TOP 10 : புகழ் பெறா கண்டுபிடிப்பாளர்கள்

இந்த உலகம் கண்டுபிடிப்புகளினால் வளர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் தங்களுடைய சிந்தனைகளைக் கூர்தீட்டி பல்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்து அழியாப் புகழ் பெற்றிருக்கின்றனர். சில படைப்பாளிகள் படைப்பின் கர்த்தாக்களாக இருந்தாலும், பெயர் பெறாமலேயே போய் சேர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களில் பத்து பேர் இந்த வாரம்.

Image result for friction light

 1. தீப்பெட்டி

சிக்கி முக்கிக் கல்லைக் கொண்டு தீமூட்டிக் கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். தீப்பெட்டி வந்தபின் அது மிக மிக எளிதானது. ஒரு உரசலில் தீ பிடிக்கும் மாயாஜாலம் போல ஆகிவிட்டது. 1827களில் இதைக் கண்டுபிடித்தவர் ஜான் வால்கர். திறமைசாலி. வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரர். அதை தனது ஊரில் தயாராக்கி விற்றார். “ஃப்ரிக்ஷன் லைட்” என அதற்குப் பெயரிட்டார். ஆனால் மக்கள் அதை லூசிஃபர் என்றும் சாத்தான் என்றும் அழைத்தார்கள்.

தனது கண்டுபிடிப்பின் மேல் பெரிய மரியாதை வராததால் அதை அவர் காப்புரிமை பெறவில்லை. அப்படியே சர் ஐசக் ஹொல்டன் என்பவருக்கு விற்று விட்டுப் போய்விட்டார். ஹோல்டன் பிஸினஸ் உத்தி தெரிந்தவர். உலகெங்கும் தீப்பெட்டியைக் கொண்டு போய் விற்பனை செய்தார். தீப்பெட்டி அவரை மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. அதனால் ஹோல்டன் தான் தீப்பெட்டி கண்டுபிடித்தவர் எனும் பெயர் இன்றும் நிலவுகிறது. உண்மையில் தீப்பெட்டியைக் கண்டுபிடித்த ஜான் வால்கர் பெயர் வெளிவராமலேயே போய்விட்டது.

 1. நீராவி எஞ்சின்

நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட் என்பது எழுதப்பட்ட வரலாறு. பெஞ்சமின் ஃப்ராடி என்பது மறந்து போன வரலாறு. காரணம் அவர் ஒரு அடிமை ! அடிமை நிலையில் அமெரிக்காவில் இருந்த அவர் கடின உழைப்பின் மூலம் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்தார். சம்பாதிக்கும் பணமெல்லாம் தனது எஜமானுக்கே கொடுக்கும் நிலை அவருக்கு. கிடைத்த வேஸ்ட் பொருட்களை வைத்து அவர் நீராவி எஞ்சினை உருவாக்கினார்.

அமெரிக்க கடற்படையில் பின்னர் சேர்ந்த அவர், நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அவர் அடிமை என்பதால் எதற்கும் காப்புரிமை பெற அவரால் முடியவில்லை. அமெரிக்காவின் முதல் போர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட நீராவி எஞ்சின் இவரது கண்டுபிடிப்பு தான். கடைசி வரை தனது கண்டுபிடிப்புகளின் மூலம் எந்த பயனையும், புகழையும் பெறாமலேயே மறைந்து போனார் இவர்.

 1. கார்ட் ஐடியா

எல்லோரும் கார்ட் பயன்படுத்துங்கள், அப்போது தான் இந்தியா வல்லரசாகும் என குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் முதன் முதலில் கார்ட் ஐடியாவைக் கண்டுபிடித்தவர் பெயர் ரான் கெலின் என்பவர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அதிக புகழோ பணமோ இவர் பெறவில்லை.

ஆனால் இவர் மிகப்பெரிய தொழிலதிபர், பேச்சாளர், கண்டுபிடிப்பாளர். அந்த வகையில் நிறைய சம்பாதித்தார். இனிமேல் கார்ட் பயன்படுத்தும் போது ஒரு வினாடி ரான் கெலினையும் மனதில் நினையுங்கள்.

