எழுத்துகள் வலிமையானவை. அவற்றுக்கு சமூகத்தை மாற்றியமைக்கின்ற வலிமை உண்டு. மனிதனை நல்வழிப்படுத்துகின்ற பணியை நூல்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. மனிதனுடைய சிந்தனை அழுத்தமான சூழல்களில் மிக அழகாக வெளிப்படுகிறது. சிறையில் வாடும் சூழல்களில் திறமையும், தத்துவ சிந்தனைகளும் எழுத்தாளர்களுக்கு கிளர்ந்து எழுகின்றன. அப்படி சிறையில் அடைபட்ட சூழலில் எழுதப்பட்ட நூல்களில் ஒரு டாப் 10 பட்டியல் இதோ.
- த கான்சொலேஷன் ஆஃப் பிலாஸஃபி (The Consolation of Philosophy )
ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி போயித்யஸ். இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். மரண தண்டனையும் விதித்தார்கள். சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் தனக்கும் தனது கற்பனைப் பெண்ணான தத்துவ மங்கைக்கும் நிகழ்கின்ற உரையாடலாக இந்த நூலை எழுதினார்.
கிபி 523ல் சிறைவாசம் அனுபவித்த அவர், ஒரே ஆண்டில் இந்த நூலை எழுதினார். அது தத்துவ உலகையே புரட்டிப் போடக்கூடிய நூலாக மாறியது. எல்லா நல்லவைகளுக்கும் காரணம் கடவுளே எனும் தொனி இந்த நூல் முழுவதும் ஒலிக்கிறது.
தனக்கு இருக்கின்ற கேள்விகளை அந்த தத்துவ மங்கையிடம் அவர் கேட்பது போலவும், அதற்கு அந்த தத்துவ மங்கை தனது பதில்களை அளிப்பது போலவும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. “ஏன் நல்லவங்களை ஆண்டவன் சோதிக்கிறான் ? கெட்டவங்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறான்” போன்ற கேள்விகள் அப்போதே எழுந்திருக்கின்றன என்பது வியப்பு.
2.பவுல் எழுதிய கடிதங்கள்.
கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தவர் ச்வுல். பின்னர் இறை தரிசனத்தால் மனம் மாறி நூற்று எண்பது டிகிரி டர்ன் அடித்து கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக பவுல் என மாறினார். ஆதரவாக மாறியது மட்டுமல்லாமல் கிறிஸ்தவம் ஆழமாய் வேரூன்றவும் வளரவும் மிக முக்கியமான காரணியாகவும் இருந்தார். இவரது பயணங்களும் பேச்சுகளும் மக்களை மிக வேகமாக கிறிஸ்தவத்தை நோக்கி திருப்பின.
கடுப்பாகிப் போனவர்கள் இவரைப் பிடித்து சிறையில் போட்டார்கள். சிறையில் இருந்தபடியே இவர் பல இடங்களிலும் உள்ள கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு கடிதங்கள் எழுதினார். அந்த கடிதங்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாடு பகுதியில் இடம்பெற்றுள்ளன. இறை ஏவுதலால் இவர் எழுதிய கடிதங்களில் கோலோசேயர், எபேசியர், பிலமோன் மற்றும் பிலிப்பியர் போன்றவை சிறையிலிருந்து எழுதப்பட்டவை.
- டி ப்ரோஃபண்டிஸ் ( De Profundis )
ஆழங்களிலிருந்து என இதை மொழிபெயர்க்கலாம். எழுதியவர் சர்வ தேச இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் கொண்டாடுகின்ற எழுத்தாளர் ஆஸ்கார் வைல்ட். இந்த நூலின் முதல் பாதியில் தனது கடந்த காலத்தையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் எழுதியிருக்கிறார் ஆஸ்கர் வைல்ட். அந்த செயல்கள் தான் அவரைக் கொண்டு சிறையிலும் தள்ளி விட்டிருந்தன.
இரண்டாம் பாதி காதலாகிக் கசிந்துருகும் எழுத்துகளால் ஆனது. அது கடவுளுக்கும் அவருக்குமான ஒரு ஆன்மீக காதல் என விளக்கம் கொள்பவர்கள் அநேகர். இதை அவர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் எழுதினார். 1987ம் ஆண்டின் முதல் பகுதியில் அவர் எழுதிய இந்த நூல் இன்றும் இலக்கிய உலகின் ஒரு மகுடம்.
