தகவல் அறிவியல் – 4

Image result for data science

தகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும்,  கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் அதிகமாய் இருக்கின்றன என்பதையும் கடந்த வாரம் அலசினோம். அப்படி இந்த துறையில் எப்படிப்பட்ட வேலைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்போம்.

தகவல் அறிவியல் துறையில் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. நிறுவனத்தின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப அவர்கள் அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பதும் உண்டு. உதாரணமாக சில நிறுவனங்கள் தகவல் விஞ்ஞானத்தை, மெஷின் லேர்னிங் என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக எப்படிப்பட்ட வேலைகள் இந்த துறையில் உண்டு என்பதை பார்ப்போம்.

மேஜேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிப்போர்டிங் எக்சிகியூட்டிவ் ( MIS Reporting Executive ) என ஒரு பணி இருக்கிறது. தகவல் அறிவியலைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பணி. வணிகத் தேவை என்ன என்பதை சரியாகப் புரிவதும், தொழில்நுட்பத்தில் அதை எப்படி புகுத்துவது என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதாவது இவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையில் தான் பெரும்பாலான பிசினஸ் முடிவுகள் எடுக்கப்படும்.

இவர்களுடைய பணி, நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகளை பல்வேறு வகைகளில் உருவாக்குவது. நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வைக்கவேண்டிய தகவல்களை ஒரு சின்ன படத்தின் மூலம் காட்டி விடும் வித்தை இவர்களின் சிந்தனைக்கு உரியது.

உதாரணமாக, விற்பனைத் தகவல்கள் என்னென்ன ? என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன ? எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன ? போன்ற  பல்வேறு தகவல்களை இவர்கள் அலசுவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கும் அறிக்கைகள் முக்கியமான தொழில் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும்.

கணினி துறை அல்லது பொறியியலில் பட்டப்படிப்பு இருப்பவர்கள் இந்தத் துறையில் நுழைவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். “எப்படிப்பட்ட தகவல்களைக் கொடுத்தால் பிஸினஸ் வளரும்” என்கின்ற ஒரு பரந்து பட்ட பார்வை இருக்க வேண்டியது அவசியம். காரணம், இவர்கள் கொடுக்கின்ற தகவல்களே பிஸினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், எப்படிப்பட்ட திசையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும், எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.

பிஸினஸ் அனலிஸ்ட் ; இன்னொரு முக்கியமான பணி. இதை வணிக ஆய்வாளர் பணி என்று சொல்லலாமா ? அல்லது தொழில் ஆய்வாளர் என்று சொல்லலாமா தெரியவில்லை. இப்போதைக்கு பிசினஸ் அனலிஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம்.

ஒரு நிறுவனத்தின் தேவையை துவக்கத்திலிருந்தே கவனிப்பது இவர்களுடைய வேலை. ஒரு பிஸினஸ் வளர்ச்சியடைய என்னென்ன தடைகள் இருக்கின்றன. என்னென்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது இவர்களுடைய வேலையின் முக்கியமான அம்சம்.

தகவல்களை அலசி ஆராய்பவர்களைத் தகவல் ஆய்வாளர் என்று சொல்வோம். அதே போல பிஸினஸை அலசி ஆராய்பவர்களே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர்.

பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ) பிரிவில் ஒரு பட்டப்படிப்பு இருப்பது இந்த வேலைக்கு ரொம்ப நல்லது. கூடவே தகவல்களோடு விளையாடும் ஆர்வம் இருக்க வேண்டும். பிஸினஸை எப்படியெல்லாம் வலுப்படுத்தலாம் எனும் பார்வை இருக்க வேண்டியதும் அவசியம்.

பிஸினஸின் தேவையை சரிவரப் புரிந்து அதிலுள்ள குறைகளைக் களைந்து தொழில்நுட்பத்தின் மூலம் அதை வலுப்படுத்தும் பணியே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் பணி.

டேட்டா அனலிஸ்ட்

தகவல் அறிவியலில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டேட்டா அனலிஸ்ட் வேலை. தகவல்களைத் திரட்டுவது, திரட்டிய தகவல்களை வகைப்படுத்துவது இரண்டும் இவர்களுடைய கைவேலைகள். இவர்களும் டேட்டா விஞ்ஞானிகள் அதாவது டேட்டா சயின்டிஸ்ட் இருவரும் வேறு வேறு.

டேட்டா அனலிஸ்ட் என்பவர் அவருக்கு ரொம்ப ஜூனியர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மிக முக்கியமான அடிப்படைப் பணிகள் செய்வது இவர்கள் தான்.

டேட்டா அனலிஸ்ட் என்பவர் ஒரு சில முக்கியமான மென்பொருட்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆர், பைத்தான், எச்.டி.எம்.எல், எஸ்.க்யூ.எல், சி ++, ஜாவா போன்ற அனைத்து மென்பொருட்களின் கலவையாய் உங்களுடைய மென்பொருள் பரிச்சயம் இருப்பது மிக சிறப்பு.

தகவல்களை சேர்ப்பது, சேமிப்பது இவற்றோடு இவர்களுடைய பணி முடிந்து விடுவதில்லை. எப்படி அதை பயன்படுத்துவது என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். ஹடூப் போன்ற மென்பொருட்களைக் கற்பது பயன்கொடுக்கும்.

நிறுவனத்தின் பல்வேறு நிலைகளிலுமுள்ள தலைவர்கள், வெவ்வேறு தகவல் தேவைகளோடு அணுகுவது இவர்களைத் தான். இவர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தங்களுடைய மூளையையும், கையிலுள்ள தகவலையும் கசக்குவார்கள்.

எப்படி தகவலை வகைப்படுத்துவது, அதை எப்படி பயனுள்ள வகையில் மாற்றுவது, அல்காரிதங்களை/வழிமுறைகளை எழுதுவது, என்பதையெல்லாம் கவனிப்பது இவர்கள் தான்.

  1. ஸ்டாட்டிஸ்டிஷியன் / புள்ளிவிவர ஆய்வாளர்

ஸ்டாட்டிஸ்டிக் விஷயங்களைச் சொல்லும் இவரைப் புள்ளி விவரப் புலி என்று சொல்லலாமா ? தகவல்களைச் சேர்த்து, வகைப்படுத்தி, பயன்படுத்துவத்தோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பது இவர்களுடைய வேலை.

மார்க்கெட் ரிசர்ட், போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, என எல்லா இடங்களிலும் இவர்களுடைய தேவை உண்டு. இந்த வேலைக்குள் நுழையவேண்டுமென்றால் பட்டப்படிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக  ஸ்டாடிஸ்டிக்ஸ் அல்லது கணிதவியலில் பட்டம் இருந்தால் ரொம்ப நல்லது.

இவர்களும் ஆர் போன்ற ஏதோ ஒரு மென்பொருளின் மீது அதிக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இவர்களுடைய பணிக்கென பல மென்பொருட்கள் உள்ளன MATLAB, SAS, Python, Stata, Pig, Hive, SQL, Perl போன்றவை புள்ளிவிவரவியலாளர் அல்லது ஸ்டாட்டிஸ்டிஷியன் பணிக்கு உதவுவதற்காக இருக்கின்ற மென்பொருட்கள். இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்வது பயனளிக்கும்.

தகவல்களை அலசி அதில் ஒரு பேட்டர்ன் அதாவது முறையைக் கண்டுபிடிப்பது, தகவல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது, ஒரு டிரென்ட் கண்டுபிடிப்பது போன்றவற்றையெல்லாம் இவர்கள் கவனிப்பார்கள்.

