டிரம்பின் கொள்கைகளும், இந்திய ஐடி துறையும்

Image result for trump

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சி கண்டதிலிருந்தே நிலமைகள் மாறத் துவங்கி விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவில் பல இடங்களில் தலைவிரித்து ஆடியது. கடன் சுமையைத் தாங்காமல் மக்கள் தற்கொலை செய்த நிகழ்வுகள் கூட நடந்தன. ஆனால் நமது இந்திய ஐடி துறை வல்லுனர்களை இந்த மாற்றம் பாதிக்கவில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கு படையெடுப்பதும், அங்கே வசதியாக வாழ்வதும், வீடுகளை வாங்குவதும் என தங்கள் வாழ்க்கைத் தரத்தை அமெரிக்கர்களை விட மேலாக அமைத்துக் கொண்டனர். இவையெல்லாம் அமெரிக்கர்களின் ஆழ்மனதில் ஒரு சின்ன வெறுப்பை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதனால் தான் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே எனும் கோஷத்துடன் களமிறங்கிய டிரம்ப், பெரும்பாலான மக்களின் பிரியத்துக்குரியவராகிவிட்டார். ஐந்தாறு ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்த அனுபவத்தில் நான் கண்டுகொண்ட விஷயங்கள் சில உண்டு. அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா தான் உலகம், தாங்கள் தான் உலகிலேயே மேலானவர்கள் எனும் எண்ணம் உண்டு. வாழ்க்கைத் தரத்திலும், வேலை இடத்திலும் தங்களை விட ஒரு படி குறைவாய் இருந்தால் எந்த நாட்டினரையும் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.இதைத் தவிர இஸ்லாமிய நாடுகளின் மீதான போரை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த மனநிலையைத் தான் டிரம்ப் வெளிப்படுத்தி, வெற்றியும் பெற்றார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், அமெரிக்கர்களின் உள்ளுக்குள் உறைந்து கிடந்த அமெரிக்கத்துவா தான் இன்றைக்கு வெளிக்கிளம்பியிருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடு தான் ஹைச்.ஒன் பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியதும்.

மிக முக்கியமாக ஒரு இந்தியரை வேலைக்கு அழைத்து வருவதாய் இருந்தால் அவர்களுக்கு 1.3 இலட்சம் டாலர்கள் சம்பளம் கொடு என அமெரிக்கா நிபந்தனை விதித்திருக்கிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் பதறிவிட்டன. காரணம் இப்போதைக்கு இந்திய பொறியாளர்களின் சம்பளம் சராசரியாக 50 ஆயிரம் டாலர்கள் முதல் 1.20 இலட்சம் வரை மட்டும் தான். இதை விட அதிகம் சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தால் நிறுவனங்கள் நஷ்டமடையும். ஆன்சைட் எனப்படும் அமெரிக்கப் பணிகளினால் நிறுவனங்களுக்கு எந்த பயனும் இருக்காது, மாறாக நஷ்டமே உருவாகும்.

( சில பணிகளுக்கான ஊதியம் 36 ஆயிரம் டாலர் என குறையவும், சில பணிகளுக்கு 5 இலட்சம் டாலர் என எகிறவும் செய்யும். அவை விதிவிலக்கு. உதாரணமாக ஐபிஎம் நிறுவன ஹைச்.ஒன் பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 36 ஆயிரம் டாலர்கள், ஜெ.பி மார்கன் கம்பெனியின் அதிகபட்ச சம்பளம் 5 இலட்சம் என்கிறது பியூரோ ஆஃப் லேபர் ஸ்டாட்டிஸ்டிக்ஸ். )

ஹைச்.ஒன். விசாவில் அமெரிக்காவில் நுழைபவர்களுக்குத் தான் இந்த சம்பளக் கட்டுப்பாடு. அமெரிக்கர்களையே வேலைக்கு எடுத்தால் இந்த சம்பள கட்டுப்பாடு இல்லை. சுமார் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் சம்பளத்தில் அங்கே நல்ல ஊழியர்களைக் கண்டுபிடிக்க முடியும். இந்த கட்டுப்பாட்டின் மூலம் நிறுவனங்கள் அதிக விலைகொடுத்து இந்தியப் பணியாளர்களை கொண்டு வருவதற்குப் பதில் அங்கேயே உள்ள அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தும் முயற்சியில் ஈடுபடும். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பிற நாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைவதும் குறையும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் டிரம்ப்க்கு.

