ஐ.டி பொங்கல்…

கலர் கலராய்
வர்ணம் உடுத்திய
மண் பாண்டத்தில்
நுரையாய்ப் பொங்கியது
இலவம் பஞ்சு.

தெர்மோக்கோல் வனப்பில்
மஞ்சள் நிற மினுக்கில்
ஹேப்பி பொங்கல்
சொன்ன
ஹைடெக் கதவின் முன்
சில
ஹேப்பி பெண்கள்.

“வாட்ஸ் போன்கல்”
கடித்துத் துப்பிய
கிளையண்டுக்கு
மாட்டைப் பற்றியும்
மாட்டுச் சாணத்தைப் பற்றியும்
சிரிக்கச் சிரிக்க கான்பரன்ஸினர்
ஆஃப்ஷோர் மேனேஜர்கள்.

தலைப் பொங்கல்
நாலு நாள் லீவ் வேணும்
தலையைச் சொறிந்தவர்களுக்கு
மாட்டுப் பார்வையே
மிஞ்சியது.

ஹேப்பி பொங்கல் guys
டவர்ல தண்ணி ஊத்தி
கொண்டாடுவோம்
மின்னஞ்சல்கள் பறந்தன.

நாளைக்கு நைஸ் பிலிம்யா…
ஈவ்னிங் சன் டீவில
கிளிகள் கிசுகிசுத்துப் பறந்தன.

டவுன்லோட் படம் ஒன்று
டெஸ்க் டாப்பில்
பொங்கல் வாழ்த்து சொன்னது.
மின்னஞ்சல்கள்
டிஜிடல் கரும்பை வினியோகம் செய்தன.

எத்தனை பேருக்குத் தெரியுமோ
பச்சரிசி வாங்க
காசில்லையே என
மடி தடவிக் கவலைப்படும்
கிராமத்து ஜீவனின் பொங்கல் கவலை !

 பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

கவிதை : மாறாதவைகள்…

 

எடைகள் எப்போதும்
நியாயமாய் இருந்ததில்லை
எனினும்
‘நியாய விலைக் கடை’கள்
பெயர் மாற்றிக் கொள்ளவில்லை.

பாதி அளவுக்கே இருக்கிறது
நீதி,
ஆனாலும் நீதிபதிகள்
நீதிபாதிகள்
என அழைக்கப்படவில்லை.

ஜனங்களை விட அதிகமாய்
இருக்கைகளைப் பற்றியே
இருக்கின்றன அரசுகள்,
ஆனாலும்
சாசனங்கள் பெயர்மாறி
ஆசனங்கள் ஆகவில்லை.

பிடுங்கல்களைக் கூட
‘தட்சணை’கள் என்றே
வரன் வீட்டுச்
சவரன்கள் வாயாரச் சொல்கின்றன.

என்ன சொல்வது ?
மரணத்தைக் கூட
மறுவீட்டுப் பிரவேசம் என்று
அன்போடழைத்தே
பழக்கப் பட்டவர்கள் நாம்.

பெயர்களில் என்ன இருக்கிறது
வேர்களில்
வித்யாசம் இல்லா ஊர்களில் ?

கவிதை : ஒரு துளித் தனிமை

 

நேசமாய்த் தான் இருந்தேன்.

ஒவ்வோர் இதழ்களிலும்
மெல்லியத் தழுவல்,
செடியின்
கால்களுக்குக் காயம் தராத
தண்ணீர் பாசனம்.

ஆனாலும்
பூக்கள் புகார் செய்ததில்
என்
தோட்டக்காரன் வேலை
தொலைந்து போய் விட்டது.

எந்தச் சிறகையும்
சிக்கெடுக்கும் நேரத்திலும்
சிதைத்ததில்லை.
எந்த அலகிலும்
முத்தம் இட மறந்ததில்லை.

இருந்தாலும்
அத்தனை பறவைகளும்
என்னை விட்டுப் பறந்து
எங்கோ போய்விட்டன.

நீந்தி வந்து
இரைகொத்தும் என்
நீச்சல் குள மீன்கள் கூட
சத்தமின்றித்
தோணியேறி
அடுத்த ஆற்றுக்கு
அவசரமாய் சென்று விட்டன.

என்னிலிருந்து
நான் பிரிந்த
தனிமை எனக்கு.

என் கிளைகள் எல்லாம்
காய்ந்தாலும்
இன்னும்
மிச்சமிருக்கிறது என்னிடம்
மூன்று தலைமுறைக்கான
விதைகள்.

பறவை : அறிவியல் புனைக் கதை

bird2a

 

 

 

 

 

 

 

 

 

 

“சார். என்னோட கார்ல ஒரு பறவை அடிபட்டு செத்துப் போச்சு சார்” சென்னை அறிவியல் ஆராய்சிக் கூடத்துக்கு வந்த தொலைபேசியைக் கேட்டு சிரித்தார் வெங்கட்ராமன்.

காலையிலேயே மனுஷனை டென்ஷன் பண்ண வந்திடுவாங்க ஏதாச்சும் ராங் கால் பார்ட்டிங்க என்று உள்ளுக்குள் பொருமியவர் வார்த்தைகளிலும் அதைக் காட்டினார்.

“சார்… நீங்க போன் பண்ணியிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்துக்கு. பறவை செத்துப் போனதையெல்லாம் எங்க கிட்டே சொல்ல வேண்டாம் சார். புளூ கிராஸ் க்கு போன்பண்ணுங்க. நான்வெஜ் சாப்பிடுவீங்கன்னா கரம் மசாலா போட்டு குழம்பு வைங்க. இல்லேன்னா நல்லடக்கம் பண்ணிடுங்க.”

சொல்லிக் கொண்டே எரிச்சலுடன் வைக்கப் போனவரை இழுத்துப் பிடித்தது மறுமுனையில் பேசிய வினோத்தின் குரல்.

“சார்… பிளீஸ் வைக்காதீங்க… எனக்குப் பயமா இருக்கு”

“பயமா இருக்கா ? ” வெங்கட்ராமன் வைக்கப்போன போனை மீண்டும் பற்றினார்.

“ஆமா சார். உண்மையிலே அந்தப் பறவை என் கார்ல அடிபட்டதும் சட்டுன்னு போய் பறவையைப் பார்த்தேன் சார். அப்படி ஒரு பறவையை நான் பார்த்ததே இல்லை..”

இப்போது வெங்கட்ராமனை சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது. “பாத்ததேயில்லைன்னா ? புது விதமான பறவையா ?”

“ஆமா சார். அடிபட்டுக் கிடந்த பறவையைத் தூக்கிப் பாத்தா அதோட வயிற்றுக்குள்ளேயிருந்து ஒரு சத்தம் வந்துட்டே இருந்துது…” வினோத் சொல்லி நிறுத்த வெங்கட்ராமனுக்கு இப்போது இருப்புக் கொள்ளவில்லை.

“சத்தம்ன்னா….?”

“ஏதோ ரேடியோ இரைச்சல் மாதிரி சத்தம் சார். பறவையை உற்றுப் பாத்தப்போ தான் தெரிஞ்சுது அது பறவை இல்ல சார்.. ஒரு ரோபோ ! ” வினோத் சொல்ல வெங்கட்ராமன் இருக்கையை விட்டு எழும்பினார்.

“வாட்…. சின்ன ரோபோவா ? பறவை வடிவிலா ? எங்கே இருக்கு இப்போ ? நீங்க எங்கேயிருந்து பேசறீங்க ? ” வெங்கட்ராமன் பரபரத்தார்.

தகவல் காட்டுத் தீ போல ஆராய்ச்சிக் கூடத்தின் இருக்கைகளுக்கெல்லாம் பரவியது. செய்தியைக் கேட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாய் வியந்தார்கள்.

பறவை வடிவில் ஒரு ரோபோவா ? 

இந்தப் பறவை எங்கிருந்து வந்திருக்கக் கூடும் ? பாகிஸ்தான் ? சீனா ? ஏன் வந்திருக்க வேண்டும் ? நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறதா ?

இந்த ஒரு பறவை தானா இன்னும் நிறைய பறவைகள் நாட்டுக்குள் பறந்து திரிகின்றனவா ? இவைகளின் நோக்கம் என்ன ? ராணுவ தளவாடங்களைப் படமெடுத்து அண்டை நாடுகளுக்கு அனுப்புவதா ?

அறைகள் கேள்விகளால் நிரம்பிக் கொண்டிருந்தபோது பறவை ஆராய்ச்சிக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த வல்லுனர்கள் சென்னை ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைந்தனர்.

சட்டென பார்த்தால் புறாவைப் போன்ற தோற்றம். ஒரு இயந்திரப் பறவை என நம்ப முடியாதபடி இறக்கைகள், அலகு, வால் எல்லாமே அச்சு அசலாய் உண்மையான பறவை போல.

அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முதன்மை அறையில் கிடத்தப்பட்டது பறவை. சாத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டுகளுக்கு உள்ளே விஞ்ஞானிகளின் புருவம் உயர்வதும், வாய் திறந்து மூடுவதும் என ஏதோ வியப்பு ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சில மணி நேரங்களுக்குப் பின் டவுன்ஹால் உரையாற்றினார் கூடத்தின் தலைவர் மதன் கபூர்.

இன்றைக்கு நமது பார்வைக்கு வந்திருக்கும் பறவை ஒரு விஞ்ஞான ஆச்சரியம். பறவையைப் போல இயல்பாகவே பறக்கக்கூடிய இந்தப் பறவை ஏதோ இயக்கக் கோளாறு காரணமாக பழுதடைந்து வீழ்ந்திருக்கிறது.

இதன் கண்கள் மிக மிக சக்திவாய்ந்த காமராக்கள். இவை இந்த படத்தை எங்கே அனுப்புகின்றன என்பது மர்மமாக இருக்கிறது. இந்தப் பறவையினுள்ளே இருக்கக் கூடிய எல்லா கருவிகளுமே மிக மிகப் புதியதாக உள்ளன. நாம் இதுவரை தெரிந்து கொள்ளாத நுட்பம் இதில் தெரிகிறது. மிகவும் நுண்ணிய, மெல்லிய அளவில் இருப்பதால் முழுமையாய் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது ஏதோ அயல் நாடு நமது நாட்டின் மீது பறவைகளை ஏவி நமது எல்லைகளைப் படம்பிடிக்கவும், நமது ராணுவ நிலையங்கள், பாதுகாப்பு பகுதிகள் அனைத்தையும் படம்பிடிக்கவும், அணு நிலையங்களை நோட்டம் விடவும் அனுப்பியிருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

இதை பாகிஸ்தான் செய்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அடி, வெட்டு, விதண்டாவாதாப் பேச்சு, தீவிரவாதம் இவற்றை மட்டுமே அறிந்திருக்கும் பாகிஸ்தான், இத்தனை உயரிய தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

எனில் இது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு செய்து வரும் மறைமுக வேலையாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை உலக சபையின் பார்வைக்குக் கொண்டு செல்லும் படி இந்திய அரசை இந்த ஆராய்சிக்கழகம் கேட்டுக் கொள்ளும். இந்த பறவையை மேலும் ஆய்வு செய்ய அகில இந்திய அளவிலான குழு அமைக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பான இடங்களில் இத்தகைய பறவைகள் உலவுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவேண்டியதும், அதற்காக சிறப்புக் கருவிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் இந்த அமைப்பு கருதுகிறது.

மதன் கபூர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராமனின் தொலைபேசி ஒலித்தது.

“சார்… ஒரு கிரிக்கட் பால் போல ஒண்ணு இங்கே கிடந்துது சார். நான் அதை எடுக்கப் போனதும் பறந்து போச்சு…” 

அதே நேரம்

மயூபா கிரகத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் மக்கள் உற்சாகமாய் இருந்தனர்.

பூமி எனும் கிரகத்துக்கு நாம் அனுப்பிய விண்வெளிக் கலங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன. அங்கும் ஓரளவு விஞ்ஞான வளர்ச்சியடைந்த பகுதிகள் இருக்கின்றன.

மயூபா கிரகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போல இருக்கிறது பூமி எனும் கிரகம். ஏராளம் மரங்கள், தண்ணீர், மிக சுத்தமான காற்று என வியப்பூட்டும் அருமையான கிரகம்.

மயூபா இயந்திரங்களின் பூமியாகிவிட்டது. எனவே பூமியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது விண்கலப் பறவைகள், பந்துகள், மண்புழுக்கள், வண்டுகள் எல்லாம் அனுப்பிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. பூமியின் எல்லா பாகங்களிலும் இருக்கும் நாம் அனுப்பிய பத்து இலட்சம் கருவிகள் நமக்கு துல்லியமான தகவல்களைத் தந்து கொண்டே இருக்கின்றன.

சொல்லிக் கொண்டிருந்தவன் மனிதனைப் போலவே இருந்தான். அறிவியல் படங்கள் காண்பிப்பது போல அகோரமாய் இருக்கவில்லை. இரண்டு கைகள் இரண்டு கால்கள். சரியான அளவிலான தலை என இருந்தவன் திரும்பிய போது தெரிந்தது சின்னதாய் ஒரு வால்.

 “பூமியை அபகரிப்பது எளிதா ?”

 “பூமியின் மீது போர் தொடுத்தால் தான் பூமியை தன் வசப்படுத்த முடியும்.” 

“பூமியின் பலத்தை அறியாமல் அதன் மீது எப்படிப் போர் தொடுப்பது ?” 

“இப்போது நாம் அனுப்பியிருக்கும் பத்து இலட்சம் கருவிகளையும் வெடிக்க வைத்தாலே பூமியை முழுமையாய் அழித்துவிடலாம். ஆனால்…”

“ஆனால்.. ?”

“நமக்குத் தேவை வெறும் பொட்டல் காடல்ல. முழுமையான பூமியும், அதிலுள்ள மனிதர்களும். நாம் அவர்களைப் போலவே இருப்பதால் நாமும் அவர்களோடு அவர்களாக உலவ முடியும். இதுவரை நாம் கண்டறிந்த உயிரினங்கள் வாழும் நாற்பத்து எட்டு கிரகங்களிலும், இந்த கிரகத்து உயிரினம் மட்டுமே நம்மைப் போல் இருக்கிறது”

“இருந்தாலும் பூமியிலுள்ள உயிரிகளுக்கு வால் இல்லையே…”

“வால் இல்லாதது கொஞ்சம் அவலட்சணம் தான் ! இருந்தாலும் பரவாயில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களும் நம்மைப் போலவே நடக்கின்றனர், பேசுகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்….”

“சரி.. கேட்க சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது. நம் கிரகத்து மக்கள் அனைவரும் தங்குமளவுக்கு பூமி பெரியதா ?”

“நம்மைப் போல பத்து மடங்கு கூட்டம் அங்கே வசிக்கிறது. எனவே நாமும் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.”

“சரி.. எப்படி பூமியில் போகப் போகிறோம்…”

“அது மட்டும் சஸ்பென்ஸ்” அதுவரை எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்த மனிதன் மெலிதாய் புன்னகைத்தான்.

