கி.மு கதைகள் : வாழ்த்தாய் மாறிய சாபம்

16

அக்காலத்தில் ஆங்காங்கே குறிசொல்பவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். இவர்கள் கடவுளிடம் மனதால் பேசி, கடவுள் என்ன சொல்கிறாரோ அவற்றை மக்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்கள் எப்போதும், யாரைக்கண்டும் அஞ்சுவதில்லை. மன்னனை சபிக்கவும், குடியானவனை வாழ்த்தவும் அவர்கள் தயங்குவதேயில்லை. பணம் பதவி செல்வாக்கு இவற்றுக்கு அவர்கள் விலைபோவதுமில்லை.

பிலேயாம் ஒரு மிகச்சிறந்த மனிதர். தெய்வ பக்தர். அவர் குறி சொல்வதில் சிறந்து விளங்கினார். அவர் கடவுளிடம் பேசி கடவுள் சொல்வதை மக்களுக்குத் தவறாமல் சொல்லிவந்தார்.

அந்த நாட்டு மன்னன் பாலாக் இஸ்ரயேலர்களைக் கண்டு பொறாமைப் பட்டான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒரே குழுவாகவும் தங்கியிருந்ததும், அவர்களிடையே இருந்த ஏராளமான செல்வங்கள், கால்நடைகள் இவைகளும் அவனை பொறாமைப் பட வைத்தன. எப்படியாவது அவர்களிடமிருந்து அவற்றையெல்லாம் அபகரிக்க வேண்டும் என்று மன்னன் திட்டமிட்டான்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் எனவே அவர்களை நேரடியாக வீழ்த்தமுடியாது. ஏதேனும் சூழ்ச்சி செய்து தான் அவர்களை வீழ்த்தவேண்டும் என்று பாலாக் திட்டமிட்டான். அவனுடைய மனதில் பிலேயாம் வந்தார்.

பிலேயாம் இறைபக்தர். அவர் ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்வார். அவர் ஒருவனை சபித்தால் அவன் அழிவுறுவான். எனவே பிலேயாமை அழைத்து இஸ்ரயேல் மக்களைச் சபிக்கச் செய்யவேண்டும் என்று மன்னன் முடிவெடுத்தான்.

பாலாக்கின் வீரர்கள் பிலேயாமின் இல்லத்தில் வந்து நின்றனர்.
‘பிலேயாம்… மன்னன் உன்னை அழைக்கிறார். நீ உடனடியாக மன்னனைச் சந்திக்க வேண்டும்’

‘நான் ஏன் மன்னனைச் சந்திக்கவேண்டும் ? ஏதேனும் முக்கியமான விஷயமா ?’ பிலேயாம் கேட்டார்.

‘ஆம். இஸ்ரயேல் மக்கள் நம்முடைய மோவாப் நாட்டிலே தங்கியிருக்கிறார்கள் அல்லவா ? அவர்களை நீர் சபிக்க வேண்டுமாம் ‘ வீரர்கள் சொன்னார்கள்.

பிலேயாம் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது கடவுள் அவரோடு பேசினார். ‘ பிலேயாம்.. நீ பாலாக்கின் வீரர்களோடு போகவேண்டாம். இஸ்ரயேல் மக்கள் என்னுடையவர்கள். அவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். சபிக்கப் படவேண்டியவர்கள் அல்ல’

161பிலேயாம் கண்களைத் திறந்தார். ‘ இல்லை. நான் உங்களோடு வர முடியாது. இஸ்ரயேல் மக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை நான் சபிக்கமுடியாது என்று மன்னனிடம் போய்ச் சொல்’ பிலேயாம் தெளிவாகச் சொன்னார்.

வீரர்கள்  மன்னனிடம் வந்து விஷயத்தைச் சொல்ல, மன்னன் கடும் கோபமடைந்தார்,

‘உயிர் மீது அவருக்கு ஆசையிருந்தால் உடனே என்னிடம் வரச் சொல்லுங்கள்’ மன்னன் ஆணையிட்டான்.

இரண்டாவதாக வீரர்கள் சிலர் பிலேயாமைச் சந்திக்கச் சென்றார்கள்.

‘நீர் உடனே மன்னனைச் சந்தித்தாகவேண்டும். இது அரச கட்டளை. இல்லையேல் இங்கேயே உமது தலையை வெட்டி வீசுவோம்’ வீரர்கள் எச்சரித்தார்கள்.

பிலேயாம் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார். அவர்கள் அவரை ஒரு கழுதையின் மீது அமரவைத்து அழைத்துச் சென்றனர். கடவுள் இதைக் கண்டு கோபமடைந்தார்.

‘பாலாக்கைச் சந்திக்க வேண்டாமென்றல்லவா நான் சொன்னேன். இஸ்ரயேலர்களைச் சபிக்க வேண்டாமென்றல்லவா நான் கூறினேன்.. பிலேயாம் என் வார்த்தைகளை மீறிவிட்டானே ‘ என்று வருந்தினார். உடனே தன்னுடைய தூதர் ஒருவரை அனுப்பி அவரை வழிமறிக்குமாறு சொன்னார்.

பிலேயாம் கழுதையில் சென்றுகொண்டிருந்தபோது கடவுளின் தூதர் வாளுடன் அவருக்கு எதிரே வந்து நின்றார். அவர் பிலேயாமின் கண்களுக்குத் தெரியவில்லை. கழுதையின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். கழுதை அவரைக் கண்டதும் விலகி ஓடியது. பிலேயாம் கழுதையை அடித்தார்.

கழுதை இருபுறமும் மதில்சுவரால் கட்டப்பட்ட வழியில் ஓடியது. கடவுளின் தூதர் இருபுறத்திலுமிருந்து கழுதையை நெருக்கினார். கழுதை பயணிக்கச் சிரமப்பட்டது. பிலேயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார்.

மீண்டும் கடவுளின் தூதர் கழுதையின் முன்னால் வந்து நின்று வாளை ஓங்கினார். உடனே கழுதை தரையில் படுத்தது. பிலேயாமின் கோபம் கரைகடந்தது. கழுதையை மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தார்.

உடனே கழுதை… ‘பிலேயாம்.. ஏன் என்னை அடிக்கிறாய் ?’ என்று கேட்டது.

கழுதை பேசியதைக் கேட்ட பிலேயாம் நடுங்கினார்.

‘நீ என்னை ஏன் மூன்று முறை அடித்தாய் ? கடவுளின் தூதர் வாளோடு என்னை வழிமறிக்கிறாரே’ கழுதை சொன்னதும்  பிலேயாம் தன் தவறை உணர்ந்தார். இஸ்ரயேல் மக்களைச் சபிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

அப்போது கடவுளின் தூதர் அவருடைய கண்களுக்கும் தரிசனமானார். ‘ நீர் போய் கடவுள் சொல்வதை பாலாக்கிற்குச் சொல்லும்’ தூதர் சொன்னார். பிலேயாம் தெளிவு பெற்றவராய் மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.

பாலாக்கின் அரண்மனை.

பிலேயாமிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசன் உட்பட அனைவருமே எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

‘இதோ.. பிலேயாம் நம்மிடம் வந்திருக்கிறார். இனிமேல் வெற்றிகள் எல்லாம் நமக்கே. பிலேயாம்,  உம் வாயால் அந்த இஸ்ரயேல் மக்களைச் சபியுங்கள் ‘ மன்னன் ஆனந்தமாய்க் கூறினான்.

‘அரசே… கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் சொல்வேன். மன்னன் சொல்வதையெல்லாம் என்னால் செய்ய முடியாது.’ பிலேயாம் அமைதியாகச் சொன்னார். மன்னன் புரியாமல் பார்த்தான்.

‘இஸ்ரயேல் மக்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் மீது சாபம் வராது’ பிலேயாம் சொன்னார்.

உடனே மன்னனும், கூட இருந்தவர்களும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

‘இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மக்கள். அவர்களை வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவார்கள், சபிப்போர் சாபத்துக்கு ஆளாவார்கள். நானும் இஸ்ரயேல் மக்களை வாழ்த்துகிறேன்…’ பிலேயாம் மீண்டும் சொன்னார். மன்னனின் முன்னிலையில், அனைத்து அரசவை ஊழியர்களின் முன்னிலையில் பிலேயாம் கடவுள் தன்னுடன் இருக்கும் தைரியத்தில் துணிந்து நின்றார்.

பிலேயாமின் வார்த்தைகளைக் கேட்ட பாலாக் மன்னன் கோபமடைந்தான். பிலேயாமை ஏதேனும் செய்தால் கடவுளின் சாபம் தனக்கு வந்துவிடுமோ என்று பயந்து அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வரவிருந்த சாபத்தை, வாழ்த்தாக மாற்றியதை அறிந்த இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்

கி.மு : மோசஸ் – வியப்பூட்டும் விடுதலைப் பயணம் !


எகிப்து  நாட்டில் எரேபியக் குடும்பமான இஸ்ரயேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபு-வின் குடும்பம் குடிவந்தபின் அவர்களுடைய வம்சம் தழைத்தது. இஸ்ரயேலையும் அவருடைய தலைமுறையினரையும் எகிப்திய மன்னர்களும் மக்களும் மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தி வந்தார்கள். காலம் உருண்டோ டியது. பல தலைமுறைகள் தோன்றி மறைந்தன. எகிப்திற்கு புதிதாய் ஒரு மன்னன் அரியணை ஏறினான். எபிரேயர்களின் சோதனைக் காலம் அங்கே ஆரம்பமானது.

அரியணையேறிய மன்னன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தான். எங்கும் எபிரேயர்களின் கூட்டம். எகிப்தியர்களை விட வலிமையிலும், அழகிலும் திறமையிலும் சிறந்து விளங்கிய எபிரேயர்களின் கூட்டத்தைப் பார்த்த மன்னனுக்கு உள்ளுக்குள் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. அவசரமாக அரசவையைக் கூட்டினான் மன்னன்.

‘நம் நாட்டில் எபிரேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. எனக்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் கண்களுக்கு அது தென்படவில்லை போலிருக்கிறது. இப்போதேனும் நாம் சுதாரிக்க வேண்டும். இல்லையேல் இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை நம்மை விட அதிகரித்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், எகிப்தியர்களின் பாடு திண்டாட்டம் தான். அப்புறம் பிழைக்க வந்த இஸ்ரயேலர்களால் நம்முடைய பிழைப்பு கெடும். நாம் சுதாரித்தாக வேண்டும்’

‘ஏன் மன்னா அப்படிச் சொல்கிறீர்கள் ?.. அவர்களால் நமக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ?’

‘ஏதேனும் அண்டை நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இஸ்ரயேலர்கள் அவர்களோடு சேர்ந்து நம்மை எதிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா ? அப்படி ஒரு நிலமை வந்தால் நாம் அன்னியர்களிடம் தோற்கடிக்கப் படுவோமே ?’

‘ஆம் மன்னா. இதுவரை யாரும் இப்படி யோசித்ததில்லை. இப்போது என்ன செய்யலாம் இஸ்ரயேலர்களை எகிப்தை விட்டுத் துரத்தி விடலாமா ?

‘ அதுவும் புத்திசாலித்தனமான யோசனையல்ல. அவர்கள் இப்போது  நாட்டை விட்டுப் போனால் கூட அவர்கள் எகிப்தின் செல்வங்களோடு தான் போவார்கள். அப்படிப் போனாலும் இழப்பு நமக்குத் தான். எகிப்தில் எகிப்தியர்களுக்கு பாதுகாப்பும் இருக்காது, வளங்களும் இருக்காது. இதற்கு புத்திசாலித்தனமாக ஏதாவது செய்தாக வேண்டும். எகிப்தின் செல்வங்களும் எகிப்தை விட்டுப் போகக் கூடாது. இஸ்ரயேலர்களின் கையும் ஓங்கக் கூடாது. ஏதேனும் வழி செய்தாக வேண்டும்’

‘என்ன செய்யலாம் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள் அரசே… ‘அரசவை மன்னனை நோக்கி பணிவாய் நின்றது.

‘எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த வழி, இஸ்ரயேலர்களை எகிப்தியர்களின் அடிமைகள் ஆக்குவது தான். அவர்கள் நமக்கு அடிமைகளாக நாம் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நாட்டை விட்டுச் செல்லவும் அனுமதிக்கப் படக் கூடாது. அவர்களுடைய வலிமையை நாம் நம்முடைய எகிப்து நாட்டில் புதிய நகரைக் கட்டும் பணிகளுக்காய் செலவிட வைக்க வேண்டும்’ மன்னன் கூறினான்.

‘அப்படியே செய்யுங்கள் மன்னா’

அரசவையில் விவாதிக்கப் பட்ட விஷயம் அரச ஆணையானது ! எபிரேயர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாக வேண்டும். நகரங்களை நிர்மாணிக்கும் பணியில் அவர்கள் அடிமை வேலை பார்க்க வேண்டும்  ‘ மன்னனின் ஆணை இஸ்ரயேல் மக்களை அதிர்ச்சியின் உச்சியில் நிறுத்தியது. அவர்களுடைய சுதந்திரமும், இது வரை சேமித்த செல்வமும் அந்த ஒரே ஆணையால் பறிபோய்விட்டது. அரசனுடைய ஆணை ஆனந்தமாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர்களை ஒரே நாளில் அழுகைக்குள் தள்ளியது. அவர்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாய் ஆனார்கள்.

இஸ்ரயேலர்களை அடிமைப்படுத்திய எகிப்தியர்கள் அவர்களைக் கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தனர். இஸ்ரயேலர்கள் வலிமையானவர்கள் எனவே அவர்களைக் கொண்டு மன்னன் இரண்டு நகரங்களைக் கட்டத் தீர்மானித்தான். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் புதிய நகரம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுவர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடோ  சலுகைகளோ யாருக்கும் அளிக்கப்படவில்லை. அவர்கள் அனைவருமே  கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டி இருந்தது. அடிமைகளின் உயிருக்கு எந்தவிதமான மதிப்பும் இருக்கவில்லை. நாள்தோறும் நூற்றுக்கணக்கான அடிமைகள் நகர் நிர்மாணிக்கும் பணியில் பெரிய பெரிய பாறைக் கற்களுக்கு அடியே நசுங்கியும், இடிபட்டும் இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை.

