். இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். கடவுளும் அவரை ஆசீர்வதித்து அவருக்கு இரண்டாவதாய் ஒரு மகனைக் கொடுத்தார். அந்தக் குழந்தைதான் ஞானத்தின் இருப்பிடமாய் பிற்காலத்தில் விளங்கிய சாலமோன்.

பொருந்தாக் காதல் பெரும் தீது !

22j
இஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம்.
அப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள்.

தாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தாமாரின் மீது ஆசைப்பட்டான். தன்னுடைய தங்கை என்று தெரிந்திருந்தும் அவள் மீது கொண்ட மோகத்தை அவனால் நிறுத்தி வைக்க முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகளில் அவன் தாமாரின் நினைவில் புரண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்னும் நினைப்பிலேயே அவன் நோயுற்றான்.

ஒரு நாள், அம்மோனைக் காண அவனுடைய நண்பன் யோனத்தாபு வந்தான்.

‘இளவரசே… என்னவாயிற்று உடம்புக்கு ? ‘ யோனத்தாபு கேட்டான்.

‘மனசு சரியில்லாததால் உடம்பும் வாடிவிட்டது… ‘ அம்மோன் சொன்னான்.

‘இளவரசருக்கே மனசு சரியில்லையா ? என்ன சொல்கிறீர்கள் ? மனசில் இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கள். எந்தக் குழப்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு.  உங்கள் கலக்கத்தைச் சொல்லுங்கள், அதைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்வேன்’

‘நான் ஒரு பெண்ணை அடைய வேண்டும். ஆனால் அது எப்படியென்று தான் தெரியவில்லை’ அம்மோன் கூறினான்.

‘இவ்வளவு தானா விஷயம். நீர் தான் இளவரசராயிற்றே. எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை அறைக்கு அழையுங்கள். இதில் என்ன சிக்கல் ? இதற்கு ஏன் மனவருத்தம் ?’ நண்பன் கேட்டான்.

‘இல்லை… அந்தப் பெண்ணை நான் படுக்கைக்கு அழைக்க முடியாத நிலை’

‘புரியவில்லையே !!’

‘நான் விரும்புவது தாமாரை. அவள் எனக்குத் தங்கை முறை. ஆனால் அவளை அடையவில்லையெனில் நான் செத்து விடுவேன் போலிருக்கிறது’ அம்மோன் உண்மையைச் சொன்னான்.

‘ஓ… அதுதான் விஷயமா ?’ என்று இழுத்த யோனத்தாபு சிறிது நேரம் யோசித்தான்.
‘ம்ம்… நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறீர்களா ?’

‘தாமாரை அடையவேண்டும். அதற்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இதற்காக அவமானப் பட நேர்ந்தால் கூடக் கவலையில்லை’ அம்மோன் சொன்னான்.

‘அந்த அளவுக்கு நீங்கள் தாமார் மீது ஆசைப்படுகிறீர்களா ? சரி..ஒன்று செய்யுங்கள். நீங்கள் உடம்பு சரியில்லாதது போல நடியுங்கள். போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உம்முடைய தந்தை உம்மைக் காண வருவார். அவரிடம், எனக்கு உடம்பு சரியில்லை, தாமாரை அனுப்பி கொஞ்சம் உணவு தயாரிக்கச் சொல்லுங்கள். தங்கை கையால் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ நண்பன் திட்டம் தயாரித்துக் கொடுத்தான்.

அம்மோனுக்கும் அந்தத் திட்டம் பலிக்கும் போல தெரிந்தது. ஒத்துக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் மிகவும் நோயுற்றவர் போல நடிக்க தாவீது அவரைக் காண வந்தார்.

‘மகனே… என்னவாயிற்று உனக்கு ? படுக்கையிலேயே கிடக்கிறாயே’ தாவீது கேட்டார்.

‘உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது. நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பாசத்துக்குரிய யாராவது அருகில் இருக்க வேண்டும் போல இருக்கிறது. தாமாரை அனுப்புவீர்களா ? அவள் கையால் கொஞ்சம் சாப்பிடவேண்டும்’ அம்மோன் நடித்தான்.

தாவீதிற்கு அம்மானின் சூழ்ச்சி புரியவில்லை. ‘ தங்கையை அனுப்புவது தானே… இதோ இப்போதே அனுப்புகிறேன்’, என்று சொல்லி உடனே தாமாரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.

தாமார் அண்ணனைக் காண ஓடி வந்தாள்.

‘அண்ணா… என்னவாயிற்று. உங்கள் பாசம் என்னை நெகிழச் செய்கிறது. நான் இதோ இப்போதே உங்களுக்கு சூடான உணவு தயாரித்துத் தருகிறேன்… ‘ தாமார் பாசத்தால் நனைத்தாள். ஆனால் அம்மோனின் மனமோ மோகத்தில் மூழ்கிக் கிடந்தது.

தாமாரும், அம்மோனும் மட்டும் தனியறையில் இருந்தார்கள். தாமார் உணவு தயாரித்து வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள். அம்மான் சட்டென தாமாரின் கையைப் பிடித்தான். அவனுடைய கையில் காமத்தின் சூடு தெரிந்தது.

தாமார் திடுக்கிட்டாள். ‘அண்……ணா…’ அவளுடைய குரல் பாதி வழியில் தடுக்கி விழுந்தது.

‘தாமார்.. கவலைப்படாதே. வா… என்னுடன் படு…என்னுடைய நோய்க்குக் காரணமே நீ தான். உன் நினைவில் தான் எனக்கு நோயே வந்தது. இப்போது அந்த நோய்க்கு மருந்தும் நீதான். வா..’ அம்மான் சொன்னான்.

தாமார் அதிர்ந்து போய் எழுந்தாள். ‘ இல்லை அண்ணா.. நீங்கள் என் சகோதரர். இதெல்லாம்… கூடவே கூடாது…’ தாமார் மறுத்தாள்.

அம்மான் விடவில்லை. ‘இல்லை நீ என் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.

‘அண்ணா… குறைந்தபட்சம் நீ நம்முடைய தந்தையிடம் பேசு. நானே உனக்கு மனைவியாகிறேன். இஸ்ரயேலரிடம் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கூட உன் நலனைக் கருதி தந்தை இதற்கு உடன்படக் கூடும். என்னை இப்போதைக்கு விட்டு விடு’ தாமார் எழுந்தாள்.

அம்மானுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்குள்ளிருந்த மிருகம் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தானே காத்திருந்தது. அடுத்த வினாடி வரை காத்திருக்கும் பொறுமை கூட அதனிடம் இருக்கவில்லை. அவன் அவளை பலாத்காரம் செய்து விட்டான்.

அதற்குப் பின்பு அம்மான் தாமாரை வெறுப்புடன் பார்த் தான். அவனுக்கு தாமாரின் மீதிருந்த காமம் சுத்தமாய் வடிந்து போயிருக்க மனம் வறண்டு போயிருந்தது.
‘இனிமேல் நீ வெளியே போய்விடு… இங்கே நிற்காதே’ என்றான்.

‘அம்மான்… நீ என்னுடன் உறவு கொண்டுவிட்டாய். இது வழக்கம் இல்லை என்றால் கூட என்னை மனைவியாக்கி விடு. கன்னித் தன்மை இழந்த என்னை வெளியே அனுப்பி விடாதே. இது என்னை பலாத்காரம் செய்ததை விடக் கொடுமையானது’ தாமார் கெஞ்சினாள்.

அம்மான் அவளைப் பார்க்கவே வெறுப்படைந்து அவளை விரட்டி விட்டான்.

தாமார் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று தான் அணிந்திருந்த அழகிய ஆடைகளைக் கிழித்துவிட்டு, தலையில் சாம்பல் தடவி துக்கம் அனுசரித்தாள். அப்போது அவளுடைய அண்ணன் அப்சலோம் வீட்டிற்கு வந்தான். தாமார் தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அவனுடைய உயிர் துடித்தது.

‘தாமார்… என்னவாயிற்று உனக்கு ? எந்தப் பாவி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினான். சொல்.. அவன் தலையைக் கொண்டு வருகிறேன்’ அப்சலோம் கோபத்தில் கேட்டான்.

‘அம்மான் தான் அவன்….’ தாமார் அழுதுகொண்டே சொன்னாள்.

அம்மான் என்னும் பெயரைக் கேட்டதும் அப்சலோம் இன்னும் அதிகமாக அதிர்ந்தான். ‘அவனா ? உன் சகோதரனா உன்னைக் கெடுத்தான்…. அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்… ‘ என்று புறப்பட்டான்.

நடந்தவற்றை அனைத்தையும் அறிந்த தாவீது மிகவும் கோபமடைந்தார். தன் மகனே தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டானே என வருந்தினார். ஆனாலும் அம்மோனை அவர் எதுவும் செய்யவில்லை.

அப்சலோம் அம்மோனைக் கொல்லத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என காலம் ஓடியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்ட ஒரு நாளில் அப்சலோம் தாவீதின் முன் சென்றான்.

‘தந்தையே… நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்களும் பணியாளர்களும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும்’ அப்சலோம் அழைத்தான்.

‘அழைப்புக்கு நன்றி மகனே. ஆனாலும் நான் வந்தால் என்னோடு கூடவே படைவீரர்கள், பணியாளர்கள் எல்லோரும் வருவார்கள். உனக்கு வீண் சுமை..’ தாவீது மறுத்தார்.

‘சுமையெல்லாம் இல்லை தந்தையே… தந்தை மகனுக்குச் சுமையாக முடியுமா ? வாருங்கள்…’ அப்சலோம் கட்டாயப் படுத்தினார்.

‘இல்லை மகனே… வேண்டாம்… அது சரிப்பட்டு வராது’ தாவீது திட்டவட்டமாக மறுத்தார்.

‘அப்படியானால் அம்மோனையாவது அனுப்புங்கள்’ அப்சலோம் கேட்டான்

‘அம்மோனா ? அவன் எதற்கு ? வேண்டாம்… உனக்கும் அவனுக்கும் சரிவராது…’ தாவீது அதையும் மறுத்தார்.

‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே ? நீங்கள் பழசை இன்னும் மறக்கவில்லையா ? அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா ? அவன் என் சகோதரனல்லவா ? சகோதரர்களுக்கு இடையே சண்டை வருமா என்ன ?’ அப்சலோம் நடித்தான்.

‘சரி.. அப்படியானால் அம்மோனை அழைத்துப் போ…’ தாவீது அனுமதியளித்தார்.

இந்த வாய்ப்புக்காகத் தானே அப்சலோம் காத்திருந்தான். அம்மோனைக் கட்டித் தழுவி, அவனை விருந்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே தாமாரும், அப்சலோமும் அவனுக்கு ஏராளமான இனிப்புகளும், மதுவகைகளும் வழங்கினர்.
அம்மோன் உற்சாகமாய்க் குடித்தான். குடித்துக் குடித்து போதையில் சரிந்தான்.

அந்த நேரத்துக்காகக் காத்திருந்த அப்சலோம், இரண்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த கணக்கை அன்று தீர்த்துக் கொண்டான்.
அன்றே போதையில் மிதந்த அம்மோனை அப்சலோம் கொன்றான்.

அதுவரைக்கும் அப்சலோமின் கண்களில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் தீ அப்போது தான் அணைந்தது.
தகாத உறவுக்கு ஆசைப்பட்ட அம்மோன், துடி துடித்து இறந்தான்.

கி.மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து

தாவீது : ஆட்டிடையன் அரசரான கதை !

தாவீது : ஆட்டிடையன் அரசரான கதை !

 

full_davidgoliath

 

இஸ்ரயேல் குலத்தின் வழிகாட்டியாக இறைவனின்  அருள் பெற்ற சாமுவேல் இருந்து மக்களை வழிநடத்திக் கொண்டிருந்த கால கட்டம் அது. மக்களோ தங்களுக்கு ஒரு அரசன் வேண்டும் என்று சாமுவேலிடம் முறையிட்டார்கள். சாமுவேல் கடவுளின் விருப்பத்திற்கிணங்க சவுல் என்பவரை அரசராய் நியமித்தார். அவர்தான் இஸ்ரயேல் குலத்தின் முதல் அரசர். அதுவரை இஸ்ரயேலர்களுக்கென்று அரசர் யாரும் இருந்திருக்கவில்லை. அவர்களை வழிகாட்ட வழிகாட்டிகள் மட்டுமே இருந்தார்கள்.

சவுல், தன்னுடைய அரசாட்சியின் முதல் சில ஆண்டுகள் கடவுளின் சொற்படி மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல சவுலிடம் அரசருக்குரிய  ஆணவம் வந்து குடியேறியது. அவர் கடவுளின் கட்டளைகளை மீறிச் செல்ல ஆரம்பித்தார். கடவுளுடைய வார்த்தைகளைக் கேளாமல் அவருக்கு பலிகள் மட்டும் செலுத்தி வந்தார். எனவே கடவுள் சவுலிடமிருந்து தன்னுடைய அருளை விலக்கிக் கொள்வதென்று முடிவெடுத்து சாமுவேலை அழைத்தார்.

‘சாமுவேல்.. சாமுவேல்’ கடவுள் சாமுவேலை அழைத்தார்.

‘ஆண்டவரே பேசும்.. என்னுடைய காதுகள் காத்திருக்கின்றன ‘ சாமுவேல் பணிந்தார்.

‘சவுல் வழிமாறிப் போய்விட்டான். இப்போதெல்லாம் அவன் என்னுடைய வார்த்தைகளை மதிப்பதில்லை. தன் விருப்பம் போல ஆட்சியமைக்கிறான். எனக்கு பலிகள் முக்கியமில்லை, என்னுடைய வழிகளில் நடப்பதே முக்கியம். சவுல் அரச ஆணவத்தோடு என்னை அவமதித்து விட்டான். எனவே நான் புதிதாக ஒரு அரசனை தேர்ந்தெடுப்பதென முடிவு செய்து விட்டேன்’ ஆண்டவர் கூறினார்.

‘கூறும் ஆண்டவரே.. கேட்கிறேன்.. ‘ சாமுவேல் கூறினார்.

‘பெத்லேகேமிலுள்ள ஈசா என்பவனுடைய வீட்டுக்குப் போ.. அவர்களில் ஒரு மகனை அடுத்த மன்னனாக திருப்பொழிவு செய்’ கடவுள் கூறினார்.
அக்காலத்தில் கடவுள் ஒருவரைத் தெரிந்து கொண்டால் அவருடைய தலையில் கடவுளின் அருள் பெற்றவரைக் கொண்டு எண்ணை பூசி முத்தமிடச் செய்தல் வழக்கமாக இருந்தது. அதையே திருப்பொழிவு அல்லது அபிஷேகம் என்று அழைத்தனர்.

‘ஐயோ.. ஆண்டவரே நான் எப்படிப் போவேன். சவுல் கேள்விப்பட்டால் என்னைக் கொன்று விடுவானே. அவனுக்குப் பதிலாக ஆட்சியில் இன்னொருவர் அமரப் போகிறார் என்னும் செய்தியே அவரை கொலைவெறி கொள்ளச் செய்யுமே  ‘ சாமுவேல் பயந்தார்.

‘பயப்படாதே .. நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஈசா வீட்டுக்குப் போ.. சவுல் உன்னை ஒன்றும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். யாராவது உன்னிடம் ஏதாவது கேட்டால் கடவுளுக்குப் பலிசெலுத்தச் செல்கிறேன் என்று சொல். திருப்பொழிவுக்காய் போகிறேன் என்று சொல்ல வேண்டாம் ‘, கடவுள் சொன்னார்.

‘உம் வார்த்தைகளுக்குக் கட்டுப் படுகிறேன் கடவுளே, ஆனால் ஈசா விற்கு ஒரு மகன் தானா ? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என்றால் நான் அவனை எப்படி அடையாளம் காண்பேன்’ சாமுவேல் கேட்டார்.

‘அதைப்பற்றிய கவலை உனக்கெதற்கு ‘ நான் அவனை உனக்கு அடையாளம் காட்டுவேன். கவலைப்படாதே ‘ ஆண்டவர் சொன்னார்.

சாமுவேல் கடவுளின் வார்த்தைக்கு இணங்கி பெத்லேகேமிற்குச் சென்றார்.

பெத்லேகேமிலுள்ள மக்கள் சாமுவேலைக் கண்டதும் அஞ்சினர். ஏனென்றால் சாமுவேல் கடவுளோடு இருக்கும் மனிதர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
கடவுள் பெத்லேகேமின் மீது ஏதேனும் கோபம் கொண்டாரோ ? அதை அறிவிக்கத் தான் சாமுவேல் வந்திருக்கிறாரோ ? என்று மக்கள் பயந்தனர்.

‘ஐயா… உமது வருகையின் நோக்கம் என்ன ? சமாதானம் தானே ? ‘ மக்கள் சாமுவேலை அணுகிக் கேட்டார்கள்.

‘ஆம்… கவலைப்படாதீர்கள். நான் ஆண்டவருக்கு ஒரு பலியிட வேண்டும். அதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறேன்’ சாமுவேல் சொன்னார்.

‘வாருங்கள்… உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ நிம்மதியடைந்த மக்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள்.

‘நன்றி… நான் முதலில் ஈசாயின் வீட்டுக்குச் செல்லவேண்டும். அவர்களும் என்னோடு பலியில் கலந்து கொள்ளவேண்டுமென்பதே கடவுளின் விருப்பம். சாமுவேல் சொன்னார். மக்கள் சாமுவேலுக்கு ஈசாயின் வீட்டைக் காட்டினார்கள்.

சாமுவேல் ஈசாயின் வீட்டிற்குள் சென்றார். அங்கே ஈசாயின் மூத்த மகன் எலியா நின்றிருந்தார். எலியா அழகும், வலிமையும் நிறைந்தவனாக நல்ல உயரமானவனாக இருந்ததைப் பார்த்த சாமுவேல், இவர்தான் கடவுள் தேர்ந்தெடுத்த நபராயிருக்க வேண்டும் என்று நினைத்தார். கடவுளோ,’ இவனல்ல… நான் தேர்ந்தெடுத்தவன். நீ அவனுடைய உயரத்தையும் தோற்றத்தையும் வைத்துக் கணக்கிடுகிறாய். ஆனால் நான் அகத்தைப் பார்ப்பவன்’ என்றார்.

சாமுவேல் ஈசாயின் இரண்டாவது, மூன்றாவது என வீட்டிலிருந்த ஈசாயின் ஏழு மகன்களையும் சந்தித்தார். கடவுளோ, அனைவரையும் நிராகரித்தார்.

சாமுவேல் ஈசாயைப் பார்த்தார். ‘ உனக்கு ஏழு பேர் மட்டுமல்லவே… வேறு பிள்ளைகள் இருக்க வேண்டுமே! ‘ என்றார்.

ஈசா வியந்தார்,’ ஆம்.. நீங்கள் உண்மையிலேயே கடவுளின் அருள் பெற்றவர் தான். எனக்கு இன்னும் ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் தாவீது, அவன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறான்’ என்றார் ஈசா.

‘அவனையும் என்னிடம் அழைத்து வாருங்கள்’ சாமுவேல் சொன்னார்.

‘சரி… அவனை அழைத்து வர ஆளனுப்புகிறேன். நாம் இப்போது உணவு உண்போம். வாருங்கள் ‘ ஈசா அழைத்தார்.

‘இல்லை… தாவீதைக் காணும் வரை நான் உணவு உண்ணமாட்டேன்’ சாமுவேல் மறுத்தார்.

தாவீது அழைத்து வரப்பட்டு சாமுவேலின் முன்னால் நிறுத்தப் பட்டார். ஆடுகளை மேய்ப்பவர்களுக்கான உடையுடனும், கையில் கோலுடனும், உதட்டில் புன்னகையுடனும் சாமுவேலின் முன்னால் வந்து நின்றான்.

சாமுவேல் தாவீதைப் பார்த்தார். மிகவுள் இளையவனாகவும், அழகானவனாகவும், தைரியசாலியாகவும் இருந்த தாவீதைப் பார்த்து சாமுவேல் மகிழ்ந்தார்.

‘கடவுளே பேசும்… இவன் தான் நீர் தேர்ந்தெடுத்தவனா ? ‘ சாமுவேல் மனதுக்குள் கடவுளிடம் உரையாடினார்.

கடவுள் சாமுவேலிடம் ‘இவனே தான் நான் தேர்ந்தெடுத்தவன். இவன் எத்தனை சிறப்புக்குரியவன் என்பதை இஸ்ரயேல் மக்கள் விரைவில் கண்டு கொள்வார்கள். இவனை அபிஷேகம் செய்.’ என்றார்.

சாமுவேல் உடனே எழுந்து எண்ணை நிறைக்கப்பட்டிருந்த கொம்பை எடுத்து, எண்ணையை தாவீதின் தலையில் வார்த்து,’ இவனை நான் திருப்பொழிவு செய்துள்ளேன். இவன் மேல் இனிமேல் ஆண்டவர் குடியிருப்பார். இவன் செய்ய வேண்டியதையெல்லாம் அவர் இவனுக்குத் தெரியப்படுத்துவார்’ என்றார்.

தாவீதின் தந்தையும் சகோதரர்களும் ஆச்சரியப் பட்டார்கள். தாவீதிற்குக் கிடைத்த மகா பாக்கியத்தை நினைத்து எல்லோரும் கடவுளைப் புகழ்ந்தார்கள்.
சாமுவேல் தன்னுடைய வேலை நன்றாக நிறைவேறிய சந்தோசத்தில் நாடு திரும்பினார்.

தாவீது ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டதும் சவுலிடமிருந்து ஆண்டவருடைய ஆவி வெளியேறி தாவீதிடம் வந்து குடிகொண்டது. சவுலிடம் தீய ஆவி ஒன்று வந்து இறங்கியது. அன்று முதல் சவுலிடமிருந்த அமைதியும் நிம்மதியும் காணாமல் போய் விட்டன.

சவுலின் பணியாளர்கள் சவுலைப் பார்த்து,’ அரசே நீங்கள் நிம்மதியில்லாமல் கஷ்டப்படுகிறீர்கள். நன்றாக யாழ் மீட்டக் கூடியவன் ஒருவனை அழைத்து வரவா ? அந்த இசையில் உங்கள் உடலும் உள்ளமும் உற்சாகமடையக் கூடும்’ என்றார்கள்.

சவுலும்,’ சரி… நன்றாக யாழ் மீட்டக் கூடிய ஒருவனை என்னிடம் கொண்டு வாருங்கள். என்னால் இந்த மனநிலையில் இருக்க முடியாது. எனக்கு மகிழ்ச்சியும், அமைதியும் வேண்டும்’ என்றார்.

பணியாளர்கள் நல்ல யாழ்மீட்டுபவனைத் தேடி அலைந்தார்கள். கடைசியில் ஒரு இளைஞனைக் கண்டு பிடித்தார்கள். அவன் அழகாகவும், யாழ் மீட்டுவதில் மிகவும் திறமை வாய்ந்தவனாகவும் இருந்தான். அவன் தாவீது !

தாவீது சவுலின் அரண்மனைக்கு வேலையாளாய் அமர்த்தப் பட்டான். சவுலுக்குப் பதிலாக அரசாளவேண்டும் என்று கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட தாவீது, இப்போது சவுலின் அரண்மனையில் சவுலின் மன மகிழ்ச்சிக்காக யாழ் மீட்டும் பணியில் சேர்ந்தான். தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்னும் செய்தியை சவுல் அறிந்திருக்கவில்லை.

சவுலின் மீது தீய ஆவி இறங்கி வந்து சவுலை நிம்மதியில்லாமல் ஆக்கும்போதெல்லாம் தாவீது தன்னுடைய யாழை எடுத்து மீட்டுவான் சவுலும் அமைதியடைவார். தாவீதின் திறமையைக் கண்ட சவுல் அவரை தன்னுடைய ஆயுதங்களைத் தாங்கி வரும் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தான். தாவீது மகிழ்ந்தார். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தனக்கு அரண்மனையில் நல்ல வேலை கிடைத்திருக்கிறதே என குதூகலித்தார்.