இன்றைக்கு, ஒரு பெரிய இந்திய நிறுவனத்தின் வழியாக‌ 35,000 ஹைச்.ஒன் விசா ஊழியர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்களுடைய சராசரி ஊதியம் 70 ஆயிரம் டாலர்கள் தான். அத்தனை ஊழியர்களுக்கும் அந்த நிறுவனம் சுமார் 90% சம்பள உயர்வு கொடுப்பது சாத்தியமற்றது. காரணம் கிளையன்ட்கள் தந்து கொண்டிருக்கும் பில்லிங் ரேட் எனப்படும் பணிக்கான விலையை அதிகரிக்கப் போவதில்லை !

அதேபோல அமெரிக்காவில் எந்த சிட்டியில் வேலை பார்க்கப் போகிறோமோ அதற்குத் தக்கபடி தான் இந்திய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்திருந்தன. கிராமத்தில் வேலை செய்வதற்கும், மும்பை சிட்டியில் வேலை செய்வதற்கும் ஒரே ஊதியம் என்பது சாத்தியமற்ற ஒன்று. இப்போது அந்த நிலமையை எப்படி கையாள்வது என்பதிலும் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது.

அமெரிக்காவில் பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகும். அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையும் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இந்தியாவிலுள்ள ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு எதுவும் நிகழாது.

பொதுவாக நிறுவனங்கள் 80:20 அல்லது 90:10 எனும் கொள்கையைக் கொண்டிருக்கின்றன. அதாவது 80 சதவீதம் ஊழியர்கள் இந்தியாவில் 20 சதவீதம் ஊழியர்கள் அமெரிக்காவில் என்பது இதன் பொருள். இனிமேல் அந்த விகிதம் மாறி 95:5 என்பது போல மாறலாம். இதன் மூலம் இந்தியாவில் அதிக ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அதே நேரம் அமெரிக்காவுக்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறையும்.

இந்த அறிவிப்பின் மூலம், நியர் ஷோர் எனப்படும் நாடுகள் அதிக பயன் பெறும். மெக்ஸிகோ, சிலி, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்காவிலிருந்து சில மணி நேர இடைவெளியில் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த தென்னமெரிக்க நாடுகளை ஐடி நிறுவனங்கள் நாடும். இங்கே ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைவு என்பது மிகப்பெரிய பிளஸ் !

ஹைச். ஒன் விசாவையே எல் விசாக்களுக்கு மாற்றாகத் தான் நிறுவனங்கள் பார்க்கின்றன. பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை அமெரிக்கா அனுப்ப எல் ஒன் விசாக்களைத் தான் முதலில் பயன்படுத்தி வந்தன. கடந்த சில ஆண்டுகளாய் அத்தகைய விசாக்கள் பெருமளவில் நிராகரிக்கப்படுவதால் நிறுவனங்கள் ஹைச்.என் விசாக்களைச் சார ஆரம்பித்தன. இப்போது எல்.ஒன் விசாக்களை மீண்டும் நாட வேண்டிய சூழல் வந்திருக்கிறது.

பெரிய‌ ஐடி நிறுவனங்கள் இந்த சூழலை எளிதில் எதிர்கொண்டுவிடும். ஆனால் ஹைச்.ஒன் விசாக்களின் மூலமாக ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை மட்டுமே தொழிலாகச் செய்து வரும் சின்ன, “பாடி ஷாப்பிங்” நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்.

ஹைச்.ஒன். விசாக்களெல்லாம் ஏதோ ஒரு சில இந்திய நிறுவனங்களின் கையில் இருப்பதாக ஒரு மாயை உண்டு. ஆனால் உண்மையில் டாப் 17 நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் வசம் இருப்பது வெறும் 15.9 சதவீதம் ஹைச்.ஒன்பி விசாக்கள் தான். மிச்சம் 84% சதவீதம் ஹைச்.1.பி விசாக்களும் பல்வேறு நிறுவனங்களின் மூலமாகவே இருக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்காவில் ஹைச்.ஒன்.விசாவுடன் குடியேறியிருக்கும் இந்தியர்களுக்கு இது ஒரு சவால். குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுக்க முடியாத நிறுவனங்கள் அவர்களை வேலையை விட்டு வெளியேற்றும். அவர்கள் அதிக சம்பளம் உடைய ஒரு வேலையை கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாகிப் போகும். வேலை இல்லை எனும் ஸ்டேட்டசில் அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு மேல் அவர்களால் அமெரிக்காவில் இருக்கவும் முடியாது. ஏற்கனவே வீடு வாங்கி செட்டிலானவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாய் அமையும்.

