நகரத்து நிலா

அப்பார்ட்மெண்ட்
அவஸ்தைகளால்
கிரில் கம்பிகளுக்கு வெளியே
சிறைப்பட்டு விட்டது
நிலா.

அடம்பிடித்து அழும் குழந்தைகளுக்கு
சாதம் ஊட்ட
கார்ட்டூன் சேனல்கள்
கைகொடுக்கின்றன.

குழந்தைகளைப் பார்க்கும்
வாய்ப்புகள் குறைந்ததால்
வளர்பிறையிலும்
தேயத் துவங்குகிறது
நிலா !

மூணு கண்ணனும்
உம்மாஞ்சியும்
குழந்தைகளைப் பயமுறுத்தும்
வேலையிழந்து
பெஞ்ச்களில் அடைக்கலம்.

“ஆஃப் பண்ணவா ?”
எனும் அம்மாக்களின்
ரிமோட் மிரட்டல்கள் தான்
குழந்தைகளின்
குறும்புகளுக்குக் கடிவாளம்.

மின்சாரம் நின்று போகும் கணமொன்றில்
சன்னல் திறக்கையில்
தூரத்தில் தெரியும் நிலா கண்டு
துள்ளிக் குதிக்கும் குழந்தை சொல்லும்..
“ஹாய்… .. .டெலிடபீஸ் “

இல்லாமல் இருப்பவை

காலையில்
அங்கே இருந்த நிழல்
மாலையில்
அங்கே இல்லை.

காலையில்
மெளனமாய் நின்றிருந்த
காற்று
இப்போது
அவ்விடத்தில் இல்லை.

அப்போது பார்த்த
ஓரிரு பல்லிகளை
இப்போது
காணவில்லை

காலையில்
வீட்டுக்குள் கிடந்த
நான்கைந்து துண்டு
வெயில்கள் கூட
வெளியேறியிருக்கின்றன.

ஆனாலும்
கதவு திறந்து நுழைகையில்
நினைத்துக் கொள்கிறோம்
எல்லாம்
அப்படியே இருக்கின்றன.

இந்தக் கணம்.

இப்போதும்
எங்கேயோ ஒரு தாய்
தன்
குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

எப்போதும்
எங்கேனும் ஒரு மகன்
தன் தாயை
மிதித்துக் கொண்டிருக்கிறான்.

எப்போதும்
எங்கேயோ
எழுதப்படாத வலிகளின் வரிகளால்
நிரம்பிக் கொண்டிருக்கின்றன
அன்னையரின் டைரிகள்.

எப்போதும்
எங்கேனும்
எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது
ஒரு கவிதை
தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.

அவனைப்போல் இன்னொருவன்

அதோ வருகிறான்
ராட்சஸன்.

மேலதிகாரியிடம்
அழுக்குத் தகவல்களைப்
பரிமாறி
உன்னை
சிக்கலுக்குள் உள்ளாக்கியவன்.

உனக்கும், அவளுக்குமான
நட்பைக் கூட
காமத்துப் பால் என
ஆக்டோபஸ் வாயுடன்
அறிக்கையிட்டவன்.

பொறாமைப்
பாய்மரக் கப்பலின்
மாலுமி அவன்.

நீ
திறமைகள் வற்றியவன் என
என்னிடமே
சொல்லியிருக்கிறான்.

காக்கா பிடித்தும்
கால் கழுவியும்
காரியம் சாதிப்பவன் என
கிசு கிசுக் கதைகளை
எழுதிக் குவிப்பவன் .

இதோ
நெருங்கி வந்து விட்டான்.

இப்போது பார்
சட்டென ஒரு
புன்னகை எடுத்து அணிந்து கொள்வான்.

நீயும்
பொருத்தமாய் ஒரு
புன்னகையை
எடுத்து உடுத்திக் கொள்.

இல்லையேல்
உங்கள் கோபங்களின்
நிர்வாணம்
கோரமாய் வெளிப்பட்டு விடக் கூடும்.

அந்த அயனி மரம்

தோட்டத்தில்
அயனி மரம் நட்டார் தாத்தா.

நேராக வளர்ந்தால்
பலகைக்கு ஆகும்
என்றார் அப்பா .

