TOP 10 : பயங்கள்

Image result for Panphobia

மனிதர்களை பல்வேறு விதமான ஃபோபியாக்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஃபோபோஸ் என்பது பயத்துக்கான கிரேக்கக் கடவுளின் பெயர். எனவே பயப்படும் விஷயங்களுக்கெல்லாம் “ஃபோபியா” என பெயரிட்டழைக்கிறது மருத்துவம். இப்படியெல்லாம் ஒரு பயம் இருக்கிறதா என வியக்க வைக்கின்றன சில பயங்கள். இதுக்கெல்லாமா  பயப்படுவாங்க என நினைக்க வைக்கின்றன சில பயங்கள், அவற்றில் டாப் 10 பயங்களைப் பற்றி பார்ப்போம்.

 1. அனிமோஃபோபியா

ஐயோ காத்தடிக்குதே ! என பயப்பட்டால் அதற்குப் பெயர் அனிமோஃபோபியா. பயங்களிலேயே மிகவும் பதறடிக்கும் பயம் இது. இந்த பயம் உடையவர்கள் வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு வகையில் பயந்து கொண்டே தான் இருப்பார்கள் என்பது கவலையளிக்கும் செய்தி.

வெறுமனே பய உணர்வு மட்டுமல்லாமல் மூச்சுத் திணறல் வரும், சட்டென வியர்த்துக் கொட்டும், தலை சுற்றும், வாந்தி மயக்கம் வரும் , உடம்பெல்லாம் நடுங்கும், ஐயோ சாகப் போகிறேன் என வாய் புலம்பும் இப்படி எக்கச்சக்க பக்க விளைவுகள் இந்த பயத்தில் உண்டு. அவசரத்துக்கு ஒரு ஃபேன் கூட போட விடாத கொடுமையான பயம் இது.

செடாடிஃபோபியா

இது இன்னொரு கொடுமையான பயம். வீட்ல பேன் ஓடலேன்னா தூக்கமே வராது, அந்த சத்தம் இருந்தா தான் நிம்மதியா தூக்கம் வரும் என சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கு இந்த ஃபோபியாவின் ஒரு சின்ன அம்சம் இருக்கலாம். இந்த பயம் ‘அமைதி’ யைக் கண்டு பயப்படுவது.

இந்த சிக்கல் உள்ளவர்களுக்கு அமைதியான இடம் அலர்ஜி. லைப்ரரி பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள். பேசிக்கொண்டிருப்பவர்கள் சட்டென நிறுத்தி ஒரு அமைதி உருவானால் இவர்கள் பதட்டப்பட ஆரம்பித்து விடுவார்கள். ஏதாச்சும் பேசுங்கப்பா என பதறுவார்கள்.

சின்ன வயதில் நிகழ்ந்த ஏதோ ஒரு பாதிப்பின் விளைவாகவோ, மன அழுத்தம் போன்றவற்றின் வெளிப்பாடாகவோ இந்த பயம் வர வாய்ப்பு இருக்கிறது. இடம் சட்டென அமைதியாகிவிட்டால் நாக்கெல்லாம் வறண்டு போய், கைகால்கள் நடுங்க, இதயத் துடிப்பு எகிற இவர்கள் இயல்பு நிலையிலிருந்து மாறிவிடுவார்கள்.

3.

ஃபேகோஃபோபியா

“வாப்பா சாப்பிடலாம்” என்று கூப்பிடும்போது அலறி அடித்துக் கொண்டு ஓடுபவர்களுக்கு இந்த நோய் இருக்கலாம். சாப்பிடப் பயப்படும் நோய். டைனிங் டேபிளின் முன்னால் உட்காந்து உணவைப் பார்த்தாலே இவர்களுக்கு கை கால்கள் உதற ஆரம்பிக்கும். சாப்பிட்டுத் தான் ஆகணுமா என பயந்து கொண்டே கேட்பார்கள்.

உணவை விழுங்குவதற்கு இவர்களுக்கு பயமாய் இருக்கும். தொண்டைல சிக்கிக்குமா ? நான் செத்து போயிடுவேனா ? என இவர்களுடைய மனம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த நோயின் ஆரம்ப அறிகுறி உள்ளவர்கள் திரவ ஆகாரங்களை மட்டும் சாப்பிடுவார்கள். நோய் முற்றிப் போனவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தலைசுற்றிப் போவார்கள்.

4.

Somniphobia and Clinophobia

ஐயோ தூங்கணுமா ? பயமா இருக்கே என ஓடுபவர்களுக்கு சோமினிஃபோபியோ இருக்கிறது என்று பொருள். இவர்கள் தூங்கச் சொன்னால் ஏதோ உயிர் போகும் அவஸ்தை போல வியர்த்து நடுங்குவார்கள். சோம்னஸ் எனும் லத்தீன் வார்த்தைக்கு தூக்கம் என்று பெயர். அப்படித் தான் இந்த பெயர் வந்தது.

தூங்கும் போது செத்துப் போயிடுவேனோ ? தூங்கும் போது எழும்பி நடப்பேனோ ? தூங்கும் போது பயமுறுத்தும் கனவுகள் வருமோ ? போன்ற கேள்விகள் தான் இவர்களுடைய‌ பயத்தின் அடிப்படைக் காரணம். படுக்கையைப் பார்த்தாலே பதறி ஓடுவார்கள். ஒழுங்காகத் தூங்காமல் இருந்தால் இல்லாத நோய்களெல்லாம் வந்து பிடிக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே இந்த நோய் உடையவர்களெல்லாம் நோயாளிகளால் மாறிவிடும் ஆபத்து உண்டு.

5.

ஆந்த்ரோஃபோபியா & லாலோஃபோபியா

இந்த இரண்டு பயங்களும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் எனலாம். ஆட்களைப் பார்த்தாலே பயம் வந்தால் அது ஆந்த்ரோந்போபியா. ஆட்களிடம் பேசுவதற்குப் பயந்து நடுங்கினால் அது லாலோஃபோபியா. இந்த நோய் இருப்பவர்கள் எப்போதும் தனிமையையே தேடுவார்கள். திடீரென யாராவது வந்து “இந்த அட்ரஸ் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்” என்று கேட்டால் பயத்தில் வாய் குழற, நாக்கு உலர மயங்கி விழுந்து விடுவார்கள்.

இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் முதலில் கூட்டமான இடங்களைத் தவிர்ப்பார்கள். ரெயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், தியேட்டர், மால்கள், கடைவீதிகள் போன்ற இடங்களுக்கு இவர்களால் போகவே முடியாது. இந்த பாதிப்பின் வீரியம் அதிகமாகும் போது, பக்கத்தில் ஒரு நபர் இருந்தாலே பதட்டம் வந்து விடும்.

6 பரஸ்கவேடிகட்ரியா ஃப்போபியா

கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொண்டு படியுங்கள். இந்த பயம் ஒரு குறிப்பிட்ட நாளை நினைத்து உள்ளுக்குள் நடுங்குவது. மேலை நாடுகளில் நிறைய பேர் பதின்மூன்று எனும் எண்ணைக் கேட்டால் அலறுவார்கள். அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாய் வந்து விட்டால் அவ்வளவு தான் அதிகபட்ச பயத்துடன் திரிவார்கள். அத்தகைய மனிதர்கள் தான் இந்த பயத்தின் கீழ் வருகிறார்கள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை எட்டு என்பது அலர்ஜி. எட்டு எண்ணுடைய வீட்டில் இருப்பவர்கள் எந்த நோய் வந்தாலும் அந்த எண்ணின் மீது பழி போடுவார்கள். எட்டாம் தியதி வந்தால் ஏதோ அசம்பாவிதம் நடக்கும் என பயப்படுவார்கள். இந்த ஃபோபியா அப்படி ஏதோ ஒரு நாளை நினைத்துப் பயப்படுபவர்களைக் குறிப்பது.

7 நைட்டோஃபோபியா

பெயரைக் கேட்டாலே புரிந்திருக்கும். ராத்திரி வந்தால் தைரியம் எல்லாம் உடைந்து போய் நத்தை ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொள்ளும் மனநிலை தான் இந்த பயத்தின் அடிப்படை. திடீரென இருட்டான ஒரு இடத்தில் அகப்பட்டு விட்டால் மூளை பதறிப் போகும். ஏதோ அசம்பாவிதம் என நினைத்து உடல் உறுப்புகளையெல்லாம் நடுங்க வைக்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கும் இந்த பயம், ஏராளமான பெரியவர்களுக்கும் உண்டு என்கிறது அட்ரியன் வில்லியம்ஸ் அவர்களுடைய மருத்துவ அறிக்கை. இருட்டில் பேய் இருக்கும், ஏதோ ஒரு ஆபத்து ஒளிந்திருக்கும் என்பது இவர்களுடைய அச்சம். எப்படா விடியும் எப்போ வெளியே ஓடலாம் என்றே இவர்கள் இரவுகளைக் கழிப்பார்கள். அணைந்து போகாத விளக்கை ஏற்றி வைத்து விட்டு தான் இவர்கள் படுக்கைக்கே போவார்கள்.

8. ஓய்கோ ஃபோபியா

வீட்டுக்குள்ள நுழைஞ்சா பயம், வீட்ல இருக்கிற பொருட்களைப் பார்த்தால் பயம், பாத்டப்பைப் பார்த்தா பயம், கட்டிலைப் பாத்தா பயம் இப்படி இருப்பவர்களுக்கு ஓய்கோ ஃபோபியா இருக்கிறது என்று பொருள். வீடும் வீடு சார்ந்தவைகளும் இவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். வீட்ல இருக்க வேண்டாம் பிளீஸ் என இவர்கள் கேட்பார்கள். ஓகியோஸ் எனும் கிரேக்க வார்த்தைக்கு வீட்டுப் பொருட்கள் என்று பொருள். அப்படித் தான் இந்த பெயர் வந்தது.

டொமேடோ ஃபோபியா என்பது இதன் ஒரு பிரிவு. இவர்களுக்கு வீட்டிலுள்ள பொருட்கள் அல்ல, வீட்டைப் பார்த்தாலே ஏதோ டைனோசரைப் பார்த்த ஆட்டுக்குட்டி போல வெலவெலப்பார்கள்.

 1. அம்புலோஃபோபியா

நடப்பதற்குப் பயப்படுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ? அவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் கீழே விழுந்து விடுமோமோ எனும் பயம் தான் அவர்களை ஆட்டிப்படைக்கும். எழும்பிய உடன் தலை சுற்றுவது போலவும் கால்களால் தனது உடலைத் தாங்க முடியாது என்பதைப் போலவும் சிந்தனை எழும்.

இந்த பயம் உடையவர்கள் வீட்டில் எப்போதுமே ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தங்களைச் சுற்றி வைத்திருப்பார்கள். இந்த பயம் உடையவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சைகள் உள்ளன.

10 பான்ஃபோபியா

ல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம், ஆனால் எனக்கு எல்லாம் பயமயம். கவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு. உதைக்கும் பயம், சிதைக்கும் பயம். கதவு பயம்  எனக்கு,  கொஞ்சம் திறந்த கதவும் பயம்,  முழுசா மூடின கதவும். பயம்,  பூட்டு போட்ட  கதவென்றாலும் பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, கூடு பயம் எனக்கு, .. ”

என தெனாலி படத்தில் கமலஹாசன் பேசிக்கொண்டே போவாரே அந்த பயத்துக்குப் பெயர் பான்ஃபோபியா. எதைப் பார்த்தாலும் பயமாய் இருக்கும். எது பயமுறுத்தும், எது பயமுறுத்தாது என பிரித்துப் பார்ப்பதே கடினமாக இருக்கும்.

“நான் ஸ்பெசிஃபிக் ஃபியர்” அதாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பயம் என இதை மருத்துவம் சொல்கிறது. எளிதில் விரட்ட முடியாத பயம்.

TOP 10 : ஆவணப்படங்கள்

Image result for man with a movie camera

நேர்மையாகச் சொல்லப்படும் ஆவணப் படங்களுக்கு எப்போதுமே வலிமை அதிகம். உலகெங்கும் ஆயிரக்கணக்கான டாக்குமென்டரிகள் பதிவு செய்யப்படாத விஷயங்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. அறியப்படாத, ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை உள்ளடக்கிய பத்து டாக்குமென்டரிகளை இங்கே பார்ப்போம்.

 1. Shoah

1985ம் ஆண்டு வெளியான பிரான்ஸ்..பிரிட்டிஷ் ஆவணப் படம் இது. கிளாட் லான்ஸ்மேன் இதை இயக்கியிருந்தார். பேரழிவிலிருந்து தப்பிய மக்களிடம் நடத்தப்பட்ட உரையாடல்களின் தொகுப்பு தான் இது. விவரிக்க முடியாத உணர்வுகளின் தொகுப்பு என்று சொல்லலாம்.

ரகசிய கேமராக்கள், மைக்ரோபோன்கள் போன்றவற்றையும் இந்த ஆவணப் படத்துக்காகப் பயன்படுத்தியிருந்தார் இயக்குனர். ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். சுமார் ஒருமாத காலம் மருத்துவமனையில் இருந்தவர் வெளியே வந்ததும் மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார்.

ஜெர்மனியரின் தாக்குதல் நடந்த போலந்து நாட்டுப் பகுதிகளில் தான் இவருடைய ஆவணப் படம் பெரும்பாலும் பயணிக்கிறது.  இரண்டாம் உலகப்போரின் போது கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்த மரணப் பகுதிகளில் இவருடைய ஆவணப் படம் இரத்தமும், சதையுமாய் உலவுகிறது.

ஒன்பது மணி நேரம் நீளும் இந்த ஆவணப் படம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. பிரிட்டிஷ் திரைப்படக் கல்லூரியின் முக்கிய ஆவணப் படங்களின் வரிசையில் இதுவும் இடம்பெற்றிருக்கிறது.

2 The Act Of Killing

இப்படி ஒரு சூழலில் எப்போதும் சிக்கி விடக் கூடாது என பதை பதைக்க வைக்கும் ஒரு ஆவணப் படம் இது. 1965 1966 களில் இந்தோனேஷியாவில் நடந்த கூட்டுப் படுகொலைகள் தான் இதன் களம். அரசுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட கொலையாளிகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அன்றைக்கு நடந்த அந்த நிகழ்வை அப்படியே மறுபடியும் தத்ரூபமாக படம்பிடித்து காட்டும் போது கொலையாளியே கொலைநடுங்கிப் போய்விடுகிறார். இப்போது தாத்தாவாக இருக்கும் அன்றைய தாதாவான அன்வர் காங்கோ ஆயிரம் பேரை தன் கையாலேயே கொன்றவர்.

படுகொலை செய்ததன் குற்ற உணர்வு ஏதும் அவருடைய முகத்தில் தெரியவில்லை. சற்றே நிதானமாய், நான் பாவியா ? என கேட்கிறார்.

ஜோஷ்வா ஓப்பனேமர் இயக்கத்தில் 2012ல் வெளியான இந்தப் படம் பல்வேறு விருதுகளை அள்ளியது. துயரத்தின் ஒரு பெரிய வரலாற்றுத் துளி இது எனலாம்.

 1. மணப்பெண் கடத்தல்

அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணுவது நம்ம ஊரில் சகஜம். அதே போல காதலித்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்வதைக் கூட ஆங்காங்கே கேட்கிறோம். அது சட்ட விரோதமாய் இருப்பதால் பெரும்பாலும் அத்தகைய கடத்தல் இங்கே நடப்பதில்லை.

ஆனால் கஜகஸ்தானில் நிலமை வேறு. ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால் பையனும், அவனுடைய நண்பர்களுமாக போய் அலேக்காக அந்தப் பெண்ணைத் தூக்கி வருகிறார்கள். பையன் வீட்டில் திருமண ஏற்பாடுகளெல்லாம் செய்யப்படுகிறது. பெண் பலவந்தமாய் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். அதன் பிறகு வேறு வழியில்லாமல் அவள் அவனோடு வாழ்கிறாள்.

இது சட்ட விரோதமாய் இருந்தாலும் அங்கே இதை யாரும் கண்டுகொள்வதில்லை. சகட்டு மேனிக்கு பெண் கடத்தல் நடக்கிறது. அதைத் தான் இந்த “பிரைட் கிட்னாப்பிங் இன் கஜகஸ்தான்” எனும் ஆவணப்படம் விவரிக்கிறது. தாமஸ் மார்டன் என்பவர் அந்த நாடுவழியாகப் பயணித்து இந்த அனுபவங்களை சுடச் சுடப் பதிவு செய்திருக்கிறார்.

