ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது.
அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது.
இரண்டாவது துறவி கேட்டார், “கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே”
முதல் துறவி பதிலளித்தார், “கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா ?”
அழகான இந்தக் கதை இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன.
நாம் ! நமது இயல்பு ! நமது பணி ! எனுமளவில் ஆழமாகச் சிந்தித்தால் பல சிக்கல்களுக்கான தீர்வுகள் வெளிப்படும்.
அன்பைக் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், உறவுகளைக் குறித்தும் பேசும்போது இயற்கையைக் குறித்துப் பேசுவதும் அவசியமாகிறது. காரணம், இயற்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை.
அடிக்கடி நாம் இயற்கையை நேசிப்பதைப் பற்றியும், ஓசோனில் விழும் ஓட்டையைப் பற்றியும், குளோபல் வார்மிங் எனும் புவி வெப்பமாதலைப் பற்றியும் படிக்கிறோம். படித்து விட்டு, அது ஏதோ உலகத் தலைவர்களுக்கான சமாச்சாரம் என அடுத்த செய்திக்குத் தாவி விடுகிறோம்.
உண்மையிலேயே அது நமக்குச் சம்பந்தமில்லாததா ? தேவையில்லாததா ? ஆம் என்று சொல்கிறீர்களெனில் ஒன்று உங்களுக்கு விஷயம் தெரியாது ! அல்லது அதன் வீரியம் தெரியாது !
குளோபல் வார்மிங் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் அலசப் பட்டதைப் போல எப்போதுமே அலசப் பட்டதில்லை. காரணம் அதன் அச்சுறுத்தல் அப்படி.
புவி வெப்பமயமாதல் என்றால், “ஆமா அதான் இப்போ வெயில் ரொம்ப சூடா அடிக்குது” என சீரியஸாய்ச் சொல்லிவிட்டுக் கடந்து போகும் அறியாமை மனிதர்கள் உண்டு. அவ்ளோ தானா குளோபல் வார்மிங் ?
விஞ்ஞானம் பயப்படுவதைப் போல குளோபல் வார்மிங் தனது வேலையைக் காண்பித்தால் என்ன நடக்கும் தெரியுமா ? கடல் மட்டம் உயரும். பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கிப் போகும். வெள்ளப்பெருக்கு, சுனாமி, சூறாவளி, வெப்ப அலைகள் என வரிசையாய் பல இயற்கைச் சீற்றங்கள் நிகழும். தொற்று நோய்கள் காட்டுத் தீயைப் போலப் பரவும் !
பூமியின் வெப்பம் அப்படியே கடலுக்கும் பரவும். கடலின் வெப்பம் பனியை உருக்கும், நீர்மட்டம் உயரும், வெப்பம் மீண்டும் அதிகரிக்கும். இது ஒரு சங்கிலித் தொடர்போல நடந்து ஒரு நாள் நமது பூமி தண்ணீருக்குள் மூழ்கிப் போய்விடும் எனும் அச்சம் விஞ்ஞானத்துக்கு உண்டு !
அவர்கள் எடுத்து நீட்டும் புள்ளி விவரம் படி, கடந்த 20 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நிட்ரஸ் ஆக்ஸைட் என ஏகப்பட்ட வேதியல் சமாச்சாரங்கள் பூமியில் சகட்டு மேனிக்கு அதிகரித்திருக்கின்றன. இது புவியை சூடேற்றும் சங்கதிகளில் ஒன்று !
“மரம் நடுவோம்” எனும் கோஷம் எப்போதாவது உங்களை உஷார் படுத்தியதுண்டா ? மரங்களின் குறைபாடு பூமியில் கரியமில வாயுவை நிரப்பி விடுகிறது. அது பூமியின் வெப்பத்தை சடசடவென உயர்த்தி விடுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களுக்கு மரம் நடுவதன் தேவை புரிந்திருந்தது. சாலையோரங்களில் மரங்களை நட்ட மன்னர்களின் வரலாறு நமக்குத் தெரியும். மரங்களை வெட்டிய குற்றத்துக்காய் ராஜஸ்தான் பஷானியர்களுக்கு மன்னர்கள் மரண தண்டனை விதித்த கதைகள் நானூறு ஆண்டு பழசு !
