கி.மு கதை : அபிமெலக்கும், அம்மிக்கல் பெண்ணும்…

இஸ்ரயேல் மக்களை மிதியானியர்களின் அடக்குமுறையிலிருந்து மீட்ட எருபாகால் என்னும் கிதியோனுக்கு, எழுபது மகன்களும் ஏராளமான மனைவியர்களும் இருந்தார்கள். எருபாகாலுக்கும் அவருடைய வேலைக்காரிக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் அபிமெலக்கு. அவன் தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பின் சகோதரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான்.

அவன் தன்னுடைய தாயின் சகோதரர்களிடம் போய்,
‘ பாருங்கள்… எருபாகாலின் எழுபது மகன்களுக்கே எங்கும் செல்வாக்கு. அவர்கள் தான் இனிமேல் இஸ்ரயேலர்களை ஆளப் போகிறார்களாம். அதை நாம் அனுமதிக்கக் கூடாது. எழுபதுபேர் ஆட்சியமைக்கவேண்டுமா ? உங்களின் இரத்த பந்தமான நான் ஆட்சி அமைக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்றான்

‘யார் ஆட்சியமைத்தால் எங்களுக்கு என்ன ?’ தாயின் சகோதரர்கள் கேட்டார்கள்.

‘அவர்களுடைய ஆட்சியில் உங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா ?’

‘நீ ஆட்சியமைத்தால் எங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவாயா ?’

‘கண்டிப்பாக. நான் ஆட்சியமைத்தால் அது உங்கள் ஆட்சியாகத் தான் இருக்கும். உங்கள் சார்பாக நான் அரசனாக இருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நிறைவேற்றுவேன். நிறைவேற்றப்படாதது என உங்கள் தேவைகள் ஒன்று கூட இருக்காது’ அபிமெலக்கு வாக்குறுதி கொடுத்தான்.

அபிமெலெக்கின் ஆசைவார்த்தைகளில் மயங்கிய அவர்கள் போய் நகரெங்கும் அபிமெலக்குக்கு ஆதரவாக மக்களைத் திரட்டினார்கள். அவர்கள் நகரின் மையத்தில் நின்று கொண்டு,

‘அபிமெலக்கு நல்ல திறமையானவன். அவன் அரசனானால் நன்றாக இருக்கும்’

‘எருபாகாலின் திறமை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லை. ஆனால் அபிமெலெக்கு திறமையானவன்’

‘அபிமெலெக்கு நிறைய வாக்குறுதிகள் தந்திருக்கிறான்’

என்றெல்லாம் பேசி, அபிமெலக்கு தான் அரசராகும் திறமை வாய்ந்தவன், ஒரு நல்ல தலைவன் என்னும் எண்ணத்தை நாட்டு மக்களிடையே பரப்பினார்கள்.

ஒருபுறம் அபிமெலெக்கின் ஆதரவாளர்கள் நகரில் அபிமெலெக்கைப் பற்றிப் புகழ் பரப்ப, மறுபுறம் அபிமெலக்கு தன்னுடன் முரடர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு நேராக எருபாகலின் மகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அவர்கள் எழுபதுபேரில் இளையவனான யோத்தாமைத் தவிர அனைவரையும் சிறைபிடித்தான். யோத்தாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பாறை இடுக்கு ஒன்றில் ஒளிந்திருந்தான்.

அபிமெலக்கு சிறைபிடித்த அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்தான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அபிமெலெக்கு தான் சிறைபிடித்திருந்த அத்தனை பேரையும் ஒவ்வொருவராய் ஒரே கல்லின் மீது வைத்து வெட்டிக் கொன்றான். அவர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது. மக்கள் அபிமெலெக்குவிற்குப் பயந்து அமைதிகாத்தார்கள். ஒளிந்திருந்து இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த யோத்தாம் உள்ளுக்குள் கதறி அழுதான்.
தன்னுடைய சகோதரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டும் தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என புலம்பினான்.

