காதல் என்பது எதுவரை ?

Image result for romantic love

காதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை !

ஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போல இயலாத காரியம் அது.

பெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது ? பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது ? கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது ? நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் ? காதலின் கடைசியும் அப்படியே ! அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம்.

காதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ? அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா ?

காற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா ? அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா ? இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு !

எனில், காதல் என்பது எதுவரை ?

அன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை !, அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை ! அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் ! அழகை இழக்கும்.

ஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ! ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ! இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.

காமத்தின் மெல்லிய சாரல் காதலுக்குள் பெய்யும் வரை ! காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

சுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை ! காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.

இருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை.

காதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் ! அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.

இப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை ! தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.

என்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் ! அத்தகைய காதல் அழிவதில்லை.

வேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயுள் கிணறு நிரம்பும்.

மன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும்.

காதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும்.

நான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.

காதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை.

நம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலருடன் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.

சொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் ! மின்மினி கூட தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது ? காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் !

ஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும்.

ஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும்.

அடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும்.

எனில் காதல் என்பது எதுவரை ?
காதலர் விரும்பும் வரை !
காதலர் விரும்புவது எதுவரை
காதலை விரும்பும் வரை !

*

சேவியர்

வெற்றிமணி மார்ச் 2018

காதல் என்பது எதுவரை ?

Image result for love

சொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் ! மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது ? காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகையை நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் ! 

ஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும். 

ஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும். 

அடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும். 

எனில் காதல் என்பது எதுவரை ?

காதலர் விரும்பும் வரை !

காதலர் விரும்புவது எதுவரை

காதலை விரும்பும் வரை !

*

வெற்றிமணி, இலண்டன்

புரிந்தாலும் புதிர் தான்

Image result for Love fantasy

காதல் ஓர் காட்டு மலர்
அதைக்
கால்கள் கட்டி
வீட்டுத் தொட்டியில்
பூக்க வைத்தல் இயலாது.

பூக்குமிடத்தில் தங்கி
உங்கள்
இதய வங்கிகளில்
வாசனை முதலீடுகளை
ஆரம்பியுங்கள்.

0

காதல்
ஓர் சுதந்திரப் பறவை.
கானகத்தைச் சுற்றிக்
கூண்டு கட்டுவதால்
காதலைப் பிடித்தல் சாத்தியமில்லை.

அதன்
சிறகுச் சாலைகளில்
உங்கள் கூடுகளை
திறந்தே வையுங்கள்.

தங்கிச் சென்றால்
வாங்கிக் கொள்ளுங்கள்,
இல்லையேல்
வழக்கிடாதீர்கள்.

0

குகைகளுக்குள்
காதல் குடியிருப்பதில்லை.

காதலுக்காய்
அத்தனை கதவுகளையும்
திறந்தே வையுங்கள்,
வருகைக்கும்
விலகலுக்கும் !.

நுழைந்ததும் மூடி விட்டால்
மூச்சுத் திணறலே மிஞ்சும்.

0

காதல் ஒரு
ஆச்சரியம்,
வேண்டாத இடத்தில் காய்க்கும்
வேண்டும் இடத்தில்
யாகம் நடத்தினாலும்
தியாகம் நடத்தினாலும்
முளைகூட விடுவதில்லை.

சமையல் சட்டியில்
சிப்பிகள்
முத்துத் தயாரிப்பதில்லையே !.

0

காதல் பதக்கமல்ல,
கைக்கு வந்ததும்
பெட்டியில் வைத்துப் பாதுகாக்க !

அது
புத்தகத்துள் பதுக்கி வைக்கும்
மயில் பீலியுமல்ல.

தினமும் தீண்டு.
செதுக்காமல் ஒதுக்கும்
பாறைகள்
சிற்பமாவதில்லை.

தண்­ர் செல்லா
தானியங்கள்
அறுவடைக்கு தயாராவதில்லை.

0

விலகிவிடுமோ எனும் பயம்
விலக்கப் பட வேண்டிய
இலக்கு.

சந்தேக விலங்கு களுக்குள்
புனித உணர்வுகளைப்
பூட்டி வைக்க முடியாது.