 0

 மயூபா கிரகத்தின் திட்டத்தை அறியாத சென்னை ஆராய்ச்சிக் கழகம் இந்திய அரசின் உயர் மட்டக் குழுவில் தனது  கருத்துக்களைச் சமர்ப்பித்தது.

இந்திய அரசு உடனே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரை அழைத்து நிலமையை விளக்க, எல்லாவற்றையும் உடனடியாக மறுக்கும் தூதர் இதையும் மறுத்தார். “இந்தியாவுடனான இணக்கமான சூழலை அமெரிக்கா எப்போதுமே உடைக்காது ” என்றார் வழக்கம் போலவே. 

தகவல் உலகத்தின் சபைக்குச் சென்றது. 

உலகத்தினர் அனைவருக்குமே இந்தச் செய்தி அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. புறா, பந்து போன்ற வடிவங்களில் அதி நவீன கருவிகள் நாட்டில் ஊடுருவிக் கிடக்கின்றன என்றால் இன்னும் என்னென்ன வடிவங்களில் ஒற்றுக் கருவிகள் உலவுகின்றனவோ என உலகம் கவலைப்பட்டது. 

இது பின்லேடனின் சதியாய் இருக்கலாமோ எனவும் அமெரிக்கா பேசத் தவறவில்லை. அப்படியானால் பறவைகள் மோதி கட்டிடங்கள் உடையுமோ எனும் கவலையை அமெரிக்கர்களின் விழிகளில் பார்க்க முடிந்தது. 

பூமியின் தலைவர்களும், விஞ்ஞானிகளும், குழம்பிப் போய், வியந்து போய் பேசிக்கொண்டிருக்கையில். 

ஒருவேளை இது ஏலியனாக இருக்கலாமோ என யூ.எஃப். ஓ கூறியதை மட்டும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை.

 0

 நாளை பூமி மீதான தாக்குதல் நாள்.

 மயூபாவில் நாள் குறித்தனர். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் விண்கலங்களில் ஏறி பூமிக்கு வர ஆயத்தமாகியிருந்தனர்.

 நோவாவின் பேழை போல மிகப்பெரிதாய் இருந்த விண்கலங்கள் ஏழு அடுக்குகளால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கீழ் அடுக்கிலிருந்த காந்தப் பகுதியில் சக்தியைச் செலுத்தினால் அது ஒளியாண்டுகள் வேகத்தில் பாய்ந்து சேரவேண்டிய பகுதியை சில நிமிடங்களில் சேர்ந்து விடும்.

 வரிசையாய் நின்றிருந்த ஆயிரக்கணக்கான விண்கலங்கள் எங்கெங்கே இறங்கவேண்டும் என்பது இயந்திரப் பறவைகள் அனுப்பிய தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 எப்படி பூமி மீது போரிடப் போகிறார்கள் என்பது மட்டும் மர்மமாகவே இருந்தது.

மயூபாவின் விஞ்ஞானக் கூடத்திலிருந்த தலைமை விஞ்ஞானி சொன்னார்.

நமது திட்டம் இது தான். பூமியில் வாழும் மனிதர்களுக்கு ஒரு விஷேஷ குணம் இருக்கிறது. நம்மைப் போல அவர்கள் பட்டியலிட்டு எதையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணமாய் இருப்பவை அவர்களுடைய ஹார்மோன்கள் தான்.

 அதில் நாம் எடுத்திருப்பது ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன். இதுதான் மனிதர்களை இன்பமான சூழலுக்கு இட்டுச் செல்கிறது. இதை நுகர்ந்தால் மனிதன் போர் சிந்தனையை எல்லாம் விட்டு விட்டு காதல் சிந்தனைக்குள் மூழ்வி விடுவான். 

தலைமை விஞ்ஞானி சொல்லச் சொல்ல குழுவிலிருந்தவர்கள் விழிகளை விரித்து கேட்டுக் கொண்டிருந்தனர். 

இந்த ஆக்ஸிடோசினைத் தான் நாம் செயற்கையாய் தயாரித்து ஏற்கனவே பூமியில் உலவும் கருவிகள் மூலம் காற்றில் பரவ விடப் போகிறோம். 

“எப்போது தயாரிப்பது ? அதற்கு ஒரு துளி ஆக்ஸிடோனின் வேண்டுமே” 

“ஏற்கனவே தயாரித்தாயிற்று. ஒரு துளியை வைத்துக் கடலை உருவாக்கலாம் என்பது இன்னும் பூமி மக்களுக்குத் தெரியாத கலை. நாம் ஏற்கனவே அந்த ஹார்மோனை பிரதியெடுத்தாயிற்று. கலவியின் போதும், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் என்பது பூமி மக்களுக்கே கூட தெரிந்த சமாச்சாரம் தான். ”

நாளைக் காலையில் நாம் புறப்படுவதற்கு முன் பூமியிலுள்ள நமது கருவிகளான பறவைகள், மண்புழுக்கள், பந்துகள், வண்டுகள் எல்லாம் பூமியெங்கும் பறந்து திரிந்து இந்த ஆக்ஸிடோசினை பூமியெங்கும் தூவிக்கொண்டே இருக்கும்.

மக்கள் மோகச் சிந்தனையில் மூழ்கும் போது, நாம் போய் இறங்குவோம். இதன் மூலம் மக்களுடைய போரிடும் சிந்தனை தற்காலிகமாய் மறையும் நாம் சென்று இறங்குவதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். கூடவே நமது இனத்தைப் பெருக்கிக் கொள்வதும் எளிதாகிவிடும்.

அவர் சொல்லிக் கொண்டே போக, விண்கலங்கள் பூமியை நோக்கிப் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தன.

விஷயம் தெரியாத இந்தியாவின் சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமருக்கான கொடும்பாவியைத் தயாரித்துக் கொண்டிருந்தன.

 0 

 நன்றி : யூத்புல் விகடன்.

http://youthful.vikatan.com/youth/xaviorstory27032009.asp

சிறுகதை : ஒரு குரலின் கதை

oru-kuralin-kathai
கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு.  தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….”  மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை”  விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ”  :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?”  விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான்  குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

0

ஒரு வெட்டியான் வாய் திறக்கிறான்

 

cemetry
வாருங்கள்…

ஏதேன் தோட்டத்துள்
ஏதேதோ தேடி
கல்லறத்தோட்டம் வந்தவர்களே
வாருங்கள்.

சுமை சுமந்து
சோர்ந்துபோனவர்களுக்கு
நித்திய சமாதானம்
தருவது என் தோட்டம் தான்.
மனிதனுக்கு ஆயிரம் முகங்கள்
ஆனால்
என் வீட்டுக்கு வந்தபின்
சந்தனமானாலும் விறகானாலும்
மிஞ்சுவது சாம்பல் மட்டும் தான்.

உயிரோடிருக்கும் போது
கற்றுத் தெளிந்த
மானுடம்
இங்கு வந்து எனக்கு கற்றுத்தருகிறார்கள்.

ஆயிரம் பேர் சூழவரும்
பெரும் புள்ளிகளின்
சம்பிரதாய கண்ணீர்துளிகளில்
சிதை வற்றியதாய் சரித்திரமில்லை.

சில எழுத்தாளர்களின் சடலம்
அவர்களின்
நிறைவேறாத
கதைகள் சொல்வதுண்டு…

கல்லைறைகளிலும்
கருவறைகளிலும் சிதைந்துபோன
கானல்க் கனவுகளுடன் தான்
கனல் சுமக்க வருகிறார்கள் பலர்.

சில காதல் மரணங்கள்
எனக்குள்
ரணங்களை விட்டுச் செல்லும்..

வெந்து தணிந்த சிதையில்
தன்
உயிர்க்காதலியின்
கொலுசுதேடிய ஒருவனின் கண்ணீர்
இன்னும் எனக்குள் சத்தமிடுகிறது.

பல வேலைகளில்
அவர்களின் இயலாமை மீது எனக்கு
சுட்டெரிக்கும் கோபம் வருவதுண்டு.

ஒரு நாள்
தன் ஒற்றைக் குழந்தையைப்
பற்றிக்கொண்டுவந்த
அந்தத் தாயின் அலறல் ஒலியில்
பிணங்கள் கூட பரிதாபப்பட்டிருக்கும்.

பதுக்கிவைத்திருக்கும் பாசமும்
முகத்திரை போர்த்தி வைத்திருக்கும் பாசமும்
உடைபடுவது
இந்த மனிதவிறகு எரியும் வினாடிகளில் தான்.

சில உறவுகள்
கண்ணீர் விட்டு கதறிப் புரண்டு
மோதிரத்தைக் கழற்றியபின்
ஓரத்தில் அமர்ந்து
மௌனமாகும்.

சிதைக்குத் தீயிடுவது யார் ?
யார் கடனை தீர்த்துவைப்பது ?
இனி இவனிடத்தில் யார் ?
சண்டைகள் பலவேளைகளில்
செத்துப்போனவனை பெருமூச்சு விட வைக்கும்.

செத்துப் போன வினாடியில்
விட்டுப் போன உயிர்
சுற்றிக்கொண்டிருக்கும் என்று
மூடநம்பிக்கையைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள்
இன்னும்
ஆவிக்கு நிலத்தில் ஆணி அறைகிறார்கள்.

முதுமை மரணங்கள் பெரும்பாலும்
சிரிப்பிலும் அரட்டையிலுமாய் தான்
நடந்தேறும் ….
ஆனாலும் சில சுருக்கங்கள்
சத்தமின்றி அமர்ந்து வேதனைப்படும்.

பலருடைய நேசம்
அங்கீகரிக்கப் படுவதும்….
சொந்தத்தின் அடர்த்தியை வைத்து
அங்கிகள்
பங்கிடப்படுவதும் சாவுகளில் தான்.

நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.
என் சிதை எரியும் போது
எத்தனை விழிகள் கண்ணீர் சரிக்கும் என்பதில் தான்
என் வாழ்க்கை
எடையிடப்படும்…

சுற்றிப் பார்க்கிறேன்….

ஓரத்தில் இருக்கும்
என் ஒற்றைக் குடிசையைச் சுற்றி
மருந்துக்குக் கூட மனிதவாசம் இல்லாத,
பொட்டுக் குடிசை கூட தட்டுப்படாத
பெரும் பொட்டல்க் காடு.

சிறுகதை : கொல்லன்

“ அப்பா…. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்… டொங்ங்.. ன்னு
கேட்டுக்கிட்டே இருக்கு. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ?” கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா.

அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு
இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு கிராமத்தில் ஏகப்பட்ட சொத்து. வயல், தென்னந்தோப்பு என அந்தப் பரக்குன்று கிராமத்தின் பத்தில் ஒரு பங்கு அவருடையது தான்.

அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டில் போய்ப் படித்த ஒரே நபர் அபினயா. அந்த பெருமை எப்போதும் பரந்தாமனின் பேச்சுக்களில் தெறிக்கும். ஒரே மகள் என்பதால் அவளுக்கு சாப்பாட்டை விட அதிகமாய் செல்லத்தைத் தான் ஊட்டி வளர்த்தார்.

மகளை மெதுவாய்ப் பார்த்தார் பரந்தாமன், அது பக்கத்து ஆலைல கொல்லன் இரும்படிக்கிற சத்தம்மா. உனக்குத்தான் இந்த கிராமத்தோட தொடர்பு விட்டுப்போயி வருசக் கணக்காச்சு. காலேஜ், மேல்படிப்புண்ணு கிராமத்தை விட்டுப்போயி ரொம்ப நாளாச்சு. காலம் காலமா இவன் இந்த இடத்துல தான் கொல்லப்பட்டறை வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்கான், நாம தான் இங்கே புதுசா பங்களா கட்டி இருக்கோம். இந்த சத்தம் எல்லாம் கொஞ்ச நாள்ல பழகிடும் பேசாம போய்ப் படுத்துக்கோ. எனக்கும் முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது. இப்போ பழகிடுச்சு. சிறி சிரிப்புடன் மகளைச் சமாதானப்படுத்தும் குரலில் சொன்னார் பரந்தாமன்.

“என்னால முடியாதுப்பா. யாரோ உச்சந்தலைல ஓங்கி அடிக்கிற மாதிரி சத்தம் வருது….”- பாருங்க நைட் மணி பன்னிரண்டாகப் போகுது இன்னும் அவன் அடிக்கிறதை நிறுத்தல.. எப்படி தூக்கம் வரும். பிளீஸ்ப்பா நான் இங்க இருக்கப்போற பத்து நாளா வது இந்த சத்தத்தை நிறுத்துங்க சொல்லிவிட்டு மாடிப்படியேறி படுக்கைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள் அபினயா.

பால்க்கனிக்குச் சென்று வெளியே எட்டிப்பார்த்தார் பரந்தாமன். வெளியே கொஞ்சம் தூரத்தில் அந்த குடிசை. மெலிதான நிலவின் வெளிச்சம் கிராமத்தை போர்த்தியிருக்க அந்த குடிசை மட்டும் நெருப்புகளோடு விழித்துக் கிடந்தது. இன்னும் இரும்படித்துக் கொண்டிருந்தான் அவன்.

புறம்போக்கு நிலத்தில் இருந்த அவனுடைய குடிசைக்கு பின்னால் ஒரு பெரிய சானல். வீட்டிலிருந்து வழுக்கினால் முதுகு ஒடியும் பள்ளத்தில் விழவேண்டியது தான். வீட்டின் பின்புறமாய் சில பனை மரங்கள். ஓலைக்குடிசை ஆங்காங்கே கோணிப்பைகளால் ஒட்டுப் போடப்பட்டிருந்தது.

அவன் பெயரை எல்லோரும் மறந்திருப்பார்கள். பரந்தாமனுக்கும் அவன் பெயர் என்னவென்று நினைவுக்கு வரவில்லை. கொல்லன் என்றால் தான் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். பரம்பரை பரம்பரையாய் இரும்படிப்பது தான் அவர்களது தொழில்.

கொல்லப்பட்டறை என்றால் ஒரு தீக்குழி, அந்த தீக்குழிக்கு காற்றை அனுப்பிக்கொண்டிருக்க ஒரு பெரிய தோல்ப்பை. அந்த தோல்ப்பையின் ஒரு முனையில் கயிறு கட்டி மேலே தொங்க விடப்பட்டிருக்கும், அதன் மறு முனை ஒரு குழலோடு இணைக்கப்பட்டு தீக்குழிக்குள் சொருகப்பட்டிருக்கும்.

விறகுக்கரி சேகரித்து அந்த தீக்குழியில் இட்டு, தீயைப்பற்ற வைத்து, அந்த கயிற்றைப்பிடித்து மெதுவாய் இழுத்தால் காற்று குழாய் வழியாகச் சென்று தீ கெடாமல் பார்த்துக் கொள்ளும்.