5

டேட்டா சயின்டிஸ்ட்

இன்றைக்கு இருக்கக் கூடிய தகவல் அறிவியல் வேலைகளில் ஹாட் வேலை என்றால் இது தான். இதற்கு கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் டேட்டா சயின்டிஸ்ட் வேலை தேவை இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான திறமைகளில் டேட்டா சயின்டிஸ்ட் தேவைப்படுவார்கள்.

மென்பொருட்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிக மிக அவசியம்.  R, SAS, Python, SQL, MatLab, Hive, Pig, மற்றும் Spark போன்றவை இதற்குத் தேவையான மென்பொருட்கள் !

ஒரு நல்ல தகவல் விஞ்ஞானியின் வேலை தகவல்களோடு முடிந்து விடுவதில்லை. அந்த தகவல்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பிணைப்பைக் கண்டறியும். அந்த தொடர்பை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பிஸினஸை வளர்த்தலாம் என்பதை அலசும்.

இந்த பணிக்கு ஆர்வமும், பொறுமையும் மிக மிக அவசியம். நல்ல தெளிவான சிந்தனையும், திறமையும் இருந்தால் இந்தத் துறையில் கலக்கலாம்.

ஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு டேட்டா அனலிஸ்ச்ட், ஒரு பொறியாளர், ஒரு பிஸினஸ் அனலிஸ்ட் போன்ற பலவற்றின் கலவையாக இருப்பார்.

6

டேட்டா எஞ்சினியர்

பெரும்பாலும் பிக்டேட்டா சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்கு டேட்டா எஞ்சினியர்கள் தேவைப்படுவார்கள். இவர்களை டேட்டா ஆர்கிடெக்ட் என்றும் அழைப்பார்கள்.

தகவல் பொறியாளர்களுக்கு கணினி பிரிவில் ஒரு பட்டப்படிப்பு அவசியம். கூடவே Pig, Hadoop, MapReduce, Hive, MySQL, Cassandra, MongoDB, NoSQL போன்றவற்றில் பரிச்சயம் இருப்பது தேவையானது. அதே போல மென்பொருட்களான R, Python, Ruby, C++, Perl, Java, SAS, SPSS, and Matlab போன்றவற்றில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.

தகவல்களை வகைப்படுத்துவது, அதை டெஸ்ட் செய்வது, அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அறிக்கையாய், படங்களாய் சமர்ப்பிப்பது இவையே இவர்களுடைய முக்கியமான வேலை.

இவை தவிர, பிக்டேட்டா பொறியாளர், மெஷின் லேர்னிங் பொறியாளர் என பலர் இந்த தகவல் அறிவியல் துறையின் பட்டியலில் வருவார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளவை தகவல் அறிவியல் துறையிலுள்ள சில முக்கியமான வேலைகள். இவற்றைத் தவிரவும் பல வேலைகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் தகவல் அறிவியல் துறையில் நுழைவதில் சிக்கல் இருக்காது.

மனிதர்களை அடிமைகளாக்குமா ரோபோக்கள் ?

Image result for robots

“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம் மக்களுக்கு வேலை கொடுத்து, தொழில் நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் பில் கேட்ஸ் சொன்னால் கொஞ்சம் நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது இல்லையா ?

தொழில்நுட்ப உலகில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை அறிவின் அதீத வளர்ச்சி ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளப் போகிறது. அவை மனித வேலைகளை வேகமாகவும், திறமையாகவும் செய்து குவிக்கப் போகின்றன. இதனால் மக்கள் வேலையிழக்கும் அபாயம் உண்டு என்பது தான் அவர் சொன்ன விஷயம், அது தான் யதார்த்தமும் கூட.

அடுத்த பத்து ஆண்டுகளில் 80 கோடி பேர் வேலையிழப்பார்கள். அவர்களுடைய வேலையை திறமையாகவும் வேகமாகவும் ரோபோக்கள் செய்யும் எனும் ஒரு ஆய்வு முடிவை பிரபலமான மெக்கன்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது 20 சதவீதம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் இது!

நாற்பத்தாறு நாடுகளில் விரிவாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தான் இந்த முடிவைத் தந்தது. சர்வதேச அளவில் ரோபோக்களால் ஏற்படப் போகும் விளைவு இது என்பது கவனிக்கத் தக்கது !

ரோபோக்களெல்லாம் கைகளையும் கால்களையும் மடக்காமல், லெகோ பொம்மையைப் போல நடக்கும் காலம் மலையேறிவிட்டது. மனிதனைப் போலவே தோற்றமுடையதாக இப்போது ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கற்பனையாக உலவிய கதாபாத்திரங்கள் நிஜத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

இருக்கையில் சரிக்கு சமமாக அமர்ந்து டிவியில் பேட்டி கொடுக்கிறது சோஃபியா எனும் ரோபோ. உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ ! எந்த கேள்வி கேட்டாலும் பளிச் என பதில் சொல்கிறது. கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்கிறது. நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது. பேசுவது ரோபோவா, இல்லை மனிதனா எனும் சந்தேகமே வருமளவுக்கு நடந்து கொள்கிறது. கேமரா எடுத்தால் போஸ் கொடுக்கிறது !

நாளை பேருந்தில் நமக்குப் பக்கத்தில் இருப்பது ரோபோவா, மனிதனா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழல் வரலாம்.

தகவல்களாலும், கட்டளைகளாலும் கட்டமைக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது உணர்வுகளாலும், சமூக செயல்பாடுகளின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுவது தான் ரோபோ உலகின் மிகப்பெரிய மாற்றம்.

“நீங்க மனுக்குலத்தை அழிச்சிடுவீங்களா ?” என ஒரு கேள்வியை அந்த ரோபோவிடம் கேட்டார்கள். சிரித்துக் கொண்டே ரோபோ சொன்னது, “ஓவரா சினிமா பாத்தா இப்படியெல்லாம் தான் கேள்வி கேப்பீங்க” என்று !

பிறகு, “நாங்கள் மனுக்குலத்தின் தேவைகளை நிறைவேற்றத் தான் வந்திருக்கிறோமே தவிர அழிக்க அல்ல” என்றும் சிரித்துக் கொண்டே சொன்னது. “எங்களுடைய மூளை இப்போதைக்கு மனித மூளையைப் போல சிந்திப்பதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் அப்படி சிந்திக்கும் நிலைக்கு வருவோம் “, என ஒரு கொக்கியையும் போட்டது.

சூழலுக்குத் தக்கபடியும், ஆட்களுக்குத் தக்கபடியும், கேள்விக்குத் தக்கபடியும் பேசுகின்ற ரோபோக்கள் அச்சம் ஊட்டுவதில் வியப்பில்லை. நம்மை மாதிரி சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் ஜாம்பவான்களுக்கே அந்த அச்சம் இருந்தது என்பது தான் உண்மை.

இந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பதினைந்தே வருடங்களில் உலகிலுள்ள ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்கிறார் டாக்டர் இயான் பியர்சன் என்பவர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பான பல ஆய்வுகளைச் செய்து வருபவர் அவர். அதுமட்டுமல்லாமல் 2028களில் மனித உணர்வுகளைப் போல உணர்வுகளால் ஆன ரோபோக்கள் நிச்சயம் வந்து விடும் என அடித்துச் சொல்கிறார் அவர்.

