தூரிகையுடன் ஓர் காரிகை

Image result for Girl in dream

யாரடி நீ.

எப்போதேனும் என்
கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய்.

தூரிகை தொட்டெடுத்து
முத்தச்சாயம் பூசி
என்னை
நித்திரைத் தொட்டிலில்
விட்டுச் செல்கிறாய்.

கனவுகளில்
பேருந்துகள் நகர்ந்தால்
நீ
பயணியாகிறாய்,
நதி நடந்தால்
ஈரமாய் ஓர்
ஓரமாய் கரையேறுகிறாய்.

அலுவலகக் கனவுகளில்
நீ
எப்போதேனும்
எட்டிப் பார்த்துச் செல்கிறாய்,

கடற்கரைக் கனவுகளில்
சிலநேரம்
மணல் கிளறி நடக்கிறாய்.

விளையாடினாலும்,
உரையாடினாலும்
நீ
விலகாதிருக்கிறாய்.

ஆனாலும்,
உன் முகத்தை
பகல் வெளிச்சத்தில்
மீண்டும் மனசில்
பிரதியெடுக்க முடிந்ததில்லை.

ஓர் பனிக்கால
மேகமூட்டத்தில் ஒளியும்
வெள்ளைப் பூவாகவே
நீ
விளையாடுகிறாய்.

இன்றேனும்
சரியாய்ப் பார்க்கவேண்டும்
எனும்
கனவுடன் தான்
என்
கனவுகள் ஆரம்பமாகின்றன.
தினந்தோறும்.

Advertisements

Love

Related image
எதிர்பார்ப்பு
ஒவ்வொரு முறையும்
தொலைபேசி ஒலிக்கும் போது
மனதின் மதில்ச்சுவர்களில்
ஆக்ரோஷமாய் அடிக்கும்
ஆனந்த அலையை
நீயில்லை எனும்போது எழும்
ஏமாற்றத்தில்
உள்ளிளுத்துக் கொள்கிறது
இதயக் கடல்.

 

 

ஹைக்கூக் குவியல்
ஒரு சிறுகதை படித்தேன்
என்று
புத்தகத்தை அணைத்துக் கொண்டு
என்னிடம் நீ
கதை சொல்லும் போதெல்லாம்
உன்
இமைகளின் படபடப்பில்,
விரியும் புருவத்தின் பரபரப்பில்,
அசையும் உதடுகளின் அழகிய நாட்டியத்தில்
நூறு ஹைக்கூக்கள் படித்துவிட்டு.
நல்லாயிருக்கா
என்று நீ கேட்கும் போதெல்லாம்
மிகவும் அருமை என்றிருக்கிறேன்
சிறுகதையின் ஒரு வரிகூட கேட்காமல்..

Image result for girl sad

வலிய என் பாதை நெடுகிலும்
வலிய வந்து
வலி விதைத்தவனே..

வெப்பம் விற்கும் பாலை வெளியில்
கண்­ர் இறக்குமதிக்காய்
என் கண்களைக்
களவுசெய்தவனே .

இதோ சுடும் மணல் வெளியில்
துளிகள்
விழுவதற்குள்
உப்பாய் உறைந்து போகின்றன.

விரல்களின் நெருக்கம் விலகியபின்
உன் நினைவுகளின்
நெருக்கம் நொறுக்குகிறது.

இளையவளின்
இதயக் கூட்டுக்குள்
கள்ளிகள் முளைப்பதால்
பிராணன் பிரிகிறது.

விசிறிச் சென்ற இலவம் பஞ்சை
காய்க்குள்அடைக்கும்
காலம் வருமோ
காலன் வரும் முன் ?

நத்தையோட்டுக் கவசம் போட்டு
நடக்கப் பழகியது
பிஞ்சு வயது.
இன்று என் கடிகாரம் போடுகிறது
நத்தையோட்டுக் கவசம்.