அந்த கயிற்றைப்பிடித்து இழுப்பதற்காகவே ஒரு கருங்கல் போடப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்திருப்பாள் செல்லாயி, கொல்லனின் மனைவி. ஏதேனும் ஒரு இரும்புத் துண்டையோ, உருக்குத் துண்டையோ கொண்டு வந்து கொடுத்து கத்தி, மண்வெட்டி, வயல் அறுக்கும் அறுப்பத்தி போன்றவை செய்யச் சொல்வார்கள். கொல்லனும் அந்த இரும்புத்துண்டை தீக்குழிக்குள் இட்டு, அந்த இரும்பு பழுக்க ஆரம்பித்தபின் இடுக்கியால் அதை எடுத்து அருகிலிருக்கும் தண்ணீர் பானைக்குள் நுழைப்பான்.

தீ பெரும்பாம்பின் மூச்சுக் காற்றைப் போல சத்தமிடும், மீண்டும் நெருப்பு, மீண்டும் நீர். அவனுக்குத் தெரியும் எப்போது நீரின் இடவேண்டும், எப்போது இரும்பின் மீது இரும்பை வைத்து இரும்பால் அடிக்கவேண்டும் என்பது. அவன் அதில் ஒரு கலைஞன்.

அவனுடைய சுத்தியல் அசுரவேகத்தில் பழுத்த இரும்பின் மீது இறங்கும்போது அவனுக்குள்ளிருந்து ஹ் ஹே…. என வெளியேறும் மூச்சு மீண்டும் சுத்தியலை தூக்கும் போது தான் திரும்ப நுழையும்

வயலில் அறுவடை ஆரம்பித்தால் கதிரறுக்கும் பெண்களும், ஆண்களும் அவனிடம் வருவார்கள். இந்த அறுவடைக்குத் தேவையான் அறுப்பத்தி செய்வதைத் தவிர்த்துப் பார்த்தால், உலக்கைக்கு போடும் வளையம் செய்வதும், மண்வெட்டி கழன்று விட்டால் அதை இரும்புக் கம்பி போட்டு முறுக்கிக் கொடுப்பதும், பனையேறிகளின் பாளை அறுப்பத்தியை பருவம் வைத்துக் கொடுப்பதும் தான் அவனுக்கு வரும் பெரும்பாலான பணிகள்.

இதில் வருமானம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியாய் ஒன்றுமே இருக்காது. நாள் முழுவதும் இருந்து சுத்தியல் அடித்தால் ஒரு வெட்டு கத்தியோ, சின்னதாய் இரண்டு அறுப்பத்திகளோ தான் செய்ய முடியும். அதில் கிடைக்கும் சில்லறைப் பணத்தில் ஏதேனும் வாங்கி சாப்பிட்டு, இரண்டு ரூபாய்க்கு மாடசாமியின் வயலோரத்துச் சாராயக்கடையில் ஒரு கிளாஸ் சாராயத்தை அடித்து விட்டு வந்து படுத்தால் விடியும் வரை களைப்பு தெரியாது. இல்லையேல் கையும் முதுகும் கழன்று விழுவதாய்த் தோன்றும்.

அவனுக்கென்று யாரும் கிடையாது, செல்லாயியைத் தவிர. யாரும் அவனை நண்பர்களாகவோ, தெரிந்தவனாகவோ பார்ப்பதில்லை, காரணம் அவனுடைய ஏழ்மையும், அவனுடைய வேலையும்.

எங்கேனும் திருமணம் நடந்தால் இரவில் போவான், மிச்சம் மீதி சாப்பிடுவதற்கும், கல்யாண சாப்பாட்டுக்காய் அடுப்பு மூட்டிய இடத்திலிருந்து விறகுக்கரியைப் பொறுக்குவதற்கும். அந்த விறகுக் கரியைக் கொடுப்பதற்குக் கூட அவனிடமிருந்து காசு வாங்குபவர்கள் அந்த ஊரில் உண்டு.

பரந்தாமன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மகளின் தூக்கம் அவருக்கு முக்கியமாய்ப் பட்டது. மாடிப்படி இறங்கி கொல்லனின் குடிசை நோக்கி நடந்தார்.

தன்னை நெருங்கி வரும் பரந்தாமனை கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான் கொல்லன். இந்த நேரத்துக்கு யார் வருகிறார்கள் ? கையிலிருந்த சுத்தியலை மண்ணில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தான். பரந்தாமன் நெருங்கி வர வர, கொல்லன் மரியாதை காட்டி எழுந்தான்.

‘வாங்க சாமி, என்ன நட்ட ராத்திரில வாரீங்க ? என்னாங்கிலும் வேணுமே ?’ மெதுவாகக் கேட்டான் கொல்லன்.

‘இல்லப்பா… தூக்கம் வரல.. என்ன நீ இன்னும் தூங்கலயா ? மணி பன்னிரண்டாகுது ?’ கேட்டார் பரந்தாமன்.

“அப்பிடியில்ல ஏமானே, ஒறக்கம் வரத்தேன் செய்யுது… ஆனா நாளை நம்ம கொற்கைக்க வயலு அறுப்பாம். நாலு அறுப்பத்தி வேணும்ன்னு சொல்லியோண்டு போனாரு. அறுப்பு நிக்கருது இல்லியா.. அதான் கொறச்சு கஸ்டம் பாக்காத அறுப்பத்தி செய்தோண்டு இருக்குதேன். ‘ கொல்லன் சொன்னான்.

“செய்து முடிஞ்சிச்சுட்டியா ?” பரந்தாமன் மெதுவாய்க் கேட்டார்.

“ இன்னும் தீந்தூல்ல… அடுத்த வாரம் நிறைய வயலு அறுப்பு வருதில்லியா ? அதுகொண்டு நிறைய அறுப்பத்தி செய்ய வேண்டியிருக்கு. தங்கையன், செல்லக்கண்ணு, பொன்னையன் எல்லாருக்க வீட்டு வயலும் இப்போ தான் அறுப்பாம். செய்து குடுக்கிலாண்ணு செல்லி பைசா வேண்டியாச்சு. இன்னி சமயத்துக்கு செய்து குடுக்காத இருக்க பற்றாது. அதான் கஸ்டம் பாக்காத ராத்திரி வேலை செய்யுதேன். நமக்கென்ன மைரு, நாலு நாளு ஒறங்க பற்றாது அம்மட்டும் தேன். மற்றபடி இப்போ தான் கொறச்சு பைச வாற சமயம். அறுக்காறாவும்போ ஒறங்கல்லே. ன்னு மலையாளத்துல ஒரு பழஞ்சொல்லும் உண்டு“ கொல்லன் வெகு இயல்பாய் சிரித்துக் கொண்டே பேசினான்.

பரந்தாமன் அவஸ்தையாய் சிரித்தார். கொல்லன் தொடர்ந்தான்.

“ இப்போ எல்லாம் நிறைய வேலை வாறதில்ல. எங்க அப்பனுக்க காலத்துல, கலப்பையும், தண்ணி புடிக்கிற காக்கோட்டையும், மண்வெட்டி, பிக்காசு எல்லாமே அவரு தான் செய்யுவாரு. இப்போ என்ன வேணுங்கிலும் களியக்காவிளை சந்தைல போனா மதி. போனோமா பைசா குடுத்து வாங்கினோமான்னு ஆச்சு. பட்டறைல வந்து செய்யோக்கு ஆளு கொறவு தேன். மண்ணு வெட்டுக்கு போறவியளுக்க நம்மாட்டி (மண்வெட்டி) கீறிப் போச்சுண்ணா வருவினும் நான் அடைச்சு குடுப்பேன். மரம் வெட்ட போறவியளுக்க கோடாலி ஆப்பு களந்து போனா வருவினும், செரியாக்கி குடுப்பேன். அத்தறதேன். அது போயிற்று எனக்கு வாற வேலை எல்லாம் அறுப்பத்தி, கத்தி, வெட்டோத்தி அம்மட்டும் தேன் “

கொல்லன் சொல்லிக் கொண்டே அமர்ந்தான். பரந்தாமனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மெதுவாய் திரும்பி நடக்கலாமா என யோசித்தார்.

“ நான் பாட்டுக்கு என்னன்னவோ பேசியோண்டே போறேன். நீங்க வந்த விசயம் செல்லுங்க. என்னாங்கிலும் செய்யணுமா ?” கேள்வியாய் பார்த்தான் கொல்லன்.

இ… இல்ல… ஒண்ணுமில்ல….. பரந்தாமன் இழுத்தார்.

“ இல்லேண்ணு சென்னாலே ஏதோ உண்டுண்ணு தேன் அர்த்தம். செல்லுங்க. ஒறக்கம் வரூல்லியா ? “ கொல்லன் கேட்டபடியே தரையிலிருந்த சுத்தியலை எடுத்து அதில் ஒட்டியிருந்த சிறு சிறு மண் துகள்களைத் துடைத்தான்.

“வேற ஒண்ணும் இல்லை. என் பொண்ணு லீவுக்காக வந்திருக்கா. அவளுக்கு இந்த இரும்படிக்கிற சத்தம் தொந்தரவா இருக்காம். தலை வலிக்குதாம். தூங்க முடியாம கஸ்டப் படறா. சரி வேலை முடிஞ்சுதான்னு கேட்டுப் போகலாமேன்னு வந்தேன்” பரந்தாமன் மெதுவாய் சொன்னார்.

“ அய்யோ அப்பிடியா ? அதை ஆத்தியமே செல்லியிருக்கலாமே. செரி.. செரி… பிள்ள ஒறங்கட்டு. வெளி நாட்டில எல்லாம் படிச்சோண்டு வந்த பிள்ள இல்லியா. நான் நிறுத்துதேன். மிச்சத்தை மைரு நாளைக்கு பாத்துக்கலாம்.” சொல்லிக் கொண்டே சுத்தியலை ஓரமாய் வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து தீ மேல் தெளித்து அணைத்தான் கொல்லன்.

சொல்ல வந்ததன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தனது வேலையை விடப் பெரிதாய் தன் மகளின் தூக்கத்தை கொல்லன் முக்கியமாய்ப் பார்த்தது பரந்தாமனை உறுத்தியது. கொல்லனோ வெகு இயல்பாய், கூரையில் சொருகியிருந்த கோணிப்பையை எடுத்து உதறினான். அதுதான் அவனுடைய படுக்கை.

பரந்தாமனுக்கு மனசு பாரமானது போல் தோன்றியது. ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தார். வீட்டில் வந்த பின்பும் நினைவுகள் கொல்லனைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. பாவம் எப்படிப்பட்ட வேலை இது. இது வரைக்கும் அவனுடைய குடிசைக்கு இவ்வளவு அருகில் சென்று பார்த்ததில்லை. எப்படித்தான் அந்த குடிசைக்குள் வெந்து தணியும் காற்றோடு குடும்பம் நடத்துகின்றார்களோ ?

வீட்டில் ஒரு நாள் ஏசி வேலை செய்யாவிட்டாலோ, குறைந்தபட்சம் மின்விசிறி சுழலாவிட்டாலோ தூக்கம் போய் விடுகிறது. அவனுக்கோ வீட்டில் மின்சாரம் என்பதே இல்லை. கூடவே தரையில் சூரியனாய் எப்போதும் தீ வேறு.

கொறித்தபடியோ, காபி குடித்தபடியோ தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்து கூடவே போரடிக்கிறது என புலம்பும் எனது வாழ்வுக்கும், நள்ளிரவு வரை இரும்படிக்கும் அவனது வாழ்வுக்குமிடையே தான் எத்தனை பெரிய பள்ளம்.

எப்போதாவது ஒரு சுவையான முழுச்சாப்பாடு கொல்லன் சாப்பிட்டிருப்பானா என்பதே சந்தேகம் தான். ஐந்துக்கும் பத்துக்கும் அவனுடைய உடம்பு எப்படி உழைக்க வேண்டி இருக்கிறது ? யோசனை செய்தபடியே மாடிப்படி யேறி அபினயா வின் அறையை அடைந்தார். உள்ளே மகள் மெத்தையில் புதைந்து தூங்கிக்கிடந்தாள். நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே பரந்தாமன் தன்னுடைய அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார். இரவு மெல்ல மெல்ல இழுக்க அப்படியே தூங்கிப்போனார்.

மறுநாள் காலை.

வெளியே நன்றாக விடிந்திருந்தது.

பால்கனியில் நின்று காப்பி குடித்தபடியே கிராமத்தை அளந்து கொண்டிருந்தாள் அபினயா.

இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாய் உறுத்தியது அவளுக்கு.

எது ? என்ன வித்தியாசம். சிந்தனைகளை ஒவ்வொன்றாய் புரட்டிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென பிடிபட்டது ! சத்தம் !!! இரும்படிக்கும் சத்தம். !!!

எங்கே போயிற்று அந்த இரும்படிக்கும் ஓசை ? நேற்றைக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரமாய் அடித்த ஓசை இன்றைக்கு எப்படி தொலைந்து போனது ? யோசனையோடு கீழே இறங்கி வந்தாள் அபினயா..

“ அப்பா… அப்பா..”

“என்னம்மா ?”

“என்னப்பா.,.. இன்னிக்கு அந்த கொல்லன் இரும்படிக்கிற வேலையை இன்னும் ஆரம்பிக்கலையா ? ஒரே நிசப்தமா இருக்கு ? “ அபினயா கண்களை விரித்தபடியே கேட்டாள்.

பரந்தாமன் அபினயத்துடன் பேசும் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் சிறு புன்னகையுடன். அவருக்குள்ளும் அப்போது தான் அந்த வித்தியாசம் உறைத்தது.

“ அந்த சத்தம் இல்லேன்னா எப்படி அமைதியா இருக்கு பாத்தீங்களா ?
அது ஒரு பெரிய டார்ச்சர் சத்தம்பா. நீங்க எல்லாம் எப்படித் தான் இந்த சத்தத்தை சகிச்சுக்கறீங்களோ “ சலித்துக் கொண்டாள் அபினயா.

பரந்தாமன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.
பொதுவாகவே காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடுவானே. இன்று என்னவாயிற்று அவனுக்கு ? நிறைய வேலை இருக்கிறது என்று வேறு சொன்னானே ? ஒருவேளை நேற்று நான் சொன்னதால் இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் இருக்கிறானோ ? கேள்விகள் மனதில் வரிசை வரிசையாய் எழ எழுந்து வெளியே சென்றார் பரந்தாமன்.

குடிசை வாசலில் செல்லாயி நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா… கொல்லன் எங்கே ? வேலை இருக்குன்னு சொன்னான். ஆளையே காணோம் ? “ கேட்டபடி அவளை நெருங்கினார் பரந்தாமன்.

செல்லாயின் கண்கள் அழுதன…

“என்ன சொல்லோக்கு ஏமானே. யாரோ தொட்டி பய ரெயில் ஸ்டேசன்ல அடுக்கி வெச்சிருந்த பாள(தண்டவாள) கம்பியை மோட்டிச்சோண்டு போனானாம். வெளுக்கோக்கு மின்னே போலீசு வந்து இவரு தான் எல்லாத்தையும் மோட்டிச்சோண்டு போனதா கள்ளக் கேசு போட்டு கூட்டியோண்டு போச்சினும். எங்கே என்ன கம்பி காணாத போனாலும் இவரை தேன் பிடிச்சோண்டு போவினும். கேக்கோக்கு ஆளில்லாதது நம்மம் தானே. எப்போ வருவாரோ. அறுப்புக்கு அறுப்பத்தி கேட்டு ஆளுவளும் வருவினும். என்ன செய்யோகின்னு மனசிலாவூல்லே” சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள் செல்லாயி.