எபிரேயர்களுக்கு உணவு மட்டுமே வழங்கப் பட்டது. அவர்களுக்கு எதிர்த்துப் பேசும் உரிமையோ, மறுத்துக் கூறும் உரிமையோ தரப்படவில்லை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அவர்கள் நகர் நிர்மாணிக்கும் பணிகளில் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள்.

ஆனாலும் அவர்களின் வம்சம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆண்டுதோறும் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அடிமைகளாய் இருந்தாலும் அவர்களுடைய வம்சம் வளரக் கூடாது என்று மன்னன் நினைத்தான். எனவே அவன் புதிதாய் ஓர் ஆணையிட்டான். அவன் மருத்துவப் பெண்களை அழைத்து,
‘ நீங்கள் இஸ்ரயேல் குலப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது ஆண் குழந்தை பிறந்தால் உடனே கொன்று விட வேண்டும்’ என ஆணையிட்டான்.

மருத்துவப் பெண்கள் மனம் வருந்தினார்கள். மன்னனின் ஆணை தவிர்க்க முடியாதது தான், ஆனாலும் அவர்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின் மன்னன் நகர்வலம் வந்தபோது ஏராளமான சிறு ஆண்குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. மன்னன் சினந்தான். மருத்துவப் பெண்களை அழைத்தான்.

‘ஆண்குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்பதல்லவா என் கட்டளை ! நீங்கள் அதை மீறி விட்டீர்கள். நகர் முழுவதும் ஏராளம் இஸ்ரயேல் சிறுவர்களைப் பார்க்கிறேன். என்னுடைய கட்டளைய மீறிய உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?’ மன்னன் கோபத்துடன் கேட்டான்.

‘மன்னா… மன்னியுங்கள். அரசருடைய ஆணையை மீறும் அளவுக்கு நாங்கள் அறிவிலிகள் அல்ல. அப்படிச் செய்தால் எங்கள் உயிர் எங்களிடம் இருக்காது என்பதும் எங்களுக்குத் தெரியாதா ? நாங்கள் உங்கள் கட்டளைகளை மீறியதேயில்லை’ மருத்துவப் பெண்கள் பணிவாய் சொன்னார்கள்.

‘பின் எப்படி இஸ்ரயேல் குலத்தில் ஆண் குழந்தைகள் விளையாடுகின்றன. பிறந்தவுடன் குழந்தைகள் இறக்காதது தானே இதற்குக் காரணம் ?’ மன்னன் மீண்டும் கோபத்தில் கத்தினான்.

‘மன்னா… அதற்குக் காரணம் நாங்களல்ல. அந்த இஸ்ரயேல் குலப் பெண்கள் தான். அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். நாங்கள் அவர்களுக்குப் பிரசவம் பார்க்கச் செல்லும்முன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்று விடுகிறார்கள். எனவே எங்களுக்கு குழந்தைகளைக் கொல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டதேயில்லை. எங்களை நம்புங்கள்’ உயிருக்குப் பயந்து நடுங்கினார்கள் மருத்துவப் பெண்கள்.

‘சரி நீங்கள் போகலாம். இனிமேல் உங்களை நம்பிப் பயனில்லை நானே நேரடியாக மக்களுக்கு ஆணையிடுகிறேன்’. என்று கூறி மன்னன் புதிய ஆணை ஒன்றை அறிவித்தான்.

‘அடிமைகளுக்குப் பிறக்கும் எந்த ஆண்குழந்தையும் வாழக் கூடாது. அவர்கள் நைல் நதியில் எறிந்து கொல்லப்பட வேண்டும். பெண் குழந்தைகள் வாழட்டும்’

இஸ்ரயேல் குலத்துப் பெண்களும் ஆண்களும் இந்த அறிவிப்பினால் கதிகலங்கிப் போனார்கள். ஆனாலும் மன்னனின் கட்டளைக்கு மறுப்பு ஏது ?  அடிமைகள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றத் துவங்கினார்கள். அதன் பின் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் நைல் நதியில் வீசப்பட்டார்கள். பத்து   மாதம் சுமந்து கனவுகளோடு பெற்றெடுத்த குழந்தைகளை அவர்கள் ஒப்பாரியோடு ஆற்றில் வீசியதால், பிரசவ வீடுகள் எல்லாம் ஒப்பாரி ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஏராளமான பிஞ்சு உயிர்களைக் குடித்த அந்த நைல் நதி வழக்கம் போல மெளனமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அந்நாட்களில், ஒரு அடிமைத் தம்பதியினர் பிரசவ நாளுக்காகக் காத்திருந்தனர். ‘கடவுளே… எங்களைக் கைவிடாதிரும். எங்களுக்கு ஆண்குழந்தை வேண்டாம். ஒரு பெண் குழந்தையைத் தாரும்’ என கண்ணீரோடு வேண்டிக் கொண்டிருந்தனர்.

நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தன. அவர்களிடம் பதட்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

பிரசவ நாளும் வந்தது. அவளுக்குப் ஒரு அழகான குழந்தை பிறந்தது. அவசர அவசரமாக குழந்தையைப் பார்த்த தம்பதியினர் அதிர்ந்து போயினர். அது ஒரு ஆண் குழந்தை.

‘ஐயோ.. என்ன செய்வேன். தவமிருந்து பெற்ற மகனை நான் நைல் நதிக்குத் தின்னத் தருவதா ? தண்ணீரில் வீசவா தங்கத்தை நான் பெற்றெடுத்தேன் ‘ என்று அழுது புலம்பினர். ஆனாலும் குழந்தை பிறந்த செய்தியை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை.

குழந்தை ரகசிய அறையில் வளர்க்கப் பட்டான். நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களானது. மூன்று மாதம் முடிவடைந்தது.

எத்தனை நாள் தான் ஒரு குழந்தையை மறைத்து வைக்க முடியும் ?. எந்த நேரமும் எகிப்திய அதிகாரிகளால் தங்கள் வீட்டுக் கதவு தட்டப் படலாம். தங்கள் குழந்தையின் தலை வெட்டப் படலாம் என்னும் பயம் அவர்களைக் கொன்று கொண்டிருந்தது. இறுதியாக ஒரு முடிவு எடுத்தனர்.

‘ஆண்டவரே… இது நீர் எங்களுக்குத் தந்த மகன். இவனை நாங்கள் நைல் நதியில் மிதக்க விடுவோம். நீர் தான் இவனைக் காத்துக் கொள்ள வேண்டும்’ என உருக்கமாக மன்றாடினர். பின் தண்ணீர் நுழையாத ஒரு பேழையைச் செய்து அதற்குள் குழந்தையை வைத்து மூடி நைல் நதியில் மிதக்க விட்டனர்.

நைல் நதி ஒரு அடிமையின் குழந்தையைச் சுமந்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. நைல் நதியின் நாணல்களிடையே அந்தப் பேழை மெல்ல மெல்ல நுழைந்து பயணித்துக் கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்னும் அச்சத்தில் தூரமாய் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தையின் அக்கா.

பேழை நகர்ந்து நகர்ந்து மன்னனின் மகள் குளிக்கும் இடத்திற்கு வந்தது. மன்னனின் மகளும் தோழிகளும் நீராடிக் கொண்டிருக்கையில் அது அவர்களுக்கு அருகே மிதந்து வந்தது. இதைத் தூரத்திலிருந்து பார்த்த சகோதரி திகைத்துப் போனாள். ‘ஐயோ… யாரிடம் சேரக் கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடமே சென்று சேர்ந்து விட்டதே. என் சகோதரனும் நைல் நதிக்குள் எறியப்படுவானே’ என அழுதாள். ஆனால் நடந்ததோ வேறு !

மன்னனின் ஹ்மகளை அந்தக் குழந்தையின் கொள்ளை அழகு கட்டிப் போட்டு விட்டது. ‘இந்தக் குழந்தையை நான் வளர்ப்பேன்’ என்றாள்.

‘அதெப்படி முடியும் ? இது எபிரேயக் குழந்தையாயிற்றே. அடிமையின் மகனல்லவா ? இவன் சாகவேண்டும் என்பது தானே மன்னனின் ஆணை’ தோழியர் பயந்தனர்.

‘ஆணையிட்டது என் தந்தை தானே. அவருக்குத் தெரியாமலேயே வளர்ப்போம். நீங்கள் இதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது’

‘சொல்கிறோம் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இவனை எப்படி வளர்ப்பீர்கள் ? பாலூட்டி வளர்க்க ஒரு தாய் வேண்டுமே ..’

‘நீங்கள் போய் குழந்தையை இழந்த ஒரு எபிரேயப் பெண்ணை அழைத்து வாருங்கள். அவள் இவனை வளர்க்கட்டும். குழந்தை வளர்ந்தபின் அவளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுத்து விட்டு இவனை நான் பெற்றுக் கொள்வேன். சரிதானே ?’ மன்னனின் மகள் கேட்டாள்.

தோழியர் அரைமனதோடு ஒத்துக் கொண்டனர். இதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் சகோதரி தோழியர் முன் ஒன்றும் அறியாதவளாக வந்து நின்றாள்.

தோழியர் அவளிடம், ‘ நீ போய் ஒரு எபிரேயச் செவிலியை அழைத்து வா. ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல கூலி கொடுக்கலாம் என்று சொல்லி அழைத்து வா’ என்றனர்.

அவள் ஆனந்தமாய் ஓடிப் போய் தன் தாயை அழைத்து வந்தாள். குழந்தையை வளர்க்க வாய்ப்புக் கிடைத்த சொந்தத் தாய் மகிழ்ந்தாள். தன் சொந்த மகனுக்குச் செவிலியானாள்.

குழந்தை வளர்ந்தான். தாய் அவனை அரண்மனையில் மன்னனின் மகளிடம் ஒப்படைத்தாள். பையனைப் பார்த்த இளவரசி மகிழ்ந்தாள். நதியிலிருந்து அவனை எடுத்திருந்ததால் அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே என்றால் ‘எடுக்கப் பட்டவன்’ என்று பொருள்.

இந்த மோசே தான் அரசனை எதிர்ப்பான் என்றும், அடிமைகளை விடுதலை செய்ய வைத்து எகிப்தை விட்டு வெளியே கூட்டிச் செல்வான் என்றும் அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

எபிரேய குலத்தில் பிறந்த மோசே எகிப்தியர்களின் மாளிகையில் வளர்ந்தான். அவன் அடிமை இனத்தைச் சேர்ந்தவன் என்பது எகிப்தியர்களுக்குத் தெரியாது. ஆனால் தான் அடிமையாய் இருக்கும் எபிரேய குலத்தைச் சேர்ந்தவன் என்பதும், ஆளும் எகிப்திய குலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதும் மோசேக்குத் தெரிந்தே இருந்தது.

சிறுவன் மோசே வளர்ந்து இளைஞனானான். பார்வைக்கு மிகவும் கம்பீரமாக இருந்த அவனை அரச குலப் பெண்கள் எல்லோரும் காதல் கண்ணோடு பார்த்தார்கள்.

ஒருநாள் மோசே அரசகுல ஆண்களுக்கே உரிய கம்பீரத்தில் நகர்வலம் வந்தார். அவருடைய முதல் நகர்வலம் ! . அரச ஆடைகள் அணிந்து, சாரட் வண்டியில் பவனி வந்தபோது தான் அவருக்கு இதுவரை தெரிந்திராத தன் இன மக்களின் அடிமை நிலை தெரிய வந்தது. எகிப்திய அதிகாரிகள் எபிரேயர்களை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து நடக்கவே இயலாத மூதாட்டிகளும், வயதானவர்களும் கூட கடுமையான வேலைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்ட மோசே மிகவும் வருந்தினார். தன் இன மக்கள் அடி வாங்கி அடிமைகளாய்க் கிடக்கிறார்களே என பரிதவித்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அவர் மனதில் எழுந்தது.

சற்று தூரம் சென்றபோது ஒரு எபிரேயனை எகிப்திய அதிகாரி மூர்க்கமாக அடித்துக் கொண்டிருந்தான். அந்த அடிமையோ எழ முயன்று எழ முயன்று முடியாமல் கிடந்தான். இருந்தாலும் அந்த எகிப்தியன் அடிப்பதை நிறுத்தவில்லை. இதைக் கண்ட மோசே மிகுந்த ஆவேசம் கொண்டார். வண்டியிலிருந்து இறங்கி நேராக அவனிடம் சென்றார்.

‘ஏன் அவனை தொடர்ந்து அடிக்கிறாய் ? அவன் தான் வலிமையில்லாமல் விழுந்து கிடக்கிறானே ? உனக்கு மனசாட்சியே இல்லையா ?’

‘அடிமைகளை இப்படித் தான் நடத்த வேண்டும். பல்லக்கிலா ஏற்றிச் சுமக்க முடியும் ‘ எகிப்தியன் சொல்லி முடிக்கும் முன் மோசேயின் கரம் அவனுடைய கழுத்தை நெரித்தது.

‘நீயெல்லாம் வலி என்றால் என்னவென்றே அறியாதவன். இதோ இப்போது அறிந்து கொள் ‘ என்று அவனுடைய கழுத்தை நெரித்தார்.
அந்த எகிப்தியன் மோசேயின் வலிமையான கரங்களுக்குள் நசுங்கி இறந்தே போனான் !.

மோசே சுற்றும் முற்றும் பார்த்தார். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. இறந்து போன எகிப்திய அதிகாரியை அங்கேயே மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி அரண்மனைக்குத் திரும்பினார்.