என் நகக் கண்ணில்
அழுக்கு மிஞ்சியிருப்பதையே
அனுமதிக்காத நீ
இன்று என் முகக் கண்ணில்
கண்­ர் மட்டுமே எஞ்சியிருப்பதை
கண்டிக்க மறுப்பதேனோ ?

என் கன்னக் குழிகளுக்குள்
காதல் இருப்பதாய் சொன்ன நீ
என் உள்ளக் குழியில்
உலை கொதிப்பதை
உணர மறுப்பதேனோ ?

உன் காதல் வலைக்குள்
என் சிறகுகள் சிக்கியபின்
கால்களையும் வெட்டிவிட்டு
கடந்து போகிறாயே .

மறக்க நினைக்கும் நிமிடங்கள்
உன்னை மறக்க மறுத்து
நிலைத்து நினைப்பதால்.

ஒளிவிழும் திசையெங்கும்
விழி விரிக்கிறேன்
உயிரே.
என் உயிர் வரும் திசைபார்த்து
என் ஆயுளை எரிக்கிறேன்.

நிஜம்

Image result for cute girl fantasy gif
மேற்கு வானம் மஞ்சள் பூசியதால்
குளிராடை போர்த்தி
வெப்பம் குறைந்த காற்றுடன்
குசலம் விசாரிக்கும் தெப்பம் .

அல்லி பிணைத்த தாமரை விலக்கி
வெள்ளிப் பாதத் துடுப்புடன்
வெள்ளை வாத்துக் கூட்டம்
சலனத் தாமரையாய்
தங்க நீரில் மிதந்து களிக்கும்.

அக்கரையின் காற்றில் விரவி
தாழக் கரையில் தவழ்ந்து வரும்
தாழம்பூ வாசம்
வண்ணத்துப் பூச்சிகளைக் கொஞ்சம்
வம்புக்கிழுக்கும்.

பச்சை கொட்டிய
வளைகொண்ட வயலின் வரப்புகளில்
நதியோர நண்டுகள் வந்து
சுதியோடு நடை பயிலும்.

மஞ்சள் பூசிய மினுமினுப்பில்
பத்து மணிப் பூக்கள்
பாத்திகளின் ஓரம் முழுதும்
பளபளவென பரவிக் கிடக்கும்.

கன்னிப் பெண்ணின்
குலுங்கும் வளையலாய்
தேகத்தில் மோதும் நதியின் ஒரங்கள்
மோகத்தின் முதலிரவென
உடைந்து சிதறும்..

வாழை மரங்களின்
விரிந்த இலைகளில்
பொன்வண்டுக் கூட்டம் வந்து
பொம்மலாட்டம் நடத்தும்.

என் ஒவ்வொரு சுவடுகளிலும்
பொட்டுவைத்துக் கொள்ளும்
பூமித்தாயின்
பூரிக்கும் புன்னகைச் சோலையில் நான்.

ஆயிரம் அழகுகள்
அணிவகுத்த போதும்
நினைவுகள் மட்டும்
கோடிக் கண் கடன்வாங்கி
உன்னை மட்டும் பார்த்துக் கிடக்கும்.

கையில்
புன்னகை ஒட்டி வைத்த
உன் புகைப்படம்.

TOP 10 : தொலைக்காட்சித் தொடர்கள்

Image result for the moment of truth series

உலக அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் எப்படி இருக்கின்றன ? நம்ம ஊர் டிவி போல அழுகாச்சி தொடர்களாலும், இளமை ஆட்டங்களாலும் நிரம்பியிருக்கிறதா ? இல்லை ஏதேனும் புதுமை இருக்கிறதா ? சர்வதேச சானல்களை புரட்டி எடுத்ததில் சுவாரஸ்யமாய்க் கிடைத்த பத்து நிகழ்ச்சிகள் இவை.