4 லேக் ஆஃப் ஃபயர்

நெருப்பு நதி எனும் இந்த ஆவணப் படம் கருக்கலைப்பு எனும் சர்வதேச விவாதப் பொருளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. பல்வேறு மதங்கள் கருக்கலைப்பை தீவிரமாக எதிர்க்கின்றன. சில மதங்களும், பிரிவுகளும், பகுத்தறிவாளர்களும் இதை ஆதரிக்கின்றனர்.

2006 வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தவர் டோனி கேய். அமெரிக்காவை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் இதில் அபார்ஷன் எனும் கருத்து மிக ஆழமாக அலசப்பட்டிருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் கருச்சிதைவின் இரண்டு பக்கங்களையும் இயக்குனர் தொட்டிருக்கிறார்.

பதினாறு ஆண்டுகள் செலவிட்டு, தனது கைக் காசிலிருந்து ஆறு  மில்லியன் டாலர்கள் செலவிட்டு இயக்குனர் இந்தப் படத்தை இலட்சியப் படமாக உருவாக்கியிருந்தார். பல்வேறு சர்வதேச விருதுகள், நல்ல விமர்சனங்கள், டாப் ஆவணப் படங்களின் பட்டியலில் இடம் என இது சாதனைகள் பல செய்திருக்கிறது.

5 இடி அமீன், எ செல்ஃப் போர்ட்ராய்ட்

மூன்று இலட்சம் மக்களுடைய சாவுக்குக் காரணமாய் இருந்த ஒரு கொடுங்கோல் தலைவர் எனும் பெயர்  உகாண்டா அதிபராக இருந்த அமீனுக்கு உண்டு. வரலாற்றின் பயங்கரங்களைப் பதிவு செய்த இந்த ஆவணப் படம் இடி அமீனின் இன்னொரு பக்கத்தையும் பதிவு செய்திருக்கிறது. இதை இயக்கியவர் பிரஞ்ச் இயக்குனரான பார்பட் ஸ்க்ரோடர். சிலவற்றை இயக்குனர் ரகசியமாகப் பதிவு செய்திருந்தார்.

இயக்குனர் லண்டனுக்குத் திரும்பி, படத்தைத் திரையிடப்பட்ட போது தான் தன்னை கொஞ்சம் கேவலமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கும் விஷயம் அமீனுக்கு தெரிந்தது. சில காட்சிகளை நீக்க வேண்டுமென இயக்குனருக்குக் கட்டளையிட்டார். அதற்கு இயக்குனர் மறுத்த போது ஒரு பிரஞ்ச் பிரஜையை கடத்திக் கொண்டு போய் மிரட்டி அந்தக் காட்சிகளை நீக்க வைத்தார் அவர்.

இடி அமீன் குறித்த பதிவுகளில் தவிர்க்க முடியாத ஆவணப் படம் இது.

 1. பிஹைன்ட் பார்ஸ்

சான் குயென்டன் என்பது அமெரிக்காவிலுள்ள ஒரு சிறைச்சாலை. மிகக் கடுமையான குற்றவாளிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலை இது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை சகட்டு மேனிக்கு செய்து குவித்தவர்கள் தான் இங்கே இருப்பார்கள்.

இந்த சிறைச்சாலைக்குள் புகுந்து இயக்குனர் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிவதும், அவர்களைக் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களைக் கண்டறிவதும் தான் இந்த ஆவணப் படத்தின் நோக்கம்.

லூயிஸ் தியோரக்ஸ் பல்வேறு ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இந்த ஆவணப் படம் சிறப்பிடம் பெறுகிறது. பி.பி.சி தயாரிப்பான இந்த ஆவணப்படம் அதிகம் பார்வையிடப்பட்ட ஆவணப் படங்களின் பட்டியலில் இருக்கிறது.

 1. ஓகிகஹாரா / தற்கொலைக் காடு

ஜப்பானின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஃப்யூஜி மலைப்பகுதியில் இந்த பரந்து விரிந்த காடு இருக்கிறது. 35 சதுர கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்திருக்கும் இந்த காட்டில் அப்படி ஒரு மயான அமைதி நிலவுகிறது. காட்டின் மையப்பகுதி மிகவும் அடர்த்தியானது.

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் இங்கே வந்து செத்துப் போவது வெகு சகஜம். அதனால் தான் இந்தப் பெயர் இந்த காட்டுக்கு வந்திருக்கிறது. மரங்களில் தொங்கியும், விஷம் குடித்தும், இன்னும் வேறு விதமாகவும் பலர் காட்டின் மடியில் சமாதியாகின்றனர்.

அதிக வயதான முதியவர்களைக் கொண்டு வந்து காட்டில் போட்டு விட்டுப் போகும் கொடுமையும் நடக்கிறது. 2003ம் ஆண்டு 103 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் காட்டைக் குறித்த விஷயங்களை பதைபதைப்புடன் சொல்லும் ஒரு ஆவணப் படம் இது. மென்மையான இதயம் உடையவர்களுக்கானதல்ல.

8 கானாவின் இணைய குற்றங்கள்

உங்களுக்கு லாட்டரி விழுந்திருக்கிறது உடனே இருபத்தையாயிரம் கட்டுங்கள், இருபது கோடி வந்து சேரும் என மெயில் வந்திருக்கிறதா ? “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சேட் பண்ணலாமா?” என தூண்டுதல் வந்திருக்கிறதா ? ஒரு நல்ல கம்பெனி இன்வெஸ்ட் பண்ணுங்க நூறு மடங்கு லாபம் உத்தரவாதம் என தூண்டில் நீண்டிருக்கிறதா ? பெரும்பாலும் தென்னாப்பிரிக்க நாடான கானா விலிருந்து வந்திருக்கலாம்.

இணையக் குற்றங்களை அவர்கள் ஷகாவா என பெயரிட்டு அழைக்கிறார்கள். ஆப்பிரிக்காவின் இன்டர்நெட் தலைநகர் என அழைக்கப்படும் கானா தான் இதன் முதுகெலும்பு. குற்றங்கள் செய்யும் முன் போய் மத குருக்களிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொள்கின்றனர்.

தாமஸ் மார்டன் இந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள மக்களைச் சந்தித்து இந்த ஆவணப் படத்தை உருவாக்கியிருக்கிறார். குற்றம் செய்பவர்கள் நேரடியாக இந்த படத்தில் தங்கள் வேலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு சின்ன மின்னஞ்சலின் பின்னணியில் இருக்கும் விஷயங்களெல்லாம் இதில் அலசப்படுகின்றன.

என்னதான் நாம் இவர்களை குற்றவாளிகள் என முத்திரை குத்தினாலும், வறுமையில், வாழ முடியா சூழலும் தான் இவர்களை இந்த நிலமைக்குத் தள்ளி விட்டிருக்கின்றன என்கிறார் இயக்குனர்.

9 பாரன்ஹீட் 9/11

ஆறு மில்லியன் டாலர் செலவில் எடுத்த ஒரு டாக்குமென்டரி படம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் ? யாரும் எதிர்பாராத அளவுக்கு அதாவது, 222 மில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும் என காட்டியது இந்த ஆவணப் படம். விஷயம் அப்படி ! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் தான் விஷயம்.

மைக்கேல் மூர் இயக்கத்தில் உருவான இந்த ஆவணப் படத்தில் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கைகள் கடுமையாய் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. 2004ம் ஆண்டு கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டபோது 20 நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது எப்போதும் நிகழ்ந்திராத ஒரு சாதனை.

ஏராளமான விருதுகளையும், பல்வேறு விமர்சனங்களையும் வாங்கிய இது ஆவணப் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

 1. Man with a Movie Camera

1929ம் வெளியான படம் என்பது தான் இந்த ஆவணப் படத்தின் ஹைலைட். இன்றைய திரை உருவாக்கத்தின் பல்வேறு டெக்னிக்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது இந்த ஆவணப் படம். இதில் கதை இல்லை, பேச்சு இல்லை, வெறும் இசை மட்டுமே உள்ள ஒரு கருப்பு வெள்ளை படம்.

ஸ்லோ மோஷன், ஃபாஸ்ட் மோஷன், ப்ரீஸ் என பிற்காலத்தில் நுழைந்த பல்வேறு விஷயங்கள் இந்த ஆவணப் படத்தில் இருப்பது வியப்பு. விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் என  இதைச் சொல்லலாம். உலகத்தில் உருவான ஆவணப் படங்களிலேயே டாப் 8 வது இடம் இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

இயக்குனர் டெஸிகா வெர்டோவ் சோவியத்தைச் சார்ந்தவர். பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளிய இந்தப் படத்தை பார்ப்பது இனிமையான அனுபவமே.

TOP 10 : வித்தியாசமான‌ புத்தகங்கள்.

Image result for Codex Seraphinianus

எத்தனையோ பிரபலமான புத்தகங்களைப் படித்திருப்போம். அல்லது புத்தகங்களைப் பற்றிப் படித்திருப்போம். ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் நூல்களெல்லாம் வித்தியாசமானவை. அது எப்படி என்பதை நீங்கள் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

 1. த ஹேன்ட் தட் சைன்ட் த பேப்பர்

“அந்தக் காகிதத்தில் கையொப்பமிட்ட கை” என்று தமிழில் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நாவல். உக்ரேனில் பிறந்த, அந்த நாட்டு நாகரீகத்தைக் கொண்ட ஹெலன் டெமிடெங்கோ எனும் பெண் எழுத்தாளர் எழுதிய நாவல். நாசி களால் இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பங்கு கொண்டவர் இந்த எழுத்தாளர்.

தனது தப்பிப் பிழைத்த அனுபவங்களையும், ஒரு படிப்பறிவற்ற டாக்சி டிரைவரான தந்தையின் நினைவுகளையும், பிழியப் பிழிய எழுதியிருந்த நாவல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விற்பனையில் பின்னிப் பெடலெடுத்தது.

பல்வேறு விருதுகளையும் அள்ளிக் கொண்டது. அதன் பின்னர் தான் இந்த நாவலாசிரியர் உக்ரேன் பாரம்பரியத்தைக் கொண்டவர் அல்ல என்பதும் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்தவர் என்பதும் அவரது உண்மையான பெயர் ஹெலர் டார்வில்லி என்பதும் தெரிய வந்தது. பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை அள்ளிய இந்த நூல் விருது வழங்கிய ஜாம்பவான்களை அவஸ்தைக்குள்ளாக்கி, மிகப்பெரிய விவாதத்தையும் உருவாக்கியது !

 1. மேலியஸ் மெலிஃபிகாரம்

1486ம் ஆண்டு வெளியான நூல் இது. ஹேமர் ஆஃப் விட்ச்கிராஃப்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது மாந்திரீகம் தொடர்பானது. இந்த புக்கைப் படித்தால் ஆவிகளைப் பிடிக்க முடியும், அவைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனும் பேச்சு எங்கும் பரவியது. இதனால் மக்கள் இந்த புத்தகத்தை விழுந்தடித்து வாசித்தனர்.

அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு இந்த நூல் பதிப்புக்கு மேல் பதிப்பு கண்டு எங்கும் நிரம்பியது. சாத்தானை வெளியேற்றவும், மந்திர தந்திரங்கள் செய்யவும் இந்த நூலை மக்கள் வாசிக்க ஆரம்பித்தனர். ஒரே புத்தகம் நாடுகளையே புரட்டிப் போட்டு எல்லோரையும் நிலைகுலைய வைத்ததென்றால் அது இந்த புத்தகம் தான்.

மந்திரவாதத்திலும் அது சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமுடையவர்கள் இதை ஒரு வெற்றிகரமான நூலாகப் பார்த்தார்கள். மாந்திரீகம், சாத்தான், கடவுள் எனும் மூன்று விஷயங்களையும் வைத்து இந்த நூல் நகர்கிறது. ஜெர்மனியில் வெளியாகி அந்த நாட்டையே சில நூற்றாண்டுகள் ஆக்கிரமித்திருந்த இந்த நூல் உண்மையிலேயே ஸ்பெஷல் தான்.

 1. வேம்பயர் அகாடமி

ஒரு நூல் வெளியானபின் அது சமூகத்தின் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்தால் அதைத் தடை செய்வது இயல்பு. ஆனால் ஒரு நூல் வெளியாகும் முன்பே அதைத் தடை செய்வது அபூர்வம். ஒரு நூல் அல்ல, அந்த நூலின் எந்தப் பாகமும் வரக் கூடாது என ஒட்டு மொத்தமாய்  தடைசெய்தது இந்த நூலுக்குத் தான்.

டுவைலைட் படம் பார்த்தீர்களெனில் இதன் கதை புரியும். ஒரு இளம் பெண் வேம்பயர்களை வீழ்த்துவது எப்படி என ஒருவரிடம் பயிற்சி எடுப்பார். அவர்கள் இருவரும் காதலில் விழுவார்கள். அந்த பயிற்சியாளரே இரத்தக் காட்டேறியாக இருப்பார். இப்படித் தான் போகும் கதை !

முதல் புத்தகம் வந்து சக்கை போடு போட்டது. எண்பது இலட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. 2009ம் ஆண்டு இதன் மூன்று பாகங்கள் வருவதாக இருந்தது. அதை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில அரசு தடை செய்தது. அதாவது நூல் எழுதத் துவங்கும் முன்பே அது தடை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டும் இதன் ஆறு பாகங்கள் வரவேண்டியது, ஆனால் தடை செய்யப்பட்டது. இப்படியே நூல் எழுதத் துவங்கும் முன்பே தடைசெய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது இந்த நூல்.

 1. பேபி அன்ட் சைல்ட் கேர்

குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு நூல் சுமார் 50,000 குழந்தைகளைப் பலிவாங்கியிருக்கிறது என நினைத்தாலே குலை நடுக்குகிறது இல்லையா ? அப்படி ஒரு தவறான அறிவுரையைக் கொடுத்து இந்த நூல் வரலாற்றில் ஒரு கறையாய் இடம்பிடித்திருக்கிறது.

1946ம் ஆண்டு வெளியான இந்த நூலில் ஒரு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை மல்லாக்க படுக்க வைத்தால் அவர்களுடைய வாந்தியோ, உமிழ்நீரோ தொண்டையில் சிக்கி குழந்தையைக் கொன்று விடும். எனவே குழந்தையை குப்புறப் படுக்க வையுங்கள். என்பது தான் அந்த அட்வைஸ்.

இந்த அட்வைஸை நம்பி பல பெற்றோர் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டனர் என்பது தான் துயரம். அப்படிப் படுக்க வைத்தால் முழந்தைக்கு முச்சுத் திணறல் வரும் என்பது தான் யதார்த்தம். அது தொன்னூறுகளில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதே போல‌ வேறு சில மிகத் தவறான அறிவுரைகளும் இந்த நூலில் இருக்கின்றன.

 1. யூரின் சிகிச்சை

தலைப்பை மறுபடியும் படிக்க வேண்டாம். சிறுநீர் சிகிச்சை தான் நூலின் தலைப்பு. உவ்வே என்பவர்கள் சட்டென அடுத்த தலைப்புக்கு தாவி விடுங்கள். இது பி.பி.பவர்ஸ் என்பவர் மிக சீரியசாக எழுதிய நூல்.

தனது வாழ்க்கையில் தனது சிறுநீரை மருந்தாகக் குடித்து வந்ததாய் ஆசிரியர் விளக்குகிறார். அது என்னென்ன நோய்களைக் குணமாக்கும் என்பதையும், நீண்டகால நோய்கள் வராமல் எப்படித் தடுக்கும் என்பதையும் அவர் விலாவரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறுநீர் மருத்துவம் புதிதல்ல. பழங்காலம் தொட்டே அது பழக்கத்தில் உள்ளது தான். காலில் கல் இடித்து விட்டால் அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் கிராமங்களில் இன்றும் உள்ளது. “சிறுநீர் மருத்துவம் ரொம்ப நல்லது” என மொரார்ஜி தேசாய் 1978ல் பேசியிருந்தார் !

 1. கேட்ஸ்பி

இது ஒரு நாவல். எழுதியவர் எர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர். இந்த நாவலில் 50,000 வார்த்தைகளுக்கு மேல் உண்டு. 1939ம் ஆண்டு வெளியான இந்த நாவல் சுவாரஸ்யமாய் எழுதப்பட்ட ஒரு நாவல். இதில் என்ன ஸ்பெஷல் என்று தானே நினைக்கிறீர்கள் ? இந்த நாவலில் “இ” எனும் ஆங்கில உயிரெழுத்து பயன்படுத்தப்படவேயில்லை.