பரந்தாமனுக்கு பக் கென்று இருந்தது. இரயில்வே தண்டவாளக் கம்பிகளை இவன் திருடியதாய் இழுத்துச் சென்றிருக்கின்றனர். கொல்லப் பட்டறை வைத்திருப்பதால் கத்திகள் செய்வதற்காகத அவற்றைத் திருடியிருப்பான் என போலீஸ் சந்தேகிக்கிறதா ? இல்லை வேறு ஆள் கிடைக்காததால் இந்த அப்பாவியை இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்களா ? பரந்தாமனுக்குள் கேள்விகள் வரிசையாய் எழுந்தன.

“ கவலைப்படாதே. நான் போய் என்னன்னு பாக்கறேன். ஸ்டேஷன்ல போய் அவனை கூட்டிட்டு வரேன் “ சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

இதுவரை கொல்லனின் வீட்டில் என்ன நடக்கிறது என்று பரந்தாமன் சட்டை செய்ததே இல்லை. ஆனால் இன்று அவனுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம் மனதில் ஆணி அடித்தது போல நிலைத்தது. என்னவாயிற்று ? எதையும் நெருங்கிப் பார்க்கும் வரை ஒரு அன்னியத் தன்மை மனதில் இருக்கும் என்பது பரந்தாமனுக்குப் புரிந்தது.

நெருங்க நெருங்கத் தான் தெரிகிறது ஒவ்வோர் தனி மனிதனுடைய வாழ்விலும் நிகழும் சோகமும், எதிர்பார்ப்பும், வலியும். பரந்தாமனின் மனசுக்குள் பாரம் பாறாங்கல்லாய் வந்து அமர்ந்தது. கொக்கியில் மாட்டியிருந்த ஒரு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டே கார் ஷெட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.

“ அப்பா . காலைல எங்கேப்பா கிளம்பிட்டீங்க ? நானும் வரேன்” பின்னாலிருந்து அபினயாவின் குரல் ஒலித்தது.

“ இல்லேம்மா. நம்ம கொல்லனை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்களாம், நான் போய் என்னன்னு விசாரிச்சுப் பார்த்து அவனை கூட்டிட்டு வரேன், “ என்று சொன்ன பரந்தாமனை புரியாமல் பார்த்தாள் அபினயா.

“நம்ம கொல்லன்” என பரந்தாமன் சொன்ன வார்த்தைகள் அபினயாவுக்குள் குழப்பத்தையும், சிரிப்பையும், புரியாமையையும் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது அவளது பார்வையிலேயே தெரிந்தது.

பரந்தாமனின் கார் காம்பவுண்ட் கேட்டைக் கடந்து ஊர் சாலையில் வந்து, காவல் நிலையத்தை நோக்கி நகர்ந்தது.

காரின் சன்னல் வழியாக வெளியே பார்த்தார் பரந்தாமன்.

“ டொங்.. டொங்… டொக்….” வலுவில்லாமல் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

கொல்லப்பட்டறையில் செல்லாயி உட்கார்ந்து இரும்படித்துக் கொண்டிருந்தாள்.

சிறுகதை : இரண்டாவது சாவு

( என் நண்பனின் கல்லூரியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை)

சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த கல்லூரி கேண்டீன் சுவரில் மோதியது
படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷும், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும். காண்டீன் முன்னால் கட்டிட
வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த விக்கி மணல் மீது விழுந்து சிறிய காயங்களோடு தப்பிக்க, ராஜேஷ் குவித்து வைக்கப்பட்டிருந்த
கருங்கற்கள் மீது தலைகுப்புற விழுந்தான்.

கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போக, கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் காதில் விழுமுன் இரத்தச்சிதறல்களுடன் மயக்க நிலைக்குப் போனான் ராஜேஷ்
இரண்டு நிமிடம் தான்… யாருக்கும் எதுவும் புரிவதற்குள் நடந்துவிட்டது அந்த விபரீதம்.
என்ன அலறல் என்று புரியாமல் மொத்த ஆசிரியர்களும் ஓய்வு அறையிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள். மாணவர் கும்பல் அதற்குள் சுதாரித்து இருவரையும் தூக்கி கிடைத்த
வாகனத்தில் ஏறி மருத்துவமனை நோக்கிப் பறந்தது.

என்னப்பா என்ன ஆச்சு ? எப்படி நடந்தது ? ஆளாளுக்கு விசாரணைகள் செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகள் அழுகையும் படபடப்பும் விலகாத கண்களுடன் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ராஜேஷ், பாரதி பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன். எந்த குறிப்பேட்டிலும் தன்னைப்பற்றி கறுப்புப் புள்ளி வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் இருப்பவன். கல்லூரியின் எல்லா மட்டங்களிலும் அவனுக்கு நண்பர்கள், காரணம் அவனுடைய மனசை மயக்கும் நகைச்சுவைப் பேச்சும், மனசை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் அழகான கவிதைகளும் தான். போதாக்குறைக்கு பாலசுப்ரமணியத்தின் குரலில் பாதி அளவு வசீகரம் அவன் குரலுக்கு. அது போதாதா நண்பர்கள் கூட்டம் சேர்வதற்கு ? கல்லூரியின் விழாக்களில் அவன் கவிதைகள் எப்போதும் பரிசு வாங்கத் தவறியதில்லை. காண்டீன் மேந?களில் தாளமிட்டு கல்லூரி துவங்கும் வரை நண்பர்களோடு பாட்டுப்பாடி, டீ குடித்து கதை பேசி, இப்படியே கலகலப்பாகிப் போன நாட்களில் தான் இப்படி ஒரு விபரீதம் நடந்தது.

இதுவரை பைக் ஓட்டாத ராஜேஷ் ஏன் இன்றைக்கு மட்டும் ஓட்டினான் என்பது மட்டும் யாருக்கும் புரியவே இல்லை. ” அடிபடணும்னு விதி.. இல்லேன்னா ஏன் இண்ணிக்கு மட்டும் பைக் ஓட்டறான்.. பாவம் டா அவன்…”  மொத்த மாணவர்களுக்கும் விஷயம் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது.

கல்லூரி துவங்குவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் தான் பாக்கி.

கல்லூரியின் கடைசிக் கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த நூலகத்தில் ராஜேஷ் வருவதற்காகக் காத்திருந்தாள் ராகவி. கூடவே அவள் தோழிகள் பிரியாவும், வித்யாவும்.
ராகவி, ராஜேஷின் காதலி.

காதல் என்றால் கொஞ்ச நஞ்சக் காதலல்ல. கல்லூரியின் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்த காதல். கல்லூரியில் மூன்றாமாண்டு, அதே ராஜேஷின் வகுப்பில் படித்துக்
கொண்டிருப்பவள். கொஞ்சம் ரசிக்குமளவுக்கு அழகு, பளீரென்று விழுந்துவிடுமளவுக்கு மிக மிக… என்று எத்தனை மிக போட்டாலும் மிகையாகாத அழகான சிரிப்பு. இன்னும் ராகவிக்கு விஷயம் தெரியவில்லை. கல்லூரி நூலகத்தில் எப்போதுமே மூன்று அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள், இன்றைக்கும் அப்படித்தான் ராகவி, பிரியா, வித்யா தவிர வேறு யாருமே இல்லை.

வகுப்புக்கு நேரமாகி விட்டது. இந்த மடையன் எங்கே போனான் ? வகுப்பு துவங்குவதற்கு 15 நிமிடம் முன்னதாக காத்திருக்கச் சொன்னான். எங்கே போய் தொலைந்தானோ. சரி வா உன்னை கவனிச்சுக்கறேன். எங்கே போயிடப் போறே.
ஏதாவது கேட்டா ‘காத்திருப்பது தான் காதலுக்கு அழகேன்னு’ டயலாக் வேற. இதை கேட்டுக் கேட்டே காது வலிக்குது. மனசுக்குள் செல்லமாய் திட்டிக்கொண்டே எழுந்தாள் ராகவி.

நூலகம் விட்டு வெளியே வந்த போது தான் கல்லூரி கொஞ்சம் வித்யாசமாய் தோன்றியது அவளுக்கு. கூட்டம் கூட்டமாய் மாணவர்கள், மாணவிகள்… ம்…ஏதோ போராட்டம் போல இருக்கு.

இன்னிக்கு வகுப்பு இருக்காது… இந்த மடையனைக் கூட்டிக்கொண்டு ஏதாவது படத்துக்குப் போக வேண்டியது தான். நினைத்துக் கொண்டே நடந்தவளை எதிர்ப்பட்டு நிறுத்தினாள் ரெஷ்மி.
“நீ போகலயா ராகவி.. ஆஸ்பத்திரிக்கு ?”

ஆஸ்பத்திரிக்கா ? எதுக்கு ? – புரியாமல் பார்த்தாள் ராகவி.

ஐயய்யோ..உனக்கு விஷயமே தெரியாதா ? ராஜேஷ்க்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம். ராஜா மருத்துவமனைக்கு – க்கு எடுத்துட்டுப் போயிருக்கிறாங்க.

சட்டென்று கரங்களிலிருந்த புத்தகங்கள் நழுவ. அலறினாள் ராகவி .

“எப்போ…? என்ன ஆச்சு அவனுக்கு ?”
‘தெரியலடி… ஒண்ணும் பெருசா இருக்காது கவலைப் படாதே. நீ போய் பாரு.’

சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரெஷ்மி…

ராகவி ஓடினாள். கீழே கிடந்த புத்தகங்களை அவசர அவசரமாய்ப் பொறுக்கி எடுத்துக் கொண்டே அவளைத்தொடர்ந்து ஓடினாள் பிரியா. கூட்டம் கூட்டமாய் நின்றிருந்த மாணவ, மாணவியர் கொஞ்சம் பரிதாபம் கலந்து அவளைப் பார்த்தார்கள். ராகவிக்கு கண்முன்னால் எதுவும் தெரியவில்லை. ராஜேஷ் மட்டும் தான் தெரிந்தான்.
ஐயோ ராஜேஷ் எப்படி கஷ்டப்படுகிறாயோ ? நான் நகம் வெட்டித் தரும்போதே வலிக்கிறது என்பாயே, இப்போது எப்படி இந்த வலி தாங்குகிறாயோ.கண்ணீர் பொல பொலவென்று கண்ணீர் வழிய. கல்லூரி வாசலுக்கு வந்த ராகவியை தடுத்து நிறுத்தினான் சரவணன்.

‘ராகவி… இப்போ நான் ஆஸ்பத்திரில இருந்து தான் வரேன். இப்போ நீ அங்கே போகவேண்டாம். பிளீஸ்.’ தடுமாறினான் சரவணன்.

“ஏன் என்ன ஆச்சு.. ராஜேஷுக்கு ? பயப்படும் படியா ஒண்ணும் இல்லையே ? ”  வார்த்தைகள் குழறி கண்ணீரோடு வந்தன.

அவசர சிகிச்சைப்பிரிவுல சேத்திருக்கோம்.

‘அவசர சிகிச்சைப்பிரிவா !!?’- ராகவியின் குரல் மேலும் உச்சஸ்தாயிக்குப் போயிற்று.

நோ… நான் அவனை உடனே பாக்கணும்.

‘பிளீஸ் ராகவி.. நான் சொல்றதைக் கேளு. நீ இப்போ அங்கே போனாலும் அவனைப்பார்க்க முடியாது… கொஞ்சம் பொறு… போகலாம்.’ சரவணன் பேசப் பேச அதைக் காதில் வாங்காமல் வேகவேகமாய் ஓட ஆரம்பித்தாள் ராகவி…

எதிரே வந்த ஆட்டோ வை நிறுத்தினாள்.

‘ராஜா ஹாஸ்பிடல் போகணும்.’

நிலமையின் வீரியம் புரியாத டிரைவர் பீடிக் கறைபடிந்த பற்களைக்காட்டிச் சொன்னான்.

‘நூறு ரூபா ஆகும்மா’

‘ஆயிரம் ரூபாய் தாரேன்பா.. நீ போ…’  என்றவளின் அழுகையில் அடங்கிப்போன டிரைவர்…மறுவார்த்தை பேசாமல் ஆட்டோ வைக் கிளப்பினார்.

கல்லூரியின் முதல் ஆண்டில் வேறு வேறு பிரிவில் படித்துடிட்டு, இரண்டாம் ஆண்டுதான் ஒரே வகுப்பில் சேர்ந்தார்கள் ராஜேஷும், ராகவியும். முதல் பார்வையில் காதல் வரவே வராதுஎன்று வாதிடும் ரகம் ராஜேஷ். அவளைப்பார்த்தபின், முதல் சிரிப்பில் காதல் வரலாம் என்று தெரிந்து கொண்டான்.

ஆசிரியர் ஏதேதோ விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் எதிர் புற இருக்கையில் இருக்கும் ராகவியை ரகசியமாய் படித்துக்கொண்டிருப்பான்.

‘என்ன நீ.. எப்பவும் பொண்ணுங்க பக்கமாவே பாத்திட்டு இருக்கே?’ – ஒரு காலைப்பொழுதில் கேட்டாள் ராகவி.

இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ராஜேஷ். ஆனாலும் மனசுக்கு மிக இதமாய் இருந்தது அந்தக் குரல். பேசுகிறாள். ராகவி என்னுடன் பேசுகிறாள். ஆஹா…. மனசு சந்தோசத்தில் மிதந்தது.
என்ன பண்றது ராகவி. ஒரு சிரிப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமா சிதைக்குது. அதான் அந்தபக்கம் பாத்திட்டு இருக்கேன்.

ம்…ம்.. சிதைக்கும் சிதைக்கும்… என்ன லவ்வா ? – மறுபடியும் அதே சிரிப்பு.

‘யாரு பொண்ணு’ ?

‘சொல்ல மாட்டேன். வீட்ல போய் உன்னோட கண்ணாடி கிட்டே போய் கேளு’. சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க,  ‘எங்க வீட்டுக்கண்ணாடில எங்க பாட்டி போட்டோ  ஒண்ணு ஒட்டிவெச்சிருக்கேன்… சிரித்துவிட்டு நகர்ந்தாள் ராகவி. ராகவிக்கும் கொஞ்சம் கவிதை, கதை என்று ரசனைகள் உண்டு.. அது அவர்களுடைய பழக்கத்தை கொஞ்சம் இலகுவாக்கியது. அவனுடைய காதலை ஆழப்படுத்தியது.

பொதுவாகவே, பாராட்டுக்கு மயங்காத மனிதர் மிகவும் குறைவு. அதிலும் பெண்கள், அதிலும் இளம் பெண்கள், . நீ அழகு ! .என்றால் மிகவும் அன்புடன் பழகுவார்கள். இவனோ நீ ரோஜாக்கள் தோய்த்து எடுத்த ஒரு படிக ஓவியம் என்றான். தென்றலை உறையவைத்து உருவாக்கிய சின்னச் சிற்பம் என்றான். பூமி முதல் வியாழன் வரை அறிவுக்கு எட்டிய அனைத்திலும் அழகானது நீயே என்றான். கவிதை விதைத்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் விளைய ஆரம்பித்தது.

