கி.மு : இப்தா, A Shocking Story !

 

இப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான்.

‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி தோபு என்னும் நாட்டில் குடியேறினார்

சிறிது காலம் சென்றபின் அம்மோனியர்கள் இஸ்ரயேலரின் மீது படையெடுத்தார்கள். அந்நாட்களில் நகரில் மக்களை ஒருங்கிணைத்து அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு வலிமையான தலைவன் இல்லை. அம்மோனியர்களை எப்படி எதிர்ப்பது ? யாரைக் கொண்டு அவர்களோடு போரிடுவது என்று பெரியவர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் இப்தாவைக் கூட்டி வருவது என்று முடிவெடுத்து இப்தாவைத் தேடிச் சென்றனர்.

‘இப்தா… இஸ்ரயேல் மக்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது. அம்மோனியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அம்மோனியரோடு போரிட எங்களுக்கு ஒரு தலைவன் வேண்டும். அதற்கு நீ மட்டும் தான் தகுதியானவன். எங்களுடன் வந்துவிடு’ பெரியவர்கள் சொன்னார்கள்.

‘நன்றாக வாழ்ந்தபோது என்னை ஒரு நாயைப் போல அடித்துத் துரத்தினீர்கள். இப்போது கஷ்டம் என்றவுடன் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களா ? என்னால் முடியாது’ இப்தா மறுத்தார்.

‘நாங்கள் என்ன செய்வது உன்னுடைய சகோதரர்கள் தான் உன்னை எதிர்த்தார்கள். நாங்கள் யாரும் உன்னை எதிர்க்கவில்லையே  ‘

‘ எதிர்க்கவில்லை தான். ஆனால் என் சகோதரர்கள் என்னை அவமானப் படுத்தி அடித்து விரட்டியபோது நீங்கள் யாரும் சமாதானம் செய்து வைக்க முன்வரவில்லையே ?’

‘இப்தா… பழைய கதைகள் இப்போது எதற்கு ? இப்போது நீ வந்தால் உன்னை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. உன்னையே நாங்கள் எங்கள் தலைவனாகவும் அமர்த்துவோம். நீ வந்து எங்களை வழிநடத்து’ பெரியவர்கள் மீண்டும் கேட்டனர்.

‘இல்லை. எனக்குத் தலைவனாகும் விருப்பம் இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போதும். உங்கள் தயவு வேண்டாம்’

‘இப்தா மறுக்காதே. இது நம்முடைய இஸ்ரயேல் குலத்துக்கே வந்த சவால். இதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நீ வரவில்லையென்றால் நம்முடைய குலமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. தயவு செய்து பழைய வருத்தங்களை மனதில் வைத்திருக்காமல் எங்களுக்கு உதவு’ வந்தவர்கள் தொடர்ந்து இப்தாவை வற்புறுத்தினார்கள்.

இப்தா யோசித்தார். ‘ சரி… நான் வருகிறேன். கடவுள் என்னோடு இருந்தால் நான் அவர்களை வெல்வேன். அவர்களை நான் வெற்றிகொண்டால் உங்கள் தலைவனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். சம்மதம் தானே ?’

அனைவரும் ஒத்துக் கொண்டனர்
‘நீ வரவேண்டும். அவ்வளவு தான். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்து தரத் தயாராக இருக்கிறோம். நீ சொல்வதையெல்லாம் கேட்கவும் உடன்படுகிறோம் ‘ அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.

இப்தா பெரியவர்களுடன் ஊருக்குள் வந்தார். வந்தவுடன் அவர் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. முதலில் ஒரு தூதரைக் கொண்டு சமாதானப் பேச்சுகளைத் துவங்கினார்.

‘உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இருந்ததில்லையே… ஏன் நீங்கள் எங்களோடு போரிடத் துடிக்கிறீர்கள்’ இப்தா அம்மோனியருக்கு சமாதானத் தூது அனுப்பினார்.

‘இது எங்கள் நிலம்.. முன்பு எங்களிடமிருந்து தான் இஸ்ரேலர்கள் இந்த நிலத்தை அபகரித்தார்கள். எனவே நாங்கள் இதைப் போரிட்டு மீட்போம். மீண்டும் நாங்களே இங்கு வாழ்வோம்’

‘இல்லை.. நீங்கள் நினைப்பது தவறு. இந்த நிலத்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலிருந்து மோசேயினால் மீட்டு வரப்பட்ட மக்களுக்குக் கடவுளே கொடுத்தார். இதை நீங்கள் அபகரிக்க நினைக்காதீர்கள். அது கடவுளுக்கு எதிரான செயல். போர் வேண்டாம் சென்று விடுங்கள்’

‘ஓகோ… கடவுள் கொடுத்தாரா ? நீங்கள் எங்கள் முன்னோர்களை வீழ்த்தி எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை நாங்கள் உங்களை வீழ்த்துவதன் மூலம் மீட்போம். போர் நடைபெறப் போவது உறுதி. உங்கள் கடவுள் உங்களுக்குத் தந்ததை எங்கள் கடவுள் இப்போது எங்களுக்குத் தரப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ அம்மோனியர் தலைவன் ஏளனமாய் பதில் சொன்னான்.

‘கடைசியாக என்ன சொல்கிறீர்கள் ? போரா சமாதானமா ?’ இப்தாவின் தூதர் கேட்க. போரைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மோனியர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.