ஆங்கில உயிரெழுத்துகள் இல்லாமல் வார்த்தைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி இருக்கும் போது ஒரு நாவலையே இவ்வளவு பெரிதாக, சுவாரஸ்யமாக ஒருவர் எழுதியிருக்கிறார் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதல்லவா ?

 1. ஹௌ டு ஷார்ப்பன் பென்சில்ஸ்

பென்சிலை சீவுவது எப்படி ? ஒரு எல்.கே.ஜி பையன் இதற்கு பதில் தருவான். அல்லது ஒரு ஷார்ப்னரை எடுத்து நம்மிடம் தருவான். ஆனால் எப்படி பென்சிலைச் சீவுவது என்பதை ஒருவர் மிக சீரியசாக யோசித்து ஒரு முழு நூலையே எழுதியிருக்கிறார்.

இதுக்கெல்லாமா புக் எழுதுவாங்க ? என வியக்க வைத்த நூல் இது எனலாம். ஒரு உடைந்த பென்சிலோடு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தால் அது ஏகப்பட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறது.

நகைச்சுவையாகவும், தகவல்களின் குவியலாகவும், சுவாரஸ்யமான நுட்பங்களாலும் நிரப்பியிருக்கும் இந்த நூல் ஒரு ஆச்சரியம்.

8 கில்லர்

ஒரு கொலைகாரனின் கதை தான் இந்த நூல். இதில் விசேஷம் என்னவென்றால் இதை எழுதியதே அந்தக் கொலைகாரன் தான் !

கார்ல் பேன்ஸ்ராம், 1891 ல் பிறந்தவர், அமெரிக்காவையே உலுக்கிய சீரியல் கில்லர். இவர் செய்த கொலைகள் இருபத்து ஒன்று. பாலியல் பலாத்காரங்கள் ஆயிரத்துக்கும் மேல். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், பல முறை தப்பி ஓடினார். தொடர்ந்து கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தார். 1930ல் மரண தண்டனை பெற்று இறந்தார்.

ஹென்றி லெஸர் எனும் ஜெயிலர் இவர் மீது பரிதாபம் கொன்டார். எனவே அவரிடம் தனது வாழ்க்கை வரலாறை கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி கொடுத்தார் கொலைகாரர். சிறைகள் மாறிய போதும், தொடர்ந்து கடிதங்கள் எழுதி தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையெல்லாம்  வெளிப்படுத்தினார்.

1928ம் ஆண்டு முதல் அவர் கடிதங்களை எழுதினாலும், கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு நூலாக கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, 40 ஆண்டுகள் !!

 1. எ டிரிட்டைஸ் ஆஃப் ஹியூமன் நேச்சர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரிய அறிவாளி. சிந்தனையில் உலகையே வியக்க வைத்தவர். அவரைப்பற்றி வந்த நூல்களை அடுக்கி வைக்கவே பல நூலகங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு மனிதரைப் புரட்டிப் போட்ட புத்தகம் ஒன்று உண்டு. அது தான் A Treatise Of Human Nature

ன் எனும் புத்தகம். மனித இயல்பு குறித்த உளவியல் ஆய்வு தான் இந்த நூல்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக உள்ள பெரிய நூல். படித்தால் தலைசுற்றக்கூடிய அளவில் சிக்கலான இந்த நூலை எழுதியவர் டேவிட் ஹியூம் என்பவர். 1738ல் வெளியான இந்த நூலை ஐன்ஸ்டீன் முழுமையாக வாசித்து சிலாகித்திருக்கிறார். இந்த நூலைப்பற்றி பலமுறை வியந்து பேசியிருக்கிறார்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உலகப் பிரசித்தம். அந்த சிந்தனையை முழுமைப்படுத்த அவருக்கு உதவியதே இந்த நூல் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

 1.  கோடக்ஸ் செராபினியனஸ்

கோடக்ஸ் செராபினியனஸ் எனும் இந்த நூல் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டது. யாருக்குமே புரியாத ஒரு மொழி, யாராலும் புரிந்து கொள்ள முடியாத படங்கள் என இந்த நூலே ஒரு புதிர்களின் புதையல் தான்.

லூகி செராபினி என்பவர் இரண்டு ஆண்டுகள் எழுதிய இந்த நூல் 360 பக்கங்கள் கொண்டது. மனிதர்கள் விலங்குகளாக உருமாறும் விசித்திர கற்பனை நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.

இது ஒரு கற்பனை உலகம் குறித்த ஆசிரியரின் பார்வை என்பவர்களும் உண்டு, இது ஏலியன் குறித்தது என்பாரும் உண்டு. எது எப்படியோ, யாரும் இது என்னவென்பதை சரியாகச் சொல்லவில்லை என்பது தான் உண்மை. எழுதிய ஆசிரியர் உட்பட.

நிஜமான பொய்கள்

Image result for King Nero

அட நெஜமாவா சொல்றீங்க ! நம்பவே முடியல என வியக்க வைக்கின்றன சில விஷயங்கள். நாம் நிஜமென நம்பிய விஷயங்கள் பொய் என்பது தெரிந்தால் நமக்குள் எழும் வியப்பு சுவாரஸ்யமானது. அப்படி ஒரு பத்து விஷயங்கள் இந்த வாரம்.

 1. விண்வெளியில் மனிதர்கள் துள்ளுவார்கள்.

ஆமா, விண்வெளியில் மக்கள் துள்ளித் துள்ளிப் போவார்கள் என்று தானே  நினைக்கிறீர்கள் ? ஹாலிவுட் திரைப்படங்கள் உருவாக்கிய மாயை அது. அவர்களுடைய திரைப்படங்களில் விண்வெளியில் குதித்த உடன் வீரர்கள் துள்ளித் துள்ளிப் போவதுண்டு. இதனால் வெற்றிடங்களில் மனிதர்கள் துள்ளுவார்கள் எனும் ஒரு தவறான அபிப்பிராயம் பரவிவிட்டது. அது நிஜமல்ல.

அது போல, விண்வெளியில் ஒரு மனிதன் பதினைந்து முதல் முப்பது வினாடிகள் வரை எந்த உபகரணமும் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடியும். அதன்பின் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் வரும் “ஆஸ்பைசியேஷன்” நிலையினால் உயிருக்கு ஆபத்து நேரிடும்.

இனிமேல் காற்றில்லா இடத்தில் பந்து போல வீரர்கள் துள்ளினால் அது பொய் என்று புரிந்து கொள்ளுங்கள்.

 1. நிலவுக்கு ஒரு பக்கம் இருட்டு

எப்போ பாத்தாலும் பூமியில் இருந்து நிலவோட ஒரு பகுதி மட்டும் தான் தெரியுது. எனவே நிலவோட இன்னொரு பகுதி இருட்டு எனும் ஒரு தவறான சிந்தனை பரவலாக உண்டு. பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பது வெளிச்சத்தின் பக்கம். மற்ற பக்கம் இருட்டு. இது தான் அடிக்கடி கேட்கும் விஷயம். அது உண்மையல்ல.

பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் நிலா தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டும் நமக்குக் காட்டுகிறது. இதை டைடல் லாக்கிங் என்பார்கள்.

இனிமேல் நிலவின் முதுகுப் பக்கம் இருட்டு என யாராவது கதை விட்டால் நம்பாதீர்கள்.

 1. ஒரே இடத்தில் மின்னல் மீண்டும் தாக்காது

பலர் இந்த டயலாக்கை அடிக்கடி சொல்வார்கள். ஒருவாட்டி இடி விழுந்த இடத்தில் மறுபடி விழாது. இந்த பேச்சு எப்படி உருவானது என்பதே தெரியாது. ஆனால் இதை நம்பி மின்னல் காலத்தில் ஏற்கனவே மின்னல் தாக்கிய இடத்தில் ஒதுங்காதீர்கள். மறுபடியும் இடி விழும் சாத்தியம் அங்கே தான் அதிகம்.

உயரமான கட்டிடங்கள், மரங்கள் போன்றவையெல்லாம் மின்னலை வரவேற்கும் இடங்கள். ஒருமுறையோடு அவை நின்று போவதில்லை. போனமுறை அங்க போயிட்டேன், இந்த வாட்டி அங்கே போகவேண்டாம் என மின்னல்கள் பேசி முடிவு செய்வதில்லை.

உதாரணமாக அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் ஒரு ஆண்டுக்கு சராசரியாக இருபத்தைந்து முறை மின்னல் தாக்குகிறது. ஆனால் அதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் கட்டிடத்துக்கு ஆபத்து நேர்வதில்லை.

 1. சீனி சாப்பிட்டால் குழந்தைகள் சுறுசுறுப்பாகும்.

இந்த ஒரு மாயை எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா நாடுகளிலும் உண்டு. இது உண்மையா என ஆராய அமெரிக்க ஆய்வாளர்கள் கேரல் என்பவர் தலைமையில் நீண்ட நெடிய ஆய்வுகள் பல மேற்கொண்டார்கள். “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே” என அடித்துச் சொல்லிச் சென்றன ஆய்வு முடிவுகள்.

ஆனாலும் பெற்றோர்களால் அதை நம்ப முடியவில்லை. சுகர் சாப்டா ரொம்ப ஆக்டிவா இருக்கான் என நினைத்துக் கொள்கின்றனர். எல்லாம் மாயையே.

சோர்வா இருக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா சீனி போட்டு காபி குடிப்போம் என இனிமேல் நினைக்காதீர்கள்.

 1. புலன்கள் ஐந்து

கண்டு, கேட்டு, உணர்ந்து, முகர்ந்து, சுவைக்கும் ஐம்புலன்களே நமக்கு உண்டு என்பது தான் நாம் பொதுவாக படித்த சங்கதி. உண்மையில் நமக்கு இருப்பவை ஐம்புலன்கள் அல்ல என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.

சில ஆய்வுகள் புலன்கள் இருபத்து ஒன்று என்கின்றன. சமநிலை, வெப்பம், வலி போன்றவையெல்லாம் பெரும்பாலான ஆய்வுகளில் இடம்பெறும் புலன்கள். இவையெல்லாம் ஐம்புலன்களைப் போல தனித்துவமானவை என்பதை அந்த ஆய்வுகள் பக்கம் பக்கமாய் விளக்குகின்றன.

இவைதவிர கற்பனை, நினைவு, பகுத்தறிவு மற்றும் மதிப்பிடுதல் போன்றவற்றை இன்டர்னல் சென்ஸ்கள் அதாவது உட்புலன்கள் என்கின்றனர். அவற்றையும் புலன்களின் வகையில் தான் சேர்க்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை.

 1. வானவில்லுக்கு ஏழு நிறம்

வானவில்லின் நிறங்கள் எத்தனை என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட ஏழு என்று தன் மழலை வாயால் சொல்லும். அந்த ஏழு வர்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ள “Roy G. Biv” உசெட் என்றொரு பெயரை பள்ளிக் கூடங்களில் சொல்லித் தருவார்கள். சிவப்பு ஆரஞ்ச் மஞ்சள் பச்சை நீலம் இன்டிகோ, வயலட் எனும் ஏழு நிறங்களையும் அது குறிக்கும்.

உண்மையில் வானவில் என்பது ஒரு நிறப் பூச்சு. மனிதனுடைய கண்கள் தான் அடுக்கடுக்கான நிற வரிசையாய் அதைக் காட்டுகிறது.

ஏழுக்கு மேற்பட்ட நிறங்களை உடைய வானவில்கள் உண்டு. அவற்றை நியூமரி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரே வர்ணம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வானவில்லில் தெரிவதும் உண்டு.

எனவே இனிமேல் வானவில்லின் நிறங்கள் எத்தனை என யாரேனும் கேட்டால், “ஏழாகவும் இருக்கலாம்” என்றே சொல்லிக் கொள்ளுங்கள்.

 1. மின்விளக்கை கண்டுபிடித்தவர்

இந்த கேள்விக்கு விடை தாமஸ் ஆல்வா எடிசன் என்பதைத் தான் நமது பள்ளிக்கூடங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால் அது தவறு என்பது வியப்பான செய்தி. தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை வெற்றிகரமாய் கண்டுபிடித்து தனது பெயரை வரலாற்றில் பதித்து வைத்தது 1880ம் ஆண்டு. ஆனால் அதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன்பே மின்விளக்கை ஒருவர் கண்டுபிடித்து விட்டார். அவர் பெயர் வாரன் டி லே ரு.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர் பிளாட்டினம் சுருளை ஒரு வெற்றிடக் குழாயில் வைத்து மின்சாரத்தை அதில் பாயச் செய்தார். பளிச் என எரிந்தது மின் விளக்கு !பிளாட்டினம் அதிக வெப்பத்தைத் தாங்கும் என்பதால் இதைப் பயன்படுத்தினார். ஆனால் அதன் தாக்குப் பிடிக்க முடியாத விலை இந்த விளக்கை பிரபலமில்லாமல் செய்துவிட்டது.

தாமஸ் ஆல்வா எடிசன் பெயர் வாங்கிப் போய்விட்டார். இதே போல பல்வேறு கண்டுபிடிப்புகளை எடிசன்  உள்வாங்கியும், அடியொற்றியும் தான் தனது கண்டுபிடிப்புகளை செய்தார் என பல அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

8 ரோமும் நீரோ மன்னனும்

ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார். எனும் வாக்கியத்தைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அது உண்மையா எனும் கேள்வி வலுவாக எழுகிறது.

கிபி 64ம் ஆண்டு ஜூலை மாதம் 18, 19 தியதிகளில் தான் ரோமாபுரி பற்றி எரிந்த அந்த நிகழ்வு நடந்தது. அப்போது நீரோ மன்னன் ஒரு பாடல் பாடிக்கொண்டிருந்தார் என ஸ்வெட்டானிஸ் எனும் வரலாற்று ஆய்வாளர் கொளுத்திப் போட்ட திரி தான் இந்த செய்தி பற்றிப் படரக் காரணம்.

ஆனால் கொர்னேலியஸ் டாகிடஸ் எனும் வரலாற்று ஆய்வாளர் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர். கவர்னராகவும், கவுன்சிலராகவும், செனட்டராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் மிளிர்ந்தவர். “ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தார்” என்பது மாபெரும் புரளி என்கிறார் அவர்.

டாகிடஸின் குறிப்புகளின் படி நீரோ மன்னன் அந்த நிகழ்வின் போது அதிர்ந்து போய் நிவாரண விஷயங்களை மிகத் துரிதமாக மேற்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை அளித்தார், தங்குமிடங்களை உருவாக்கி மக்களுக்கு உதவினார். தனது சொந்தப் பணத்தையே கொடுத்து மக்களுக்கு உதவினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிடில் எனும் இசைக்கருவியின் வரவே பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் என்கிறது வரலாறு ! இனிமே நீரோ மன்னன் கதையை கொஞ்சம் கவனமா தான் பயன்படுத்தணும் போல !

9 வான்கோ தனது காதைத் தானே வெட்டினார்

வான்கோ தனது காதை தானே வெட்டினார். வெட்டிய காதை அப்படியே தனது காதலிக்கு பார்சல் பண்ணினார் என ஒரு கதை உண்டு. ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.

உண்மையில் நடந்த கதை வேறு. வான்கோவுக்கும் அவரது நண்பர் பால் காகுயின் என்பவருக்கும் இடையே ஒரு சண்டை. வான்கோ கோபத்தினால் ஒரு வைன் கோப்பையை நண்பன் மீது எறிந்தார். நண்பர் தன்னிடமிருந்த வாளை எடுத்து ஒரே சீவு. வான்கோவின் காது கீழே தெறித்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் வான்கோவின் கடிதங்களிலிருந்து கிடைத்ததாக வரலாற்று ஆய்வாளர் ஹான்ஸ் ஹாஃப்மேன் தெரிவிக்கிறார்.

10 ஏரோப்ளேன்ல போன் பேசினா ஆபத்து

ஏரோப்ளேனில் போகும்போது தவறாமல் கேட்கும் ஒரு அறிவிப்பு ” போனை சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க’ என்பது தான். விமானத்தில் பயணிக்கும் போது போனில் பேசினால் சிக்னல்கள் பின்னிப் பிணைந்து விமானம் விபத்துக்குள்ளாகும் எனும் அச்சம் பொதுவாகவே உண்டு.