இளைஞர்கள் மனது வைத்தால் பூமி அழகாகும் என்பதில் சந்தேகமில்லை. “நான் மட்டும் நினைத்தால் என்ன நடக்கப் போவுது” அல்லது “என்னைத் தவிர எல்லோரும் அப்படி நடக்கட்டும்” என்பது இன்றைக்கு இளம் வயதினரிடையே பரவலாய்க் காணப்படும் சிந்தனை என்பது வருந்த வைக்கிறது.
கடற்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் கொட்டிக் கிடந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் கடலில் எறிந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒருவர் கேட்டார்,
“என்ன தம்பி, இங்கே ஆயிரக்கணக்கான மீன்கள் கிடக்குது.. நீ ஒண்ணோ ரெண்டோ எடுத்து தண்ணியில போடறதால என்ன ஆயிடப் போவுது”
பையன் சொன்னான், “அந்த ரெண்டு மீனுக்கும் வாழ்வு கிடைக்கும். என்னால் காப்பாற்ற முடியாத ஆயிரம் மீன்களை விட காப்பாற்ற முடிந்த இரண்டு மீன்களே என் கவனத்தில் இருக்கும்”
பெரியவர் அசந்து போனார். நம்மால் சரி செய்ய முடியாத ஆயிரம் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, நம்மால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதே சிறப்பானது !
சின்னச் சின்ன வேலைகளின் சங்கமமே பெரிய பெரிய சாதனைகள் என்பது நமக்குப் பல நேரங்களில் புரிவதில்லை. சாலைகளில் கிடக்கும் குப்பைகளைப் பற்றி விமர்சித்துத் திரியும் நாம் வீட்டில் இருக்கும் குப்பையை சரியாய் கையாள்கிறோமா? நாடு சுத்தமாய் இருக்க வேண்டுமெனில், வீடு தூய்மையாய் இருக்க வேண்டும். சின்னச் சின்னப் பிழைகளின் தொகுப்பே அவலட்சணங்களின் பேரணி !
பஞ்சபூதங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது மனிதன் நலமாக இருக்கிறான். நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களும் தனது தூய்மையை இழக்கும் போது மனிதனின் வாழ்க்கையும் பொலிவிழக்கிறது.
வாகனப் புகைகள், கரியமிலவாயு என பல விஷயங்கள் காற்றைக் கறையாக்குகின்றன. ஆலைக்கழிவுகள், குப்பைகள், மருத்துவக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எல்லாம் தண்ணீரை தரமிழக்க வைக்கின்றன. பிளாஸ்டிக், அமிலங்கள், ரசாயனங்கள் போன்றவை நிலத்தை அழிக்கின்றன. உலகில் மொத்தம் இரண்டு கோடி ரசாயனங்கள் இருக்கின்றன. இருபத்து ஏழு வினாடிகளுக்கு ஒரு புது ரசாயனம் கண்டு பிடிக்கப்படுகிறது.
இவையெல்லாம் நேரடியாக நமது ஆரோக்கியத்தின் குரல்வளையைத் தான் இறுகப் பிடிக்கின்றன. நிலம் பாழ்பட்டுக் கொண்டே போகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பூமியைக் காப்பாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிப்பது தான்.
தள்ளுபடிக் கடைகளில் தள்ளு முள்ளுக்கிடையில் கையில் அள்ளி வரும் பிளாஸ்டிக் பைகள் தூக்கி வீசப்பட்டபின் என்னவாகும் ? குடியரசுத் தினத்துக்காய் கைகளில் அசையும் பிளாஸ்டிக் கொடி மாலையில் என்னவாகும் ? சகட்டுமேனிக்கு குடித்து வீசி எறியும் தண்ணீர் பாட்டில்களின் நிலை என்ன ? ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் மண்ணை மாசுபடுத்திக் கொண்டே இருக்கும் என்பது தான் பதில் ! பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இல்லையேல் மறு சுழற்சிக்கு உட்படுத்துவது மட்டுமே தீர்வு !