இப்தாவும் போருக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.
போருக்குச் செல்லும் முன் இப்தா கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்தார்.

‘கடவுளே… இதோ நீர் என்னோடு இருக்கிறீர் என்னும் தைரியத்தில் தான் நான் போருக்குச் செல்கிறேன். இந்தப் போரில் நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால் வெற்றிபெற்றுத் திரும்பும் போது முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை நான் உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்’ என்று நேர்ந்தார்.

போர் ஆரம்பமானது. இப்தா தன்னுடைய வீரர்களோடு அம்மோனியரை எதிர்த்துக் கடுமையான போரில் ஈடுபட்டார். கடவுள் இப்தாவோடு இருந்தார். அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அம்மோனியர் பின்னிட்டு ஓடினார்கள்.

இப்தா மகிழ்ந்தார். வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினார். முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை ஆண்டவருக்குப் பலியாக செலுத்தவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மறையாமல் இருந்தது.

அவர் ஊருக்குள் நுழைந்ததும் மேளதாளத்துடன், ஆடிப் பாடிக் கொண்டே மிகவும் சந்தோசமாக அவரை எதிர்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் இப்தா அதிர்ந்தார். அது அவருடைய ஒரே மகள். செல்ல மகள்.

இப்தாவின் மகள் நேர்ச்சையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவள் தந்தை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே தந்தைக்கு எதிரே மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள்.

‘அப்பா….. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். எனக்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்திருக்கிறது’ ஆசை மகள் தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

இப்தா அழுதார். தன்னுடைய ஆடைகளைக் கிழித்துவிட்டுக் கதறி அழுதார்.
‘என் ஆசை மகளே… நீ எனக்கு உயிருக்கு உயிரானவள்….’ என்று அவளை அணைத்துக் கொண்டார்.

‘ஏன் அப்பா அழுகிறீர்கள். நீங்கள் மாபெரும் வெற்றியல்லவா பெற்றிருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடலாம் என்று வந்தால் அழுகிறீர்களே ? என்னவாயிற்று’ மகள் கேட்டாள்.

‘மகளே… அதை நான் எப்படிச் சொல்வேன்… நான் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்து விட்டேன்.. அதை திரும்பப் பெறவும் முடியாது, நிறைவேற்றவும் முடியாது. என்ன செய்வேன்’ என்று கூறி மீண்டும் அழுதார்.

‘நேர்ச்சை தானே… இப்போது நீங்கள் தலைவர். எந்த நேர்ச்சையை வேண்டுமானாலும் நீங்கள் நிறைவேற்றலாம். அதற்குரிய வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்’ மகள் சொன்னாள்.

‘மகளே…  நீ புரியாமல் பேசுகிறாய். நான் வெற்றியுடன் திரும்பும்போது என் எதிரில் முதலில் வரும் உயிரினத்தைக் கடவுளுக்குப் பலிசெலுத்துவதாக நேர்ந்திருந்தேன். நீ என் எதிரே வந்து விட்டாய். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ இப்தா தளர்ந்து போன குரலில் சொன்னார்.

தந்தை சொல்லச் சொல்ல மகளின் கண்களில் திகில் படர்ந்தது. ‘அப்பா…… ‘ அவளுடைய வாய் குழறியது.
தந்தை ஒன்றும் பேசாமல் தரையில் மண்டியிட்டார்.

‘அப்பா… நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் நேர்ந்து கொண்டதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மகள் சொன்னாள்.

‘அதெப்படி….. உ..ன்னை…. நான்…?  முடியாது….முடியவே முடியாது ‘ இப்தா தடுமாறினார்.

‘இல்லை அப்பா… உங்கள் வெற்றியில் நானும் கலந்து கொள்வதாய் நினைத்துக் கொள்கிறேன்… ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும்’ மகள் கலங்கிய விழிகளோடு சொன்னாள்.

இப்தா மகளை ஏறிட்டுப் பார்த்தார்.

‘எனக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள். நான் என் தோழியரோடு மலைகளில் சுற்றித் திரிந்து என்னுடைய கன்னித் தன்மைக்காக நான் துக்கம் கொண்டாடப் போகிறேன்’ என்றாள்

‘மகளே… ஆனால்….’ இப்தா இழுத்தார்.

‘பயப்படாதீர்கள் .. நான் என்னுடைய கன்னித் தன்மையை இழக்கமாட்டேன். எந்த ஆணுடனும் உறவு கொள்ளவும். என் தோழியரோடு நான் செல்கிறேன். இரண்டு மாதம் கழித்து வருவேன். அனுமதியுங்கள்’ என்றாள்.

இப்தா அனுமதித்தார்.

மாதங்கள் இரண்டு சட்டென்று ஓடி மறைய. மகள் எரிபலிக்குத் தயாராக தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.
‘அப்பா… இதோ பலிப்பொருள்… என்னைப் பலியிட்டு உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ மகள் சொன்னாள்.

இப்தா அழுதார். இப்தாவின் மகள் அவரைத் தேற்றினாள். ‘ இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தானே. இப்படி ஒரு மரணம் வருவது எனக்குப் பெருமை தான்.’.

இப்தா கலங்கிய விழிகளோடும், அழுகின்ற இதயத்தோடும் அவளை பலிபீடத்தில் கிடத்தி இரண்டு துண்டுகளாக வெட்டி கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்…