பிரியும் கிளைகளை
வெட்டி வெட்டி
நேராய் வளர
உத்தரவாதமும் தந்தார்.

நல்ல மிளகுச் செடியை
அதில் சுற்றி
அழகுபார்த்தார் அம்மா.

விளைந்த பழங்களெல்லாம்
விருந்தாயின
நாவுக்கு.

சுற்றிய மிளகுச் செடி
கொத்துக் கொத்தாய் காய்த்தது
ரசம், பரவசம் ஆனது.

நேராக வளர்ந்து
உடல் பெருத்து
கன கம்பீரமானது மரம்.

தாலாட்டி வளர்ந்த
அப்பா
புகைப்படத்தில் நிரந்தரமானார்.

மிளகுச் செடி
கருகி கவனிப்பற்று சருகானது.

இத்தனை விலை போகும் மரம்
எனக்கு
எனக்கென
சண்டையிட்டுப் பிரிந்தது
ஒற்றுமையாய்ப் பழம் தின்ன குடும்பம்.

எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை

தேவதைகளின்
சிறகசைப்பில் சரிசெய்ய
இயலாதவற்றை
ராச்சசிகளின் நகக்கீறல்கள்
ரட்சிப்பதில்லை.

தேவதைச் சாரலில்
மோட்சம் அடையாதவர்கள்
பேய்மழையின் கைபிடித்து
பரமண்டலங்களுக்குப்
பயணிப்பதும் நிச்சயமில்லை.

மெல்லினங்களின்
இறகுகளில் தான்
பறந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வல்லினங்களின்
பளு அறுத்து வீசிவிடின்
மனசும்
இலேசாகிப் பறக்கத் துவங்கும்.

எனினும்…
இறக்க இறக்க
உயிர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன
எறும்பின் முதுகில்
எந்திரக் கற்கள்.

எத்தனை தான்
தேவாலயப் பீடங்களிலும்
பலிபீடங்களிலும்
கண்ணீர்த் துளிகள்
இரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும்

வறுமைக் கோட்டை
அழிக்க இயலாத
மழை
பொழிந்து கொண்டிருந்தாலென்ன
அழிந்து கொண்டிருந்தால் தான் என்ன ?

விலக்கப்பட்டவை

வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்து
பேன் பார்க்கும் சகோதரிகளை
பாட்டி திட்டுவாள்
ராத்திரியில
தலையை விரிச்சு போடாதீங்க.

இரவு வேளைகளில்
கிணற்றங்கரையில்
தண்ணி எடுக்கப் போகையிலும்
வசவு விழும்
பொழுதணஞ்சப்புறம் தண்ணி எடுக்காதீங்க.

சிம்னி விளக்கு
வெளிச்சத்தில்
நகம் வெட்டுகையில்
தாத்தா கத்துவார்
இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகாது.

ஏன் எதற்கென்றோ,
சரியா தப்பா என்றோ
விவாதம் செய்ததில்லை யாரும்.

எனினும்,
திட்டுவதற்கு ஆளில்லாத
இன்றைய
கிராம வீட்டு மெளனம்
ஏதோ செய்கிறது எல்லோரையும்.

இரங்கல்

கொல்கொதா மலை
துயரங்களின் துருவமான
வலிகளின்
சிலுவையுடன்
இயேசுவை வரவேற்றது.

சிலுவையை இறக்கி வைத்து
அதில்
இயேசுவை இறக்க வைத்து
இப்படம் இன்றே கடைசி
என
கலைந்தது கூட்டம்.

இயேசுவின் மரணத்துக்காய்
மது விருந்து
மாளிகைகளில் நடக்கையில்
எல்லோரும்
ஒரு நிமிடம் துக்கம் அனுசரித்தார்கள்.

தற்கொலை செய்து கொண்ட
யூதாஸின்
துயர மரணத்துக்காய்.

அவமானத்துடன் ஒரு அரிவாள்

arivaal.jpg

மனிதர்களே.

உங்கள் மனங்களைக்
கூர்தீட்டி
தயவு செய்து எங்களை
துருப்பிடிக்க விடுங்கள்.

மொழிக்குள் மட்டும் இருக்கட்டும்
ஆயுத எழுத்து
அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று
அடம் பிடிக்காதீர்கள்.