  1. ஹாண்டிங்  

காஞ்ஜுரிங் போல சினிமா விஷயமல்ல இது. உண்மையிலேயே பேய்களைப் பார்த்தவர்களின் பதறடிக்கும் வாக்குமூலம். ” இரத்தத்தை உறைய வைக்கும், மயிற்கூச்செரிய வைக்கும்”  என்றெல்லாம் அடைமொழி கொடுக்கலாம் இந்த சீரியலுக்கு. பேய்களின் அட்டகாசம், பேய் ஓட்டுவது, பேயை வரவழைப்பது, காட்சி தெரிவது என திடுக் திடுக் நிமிடங்களைப் பதிவு செய்வது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். கற்பனை கலக்காத அக்மார்க் உண்மைகளுக்கு மட்டுமே இதில் அனுமதி என்கின்றனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள்.

பேய்களை நேரில் பார்த்தவர்கள் அந்த நிகழ்ச்சியை விளக்கும் போது அவர்களுடைய கண்களின் மின்னும் பேய் பயமே நிகழ்ச்சியின் ஹைலைட். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, தைவான் என உலகின் பல இடங்களிலும் பறந்து பறந்து நிகழ்ச்சி தயாராக்குவது இன்னொரு ஸ்பெஷல். நிஜமாய் பேய்களைப் பார்த்தவர்களின் காட்சி விவரணைகள் நமது முதுகெலும்பில் ஐஸ் நதியை ஓட வைக்கிறது !

  1. டெஸ்ட்ராய்ட் இன் செகண்ட்ஸ்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல, சட்டுன்னு நடந்து போச்சுஎன சொல்கிறோமல்லவா ? அந்த ஒன்லைன் தான் இந்த நிகழ்ச்சியின் மையம். ரன்வேயில் சாதாரணமாய் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் சட்டென தீப்பிடிக்கும். வேகமாய் போய்க்கொண்டிருக்கும் படகுகள் எதிர்பாராமல் மோதிச் சிதறும். ரேஸ் கார்கள் இரண்டு மோதி வெடிக்கும். அமைதியாக இருக்கும் இடத்தில் திடீரென வெடி குண்டு வெடிக்கும். இவையெல்லாம் இந்த நிகழ்ச்சியின் சில சாம்பிள்கள்.   

பார்வையாளனின் மனதில் அதிர்ச்சிக் கண்ணிவெடியை வெடிக்க வைத்து, நிகழ்ச்சியின் பின்னணியை விரிவாக அலசுவது இந்த நிகழ்ச்சி. கற்பனை, கிராபிக்ஸ் கலக்காத உண்மை சம்பவங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். இதன் குறையாத திரில்லுக்கு எக்கச்சக்கமாய் ரசிகர்கள். செம ஹிட் நிகழ்ச்சியாய் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் துவங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.  

  1. டர்ட்டி ஜாப்

தலைப்பை மறுபடியும் வாசிக்க வேண்டாம். உண்மை தான். இப்படியும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இருக்குமா ? என வியக்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி. யாருமே செய்ய வெறுக்கும், கூச்சப்படும், முகம் சுழிக்கும் வேலைகள் தான் இந்த நிகழ்ச்சியின் கதா நாயகர்கள். நம்ம ஊர் உதாரணம் வேணும்னா சாக்கடை சுத்தம் செய்யறது என்று வெச்சுக்கலாம். வெறுமனே அந்த நிகழ்ச்சியைப் பற்றிமூக்கையும், கேமராவையும்பிடித்துக் கொண்டு பேசுவதல்ல இந்த ஷோ.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் மைக் ரோவே அந்த கடினமான வேலையில் குதித்து ஒரு நாள் வேலை செய்து அதன் சிரமங்களை சுவாரஸ்யமாய் விளக்குவதால் இந்த நிகழ்ச்சி படு பயங்கர ஹிட். பெரும்பாலும் இப்படிப்பட்ட அழுக்கான வேலை செய்பவர்கள் உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அழுக்கில்லாத வேலை செய்பவர்கள் தான் அழுது வடிகிறார்கள் என்பது இவர் தரும் தத்துவ பளிச் ! சுமார் ஏழு ஆண்டுகள் பட்டையைக் கிளப்பிய இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சின்ன பிரேக் விட்டிருக்கிறார்கள்.

