கவிதையில் கமல்…

கமல்…

( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….   )
 Kamal_Hassan

எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.

தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.

நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.

அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.

தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.

இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.

நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.

உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.

இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.

மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.

இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.

அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.

விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.

பிடித்திருந்தால் …வாக்களிக்கலாமே… நன்றி