உங்களைப் புரிந்து கொள்ள
முடியவில்லை.
என் முகத்துக்குக்
குருதித் திலகமிடுவதை
ஏன் வெற்றி என்கிறீர்கள் என்பது புரியவில்லை.

அறுவடைக்காய்
அரிவாள் எடுக்கச் சொன்னால்
தலைகள் தான் வேண்டுமென்று
தகராறு செய்கிறீர்கள்.

“வெட்டரிவா மீசை”
என்று சொல்லி
வீணான வீரத்தை
வளர்த்துக் கொள்கிறீர்கள்

மதத்துக்கும் ஜாதிக்கும்
சண்டையிட்டு சண்டையிட்டே
என் முதுகு மொத்தமும்
சர்வ மத சிவப்புத் துளிகள்.

உங்கள்
முதுகுக்குப் பின்னால்
சொருகப் பட்டு சொருகப் பட்டே
உங்கள் முதுகெலும்பாகிப் போனேன்
எனக்கு முதலுதவி செய்யுங்கள்.

ஆயுத பூஜைக்குத் தான்
என்னை தரையிறக்குகிறீர்கள்
பூஜை முடிந்ததும்
மீண்டும் என்னைப் பூசி மெழுகுகிறீர்கள்.

என்னை சகதியில் பூசுங்கள்
விறகுப் பொடிகளுக்குள் வீசுங்கள்
வேண்டுமானால்
கசாப்புக் கடைக்கு விற்றுவிடுங்கள்
இந்த மனித அறுவடைக்கு மட்டும்
அனுப்புவதை நிறுத்துங்கள்.

ஆயுதமாய் இருந்தால்
விவசாயிடம் இருக்கவே விருப்பப்படுவேன்.
ஜாதிப் பலகைகளில்
மதக் கோபுரங்களில்
அவசர இரத்தம் பூசும்
அதிகாரத் தூரிகையாவதில்
எனக்கு உள்ளத்தால் உடன்பாடில்லை.

சிரச்சேதங்களில் சேதப்பட்டு,
பாமரர்களை பாடைக்கு அனுப்பி,
இரத்தப் பொட்டுக்களால்
பல
சுமங்கலிப் பொட்டுக்கள் அழித்து
என் தேகமெங்கும்
சிதைந்து போன போன மனிதாபிமானத் துளிகள்.

போதும்.
இந்த அரிவாள் கலாச்சாரம்
நரைத்துப் போன
இந்த தலைமுறையோடு
மரித்துப் போகட்டும்.

மரணக் குரல் மட்டுமே கேட்டு
ரணமாகிப் போன என் மனதுக்கு
வயல் காட்டின் சலசலப்பை
அறிமுகப்படுத்துங்கள்

இல்லையேல்
சூரியன் தற்காலிகமாய்ச் செத்துப்போயிருக்கும்
இந்த இரவில்
தெற்குமூலையில் என்னைப் புதைத்து
ஓர்
தென்னங்கன்று நடுங்கள்.

அதுவும் இல்லையேல்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
எனக்கொரு
தூக்குக் கயிறு தயாராக்குங்கள்.

சச்சின்…

desam_paadal_sachin3.jpg
உன் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
ஒரு ஆச்சரியம்
மெல்ல பூச்சொரியும்.

உன்னை எப்படிப் பாராட்டுவது ?
எத்தனை வெப்பம்
விடுத்தாலும்
விடாமல்
தீ கக்கும் கதிரவனாய்
திக்கெட்டும் உன் புகழ்.

பாருக்குள் பாரதப் பெயரை
உயரப் பறத்தினாய்
நீ
சளைக்காமல் அடிக்கும்
சிக்ஸர்கள் போல.

சுற்றி இருந்த
அத்தனைக் கைகளும்
இந்திய மானத்தைத் துகிலுரிந்து
சேலை விற்றுச் சம்பாதித்த போது
நீ மட்டும்
சத்தமில்லாமல் சுத்தமாய் நின்றாய்.

ஒவ்வோர் முறை
நீ
மட்டை தொடும் போதும்
எனக்குள்
பிரவாகமும்
பிரார்த்தனையும் சரிவிகிதத்தில்.