சவுலின் அரசாட்சிக்கு பெலிஸ்தியரிடமிருந்து மீண்டும் மிரட்டல் வந்தது. இதற்கு முன்பும் பலமுறை பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலரைத் தாக்கியதுண்டு. இந்த முறையும் அவர்கள் போர் தொடுத்து வந்தார்கள். பெலிஸ்தியர்களின் போர் ஒலியைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பயந்து நடுங்கினார்கள். தங்கள் உயிரும் உடமைகளும் தப்புமா என்று கலங்கினார்கள். அதற்குள் பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலரின் நாட்டுக்குப் படையெடுத்து வந்து எல்லையில் அமைந்திருந்த ஏலா பள்ளத்தாக்கின் கரையை வந்தடைந்தார்கள்.

பெலிஸ்தியரின் படை ஏலா பள்ளத்தாக்கின் மறுகரையில் ஒன்று திரண்டு நின்றது. சவுல் தன்னுடைய படைவீரர்களைத் திரட்டி பள்ளத்தாக்கின் இந்தக் கரையில் நின்றார். போர் நடைபெறப்போகிறது என்பதை அறிந்த தாவீது அரண்மனையை விட்டு விட்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். தாவீதின் மூத்த சகோதரகள் சவுலுடைய படைவீரர்களின் கூட்டத்தில் இருந்தார்கள்.

பெலிஸ்தியரின் கூட்டத்தில் கோலியாத் என்றொரு படைத் தலைவன் இருந்தான், அவன் மிக மிக அதிக உயரமும் கம்பீரமுமாக ஒரு மலையே நிமிர்ந்து நிற்பது போல இருந்தான். அவன் தன் படை அணிவகுப்பிலிருந்து முன்னே வந்து,

‘சவுலின் அடிமைகளே… நீங்கள் போருக்கா அணிவகுத்து நிற்கிறீர்கள் ? அந்த அளவுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா ? அப்படி தைரியமுடைய ஆண்கள் உங்களிடையே இருந்தால் முன்னே வாருங்கள்… என்னை போரிட்டு வெல்லுங்கள். நீங்கள் வென்றால், பெலிஸ்தியர்கள் எல்லோரும் உங்கள் அடிமைகளாவோம்.. இல்லையேல் நீங்கள் எங்கள் அடிமைகள்….  சம்மதமா ? ‘ கோலியாத் கர்ஜித்தான்.

இஸ்ரயேலர்கள் நடுங்கினார்கள். யாருமே அவனுடன் போரிட முன்வரவில்லை.

அதே நேரத்தில் தாவீதின் தந்தை தாவீதை அழைத்து ‘தாவீது, நீ உன்னுடைய சகோதரர்களுக்கு கொஞ்சம் அப்பங்களை எடுத்துப் போ… அவர்கள் பெலிஸ்தியருக்கு எதிரான போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்குப் போதிய உணவு கிடைக்குமா தெரியவில்லை ‘ என்றார்.

தந்தை சொல் மீறாத தாவீதும், தன்னுடைய சகோதரர்களுக்குக் கொடுப்பதற்காக அப்பங்களை எடுத்துக் கொண்டு படைக்களத்துக்குச் சென்றார். அங்கிருந்த படைத்தலைவர் ஒருவரிடம் அப்பங்களை ஒப்படைத்தார்.

கோலியாத் தன்னுடைய கர்ஜனையை நிறுத்தவில்லை,’ கோழைகளே ஒருத்தர் கூட தைரியசாலி இல்லையென்றால் எதற்காக இந்த அணிவகுக்கு’ கோலியாத் சத்தமாய்ச் சிரித்தான். தாவீதின் காதுகளுக்குள் கோலியாத்தின் ஆணவக் குரல் வந்து விழுந்தது. தாவீது ஆவேசமடைந்தான்.

‘இவனை யாராவது போய் வெட்டி வீழ்த்தவேண்டியது தானே ? ‘, தாவீது படைவீரர்களைக் கேட்டார்.

‘ஐயோ அவன் மிகவும் வலிமையானவன். சிறுவயது முதலே அவன் போர் தந்திரங்களும், சூத்திரங்களும் கற்றவன். அவனை வீழ்த்துவதற்குத் தேவையான வலிமையானவர்கள் யாரும் நம்மிடம் இல்லை’ படைவீரர்கள் பயந்தனர்.

‘ஏதாவது பரிசு அறிவித்திருந்தால் வீரர்கள் போரிட முன் வந்திருப்பார்களோ ? ‘ தாவீது கேட்டார்.

‘அட.,.. அதெல்லாம் எப்பவோ அறிவிச்சாச்சு. கோலியாத்தைத் தனியாகச் சென்று கொல்பவனுக்கு சவுல் ஏராளமான செல்வமும் அளித்து, தன்னுடைய மகளையே திருமணம் செய்து வைப்பதாக அல்லவா சொல்லியிருக்கிறார்’ படைவீரர்கள் சொல்ல தாவீது ஆச்சரியப் பட்டார்.

‘அப்படிச் சொல்லியுமா யாரும் இன்னும் போரிடப் போகவில்லை ? ‘ தாவீது மீண்டும் கேட்டார்.

தாவீதின் சகோதரர்கள் இதைக் கேட்டுக் கோபமடைந்து.’ போடா… உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. வேடிக்கை பார்ப்பதற்காகவே வந்திருக்கிறாய் நீ’ என்று தாவீதைத் துரத்தினார்கள்.

தாவீதோ,’ வாழும் கடவுளையே விருத்தசேதனம் செய்யும் வழக்கமில்லாத ஒரு பெலிஸ்தியன் சவால் விடுகிறான். அவனுக்கு அஞ்சி பேசாமல் இருக்கிறீர்களே கோழைகளே…. நானாயிருந்தால் நிச்சயம் போரிட்டு அவனைக் கொல்வேன்’ என்றான்

சகோதரர்களோ,’ ஆணவம் பிடித்தவன் நீ… சாக வேண்டுமானால் போருக்குப் போ…. உயிர் வேண்டுமென்றால் ஊருக்குப் போ’ என்று அவரைத் துரத்தினார்கள்.

தாவீது பயப்படவில்லை. கோலியாத்துடன் போரிடத் தான் தயாராய் இருப்பதாக அவன் எல்லோர் முன்னிலையிலும் கூறினான். தகவல் சவுலின் காதுகளுக்குப் போனது. சவுல் தாவீதை அழைத்தான்

‘தாவீது… நீ என் அன்புக்குரியவன். சிறுவனான உன்னால் இந்த அசுர பலம் படைத்த பெலிஸ்தியனை வீழ்த்த முடியாது. நீ அதற்குரிய பயிற்சி பெறாதவன். ‘ சவுல் எச்சரித்தார்.

‘கவலைப் படாதீர்கள் … நான் கடவுளின் அருளுடன் போரிடுவேன். அவனை வெல்வேன்’ என்றான் தாவீது.

‘குருட்டுத்தனமான நம்பிக்கை வெல்லாது தாவீது… எந்த தைரியத்தில் நீ போரிடப் போகிறாய் ? என்ன முன்னனுபவம் உனக்கு இருக்கிறது ? ‘ சவுல் கேட்டார்.

‘நான் ஆடுமாடுகளை மேய்க்கும் போது எதிர்ப்படும் கொடிய விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்றிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கோலியாத்தும் விலங்கு தான் அவனையும் என்னால் கொல்ல முடியும்’ தாவீது உறுதியாய் சொன்னான்.

தாவீதின் உறுதியைக் கண்ட சவுல் தாவீதைப் போருக்கு அனுப்பச் சம்மதித்தான். தாவீதுக்கு படைக்கலன்களும், கவசங்களையும் கேடயங்களையும் கொடுத்தான். தாவீது கவசங்களைப் போட்டுக் கொண்டு நடந்து பார்த்தான். அந்த பாரமான உடைகளைத் தூக்கிக் கொண்டு அவனால் நடக்க முடியவில்லை. தடுமாறினான். சவுல் கவலைப்பட்டார். ஒரு கவசத்தையே தூக்கும் வலிமையற்ற தாவீது எப்படி கோலியாத்தைத் தாக்குவான் என்று சந்தேகப் பட்டார்.

தாவீது கவசங்களையெல்லாம் கழற்றிவிட்டு தன்னுடைய மேய்ப்பர்களின் ஆடையை அணிந்து கொண்டான். நேராக ஆற்றங்கரைக்குச் சென்று நான்கைந்து கூழாங்கற்களை எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டாள். தன்னுடைய கவணை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டான். அவ்வளவு தான் அவனுடைய போர்த்தயாரிப்பு !  நேராக கோலியாத்தின் முன்னால் சென்று நின்றான். கோலியாத் பார்த்தான். தனக்கு முன்னால் ஒரு சின்ன உருவம் நிற்பதைக் கண்டு சத்தமாய்ச் சிரித்தான்.

‘என்ன என்னை ஏளனம் செய்கிறீர்களா ? போரிடுவதற்கு ஆளனுப்பச் சொன்னால் விளையாடுவதற்கு ஆள் அனுப்பியிருக்கிறீர்களா ? மொத்த இஸ்ரயேல் படையிலுமிருந்து என்னோடு போரிட வந்திருக்கும் வீரனைப் பாருங்கள்’ என்று சொல்லி சத்தமாய்ச் சிரித்தான்.

‘ தாவீது தன்னுடைய கோலை எடுத்து கோலியாத்துக்கு நேராக நீட்டி… அளவைப் பார்த்து அளவிடாதே ! என்னுடன் போரிட நீ தயாரா ? ‘ என்றான்

‘கோலுடன் அடிக்க வருகிறாயே ! நானென்ன நாயா ?… கோலியாத் ! பெலிஸ்தியர்களின் வீரத்தின் மொத்த உருவம் நான் ! உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னை அடித்துக் கொன்று பறவைகளுக்கு இரையாக்குகிறேன்..’ என்று கர்ஜித்தான்.

‘ நீ வாளோடும், ஈட்டியோடும் வந்திருக்கிறாய்… நான் கடவுளின் ஆவியோடு வந்திருக்கிறேன். நீ அழிவது நிச்சயம்…’ தாவீதும் அசரவில்லை.

கோலியாத்து மீண்டும் நகைத்தான். ‘சரி பார்த்து விடுவோம்…. நானும் போருக்குத் தயார். ‘ சொல்லிக் கொண்டே ஒரு பெரிய மரம் ஒன்று அசைந்து வருவது போல அவன் தாவீதை நெருங்கினான்.

தாவீது தன் பையிலிருந்த கூழாங்கல்லை எடுத்தான். இடையில் சொருகியிருந்த கவணை எடுத்து கூழாங்கல்லை அதில் வைத்துக் குறிபார்த்துக் கோலியாத்தின் நெற்றியில் அடித்தான்.

கூழாங்கல் பாய்ந்து சென்று கோலியாத்தின் நெற்றியில் பதிந்தது. கோலியாத், சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து பெருமலை ஒன்று சரிவது போல சரிந்து விழுந்தான். பெலிஸ்தியர்கள் மலையென நம்பிய படைவீரன் ஒரு கூழாங்கல்லில் வீழ்ந்தான். தாவீது சற்றும் தாமதிக்கவில்லை  ஓடிப் சென்று கோலியாத்தின் வாளையே எடுத்து அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். பெலிஸ்தியர்களின் தூண் சரிந்தது.

கோலியாத் வீழ்ந்த செய்தி கேட்டதும் பெலிஸ்தியர்கள் நடுங்கினார்கள். ‘இஸ்ரயேலரின் ஒரு சிறுவனே கோலியாத்தைக் கொல்லும் வலிமை படைத்தவன் என்றால் நாம் எல்லோருமே அழிவது நிச்சயம். தலைவன் இல்லாத படை வெற்றிபெறாது. உயிர் பிழைக்க வேண்டுமானால் ஓடி விடுவோம்’ என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்ட பெலிஸ்தியர்கள் நாலா பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.

படை சிதறியதைக் கண்ட இஸ்ரயேலர்கள் ஆனந்தமடைந்தார்கள். சிதறி ஓடியப் படையை இஸ்ரயேலர்கள் கூட்டமாகச் சென்று சின்னா பின்னப் படுத்தினார்கள். பெலிஸ்தியர்களின் பிணங்களால் அந்த பள்ளத்தாக்குப் பகுதி நிறைந்தது. பெலிஸ்தியர்களிடம் இருந்த பொருட்களையும் இஸ்ரயேலர்கள் கொள்ளையடித்தார்கள்.

மாடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீதின் புகழ் நாடு முழுதும் பரவியது.

சவுல் மன்னனுக்கு யோனத்தான் என்றொரு மகன் இருந்தான். யோனத்தான் தன் வயதொத்த தாவீதிடம் மிகவும் நட்புடன் பழகினான். இருவரும் இணை பிரியா நண்பர்களானார்கள். பெலிஸ்தியனான கோலியாத்தை வீழ்த்திய தாவீது, ஒரு படையின் தலைவனாக நியமிக்கப்பட்டார்.

தாவீது மிகச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார்.  புரிந்த போர்களிலெல்லாம் தாவீது மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றார். காரணம் கடவுள் அவரோடு இருந்தார்.
தாவீதின் சிறப்பைப் பார்த்த சவுல் மகிழ்ந்து அவனை தன்னுடைய முக்கியமான படைத்தளபதியாக நியமித்தார். படைத்தளபதியான தாவீது பெலிஸ்தியர்களோடு போரிட்டு அவர்களை விரட்டினார். நடந்த அனைத்து போர்களிலும் பெருவெற்றி பெற்ற தாவீதை நாட்டு மக்களெல்லாம் பெரிதும் பாராட்டினர். ஆடல் பாடல்களோடு அவரை வாழ்த்திப் பாடினார்கள். சவுலும் மகிழ்ந்தார்.

ஒரு நாள் தாவீதைப் புகழும் விதமாக பெண்கள் ஆடலோடு ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்… தாவீது பதினாயிரம் பேர்களைக் கொன்றார்’ என்று பாடினார்கள். அதைக் கேட்ட சவுல் ஆத்திரமடைந்தான். ‘நான் எத்தனை ஆண்டுகளாக மன்னனாக இருக்கிறேன், எத்தனையோ போர்களின் வென்றிருக்கிறேன் . நான் ஆயிரம் பேரைக் கொன்றதாகவும், நேற்று வந்த தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றதாகவும் பாடுகிறார்களே’ என்று சவுல் கோபமடைந்தான். முதன் முறையாக சவுல் தாவீதின் மேல் பொறாமை கொண்டான். தாவீதின் புகழ் தன்னை விட அதிகமாகிவிட்டதால், இனிமேல் தாவீதை ஒழித்தால் தான் தன்னுடைய புகழ் தனக்குத் திரும்பக் கிடைக்கும் என்று தீர்மானித்தார். தாவீது நாட்டுக்கு ஏராளம் வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறார் என்பதையெல்லாம் சவுலின் பொறாமை நெஞ்சம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. தாவீது சாகவேண்டும் என்பது மட்டுமே அவரது மனதுக்குள் நிறைந்திருந்தது.

தீய எண்ணங்களால் நிறைந்திருந்த சவுல் நிம்மதியில்லாமல் புலம்பத் துவங்கினார். சவுல் புலம்புவதைக் கண்ட பணியாளர்கள் தாவீதைக் கூட்டி வந்து சவுலின் முன்னால் யாழிசைக்குமாறு சொன்னார்கள். தாவீது யாழிசைக்கத் துவங்கினார்.

தனியறையில் சவுல் அமர்ந்திருக்க அதற்கு எதிரே அமர்ந்து தாவீது அமைதியாக யாழிசைத்துக் கொண்டிருந்தார். சவுல், அமைதியடைவதற்குப் பதிலாக ஆத்திரமடைந்தார். என்னுடைய அரண்மனையில் வேலை செய்துவிட்டு என்னையே அவமானப் படுத்தி விட்டாயே பாவி… என்று சவுலின் உள்ளம் கொதித்தது அருகிலிருந்த ஈட்டியை எடுத்து சவுல் தாவீதை நோக்கி எறிந்தார். தாவீது தடுத்தார். மீண்டும் சவுல் இன்னொரு ஈட்டியை எடுத்து எறிய தாவீது அதையும் தடுத்தார். தாவீதுக்கு சவுலின் தீய எண்ணம் புரியவில்லை. தன்னைக் கொல்லத்தான் சவுல் ஈட்டி எறிகிறார் என்பதைக் கூட அவர் உணரவில்லை. சவுல் மனஅமைதியின்றி இருப்பதால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றே நினைத்தார்..

கடவுள் தாவீதுடன் இருந்தார். தாவீது மீண்டும் வெற்றிகள் மீது வெற்றிகளாகப் பெற்று குவித்துக் கொண்டிருந்தார். அதையெல்லாம் கண்டு கொண்டிருந்த சவுலுக்கு தாவீதைக் கொல்ல வேண்டும் என்னும் எண்ணம் வலுப்பட்டுக் கொண்டே வந்தது.

சவுல் ஒரு சூழ்ச்சித் திட்டம் வகுத்தார். அதன் படி தன்னுடைய மகளை தாவீதுக்கு மணம் முடித்து வைத்து அவனை பெலிஸ்தியர்களின் எதிரியாக்க வேண்டும். அப்போது எப்படியானாலும் பெலிஸ்தியர்கள் கையினால் இவன் மடிந்தே தீருவான். என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டார். தன் திட்டத்தின் முதல்கட்டமாக சில பணியாளர்கள் மூலமாக தாவீதிடம் தகவல் ஒன்றை அனுப்பினார்.

பணியாளர்களில் சிலர் தாவீதை அணுகி,’ ம்ம்… நீ.. பாக்கியவான் தான்… இல்லையென்றால் அரசனின் மகளையே மணக்கும் வரம் உனக்குக் கிடைத்திருக்குமா ?’ என்று முணு முணுத்தனர்.

‘என்ன உளறுகிறீர்கள் ‘ அரசரின் மகளையா ? நானா ? சுத்த உளறல்… ‘ தாவீது மறுத்தான்

‘இல்லை… அரசர் சொல்வதை நாங்கள் எங்கள் காதால் கேட்டோமே. அவர் உனக்குத் தன்னுடைய மகளைத் திருமணம் செய்து வைக்கப் போகிறாராமே ” பணியாளர்கள் மீண்டும் கூறினர்.

‘ஐயோ… எனக்கு அதற்குரிய தகுதிகள் ஏதும் இல்லை. நான் இஸ்ரயேலின் மிகச் சிறிய குலத்திலிருந்து வந்தவன்.. எனக்கு என்ன தகுதியிருக்கிறது ? அரசரின் மகளை மனைவியாய் அடைய நான் அரசருக்கு எதைத் தர முடியும் ? ‘ தாவீது தன்னைத் தாழ்த்தினார்.

‘நூறு பெலிஸ்தியர்களின் நுனித்தோலை நீ வெட்டிக் கொண்டு வரவேண்டும் என்பது மட்டுமே அரசனின் விருப்பம். அது தான் உமக்கு மிகவும் எளிதாயிற்றே’ பணியாளர்கள் வஞ்சகமாகப் பேசினர். எப்படியாவது பெலிஸ்தியர்களின் கையால் தாவீது மடியட்டும் என்பதே சவுலின் திட்டமாக இருந்தது.

‘ஓ… அது என்னால் முடியுமே….. ‘ தாவீது மகிழ்ந்தார். சவுல் நினைத்ததற்கு நேர் மாறாக, அன்றே தாவீது இருநூறு பெலிஸ்தியர்களைக் கொன்று அவர்களின் நுனித்தோலை வெட்டி சவுலின் காலடியில் வைத்தார். சவுல் பேச்சற்றவரானார். தன் மகளை அவருக்கு மணமுடித்து வைத்தார். தாவீது சவுலின் மருமகனானார்.

மீண்டும் பெலிஸ்தியர்களோடு போர் ஒன்று நடந்தது. அந்தப் போரிலும் தாவீது மிகப் பெரிய வெற்றியடைந்தார். அன்று இரவு தாவீது யாழிசைத்துக் கொண்டிருக்கையில் சவுல் தாவீதை நோக்கி மீண்டும் ஈட்டி ஒன்றை எறிந்தார். அதிலிருந்தும் தாவீது தப்பினார்.

சவுல் தன்மீது பொறாமை கொண்டிருப்பது இப்போது தாவீதுக்குப் புரிந்தது. இனிமேல் தான் அரண்மனையில் இருந்தால் கண்டிப்பாகக் கொல்லப்படுவோம் என்பதை அறிந்த  அவர் அங்கிருந்துத் தப்பியோடினார். சவுல் எப்படியாவது தாவீதைக் கொல்லவேண்டும் என்று தேடியலைந்தார்.

தாவீது நோபில் என்னுமிடத்துக்குச் சென்று அங்குள்ள அபிமெலக் என்னும் குருவின் வீட்டில் ஒளிந்திருந்தார். அங்கு சிலகாலம் தங்கியபின் அவர் காத் என்னும் இடத்துக்கு ஓடினார். அங்கே அரச பணியாளர்களுக்கு தாவீதை அடையாளம் தெரிந்தது. எனவே அவர் பைத்தியக் காரர் போல உடையணிந்து, வாயில் உமிழ்நீர் வடித்துக் கொண்டு நடமாடினார். எல்லோரும் பைத்தியக்காரர் என்று நினைக்க, அவர் அங்கிருந்தும் தப்பினார். இதற்கிடையில் குருக்களோடு தாவீது தங்கியிருந்ததைக் கேள்விப்பட்ட சவுல் படைவீரர்களோடு புறப்பட்டு குருக்களையெல்லாம் அழித்தொழித்தான். தாவீது அங்கிருந்து ஓடிப் போயிருந்ததால் அவனால் தாவீதைக் கொல்ல முடியவில்லை. அங்கிருந்து தாவீது கெயிலா என்னும் இடத்துக்குச் சென்றார். சிலகாலம் அங்கே தங்கியிருக்கையில் பெலிஸ்தியர்கள் அந்த நகரின் மீது படையெடுத்து வந்தார்கள். தாவீது மக்களைத் திரட்டி அவர்களை விரட்டினார். அங்கும் அவரால் அதிக நாள் தங்கியிருக்க முடியவில்லை, தாவீது அங்கே தங்கியிருக்கும் செய்தி சவுலிற்குத் தெரிய வந்தது. தாவீது அங்கிருந்து சீபு என்னும் பாலை நிலத்தில் மலைகள் அடர்ந்த பகுதியில் ஒளிந்திருந்தார். சவுல் தாவீதைத் தேடி அதே மலைப்பகுதியில் வந்தார்.

தாவீது ஒரு மலைக்குகையில் நண்பர்கள் சிலரோடு பதுங்கியிருக்கையில் சவுலும் தாவீதைத் தேடி அந்த மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தார். அப்போது அவருக்கு சிறு நீர் கழிக்கவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டது. சிறுநீர் கழிப்பதற்காக சவுல் தனியாக தாவீது தங்கியிருந்த மலைக்குகையின் வாசலருகே வந்தார்.

குகையின் உள்ளே தாவீதும் நண்பர்களும் !. குகைவாசல் இருட்டில் சவுல் தனியனாய் !.
‘வா… சவுலைக் கொல்ல சரியான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. அவன் இப்போது தனியனாய் வந்திருக்கிறான். ஒரு தாக்குதலை அவன் எதிர்பார்க்கவும் மாட்டான். அவனைக் கொன்றுவிட்டால் அதற்குப் பின் நாம் பயந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டாம்’ நண்பர்கள் கிசுகிசுத்தனர்.

‘வேண்டாம்,… சவுல் கடவுளின் அபிஷேகம் பெற்று அரசனானவன். அவனைக் கொன்றால் நம்மீது இரத்தப் பழி வரும்… விட்டு விடுவோம். ஆனால் நாம் அவரைக் கொல்லாமல் விட்டு விட்டோம் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துவோம்’ என்றான் தாவீது.