- டு அத்தீனா, ஃப்ரம் பிரிசன் (To Althea, from prison )
1642ம் ஆண்டு ரிச்சர்ட் லவ்லேஸ் இந்த நூலை எழுதியபோது சிறைக் கைதியாக இருந்தார். சிறையின் கதவுகள் என்னை அடைக்க முடியாது. என் மனமெனும் பறவை சிறகுகள் முளைத்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கிறது. அதை யாரும் அடக்க முடியாது என்றெல்லாம் அவரது கவிதைகள் சிறையின் தளத்திலிருந்து, வானத்தின் எல்லையை நோக்கிப் பறக்கின்றன.
அல்தேயா எனும் அந்தப் பெண், கவிஞருடைய கற்பனையில் உதித்த பெண்ணாக இருக்கலாம். அல்லது அவருடைய காதலியின் கற்பனைப் பெயராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நீதி மறுக்கப்படும் சூழலையும், நாட்டில் நிலவிய அப்போதைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் கவிதைகள் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றன. ரிச்சர்ட் லவ்லேஸ் எழுதிய படைப்புகளில் மாஸ்டர் பீஸ் இது என்பது குறிப்பிடத் தக்கது.
- டிஸ்கவரி ஆஃப் இந்தியா ( Discovery Of India )
ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்த காலகட்டமான 1942 ..1946 ல் எழுதப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்த நூல். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தினால் அவர் சிறைபிடிக்கப் பட்டிருந்தார். இந்திய வரலாறு குறித்த ஒரு தெளிவான நூல் இது எனும் பொதுவான விமர்சனம் இந்த நூலுக்கு உண்டு. இதில் துல்லியமான வரலாற்று நிகழ்வுகளோ, கால பதிவுகளோ இல்லை. ஆனால் கலாச்சாரம், பண்பாடு, மக்கள், உணர்வுகள் போன்றவை அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர கால இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள இந்த நூல் பெருமளவு உதவுகிறது. கட்டுரைகள், சிந்தனைகள், தத்துவ வெளிப்பாடுகள் போன்ற பல விஷயங்களின் கூட்டுத் தொகுப்பாக இந்த நூலைக் கருதிக் கொள்ளலாம். இந்த நூல் தொலைக்காட்சி தொடராகவும் வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
- இன்ட்ரடக்ஷன் டு மேதமெடிகல் பிலாஸஃபி ( Introduction To Mathematical Philosophy )
ரஸல் 1872ம் ஆண்டு பிறந்து 1970 வரை வாழ்ந்த ஒரு தத்துவ ஞானி. இவருக்கு கணிதவியல் நிபுணர், வரலாற்று ஆய்வாளர், படைப்பாளர், விமர்சகர், அரசியல் வாதி உட்பட பல்வேறு முகங்கள் உண்டு.
இவருடைய படைப்புகளில் முக்கியமான ஒன்று கணிதவியல் தத்துவம் பற்றியது. கணிதத்துக்கும் தர்க்கவியல் (லாஜிக்) சித்தாந்தங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பும் உண்டு. தர்க்கவியலில் இளையவன் தான் கணிதம், கணிதத்தின் முதிர்ச்சி தான் தர்க்கவியல் என கணிதத்தை தத்துவ சிந்தனையுடன் எழுதியிருக்கிறார். இந்த நூலை எழுதிய போது சிறையில் இருந்தார்.
“ஜெயில் தான் சூப்பர். யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. வேற அப்பாயின்ட்மென்ட் ஏதும் கிடையாது. எங்கேயும் போக வேண்டிய தேவையில்லை. எழுதறதுக்கு பெஸ்ட் பிளேஸ்” என்கிறார் அவர். 1950ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
- த லாங் வாக் டு ஃபீரீடம் (The Long Walk To Freedom )
நெல்சன் மண்டேலாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. கருப்பின விடுதலை என்றாலே நமது மனதில் நிழலாடும் பெயர் நெல்சன் மண்டேலா தான். 27 ஆண்டு காலம் சிறையில் கடுமையான அவதிகள் பட்டவர் அவர். சிறையில் வசதிகள் இல்லாமலும், கடுமையான உடலுழைப்பினாலும் கலங்கியவர். இவர் சிறையில் இருந்த இந்த காலகட்டத்தில் தனது வாழ்க்கை வரலாற்றின் பெரும்பகுதியை எழுதி முடித்தார்.
