தேடல்கள்

Image result for man walking rainy night

எப்போதுமே
ஊட்டப்பட்டு ஊட்டப்பட்டு
தேடல்கள் இல்லாமல் தேய்ந்துவிட்டது
என் மனம்.

என்னுடைய பலங்கள்
அப்பாவின் அடையாள அட்டையால்,
என்னுடைய கல்வி
எதிர்கால வேலை வெளிச்சத்தால்,
என்று,
என் வேர்வைக் துளிக்குள்
நான்
செத்ததறியாமல்
சிரித்துக் கிடந்திருக்கிறேன்.

என்னுடைய காதல் கூட
மாடியின் நீள அகலங்களுக்காய்
நிராகரிக்கப்பட்டது.
பின்,
அம்மாவின் அந்தஸ்தில் எனக்கொரு
பெண் பரிசளிக்கப்பட்டாள்.

என்னுடைய மதம்
பிறந்தபோதே என் பெயரோடு
ஆறாவது விரலாய்
இணைந்தே பிறந்தது.

என் தேடல்களின் வாசல்கள்
திருடப்பட்டுவிட்டதால்,
இன்னும் என் நெஞ்சின் நிலவறைகள்
இருட்டு தின்றபடியே இருக்கின்றன.

என் பிறப்பைப் போலவே
என் தேடலில்லாமலேயே
தொடர்கின்றது என் வாழ்க்கை.

இன்னும் எனக்கு,
என் தேடலில்லாமலேயே தரப்படும்
ஏதோ ஓர் பலிபீடத்தில்,
ஓரு மரணம்

 

தாழ் திறவாய்…

 

Image result for man walking rainy night

 

உண்மை சுடும்.
உண்மை தான்.

நம் கழுத்துக்குக் கீழ்
கத்தி வைக்கப் படும் வரை
ஆயுதம்
மிக அழகானதாய்த் தெரியும்.

துப்பாக்கி முனை
நம்
தொண்டைக் குழிக்குள்
திணிக்கப்படும் வரை
நிலமையின் வீரியம் புரிவதில்லை.

நம் தலைக்குக்
குறிவைக்கப்படும் வரை
காதுகள்
கேட்பவை எல்லாம்
தலைப்புச் செய்திகள் தான்.

தோல்வி,
ஏமாற்றங்கள்,
எதிர் வீட்டைத் தட்டும்போதெல்லாம்
கதவைத் தாழிடுவதை
நிறுத்திக் கொள்வோம்.

நாளை ஒருவேளை
சுண்டுவிரல் நம்மை நோக்கியும்
சூண்டப்படலாம்.

வானம்

Image result for rainy night village

கருப்புக் கொடி பிடித்து
வானம்
கண்ணீ­ர் வடித்துத்
துடித்துக் கொண்டிருந்தது.

சோகத்தின்
தற்கொலை முனையிலிருந்து
குதித்துக் குதித்துச்
செத்துக் கொண்டிருந்தன
மேக வீட்டு மழைக் குழந்தைகள்.

அரவங்களும்
அரவமில்லாமல் இருந்த
அந்த இரவுப் பொழுது,
முகமற்ற நிழல்களோடு
முனகிக் கிடந்தது.

நட்சத்திர ஓட்டைகளையும்
இறக்கி வைத்த
இமை இருட்டு
இறுக்கிக் கட்டியிருந்தது.

எதன் மீதோ கொண்ட
கோபத்தின் நீர் வடிவமாய்,

யார் மீதோ கொண்ட
மோகத்தின் சத்த முத்தமாய்,

வானம்
நிறுத்தாமல் கத்திக் கொண்டிக்க,
வழக்கமாய் வழியும்
ஓநாய் குரல்களும்
ஓலைக்கிடையே ஒதுங்கி விட்டன.

நிலாச்சோறுக்கு வழியில்லாமல்
தாழ்ப்பாளுக்குள்
தரை நனைய
குடிசைக் குழந்தைகள்
தாயின் புடவைக்குள் நடுங்கின.

முறங்களும், பாய்களும்
தற்காப்புக்கு தகாததானதால்
துடுப்பில்லாமல் ஓடிய
குடிசைப் படகுகளின் பயணிகள்
காங்கிரீட் வானத்துக்காய்
கூடங்கள் தேடி ஓடும் இரவு.

அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட
நதிகளின் நரம்புகளுக்குள்
இரவு முழுவதும்
இரத்தப் பாசனம்.

விடியலை நோக்கி
விடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது
முரட்டு மழை.

நாளை விடியும் போது,
புதிய வானம்
புதிய பூமியை நோக்கி
கண் சிமிட்டிச் சிரிக்கும்.

எங்கள் கரங்கள் மட்டும்
கருணை மனுக்களோடும்,
கண்­ர் விழிகளோடும்
நிவாரண நிதிப் படிக்கட்டுகளில்
நிர்வாணமாய் நிற்கும்.

 

வெளியேறும் தருணம்.

Image result for man walking rainy night

சாவு
சமத்துவமானது.

எல்லைகளில்லா தேசங்கள்
சொந்தமானவனுக்கும்,
பின்
தேசங்களில்லா எல்லையில்
இளைப்பாறும் நிலை.

பூக்களாகட்டும்,
செடிகளாகட்டும்
வாடிப்போனால் விறகுதான்.
பிறகு வாழ்க்கை,
ஒரே
உலையில் தான்.

ஆட்டம் முடிந்தபின்
žட்டுக் கட்டின்
விலை ஏழு ரூபாய் தான்.

ஆடும் வரை தான்
மதிப்பு,
விழுந்த பின் கேசத்தை
மிதிப்பது தானே மரபு.

பச்சையம் பிரிந்தபின்
இலைகளுக்குள்
ஏது பேதம் ?
மொழிகளும், ஜாதிகளும்
கடலில் விழுந்த
உப்புப் பரலாய்
விரவிக் கரைவது இங்கு தானே.

அத்தனை நாடுகளும்
பிறப்புமுதல் போதிக்கும்
சமத்துவத்தை,
ஏனோ தெரியவில்லை
வெளியேறும் போது தான்
பெற்றுக் கொள்கின்றன.

செத்தவனுக்கு வந்து சேரும்
சர்வதேச
விருது போல.

 

நகரத்து நிலா

அப்பார்ட்மெண்ட்
அவஸ்தைகளால்
கிரில் கம்பிகளுக்கு வெளியே
சிறைப்பட்டு விட்டது
நிலா.

அடம்பிடித்து அழும் குழந்தைகளுக்கு
சாதம் ஊட்ட
கார்ட்டூன் சேனல்கள்
கைகொடுக்கின்றன.

குழந்தைகளைப் பார்க்கும்
வாய்ப்புகள் குறைந்ததால்
வளர்பிறையிலும்
தேயத் துவங்குகிறது
நிலா !

மூணு கண்ணனும்
உம்மாஞ்சியும்
குழந்தைகளைப் பயமுறுத்தும்
வேலையிழந்து
பெஞ்ச்களில் அடைக்கலம்.

“ஆஃப் பண்ணவா ?”
எனும் அம்மாக்களின்
ரிமோட் மிரட்டல்கள் தான்
குழந்தைகளின்
குறும்புகளுக்குக் கடிவாளம்.

மின்சாரம் நின்று போகும் கணமொன்றில்
சன்னல் திறக்கையில்
தூரத்தில் தெரியும் நிலா கண்டு
துள்ளிக் குதிக்கும் குழந்தை சொல்லும்..
“ஹாய்… .. .டெலிடபீஸ் “

இல்லாமல் இருப்பவை

காலையில்
அங்கே இருந்த நிழல்
மாலையில்
அங்கே இல்லை.

காலையில்
மெளனமாய் நின்றிருந்த
காற்று
இப்போது
அவ்விடத்தில் இல்லை.

அப்போது பார்த்த
ஓரிரு பல்லிகளை
இப்போது
காணவில்லை

காலையில்
வீட்டுக்குள் கிடந்த
நான்கைந்து துண்டு
வெயில்கள் கூட
வெளியேறியிருக்கின்றன.

ஆனாலும்
கதவு திறந்து நுழைகையில்
நினைத்துக் கொள்கிறோம்
எல்லாம்
அப்படியே இருக்கின்றன.

இந்தக் கணம்.