 

 1. ஏ.கே 47

“என்னுடைய மனதில் தாங்க முடியாத வேதனை இருக்கிறது. நான் இதை ஏன் கண்டுபிடித்தேன் என வருந்துகிறேன். இலட்சக்கணக்கான உயிர்களின் சாவுக்கு நான் காரணமாய் இருக்கிறேன் எனும் சிந்தனை என்னை அலட்டுகிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளே என்னை மன்னித்துவிடும்” என ஒரு கடிதம் எழுதி ரஷ்யாவிலுள்ள ஒரு சர்ச்சுக்கு அனுப்பினார் மிக்காயேல் கலாஷினோவ். அவரது துயரத்துக்குக் காரணம் அவர் கண்டுபிடித்த ஏ.கே.47. இவர் தனது தாய்நாடான ரஷ்யாவுக்காகத் தான் இதை வடிவமைத்தார். தனக்கு எந்த புகழும், பணமும், காப்புரிமையும் வேண்டாம் என அதை மொத்தமாய் அரசுக்கே அதைக் கொடுத்தும் விட்டார்.

ஆனால் ஏ.கே 47 உலகெங்கும் பரவிவிட்டது. இன்றைய கணக்குபடி பத்து கோடி ஏ.கே.47 துப்பாக்கிகள் உலகில் உள்ளன. பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் தீவிரவாதம், சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள் என எல்லா இடங்களிலும் இது ஆக்கிரமித்து விட்டது. உலகெங்கும் பிரபலமான கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர். ஆனால் அது அழிவுக்கு வித்திட்டதால் கடைசில் மனம் கலங்கி 2013ல் இறந்தார்.

 1. சிப்ஸ்

“யோவ் என்னய்யா பிரஞ்ச் பிரைஸ் கொண்டு வந்திருக்கே.. பெரிசு பெருசா இருக்கு, மொறு மொறுப்பாவும் இல்லை” என கத்தினார் ஒரு கஸ்டமர். சமையல்காரர் ஜார்ஜ் கிரம் கடுப்பாகிப் போனார். சரி ரொம்ப மெல்லிசா சீவுவோம் என உருளைக்கிழங்கை சீவினார். மெல்லிய தூவல்களாய் வந்தது. அதை வறுத்து கொண்டு போய் வைத்தார். அது கஸ்டமருக்குப் பிடித்துப் போக, மக்கள் பலரும் அதைக் கேட்க ஆரம்பித்தனர். சட்டென சிப்ஸ் பிரபலமானது. நடந்தது 1853ம் ஆண்டு.

சரகோட்டா சிப்ஸ் என அதைப் பெயரிட்டு ஒரு கடையையும் திறந்தார் அவர். வியாபாரம் செழித்தது. ஆனால் அவர் செய்த ஒரு தப்பு, எந்த ஒரு காப்புரிமையும் வாங்காமல் போனது. இதனால் எல்லோரும் அவருடைய ஐடியாவைக் காப்பியடிக்க ஆரம்பித்தனர். நிறுவனங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை பாக்கெட்களில் அடைத்து விற்று கொழுத்த லாபம் பார்த்தன. ஜார்ஜ் கிரம் மறக்கடிக்கப்பட்டார்.

 1. மௌஸ்

கம்ப்யூட்டர் மௌஸ் எவ்வளவு பிரபலம் என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைக் கண்டுபிடித்த எங்கல்பெர்ட் அதை பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. தன்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒரு மௌஸை அவர் உருவாக்கி வைத்திருந்தார். பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரரான அவர் 20 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை வைத்திருக்கிறார். ஆனால் மௌஸை அவர் கண்டுகொள்ளவே இல்லை. 1968ம் ஆண்டு அவருடைய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு விளக்கினார் அப்போதும் மௌஸ் அவரிடமே இருந்தது.

