கவிதை : கண்ணாடிகள்

o

நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்.

o

சிக்னல்கள் வணக்கத்துக்குரியவை
உதட்டையும்
புருவத்தையும் சரிசெய்யும்
பருவப் பெண்களுக்கு

o

கண்ணாடிகள்
முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
சிரிக்கின்றன
முகத்தைத் திருப்பி
சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்.

o

நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.

o

உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி

கவிதை : கண்ணாடிகளற்ற அறைகள்

கண்ணாடிகளற்ற அறைகள்
இறுக்கமாய் இருக்கின்றன.

நெரிசல் பேருந்தில்
நெருக்கி நுழையும்
பெரியவரைப் போல
அவஸ்தையாய் இருக்கின்றன அவை.

மழலைகள்
அழகு காட்டி
ஆடிப் பாடும் பரவசமும்,

அழகைப் பார்த்து
கர்வம் கூட்டும்
கன்னியரின் பெருமிதமும்
இன்றி

இடிபாடுகளுக்கிடையே
மூச்சுத் திணறும்
இயலாதவன் போல
இருக்கின்றன அவை.

எட்டிப் பார்க்கையிலெல்லாம்
நான்
உயிருடன் இருப்பதை
உறுதி செய்கின்றன
கண்ணாடிகள்

கடந்த பின்போ
பிம்பங்களை உதிர்த்து
ஏதுமறியாமல் நிற்கின்றன
சிக்னலில்
கையூட்டு வாங்கும் காவலரைப் போல

கண்ணாடிகளற்ற அறைகள்
இறுக்கமாய் இருக்கின்றன.