0

காதலியுங்கள்,
இலையில் அமரும் பனித்துளியை
புல் நேசிப்பது போல,

செடியில் அமரும்
வண்ணத்துப் பூச்சியை
இலைகள் நேசிப்பது போல,
நேசியுங்கள்.

கூடுகட்டச் சொல்லி
கட்டாயப் படுத்தி,
சமாதி கட்டி முடிக்காதீர்கள்

வெள்ளை தேசம் வேண்டும்.

Image result for cute girl fantasy
மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,

உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.

உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.

அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.

குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.

பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.

ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,

கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.

பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.

கடல் தாண்டிய காதல்.

Image result for Love fantasy

நீண்ட நாட்களாகிறது.
அவள் முகம் பார்த்து.

அவள் பற்றிய நினைவுகளை
மனதிற்குள்
ஓடவிடும்போதெல்லாம்
மனக்கிண்ணத்தில்
மெல்லியதாய்
ஒரு இசை உருவாகும்
ஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.

அவள் சிரிப்பு,
ஹைக்கூக் கண்கள்,
இதயத்துக்குள் ஈட்டி இறக்கும்
அவள் வெட்கம்,

சொர்க்கம் என்பது
மண்ணில் என்பதை
அந்த
தேவதை தரிசனம் தான்
கொளுத்திவிட்டுப் போனது.

அவள் விரல் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாலை
அகலமாயில்லை என்பதை
அறிந்துகொள்வேன்.

உலகம் சுருங்கிவிட்டது
என்பதை
உணர்த்தியதே
அவளோடு பயணம் செய்த
அழகிய பொழுதுகள் தான்

பகல்
விரைவாய் விழித்தெழுமென்று
விளக்கம் சொன்னதே
தொலைபேசிக்குள்
தொழுகை நடத்திய இரவுகள்தான்.

இப்போது வாழ்க்கை என்னை
கடல்களைத்தாண்டிக் கடத்திவிட்டது
ஆனாலும்
நினைவுகளின் தள்ளுவண்டி
அவள் நடக்கும்
வீதிகளில் தான் நகர்கிறது.

கொடுக்கக் கொடுக்க வளர்வது
கல்வி மட்டுமல்ல
காதலும் தான்
என்கிறதே என் காதல்.

உண்மைதான்.
என்றோ விலகிப் போன
அவள் மேல்
எனக்கு
இன்றும் வளர்கிறதே காதல்.

காகிதச் சிறகுகள்

Image result for Guy sad

ஓவியம் வரைய
நினைத்தால்
தூரிகை திருடுகிறாய்.

கவிதை எழுத
நினைத்தால்
என்
கற்பனை திருடுகிறாய்.

கண்மூடிக் கிடந்தால்
விழிகளில் வழியும்
கனவுகளை வருடுகிறாய்.

என்ன தான் செய்வது ?

சிற்பமா ?
சிற்பத்துக்காய் உட்கார்ந்தால்
விழிகளால் செதுக்க மாட்டாயா
உளிகளை ?

ஓவியத்தையும்,
கவிதையையும்
சிற்பத்தையும் தவிர்த்து
இந்த
கவிதை உலகம் எனக்கு
எதையுமே
கற்றுத் தரவில்லையடி கண்ணே.

உன் பிம்பம் படிந்த
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை விட,

அன்றைய உன் மூச்சுக் காற்றை
இன்றும்
இழுத்துப் பிடித்திருக்கும்
என் மொட்டை மாடித்
தென்றலை விட,

நினைவுகளின் கனத்தில்
கழுத்தறுபட்டுப் போகும்
அந்த
கடைசித் துளிக் கண்­ரை விட
அடர்த்தியான,
கவிதைகளை என்னால்
எழுதமுடியாமல் போனதால்
இன்னும்
விதவையாகவே கிடக்கின்றன
என் வீட்டுக் காகிதங்கள்.

உணர்வுகளின்
மலர் தீண்டல்கள்
கீறிச் சென்ற காயங்களை,
என்
வார்த்தை வாட்களால்
மீறிச் செல்ல முடியவில்லை.

நீ
கருணைக் கொலையென்று சொல்லி
கொய்தெறிந்த என்னை,
நான்
திருப்பி எடுக்க மறுத்ததாலா
இன்னும்
தொடர்ந்து திருடுகிறாய் ?

உன் கேள்விகளும் உள் இரசனைகளும்

Image result for Love fantasy

பிரியமே,

காதலில்
கேள்விகள் எழக் கூடாது
எழுந்தால்
பதில்கள் உள்ளத்தின்
உளறல்களாய் தான் விழும்.

ஏன் என்னை
காதலிக்கிறாய் என்கிறாய்?
வண்ணத்துப் பூச்சிக்கு
வர்ணங்களும்,
இதயத்துக்கு காதலும்
இயல்பாய் வருவது இயற்கையடி.

என்னை எவ்வளவுப்
பிடிக்கும் என்று
எடையிடச் சொல்கிறாய்.
அளவைகளையே அளக்கும்
பாசத்தை அளக்க
எந்த தராசைத் தேடுவேன் ?

எப்போது என்னை
பிடிக்க ஆரம்பித்தது என்கிறாய் ?
முதல் பர்வையில் வந்த
கிளர்ச்சியின் வளர்ச்சிதானடி
இன்றைய என்
கலம் தளும்பும் காதல்.

கடைசி வரை
காதலிப்பாயா என்கிறாய்,
எதன் கடைசி ?
அந்தமில்லா அன்பின் கடைசியா ?
இல்லாத ஒன்றோடு மல்லிடல்
நிழல் யுத்தமல்லவா ?

பிரபஞ்சத்தை பாரேன்
என் பிரியமே.

தாழம்பூவில் தவமிருக்கும்
வாசனை வண்டிடம் உண்டு
காதலின் சுவாசம்.

கிளை கொத்திக் கடக்கும்
கிளிகளின் அலகிலும்,
வலை தொத்திக் கிடக்கும்
மீன்களின் கண்களிலும்,
விலகாத காதல் அகலாமல்.

காதல்,
இயற்கைக்கு இயற்கை
பச்சை குத்திச் சென்ற
பகுத்தறிவு.

இதில்
விடைகளை விடப் பெரிது
உணர்வுகளின் உரையாடல்களே.

பதில்களை விட
எனக்குப் பிடித்ததென்னவோ
பதில் தெரிந்தும்,
பிடிவாதமாய் பல்லிடுக்கில்
நீ கடிக்கும்
பிள்ளைக் கேள்விகளே.

இன்னொரு வேண்டுகோள்.

Image result for Guy sad

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.

தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

TBB – அகம் நீயே, வீடியோ

அகம் நீயே, யுகம் நீயே

கடும் புனலாய் காதல் வளர்த்தேன்

சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்

முத்தக் கூடு

Image result for love painting pencil

முல்லைப்பூஞ் சிரிப்பினிலே
முள்தைத்துப் போனவளே
பிச்சிப்பூஞ் சிரிப்பாலே
பிடுங்கிடவே மாட்டாயோ ?

*

பாலைப்போல் புன்னகைத்து
வேலொன்றைத் தைத்தவளே
சேலைதன் தலைப்பாலே
சரியாக்க மாட்டாயோ ?

*

காலைப்பனி கதிரவனால்
களவாடும் நிலைபோலே
காதல்கனி ஒன்றாலே
பசியாற்ற மாட்டாயோ ?

*

நதிமேலே சுதிபோடும்
அலைபோலே அலைபவளே
கதிநீயே என்றேனே
கண்பார்க்க மாட்டாயோ ?

*

கண்ணுக்குள் மயிலிரண்டைக்
கட்சிதமாய் வளர்ப்பவளே
வானவெளி விண்மீனாய்க்
கண்சிமிட்டிப் பாராயோ ?

*

உன்னழகை வரைகையிலே
என்விழியைத் திறப்பதில்லை
விழியிரண்டைத் திறந்தாலும்
வெளியேறாய் புரிவாயோ ?

*

நித்திரையில் சித்திரத்தை
பத்திரமாய் முத்தமிட்டு
பொத்திவைத்த சத்தியத்தைப்
பத்தியமாய் பார்த்தேனே.

*

சோலைக்கிளி நீயெந்தன்
கூட்டுக்குள் குடிவந்தால்
கவலைதரும் கனவுகளும்
அனுமதியேன் அறிவாயோ ?

*

முத்தத்தால் கூடுகட்டி
மொத்தமுமே உயிலெழுதி
செத்துநான் வீழும்வரை
சேர்ந்திருப்பேன் அறியாயோ ?