ஆனால் அது உண்மையல்ல. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கடந்த கால்நூற்றாண்டு காலமாக விமானத்திலுள்ள அனைவரும் போனை பயன்படுத்தினால் வரும் ரேடியோ பிரீக்வன்சியை விட 100 மடங்கு அதிக வலிமையான அலைகளைக் கொண்டு சோதித்து வருகின்றனர். ஒரு சின்ன சிக்கல் கூட இன்று வரை உருவாகவில்லை. உருவாகப் போவதும் இல்லை.

விமானத்தில் வருகின்ற அறிவிப்புகளைக் கேட்கவும், விமானப் பணியாளர்களின் பணி இடைஞ்சல் வராமல் இருக்கவும், பக்கத்து பயணிகளின் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இத்தகைய விதிமுறைகளை விமானங்கள் வைத்திருக்கின்றன என்பது தான் உண்மை.

TOP 10 : விடுபடா மர்மங்கள்

Image result for voynich

இந்த பூமி மர்மங்களின் தேசம். அந்த மர்மங்கள் தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. எத்தனையோ பேர் விடுவிக்க முயன்றும் முடியாமல் போக்குக் காட்டும் மர்மங்கள் வியக்க வைக்கின்றன. அப்படி விரவிக் கிடக்கும் நூற்றுக் கணக்கான மர்மங்களில் பத்து மர்மங்கள் வை.

 • வாய்னிச் எழுத்துகள்

பதினைந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஒரு நூல் இது. படங்களும், எழுத்துகளும், குறியீடுகளும் நிரம்பியிருக்கும் 240 பக்க நூல். இந்த நூல் சொல்ல வரும் விஷயம் என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இடமிருந்து வலமாக, மிகத் தெளிவாக படங்களோடு எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். ஆனால் அப்படி ஒரு மொழி எங்கும் இருந்ததேயில்லை.

இது ஏலியன் புத்தகமாக இருக்கலாம் என ஒரு சாரார் நினைக்கின்றனர். இல்லையில்லை, இது மிகப்பெரிய தத்துவ நூல். இதைப் புரிந்து கொள்ளும் போது உலகமே வியந்து பார்க்கும் தத்துவ சிந்தனைகள் கிடைக்கும் என சிலர் வாதிடுகின்றனர். அப்படியெல்லாம் இல்லை இது உலகின் பசுமைப் புரட்சிக்கான ஒரு மாபெரும் விதை. விவசாயம், மருத்துவம் போன்ற அனைத்து விஷயங்களையும் விளக்குகின்ற மாபெரும் புத்தகம் என மற்றொரு சாரார் கருதுகின்றனர்.

இதெல்லாம் யாரோ விளையாட்டுக்காக கிறுக்கி வைத்த நூல், தேவையில்லாம பணமும் நேரமும் செலவிடாதீங்க என வேறு சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  

இந்த நூல் ஏதேனும் வியப்புகளைக் கொண்டு வருமா, அல்லது புஸ்வாணமாய் போகுமா என்பது புதைந்து கிடக்கும் அதன் புரியாத வார்த்தைகளுக்குத் தான் தெரியும்.

 1. பெர்முடா முக்கோணம்

மர்மங்களைப் பற்றிப் பேசும்போது பெர்முடா முக்கோணத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சாத்தானின் முக்கோணம் என்றும் இதை அழைப்பார்கள்.

வட அட்லாண்டிக் கடற்பகுதியிலுள்ள மிகப்பெரிய இடம் அது. பதின்மூன்று இலட்சம் சதுர கிலோ மீட்டர் முதல் முதல் நாற்பது இலட்சம் வரையிலானது. இந்த எல்லைக்குள் வருகின்ற விமானங்கள், கப்பல்கள் பலவும் மாயமான முறையில் காணாமல் போய்விடுவது தான் நீடிக்கின்ற மர்மம்.

மோசமான வானிலையாய் இருக்கலாம் என்றும், ஏலியன்கள் கடத்திச் சென்றதாக இருக்கலாம் என்றும், அந்த இடம் டைம் மெஷின் போல செயல்பட்டு விமானங்களை ஏதோ ஒரு ஆண்டுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும், அந்த இடத்தில் ஏதேனும் இயற்பியல் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கின்றனர்.

மிரட்டும் பல்வேறு கதைகளின் தொகுப்பாக இருக்கிறது பெர்முடா முக்கோணம்.

 1. மர்மப் பெண்

1963ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியா ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்த போது புகைப்படங்களில் ஒரு பெண் தென்பட்டார். ரஷ்யப் பெண்கள் அணிவது போன்ற ஒரு ஆடையை அவர் அணிந்திருந்தார்.

கொலை நடந்தபோது மக்கள் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். இவரோ அசால்டாக நின்று கொண்டு தன்னிடமிருந்த கேமராவினால் காட்சிகளைப் பதிவு செய்து கொண்டே இருந்தார். நிறைய இடங்களில், நிறைய கோணங்களில் அவர் தென்பட்டார்.

அந்தப் பெண் யாரென கண்டுபிடிக்க ஆளானப் பட்ட அமெரிக்கா தலைகீழாக நின்றும் முடியவில்லை. அவர் யார், அந்தக் கொலையோடு அவருக்குத் தொடர்பு உண்டா ? என்பது இன்று வரை விடுபடாத மர்மமாகவே இருக்கிறது.

4 பிரிட்ஜ் வாட்டர் முக்கோணம்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் ஐநூற்று இருபது சதுர கிலோமீட்டர்கள் கொண்ட ஒரு மர்ம இடம் இருக்கிறது. இந்த இடத்தைப் பற்றி வருகின்ற கதைகள் சிலிர்க்கவும், பயப்படவும் வைக்கின்றன.

பெரும்பாலான கதைகள் ஏலியன் தொடர்பானவை. திடீரென தோன்றுகின்ற மிகப்பிரகாசமான ஒளிப்பந்து, அந்த இடத்திற்கு நேராக வானில் தெரியும் வெளிச்சம், அசையும் நெருப்பு உருவங்கள் என நேரடியாகப் பார்த்த சாட்சிகள் எக்கச்சக்கம்.

மிகப்பெரிய காலடித் தடங்கள் இந்தப் பகுதியில் தோன்றி அடிக்கடி  மிரள வைக்கின்றன. மனிதனும், மனிதக் குரங்கும் கலந்த ஆஜானுபாகுவான உருவத்தைக் கண்டவர்கள் உண்டு. மிரட்டலான டிராகன் போன்ற பறவையைப் பார்த்தவர்கள் உண்டு. இறகுகள் பன்னிரண்டு அடி வரை நீளமான வித்தியாசமான பறக்கும் ஜந்துக்களைக் கண்டவர்கள் உண்டு.

பதட்டத்தின் பதுங்கு குழியாகவே இன்றும் இருக்கிறது இந்த இடம்.

 1. ஜாம் மினார்

மேற்கு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்த மினார் ஒரு வரலாற்று மர்மத்தைச் சுமந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமார் அறுபத்தைந்து மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மினார் 1190ம் ஆண்டு கட்டப்பட்டது. சுட்ட செங்கற்கள், மண் போன்றவற்றால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் தாண்டியும், இன்னும் நிமிர்ந்து நிற்பது இதன் கட்டிடக்கலையை வியக்க வைக்கிறது. 2002ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் இஸ்ராமியர்களின் புனித நூலான குரானிலிருந்து வாசகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் குதுப்மினார் இதை விடப் பெரியது என்றாலும், ஜாம் மினாரின் வேலைப்பாடுகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. இது அழிந்து போன நாகரீகத்தின் அடையாளமா, அல்லது இறைவனைப் புகழ்வதற்காக இஸ்லாமிய மன்னர் அமைத்ததா எனும் கேள்விகள் இதைச் சுற்றி இருக்கின்றன.

மிகப்பெரிய மலைகளுக்கு நடுவே பூமியின் ஆச்சரியக் குறி போல நிமிர்ந்து நிற்கும் இந்த மினார் தனக்குள் வரலாற்று மர்மத்தை ஒளித்தே வைத்திருக்கிறது.

6 தி எமரால்ட் டேப்லெட்

தொட்டதெல்லாம் பொன்னாகும் கதை படித்திருப்பீர்கள். எந்த ஒரு உலோகத்தையும் பொன்னாக மாற்றும் ஆல்கமி எனப்படும் ரகசியம் தான் இந்த எமரால்ட் எழுத்துகளில் இருந்த ரகசியம். “தத்துவ ஞானியின் கல்” எனப்படும் ஒரு பொருளைக் குறித்த ரகசியம் இதில் உண்டு. அது தான் உலோகங்களை பொன்னாக மாற்றும் வித்தையின் முக்கிய அம்சம்.

ஆறாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைபட்ட காலத்தில் அரேபிய மொழியில் உருவான நூல் இது. இந்த எழுத்துகளைக் குறித்த செய்திகளும், இந்த நூலில் மொழிபெயர்ப்புகளும் மிஞ்சினாலும் இதன் ஒரிஜினல் இப்போது எங்கே இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்த காலத்தில் இதன் ரகசிய முடிச்சை அவிழ்க்க பலர் முயன்றனர். ஆனால் யாரும் வெற்றியடையவில்லை.

இந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பவர் உலகையே விலைபேசி விட முடியும் என்பதால் இந்த மர்மத்தின் மீதான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

7 உறைந்த மனிதர்கள்

இரண்டு பேர் ஒரே மாதிரி ஒரு செயலைச் செய்தாலே, “என்னப்பா ஒரே மாதிரி செய்றே” என்பார்கள். ஒரு கூட்டம் மக்கள் தங்களை அறியாமலேயே அப்படி செய்யும் மர்மம் அடிக்கடி நிகழ்கிறது.

2007ம் ஆண்டு நியூயார்க் நகரின் கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது. மிகச் சரியாக மணி 2:30 என்றபோது சுமார் இருநூறு பேர் நின்ற இடத்தில், செய்து கொண்டிருந்த வேலையில் அப்படியே உறைந்து நின்றார்கள். முழுதாக ஐந்து நிமிடங்கள் அவர்கள் சிலையைப் போல நின்றார்கள், மற்றவர்கள் தங்கள் பணியை வழக்கம் போல செய்து கொண்டிருந்தனர்.

அமெரிக்கா மட்டுமல்லாமல், பெல்ஜியம், பிரிஸ்டன் இங்கிலாந்து என பல இடங்களில் நடந்த இதே போன்ற மர்ம நிகழ்வை மருத்துவர்கள் “மாஸ் ஹிஸ்டீரியா” என்கின்றனர். ஆனாலும் இந்த மர்மத்தின் உண்மையான காரணம் என்ன என்பது முடிச்சவிழ்க்கப் படாமலேயே இருக்கிறது.

 1. பெர்மேஜா தீவு

மெக்சிகோ அருகில் இருந்த ஒரு தீவு பெர்மேஜோ. 1970 களில் உயிர்ப்புடன் இருந்த தீவு அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பின் சட்டென காணாமல் போய்விட்டது. அந்த தீவுடன் சேர்ந்து அந்த தீவு தொடர்பான தகவல்களும், அதிலே இருந்த எண்ணை வளங்கள் பற்றிய தகவல்களும் மாயமாகிவிட்டன.

1535 க்கும், 1775 க்கும் இடைப்பட்ட காலத்திலுள்ள வரைபடங்களில் இந்த தீவு இருக்கிறது, பின் காணாமல் போய் விட்டது. அதன் பின் 1800களின் பிற்பகுதியில் மீண்டும் காணப்பட்டது, இப்போது மீண்டும் மாயமாகியிருக்கிறது ! அந்த தீவு எங்கே போச்சு என்பதைக் கண்டு பிடிக்க மெக்சிகன் அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்திய தேடுதல் வேட்டைகளில் எந்த பயனும் கிடைக்கவில்லை.

இதிலுள்ள எண்ணை வளங்களுக்காக இந்த தீவு திட்டமிட்டே மறைக்கப்பட்டதா ? அல்லது இது மிதந்து மிதந்து மூழ்கும் ஏதேனும் விசித்திரத் தீவா ? அல்லது அப்படி ஒரு தீவு இருந்ததே ஒரு தோற்ற மயக்கமா எனும் மர்மக் கேள்விகளுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.

9 ஸ்டார்ரி நைட்

ஓவியத்தில் கரைகடந்த வான்கோவின் மிகப்பிரபலமான ஓவியம் ஸ்டார்ரி நைட். 1889ம் ஆண்டு இதை அவர் வரைந்தார். அப்போது அவருக்கு காது கேட்காது. எனவே அவர் ஒரு ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தார். அங்கே அவர் தங்கியிருந்த 54 வாரங்களில் 240 ஓவியங்களை வரைந்து தள்ளினார் அவற்றில் ஒன்று தான் இந்த ஸ்டார்ரி நைட்.

அவருடைய ஓவியத்தில் இருப்பது என்னவென்பதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அது அவருடைய கற்பனையில் வெளிப்பாடு என்று தான் நினைத்தார்கள். 2006ம் ஆண்டு மெக்சிகோ பல்கலைக்கழகம் அந்த பெயின்டிங்கை ஆய்வு செய்தபோது தான் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்கள் தெரிய வந்தன.  

அந்த பெயின்டிங் “கொந்தளிப்பை” ப் பற்றியது. 1940 வரை அறியப்படாமல் இருந்த கொந்தளிப்பின் நுணுக்கங்களை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மிகத் துல்லியமாக அந்த படத்தில் வரைந்திருந்தார். சின்ன கணிதப் பிழை கூட அதில் இல்லை.

வான்கோ எப்படி அந்த ஓவியத்தை வரைந்தார் ? எப்படி அவருக்கு அந்த கண்டுபிடிக்கப்படாத நுணுக்கங்கள் தெரிந்திருந்தன ? வான்கோவின் ஓவியங்களைப் போலவே அந்த மர்மமும் ஒளிந்தே இருக்கிறது.

10  ஸ்ரௌட் ஆஃப் டுரின்

இது ஒரு லினன் துணியில் பதிந்திருக்கும் ஒரு முகம். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு மனிதனின் முகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் இது இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த கல்லறைத் துணி என நம்புகின்றனர். இத்தாலியிலுள்ள திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இப்போது இந்த துணி இருக்கிறது.

ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நடந்தாலும் இதன் மர்மம் விலகவில்லை. எப்படி இந்த முகம் துணியில் பதிந்தது, ஏன் அழியாமல் இருக்கிறது எனும் கேள்விகள் முடியவில்லை. இதே போன்ற ஒன்றை உருவாக்க நினைத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்திருப்பது மர்மத்தை இன்னும் விரிவாக்குகிறது.

இன்றும் பல்வேறு மர்மங்களையும், வியப்புகளையும் ஒளித்து வைத்துக் கொண்டு புதிர்களின் வரைபடமாய் இருக்கிறது இந்த துணி.

TOP 10 : மதச் செய்திகள்

Image result for scientology

இந்தியா மதங்களின் தேசம். பல்வேறு மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையாய் கைகோத்து வாழ கற்றுக் கொடுக்கும் சமூகம் நமக்கு இருக்கிறது. ஆங்காங்கே விஷமிகள் தூவி விடும் விதைகள் கலவரங்களை உருவாக்கினாலும், அதை அடையாளம் கண்டு கொண்டு சட்டென அகற்றி விடும் மனித நேயம் மிக்க மக்கள் நம்மிடையே ஏராளம் உள்ளனர். அதனால் தான் நமது தேசம் உலக மக்கள் அனைவரும் வியக்க வைக்குமளவுக்கு இனிமையாய் இருக்கிறது.

நமக்குத் தெரியாத பல மதம் சார்ந்த விஷயங்கள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு பத்து செய்திகள் இங்கே.

 1. கடவுளின் கையெழுத்து.

மனித உடல் ஒரு ஆச்சரியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மனிதன் இறைவனின் படைப்பு என்பது தான் ஆத்திகர்களின் நம்பிக்கை. அதை நிரூபிக்கும் விதமாகத் தான் மனிதனுடைய உடல் இருக்கிறது. மனித உடலின் வியப்புகளை இன்னும் மனித விஞ்ஞானம் முழுமையாய் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் நிஜம். மனித மூளையைப் போன்ற ஒரு கணினியையோ, மனித கண்களைப் போன்ற ஒரு கேமராவையோ உருவாக்குதல் சாத்தியமில்லை என்கிறது விஞ்ஞானம்.