  1. பிளைண்ட் டேட்

மேலை நாடுகளில் ஏறக்குறைய எல்லா சானல்களிலும் அரைக்கப்படும் ஒரு நிகழ்ச்சி டேட்டிங் ஷோ. நம்ம ஊர்ஜோடி நம்பர் 1” போல இத்தகைய டேட்டிங் ஷோக்களிலும் ஒரு ஜோடி வெற்றி பெறும் ! யூகேவிலுள்ள பிளைண்ட் டேட் ஷோ இதில் முக்கியமானது.  இந்த ஷோவின் சாராம்சம் இது தான். மூன்று பெண்கள் வருவார்கள். அவர்கள் டேட்டிங் செல்ல ஒரு  ஆணை தேர்வு செய்யவேண்டும். ஆளை நேரில் பார்க்க முடியாது, போனில் பேசி தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்தபின் நேரில் தரிசனம் தருவார் காதலன். “அடடாஇவனையா செலக்ட் பண்ணினேன்…” எனும் பெருமூச்சுகள் ஆரம்ப சுவாரஸ்யம். அப்புறமென்ன ஜோடிகள் டேட்டிங் செல்ல வேண்டும். அதைவெட்கம் கெட்டகேமரா விடாமல் பின் தொடர்ந்து படம் பிடிக்கும். இதன் ஆஸ்திரேலிய உதாரணம் பெர்பக்ட் மேட்ச் ஷோ. எப்படிப் பட்ட பெயரில் வந்தாலும் இதற்கென குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். உலகெங்கும் பல்வேறு பெயர்களில் வலம் வரும் இந்த நிகழ்ச்சி இளசுகளை வசீகரிக்கும் புதுமையும், காமெடியும் கலந்த நிகழ்ச்சி.

  1. இண்டிப்பெண்டண்ட் லென்ஸ்

வாங்க பழகலாம்என பார்வையாளர்களை வசீகரிக்கும் நிகழ்ச்சி இது. திறமையானவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கலாம். சொல்லப்போனால் இதில் நிகழ்ச்சியை  நடத்துவதே பார்வையாளர்கள் தான்.

அதாவது, பார்வையாளர்கள் எடுக்கும் சிறு சிறு வீடியோ பதிவுகளைக் கொண்டு தான் இந்த நிகழ்ச்சியே அமைக்கப்படுகிறது. கிளிப்பிங்ஸ் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில நிமிடங்கள் ஓடும் உங்கள் குழந்தையின் நகைச்சுவை சேட்டையாய் இருக்கலாம். உங்கள் செல்ல நாய்க்குட்டி செய்யும் அறிவு ஜீவித் தனங்களாக இருக்கலாம். எதேர்ச்சையாய் படம் பிடித்த எதிர்பாராத சில சுவாரஸ்ய வீடியோக்களாய் இருக்கலாம், அல்லது திட்டமிட்டே எடுத்த குறு நாடகங்களாகவும் இருக்கலாம்.   சிறந்த படங்களுக்குப் பரிசுகளும் உண்டு என்பது இதன் ஹிட் அம்சம்.

பார்வையாளர்களே இதில் ஹீரோக்கள் என்பதால் மக்களோடு எளிதில் இந்த நிகழ்ச்சி கலந்து விடுகிறது.

  1. ஜஸ்ட் மினிட்

ஒரு நிமிட நேரம் பேசவேண்டும். சொன்ன வார்த்தையைத் திரும்ப சொல்லக் கூடாது, தொடர்ச்சியாகப் பேச வேண்டும், சொல்ல வேண்டிய கருத்தை ஒட்டியே பேசவேண்டும். அட.. இது தான் தெரியுமே ! நம்ம ஊர் ரேடியோக்களில் வரும் நிகழ்ச்சி என சிலாகிக்கிறீர்களா ?. இந்த நிகழ்ச்சியின் முதல் சுவடு 1951ல் யூகேவில் ஆரம்பித்த ஒன் மினிட் பிளீஸ் எனும் நிகழ்ச்சி தான்.