‘அது எப்படி ?’ நண்பர்கள் கேட்டார்கள். தாவீது பதில் சொல்லாமல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து சவுலின் அருகே வந்து அவனுடைய அங்கியின் நுனியை வெட்டினார். சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சவுல் எதையும் அறியவில்லை.

சவுல் குகையை விட்டு வெளியே வந்து தன் படைவீரர்களை நோக்கிப் போகையில் தாவீது அவரை அழைத்தான்.

‘ அரசே… என் தலைவரே’

சவுல் திடுக்கிட்டார். இதென்ன தாவீதின் குரலல்லவா ? ‘மகனே தாவீது ? இது உன் குரல் தானே… ? ‘

‘ஆம்… நான் தான்… ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள். நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் ? உங்களுக்காகப் போரிட்டு உங்களுக்கு வெற்றிகள் பல பெற்றுத் தந்தேன். இது தான் தவறா ? ‘ தாவீது கேட்டான்

‘மகனே… நீ தவறொன்றும் செய்யவில்லையே… நீ எங்கிருக்கிறாய் ? ‘ சவுல் கேட்டார்.

தாவீது சவுலுக்கு முன்னால் வந்து அவரை வணங்கினான். வணங்கி விட்டுத் தன் கையிலிருந்த துணியை சவுலின் முன்னால் நீட்டினான்.
‘அரசே… மன்னியுங்கள்.. இது உங்கள் அங்கியிலிருந்து நான் வெட்டிய துண்டு’

சவுல் திடுக்கிட்டான். தன் ஆடையின் தொங்கலைப் பார்க்க அதன் நுனி காணாமல் போயிருந்தது.
‘இதை நீ எப்போது வெட்டினாய் ?’ சவுலின் குரல் நடுங்கியது.

‘கடவுள் உங்களை என்னுடைய குகைக்கு அனுப்பினார். அப்போது தான் நான் உங்கள் துணியை வெட்டினேன்’

‘தாவீது… அப்போது நீ என்னையும் கொன்றிருக்கலாமே ? ஏன் கொல்லவில்லை ?’

‘உங்கள் துணியில் வைத்த கத்தியை உங்கள் கழுத்தில் வைத்திருக்க முடியும் தான். ஆனால் நீர் கடவுளின் அருள் பெற்றவர் உம்மைக் கொல்வது கடவுளுக்கு எதிரானது., அதனால் தான் உம்மைக் கொல்லவில்லை’ தாவீது சொன்னார்.

‘மகனே தாவீது… நீதான் உண்மையான நீதிமான். உன்னை இனிமேல் நான் தொந்தரவு செய்யமாட்டேன். என்னை மன்னித்துவிடு.’ என்று சொல்லிவிட்டு சவுல் அகன்றார். ஆனால் அவர் மனம் திருந்தவில்லை.

சிலகாலத்துக்குப் பின் சவுல் மீண்டும் தாவீதைக் கொல்லும் வெறியுடன் தேடியலைந்தான். தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா என்னும் மலைப்பகுதியில் ஒளிந்திருந்தார். அந்த செய்தி சவுலின் காதுகளுக்கு வந்தது. சவுல் தன் படைவீரர்களோடு வந்து அக்கிலா மலையருகே கூடாரமடித்தார். தாவீதின் நண்பர்கள் மூலமாக தாவீதுக்கு சவுல் தன்னைப் பிடிக்க வந்திருக்கும் செய்தி தெரிய வந்தது. செய்தி உண்மைதானா என்பதை அறிய அவர் கூடாரத்தைச் சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தார்

நள்ளிரவில் எல்லோரும் உறங்குகையில் தாவீதும் அவருடைய நண்பர் ஒருவருமாக கூடாரத்தை அடைந்தனர். கூடாரத்தினுள் சவுல் நன்றாகத் தூங்கிக் கொண்டிந்தார். காவலர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

தாவீதும் நண்பரும் மெதுவாகக் கூடாரத்திற்குள் சென்றனர். அங்கு தொங்கவிடப்பட்டிருந்த சவுலின் ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும் தாவீது கைகளில் எடுத்துக் கொண்டார். சவுலைக் கொல்லலாம் என்று சொன்ன நண்பனைத் தடுத்தார். வந்ததுபோல சத்தமில்லாமல் இருவரும் வெளியேறினார்கள்.

வெளியேறி தொலைவில் இருந்த மலையுச்சியில் இருவரும் ஏறினர். மலையுச்சியில் நின்று தாவீது உரக்கக் கத்தினார்.

‘படைவீரர்களே.. தூங்குமூஞ்சிகளே விழித்தெழுங்கள்… எங்கே உங்கள் படைத்தளபதி அப்னேர் ? ‘ தாவீது கத்தினார்.

சவுலின் படைவீரர்கள் விழித்தெழுந்தனர்.
‘யார் நீ.. உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் எங்களை நோக்கிக் கத்துவாய் ? ‘ வீரர்கள் கோபமாய் கேட்டனர்.

‘துணிச்சலா ? எனக்கு அது நிறையவே இருக்கிறது. என் துணிச்சலைப் பற்றிச் சொல்லத் தானே நான் உங்களை எழுப்பினேன்’ தாவீது சொன்னார்.

‘நீ யாரென்பதை முதலில் சொல்… இல்லையேல் எங்கள் வாளுக்கு நீ இரையாவது உறுதி’

‘உங்கள் அரசனை விழித்திருந்துக் காக்கத் தெரியாத நீங்களா என்னைக் கொல்லப் போகிறீர்கள் ?’

‘நாங்கள் எங்கள் அரசனைக் காக்கவில்லையா ? என்ன உளறுகிறாய் ?’ வீரர்கள் வெகுண்டனர். இந்தச் சந்தடியில் சவுலும் எழுந்தார்.

‘நீங்கள் போய் உங்கள் மன்னன் சவுலின் ஈட்டியும், தண்ணீர் குவளையும் அவருடைய அறையில் இருக்கிறதா என்று பாருங்கள். அது அங்கே இருக்காது. ஏனென்றால் அதை நான் தான் எடுத்து வைத்திருக்கிறேன், அது இப்போது என்னிடம் தான் இருக்கிறது’ தாவீது சொன்னார்.

சவுல் தாவீதின் குரலை அறிந்தார். ‘ மகனே தாவீது. நீ தானே அது !. என்னைக் கொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் நீ இரண்டாம் முறையாக என்னைக் கொல்லாமல் விட்டு விட்டாய்.. இனிமேல் நான் உன்னை நான் கொல்லமாட்டேன். நீ கடவுளின் அருள் பெற்றவன் தான் என்பதை நான் புரிந்து கொண்டேன். நீ என்மீது காட்டிய இரக்கத்தை நான் உன்மீதும் காட்டுவேன். நீ வலிமையானவன் தான் என் சந்ததியினர் மீதும் இரக்கம் காட்டு அவர்களைக் கொன்றுவிடாதே.. நானும் உன் சந்ததியினரைக் கொல்லமாட்டேன்’ என்றார்.

அதன் பின் சவுல் தாவீதைக் கொல்லத்தேடவில்லை. ஆனாலும் தாவீது தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.

பெலிஸ்தியர்கள் மீண்டும் இஸ்ரயேலர் மீது போரிடத் தயாரானார்கள். சவுல் ஆண்டவரிடம் உதவி கேட்டார். ஆனால் ஆண்டவரின் ஆவி தாவீதின் மீது இருந்தது. அவர் சவுலின் அழைப்புக்குப் பதில் தரவில்லை.

கடவுளின் பதில் கிடைக்காததால் சவுல் நாட்டிலுள்ள குறிசொல்லும் மக்களை வரவழைத்தார்.

‘எனக்காக நீங்கள் ஒரு ஆவியை எழுப்ப வேண்டும்..’ சவுல் சொன்னார்

‘யாருடைய ஆவி ” குறிசொல்லிகள் கேட்டார்கள்.

‘சாமுவேலின் ஆவி ! அவர் இங்கே நீதிமானாய் கடவுளின் பக்தனாய் இருந்தவர். பெலிஸ்தியர்களின் போரில் எனக்கு வெற்றி கிடைக்குமா என்பதைக் கடவுள் எனக்குச் சொல்ல மறுத்துவிட்டார். எனவே நான் சாமுவேலிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்’ என்றான் சவுல்

குறிசொல்லிகள் சாமுவேலில் ஆவியை எழுப்பினர். சவுல் சாமுவேலின் ஆவியைக் கண்டதும் காலில் விழுந்தார்.

‘ஐயா… நீங்கள் தான் எனக்கு ஒரு பதிலைச் சொல்ல வேண்டும். நான் பெலிஸ்தியரோடு போரிட்டால் வெற்றி பெறுவேனா ? ‘ சவுல் கேட்டார்.

‘சவுல்…. ஏன் என்னை தொந்தரவு செய்கிறாய் ? ஆண்டவரின் ஆவி உன்னை விட்டு அகன்று போய் வெகு காலமாகிறது. நீ போரில் வெற்றிபெறப் போவதில்லை. தாவீது தான் அரசனாகப் போகிறான். அதை உன்னால் மாற்றவே முடியாது’  சாமுவேல் சொன்னார்.

சவுல் மனம் கசந்து அழுதார்.

போர் காலம் வந்தது. பெலிஸ்தியர்கள் வந்து சவுலின் படையினரோடு போரிட்டனர். சவுலும் , அவருடைய பிள்ளைகளும் அந்தப் போரில் கொல்லப்பட்டனர்.
கடவுளின் விருப்பத்துக்கிணங்க தாவீது இஸ்ரவேலருக்கு அரசரானார்.

பைபிள் கதைகள் : இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்

இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்

scan0015

இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டும் தலைவராக சாமுவேல் இருந்த காலம், பெலிஸ்தியர்கள் அடிக்கடி இஸ்ரயேலர்கள் மீது போர் தொடுத்து வந்தார்கள். இஸ்ரயேல் குலத்தினருக்குக் கடவுள் எப்போதும் நிறைவான வளங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து வந்தார்.

சாமுவேலுக்கு வயதான காலத்தில் மக்கள் சாமுவேலிடம் வந்தனர்.

‘எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்.’ மக்கள் முறையிட்டனர்.

சாமுவேல் திடுக்கிட்டார். ‘ என்ன ? அரசனா ? உளறாதீர்கள். கடவுள் மட்டுமே நம் அரசர். வேறு ஒரு அரசர் நமக்குத் தேவையில்லை’ சாமுவேல் பதில் சொன்னார்

‘கடவுள் வானத்தில் அல்லவா இருக்கிறார். எங்களுக்கு பூமியில் ஒரு அரசர் வேண்டும்…’ மக்கள் மீண்டும் கூறினர்.

‘எதற்கு உங்களுக்கு அரசன் ? என்ன குறை உங்களுக்கு ?’ சாமுவேல் கேட்டார்.

‘ஏதேனும் போர் வந்தால் முன்னின்று வழிநடத்துவதற்கேனும் எங்களுக்கு ஒரு அரசன் வேண்டாமா ?’ மக்கள் கூறினர்.

‘அரசன் வந்தால் என்ன செய்வான் தெரியுமா ? உங்கள் மக்களை அவனுடைய படை வீரர்களாகவும், பணியாளர்களாகவும், உங்கள் பெண்களை வேலைக்காரர்களாகவும் வைத்துக் கொள்வான்’ சாமுவேல் எச்சரித்தார்.

‘அது பரவாயில்லை….’ மக்கள் சொன்னார்கள்.

‘உங்கள் மீது இன்னும் அதிகமான வேலைகளைத் தருவான். ஆணைகள் இட்டு அதன் படி நடக்கக் கட்டாயப் படுத்துவான். உங்களுக்கு இப்போது இருக்கும் சுதந்திரம் இல்லாமல் போய்விடும்’ சாமுவேல் மீண்டும் எச்சரித்தார்.

‘அதுவும் பரவாயில்லை..’ மக்கள் பிடிவாதம் பிடித்தனர்.

‘உங்கள் சொத்துகளின் பத்தில் ஒரு பாகத்தைக் கேட்பான்… உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை அவன் எடுத்துக் கொள்வான்….’சாமுவேல் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.

‘அது தான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டோமே… எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ மக்கள் உறுதியாய் கூறினர்.

‘சரி… உங்களுக்காக நான் கடவுளிடம் பேசி ஒரு நல்ல அரசனை அமர்த்துகிறேன். ஆனால் அதன் பின்பு நீங்கள் வந்து அரசனை நீக்கி விடும் என்று சொன்னால்.. அது நிறைவேறாது. அரசனை அமர்த்தினால் பின் அவன் சொல்வது தான் சட்டம்.. சம்மதமா ?’ சாமுவேல் கடைசியாகக் கேட்டார்.

‘சம்மதம்,… சம்மதம்…. எல்லாவற்றுக்கும் சம்மதம்… ‘ மக்கள் கூறினர்.

‘சரி… அப்படியே செய்கிறேன்…’ சாமுவேல் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.

தூரதேசத்தில் இஸ்ரயேலின் கிளைக்குலமான பென்யமின் குலத்தில் கீசு என்னும் ஒரு வீரன் இருந்தான். அவனுக்கு சவுல் என்னும் அழகான, வலிமையான ஒரு மகன் இருந்தான். இஸ்ரயேல் குலத்திலேயே அவனைப்போல அழகும், உயரமுமான ஒரு நபர் இல்லை என்னுமளவுக்கு சவுல் இருந்தார்.

ஒருமுறை அவருடைய தந்தையின் கழுதைக் கூட்டம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடுவதற்காக சவுல்,  பணியாளன் ஒருவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அவர்கள் இருவருமாக கழுதைகளைத் தேடி பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர். எங்கும் அவர்களின் கழுதைக் கூட்டங்களைக் காணோம்.

இதே நேரத்தில் சாமுவேலிடம் கடவுள் பேசினார்.
‘சாமுவேல்… நீ இஸ்ரயேல் மக்களுக்கு அரசனைக் கண்டுபிடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. பென்யமின் குலத்தைச் சேர்ந்த ஒருவனை நான் உன்னிடம் அனுப்புகிறேன். அவனைக் கண்டதும் நீ அறிந்து கொள்வாய்’ என்றார். சாமுவேல் கடவுளின் வார்த்தையை மனதில் வாங்கிக் கொண்டார்.

கழுதைகளைத் தேடித் தேடி சோர்வுற்ற சவுலும், பணியாளனும் சாமுவேல் இருக்கும் ஊருக்குள் வந்தார்கள்.

சவுல் பணியாளனிடம்,’ வா… நாம் திரும்பிப் போவோம். அப்பாவுக்கு இப்போது கழுதைகளைப் பற்றிய கவலை போய், நம்மைப் பற்றிய கவலை வந்திருக்கும்.’ சவுல் சொன்னார்.

‘இது வரை வந்து விட்டோம்… இந்த ஊரிலும் கூட தேடிப் பார்ப்போமே ‘ பணியாளன் விண்ணப்பித்தான்.

‘நம்மிடம் உண்பதற்கு அப்பங்கள் கூட இல்லை. எல்லாம் தீர்ந்து விட்டன. எனவே தாமதிப்பது நல்லதல்ல’ சவுல் சொன்னார்.

‘அப்படியானால் இங்கே ஒரு இறையடியார் இருக்கிறார். அவர் பெரும் தீர்க்கத்தரிசி. அவரிடம் போய் நம் கழுதைகள் கிடைக்குமா ? எங்கே கிடைக்கும் என்று கேட்டு வருவோம்’ என்றான் பணியாளன்.

சவுல் சம்மதித்தார். இருவரும் சாமுவேலைச் சந்திக்கச் சென்றனர். போகும் வழியிலேயே அவர்கள் சாமுவேலைக் கண்டனர். அவர்களுக்கு அவர்தான் சாமுவேல் என்று தெரியாது.

‘ஐயா… இங்கே சாமுவேல் என்று ஒரு திருக்காட்சியாளர் இருக்கிறாராமே ? அவரை நாங்கள் எங்கே சந்திக்கலாம் ?’ சவுல் கேட்டார்.

சாமுவேலுக்கு கடவுள் சொன்ன அனைத்தும் சட்டென விளங்கின. இவர்தான் அடுத்த அரசர் என்பது சாமுவேலுக்குப் புரிந்தது.

‘நீ பென்யமின் குலத்தினன் தானே ?’ சாமுவேல் கேட்டார்.

‘ஆம் ஐயா… உங்களுக்கு எப்படித் தெரியும் ?’ சவுல் ஆச்சரியப் பட்டான்.

‘உன்னுடைய கழுதைகள் எல்லாம் பிடிபட்டன. நீ கவலைப் படவேண்டாம். நீ இன்று என்னோடு விருந்து உண்’ சாமுவேல் சொன்னார்.

சவுல் வியந்தார். ‘ நாங்கள் கழுதைகளைத் தேடித் தான் வந்தோம் என்பதும், கழுதைகள் பிடிபட்டன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.  அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பெரியவர் தான். தயவு செய்து நீங்கள் யாரென்று சொல்லுங்கள்’ சவுல் அமைதியாகக் கேட்டார்.

‘நான் தான் சாமுவேல்… பயப்படாதீர்கள்.. இன்று என்னோடு விருந்து உண்ணுங்கள்’ என்றார்.

அன்று சவுல் சாமுவேல் அழைத்த விருந்தில் கலந்து கொண்டார். சவுலை சாமுவேல் மிகவும் பலமாக உபசரித்தார்.
மறுநாள் காலையில் சாமுவேல் சவுலை தனியே அழைத்துச் சென்று ஒரு தைலக் குப்பியை எடுத்து அவர் தலை மீது தைலம் வார்த்து அவரை முத்தமிட்டார்.

‘சவுல்… நீ வருவாய் என்றும் என்னைச் சந்திப்பாய் என்றும் கடவுள் என்னிடம் ஏற்கனவே கூறினார்’ சாமுவேல் ஆரம்பித்தார்.

‘நான் வருவேன் என்பதைக் கடவுள் சொன்னாரா ? ஏன் ? ‘ சவுல் குழம்பினார்.

‘நீ தான் இனிமேல் இந்த இஸ்ரயேல் குலத்துக்கே அரசனாக வேண்டும். அது தான் கடவுளின் விருப்பம்’ சாமுவேல் சொன்னார்.

‘ஐயோ… எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் பென்யமின் என்னும் சிறிய குலத்தில் பிறந்தவன். என் தந்தை என்னைத் தேடிக் கொண்டிருப்பார் நான் போகவேண்டும்…’ சவுல் எழுந்தார்.

‘சவுல்…. பயப்படாதே. நீ போகலாம். போகும் போது நாட்டின் எல்லையில் இரண்டு பேர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்கள் உன்னிடம்… கழுதைகள் எல்லாம் கிடைத்துவிட்டன என்பார்கள். மீண்டும் நீ பயணமாகி தாபோர் சமவெளியை அடையும் போது மூன்று ஆடுகள், மூன்று அப்பங்கள், திராட்சை ரசம் கொண்டு ஆலயத்துக்கு வழிபாட்டுக்குப் போகும் மூன்றுபேரை நீ சந்திப்பாய்… அவர்கள் உனக்கு இரண்டு அப்பங்கள் தருவார்கள் அவர்களிடம் வாங்கிக் கொள்.’ சாமுவேல் சொன்னார்.

சவுல் ஒன்றும் புரியாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘அதன்பின் நீ பெலிஸ்தியரின் காவலில் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கிருந்து இறங்கி வரும் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அப்போது ஆண்டவரின் ஆவியை நீ பெற்றுக் கொள்வாய். அதன் பின் உனக்குத் தோன்றுவதைச் செய்… காரணம் அதன்பின் உன்னைக் கடவுள் வழி நடத்துவார்’ சாமுவேல் சொல்லச் சொல்ல சவுல் வியப்பும், பயமும் கலந்த மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘சரி… இனிமேல் நீ போகலாம்’ சாமுவேல் சவுலை வாழ்த்தி அனுப்பினார்.

போகும் வழியிலேயே சாமுவேல் சொன்ன அனைத்தும் ஒவ்வொன்றாய் நடைபெற்றன.
நாட்டு எல்லையை அடைகையில் இருவர் வந்து கழுதைகள் அகப்பட்டன என்றார்கள். சமவெளியை அடைகையில் இரு அப்பங்கள் கொடுக்கப் பட்டன. கடவுளின் மலையை நெருங்குகையில் இறைவாக்கினர் அவரைச் சந்தித்தார்கள்.

இறைவாக்கினர்களைச் சவுல் சந்தித்ததும் ஆண்டவரின் வல்லமை அவர் மேல் வந்தது. அவர் ஆடிப் பாடவும் இறைவாக்கினர்கள் போல உரையாற்றவும் துவங்கினார். சவுலை அறிந்திருந்த மக்களெல்லாம ஆச்சரியப் பட்டார்கள். ‘சவுலுக்கு என்னாயிற்று  இதற்குமுன் நாம் இவரை இப்படிப் பார்த்ததில்லையே ?’ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

இதே நேரத்தில் சாமுவேல் அரசனைத் தெரிந்தெடுப்பதற்காக மக்கள் அனைவரையும் கூட்டி, இஸ்ரயேல் குலத்தினரையும், அதிலுள்ள அனைத்து கிளை குலத்தின் பெயர்களையும் சீட்டில் எழுதிக் குலுக்கினார். அதில் சவுலின் குலமான பென்யமின் குலம்  வந்தது !

பென்யமின் குலத்தினர் பெயரை எழுதி சீட்டு எடுக்கையில் மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது.

பின் அவர் மதிரி குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டார். எடுத்த சீட்டு சவுல் பெயருக்கு விழுந்தது !
‘சவுல் தான் நம்முடைய புதிய மன்னன்’ மக்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் சவுலை எங்கும் காணோம். அவர் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். எல்லோரும் சவுலைத் தேடினார்கள். யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் நாலா திசைகளிலும் சவுலைத் தேடிப் புறப்பட்டார்கள்.

சாமுவேல் மெளனமாகக் கடவுளிடம் வேண்டினார்.

‘சவுல் இதோ பொருட்குவியலிடையே ஒளிந்திருக்கிறான்’ என்று கடவுள் சாமுவேல் காதில் கூறினார்.

சாமுவேல் நேராகச் சென்று சவுலை அழைத்து மக்கள் மத்தியில் நிறுத்தினார். சவுல் தயக்கத்துடன் நின்றார்.

‘இதோ ! இவர் தான் சவுல் ! இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர் !! மன்னரை வாழ்த்துங்கள்’ என்றார்.
சவுல் அங்கு கூடியிருந்த அனைத்து மக்களையும் விட உயரமாகவும், வலிமையாகவும், அழகாகவும் இருந்தார்.

மக்கள் மகிழ்ச்சியுடன் ‘ அரசர் வாழ்க ‘ என்று கோஷங்கள் எழுப்பினர்.

சவுல் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னரானார்.

பைபிள் கதைகள் : சாமுவேல்

எப்பிராயின் என்னும் மலை நாட்டில் எல்கானா என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் நம்பிக்கையிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு அன்னா, பென்னினா என்று இரண்டு மனைவியர் இருந்தனர். எல்கானா தம் மனைவியரோடு ஆண்டுதோறும் சீலோ என்னும் இடத்துக்குச் சென்று, அங்குள்ள ஆலயத்தில் கடவுளுக்குப் பலியிடுவதையும் அவரிடம் வேண்டுதல்களை நிறைவேற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அந்த ஆலயத்தில் குருவாக இருந்தவர் ஏலி என்பவர். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

பென்னிகாவிற்கு கடவுள் மழலைச் செல்வங்களைக் கொடுத்து மகிழ்ச்சியாய் வைத்திருந்தார். அன்னாவுக்கோ குழந்தைப் பாக்கியமே இல்லை.