அதன் அடுத்த படியாக 2048களில் ரோபோக்களே உலகை ஆளும் காலம் உருவாகலாம் என்கிறார் அவர். அப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களை ரோபோக்கள் மிகவும் அடிமையாக நடத்தும் என சன் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தது தொழில் நுட்ப உலகில் அதிர்வலைகளை உருவாக்கியது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், 71 விழுக்காடு மக்கள் ரோபோக்களின் வளர்ச்சியை திகிலுடன் தான் பார்க்கின்றனர். மனுக்குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். 43 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் சமூகத்தை ஆளும் என்றும், 37 விழுக்காடு மக்கள் ரோபோக்கள் அதி புத்திசாலிகளாய் இருக்கும் என்றும், 34 விழுக்காடு மக்கள் தங்களுக்கு வேலை இருக்காது என்றும், 25 விழுக்காடு மக்கள் ரோபோக்களும் மனிதர்களும் வித்தியாசமின்றி இருப்பார்கள் என்றும், 16 விழுக்காடு மக்கள் ரோபோ-மனித உறவுகள் நடக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

பாலியல் தொழிலுக்கு இன்றைக்கு ரோபோக்கள் உருவாக்கப்படுவதும், அவை அச்சு அசலாய் மனிதர்களைப் போல இருப்பதும், மனிதர்களைப் போல பேசுவதும், மனிதர்களைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

நவீன ரோபோக்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற நிலையை விட்டு விலகிவிடும் என்பது தான் இங்கே முக்கிய செய்தி. இவற்றுக்குத் தேவையான சக்தியை சூரிய ஒளி, காற்று என ஏதோ ஒரு இயற்கையிலிருந்து இழுத்துக் கொள்ளும். தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மென்பொருட்களை தானே எழுதிக் கொள்ளும். பிறருடைய செயல்பாடுகளைக் கண்டு அதை அப்படியே செயல்படுத்தவும் கற்றுக் கொள்ளும்.

அப்போது, மனிதனை விட பல மடங்கு வேகமும், விவேகமும் கொண்ட ரோபோக்கள் மனிதர்களை கின்னி பன்றிகளைப் போல நடத்தும் என்கிறார் டாக்டர் பியர்சன். இவற்றுக்கு மரணம் இல்லை என்பது அச்சத்தை அதிகரிக்கிறது.

உதாரணமாக இப்போது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நாளை நமக்கு எதிரான ஆயுதமாக மாறிவிட்டால் என்ன செய்வது ? என்பது ஒரு சின்ன கேள்வி !

ரோபோக்கள் என்றால் பெரிய பெரிய கண்ணாடி மாளிகையில் இருப்பவை எனும் சிந்தனை மாறிவிட்டது. அமேசான் நிறுவனம் வெஸ்டா எனும் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. இவை நமது வீட்டு ரோபோக்கள். ஏற்கனவே அலெக்ஸா எனும் கருவியின் மூலம் வியப்பை ஏற்படுத்திய அமேசான் வெஸ்டாவுடன் வரவிருக்கிறது. இனிமேல் வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் தேவைப்படாது வெஸ்டாவே செய்யும். குழந்தைகளைப் பராமரிக்கும். வீட்டைப் பாதுகாக்கும். கூட மாட ஒத்தாசை செய்யும். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லும். இன்னும் என்னென்ன செய்யும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

கடந்த வாரம் கூகிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகிள் அசிஸ்டெண்ட் ஆர்டிபிஷியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலை. ஒரு மென்பொருள் மனிதரைப் போல சூழலுக்குத் தக்கபடி பேசி ‘அப்பாயின்யிண்ட்மெண்ட்’ புக் செய்வதை அவர் செயல்படுத்திக் காட்டினார்.

மொத்தத்தில் மனிதர்கள் உறவுகளோடு வாழ்ந்த காலம் போய், தொழில்நுட்பத்தோடு வாழும் காலம் வந்திருக்கிறது. நாளை தொழில்நுட்பம் மனிதர்களை அடக்கியாளும் காலம் வரலாம் எனும் அச்சம் எங்கும் நிலவுகிறது. இதை பெரும்பாலான அறிவியலார்கள் ஆதரிப்பது தான் ரோபோக்கள் மீதான திகிலை அதிகரிக்கிறது. இயற்கை மனிதனை வளமாக்கியது, செயற்கை என்ன செய்யும் ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

*

தினத்தந்தி

ரோபோவுடன் ……..!

 

 Robo6 

 உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.

டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.

ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.

வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.

போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !

இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.

ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

நன்றி : ஆனந்த விகடன்

கட்டுரை : கடவுளைத் தேடுது விஞ்ஞானம்

( தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

 

விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராய் இருக்கும் மர்மங்கள் உலகில் ஏராளம் ஏராளம். அதில் ஒன்று தான் உலகில் உயிரின் முதல் துகள் உருவான நிகழ்வு. அதை அவர்கள் கடவுளின் துகள் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

எப்படியேனும் அதன் மூலத்தைக் கண்டுபிடித்தே தீர்வது என உலகத்திலுள்ள தலை சிறந்த இயற்பியல் வல்லுனர்கள் தலையைப் பிய்த்து யோசித்ததில் தோன்றிய யோசனை தான்  லார்ஜ் ஹார்டான் கொலைடர் ( LHS – Large Hadron Collider) . உலகில் தோன்றிய உயிரினங்கள் எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமி எனும் இந்த கோளத்தில் மீது நிகழ்ந்த ஒரு மிகப்பெரிய தாக்குதலின் விளைவாய் (Big Bang) உருவானவை என்றே விஞ்ஞானம் கருதுகிறது.

அப்படியெனில் அதே போல ஒரு மாபெரும் மோதல் இப்போது நிகழுமானால் அதே போல உயிரின் துகள்கள் இப்போதும் உருவாக முடியும் இல்லையா ? என இயற்பியலார்கள் எழுப்பிய கேள்வியில் இருந்தது இந்த சோதனைக்கான விதை. இதைக் கொண்டு பல்வேறு இயற்பியல் ரகசியங்களின் முடிச்சை அவிழ்க்க முடியும் என விஞ்ஞானம் கருதுகிறது.

இது ஏதோ சிறிய ஒரு ஆராய்ச்சிக் கூட சோதனை என நீங்கள் நினைத்தால் முதலில் அந்த நினைப்பை மூட்டை கட்டி கடலில் எறிந்து விடுங்கள். இது மிக மிக கடினமான காரியம். இதில் பயன்படுத்தப்போவது அணு ஆற்றல் என்பதையும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் சுமார் இரண்டாயிரம் இயற்பியல் வல்லுநர்கள் என்பதையும் கொண்டே இதன் தீவிரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களுடைய கணிப்புப் படி இரண்டு புரோட்டான் இழைகளை ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் ( அதாவது வினாடிக்கு சுமார் நூறு கோடி கிலோ மீட்டர் வேகத்தில் ) மோதவிட்டால் அது மோதிச் சிதறும் போது ஹிக்ஸ் பாஸன் (Higgs boson) என அவர்கள் பெயரிட்டுள்ள அந்த கடவுளின் துகளை உருவாக்க முடியும். இது தான் இந்த சோதனை குறித்த ஒருவரி விளக்கம். இதற்கான முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. இனிமேல் ஆண்டு படிப்படியாக சோதனைகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. எனினும் முழுமையான சோதனை நடத்த இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.

இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு சாரார் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நிற்கின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும் இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு சாராரும் அவர்கள் பக்க விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும். இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.
எனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிக் குதிக்கின்றன. பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது. உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்!