அது பல்வேறு மாறுதல்களைக் கடந்து 1967ல்ஜஸ்ட் மினிட்என்றானது. கிட்டத்தட்ட இப்போதைய வெர்ஷன் அது ! இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் பின்னர் காப்பியடிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?. ஸ்வீடன் நாட்டில் இந்த நிகழ்ச்சியின் பெயர்பா மினூடென் ! “. இந்த நிகழ்ச்சி மக்களுக்குப் பழகப் பழக, சின்னச் சின்னதாய் ஒவ்வொரு நிபந்தனைகளை அதிகரித்து நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகின்றனர்.

  1. மே டே

மேடே மேடே மேடேஎன்று மூன்று தடவை சொன்னால் ஏதோ பெரிய ஆபத்து என்று அர்த்தம். பெரும்பாலும் கப்பல், விமான தகவல் தொடர்பில் இந்த குறியீடு நடத்தப்படும். அந்த பெயரையே இந்த நிகழ்ச்சிக்கு சூட்டிவிட்டார்கள். காரணம், இந்த நிகழ்ச்சி அலசப் போவது அத்தகைய விஷயங்களைத் தான்.

குற்றம்….. !  நடந்தது என்ன?” ரேஞ்சுக்கு நடத்தப்படும் இன்வெஸ்டிகேஷன் ஷோ இது. சுமார் 60 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வடிவில் ஒளிபரப்பாகிறது.

விமான விபத்துகள் குறித்த இன்வெஸ்டிகேஷன் தான் இதன் மையம். விபத்துக்கு முன், விபத்தின் போது, விபத்துக்குப் பின், என பல கட்டங்களாக நிகழ்ச்சி விரியும். பிளாக்பாக்ஸ் தேடுதல் போன்றவற்றை மிக விரிவாக சுவாரஸ்யங்களுடன் விளக்குவது இதன் ஹைலைட். உண்மை சம்பவங்களின் மர்மங்கள் அவிழ்வதில் இருக்கும் சுவாரஸ்யம் வலி மிகுந்தது. அது தான் இந்த நிகழ்ச்சியின் பலம்.

  1. ஒன் வே அவுட்

ஒன் வே அவுட் என்பது சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் அடங்கிய நிகழ்ச்சி. “ஐயோ….” என பயத்தில் பார்வையாளர்களைக் கண் மூட வைப்பதே இதன் நோக்கம் !  இந்த நிகழ்ச்சியை நடத்திய ஜோனதன் குட்வின்ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரிஎன்கிறார். உடல் முழுதும் இரண்டு இலட்சம் தேனீக்களுடன், ஒரு சிறு பெட்டியில் அடைந்து கிடப்பார். கொஞ்சம் அசைந்தாலும் தேனீக்கள் ஜோனதனின் தேனை எடுத்துவிடும். அந்த பெட்டியை ஆடிக்கொண்டிருக்கும் வாஷின் மிஷினின் மேல் வைக்கச் சொல்வார். பார்வையாளர்களோ பதட்டத்தில் மிதப்பார்கள்.

ஒரு ஷோவில் ஒரு பெட்டிக்குள் அடைபட்டு, அந்த பெட்டியை மலை உச்சியிலிருந்து உருட்டி விடச் சொல்வார். நிமிடத்துக்கு 126 முறை உருண்டு வரும் பெட்டியிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவார்.  உடைந்து கிடக்கும் கண்ணாடிச் சில் குவியலில் செருப்பில்லாமல் நடப்பார், ஆழமில்லாத ஆற்றில் உயரத்திலிருந்து குதிப்பார் !  இந்த ஷோ நடக்கும் போதெல்லாம் விளம்பரதாரர்களுக்கு வேட்டை தான் ! இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறது.

  1. மித் பஸ்டர்ஸ்

இதைத் தான் நாங்க காலங் காலமா கடைபிடிக்கிறோம்என பல விஷயங்கள் நம்மிடையே உண்டு.  அதில் பல விஷயங்கள் மூட நம்பிக்கைகள் தான் என்பது பகுத்தறிவாளர்களின் வாதம். இதைத் தான் மித் என்கிறோம். அந்த மித்தை உடைப்பது தான் இந்த நிகழ்ச்சி.

