காதல் பயணம்

Image result for Love satellite painting

அந்த
வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.

நானும்,
என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.

பிடிக்கவில்லை.
உருகும் போதே உலர வைக்கும்
இந்த
உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.

பூமி மக்களுக்கு
பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்று
கால்கள் கூட கத்துகின்றன.

அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய்
அரிவாள் தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.

எனவே,
தேடாதீர்கள் என்று
žட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.

செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி
சரித்திரத்திலிருந்து துரத்தப்படும்.

எங்கள்
இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.

விண்கலம்
ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.

காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.

மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர்
சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.

வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்
மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?

சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்
இருந்தென்ன சரிந்தென்ன ?

முடிவெடுக்கிறோம்,
இனி,
வெளவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.

விண்கலம்,
மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.

பிடி நழுவிய விண்கலம்
கீழ் நோக்கிப் பா.ய்ந்து
கடலில் . . . . .

திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது
‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று
நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.

Advertisements

கவிதைக்குத் தலைப்பு செவ்வாய்

Image result for Girl in dream

கல்லூரியில்
ஓர் கவிதைப் போட்டி
செவ்வாய் என்றொரு
தலைப்பு
தலைகால் இல்லாமல் தரப்பட்டது.

பூமி ஓர் நீலப்பந்து,
செவ்வாயோ சிவப்புப் பந்து.
சுடச் சுடப் புழுதி தெறிக்கும்
ஓர்
தூசுத் துயரம் செவ்வாய்.

விஞ்ஞானி மகன்
எழுதி முடித்தான்.

செல்வத்தை எல்லாம்
செவ்வாய்க்கே செலுத்தினால்
ஊர் வாய் என்ன
பட்டினி தின்று தான்
படுத்திட வேண்டுமா ?

இளைஞன் ஒருவன்
கோபத்தை எழுதினான்.

மேகத்தோடு மோத ஓடும்
கடல்கள் இல்லாமல்,
பூக்களோடு மோகத்தில் மோதும்
வண்டுகள் வாழாமல்,
என்
கவிதைக்கு கருச்சிதைவு தரும்
செவ்வாய் என்ன சொல்வாய் ?

கனவுகளின் மையெடுத்து
கவி எழுதினான் ஒருவன்.

அங்கேயும் பாறைகள் உண்டாம்
அவை
காலமாற்றத்தின் கல்வெட்டுக்களாம்,
இலட்சம் ஆண்டுகள்
பாறை பின் சென்று
வரலாறு வாசிக்க இயலுமாம்.

எழுதியவன்
புதை பொருள்
ஆராய்ச்சியாளனின் புதல்வன்.

வங்கிகளோ
வர்த்தக மையங்களோ இன்றி,
செவ்வாய் செல்வதில்
வருவாய் என்னடா ?
மண்ணில் நீ
முதலீடு செய்யடா ?

தப்பில்லை உங்கள் கற்பனை
இது
தொழிலதிபர் தனையன்
எழுதியது தான்.

பரிசு யாருக்கோ கிடைத்தது
எனக்கு இல்லை.
எழுதாத கவிதைக்கு
விருது தருதல் வழக்கமில்லையே.

வேறு தலைப்பு தந்திருக்கலாம்,
செவ்வாய் என்றதும்
சிதறிய சிந்தனைகள்,
அன்று மட்டுமே
உன்னைச் சந்திக்கும்
அந்த
அம்மன் கோயில் வாசலில் தானே
அசையாமல் அமர்ந்திருந்தது.

நீயாவது ..

Image result for Girl in dream

நான்
உன்னிடம் சொன்னதில்லை
காதலுக்கு
வார்த்தைகள் விளக்கவுரை
சொல்வதில்லையே.

உன்னுடன் பேசும்போதெல்லாம்
எனக்குள்
அன்னியோன்யமாய்
ஓர்
அணில் கூட்டம் ஓடித்திரியும்.

உன் கண்களில்
படபடக்கும் பட்டாம் பூச்சிகளுக்காய்
என் மனம் முழுதும்
ஈரப் பூக்கள்
இறக்குமதியாகும்.

உன் புன்னகைத் தட்டுகளில்
என் இதயம்
கால் தடுக்கி விழுந்து கிடக்கும்.

பிடிவாதப் புயலாய்
என்
புலன்கள் கொந்தளிக்கும்.

விரலுக்கும் மூளைக்கும்
இடைவிடாமல்
ஓர்
இழுபறி நடக்கும்.

எனக்குள் நடக்கும்
பூகம்பங்களைப் புரியாமல்
நீ
தொடர்ந்து புன்னகைப்பாய்.
நான்
உடைந்துபோன உறுதியுடன்
இடிபாடுகளில் இறுகிக் கிடப்பேன்.

உன் கூந்தல்க்காட்டுக்குள்
சில
மின்னல் பூக்கள் நட்டு,
உன் கண்களுக்குள் அதை
அறுவடை செய்ய ஆசை வரும்.

உன் ஆடைகளுக்குள்
என் ஆசைகளை ஊற்றி வைக்க
சிறு
மோகச் சிந்தனை முளை விடும்.