இந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்க வைக்கும். இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்படும். இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு முக்கியமான அறிவியல் தகவல். இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.

இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.

வட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு.

எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வருகின்றனர். பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று. இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் பல மர்மக் கதவுகளை திறக்கலாம் எனும் எதிர்பார்ப்பு விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.

இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம்  எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.

இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும்,  உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?

அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை
மாலை 6 மணி.

“யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே … “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ்.

கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்லியிருப்பார்கள். ஆனால் அடுத்த நாளே இன்னொரு கொலை நடந்தால் இந்த தகிடுதத்தம் எல்லாம் அம்பலமாகிவிடும். எனவே தான் என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருக்கிறது காவல் துறை.

“ஏம்பா… வண்டியெல்லாம் ரெடிதானே … இன்னிக்கும் நைட் பூரா சுத்த வேண்டியது தான். வீட்டுல இருக்கிற வாட்ச் மேனை எல்லாம் கொன்னுட்டு, போலீஸ்காரங்களை நைட் வாட்ச்மேனாக்கிட்டான் அந்த கபோதி…” இன்ஸ்பெக்டரின் எரிச்சல் தெறித்தது.

இந்தப் பொறம்போக்கு பத்திரிகைக் காரங்க, தெருவுக்கு தெரு முளைச்சிருக்கிற வேலை வெட்டியற்ற பொறுக்கி இயக்கங்க எல்லாமாய் சேர்ந்து மனுஷனை ஒழுங்கா தூங்கக் கூட வுடமாட்டாங்க. மேலிட பிரஷர், பொதுமக்கள் பிரஷர் ன்னு எல்லா பிரஷரும் சேர்ந்து நமக்குத் தான் பிளட் பிரஷர் ஏகத்துக்கு எகிறிப் போச்சு. கனகராஜ் செம கடுப்பில் இருந்தார். சைக்கோ கொலையாளியைப் பிடித்தால் இவரே ஒரு சைக்கோவாக மாறி கைங்கர்யம் செய்து விடுவார் போலிருந்தது.

அப்போது தான் நுழைந்தார் கான்ஸ்டபிள் குமார்.

“சார்… சென்னை முழுக்க சை.கோவோட கலர் போட்டோவை ஒட்டி வெச்சிருக்காங்க சார் “ கான்ஸ்டபிள் சொல்ல கனகராஜ் சட்டென நிமிர்ந்தார்.

என்னது ? சைக்கோ போஸ்டரா ? என்ன சொல்றே ? யார் பாத்தது ? யார் ஒட்டினது ? கனகராஜ் படபடத்தார்.

சைக்கோ இல்ல சார்.. வைகோ. ஏதோ ஒபாமாவைப் போய் பார்த்தாராமே அதைப் போஸ்டராப் போட்டிருக்காங்க. குமார் சொல்ல கனகராஜ் ஏகத்துக்குக் கடுப்பானார்.

போய்யா போ… வேலையைப் பாரு. இன்னிக்கு இரண்டு மணிக்கு மேல அதிகாலை நாலரை மணி வரை அசோக்நகர், வடபழனி ஏரியாக்கள்ல யாரெல்லாம் அலஞ்சிட்டிருக்காங்களோ அவங்க எல்லாரையுமே ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு வந்துடு. பிச்சைக்காரனானாலும் சரி, பைத்தியக்காரனானாலும் சரி. ஒருத்தனையும் விடாதே. இன்னொண்ணு… பொண்ணுங்க சுத்திட்டிருந்தாலும் தூக்கிட்டு வந்துடு. சைக்கோ ஆணா பொண்ணான்னே தெரியல. இன்னிக்கு நான் வரல, செல்வத்தோட தலைமைல எல்லா ஏரியாலயும் சுத்துங்க. ஏதாச்சும் சமாச்சாரம் இருந்தா போன்பண்ணுங்க. சொல்லிவிட்டு கனகராஜ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.

நகரின் பரபரப்பு குறையத் துவங்கிய நள்ளிரவில் காவல்துறை பரபரப்பானது. வாகனங்கள் ஏரியாக்களை சுற்றி வரத் துவங்கின.

இதற்காகவே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவல் வாகனங்களும் சாலையில் அங்கும் இங்கும் சுற்றின. சைக்கோவைப் பற்றிய பயமோ என்னவோ எந்தக் காவலரும், பைக்கிலோ, சைக்கிளிலோ, நடந்தோ சுற்றவில்லை. எல்லோரும் ஆளுக்கு இரண்டு செல் போன் கையில் வைத்துக் கொண்டு ஜீப்பில் சுற்றித் திரிந்தனர்.

அந்த இரவும் அவர்களுக்கு ஒரு தூக்கமற்ற இரவாகவே முடிந்தது.

காலை ஆறுமணி.

அசோக் நகர் காவல்நிலையத்துக்குக்குள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர் இருபது பேர். பாதி பேர், அப்பாடா தங்க ஒரு இடம் கிடைத்தது என சந்தோசப்பட்டு நிம்மதியாய் அமர்ந்திருந்தனர்.

சிலர் பிச்சைக்காரர்கள், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி, இரண்டு பேர் காவல் துறையினருக்குப் பரிச்சயமான மாமூல் மச்சான்கள்.

சற்று நேரம் ஓய்வெடுத்திருந்த கனகராஜ் அப்போது தான் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அவருடைய இருபது ஆண்டுகால போலீஸ் வாழ்க்கையில் ஒரு பார்வையிலேயே அப்பாவி யார், அப்பாவியாய் நடிப்பவன் யார் என்பதையெல்லாம் எடைபோடக் கற்றுக் கொண்டிருந்தார்.

பார்வையை வரிசையாய் அமர்ந்திருந்தவர்கள் மேல் நிதானமாய் ஓட்டிக் கொண்டிருந்தபோது அவன் தட்டுப்பட்டான்.

படித்தவன் போல, சாதுவாக எந்த சலனத்தையும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அவன். சுமார் முப்பத்தைந்து வயது இளைஞன். பச்சை நிறத்தில் அழகான ஒரு டிஷர்ட் அணிந்திருந்தான். நெஞ்சில் “கிரீன் பே பேக்கர்ஸ்” என எழுதப்பட்டிருந்தது. காக்கி நிறத்தில் ஒரு பேண்ட் அது தனது பிராண்ட் ஏரோபோஸல் என்றது.. என்றது.

“இவனை எங்கேய்யா புடிச்சீங்க”

“வடபழனி திருப்பத்துக்கு பக்கத்துல நின்னு சுத்தி சுத்தி பாத்திட்டிருந்தான் சார்… கொஞ்சம் சந்தேக கேஸ் மாதிரி இருந்தது…” இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு பதில் வந்தது.

வரிசையில் இருந்த மற்றவர்களை விட்டுவிட்டு இவனை மட்டும் எழுந்து வரச்சொல்லி சைகை செய்தார் கனகராஜ்.

அவன் எழுந்தான். இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நின்றான்.

“என்னப்பா.. பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே… நைட்ல என்ன பண்ணிட்டிருந்தே…”

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“எங்கேருந்து வரே.. என்ன வேலை பாக்கறே… அமெரிக்கன் பிராண்ட் பேண்ட் போட்டிருக்கே ? அமெரிக்க புட்பால் குழுவோட பேரை சட்டையில போட்டிருக்கே… எங்கேயிருந்து கிடச்சுது ?”

மௌனம்.