உலகெங்கும் படு வரவேற்பு பெற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சி இந்த மித் பஸ்டர்ஸ். அமெரிக்கா துவங்கி மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மூட நம்பிக்கைகள், இண்டர்நெட்டில் உலவும் தில்லாலங்கடி கதைகள், போன்றவற்றின் உண்மைத் தன்மைகளை புரட்டிப் போடும் நிகழ்ச்சி இது. “அடஅப்படியா ?” என வியக்கவும், “அட.. இதையா நான் நம்பிட்டிருந்தேன்என வெட்கப்படவும் வைக்கும் ஷோ இது. மிகுந்த சுவாரஸ்யமான ஒரு மர்ம நாவல் போன்ற இந்த ஷோவுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு.  

  1. மொமண்ட் ஆஃப் ட்ரூத்

மொமண்ட் ஆஃப் ட்ரூத்ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. உலகெங்கும் பல விதங்களில் நடத்தப்படும் செம ஹிட் ஷோ இது! இருபத்து ஒரு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு கொஞ்சம் கூட கலப்படமில்லாத  “உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் கருவி காட்டிக் கொடுத்துவிடும். “கோடீஸ்வரன்நிகழ்ச்சி போல கடினமான கேள்விகள் ஏதும் இல்லை.  உங்களுக்கு சர்வ நிச்சயமாய் விடை தெரிந்த சிம்பிள் கேள்விகள் தான்.  !

ஆனால் அதைச் சொல்லி ஜாக்பாட் பரிசுத் தொகையான 5 இலட்சம் டாலர்களை வாங்க ஆளில்லை. காரணம் கேள்விகள் அத்தனை பர்சனல் ! “நேற்று நைட் விமலாவை தள்ளிட்டு கமலா தியேட்டருக்குப் போனியாஎனும் கேள்வி போல சிக்கலில் மாட்டி விடும் கேள்விகளும், “உங்க ஜட்டி கிழிஞ்சிருக்காஎன்பது போன்ற அவமானகரமான கேள்விகளும் இதில் அடக்கம் ! அடக்கடவுளே…  யாருக்கு வேணும் பரிசு ?

உலக வர்த்தகக் கட்டிடம் பேசுகிறேன்..

Image result for 9/11

நெடு நாட்களாய்
நெஞ்சு நிமிர்த்தி நின்றேன்
விழுப்புண் கொடுத்து
என்னை
விழ வைத்து விட்டீர்கள்.

நியூயார்க் நகரின்
நீளமான சாலைகள்
என் நிழல் விழுந்ததால்
சிறிதாகிக் கிடந்ததுண்டு.

சுதந்திர தேவியின்
தீபச் சுடர்
என் நிழல் பூசியதால்
கருப்பாய் தோன்றியதுண்டு.

கால்வலிக்கும் மேகங்களும்,
விழுந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகளும்
என்
தலைமேல் அமர்ந்து
ஓய்வெடுத்ததுண்டு.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
ஓர்
வியப்பு இடைவெளியில்
என்மேல்
விழுந்து கிடந்த விழிகள் ஏராளம்..

நினைத்திருக்கவே இல்லை
பாசக் கயிறொன்று
பூமியிலிருந்து பாயுமென்று.

என் நெற்றிக்கு
நெருப்புப் பொட்டிடும் வேகத்தில்
விரைவாய் விமானம் நெருங்கிய போது
விலகி ஓட முடியாமல்
என்
கால்களைச் சுற்றிலும் கட்டிடங்கள்.

மூச்சிரைக்க
மூக்கு மோதி
என் தலை உடைத்து
தற்கொலை செய்தது அந்த
மனசாட்சி இல்லாத
மரண வாகனம்.

ஒற்றைச் சிதையில்
உயிர்களை அடுக்கி
தீவைத்துச் சென்றது
தீவிரவாதம்.