1990ம் ஆண்டு சிறைவாசம் முடித்து வெளியே வந்த மண்டேலா அடுத்த சில ஆண்டுகளில் 1995ம் ஆண்டு இந்த நூலை வெளியிட்டார். வாசகர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தரவல்லன இவருடைய எழுத்துகள். 2013ம் ஆண்டு அவருடைய இந்த நூல் சினிமாவாகவும் முகம் காட்டியது.
- 120 டேஸ் ஆஃப் சோதோம் (The 120 Days Of Sodom )
மார்கஸ் டி சேடு இந்த நூலை எழுத எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் முப்பத்தேழு தான் ! 1785களில் சிறைவாசம் அனுபவித்த நாட்களில் அவர் இதை எழுதினார். எழுதுவதற்குப் பேப்பர் கிடைக்காத சிறைச்சாலை சூழலில் கிடைத்த சின்னச் சின்ன துண்டு காகிதங்களில் எழுதி அதை ஒட்டி ஒட்டி ஒரு பெரிய பேப்பர் சுருளாக வைத்திருந்தார் அவர்.
ஒருநாள் அவர் விடுதலையான போது தனது படைப்பைத் தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்து போனார் அவர். இரத்தத்தால் எழுதிய எழுத்துகள் என்னை விட்டுப் போய்விட்டதே என புலம்பினார். அவரது துரதிர்ஷ்டம், அவர் சாகும்வரை அந்த படைப்பு கண்டுபிடிக்கப்படவேயில்லை.
பின்பு அது எப்படியோ கண்டெடுக்கப்பட்டு 1904ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பாலியல் நெடி தூக்கலாக உள்ள இந்த நூலை, “உலகம் தோன்றியது முதல் எழுதப்பட்ட நூல்களில் தூய்மையற்ற நூல் இது” என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மிகவும் பிரபலமான படைப்பு இது.
- த பில்கிரிம்ஸ் பிராஸஸ் (The Pilgrim’s Progress )
ஒரு நூல் 1300 பதிப்புகளைக் காண முடியுமா ? இந்த நூல் கண்டிருக்கிறது. 1678ம் ஆண்டு வெளியான இந்த நூலை எழுதியவர் ஜாண் புனியன் என்பவர். கிறிஸ்தவம் சார்ந்த பின்னணியில் எழுதப்பட்டுள்ள ஆங்கில இலக்கியம் இந்த நூல். இருநூறுக்கும் மேற்பட்ட மொழியில் இது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நெடிய பன்னிரண்டு ஆண்டு காலம் இவர் சிறையில் வாடினார். அப்போது தான் இந்த ஆன்மீகச் செறிவும், இலக்கியச் செறிவும் கொண்ட நூலை எழுதினார். இந்த நூல் தான் அவருடைய 60க்கும் மேற்பட்ட படைப்புகளில் முதன்மையானது. இவர் 1688ல் இறந்தார், ஆனால் இவரது நூல் பிரிண்ட் செய்யப்படுவது மட்டும் நிற்கவேயில்லை.
- எ ஹிம் டு த பிலோரி (A Hymn to the Pillory)
டேனியல் டிஃபோ 1660ம் ஆண்டு பிறந்த ஒரு பிரபல எழுத்தாளர். மிகவும் பிரபலமான லைஃப் அன்ட் அட்வன்சர்ஸ் ஆஃப் ராபின்சன் குரூசோ நாவல் இவர் எழுதியது தான். இவருடைய இந்த ஹிம் டு த பிலாரி சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. இது கவிதை வடிவிலானது.
இந்த நூல் பிரின்ட் செய்யப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட போது எழுத்தாளருக்கு மிகப்பெரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது. அவரை சிறை கைதியாகப் பார்க்காமல் மக்கள் அவரை பிரபலமான மனிதராகப் பார்த்தார்கள். அவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்த சிறைப் பதிவு பிடித்திருக்கிறது.