பாடல் : வெட்கம் வழியும் இரவில்

பீலிபெய் சாகாடும்
                 மெல்லமே மெல்லமே 
தேனும் திகட்டிவிடும்
                  செல்லமே செல்லமே

உன்னழகு மட்டுமேனோ திகட்ட மறுக்குதடி
தின்னத் தின்னத் தீராம பசியைப் பெருக்குதடி.

உறுமீனைக் காத்திருந்த
                       ஒத்தக்காலு கொக்குநான்
கண்டபின்னே சுத்திச் சுத்தி
                      சொக்குகிற செக்குநான்.

1

ஆண்:

ஆறு மீட்டர் அருவி இழுத்து
போர்த்திக் கிட்டுப் படுப்பமா ?

பெண்

நூறு மீட்டர் காற்றை இறுக்கி
தலையணையாக் கொடுப்பமா ?

ஆண்

மின்மினிகள் கூட்டி வந்து
ஓரமாய் நிறுத்தவா
மின்னுமந்த சின்ன ஒளி
பாரமாய் இருக்குமா ?

பெண்

நான்கு கண்கள் சிந்தும் ஒளி
காமனுக்குப் போதுமே
மின்மினிகள் கூட்டி வந்தால்
வெட்க ஒளி கூடுமே.

2

 

ஆண்

நட்ட நடு ராத்திரியில்
அச்சப் புயல் அடிக்குமே,

பெண்

விட்டு விட நினைக்குமுன்னே
மோக மழை நனைக்குமே.

ஆண்

எட்டிப் பார்க்கும் வட்ட நிலா
வெட்கம் கொண்டு சிரிக்குமே
ஓடுகின்ற முகிலுக்குள்ளே
வட்ட முகம் மறைக்குமே.

பெண்

வானநிலா நாணம் கண்டு
மாடிநிலா நாணுமே
மூட ஆடை இல்லையென
ஆளை மூடிக் கொள்ளுமே.

0