நான் எரிந்தபோது
ஒரு சின்னம்
அழிவதாய் தான் நினைத்தேன்,
என்னுள் பலர் எரிந்தபோது தான்
நானே
நினைவுச் சின்னமாய் உணர்ந்தேன்.

குதறப்பட்டு நான் குற்றுயிராகி
கைத்தடியில்லாத குருட்டுக் கிழவனாய்
பொல பொலவென்று உதிர்ந்தபோது,
என்னுள் நசுங்கிய உயிர்களை எண்ணி
குற்ற உணர்ச்சி குறுகுறுக்கிறது.

என் இடிபாடுகளுக்கிடையே
இறுகிக் கிடக்கின்றன
சிதைந்துபோன இதயங்கள்.

என்
முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதால்
முக்கால் வாசி முனைகளிலும்
உடைந்துபோன எலும்புகளின் வாசம்.

என்
காலடியில் கிடந்து
கதறும் நகரம்
கசிந்த கண்ணீ­ரில்
அணைய முடியாமல் எரிகிறேன்.

என்
புகையோடு சேர்ந்து
காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன
பகை பலிகொண்ட
அரை ஆயுள் ஆன்மாக்கள்.

என்னை சிரச்சேதம் செய்ததில்,
ஓரு ஆச்சரியம்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது

ஒரு வரலாறு
இரத்த ஆறாய் உருமாறி விட்டது.

ஒரு நகரத்தின்
இரு கண்கள்
இருட்டாக்கப் பட்டு விட்டன.

என்னோடு சேர்ந்து
ரத்தமும் சதையுமாய்
செத்துப் போனவர்களை
சத்தமிடும் நகரத்தில் புதைத்துவிட்டு.
நான் மட்டும்
நாளை எழக்கூடும்.

என்
இறுதி மூச்சின் முடிவுரையாய்
நான்
மரணவாக்கு மூலம் தர விரும்பவில்லை.
கடைசி ஆசையை
முன் வைக்கவே விரும்புகிறேன்.

கட்டிடங்கள்
மண்ணால் ஆனவை
விழுந்தபின்னும் மனிதரால் எழும்பிவிடும்.
மனிதர்களோ
மாண்புகளால் ஆனவர்கள்
சிதைக்கும் முன்
சில வினாடியேனும் சிந்தியுங்கள்.

 

காதலைக் காதலி.

Image result for Girl walking paining

காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.

தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.

நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.

ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.

பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.

கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.

பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.

இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.

புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.

காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.

காதல் தோற்றதில்லை ..

Image result for Love sad fantasy gif

காதலில் தோல்வி
என்பதை
ஒத்துக் கொள்ள முடிவதில்லை
காரணம்
காதல் தோற்பதில்லை .

எனக்குள்
இளைப்பாறிக் கிடந்த
உன் இதயம் இன்று
இடம் மாறி இருக்கலாம்.

என்
இலைகளுக்கிடையே இருந்த
உன் கூட்டை
இன்று நீ
நீ வேறு மரத்துக்கு
மாற்றி இருக்கலாம்..

அதற்காக
நீ
எனக்களித்த பூக்கள் எல்லாம்
சருகுகள் என்று என்னால்
பிரகடனப்படுத்த முடிவதில்லை.

நீ
தேவதை தான் !
கோட்டை மாறியதால்
கொள்ளிவாய்ப் பிசாசாக முடியாது.

வைகையாற்றின் ஒரு துளியாய்,
குற்றால அருவியின்
ஒரு குளிர்த் துண்டாய்,
எனக்குள்
நீ இருந்த இடம்
இன்னும் எனக்கு சொர்க்கம் தானடி.

உன்னோடிருந்து நான் சுவாசித்த
கடற்கரைக் காற்றெல்லாம்
சோகத்தின் முள்முடிகள்
என்று
சம்மதிக்க முடியவில்லை.