குடும்பமாகக் கடவுளுக்குப் பலியிடச் செல்லும்போதெல்லாம் அன்னா தனக்குப் பிள்ளைகள் இல்லையே என மிகவும் வருந்துவாள்.

‘ ஏய் அன்னா…. குழந்தைகள் இல்லாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா ? வெட்கமாக இல்லை ? ஒரு மலடி கூட நடப்பதே எனக்கு அருவருப்பாய் இருக்கிறது’

‘குழந்தை என்பது கடவுளின் பரிசு. அது பாவிகளுக்குக் கிடைக்காது ‘

‘நல்ல மனம் படைத்தவர்களுக்கே கடவுள் தாய்மையைத் தருவார் ‘ என்னும் பென்னிகாவின் குத்தல் பேச்சுகள் அன்னாவை வாட்டி வதைத்தன.

ஆனால் எல்கானா அன்னாவின் மனதைப் புண்படுத்தியதே இல்லை. அவர் அவளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார்.

‘ஏன் கடவுள் எனக்குக் குழந்தையைத் தரவில்லை’ என்று கூறி அன்னா அழும்போதெல்லாம்.
‘அதுக்காக ஏன் அழுகிறாய் அன்னா ? நான் உனக்கு பத்து குழந்தைகளுக்குச் சமம் இல்லையா ?’ என்று கூறு அன்னாவைச் சமாதானப் படுத்துவார். ஆனாலும் அந்த வார்த்தைகள் ஏதும் அன்னாவை ஆறுதல் படுத்தவில்லை. தொடர்ந்து அவள் ஆண்டவரிடம் தன் குறையைச் சொல்லி விண்ணப்பித்துக் கொண்டே இருந்தாள்.

ஒருநாள் சீலோவில் அவர்கள் பலியிடச் சென்றபோது அன்னா தனியாக ஆலயத்தில் ஆண்டவரின் சன்னிதி முன் நின்று
அழுது, புலம்பி செபித்துக் கொண்டிருந்தாள்.

‘ஆண்டவரே… எனக்கு ஒரு மகனைக் கொடும். எனக்கு இருக்கும் மலடி என்னும் பட்டத்தை நீக்கும். நீர் எனக்கு ஒரு ஆண்குழந்தையைத் தந்தால் அவனை உமது சந்திதியிலேயே விட்டு விடுவேன். அவன் உம் பிள்ளையாய் இருப்பான்’ என்று தொடர்ந்து வேண்டிக் கொண்டே இருந்தாள்.

அன்னா மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டுமே அசைந்து கொண்டிருந்தன. அன்னா வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை ஏலி பார்த்தார். அன்னா குடிபோதியில் ஏதோ பிதற்றிக் கொண்டிருப்பதாக நினைத்தார்.

‘ஏய்… ஆலயத்துக்குள் மது அருந்திவிட்டு வந்திருக்கிறாயே ? உனக்கு வெட்கமாக இல்லை ? கடவுளின் முன்னிலையில் வரும்போது மது அருந்திவிட்டு வரலாமா ? அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உளறிக்கொண்டிருக்கிறாயா ? வெளியே போ ?’ ஏலி கத்தினார்.

அன்னா கலங்கிய விழிகளோடு நிமிர்ந்தாள்.

‘இன்னும் எத்தனை காலம் தான் மது அருந்தி மயங்கிக் கிடப்பாய். இந்த பழக்கத்தை நிறுத்தி விடு’ ஏலி குரலில் கொஞ்சம் கோபம் கலந்து பேசினார்.

‘ஐயா… என்னை ஒரு குடிகாரியாக நினைக்காதீர்கள். நான் மது அருந்தவில்லை. என்னுடைய குறையை நான் ஆண்டவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்’ அன்னா சொன்னாள்.

‘உண்மையாகவா ? நீ குடித்துக் கொண்டு உளறுவதாய் நினைத்து விட்டேன். என்னை மன்னித்து விடு… உனக்கு என்ன குறை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா ?’ ஏலி பரிவோடு கேட்டார்.

அன்னா அழுதாள். ‘எனக்கு குழந்தைகள் இல்லை. கடவுள் எனக்கு குழந்தைச் செல்வத்தைத் தராததால் எல்லோரும் என்னை ஏளனமாகப் பேசுகிறார்கள். அதனால் கடவுளிடம் ஒரு குழந்தைச் செல்வத்திற்காக வேண்டினேன்’.

‘கவலைப் படாதே.. கடவுள் உனக்கு மிக விரைவிலேயே ஒரு ஆண் குழந்தையைக் கொடுப்பார்’ ஏலி வாழ்த்தினார்.

ஏலியின் அன்பான வார்த்தைகள் அன்னாவை ஆறுதல் படுத்தின. ‘ஐயா… உங்கள் வாக்கு பலிக்கட்டும். கடவுள் எனக்கு ஒரு ஆண் குழந்தையைத் தந்தால் அவனை இதே ஆலயத்தில் கடவுளின் பணிக்கென ஒப்படைப்பேன்’ அன்னா வாக்குறுதி கொடுத்தாள்.

அன்னாவின் வேண்டுதல் ஆண்டவனைத் தொட்டது. விரைவிலேயே அன்னா கர்ப்பமடைந்தாள்.

அன்னாவின் ஆனந்தம் கரைபுரண்டது. அவள் எப்போதும் ஆண்டவரைப் போற்றிக் கொண்டே இருந்தாள். அன்னாவை குத்திப் பேசிக் கொண்டிருந்த பென்னினா வாயடைத்துப் போனாள்.

பிரசவ வேளை வந்தது. அன்னா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அது ஒரு அழகான ஆண்குழந்தை. அவனைப் பார்த்த அன்னாவின் கண்களும், தந்தை எல்கானாவின் கண்களும் ஆனந்தத்தில் நிறைந்தன. குழந்தைக்கு ‘சாமுவேல்’ என்று பெயரிட்டனர். சாமுவேல் என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று பொருள்.

அன்னா தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறியதை நினைத்துப் பூரித்தாள். குழந்தையை நெஞ்சோடணைத்துத் தாலாட்டினாள். குழந்தை பால் குடிப்பதை நிறுத்திய வயதில் அவனை ஆலயத்துக்கு எடுத்துப் போனாள்.

ஆலயத்துக்குச் சென்று ஏலியின் முன்னால் நின்றாள்.

‘ஐயா… என்னைத் தெரிகிறதா ?’ அன்னா கேட்டாள்.

‘சட்டென நினைவுக்கு வரவில்லை…’ ஏலி யோசித்தார்.

‘நான் தான். கடந்தமுறை ஆண்டவரிடம் அழுது வேண்டிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஆறுதல் படுத்தினீர்களே… அந்த அன்னா தான் நான்’ அன்னா சொன்னாள்.

அன்னாவின் கையிலிருந்த குழந்தையைப் பார்த்த ஏலி பரவசமானார்.
‘அப்படியானால்… கடவுள் உன் வேண்டுதலைக் கேட்டார் ! அப்படித்தானே ! அவர் பெயர் போற்றப் படட்டும்’ என்றார்.

‘ஆம்… கடவுள் என் அவப்பெயரை நீக்கினார். இதுதான் அவர் தந்த பரிசு. சாமுவேல். இதோ அவனை நான் இந்த ஆலயத்தில் விட்டுச் செல்கிறேன். அவன் இனி கடவுளின் ஆலயத்தில் வளரட்டும்.’ என்றாள்.

‘கவலைப் படாதே. நான் அவனைப் பராமரிப்பேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரே பிள்ளையைக் கூட குழந்தை பால்குடிப்பதை நிறுத்தியதும் ஆண்டவன் முன்னிலையில் கொண்டு விட்டாயே ! உன் இறைபக்தி பெரிது. கடவுள் உனக்கு மேலும் குழந்தைகள் தந்து ஆசீர்வதிப்பார்’ ஏலி அவளை வாயார வாழ்த்தினார்.

அன்னா மகிழ்ந்தாள்,’ கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துவார், உயர்ந்தோரைத் தாழ்த்துவார். எல்லோரும் எப்போதும் அழவோ, எப்போதும் சிரிக்கவோ அவர் அனுமதிப்பதில்லை’ என்றாள்.

சாமுவேல் ஆலயத்தில் வளர்ந்தான். நல்ல அமைதியான குணமும், நன்னடத்தையும் அவனிடம் இயற்கையாகவே அமைந்திருந்தன. ஏலியின் அருகாமை அவனை இன்னும் பக்தியில் ஆழமாகச் செய்தது.

ஏலிக்கு இருந்த இரண்டு மகன்களும் தந்தைக்கு நேர் எதிராக இருந்தனர். ஆலயத்துக்கு வரும் பெண்களிடம் வம்பு செய்வதும், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுமாக இருந்தனர். கடவுளுக்கு இஸ்ரயேலர்கள் பலிசெலுத்த வரும்போது பலிப் பொருட்களையும், பலியையும் அவமதித்தும் வந்தார்கள்.

ஏலி அவர்களை அழைத்து ‘ இதெல்லாம் கடவுளுக்கு விரோதமான செயல்… உடனே நிறுத்துங்கள்’ என்றார்.

‘எது கடவுளுக்கு விரோதம் ? எந்தக் கடவுளுக்கு ??’ ஏலியின் பிள்ளைகள் ஏளனம் செய்தனர்.

‘மனிதருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தால் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கலாம். நீங்கள் கடவுளுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள்’ ஏலி மீண்டும் எச்சரித்தார்.

‘கடவுளே சும்மா இருக்கிறார். நீ ஏன் முதிர்ந்த காலத்தில் முணுமுணுக்கிறாய்’ பிள்ளைகள் தந்தையை கிண்டலடித்தார்கள்

கடவுள் அவர்கள் மேல் கோபம் கொண்டார்.

சாமுவேல் கடவுளின் முன்னிலையில் பக்தியாய் இருந்து, தூபம் காட்டி, ஆலயப் பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வந்தான்.

ஒருநாள் இரவு. ஏலி தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சாமுவேல் ஆலயத்தில் ஆண்டவன் சன்னிதானத்தின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

‘சாமுவேல்…. சாமுவேல்….’ இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு குரல் தெளிவாய்க் கேட்டது.

சாமுவேல் எழுத்து ஏலியின் அருகே ஓடினான்.
‘ஐயா.. ஏன் அழைத்தீர்கள் ?’ சாமுவேல் கேட்டான்.

‘நான் அழைக்கவில்லையே சாமுவேல். நீ ஏதேனும் கனவு கண்டிருப்பாய்…’ ஏலி சொன்னார். சாமுவேல் மீண்டும் தன்னுடைய இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.

‘சாமுவேல்… சாமுவேல்’ மீண்டும் குரல் ஒலித்தது. சாமுவேல் மீண்டும் ஏலியின் இடத்துக்கு ஓடினான்.

‘இந்த முறை நீங்கள் தானே அழைத்தீர்கள் ? கனவில்லை தானே ?’ சாமுவேல் கேட்டான்.

‘இல்லை சாமுவேல். நான் அழைக்கவில்லை. போய்த் தூங்கு. சோர்வாய் இருக்கிறாய் என நினைக்கிறேன். அதனால் தான் யாரோ அழைப்பது போல உனக்குக் கேட்கிறது’ ஏலி சொன்னார். சாமுவேல் மீண்டும் வந்து படுத்துக் கொண்டான்.

‘சாமுவேல் …. சாமுவேல்’ மூன்றாம் முறையாகக் குரல் ஒலித்தது. சாமுவேல் ஏலியிடம் போனான்.

‘ஐயா… மூன்று முறை என்னை அழைத்தீர்கள். ஏன் என்று சொல்லவேயில்லை’ சாமுவேல் சொன்னான்.

ஏலிக்கு மனசுக்குள் ஏதோ ஒன்று மின்னியது. சாமுவேலை அழைப்பது கடவுள் தான் என்று புரிந்து கொண்டார்.
‘சாமுவேல்.. இனிமேல் உன்னை யாராவது அழைக்கும் சத்தம் கேட்டால்… ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன் என்று சொல்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

சாமுவேல் வந்து படுத்துக் கொண்டான். ஆண்டவர் சாமுவேலை மீண்டும் அழைத்தார்.

‘ஆண்டவரே… பேசும்… உம் அடியேன் கேட்கிறேன்…’ சாமுவேல் கூறினான்.

‘ஏலியின் பிள்ளைகள் வழி தவறி விட்டார்கள். திருந்துவதற்காக நான் அமைத்துக் கொடுத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டார்கள். எனவே அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கூட அழிக்கப் போகிறேன். இனிமேல் உன்னோடு நான் இருப்பேன். ஏலியின் குடும்பத்தினரோடு எனக்கிருந்த உறவை விலக்கிக் கொள்வேன்’ என்றார்.

சாமுவேல் கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு வருத்தமடைந்தான். மறுநாள் காலையில் ஏலி வந்து சாமுவேலை எழுப்பினார்.

‘சாமுவேல்… சாமுவேல்… ‘

சாமுவேல் எழுந்தான். ‘ சொல்லுங்கள் ஐயா…’

‘நேற்று கடவுளிடம் பேசினாயா ?’ ஏலி கேட்டார்.

‘பேசினேன்…’ சாமுவேல் சுருக்கமாய் சொன்னான்.

‘கடவுள் உன்னோடு என்ன பேசினார் ?’ ஏலி மீண்டும் கேட்டார்.

‘அது… வந்து…..’ சாமுவேல் இழுத்தான்.

‘சொல் சாமுவேல்… பொய்சொல்வதும், என்னிடம் உண்மையை மறைப்பதும் பாவச் செயல். நீ உண்மையைச் சொல்’ ஏலி வற்புறுத்த சாமுவேல் உண்மையைச் சொன்னார். ஏலி மிகவும் மனவருத்தமடைந்தார். ‘கடவுளுக்கு எதிராய்ப் பேச நான் யார் ?’ என்று அவருடைய உதடுகள் முணு முணுத்தன.

சிறிது நாட்களில் பிலிஸ்தியர் இஸ்ரயேலர் மீது படையெடுத்து வந்து அவர்களைத் தாக்கினார்கள். பிலிஸ்தியரின் வலிமைக்கு முன் இஸ்ரயேலர்கள் தோற்றுப் போனார்கள். தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுள் எப்போதும் இஸ்ரயேலரோடு இருக்கிறாரே, பின் எப்படி இந்தமுறை தோற்றுப் போனோம் ? என்று இஸ்ரயேலர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்கள்.

‘கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய உடன்படிக்கைப் பேழையை நாம் போரிடும் இடத்துக்குக் கொண்டு போவோம்… கடவுள் நம்மைக் காப்பார்…’ என்று முடிவெடுத்தனர். பிலிஸ்தியர்கள் மீண்டும் தாக்கியபோது கடவுளின் பேழை இஸ்ரயேலரோடு இருந்தது. ஆனால் இந்த முறையும் பிலிஸ்தியரே வென்றனர். ஏலியின் பிள்ளைகள் இருவரும் போரில் கொல்லப்பட்டனர். கடவுளின் பேழையும் பெலிஸ்தியரால் கவர்ந்து செல்லப் பட்டது.

பெலிஸ்தியர்கள் பேழையை எடுத்துக் கொண்டு தாகோன் என்னும் தெய்வத்தின் கோயிலில் தாகோனின் சிலைக்கு முன்பாக வைத்தார்கள். மறுநாள் காலையில் வந்து பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். தாகோனின் சிலை பேழைக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடந்தது.

அவர்கள் அதை நிமிர்த்தி வைத்தார்கள். ஆனால் மறுநாளும் அது அப்படியே கிடந்தது.
மீண்டும் அவர்கள் சிலையை நிமிர்த்தி வைத்து ஆலயத்தை நன்றாகப் பூட்டினார்கள்.

மறுநாளும் சிலை பேழை முன்னால் விழுந்து கிடந்தது. அதன் கைகள் வெட்டப்பட்டிருந்தன. பிலிஸ்தியர் இதைக் கண்டு மிகவும் பயந்து போனார்கள்.

அந்த பேழையைப் பெலிஸ்தியர்கள் தங்கள் நாட்டில் கொண்டு வைத்தது முதல் மக்களுக்கு நோய்கள் வர ஆரம்பித்தன. கடவுள் அந்த நகரின் பெரும்பாலானோரை மூல நோயால் தாக்கினார். அந்தப் பேழை இருந்த ஏழு மாத காலமும் மக்கள் பிணியாளிகளாய் நடமாடினர்.

‘இனிமேலும் இது இங்கே இருக்கக் கூடாது…. ஏதாவது செய்யுங்கள்’ மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது

‘என்ன செய்வது ? ‘ தலைவன் கேட்டான்.

‘உடைப்பதோ, அழிப்பதோ மீண்டும் பெரிய ஆபத்தையே உண்டாக்கும். பேசாமல் மீண்டும் இதை இஸ்ரயேலரிடமே ஒப்படைப்போம்’ பலர் சொன்னார்கள்.

தலைவன் குறி சொல்வோரை அழைத்து யோசனை கேட்டார். அவர்களோ,’ இதை இஸ்ரயேலரிடம் திருப்பி அனுப்பலாம். ஆனால் அதற்கு முன் நீங்கள் பரிகாரமாக ஐந்து மூலக் கட்டிகளின் உருவங்களையும், ஐந்து சுண்டெலி உருவங்களையும் பொன்னினால் செய்து பேழையோடே அனுப்பி வையுங்கள்.’ என்றார்கள்

அவ்வாறே அவர்கள் ஒரு மாட்டு வண்டியில் பேழையையும் பரிகார பொன் உருவங்களையும் வைத்தார்கள். மாடுகள் நேராக இஸ்ரயேலரின் நாட்டை நோக்கி ஓடியது ! அந்த வண்டி சென்ற இடங்களிலெல்லாம், அந்தப் பேழையை உற்று நோக்கிய கெட்டவர்கள் எல்லாரும் அழிந்தார்கள். மர்மமான முறையில் மரித்தார்கள். கடவுளின் பேழை மீண்டும் தன்னுடைய இடத்துக்கே வந்து சேர்ந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள்.

சாமுவேல் இஸ்ரவேல் இன மக்களுக்கு வழிகாட்டியானார். பிலிஸ்தியர்கள் மீண்டும் படையெடுத்தனர். ஆனால் இந்த முறை கடவுள் சாமுவேலுடன் இருந்தார். பிலிஸ்தியர்கள் ஓட ஓட விரட்டப் பட்டனர்.

சாமுவேல் தன்னுடைய முதுமைக் காலம் வரை இஸ்ரயேல் மக்களுக்குத் தலைவராக இருந்தார். கடவுள் அவரோடும் இஸ்ரயேலரோடும் இருந்து அவர்களை வழிநடத்தினார்.

எனது கி.மு விவிலியக் கதைகள் நூலிலிருந்து

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

பைபிள் கதைகள் : ரூத்

யூதா நாட்டில் ஒருமுறை கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் எல்லோரும் உயிர் பிழைப்பதற்காக தங்கள் வீடுகளைக் காலிசெய்து விட்டு வளமான இடங்களை நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். எலிமேக்கு என்பவரும் தன்னுடைய மனைவி நகோமி, மற்றும் இரண்டு மகன்களோடும் தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமை விட்டு மோவாப் என்னுமிடத்திற்குக் குடிபெயர்ந்தார்.

மோவாப்பில் எலிமேக்கு குடும்பத்தினருக்குக் குறை ஏதும் இருக்கவில்லை. அவர்கள் நிறைவாக உண்டு வளமோடு வாழ்ந்து வந்தார்கள். சில ஆண்டுகள் சென்ற பின் இரண்டு மகன்களுக்கும் மோவாபிலேயே ஓர்பாள், ரூத் என்னும் இரண்டு பெண்களைத் திருமணம் முடித்து வைத்தார்கள்.

அப்போதுதான் சோதனைப் புயல் அவர்கள் வாழ்வில் கரைகடந்தது. எலிமேக்கும் அவனுடைய புதல்வர்களும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நகோமியும், அவளுடைய மருமகள்கள் இருவரும் தனித்து விடப்பட்டார்கள். ஆதரவாய் இருந்த ஆண்கள் மூன்றுபேருமே இறந்து விட்டதால் அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.

நகோமி தன்னுடைய மருமகள்களை அழைத்து,’ நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் குலத்தினரோடு சேர்ந்து வாழுங்கள். இளமையோடிருக்கும் நீங்கள் கணவன் இல்லாமல் எத்தனை காலம் தான் தனியாய் வாழ்வது. மீண்டும் மணம் முடித்து உங்கள் வாழ்வைப் புதிதாய் துவங்குங்கள்’ என்றாள்.

அதற்கு அவர்கள்,’ இல்லை… நாங்கள் உங்களை விட்டு எங்கும் போக மாட்டோ ம்’ என்று அழுதார்கள்.

‘அழாதீர்கள். என்னுடைய மகன்கள் இறந்ததால் நீங்கள் மிகவும் வருந்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமானதாக அமைத்துக் கொள்வது தான் முறை.’ என்றாள்.

அவர்களோ,’ இல்லை நாங்கள் உங்களோடு தான் இருப்போம்’ என்றார்கள்

மருமகள்களுடைய பாசத்தைக் கண்ட நகோமியின் கண்களின் கண்ணீர் நிறைந்தது. ‘ உங்கள் பாசத்தை எண்ணி நான் பெருமைப் படுகிறேன். ஆனாலும் எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் உங்களுக்கு அவர்களை மணமுடித்து வைத்திருப்பேன். இனிமேல் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அப்படியே நான் பெற்றுக் கொண்டாலும், அவர்கள் வளர்ந்து திருமணவயதாகும் வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் உங்களுடைய இளமை தான் வீணாகும். எனவே பிடிவாதம் பிடிக்காமல் போய் வாருங்கள். போய் வாழுங்கள்.’ என்றாள்.

ஓர்பாள், மாமியாரின் பேச்சைக் கேட்டாள்,’ எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் உங்களுடைய அறிவுரையை ஏற்கிறேன். நான் என்னுடைய வீட்டுக்குப் போகிறேன்.’ என்று சொல்லி நகோமியிடம் ஆசிவாங்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

ஆனால் ரூத் போகவில்லை. ‘ நீர் என்னுடைய மாமியார். இனிமேல் உங்கள் குடும்பம் தான் என் குடும்பம். உங்கள் இனம் தான் என் இனம். உங்களோடு வந்து, உங்களோடு வாழ்ந்து, உங்களோடு இறந்து போவேன்’ என்றாள்.

நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் மாமியாரை விட்டுப் போக மறுத்துவிட்டாள். எனவே நகோமி ரூத்தையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமிற்கு வந்தார். அப்போது யூதா நாட்டில் நிலவிவந்த பஞ்சம் விலகியிருந்தது. செழிப்பான நிலங்களில் எல்லாம் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது.

பெத்லேகேமில் நுழைந்தவுடன் எல்லோரும் நீண்ட நாட்கள் கழிந்து வந்திருந்த நகோமியைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள். அவளோ, ‘ இனிமேல் என்னை நகோமி என்றழைக்காதீர்கள். மாரா என்றழையுங்கள். அந்த அளவுக்கு கஷ்டத்தை என் வாழ்வில் சந்தித்து விட்டேன். கடவுள் எனக்கு ஏராளமான சோதனைகளைத் தந்தார்’ என்றாள். மாரா என்றால் கசப்பு என்பது பொருள். மக்கள் எல்லோரும் நகோமியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகத்தை அறிந்து மிகவும் வருந்தினார்கள்.

ரூத், மாமியாரிடம் மிகவும் அன்பு கொண்டு அவளை ஒரு தாய் போல பராமரித்து வந்தாள்.
ஒருநாள் ரூத் மாமியாரை நோக்கி,’ அம்மா… நான் இன்னும் எத்தனை நாள் தான் தனியே வீட்டில் உங்களுக்குப் பாரமாய் இருப்பது. இன்று நான் வயல் வெளிக்குப் போகிறேன். அங்கே நல்ல மனம் படைத்த எவருடைய வயலிலாவது போய் உதிரும் கோதுமைகளைப் பொறுக்கி வருகிறேன். நீங்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றாள்.