மறு நாளும் தன்னுடைய மக்களின் நிலையைப் பார்ப்பதற்காக மோசே நகர்வலம் வந்தார். அப்போது இரண்டு இஸ்ரயேலர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மோசே ஆச்சரியப் பட்டார். எகிப்தியர்கள் தான் இஸ்ரயேலர்களை அடிக்கிறார்கள் என்றால், இங்கே இரண்டு இஸ்ரயேலர்களே தங்களுக்குள் சண்டையிடுகிறார்களே ? என்று வருந்தினார். நேராக அவர்களிடம் சென்றார்.

‘உங்களுக்கென்ன பைத்தியமா ? எகிப்தியர்கள் தான் உங்களை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்றால், நீங்கள் ஏன் உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள் ? நீங்கள் ஒற்றுமையாய் இருப்பது தானே உங்களுக்கு நல்லது ?’ என்றார்.

 ‘ நீ… யார் அதைக் கேட்க ?…’ என்றனர் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள்.

‘உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். ஒன்றுபட்டு இருந்தால் தான் உங்களால் அமைதியான வாழ்க்கை வாழவும் முடியும், கொடுமைகளை எதிர்க்கவும் முடியும். இல்லையேல் இந்த அடிமை நிலையில் காலம் முழுதும் இருக்க வேண்டியது தான்’

‘நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. நேற்று ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து விட்டாயல்லவா… அதே போல எங்களையும் கொன்று புதைத்து விடலாம் என திட்டமிடுகிறாயா’ அவர்கள் கத்தினர்.

மோசே திடுக்கிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். சுற்றிலும் எகிப்திய அதிகாரிகள் நிறைந்திருந்தனர். மன்னன் காதுக்கு விரைவில் இந்த செய்தி எட்டிவிடும் என்பது அவருக்குப் சட்டெனப் புரிந்தது. உதவி செய்யப் போய்ப் பெரும் இக்கட்டில் மாட்டியதை உணர்ந்தார். அவர் நினைத்தது போலவே, உடனே விஷயம் மன்னன் காதுக்குப் போயிற்று.

‘ அதெப்படி ஒரு எகிப்தியன் இன்னொரு எகிப்தியனைக் கொல்லமுடியும். அதுவும் ஒரு அடிமைக்காக ? என்ன சொல்கிறீர்கள். நம்ப முடியவில்லையே’ மன்னன் கொதித்தான்.

‘மன்னா… அவன் உண்மையில் எகிப்தியன் இல்லையாம். அவன் எபிரேய அடிமையாம். உங்கள் மகள் தான் அவனை வளர்த்ததாக அரண்மனையில் பேசிக் கொள்கிறார்கள்’ ஒரு அதிகாரி மெல்லிய குரலில் பேசினார்.

‘என்ன… அவன் அடிமையா ? அரண்மனை இத்தனை காலம் ஒரு அடிமை மகனையா அரசனைப் போல நடத்தியது ? இது அரச குலத்துக்கே அவமானம்.  அவனை உடனே கொன்று விடுங்கள். ‘ மன்னனின் கோபம் பலமடங்கு உயர்ந்தது.

அதற்குள் மோசே உயிர் பிழைக்க ஓடிவிட்டிருந்தார். எகிப்தை விட்டே வெளியேறி மிதியான் என்னும் நாட்டில் குடியேறினார். சிலகாலம் அங்கு தங்கியிருந்த அவர், அங்கு வாழ்ந்து வந்த ஒரு அர்ச்சகரின் மகளை மணமுடித்தார். வருடங்கள் ஓடின. மோசே தன் இன மக்கள் எகிப்தில் அடிமையாய்க் கிடப்பதை மறந்தார். தன் மனைவியோடும், குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து அவந்தார். அவருடைய மாமனாருக்கு ஏராளமான ஆடுகள் இருந்தன. அதை மேய்ப்பதையே மோசே தொழிலாகக் கொண்டார்.

எகிப்தில் மோசேவைக் கொல்லத் தேடிய மன்னன் இறந்து விட்டான். அத்துடன் அவனைக் கொல்லவேண்டும் என்னும் அரச ஆணையும் மறைந்து விட்டது. ஆனால் இஸ்ரயேலர்களின் அடிமைத்தனம் மட்டும் மாறவேயில்லை. அவர்களுடைய சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளைக் கூறி அழுது கொண்டே இருந்தார்கள். கடவுள் அவர்களைக் காப்பாற்ற முடிவெடுத்தார்.

ஒரு நாள் மோசே ஓரேபை மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பச்சைப் புதர் பற்றி எரியத் துவங்கியது. மோசே திடுக்கிட்டார். இதென்ன இந்த பச்சைச் செடி எப்படி திடீரெனத் தீப்பிடித்தது ? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எண்ணியவராக புதரை உற்றுப் பார்த்தார். பச்சைப் புதர் எரிந்து கொண்டே இருந்தது. ஆனால் கருகவில்லை. அதைக் கண்ட மோசே மிகவும் ஆச்சரியமடைந்தார். புதரை நோக்கி நடந்தார்.

‘நில்… மோசே…. நில்….’ எரிந்து கொண்டிருந்த புதரிலிருந்து ஆண்டவரின் குரல் ஒலித்தது.

மோசே உச்சி முதல் பாதம் வரை சில்லிட்டார். நடுங்கினார்.

‘நீ.. உன்னுடைய செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அருகே வா. இது கடவுளின் இடம். புனிதமான இடம். இதை நீ அசுத்தப் படுத்தாதே…’
மோசே பயந்தவராய், தன்னுடைய மிதியடிகளைக் கழற்றி எறிந்து விட்டு நெருப்பை நெருங்கினார்.

‘எகிப்தில் என்னுடைய மக்கள் அடிமையாய்க் கிடக்கிறார்கள். நீ போய் அவர்களை விடுவிக்க வேண்டும். எகிப்தின் செல்வங்களோடு இஸ்ரயேல் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும். அவர்களை நீ தான் எகிப்தை விட்டு பாலும், தேனும் பொழியும் சுதந்திர தேசமான கானான் தேசத்துக்குக் கூட்டி வர வேண்டும். உன்னோடு நான் இருந்து உனக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’ கடவுள் சொன்னார்.

‘ஐயோ நானா… கடவுளே… என்னால் முடியாது. எனக்கு எந்தத் திறமையும் இல்லை ‘ மோசே மறுத்தார்.

‘இல்லை. இதைச் செய்வதற்கு சரியான ஆள் நீ தான். நீ… எபிரேயப் பெரியவர்கள் சிலரைக் கூட்டிக் கொண்டு எகிப்திய மன்னனின் அரண்மனைக்குப் போ. அங்கு போய் மன்னனிடம், கடவுள் தான் என்னை உன்னிடம் அனுப்பினார்.. நீ அடிமையாய் வைத்திருக்கும் எபிரேயர்கள் கடவுளுக்கு ஒரு பலி செலுத்த விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறி பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலிசெலுத்தட்டும் என்று சொல்’  என்றார் கடவுள்

‘ஐயோ ஆண்டவரே… இது எப்படி முடியும். எபிரேயப் பெரியவர்களிடம் நான் போய் கடவுள் அனுப்பினார் என்றால் எந்தக் கடவுள் என்று கேட்பார்கள். யாரும் நம்பப் போவதில்லை. நான் என்ன சொல்வது’

‘இருக்கிறவர் நானே… என்பதே கடவுளின் பெயர்’ எனச் சொல்.

‘ஆண்டவரே… நான் சென்றால் என்னை எகிப்திய மன்னன் கொன்று விடுவானே’ மோசே அஞ்சினார்.

‘எகிப்தில் உன்னைக் கொல்லச் சட்டம் இயற்றியவன் இறந்து விட்டான். எனவே நீ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம்.  அங்கே உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன். நீ போய் நான் சொன்னதைச் செய்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… என்னை யாரும் நம்ப மாட்டார்கள். என்னை எல்லோரும் பைத்தியக்காரனாய்ப் பார்ப்பார்கள்’

‘ மோசே !  உன் கையில் வைத்திருக்கிறாயே ஒரு கைத்தடி… அதைக் கீழே போடு’ என்றார் கடவுள். மோசே அதைக் கீழே போட்டார் உடனே அது ஒரு படமெடுத்தாடும் பாம்பாக மாறியது. மோசே பயந்து போய் பின் வாங்கினார்.
‘பயப்படாதே… அதன் வாலைப் பிடித்துத் தூக்கு’ கடவுள் ஆணையிட்டார். மோசே அதன் வாலைப் பிடித்துத் தூக்க அது மீண்டும் கைத்தடியாக மாறியது.

‘மோசே… இப்போது உன் கையை மடிக்குள்  விட்டு வெளியே எடு’ கடவுள் கூற, மோசே அப்படியே கையை உள்ளே விட்டு வெளியே எடுத்தார். அவருடைய கை தொழுநோயாளியின் கையாய் மாறியிருந்தது. மோசே திகைத்தார்.
‘கவலைப்படாதே மோசே… உன்னுடைய கையை மீண்டும் உன் மடிக்குள் போட்டு வெளியே எடு’ கடவுள் கூறினார். மோசே அப்படியே செய்தான், இப்போது அவருடைய கை சாதாரண நிலைக்கு வந்திருந்தது.

‘நீ எகிப்திற்குப் போய் உன்னை நம்ப மறுப்பவர்களிடம் இதைக் காண்பி அவர்கள் நம்புவார்கள்’ என்றார் கடவுள்.

‘ஐயோ… கடவுளே… இதெல்லாம் மந்திர தந்திரம் என்று சொல்லி என்னை நம்ப மறுப்பார்கள்… என்னை விட்டு விடுங்கள்’ மோசே தப்பிக்கும் வழி தேடினார்.

‘இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பாவிடில், நீ நைல் நதியின் தண்ணீரை கொஞ்சம் அள்ளி தரையில் ஊற்று அது இரத்தமாக மாறும்’ என்றார்,

‘ஐயோ… ஆண்டவரே…  எனக்குப் பேசவே தெரியாது. சபையில் நிற்கும் துணிச்சலும் எனக்கு இல்லை. வேறுயாரையாவது அனுப்புங்கள்’ மோசே விண்ணப்பித்தான்.

மோசே தொடர்ந்து மறுப்பதைக் கண்ட கடவுளுக்குக் கோபம் வந்தது. ‘உனக்கு வாயைக் கொடுத்தவனே நான் தான். என்னிடம் நீ பேச்சைப் பற்றி பேசுகிறாயா. கடவுளிடமே நீ மறுத்துப் பேசுகிறாயா ? சரி… உனக்குக் கூட்டாளியாக ஆரோனை அழைத்துப் போ’ என்றார்.

கடவுள் இவற்றைச் சொன்னதும், எரிந்து கொண்டிருந்த தீ சட்டென அணைந்து போயிற்று. மோசே ஏதும் புரியாதவராய் திரும்பிப் பார்க்க அவரை நோக்கி ஆரோன் வந்து கொண்டிருந்தார்.

மோசே வியந்தார். கடவுள் சொன்னதெல்லாம் உண்மையே என்பதைப் புரிந்து கொண்டார்.

மோசேயும், ஆரோனும் கடவுளுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக எகிப்திற்குச் சென்றார்கள். எகிப்தைச் சென்றடைந்து அங்கிருந்த எபிரேய மக்களைச் சந்தித்து கடவுள் சொன்னதையெல்லாம் சொன்னார். மக்களோ நம்பவில்லை. ‘ இதெல்லாம் சுத்த உளறல். கடவுளாவது பேசுவதாவது ‘ என்று சிரித்தனர். மோசே கலங்கவில்லை. கடவுள் சொன்ன அனைத்து அற்புதங்களையும் அவர்கள் முன்னே செய்து காட்டினார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் ஆரோன் ஆண்டவரின் திட்டத்தைத் தெளிவாகச் சொன்னார். மக்கள் நம்பினார்கள்.

மோசே சில பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு மன்னனின் முன் வந்து நின்றான்.

‘மன்னா.. நான் மோசே வந்திருக்கிறேன். கடவுள் இஸ்ரயேலரை விடுதலை செய்யச் சொன்னார். அவர்களை விட்டு விடு. அவர்கள் பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டுமென்பது எங்கள் கடவுளின் கட்டளை ‘ என்றார்.

மன்னன் உரக்கச் சிரித்தான். ‘ஆஹா… எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாய் ? எல்லோரையும் விடுவிப்பதா ?’ என்று சொல்லி மீண்டும் சிரித்தான்

‘மன்னா… இது கடவுளின் கட்டளை. இதை நீ நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மோசே துணிவும் கம்பீரமும் நிறைந்தவராய் பேசினார்.

‘யார் உன் கடவுள். அவரை எனக்குத் தெரியாதே. அவர் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் ? எனக்குத் தான் வேறு கடவுள் இருக்கிறாரே ‘ மன்னன் மீண்டும் சிரித்தான்

‘கடவுளைப் பழித்துப் பேசாதே. அரசனாய் இருக்கிறோம் என்னும் ஆணவத்தில் பேசாதே. கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்படு’

‘கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு விட்டு கட்டுப்படு என்று கட்டளையிடுகிறாயா ?’ மன்னன் கோபமானான்.

‘கட்டுக் கதையா ! இதோ பார்…’  மோசே தன் கையிலிருந்த கோலை தரையில் போட்டார். அது சீறும் பாம்பாக மாறியது.

‘ஓ… இதுதான் உன் கடவுளின் செயலா ? உன் கடவுள் வெறும் மந்திரவாதியா ? இதே போல் செய்து காட்ட என்னிடம் ஏராளமான மந்திரவாதிகளும், கண்கட்டு வித்தைக்காரர்களும், சூனியக்காரிகளும் உண்டு… பார்க்கிறாயா ?’ மன்னன் ஏளனமாகக் கூறிக்கொண்டே அருகிலிருந்த அரசவை மந்திரவாதிகளைப் பார்த்தான்.