தோளில் சாய்ந்து கொண்டு
கண்ணீ­ரின் ஒரு சொட்டை
என்
கன்னத்துக்குக் கொடுத்துவிட்டு
நீ தந்த காதல்
இன்னும் எனக்குள் இருக்கிறது.

எத்தனையோ முறை
நீ கொடுத்த
முத்தங்களைச் சுமந்தேன்
இந்த முறை
நீ கொடுத்த
சிலுவையைச் சுமக்கிறேன்.

கடந்து போன வினாடி
நிஜம்.
நுரையீரல் தொட்டுத் திரும்பிய சுவாசம்
நிஜம்.
எனில் கரைந்து
நீ கடைந்த காதல்
நிஜம்.

என் கவலை எல்லாம்
ஒன்றுதான் கண்மணி.
நீ
வந்து தங்கியபோது
விறகாய்க் கிடந்த என் கிளைகள்
இப்போது
கொத்துக் கொத்தாய் காய்த்திருக்கின்றன
கொத்தித் தின்ன தான்
நீ இல்லை.

 

 

பழைய இலைகள்.

Related image

ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி
கண்களால் கேட்பாய்.
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப்
பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும்
வாங்கித்தருவேன்.

யாருமே இல்லாத
மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்.
முரணாய்ப் பேசி
முரண்டு பிடிப்பாய்,
புரிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.

கால்வலிக்கிறது என்பாய்.
கண்ணில் தூசி என்பாய்.
புதிதாய் வாங்கிய
மாலையைப் பார் என்பாய்.
நமக்கிடையே இருக்கும்
இடைவெளியைக் குறைக்க
நீ இடும்
அறிக்கைகள் இவையென்றறிந்து,
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்.

இப்போதும்
மங்கலாய்க் கசியும்
நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை.

‘மாறிவிட்டேன்’ என்ற ஒற்றைச்சொல்லில்
என்னை
தூக்கிலிடும் முன்,
என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.

கேட்டாலும்
சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ – எனும் சொல்லைத் தவிர.

உன் பெயர் . என் கவிதை.

Related image

கண்மணி,

நீ இல்லாத தேசத்தில்,
என்னை நோக்கி
ஓராயிரம்
கண்கொத்திப் பாம்புகள்,
எனக்குத் தான் இதயத்தில்
உன் நினைவுகள்
காதல் கொத்தும் ஓசை.

விரிந்திருக்கும் விழிப்பரப்பில்
பூமியின்
பார்வைப் பச்சிலைகள்
பறிக்கப்பட மறுக்கின்றன,
இமைகளின் இடையிலும்
உன் நினைவுகளின்
தண்டவாளங்கள்
மட்டுமே தடதடக்கின்றன.

ஜன்னல் தாண்டி
என்னைப் பொத்தும் வெயில்,
மின்னல் போல நீ
உள்ளிருப்பதாய்
ஊடுருவிப் பார்த்துச் சொன்னது எனக்கு.

ஆனாலும்,
திரைச்žலை திறக்காமல்
வெறித்துப் பார்க்கும் வித்தை
நீ
விலகும் போது தானே வருகிறது.

இணையத்தின் இருக்கைகளில்
ஒரே பக்கத்தில்
ஒரு வார்த்தையும் படிக்காமல்
இமைகளை விலக்கி வைத்து
விழித்திருக்கிறேன்.

ஆனாலும்
உள்ளுக்குள் எதிரொலிக்கிறது
நீ கிசுகிசுத்துப் போன
காதோரக் கதைகள்.

என் படுக்கையைச் சுற்றிலும்
என்
கனவு சுவாசித்துக் கிடக்கிறது
நிறம் மாறிய காற்று,

கொடியது என்பது,
இளமையில் வறுமையா ?
இல்லை
இளமையில் வெறுமையா?

காணா கவலை நெருக்கினால்
கவிதை எழுதுங்கள்
என்றாய்,
வினாடிக்கொரு தரம்
உள்ளுக்குள் உச்சரிக்கிறேன்,
உனக்குச் சொந்தமான
என் கவிதையை.