மனிதர்கள் 22,000 மரபணுக்களால் ஆனவர்கள். மனித மரபணுக்களில் வெறும் மூன்று சதவீதம் தான் இந்த எண்ணிக்கை. அப்படியானால் மிச்சம் 97% மரபணுக்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது. அதில் கடவுளின் கையெழுத்து இருக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் அது தனித்தனியாய் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, கஸகஸ்தானிலுள்ள இரண்டு விஞ்ஞானிகள் 2013ம் ஆண்டு இதைச் சொன்னார்கள். மரபணு ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ் கோலின்ஸ்கடவுளின் மொழிஎனும் நூலில் இந்த மரபணுக்களில் இருப்பவை கடவுளின் எழுத்துகள் என்கிறார்.

 1. எபியோனைட்ஸ்

ஒரு குழுவினர் இயேசுவே கடவுள் என வழிபட்டார்கள், ஆனால் கிறிஸ்தவர்கள் அல்ல. குழப்பமாக இருக்கிறதா ? முதல் சில நூற்றாண்டுகளில் எபியோனைட்ஸ் என்றொரு மதக் குழு இருந்தது. இவர்களுடைய நம்பிக்கை இயேசு யூதமதத்தின் சட்டங்களைக் கடைபிடித்ததால் கடவுளானார் என்பது தான். கி.பி 70களில் இந்த மதம் ஆரம்பமானது என நம்பப்படுகிறது.

இவர்கள் யூதர்களின் கடவுள் இயேசு என்றும், அவர் இறந்து உயிர்த்தார் என்றும் பறைசாற்றினார்கள். ஆனால் கன்னியிடமிருந்து பிறந்தார், உலக மீட்பர் போன்ற கிறிஸ்தவ தத்துவ சிந்தனைகளை எதிர்த்தனர். காலப்போக்கில் கிறிஸ்தவ சிந்தனைகள் வலுப்பெற்று, நம்பிக்கைகள் பரவலான போது இந்த மதம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து காணமலேயே போய்விட்டது.

 1.  மணிசேயிஸம்

நான் தான் கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட தூதன் என்று சொல்லிக் கொண்ட ஒரு நபர் உருவாக்கிய ஒரு மதம் சட்டென கிளை விட்டுப் பரந்தது. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஆரம்பமானது. மணி எழுதிய நற்செய்தி தான் இந்த மதத்தின் புனித நூல்.

அறிவைத் தேடு, அதுவே ஆண்டவன் வீடுஎன்பது தான் இந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தம். நல்ல அறிவைத் தேடி மூளையைச் செழுமையாக்குபவனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது தான் இந்த மதத்தின் கோட்பாடு. சீனா, ரோம் என பல இடங்களில் பரவிய இந்த மதம் காலப்போக்கில் கொள்வாரில்லாமல் தேய்ந்து அழிந்தது. கிபி ஆயிரம் வரை இதன் பதிவுகள் காணப்படுகின்றன.

 1. சாத்தான் வணக்கம்

இதென்னடா புதிய கதை ? எல்லோரும் கடவுளைத் தானே வணங்குவார்கள். கடவுளுக்கு எதிராக இருக்கும் சாத்தானை வணங்குவார்களா ? என வியக்க வேண்டாம். உலகெங்கும் வேர்விட்டு முளைவிட்டுக் கிளைவிட்டு வளர்ந்து வருகின்ற ஒரு மதம் சாத்தான் வழிபாடு.

1948களிலேயே இதன் விதை தூவப்பட்டது, 1966ல் அதிகாரபூர்வமாகசாத்தான் ஆலயம்கட்டப்பட்டு வழிபாடும் துவங்கப்பட்டது. நல்ல மதங்கள் மண்ணில் நல்லவர்களாக வாழ்ந்து, சொர்க்கத்தை அடையச் சொல்கின்றன. சாத்தான் வணக்கமோ, சாத்தானை வணங்கு உலக செல்வங்கள் கிடைக்கும் என அழைப்பு விடுக்கின்றன.

குடும்பங்கள் சிதையவேண்டும், அடுத்தவன் கெட்டுப் போகவேண்டும், உலகம் உருப்படாமல் போகவேண்டும் போன்றவையெல்லாம் இவர்களுடைய பிரார்த்தனைகளில் சில.

 1. ஷங் சி லீ அசோஷியேஷன்

நான் கடவுள்என காலர் தூக்கித் திரியும் மதவாதிகள் அடிக்கடி முளைப்பதுண்டு. தங்களுடைய கூற்றை மெய்ப்பிக்க அவர்கள் ஏதேனும் வித்தைகள் செய்து மக்களை வசீகரிப்பதும் உண்டு. அந்த விதத்தில் ஷங் சி லி வித்தியாசமானவர்.

தன்னிடம் ஏராளம் சக்தி இருப்பதாக இவர் சொல்லிக் கொள்வார். தனது புகைப்படங்களை எடுத்து போட்டோ ஷாப் வேலைகள் செய்து தன்னைச் சுற்றி வானவில்லும், ஒளி வட்டமும் தெரிவதாக மாற்றி விடுவார். இதன் மூலம் ஏராளமான மக்களை ஏமாற்றினார் என்கிறது தைவான் அரசு.

வெறும் போட்டோக்களை வைத்து ஒரு மதத்தை உருவாக்கி அதன் மூலம் பல மில்லியன் டாலர்களை ஒருவர் சம்பாதித்தது வியப்பு தான் !

 1. மார்மன்கள்

வெளிப்பார்வைக்கு மார்மன்கள் கிறிஸ்தவ மதத்தின் கிளை மதம் போலத் தோன்றும். ஆனால் இரண்டும் சம்பந்தமில்லாத இரண்டு மதங்கள். ஜாண் ஸ்மித் என்பவரால் 1820 ல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மதம். ஜாண் ஸ்மித் இயேசுவையும், கடவுளையும் கண்டதாகவும் அதன் அடிப்படையில் புதிதாய் ஒரு மதத்தை ஆரம்பித்ததாகவும் பிரகடனம் செய்யத் தொடங்கினார்.

தங்கச் சுருள்களில் எழுதப்பட்டிருந்த கடவுளின் வார்த்தைகள் தான் மார்மன்களின் புனித நூல் என அவர் அறிவித்தார். இயேசுவை கண்டதாக ஒரு பதிவும், இயேசுவையும் தூதர்களையும் கண்டதாக ஒரு பதிவும், கடவுளை நெருப்பு தூணாக கண்டதாய் ஒரு பதிவும், கடவுளையும் இயேசுவையும் கண்டதாக ஒரு பதிவும் இவரது கதைகளில் உண்டு. கடைசிக் காட்சியே அவரது தற்போதைய வெர்ஷன் நூலில் உள்ளது.

கடவுள் கட்டளையிட்டார் என்று சொல்லி அவர் செய்த செயல்களில் 14 வயது சிறுமியர் உட்பட 40 பேரை திருமணம் செய்து கொண்டதும் அடக்கம்.

 1. ஏலியன் மதம்

டோரதி மார்ட்டின் எனும் ஒரு பெண் ஒரு மதத்தை ஆரம்பித்தார். அவருக்கு ஏலியன் கிரகத்தோடு தொடர்பு இருந்தது. ஏலியன் கிரகமான கிளாரியோன் எனும் கோளில் இருந்து அவருக்கு அடிக்கடி அமானுஷ்யவிதமாக செய்திகள் வந்து கொண்டிருந்ததாக அவருடையஆதரவாளர்கள் நம்பினர்.

டிசம்பர் 21ம் தியதி 1954ல் உலகம் அழியும் என இவர்கள் பிரச்சாரம் செய்தனர். மக்கள் பலர் இவர்களை நம்ப இவர்களுக்கு வருமானமும் அதிகரித்தது, இவர்களுடைய மதம் பரவவும் தொடங்கியது. ஆனால் என்ன, அவர்கள் சொன்ன நாளில் உலகம் அழியவில்லை.

பிறகு வேறு செய்திகள் வந்ததாகவும், இந்த மதம் தான் உலகைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கொள்கை மாற்றினார்கள். 1992ல் டோரதி இறந்ததும் ஏலியன் செய்திகள் வருவதும் நின்று போனது, மதமும் அழிந்து போனது.

 1. மாமி வாட்டா

மாமி வாட்டா வை, கடல் கன்னியின் வடிவம் என்று சொல்லலாம். பாதி பெண், பாதி மீன் தான் இந்தக் கடவுள். நீந்திக் கொண்டிருக்கும் போதோ, கடலில் குளிக்கும் போதோ தண்ணீருக்குள் மூழ்கிப் போவது போல உணர்ந்தால் அது இந்த கடல் தெய்வத்தின் வேலையாம்.

அவளுடைய பக்தர்களை அப்படியே கடலுக்கடியில் இழுத்துக் கொண்டு போய் ஆனந்தமாய் வைத்திருக்குமாம். பிறகு அப்படியே பக்தர்களின் கனவுக்குள் நுழைந்து அவர்களை இனிமையான நினைவுகளுக்குள் கொண்டு செல்லுமாம். ஒரு படி மேலே போய் நினைத்த உருவம் எடுத்துக் கொண்டு வந்து பக்தர்களை சந்திக்கவும் செய்யுமாம்.

 1. ஆல்மெக் மதம்

உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்த சுவடு இல்லாமல் மறைந்து போயிருக்கின்றன. அப்படி ஆயிரம் ஆண்டுகள் வலிமையாய் இருந்த ஒரு மதம் தான் இந்த ஆல்மெக். இன்று அதன் சுவடுகள் இல்லை. கிமு 1400 முதல் கிமு 400 வரை இந்த மதம் இருந்தது.  அதன் பின்பு அந்த மதம் முழுமையாய் அழிந்தது.

இந்த மதம் நமக்கு அறிமுகமான மாயன்கள் மற்றும் ஆஸ்டெக் போன்ற மதங்களின் சாயலிலும், கோட்பாடுகளிலும் இருந்ததாக நம்பப்படுகிறது.

10 சயின்டாலஜி

அறிவியலும், கடவுளும் எப்போதுமே முரண்பட்டவர்கள் எனும் சிந்தனை உண்டு. சயின்டாலஜி அறிவையும், அறிவையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட மதம். அறிவியல் புனை கதை எழுத்தாளர் ரான் ஹப்போர்ட் உருவாக்கிய இந்த மதம் இன்று பிரபலம்

சுய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், பயிற்சிகள் கல்வி அறிவியல் இவற்றை வளர்த்துக் கொண்டால் நீங்கள் ஆன்மீகவாதி என்பது தான் இதன் அடிப்படை போதனை.

TOP 10 : மிரட்டும் பேய்கள்

Image result for bloody mary in the mirror

பேய் என்றால் படையும் நடுங்கும். நம்ம ஊரில் சங்கிலிக் கருப்பன், கொம்பன் அப்படி இப்படி ஏகப்பட்ட பேய்கள் உண்டு. இதைவிட பல சுவாரஸ்யமான கதைகள் சர்வதேச அளவில் உண்டு. இந்தியாவுக்கு வெளியே உள்ள பேய்கள் எப்படி ? அவற்றில் சுவாரஸ்யமான பத்து வகை பேய்கள் இந்த வாரம்.

 1. பிளடி மேரி

வீட்டிலிருக்கும் விளக்கையெல்லாம் அணைத்து விடுங்கள். ஒரு மெல்லிய மெழுகுவர்த்தி மட்டும் எரியட்டும். ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு “பிளடி மேரி” என்று மூன்று முறை சொன்னால் கண்ணாடியில் பேய் நின்று பல்லிளிக்கும். அப்படியே உங்கள் கண்களையெல்லாம் பிடுங்கிக் கொன்று விடும் என ஒரு திகில் பேய் மேலை நாடுகளில் உலவுகிறது.

தனது பிள்ளைகளையெல்லாம் கொன்ற பேயாம் இது. பொதுவாக குழந்தைகள் பாத்ரூமில் இருட்டில் நின்று இப்படிச் சொன்னால் பேய் வருமாம். கொஞ்சம் வித்தியாசமான பேய் தான். இந்தப் பெயர் பிடித்துப் போனதால் தான் அமெரிக்காவில் உற்சாகபான மிக்ஸ் ஒன்றுக்கு அந்தப் பேயின் பெயரையே வைத்து விட்டார்கள்.

 1. பிளையிங் டச் மேன்

பேய்களில் மிகவும் வித்தியாசமானது இது. இது ஒரு கப்பல். ! ஆம் கரையிலும் போகாமல் எப்போதும் கடலிலேயே இருக்கும் படி சாபம் வாங்கிய கப்பலாம். கப்பல் பயணிகளுக்குத் தான் இந்த பேயைக் கண்டால் பயம். அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி கப்பல்களையே அமுக்கி விடும். அடப் போங்கப்பா இதெல்லாம் கடலில் தெரியும் கானல் பிம்பங்கள் என சிலர் சொன்னாலும் பார்த்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள் வெளிச்சத்தோடு வரும் இந்த கப்பலைப் பற்றிய கதைகளை !

பல பயணிகளின் குறிப்புகளில் இந்த கப்பல் இருக்கிறது. இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இதை நேரடியாகப் பார்த்திருக்கிறார். சட்டென தோன்றி வெளிச்சமாய் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து விடும் இந்தக் கப்பல். 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமான இந்த பேய்க் கப்பல் புராணம், இன்னும் பீதி கிளப்புவதை நிறுத்தவில்லை. போய்க்கொண்டே இருக்கிற‌து.

 1. பிளினி

கி.பி 50ல் இளைய பிளினி எனும் ஒரு பேய் மஹா அட்டகாசம் செய்தது. கிரேக்க நாட்டின் முக்கிய நகரமான ஏதென்ஸில். அந்தப் பேய் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேயின் அட்டகாசத்தை யாராலும் அடக்க முடியவில்லை. மந்திரம், தந்திரம், வித்தைகள் எதுவுமே இந்தப் பேயின் முன்னால் செல்லுபடியாகவில்லை. எந்த பாச்சாவும் பலிக்கவில்லையே என குழம்பிய மக்களுக்கு ஒருவர் அறிவுரை சொன்னார். அதன்படி, அங்கிருந்த கல்லறைகளைத் தோண்டினார்கள். ஒரு கல்லறையில் சங்கிலிகளுடன் கூடிய ஒரு எலும்புக் கூடைக் கண்டார்கள். அந்த எலும்புக் கூட்டின் சங்கிலிகளை அவிழ்ந்து. மரியாதையுடன் மறு அடக்கம் செய்த பின் ஆவி சந்தோசமாகிவிட்டதாம் ! அப்புறம் அந்த பிளினி பேயை யாரும் பார்க்கவில்லை.

பொதுவாகவே பண்டைய கிரேக்கர்களுக்கு பேய் நம்பிக்கை ஜாஸ்தி. கல்லறைகளில் பேய் உலவும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நம்பினார்கள். பேய்கள் வந்து நாட்டிலுள்ள மக்களைக் கொல்லாதிருக்க ஒரு ஏற்பாடு செய்தார்கள். அதாவது ஆண்டுக்கு ஒருமுறை பேய்களுக்கு ஒரு மெகா விருந்து. எல்லா பேய்களுக்கும் ‘இன்விடேஷன்’ அனுப்பப்படும். இப்படி எல்லா பேய்களும் வந்து அந்த விருந்தைச் சாப்பிட்டால் அடுத்த வருஷம் விருந்து வரும் வரை பேய்கள் ரெஸ்ட் எடுக்குமாம்

பா ஜியோ கை

பெயரைக் கேட்டாலே புரிந்திருக்கும் இது ஒரு சீன பேய் என்று. சூதாடுபவர்களுக்கு இந்த பேயைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த பேய்களுக்கு முருங்கை மரமல்ல, வாழை மரம் தான் ஃபேவரிட். அதன் கீழே தான் தங்கும். கையில் ஒரு குழந்தையும் இருக்கும். திகில் கிளப்பும் இந்தப் பேயை விரட்ட ஒரே ஒரு வழி தான் உண்டு.  ஒரு நீளமான சிவப்புக் கயிறை எடுத்து, அதன் ஒரு முனையை வாழை மரத்திலும், மறு முனையை நீங்கள் படுக்கும் கட்டிலிலும் கட்டவேண்டும். வாழை மரத்தில் கயிறோடு சேர்த்து சில ஊசிகளையும் குத்தி வைக்கவேண்டும்.