அந்தக் காலத்தில் ஏழைகள் அறுவடைக் காலங்களில் வயல்வெளிகளுக்குச் சென்று தரையில் உதிரும் தானிய மணிகளை வயலின் சொந்தக்காரரின் அனுமதியோடு சேகரித்துக் கொள்வது வழக்கம். நகோமி தன்னுடைய வறுமை நிலையையும், உதிரும் கதிர்களைப் பொறுக்கி வாழும் நிலைக்கு தன்னுடைய மருமகளைக் கொண்டு வந்து விட்டதையும் நினைத்து வருந்தினாள். ஆனாலும் அவளால் எதையும் மறுத்துப் பேச முடியவில்லை. அனுமதியளித்து அனுப்பிவைத்தாள்.

ரூத் வயல்வெளிக்குச் சென்றபோது ஒரு வயலில் வாற்கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அவர் அங்கு சென்று அறுவடையாளர்களின் பின்னே நடந்து தரையில் உதிரும் ஒருசில கோதுமை மணிகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். அது தன்னுடைய மாமியாரின் நெருங்கிய உறவினர் போவாசு என்பவருடையது என்பதை ரூத் அறிந்திருக்கவில்லை.

மாலையில் போவாசு தன்னுடைய நிலத்தில் அறுவடை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்தார். வயலின் அருகே நிழலில் ஒரு அழகான இளம் பெண் படுத்து இளைப்பாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேலையாட்களை அழைத்தார்.
‘யாரிந்தப் பெண் ? நான் இதுவரை பார்த்ததேயில்லையே ?’

‘தலைவரே… இவள் நகோமியின் மருமகள். அவர்கள் நீண்டகாலமாக வெளியூரிலே தங்கியிருந்து விட்டு சமீபத்தில் தான் மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்’ வேலையாட்கள் கூறினர்.

‘ஓ.. நகோமியின் மருமகளா ? அவளுடைய கணவன் எலிமேக்கு என்னுடைய நெருங்கிய சொந்தக்காரனாயிற்றே. அவன் எப்படி இருக்கிறான் ? ‘ போவாசு விசாரித்தான்

‘தலைவரே… எலிமேக்கு இறந்து விட்டார்’

‘ஐயோ… நல்ல ஒரு மனிதர். அவர் இறந்து விட்டாரா ? அப்படியானால் ரூத்தும் , நகோமியின் மகன்களும் தான் இங்கே இருக்கிறார்களா ?’

‘இல்லை. எலிமேக்கின் இரண்டு மகன்களும் கூட இறந்து விட்டார்கள். இப்போது ரூத்தும், நகோமியும் மட்டும் தான் தனியே தங்கியிருக்கிறார்கள்’ வேலையாட்கள் விவரித்தனர்

போவாசு அதிர்ந்தார். ‘ ஐயோ… பாவம். கணவன் இறந்தால் ரூத்தை அவளுடைய சொந்த வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே. பாவம் இந்தப் பெண்ணும் இங்கே வந்து கஷ்டப்பட வேண்டுமா ?’ போவாசு வருந்தினார்.

‘இல்லை தலைவரே… அந்தப் பெண் கணவனின் இனத்தின் மீதும், தன்னுடைய மாமியாரின் மீதும் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறாள். இனிமேல் இந்த குலம் தான் என் குலம் என்று சொல்லி இங்கே வாழ வந்திருக்கிறாள். நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் அவளைவிட்டு விட்டுப் போக மறுத்துவிட்டாள்’ என்றனர் வேலையாட்கள்.

போவாசு, ரூத்தின் மன உறுதியையும், நல்லெண்ணத்தையும் நினைத்து வியந்தார். அவர் வேலையாட்களிடம்,’ இவள் என்னுடைய உறவினர் மகள். இவளைக் காப்பாற்றும் கடமை எனக்கு உண்டு. எனவே நீங்கள் கதிரறுக்கும் போது நிறைய கதிர்களை உருவி விடுங்கள். அவள் அதைப் பொறுக்கிக் கொள்ளட்டும்’ என்றார்.

சொல்லிவிட்டு ரூத்தை எழுப்பினார்.
‘ ரூத்… நான் தான் இந்த நிலத்தின் உரிமையாளன். உன்னுடைய மாமனாரின் நெருங்கிய உறவினர். உன்னைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டேன். உன்னுடைய நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்கிறேன். இனிமேல் நீ வேறெங்கும் போய் கதிர் பொறுக்க வேண்டாம். என்னுடைய வயலில் மட்டும் கதிர் பொறுக்கு. இங்குள்ள வேலையாட்களோ, கண்காணிப்பாள்ர்களோ உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்’ என்றாள்.

ரூத் அவருடைய கால்களில் விழுந்து,’ அயல்நாட்டுப் பெண்ணான என்னைக் கூட சொந்த இனப் பெண்ணைப் போல பாசமாய் நடத்துகிறீர். உங்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்றாள்

போவாசு அன்றைய மாலை உணவை அவளோடு அந்த வயலோரத்தில் பகிர்ந்து உண்டார்.

அதன் பின் போவாசு கிளம்பினார். வேலையாட்கள் அவர் சொல்லியிருந்தபடி ஏராளமான கதிர்களை வயலில் உருவி விட்டனர். ரூத் மறுபடியும் கதிர் பொறுக்க வயலில் இறங்கியபோது வயல் முழுதும் ஏராளம் கதிர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டாள். எல்லாவற்றையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய வீடு திரும்பினாள்.

ரூத் நடந்தவற்றையெல்லாம் தன்னுடைய மாமியாரிடம் சொல்ல, மாமியார் மகிழ்ந்தார்.
‘ மகளே கவலைப்படாதே… போவாசு நம் நெருங்கிய உறவினர் தான். எனவே நீ தைரியமாக அவருடைய நிலத்தில் மட்டும் சென்று வா. மற்ற இடங்களுக்குப் போனால் உன்னுடைய அழகைக் கண்டு ஆண்கள் உன்னை பலவந்தம் செய்யக் கூடும். உனக்குப் பாதுகாப்பு இருக்காது’ என்றாள்.

ரூத்தும் மாமியாரின் சொற்படி போவாசின் நிலத்தில் மட்டுமே சென்று வந்தாள்.

சில நாட்கள் கடந்தபின் நகோமி ரூத்தை அழைத்து,’ ரூத்… நீ நன்றாகக் குளித்து நல்ல தூய்மையான ஆடையை உடுத்திக் கொண்டு, நறுமணத்தைலங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு இன்றிரவு களத்துக்குப் போ. போவாசு வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார். அதன் பின் அவர் உறங்குவதற்காகக் கூடாரத்துக்குள் போவார். கொஞ்ச நேரம் கழிந்து நீயும் அவருடைய கூடாரத்துக்குள் போய் அவருடைய கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு அங்கேயே படுத்துக் கொள்’ என்றாள்.

ரூத் அவ்வாறே செய்தாள்.

இரவில் கண்விழித்த போவாசு தன்னுடைய கால்களின் அருகே அழகுப் பதுமை ரூத் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

‘யார் நீ…. எப்படிக் கூடாரத்துக்குள் வந்தாய்’ என்று சினந்தார்.

‘மன்னியுங்கள். நான் தான் ரூத். உங்களுக்கு என்மீது உரிமை உண்டு. நீங்கள் விரும்பினால், இந்தப் போர்வையை எடுத்து என் மீது போர்த்துங்கள் அப்போது நான் உங்கள் உடமையாவேன்’ என்றாள்.

போவாசு மகிழ்ந்தார்.’ ரூத். நீ இளமையானவள், அழகானவள். என்னிடமோ இளமையும் அழகும் இல்லை’ என்றார்.

‘இளமையும், அழகும் எனக்கு முக்கியமில்லை. உங்களுக்குத் தானே என்மீது அதிக உரிமை’ என்றாள் ரூத்.

‘ரூத், இளமையானவர்களைத் தேடிப் போகாமல், உரிமையுள்ளவனைத் தேடிவந்த உன்னை நினைத்து நான் மகிழ்கிறேன். ஆனாலும் என்னைவிட உன்மீது அதிக உரிமையுள்ளவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் முதலில் பேசுவது தான் முறை. அவனிடம் நான் உன்னைப் பற்றிப்பேசுகிறேன். அவன் அழகும் இளமையும் நிறைந்தவன். ஒருவேளை அவன் உன்னை நிராகரித்தால் நான் மிகவும் மகிழ்வோடு உன்னை ஏற்றுக் கொள்வேன்’ என்றார். ரூத் சம்மதித்தாள். மறுநாள் விடியும் முன் யார் கண்ணிலும் படாமல் கூடாரத்தை விட்டு வெளியேறினாள்.

போவாசு, ரூத் மீது அதிக உரிமையுள்ள அந்த மனிதரைச் சந்தித்தார்.

‘நகோமி தன்னுடைய சொத்தில் ஒருபாகத்தை விற்கப் போகிறாராம் வாங்குகிறீரா ?’ போவாசு கேட்டார்.

‘கண்டிப்பாக வாங்குவேன். எனக்குத் தான் அதிக உரிமை’ என்றார் அவர்.

‘அத்தோடு கூடவே அவருடைய மருமகள் ரூத்தையும் நீரே மணமுடித்துப் பாதுகாக்க வேண்டும்’ போவாசு சொன்னார்.

‘ஐயோ… அதெல்லாம் முடியாது. வேறு குலத்தைச் சேர்ந்த அவளையெல்லாம் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நிலத்தை மட்டுமென்றால் வாங்குவேன். கூடவே கிடக்கும் ரூத் எனக்குத் தேவையில்லை’ என அந்த நபர் மறுத்தார்.

‘இல்லை… நீர் மறுப்பதாய் இருந்தால் இரண்டையும் மறுக்கவேண்டும். அப்படி மறுத்தால் அந்தக் குடும்பத்தின் மீது உங்களுக்கு இனிமேல் எந்தவிதமான உரிமையும் இருக்கப் போவதில்லை. அதற்கு உடன்பட்டால் ஊர் பெரியவர்கள் முன்னிலையின் உம்முடைய செருப்பைக் கழற்றி என் கைகளில் வையும்’ என்றார்.

அவர் சம்மதித்து, ஊர்ப் பெரியவர்களின் முன்னிலையில் தன்னுடைய செருப்பைக் கழற்றி போவாசின் கைகளில் கொடுத்தார். அப்படிச் செருப்பைக் கழற்றிக் கைகளில் வைத்தால் இனிமேல் அந்தப் பொருளில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது பொருள்.

போவாசு மகிழ்ந்தார். ரூத்தை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டார். தன் கணவனுடைய குலத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் பற்றுக் கொண்டிருந்த ரூத்துக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

தமிழிஷில் வாக்களிக்க…

கிமு : சிம்சோன் – வியப்பூட்டும் கதை !

இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரிடம் அடிமைகளாக இருந்த காலம். அங்கு மனோவாகு என்றொருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகளே இல்லை.  தனக்கு ஒரு குழந்தைபாக்கியம் இல்லையே என மனோவாகுவின் மனைவி மிகவும் வருந்தினாள். அவள் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடிக் கொண்டே இருந்தார்.

கடவுளின் தூதர் ஒருநாள் அவளுக்கு முன்பாக வந்து நின்று, ‘ கடவுள் உனக்கு ஒரு குழந்தையைத் தரப் போகிறார். எனவே நீ இன்றுமுதல் திராட்சை ரசமோ, மதுவோ அருந்தக் கூடாது. தீட்டான எதையும் உண்ணக் கூடாது’ என்றார்.

‘எனக்கா ? குழந்தை பிறக்கப் போகிறதா ‘ அவள் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்து கேட்டாள்.

‘ஆம். கடவுள் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அவன் மூலம் பெலிஸ்தியர்களிடம் அடிமையாய் இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலையாக்கப் போகிறார்’ தூதர் சொன்னார்.

அவள் எதுவும் பேசாமல் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூதர் தொடர்ந்தார். ‘ உன் மகன் மிகப் பெரிய வீரனாக இருப்பான். அவன் கடவுளுக்கானவன், அவனுடைய தலையில் சவரக் கத்தி படவே கூடாது’.

அவள் இதையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போய் வீட்டை நோக்கி ஓடினாள். ஓடிச் சென்று தன் கணவனிடம் தான் கண்டதையெல்லாம் கூறினாள். அவனும் வியப்பும், சந்தேகமும் கலந்த மனநிலையில் இருந்தான்.

‘தூதர் என்ன சொன்னார் ?’ மனோவாகு கேட்டார்.

‘நமக்குப் பிறக்கும் மகன் பெரிய வீரனாக, பெலிஸ்தியரை வீழ்த்துபவனாக வருவானாம்’

‘வேறென்ன சொன்னார் ?’

‘ஏதோ சவரக் கத்தி அவன் தலையில் படக்கூடாது என்று சொன்னார்… என்று நினைக்கிறேன்’ அவள் பதில் சொன்னார்.

‘என்ன சொன்னார் என்பதே நினைவில்லையா ? கடவுள் சொன்ன எதையும் நாம் மீறிவிடக் கூடாது. அதற்காக கடவுள் என்ன சொன்னார் என்பதை மிகவும் தெளிவாய் அறிந்து கொள்வது அவசியம்’ என்ற மனோவாகு கடவுளை நோக்கி மன்றாடினார்.
‘கடவுளே இது உமது சித்தமென்றால் எங்களுக்கு இன்னொரு முறை காட்சி தந்து நாங்கள் மகனை எப்படி வளர்த்த வேண்டும் என்பதைச் சொல்லித் தாரும்’ என்று வேண்டினார்.

கடவுள் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தூதர் வழியாகக் காட்சிதந்தார். முதலில் சொன்ன அனைத்தையும் தூதர் அவர்கள் இருவரிடமும் சொன்னார். அவர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த மன நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின் மனோவாகு அங்கேயே கடவுளுக்கு ஒரு ஆட்டுக் குட்டியைப் பலியாகச் செலுத்தினார். அவர் பலி செலுத்திய நெருப்பு மேல்நோக்கி எரிந்தபோது கடவுளின் தூதனும் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் தரையில் வீழ்ந்து கடவுளை வனங்கினர்.

கடவுளின் தூதர் சொன்னபடியே மனோவாகுவின் மனைவி கர்ப்பமானாள். நீண்ட நாட்களுக்குப் பின் முதன் முதலாக கர்ப்பமான மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்தார்கள். மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

பேறுகாலம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். கடவுளின் தூதர் கட்டளையிட்டிருந்தபடி அவனுடைய தலை மயிரை அவர்கள் கத்தரிக்கவே இல்லை.

சிம்சோன் மிகவும் வலிமைசாலியாய் வளர்ந்தான். ஒருநாள் அவன் திமினா என்னும் ஊருக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்னைச் சந்தித்தான். அவளுடைய அழகில் சிம்சோன் தன்னை மறந்தான். மணந்தால் அவளைத் தான் மணக்கவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டார். நேராக பெற்றோரிடம் வந்தான்,
‘அப்பா… எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்’

‘கண்டிப்பாக… உனக்குப் பிடித்திருந்தால் போதும். யாரவள் ? யாருடைய மகள் ?’ தந்தை கேட்டார்.

‘அவள் ஒரு பெலிஸ்தியரின் மகள்’ சிம்சோன் சொன்னான்.

‘என்ன??  பெலிஸ்தியரின் மகளா ? நாம் அவர்களிடம் பெண் கொள்ளவோ, கொடுக்கவோ கூடாது என்பது கடவுளின் கட்டளை தெரியாதா ?’ தந்தை சினந்தார்.

‘எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்…. ‘ சிம்சோன் பிடிவாதமானார்.

‘மகனே… நீ கடவுளிடமிருந்து வந்தவன். பெலிஸ்தியர்களோ விருத்தசேதனம் கூட செய்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களோடு சம்பந்தம் வைப்பது நல்லதல்ல. அது கடவுளுக்கு விரோதமான செயல்’ தந்தை மீண்டும் மீண்டும் சொன்னார்.

சிம்சோனோ,’ நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பேசி முடித்து எனக்கு மனைவியாக்குங்கள். வேறு எதுவும் பேசவேண்டாம் ‘ என்றார். அதுதான் கடவுளின் சித்தம் என்பதை அறியாத பெற்றோர் வருந்தினர்.

சிம்சோன் தன்னுடைய மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணைக் காணச் சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு சிங்கம் ஆவேசமாக சிம்சோனின் மீது பாய்ந்தது. சிம்சோன் சிங்கத்தை தம்முடைய வெறும் கைகளினால் தூக்கி இரண்டாகக் கிழித்து எறிந்தார். அந்த முரட்டுச் சிங்கம் சிம்சோனின் கைகளில் சின்ன ஆட்டுக்குட்டியாகி துடிதுடித்து இறந்தது. சிம்சோன் இதை யாருக்கும் சொல்லவில்லை.

அவர் நேராகச் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் அவரை விரும்பினார். சிறிது நாட்கள் இன்பமான காதல் பேச்சுகளில் செலவிட்டபின், சிம்சோன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். வரும் வழியில் அவர் கொன்று போட்டிருந்த சிங்கத்தின் பிணத்தின் மேல் தேனீக்கள் கூடு கட்டித் தேனடை வைத்திருந்தன. அதை எடுத்துத் தின்றார்.

நேராகத் தந்தையிடம் சென்று,’ அப்பா எனக்கு அந்தப் பெண்னை மிகவும் பிடித்திருக்கிறது, அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நீங்கள் பெண்ணின் தந்தையிடம் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.

சிம்சோனின் தந்தை வேறு வழியில்லாமல் நேராக பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். மணவிழா ஏழு நாட்கள் நடப்பதாக ஏற்பாடு. சிம்சோனின் தோழர்களாக ஊரிலுள்ள முப்பது இளைஞர்களை பெண்ணின் தந்தை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அவனோடு உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.

சிம்சோன் அவர்களிடம்,’ நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். அதன் பதிலை நீங்கள் இந்த விருந்து முடியும் முன் கண்டு பிடித்துச் சொன்னால், உங்களுக்கு முப்பது நாற்பட்டாடைகளையும், முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். ஒருவேளை விடுகதைக்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்காவிடில் நீங்கள் எனக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டும்’. என்றார். அவர்கள் சம்மதித்தனர்.

சிம்சோன் அவர்களிடம்,’ உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது – இதுவே விடுகதை. இதன் பதிலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ என்றார்.

அவர்கள் விடுகதைக்கான விடை தேடி அலைந்தார்கள். மூன்று நாட்களாகியும் அவர்களால் அதன் விடையைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. அவர்கள் நேராக சிம்சோனின் மனைவியிடம்வந்தனர்.

‘உன் கணவன் எங்களுக்கு ஒரு விடுகதை சொன்னான். அதன் விடையைச் சொல்லாவிட்டால் நாங்கள் அவனுக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டுமாம்.’

‘சரி… விடையைக் கண்டு பிடித்தால் ?’

‘அவர் முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தருவாராம்’

‘அப்படியானால் நல்லது தானே ? விடையைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது தானே ?’

‘நாங்கள் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டோ ம், மூளையைக் கசக்கிப் பார்த்துவிட்டோ ம், நிறைய பேரிடம் பேசியும் பார்த்துவிட்டோ ம் யாருக்கும் விடை தெரியவில்லை’

‘அப்படியானால் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்’

‘தோல்வியா ? நீ இந்த மனிதனை வைத்து எங்கள் உடமைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறாயா ? இதற்கு நீ தான் ஒரு பதில் சொல்ல வேண்டும்’

‘நானா ? ‘

‘ஆம். நீ என்ன செய்வாவோ , ஏது செய்வாயோ எங்களுக்குக் கவலையில்லை , எங்களுக்கு அந்த விடுகதைக்கான விடை உடனே தெரியவேண்டும்’ அவர்கள் கோபத்தில் உறுமினார்கள்.

‘சரி கோபப்படாதீர்கள். நான் அவரிடம் கேட்டுச்  அந்த விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்துச் சொல்கிறேன். அவ்வளவு தானே ? இதற்குப் போய் ஏன் கத்துகிறீர்கள் ?’ என்றாள். அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இரவில் அவள் சிம்சோனுடன் தனித்திருக்கையில் சிம்சோனை மயக்கும் வார்த்தைகளால் மயக்கி விடுகதைக்கான விடையைக் கண்டுபிடித்தாள். சிம்சோன் நடந்த அனைத்தையும் விளக்கினார். தன்னை உண்ண வந்த சிங்கத்திடமிருந்தே தனக்கு உணவு கிடைத்ததைச் சொன்னார். அவள் அதை அந்த இளைஞர்களிடம் சொன்னாள்.

ஏழாவது நாள்.

‘எங்கே என்னுடைய விடுகதைக்கான விடை ?’ சிம்சோன் புன்னகையுடன் கேட்டார்.

‘விடைதானே… கண்டுபிடித்து விட்டோ ம்’ அவர்கள் சிரித்தனர் ?

‘அப்படியா ? உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது. இதன் பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதன் விடை எனக்கு மட்டும் தான் தெரியும்’ சிம்சோன் சிரித்தார்.

‘தேனினும் இனியது எது ? சிங்கத்தினும் வலியது எது ?’ நண்பர்கள் சொல்லிவிட்டுச் சிரித்தனர்.

‘நாங்கள் உன் விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்து விட்டோ மே !!! எங்கே எங்கள் பரிசு ? சீக்கிரம் கொடு…’ என்று கூறிச் சிரித்தனர்.

சிம்சோன் கோபமடைந்தான். எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் வெளியே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் என் மனைவிக்கும் இந்த இளைஞர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த ரகசியம் எப்படி வெளியே செல்லும் ? என்று உள்ளுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைமோத சிம்சோன் கடும் கோபமடைந்தார்.

‘உங்களுக்குப் பரிசு தானே வேண்டும். கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி அருகிலுருந்த அஸ்கலோனுக்குச் சென்று கண்ணில் பட்ட முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடையை எடுத்து வந்தார். அதை பந்தயத்தில் வென்ற இளைஞர்களிடம் கொடுத்து விட்டு அதே கோபத்துடன் தன் தந்தையின் இல்லம் நோக்கிச் சென்றார்.

சிம்சோன் கோபித்துக் கொண்டு போனதை அறிந்த பெண்ணின் தந்தை வருந்தினார். தன்னுடைய மகளின் வாழ்க்கை சடுதியில் முடிந்து விட்டதே என்று மனம் உடைந்தார். மகளை வேறு யாருக்காவது உடனே மணமுடித்து வைக்கவேண்டும் என்று நினைத்து மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்த முப்பது பேரில் அழகாய் இருந்த ஒருவனுக்கு அவளை இரண்டாவதாக மணமுடித்து வைத்தார்.

சில நாட்கள் கடந்தன. சிம்சோனால் தன்னுடைய மனைவியைக் காணாமல் இருக்கமுடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே மனம் மாறி தன் மனைவியைக் காணச் சென்றார். அவருக்கு தன்னுடைய மனைவி இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்ட செய்தி தெரியாது. நேராக பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். வாசலில் மாமனார் நின்றிருந்தார்.

‘நில்… எங்கே வந்தாய் ? ‘ பெண்ணின் தந்தை கேட்டார்.

‘என்னுடைய மனைவியைக் காண வந்தேன்…. ‘ சிம்சோன் பதில் சொன்னார்.

‘உன்னுடைய மனைவியா ? அது தான் வேண்டாமென்று உதறிவிட்டு ஓடி விட்டாயே ?’

‘என்னது ? வேண்டாமென்று உதறிவிட்டேனா ? யார் சொன்னது ? நான் அப்படிச் சொன்னேனா ? கணவன் மனைவிக்குள் கோபம் வருவது இயல்புதான்… வழி விடுங்கள் எனக்கு உடனே அவளைப் பார்க்க வேண்டும்’ சிம்சோன் அவசரப் பட்டார்.