மந்திரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த மந்திரக் கோல்களைத் தரையில் போட்டார்கள். அவை பாம்புகளாக மாறின. ஆனால் மோசே யின் பாம்பு அந்த பாம்புகளையெல்லாம் விழுங்கி விட்டது.

மன்னனுக்குக் கோபம் வந்தது. ஒரு அடிமை மகன் அரசவையில் வைத்துத் தன்னை அவமானப் படுத்தி விட்டானே என்று கடுங்கோபமடைந்தான்.

‘ மோசே… ஆரோன்…. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ? ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரயேல் மக்களின் மனதை நீ கெடுக்கிறாய். உன்னுடைய செயல்களினால் பாதிக்கப் படப் போவது யார் தெரியுமா ? உன் இன மக்கள் தான்.’ மன்னன் அதட்டினான்.

‘கடவுளின் முன்னிலையில் இருக்கும் எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் எவனும் தந்து விட முடியாது’ மோசே பதில் கூறினார்.

‘ஓஹோ… கடவுள் !!! பார்க்கலாமா ? இன்று முதல் அடிமைகளுக்கு செங்கல் அறுப்பதற்காக வழங்கப் பட்டுக் கொண்டிருந்த வைக்கோல் கொடுக்கப் பட மாட்டாது. அவர்களே வைக்கோலைத் தேடிச் சேகரிக்க வேண்டும். ஆனால் , இன்றுவரை அவர்கள் அறுத்துக் கொண்டிருந்த செங்கற்களில் ஒன்று கூட குறையக் கூடாது. இது அரச கட்டளை’ என்றான் மன்னன்.

இதைக்கேட்ட மோசே வருந்தினார். இஸ்ரயேலர்களோ மோசேயின் மேல் கடும் கோபம் கொண்டனர்.

‘இதற்குத் தான் உன்னுடைய கடவுளையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தாயா ? வைக்கோல் கிடைக்கும் போதே குறிப்பிட்ட செங்கற்களை அறுத்துக் கொடுக்க நா ங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது. இப்போது நீ வந்து எங்கள் வேலையை இரட்டிப்பாக்கி விட்டாய்’

‘உன் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டே, எங்கள் மனதையும் கலைத்து விட்டாயே’

‘எங்களைக் கொல்வதற்கான வாளை எடுத்துக் கூர் தீட்டி மன்னனின் கையில் கொடுத்தது போல் ஆயிற்றே. இதுவரை கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச சலுகைகள் கூட இனிமேல் கிடைக்காதே’

இஸ்ரயேலர்கள் மோசேயை வசை மொழிகளால் தாக்கினார்கள். மோசே வருந்தவில்லை. எபிரேயர்களை மீட்டுச் செல்வது என்னும் கடவுளின் கட்டளையில் உறுதியாக இருந்தார்.

மறுநாள் மன்னன் நைல் நதிக் கரையோரம் நீராட வருகையில் மோசே அவர் முன் நின்றார்.
‘மன்னா.. மீண்டும் சொல்கிறேன். கடவுளின் கட்டளையை மீறாதே… மக்களைப் போகவிடு’ என்றார்.

‘இல்லாவிட்டால் நீ என்ன செய்வாய் ? வேறு ஏதாவது வித்தை கைவசம் இருந்தால் செய்து காட்டேன். பொழுது போகும் ‘ மன்னன்  சிரித்தான்.

மோசே தன்னிடமிருந்த கோலை எடுத்து நைல் நதியை அடித்தார். நைல் நதியில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் முழுதும் இரத்தமாக மாறியது. நதியிலிருந்து தொட்டிகளில் சேமித்து வைக்கப் பட்டிருந்த தண்ணீரும் இரத்தமாக மாறிற்று. நதி இரத்தமாக மாறியதால் அதிலிருந்த மீன்கள் எல்லாம் மூச்சு விட முடியாமல் மடியத் துவங்கின.

மன்னனுக்கு அருகில் நின்றிருந்த மந்திரவாதி ஒருவன் ஒரு குவளை நல்ல நீரை எடுத்து மந்திரம் கூறி நிலத்தில் ஊற்ற அதுவும் இரத்தமாக மாறியது.
‘மோசே… ஏதாவது புதிய வித்தை கண்டு பிடி. உன்னுடைய வித்தைகளெல்லாம் ஏற்கனவே என்னுடைய மந்திரவாதிகளுக்குத் தெரிந்தது தான் !’ மன்னன் நகைத்தான்.

ஏழு நாட்கள் எகிப்து முழுவதும் இரத்தத்தாலும், செத்த மீன்களின் நாற்றத்தாலும் நிறைந்திருக்கையில் மோசே மீண்டும் மன்னன் முன்னிலையில் வந்து நின்றார்.

‘இஸ்ரயேல் மக்களைப் போகவிடு. இல்லையேல் கடவுள் உன்னுடைய நகரை முழுதும் தவளைகளால் தாக்கப் போகிறார்’ மோசே எச்சரித்தார்.

‘ஓ… மன்னனுக்கு எதிராகத் தவளைகளா ? உன் கடவுள் தவளை வினியோகிப்பவரா… நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று மன்னன் இளக்காரமாய்க் கூறினான்.

மறுநாள் காலையில் நகர் முழுதும் தவளைகளால் நிறைந்தது. குளங்கள், ஏரிகள், கிணறுகள் எங்கும் தவளைகள் நிறைந்தன. அவை கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும் மக்களின் வீடுகள் சமையலறைகள், உணவுகள் , படுக்கையறைகள் எங்கும் நிறைந்தன. மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்தது. மன்னன் மோசேயை அழைத்தான்.

‘இந்த தவளைகள் நகரை அழிக்கின்றன. அவற்றை இல்லாமல் செய்து விடு. இல்லையேல் நீ பெரும் அழிவுக்கு உள்ளாவாய்’ மன்னன் சினந்தான்.

‘இது கடவுளின் சித்தம். நான் எதுவும் செய்ய இயலாது. நீ இஸ்ரயேலர்களைப் போக அனுமதிப்பாய் என்றால், நான் கடவுளிடம் மன்றாடி தவளைகளை ஒழிக்கிறேன்’ மோசே தெளிவாகச் சொன்னார்.

‘ சரி…  நீ தவளைகளை அழித்து விடு. நான் உன் மக்களைப் போக விடுகிறேன்’ மன்னன் சொன்னான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாட, தவளைகள் எல்லாம் செத்து மடிந்தன. அவை நகரம் முழுவதும் பெரிய மலைகள் போல குவியல் குவியலாகச் கூட்டிச் சேர்க்கப் பட்டு அழிக்கப் பட்டன. தவளைகளின் தொல்லை ஒழிந்ததைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான். தான் சொன்ன வாக்கிலிருந்து பின் வாங்கினான். அடிமைகளைப் போகவிடவில்லை.

மோசே மன்னனிடம். ‘ நீ .. கடவுளின் ஆணையை மீறிவிட்டாய். இனி நடக்கப் போவதைப் பார்..’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து புழுதி நிறைந்திருந்த தரையில் அடித்தார். உடனே நகர் முழுதும் கொசுக்களால் நிறைந்தது. அவை மக்களின் மேலும் கால்நடைகளின் மேலும் அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சத் துவங்கின. மக்கள் பெரும் அவஸ்தைப் பட்டார்கள்.

மன்னன் மந்திரவாதிகளை அழைத்தான்.
‘ம்… நீங்கள் இதேபோல கொசுக்களை உருவாக்குங்கள்’

மந்திரவாதிகள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை. ‘மன்னா இது கடவுளின் செயல் தான் எங்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை’ என்றனர் மந்திரவாதிகள்.

‘அதெப்படி இது கடவுளின் செயலாகும் ? இது கடவுளின் செயல் என்றால் ஏன் எபிரேய மக்களின் மேலும் கொசுக்கள் கடிக்கின்றன ?, எபிரேயர் வீடுகளில் ஏன் தவளைகள் இருந்தன ? இது உங்கள் கடவுளின் செயல் அல்ல…’ என்றான் மன்னன்.

‘மோசே… நீ… இந்தக் கொசுத்தொல்லையை தீர்த்தால் நீங்கள் உங்கள் கடவுளுக்குப் பலியிடும் சுதந்திரத்தைத் தருவேன். ஆனாலும் இஸ்ரயேலர்கள் எகிப்தை விட்டுச் செல்ல அனுமதி கிடைக்கப் போவதில்லை’ மன்னனின் மனம் இறுகியது.

‘இந்த நாட்டிலே பலியிடுதல் கடவுளின் விருப்பமல்ல. இங்கிருந்து மூன்று நாட்கள் நடந்து பாலை நிலத்தில் தான் நாங்கள் பலியிட வேண்டும்’ மோசே சொன்னார்.

‘அது நடக்கப் போவதில்லை. ‘ மன்னன் எதிர்த்தான்.

‘நீ முரண்டு பிடிப்பது மனிதர்களோடு அல்ல, கடவுளோடு. இனிமேல் நீ காணப் போவது மிகக் கொடுமையானதாய் இருக்கும். நாளைக்கு வண்டுகள் தேசமெங்கும் நிறையும். ஆனால் எந்த எபிரேயனையோ, அவனுடைய வீடு களையோ, கால்நடைகளையோ அவை தாக்காது. இதிலிருந்தாகிலும் நீ கடவுளின் செயலைக் கண்டு கொண்டால்… அது உனக்கு நலம்’ மோசே சொன்னர்.

மறுநாள் நகரெங்கும் வண்டுகள் அட்டகாசம் செய்தன. ஆனால் எபிரேயர்களும், அவர்களின் வீடுகள் கால்நடைகளும் வண்டுகளால் தாக்கப் படவில்லை.
இதைக் கண்ட எகிப்தியர்கள் இது கடவுளின் செயல் தான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மன்னன் மோசேயிடம்  ‘சரி… இந்த முறை நான் உங்களைப் போக விடுகிறேன். ஆனால் பாலை நிலத்தில் வெகுதூரம் போய் விடாதீர்கள். அங்கு உங்கள் கடவுளுக்குப் பலியிடும்போது எனக்காகவும் மன்றாடுங்கள்’ என வஞ்சனையாய்ப் பேசினான். கடவுள் வண்டுகளை அழித்தார். மன்னன் மீண்டும் தன் வாக்குறுதியிலிருந்து பின் வாங்கினான்.

‘இனிமேலும் நீ மக்களை போக அனுமதிக்காவிடில் இனிமேல் உன் கால்நடைகள் எல்லாம் கொடிய நோய் வந்து சாகும்’ மோசே எச்சரித்தார்.
அவ்வாறே எகிப்தியரின் கால்நடைகள் எல்லாம் மடிந்தன. அடிமைகளின் கால்நடைகளோ நன்றாக இருந்தன. அவற்றிற்கு ஒன்றும் நேரவில்லை. இதைக் கண்டும் மன்னனின் மனம் மாறவில்லை.

‘மன்னா…. நீ… கடவுளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறாய். நீ அழிவது உறுதி. கடுமையான தண்டனைகள் தான் உன்னைத் திருத்தும். எனவே உன்னுடைய இனத்தினர் மீதெல்லாம் கொப்புளங்கள் தோன்றி அவதிப்படுவீர்கள்’ என்றார் மோசே.

அவ்வாறே எகிப்தியர் அனைவருக்கும் உடலில் கொப்புளங்கள் தோன்றி பயங்கர வலியைக் கொடுத்தன. அதிலிருந்து மன்னனோ, மந்திரவாதிகளோ கூடத் தப்பவில்லை. எகிப்தியர்கள் அனைவரும் கொப்புளங்கள் வந்த உடலினால் பெரிதும் அவதியுற்றனர். மன்னனிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.
மன்னன் மீண்டும் மறுத்தான். அவனுடைய நெஞ்சம் கடினமாகி இருந்தது.

மோசே மன்னனிடம் ‘நீ… இப்போதும் கூட என்னுடைய மக்களை அனுப்ப இசையாதது உன் அழிவுக்கான நாள் நெருங்கி வருவதையே காட்டுகிறது. நாளை கல்மழை பொழியும் எகிப்து அழியும்’ என்றார்.

அவர் சொன்னபடியே மறுநாள் கல்மழை பொழியத் துவங்கியது. உலகம் இதுவரைச் சந்தித்திராத பெரிய கல்மழை அது. பயங்கரக் கல்மழையானது எகிப்தியரின் எஞ்சியிருந்த கால்நடைகளையும், வீடுகளையும், மரங்களையும் அழித்தது. கல்மழை தரையில் விழுந்தபோது அதிலிருந்து நெருப்பு கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. ஆனால் எபிரேயர்கள் எவரையும் கல்மழை தாக்கவில்லை. மழை விழுந்து நெருப்பு எழுந்திருப்பதைக் கண்டதும் மன்னன் திகிலுற்றான். மழை விழுந்து நெருப்பு அணைவதை மட்டுமே கண்டிருந்த மக்கள், மழை விழுந்து நெருப்பு எழுவதைக் கண்டதும் நடுங்கினர்.

‘மோசே.. நான் இதுவரை செய்ததெல்லாம் தவறுதான். இந்தக் கல்மழையை எப்படியாவது நிறுத்திவிடு. உன் மக்களைப் போக விடுகிறேன். நீங்கள் போய் விரும்பும் இடத்தில் உங்கள் ஆண்டவரைத் தொழுது கொள்ளுங்கள்’ என்றான் மன்னன்.
மோசே கல்மழையை நிறுத்தினார். ஆனால் மன்னனின் கல்நெஞ்சம் மாறவில்லை.