‘இன்னும் கொஞ்சம் வேகமா போங்க…. பிளீஸ்…ஆட்டோ  டிரைவர் திரும்பினான். டிராபிக் ம்மா. உள்ளார பூந்து போக முடியாது. அந்த சிக்னலாண்ட போயிட்டா சந்து வழியா போயிடலாம்மா. தோ அஞ்சு நிமிசத்துல போயிடலாம்….’

ஆட்டோ  டிரைவர் பேச்சு மீண்டும் அவளை நினைவுகளுக்குள் தள்ளியது. ராஜேஷ் நன்றாக பல குரலில் பேசுவான்… சென்னை பாஷை எல்லாம் அவனுக்கு சரளம். அவனோடு நடந்து, அவனோடு பேசி அவளோடு அவனில்லாத மணித்துளிகளை எண்ணி விடலாம். எல்லா காதலர்களுக்குமே தன் காதல் தான் புனிதமானது என்னும் எண்ணம் இருக்கும்… ராஜேஷ் க்கும் இருந்தது.

நம்ம பெயர்ல கூட ஒற்றுமை இருக்கு இல்லையா என்று அடிக்கடி பூரித்துப் போவாள் ராகவி.

காதலிக்கத் துவங்கும் வரை காதலர்களின் சம்மதம் மட்டுமே மிகப் பிரதானமாய் தெரியும்.. ஆனால் காதலில் மூழ்கியபின்புதான் காதலுக்கு காதலர்கள் தவிர எல்லாமே எதிர்ப்பாய்த் தெரியும்.
ஆனால்…. இவர்கள் காதலுக்கு மட்டும் எதிர்ப்பு வரவில்லை.

‘எதிர்ப்பே இல்லாத காதல் போரடிக்குது ராஜேஷ் ‘- கொஞ்சலாய் பேசுவாள் ராகவி.

‘நீ..வேணும்னா வேற யாரையாவது லவ் பண்ணு’. அப்போ காதலுக்கு நீயே எதிரியாயிடுவே. என்ன சொல்றே ? சீரியஸ் குரலில் சீண்டுவான் ராஜேஷ்
பத்து மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதாவது இருக்குமா… காதலித்துப் பார்த்தால் விடை கிடைக்கும். பல மணி நேரம் மெளனமாய் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது
காதல்.

ஆட்டோ  வும், அவள் நினைவுகளும் ராஜேஷை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.

அதே நேரம் கல்லூரியின் வராண்டாவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தான் சரவணன். கண்கள் கலங்கிப் போயிருந்தது, கல்லூரி முதல்வரின் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.அந்த நீளமான வராண்டாவின் கடைசி வரை போகவேண்டும் முதல்வரின் அறைக்கு. வராண்டா நீண்டு கொண்டே போவதாய் தோன்றியது அவனுக்கு.
‘எக்ஸ்கியூஸ் மி சார்’

‘வா.. சரவணன். வா.  ராஜேஷ் க்கு எப்படி இருக்கு… ராஜா ஹாஸ்பிடல் தானே போயிருக்கீங்க ?’ முதல்வர் கேட்டார். அவருக்கு ராஜேஷை நன்றாகத் தெரியும். ஒரு முறை கல்லூரியில் அதிக பரிசு வாங்கியதற்காகவே இன்னொரு சிறப்புப் பரிசு வாங்கியவன் தான் ராஜேஷ். சொல்லு சரவணன். மீண்டும் முதல்வர் குரல்.
‘சார்… ரா… ராஜேஷ்… இறந்துட்டான் சார்’ . சரவணன் குரல் சிதறியது..

‘என்ன சொல்றே ?’  அமைதியாய் இருந்த கல்லூரி முதல்வர் பரபரப்புக்குள் விழ. பரபரப்புக்குள் இருந்த கல்லூரி ஒரு பெரிய நிசப்தத்துக்குள் விழுந்தது.
ஆட்டோ  விரைந்து கொண்டிருந்தது.

ஆண்டவனே.. ராஜேஷ் க்கு எதுவும் ஆகிவிடக் கூடாது… இதயம் விடாமல் அழுது கொண்டிருந்தது.

‘எப்படி ராகவி… வாழறதக்காக காதலிக்கறவங்க, காதலுக்காக செத்துப்போறாங்க ? லாஜிக்  உதைக்கல ?’ ஒரு நாள் கேட்டான் ராஜேஷ்.

‘நான் சாக மாட்டேன்பா.. நீ போனா எனக்கு இன்னொரு ராஜேஷ். பொய்யாகச் சொல்லி நிஜமாகக் கிள்ளுவாள். தற்கொலைங்கிறது கோழைங்க எடுக்கிற தைரியமான முடிவுன்னு
எங்கயோ படிச்சிருக்கிறேன். ஆனா அது தைரியமானவங்க எடுக்கிற கோழைத்தனமான முடிவுன்னு தான் தோணுது. ‘ சொல்லி விட்டுச் சிரிப்பாள். அவள் சிரிக்க ஆரம்பித்தால் பிறகு வாக்குவாதம் இருக்காது அவனிடம் மெளனம் மட்டுமே நிலைக்கும்.

அவள் சிரிப்பதற்காகவே நிறைய ஜோக் படிப்பான். நிறைய ஧ஜோக் அடிப்பான்.
சரக்க்க்… என்று அஸ்டகோணலால் வளைந்து ஆட்டோ  ஆஸ்பத்திரி முன் நின்றது.

ராஜேஷ்…ராஜேஷ்… நீ எப்படிடா  இருக்கே. உனக்கு வலிக்குதாடா. ஏண்டா நீ பைக் எல்லாம் ஓட்டினே. மனசு அரற்றியபடி ஒட்டமும் நடையுமாய் விரைந்தாள்
ராகவி. ஆ?பத்திரி வாசல் முன் மாணவர் கூட்டம். கூட்டம் கூட்டமாய்…. அவசரமாய் அவர்களை அடைந்தவள் கேட்டாள்.

‘ஐ.சி.யூ’ எங்க இருக்கு ?

ராகவி… அது… வந்து… ஐ.சி.யூ எல்லாம் போகவேண்டாம். நில்லு.

ராஜேஷ் எப்படி இருக்கான்.

ராஜேஷ் எப்படி இருக்கான்.  சொல்லுங்க பிளீஸ்… ராகவி கெஞ்சினாள். மொத்த மாணவர்களும் சொல்வதறியாது திகைத்து நின்றார்கள்.

” எப்படி சொல்றதுன்னு தெரியல ராகவி… ஹி஢..ஈஸ் நோ மோர்”   யாரோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே

” ராஜேஷ்ஷ்ஷ்… “ என்று மொத்த ஆஸ்பத்திரியும் திரும்பிப்பார்க்குமளவுக்கு வீறிட்டபடி மயக்கமானாள் ராகவி.

நாட்கள் மெது மெதுவாய் நகர்ந்தது. இன்னொரு பக்கம் உரசியபடி வரும் இப்போது ராஜேஷ்  இல்லை. சண்டையிட்டபடியே புல்வெளியில் தள்ளிவிடும் ராஜேஷ் ,சிரித்துவிட்டால் சொக்கிப்போகும் ராஜேஷ். மாலையில் யாரும் பார்க்காதபோது சட்டென்று முத்தமிடும் ராஜேஷ். நினைவுகள் ஒவ்வொன்றாய் உருக உருக கண்கள் கசிந்து கொண்டிருந்தது ராகவிக்கு.
‘ராகவி… என்ன நடந்தாலும், நீ என்ன முடிவு எடுக்கணும்னாலும் உணர்ச்சிமயமா இருக்கும் போ எடுக்கக் கூடாது… கொஞ்சம் ஆறப்போடு.. அப்போதான் உன்னால சிந்திக்க முடியும். நீ அவசரப்பட்டு எடுக்க இருந்த முடிவு மிகவும் தப்பானதுண்ணு புரியும்’.
அவ்வப்போது ராஜேஷ் சொல்லும் வார்த்தைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல எழுந்து அடங்கியது..

நீ என்ன கஷ்டத்துல, இல்ல வருத்தத்துல இருந்தாலும் பகவத் கீதைல வர ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.’ இந்தப் பகுதியை மனசுக்குள்ள இரண்டு தடவை சொல்லு. எப்போதாவது சின்னச் சின்ன சோகங்கள் வரும்போதெல்லாம் சொட்டுச் சொட்டாய் நம்பிக்கை ஊற்றுவான் ராஜேஷ்.
வாரம் ஒன்று ஓடி விட்டது… கல்லூரியில் கலாட்டாக்கள் மீண்டும் துவங்கிவிட்டன. ராஜேஷின் இழப்பு எல்லோருக்கும் ஒரு செய்தியாக மாறி மறைந்துவிட்டது.  ராகவிக்கு மட்டும் உள்ளுக்குள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.

கல்லூரிவகுப்புகளை பாதிநேரம் புறக்கணித்தாள். நூலகம், கல்லூரிப் பூங்கா என்று தனிமைகளில் காலம் கடத்தினாள். அதற்குக் காரணமும் இருந்தது, மாணவிகளின் பரிதாபப் பார்வையும், மாணவர்களின் ஆறுதல் பேச்சுக்களும் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக்கொண்டே இருந்தது.

ராஜேஷ்  நடந்த இடம், ராஜேஷ் உட்கார்ந்த இடம் என்று கல்லூரி முழுதும் நடந்து கொண்டிருந்தவள் கல்லூரி காண்டின் முன்புறம் வந்ததும் நின்றாள். காண்டீன் முன்புறம் கிடந்த கற்களின் மேல் சிவப்பாய் உறைந்து போன ராஜேஷின் இரத்தத்தின் மிச்சத்தைப் பார்த்ததும் மீண்டும் உடைந்துபோனாள்.
இரவு எத்தனை மணி என்று தெரியவில்லைஎழுதிக் கொண்டிருந்தாள் ராகவி.

என்னை மன்னித்து விடு ராஜேஷ். நீ இல்லாத வாழ்க்கையை கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன்.

உன்னை சந்திக்கும் முன் பல ஆண்டு காலம் வாழ்ந்தேன். ஆனால் உன்னைப் பிரிந்தபின் இரண்டு வாரங்கள் கூட என்னால் வாழமுடியவில்லை. நீ ரசிக்கும் சிரிப்பு மரத்துப்
போய்விட்டது. ஏழுநாட்கள் , ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்கள். என்னை ஆறுதல் படுத்திப்பார்த்தேன். உன் அறிவுரை படியே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் நிதானமாகவே நான் வாழ்ந்து பார்த்தேன். முடியவில்லை.

நீ இல்லாமல் எனக்கு ஆறுதல் தோள்கள் கிடைக்கவில்லை. நீ இறந்தபோதே நானும் இறந்துவிட்டேன். இனிமேல் என்னால் வாழமுடியாது. இன்று எனக்கு இரண்டாவது சாவுதான்.

சொர்க்கமோ நரகமோ. நீ எங்கே இருக்கிறாயோ அங்கே வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

கண்ணீர் கன்னங்களில் வடிய கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் ராகவி.

நாளை இன்னொரு துயரச் செய்தி வரப்போகிறது என்பதை அறியாத அந்தக் கல்லூரி இருளுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தது

அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை
மாலை 6 மணி.

“யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே … “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ்.

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.

“ஏம்பா… வண்டியெல்லாம் ரெடிதானே … இன்னிக்கும் நைட் பூரா சுத்த வேண்டியது தான். வீட்டுல இருக்கிற வாட்ச் மேனை எல்லாம் கொன்னுட்டு, போலீஸ்காரங்களை நைட் வாட்ச்மேனாக்கிட்டான் அந்த கபோதி…” இன்ஸ்பெக்டரின் எரிச்சல் தெறித்தது.

இந்தப் பொறம்போக்கு பத்திரிகைக் காரங்க, தெருவுக்கு தெரு முளைச்சிருக்கிற வேலை வெட்டியற்ற பொறுக்கி இயக்கங்க எல்லாமாய் சேர்ந்து மனுஷனை ஒழுங்கா தூங்கக் கூட வுடமாட்டாங்க. மேலிட பிரஷர், பொதுமக்கள் பிரஷர் ன்னு எல்லா பிரஷரும் சேர்ந்து நமக்குத் தான் பிளட் பிரஷர் ஏகத்துக்கு எகிறிப் போச்சு. கனகராஜ் செம கடுப்பில் இருந்தார். சைக்கோ கொலையாளியைப் பிடித்தால் இவரே ஒரு சைக்கோவாக மாறி கைங்கர்யம் செய்து விடுவார் போலிருந்தது.

அப்போது தான் நுழைந்தார் கான்ஸ்டபிள் குமார்.

“சார்… சென்னை முழுக்க சை.கோவோட கலர் போட்டோவை ஒட்டி வெச்சிருக்காங்க சார் “ கான்ஸ்டபிள் சொல்ல கனகராஜ் சட்டென நிமிர்ந்தார்.

என்னது ? சைக்கோ போஸ்டரா ? என்ன சொல்றே ? யார் பாத்தது ? யார் ஒட்டினது ? கனகராஜ் படபடத்தார்.

சைக்கோ இல்ல சார்.. வைகோ. ஏதோ ஒபாமாவைப் போய் பார்த்தாராமே அதைப் போஸ்டராப் போட்டிருக்காங்க. குமார் சொல்ல கனகராஜ் ஏகத்துக்குக் கடுப்பானார்.

போய்யா போ… வேலையைப் பாரு. இன்னிக்கு இரண்டு மணிக்கு மேல அதிகாலை நாலரை மணி வரை அசோக்நகர், வடபழனி ஏரியாக்கள்ல யாரெல்லாம் அலஞ்சிட்டிருக்காங்களோ அவங்க எல்லாரையுமே ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு வந்துடு. பிச்சைக்காரனானாலும் சரி, பைத்தியக்காரனானாலும் சரி. ஒருத்தனையும் விடாதே. இன்னொண்ணு… பொண்ணுங்க சுத்திட்டிருந்தாலும் தூக்கிட்டு வந்துடு. சைக்கோ ஆணா பொண்ணான்னே தெரியல. இன்னிக்கு நான் வரல, செல்வத்தோட தலைமைல எல்லா ஏரியாலயும் சுத்துங்க. ஏதாச்சும் சமாச்சாரம் இருந்தா போன்பண்ணுங்க. சொல்லிவிட்டு கனகராஜ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.

நகரின் பரபரப்பு குறையத் துவங்கிய நள்ளிரவில் காவல்துறை பரபரப்பானது. வாகனங்கள் ஏரியாக்களை சுற்றி வரத் துவங்கின.

இதற்காகவே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவல் வாகனங்களும் சாலையில் அங்கும் இங்கும் சுற்றின. சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ சுற்றவில்லை. எல்லோரும் ஆளுக்கு இரண்டு செல் போன் கையில் வைத்துக் கொண்டு ஜீப்பில் சுற்றித் திரிந்தனர்.