‘அன்றைக்கு நீ கோபித்துக் கொண்டு ஓடி விட்டாயே ?’

‘கோபப்படுவது இயல்பு தான். அது எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த விஷயம். இப்போது நான் அவளைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் வந்திருக்கிறேன். இதோ பாருங்கள் பரிசுப் பொருட்கள்… ‘. சிம்சோன் தன்னிடமிருந்த பரிசுப் பொருட்களைக் காட்டியதும் பெண்ணின் தந்தை வருந்தினார். தான் அவசரப்பட்டுத் தவறிழைத்துவிட்டோ ம் என்று உணர்ந்து தலைகுனிந்தார்.

‘மன்னித்து விடு சிம்சோன்…. நீ திரும்பி வருவாய் என்று நினைக்கவேயில்லை’

‘பரவாயில்லை… வழி விடுங்கள். அவள் என் பிரியத்துக்குரியவள். அவளை நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்… அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’ சிம்சோன் சொன்னார்.

‘அவள்…அவள்… இப்போது இங்கே இல்லை…’ தந்தை மெதுவாகச் சொன்னார்.

‘ஓ… வெளியே போயிருக்கிறாளா ? எங்கே போயிருக்கிறாள்  ? எப்போது திரும்ப வருவாள் ?’ சிம்சோன் கேட்டார்.

‘அவள் திரும்ப வரமாட்டாள்….’

‘ஏன் ?….’ சிம்சோன் குழம்பினார்.

‘அவளை நான் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டேன்….’ பெண்ணின் தந்தை இதைச் சொன்னதும் சிம்சோன் மிகவும் ஆத்திரமடைந்தார்.

‘என்ன ? என் மனைவியை நீங்கள் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்தீர்களா ? நீங்கள் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படிச் செய்யலாம் ?’ சிம்சோன் கோபத்தில் கத்தினார்.

‘நீ திரும்பி வரமாட்டாய் என்று நினைத்து நான் இப்படிச் செய்து விட்டேன். உன்னிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்காதது தவறு தான் மன்னித்துவிடு. ஆனால் இதற்காகக் கவலைப்படாதே… அவளுடைய தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் அக்காவை விட மிகவும் அழகானவள். அவளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

அதைக்கேட்ட சிம்சோன் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டார். கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
‘பெலிஸ்தியர்களே… உங்கள் புத்தியைக் காட்டி விட்டீர்களே… உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்’ என்று தங்களுக்குள்ளே கருவிக் கொண்டான்.

அன்றைக்கே அவன் சென்று முந்நூறு நரிகளைத் துரத்திப் பிடித்தான். இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்து அதில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக் கட்டினார். பின் நரிகளை பெலிஸ்தியர்களின் வயல்களுக்குள் ஓடவிட்டார். நரிகள் தீப்பந்தத்தியும் கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டே ஓடியதில் பெலிஸ்தியர்களில் வயல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. மிகப் பெரிய அழிவு அன்று ஏற்பட்டது.

பெலிஸ்தியர்கள் ஆத்திரமடைந்தார்கள். நேராக சிம்சோனின் மாமனார் வீட்டுக்குச் சென்று,’ உங்களால் தான் அந்த இஸ்ரயேலன் எங்கள் தானியங்களை எல்லாம் அழித்தான். எனவே நீங்களும் செத்துத் தொலையுங்கள் என்று சொல்லி சிம்சோனின் மனைவியையும், அவள் தகப்பனையும் வீட்டோ டு தீயிட்டுக் கொன்றார்கள்.

தன் அருமை மனைவி கொல்லப்பட்டதை அறிந்த சிம்சோனின் கோபம் தலைக்கேறியது. ‘பெலிஸ்திய நாய்களே… என்னோடா விளையாடுகிறீர்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்காமல் ஓயமாட்டேன்’ என்று பகிரங்கமாய்க் கூவினார். சிம்சோனின் வலிமையை எல்லோரும் அறிந்திருந்ததனால் யாரும் அவரை நெருங்கவில்லை.

சிம்சோன் பெலிஸ்தியர்களின் கூட்டத்துக்குள் புகுந்தார். சிங்கம் புகுந்த ஆட்டு மந்தையைப் போல அவர்கள் சிதறி ஓடினார்கள். சீறும் சிங்கத்தையே இரண்டாய்க் கிழித்த வலிமையான கைகளினால் அவர் நூற்றுக் கணக்கானோரைக் அடித்தே கொன்றார் சிம்சோன். பின் அங்கிருந்து ஏற்றாம் என்னுமிடத்திற்குச் சென்று அங்குள்ள பாறைப் பிளவு ஒன்றில் தங்கியிருந்தார்.

பெலிஸ்தியர்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் ஒரு நாட்டைப் பிடிக்கப் போவது போல சிம்சோனைப் பிடிக்கப் போனார்கள். நேராக இஸ்ரயேலர்கள் அதிகமாக இருக்கும் நகருக்குப் போய் கூடாரமடித்தார்கள்.

‘ஐயோ… என்னவாயிற்று ? ஏன் போர்வீரர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ இஸ்ரயேலர்கள் பயத்தில் அலறினார்கள்.

‘உங்கள் சிம்சோனை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் பெலிஸ்தியர்களை அழித்தது போல இஸ்ரயேலர்களை எல்லோரையும் நாங்கள் அழிப்போம்’ என்று கர்ஜித்தார்கள்.

‘எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நாங்கள் போய் சிம்சோனைக் கட்டி உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம்’ இஸ்ரேலிய மக்கள் வாக்களித்தார்கள்.

‘சரி உடனே போய் சிம்சோனைக் கட்டி இழுத்து வாருங்கள்’ பெலிஸ்தியர்கள் ஆணையிட்டார்கள்.

இஸ்ரயேலர்களில் மூவாயிரம் பேர் ஒன்று கூடி சிம்சோன் இருக்கும் பாறைப்பிளவுக்குச் சென்றார்கள்.

‘சிம்சோன்… பெலிஸ்தியர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் என்பதை மறந்து விட்டாயா ? அவர்களுக்கு எதிராகவே நடக்கிறாயே ? இதனால் நாம் எல்லோருமே மிகப் பெரிய இக்கட்டில் மாட்டியிருக்கிறோம்.’ மக்கள் சொன்னார்கள்.

‘அவர்கள் எனக்குச் செய்தது உங்களுக்குத் தெரியாதா என்ன ? நான் அவர்களைப் பழி வாங்கியே தீருவேன். ‘ சிம்சோன் சினம் குறையாமல் பேசினார்.

‘சிம்சோன்… தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேள்.. உன்னை நாங்கள் பெலிஸ்தியரிடம் ஒப்படைக்காவிடில் நாங்கள் எல்லோரும் சாவது உறுதி. இப்போது உன் இன மக்களான எங்கள் உயிர் உன்னிடம் தான் இருக்கிறது. தயவு செய்து எங்களைக் காப்பாற்று’ என்றார்கள்.

சிம்சோன் யோசித்தார். ‘சரி.. என்னால் உங்கள் உயிர் போகவேண்டாம். என்னை நீங்கள் கயிற்றினால் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படையுங்கள். ஆனால் நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது ‘

‘சிம்சோன்… ஆண்டவர் மீது ஆணை. உன்னை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோ ம். உன்னைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைப்போம். அவ்வளவே… ‘ என்றனர்.

சிம்சோன் ஒத்துக் கொண்டார். அவர்கள் சிம்சோனைக் கயிறுகளினால் பிணைத்துக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கூட்டிக் கொண்டுபோனார்கள். உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் பெலிஸ்தியர்களின் முன்னால் நிறுத்தப்பட்டார் சிம்சோன். பெலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

சிம்சோன் சிரித்தார்.’ ஏன் ஆரவாரம் செய்கிறீர்கள் மூடர்களே.. என்னையா கட்டிப் போடுகிறீர்கள்’ என்று சொல்லி உடலை முறுக்கினான். உடனே கட்டப்பட்டிருந்த கயிறுகளெல்லாம் அறுபட்டுத் தெறித்தன. அங்கே கிடந்த ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கையிலெடுத்து கூடிநின்ற பெலிஸ்தியர்களை மூர்க்கமாகத் தாக்கினார். அங்கேயே அவர் கையில் சிக்கி ஆயிரம் பேர் இறந்தார்கள். சிம்சோன் பெலிஸ்தியர்களின் கையில் சிக்காமல் தப்பினார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார்கள். அவர் காசா நகரிலுள்ள ஒரு விலைமாதுவின் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் நகரின் மிகப் பிரம்மாண்டமான வாசல் கதவை அடைத்து அதனருகே காவல் இருந்தார்கள். எப்படியும் சிம்சோன் இந்தக் கதவைத் தாண்டாமல் வெளியே போக முடியாது. இங்கே வைத்து அவனைக் கொன்று விடவேண்டும் என்று சத்தமில்லாமல் பதுங்கி இருந்தார்கள்.

சிம்சோன் நள்ளிரவில் விலைமாதின் வீட்டை விட்டு வெளியே வந்தார். நகரின் வாசலருகே வரும்போது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் மீது ஏறிக் குதிக்கவும் முடியாது ! அந்த அளவுக்கு  உயரமானது. சிம்சோன் அந்த வாசலருகே வந்ததும் பதுங்கியிருந்தவர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். சிம்சோன் அசரவில்லை, இரண்டு கைகளாலும் நகரின் கதவைப் பெயர்த்து எடுத்தார். தாக்க வந்த கூட்டம் நடுநடுங்கி பின்வாங்கியது. சிம்சோன் அந்த பிரம்மாண்டக் கதவைத் தலையில் சுமந்து கொண்டே நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்குப் போனார்.

பெலிஸ்தியர்களால் சிம்சோனை நெருங்கவே முடியவில்லை. சிம்சோன் சோரேக்கு ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் தெலீலா என்னும் பெண்ணைக் காதலிக்கிறார் என்னும் செய்தி பெலிஸ்தியர்களுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணை வைத்து சிம்சோனின் வீரத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

பெலிஸ்திய சிற்றரசன் தெலீசாவை அணுகி அவளுக்கு ஆசை காட்டினர்.

‘நீதான் சிம்சோனைக் காதலிக்கும் தெலீசாவா ?’

‘ஆம் …. அது நான் தான்…’

‘உன்னைப் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கிறாய்… ஆனால் உன்னிடம் வசதி இருப்பது போலத் தெரியவில்லையே … உனக்கு ஏராளமான வெள்ளிக்காசு தந்தால் வேண்டாம் என்று சொல்வாயா என்ன ?’

தெலீசா பிரகாசமானாள்,’ எதற்காக நீங்கள் எனக்கு வெள்ளிக்காசு தருகிறீர்கள் ?’

‘சிம்சோன் மிகவும் வலிமையானவன் என்று தெரியும். அவனுடைய பலவீனம் என்ன என்பதும், எதில் அவனுடைய சக்தி அடங்கியிருக்கிறது என்பதையும் நீ கண்டறிந்து சொல்ல வேண்டும்… அவ்வளவு தான்’

‘இது மிகப் பெரிய பணியாயிற்றே… சிம்சோனிடம் உண்மையை அறிந்து கொள்வது மிகவும் கஷ்டம்….’ தெலீசா முரண்டு பிடித்தாள்.

‘ஐநூறு வெள்ளிக்காசு தந்தால் ?….’ சிற்றரசன் ஆசை காட்டினான்.

‘ஐநூறு போதாதே…. அதிகம் தந்தால் முயன்று பார்க்கலாம்’ தெலீசா சொன்னாள்.

‘சரி ஆயிரம் வெள்ளிக்காசு தருகிறேன்….’ சிற்றரசன் சொன்னான்.

‘ஆயிரம் போதாது…. ஆயிரத்து இருநூறு வெள்ளிக்காசு தந்தால் அவனுடைய பலம் எங்கே இருக்கிறது ? அவனுடைய பலவீனம் என்ன என்பதையெல்லாம் நான் கண்டறிந்து சொல்வேன்’ தெலீசா சொன்னாள்.

சிற்றரசன் ஒத்துக் கொண்டான்.

அன்று இரவு தெலீசா சிம்சோனுடன் மஞ்சத்தில் கொஞ்சுகையில் மெல்லக் கேட்டாள்.
‘சிம்சோன்… உன்னுடைய வலிமை கண்டு நான் பிரமிக்கிறேன்…உங்கள் வலிமை எதில் இருக்கிறது ? உங்களை அடக்கவே முடியாதா ?’

சிம்சோன் சிரித்தார்,’ ஏன் கேட்கிறாய் ?’

‘இல்லை … நான் உன்னுடைய ஆசை நாயகியல்லவா ? எனக்குத் தெரியாத ஒரு ரகசியம் உம்மிடம் இருக்கிறதே என்று தான்….’ தெலீசா இழுத்தாள்.

‘அதெல்லாம் பெரிய விஷயமில்லை … உலராத ஏழு நார்க்கயிறுகளால் என்னைக் கட்டினால் அவ்வளவு தான் நான் எழும்பவே முடியாது’ என்று சொன்னார்.

தெலீசா அன்று இரவே ஏழு நார்க்கயிறுகளால் அவனை இறுக்கிக் கட்டினாள். பின்
‘சிம்சோன்…சிம்சோன்… எழுந்திரு இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ என்று கத்தினாள்.

சிம்சோன் எழுந்து கைகளை விரித்தான். கட்டப்பட்டிருந்த கயிறுகள் எல்லாம் நூல் போல உடைந்து தெறித்தன.

‘எங்கே பெலிஸ்தியர்கள்’ சிம்சோன் பதட்டமாய்க் கேட்டான்.

‘நான் சும்மா தான் சொன்னேன்… நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். பச்சை நார்க்கயிறுகள் உம்மைக் கட்டிப் போடவில்லையே…’ தெலீசா சிணுங்கினாள்.

‘உண்மையில் நீ… புதிய இரண்டு நார்க்கயிறுகளால் என்னைக் கட்ட வேண்டும்…. உலராத ஏழு நார்க்கயிறுகள் என்பது நான் சொன்ன பொய்’ சிம்சோன் சிரித்தார்.

தெலீசா கொஞ்சினாள். அன்று இரவு சிம்சோன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவள் புதிய இரண்டு கயிறுகளால் அவனைக் கட்டினாள். கட்டிவிட்டு முதல் நாள் கத்தியது போலவே கத்தினாள். சிம்சோன் எழுந்து உடம்பை முறுக்கியதும் கட்டுகள் எல்லாம் அறுந்து தெறித்தன.

தெலீசா மீண்டும் சிணுங்கினாள்,’ எப்போதும் என்னிடம் பொய்தான் சொல்கிறீர்கள். புதிய கயிறுகள் கூட உம்மைக் கட்டிப் போடவில்லையே.. உண்மையைச் சொல்லுங்கள் ‘

‘உண்மையைச் சொல்வதானால் என்னுடைய தலையில் இருக்கும் ஏழு ஜடைகளையும் நெசவு நூல் பாவுடன் பின்னிவிட்டால் போதும். என்னுடைய வலிமைகள் எல்லாம் போய்விடும்’ சிம்சோன் சொன்னார்.

தெலீசா அவ்வாறே செய்துபார்க்க அதுவும் பொய் என்று அறிந்து கொண்டாள்.
அதன் பின் தினமும் அவரை நச்சரித்து வந்தாள். இரவில் மஞ்சத்தில் சிம்சோனிடம் வழக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.

‘என்னை நீங்கள் அற்பமாய் நினைத்து விட்டீர்கள்.. நான் உங்களுக்கு இவ்வளவு உண்மையாய் இருக்கிறேன். நீங்கள் என்னை மதிக்கவேயில்லை’

‘நீ என்னுடைய காதலி. நான் உன்னை என் உயிராய் நினைக்கிறேன்.. நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் ?’

‘நான் உங்கள் உயிரென்பது உண்மையென்றால் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டும்’

‘அது எதற்கு தெலீசா ?’ சிம்சோன் தயங்கினார்.

‘நான் என்ன உங்களைக் கொல்லவா போகிறேன். உங்கள் ரகசியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டீர்கள் என்று மகிழ்வேன்.. அவ்வளவு தான்… ‘சிம்சோனின் மார்பில் அவளுடைய விரல்கள் கோலம் போட்டன.

அவளுடைய கொஞ்சல்களில் மயங்கியும், அவளுடைய திட்டுகளில் வருத்தமுற்றும் சிம்சோன் உண்மையைச் சொல்வதென்று முடிவெடுத்தார்.

‘நான் உண்மையை உனக்குச் சொல்கிறேன்.. ஆனால் நீ யாரிடமும் அந்த ரகசியத்தைச் சொல்லக் கூடாது. அது என்னுடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ சிம்சோன் சொன்னான்

‘நீங்கள் என்னை நம்பலாம். என் உயிரே போனாலும் நான் இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லமாட்டேன்; தெலீசா அவனை மடியில் கிடத்திக் கொஞ்சினாள்.

‘நான் கடவுளால் பிறந்தவன். கடவுளுடைய நசரேயன்… அவருடைய பணியாளன். என்னுடைய தலைமுடியில் தான் என்னுடைய பலமே அடங்கியிருக்கிறது. முடி போனால் என் வலிமையும் என்னைவிட்டுப் போய்விடும்’ சிம்சோன் சொன்னார். தெலீசா அவனை மோகத்தில் குளிப்பாட்டினாள். இரவில் சிம்சோன் அசந்து தூங்கியபோது அவனுடைய தலையை மொட்டையடித்தாள். பின் பெலிஸ்தியர்களுக்கு ஆளனுப்பினாள்.

‘சிம்சோன் எழுந்திரு… இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ தெலீசா கத்தினாள்.

சிம்சோன் எழுந்தார்,’ யார் வந்தால் என்ன எல்லோரையும் அழிப்பேன்’

‘அதற்கு உன்னுடைய தலைமயிர் உன்னிடம் இல்லையே…’ தெலீசா நகைத்தாள்.

சிம்சோன் தன்னுடைய தலையைத் தடவிப்பார்த்து அதிர்ந்தார். ‘ ஐயோ… உன்னை நால் மலை போல நம்பினேனே… இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாயே…’ சிம்சோன் ஏமாற்றப்பட்டதை நினைத்து  அழுதார்.

‘எனக்கு வரப்போகும் வசதிக்காக உன்னுடைய மயிரை மழித்துவிட்டேன் சிம்சோன்… இன்னும் சிறிது நேரத்தில் பெலிஸ்தியர்கள் இங்கே வருவார்கள் தயாராய் இரு…’ தெலீசா சிரித்தாள்.

அதற்குள் பெலிஸ்தியர்கள் படையுடன் வந்து அவரைச் சூழ்ந்தனர். சிம்சோன் பழைய நினைப்பில் ஒருவனை அடித்தார், ஆனால் அந்த அடிக்கு வலு இருக்கவில்லை. அவர்கள் சிம்சோனை ஒரு ஆட்டுக் குட்டியைப் பிடிப்பதுபோல எளிதாகப் பிடித்தார்கள்.

‘நீதான் வீரனா ? பெலிஸ்தியர்களை அழிக்கப் பிறந்தவனா ?’ என்று சொல்லி அவனை அடித்துக் குற்றுயிராக்கினார்கள். சிம்சோன் வலியால் துடித்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடித்து நிறுத்தி அவனுடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். சிம்சோன்  கதறினார். அவரை அவர்கள் சிறையில் அடைத்து சங்கிலிகளால் பிணைத்தனர். அவரைக் கேலிப்பொருளாக்கி மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் அழுதுகொண்டே மாவரைத்துக்கொண்டிருந்தார். அவரை பெலிஸ்தியர்கள் அவ்வப்போது அழைத்து சபையில் நிற்கவைத்து அவமானப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிம்சோன் நிராயுதபாணியாய் நின்றார்.

மொட்டையடிக்கப் பட்டிருந்த அவருடைய தலைமுடி வளரத் துவங்கியது ! பெலிஸ்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை. தலைமுடி வளர வளர சிம்சோன் தான் இழந்த வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.

பெலிஸ்தியர்கள் சிம்சோனைத் தங்கள்வசம் ஒப்படைத்த அவர்களின் கடவுளுக்கு மிகப் பெரிய விழா எடுப்பதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் ஒன்றுகூடினார்கள்.

‘சிம்சோனை அழைத்து வாருங்கள். வீராதி வீரனை நாம் அவமானப் படுத்துவோம்’ பெலிஸ்தியர்கள் சொல்லிச் சிரித்தார்கள்.

சிம்சோன் அழைத்துவரப்பட்டார். மக்களெல்லாம் குழுமியிருந்த மிகப்பெரிய மண்டபத்தின் நடுவே நிற்கவைக்கப் பட்டார்.

‘வீராதி வீரனே…. எங்கே உன் வீரம் ?’ பெலிஸ்தியர்கள் சொல்லிக் கொண்டே அவரை அடித்தார்கள். சிம்சோன் தடுமாறி விழுந்தார்.

‘என்னால் நிற்க முடியவில்லை… தயவு செய்து என்னை ஒரு தூணில் என்னை சாய்த்து நிறுத்துங்கள்…’ சிம்சோன் பரிதாபமாகக் கேட்டார்.

‘பெலிஸ்தியர்களைச் சாய்க்கும் வீரனைத் தூணில் சாய்த்து வையுங்கள்…. ‘ என்று சொல்லி எல்லோரும் பலமாகச் சிரித்தார்கள்.

அவர்கள் சிம்சோனை இழுத்து, ‘இதோ இந்த இரண்டு தூண்களையும் பிடித்துக் கொள்’ என்று சொல்லி அவருடைய வலது கையை ஒரு தூணிலும், இடது கையை இன்னொரு தூணிலுமாக இரண்டு பெரிய தூண்களில் பிடித்து வைத்தார்கள். வைத்துவிட்டு அவரை எள்ளி நகையாடினார்கள்.

சிம்சோன் உள்ளுக்குள் ஆண்டவரை நோக்கி உருக்கமாய் மன்றாடினார்.
‘ஆண்டவரே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பழைய பலத்தைத் தாரும். இந்த பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்க எனக்கு உதவிசெய்தருளும்’ என்று வேண்டினார்.

கடவுளின் அருள் அவர்மீது வந்திறங்கியது. அவருடைய முழு வலிமையும் அவருக்குள் திரும்ப வந்தது.
‘பெலிஸ்தியர்களைக் கொல்வதற்காக என் உயிரைக் கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் தன் முழுபலத்தையும் இறக்கி இரண்டு தூண்களையும் பலமாய்ச் சாய்த்தார்.

தூண்கள் இரண்டும் சாயத் துவங்கின. மண்டபத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திகிலடைந்தார்கள். அதற்குள் மண்டபத்தின் கூரை மொத்தமாய் அவர்கள் மேல் விழுந்து நசுக்கியது. மண்டபம் தரைமட்டமானது. அனைவரும் அதே இடத்தில் இறந்தார்கள்.

சிம்சோனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

சிம்சோனின் வழியாக கடவுள் தங்களை பெலிஸ்தியரிடமிருந்து மீட்டார் என்று இஸ்ரயேலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழிஷில் வாக்களிக்க….

கி.மு : இப்தா, A Shocking Story !

 

இப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான்.

‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி தோபு என்னும் நாட்டில் குடியேறினார்

சிறிது காலம் சென்றபின் அம்மோனியர்கள் இஸ்ரயேலரின் மீது படையெடுத்தார்கள். அந்நாட்களில் நகரில் மக்களை ஒருங்கிணைத்து அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு வலிமையான தலைவன் இல்லை. அம்மோனியர்களை எப்படி எதிர்ப்பது ? யாரைக் கொண்டு அவர்களோடு போரிடுவது என்று பெரியவர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் இப்தாவைக் கூட்டி வருவது என்று முடிவெடுத்து இப்தாவைத் தேடிச் சென்றனர்.