“யோவ்.. என்ன ? வாயில கொழுக்கட்ட வெச்சிருக்கியா ? ஒன்னு வுட்டேன்னா மவனே…. “ கனகராஜ் கையை ஓங்க, இவன் நிமிர்ந்து பார்த்தான்.

இவன் பார்வையைக் கண்ட கனகராஜ் சற்றே உஷாரானார். அருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் திரும்பினார்,

“மற்றவங்க கிட்டே டீடெய்ல் வாங்கிட்டு, போட்டோ எடுத்துட்டு அனுப்பிடு. இவனை மட்டும் உள்ளே கூட்டிட்டு போய் ஜட்டியோட உட்கார வை… இன்னிக்கு நமக்கு நல்ல வேலை இருக்கு போல “ கனகராஜ் சொல்லிக் கொண்டே ஒரு செயரை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

மேஜை மீது கசங்கிய நிலையில் கிடந்த தினத் தந்தியை ஒதுக்கி விட்டு, இன்னும் மடிப்பு கலைக்கப்படாத ஆங்கிலச் செய்தித் தாளை எடுத்து பிரித்தார்.

வியந்தார்.

அதில் முதல் பக்கத்தில் கீழே வலது பாகத்தில் தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்த இளைஞனின் புகைப்படம்.

புகைப்படத்தை உற்றுப் பார்த்த அவர் அதிர்ந்தார்.

இதே சட்டை, கிரீன்பே பேக்கர்ஸ்… இதே முகம்… இதே பார்வை.

.
மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா
காலை மணி 11

கொஞ்சும் ஆங்கில உரையாடல்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. மேஜை மீது இருந்த புகைப்படத்தை தலைமை காவல் அதிகாரி மேட் ரைசன் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

உங்க பையனை எப்போதிலிருந்து காணவில்லை ? அமெரிக்க ஆங்கிலத்தில், தனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதரிடம் கேட்டார்.

மூணு நாளா வீட்டுக்கு வரவில்லை. பொதுவா இப்படி இருக்க மாட்டான். அப்பப்போ நைட் டான்ஸ் கிளப்புக்கு போவான், அப்படி போனாலும் மறு நாள் காலைல வந்திடுவான். வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு போனவன், சனி, ஞாயிறு இரண்டு நாளும் வரவில்லை. இன்னிக்கு காலைல அவனோட அலுவலகம் போய் கேட்டேன். நவீன் வெள்ளிக்கிழமையே வரவில்லையே என்றார்கள். அதனால் தான் பதட்டமாய் இருக்கிறது.

நவீனின் தந்தை நுக்காலா மகனைக் குறித்த கவலையை பதட்டம் வழியும் கண்களுடனும், தனது நீண்ட கால அமெரிக்க வாழ்க்கையின் பிரதிபலிப்பான அழகிய ஆங்கிலத்துடனும் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஏதாவது அடையாளம் ?

வீட்டில இருந்து வெள்ளிக்கிழமை போனப்போ கிரீன் கலர் டிஷர்ட் போட்டிருந்தான், அதில கிரீன் பே பாக்கர்ஸ் ன்னு எழுதியிருக்கும். அது கூட ஒரு காக்கி கலர் கார்கோ பேண்ட் போட்டிருந்தான்.

நிச்சயமா தெரியுமா ?

ஆமா.. அந்த டி-ஷர்ட் க்கு அந்த பேண்ட் மேட்சிங்கா இல்லைன்னு சொல்லிட்டே இருந்தான். மேட்சிங் துணியை வாஷர்ல போடாததனால கோச்சுகிட்டான். சோ, நல்லா தெரியும்.

ஒருவேளை அந்த சண்டையினால கோச்சுகிட்டு…

நோ… நோ… இதெல்லாம் ரொம்ப சகஜம். இந்த மாதிரி சண்டைக்கெல்லாம் வீட்டுக்கு வராம இருக்க மாட்டான். நல்ல பையன். எப்படியாவது அவனை கண்டுபிடிச்சு கொடுங்க பிளீஸ்…. நுக்காலா கெஞ்சினார்.

மேட் ரைசன் தேவையான விவரங்களை வாங்கிக் கொண்டு, நுக்காலாவை அனுப்பினார்.

பொறுமையாக ஒரு பர்கரை வாங்கிக் கடித்துக் கொண்டே நவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றார் மேட். கூடவே உடன் பணியாளர் டிம் சானர்.

அலுவலகம் சாலையை விட்டு தள்ளி கொஞ்சம் உள்ளே இருந்தது. அந்த அலுவலகம் ஏதோ ஓர் அமானுஷ்யத் தனமாய் இருப்பதாய் பட்டது அவருக்கு.

காரை இரண்டு மஞ்சள் கோடுகளின் நடுவே அழகாய் பார்க் செய்து விட்டு, உள்ளே சென்றனர் மேட் ரைசனும், டிம் சானரும்.

உங்கள் மேலாளரைப் பார்க்கவேண்டும்.

நீங்கள் ?

அடையாள அட்டை காண்பிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்க வில்லை. மேலாளர் அவர்களை வந்து அழைத்துச் சென்றார்.

சொல்லுங்கள்.. என்ன விஷயம். காபி சாப்பிடுகிறீர்களா ?

நோ… தாங்க்ஸ். உங்க அலுவலகத்தில வேலை செய்யும் நவீன் காணோம்ன்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு அதான் ஒரு முதல் கட்ட விசாரணை.

நவீனை காணோமா ? மேலாளர் அதிர்ந்தார். ஓ.. நோ.. அது நிகழக் கூடாது.

அவருடைய அதிர்ச்சியின் வீரியத்தைக் கண்ட மேட் ரைசன் சற்றே திகைத்தார். மேலாளர் தொடர்ந்தார்.

“மேட்… உங்களுக்கே தெரியும், இது பெடரல் கவர்ண்ட்மெண்டோட ஆராய்ச்சிக் கூடம்.  டிபென்ஸ் சம்பந்தப்பட்டது. நவீன் இங்கே சீஃப் ஆர்க்கிடெக் மாதிரி. சிஸ்டம்ஸ் எக்ஸ்பர்ட். அவன் காணாமப் போறது நாட்டோட பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலா அமைய வாய்ப்பிருக்கு. இது வெறுமனே ஒரு ஆள் மிஸ்ஸிங் அல்ல. அவனை எப்படியும் கண்டுபிடிச்சாகணும்” மேலாளர் படபடத்தார்.

இல்லே.. அப்படிப் பதட்டப்படத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இப்போ தானே இரண்டு மூண்டு நாளா காணோம். மேட் சொல்லி முடிக்கும் முன் அவர் இடைமறித்தார்.

நோ… நோ… இது ரொம்ப சீரியஸ் மேட்டர். நவீனை உடனே கண்டுபிடிச்சாகணும். எங்க ரூல் படி எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் அனுமதி இல்லாமல் எங்கேயும் போகக் கூடாது. அது மட்டுமல்ல அவர் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை நடத்திட்டுருந்தார். அது முடியற தருவாயில இருக்கு. இந்த நேரத்துல அவர் மிஸ் ஆகறது பயமுறுத்துது. நான் பெண்டகன் தலைமையிடத்தில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் வாங்கி குடுக்கறேன். நவீன் உடனே கண்டுபிடிக்கப் படணும். அவர் சொல்லச் சொல்ல மேட் மேலாளரின் பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டார்.

அதன் பின் எல்லாம் ராக்கெட் வேகம் பிடித்தன. நவீனின் போட்டோ உலகம் முழுவதுமுள்ள ரகசிய தேடல் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நவீனைக் கண்டுபிடிக்க தேடல் கலிபோர்னியா காட்டுத் தீ போல பரவியது.