இப்போது அந்தப் பேய் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்திருப்பவரிடம் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சும். அப்போது கட்டிலில் படுத்திருப்பவர், விடுவிக்கிறேன் எனக்கு முதல் பரிசு விழப்போகும் லாட்டரி நம்பர் சொல்லு என்றால் பேய் சரியாகச் சொல்லும் !  இது சீனா பேய். இப்படி சூதாட்ட விஷயத்தில் எல்லா விஷயங்களையும் புட்டுப் புட்டு வைப்பதால் தைரியசாலி விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பேய் பணம் கொட்டும் பேய்.

சீனாவில் லூனார் காலண்டரின் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாள் பேய் தினம் கொண்டாடுகிறார்கள். பேய்களுக்கு படைப்பது தான் இந்த தினத்தின் ஸ்பெஷல். டயா டீ லோஸ் முரீடோஸ் என மெக்ஸிகர்கள் கொண்டாடுவதும் ஏறக்குறைய இதே கான்சப்ட் தான் என்பது கூடுதல் தகவலுக்காக.

 1. பேய் இரயில்

பேய், கப்பலாய் மட்டும் தான் வருமா ? ரயிலாய் வராதா ? என கேட்பவர்களுக்காக இந்தப் பேய். இது ஒரு ரயில் பேய். ஒரு மாய ரயில். அவ்வப்போது ஆங்காங்கே தெரியும் பேய் ரயில் இது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான் இந்தக் கதைகள் பிரசித்தம். ஆளில்லாத, உடைந்த நிலையில், புதர் மண்டிக் கிடக்கும் ரயில்வே டிராக்களில் திடுக் என தோன்றி தடதடத்து ஓடும் ரயில் இது. ஆபிரகாம் லிங்கனின் நினைவு நாளில் இது அடிக்கடி தோன்றிய கதைகள் உண்டு. இந்த ரயில் போகும் போது பக்கத்திலிருக்கும் எல்லா கடிகாரங்களும் நின்று விடும் என்பது ஜிலீர் சங்கதி.

இங்கிலாந்திலுள்ள ஒரு ரயில்வே லைன் மூடப்ப்பட்டு பல வருடங்கள் கழிந்தபின் ஹாயாய் போயிருக்கிறது இந்தப் பேய், 1969ல். இந்தப் பேயைப் பிடித்துக் கொண்டு ஏகப்பட்ட கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சம்பாதித்தவர்கள் பலர்.

6 நூ குய்

இந்தப் பேய் தான் பொதுவாக நாம் சினிமாக்களிலாவது பார்க்கின்ற பேய். வெள்ளை உடை, நீள முடி உள்ள பெண் பேய். சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டே செத்துப் போன பெண் தான் இப்படிப்பட்ட பேயாய் அலைவாள் என்பது சீனர்களின் நம்பிக்கை.

“வாழும்போது என்னை கொடுமைப்படுத்தினே இல்லே.. நான் பேயா வந்து உன்னை என்ன பண்றேன் பாரு” என சவால் விடும் பேய்கள் இவை. பெண்கள் பாலியல் வன்முறையினால் கொல்லப்பட்டால், அடக்கத்தின் போது குடும்பத்திலுள்ள எல்லோரும் சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டு வருவார்கள். அப்படி வந்தால் இந்தப் பேய் சக்தியோடு கிளம்பி தன்னைக் கொன்றவனைப் பழிவாங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

 1. ரெஸரக்ஸன் மேரி

ஜெரி பாலஸ் என்பவர் ஒரு அழகிய பெண்ணை அழைத்துக் கொண்டு அவளுடன் டேட்டிங் செய்தார். ஒரு நாள் முழுவதும் அவளுடன் ஆட்டம் பாட்டமென பொழுதைப் போக்கினார். அவளுடைய கையைத் தொட்டால் ஐஸ் கட்டி மாதிரி இருந்தது, அது ஒன்று தான் ஜெரிக்கு வித்தியாசமாய்ப் பட்டது. மாலையில், “சரி கிளம்பறேன், கொஞ்சம் டிராப் பண்ணுங்க” என்று சொல்லி காரில் ஏறினாள். ஜெரி அவளை டிராப் பண்ண சென்ற போது வழியில் குறுக்கிட்டது ஒரு கல்லறைத் தோட்டம். “ஜஸ்ட் ஒன் மினிட்” என்று சொல்லி காரைத் திறந்தவள் சட்டென காணாமல் போய்விட்டார். கல்லறைத் தோட்டத்தின் கதவுகள் அசைந்தன.

மிரண்டு போய் வீட்டுக்கு வண்டியை பறத்திக் கொண்டு வந்தவரிடம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள், “அடப்பாவி அது ரெஸரக்ஷன் மேரி பேய்டா.. இது கூட தெரியாதா ?”. அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் மக்களை தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கும் பேய் இது. 1934ல் ஒரு விபத்தில் இறந்து போன போலந்து நாட்டு இளம்பெண் தான் இந்தப் பேய் என ஒரு கதை உண்டு.

 1. லா லோர்னா

லா லோர்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் அழுகின்ற பெண் என்று பொருள். தான் விரும்பிய ஆடவனோடு சேர வேண்டும் என்பதற்காக தனது குழந்தைகளைக் கொன்று விடுகிறாள் ஒரு பெண். ஆனால் பரிதாபம், அந்த ஆடவன் அவளை உதாசீனம் செய்து விடுகிறான். கதிகலங்கிப் போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் தான் இந்த பேய். அழுது கொண்டே, தனது குழந்தைகளைத் தேடித் திரியும் ஒரு அபலைப் பெண்ணின் குரலாய் இந்தப் பேயின் குரல் இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி ஒலிக்கிறது.

சில நேரங்களில் தனியே நடந்து திரியும் குழந்தைகளை தன் குழந்தைகள் என நினைத்து இந்தப் பேய் தூக்கிச் சென்றுவிடுவதும் உண்டு. நெகிழவைக்கும் ஒரு தாயின் அழுகுரலும், அலைந்து திரியும் ஒரு பேயின் மூர்க்கமுமாக இந்தப் பேய் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 1. ஆனி போலின்

எட்டாம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி தான் இந்த ஆனி. முதலாம் எலிசபெத் ராணியின் தாய். அதி அற்புத அழகி. அவளுடைய‌ ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவள் மீது இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி மரண தண்டனை விதித்தான். வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும் என்பது தண்டனை. கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள் ஆனி. “என் வாளைக் காணோமே” என பேசிக்கொண்டே சரேலென தலையை வெட்டினான் வீரன்.

ஆனி பேயானாள். இங்கிலாந்தில் அவளைப் பேயாய்க் கண்ட சாட்சிகள் எக்கச்சக்கம். அழகிய பெண்ணாக அவளைக் கண்டவர்கள் பலர். தலையில்லாத முண்டமாய் அவளைக் கண்டவர்கள் பலர். இதே மாதிரி தலையில்லாத இன்னொரு பேயும் உண்டு. அதன் பெயர் வூ டோ குய். பொதுவா மரண தண்டனை விதிக்கப்பட்ட பேய்கள் தான் இவை. ராத்திரி கதவைத் தட்டி “என் தலையைப் பாத்தீங்களா பாஸ்” என அப்பாவியாய் கேட்குமாம். சமயத்தில் கையில் தலையை வைத்துக் கொண்டு “கொஞ்சம் பிக்ஸ் பண்ணுங்களேன் பிளீஸ்” என்றும் கேட்குமாம் !

10 த வயிட் லேடி

இது ஹைவே பேய். காரில் போய்க்கொண்டிருக்கும் போது ரோட்டின் நடுவே சட்டென தோன்றி தலைவிரி கோலமாய் நிற்கும் பெண் இவள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பேய் மிகப்பிரபலம். நடு நிசி தாண்டிய நேரத்தில் யாராவது தனியே பயணம் செய்தால் சொல்லாமல் கொள்ளாமல் பின் சீட்டில் வந்து உட்காரும். அதற்காகவே இரவில் வண்டி நிறைய ஆட்களை ஏற்றிக் கொண்டு தான் பயணம் செய்கின்றனர். இதெல்லாம் கட்டுக்கதை என சிலர் சொன்னாலும், பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் இது உண்மை என்று கற்பூரம் கொளுத்தாமல் சத்தியம் செய்கின்றனர்.

சரி கெட்ட பேய்களைப் பற்றி மட்டுமே சொன்னால் எப்படி, இதோ கொசுறாக ஒரு நல்ல பேய். இதன் பெயர் புனியன். காடுகளில் தான் பொதுவா இது வசிக்கும். காட்டில் வழிதப்பிப் போனால் இந்தப் பேய் வந்து வழி சொல்லுமாம் ! . “ரைட் எடுத்து லெப்ட் கட் பண்ணுங்க மெயின் ரோட் வந்துடும்.!!

TOP 10 : புராண வில்லன்கள்

Image result for asmodeus

புராணங்களிலும், காவியங்களிலும், ஆன்மீக நூல்களிலும் பல வில்லன்கள் உலா வருகின்றனர். நிகழ்கால வில்லன்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. புனைவாகவும், நிஜமாகவும் இருக்கும் அத்தகைய இதிகாச, காவிய வில்லன்களில் ஒரு பத்து பேர் இந்த வாரம்.

 • குரோனஸ் (Cronus )

கிரேக்கக் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைக்காதவை. கதாநாயகர்களும் வில்லன்களும் நிரம்பி வழியும் கிரேக்கப் புராணங்களில்  மிக முக்கியமான கடவுள் ஸீயஸ். இவருக்கு ஒரு அதி பயங்கர வில்லன் இருந்தான். அது வேறு யாருமல்ல, அவருடைய அப்பா குரோனஸ் தான். குரோனஸ் சர்வ வல்லமை பொருந்திய கடவுளாய் இருந்தான். அந்த பதவியே தந்தையிடமிருந்து அவன் தந்திரமாய்ப் பறித்தது தான். இதனால் குரோனஸின் அம்மாவுக்கு மகன் மீது கடும் கோபம். “ஒர் நாள் உன் பையனே உன்னை வீழ்த்துவான் பாரேன்” என சாபம் கொடுத்துவிடுகிறார்.

விடுவாரா குரோனஸ். தனக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டான். மனைவி ரேயாவுக்கு மிகுந்த கவலை. அதனால் கடைசியாய் பிறந்த குழந்தையை மட்டும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டு குழந்தையை விழுங்க வந்தவனிடம், துணியில் ஒரு கருங்கல்லைச் சுற்றிக் கொடுக்க, அவனும் அதை விழுங்கி விடுகிறான்.  அப்படித் தப்பியவர் தான் ஸீயஸ்.

ரேயாவால் தனியே ஒரு குகையில் வளர்க்கப்பட்ட ஸீயஸ் வளர்ந்து பெரியவனாகி வந்த பின் கிளைமேக்ஸ். முதலில் தந்தையை வாந்தியெடுக்க வைத்து வயிற்றிலிருந்த தனது சகோதரர்களையெல்லாம் வெளியே கொண்டு வந்து. தந்தைக்கு எதிராக பல ஆண்டுகள் கடுமையாகப் போராடி வெல்வது மீதி !

ஸீயஸ் கிரேக்கக் கடவுள்களுக்கெல்லாம் மன்னன். வானம் இடி எல்லாமே இவருடைய கட்டுப்பாட்டில் தான் என்பது கிரேக்க நம்பிக்கை. அப்படிப்பட்ட ஸீயஸுக்கே வில்லனாய் வந்த குரோனஸ், கிரேக்க புராணங்களின் முக்கிய வில்லன்.

 • யூதாஸ் இஸ்காரியோத்து

காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்சேயைத் தெரிவது போல, இயேசுவைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர் யூதாஸ் இஸ்காரியோத். இயேசுவுக்கு நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் இந்த யூதாஸ்.  

இயேசு அன்றைய யூத சட்டங்களுக்கு எதிராகவும், மத வாதிகள், மறை நூல் வல்லுநர்களுக்கு எதிராகவும் தீவிரமாய் முழங்கியவர். இவரைத் தலைவராக்க வேண்டுமென்பது மக்களின் திட்டம். இந்தத் தலைவலியை இல்லாமலாக்க வேண்டும் என்பது மதவாதிகளின் திட்டம். தந்திரமாய் இயேசுவைப் பிடிக்க அவர்கள் பிடித்தது யூதாஸை ! அவனுடைய பணத்தாசை அவர்களுக்கு துருப்புச் சீட்டாகிப் போனது.

படைவீரர்களை அனுப்புகிறோம். ஆளை மட்டும் நீ காட்டிக் கொடுத்தால் போதும். இதோ முப்பது வெள்ளிக்காசு. இவ்வளவு தான் ஒப்பந்தம். “நான் யாரை முத்தமிடுவேனோ அவர் தான் இயேசு. புடிச்சுக்கோங்க” என்றான் யூதாஸ். திட்டம் நிறைவேறியது. இரவில் இயேசு ஜெபித்துக் கொண்டிருந்த இடத்துக்கு யூதாஸ் போனார். இயேசுவை முத்தமிட்டார்.

“நண்பா… முத்தமிட்டா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்”  என இயேசு சொன்னதையும் காதில் வாங்காமல் நைசாக நழுவினான் யூதாஸ்.  

 • இப்லிஸ் ( iblis)

இப்லிஸ் இஸ்லாமிய மதத்தின் வில்லன். குரானின் அடிப்படையில் பார்த்தால், கடவுளின் பேச்சைக் கேட்காமல் சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்டவன். கடவுள் ஆதாமைப் படைத்தபின் எல்லா தேவதைகளையும் கூப்பிட்டு ஆதாமுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கச் சொன்னார். கடவுளின் பேச்சைத் தட்டாமல் எல்லோரும் ஆதாமைப் பணிந்தனர், ஒருத்தரைத் தவிர. அவர் இப்லிஸ் !

நான் ஒரு தெய்வப் பிறவி. நெருப்பிலிருந்து பிறந்தவன். ஆதாம் ஒரு மனிதப் பிறவி. கேவலம் களி மண்ணிலிருந்து பிறந்தவன். என்னை விடத் தகுதியில் குறைந்த அவனுக்கு முன்னால் நான் மண்டியிடுவதா ? முடியாது என்பதே இப்லிஸ் நிலைப்பாடு.  அப்புறமென்ன கோபம் கொண்ட கடவுள் அவனை அங்கிருந்து துரத்தி விட்டார்.

போகும் போது கடவுளிடம் ஒரு விஷயம் கேட்டான் இப்லிஸ். அதாவது கடைசி காலம் வரை எனக்குத் தண்டனை தராமல் இருந்தால் நான் யார் எனக் காட்டுவேன். பூமியிலுள்ள ஆதாமின் சந்ததியினரை எல்லாம் தீய வழியில் கொண்டு செல்வேன் என்றான். கடவுள் ஒப்புக் கொண்டர். சைத்தான் என பெயரைப் பெற்ற இவன் தான் பின்னர் பாம்பாய் வந்து ஏவாளை ஏமாற்றியதாம். மக்கள் தீய வழியில் செல்கிறார்களெனில் அதன் காரணம் இப்லிஸ் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

 • யங் வான் ( எமன் )

புத்தமதத்திலும் எமன் உண்டு. புத்தமதத்தின் சில பிரிவுகளில் நான்கு எமன்கள் வரை உண்டு. எமனோட வேலை மக்களை நல்வழிப்படுத்த நோயையும், முதுமையையும் , கஷ்டங்களையும் மக்களுக்குக் கொடுப்பது. அப்படியும் அவர்கள் வழிக்கு வராமல் செத்துப் போய்விட்டால் கடைசியில் எமனிடம் தான் வந்தாக வேண்டும். அவர்களை அடுத்து நரகத்தில் எறிவதா, சுவர்க்கத்துக்கு அனுப்புவதா அல்லது மீண்டும் பூமிக்கு அனுப்புவதா என முடிவெடுப்பது இவர் தான்.  

சீன மதத்தில் எமனோட பெயர் யன் வாங். யங் வாங்- கிற்கு சாவின் கடவுள் எனும் பெயர் தான் சீனாவிலும். கொரியன் மொழியில் இவரை யோம்ரா என்கிறார்கள் ஜப்பானியர்கள் யம்மா என அழைக்கின்றனர். எல்லாமே எமனுடைய வேறு வேறு வெர்ஷன்கள் தான். ஆனால் சீனா வகையறாக்களில் எமனுக்கு கெட்டப் வேறு. சிவந்த முகம், பெரிய உருவம், நீளமான தாடி என மிரட்டும் கெட்டப். என்னதான் கடவுளாக இருந்தாலும், நம்ம உயிரை எடுப்பதனால் யங் வாங் கும் சீன மத “வில்லன்” லிஸ்டில் தான் வருகிறார்.