அந்த இரவும் அவர்களுக்கு ஒரு தூக்கமற்ற இரவாகவே முடிந்தது.

காலை ஆறுமணி.

அசோக் நகர் காவல்நிலையத்துக்குக்குள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர் இருபது பேர். பாதி பேர், அப்பாடா தங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்பட்டு நிம்மதியாய் அமர்ந்திருந்தனர்.

சிலர் பிச்சைக்காரர்கள், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி, இரண்டு பேர் காவல் துறையினருக்குப் பரிச்சயமான மாமூல் மச்சான்கள்.

சற்று நேரம் ஓய்வெடுத்திருந்த கனகராஜ் அப்போது தான் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அவருடைய இருபது ஆண்டுகால போலீஸ் வாழ்க்கையில் ஒரு பார்வையிலேயே அப்பாவி யார், அப்பாவியாய் நடிப்பவன் யார் என்பதையெல்லாம் எடைபோடக் கற்றுக் கொண்டிருந்தார்.

பார்வையை வரிசையாய் அமர்ந்திருந்தவர்கள் மேல் நிதானமாய் ஓட்டிக் கொண்டிருந்தபோது அவன் தட்டுப்பட்டான்.

படித்தவன் போல, சாதுவாக எந்த சலனத்தையும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அவன். சுமார் முப்பத்தைந்து வயது இளைஞன். பச்சை நிறத்தில் அழகான ஒரு டிஷர்ட் அணிந்திருந்தான். நெஞ்சில் “கிரீன் பே பேக்கர்ஸ்” என எழுதப்பட்டிருந்தது. காக்கி நிறத்தில் ஒரு பேண்ட் அது தனது பிராண்ட் ஏரோபோஸல் என்றது.. என்றது.

“இவனை எங்கேய்யா புடிச்சீங்க”

“வடபழனி திருப்பத்துக்கு பக்கத்துல நின்னு சுத்தி சுத்தி பாத்திட்டிருந்தான் சார்… கொஞ்சம் சந்தேக கேஸ் மாதிரி இருந்தது…” இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு பதில் வந்தது.

வரிசையில் இருந்த மற்றவர்களை விட்டுவிட்டு இவனை மட்டும் எழுந்து வரச்சொல்லி சைகை செய்தார் கனகராஜ்.

அவன் எழுந்தான். இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நின்றான்.

“என்னப்பா.. பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே… நைட்ல என்ன பண்ணிட்டிருந்தே…”

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“எங்கேருந்து வரே.. என்ன வேலை பாக்கறே… அமெரிக்கன் பிராண்ட் பேண்ட் போட்டிருக்கே ? அமெரிக்க புட்பால் குழுவோட பேரை சட்டையில போட்டிருக்கே… எங்கேயிருந்து கிடச்சுது ?”

மௌனம்.

“யோவ்.. என்ன ? வாயில கொழுக்கட்ட வெச்சிருக்கியா ? ஒன்னு வுட்டேன்னா மவனே…. “ கனகராஜ் கையை ஓங்க, இவன் நிமிர்ந்து பார்த்தான்.

இவன் பார்வையைக் கண்ட கனகராஜ் சற்றே உஷாரானார். அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் திரும்பினார்,

“மற்றவங்க கிட்டே டீடெய்ல் வாங்கிட்டு, போட்டோ எடுத்துட்டு அனுப்பிடு. இவனை மட்டும் உள்ளே கூட்டிட்டு போய் ஜட்டியோட உட்கார வை… இன்னிக்கு நமக்கு நல்ல வேலை இருக்கு போல “ கனகராஜ் சொல்லிக் கொண்டே ஒரு செயரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

மேஜை மீது கசங்கிய நிலையில் கிடந்த தினத் தந்தியை ஒதுக்கி விட்டு, இன்னும் மடிப்பு கலைக்கப்படாத ஆங்கிலச் செய்தித் தாளை எடுத்து பிரித்தார்.

வியந்தார்.

அதில் முதல் பக்கத்தில் கீழே வலது பாகத்தில் தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்த இளைஞனின் புகைப்படம்.

புகைப்படத்தை உற்றுப் பார்த்த அவர் அதிர்ந்தார்.

இதே சட்டை, கிரீன்பே பேக்கர்ஸ்… இதே முகம்… இதே பார்வை.

.
மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா
காலை மணி 11

கொஞ்சும் ஆங்கில உரையாடல்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. மேஜை மீது இருந்த புகைப்படத்தை தலைமை காவல் அதிகாரி மேட் ரைசன் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

உங்க பையனை எப்போதிலிருந்து காணவில்லை ? அமெரிக்க ஆங்கிலத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதரிடம் கேட்டார்.

மூணு நாளா வீட்டுக்கு வரவில்லை. பொதுவா இப்படி இருக்க மாட்டான். அப்பப்போ நைட் டான்ஸ் கிளப்புக்கு போவான், அப்படி போனாலும் மறு நாள் காலைல வந்திடுவான். வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு போனவன், சனி, ஞாயிறு இரண்டு நாளும் வரவில்லை. இன்னிக்கு காலைல அவனோட அலுவலகம் போய் கேட்டேன். நவீன் வெள்ளிக்கிழமையே வரவில்லையே என்றார்கள். அதனால் தான் பதட்டமாய் இருக்கிறது.

நவீனின் தந்தை நுக்காலா மகனைக் குறித்த கவலையை பதட்டம் வழியும் கண்களுடனும், தனது நீண்ட கால அமெரிக்க வாழ்க்கையின் பிரதிபலிப்பான அழகிய ஆங்கிலத்துடனும் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஏதாவது அடையாளம் ?

வீட்டில இருந்து வெள்ளிக்கிழமை போனப்போ கிரீன் கலர் டிஷர்ட் போட்டிருந்தான், அதில கிரீன் பே பாக்கர்ஸ் ன்னு எழுதியிருக்கும். அது கூட ஒரு காக்கி கலர் கார்கோ பேண்ட் போட்டிருந்தான்.

நிச்சயமா தெரியுமா ?

ஆமா.. அந்த டி-ஷர்ட் க்கு அந்த பேண்ட் மேட்சிங்கா இல்லைன்னு சொல்லிட்டே இருந்தான். மேட்சிங் துணியை வாஷர்ல போடாததனால கோச்சுகிட்டான். சோ, நல்லா தெரியும்.

ஒருவேளை அந்த சண்டையினால கோச்சுகிட்டு…

நோ… நோ… இதெல்லாம் ரொம்ப சகஜம். இந்த மாதிரி சண்டைக்கெல்லாம் வீட்டுக்கு வராம இருக்க மாட்டான். நல்ல பையன். எப்படியாவது அவனை கண்டுபிடிச்சு கொடுங்க பிளீஸ்…. நுக்காலா கெஞ்சினார்.

மேட் ரைசன் தேவையான விவரங்களை வாங்கிக் கொண்டு, நுக்காலாவை அனுப்பினார்.

பொறுமையாக ஒரு பர்கரை வாங்கிக் கடித்துக் கொண்டே நவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றார் மேட். கூடவே உடன் பணியாளர் டிம் சானர்.

அலுவலகம் சாலையை விட்டு தள்ளி கொஞ்சம் உள்ளே இருந்தது. அந்த அலுவலகம் ஏதோ ஓர் அமானுஷ்யத் தனமாய் இருப்பதாய் பட்டது அவருக்கு.

காரை இரண்டு மஞ்சள் கோடுகளின் நடுவே அழகாய் பார்க் செய்து விட்டு, உள்ளே சென்றனர் மேட் ரைசனும், டிம் சானரும்.

உங்கள் மேலாளரைப் பார்க்கவேண்டும்.

நீங்கள் ?

அடையாள அட்டை காண்பிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்க வில்லை. மேலாளர் அவர்களை வந்து அழைத்துச் சென்றார்.

சொல்லுங்கள்.. என்ன விஷயம். காபி சாப்பிடுகிறீர்களா ?

நோ… தாங்க்ஸ். உங்க அலுவலகத்தில வேலை செய்யும் நவீன் காணோம்ன்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு அதான் ஒரு முதல் கட்ட விசாரணை.

நவீனை காணோமா ? மேலாளர் அதிர்ந்தார். ஓ.. நோ.. அது நிகழக் கூடாது.

அவருடைய அதிர்ச்சியின் வீரியத்தைக் கண்ட மேட் ரைசன் சற்றே திகைத்தார். மேலாளர் தொடர்ந்தார்.

“மேட்… உங்களுக்கே தெரியும், இது பெடரல் கவர்ண்ட்மெண்டோட ஆராய்ச்சிக் கூடம்.  டிபென்ஸ் சம்பந்தப்பட்டது. நவீன் இங்கே சீஃப் ஆர்க்கிடெக் மாதிரி. சிஸ்டம்ஸ் எக்ஸ்பர்ட். அவன் காணாமப் போறது நாட்டோட பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலா அமைய வாய்ப்பிருக்கு. இது வெறுமனே ஒரு ஆள் மிஸ்ஸிங் அல்ல. அவனை எப்படியும் கண்டுபிடிச்சாகணும்” மேலாளர் படபடத்தார்.

இல்லே.. அப்படிப் பதட்டப்படத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்போ தானே இரண்டு மூண்டு நாளா காணோம். மேட் சொல்லி முடிக்கும் முன் அவர் இடைமறித்தார்.

நோ… நோ… இது ரொம்ப சீரியஸ் மேட்டர். நவீனை உடனே கண்டுபிடிச்சாகணும். எங்க ரூல் படி எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் அனுமதி இல்லாமல் எங்கேயும் போகக் கூடாது. அது மட்டுமல்ல அவர் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை நடத்திட்டுருந்தார். அது முடியற தருவாயில இருக்கு. இந்த நேரத்துல அவர் மிஸ் ஆகறது பயமுறுத்துது. நான் பெண்டகன் தலைமையிடத்தில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் வாங்கி குடுக்கறேன். நவீன் உடனே கண்டுபிடிக்கப் படணும். அவர் சொல்லச் சொல்ல மேட் மேலாளரின் பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டார்.

அதன் பின் எல்லாம் ராக்கெட் வேகம் பிடித்தன. நவீனின் போட்டோ உலகம் முழுவதுமுள்ள ரகசிய தேடல் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நவீனைக் கண்டுபிடிக்க தேடல் கலிபோர்னியா காட்டுத் தீ போல பரவியது.

அடிலெய்ட் ரிஸர்ச் சென்டர், ஆஸ்திரேலியா
காலை 5 மணி.

“நிஜமாவா சொல்றீங்க ?” அடிலெய்ட் ரிசர்ச் செண்டரின் தலைமை நிர்வாகி லியோன் ஆஸ்கின் கையில் பற்றியிருந்த செல்போனுக்கே காதுவலிக்கும் அளவுக்குச் சத்தமாய்க் கேட்டார்.

உண்மை தான். இந்த ஆராய்ச்சிக்காக நீங்கள் செய்த எந்த செலவும் வீண் போகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறேன். ஜெயராஜ் மறு முனையில் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசினான். அவன் குரலில் பெருமிதம் படபடத்தது.

ஐ..காண்ட் வெயிட்… இன்னும் ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன். சொல்லிக் கொண்டு கைப்பேசியை ஆஃப்செய்து விட்டு படுக்கையைச் சுருட்டி வீசிவிட்டு எழுந்தார் ஆஸ்கின்.

பத்தே நிமிடத்தில் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்தது ஆஸ்கினின் கார்.

ஆராய்ச்சிக் கூடம் அமைதியாய் இருந்தது.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஏதேதோ படங்கள் வரிசை வரிசையாய் ஓடின.

ஹாய்..ஜேக். 

ஜெயராஜ் நிமிர்ந்தார்.

ஹாய் ஆஸ்கின். வாங்க.

என்னால் இருப்புக் கொள்ளவில்லை ஜேக். இதை மட்டும் நிஜமாக்கிக் காட்டினால் உலகமே வியர்ந்து போய்விடும். ஆஸ்கின் தனது அறுபது வயதையும் மறந்து ஆறு வயதுக் குழந்தை போல குதூகலித்தார்.

ஜேக் புன்னகைத்தான். இண்டர்காமை தட்டி ஜெனியை உள்ளே அழைத்தான்.

‘ஜெனிக்கு இந்த ஆராய்ச்சி தெரியுமா ?’

‘தெரியாது. அவளைத் தான் இன்னிக்கு சோதனைக்குப் பயன்படுத்தப் போறேன். பாருங்க விளையாட்டை’ என்று கூறி கண்ணடித்தான் ஜெயராஜ்.

ஜெனி வந்தாள். அந்த சிக்கலான கண்ணாடி அறைகளும், கணினிகளும் நிரம்பியிருந்த சோதனைச்சாலைக்குள் நடந்து ஜெயராஜ் அருகே வந்தாள். கையிலிருந்த ஆங்கில செய்தித் தாளை ஜெயராஜின் முன்னால் வைத்து விட்டு அவன் சொன்ன ஒரு குட்டியூண்டு கண்ணாடி அறைக்குள் அமர்ந்தாள்.

ஜெனி… நான் கேக்கறதுக்கு பதிலை மட்டும் சொல்லு. அவ்வளவு தான் வேலை… ஜெயராஜ் சொல்ல, ஜெனி சிரித்தாள்.

ஆஸ்கின் கணினித் திரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணினியில் ஏதேதோ புதிய வண்ணங்கள் தோன்றத் துவங்கின.

ஜெயராஜ், கணினியின் செட்டப் களைச் சரிசெய்துவிட்டு, தனக்கு முன்னால் இருந்த மெல்லிய குமிழ் வடிவ மைக்கில் பேசினான். அது ஜெனி இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஜெனி.. நேற்று மாலையில் என்ன பண்ணினே ?

நேற்று வீட்டுக்குப் போயி நல்லா தூங்கினேன். ஜெனி சொன்னாள்.

ஜெயராஜ் கணினித் திரையைப் பார்த்தான். அதில் புகைப்படங்கள் துண்டு துண்டாய் தெரிந்தன. ஜெனி ஒரு பாரில் நுழைவதும், உள்ளே அமர்ந்து மது அருந்துவதும், அடிலெய்ட் ரண்டேல் மால் தெருவுக்குள் நுழைவதும் என காட்சி காட்சியாக திரையில் வர ஆஸ்கினுக்கு புல்லரித்தது.

மூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவம் பெற்று விடுகின்றன. அந்த காட்சி வடிவம் ஒருவகையில் ஞானிகளின் தலையைச் சுற்றி வரும் ஒளி வட்டம் போல சுற்றிக் கொண்டே இருக்கும். அது வெளிப்புற இயக்கங்களாலும், கதிர்களாலும் தாக்கப்படவில்லையெனில் அந்தக் காட்சிகளை அப்படியே டிஜிடல் இழைகளாக்கி கணினியில் புகுத்திவிடலாம். இது அதன் முதல் படி. ஜெயராஜ் சொன்னனன்.