விரல் அழகா
உன்
நகம் அழகா என்று,
பூக்களும் காற்றும்
நதிக்கரையில் பேசுதோ என்று
சங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.

நீ
அருகிலிருந்தால்
நான் கனவுகளில் விழுந்து
மௌனமாய் கலைகிறேன்.

நீ
விலகியிருந்தால்
நிஜத்துக்கு வந்து
உன்னுடன் பேசிப் பேசியே
சத்தத்தில் கரைகிறேன்.

கவிதைகளுக்கு சொன்னவற்றை
நான்
உனக்குச் சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் ஒருவேளை
என் வீட்டுப் பூக்களுக்கு
நீ
வாசனை வகுப்பு எடுத்திருப்பாய்.

சொல்லவில்லையே..

காதலுக்கு
வார்த்தைகள் முக்கியமில்லை.
கல்யாணத்துக்கு
மௌனம் முக்கியமில்லை என்று
வார்த்தையில்லாமல் சொல்லிவிட்டுச்
செல்கிறாய் நீ..

இப்போதும் என்னிடமிருந்து
எழுத்துக்கள் கூட எழவில்லை.
உன் மொழி பெயர்ப்புக்காய்
ஒரு துளி
விழிநீர் மட்டும் விழுகிறது.

ஈரம் தொலைத்த இதயம்

Image result for guy sad
பிரிவதற்குப் பிரியப்பட்ட
என் பிரியமானவனே.

வருவாயா என்று
திசைகள் மொத்தத்தையும்
வாசலாய் திறந்து
விழிவிதைத்துக் காத்திருக்கிறேன்

புரியவில்லை எனக்கு.

முல்லை இதழ்களின்
வெள்ளை சிதைய
ஏன்
முள்ளைச் சொருகினாய் ?

இதயம் என்னும்
என்னும் இலவங்காய்
உடையும் வரை விசிறிவிட்டு
உடைந்தபின்
ஏன் விதறிச் சென்றாய் ..

கானல் மட்டுமே
காட்சிக்குள் விழும்
பாலை மணல் வெளியாய்
இந்தப் பாவி மனம்.

துளித் துளியாய்
நேசம் வார்த்து
மொத்தமாய் நீ
உடைத்துச் சென்றதால்
கீறல்களில் உப்பைக் காய்ச்சியதாய்
வெம்மை விரிக்கிறது உயிர்.

உனது விரல்கள் பிடித்து
நடந்தபோது
தொடர்ந்த என் சுவடுகள்
இப்போது
கள்வனைக்கண்ட புள்ளிமானாய்
பதறி நிற்கிறது.

உன் பாதம் பார்த்துக் காத்திருக்கும்
என் பார்வைதேசத்தின் எல்லையில்
கண்­ர்க் குமிழிகள் உடைவதால்
மங்கலாய்க்
கன்னங்களில் கசியுது காதல்.

உனது எண்ணக் குவளைகளில்
குவளையாய் மலர்ந்த நான்
உன் பிரிவால்
ஓணான்கள் ஒளிந்துகொள்ளும்
கள்ளியாய்
உள்ளப்பரப்பில் முள்ளை விளைவிக்கிறேன்..

உன் மேல் விளைந்த காதலில்
மரத்துப் போகத் தெரிந்த மனசுக்கு
நீ விதைத்த காதலை
மறந்து போக மனமில்லாமல்
இறந்துகொண்டிருக்கிறது
உலையில் வீசப்பட்ட ஒற்றை ஆமையாய்.

காதல் செய்(வ்)வாய் ..

Image result for Love painting
எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

சொல்ல மறந்த கவிதை

Image result for cute girl fantasy

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.

புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.

இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.

தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.

நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.

கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.

என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.

உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.

உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.

கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.

வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?

தூரிகையுடன் ஓர் காரிகை

Image result for Girl in dream

யாரடி நீ.

எப்போதேனும் என்
கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய்.

தூரிகை தொட்டெடுத்து
முத்தச்சாயம் பூசி
என்னை
நித்திரைத் தொட்டிலில்
விட்டுச் செல்கிறாய்.

கனவுகளில்
பேருந்துகள் நகர்ந்தால்
நீ
பயணியாகிறாய்,
நதி நடந்தால்
ஈரமாய் ஓர்
ஓரமாய் கரையேறுகிறாய்.

அலுவலகக் கனவுகளில்
நீ
எப்போதேனும்
எட்டிப் பார்த்துச் செல்கிறாய்,

கடற்கரைக் கனவுகளில்
சிலநேரம்
மணல் கிளறி நடக்கிறாய்.

விளையாடினாலும்,
உரையாடினாலும்
நீ
விலகாதிருக்கிறாய்.

ஆனாலும்,
உன் முகத்தை
பகல் வெளிச்சத்தில்
மீண்டும் மனசில்
பிரதியெடுக்க முடிந்ததில்லை.

ஓர் பனிக்கால
மேகமூட்டத்தில் ஒளியும்
வெள்ளைப் பூவாகவே
நீ
விளையாடுகிறாய்.

