தாயே….

இசை : சஞ்சே

வரிகள் : சேவியர்

——————————–

நானாக நானும் இல்லையே

எங்கு சென்ற போதும்

ஏதேதோ எண்ணம் கொல்லும்

 

தாயான தாயும் இல்லையே

இங்கு இந்த நேரம்

நியாயமா….

 

ஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்

நாளுமே நீங்காதே

என் அன்னையே

 

ஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்

என்றுமே நீங்காதே

என் அன்னையே

 

*

 

பாசமா நேசமா

உன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்

வாழவா நான் ஆள‌வா

பசி அள்ளித் தின்றாய் நீ

 

தந்தையா அன்னையா

என் சொந்த பந்தம் எல்லாமே நீ

கந்தையா கண்ணீரா

அந் நாட்கள் சொர்க்கம் தானா ?

 

 

எங்கே

நெற்றி தனைத் தொடும் அந்த விரல்

காண

நெஞ்சம் தவிக்கிறதோ

 

எங்கே

என்னைக் கொஞ்சு கின்ற செல்லக் குரல்

மீண்டும் அது ஒலித்திடுமோ

 

*

 

பஞ்சணை மெத்தையும் வந்திடலாம்

அன்னையின் சேலையைப் போல் வருமா

 

அறுசுவை உணவுகள் வந்திடலாம்

அன்னையின் கைப்பிடி போல் வருமா ?

 

பேர் புகழ் தேசமும் தந்திடலாம்

அன்னையின் வார்த்தையைப் போல் வருமா ?

 

ஆயிரம் நேசங்கள் பூத்திடலாம்

அன்னையின் புன்னகை போல் வருமா ?

 

தாயே

வெற்றி பெற்றேன் நானே

 

என் தாயே

என்னைக் காண வாயேன்.

 

நீயே

எந்தன் ஜீவன் தாயே..

இன்று

நீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே

அடுப்புகளின் உலகம்

Image result for aduppu
காலம் மாறி விட்டது !

புகை வீட்ல படக்கூடாது !
கொல்லையில்
அடுப்பு மூட்டி
சமையல் செய்யும் பாட்டி
அடிக்கடி சொல்வார்.

அம்மா காலத்தில்
சாம்பல் கூடும்
செம்மண் அடுப்பும்
வீட்டின் கடைசி அறையாய்
இடம் மாறியது.

அக்காக்களின் வீட்டில்
வரவேற்பறையின் அருகிலேயே
சத்தமில்லாமல் சிரிக்கிறது
சிவப்பு கலர்
கேஸ் சிலிண்டர்.

காலம்
மறுபடியும் மாறி விட்டது !

சிரித்துக் கொண்டே
டாட்டா காட்டும்
தம்பியின்
தோள்பையில் சிரிக்கிறது
இன்டக்சன் ஸ்டவ். !

*

தாயும், தாய்மொழியும்

 

அமெரிக்கக்
குளிர் வீதிகளில்
போர்வைக்குள் வெப்பம் பதுக்கி,
உயிரை
உயிருடன் வைத்திருக்கும்
பொழுதுகளில்
அதிகமாகவே நினைவில் வருவாள்
அம்மா.

மெலிதான காய்ச்சலுக்கே
கலங்கிப் போய்
கந்தலாடையில் சுற்றிய
கதகதப்பையும்,
சூடான அன்பு கலந்த
சுக்கு காப்பியையும் தரும் அம்மா.

நெருங்க நெருங்க
குளிர வைத்து,
விலக விலக
நினைவுகளால் சுடும்
புதிய கதிரவனாய்
ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மா.

முதல் அழுகையை
மட்டும்
புன்னகையோடு துடைத்தெடுத்து
தொடரும் அழுகைகளுக்கு
துடித்துப் போகும்
ஓரு அம்மா,

எந்த
இரைச்சல்களிடையிலும்
பளிச்சென்று
பிடித்துவிடமுடியும்
அம்மாவின் அழைத்தலை

யாரும்
தவிர்க்க விரும்பாத
இரு அற்புதங்கள்
தாயின் முத்தமும்
தாய் மொழியின் சத்தமும் தானே.

0

கவிதை : பெத்த மனசு

Xavi.wordpress.com1

.

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

படிப்பும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’

நன்றி : கல்கி

அம்மாவின் கடிதம்

 

அம்மாவின்
தடுமாறும் எழுத்துக்களில்
நெளியும்
பாசத்தின் வாசனை
சுமந்து வரும்
இன்லெண்ட் லெட்டர்கள்
இல்லாமல் போய்விட்டன.

மடிக்கும் இடங்களிலும்
ஒடித்து ஒடித்து எழுதி அனுப்பும்
அப்பாவின்
நலம் விசாரித்தல் சுகம்
தொலைந்துவிட்டது.

தபால் அட்டைகளில்
விலாசத்துக்கான இடஒதுக்கீடையும்
அரைமனதுடன்
அனுமதிக்கும்
கடுகுமணி எழுத்துக்களும்
காணாமல் போய்விட்டன.

தனிமை வறுக்கும்
பின்னிரவுப் பொழுதுகளில்
நெஞ்சோடு அணைத்துத் தூங்க
கசங்கிப் போன
கடுதாசிகளே இல்லையென்றாகிவிட்டது.

தொலை பேசிகளும்
கைபேசிகளும்
மின்னஞ்சல்களும்
கடுதாசிக் கலாச்சாரத்தை
விழுங்கிச் செரிக்க,

நவீனங்களின் வளர்ச்சி
தத்தெடுத்துக் கொண்ட
என்
மின்னஞ்சல் பெட்டிகளிலும்
கிராமத்துப் புழுதிநெடியின்றியே
வந்து அமர்கின்றன
தகவல்கள்.

கல்வெட்டிகளின் காலடியில்
கசிந்துருகும்
இயலாமை மனம்போல
மறந்து போன
தபால்காரரின் முகத்தை
மீண்டெடுக்கும் முயற்சியில் மனசு.

நிறைவேறுமா எனும் ஆசையில்
முளைக்கிறது கடைசி ஆசை.
கண்ணீரிலும்
வியர்வையிலும்
அழிந்துபோன அம்மாவின் கடிதம்.