ஹைச்.ஒன் விசா முடிவடைந்து, மறுபடி புதுப்பிக்க வேண்டியிருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய சவால். அவர்களுக்கு நல்ல சம்பளத்தைத் தர ஏதேனும் நிறுவனம் தயாராய் இருந்தால் மட்டுமே தொடர்ந்து அவர்களால் அமெரிக்காவில் தங்க முடியும்.

ஹைச்.ஒன். விசாவின் மூலம் வேலையில் அமர்ந்து கொண்டு, கிரீன் கார்ட் க்கு விண்ணப்பித்திருக்கும் மக்களுக்கும் இது பெரிய சவால். வேலையில் தொடராவிட்டால் கிரீன்கார்ட் கிடைக்காது. வேலையில் தொடரவேண்டுமெனில் நிறுவனம் அதிக சம்பளத்துக்கு சம்மதிக்க வேண்டும். என பல சிக்கல்கள்.

இந்தியாவில் ஏற்கனவே ஹைச்.ஒன்.பி விசா வாங்கி வைத்துவிட்டு இன்னும் பயணம் செய்யாதவர்களுக்கும் இது சவால் தான். அவர்கள் விசா வாங்கும்போது ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இப்போது அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலமை! எனவே அவர்களுடைய அமெரிக்கப் பயணமும் கேள்விக்குறியாகிவிடும்.

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இந்திய நிறுவனங்களைச் சுற்றியும், இந்தியர்களைச் சுற்றியும் இந்த ஹைச்.ஒன்.பி விசா கட்டுப்பாடுகளின் மூலம் உருவாகியிருக்கிறது. சர்வாதிகாரி ஒருவரின் ஆட்சியில், சிறுபான்மையினர் எப்படி பதறுவார்களோ, அத்தகைய ஒரு பதட்டம் இப்போது விசாவின் மூலம் பணியாற்றும் அமெரிக்க இந்தியர்களிடமும் இருக்கிறது.

இதையும் கடந்து ஐடி துறை முன்னேறும் என்பதே நிறுவனங்களின் நம்பிக்கையாகும்.

*Daily Thanthi

நாட்டாமைக்கும் அடி சறுக்கும்

சாயவே சாயாது என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது என்பது தான் இன்றைக்கு ஒட்டு மொத்த உலகமே உன்னிப்பாகவும், வியப்பாகவும் பார்க்கக் கூடிய செய்தியாக இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிமிர்ந்து நின்ற, பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டி வந்த பிரபல நிறுவனங்கள் பல தலையில் துண்டைப் போட்டு எங்களிடம் பணமில்லை, திவாலாகிவிட்டோம் என அறிவித்து வீதிக்கு வந்திருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களை யாரேனும் வாங்கி புதிதாய் நிர்வாகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு நூறு டாலர்கள் என இருந்த லேமேன் பிரதர்ஸ் நிறுவன பங்குகள் இருபது பைசா எனுமளவுக்கு பங்குகளில் வீழ்ச்சியைச் சந்தித்து திவால் ஆகிவிட்டேன் என அறிவித்திருக்கிறது. இப்படி திவாலான நிறுவனங்கள் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பத்து !

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் மட்டுமே சுமார் ஐம்பதாயிரம் வேலையில்லாப் பட்டதாரிகளால் நிரம்பி விட்டதாம். காரணம் பொருளாதார வீழ்ச்சி, பங்கு வர்த்தகத்தின் பாதாளத்தை நோக்கிய பாய்ச்சல். எப்போதும் பாரி வள்ளலாய் தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தனது இன்னொரு முகத்தை இப்போது தான் வெளிக்காட்டியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்குவதில் ஆரம்பித்தது இந்தப் பிரச்சனையின் மையம். பொதுவாக அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமெனில் உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கவேண்டும், கூடவே கிரெடிட் கிஸ்டரி (கடன் வரலாறு) எனப்படும் உங்களுடைய பணம் கட்டும் திறன், நேர்மை இவையெல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இல்லையேல் வங்கி கடன் வழங்காது.