அவர் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் நாசூக்காக அந்த மௌஸுக்கான காப்புரிமையை வாங்கியது. பின்னர் அதை ஆப்பிள் நிறுவனத்துக்கு 40 ஆயிரம் டாலர்களுக்கு விற்று மகிழ்ந்தது. அதைக் கண்டுபிடித்தவருக்கு அதிலிருந்து டீ குடிக்க கூட காசு கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

 1. ஸ்மைலி

ஒரு மஞ்சள் வட்டம். அதில் இரண்டு கண் வாய். பார்த்தவுடனே மனதில் புன்னகை எழும். அந்த வடிவத்தை வரைந்தவர் பெயர் ஹார்வே பால் என்பது யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து  கொண்டிருந்த அவர் இந்த ஸ்மைலியை வரைந்தார். 1963ம் ஆண்டு அவருக்கு நிறுவனம் 45 டாலர்கள் கொடுத்து, பாராட்டாய் முதுகில் தட்டிக் கொடுத்தது. அவ்வளவு தான் அவருக்குக் கிடைத்த மரியாதை

நிறுவனமோ, அந்த டிசைனை ஆடை பட்டன்களில் முதலில் பொறித்தது. வரவேற்பு பலமாய் இருந்ததால் அதை அப்படியே டிஷர்ட், போஸ்டர்,பந்து என சகட்டு மேனிக்கு அனைத்திலும் பொறிக்க ஆரம்பித்தனர். பில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொட்டிய அந்த ஸ்மைலியை வடிவமைத்தவர் கண்டுகொள்ளப்படவே இல்லை. அவருக்குக் கிடைத்ததெல்லாம் அந்த $45 தான் !

 1. விமானம்

விமானத்தைக் கண்டு பிடித்தது யார் என்று கேட்டால் ரைட் சகோதரர்கள் என்று சொல்வோம். உண்மையில் அவருக்கு முன்பே ஒருவர் விமானம் செய்து ஓட்டிப் பார்த்தார் என்று சொன்னால் வியப்பாக இருக்கும். அந்த மேதையின் பெயர் ரிச்சர்ட் பியர்ஸ். நியூசிலாந்து நாட்டுக்காரரான இவர் ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தை வெள்ளோட்டம் விடுவதற்கும் ஒன்பது மாதங்களுக்கு முன்பே விமானத்தைப் பறக்க விட்டார். ரைட் சகோதரர்கள் விமானம் ஓட்டியது 1903ம் ஆண்டு டிசம்பர் 17ம் தியதி. ரிச்சர்ட் ஓட்டியது அதே ஆண்டு மார்ச் 31ம் தியதி !

மட்டுமல்லாமல், இன்றைய நவீன விமானத்துக்கும் ரிச்சர்ட் ஓட்டிய விமானத்துக்கும் அதிக ஒற்றுமை உண்டு. ரைட் சகோதரர்களின் விமானம் முற்றிலும் வேறுபட்டது. நவீன விமானத்தின் முன்னோடியான விமானத்தின் சொந்தக்காரரான ரிச்சர்ட் பியர்ஸ் மறக்கடிக்கப்பட்டு, ரைட் சகோதரர்கள் கொண்டாடப்படுவது காலத்தின் கோலம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?

 1. ரேடியோ

ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்பது தான் வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம். உண்மையிலேயே மார்க்கோனி தான் ரேடியோவை முதன் முதலாய்க் கண்டுபிடித்தாரா என கேட்டால் இல்லை என்பதே வியப்பூட்டும் பதில். நிக்கோலா டெஸ்லா என்பவருக்கே அந்த புகழ் போய் சேர வேண்டும். மார்க்கோனி தனது கண்டுபிடிப்பு என மார்தட்டிக் கொண்ட ரேடியோவைப் பற்றியும், ஒலி அலைகள் பாயும் விதம் பற்றியும் டெஸ்லா ஏற்கனவே எழுதியிருந்தார்.