இந்தப் படுகொலை நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் யாரும் அபிமெலெக்கை எதிர்க்கவில்லை. அவர்கள் அனைவரும் அபிமெலக்கிற்கு அஞ்சி அவனையே அரசனாக ஏற்றுக் கொண்டனர்.

அபிமெலக்கும் அவனுடைய முரட்டுப் படையினரும் அந்த இடத்தை விட்டுப் போனதும் யோத்தாம் பாறையிடுக்கிலிருந்து வெளியே வந்து பாறையின் உச்சியில் ஏறி நின்றான்.

‘மக்களே… நீங்கள் ஏன் இத்தனை கோழைகளாகிப் போனீர்கள் ? நீங்கள் அரசனாக்கி இருப்பது யாரைத் தெரியுமா ? தன் சகோதரர்கள் அனைவரையும் ஈவு இரக்கமில்லாமல் வெட்டிக் கொன்ற ஒரு மனிதனை !… நான் சொல்வதைக் கேளுங்கள்’ யோத்தாம் உரத்த குரலில் சொன்னான்.

மக்கள் அனைவரும் அவன் சொல்வதைக் கேட்க பாறை அடியில் கூட்டமாகக் கூடினார்கள். யோத்தாம் தொடர்ந்தான். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

மரங்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாக ஒரு மரம் வேண்டும் என்று தேடத் துவங்கின. அவை முதலில் ஒலிவ மரத்திடம் போய் ,’ நீ தான் எங்களுக்கு அரசனாக வேண்டும். மரங்களின் அரசன் ஒலிவ மரம் என்று நாளை எல்லோரும் சொல்ல வேண்டும்’ என்று கேட்டன.
ஒலிவமரமோ, ‘ அதெல்லாம் என்னால் முடியாது. என் பணி எண்ணை தயாரிப்பில் உதவுவது. என் எண்ணையால் எல்லோரும் பயனடைகிறார்கள். எனவே நான் என்னுடைய பணியை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக முடியாது’ என்றது.

பின் மரங்கள் எல்லாம் அத்தி மரத்திடம் வந்தன.’ அத்தி மரமே அத்தி மரமே… நீ தான் மரங்களில் சிறப்பானவன். நீ எங்களின் அரசனாக சம்மதிக்கிறாயா ? ‘ என்று கேட்டன. அத்திமரமோ,’ எனக்கு பழங்களை விளைவிக்கும் வேலை இருக்கிறது. என்னால் உங்களுக்கு அரசனாக முடியாது. மன்னித்துவிடு’ என்று சொல்லி விண்ணப்பத்தை நிராகரித்தது.

மரங்கள் சுற்றுமுற்றும் பார்த்தன. அழகாய் கொத்துக் கொத்தாய்ப் பழங்களோடு திராட்சைக் கொடி ஒன்று அசைந்து கொண்டிருந்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன,’ திராட்சைக் கொடியே… நீ தான் எங்களுக்கு அரசனாகத் தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். நீயே எங்களுக்கு அரசனாக இருந்து எங்களை வழிநடத்து’ என்றன.
திராட்சைக் கொடியோ,’ அடடா… மனிதர்களையும், தெய்வங்களையும் மகிழ்விக்கும் திராட்சை இரசத்தை நான் தராமல் வேறு யார் தரமுடியும். எனக்கு அந்த வேலையே போதும். அதை விட்டு விட்டு உங்களுக்கு அரசனாக உல்லாசமாய் உலவ என்னால் முடியாது’ என்றது.