மீண்டும் மோசே மன்னனிடம்,’ எத்தனை காலம் தான் நீ இப்படி ஆண்டவனின் கட்டளைகளை மீறுவாய் ? கடவுளோடு போரிட்டு யாரேனும் வெற்றிபெற முடியுமா ? மூடனே… நாளை வெட்டுக்கிளிகள் உன் நகரை நிறைக்குமே என்ன செய்வாய் ?’ என்றார்.
மறுநாள் வெட்டுக் கிளிகளால் நகரம் நிறைந்தது. தரை காண முடியாத அளவுக்கு வெட்டுக் கிளிகள் எங்கும் நிறைந்தன. அவை பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்தன.

மன்னன் மோசேயிடம்’ வெட்டுக் கிளிகளை நகரை விட்டு அப்புறப் படுத்து. உங்கள் அனுப்புவேன் இது சத்தியம்’ என்றான்.

‘இனிமேலும் வஞ்சனை செய்யாதே … வெட்டுக் கிளிகளை ஒழிக்கிறேன். ஆனால் இப்போதும் நீ வாக்கு மாறினால் நிலமை பன் மடங்கு மோசமாகும்’ என்று கூறிய மோசே வெட்டுக் கிளிகளை ஒழித்தார். அவை கடலில் போய் மறைந்தன.

மன்னன் மோசேயை நோக்கி,’ சரி. இனிமேலும் நான் உன்னுடன் போட்டியிட விரும்பவில்லை. நீங்கள் போய் பலி செலுத்துங்கள். ஆனால் உங்கள் இன ஆண்கள் மட்டும் போய் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி வாருங்கள். பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும்’ என்றான்.

மோசேயோ,’ இல்லை… இது கடவுளுக்கான பலி. ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் எல்லோரும் போக வேண்டும். எல்லா செல்வங்களோடும் போக வேண்டும். கால்நடைகளை நாங்கள் பலியிடவேண்டும். எனவே கால்நடைகளும் மிகவும் முக்கியம்’ என்றார்.

மன்னன் வழக்கம் போலவே மறுத்தான்.

மோசே நகருக்குள் இருளை வரவழைத்தார். எகிப்தியர் வாழும் பகுதிகளை காரிருள் மூடியது. அவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. கொளுத்தி வைக்கும் தீப்பந்தங்களால் அந்த இருளை விலக்க முடியவில்லை. அருகருகே இருக்கும் இருவர் கூட தங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மூன்று நாட்களாகியும் இருள் விலகாததைக் கண்ட மன்னன் மோசேயிடம் விண்ணப்பித்தான். ‘ நீங்கள் பலி செலுத்தப் போங்கள். உங்கள் இனப் பெண்கள், குழந்தைகள் கூட வரட்டும். ஆனால் கால்நடைகள் மட்டும் எகிப்திலேயே தங்கட்டும்’ என்றான்.

மோசேவோ,’ இல்லை… பலியிடுவதற்கான பொருட்கள் எங்களுக்கு மிகவும் அவசியம்’ என்றார். மன்னனோ ‘என் நாட்டுச் செல்வங்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும் ? செல்வங்களை நீங்கள் எடுத்துச் செல்வதை நான் அனுமதிக்கப்போவதில்லை ‘ என்று கூறி மோசேயின் விருப்பத்தை நிராகரித்தான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாடினார். ‘ கடவுளே .. என்ன செய்து இந்த மக்களை மீட்பது. இந்த மன்னனின் மனதை மாற்ற முடியவில்லையே ?’ என்று மனமுருகி வேண்டினார்.

கடவுள் மோசேயிடம்.’ இனிமேல் அவன் உங்களைப் போக விடுவான். நான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனை கொடுக்கப் போகிறேன். அது என்ன தெரியுமா ? எகிப்திய இனத்தின் தலைப்பேறான பிள்ளைகளையும், கால் நடைகளையும் கொன்றுவிடுவேன். அதற்குப் பின் அவன் மனம் மாறாமல் இருக்க முடியாது’ என்றார்.

மோசே ஆண்டவரிடம்,’ ஆண்டவரே.. இந்த முறையும் நீர் எபிரேயர்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் தலையீற்றுகளை அழிக்க வேண்டாம்’ என விண்ணப்பித்தார்.

‘அவர்கள் என் மக்கள் அவர்களை நான அழிக்க மாட்டேன். நான் சொல்வதன் படி நீ செய்’ என கடவுள் மோசேயை அனுப்பினார்.

மோசே இஸ்ரயேலர்களிடம் போய்… ‘இன்று இரவு கடவுள் தலையீற்றுகளை அழிக்கப் போகிறார். அதிலிருந்துத் தப்பிக்க வேண்டுமெனில் நீங்கள் உங்கள் வீட்டுக் கதவில் ஆட்டு இரத்தத்தைப் பூசி வையுங்கள். இரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். இரத்தம் பூசப்படாத வீடுகளில் உள்ள தலையீற்றுகள் அழிக்கப் படும்’ என்றார்.

இஸ்ரயேலர்கள் அவ்வாறே செய்தனர். இரவில் கடவுளின் தூதர் நகர் முழுவதும் உலா வந்தார். அப்போது இரத்தம் பூசப்படாதிருந்த எகிப்தியர்களின் குடும்பங்களில் இருந்த தலையீற்றுகள் இறந்து போயின. எபிரேயர்கள் தப்பினர்.

மறுநாள் விடிவதற்குச் சற்று நேரம் இருக்கையில் நகரின் ஒரு ஓரத்தில் அழுகுரல் ஒன்று ஆரம்பமானது. அழுகுரலைக் கேட்டு எழுந்த எபிரேயர்கள், தங்கள் குடும்பத்தில் மூத்தவன் இறந்து போயிருப்பதைக் கண்டு அவர்களும் அழ ஆரம்பித்தனர். இப்படியே சங்கிலித் தொடர் போல அழுகை எகிப்து முழுவதும் பரவியது. சாவு இல்லாத வீடுகளே இல்லாததால், அழுகை பெருஞ் சத்தமாய் எகிப்தை நிறைத்தது. ஆனால் எபிரேயர்களின் வீடுகளில் யாரும் அழியவில்லை.

‘மன்னா…. விஷயம் அறிந்தீர்களா ? எகிப்தில் எல்லா வீடுகளிலும் மரணம் நடந்திருக்கிறது’ தலை தெறிக்க ஓடி வந்து விஷயம் சொன்னான் ஒருவன்.

‘இதெல்லாம் அந்த மோசேயின் வேலை.. அவனை ஒழிக்காமல் விடமாட்டேன்’ மன்னன் உறுமினான்.

‘மன்னா… எகிப்து அழிகிறது. அந்த அடிமை நாய்களை அனுப்பி விடுங்கள். இவர்களால் நாம் பட்ட துன்பம் போதும்’ அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

‘அப்படி அனுப்பினால் நான் பயந்து பின் வாங்கியது போல் ஆகாதா ? முடியவே முடியாது’ மன்னன் மறுத்தான்.

‘இப்போது எல்லாத் தலைச்சன் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். இனி மிச்சமிருக்கும் மக்களும் இறந்தபின் தான் அடிமைகளை அனுப்புவீர்களா ‘ அதிகாரிகள் ஆவேசப் பட்டனர்.

அப்போது தான் மன்னனுக்கு, தன்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. ஒரே மகன். தலைச்சன் பிள்ளை ! மன்னன் தன் மகனுடைய அறைக்கு ஓடினான். அதிர்ந்தான் ! அங்கே அவனுடைய ஒரே மகன் படுக்கையில் பிணமாகக் கிடந்தான்.

ஒரே இரவில் நிகழ்ந்த அந்த மாபெரும் துயரச் சம்பவம் மன்னனை மிகவும் பயப்படுத்தியது. இனிமேலும் மோசேயும் அவன் இனத்தினரும் எகிப்தில் இருந்தால் எகிப்து முழுதும் அழிந்துவிடும் என்று மன்னன் அஞ்சினான். தன் உயிரை நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான்.

உடனே உத்தரவிட்டான். நனூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்தியரின் உள்ளங்களில் தேனாய்ப் பாய்ந்தது அந்த உத்தரவு. தங்கள் உரிமைகளையெல்லாம் இழந்து  அதிக உழைப்பால் வருந்திக் கொண்டிருந்த மக்களை உற்சாகத்தில் திளைக்கவைத்தது அந்த உத்தரவு. ‘இஸ்ரயேலர்கள் உடனே எகிப்தை விட்டு வெளியேறட்டும்’ என்பதே அது.

சுமார் ஆறுஇலட்சம் அடிமைகள் அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்கள். அவர்கள் தங்கள் கால்நடைகளையும், சொத்துக்களையும் பயணத்துக்காய் ஆயத்தப் படுத்தினார்கள். பயணத்துக்கு முன் எபிரேயப் பெண்கள் எகிப்தியர்களிடமிருந்து பொன்னும் வெள்ளியும் வாங்கிக் கொண்டார்கள். எபிரேயர்கள் கேட்ட எதையும் எகிப்தியர்கள் மறுக்கவில்லை. காரணம் நாடு முழுவதும் எகிப்தியர்களின் கடவுள் மீதான பயம் நிறைந்திருந்தது.

ஒரு மிகப் பெரிய பேரணியாக அந்த விடுதலையின் பயணம் ஆரம்பமானது. அவர்கள் பாலை நிலம் வழியாக நடந்து கடவுள் கட்டளையிட்டிருந்த கானான் நாட்டிற்குப் போகத் துவங்கினார்கள். எபிரேய மக்கள் திரள் எகிப்தைக் கடந்தனர். கடவுள் அவர்களோடு இருந்தார்,.

இரவு நெருங்கியபோது திடீரென ஒரு நெருப்புத் தூண் அவர்களுக்கு முன்னால் சென்றது. எபிரேயர்கள் கடவுளில் செயலை எண்ணி வியந்தனர். பகலில் பாலை நிலத்தில் வெயில் வந்தபோது அவர்களுக்கு மேல் வானத்தில் ஒரு மிகப் பெரிய மேகம் வந்து அவர்களை வெயிலிலிருந்து பாதுகாத்தது. அவர்கள் நடந்து நடந்து செங்கடலின் கரையில் வந்தார்கள்.

இதற்கிடையில் மன்னனின் காதுகளுக்குச் செய்தி வந்தது.’ மன்னா … கடவுளுக்குப் பலியிட பாலை நிலத்துக்குப் போகிறோம் என்று போன மக்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் பாலை நிலத்தைக் கடந்து விட்டார்கள்’

மன்னன் சினந்தான். மகனை இழந்த சோகமும், அடிமைகளை இழந்த கோபமும் எல்லாம் சேர்ந்து அவனை மிகவும் ஆவேசப் பட வைத்தன. அவன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு எபிரேயர்களைத் தேடிப் புறப்பட்டான்.

தூரத்தில் செங்கடலின் கரையில் இஸ்ரயேலர்கள் நிற்பதைக் கண்ட மன்னன் வேகமாக படையைச் செலுத்தினான். எகிப்தியப் படை தொலைவில் வருவதைக் கண்ட எபிரேயர்கள் அலறினார்கள்.

‘ஐயோ…. இந்த பாலை நிலத்தில் நாம் சாகப் போவது உறுதி.’

‘பேசாமல் அடிமை வேலை செய்திருந்தால் உயிரையாவது காப்பாற்றியிருக்கலாம்’

‘எங்களைக் கொல்லத்தான் இங்கே கூட்டி வந்தீர்களா ?’
மக்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

மோசே ஆத்திரமடைந்தார்.’ மடையர்களே… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். எத்தனையோ அதிசயங்களைக் கண்டீர்களே ? இன்னும் கடவுளை நீங்கள் நம்பவில்லையா ?கடவுள் எல்லோரையும் காப்பார்’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து செங்கடலை நோக்கி நீட்டினார்.

உடனே பெரும் காற்று வீசியது. அந்த பெரும் காற்று செங்கடலை இரண்டாகப் பிரித்தது. தண்ணீர் இருபுறமும் வானளாவ நிற்க, தண்ணீருக்கு இடையே கட்டாந்தரை தோன்றியது. இஸ்ரயேலர்கள் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு மெய்மறந்தார்கள். அனைவரும் கடலுக்குள் இறங்கி ஓடினார்கள். எகிப்தியப் படைகள் நெருங்கிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு நெருப்பு வேலி எகிப்தியர்களுக்கும் எபிரேயர்களுக்கும் இடையே வந்து நின்றது. எகிப்தியர்கள் அந்த நெருப்பு வேலியைக் கடக்க வெகுநேரமாயிற்று. அதற்குள் எபிரேயர்கள் கடலுக்குள் வெகுதூரம் சென்று விட்டிருந்தனர்.

எல்லா எபிரேயர்களும் மறுகரையை நெருங்கிய நேரத்தில் எகிப்தியப் படைகள் கடலுக்குள் இறங்கி விரைந்தன. இஸ்ரயேலர்கள் மிகவேகமாக மறுகரையை அடைந்தனர். எல்லா எகிப்தியப் படைகளும் இஸ்ரயேலர்களை அழிக்கும் ஆவேசத்தில் நடுக்கடலைத் தாண்டி வண்டிகளில் வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது மோசே தன்னுடைய கையிலிருந்த கோலை மீண்டும் கடல் மீது நீட்டினார். இருபக்கமும் மதில் போல உயர்ந்து நின்றிருந்த கடல் திடீரென ஒன்றுசேர்ந்தது ! பாதை தண்ணீரால் மூழ்கியது.

எகிப்தியப் படைகள் கடலுக்குள் மூழ்கி அழிந்தன. யாருமே தப்பவில்லை. இஸ்ரயேலர்கள் விடுதலையானார்கள். செங்கடலைத் தாண்டி மகிழ்ச்சியோடு தங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடந்தார்கள். அத்துடன் எகிப்தியர் பற்றிய அச்சுறுத்தல் முடிந்து போயிற்று.