கனிணியின் திரையில் ஜெனியின் மனதில் ஓடும் காட்சிகளெல்லாம் துண்டு துண்டாய் வந்து கொண்டே இருந்தன.

ஜெயராஜ் விளக்கினான். நமது மூளையில் சிந்தனைகள், அனுபவங்கள், காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றில் எதையெல்லாம் நினைவுபடுத்துகிறோமோ அது மட்டுமே டிஜிடலைஸ் செய்யப்படுகிறது. அதனால் தான் கணினித் திரையில் ஒரு திரைப்படமாய் தொடர்ந்து காட்சிகள் ஓடாமல் துண்டு துண்டாய் காட்சிகள் வருகின்றன. இதன் அடுத்த கட்டம் மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையுமே பிரதி எடுப்பது.

இனிமேல் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதோ, உளவாளிகளிடம் ரகசியம் கறப்பதோ, மனநோயாளிகளின் நோயின் வேர் கண்டுபிடிப்பதோ எதுவுமே சாத்தியம்… ஜெயராஜ் சொல்லச் சொல்ல ஆஸ்கின் அசந்து போய் உட்கார்ந்திருந்தார்.

உனக்கு பாய் பிரண்ட் யாராவது இருக்காங்களா ? ஜெயராஜ் மைக்கருகே குனிந்து குறும்பாய் கேட்டான்.

நோ…வே என்றாள் ஜெனி..

கணினி காட்சிகள் சட்டென்று நிறம் மாறின. கணினியில் ஜெனி ஜெயராஜைப் பார்த்து ரசிக்கும் காட்சிகள் தோன்ற, ஆஸ்கினும் ஜெயராஜும் வாயடைத்துப் போனார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத அவஸ்தையில் தலையைக் குலுக்கிய ஜெயராஜின் கண்களில் பட்டது அருகிலிருந்த ஆங்கிலச் செய்தித் தாளும், அதில் இருந்த நவீனின் புகைப்படமும்.

ஆஸ்கினின் பார்வையிலிருந்து தப்பிக்க மெல்ல வாசிக்கத் துவங்கினான் அதை.

மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா

மேட்-டின் அறைக்குள் அமைதியாய் இருந்த ஃபேக்ஸ் மெஷின் நாகப் பாம்பு போல உஸ் என முனகியது.

பிரிண்டரின் ராட்சத நாக்கு போல வெளியே நீண்ட காகிதத்தை இழுத்து எடுத்த மேட் ஆனந்தமடைந்தார். !

நவீன் கண்டுபிடிக்கப் பட்டான் ! லாஸ் வேகஸில் !!

படத்தில் லாஸ்வேகஸ் சூதாட்ட விடுதி பலாஜியோவின் முன்னால் நவீன் நிற்க, அருகிலேயே காவலர் ஒருவர். நவீனின் டிஷர்ட் கிரீன் பே பேக்கர்ஸ் என்றது.

ஆஹா.. நவீன் கண்டுபிடிக்கப் பட்டானா ? மேட் ஆனந்தமடைந்தார். உடனே இதை மேலிடத்துக்கு அறிவிக்க வேண்டும். குறிப்பாக அந்த அலுவலக மேலாளருக்கு அறிவிக்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டிருந்த போது போன் அடித்தது.

‘வி காட் நவீன் …” மறு முனை பேசியது.

நன்றி. இப்போது தான் பேக்ஸ் கிடைத்தது. மேட் ரைசன் சொன்னார்.

ஃபேக்ஸ் ? வாட் ஃபேக்ஸ் ?  மறு முனை குழம்பியது

“நவீன் கிடைச்சுட்டதா நீங்க லாஸ்வேகஸில இருந்து அனுப்பின போட்டோவும் செய்தியும் ! “ மேட் ரைசன் சொன்னார்.

என்ன சொல்றீங்க ? – லாஸ் வேகஸா ? நவீனை நாங்க இங்கே சிகாகோ நேவி பியர்ல கண்டு பிடிச்சிருக்கோம்.

அவர்கள் சொல்ல மேட் குழம்பினார் ? இதென்ன புதுக் குழப்பம் ?
“அவன் என்ன டிரஸ் போட்டிருக்கான் ? “ மேட் கேட்டார்.

பச்சை நிற டீ ஷர்ட். கிரீன்பே பேக்கர்ஸ் வாசகம் ! காக்கி நிற பேண்ட்.

மேட் அதிர்ந்தார். இதெப்படி சாத்தியம் ?

யோசித்துக் கொண்டே பெருமூச்சு விட்டவருக்கு மீண்டும் ஒரு அழைப்பு. செய்தியைக்  கேட்ட அவருடைய கையிலிருந்த செல்போன் நழுவிக் கீழே விழுந்தது.

ஆஸ்திரேலியாவில் நவீன் கண்டுபிடிக்கப் பட்டானாம். ஆனால் அங்கே நான்கு நவீன்கள் ஒரே போல, ஒரே மாதிரி டி-ஷர்ட், பேண்ட் அணிந்திருந்ததால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனராம்.

எதிர்பாராத புதுக் குழப்பம் நிலவ, மேட் ரைசன் மேஜை மீது அமர்ந்தார்.

ஃபேக்ஸ் மறுபடியும் இயங்கத் துவங்கியது.

போன் மறுபடியும் அடித்தது.

சீனா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் என எல்லா இடங்களிலும் நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டனர் என்னும் செய்திகள் பேக்ஸிலும், போனிலும் வந்து கொண்டே இருந்தனர்.

உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நவீன்களும் ஒரே அடையாளத்துடன். ஒரே மாதிரி சீருடையுடன். !!

.
அசோக் நகர் காவல் நிலையம், சென்னை

காணாமல் போல சுமார் முப்பத்து ஆறு வயது நவீன் உலகெங்கும் நாற்பத்து ஏழு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டனர். எல்லோரும் ஒரே ஆடையை அணிந்திருப்பதும், எல்லோருமே பிரமை பிடித்தவர்கள் போல அமைதியாய் இருப்பதும் காவலர்களையும், அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்தியாவில், அசோக் நகரில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.

“இனிமேலும் பல நவீன் கள் உலகெங்கும் நடமாடிக் கொண்டிருக்கலாம் எனும் அச்சம் நிலவுகிறது. இதன் மர்மத்தை அவிழ்ப்பதும், இவர்கள் உண்மையிலேயே ஏதேனும் தீவிரவாதிகளின் அதி நவீன ரோபோவா என்பதை கண்டறியவும் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

எங்கேனும் இந்தப் படத்தில் காணப்படும் நவீன் எனும் நபர் தென்பட்டால் உடனே இந்த எண்களில் ஏதேனும் ஒன்றுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

கனகராஜ் திகிலுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த நவீனைப் பார்த்தார்.

“யோவ்.. சட்டை பேண்டை கழற்ற சொன்னா என்ன பண்றே” ஒரு காவலர் உள்ளிருந்து நவீனை நோக்கிக் குரல் கொடுத்தார்.

“வேண்டாம்… வேண்டாம்…. “ கனகராஜ் திடீரென மறுத்தார். 

“இவனை ஒரு செல்லுல அடைச்சு வையுங்க. நான் ஒரு போன் பண்ண வேண்டியிருக்கு. விஷயம் ரொம்ப முக்கியம். இவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. வெளியே விட்டுடாதீங்க. அவனை தொடாதீங்க” கனகராஜ் சொல்லிக் கொண்டே போக நிலையத்தில் இருந்த காவலர்கள் குழப்பத்துடன் நெற்றி சுருக்கினர்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா

“.. எல்லா நவீன்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான ரிசல்ட் களே வந்திருக்கின்றன. எந்த வித்தியாசமும் இல்லை.

கண்டுபிடிக்கப் பட்ட இந்த ஐம்பது நவீன்களுமே பேசாமல் மௌனமாய் இருப்பதால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். இவர்களுடைய பின்னணி என்ன ? இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வது எப்படி என தெரியாமல் உலகெங்குமுள்ள காவலர்கள் திகைத்துப் போயிருக்கின்றனர்.”

ஆஸ்கின், இந்த செய்தியைப் படிச்சீங்களா ? வியப்பும், படபடப்புமாக ஜெயராஜ் செய்தியை ஆஸ்கினின் முன்னால் நீட்டினான்.

ஆஸ்கின் இன்னும் ஆராய்ச்சிப் பிரமிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. அதற்குள் அந்த செய்தி அடுத்த ஆச்சரியத்தை அவருக்குக் கொடுத்தது.

இங்கே நமக்கு ஒரு வாய்ப்பு, ஜெயராஜ் சொன்னான்.

என்ன வாய்ப்பு ?

இந்த குழப்பத்தைத் தீர்க்க நம்ம கண்டுபிடிப்பைப் பயன்படுத்துவோம். நவீன் மனதில் என்ன இருக்கு, என்ன ஓடிட்டிருக்கு என்பதை நாம படமா காப்சர் பண்ணுவோம். என்ன சொல்றீங்க ? ஜெயராய் உற்சாகமாய் கேட்க ஆஸ்கினுக்கு அது ஒரு அரிய வாய்ப்பாய் பட்டது.

அதுக்கென்ன.. உடனே பண்ணிடலாமே ! ஆஸ்கின் உற்சாகமானார்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா
மாலை 4 மணி

 
அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆஸ்கினும் ஜெயராஜும் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த கண்டுபிடிப்பு இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே இதைக் குறித்து எதுவும் வெளியே சொல்லக் கூடாது எனும் உத்தரவை ஆஸ்திரேலிய அரசு வருகை தந்திருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இட்டிருந்தது.

நான்கு நவீன்கள் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

ஒரு நவீன் ஜெயராஜின் கண்டுபிடிப்பான அந்த பிற கதிர்கள் தாக்காத சிறப்பு கண்ணாடி அறைக்குள்  அமர்த்தப்பட்டார்.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த மைக்கில் நவீனிடம் பேசிக்கொண்டிருந்தார். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், என எந்த மொழியில் பேசினாலும் நவீனிடமிருந்து பதில் இல்லை.

கணினி திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜெயராஜும், ஆஸ்கினும், அமெரிக்க அதிகாரிகளும்.

கணினி எந்த மாற்றமும் இன்றி வெறுமையாய் இருந்தது.

ஜெயராஜுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. இப்போது என்ன செய்வது ? நவீன் ஏன் எதையுமே நினைக்க மாட்டேன் என்கிறான் ? நினைக்காதிருக்கும் வரை திரையில் ஏதும் தோன்றாதே… நான் தோல்வியடைந்து விட்டேனா ? இந்தக் கருவியால் பயனில்லையா ? ஜெயராஜ் வருந்தினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் ஜெயராஜ் டேபின் மீது விரலால் தட்டினார்.

எதிர்பாரா விதமாக கணினியில் சட்டென ஒரு காட்சி தோன்றியது.

வெளிச்சமாய் ஒரு மிகப்பெரிய குமிழ். அதற்குள் ஏதோ நீள் குழல் விளக்குகள் அசைந்து கொண்டிருந்தன.

ஜெயராஜ் மீண்டும் தனது விரலால் மேஜையில் முதலில் தட்டியது போலவே தட்டினான்.

அதே காட்சி மீண்டும் திரையில் வந்தது.

ஜெயராஜுக்கு ஏதோ ஒன்று பிடிபட்டது போல் தோன்றியது. இதென்ன ஒரு புது மொழியா ?  ஜெயராஜ் ஆஸ்கினைப் பார்த்தார் அவர் குழப்ப முடிச்சுகளோடு ஜெயராஜைப் பார்த்தார். அதிகாரிகள் கணினியையே விழுங்கி விடுவது போலப் பார்த்தார்கள்.

ஜெயராஜ் தனது விரல்களால் மேஜையில் தட்ட ஆரம்பித்தார். மெலிதான தாளம் போல ஜெயராஜ் மேஜையில் தட்டத் தட்ட கணினித் திரை அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

ஒரு வெளிச்சக் குமிழுக்குள் நவீன் நிற்கிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட். அவனுக்கு முன்னால் வெளிச்ச உடலுடன் நீள் குழல் விளக்குகளைப் போன்ற உயிர்கள் அலைகின்றன. அவ்வப்போது அவை அணைந்து அணைந்து எரிகின்றன. நடக்கின்றன. வளைகின்றன. வடிவத்தை மாற்றி குமிழ் விளக்கு போல ஆகின்றன. மெலிதாகின்றன.

நவீனின் பிம்பம் ஒரு பாதரசப் படிவம் போன்ற ஒரு பெட்டிக்குள் விழுகிறது, அந்தப் பெட்டிக்குள் ஒரு விளக்கு உருவமும் நுழைகிறது. அடுத்த வினாடி இன்னோர் நவீன் அந்தப் பெட்டியிலிருந்து எழுந்து வருகிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட்.

ஜெயராஜும், ஆஸ்கினும், அதிகாரிகளும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சட்டென காட்சிகள் மாற, நவீன்கள் ஆயிரம் ஆயிரமாய் பெரும் கூட்டமாய் நிற்கின்றனர். தரைக்குள்ளிருந்து சில உருவங்கள் மண்புழுக்களைப் போல மண்ணைத் துழைத்து கம்பங்களைப் போல நிமிர்கின்றன.

அடுத்த காட்சியில் ஓர் ராட்சத பருந்து போன்ற கருவிக்குள் நவீன்கள் நுழைகின்றனர். பின் அந்த கருவியிலிருந்து ஒளி உருண்டைகள் ஆயிரம் ஆயிரமாய் வெளியேறி பூமியை சிதறிப் பாய்கின்றன.

காடுகள், மலைகள், நாடுகள் என எல்லா இடங்களுக்கும் அந்த ஒளிப் பந்துகள் விழுகின்றன. ஒளிப்பந்து விழும் இடத்தில் சட்டென ஒளி மறைய நவீன்கள் !

அந்த அறையிலிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போய் கணினித் திரையையே வெறித்தனர்.

யு.எப். ஓ அலுவலகம், இங்கிலாந்து

இந்த நவீன்களின் உடலில் இருப்பது ஏலியன் உயிரா ? அது ஏலியன் தானா ? ஏலியன் எனில் என்ன கிரகம் ? எப்படி அவர்களால் ஒளியாக பூமிக்குள் பாய முடிகிறது ? எப்படி மனிதனைப் பிரதியெடுக்க முடிகிறது ? அவர்கள் நோக்கம் தான் என்ன ? பூமியைக் கட்டுப்படுத்துவதா ? பூமியை அழிப்பதா ? இப்படிப் பல கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சியையே அனைவரும் மேற்கொண்டுள்ளோம்.

பல சுவாரஸ்யமான ஆய்வுகள் தெரியவந்துள்ளன. ஒன்று இவர்கள் கார்பண்டை ஆக்ஸைடைத் தான் சுவாசிக்கப் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது இவர்களுக்குப் பசிப்பதில்லை. மூன்றாவது, இவர்கள் மண்ணில் புதையுண்டு கிடந்தால் கூட உயிர்வாழ்வார்கள்.

ஆராய்ச்சி பல்வேறு கட்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் பல நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டதால் உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கின்றன.