‘இப்தா… இஸ்ரயேல் மக்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது. அம்மோனியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அம்மோனியரோடு போரிட எங்களுக்கு ஒரு தலைவன் வேண்டும். அதற்கு நீ மட்டும் தான் தகுதியானவன். எங்களுடன் வந்துவிடு’ பெரியவர்கள் சொன்னார்கள்.

‘நன்றாக வாழ்ந்தபோது என்னை ஒரு நாயைப் போல அடித்துத் துரத்தினீர்கள். இப்போது கஷ்டம் என்றவுடன் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களா ? என்னால் முடியாது’ இப்தா மறுத்தார்.

‘நாங்கள் என்ன செய்வது உன்னுடைய சகோதரர்கள் தான் உன்னை எதிர்த்தார்கள். நாங்கள் யாரும் உன்னை எதிர்க்கவில்லையே  ‘

‘ எதிர்க்கவில்லை தான். ஆனால் என் சகோதரர்கள் என்னை அவமானப் படுத்தி அடித்து விரட்டியபோது நீங்கள் யாரும் சமாதானம் செய்து வைக்க முன்வரவில்லையே ?’

‘இப்தா… பழைய கதைகள் இப்போது எதற்கு ? இப்போது நீ வந்தால் உன்னை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. உன்னையே நாங்கள் எங்கள் தலைவனாகவும் அமர்த்துவோம். நீ வந்து எங்களை வழிநடத்து’ பெரியவர்கள் மீண்டும் கேட்டனர்.

‘இல்லை. எனக்குத் தலைவனாகும் விருப்பம் இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போதும். உங்கள் தயவு வேண்டாம்’

‘இப்தா மறுக்காதே. இது நம்முடைய இஸ்ரயேல் குலத்துக்கே வந்த சவால். இதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நீ வரவில்லையென்றால் நம்முடைய குலமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. தயவு செய்து பழைய வருத்தங்களை மனதில் வைத்திருக்காமல் எங்களுக்கு உதவு’ வந்தவர்கள் தொடர்ந்து இப்தாவை வற்புறுத்தினார்கள்.

இப்தா யோசித்தார். ‘ சரி… நான் வருகிறேன். கடவுள் என்னோடு இருந்தால் நான் அவர்களை வெல்வேன். அவர்களை நான் வெற்றிகொண்டால் உங்கள் தலைவனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். சம்மதம் தானே ?’

அனைவரும் ஒத்துக் கொண்டனர்
‘நீ வரவேண்டும். அவ்வளவு தான். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்து தரத் தயாராக இருக்கிறோம். நீ சொல்வதையெல்லாம் கேட்கவும் உடன்படுகிறோம் ‘ அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.

இப்தா பெரியவர்களுடன் ஊருக்குள் வந்தார். வந்தவுடன் அவர் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. முதலில் ஒரு தூதரைக் கொண்டு சமாதானப் பேச்சுகளைத் துவங்கினார்.

‘உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இருந்ததில்லையே… ஏன் நீங்கள் எங்களோடு போரிடத் துடிக்கிறீர்கள்’ இப்தா அம்மோனியருக்கு சமாதானத் தூது அனுப்பினார்.

‘இது எங்கள் நிலம்.. முன்பு எங்களிடமிருந்து தான் இஸ்ரேலர்கள் இந்த நிலத்தை அபகரித்தார்கள். எனவே நாங்கள் இதைப் போரிட்டு மீட்போம். மீண்டும் நாங்களே இங்கு வாழ்வோம்’

‘இல்லை.. நீங்கள் நினைப்பது தவறு. இந்த நிலத்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலிருந்து மோசேயினால் மீட்டு வரப்பட்ட மக்களுக்குக் கடவுளே கொடுத்தார். இதை நீங்கள் அபகரிக்க நினைக்காதீர்கள். அது கடவுளுக்கு எதிரான செயல். போர் வேண்டாம் சென்று விடுங்கள்’

‘ஓகோ… கடவுள் கொடுத்தாரா ? நீங்கள் எங்கள் முன்னோர்களை வீழ்த்தி எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை நாங்கள் உங்களை வீழ்த்துவதன் மூலம் மீட்போம். போர் நடைபெறப் போவது உறுதி. உங்கள் கடவுள் உங்களுக்குத் தந்ததை எங்கள் கடவுள் இப்போது எங்களுக்குத் தரப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ அம்மோனியர் தலைவன் ஏளனமாய் பதில் சொன்னான்.

‘கடைசியாக என்ன சொல்கிறீர்கள் ? போரா சமாதானமா ?’ இப்தாவின் தூதர் கேட்க. போரைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மோனியர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

இப்தாவும் போருக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.
போருக்குச் செல்லும் முன் இப்தா கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்தார்.

‘கடவுளே… இதோ நீர் என்னோடு இருக்கிறீர் என்னும் தைரியத்தில் தான் நான் போருக்குச் செல்கிறேன். இந்தப் போரில் நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால் வெற்றிபெற்றுத் திரும்பும் போது முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை நான் உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்’ என்று நேர்ந்தார்.

போர் ஆரம்பமானது. இப்தா தன்னுடைய வீரர்களோடு அம்மோனியரை எதிர்த்துக் கடுமையான போரில் ஈடுபட்டார். கடவுள் இப்தாவோடு இருந்தார். அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அம்மோனியர் பின்னிட்டு ஓடினார்கள்.

இப்தா மகிழ்ந்தார். வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினார். முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை ஆண்டவருக்குப் பலியாக செலுத்தவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மறையாமல் இருந்தது.

அவர் ஊருக்குள் நுழைந்ததும் மேளதாளத்துடன், ஆடிப் பாடிக் கொண்டே மிகவும் சந்தோசமாக அவரை எதிர்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் இப்தா அதிர்ந்தார். அது அவருடைய ஒரே மகள். செல்ல மகள்.

இப்தாவின் மகள் நேர்ச்சையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவள் தந்தை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே தந்தைக்கு எதிரே மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள்.

‘அப்பா….. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். எனக்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்திருக்கிறது’ ஆசை மகள் தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

இப்தா அழுதார். தன்னுடைய ஆடைகளைக் கிழித்துவிட்டுக் கதறி அழுதார்.
‘என் ஆசை மகளே… நீ எனக்கு உயிருக்கு உயிரானவள்….’ என்று அவளை அணைத்துக் கொண்டார்.

‘ஏன் அப்பா அழுகிறீர்கள். நீங்கள் மாபெரும் வெற்றியல்லவா பெற்றிருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடலாம் என்று வந்தால் அழுகிறீர்களே ? என்னவாயிற்று’ மகள் கேட்டாள்.

‘மகளே… அதை நான் எப்படிச் சொல்வேன்… நான் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்து விட்டேன்.. அதை திரும்பப் பெறவும் முடியாது, நிறைவேற்றவும் முடியாது. என்ன செய்வேன்’ என்று கூறி மீண்டும் அழுதார்.

‘நேர்ச்சை தானே… இப்போது நீங்கள் தலைவர். எந்த நேர்ச்சையை வேண்டுமானாலும் நீங்கள் நிறைவேற்றலாம். அதற்குரிய வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்’ மகள் சொன்னாள்.

‘மகளே…  நீ புரியாமல் பேசுகிறாய். நான் வெற்றியுடன் திரும்பும்போது என் எதிரில் முதலில் வரும் உயிரினத்தைக் கடவுளுக்குப் பலிசெலுத்துவதாக நேர்ந்திருந்தேன். நீ என் எதிரே வந்து விட்டாய். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ இப்தா தளர்ந்து போன குரலில் சொன்னார்.

தந்தை சொல்லச் சொல்ல மகளின் கண்களில் திகில் படர்ந்தது. ‘அப்பா…… ‘ அவளுடைய வாய் குழறியது.
தந்தை ஒன்றும் பேசாமல் தரையில் மண்டியிட்டார்.

‘அப்பா… நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் நேர்ந்து கொண்டதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மகள் சொன்னாள்.

‘அதெப்படி….. உ..ன்னை…. நான்…?  முடியாது….முடியவே முடியாது ‘ இப்தா தடுமாறினார்.

‘இல்லை அப்பா… உங்கள் வெற்றியில் நானும் கலந்து கொள்வதாய் நினைத்துக் கொள்கிறேன்… ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும்’ மகள் கலங்கிய விழிகளோடு சொன்னாள்.

இப்தா மகளை ஏறிட்டுப் பார்த்தார்.

‘எனக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள். நான் என் தோழியரோடு மலைகளில் சுற்றித் திரிந்து என்னுடைய கன்னித் தன்மைக்காக நான் துக்கம் கொண்டாடப் போகிறேன்’ என்றாள்

‘மகளே… ஆனால்….’ இப்தா இழுத்தார்.

‘பயப்படாதீர்கள் .. நான் என்னுடைய கன்னித் தன்மையை இழக்கமாட்டேன். எந்த ஆணுடனும் உறவு கொள்ளவும். என் தோழியரோடு நான் செல்கிறேன். இரண்டு மாதம் கழித்து வருவேன். அனுமதியுங்கள்’ என்றாள்.

இப்தா அனுமதித்தார்.

மாதங்கள் இரண்டு சட்டென்று ஓடி மறைய. மகள் எரிபலிக்குத் தயாராக தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.
‘அப்பா… இதோ பலிப்பொருள்… என்னைப் பலியிட்டு உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ மகள் சொன்னாள்.

இப்தா அழுதார். இப்தாவின் மகள் அவரைத் தேற்றினாள். ‘ இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தானே. இப்படி ஒரு மரணம் வருவது எனக்குப் பெருமை தான்.’.

இப்தா கலங்கிய விழிகளோடும், அழுகின்ற இதயத்தோடும் அவளை பலிபீடத்தில் கிடத்தி இரண்டு துண்டுகளாக வெட்டி கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்…

கி.மு கதை : அபிமெலக்கும், அம்மிக்கல் பெண்ணும்…

இஸ்ரயேல் மக்களை மிதியானியர்களின் அடக்குமுறையிலிருந்து மீட்ட எருபாகால் என்னும் கிதியோனுக்கு, எழுபது மகன்களும் ஏராளமான மனைவியர்களும் இருந்தார்கள். எருபாகாலுக்கும் அவருடைய வேலைக்காரிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அபிமெலக்கு. அவன் தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் சகோதரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான்.

அவன் தன்னுடைய தாயின் சகோதரர்களிடம் போய்,
‘ பாருங்கள்… எருபாகாலின் எழுபது மகன்களுக்கே எங்கும் செல்வாக்கு. அவர்கள் தான் இனிமேல் இஸ்ரயேலர்களை ஆளப் போகிறார்களாம். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. எழுபதுபேர் ஆட்சியமைக்கவேண்டுமா ? உங்களின் இரத்த பந்தமான நான் ஆட்சி அமைக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்றான்

‘யார் ஆட்சியமைத்தால் எங்களுக்கு என்ன ?’ தாயின் சகோதரர்கள் கேட்டார்கள்.

‘அவர்களுடைய ஆட்சியில் உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?’

‘நீ ஆட்சியமைத்தால் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவாயா ?’

‘கண்டிப்பாக. நான் ஆட்சியமைத்தால் அது உங்கள் ஆட்சியாகத் தான் இருக்கும். உங்கள் சார்பாக நான் அரசனாக இருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நிறைவேற்றுவேன். நிறைவேற்றப்படாதது என உங்கள் தேவைகள் ஒன்று கூட இருக்காது’ அபிமெலக்கு வாக்குறுதி கொடுத்தான்.

அபிமெலெக்கின் ஆசைவார்த்தைகளில் மயங்கிய அவர்கள் போய் நகரெங்கும் அபிமெலக்குக்கு ஆதரவாக மக்களைத் திரட்டினார்கள். அவர்கள் நகரின் மையத்தில் நின்று கொண்டு,

‘அபிமெலக்கு நல்ல திறமையானவன். அவன் அரசனானால் நன்றாக இருக்கும்’

‘எருபாகாலின் திறமை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால் அபிமெலெக்கு திறமையானவன்’

‘அபிமெலெக்கு நிறைய வாக்குறுதிகள் தந்திருக்கிறான்’

என்றெல்லாம் பேசி, அபிமெலக்கு தான் அரசராகும் திறமை வாய்ந்தவன், ஒரு நல்ல தலைவன் என்னும் எண்ணத்தை நாட்டு மக்களிடையே பரப்பினார்கள்.

ஒருபுறம் அபிமெலெக்கின் ஆதரவாளர்கள் நகரில் அபிமெலெக்கைப் பற்றிப் புகழ் பரப்ப, மறுபுறம் அபிமெலக்கு தன்னுடன் முரடர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு நேராக எருபாகலின் மகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அவர்கள் எழுபதுபேரில் இளையவனான யோத்தாமைத் தவிர அனைவரையும் சிறைபிடித்தான். யோத்தாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பாறை இடுக்கு ஒன்றில் ஒளிந்திருந்தான்.

அபிமெலக்கு சிறைபிடித்த அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்தான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அபிமெலெக்கு தான் சிறைபிடித்திருந்த அத்தனை பேரையும் ஒவ்வொருவராய் ஒரே கல்லின் மீது வைத்து வெட்டிக் கொன்றான். அவர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. மக்கள் அபிமெலெக்குவிற்குப் பயந்து அமைதிகாத்தார்கள். ஒளிந்திருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த யோத்தாம் உள்ளுக்குள் கதறி அழுதான்.
தன்னுடைய சகோதரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டும் தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என புலம்பினான்.

இந்தப் படுகொலை நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் யாரும் அபிமெலெக்கை எதிர்க்கவில்லை. அவர்கள் அனைவரும் அபிமெலக்கிற்கு அஞ்சி அவனையே அரசனாக ஏற்றுக் கொண்டனர்.

அபிமெலக்கும் அவனுடைய முரட்டுப் படையினரும் அந்த இடத்தை விட்டுப் போனதும் யோத்தாம் பாறையிடுக்கிலிருந்து வெளியே வந்து பாறையின் உச்சியில் ஏறி நின்றான்.

‘மக்களே… நீங்கள் ஏன் இத்தனை கோழைகளாகிப் போனீர்கள் ? நீங்கள் அரசனாக்கி இருப்பது யாரைத் தெரியுமா ? தன் சகோதரர்கள் அனைவரையும் ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக் கொன்ற ஒரு மனிதனை !… நான் சொல்வதைக் கேளுங்கள்’ யோத்தாம் உரத்த குரலில் சொன்னான்.

மக்கள் அனைவரும் அவன் சொல்வதைக் கேட்க பாறை அடியில் கூட்டமாகக் கூடினார்கள். யோத்தாம் தொடர்ந்தான். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

மரங்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாக ஒரு மரம் வேண்டும் என்று தேடத் துவங்கின. அவை முதலில் ஒலிவ மரத்திடம் போய் ,’ நீ தான் எங்களுக்கு அரசனாக வேண்டும். மரங்களின் அரசன் ஒலிவ மரம் என்று நாளை எல்லோரும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டன.
ஒலிவமரமோ, ‘ அதெல்லாம் என்னால் முடியாது. என் பணி எண்ணை தயாரிப்பில் உதவுவது. என் எண்ணையால் எல்லோரும் பயனடைகிறார்கள். எனவே நான் என்னுடைய பணியை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக முடியாது’ என்றது.

பின் மரங்கள் எல்லாம் அத்தி மரத்திடம் வந்தன.’ அத்தி மரமே அத்தி மரமே… நீ தான் மரங்களில் சிறப்பானவன். நீ எங்களின் அரசனாக சம்மதிக்கிறாயா ? ‘ என்று கேட்டன. அத்திமரமோ,’ எனக்கு பழங்களை விளைவிக்கும் வேலை இருக்கிறது. என்னால் உங்களுக்கு அரசனாக முடியாது. மன்னித்துவிடு’ என்று சொல்லி விண்ணப்பத்தை நிராகரித்தது.

மரங்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. அழகாய் கொத்துக் கொத்தாய்ப் பழங்களோடு திராட்சைக் கொடி ஒன்று அசைந்து கொண்டிருந்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன,’ திராட்சைக் கொடியே… நீ தான் எங்களுக்கு அரசனாகத் தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். நீயே எங்களுக்கு அரசனாக இருந்து எங்களை வழிநடத்து’ என்றன.
திராட்சைக் கொடியோ,’ அடடா… மனிதர்களையும், தெய்வங்களையும் மகிழ்விக்கும் திராட்சை இரசத்தை நான் தராமல் வேறு யார் தரமுடியும். எனக்கு அந்த வேலையே போதும். அதை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக உல்லாசமாய் உலவ என்னால் முடியாது’ என்றது.

இப்படியே மரங்கள் எல்லா இடத்திலும் தங்களுக்கு அரசனைத் தேடித் தேடி அலுத்துப் போய் கடைசியில் முட்செடியிடம் வந்தன.
‘நீ எங்களுக்கு அரசனாகிறாயா ?’ என்று மரங்கள் கேட்கும் முன்னரே முட்செடி.
‘வாருங்கள். நான் தான் உங்களுக்கு அரசன். என்னை விடத் தகுதியானவன் ஒருவனை நீங்கள் பார்க்கவே முடியாது. எனவே நீங்கள் என்னை அரசனாக்க வேண்டும். என்னை நீங்கள் அரசனாக்காவிடில் உங்களைக் குத்துவேன், எரிந்து உங்களையும் எரிப்பேன்’ என்று மிரட்டியது. மரங்கள் முட்செடியை தங்கள் அரசனாக்கின.

யோத்தாம் கதை சொல்லி முடித்தான். மக்கள் புரியாமல் விழித்தார்கள்.

‘புரியவில்லையா ? நீங்கள் என் தந்தை உட்பட பலரிடம் அரசராகும் படி கேட்டீர்கள். அவர்களோ கடவுளே அரசர் என்று சொல்லி தங்கள் கடமைகளைச் செய்யப் போய் விட்டார்கள். இப்போது நீங்கள் அபிமெலக்கு என்னும் முட்புதரை அரசனாக்கி இருக்கிறீர்கள். இது அழிவுக்கான ஆரம்பம்’ என்றான்.

மக்கள் பேசாமல் இருந்தார்கள்.

‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் ? உங்களுக்காக மிதியானியரிடம் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போரிட்ட என் தந்தைக்கு நீங்கள் காட்டிய நன்றி மிகப் பெரிது. அவருடைய மகன்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டபோது அதை வெறுமனே வேடிக்கை பார்த்து நீங்கள் என் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி விட்டீர்கள்.’ யோத்தாம் கோபத்துடன் சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தலைமறைவானான்.

மக்கள் வருந்திய மனதோடு சென்றார்கள். அபிமெலக்கு அரசனாக ஆட்சி செய்யத் துவங்கினான். மூன்று வருடங்களுக்குப் பிறகு அபிமெலக்கின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தார்கள். மக்களில் பலர் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினார்கள். நாட்டில் அமைதியும், ஒழுக்கமும் சீர்கேடானது.

அப்போது கலால் என்பவன் அந்த ஊர் மக்களின் நம்பிக்கைக்குரியவனாக விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினான்.
அவன் மக்களை நோக்கி,’ அபிமெலக்கு என்பவன் யார் ? ஏன் அவனைக் கண்டு பயப்படுகிறீர்கள் ? எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அபிமெலக்கை அழிப்பேன்..’  என்று மக்களுக்கு தைரியம் ஊட்டிக்கொண்டே இருந்தான்.

நகரின் அதிகாரியாய் இருந்த செபூலின் காதுகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவன் அரசன் அபிமெலக்குவிற்குத் தகவல் அனுப்பினான்.

தனக்கு எதிராய் ஒரு அலை ஆரம்பமாவதை அறிந்த அபிமெலக்கு, எப்படியாவது எதிரிகளை அழிக்க வேண்டும்  இல்லையேல் தன் ஆட்சி நிலைக்காது என்று முடிவெடுத்தான். உடனே அவன் தன் வீரர்களோடு சென்று இரவில் இருளோடு இருளாக விளை நிலங்களில் பதுங்கி கலால் இருக்கும் நகரை நோக்கி முன்னேறினான்.

செபூல் நகரைக் காவல் செய்து கொண்டிருக்க, கலால் தன்னுடைய ஆதரவாளர்களோடு நள்ளிரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது மலைச்சரிவுகளில் அபிமெலெக்கு படைவீரர்களோடு வந்துகொண்டிருந்தான். படைவீரர்கள் மலைச்சரிவுகளில் இறங்கியபோது மரங்கள் அசைந்தன.  மலைச் சரிவுகளில் இருந்த விளைநிலங்களிலிருந்து ஆட்கள் இறங்கி வருவது கலாலுக்குத் தெரிந்ததும் பதட்டமானான்.

‘செபூல்… செபூல்… அதோ மலைகளிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள். ‘ கலால் பதட்டமாய் சொன்னான்.

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கலால். அது மலையின் நிழல். உனக்கு மனிதர்கள் போல தெரிகிறது’ செபூல் உள்ளுக்குள் வஞ்சமாய் சிரித்தான்.

‘இல்லை செபூல், நீ நகர காவலன் தானே.. நிழலுக்கும், நிஜத்துக்குமான வித்தியாசம் கூடவா உனக்குத் தெரியவில்லை ? இது மனிதர்கள் தான்’ என்று மீண்டும் சொன்னான். செபூல் மறுத்தான். ஆனால் கலாலோ மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தைக் செபூலிடம் சொல்லிக் கொண்டே இருக்க,

செபூல் கலாலை நோக்கித் திரும்பினான், ‘ ஆம்.. மனிதர்கள் தான்.. எனக்குத் தெரியும்’ செபூலின் முகத்தில் ஒரு வஞ்சகப் புன்னகை விரிந்தது.

‘உனக்குத் தெரியுமா ? அப்படியென்றால்…..’ கலாலின் முகத்தில் திகில் படர்ந்தது.

‘எனக்குத் தெரியும். நான் தான் வரச் சொன்னேன். அது அபிமெலக்கின் படை ! உன்னைத் தேடித் தான் அவர்கள் வருகிறார்கள்’ செபூல் சொன்னான்

‘என்னைத் தேடியா ? ஏ..ஏன் ?’ கலாலின் வார்த்தைகள் நடுங்கின.

‘நீதான் வாய்ப்புக் கிடைத்தால் அபிமெலக்கை கொன்று விடுவேன் என்றாயே… இது தான் அந்த வாய்ப்பு.. எங்கே அவனைக் கொல் பார்க்கலாம் ?’ செபூல் நகைத்தான்.

‘ஐயோ… உண்மையாகவா சொல்கிறீர்கள் ?’ கலால் பதறி எழுந்தான்.

‘ஆம்.. உன்னையும், உன் ஆதரவாளர்களால் நிறைந்திருக்கும் இந்த நகரையும், அழித்து ஒழிப்பதற்காகத் தான் அபிமெலக்கு படையுடன் வருகிறார்’ செபூல் சிரித்தான்.

கலால் சற்றும் தாமதிக்கவில்லை. சட்டென்று எழுந்து ஓட ஆரம்பித்தான். செபூல் சுதாரிக்கும் முன் கால்போன போக்கில் பின்னங்கால் பிடறியில் பட வேகமாய் ஓடி மறைந்தான். அப்போது அபிமெலக்கு நகருக்குள் நுழைந்தான். அங்கே கண்களுக்குத் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தான். அத்துடன் நின்றுவிடாமல் நகரிலேயே தங்கி, மறுநாள் காலையில் விளைநிலங்களுக்கு மக்கள் வந்தபோது சுற்றி வளைத்து அவர்களையும் கொன்றான்.

பயந்து போன மக்கள் கூட்டம் ஏல்பெரித்துக் கோயிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டது. கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் மன்னன் தங்களைக் கொல்லமாட்டான் என்று மக்கள் நினைத்தார்கள். அபிமெலெக்கு தான் எதற்கும் அஞ்சாதவன் ஆயிற்றே ! அவன் தன் படையினரைக் கொண்டு கோயிலை முழுவதுமாய் மரக் கிளைகளினால் மூடி மொத்தமாய் எரித்தான். கோயிலோடு சேர்ந்து மக்கள் மொத்தமும் அழிந்தார்கள்.