நீ விலகினால்,
சூரியக் கைக்குட்டை
பனி துடைத்துச் சென்ற
பச்சை இலைகளாய்,
அரங்கத்தின் அத்தனை
இருக்கைகளும்
தனிமையாய்க் கிடக்கும்.

தோல்விகள் உன்
கால் வெட்டுவதும் இல்லை,
வெற்றிகள் உன்னை
கர்வக் கிரீடத்துள்
பூட்டுவதும் இல்லை.

வரலாறுகள் என்று
வரையறுக்கப்பட்டவை எல்லாம்
உன்னால்
அறுத்தெறியப்பட்டு,
நீ
எழுதுபவையே வரலாறுகளாகின்றன.

சின்னக் கோடுகளின்
அருகே
நீ
பெரிய கோடுகள் வரைந்து வரைந்தே
எங்களை
பெருமைக் கடலுள்
பயணிக்க வைக்கிறாய்.

நீ
ஆடுவது சதுரங்கமல்ல.
ஆனாலும்
ஒவ்வொரு தடைகளாய் வெட்டி வெட்டி
நீ
முன்னேறுவதில்
சளைக்காத சதுரங்க லாவகம்.

ஈன்ற பொழுதில் பெரிதுவந்தாளா
உன் தாய் ?
நீ
ஈன்ற வெற்றிகளில்
பெரிதுவக்கிறாள்
நம் பாரதத் தாய்.

தலைவனாய் தான் இருப்பேனென்று
நீ
தர்க்கம் செய்ததேயில்லை.
அடம் பிடிக்க நீ ஒன்றும்
அரசியல் வர்க்கம் இல்லை.

அனுமர் வாலாய்
அவராதமெடுக்கும்
அதிசய ஓட்டக் கணக்கு
உனது.

நீ,
பிரபஞ்சத்தின் பரபரப்பு.
வியாபாரச் சந்தையில்
ஏலமிடப்படாத
விளையாட்டுப் புயல்.

நீ
ஆடவில்லையென்றால்
ஆட்டம் காணும் நம் அணி,
ஆட்டம் போடும் எதிரணி.

தேகத்துக்காய் வாழ்வோர்
நிரம்பிய தேசத்தில்,
நீ
தேசத்துக்காய் வாழ்கிறாய்.

உன்
ஒவ்வோர் நூறுக்குப் பின்னும்
பட்டாசு கொளுத்தத் தவறாத
என் மனசு,
உன்
தந்தையின் கல்லறை காயும் முன்
வந்து நீ,
பெற்றுத் தந்த வெற்றியில்
மட்டும் கண்ணீர் விட்டு
இன்னும் அதை ஈரமாக்கி விட்டது.

மலைபோல் பணிகள்
இமை தொற்றிக் கிடந்தாலும்,
மழலை கண்டால்
மனம் விரிகிறாய்.

அசோகச் சக்கர ஆரங்களில்
இருந்தாலும்
ஆரவாரமில்லாமல் இருக்கிறாய்.

உனக்கு விடுக்கப்படும்
ஒவ்வோர் கொலை மிரட்டல்களிலும்
என் உயிர்
மிரண்டு போகிறது.
நீயோ
மிருதுவாய்ச் சிரிக்கிறாய்.

நான்,
விருதென்றால் என்னவென்று
விளங்கிக் கொள்ளாத வயதில்
நீ
விருதுகள் வாங்கி
விருதுகளைப் பெருமைப்படுத்தினாய்.

நான்
வரலாறு கற்கவே விரும்பாத வயதில்
நீ
சரித்திரங்களைச் சரிசெய்தாய்.

ஒவ்வோர் வெற்றிக்குப் பின்னும்
பிறக்கும்
உன் புன்னகையில்,
பாரதம் விழித்தெழுகிறது.

குடும்பத்தை நேசிக்கிறாய்
விளையாட்டை சுவாசிக்கிறாய்
எதிரயை வாசிக்கிறாய்
வெற்றிகளைப் புசிக்கிறாய் – நீ
வரலாறுகளில் வசிக்கிறாய்.

உன்
தொடர் வளர்ச்சிக்கு வாழ்த்துக்களோடும்,
உனக்கு
வயதாகுதே எனும் கவலையோடும்.
– ஒரு ரசிகன்