அடிலெய்ட் ரிஸர்ச் சென்டர், ஆஸ்திரேலியா
காலை 5 மணி.

“நிஜமாவா சொல்றீங்க ?” அடிலெய்ட் ரிசர்ச் செண்டரின் தலைமை நிர்வாகி லியோன் ஆஸ்கின் கையில் பற்றியிருந்த செல்போனுக்கே காதுவலிக்கும் அளவுக்குச் சத்தமாய்க் கேட்டார்.

உண்மை தான். இந்த ஆராய்ச்சிக்காக நீங்கள் செய்த எந்த செலவும் வீண் போகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறேன். ஜெயராஜ் மறு முனையில் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசினான். அவன் குரலில் பெருமிதம் படபடத்தது.

ஐ..காண்ட் வெயிட்… இன்னும் ஐந்தே நிமிடத்தில் அங்கே இருப்பேன். சொல்லிக் கொண்டு கைப்பேசியை ஆஃப்செய்து விட்டு படுக்கையைச் சுருட்டி வீசிவிட்டு எழுந்தார் ஆஸ்கின்.

பத்தே நிமிடத்தில் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்தது ஆஸ்கினின் கார்.

ஆராய்ச்சிக் கூடம் அமைதியாய் இருந்தது.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஏதேதோ படங்கள் வரிசை வரிசையாய் ஓடின.

ஹாய்..ஜேக். 

ஜெயராஜ் நிமிர்ந்தார்.

ஹாய் ஆஸ்கின். வாங்க.

என்னால் இருப்புக் கொள்ளவில்லை ஜேக். இதை மட்டும் நிஜமாக்கிக் காட்டினால் உலகமே வியர்ந்து போய்விடும். ஆஸ்கின் தனது அறுபது வயதையும் மறந்து ஆறு வயதுக் குழந்தை போல குதூகலித்தார்.

ஜேக் புன்னகைத்தான். இண்டர்காமை தட்டி ஜெனியை உள்ளே அழைத்தான்.

‘ஜெனிக்கு இந்த ஆராய்ச்சி தெரியுமா ?’

‘தெரியாது. அவளைத் தான் இன்னிக்கு சோதனைக்குப் பயன்படுத்தப் போறேன். பாருங்க விளையாட்டை’ என்று கூறி கண்ணடித்தான் ஜெயராஜ்.

ஜெனி வந்தாள். அந்த சிக்கலான கண்ணாடி அறைகளும், கணினிகளும் நிரம்பியிருந்த சோதனைச்சாலைக்குள் நடந்து ஜெயராஜ் அருகே வந்தாள். கையிலிருந்த ஆங்கில செய்தித் தாளை ஜெயராஜின் முன்னால் வைத்து விட்டு அவன் சொன்ன ஒரு குட்டியூண்டு கண்ணாடி அறைக்குள் அமர்ந்தாள்.

ஜெனி… நான் கேக்கறதுக்கு பதிலை மட்டும் சொல்லு. அவ்வளவு தான் வேலை… ஜெயராஜ் சொல்ல, ஜெனி சிரித்தாள்.

ஆஸ்கின் கணினித் திரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணினியில் ஏதேதோ புதிய வண்ணங்கள் தோன்றத் துவங்கின.

ஜெயராஜ், கணினியின் செட்டப் களைச் சரிசெய்துவிட்டு, தனக்கு முன்னால் இருந்த மெல்லிய குமிழ் வடிவ மைக்கில் பேசினான். அது ஜெனி இருந்த கண்ணாடிக் கூண்டுக்குள் கேட்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஜெனி.. நேற்று மாலையில் என்ன பண்ணினே ?

நேற்று வீட்டுக்குப் போயி நல்லா தூங்கினேன். ஜெனி சொன்னாள்.

ஜெயராஜ் கணினித் திரையைப் பார்த்தான். அதில் புகைப்படங்கள் துண்டு துண்டாய் தெரிந்தன. ஜெனி ஒரு பாரில் நுழைவதும், உள்ளே அமர்ந்து மது அருந்துவதும், அடிலெய்ட் ரண்டேல் மால் தெருவுக்குள் நுழைவதும் என காட்சி காட்சியாக திரையில் வர ஆஸ்கினுக்கு புல்லரித்தது.

மூளையில் நமது சிந்தனைகளும், பதில்களும் வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பே காட்சி வடிவம் பெற்று விடுகின்றன. அந்த காட்சி வடிவம் ஒருவகையில் ஞானிகளின் தலையைச் சுற்றி வரும் ஒளி வட்டம் போல சுற்றிக் கொண்டே இருக்கும். அது வெளிப்புற இயக்கங்களாலும், கதிர்களாலும் தாக்கப்படவில்லையெனில் அந்தக் காட்சிகளை அப்படியே டிஜிடல் இழைகளாக்கி கணினியில் புகுத்திவிடலாம். இது அதன் முதல் படி. ஜெயராஜ் சொன்னனன்.

கனிணியின் திரையில் ஜெனியின் மனதில் ஓடும் காட்சிகளெல்லாம் துண்டு துண்டாய் வந்து கொண்டே இருந்தன.

ஜெயராஜ் விளக்கினான். நமது மூளையில் சிந்தனைகள், அனுபவங்கள், காட்சிகள் நிரம்பியிருந்தாலும் அவற்றில் எதையெல்லாம் நினைவுபடுத்துகிறோமோ அது மட்டுமே டிஜிடலைஸ் செய்யப்படுகிறது. அதனால் தான் கணினித் திரையில் ஒரு திரைப்படமாய் தொடர்ந்து காட்சிகள் ஓடாமல் துண்டு துண்டாய் காட்சிகள் வருகின்றன. இதன் அடுத்த கட்டம் மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையுமே பிரதி எடுப்பது.

இனிமேல் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதோ, உளவாளிகளிடம் ரகசியம் கறப்பதோ, மனநோயாளிகளின் நோயின் வேர் கண்டுபிடிப்பதோ எதுவுமே சாத்தியம்… ஜெயராஜ் சொல்லச் சொல்ல ஆஸ்கின் அசந்து போய் உட்கார்ந்திருந்தார்.

உனக்கு பாய் பிரண்ட் யாராவது இருக்காங்களா ? ஜெயராஜ் மைக்கருகே குனிந்து குறும்பாய் கேட்டான்.

நோ…வே என்றாள் ஜெனி..

கணினி காட்சிகள் சட்டென்று நிறம் மாறின. கணினியில் ஜெனி ஜெயராஜைப் பார்த்து ரசிக்கும் காட்சிகள் தோன்ற, ஆஸ்கினும் ஜெயராஜும் வாயடைத்துப் போனார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத அவஸ்தையில் தலையைக் குலுக்கிய ஜெயராஜின் கண்களில் பட்டது அருகிலிருந்த ஆங்கிலச் செய்தித் தாளும், அதில் இருந்த நவீனின் புகைப்படமும்.

ஆஸ்கினின் பார்வையிலிருந்து தப்பிக்க மெல்ல வாசிக்கத் துவங்கினான் அதை.

மில்வாக்கி காவல் நிலையம் : விஸ்கான்சின், அமெரிக்கா

மேட்-டின் அறைக்குள் அமைதியாய் இருந்த ஃபேக்ஸ் மெஷின் நாகப் பாம்பு போல உஸ் என முனகியது.