நிக்கோலா டெஸ்லா வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் தந்தை என அழைக்கப்படுபவர். மார்க்கோனிக்கு முன்பே ரேடியோ சிக்னல்களை வெற்றிகரமாய் பயன்படுத்தியிருந்தாலும் முந்திக் கொண்டு பெயர் வாங்கிச் சென்றவர் மார்க்கோனி. 1893 ல் டெஸ்லோ கண்டு பிடித்தது, 1895ல் மார்க்கோனியால் சொந்த கண்டுபிடிப்பாய் பதிவு செய்யப்பட்டது.

 1. மின்விளக்கு

மின்விளக்கைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன் என சின்னக் குழந்தையும் சொல்லும். அந்த அளவுக்கு மின் விளக்கு நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. தாமஸ் ஆல்வா எடிசனின் பெயர் எல்லா பாடபுத்தகங்களிலும் அலசி ஆராயப்பட்டது. ஆனால் உண்மையில் மின்விளக்கை முதலில் கண்டறிந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல ! சர் ஹென்ரி டாவி என்பவர் !

1802ம் ஆண்டு பிளாட்டினம் இழைகளின் ஊடே மின்சாரத்தைச் செலுத்தி மின்விளக்கை உருவாக்கினார் அவர். பிளாட்டினம் வெப்பத்தை அதிகம் உள்ளிழுக்கும் என்பது தான் அதன் காரணம். ஆனால் இது மிக விலையுயர்ந்தது. பெரிய அளவில் விற்பனைக்குரிய வகையில் உருவாக்கும் சாத்தியங்கள் அற்றது. எனவே இது வெற்றியடையவில்லை. அதன்பின் 75 ஆண்டுகளுக்குப் பின்பு 1879ல் தான் தாமஸ் ஆல்வா எடிசனின் மூலம் அது வெற்றியடைந்தது.

TOP 10 : கனவுகளின் சுவாரஸ்யங்கள்

Image result for dreams

கனவுகள் சுவாரஸ்யமானவை. கனவு காண்பது சிலருக்கு பயம் தரும் விஷயம், சிலருக்கு பரவசமூட்டும் விஷயம். சிலர் அழகான கனவுகளைக் காண்பார்கள். சிலருக்கு ஆக்ரோஷமான கனவுகள் வந்து கதவைத் தட்டும். எது எப்படியோ கனவுகள் எல்லோரையும் சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. கனவுகளுக்கு நாடு, இனம், மொழி வேறுபாடு இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் பாகுபாடு இல்லை. வல்லரசு, நல்லரசு எனும் பேதங்கள் இல்லை. எல்லா மனிதர்களுக்குள்ளும் நுழைந்து விடுகின்றன கனவுகள். இந்த வாரம் அந்த கனவுகளைப் பற்றிய சுவாரஸ்யமான பத்து விஷயங்கள்.

 1. மூளை பரபரப்பாகும்.

இரவில் தூங்கும் போது எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும் என்பது தான் நாம் கற்றுக் கொண்ட பாடம். ஆனால் கனவுகள் நிகழும் போது மூளை படுபயங்கரமாக வேலை செய்யும் என்கின்றன ஆய்வுகள். அதிலும் குறிப்பாக, தூக்கத்தின் ஒரு நிலையான‌ ரேப்பிட் ஐ மூவ்மென்ட் எனப்படும் விரைவான கண் இயக்க நிலையில் மூளை பயங்கர சுறுசுறுப்படைகிறது. குறிப்பாக காட்சிகளை பகுத்தறியும் மூளையின் பாகம் கனவின் போது வேகமாய் வேலை செய்கிறது.

விழித்திருக்கும் போது இருப்பதை விட அதிக பிஸியாய் கனவு வேளைகளில் மூளை பிஸியாய் இருப்பதுண்டு என சில ஆய்வுகள் கூறுகின்றன. இரவில் அதிக அழுத்தமான கனவுகள் கண்டால் காலையில் சோர்வாய் இருப்பதன் காரணம் இது தான். எனவே இரவில் முழு ஓய்வு என்பதை கனவுகளைக் கொண்டே அளவிட வேண்டியிருக்கிறது.