அப்படியெனில் புதிதாய் அமெரிக்காவில் குடியேறும் மக்கள் வீட்டுக் கடன் வாங்குவது குதிரைக் கொம்பு. கூடவே கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்களுக்கும் கடன் கிடைக்கவே கிடைக்காது. இந்த நிலையில் சரியான கடன் வரலாறு மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு உதவியது “சப்பிரைம்” எனப்படும் மூன்றாம் நிறுவனத்தின் / நபரின் பரிந்துரை வழக்கம்.

இந்த சப் பிரைம் நிறுவனம் எப்படியாவது தனது வாடிக்கையாளருக்குக் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும், கடன் வரலாறு சரியாய் அமையாதவர்களுக்கும் வீட்டுக் கடனை பரிந்துரை செய்து வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொடுத்தது.

இந்த முறையில் வங்கிக்கு அதிக வட்டி வரும் வாய்ப்பு இருப்பதனால் வங்கிகள் இதை ஊக்கப்படுத்தின. இதன் மூலம் புதிதாய் புலம் பெயர்ந்தவர்கள், பணத்தைத் திரும்பக் கட்ட வழியில்லாதவர்கள், சரியான வேலை இல்லாதவர்கள், கடன் வரலாறு சரியாய் இல்லாதவர்கள் என பலரும் வீடுகளை வாங்கிக் கொண்டனர்.

இந்தியாவின் வீட்டுக் கடன் வட்டி வழங்கும் முறைக்கும், அமெரிக்காவின் வீட்டுக் கடன் வழங்கும் முறைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இங்கே பெரும்பாலும் 100 விழுக்காடு பணத்தை வீட்டுக் கடனாய் பெறமுடியாது. கூடவே வட்டி விகிதமும் வங்கியை முடக்காத அளவுக்கு 13 விழுக்காடு வரை இருக்கும்.

நம்முடைய வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம் என ஏதோ ஒன்று வங்கியிடம் ஒப்படைக்கப்படும். எனவே எப்படியேனும் வீட்டுக் கடனை முடிக்க வேண்டும், பத்திரத்தை மீட்கவேண்டும் என்றெல்லாம் நமது மனம் படபடக்கும். ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை. ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் வீடு வாங்கிக் கொள்ளலாம்.

வீடு வாங்கிக் குடியேறியபின் மாதந்தோறும் வாடகை கட்டுவது போல தவணையைச் செலுத்திக் கொண்டிருக்கலாம். அல்லது வெறுமனே வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம். இது ஏழு ஆண்டுகளுக்குத் தான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் நீங்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி இந்தக் கடனை அடைக்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில் வீடுகளை மக்கள் இஷ்டம் போல வாங்க ஆரம்பித்தனர். வங்கிகள் லாபம் பார்த்தன. காலம் மாறியது. அமெரிக்காவிலும் பொருளாதாரச் சிக்கல்கள் தலை தூக்கின. மக்கள் வேலை இழந்தனர். வேலை இழந்த மக்களால் வீட்டுக் கடனை திரும்பக் கட்ட முடியவில்லை. இங்குள்ளது போல அமெரிக்காவில் மக்களை மிரட்டியெல்லாம் பணம் வாங்க முடியாது.

இந்த முதலீட்டு நிறுவனங்களின் பெரும்பகுதிப் பணம் வீட்டுக் கடனாக மக்களிடம் சென்று சேர்ந்தது. ஆனால் வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. பணம் கட்ட முடியாத மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பவற்றை எல்லாம் அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறத் துவங்கினர். அல்லது எங்களால் முடியாது என வங்கிக்கு கடிதம் அனுப்பி விட்டு காணாமல் போயினர்.

வங்கிகள் திகைத்தன. பரவாயில்லை. இருக்கும் பணத்தைக் கட்டுங்கள், அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுங்கள் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தன. முடியவில்லை.