இப்படியே மரங்கள் எல்லா இடத்திலும் தங்களுக்கு அரசனைத் தேடித் தேடி அலுத்துப் போய் கடைசியில் முட்செடியிடம் வந்தன.
‘நீ எங்களுக்கு அரசனாகிறாயா ?’ என்று மரங்கள் கேட்கும் முன்னரே முட்செடி.
‘வாருங்கள். நான் தான் உங்களுக்கு அரசன். என்னை விடத் தகுதியானவன் ஒருவனை நீங்கள் பார்க்கவே முடியாது. எனவே நீங்கள் என்னை அரசனாக்க வேண்டும். என்னை நீங்கள் அரசனாக்காவிடில் உங்களைக் குத்துவேன், எரிந்து உங்களையும் எரிப்பேன்’ என்று மிரட்டியது. மரங்கள் முட்செடியை தங்கள் அரசனாக்கின.

யோத்தாம் கதை சொல்லி முடித்தான். மக்கள் புரியாமல் விழித்தார்கள்.

‘புரியவில்லையா ? நீங்கள் என் தந்தை உட்பட பலரிடம் அரசராகும் படி கேட்டீர்கள். அவர்களோ கடவுளே அரசர் என்று சொல்லி தங்கள் கடமைகளைச் செய்யப் போய் விட்டார்கள். இப்போது நீங்கள் அபிமெலக்கு என்னும் முட்புதரை அரசனாக்கி இருக்கிறீர்கள். இது அழிவுக்கான ஆரம்பம்’ என்றான்.

மக்கள் பேசாமல் இருந்தார்கள்.

‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் ? உங்களுக்காக மிதியானியரிடம் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போரிட்ட என் தந்தைக்கு நீங்கள் காட்டிய நன்றி மிகப் பெரிது. அவருடைய மகன்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டபோது அதை வெறுமனே வேடிக்கை பார்த்து நீங்கள் என் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி விட்டீர்கள்.’ யோத்தாம் கோபத்துடன் சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தலைமறைவானான்.

மக்கள் வருந்திய மனதோடு சென்றார்கள். அபிமெலக்கு அரசனாக ஆட்சி செய்யத் துவங்கினான். மூன்று வருடங்களுக்குப் பிறகு அபிமெலக்கின் ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தார்கள். மக்களில் பலர் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறினார்கள். நாட்டில் அமைதியும், ஒழுக்கமும் சீர்கேடானது.

அப்போது கலால் என்பவன் அந்த ஊர் மக்களின் நம்பிக்கைக்குரியவனாக விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினான்.
அவன் மக்களை நோக்கி,’ அபிமெலக்கு என்பவன் யார் ? ஏன் அவனைக் கண்டு பயப்படுகிறீர்கள் ? எனக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அபிமெலக்கை அழிப்பேன்..’  என்று மக்களுக்கு தைரியம் ஊட்டிக்கொண்டே இருந்தான்.

நகரின் அதிகாரியாய் இருந்த செபூலின் காதுகளுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவன் அரசன் அபிமெலக்குவிற்குத் தகவல் அனுப்பினான்.

தனக்கு எதிராய் ஒரு அலை ஆரம்பமாவதை அறிந்த அபிமெலக்கு, எப்படியாவது எதிரிகளை அழிக்க வேண்டும்  இல்லையேல் தன் ஆட்சி நிலைக்காது என்று முடிவெடுத்தான். உடனே அவன் தன் வீரர்களோடு சென்று இரவில் இருளோடு இருளாக விளை நிலங்களில் பதுங்கி கலால் இருக்கும் நகரை நோக்கி முன்னேறினான்.

செபூல் நகரைக் காவல் செய்து கொண்டிருக்க, கலால் தன்னுடைய ஆதரவாளர்களோடு நள்ளிரவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது மலைச்சரிவுகளில் அபிமெலெக்கு படைவீரர்களோடு வந்துகொண்டிருந்தான். படைவீரர்கள் மலைச்சரிவுகளில் இறங்கியபோது மரங்கள் அசைந்தன.  மலைச் சரிவுகளில் இருந்த விளைநிலங்களிலிருந்து ஆட்கள் இறங்கி வருவது கலாலுக்குத் தெரிந்ததும் பதட்டமானான்.