மோசே தனி ஒருவராக மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர்களுடைய பயணம் சுடும் பாலை நிலத்தைக் கடந்து கொண்டிருந்தது. அடிமைகளாய் இருந்த மக்கள் சுதந்திரமாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த மோசே மிகவும் ஆனந்தப் பட்டார். ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சில நாட்களிலேயே மக்கள் மோசேயிடம் மிகப் பெரிய விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள். ‘நாங்கள் கொண்டுவந்திருந்த உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன. எங்களுக்கு உணவு வேண்டும்’

‘இந்த பாலை நிலத்தில் உணவுக்கு எங்கே போவது ? உங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டனவா ?’ மோசே கேட்டார்.

‘ ஆம். உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன…’ மக்கள் பதில் சொன்னார்கள்.

‘எகிப்திலே எங்களுக்குப் பட்டினி நிலமை வந்ததே இல்லை. நீர் தான் எங்களை பாலை நிலத்தில் கூட்டி வந்து சாகடிக்கிறீர்.’ மக்கள் மோசேயின் மீது பழி சுமத்தினார்கள்.

‘கவலைப் படாதீர்கள். கடவுளின் அதிசயச் செயல்களை நீங்கள் துவக்கம் முதலே கண்டு வருகிறீர்கள் அல்லவா ? நாளை முதல் மீண்டும் காண்பீர்கள். உங்களுக்கு உண்பதற்கான உணவைக் கடவுள் நாளை கொடுப்பார்’ என்றார் மோசே.

‘அப்படியானால் எங்களுக்கு அப்பம் கிடைக்குமா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுளை நம்புங்கள். உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைக்கும்’ மோசே கூறினார்.

மறுநாள் காலையில் மக்கள் தங்களுடைய கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது வெளியே பனி மூடிய நிலையில் ஏதோ ஒரு பொருள் எங்கும் நிறைந்து கிடப்பதைக் கண்டார்கள். மக்கள் அதைக் கைகளில் எடுத்து தங்களுக்குள்ளேயே ‘மன்னா ?’ என கேட்டுக் கொண்டனர். மன்னா என்றால் எபிரேய மொழியில் ‘இது என்ன ?’ என்பது பொருள். மன்னா என்பதே தன் பெயராயிற்று. மக்கள் அதை எடுத்துக் கொண்டு மோசேயிடம் ஓடினார்கள்.

‘ஐயா… எங்கள் கூடாரங்களின் வெளியே இதோ இந்தப் பொருள் நிறைந்து கிடக்கிறது. இது என்ன? ‘ என்று கேட்டனர்.

அதற்கு மோசே,’ இது தான் உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் உணவு. இது மிகவும் சுவையானது. இந்த அப்பங்களை சுட்டு உண்டு பசியாறுங்கள். இதுவே கடவுள் உங்களுக்குத் தந்த உணவு.’ என்றார்.

‘அப்படியா ! அப்படியானால் இப்போதே போய் எல்லாவற்றையும் சேகரித்துக் கூடாரங்களுக்குள் வந்து கொட்டி வைக்கிறோம்’

‘வேண்டாம். கடவுள் இந்த உணவு உங்களுக்கு எப்போதும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே உங்கள் ஒரு நாள் தேவைக்குரியவற்றை மட்டும் எடுங்கள். கூடுதலாக எடுக்க வேண்டாம். வாரத்தின் ஆறாவது நாள் மட்டும் இரண்டு நாட்களுக்குரியதை சேகரியுங்கள். ஏனென்றால் ஏழாவது நாள் நமது கடவுளின் ஓய்வு நாள். அன்று நீங்கள் வேலை செய்யக் கூடாது ‘ என்றார் மோசே.

மக்கள் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் மன்னாவை சேகரித்து உண்டு மகிழ்ந்தனர். அது மிகவும் சுவையான எண்ணைப் பணியாரம் போல இருந்தது. ‘ஒருவேளை நாளை கிடைக்காமல் போனால் என்ன செய்வது ? ‘ சில சந்தேகப் புத்தி கொண்டவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘நாம் போய் இன்னும் கொஞ்சம் சேகரித்து வைப்போம். மோசேக்குத் தெரியவேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அதிகமாகச் சேகரித்து கூடாரத்துக்குள் பதுக்கி வைத்தார்கள். மறு நாள் காலையில் அவர்கள் பார்த்தபோது, அடுத்த நாளுக்காகச் அவர்கள் சேமித்து வைத்திருந்த மன்னா அழுகிப் போய் புழுக்கள் நிறைந்து கெட்ட வாசம் வீசிக்கொண்டிருந்தது.

மோசே அவர்களிடம்’ ஏன் கடவுளின் கட்டளையை மீறுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள் ? ஒரு நாள் உணவைத்தானே சேகரிக்கச் சொன்னேன் ? நீங்கள் ஏன் நம்பிக்கையில்லாமல் அதிகமாய் சேகரித்தீர்கள் ? ‘ என்று கோபித்தார்.

அவர்கள் அவரிடம்,’ அது தவறுதான். ஆனால் இதன் மூலம் ஒரு உண்மை எங்களுக்கு விளங்கியிருக்கிறது. ஒரு நாள் சேகரிப்பது மறு நாளுக்குப் பயன்படாது ! நீரோ ஏழாவது நாளுக்கான உணவை ஆறாவது நாளே சேமிக்கச் சொல்லியிருக்கிறீர். அப்போது மட்டும் இது அழுகாதா ? அப்படியானால் ஏழாவது நாள் பட்டினி தானா ? .’ என்றனர்.

‘மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் அறிவால் கேள்விகள் உருவாக்கி குழம்பிப் போகிறீர்கள். கடவுளை நம்புங்கள்’ என்றார் மோசே.

ஆறாவது நாள் மக்கள் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைச் சேகரித்தார்கள். என்ன ஆச்சரியம் ! மறுநாள் எந்த உணவும் கெட்டுப் போகவில்லை.
மக்கள் கடவுளின் அருளை எண்ணி வியந்தனர். ஆனால் அப்போதும் சில மனிதர்களுக்குள்ளிருந்த சந்தேகப் பேய் அகலவில்லை.

அவர்கள் ‘சரி…. ஏழாவது நாள் வெளியே போனால் என்ன நடக்கும் ? ஏன் மோசே ஏழாவது நாள் வெளியே போய் மன்னாவைச் சேகரிக்காதீர்கள் என்றார் ? ‘ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே சிலர் ஏழாவது நாள் மன்னாவைச் சேகரிக்கச் சென்றனர். என்ன ஆச்சரியம், நேற்றுவரை எங்கும் நிறைந்து கிடந்த மன்னா இன்று எங்குமே காணோம். வெற்றுத் தரை மட்டுமே அவர்களுக்கு முன்னால் இருந்தது !

‘உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. கடவுளின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.’ என்று மோசே மீண்டும் எச்சரித்தார்.

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. தினமும் காலையில் அவர்களுக்கான மன்னா கிடைத்துக் கொண்டே இருந்தது. ஒருநாள் கூட யாரும் பசியால் வாடவில்லை. ஆனால் வெறும் மன்னாவைத் தின்று தின்று மக்கள் சலித்து விட்டனர். இறைச்சியும் இருந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்து மோசேயிடம் வந்தனர்.

‘மோசே…. நாங்கள் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாய் தான் இருந்தோம், ஆனாலும் எங்களுக்கு விருப்பமான உணவு கிடைத்து வந்தது. இப்போது இந்த வெறும் அப்பங்களை மட்டும் நாங்கள் எத்தனை காலம் தான் தின்பது ? எங்களுக்கு இறைச்சி வேண்டும்’ என்றனர் மக்கள்.

‘நீங்கள்… அழிந்து போகும் உணவுக்காகத் தான் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள். வெறும் உணவுக்காக அடிமை வாழ்வு தான் மேல் என்று சொல்கிறீர்களே… உங்களுக்கே வெட்கமாக இல்லையா ? சரி. பொறுத்துக் கொள்கிறேன். நான் கடவுளிடம் பேசி உங்களுக்கு இறைச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்’ மோசே கூறினார்.

மோசே கடவுளிடம் பேசினார். கடவுள் சொன்னார்.’ மோசே… கவலைப்படாதே., நாளை அவர்களுக்கு இறைச்சி கிடைக்கும்’.

மறுநாள் காலையில் மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது தரையெங்கும் காடைகள் நிறைந்து கிடந்தன. மக்கள் தேவையானமட்டும் காடைகளைப் பொறுக்கி அவற்றின் இறைச்சியை உண்டு மகிழ்ந்தார்கள்.

பயணம் தொடர்ந்தது. பாலைவனப் பயணம், நாட்கள் செல்லச் செல்ல மக்களிடம் இருந்த தண்ணீரும் தீர்ந்து விட்டது. தண்ணீர் இருக்குமா என மக்கள் தேடி அலைந்தனர். எங்கும் தண்ணீர் இல்லை. கடைசியில் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டு மக்கள் ஆனந்தித்தார்கள். வேகமாக அதை நோக்கி ஓடினார்கள். அங்கே ஒரு பெரிய ஊற்று ! தாகம் கொண்ட மக்கள் எல்லாம் தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தனர் !குடித்த வேகத்திலேயே அதை வெளியே துப்பினர். அது அத்தனை கசப்பு !

மோசேயிடம் மீண்டும் வந்தது முணுமுணுப்பு…’ எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. இருக்கும் தண்ணீரை வாயில் வைக்கவே முடியவில்லை அத்தனைக் கசப்பு !’.

மோசே அருகிலிருந்து ஒரு மரக் கட்டையை எடுத்து அந்த ஊற்றில் போட்டார். உடனே ஊற்று தன்னுடைய கசப்பை எல்லாம் களைந்து நல்ல சுவையானதாக மாறியது. மக்கள் தாகம் தீர தண்ணீரைக் குடித்து விட்டு, தங்கள் தோல்பைகளிலும் நிரப்பிக் கொண்டனர்.

பயணம் கானான் நாட்டை நோக்கி தொடர்ந்து நடந்தது. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என பயணம் நீண்டது.

மக்களுக்கு மீண்டும் தண்ணீர் தட்டுப் பாடு வந்தது. அது ஒரேபு பாறை நிலப் பகுதி. அங்கே தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. மீண்டும் மோசே கடவுளிடம் வேண்டினார். கடவுள் மோசேயிடம் பேசினார்.

‘நீ போய் ஒரேபு பாறையின் முன்னால் போய் நில். உன் கையிலிருக்கும் கோலால் அந்தப் பாறையை அடி. அதிலிருந்து தண்ணீர் வரும். அதைக் குடித்து மக்கள் தாகம் தணிக்கட்டும்’

மோசே அவ்வாறே செய்தார். பாறை மீது தன்னிடமிருந்த கோலால் அடித்தவுடன் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. மக்கள் போதிய மட்டும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டனர்.

இவ்வாறு மக்களின் தேவைகளையெல்லாம் மோசே தனியொருவராக கடவுளின் துணையோடு தீர்த்து வந்தார். அதனால் எப்போதும் அவருடைய கூடாரத்தைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் வேண்டுதல்களோடு காத்துக் கிடந்தது. மோசேக்கு இளைப்பாற நேரமே கிடைக்கவில்லை. இதைக் கண்ட மோசேயின் மாமனார் மோசேயிடம்,

‘நீர் இப்படி தனியொருவனாய் மக்களைச் சமாளிக்க முடியாது. எனவே மக்களை குழுக்கள் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இறை பக்தியும், திறமையும் வாய்ந்த ஒவ்வொரு பெரியவரை தலைவராக அமர்த்தும்.’ என்றார். மோசேவிற்கும் அது சரியெனப் பட்டது. அப்படியே மக்கள் பிரிக்கப் பட்டனர். குழுக்கள் எல்லாம் சமமாக இல்லாமல், சில குழுக்களில் ஆயிரம் பேர், சில குழுக்களில் நூறுபேர் , சில குழுக்களில் ஐம்பது பேர் என பல அளவுகளில் இருந்தது. அந்தந்த குழுக்களை அந்தந்த தலைவர்கள் கவனித்துக் கொண்டார்கள் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியாத பெரிய பிரச்சனைகள் மட்டும் இப்போது மோசேயிடம் வந்தன.

அவர்களின் பயணம் சீனாய் மலையடிவாரத்தை வந்தடைந்தது.

மக்கள் மோசேயிடம் வந்து,’ கடவுள் உங்களோடு பேசுகிறார் … பேசுகிறார் என்கிறீரே… அந்தக் கடவுளை எங்களுக்குக் காட்டும். நாங்களும் கடவுளைக் காண வேண்டும் ‘ என்றனர்.

மோசே அவர்களிடம்,’ நான் கடவுளிடம் இது பற்றிப் பேசுகிறேன்’ என்றார்.

அன்றே கடவுள் மோசேயிடம், ‘நான் இன்றிலிருந்து மூன்றாவது நாள் இந்த மலையில் என்னுடைய மக்களுக்குக் காட்சி தருகிறேன். யாரும் மலையில் கால்வைக்கக் கூடாது. அப்படிக் கால் வைப்பவன் அழிக்கப் படுவான். எல்லோரும் மலையடிவாரத்தில் நின்று என்னை தரிசிக்கவேண்டும். உங்கள் கால் நடைகள் கூட இந்த மலையில் நடமாடக் கூடாது’ என்றார்.

விஷயம் கேள்விப் பட்ட மக்கள் மகிழ்ந்தனர். மூன்று நாட்களும் மிகவும் சுத்தமாகக் குளித்து, நல்ல ஆடைகளை அணிந்து எந்த விதமான இச்சைகளிலும் ஈடுபடாமல் கடவுளுக்காகக் காத்திருந்தனர்.