 1. கனவு காணுங்கள்.

ஆன்டோ ஜெனிடிக் ஹைபோத்தசிஸ் எனும் ஒரு கோட்பாடு இருக்கிறது. இரவில் கனவு காணும் மூளை வளர்கிறது என்கிறது அந்தக் கோட்பாடு. மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு கனவுகள் உதவுகின்றன‌ என்கிறது ஒரு ஆய்வு. குழந்தைகள் அதிக நேரம் ரேப்பிட் ஐ மூவ்மென்ட் எனப்படும் கனவு நிலையில் இருப்பதற்கு இது தான் காரணம். ரேப்பிட் ஐ மூவ்மென்ட் என்பதை தமிழில் விரைவான கண் இயக்க நிலை எனலாம். தூங்கும் குழந்தையின் கண்ணைப் பார்க்கும்போது உள்ளே விழி அசைந்து கொண்டிருந்தால் அது தான் விரைவான கண் இயக்க நிலை. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த கனவுகள் மிகவும் அவசியம்.

மூளையில் புரோட்டீன் சத்து அதிகரிக்கவும் கனவுகள் உதவுகின்றன. அறிவு வளர்ச்சிக்கு தேவையான மூளையின் பாகங்கள் கனவுகளினால் தூண்டப்படுவதால் மூளை வலுவடைகிறது. எனவே அடுத்த முறை கனவு கண்டால் கவலைப்படாதீர்கள். அறிவு வளர்கிறது என மகிழுங்கள்.

 1. மரத்துப் போதல்

ஸ்பீல் பெராலிசிஸ் எனப்படும் தூக்கத்தில் மரத்துப் போகும் நிலை உலகெங்கும் உண்டு. கனவுகளில் உடல் அப்படியே மரத்துப் போகும். மூளை விழித்திருக்கும், ஆனால் உடல் அசையாது. கைகளைத் தூக்க வேண்டும் என தோன்றும் ஆனால் தூக்க முடியாது. பேச வேண்டும் என தோன்றும் ஆனால் பேச முடியாது. எழும்ப வேண்டும் என தோன்றும் ஆனால் எழும்ப முடியாது.

சிலருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என தெளிவாய்த் தெரியும். ஆனால் அதுவும் கனவு தான், நிஜம் போல தெரியும். படுத்திருக்கும் அறை, அறையில் மக்கள் நடமாட்டம் என பல விஷயங்கள் அவர்களுக்கு நிஜம் போல கனவில் வரும். இந்த நிலையில் சிலர் வித்தியாசமான ஏலியன் கனவுகளையும் காண்பதுண்டு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 1. பாலினமும், கனவுகளும்

ஆண்களும் பெண்களும் கனவுகள் காண்கின்றனர். சரி, இருவருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் தான் வருகின்றனவா ? உலகெங்கும் இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகின. அவை சொல்கின்ற செய்திகள் வியப்பானவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருகின்ற கனவுகள் அடிப்படையிலேயே ஏகப்பட்ட வித்தியாசங்கள் கொண்டவை. பெரும்பாலும் அவை ஆண், பெண் எனும் இறைவனின் படைப்பின் சூட்சுமத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதாவது பெண்கள் அதிக எமோஷன், உணர்வு ரீதியான நீண்ட கனவுகளைக் காண்கின்றனர். ஆண்களுக்கு அடிதடி, கார், சேசிங் போன்ற கனவுகளே அதிகம் வருகின்றன.