அன்று முழுவதும் அபிமெலெக்கின் வீரர்களுக்கு வேட்டை நாள். மனித வேட்டை நாள். அவர்கள் நகரின் மூலை முடுக்கு எங்கும் சென்று உயிரோடிருந்த அனைவரையும்  கொன்று குவித்தனர். பின் நகர் முழுவதும் உப்பைத் தூவினர்.

அங்கிருந்து அருகிலிருந்த தெபேசு நகருக்குச் சென்றான் அபிமெலக்கு. தெபேசு நகர மக்கள் அனைவரும் பயந்து போய் நகரின் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். பலர் கோட்டையின் உச்சிக்குச் சென்றனர்.

‘வாருங்கள். கோயிலுக்குத் தீயிட்டது போல இந்தக் கோட்டைக்கும் தீயிடுவோம். மக்கள் அனைவரும் வெந்து மடியட்டும்’ அபிமெலக்கு கர்ஜித்தான்.

வீரர்கள் பின் தொடர அவன் கோட்டையை நோக்கி முன்னேறினான். அங்கே கோட்டையின் மேல் ஒரு பெண் ஒரு அம்மிக் கல்லை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அபிமெலக்கு தனக்கு நேராக கீழே வந்தால் அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். எப்படியாவது அபிமெலெக்கு தான் இருக்கும் இடத்துக்குக் கீழே வரட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அபிமெலக்கு கோட்டையை நெருங்கினான். மேலே பெண் காத்திருந்தாள். அவன் நேராக அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்துக்குக் கீழாக வந்தான். அவள் உள்ளுக்குள் புன்னகைத்தாள். அவன் நெருங்கி வரக் காத்திருந்தாள்.

இதோ….

இதோ….

அபிமெலெக்கு கோட்டைக்கு மிக அருகே வந்தான். அவள் சற்றும் தாமதிக்கவில்லை, குறி பார்த்து அம்மிக் கல்லை மிகச் சரியாக அபிமெலக்கின் தலையில் போட்டாள்.

அபிமெலக்கின் தலை பிளந்தது ! கீழே விழுந்த அவன் கோட்டைக்கு மேலே பார்த்த போது வெற்றிச் சிரிப்புடன் தெரிந்தாள் அந்தப் பெண்.

‘அவமானம் ஒரு பெண் என்னைக் கொல்கிறாளா ? ஒரு பெண்ணை விட நான் வீரமில்லாதவன் ஆகிவிட்டேனா ? ‘ அபிமெலெக்கு உள்ளுக்குள் அவமானமாய் உணர்ந்தான். உடனே அவன் தன்னுடைய படைக்கலன் தாங்கும் பணியாளனை அழைத்தான்,

‘வா… என் அருகே விரைந்து வா… உன் வாளை எடுத்து என்னைக் குத்திக் கொல்’

‘தலைவரே… உம்மைக் கொல்வதா ? அது என்னால் முடியாது. முடியவே முடியாது’ பணியாளன் மறுத்தான்.

‘இல்லை… இது அரச ஆணை. அபிமெலக்கு ஒரு பெண்ணால் இறந்துபோனான் என்று நாளை உலகம் பேசக் கூடாது. என்னைக் கொன்றுவிடு…. ‘ அபிமெலக்கு சொன்னான். பணியாளனின் மறுமொழி பேசவில்லை.

அவன் அபிமெலெக்கை நெருங்கினான். அவனுடைய கைகளிலிருந்த வாளை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டான். வாளை அபிமெலெக்குவிற்கு நேராக உயர்த்திப் பிடித்து, அவனுடைய நெஞ்சில் வேகமாக இறக்கினான்.

வாள் அபிமெலெக்கை துளைத்து வெளியேற, அவன் இறந்தான்.

தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொன்று, நகரின் ஆயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்த கொடுங்கோல் மன்னன் அபிமெலக்கு இறந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதற்கெல்லாம் காரணமான அந்தப் பெண் மட்டும் கவனிக்கப்படவேயில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…

கி.மு கதை : கிதியோன், The 300 !!!

இஸ்ரயேலர்கள் சிறிதுகாலம் தங்களை அடிமை நிலையிலிருந்து மீட்டு வந்த கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவர்களின் குணம் மாறத் துவங்கியது. அவர்கள் வேற்று தெய்வங்களை வழிபடவும், இஸ்ரயேலர்களின் கடவுளை நிராகரிக்கவும் துவங்கினர். தன்னை மதிக்காத இஸ்ரயேலர்களைக் கடவுளும் கைவிட்டார். அவர்கள் மிதியானியரால் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானியரின் கொடுமைக்குப் பயந்து மலைக்குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் ஒளிந்து வாழ்ந்தார்கள். மிதியானியரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்கள் இஸ்ரயேலரின் கால்நடைகள் , விளைபொருட்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர், அல்லது அழித்தனர். ஏழு ஆண்டுகள் மிதியோனியரின் அடக்குமுறைக்குள் கொடுமை அனுபவித்த இஸ்ரயேலர்கள் மனம் திருந்தி கடவுளை நாடினார்கள். கடவுள் அவர்களுடைய வேண்டுதல் ஒலிகளைக் கேட்டார்.

கடவுள் அவர்களிடம் ஒரு இறைவாக்கினரை அனுப்பினார்.

‘நீங்கள் கடவுளின் கட்டளைகளை மீறினீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்தச் சோதனைகள்’ இறைவாக்கினர் சொன்னார்.

‘ஆம் உண்மை தான், நாங்கள் அவரை விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டோ ம். வேற்று தெய்வங்களுக்கு பலிபீடங்கள் அமைத்து பலி செலுத்தினோம். இதெல்லாம் தீமை என்பதை கடவுள் எங்களுக்குச் சொல்லியிருந்தார். நாங்கள் தான் கேட்கவில்லை. எங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புக் கிடைக்காதா ? நாங்கள் மீட்படைய வழியே இல்லையா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுள் நினைத்தால் உங்கள் துயரங்களை நீக்க முடியும். அவரை மட்டும் நம்பி, அவரிடம் மன்றாடுங்கள்’ இறைவாக்கினர் சொன்னார்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாகக் கடவுளை வேண்டினார்கள். கடவுள் மனமிரங்கினார். யோவாசின் மகனான கிதியோன் மூலம் மக்களை மீட்க கடவுள் தீர்மானித்தார்.  தன்னுடைய தூதர் ஒருவரை கிதியோனிடம் அனுப்பினார். கடவுளின் தூதர் கருவாலி மரத்தின் அருகே வந்து அமர்ந்தார். அங்கே கிதியோன் மிதியானியர்களுக்குப் பயந்து தன்னுடைய தானியங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு முன்பாக வந்து நின்றார்.

‘வீரனே…. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ தூதர் கிதியோனை வாழ்த்தினார்

‘இல்லை… கடவுள் எங்களோடு இல்லை. கடவுள் எங்களோடு இருந்திருந்தால் ஏன் எங்களுக்கு இத்தனை துன்பம்’ கிதியோன் விரக்தியாய்ச் சொன்னார்.

‘நீ ஏன் விரக்தியாய் பேசுகிறாய் ? கடவுள் உன்னுடைய மூதாதையர்களுக்குச் செய்த உதவிகளை நீ மறந்தாயா ?’

‘கதைகள் நினைவில் இருக்கின்றன. கடவுளைத் தான் காணோம்’

‘கதைகளா ? எகிப்தியர்களின் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் கிடந்த உன்னுடைய மூதாதையர்களைக் கடவுள் பல்வேறு அதிசய, அற்புதச் செயல்களின் மூலம் தான் மீட்டார் தெரியுமா ? செங்கடலையே இரண்டாகப் பிளந்து வழியமைத்தார் தெரியுமா ? இவைகளெல்லாம் கதைகளல்ல, உண்மைச் சம்பவங்கள் ‘ தூதர் சொன்னார்.

‘அப்படியானால் இப்போது எங்கே அந்த அதிசயச் செயல்கள் ? கடவுள் எங்களை மீண்டும் அடிமைகளாய் விட்டு விட்டாரே. எகிப்தியரிடமிருந்து மீட்டு மிதியானியர்களிடம் தானே அனுப்பி வைத்திருக்கிறார். எங்களை மீட்கவேண்டும் என்று தோன்றவில்லையா அவருக்கு ? எங்கள் கதறல் ஒலிகள் அவர் காதுகளை எட்டவில்லையா ? ‘ கிதியோன் கேட்டார்.

‘அதற்காகத் தானே உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்’ தூதர் சொன்னார்.

‘என்னையா ?’

‘ஆம்… உன்னைத் தான், உன் மூலமாகத் தான் கடவுள் இஸ்ரயேலர்களை மிதியானியரிடமிருந்து மீட்கப் போகிறார்.’

‘என்ன விளையாடுகிறீர்களா ? நான் என் குடும்பத்திலேயே மிகவும் சிறியவன். என்மூலமாக மீட்பா ? நல்ல வேடிக்கை தான். நான் இதற்குத் தகுதியானவன் அல்ல’

‘இல்லை நீ தான்.. நீ ஒருவன் இதற்குத் தகுதியானவன். நீ தனியாகவே சென்று மிதியானியரைத் தோற்கடிப்பாய். கடவுள் உன்னோடு இருப்பார்’ தூதர் அழுத்தமாய்ச் சொன்னார்.

‘தூதரே, நீங்கள் சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை. நான் மிதியானியரோடு போரிடவேண்டும் என்கிறீர்களா ?’ கிதியோன் கேட்டார்.

‘ஆம்… உன் தலைமையில் ஒரு படையைத் திரட்டி நீ மிதியானியருக்கு எதிராகப் போரிடவேண்டும். கடவுள் உன்னை வழி நடத்துவார். ‘ தூதர் சொன்னார்.

‘தூதரே…ஒரு நிமிடம் நில்லுங்கள். நான் உடனே வருகிறேன். எங்கும் போய்விடாதீர்கள்’ கிதியோன் தூதரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினார். வீட்டிற்குச் சென்று சில புளியாத அப்பங்களையும், கொஞ்சம் இறைச்சியையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

‘நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருந்தால், நீர் உண்மையிலேயே கடவுளின் தூதனாக இருந்தால், எனக்கு ஒரு அடையாளத்தைச் செய்து காட்டுங்கள்’ சொல்லிக் கொண்டே கிதியோன் அப்பங்களையும் இறைச்சியையும் தூதரின் முன்னால் வைத்தார்.

‘ நீ கொண்டு வந்திருக்கும் இந்த அப்பங்களையும், இறைச்சியையும் வைத்தே நான் உனக்கு ஒரு இறை அடையாளத்தைக் காட்டுகிறேன். கொஞ்சம் அப்பத்தையும், இறைச்சியையும் எடுத்து அந்தப் பாறை மீது வை.’ தூதர் சொன்னார். கிதியோன் அவ்வாறே செய்தார்.
தூதர் அந்த அப்பங்களையும், இறைச்சியையும் தன்னிடமிருந்த கோலின் நுனியால் தொட்டார். உடனே நெருப்பு சட்டென்று தோன்றி அந்தப் பொருட்களை எரித்தது.

கிதியோன் பரவசமானார். கடவுள் நெருப்பை அனுப்பிப் பலி பொருட்களை எடுத்துக் கொண்டதை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருடைய மனதுக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.

‘இப்போதாவது நம்பு…’ சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்தார் ஆண்டவரின் தூதர். கிதியோன் பயந்து போனார்.
‘ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். கடவுளின் தூதரை நான் நேருக்கு நேராய் சந்தித்தேனே…’ என்று பரவசமடைந்தார்.

அன்று இரவே கிதியோன் அன்னிய தெய்வங்களுக்காய் எழுப்பப்பட்டிருந்த பலிபீடங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார். இஸ்ரயேலரின் கடவுளுக்காய் அவர் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, அங்கே ஒரு கொழுத்த மாட்டை பலிசெலுத்தினார்.

மறுநாள் மக்கள் தங்கள் தெய்வங்களின் பலிபீடங்கள் தகர்ந்து கிடப்பதைக் கண்டு ஆவேசமடைந்தனர்.

‘இந்தக் கொடுமையைச் செய்த பாவி யார் ? அவனைக் கொல்லவேண்டும்’ என்று மக்கள் கோபமாகச் சுற்றித் திரிந்தனர்.

‘அது கிதியோன் தான்… இரவில் அவன் தன்னுடைய ஆட்களுடன் வந்து பலிபீடம் கட்டுவதைக் கண்டோ ம்…’ அந்தப் பக்கமாய் வசித்து வந்த மக்கள் சொன்னார்கள்.

‘அதெப்படி கிதியோன் எங்கள் கடவுளின் பலிபீடங்களை இடிக்கலாம். அவனை அழிக்காமல் விடப்போவதில்லை’ ஆவேசமடைந்த மக்கள் கிதியோனின் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

‘கிதியோனே… வெளியே வா… உனக்கு என்ன தைரியம் இருந்தால் எங்கள் கடவுளர்களை அவமானப் படுத்துவாய் ?’ மக்கள் கூச்சலிட்டனர்.

கிதியோனின் தந்தை வெளியே வந்தார். ‘கிதியோன் இங்கே இல்லை… என்ன விஷயம் ? ஏன் கூச்சலிடுகிறீர்கள் ?’

‘ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாயா ? எங்கள் கடவுளர்களின் பலி பீடங்களை உன் மகன் இடித்துத் தகர்த்திருக்கிறான். அவனைக் கொல்லவேண்டும்’

‘யார் உங்கள் கடவுள் ? ‘

‘பாகால் !… பாகாலின் பலிபீடத்தையும், அதன் அருகே நின்றிருந்த அசேராக் கம்பத்தையும் உன் மகன் அழித்திருக்கிறான்’ மக்கள் கத்தினார்கள்.

‘பாகால் !! அவன் என்ன பெரிய கடவுளா ? ‘ கிதியோனின் தந்தையும் கோபமானார்.

‘ஆம்.. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்’ மக்கள் சொன்னார்கள்.

‘அந்த பாகால் பெரிய சக்திவாய்ந்தவனாக இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும். நீங்கள் அவனைக் கொல்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் கையாலாகாதவர் என்று தான் அர்த்தம். போங்கள்… உங்கள் கடவுளிடம் சொல்லி என் மகனைக் கொல்லச் சொல்லுங்கள். உங்கள் கடவுளுக்கு வீரம் இருந்தால் அவன் என் மகனைக் கொல்லட்டும்’ கிதியோனின் தந்தையும் பதிலுக்குக் கத்தினார்.

‘பாகாலின் கையால் அவன் சாகப் போவது உறுதி. அவனைப் பாகால் அழிப்பான் என்பதைக் குறிக்கும் விதமாக இனிமேல் அவனை நாங்கள் எருபாகால் என்று அழைப்போம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கலைந்து போனார்கள்.

கிதியோன் மக்களின் கையிலிருந்து தப்பினான். ஆனாலும் இன்னும் அவனுக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘ இது ஒருவேளை கடவுளின் அழைத்தல் இல்லையென்றால் என்ன செய்வது ? கடவுள் தான் தூதரை அனுப்பினாரா ? இல்லை ஏதேனும் கண்கட்டு வித்தையா ?’
கிதியோனின் மனம் பல்வேறு கேள்விகளால் நிறைந்தது.

அவன் கடவுளை நோக்கி,’ கடவுளே… நீர் தான் என்னை அழைத்தீர் என்பதற்கு எனக்கு இன்னுமொரு அடையாளத்தைக் காட்டும். நான் என்னுடைய கம்பளி ஆடையை இன்று இரவு வெட்டவெளியில் வைப்பேன். என்னை அழைத்தது நீர் தான் என்றால் என்னுடைய ஆடையில் மட்டும் காலையில் பனி நிறைந்திருக்கட்டும். மற்ற இடங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கட்டும்’ என்றார். சொல்லிவிட்டு அன்று இரவே தன்னுடைய கம்பளியைக் கழற்றி வெட்டவெளியில் வைத்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவருடைய கம்பளியில் மட்டும் பனி நிறைந்திருந்தது. தரை உலர்ந்து கிடந்தது.

‘ஒருவேளை தரையில் விழுந்த பனி உலர்ந்து போயிருக்குமோ ? கம்பளியானதால் மட்டும் உலராமல் ஈரமாய் இருக்கிறதோ ? இது இயற்கையாகவே நடக்கும் சாதாரண நிகழ்வோ ?’ கிதியோனின் மனம் மீண்டும் சந்தேகப் பட்டது.

அவன் மீண்டும் கடவுளை நோக்கி, ‘கடவுளே இன்னும் எனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் செய்து காட்டும். இன்றைக்கும் நான் என் கம்பளியை இங்கே வைத்து விட்டுப் போவேன். நாளைக் காலையில் நான் வந்து பார்க்கும்போது கம்பளியில் மட்டும் பனி இருக்கக் கூடாது. தரையெங்கும் பனி நிறைந்திருக்க வேண்டும். உம்மில் நம்பிக்கை வைக்கக் கடைசியாக எனக்கு இந்த அடையாளத்தைச் செய்து காட்டும்’ என்றான்.

மறுநாள். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. முந்தைய நாள் உலர்ந்து கிடந்த தரை இப்போது பனியில் குளித்து தொப்பலாய்க் கிடந்தது. புற்களின் தலைகளிலெல்லாம் பனிக் கூடுகள். ஆனால் கிதியோனின் கம்பளி மட்டும் உலர்ந்து கிடந்தது.

‘கடவுளே… என்னை அழைத்தது நீரே ! உம்மை நம்புகிறேன்’ கிதியோன் மண்டியிட்டு கடவுளிடம் பேசினான்.

மிதியானியருடம் போரிட கிதியோன் தயாரானான். அவன் மக்களை பெருமளவில் திரட்டி கடல் அலையென மிதியானியரை நோக்கிப் படையெடுத்தான். கடவுள் அவனை அழைத்தார்.
‘கிதியோனே… நீ இத்தனை மக்களை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். வெற்றி பெற்றபின் அவர்கள் கர்வம் கொள்வார்கள். மக்கள் சக்தியே வென்றது என்று அவர்கள் ஆணவம் அடைவார்கள். அவர்களில் சிலர் மட்டும் போதும் உனக்கு. அப்போதுதான் என்னுடைய வலிமையை மக்கள் உணர்வார்கள்’ கடவுள் சொன்னார்.

கிதியோன் கடவுளின் வார்த்தையின் படி மக்களை நோக்கி,’ உங்களில் யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை. போரில் ஆர்வம் இல்லாதவர்களும், பயப்படுபவர்களும் உடனே திரும்பிப் போய்விடுங்கள்’ என்றான்.

மக்களில் முக்கால் வாசி  பேர் உடனே திரும்பி நடந்தார்கள். மிச்சமிருந்த கூட்டம் சுமார் பத்தாயிரம் இருந்தது.

கடவுள் மீண்டும் கிதியோனிடம், ‘இதுவும் மிக அதிகமான கூட்டம் தான். இவர்களை அதோ அந்த நீர் நிலைக்கு அழைத்துப் போய் தண்ணீர் குடிக்கச் சொல். யாரெல்லாம் தண்ணீரை கைகளில் அள்ளிக் குடிக்கிறார்களோ அவர்களை தனியே நிற்க வை. யாரெல்லாம் மண்டியிட்டுக் குடிக்கிறார்களோ அவர்களை திரும்ப அனுப்பிவிடு’ என்றார்.

கிதியோன் மக்களை நோக்கி,’ நீங்கள் எல்லோரும் அந்த நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் குடியுங்கள்’ என்றார்.

அவர்களில் பெரும்பாலானோர்கள் மண்டியிட்டுத் தண்ணீர் குடித்தார்கள். வெறும் முந்நூறு பேர் மட்டுமே கைகளில் நீரை அள்ளிக் குடித்தார்கள்.
கிதியோன் கலங்கினார். ‘கடவுளே… மிதியானியரை அழிக்க வெறும் முந்நூறு பேர் போதுமா ?’.

கடவுள் அவரிடம் ‘போரிடப் போவது முந்நூறு பேர் என்றால் தோல்வி நிச்சயம் ! ஆனால் போரிடப் போவது முந்நூறு பேர் அல்லவே ! நான் ஒருவன் மட்டுமல்லவா ? அதனால் வெற்றி நிச்சயம் தான். கவலையை விடு’ கடவுள் பதிலளித்தார்.

அன்று இரவு கிதியோனின் நண்பன் ஒரு கனவு கண்டான். கனவில் ஒரு வட்டமான கோதுமை அப்பம் சுழன்று சென்று மிதியானியரின் கூடாரத்தை இடித்துத் தகர்த்தது. நண்பன் கிதியோனிடம் ஓடோ டி வந்தான்.

‘நண்பா… நீ வெற்றி பெறும் வேளை வந்துவிட்டது ! உன்னுடைய வாள் தான் அந்த அப்பம். நீ அவர்களை துரத்தும் நேரம் வ்ந்துவிட்டது என்பதைத் தான் கடவுள் என் கனவு வாயிலாகச் சொல்லியிருக்கிறார்’ நண்பன் சொன்னான்.

‘கடவுள் எனக்கு வாக்களித்திருக்கிறார். நமக்கு நிச்சயம் வெற்றிதான். நாம் போருக்குத் தயாராவோம்’ கிதியோன் சொன்னான்.

கிதியோன் அந்த முந்நூறு பேரையும் மூன்று குழுக்களாகப் பிரித்தார். அவர்களில் ஒவ்வொருவர் கைகளிலும் ஒவ்வொரு நெருப்புப் பந்தமும், ஒரு காலிப் பானையும், ஒரு எக்காளமும் கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்.

நள்ளிரவில் எல்லோரும் கைகளில் நெருப்புப் பந்தத்தோடும், காலிப் பானைகளோடும் மிதியானியர் கூடாரமடித்திருந்த இடத்தைச் சுற்றி வளைத்தார்கள்.

கிதியோன் திடீரென்று எக்காளத்தை எடுத்து ஊதினார். உடனே மிதியானியர்களைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு எக்காளம் ஊதினார்கள். பெரும் சத்தத்தைக் கேட்ட மிதியானியர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அப்போது கிதியோனின் வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த பானையை ஒரே நேரத்தில் உடைத்து பெரும் சத்தம் எழுப்பினார்கள். மிதியானியர்கள் இதென்ன சத்தம் என்று அதிர்ந்து போய் நிமிர்கையில் கிதியோனின் வீரர்கள் எல்லோரும் ஒரே குரலாக

‘ஆண்டவருக்காக…. கிதியோனுக்காக’ என்று சத்தமிட்டார்கள். கிதியோனின் திட்டம் வெற்றியடைந்தது. மிதியானியர்கள் குழப்பத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள். கடவுள் மிதியானியர்களுக்குள்ளேயே திடீர்க் கலகத்தை உண்டாக்கினார். இரவில் மிதியானியர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட ஆரம்பித்தார்கள்.

மிதியானியர்கள் தங்களுக்குள்ளேயே வெட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சிதறி ஓட, கிதியோன் மாபெரும் வெற்றி பெற்றார். கடவுளின் வழிகாட்டுதல் அவரை வெற்றி வீரனாக்கியது. மக்கள் எல்லோடும் அவரிடம் வந்து,’ இனிமேல் நீங்கள் தான் எங்களை ஆளவேண்டும்.. வாருங்கள். எங்கள் அரசராகுங்கள்’ என்று அழைத்தார்கள்.

அவரோ அவர்களிடம்,’ மீண்டும் தவறிழைக்காதீர்கள்.. கடவுள் ஒருவரே அரசர். அவர் சொல்வதை மட்டுமே கடைபிடித்து வாழுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

தமிழிஷில் வாக்களிக்க…