 • சாத்தான்கள் ( Demons )

அதிபயங்கர சக்தி, நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தில் வருவது, எங்கே வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாய் தோன்றுது என சர்வ சக்தி வில்லன் சாத்தான். சாத்தான்கள் என பொதுப்படையாகச் சொல்லப்படும் எல்லாமே வில்லன் வகையறாக்கள் தான். ஒவ்வொரு மதமும் சாத்தானைப் பார்க்கும் பார்வையில் மட்டும் ஏகப்பட்ட வித்தியாசம்.  

கிறிஸ்தவ மதத்தில் சாத்தான்கள் வேறுயாருமல்ல, சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்ட ஏஞ்சல்ஸ் தான் !. சுவர்க்கத்தில் நிரம்பியிருந்த தூதர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு புகழ் ஆசை வந்தது. அதனால் அவர்களையும், அவர்களுடைய தலைவன் லூசிபரையும் கடவுள் சுவர்க்கத்திலிருந்து கீழே தள்ளிப் போட்டார். அவர்களெல்லாம் பூமியில் வந்து விழுந்தார்கள் என்பது கிறிஸ்தவக் கதை. இந்து மத நம்பிக்கைப்படி ராட்சதர்கள், அசுரர்கள், வேதாளம், பிசாசுகள் என பல பெயரில் உலவுபவர்களை இந்த டீமன்ஸ் கணக்கில் சேர்க்கலாம்.  

 • ஸ்டிரிகோய் ( Strigoi )

நிறைவேறாத ஆசைகளுடன் செத்துப் போனால் ஆவியாய் அலைவார்கள் எப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இதே சமாச்சாரம் தான் ரோம புராணங்களிலும். இங்கே  நிம்மதியற்ற ஆத்மாக்களின் பெயர் ஸ்டிரிகோய். கல்லறைகளில் நிம்மதியாய் உறங்க முடியாமல் எப்போது எழும்பி யாரைப் பிடிக்கலாம் என அலைந்து திரிபவை தான் இவை.

விட்ச் என சொல்வது இந்த ஸ்டிரிகோய் வகைகளின் பெண் வடிவம். மனிதர்கள், விலங்குகள் என கிடைத்த கேப்பில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன இந்த ஸ்டிரிகோய்கள். சிவப்பு முடி, நீல நிறக் கண்கள், இரண்டு இதயம் என திடுக் திடுக் வடிவத்தை இவற்றுக்குக் கொடுத்திருக்கிறது ரோம மித்தாலஜி.

இந்த ஸ்டிரிகோரிகளிடமிருந்து தப்புவதொன்றும் பெரிய விஷயமில்லையாம். ஒரு பாட்டில் விஸ்கியை அவர்களுடைய கல்லறை அருகே புதைத்து விட வேண்டும். அவை அதைக் குடித்து விட்டு மயங்கிவிடுமாம். அட ! அவன் தானா நீ !! நம்ம ஊரில் பட்டை சாராயம் !  

 • லூகாரூ ( Loogaroo )

லூகாரூ கரீபியன் மித்தாலஜியிலுள்ள ஒரு வில்லன். வில்லன் என்பது தவறு இது ஒரு வில்லி. இதுவும் சாத்தானும் அக்ரீமெண்ட் போட்டுக் கொண்டு மனிதர்களைச் சாவடிப்பது தான் வேலை. சாத்தான் இதற்கு நிறைய மந்திர சக்தியெல்லாம் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு இது கொடுக்க வேண்டியது மனித இரத்தம். அப்படி கொடுக்காவிட்டால் அவ்வளவு தான், லூகாரூவின் இரத்தத்தையே சாத்தான் குடித்துவிடும். அதனால் எப்படியாவது இரத்தம் வேண்டும் என வெறியுடன் இவை அலைந்து திரியுமாம்.  இராத்திரியில் ஒரு ஒளியையோ, நீல நிற ஒளிப் பந்தையோ, பார்த்தால் அது லூகாரூ தான் என்கின்றனர் கரீபியன்ஸ்.  

சரி இதன் பிடியிலிருந்து எப்படி தப்புவது. வெரி சிம்பிள். வீட்டு வாசலில் ஒரு மூட்டை நெல்லையோ, அரிசியையோ, அல்லது குறைந்த பட்சம் மணலையோ வைக்க வேண்டுமாம். லூகாரூ வீட்டு முன்னால் மூட்டையைப் பார்த்தவுடன் பிரித்து ஒவ்வொன்றாய் எண்ண ஆரம்பிக்குமாம். எண்ணி முடிக்கும் முன் சூரியன் வந்து விடுவான். அடடா ஏமாந்துட்டோமே என லூகாரூவும் ஓடி விடுமாம்.  அட முட்டாள் லூகாரூ ! தினமுமா ஏமாறுவே ?

 • அஸ்மோதேயுஸ் ( Asmodeus)

நரகம் இருக்கிறது என்பதை பெரும்பாலான மதங்கள் ஒத்துக் கொள்கின்றன.  அஸ்மோதேயுஸ் நரகத்திலுள்ள சாத்தான்களின் தலைவன். நரகத்தில் ஏழு சாத்தான் மன்னர்கள் உண்டாம். ஒவ்வொருவருக்கும் பெருமை, பொறாமை, காமம் என ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்.  அஸ்மோதேயுஸின் டிபார்ட்மெண்ட் காமம்.  இவனுடைய ஆசையெல்லாம் மக்களுடைய காம ஆசையைத் தட்டி எழுப்புவது தான்.

பீச் ஓரங்களில் கைகளைக் கோர்த்து அலையும் காதலர்களிடம் இவனுடைய வேலை வெகு எளிதாய் வொர்க் அவுட் ஆகி விடுகிறது. ஆசையைத் தூண்டி விட்டு மக்கள் தப்பு செய்தால் இவனுக்கு வெற்றி. அவர்களெல்லாம் கடைசியில் இவனுடைய கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது நரகத்துக்கு வந்து சேர்வார்களாம்.

 • இன்குபஸ் ( incubus)

இன்குபஸ் என்பது சுமேரியர்களுடைய வில்லன். இந்த வில்லன் கொஞ்சம் விவகாரமானவன். தூங்கும் பெண்களின் மீது உறவு கொள்ள ஆசைப்பட்டு அலைவான். இந்த வில்லன் குழுவில் வில்லிகளும் உண்டு. அவற்றுக்கு சுகுபஸ் என்பது பெயர்.   வில்லிகள் ஆண்களை நாடுவார்கள். இன்குபஸோ, சுகுபஸோ ஒருத்தரைப் பிடித்து விட்டால் அவருடைய உடல் இளைத்து, ஆரோக்கியம் போய்,  கடைசியில் மரித்து  விடுவார்களாம்.  

சரி இன்குபஸ் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? இராத்திரி திடீரென கனவு கண்டு விழிப்பது, தூக்கத்தில் அசைவற்றுப் போவது  உட்பட “வாலிப வயோதிக அன்பர்களே” டாக்டர்கள் சொல்லும் எல்லாமே இதன் அறிகுறிகள் தானாம்தா. சுமேரியர்களிடமுள்ள இந்த நம்பிக்கை ஜெர்மன், பிரேசில், அமேசான் காட்டுப் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உண்டாம்.

 • வாம்பையர்

நீண்ட நீண்ட பற்கள். கூரிய நகங்கள். சட்டென சந்தர்ப்பம் கிடைத்தால் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்து கோரமாய் சிரிக்கும் உருவம் தான் வாம்பையர். அரைத்த மாவையே அரைக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவும் ஆகிப் போனது இந்த வாம்பையர் பயங்கரங்கள்.  

வாம்பையர் ஒரு அதிபயங்கர வில்லன் என்பதில் பல்வேறு நாடுகள் ஒத்துப் போகின்றன.  வாம்பையர்களுக்கு இரும்புப் பற்கள் உண்டு, அவை குழந்தைகளைக் குறி வைத்து அலையும் என கதைகள் பல்வேறு விதமாய் உலவுகின்றன.  கரீபியன் தீவுகள், அமெரிக்கா , சிலி, கொலம்பியா, ஆசியா, என எல்லா நாடுகளிலும் வாம்பையர் கதைகள் உலவுகின்றன. என்ன, தங்கள் பின்னணிக்குத் தக்கபடி கற்பனை வடிவத்தை மட்டும் மாற்றிக் கொள்கின்றனர்.

TOP 10 : தன்னம்பிக்கை நூல்கள்

Image result for chicken soup for the soul first book

தன்னம்பிக்கை நூல்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஏராளமான நூல்கள் வாசகர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் பணியைச் செய்திருக்கின்றன, செய்து வருகின்றன. அவற்றில் விமர்சகர்களின் பார்வையிலும், வாசகர்களின் பார்வையிலும், விற்பனையின் எண்ணிக்கையிலும் சர்வதேச கவனத்தை ஈர்த்த நூல்கள் ஏராளம். அவற்றிலிருந்து முக்கியமான பத்து நூல்கள் இந்த வாரம்.

 1. The 7 Habits of Highly Effective People

தன்னம்பிக்கை நூல்களின் பட்டியலில் தவறாமல் இடம்பிடிக்கக் கூடிய நூல் இது. 1989ம் ஆண்டு வெளியான இந்த நூல் இந்த குறுகிய கால இடைவெளியிலேயே இரண்டரை கோடி பிரதிகள் எனுமளவில் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. சர்வதேச‌ அளவில் மிகவும் பிரபலமான, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் இது. இதன் பரபரப்பைப் பார்த்து ஆடியோ புக்காகவும் இதை வெளியிட்டார்கள். புனை கதையல்லாத ஒரு நூலுக்கு ஆடியோ வடிவம் வெளியிட்டது இது தான் முதன் முறை.

பணியில் இருப்பவர்கள், நிறுவனங்களில் இருப்பவர்கள், தொழில் நடத்துபவர்கள் போன்றவர்களுக்கு பிரமாதமான வழிகாட்டி. எப்போதும் வருமுன் காப்பவர்களாக இருக்க வேண்டும், இலக்கை மனதில் கொண்டே ஒரு செயலைத் துவங்க வேண்டும், முதலில் தொடங்க வேண்டியதை முதலில் தொடங்கவேண்டும், இருதரப்புக்கும் வெற்றி என்பதை யோசிக்க வேண்டும், புரிந்து கொள்ளுத‌ல் வேண்டும், குழுவாகப் பணிசெய்தல் வேண்டும் எனும் ஏழு விஷயங்கள் மிக விரிவாக, புதுமையாக இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறது.

 1. Chicken Soup For the Soul

“என்ன ஓவர் பாசிடிவ் ஆக இருக்கே, இதையெல்லாம் பதிப்பிக்க முடியாது” என முதலில் நிராகரிக்கப்பட்ட நூல் தான் இது. பலர் நிராகரித்தபின் ஹைச்.சி.ஐ எனும் ஒரு குட்டி பதிப்பகத்தின் புண்ணியத்தால்  பிரசுரமானது. அதன்பின் பதிப்பாசிரியருக்கு அடித்தது ஜாக்பாட். உலகெங்கும் காட்டுத் தீ போல பற்றிப் படர்ந்தது இதன் விற்பனை. எழுத்தாளர்கள் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் மார்க் ஹேன்சன் இருவரும் உலகப் புகழ் பெற்றனர்.

அதிகம் விற்பனையாகும் நூல்களில் இதற்கு சிறப்பிடம் உண்டு. உலகிலேயே அதிகம் விற்கப்பட்ட தன்னம்பிக்கை நூல் வரிசை இது தான். இப்போது பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் விஷயங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. குழந்தைகள், பதின் வயதினர், ஆண்கள், பெண்கள், தம்பதியர் என இப்போது எல்லோருக்கும் தனித் தனியே இந்த நூல் வெளியாகிறது.

 1.  100 ways to boost your self confidence

பார்டன் கோல்ட்ஸ்மித் எழுதிய இந்த நூல் எளிமையாக, நடைமுறை யதார்த்தங்களோடு எழுதப்பட்டுள்ளது. வாசகர்களை மட்டுமன்றி பிற எழுத்தாளர்களையும் கவர்ந்துள்ளது இந்த நூல்.

உனது வாழ்க்கை உனது கையில் எனும் செய்தியோடு இந்த நூல் பயணிக்கிறது. உனக்குள் இருக்கும் திறமைக் கடலைத் திறந்து பார்க்கத் தவறாதே. நீ பிடரி சிலிர்க்கும் சிங்கம் உன்னைக் கூட்டில் தள்ள முடியாதே !  என உள்ளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை இந்த நூல் தட்டி எழுப்புகிறது.

நல்ல குணாதிசயங்களோடு வாழ்வதையும், உறவுகளை வலுப்படுத்துவதையும், தன்னம்பிக்கையோடு செயல்படுவதையும் இந்த நூல் முதன்மைப்படுத்துகிறது.

 1. Awaken the Giant Within

ஆன்டனி ரோபின்ஸ் எழுதிய இந்த நூல் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில் இடம் பிடித்த நூல். எளிமையும், சுவாரஸ்யமும் நிறைந்த நடை. 1991ம் ஆண்டு வெளியான இந்த நூல் அமெரிக்காவின் அதிக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் இருந்த நூல். இதன் பல வடிவங்கள் வெளியாகியிருக்கின்றன.

தன்னம்பிக்கையின் முனையை கூர்தீட்ட விரும்புபவர்கள் நிச்சயம் படிக்கலாம். இந்த நூலைத் தவிர இந்த எழுத்தாளர் எழுதிய‌ பிற நூல்க‌ளில், அன்லிமிடட் பவர் மற்றும் மணி‍:மாஸ்டர் த கேம் எனும் இரண்டு நூல்களும் மிகப் பிரபலம்.

 1. You Can Heal your Life

உங்கள் வாழ்க்கையை எந்த மந்திரக் கோலும் வந்து சரி செய்து விட முடியாது. ஆனால் உங்கள் மனம் அதைச் செய்ய முடியும். உங்கள் பேச்சு முதல் செயல் வரை எப்படி வசீகரமாய் மாற வேண்டும் என்பதை இந்த நூல் விளக்குகிறது. லூயிஸ் ஹே எழுதிய இந்த நாவல் மூன்றரை கோடி பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது. உலகின் டாப் 10 பெண் எழுத்தாளர் வரிசையில் மூன்றாவதாய் இருக்கிறார் ஆசிரியர், புத்தக விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில்.

இந்த புத்தகத்தை எழுதியபோது அவர் அறுபது வயதைத் தாண்டியிருந்தார். வாழ்வின் அனுபவ முடிச்சுகளிலிருந்து நூலில் பல்வேறு தீர்வுகளைச் சொல்லியிருந்தார். குறிப்பாக உடலுக்கும் மனதுக்கும் இடையேயான ஆழமான பிணைப்பு குறித்த அவரது சிந்தனைகள் பெரும் பாராட்டு பெற்றன.

 1. What is holding you Back

சேம் ஹார்ன் எழுதிய இந்த நூல் எப்படி எந்த ஒரு செயலிலும் பளிச் என நமது முத்திரையைப் பதிக்க முடியும் என அக்கு வேறு ஆணி வேறாக விளக்குகிறது. “எது தான் உன்னை வெற்றி பெற விடாமல் தடுக்கிறது” என நம்மையே கேள்வி கேட்க வைத்து, நமது செயல்களை ஒவ்வொன்றாகச் சீர்செய்ய இந்த நூல் வழிகாட்டுகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி செயல்பட வேண்டும், நமது தோல்விகளை எப்படி பாடங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்களை இந்த நூல் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது. வாச‌கர்களும், எழுத்தாளர்களும் ஒரு சேர அங்கீகரித்த நூல்களில் இதுவும் ஒன்று.

 1. Have a New You by Friday

உண்மை சுடும் என்பார்கள், உங்களைப் பற்றிய உண்மையெனில் அதும் ரொம்ப அதிகமாகவே சுடும். அந்த உண்மையை நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது ? அங்கிருந்து எப்படி வெற்றியை நோக்கி நகர்வது ? நீங்கள் யார் எனும் நிலையிலிருந்து தொடங்கி எங்கே சென்றடைய வேண்டும் எனும் பயணத்துக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது.

