கவிதை : மழலை ஏக்கங்கள்

தூக்கத்திலும்
ஆங்கிலம் உளறும் குழந்தைகளால்
நிரம்பி வழிகின்றன
பிளே ஸ்கூல்கள்.

கான்வெண்ட் கதவருகே
காரிலிருந்து
இறங்குகின்றன
சீருடைத் தேவதைகள்

காத்திருக்கின்றனர்
கார் டிரைவர்கள்
வீட்டு மதில்களுக்குள்
குழந்தைகளை
திரும்பக் கொண்டு சேர்க்க.

ஜாமங்கள் கடந்தபின்
வந்து சேரும் பெற்றோரை
வார இறுதி
ஐஸ்கிரீம் பார்களில் தான்
நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள்.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில்
கிரெடிட் கார்ட் தேய்த்து
பிட்சா தின்று
வீடு திரும்புகையில்,

சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும்
குழந்தைகளின் கண்களில்
ஏக்கத்தை வரவழைக்கின்றனர்
சேரிக்கரையில் விளையாடும்
சுதந்திரச் சிறுவர்கள்.