‘செபூல்… செபூல்… அதோ மலைகளிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள். ‘ கலால் பதட்டமாய் சொன்னான்.

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கலால். அது மலையின் நிழல். உனக்கு மனிதர்கள் போல தெரிகிறது’ செபூல் உள்ளுக்குள் வஞ்சமாய் சிரித்தான்.

‘இல்லை செபூல், நீ நகர காவலன் தானே.. நிழலுக்கும், நிஜத்துக்குமான வித்தியாசம் கூடவா உனக்குத் தெரியவில்லை ? இது மனிதர்கள் தான்’ என்று மீண்டும் சொன்னான். செபூல் மறுத்தான். ஆனால் கலாலோ மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தைக் செபூலிடம் சொல்லிக் கொண்டே இருக்க,

செபூல் கலாலை நோக்கித் திரும்பினான், ‘ ஆம்.. மனிதர்கள் தான்.. எனக்குத் தெரியும்’ செபூலின் முகத்தில் ஒரு வஞ்சகப் புன்னகை விரிந்தது.

‘உனக்குத் தெரியுமா ? அப்படியென்றால்…..’ கலாலின் முகத்தில் திகில் படர்ந்தது.

‘எனக்குத் தெரியும். நான் தான் வரச் சொன்னேன். அது அபிமெலக்கின் படை ! உன்னைத் தேடித் தான் அவர்கள் வருகிறார்கள்’ செபூல் சொன்னான்

‘என்னைத் தேடியா ? ஏ..ஏன் ?’ கலாலின் வார்த்தைகள் நடுங்கின.

‘நீதான் வாய்ப்புக் கிடைத்தால் அபிமெலக்கை கொன்று விடுவேன் என்றாயே… இது தான் அந்த வாய்ப்பு.. எங்கே அவனைக் கொல் பார்க்கலாம் ?’ செபூல் நகைத்தான்.

‘ஐயோ… உண்மையாகவா சொல்கிறீர்கள் ?’ கலால் பதறி எழுந்தான்.

‘ஆம்.. உன்னையும், உன் ஆதரவாளர்களால் நிறைந்திருக்கும் இந்த நகரையும், அழித்து ஒழிப்பதற்காகத் தான் அபிமெலக்கு படையுடன் வருகிறார்’ செபூல் சிரித்தான்.

கலால் சற்றும் தாமதிக்கவில்லை. சட்டென்று எழுந்து ஓட ஆரம்பித்தான். செபூல் சுதாரிக்கும் முன் கால்போன போக்கில் பின்னங்கால் பிடறியில் பட வேகமாய் ஓடி மறைந்தான். அப்போது அபிமெலக்கு நகருக்குள் நுழைந்தான். அங்கே கண்களுக்குத் தென்பட்ட அனைவரையும் கொன்று குவித்தான். அத்துடன் நின்றுவிடாமல் நகரிலேயே தங்கி, மறுநாள் காலையில் விளைநிலங்களுக்கு மக்கள் வந்தபோது சுற்றி வளைத்து அவர்களையும் கொன்றான்.

பயந்து போன மக்கள் கூட்டம் ஏல்பெரித்துக் கோயிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டது. கோயிலுக்குள் நுழைந்துவிட்டால் மன்னன் தங்களைக் கொல்லமாட்டான் என்று மக்கள் நினைத்தார்கள். அபிமெலெக்கு தான் எதற்கும் அஞ்சாதவன் ஆயிற்றே ! அவன் தன் படையினரைக் கொண்டு கோயிலை முழுவதுமாய் மரக் கிளைகளினால் மூடி மொத்தமாய் எரித்தான். கோயிலோடு சேர்ந்து மக்கள் மொத்தமும் அழிந்தார்கள்.

அன்று முழுவதும் அபிமெலெக்கின் வீரர்களுக்கு வேட்டை நாள். மனித வேட்டை நாள். அவர்கள் நகரின் மூலை முடுக்கு எங்கும் சென்று உயிரோடிருந்த அனைவரையும்  கொன்று குவித்தனர். பின் நகர் முழுவதும் உப்பைத் தூவினர்.