ஆண்களின் கனவில் 67% ஆண்களே வருகின்றனர். பெண்களின் கனவில் பெண்கள் 50% தான் வருகின்றனர். பாலியல் கனவுகளை 8% மக்கள் காண்கின்றனர். அதுவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு விதமாகவே வருகின்றன. இவையெல்லாம் ஆய்வுகளின் அடிப்படையிலானவை மட்டுமே. இதில் எதிலும் பொருந்தாத மக்களும் நிச்சயம் இருப்பார்கள் என்பதே யதார்த்தம்

 1. காவியக் கனவுகள்

சிலருக்கு காவியக் கனவுகள் வருவதுண்டு. இது கொஞ்சம் அபூர்வம். ஆனால் காவியக் கனவுகள் காணும் பலருடைய வாழ்க்கை அதிரடி மாற்றங்களைச் சந்திக்கிறது. அந்தக் கனவுகள் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்தக் கனவின் ஒரு பாகமாக அவர்கள் மாறிவிடுகின்றனர். அந்தக் கனவு பல ஆண்டுகள் அவர்களுடைய மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.

ஏதோ மிகப்பெரிய சாதனை செய்தது போல காவியக் கனவு காண்பவர்கள் உணர்வார்கள். ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தது போல அவர்கள் மகிழ்வார்கள். காவியக் கனவுகள் பெரும்பாலும் ஒரு நாவலைப் போல ஆனால் நிஜ வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாததாய் வரும். காவியக் கனவு காண்பவர்கள் இன்செப்சன் படத்தைப் போல, கனவுக்குள் வேறு கனவு காண்பவர்களாகவும் இருப்பார்கள்.

 1. விலங்குகளும், கனவுகளும்

விலங்குகள் என்ன கனவு காண்கின்றன என்பதை இன்னும் மனிதன் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் விலங்குகள் கனவு காண்கின்றன என்பதை மட்டும் இப்போதைக்கு கண்டுபிடித்திருக்கிறார்கள். ஊர்வன, மற்றும் கொடிய விலங்குகள் கனவு காண்பதைப் பற்றி இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. மற்றபடி நாய், பூனை, மான், பறவைகள் என சாதாரணமாய் நமக்குத் தெரிந்த எல்லா விலங்குகளுமே கனவு காண்கின்றன.

பெரும்பாலும் கனவு கண்டு எழுந்ததும் விலங்குகள் தற்காப்பு மனநிலைக்குள் வந்து விடுகின்றன. விலங்குகள் என்ன கனவுகளைக் காண்கின்றன. அவற்றுக்கு எப்போதெல்லாம் கனவுகள் வருகின்றன போன்ற பல ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

 1. கனவும், நிஜமும்

கனவுகள் நாம் தூங்கும் போது நடக்கின்றன. அவற்றோடு நிஜத்தில் அப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களும் கலந்து விடுவதுண்டு. இதை டிரீம் இன்கார்பரேஷன், அதாவது கனவு இணைப்பு என்பார்கள். உதாரணமாக நீங்கள் ஒரு கனவு கண்டுகொண்டிருக்கிறீர்கள். அந்தக் கனவில் நியூயார்க்கில் காதலியோடு ஆடிப் பாடுகிறீர்கள். அப்போது உங்கள் வீட்டை ஒட்டி ஒரு ஆம்புலன்ஸ் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டே செல்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் உங்களுடைய கனவில் நியூயார்க்கில் ஒரு ஆம்புலன்ஸ் உங்களுக்கு அருகே செல்வது போல வரும் !

அதே போல உங்களுக்கு பயங்கர தாகம் எடுக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். கனவில் நீங்கள் தண்ணீர் குடிப்பீர்கள். ஆனால் தாகம் தணியாது. உண்மையிலேயே எழுந்து தண்ணீர் குடித்தபின் தான் தாகம் குறையும். கனவும் நினைவும் இணைகின்ற சுவாரஸ்யமான தருணம் இது. கனவில் உளறும் மக்களின் அருகே சென்று அவர்களோடு பேசிக்கொண்டிருந்தால் அந்த பேச்சுக்கு அவர்கள் பதிலளிப்பது இதன் ஒரு வகை தான்.