பிரிண்டரின் ராட்சத நாக்கு போல வெளியே நீண்ட காகிதத்தை இழுத்து எடுத்த மேட் ஆனந்தமடைந்தார். !

நவீன் கண்டுபிடிக்கப் பட்டான் ! லாஸ் வேகஸில் !!

படத்தில் லாஸ்வேகஸ் சூதாட்ட விடுதி பலாஜியோவின் முன்னால் நவீன் நிற்க, அருகிலேயே காவலர் ஒருவர். நவீனின் டிஷர்ட் கிரீன் பே பேக்கர்ஸ் என்றது.

ஆஹா.. நவீன் கண்டுபிடிக்கப் பட்டானா ? மேட் ஆனந்தமடைந்தார். உடனே இதை மேலிடத்துக்கு அறிவிக்க வேண்டும். குறிப்பாக அந்த அலுவலக மேலாளருக்கு அறிவிக்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டிருந்த போது போன் அடித்தது.

‘வி காட் நவீன் …” மறு முனை பேசியது.

நன்றி. இப்போது தான் பேக்ஸ் கிடைத்தது. மேட் ரைசன் சொன்னார்.

ஃபேக்ஸ் ? வாட் ஃபேக்ஸ் ?  மறு முனை குழம்பியது

“நவீன் கிடைச்சுட்டதா நீங்க லாஸ்வேகஸில இருந்து அனுப்பின போட்டோவும் செய்தியும் ! “ மேட் ரைசன் சொன்னார்.

என்ன சொல்றீங்க ? – லாஸ் வேகஸா ? நவீனை நாங்க இங்கே சிகாகோ நேவி பியர்ல கண்டு பிடிச்சிருக்கோம்.

அவர்கள் சொல்ல மேட் குழம்பினார் ? இதென்ன புதுக் குழப்பம் ?
“அவன் என்ன டிரஸ் போட்டிருக்கான் ? “ மேட் கேட்டார்.

பச்சை நிற டீ ஷர்ட். கிரீன்பே பேக்கர்ஸ் வாசகம் ! காக்கி நிற பேண்ட்.

மேட் அதிர்ந்தார். இதெப்படி சாத்தியம் ?

யோசித்துக் கொண்டே பெருமூச்சு விட்டவருக்கு மீண்டும் ஒரு அழைப்பு. செய்தியைக்  கேட்ட அவருடைய கையிலிருந்த செல்போன் நழுவிக் கீழே விழுந்தது.

ஆஸ்திரேலியாவில் நவீன் கண்டுபிடிக்கப் பட்டானாம். ஆனால் அங்கே நான்கு நவீன்கள் ஒரே போல, ஒரே மாதிரி டி-ஷர்ட், பேண்ட் அணிந்திருந்ததால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனராம்.

எதிர்பாராத புதுக் குழப்பம் நிலவ, மேட் ரைசன் மேஜை மீது அமர்ந்தார்.

ஃபேக்ஸ் மறுபடியும் இயங்கத் துவங்கியது.

போன் மறுபடியும் அடித்தது.

சீனா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் என எல்லா இடங்களிலும் நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டனர் என்னும் செய்திகள் பேக்ஸிலும், போனிலும் வந்து கொண்டே இருந்தனர்.

உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நவீன்களும் ஒரே அடையாளத்துடன். ஒரே மாதிரி சீருடையுடன். !!

.
அசோக் நகர் காவல் நிலையம், சென்னை

காணாமல் போல சுமார் முப்பத்து ஆறு வயது நவீன் உலகெங்கும் நாற்பத்து ஏழு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டனர். எல்லோரும் ஒரே ஆடையை அணிந்திருப்பதும், எல்லோருமே பிரமை பிடித்தவர்கள் போல அமைதியாய் இருப்பதும் காவலர்களையும், அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்தியாவில், அசோக் நகரில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.

“இனிமேலும் பல நவீன் கள் உலகெங்கும் நடமாடிக் கொண்டிருக்கலாம் எனும் அச்சம் நிலவுகிறது. இதன் மர்மத்தை அவிழ்ப்பதும், இவர்கள் உண்மையிலேயே ஏதேனும் தீவிரவாதிகளின் அதி நவீன ரோபோவா என்பதை கண்டறியவும் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

எங்கேனும் இந்தப் படத்தில் காணப்படும் நவீன் எனும் நபர் தென்பட்டால் உடனே இந்த எண்களில் ஏதேனும் ஒன்றுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

கனகராஜ் திகிலுடன் தனக்கு முன்னால் நின்றிருந்த நவீனைப் பார்த்தார்.

“யோவ்.. சட்டை பேண்டை கழற்ற சொன்னா என்ன பண்றே” ஒரு காவலர் உள்ளிருந்து நவீனை நோக்கிக் குரல் கொடுத்தார்.

“வேண்டாம்… வேண்டாம்…. “ கனகராஜ் திடீரென மறுத்தார். 

“இவனை ஒரு செல்லுல அடைச்சு வையுங்க. நான் ஒரு போன் பண்ண வேண்டியிருக்கு. விஷயம் ரொம்ப முக்கியம். இவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. வெளியே விட்டுடாதீங்க. அவனை தொடாதீங்க” கனகராஜ் சொல்லிக் கொண்டே போக நிலையத்தில் இருந்த காவலர்கள் குழப்பத்துடன் நெற்றி சுருக்கினர்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா

“.. எல்லா நவீன்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான ரிசல்ட் களே வந்திருக்கின்றன. எந்த வித்தியாசமும் இல்லை.

கண்டுபிடிக்கப் பட்ட இந்த ஐம்பது நவீன்களுமே பேசாமல் மௌனமாய் இருப்பதால் காவலர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். இவர்களுடைய பின்னணி என்ன ? இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வது எப்படி என தெரியாமல் உலகெங்குமுள்ள காவலர்கள் திகைத்துப் போயிருக்கின்றனர்.”

ஆஸ்கின், இந்த செய்தியைப் படிச்சீங்களா ? வியப்பும், படபடப்புமாக ஜெயராஜ் செய்தியை ஆஸ்கினின் முன்னால் நீட்டினான்.

ஆஸ்கின் இன்னும் ஆராய்ச்சிப் பிரமிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. அதற்குள் அந்த செய்தி அடுத்த ஆச்சரியத்தை அவருக்குக் கொடுத்தது.

இங்கே நமக்கு ஒரு வாய்ப்பு, ஜெயராஜ் சொன்னான்.

என்ன வாய்ப்பு ?

இந்த குழப்பத்தைத் தீர்க்க நம்ம கண்டுபிடிப்பைப் பயன்படுத்துவோம். நவீன் மனதில் என்ன இருக்கு, என்ன ஓடிட்டிருக்கு என்பதை நாம படமா காப்சர் பண்ணுவோம். என்ன சொல்றீங்க ? ஜெயராய் உற்சாகமாய் கேட்க ஆஸ்கினுக்கு அது ஒரு அரிய வாய்ப்பாய் பட்டது.

அதுக்கென்ன.. உடனே பண்ணிடலாமே ! ஆஸ்கின் உற்சாகமானார்.

அடிலெய்ட் ரிசர்ச் செண்டர், ஆஸ்திரேலியா
மாலை 4 மணி

 
அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆஸ்கினும் ஜெயராஜும் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த கண்டுபிடிப்பு இன்னும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. எனவே இதைக் குறித்து எதுவும் வெளியே சொல்லக் கூடாது எனும் உத்தரவை ஆஸ்திரேலிய அரசு வருகை தந்திருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு இட்டிருந்தது.