அரசு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துப் பார்த்தது, அதுவும் பெருமளவில் பயனளிக்கவில்லை.

சிறு சிறு மீன்களின் கூட்டம் பெரும் கப்பலையே சாய்ப்பது போல அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் முதுகெலும்பை, இந்த சப் பிரைம் கடன் வழங்குதல் உடைத்தே விட்டது.

இப்போது சில மாகாணங்களில் வீடுகள் மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒரு டாலர் மட்டும் தந்து விட்டு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் வீட்டின் மீதிருக்கும் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்துங்கள் என வங்கிகள் பொதுமக்களிடம் கெஞ்சத் துவங்கியுள்ளன.

நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்ததும் பங்குச் சந்தை படு வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் பலர் பங்குச் சந்தையின் படு பயங்கர வீழ்ச்சியினால் தற்கொலை செய்து கொண்டு மடிந்தும் போனார்கள்

கடந்த சூலை மாதத்தில் முதலீட்டு வங்கிகள் ஐயோ எங்களுக்கு சுமார் 435 பில்லியன் அளவுக்கு நஷ்டமாகிவிட்டதே என புலம்பி அறிக்கை சமர்ப்பித்தன. சுமார் எழுநூறு பில்லியன் எனுமளவில் பணத்தை அமெரிக்க அரசு முதலீடு செய்தால் தான் முதலீட்டு வங்கிகளின் தலை தப்பும் எனும் நிலமை.

இந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு வழி தெரியாமல் விழிக்கிறது. ஒரு நிறுவனத்தைக் காப்பாற்ற 80 பில்லியன் டாலர் பணத்தை அரசு செலவழித்தது. அதே நிலமையில் இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன. அவையெல்லாம் அரசின் பண முதலீட்டை அல்லது கடனுதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

ஆனால் மக்களின் பணத்தை எடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றுவது என்பது அமெரிக்க மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி என அரசியல் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்க வர்த்தகத்துக்குள் நுழைந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேட்டு வைத்து விடக் கூடும் எனும் அச்சமும் அமெரிக்க அரசிடம் நிலவுகிறது.

இந்த நெருக்கடியினால் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும் இதில் சில நன்மைகளும் விளைய வாய்ப்பு உண்டு.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவை அவுட்சோர்சிங் எனப்படும் வேலையை பிற நாடுகளுக்கு மாற்றும் நிலைக்கு தள்ளும். அப்படிப்பட்ட சூழலில் இந்தியா நிறைய வேலை வாய்ப்பைப் பெறும். அதே நேரம், நிறுவனங்கள் மூடப்பட்டாலோ, தங்கள் எல்லைகளைக் குறைத்துக் கொண்டாலோ இந்திய கணினி நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

இன்றைய நிலையில் இந்தியாவின் முன்னணி கணினி நிறுவனங்கள் அனைத்துமே இந்த அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலை இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

வெறும் வீட்டுக் கடன் பிரச்சனை எனும் அளவைத் தாண்டி அமெரிக்க அரசின் பலவீனமான பல முடிவுகளும் இந்த சிக்கலுக்கு ஒரு காரணம் என்கின்றனர். குறிப்பாக ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா செலவிடும் பணம் மாதம் ஒன்றுக்கு 16 பில்லியன் டாலர்கள் ! (1 பில்லியன் = 100 கோடி )

பதினாறு பில்லியன் என்பது ஐ.நா வின் ஓராண்டு பட்ஜெட் ! இந்தப் பணத்தை போருக்கு செலவழிக்காமல் இருந்திருந்தால் அமெரிக்காவின் இன்றைய பொருளாதாரத் தேவையை எளிதில் தீர்த்திருக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. கூடவே, கச்சா எண்ணையின் விலை அதிகமாகவும் இந்த போர் ஒரு காரணியாய் இருந்திருக்கிறது.

எப்படியோ உலகுக்கெல்லாம் அறிவுரைகள் வாரி வழங்கிக் கொண்டிருந்த நாட்டாமை அமெரிக்கா இப்போது தீர்ப்புச் சொல்லத் தெரியாமல் திகைக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகியிருக்கிறது !

தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை