விழுந்த இடத்தில்
காலொடிந்து கிடப்பதில்லை
நதி !
அருவியின் அடிவாரம் தானே
அதன்
ஆக்ரோஷத்தின் ஆரம்பம் !!!
விழுந்த இடத்தில்
காலொடிந்து கிடப்பதில்லை
நதி !
அருவியின் அடிவாரம் தானே
அதன்
ஆக்ரோஷத்தின் ஆரம்பம் !!!
காதலர் தினம்
எனக்கு இன்னொரு
காலண்டர் தினம் தான்.
பூப்பூக்காத செடிகளுக்கு
ஏது
பூக்காரன் கவலை?
பட்டாம்பூச்சி இல்லா தேசத்தில்
வண்ணங்களுக்குள் ஏது
வழக்காடுமன்றம்.
என் கானகத்தில் மட்டும்
கனிகள்
கிளி தேடிக் காத்திருக்கின்றன,
நதிகள்
துளிதேடித் தவமிருக்கின்றன.
அழகாய் வரும் அருவிகள் எல்லாம்
பாறையின் வெப்பத்தில்
ஆவியாகி விடுகின்றன.
எப்போதேனும் மனசுக்குள்
சாரலடிக்கும்
பார்வைக் கொம்புகள்
பதியனிடுமுன் பட்டுவிடுகின்றன,
முளை விடுமுன்
விதைகள் கெட்டுவிடுகின்றன.
காதல்,
எதையோ எடுக்கும்
புடவைக்கடை புரட்டலல்ல.
அது
தேவைகளின் திரட்டலுமல்ல.
காத்திருக்கிறேன்,
இந்த கால்நூற்றாண்டு வயதின்
காலடியில்,
வால் மிதிபட்ட நாகங்கள்
கால் கடிக்கும் கலியுகத்தில்,
ஓர்
கற்பனை நிஜத்துக்காய்
காத்திருக்கிறேன்.
ஒற்றைப் புள்ளியுடன்
காகிதம் ஒன்று என்னிடமிருக்கிறது
என் கவிதை வந்து
அமரும்போது மட்டுமே
முற்றுப் பெறும் மூச்சுடன்.
ஆசனம் ஒன்று இருக்கிறது,
காதல் பாசனம் தேடி.
காதலிக்கும் கிளிகள்
கடந்து வரலாம்.
காதல் ஓர் காட்டு மலர்
அதைக்
கால்கள் கட்டி
வீட்டுத் தொட்டியில்
பூக்க வைத்தல் இயலாது.
பூக்குமிடத்தில் தங்கி
உங்கள்
இதய வங்கிகளில்
வாசனை முதலீடுகளை
ஆரம்பியுங்கள்.
0
காதல்
ஓர் சுதந்திரப் பறவை.
கானகத்தைச் சுற்றிக்
கூண்டு கட்டுவதால்
காதலைப் பிடித்தல் சாத்தியமில்லை.
அதன்
சிறகுச் சாலைகளில்
உங்கள் கூடுகளை
திறந்தே வையுங்கள்.
தங்கிச் சென்றால்
வாங்கிக் கொள்ளுங்கள்,
இல்லையேல்
வழக்கிடாதீர்கள்.
0
குகைகளுக்குள்
காதல் குடியிருப்பதில்லை.
காதலுக்காய்
அத்தனை கதவுகளையும்
திறந்தே வையுங்கள்,
வருகைக்கும்
விலகலுக்கும் !.
நுழைந்ததும் மூடி விட்டால்
மூச்சுத் திணறலே மிஞ்சும்.
0
காதல் ஒரு
ஆச்சரியம்,
வேண்டாத இடத்தில் காய்க்கும்
வேண்டும் இடத்தில்
யாகம் நடத்தினாலும்
தியாகம் நடத்தினாலும்
முளைகூட விடுவதில்லை.
சமையல் சட்டியில்
சிப்பிகள்
முத்துத் தயாரிப்பதில்லையே !.
0
காதல் பதக்கமல்ல,
கைக்கு வந்ததும்
பெட்டியில் வைத்துப் பாதுகாக்க !
அது
புத்தகத்துள் பதுக்கி வைக்கும்
மயில் பீலியுமல்ல.
தினமும் தீண்டு.
செதுக்காமல் ஒதுக்கும்
பாறைகள்
சிற்பமாவதில்லை.
தண்ர் செல்லா
தானியங்கள்
அறுவடைக்கு தயாராவதில்லை.
0
விலகிவிடுமோ எனும் பயம்
விலக்கப் பட வேண்டிய
இலக்கு.
சந்தேக விலங்கு களுக்குள்
புனித உணர்வுகளைப்
பூட்டி வைக்க முடியாது.
0
காதலியுங்கள்,
இலையில் அமரும் பனித்துளியை
புல் நேசிப்பது போல,
செடியில் அமரும்
வண்ணத்துப் பூச்சியை
இலைகள் நேசிப்பது போல,
நேசியுங்கள்.
கூடுகட்டச் சொல்லி
கட்டாயப் படுத்தி,
சமாதி கட்டி முடிக்காதீர்கள்
மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,
உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.
உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.
அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.
குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.
பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.
ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,
கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.
பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.
நீண்ட நாட்களாகிறது.
அவள் முகம் பார்த்து.
அவள் பற்றிய நினைவுகளை
மனதிற்குள்
ஓடவிடும்போதெல்லாம்
மனக்கிண்ணத்தில்
மெல்லியதாய்
ஒரு இசை உருவாகும்
ஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.
அவள் சிரிப்பு,
ஹைக்கூக் கண்கள்,
இதயத்துக்குள் ஈட்டி இறக்கும்
அவள் வெட்கம்,
சொர்க்கம் என்பது
மண்ணில் என்பதை
அந்த
தேவதை தரிசனம் தான்
கொளுத்திவிட்டுப் போனது.
அவள் விரல் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாலை
அகலமாயில்லை என்பதை
அறிந்துகொள்வேன்.
உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே
அவளோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்
பகல்
விரைவாய் விழித்தெழுமென்று
விளக்கம் சொன்னதே
தொலைபேசிக்குள்
தொழுகை நடத்திய இரவுகள்தான்.
இப்போது வாழ்க்கை என்னை
கடல்களைத்தாண்டிக் கடத்திவிட்டது
ஆனாலும்
நினைவுகளின் தள்ளுவண்டி
அவள் நடக்கும்
வீதிகளில் தான் நகர்கிறது.
கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி மட்டுமல்ல
காதலும் தான்
என்கிறதே என் காதல்.
உண்மைதான்.
என்றோ விலகிப் போன
அவள் மேல்
எனக்கு
இன்றும் வளர்கிறதே காதல்.
ஓவியம் வரைய
நினைத்தால்
தூரிகை திருடுகிறாய்.
கவிதை எழுத
நினைத்தால்
என்
கற்பனை திருடுகிறாய்.
கண்மூடிக் கிடந்தால்
விழிகளில் வழியும்
கனவுகளை வருடுகிறாய்.
என்ன தான் செய்வது ?
சிற்பமா ?
சிற்பத்துக்காய் உட்கார்ந்தால்
விழிகளால் செதுக்க மாட்டாயா
உளிகளை ?
ஓவியத்தையும்,
கவிதையையும்
சிற்பத்தையும் தவிர்த்து
இந்த
கவிதை உலகம் எனக்கு
எதையுமே
கற்றுத் தரவில்லையடி கண்ணே.
உன் பிம்பம் படிந்த
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை விட,
அன்றைய உன் மூச்சுக் காற்றை
இன்றும்
இழுத்துப் பிடித்திருக்கும்
என் மொட்டை மாடித்
தென்றலை விட,
நினைவுகளின் கனத்தில்
கழுத்தறுபட்டுப் போகும்
அந்த
கடைசித் துளிக் கண்ரை விட
அடர்த்தியான,
கவிதைகளை என்னால்
எழுதமுடியாமல் போனதால்
இன்னும்
விதவையாகவே கிடக்கின்றன
என் வீட்டுக் காகிதங்கள்.
உணர்வுகளின்
மலர் தீண்டல்கள்
கீறிச் சென்ற காயங்களை,
என்
வார்த்தை வாட்களால்
மீறிச் செல்ல முடியவில்லை.
நீ
கருணைக் கொலையென்று சொல்லி
கொய்தெறிந்த என்னை,
நான்
திருப்பி எடுக்க மறுத்ததாலா
இன்னும்
தொடர்ந்து திருடுகிறாய் ?
பிரியமே,
காதலில்
கேள்விகள் எழக் கூடாது
எழுந்தால்
பதில்கள் உள்ளத்தின்
உளறல்களாய் தான் விழும்.
ஏன் என்னை
காதலிக்கிறாய் என்கிறாய்?
வண்ணத்துப் பூச்சிக்கு
வர்ணங்களும்,
இதயத்துக்கு காதலும்
இயல்பாய் வருவது இயற்கையடி.
என்னை எவ்வளவுப்
பிடிக்கும் என்று
எடையிடச் சொல்கிறாய்.
அளவைகளையே அளக்கும்
பாசத்தை அளக்க
எந்த தராசைத் தேடுவேன் ?
எப்போது என்னை
பிடிக்க ஆரம்பித்தது என்கிறாய் ?
முதல் பர்வையில் வந்த
கிளர்ச்சியின் வளர்ச்சிதானடி
இன்றைய என்
கலம் தளும்பும் காதல்.
கடைசி வரை
காதலிப்பாயா என்கிறாய்,
எதன் கடைசி ?
அந்தமில்லா அன்பின் கடைசியா ?
இல்லாத ஒன்றோடு மல்லிடல்
நிழல் யுத்தமல்லவா ?
பிரபஞ்சத்தை பாரேன்
என் பிரியமே.
தாழம்பூவில் தவமிருக்கும்
வாசனை வண்டிடம் உண்டு
காதலின் சுவாசம்.
கிளை கொத்திக் கடக்கும்
கிளிகளின் அலகிலும்,
வலை தொத்திக் கிடக்கும்
மீன்களின் கண்களிலும்,
விலகாத காதல் அகலாமல்.
காதல்,
இயற்கைக்கு இயற்கை
பச்சை குத்திச் சென்ற
பகுத்தறிவு.
இதில்
விடைகளை விடப் பெரிது
உணர்வுகளின் உரையாடல்களே.
பதில்களை விட
எனக்குப் பிடித்ததென்னவோ
பதில் தெரிந்தும்,
பிடிவாதமாய் பல்லிடுக்கில்
நீ கடிக்கும்
பிள்ளைக் கேள்விகளே.
நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.
உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.
நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.
தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.
மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.
காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.
வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.
எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.
முல்லைப்பூஞ் சிரிப்பினிலே
முள்தைத்துப் போனவளே
பிச்சிப்பூஞ் சிரிப்பாலே
பிடுங்கிடவே மாட்டாயோ ?
*
பாலைப்போல் புன்னகைத்து
வேலொன்றைத் தைத்தவளே
சேலைதன் தலைப்பாலே
சரியாக்க மாட்டாயோ ?
*
காலைப்பனி கதிரவனால்
களவாடும் நிலைபோலே
காதல்கனி ஒன்றாலே
பசியாற்ற மாட்டாயோ ?
*
நதிமேலே சுதிபோடும்
அலைபோலே அலைபவளே
கதிநீயே என்றேனே
கண்பார்க்க மாட்டாயோ ?