நான்கு நவீன்கள் ஓரமாக அமர்ந்திருந்தனர்.

ஒரு நவீன் ஜெயராஜின் கண்டுபிடிப்பான அந்த பிற கதிர்கள் தாக்காத சிறப்பு கண்ணாடி அறைக்குள்  அமர்த்தப்பட்டார்.

ஜெயராஜ் தனக்கு முன்னால் இருந்த மைக்கில் நவீனிடம் பேசிக்கொண்டிருந்தார். தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், என எந்த மொழியில் பேசினாலும் நவீனிடமிருந்து பதில் இல்லை.

கணினி திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜெயராஜும், ஆஸ்கினும், அமெரிக்க அதிகாரிகளும்.

கணினி எந்த மாற்றமும் இன்றி வெறுமையாய் இருந்தது.

ஜெயராஜுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது. இப்போது என்ன செய்வது ? நவீன் ஏன் எதையுமே நினைக்க மாட்டேன் என்கிறான் ? நினைக்காதிருக்கும் வரை திரையில் ஏதும் தோன்றாதே… நான் தோல்வியடைந்து விட்டேனா ? இந்தக் கருவியால் பயனில்லையா ? ஜெயராஜ் வருந்தினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் ஜெயராஜ் டேபின் மீது விரலால் தட்டினார்.

எதிர்பாரா விதமாக கணினியில் சட்டென ஒரு காட்சி தோன்றியது.

வெளிச்சமாய் ஒரு மிகப்பெரிய குமிழ். அதற்குள் ஏதோ நீள் குழல் விளக்குகள் அசைந்து கொண்டிருந்தன.

ஜெயராஜ் மீண்டும் தனது விரலால் மேஜையில் முதலில் தட்டியது போலவே தட்டினான்.

அதே காட்சி மீண்டும் திரையில் வந்தது.

ஜெயராஜுக்கு ஏதோ ஒன்று பிடிபட்டது போல் தோன்றியது. இதென்ன ஒரு புது மொழியா ?  ஜெயராஜ் ஆஸ்கினைப் பார்த்தார் அவர் குழப்ப முடிச்சுகளோடு ஜெயராஜைப் பார்த்தார். அதிகாரிகள் கணினியையே விழுங்கி விடுவது போலப் பார்த்தார்கள்.

ஜெயராஜ் தனது விரல்களால் மேஜையில் தட்ட ஆரம்பித்தார். மெலிதான தாளம் போல ஜெயராஜ் மேஜையில் தட்டத் தட்ட கணினித் திரை அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

ஒரு வெளிச்சக் குமிழுக்குள் நவீன் நிற்கிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட். அவனுக்கு முன்னால் வெளிச்ச உடலுடன் நீள் குழல் விளக்குகளைப் போன்ற உயிர்கள் அலைகின்றன. அவ்வப்போது அவை அணைந்து அணைந்து எரிகின்றன. நடக்கின்றன. வளைகின்றன. வடிவத்தை மாற்றி குமிழ் விளக்கு போல ஆகின்றன. மெலிதாகின்றன.

நவீனின் பிம்பம் ஒரு பாதரசப் படிவம் போன்ற ஒரு பெட்டிக்குள் விழுகிறது, அந்தப் பெட்டிக்குள் ஒரு விளக்கு உருவமும் நுழைகிறது. அடுத்த வினாடி இன்னோர் நவீன் அந்தப் பெட்டியிலிருந்து எழுந்து வருகிறான். அதே டி-ஷர்ட் அதே பேண்ட்.

ஜெயராஜும், ஆஸ்கினும், அதிகாரிகளும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சட்டென காட்சிகள் மாற, நவீன்கள் ஆயிரம் ஆயிரமாய் பெரும் கூட்டமாய் நிற்கின்றனர். தரைக்குள்ளிருந்து சில உருவங்கள் மண்புழுக்களைப் போல மண்ணைத் துழைத்து கம்பங்களைப் போல நிமிர்கின்றன.

அடுத்த காட்சியில் ஓர் ராட்சத பருந்து போன்ற கருவிக்குள் நவீன்கள் நுழைகின்றனர். பின் அந்த கருவியிலிருந்து ஒளி உருண்டைகள் ஆயிரம் ஆயிரமாய் வெளியேறி பூமியை சிதறிப் பாய்கின்றன.

காடுகள், மலைகள், நாடுகள் என எல்லா இடங்களுக்கும் அந்த ஒளிப் பந்துகள் விழுகின்றன. ஒளிப்பந்து விழும் இடத்தில் சட்டென ஒளி மறைய நவீன்கள் !

அந்த அறையிலிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போய் கணினித் திரையையே வெறித்தனர்.

யு.எப். ஓ அலுவலகம், இங்கிலாந்து

இந்த நவீன்களின் உடலில் இருப்பது ஏலியன் உயிரா ? அது ஏலியன் தானா ? ஏலியன் எனில் என்ன கிரகம் ? எப்படி அவர்களால் ஒளியாக பூமிக்குள் பாய முடிகிறது ? எப்படி மனிதனைப் பிரதியெடுக்க முடிகிறது ? அவர்கள் நோக்கம் தான் என்ன ? பூமியைக் கட்டுப்படுத்துவதா ? பூமியை அழிப்பதா ? இப்படிப் பல கேள்விகளுக்கான விடையைத் தேடும் முயற்சியையே அனைவரும் மேற்கொண்டுள்ளோம்.

பல சுவாரஸ்யமான ஆய்வுகள் தெரியவந்துள்ளன. ஒன்று இவர்கள் கார்பண்டை ஆக்ஸைடைத் தான் சுவாசிக்கப் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது இவர்களுக்குப் பசிப்பதில்லை. மூன்றாவது, இவர்கள் மண்ணில் புதையுண்டு கிடந்தால் கூட உயிர்வாழ்வார்கள்.

ஆராய்ச்சி பல்வேறு கட்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும் பல நவீன்கள் கண்டுபிடிக்கப் பட்டதால் உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கின்றன.

பத்திரிகையாளர் கூட்டத்தில் யூ.எஃப். ஓ இயக்குனர் ராபட்சன் பேசிக்கொண்டிருந்தார்.

“ஒரு உயிரை வைத்து இப்படி ஆராய்ச்சி செய்வது நல்லதா ? இது மனிதாபிமானத்துக்கு எதிரான செயலில்லையா ?” ஒரு பத்திரிகைப் பெண்மணி கோபமாய் கேட்டாள்.

இவர்கள் மீது எந்த காயமும் நேராமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

“உலகிலிருந்து நவீன் எப்படி வேறு கிரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்” அடுத்த கேள்வி வந்தது.

“அது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஆராய்ச்சிக் கூடம் மும்முரமாய் இருக்கிறது”

“இவர்களால் மனிதனுக்கு ஏதேனும் நோய், உயிர்சேதம் போன்ற அச்சுறுத்தல்கள் ? “ கேள்விகள் தொடர்ந்தன..

முழுமையாய் எதுவும் தெரியாது. இவர்களால் மனிதர்களுக்கு என்ன அச்சுறுத்தல் என்பதைக் கண்டறியும் வரை இவர்கள் பாதுகாப்பாகவே வைக்கப்படுவார்கள். எங்கேனும் இந்த மனித உருவத்தைக் கண்டால் உடனே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான வேண்டுதல்.

பேட்டி தொடர்ந்து கொண்டிருக்க, அடக்க முடியாத அழுகையுடன் விசும்பிக் கொண்டிருந்தனர் நவீனின் தந்தை நுக்கலாவும், தாயும்.