பத்திரிகையாளர் கூட்டத்தில் யூ.எஃப். ஓ இயக்குனர் ராபட்சன் பேசிக்கொண்டிருந்தார்.

“ஒரு உயிரை வைத்து இப்படி ஆராய்ச்சி செய்வது நல்லதா ? இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயலில்லையா ?” ஒரு பத்திரிகைப் பெண்மணி கோபமாய் கேட்டாள்.

இவர்கள் மீது எந்த காயமும் நேராமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

“உலகிலிருந்து நவீன் எப்படி வேறு கிரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்” அடுத்த கேள்வி வந்தது.

“அது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஆராய்ச்சிக் கூடம் மும்முரமாய் இருக்கிறது”

“இவர்களால் மனிதனுக்கு ஏதேனும் நோய், உயிர்சேதம் போன்ற அச்சுறுத்தல்கள் ? “ கேள்விகள் தொடர்ந்தன..

முழுமையாய் எதுவும் தெரியாது. இவர்களால் மனிதர்களுக்கு என்ன அச்சுறுத்தல் என்பதைக் கண்டறியும் வரை இவர்கள் பாதுகாப்பாகவே வைக்கப்படுவார்கள். எங்கேனும் இந்த மனித உருவத்தைக் கண்டால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான வேண்டுதல்.

பேட்டி தொடர்ந்து கொண்டிருக்க, அடக்க முடியாத அழுகையுடன் விசும்பிக் கொண்டிருந்தனர் நவீனின் தந்தை நுக்கலாவும், தாயும்.

சிறுகதை : பணி நீக்கம்

 

அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள்.
அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது.

சட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் நல்லமுறையில் இயங்குவதற்குக் காரணம் நீங்கள் தான்.

இந்த அலுவலகத்தை மூட வேண்டுமென்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் வீழ்ச்சி, வீட்டுக் கடன் சிக்கல், டாலர் விலை சரிவு என பல காரணங்கள்.

 நம்முடடய இந்த அலுவலகத்துக்கு எந்த விதமான புதிய ஒப்பந்தங்களும் நடைபெறாத நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட இயலாத நி?லக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இந்த அலுவலகத்தை இந்த மாதத்துடன் மூடுவெதென்று உத்தேசித்துள்ளோம். உங்கள் ஆதரவுக்கு..

அமெரிக்காவின் கலிபோர்ணியா நகரின் ஓர் எல்லையில் இருந்தது அந்த அலுவலகம்.

அது இன்றோ நேற்றோ துவங்கியதல்ல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. இதுவ?ர எந்தவிதமான நெருக்கடி நிலமைகளும் வந்ததில்லை, இந்தியா வின்ஒரு மூன்றாம் தொடர்பாளர் வழியாக வேலை பார்த்துவந்த சில இந்தியர் பேர் உட்பட அந்த அலுவலகத்தில் இருந்த நானூற்று அறுபத்து மூன்று பேருக்கும்  இன்னும் இரண்டு வாரம் தாண்டினால் வேலை இல்லை. காலையில் திடீரென்று ஓர் அழைப்பு, ஏதோ ஒரு மீட்டிங் என்று கைகளில் குளிர்பான கோப்பைகளோடு வந்தமர்ந்த மொத்த உறுப்பினர்களும் இதயம் சூடாகிப் போனார்கள்.

திடீரென்று ஓர் விசும்பல் சத்தம், கொஞ்சம் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண்… கட்டுப்படுத்த முயன்று தோற்றுபோன விசும்பல்.

அங்காங்கே கேள்விகள் முளைத்தன. சில கேள்விகள் கெஞ்சல்களாய், சில இயலாமையின் வெளிப்பாடாய், சில கோபத்தின் பிரதிநிதியாய்.

இப்படி திடீரென்று சொன்னால் என்ன செய்வது ? எங்கள் நில?ம தான் என்ன ? எங்களுக்கு வேறு அலுவலகத்தில் வேலை கிடைக்க நிர்வாகம் உதவி செய்யுமா ?

கம்பெனியிலிருந்து ஊழியர்களுக்கு ஏதாவது நஷ்ட ஈடு கிடக்குமா ?

நாங்கள் வேலையிலிருந்து நிற்க விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்னால் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் நிர்வாகம் ஏன் குறைந்த பட்சம்  அதைக்கூட செய்யவில்லை ?

குடும்பமாக இங்கே இருந்துவருகின்ற எங்களுக்கு என்ன முடிவு ?

கொத்துக்கொத்தாய் கேள்விகள் விழுந்தாலும் புன்னகையுடன் ஒரே ஒரு பதில் தான் வந்தது.

வருந்துகிறேன்…மன்னிக்க வேண்டும்… எனக்கு அதிகமாய் எதுவும் தெரியாது… உங்கள் கேள்விகளை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்கிறேன். இல்?லயேல் நீங்களே மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்….

முடிவு எடுத்தாகிவிட்டது… இனிமேல் என்ன பேசினாலும் பிரயோசனம் இல்லை என்று மொத்த கூட்டமும் நிமிடங்களில் புரிந்து கொண்டு விட்டது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கூட்டத்தினர் வெளியேறத்துவங்கினார்கள். கடைசி வரிசையில் அமர்ந்து எதையும் செரித்துக்கொள்ளமுடியாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் விக்னேஷ்.

விக்னேஷ், மூன்று மாதங்களுக்கு முன் ஏராளம் கனவுகளோடு அமெரிக்காவுக்கு வந்தவன்.

கிராமத்தில் படித்து, சென்னையில் கணிப்பொறி மென்பொருள் எழுதும் ஓர் கம்பெனியில் பணியாற்றி, ஒரு கன்சல்டன்சி வழியாக அமெரிக்கா வந்தவன். தன்னைப்படிக்க வைத்து அமெரிக்கா செல்லக்கூடிய அளவுக்கு தயாராக்கிய தந்தை, அம்மா… இன்னும் வானத்தை நம்பி விவசாய வாழ்க்கை நடத்தும் உறவினர்கள்… 

.
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள்.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கொஞ்சம் உதவ வேண்டும் என்னும் ஏக்கம் அவன் மனசு முழுவதும் நிறைந்திருந்தது. இவன் அமெரிக்கா செல்ல விமானம் ஏறிய போது பெருமையுடனும், பிரிவின் வலியுடனும் கண்கலங்கிய அப்பா… என் மகன் அமெரிக்காவில்  இருக்கிறான் என்று எதிர்படுவோரிடமெல்லாம் வலியச் சென்று சொல்லும் அப்பா… நினைக்கும் போது கண்கள் நிறைந்தது விக்னேஷ்க்கு.

இதே நிலமை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் கூட இவ்வளவு வருந்தியிருக்க மாட்டான். இப்போது நிலமையே வேறு. எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பு, பல நூறு கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. வேலை கிடைப்பது இப்போது குதிரைக்கொம்புதான். சில ஆண்டுகளுக்கு முன்பு, கணிப்பொறியில்  ஏதோ நான்கு வார்த்தைகள் சொல்ல முடிந்தால் உடனே வேலை. இப்போது அப்படி அல்ல… அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடப்பதால் இந்தியாவில் கூட வேலை கிடைப்பது மிகவும் கடினமாம்.

“விக்னேஷ்”.

நண்பனின் குரல் அவனை நிலத்துக்கு இழுத்து வந்தது.

என்னடா … இப்படி கவுத்துட்டாங்களே. இப்போ என்ன பண்றது ?

இங்கே வேறு கம்பெனியில் முயற்சி செய்யலாம்… வேறு என்ன செய்ய முடியும் ?

எங்கே போய் முயற்சி செய்வது ? போனவாரம் ரஞ்சித் சொன்னதைக் கேட்டாயா ? எங்கேயும் வேலை இல்லை. நமது நிலமை இப்போ மிகவும் இக்கட்டானது. இங்கே வேலையில்லாமல் நாம் ஒரு மாதத்துக்கு மேல் தங்க முடியாது தெரியுமா ? நாம வந்திருப்பது வேலை பா
ர்ப்பவர்க்கான விசா… இந்த நாட்டில் நாம் வேலையில்லாமல் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் நாம் அவர்களுடைய சட்டத்தை மீறுபவர்களாய் கருதப்படுவோம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்பி அனுப்பப்படலாம், இல்லையேல் ஜெயிலில் கூட அனுப்பப்படலாம்….பதட்டம் நிறைந்த குரலில் சொன்னான் விக்னேஷ்.

நண்பன் ஊமையானான்… எதுவும் சொல்ல முடியவில்?ல என்னால். என்ன நடக்கப்போகிறதோ ?

எங்கே வேலை தேடுவதோ தெரியவில்லை. ஒரு நாள் நான்குமுறை தலை நீட்டும் நிர்வாகிகள் யாரையும் காணவில்லை. எல்லோரும் நழுவி விட்டார்கள். நடுக்கடலில் நிற்கிறோம் இப்போது. கண்டிப்பாக நீச்சலடித்துத் தான் ஆகவேண்டும். எங்கே கரையேறுகிறோம் என்பது ஆண்டவன் செயல். சொல்லிவிட்டு நடக்கத்துவங்கினான் ரஞ்சித்.

வாழ்க்கை சுவாரஸ்யம் இழந்துபோனதாய் நகர்ந்தது. ஆகாய விமானமாய் பறந்துகொண்டிருந்த உற்சாகம் எல்லாம் விதியில் விழுந்து நடைவண்டியாய் நடக்கத் துவங்கியது.

வாரம் ஒன்று ஓடிவிட்டது. நிறைய இடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியாகிவிட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை… விக்னேஷின் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடையத்துவங்கியது.
வேலை இருந்தபோது தினசரி நான்குமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நண்பர்கள், விஷயம் கேள்விப்பட்டபின் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் செல்வதுபோல் தோன்றியது விக்னேஷிக்கு. ஏதாவது உதவி கேட்பேன் என்று பயப்படுகிறார்களா ?

இல்லை என்னோடு வழக்கம் போல கலகலப்பாய் பேசமுடியாது என்று நினைக்கிறார்களா ? சிந்தனை வட்டமடித்துப் பறந்தது.

பிரியாவிடமிருந்து கூட பதில் கிடைக்கவில்லை…. பிரியா, விக்னேஷின் நெருங்கிய தோழி.  தினமும் ஒரு மின்னஞ்சலாவது அனுப்பும் தோழி.

கணிப்பொறியில் இரண்டு நிமிடங்கள் செலவழித்தால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். காணோம்.

முதல்நாள் அதிர்ச்சியாய் ஒரு கடிதம்… இரண்டாம் நாள் வேலை ஏதாவது கிடைத்ததா என்னும் ஒரு கடிதம்.

கடந்த நான்கு நாட்களாக அதுவும் இல்லை. இப்போது விக்னேஷிற்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் அதிகமாய் காயப்படுத்துவதாய் தோன்றியது. 
மூக்கில் அறுவைசிகிட்சை செய்து கொண்டவனுக்கு தொண்டடயும் கட்டிப்போன அவஸ்தை அவனுக்கு.

இதுதான் வாழ்க்கை. சாவு நெருங்கிவரும்போதுதான் தான் வாழ்ந்த இந்த உலகம் என்பது மிகவும் உன்னதமாது என்கிற விஷயம்  பலருக்கும் புரியத் துவங்குகின்றது. ஒரு பிரிவுதான் உறவின் இறுக்கத்தை மிகத்தெளிவாய் விளக்குகிறது. விக்னேஷிற்கும் இப்போது தான் சில விஷயங்கள் புரிவதாகத் தோன்றியது.

ஏதாவது  ஒரு மாயம் நடந்து கம்பெனி மூடும் விஷயத்தைதக் கைவிட மாட்டார்களா என்று வேண்டுதல்கள் செய்தான். இந்த தனிமை அவனை ஒரு பாறாங்கல் கிரீடமாய் அமிழ்த்தத் துவங்கியது. இனி என்ன செய்வது ?
எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து விக்னேசின் கால்களை உடைத்துக் கொண்டிருந்தபோது அழைப்புமணி ஒலித்தது.

வாசலில் தபால்காரப் பெண்மணி. கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டு, கொஞ்சும் ஆங்கிலத்தில் கைகயசைத்து நகர்ந்தாள்.

யார் கடிதம் அனுப்பியிருப்பார்கள் என்று பார்த்த விக்னே? ஆச்சரியப்பட்டான். அப்பா !!!. அப்பா இதுவரை கடிதம் எழுதியதில்லை, இப்போது என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணியபடியே கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

அன்பு மகனுக்கு…..

உனக்கு வேலை பறிபோய்விடும் என்னும் விஷயம் கேள்விப்பட்டு கலங்கினேன். இதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்கள் தான். இந்த வேலை போனால் உனக்கு வேறு ஒரு வேலை காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள். வேலை போனால் கவலையில்லை, ஆனால் நம்பிக்கை மட்டும் உன்னை விட்டுப் போகாமல் பார்த்துக்கொள். வேலை என்பது ஒரு பாதை. நம்பிக்கை என்பது உன் பாதம்.

இல்லையேல் வேலை என்பது ஒரு கதவு, நம்பிக்கை என்பது உன் கரங்கள் என்று நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சின்ன வயதில் நீ ஆரம்பப்பாடசாலைக்குச் செல்ல அழுவாய். அப்போதெல்லாம் நீ நினைத்தாய் உன் சின்ன வயதுச் சுதந்திரம் சிறையிலிடப்பட்டது என்று. பிறகு நீ புரிந்து கொண்டாய். கல்லூரியில் இடம் கிடைக்காத போது கலங்கினாய், விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்று வருந்தினாய். வேலை தேடிய நாட்களில் தாழ்வுமனப்பான்மையில் தவழ்ந்தாய். இவையெல்லாம் உனக்கு வேலை கிடைத்தபோது மறைந்து போய்விட்டது.

இதுவும் அப்படித்தான், ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவுகள் திறக்கும் என்பார்கள். கவலையை விடு.

உயிருக்குயிராய் காதலித்தவள் இன்னொருவனோடு ஓடிப்போனபோது கூட, அவளைப்புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு இதுவென்று அமைதியாய் சொன்னவன் நீ.
நீ  கலங்கமாட்டாய் என்று தெரியும். இருந்தாலும் உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தற்காலிகத் தோல்விகள் கற்றுத்தந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்தவெற்றி நோக்கி அடியெடுத்து வை.

எதுவும் புரியவில்லை என்றால் என்னிடம் வா… கொஞ்சநாள் சின்ன வயதுக்காரனாய் என்னோடு சிரித்துவிளையாடு.

விக்னேசிற்கு கண்கள் பனித்தன. மனதுக்குள் ஏதோ மிகப்பெரிய ஒரு பலம் வந்ததாய் உணர்ந்தான்.

ஒன்றுமில்லாத விஷயத்துக்காய் இத்த?ன நாள் கஷ்ப்பட்டதாய் தோன்றியது அவனுக்கு.
நன்றி அப்பா…. மனசுக்குள் உற்சாகமாய் சொல்லிக்கொண்டான்.

****