அங்கிருந்து அருகிலிருந்த தெபேசு நகருக்குச் சென்றான் அபிமெலக்கு. தெபேசு நகர மக்கள் அனைவரும் பயந்து போய் நகரின் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். பலர் கோட்டையின் உச்சிக்குச் சென்றனர்.

‘வாருங்கள். கோயிலுக்குத் தீயிட்டது போல இந்தக் கோட்டைக்கும் தீயிடுவோம். மக்கள் அனைவரும் வெந்து மடியட்டும்’ அபிமெலக்கு கர்ஜித்தான்.

வீரர்கள் பின் தொடர அவன் கோட்டையை நோக்கி முன்னேறினான். அங்கே கோட்டையின் மேல் ஒரு பெண் ஒரு அம்மிக் கல்லை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அபிமெலக்கு தனக்கு நேராக கீழே வந்தால் அவனைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். எப்படியாவது அபிமெலெக்கு தான் இருக்கும் இடத்துக்குக் கீழே வரட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அபிமெலக்கு கோட்டையை நெருங்கினான். மேலே பெண் காத்திருந்தாள். அவன் நேராக அந்தப் பெண் அமர்ந்திருந்த இடத்துக்குக் கீழாக வந்தான். அவள் உள்ளுக்குள் புன்னகைத்தாள். அவன் நெருங்கி வரக் காத்திருந்தாள்.

இதோ….

இதோ….

அபிமெலெக்கு கோட்டைக்கு மிக அருகே வந்தான். அவள் சற்றும் தாமதிக்கவில்லை, குறி பார்த்து அம்மிக் கல்லை மிகச் சரியாக அபிமெலக்கின் தலையில் போட்டாள்.

அபிமெலக்கின் தலை பிளந்தது ! கீழே விழுந்த அவன் கோட்டைக்கு மேலே பார்த்த போது வெற்றிச் சிரிப்புடன் தெரிந்தாள் அந்தப் பெண்.

‘அவமானம் ஒரு பெண் என்னைக் கொல்கிறாளா ? ஒரு பெண்ணை விட நான் வீரமில்லாதவன் ஆகிவிட்டேனா ? ‘ அபிமெலெக்கு உள்ளுக்குள் அவமானமாய் உணர்ந்தான். உடனே அவன் தன்னுடைய படைக்கலன் தாங்கும் பணியாளனை அழைத்தான்,

‘வா… என் அருகே விரைந்து வா… உன் வாளை எடுத்து என்னைக் குத்திக் கொல்’

‘தலைவரே… உம்மைக் கொல்வதா ? அது என்னால் முடியாது. முடியவே முடியாது’ பணியாளன் மறுத்தான்.

‘இல்லை… இது அரச ஆணை. அபிமெலக்கு ஒரு பெண்ணால் இறந்துபோனான் என்று நாளை உலகம் பேசக் கூடாது. என்னைக் கொன்றுவிடு…. ‘ அபிமெலக்கு சொன்னான். பணியாளனின் மறுமொழி பேசவில்லை.

அவன் அபிமெலெக்கை நெருங்கினான். அவனுடைய கைகளிலிருந்த வாளை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டான். வாளை அபிமெலெக்குவிற்கு நேராக உயர்த்திப் பிடித்து, அவனுடைய நெஞ்சில் வேகமாக இறக்கினான்.

வாள் அபிமெலெக்கை துளைத்து வெளியேற, அவன் இறந்தான்.

தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொன்று, நகரின் ஆயிரக்கணக்கான மக்களையும் படுகொலை செய்த கொடுங்கோல் மன்னன் அபிமெலக்கு இறந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதற்கெல்லாம் காரணமான அந்தப் பெண் மட்டும் கவனிக்கப்படவேயில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…