இப்போதும்
எங்கேயோ ஒரு தாய்
தன்
குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

எப்போதும்
எங்கேனும் ஒரு மகன்
தன் தாயை
மிதித்துக் கொண்டிருக்கிறான்.

எப்போதும்
எங்கேயோ
எழுதப்படாத வலிகளின் வரிகளால்
நிரம்பிக் கொண்டிருக்கின்றன
அன்னையரின் டைரிகள்.

எப்போதும்
எங்கேனும்
எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது
ஒரு கவிதை
தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.

அவனைப்போல் இன்னொருவன்

அதோ வருகிறான்
ராட்சஸன்.

மேலதிகாரியிடம்
அழுக்குத் தகவல்களைப்
பரிமாறி
உன்னை
சிக்கலுக்குள் உள்ளாக்கியவன்.

உனக்கும், அவளுக்குமான
நட்பைக் கூட
காமத்துப் பால் என
ஆக்டோபஸ் வாயுடன்
அறிக்கையிட்டவன்.

பொறாமைப்
பாய்மரக் கப்பலின்
மாலுமி அவன்.

நீ
திறமைகள் வற்றியவன் என
என்னிடமே
சொல்லியிருக்கிறான்.

காக்கா பிடித்தும்
கால் கழுவியும்
காரியம் சாதிப்பவன் என
கிசு கிசுக் கதைகளை
எழுதிக் குவிப்பவன் .

இதோ
நெருங்கி வந்து விட்டான்.

இப்போது பார்
சட்டென ஒரு
புன்னகை எடுத்து அணிந்து கொள்வான்.

நீயும்
பொருத்தமாய் ஒரு
புன்னகையை
எடுத்து உடுத்திக் கொள்.

இல்லையேல்
உங்கள் கோபங்களின்
நிர்வாணம்
கோரமாய் வெளிப்பட்டு விடக் கூடும்.

அந்த அயனி மரம்

தோட்டத்தில்
அயனி மரம் நட்டார் தாத்தா.

நேராக வளர்ந்தால்
பலகைக்கு ஆகும்
என்றார் அப்பா .

பிரியும் கிளைகளை
வெட்டி வெட்டி
நேராய் வளர
உத்தரவாதமும் தந்தார்.

நல்ல மிளகுச் செடியை
அதில் சுற்றி
அழகுபார்த்தார் அம்மா.

விளைந்த பழங்களெல்லாம்
விருந்தாயின
நாவுக்கு.

சுற்றிய மிளகுச் செடி
கொத்துக் கொத்தாய் காய்த்தது
ரசம், பரவசம் ஆனது.

நேராக வளர்ந்து
உடல் பெருத்து
கன கம்பீரமானது மரம்.

தாலாட்டி வளர்ந்த
அப்பா
புகைப்படத்தில் நிரந்தரமானார்.

மிளகுச் செடி
கருகி கவனிப்பற்று சருகானது.

இத்தனை விலை போகும் மரம்
எனக்கு
எனக்கென
சண்டையிட்டுப் பிரிந்தது
ஒற்றுமையாய்ப் பழம் தின்ன குடும்பம்.

எல்லோருக்கும் மழை பிடிப்பதில்லை

தேவதைகளின்
சிறகசைப்பில் சரிசெய்ய
இயலாதவற்றை
ராச்சசிகளின் நகக்கீறல்கள்
ரட்சிப்பதில்லை.

தேவதைச் சாரலில்
மோட்சம் அடையாதவர்கள்
பேய்மழையின் கைபிடித்து
பரமண்டலங்களுக்குப்
பயணிப்பதும் நிச்சயமில்லை.

மெல்லினங்களின்
இறகுகளில் தான்
பறந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வல்லினங்களின்
பளு அறுத்து வீசிவிடின்
மனசும்
இலேசாகிப் பறக்கத் துவங்கும்.

எனினும்…
இறக்க இறக்க
உயிர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன
எறும்பின் முதுகில்
எந்திரக் கற்கள்.

எத்தனை தான்
தேவாலயப் பீடங்களிலும்
பலிபீடங்களிலும்
கண்ணீர்த் துளிகள்
இரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும்

வறுமைக் கோட்டை
அழிக்க இயலாத
மழை
பொழிந்து கொண்டிருந்தாலென்ன
அழிந்து கொண்டிருந்தால் தான் என்ன ?