நில் , கவனி, வாக்களி.

ee

நினைவுகள் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தாவுகின்றன. அப்போதெல்லாம் “மர்பி” ரேடியோவின் முன்னால் கூட்டம் கூட்டமாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்களைக் கேட்டபடி அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

இன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறு நாள் செய்தித் தாளில் பார்த்தோ, அல்லது ஆறரை மணி ஏழே கால் மணி வானொலி செய்திகளில் கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. இன்றைய தேர்தல் பரபரப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அப்போதைய தேர்தல் முறைகளும், தகவல் பரிமாற்றங்களும் எத்தனை பின்னோக்கியிருந்தது என்பதை சிலிர்ப்புடன் உணர முடிகிறது.

இன்றைய தேர்தல் அப்படியில்லை. ஆறுமணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், கொஞ்சம் நாகரீகமாகச் சொல்வதென்றால், ஆறுமணிக்கு ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் அது முதன்மைச் செய்தியாகிவிடுகிறது. வீசப்பட்ட செருப்புக்கு ஒரு விளம்பரம் தேசிய அளவில் கிடைத்தும் விடுகிறது.

விட்டால், இந்த செருப்பு வீசும் நிகழ்ச்சியை உங்களுக்காத் தொகுத்து வழங்குவது “முனியாண்டி செருப்பு கம்பெனி” என ஸ்பான்சர்ஸ் கூட கிடைப்பார்கள்.

ஊடகத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பயனாக, ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்திக் கொண்டு அதை கிட்டத் தட்ட அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தி வருகின்றனர். சுவரில் போஸ்டர் ஒட்டுவது தேவையற்றுப் போய்விட்டது, எல்லார் வீட்டு வரவேற்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஒட்டி வைக்கப்பட்ட பின்.

மக்களின் நாடித் துடிப்பை அரசியல் கட்சிகள் கணிக்கவும், புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப நாள் தோறும் பல்டியடிக்கப் பழகவும் இந்த ஊடக வளர்ச்சி பெரும் துணை செய்கிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள்வரை எட்டாவது பக்கத்தின் கடைசியில் இடம் பெற்ற “இலங்கையில் யுத்தம்” எனும் செய்தி இன்று எல்லா பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் ஈழமாகவும், ஈரமாகவும் இடம்பெறக் காரணமும் இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.

jjதேர்தல் முடிந்த மூன்றாவது நாளே ஈழமாவது. சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுப்போம் என தலைவர்கள் கழன்று கொள்ளப் போவது மட்டும் அக்மார்க் உண்மை.

இப்போதைக்கு தமிழனின் உயிர் அவர்களுக்கு துருப்புச் சீட்டு. ஈழம் என்று கூட சொல்லக் கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தவர்கள் கூட தனி ஈழம் என தாவியதற்கு 40 ஐத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை அரசியல் கைக்குழந்தைகளும் அறியும்.

“அழுத்தமாய் சொன்னால்” போர் நிற்கும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கறியும்.

இலங்கைக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால், இலங்கையில் சீனாவின் தளம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தாகிப் போகும் எனும் பதட்டம் இந்திய ராணுவத்திடம் இருப்பதும் கவனிக்கத் தக்கது.

உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பதில் பேர்போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் எனும் தலையாய கவலை அரசியல் கட்சிகளுக்கு. “போர் நிறுத்தம் கொண்டு வா.. ” எனக் கதறும் அரசியல் கட்சிகள், ஒரு வேளை போர் நிறுத்தம் வந்து விட்டால் உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்து, “அய்யோ ஓட்டு போய்விட்டதே ..” என கதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நீ ஒன்று சொன்னால், நான் இன்னொன்று சொல்வேன் என மாறிமாறி தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் உடுக்கையடிப் பிரச்சாரம் நிகழ்த்துவதில் குழம்பிப் போய் இருப்பவர்கள் பொது மக்கள் மட்டுமே.

காலையில் ஒரு கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம், மாலையில் மாறிவிடுகிறது. இரண்டு பேருமே அப்படித் தான் என மூன்றாவது நபருக்கு ஓட்டு போடலாமா என யோசிக்கும் மக்களைப் பரவலாக எங்கும் காண முடிகிறது. ஊடகங்களும், இணையமும் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் இன்றைய சூழலில் ஒரு பொதுப்படையான கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை எனும் நிலையே காணப்படுகிறது.

வெறும் மேடைப்பேச்சுகளை மட்டும் வைத்து எந்த அரசியல் வாதியையும் கணிக்க முடியாது. கணிக்கக் கூடாது. அது ஏசி அறையில் இருந்து கொண்டு சென்னையே குளிர்கிறது என்று கணிப்பதற்கு சமம்.

ஒரு தலைவர் வாக்குறுதிச் சுருக்குப் பையைத் திறந்து அள்ளி விடுகிறார் எனில் கொஞ்சம் கவனியுங்கள். சில கேள்விகளை உங்களுக்குள்ளேயே எழுப்புங்கள்.

இந்த தலைவருக்கு இந்தப் பிரச்சினையில் கடந்த மாதம் இருந்த நிலைப்பாடு என்ன ? கடந்த வருடம் இருந்த நிலைப்பாடுkk என்ன ? ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைப்பாடு என்ன ?

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டிருந்தார் எனில், அந்த சிக்கலில் முடிந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்ச நம்பிக்கைக்கு உரியது என கருதிக் கொள்ளலாம்.

இரண்டாவது, அந்த பிரச்சினை சம்பந்தமாக நபர் தந்திருக்கும் வாக்குறுதி நிறைவேற சாத்தியக் கூறுகள் என்னென்ன ?

அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க சாத்தியம் உண்டா ? அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சியின் தலைமை, உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த கொள்கையோடு சற்றேனும் உடன்பாடு உடையவர்கள் தானா ? என சில கேள்விகளை எழுப்புங்கள்.

மூன்றாவதாக, எல்லோமே சரியாய் இருந்தால் சர்வதேச அளவில் இந்த திட்டத்தை அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியுமா என யோசியுங்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தெந்த நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்பன போன்றவற்றை ஆராய்தல் மிக முக்கியம்.

நான்காவதாக, இது ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை ? அதற்கு எழுந்த முட்டுக் கட்டைகள் என்ன ? அந்த முட்டுக் கட்டைகள் வரும் ஆட்சியில் வருவதற்கான வாய்ப்புகள் என்ன ? என்பதை கவனியுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கண்மூடித் தனமாக ஒருவர் தரும் வாக்குறுதியை நோக்கி கேள்விகளை எழுப்புங்கள். “இதை நிறைவேற்ற நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை தெளிவாக்குங்கள்” என விசாரியுங்கள்.

நிலவில் நிலம் வாங்கித் தருவேன் என்றவுடன், மொட்டை மாடியில் படுத்துக் கிடந்து நிலவைப் பார்த்துக் கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலில் ஆளுக்கு நான்கு நட்சத்திரம் என்ற வாக்குறுதி வந்து சேரும்.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு, நட்புறவு, சர்வதேச அங்கீகாரம், உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முடிவெடுங்கள்.

கடைசியாக ஒன்று, குப்பைத் திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்துடன் மூன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முறை குடும்பத்தினரோடு மூன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாராய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்.

முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் மட்டுமே ! திணிக்கப்பட்ட அபிப்பிராயங்களை வெளியேற்றுங்கள்

வாக்களியுங்கள், இந்தியா செழிக்க வாய்ப்பளியுங்கள்.

நன்றி விகடன்