நம்மை மாற்றிக் கொள்வது தான் மிகப்பெரிய கடினமான விஷயம். அந்த மாற்றத்தை எப்படிச் செய்வது ? எப்படி அதை படிப்படியாய் செயல்படுத்துவது என்பதை இந்த நூல் அழகாகச் சொல்கிறது. முதலில் உங்களைப் பற்றிய உண்மையை அறியுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் விலக்குங்கள் என்கிறது இந்த நூல்.

 1. The Breakout Principle

ஹெர்பர்ட் பென்சன் மற்றும் வில்லியம் ப்ரோக்டர் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் அற்புதமான நூல் இது. மன  அழுத்தம், உடல் சோர்வு, அதிக உழைப்பினால் மூளை கொள்கின்ற அசதி – இவையெல்லாம் இன்றைய உலகில் சர்வ சாதாரணம். ஆனால் அத்தகைய சூழலில் எப்படி வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவது ? என்பதை அழகாகச் சொல்கிறது இந்த நூல்.

மருத்துவத் துறையில் பெற்ற அனுபவத்தை இவர்கள் தங்களுடைய நூலில் வாழ்வியல் அனுபவங்களாக எழுதியிருப்பது நூலுக்கு அதிக பலம் சேர்க்கிறது. மனச் சோர்வு, குழப்பம், மன அழுத்தம் போன்றவற்றில் உழல்பவர்களுக்கு ரொம்பவே பயன் தரும் நூல் இது.

 1. Self Help that works

ஆடம் கான் எழுதிய இந்த நூலின் சிறப்பு ஒரு நாவலைப் போன்ற இனிமையான வாசிப்பு அனுபவம். தன்னம்பிக்கை நூல்களின் ஒரு மிகப்பெரிய சிக்கல் அவற்றை வாசிப்பது பல வேளைகளில் கடினமாக இருப்பது தான். அந்த சிக்கலை இந்த நூலில் உடைத்திருக்கிறார் ஆசிரியர்.

சின்னச் சின்ன அத்தியாயங்கள், எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் என நூலை ஒரு சுகமான வாசிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார். விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நூல்களில் ஒன்று இது எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் வாசிக்க விரும்புபவர்களுக்கான நூல் இது.  

10 think and grow rich

1937ம் ஆண்டு வெளியான நூல் இது. எழுதியவர் நெப்போலியன் ஹில் எனும் எழுத்தாளர். உலகிலேயே மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரமும், தன்னம்பிக்கையும் கலந்து கட்டி எழுதப்பட்ட நூல் இது தான். சுமார் ஏழு கோடி பிரதிகள் விற்று பெரும் சாதனை படைத்த நூல் இது.

இந்த நூலை எழுதுவதற்கு முன் ஆசிரியர் சுமார் 40 கோடீஸ்வரர்களை ஆராய்ந்து அவர்களுடைய வெற்றியின் வழிகளை அறிந்து இதை எழுதியிருக்கிறார். இந்த நூல் பல நூறு செல்வந்தர்களை உருவாக்கியிருக்கிறது. வாழ்வில் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என நினைப்பவர்களுக்கு வரமான‌ நூல் இது.

TOP 10 : உணவு சார்ந்த நம்பிக்கைகள்

 

Image result for Diet

எது நல்ல உணவு, எது கெடுதலான உணவு என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் ஆரோக்கியமானது என கூவிக் கூவி விற்கும் பொருட்கள் ஆரோக்கியமற்றவையாகி விடுகின்றன. ஆரோக்கியமற்றது என கருதும் உணவுகள் பலவும் ஆரோக்கியமானதாக மாறி விடுகின்றன. அமைதியாக இருக்கின்ற வேறு சில உணவுகள் ஆரோக்கியத்தை பெருமளவு மேம்படுத்துகின்றன.  உணவு சார்ந்த அத்தகைய பத்து சிந்தனைகள் இந்த வாரம்.

 1. பழச்சாறு !

நல்ல ஹெல்த்தியா இருக்கணும்னா பழ ஜூஸ் குடிங்க. நேரடியா மாம்பழத்தையே பிழிஞ்சு பாட்டில்ல அடைச்சு தரோம் என நிறைய விளம்பரங்கள் வசீகரிப்பதுண்டு. உண்மையில் இத்தகைய பழச்சாறுகள் உடலுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. ஊறு தான்  விளைவிக்கின்றன. இதில் வைட்டமின்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் கலந்திருக்கும் சர்க்கரை அளவுதான் மிரள வைக்கிறது. இவ்வளவு அதிகம் சர்க்கரையை உடலில் செலுத்திக்கொண்டே இருந்தால் உடல் விரைவிலேயே செல்லாக்காசாகி விடும். பெரும்பாலான பழஜூஸ்கள் பல்ப் நீக்கப்பட்டே  வருகிறது. அப்படியெனில், கொஞ்ச நஞ்சம் இருக்கும் நார்ச்சத்தும் நமக்குக் கிடைக்காது என்பது தான் அதன் பொருள்.

பழச்சாறு குடிக்க வேண்டுமெனில் பழங்கள் வாங்கி வீட்டிலேயே ஜூஸ் பண்ணிக் குடிப்பது தான் ஆகச் சிறந்த ஆரோக்கிய வழி. அல்லது நேரடியாகவே பழத்தைச் சாப்பிட்டு விடுங்கள். அது ரொம்ப நல்லது. மற்றபடி செயற்கை இனிப்பு, பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை வாசனை இத்யாதிகள் கலந்திருக்கும் பாட்டில் ஜூஸ்களை கொஞ்சம் தள்ளியே வைப்பது புத்திசாலித்தனம்.

 1. பாக்கெட் நிலக்கடலை

நிலக்கடலை ரொம்ப நல்லது. வயலிலிருந்து அப்படியே பிடுங்கி வந்து அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவது ரொம்பவே ஆரோக்கியமானது. நிறைய வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து போன்றவை நிரம்பியது. அதற்காக கடைகளில் கலர் கலர் பாக்கெட்களில் விற்கப்படும் கடலை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்.

சால்டட் நிலக்கடலைகள் தான் பெரும்பாலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இத்தகைய பாக்கெட்களில் கடலையுடன் சுவைக்காக இணையும் இன்னொரு பொருள் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட். அதையும், உப்பையும் சேர்த்து கடலையை வறுக்கும் போது சுவை பலமடங்கு அதிகரிக்கிறது. இது உடலுக்குக் கேடு விளைவிப்பது.

நிலக்கடலை சாப்பிட விரும்பினால் இத்தகைய ஜிகினா வேலைகள் ஏதும் இல்லா கடலையை நேரடியாய் வாங்கி சாப்பிடுங்கள்.

 1. டயட் குளிர்பானங்கள்.

குளிர்பானங்கள் உடலுக்கு பெருமளவு ஊறு விளைவிப்பவை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டன‌. மிக முக்கியமாக ஒரு பாட்டில் கோக்கில் சுமார் அரை டம்பர் அளவு சீனி உள்ளது எனும் அதிர்ச்சி ஆய்வு  முடிவுகளும் வெளியாகியிருந்தன. அப்போது மக்களின் பார்வை டயட் குளிர்பானங்களின் மீது சாய்ந்தது. அவை ஆரோக்கியமானவை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவானது.

உண்மையில் டயட் குளிர்பானங்கள் மற்ற குளிர்பானங்களைப் போலவோ, அதை விட அதிகமாகவோ உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்கின்றன ஆய்வு முடிவுகள். இதை குடித்தால் உடல் எடை சகட்டு மேனிக்கு அதிகரிக்கும் ஆபத்தும் உண்டு. இதில் கலக்கப்பட்டுள்ள செயற்கை இனிப்பு உடல் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணியாய் இருக்கிறது. மேலும் இதில் கலக்கப்படும் “அஸ்பார்டேம்” போன்ற இனிப்பு ஊக்கிகள் உடலில் புற்று நோய் வரவும் வழிவகை செய்யும் என அதிரவைக்கிறது இன்னொரு ஆய்வு. குளிர் பானங்கள் தொடர்ந்து குடித்தால் டி.என்.ஏக்கள் கூட பாதிக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆய்வு முடிவு வந்தது குறிப்பிடத் தக்கது.

எனவே ஒட்டு மொத்தமாய் குளிர்பானங்களை விட்டே ஒதுங்கி நிற்பதே உடலுக்கு நல்லது.

 1. கெச்சப்

ஹோட்டல்களிலும், துரித உணவகங்களிலும், மெக்டோனல்ஸ் போன்ற பன்னாட்டு உணவகங்களிலும் இந்த கெச்சப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதென்ன தக்காளி சட்னி மாதிரி தானே என மக்கள் நினைப்பதுண்டு. வெஜிடபிள்ல என்ன பிரச்சினை இருக்கப் போவுது என கேள்விகளும் எழுவதுண்டு.

உண்மையில் இந்த கெச்சப் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு பொருள். லைக்கோபின் எனும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அளவில் இதில் இருக்கிறது என்பது மட்டுமே இதன் ஒரே பயன். மற்றபடி இதில் கலந்திருக்கும் 26% கார்போஹைட்ரேட் உடலின் சர்க்கரை அளவை சட்டென எகிற வைக்கும். கூடவே அதிக அளவு உப்புச் சத்தும் இதில் உண்டு. எனவே கெச்சப்பைப் பார்த்தால், ரொம்ப ஹெல்தி உணவு என நினைத்து ஓடாதீர்கள்.

 1. பாஸ்தா

எனக்கு இட்டாலியன் பாஸ்தா தான் புடிக்கும் என பீட்டர் விடும் பார்ட்டிகள் கொஞ்சம் கவனிங்க, பாஸ்தா ஒரு ஆபத்தான உணவு. சாதாரண பாஸ்தா வெறும் மைதா தான். அதில் வைட்டமின்களும் இல்லை, மினரல்களும் இல்லை, நார்ச்சத்தும் இல்லை. எதுவுமே இல்லை. அப்படி எந்த பயனும் இல்லாத இந்த பாஸ்தாவில் உப்பையும், கொழுப்பையும் சுவைக்காகக் கலந்து விடுவதால் அதைச் சாப்பிடுவதால் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது.

இந்த பாஸ்தாவைப் போலவே ஆபத்தான இன்னொரு உணவு வெள்ளை பிரட். உடம்பு சரியில்லேன்னா பிரட் சாப்பிடு என சொல்வார்கள். உண்மையில் பிரட் சாப்டா தான் உடம்பு சரியில்லாம ஆகும். இதை நினைவில் கொள்ளுங்கள்.

 1. சாக்லேட்

சாக்லேட்டில், சாக்லேட் ரொம்ப கம்மி !!! இதென்னடா புதுக்கரடி என வியக்க வேண்டாம். நாம் சாப்பிடுகின்ற சாக்லேட்களில் உண்மையான சாக்லேட் மிக மிகக் குறைந்த அளவு தான் இருக்கிறது. இதை பல ஆய்வுகளும், அறிக்கைகளும் நிரூபிக்கின்றன. சாதாரணமாக சுமார் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை தான் சாக்லேட்களில், சாக்லேட்ஸ் உண்டு. மற்றவை எல்லாமே பிற பொருட்களும், இனிப்பு, பதப்படுத்தும் பொருட்கள் போன்றவை தான்.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை, அளவுகளை வைத்திருக்கின்றன. அதற்குத் தக்கபடி நிறுவனங்கள் தங்களுடைய சாக்லேட்களை தயாரிக்கின்றன. சாக்லேட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அது உடலுக்கு நல்லது. ஆனால் உண்மையிலேயே சாக்லேட் அதிகம் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிட வேண்டும். சாப்பிட வேண்டுமென முடிவெடுத்தால் டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

 1. பாப்கார்ன்

பாப்கார்ன் உடலுக்கு ஆரோக்கிய மானது எனும் உண்மை பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. உண்மையில் அதில் நோய் எதிர்ப்பு சக்தியான பாலிஃபினால்ஸ் உண்டு. பாலிஃபினால்ஸ் உடலில் போதுமான அளவு இருந்தால் அது கேன்சர் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் பாப்கானுக்கு உண்டு.

காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது போல உடலுக்கு பாப்கார்னும் நல்லது. எனவே அடுத்த முறை பாப்கார்ன் சாப்பிட யோசிக்க வேண்டாம். ஆனால் பாப்கானின் மேல் லிட்டர் லிட்டராய் பட்டர் ஊற்றி அதன் ஆரோக்கியத்தைச் சிதைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

 1. டீ நல்லதா ? கெட்டதா ?

டீ முதலில் சமூகத்துக்கு அறிமுகமானபோதே ஒரு ஆரோக்கிய பானம் என்பதாகத் தான் அறிமுகம் ஆனது. எனவே இதில் ஆரோக்கியம் அதிகம் எனும் பரவலான நம்பிக்கை உண்டு. தினமும் டீ குடிப்பது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும் என்றும், அது இதய நோய்களை நீக்கும் என்றும் சில ஆய்வுகள் சொன்னதுண்டு. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

டீ விஷயத்தில் வருகின்ற ஆய்வுகள் சீராக‌ ஒரே சேய்தியைச் சொல்லவில்லை. ஒரு ஆய்வு டீ குடிப்பது நல்லது என சொல்லும் போது, இன்னொரு ஆய்வு அது கெட்டது என்கிறது. சில ஆய்வுகள் அதிக டீயை தொடர்ந்து பல ஆண்டுகள் குடிப்பது புரோஸ்டேட் கான்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என சொல்கின்றன. சில ஆய்வுகளோ, இல்லைவே இல்லை என்கின்றன.

விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே எது உண்மை என தெரியவரும். அதுவரை ஆய்வுகளை முழுமையாய் சார்ந்து டீயை வெறுக்கவோ, விரும்பவோ செய்யாமல் அளவோடு பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

 1. சாலட்

சாலட் சாப்பிடுவது நல்லது என்பார்கள். ஆனால் எங்கே சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நல்லதா கெட்டதா என முடிவு செய்யப்படும். வீட்டில் காய்கறிகளை அழகாய் நறுக்கி, உப்பு, பெப்பர், லெமன் போட்டு சாப்பிடுகிறீர்களெனில் அருமை ! அட்டகாசம் குறையொன்றுமில்லை. ஆனால் அதே சாலட்டை மெக்டானல்ஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் சாப்பிடுவதாக இருந்தால் நல்லதல்ல என்பது ஆச்சரியமான விஷயம்.

அத்தகைய துரித உணவகங்களில் உங்களுடைய சாலட் சுத்தமாகக் கிடைப்பதில்லை, அதோடு பல பொருட்களை இணைத்து அதன் ஆரோக்கியத்தைச் சிதைத்து விடுகின்றனர். அங்கெல்லாம் சாப்பிடும் சாலெட்கள் சுவை அதிகமாய் இருப்பதன் காரணம் அது தான். குறிப்பாக அதிக கொழுப்பு, இனிப்பு போன்றவை உங்களுடைய சாலட் மூலம் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயனை அழித்து கெடுதலையே உருவாக்கும். எனவே எங்கே எப்படி சாலட்டைச் சாப்பிட்டாலும் அது நல்லது எனும் சிந்தனை வேண்டாம்.

10 முட்டை !

முட்டை மிகப்பெரிய ஆபத்தான கொழுப்புச் சத்துள்ள உணவு என பலரும் பேசுவதுண்டு. உண்மையில் முட்டை மிகப்பெரிய ஆரோக்கிய உணவு. முட்டையில் கொழுப்பு உண்டு என்பது உண்மை தான். ஆனால் அது சேச்சுரேட்டர் ஃபேட் அதாவது நிறைவுற்ற கொழுப்பு போல உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. நிறைவற்ற கொழுப்பு வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே இதில் உண்டு.

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. வேக வைத்த முட்டை சாப்பிடுவது அதிக பலனளிக்கும். ஒரு முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொழுப்பு உண்டு. ஆனால் இது உடலில் இரத்தத்திலுள்ள கொழுப்பை அதிகரிப்பதில்லை. எனவே முட்டையை வெறுக்க வேண்டாம். அசைவப் பிரியர்கள் தங்கள் உணவில் தாரளமாக முட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம். காலையில் அல்லது மதியம் முட்டை சாப்பிடுவது நல்லது. இரவில் முட்டையைத் தவிருங்கள்.