தூங்கும் போது புதிதாய் இருக்கும் தொழில் நுட்பம் காலையில் பழசாகி விடுகிறது. நான்கு மாதத்துக்கு முன் வாங்கிய செல்போன் ஓல்ட் ஃபேஷனாகி விடுகிறது. கடந்த வருட கணினி கயலான் கடைக்குப் போகிறது. சிடி, வயர்கள், பிளேயர்கள், என ஆண்டு தோறும் குவியும் எலட்ரானிக் குப்பைகள் சுமார் பத்து கோடி டன் ! ஆயிரக்கணக்கான நச்சுப் புகைகளுடன் இருக்கும் இந்த இ–வேஸ்ட்களையும் மறு சுழற்சிக்குள் அனுப்புவது மட்டுமே சரியான தீர்வு !
தங்கத்தை விட அதிகமாய் நாம் பாதுகாக்க வேண்டிய பொருள் தண்ணீர். தங்கம் இல்லாமல் வாழலாம், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதே இதன் தீர்வு. இல்லையேல் இன்னும் சில பத்தாண்டுகளில் தண்ணீர் இல்லாமல் மானுடம் தவிக்க வேண்டியது தான் என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்.
மின் தேவையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இருப்பதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா ? இல்லை என்பதே தீர்க்கமான பதில் ! ‘ஃபாந்தம் லோட்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? மின் உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நேரத்தில் செலவாகும் மின்சாரத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக டிவி, செல்போன் சார்ஜர், ரேடியோ, டிவிடி பிளேயர் போன்றவை.
அமெரிக்காவின் கலிபோர்ணியப் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஒட்டு மொத்த மின் செலவில் 6% இப்படி வீணாகிறதாம். இதைத் தவிர்ப்பது எப்படி ? ரொம்ப சிம்பிள் ! தேவையில்லாத போது பிளக்கை உருவி வையுங்கள், சுவிட்சை ஆஃப் செய்யுங்கள்.
தேவையில்லாமல் காரை எடுத்துக் கொண்டோ, பைக்கை எடுத்துக் கொண்டோ சுற்றாமல் முடிந்தவரை பயணத்துக்கு நடையையோ, சைக்கிளையோ, பஸ்ஸையோ, ரயிலையோ வழக்கமாக்கினால் காற்றில் மாசு குறையும் ! நடப்பதால் உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும் !
நவீன உலகில் இணையம் நமக்கு ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இருந்தபடியே வங்கி, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றைக் கையாண்டால் பயணமும் மிச்சம், காற்றில் கலக்கும் மாசும் குறையும்.
“பயன்பாட்டைக் குறை, மீண்டும் பயன்படுத்து, மறு சுழற்சிக்கு உட்படுத்து” ( Reduce, Reuse, Recycle ) எனும் இயக்கம் இன்று வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்கிச் சேகரிக்காமல் இருப்பது முதல் தேவை. பழைய பொருட்களை நீண்ட நாள் பயன்படுத்துவது, பின் அதை தேவையானவர்களுக்குக் கொடுப்பது அல்லது பழையவற்றை வாங்கிப் பயன்படுத்துவது இவை இரண்டாவது தேவை. குப்பையான பின் மறு சுழற்சிக்கு உட்படுத்தி மண்ணை மாசு படாமல் தடுப்பது மூன்றாவது !
இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொருவரும் சரியாகப் பயன்படுத்தினாலே பூமியின் மாசு பரவலை பெருமளவு தடுக்க முடியும்.
நேசிப்போம் நம் மண்ணை
அவளும் நமக்கோர் அன்னை !
ஃ