 1. கனவுகள் குறியீடுகள்

கனவுகளில் பல விஷயங்களைக் காண்போம். ஆனால் அவை நேரடியாக அந்த பொருளைச் சொல்வதில்லை. ஒரு ஆள் இறந்து போவதைக் கனவில் கண்டால் அந்த நபருக்கு ஆபத்தென்று பொருள் இல்லை. கிராமங்களில் அடிக்கடி சொல்வார்கள், ‘கல்யாணத்தைப் பாத்தா மரணம் ஒண்ணு விழும்’ என்று. ஒரு விஷயத்தை குறியீடுகளால் உணர்த்துகின்றன கனவுகள். இதனால் தான் கனவுகளும் அவற்றின் பயன்களும் என பல்வேறு ஆய்வுகளும், நூல்களும் கனவுகளின் முடிச்சவிழ்க்க முயல்கின்றன.

குழந்தைகள் மூன்று வயதுவரை அவர்களைப் பற்றி கனவுகள் காண்பதில்லை. அதே போல குறட்டை விடும்போது மனிதன் கனவு காண்பதில்லை என இன்னொரு ஆய்வு சொல்கிறது. யாரோ துரத்துவது போல, எங்கிருந்தோ விழுவது போல, தேர்வுக்கு லேட்டாகப் போவது போல இப்படி நாம் காணும் கனவுகள் எல்லாம் குறியீடுகளே.

 1. பார்வையற்றவரின் கனவுகள்

பிறக்கும் போது பார்வையிருந்து, இடையில் பார்வை பறிபோனவர்கள் கனவுகளை காட்சிகளாகக் காண்கின்றனர். ஆனால் பிறவியிலேயே பார்வையிழந்தவர்கள் காட்சிகளைக் காண்பதில்லை. ஆனால் அவர்களுக்கும் கனவுகள் வரும் ! எப்படி ? அவர்களுடைய மற்ற புலன்களான கேட்டல், தொடுதல், உணர்தல் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுக்குக் கனவுகள் வருகின்றன.

எல்லோரும் கனவுகளை கலரில் பார்ப்பதில்லை. 12% மக்களுக்குக் கனவுகள் கருப்பு வெள்ளையில் வந்து கடுப்படிக்கும். மற்றவர்களுக்கு கலரில் வந்து கண்சிமிட்டும். ஏன் சிலருக்கு கனவுகள் கருப்பு வெள்ளையாகவும், சிலருக்கு வண்ணமாகவும் வருகின்றன என்பதற்குச் சரியான பதில் இல்லை.

 1. கனவுகள் மறந்துவிடும்

நாம் காணும் கனவுகளில் 50% கனவுகளும் நாம் விழித்த ஐந்து நிமிடத்திலேயே மறந்து விடும். அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு 40 சதவீதம் மறந்து விடும். அதிகபட்சம் ஒரு பத்து சதவீதம் தான் நினைவில் நிற்கும். கனவுகளைக் குறிப்பெடுக்க விரும்புபவர்கள் படுக்கையிலேயே பேப்பர் பென்சில் வைத்திருக்க வேண்டும். விழிப்பு வந்ததும் படுக்கையை விட்டு எழும்பாமல், படுத்திருக்கும் அதே நிலையில் படுத்து எழுத வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

‘நான் இதுவரைக்கும் பாக்காத ஒரு முகம் தான் என் கனவுல வந்தது’ என நாம் சொல்வதுண்டு. உண்மையில் கனவுக்கு புதிய மனித முகங்களை வரையத் தெரியாது. நமது வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்த மனித முகங்களே வரும். ஐந்து வயதில் நமக்கு ஒரு மிட்டாய் வாங்கி தந்த நபராய் இருக்கலாம். அல்லது விமானப் பயணத்தில் ஓரமாய் அமர்ந்து பேப்பர் படித்த நபராய் இருக்கலாம். நாம் மறந்து போய் பல வருடங்களான முகங்களும் கனவில் வரும். நாம் அவர்களை புதியவர்கள் என்போம். இதுதான் உண்மை !