இன்றேனும்
சரியாய்ப் பார்க்கவேண்டும்
எனும்
கனவுடன் தான்
என்
கனவுகள் ஆரம்பமாகின்றன.
தினந்தோறும்.

Love

Related image
எதிர்பார்ப்பு
ஒவ்வொரு முறையும்
தொலைபேசி ஒலிக்கும் போது
மனதின் மதில்ச்சுவர்களில்
ஆக்ரோஷமாய் அடிக்கும்
ஆனந்த அலையை
நீயில்லை எனும்போது எழும்
ஏமாற்றத்தில்
உள்ளிளுத்துக் கொள்கிறது
இதயக் கடல்.

 

 

ஹைக்கூக் குவியல்
ஒரு சிறுகதை படித்தேன்
என்று
புத்தகத்தை அணைத்துக் கொண்டு
என்னிடம் நீ
கதை சொல்லும் போதெல்லாம்
உன்
இமைகளின் படபடப்பில்,
விரியும் புருவத்தின் பரபரப்பில்,
அசையும் உதடுகளின் அழகிய நாட்டியத்தில்
நூறு ஹைக்கூக்கள் படித்துவிட்டு.
நல்லாயிருக்கா
என்று நீ கேட்கும் போதெல்லாம்
மிகவும் அருமை என்றிருக்கிறேன்
சிறுகதையின் ஒரு வரிகூட கேட்காமல்..

Image result for girl sad

வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே..

வெப்பம் விற்கும் பாலை வெளியில்
கண்­ர் இறக்குமதிக்காய்
என் கண்களைக்
களவுசெய்தவனே .

இதோ சுடும் மணல் வெளியில்
துளிகள்
விழுவதற்குள்
உப்பாய் உறைந்து போகின்றன.

விரல்களின் நெருக்கம் விலகியபின்
உன் நினைவுகளின்
நெருக்கம் நொறுக்குகிறது.

இளையவளின்
இதயக் கூட்டுக்குள்
கள்ளிகள் முளைப்பதால்
பிராணன் பிரிகிறது.

விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
காய்க்குள்அடைக்கும்
காலம் வருமோ
காலன் வரும் முன் ?

நத்தையோட்டுக் கவசம் போட்டு
நடக்கப் பழகியது
பிஞ்சு வயது.
இன்று என் கடிகாரம் போடுகிறது
நத்தையோட்டுக் கவசம்.

என் நகக் கண்ணில்
அழுக்கு மிஞ்சியிருப்பதையே
அனுமதிக்காத நீ
இன்று என் முகக் கண்ணில்
கண்­ர் மட்டுமே எஞ்சியிருப்பதை
கண்டிக்க மறுப்பதேனோ ?

என் கன்னக் குழிகளுக்குள்
காதல் இருப்பதாய் சொன்ன நீ
என் உள்ளக் குழியில்
உலை கொதிப்பதை
உணர மறுப்பதேனோ ?

உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே .

மறக்க நினைக்கும் நிமிடங்கள்
உன்னை மறக்க மறுத்து
நிலைத்து நினைப்பதால்.

ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.

நிஜம்

Image result for cute girl fantasy gif
மேற்கு வானம் மஞ்சள் பூசியதால்
குளிராடை போர்த்தி
வெப்பம் குறைந்த காற்றுடன்
குசலம் விசாரிக்கும் தெப்பம் .

அல்லி பிணைத்த தாமரை விலக்கி
வெள்ளிப் பாதத் துடுப்புடன்
வெள்ளை வாத்துக் கூட்டம்
சலனத் தாமரையாய்
தங்க நீரில் மிதந்து களிக்கும்.

அக்கரையின் காற்றில் விரவி
தாழக் கரையில் தவழ்ந்து வரும்
தாழம்பூ வாசம்
வண்ணத்துப் பூச்சிகளைக் கொஞ்சம்
வம்புக்கிழுக்கும்.

பச்சை கொட்டிய
வளைகொண்ட வயலின் வரப்புகளில்
நதியோர நண்டுகள் வந்து
சுதியோடு நடை பயிலும்.

மஞ்சள் பூசிய மினுமினுப்பில்
பத்து மணிப் பூக்கள்
பாத்திகளின் ஓரம் முழுதும்
பளபளவென பரவிக் கிடக்கும்.

கன்னிப் பெண்ணின்
குலுங்கும் வளையலாய்
தேகத்தில் மோதும் நதியின் ஒரங்கள்
மோகத்தின் முதலிரவென
உடைந்து சிதறும்..

வாழை மரங்களின்
விரிந்த இலைகளில்
பொன்வண்டுக் கூட்டம் வந்து
பொம்மலாட்டம் நடத்தும்.

என் ஒவ்வொரு சுவடுகளிலும்
பொட்டுவைத்துக் கொள்ளும்
பூமித்தாயின்
பூரிக்கும் புன்னகைச் சோலையில் நான்.

ஆயிரம் அழகுகள்
அணிவகுத்த போதும்
நினைவுகள் மட்டும்
கோடிக் கண் கடன்வாங்கி
உன்னை மட்டும் பார்த்துக் கிடக்கும்.

கையில்
புன்னகை ஒட்டி வைத்த
உன் புகைப்படம்.