சரியாக மூன்றாவது நாள். வானத்தில் பேரிடி ஒன்று கேட்டது. கடவுள் நெருப்பு வடிவில் சீனாய் மலையில் வந்திறங்கியதை மக்கள் கண்டார்கள். மலை முழுதும் புகையத் துவங்கியது. மோசே கடவுளுடன் பேசினார். கடவுள் இடிமுழங்குவது போல மோசே க்குப் பதில் கொடுத்தார். மக்கள் நடுநடுங்கினர். மோசேயிடம் அவர்கள் ஓடிப் போய், ‘ஐயோ… கடவுளைக் கண்டது போதும். எங்களுக்குப் பயமாக இருக்கிறது. இனிமேல் நீர் மட்டுமே கடவுளுடன் பேசும்’ என்றனர்.

பின் கடவுள் மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். ‘உலகுக்கெல்லாம் பொதுவான என்னுடைய கட்டளைகளை நான் தருவேன்.. மேலே வா’
மோசே மலையுச்சிக்குச் சென்றார். மக்கள் அனைவரும் நடுக்கத்தில் இருந்தனர். யாரும் மலையை நெருங்கக் கூட இல்லை.

கடவுள் மோசேயிடம் தம் கைப்பட பாறையில் எழுதிய பத்துக் கட்டளைகளை இரண்டு கல்வெட்டுகளாகப் பெயர்த்துக் கொடுத்தார். அதற்காக மோசே நீண்ட நாட்கள் மலையுச்சியிலேயே கடவுளுடன் தங்க வேண்டியதாயிற்று. மோசே மலையில் ஏறி நீண்ட நாட்கள் ஆனதால், மலையடிவாரத்தில் இருந்த மக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.

‘மலைக்குச் சென்றால் உடனே திரும்புபவராயிற்றே மோசே… இப்போது ஏன் இவ்வளவு தாமதம் ? மோசேயை நெருப்பு அழித்திருக்கக் கூடும்’

‘அவர் இனிமேல் திரும்பி வருவார் என்னும் நம்பிக்கை இல்லை. உண்ணாமல் ஒரு மனிதன் இத்தனை காலம் மலைமீது உயிரோடு இருக்கக் முடியுமா என்ன ‘

‘இனிமேல் என்ன செய்வது. ? யார் நம்மை வழி நடத்துவது ?’ என்றெல்லாம் மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. மக்களின் நடவடிக்கைகளும் மாறத் துவங்கின. அவர்கள் சிற்றின்பத்திலும், விரோதம், பகை , கோபம், சண்டை என கடவுளுக்குப் பிடிக்காத அனைத்து செயல்களையும் செய்யத் துவங்கினர். தங்களிடமிருந்த தங்கநகைகளையெல்லாம் ஓரிடத்தில் போட்டு உருக்கி ஒரு கன்றுக் குட்டியின் உருவத்தைச் செய்து ‘ இதுவே இனிமேல் நம் கடவுள். இதை நாம் வணங்குவோம்’ என்றார்கள். அந்த உருவத்திற்கு பலி செலுத்தவும், பூஜை செய்யவும் ஆரம்ப்பித்தனர்.

கடவுள் நாற்பது நாட்களாய் தன்னோடு மலையுச்சியில் இருந்த மோசேயிடம்,’ நீ கீழே போ. இந்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்லையும் உன்னுடன் எடுத்துச் செல். கீழேயிருக்கின்ற மக்கள் நீ வரமாட்டாய் என நினைத்துத் தவறான பாதையில் போகிறார்கள்’ என்றார்.

மோசே மலையுச்சியிலிருந்து கிளம்பி மலையடிவாரத்தை அடையும் போதே எங்கும் கேளிக்கைச் சத்தங்கள், நடனங்கள் என கூட்டம் அமர்களப் பட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மோசேயின் கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று.

‘நானூறு ஆண்டைய அடிமைத்தனம் உங்களுடையது. அதை விட்டு வெளியேற்றிய ஆண்டவருக்கு எதிராகவே நடக்கிறீர்களே… பாவிகளே’ என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே கடவுள் கொடுத்த கட்டளைகள் இருந்த கல்லையும் ஆவேசத்தில் தூக்கி எறிந்தார். அது உடைந்து சிதறியது.

‘உங்களுக்கு வாழும் கடவுள் போதாதா ? தங்கக் கன்றுக் குட்டி என்ன தந்தது ? ‘ என்று கேட்டுக் கொண்டே அவர்களுடைய கன்றையும் பலி பீடங்களையும் தகர்த்தெறிந்தார். மோசேயைப் போலவே கடவுளின் கோபமும் அந்த மக்கள் மேல் இருந்தது. கடவுள் மோசேயை அழைத்து,
‘இனிமேல் நான் இந்த மக்களைக் கைவிடப் போகிறேன். என்னை நம்பாமல் தங்களை நம்பும் இவர்களை நான் கொன்று அழிப்பேன்’ என்றார்.

மோசே கடவுளிடம்’ கடவுளே… இதற்காகவா எனக்கு இத்தனை பணிகள் தந்து என்னை இந்த மக்களிடம் அனுப்பி வைத்தீர். இதைக் கேள்விப் பட்டால் எகிப்தியர்கள் எல்லோரும் இஸ்ரயேலர்களின் கடவுள் இஸ்ரயேலர்களைப் பாலை நிலத்துக்கு வஞ்சகமாய்க் கூட்டிப் போய் கொன்றுவிட்டார் என்று சொல்ல மாட்டார்களா ?  வேண்டாம் கடவுளே.. இந்த முறை அவர்களை மன்னியும்’ என்று மன்றாடினார்.

கடவுள் சம்மதித்தார். மோசே கீழே போய் குழுக்களின் தலைவர்கள் எல்லோரையும் அழைத்து, ‘தீயவர்கள் என்று தோன்றுவோரை எல்லாம் கொன்றுவிடுங்கள். மிஞ்சியிருப்போர் கடவுளின் கட்டளைகளைக் கேட்போராக இருக்கட்டும்’ என்று சொன்னார். அதன்படி சுமார் மூவாயிரம் பேர் கொன்று குவிக்கப் பட்டனர்.

கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளையின் இரண்டாவது பிரதி ஒன்றைக் கொடுத்தார். ஆனாலும் கடவுள் மோசேக்கு தன்னுடைய முகத்தைக் காட்ட வில்லை. நெருப்பு, ஒலி போன்றவை மூலமாக மட்டுமே அவருடன் பேசி வந்தார். மோசேக்கு கடவுளின் முகத்தைக் காண வேண்டும் என்னும் ஆவல் வளர்ந்து கொண்டே இருந்தது.

ஒருநாள் அவர் கடவுளிடம்,’ கடவுளே உம்மை நெருப்பு வடிவிலும், ஓசைவடிவிலும், மேகம் வடிவிலும் நான் சந்தித்து வருகிறேன். ஒருமுறை எனக்கு உமது முகத்தைக் காட்டுவீரா ?’ என்று வேண்டினார்.

கடவுள் மோசேயின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். மோசேயோடு தினமும் மேகத்தின் வடிவில் அவருடைய கூடாரத்துக்குள்ளேயே சென்று பேசி வந்தார். மோசேயின் இந்த வேண்டுதலையும் கடவுள் நிராகரிக்கவில்லை.

‘மோசே… நீ என்னுடைய பிரிய பக்தன். என் நண்பன். உன்னுடைய வேண்டுதல்களை நான் நிராகரிக்கமாட்டேன். ஆனால் என்னைக் கண்டவன் பிறகு உயிர்வாழ முடியாது. இது தான் உண்மை நிலை.’ என்றார்.

மோசே வருந்தினார். மோசேயின் கவலையைக் கண்ட கடவுள் அவரிடம்.’ சரி.. சரி நீ அதோ அந்த பாறையின் இடையே நின்றுகொள். என்னுடைய முகத்தை உன்னால் தரிசிக்க இயலாது. நீ உன் இன மக்களுக்காக இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தாக வேண்டும்.’ என்றார்.

அதன்படி மோசே பாறையின் இடையே நின்று கொண்டார். கடவுள் அவருக்கு எதிரே நடந்து போனார். எங்கும் வெளிச்சம் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய, கடவுள் போவதை மோசே பின்னாலிருந்து பார்த்தார். கடவுளின் முகத்தைப் பார்க்கவில்லை.

மீண்டும் மக்களை நல்வழிப்படுத்தி மோசே பயணத்தைத் துவங்கினார். எகிப்திலிருந்து பயணம் புறப்பட்டு ஆண்டுகள் இரண்டு முடிந்திருந்தன.

பயணத்தில் மீண்டும் அவர்களுக்குச் சோதனை வந்தது. தண்ணீர் கிடைக்கவில்லை.
கடவுள் மோசேயிடம். ‘உனக்கு எதிரே இருக்கும் பாறையிடம் போய் தண்ணீர் கேள் அது உனக்குத் தண்ணீர் தரும்’ என்றார்.

மோசே பாறையின் அருகில் போனார். பாறையருகில் சென்று பாறையிடம் நீர் கேட்பதற்குப் பதிலாக தன்னிடமிருந்த கோலால் பாறையை ஓங்கி அடித்தார் ! முதல் முறையாக கடவுளின் கட்டளையை மீறிச் செயல்பட்டார் மோசே. தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. ஆனால் தன்னுடைய கட்டளையைக் கடைபிடிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட மோசேயின் மீது கடவுள் கோபம் கொண்டார்.

‘நான் உன்னிடம் பாறையிடம் பேசத் தான் சொன்னேன். பாறையை அடிக்கச் சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்காமல் நீ உன்னைக் கடவுளாகப் பாவித்து பாறையை அடித்து விட்டாய். எனவே நீ கானான் நாட்டில் கால் வைக்க மாட்டாய்’ என்றார்.

மோசே அழுதார். ‘கடவுளே… தெரியாமல் நடந்த பிழை இது. என்னை மன்னியும். கானான் தேசத்தில் மக்களைக் கொண்டு சேர்க்கும் வரத்தை எனக்குத் தரவேண்டும்’ என்று கதறினார்.

கடவுள் அவரிடம்,’ நீ என்றும் என் பாசத்துக்குரியவன் தான். ஆனாலும் நீ கானான் நாட்டை தூரத்திலிருந்து தான் பார்ப்பாய். அதனுள் நுழைய மாட்டாய்’ என்றார்.

கானானை நோக்கிய பயணம் தொடர்ந்தது. மக்கள் பாவம் செய்தும், கடவுளுக்கு எதிராய் முணு முணுத்தும் நடந்ததால் விரைவில் அடைய வேண்டிய கானான் நாட்டை அடைய அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் ஆயிற்று !

மோசே கானான் நாட்டை நெருங்குகையில் ஒரு மலையின் உச்சியில் ஏறி நின்று கானான் தேசத்தைப் பார்த்தார். கானான் நாடு நல்ல வளத்தோடு இருந்தது. தான் கூட்டி வந்த மக்கள் எல்லாரும் விரைவில் கானான் நாட்டிற்குள் சென்று விடுவார்கள் என்னும் நிம்மதி மோசேயின் மனதுக்குள் நிறைந்தது. அந்த மலையிலேயே அவர் பணிந்து இறைவனை மன்றாடினார்.

கடவுள் அவரின் கரம் பிடித்து அவரை உயிரோடு வானகத்துக்கு அழைத்துச் சென்றார்.

( எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து…)

கி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை !

 

யோசேப்பு யாக்கோபின் பிரிய மகன். யாக்கோபிற்கு பல மனைவிகள் மூலம் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். யோசேப்பும், பென்யமினும் அவருடைய பிரிய மனைவி ராகேலின் பிள்ளைகள். யோசேப்பின் மீது தந்தை யாக்கோபுக்கு அளவு கடந்த பாசம். அவர் யோசேப்பை மிகவும் செல்லமாய்க் கவனித்து வந்தார். அவனு க்காக தனியாக ஒரு அழகிய அங்கியையும் தன் கைப்பட செய்து கொடுத்தார். அதனால் யோசேப்பின் சகோதரர்கள் அனைவருக்கும் அவன் மீது பயங்கர பொறாமை.

‘நாம் பத்து பேர் இருக்கும்போது நம் தந்தை அவனிடம் மட்டும் அளவு கடந்த பாசம் கொண்டிருக்கிறார் பார்த்தீர்களா ? நமக்கு அவர் என்றைக்காவது ஏதாவது செய்து தந்திருக்கிறாரா ? பார்… செல்ல மகனுக்கு அங்கியாம் … ம்ம்ம்’  என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். யோசேப்பு மீது பொறாமையை வளர்த்துக் கொண்டார்கள். ஆனால் யோசேப்புவோ சகோதரர்களிடம் கள்ளம் கபடமில்லாமல் அன்பு கொண்டிருந்தான்.

ஒருநாள் அதி காலையில் அவன் சகோதரர்களிடம் ஓடி வந்து
‘அண்ணா … நான் ஒரு கனவு கண்டேன். சொல்லவா ?’ என்றான்
‘சரி சொல்… என்ன கனவு ?’ சகோதரர்கள் கேட்டனர்.

‘நாம் எல்லோரும் வயலில் அறுவடை செய்து அறுத்த அரிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அரிக்கட்டு திடீரென எழுந்து நின்றது. உடனே உங்கள் அரிக்கட்டுகள் எல்லாம் அதை வணங்கின’ என்றான்

சகோதரர்கள் எரிச்சலடைந்தார்கள்.  ‘ஓ… உன்னை நாங்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என விரும்புகிறாயா ? நீ அதிகாரம் செலுத்த ஆசைப்படுகிறாயா ? போடா… போ’ என்று துரத்தினர். இந்த கனவைச் சொன்னபின் இன்னும் அதிகமாக அவனை வெறுத்தனர்.

இன்னும் சில நாட்கள் சென்றபின் யோசேப்பு இன்னொரு கனவு கண்டான் அதில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கின. இந்த கனவையும் அவன் சகோதரர்களிடம் சொன்னான். அவர்கள் அவன் மீது கொண்ட பொறாமையை அதிகப் படுத்தினார்கள்.