*
கண்ணுக்குள் மயிலிரண்டைக்
கட்சிதமாய் வளர்ப்பவளே
வானவெளி விண்மீனாய்க்
கண்சிமிட்டிப் பாராயோ ?
*
உன்னழகை வரைகையிலே
என்விழியைத் திறப்பதில்லை
விழியிரண்டைத் திறந்தாலும்
வெளியேறாய் புரிவாயோ ?
*
நித்திரையில் சித்திரத்தை
பத்திரமாய் முத்தமிட்டு
பொத்திவைத்த சத்தியத்தைப்
பத்தியமாய் பார்த்தேனே.
*
சோலைக்கிளி நீயெந்தன்
கூட்டுக்குள் குடிவந்தால்
கவலைதரும் கனவுகளும்
அனுமதியேன் அறிவாயோ ?
*
முத்தத்தால் கூடுகட்டி
மொத்தமுமே உயிலெழுதி
செத்துநான் வீழும்வரை
சேர்ந்திருப்பேன் அறியாயோ ?
கடந்த நிமிடம்
கிழித்த கடற்கரைச் சுவடை
மணல்க் காற்று மூடும்
அவசர உலகம் இது.
தாய்ப்பாலின்
சுவை மறந்த
தவழ்தல் காலம்.
பொம்மைகளோடு மட்டுமே
கும்மியடிக்கும்.
முழங்கால்கள் அடிக்கடி
இரத்தப் பொட்டிடும்
மழலையின் மண்வீதி,
பொம்மைகளோடும் கொஞ்சம்
சண்டையிடும்.
அரை டியாயர்
ஆரம்பப்பள்ளி,
அணிலோடும், அருவியோடுமே
அதிகம் உரையாடும்.
பருவம் உரசும்
பதின் வயதுகளில்
அணில் பற்றி ஆராய
தரம் தெரியாக் கனவுகள்
நேரம் தருவதில்லை
கல்லூரி வாழ்க்கை
கற்களைக் கவிதையாகவும்,
பூக்களைப் புத்தகமாகவும்,
புற்களைப்
பல்களைக்கழகமாகவும்,
கண்டு மகிழும் காளை வயது.
காதல் என்பதே
காயத்துக்கான அனுமதிச்žட்டு
அதை
அண்டவிடமாட்டேன்.
அவ்வப்போது காதுகளில்
வார்த்தைகள் குடையாமலில்லை.
எது தான்
நிலையாமை மீறிய
நிதர்சனம் ?
நீ
இருகாலில் பதியனிடப்பட்ட
மனித மரம்.
மரமாய் வளர்ந்துவிட்டபின்னும்
அந்த
முதல் முளையும்,
சிறு விதையும்,
ஞாபகங்கள்
ஞாபகப்படுத்திப் பார்க்கும்
எல்லைக்கு அப்பால் சிரித்து நிற்கிறதே ?.
மறக்க இயலாத
உணர்ச்சிகளின் ஊர்வலம் தான்
காதல் !
கவலைகளின்
கடப்பாரை தான் காதல் எனும்,
கவலை – களை.
ஓராயிரம் உணர்வுகளை
ஒற்றைப்புள்ளியில் ஊற்றித் தருதே
காதல் !
உனக்குள் ஒழுகும்
உன்னை வடித்து
உருவமிட்டு
உருவாக்குகிறதே காதல்.
நீ
மறந்தவற்றை நினைவில் நிறுத்தி,
நினைவில் நின்றவற்றின்
களை பிடுங்குமே காதல்.
மரணத்தின் படுக்கை
காதலைக்
காதலிக்காதவனுக்காய்
காத்திருக்கிறதாம்.
இன்னொரு பிறவியில்
நீ
பெண்ணில்லாக் கிரகத்தில்
பிறக்கக் கூடும் !!
இப்போதே
ஒருமுறை
காதலும் கற்று மற.