யோசேப்பு இளையவன் ஆகையால் தந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிட்டான். அவனுடைய சகோதரர்கள் பத்து பேரும் ஆடுகளை மேய்ப்பதற்காக பக்கத்து ஊரான செக்கேமிற்குச் சென்றனர். யோசேப்பு தந்தையுடன் தங்கியிருந்தான்.

நாட்கள் பலகடந்தன, மந்தைகளை ஓட்டிச் சென்ற சகோதரர்கள் திரும்பவில்லை. மகன்களைக் காணாத தந்தை வருந்தினார். அவர் யோசேப்பை அழைத்து,’ மகனே, நீ போய் உன்னுடைய சகோதரர்களும் மந்தையும் நலம்தானா என்பதை விசாரித்து வா’ என்று சொல்லி அனுப்பினார். யோசேப்பும் புறப்பட்டார்.

யோசேப்பு செக்கேமிற்குச் சென்று அந்த ஊர் முழுவதையும் சுற்றிப் பார்த்தான். எங்கும் அவனுடைய சகோதரர்களைக் காணோம். விசாரித்ததில் அவர்கள் அருகிலுள்ள தோத்தான் என்னும் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே யோசேப்பு தோத்தானை நோக்கிப் போனார்.

தூரத்தில் யோசேப்பு வருவதைக் கண்ட சகோதரர்கள் கோபம் கொண்டனர். ‘அதோ பார், நம் தந்தையின் செல்ல மகன் வருகிறான். அவனை இங்கேயே கொன்றுவிடவேண்டும். அவன் இருந்தால் தந்தை நம்மைக் கவனிக்கவே மாட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ரூபன், யோசேப்பின் சகோதரர்களில் ஒருவன், யோசேப்பின் மீது வெறுப்பு இருந்தாலும் அவனைக் கொல்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. ‘ நாம் அவனைக் கொல்ல வேண்டாம். ஒரு பெரிய குழியில் தள்ளிப் போடுவோம். அவனுடைய இரத்தத்தை சிந்தவேண்டாம். அவன் அங்கேயே கிடந்து செத்து ஒழியட்டும் ‘ என்றான். குழியில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாமல் இரவில் வந்து அவனைக் காப்பாற்றி அனுப்பி வைக்கலாம் என்பது அவனுடைய ரகசியத் திட்டம். சகோதரர்களுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அவனைக் கொன்ற பாவம் நமக்கெதற்கு ? அவனே தானாக செத்துத் தொலயட்டும் என்று கூறி அவனைக் குழியில் தள்ள முடிவெடுத்தனர்.

சகோதரர்களின் திட்டத்தை எதுவும் அறியாத யோசேப்பு சகோதரர்களிடம் ஓடோ டி வந்து.. ‘அண்ணா… எல்லோரும் நலம் தானே ? மந்தைகள் எல்லாம் நலம் தானே… உங்களைக் காணாமல் அப்பா ரொம்ப வருத்தப் பட்டார். அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று சொல்லி தன் முத்துப் பற்கள் காட்டிச் சிரித்தான்.

சகோதரர்கள் தாமதிக்கவில்லை. ‘ இங்கேயும் எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டாயா ? ‘ என்று கூறிக் கொண்டே அவன் மேல் பாய்ந்து அவனுடைய அங்கியை அவிழ்ந்து அருகிலிருந்த பாழுங்கிணற்றில் தள்ளினார்கள்.

யோசேப்பு திகைத்தான். தன்னுடைய சகோதரர்களின் இந்தத் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான். ஆனால் அது வெளியே யாருக்கும் கேட்கவேயில்லை.

அந்த வழியாக வணிகர் கூட்டம் ஒன்று எகிப்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதைக் கண்ட சகோதரர்களில் ஒருவனான யூதா,’ எனக்கு இன்னொரு யோசனை வருகிறது. இவனைக் குழியில் போட்டு விட்டுப் போவதற்குப் பதிலாக, இந்த வணிகர்களிடம் அடிமையாய் விற்று விடலாமே. அவனைக் கொன்ற பாவமும் வேண்டாம், அவனை குழியில் போட்டு விட்டுப் போகும் பாவமும் வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மூலம் நமக்குப் பணமும் கிடைக்கும். அவன் பள்ளத்திலேயே கிடப்பதால் நமக்கு லாமபில்லை… என்ன சொல்கிறீர்கள் ? ‘ என்று சகோதரர்களிடம் கேட்டான். அவர்களுக்கும் அது நல்ல முடிவாகத் தோன்றியது. எனவே அவனை வெளியே எடுத்து இருபது வெள்ளிக்காசுக்கு அவனை அடிமையாக விற்றனர். யோசேப்பு சகோதரர்களைப் பார்த்து அழுதுகொண்டே வணிகர்களோடு பயணமானான்.

சகோதரர்கள், தங்கள் மந்தையிலிருந்து ஒரு ஆட்டை அடித்துக் கொன்று அந்த இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்து எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்றனர். மிகவும் பதட்டமடைந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு
‘அப்பா… இது நம்ம யோசேப்பின் அங்கியா பாருங்கள். வழியில் கண்டெடுத்தோம். யோசேப்புக்கு நீங்கள் செய்து கொடுத்த அங்கி போல இருக்கிறதே என்று எடுத்து வந்தோம்… சீக்கிரம் பார்த்து சொல்லுங்கள் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது ‘ சகோதரர்கள் சோகத்தை முகத்தில் வரவழைத்துக் கேட்டார்கள்.

அங்கியைக் கண்ட தந்தை அதிர்ந்தார். ‘ ஐயோ.. இது நான் யோசேப்புவிற்குச் செய்து கொடுத்த அங்கியாயிற்றே… என்னுடைய அருமை மகனை ஏதோ காட்டு விலங்கு தாக்கிக் கொன்று விட்டதா ?… ஐயோ என்ன செய்வேன்… அருமை மகனே நீ இறந்து விட்டாயா’ என்று புலம்பி அழுதார். சகோதரர்கள் உள்ளுக்குள் சிரித்தனர். தந்தை தான் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்ந்தெறிந்துவிட்டு கோணி உடுத்தி சாம்பலில் அமர்ந்து ஏழு நாட்கள் ஒப்பாரி வைத்து அழுது புலம்பினார். சோகமான சம்பவங்கள் நடந்தால் அப்படி அழுவது அக்கால வழக்கம்.

யோசேப்புவை வணிகர்கள் எகிப்து கொண்டு சென்று, பார்வோன் மன்னனின் மெய்க்காப்பாளன் ஒருவனிடம் நல்ல விலைக்கு விற்றனர். கடவுள் யோசேப்போடு இருந்தார். எனவே மெய்க்காப்பாளன் யோசேப்பை அடிமைபோல நடத்தாமல் தன்னுடைய இல்லத்திலேயே தங்க வைத்தார்.

யோசேப்பு தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்புற நடந்தன. எனவே மெய்க்காப்பாளன் அவனை தன்னுடைய இல்லத்தின் அனைத்து பொறுப்புகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்தான். யோசேப்பு அனைத்தையும் திறம்பட நடத்தினான். வருடங்கள் செல்லச் செல்ல அவனுடைய தோற்றம் மிகவும் வலிமையாக, அழகாக மாறியது.

யோசேப்பின் அழகிய கட்டுடலைக் கண்ட மெய்க்காப்பாளனின் மனைவிக்குள் மோகம் ஊறியது. எப்படியாவது அவனோடு உறவு கொள்ள வேண்டும் என எண்ணினாள். யோசேப்பை அழைத்து,

‘தலைவர் எல்லாவற்றையும் கவனிக்குமாறு தானே உன்னை நியமித்தார். ஆனால் நீ சில விஷயங்களைக் கவனிப்பதேயில்லை’ என்றாள்.

‘இல்லையே அம்மா, நான் எல்லாவற்றையும் நன்றாகக் கவனிக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்’

‘உன்னிடம் ஒரே ஒரு பிழை மட்டும் தான் இருக்கிறது. நீ அவருடைய சொத்துக்களில் ஒன்றை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டாய்’ அவள் கண்சிமிட்டினாள்.

‘புரியும் படி சொல்லுங்களேன்’

‘நீ என்னைக் கவனிப்பதேயில்லையே’ அவள் குழைந்தாள்.

‘உங்களைக் கவனிக்கத் தான் தலைவர் இருக்கிறாரே’ யோசேப்பு சிரித்தான்.

‘உன்னைப் போல அழகான வாலிபன் இங்கே யாரும் இல்லை. உன்னுடைய கவனிப்பு எனக்கு வேண்டும்’ அவள் சொல்ல, யோசேப்பு திடுக்கிட்டான். அதுவரை எஜமானி தன்னுடன் விளையாட்டாய் பேசுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு இப்போது அதிச்சி..

‘அம்மா…. அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ யோசேப்பு குரலைத் தாழ்த்தினான்.

‘இதில் தப்பு ஒன்றுமில்லை யோசேப்பு. வா… என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள். என்னுடைய விருப்பமில்லாமல் என்னைப் பலாத்காரம் செய்வது தான் தவறு. இதில் தவறு ஒன்றும் இல்லை. வா… தலைவனுக்குத் தெரியாமல் சங்கமித்திருப்போம்’ என்றாள்.

யோசேப்பு மறுத்தான்.,’ ஐயோ… நீங்கள் என் எஜமானி. தலைவர் என்மீது கொண்ட நம்பிக்கையால் தான் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்தார். உங்களை அவர் என்னிடம் ஒப்படைக்கவில்லை. உங்களோடு உறவு கொள்வது நான் தலைவனுக்குச் செய்யும் துரோகம். என்னை மன்னியுங்கள்’

‘யோசேப்பு…. ஏன் பயப்படுகிறாய் ? இது யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் உறவு கொள்…’

‘இல்லை எஜமானி… யாருக்கும் தெரியாவிட்டாலும். இது கடவுளுக்குத் தெரியும் என்னை விட்டு விடுங்கள். இது தவறு.’ என்று சொல்லி விட்டு அவ்விடம் விட்டு ஓடினான்.

ஆனாலும் அவள் யோசேப்பை தொடர்ந்து வற்புறுத்தி வந்தாள். ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாதபோது, தலைவி யோசேப்பின் மேலாடையை இழுத்து அவிழ்த்தாள்,’ யோசேப்பு. இன்று நீ என்னுடன் உறவு கொண்டேயாகவேண்டும். கவலைப்படாதே.. வா… என்னுடைய அழகிய உடலை அனுபவி… என்னோடு படு…’ என்று யோசேப்பை அழைத்தாள். அவன் மீண்டும் மறுத்தான். தலைவி அதிகாரமாய் சொல்லிப் பார்த்தாள், கெஞ்சலாய் சொல்லிப் பார்த்தாள், கொஞ்சலாய்ச் சொல்லிப் பார்த்தாள். யோசேப்பு எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. தலைவி விடவில்லை. அவனை வலுக்கட்டாயமாக இழுத்தாள். அவன் தன்னுடைய மேலாடையை விட்டு விட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினான்.

தலைவி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி பொருமினாள். ஒரு அடிமை தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவில்லையே என ஆத்திரம் கொண்டால். எப்படியும் யோசேப்பை பழிவாங்க வேண்டுமென காத்திருந்தாள்.

மாலையில் கணவன் வீடு திரும்பியதும் அவனிடம்,’வேலைக்கு ஆள் எடுக்கும் போது எதையும் விசாரிப்பதில்லையா ?’ என்று பொய்க்கோபத்துடன் கேட்டாள்.

‘நீ யாரைப்பற்றிச் சொல்கிறாய் ?’

‘யோசேப்பு பற்றித் தான்’

‘அவனுக்கு என்ன ? நன்றாகத் தானே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான்’

‘ஆமாம்… ரொம்பவும் நன்றாகக் கவனிக்கிறான். சொத்துக்களை மட்டுமல்ல, உங்கள் மனைவியையும் சேர்த்து கவனிக்கிறான். இன்று அந்த அடிமை நாய் என்ன செய்தான் தெரியுமா ? என்னுடைய மேலாடையை இழுத்து என்னை பலாத்காரம் செய்யப் பார்த்தான். நான் கூச்சலிட்டதும் இந்த மேலாடையை விட்டு விட்டு ஓடி விட்டான்’ அவள் பொய்யாய் விசும்பினாள்.

தலைவன் அதிர்ந்தான். அவன் யோசேப்பை அழைத்து,’ துரோகியே… உன்னை எவ்வளவு நம்பினேன். இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாயே.. ‘ என்று கூறி அவனை அரச கைதிகளை அடைக்கும் கொடிய சிறையில் அடைத்தான். செய்யாத தவறுக்காக யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார்.

சிறையிலும் ஆண்டவர் யோசேப்போடு இருந்தார். எனவே சிறைக்காப்பாளரின் தயவு அவருக்குக் கிடைத்தது. கைதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார் அவர். யோசேப்பும் அந்த பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

ஒருநாள் மன்னனனுக்கு மதுபரிமாறுபவனும், அப்பம் தயாராக்குபவனும் ஏதோ காரணத்துக்காகத் தண்டனை பெற்று அதே சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களுக்கும் யோசேப்பு தான் கண்காணிப்பாளனாய் இருந்தான்.

சிலநாட்கள் கழிந்தபின் ஒருநாள் இரவு அவர்கள் இருவரும் ஒரே விதமான இரண்டு கனவுகளைக் கண்டனர். கனவு கண்டு கண்விழித்துக் கனவின் பொருள் புரியாமல் வருத்தமாய் அமர்ந்திருந்தனர். யோசேப்பு அவர்கள் வருத்தமாய் இருப்பதைக் கண்டார்.
‘ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள். சிறையில் ஏதேனும் உங்களை வருத்தமடையச் செய்ததா ?’ யோசேப்பு கேட்டார்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் இருவருமே ஒவ்வொரு கனவு கண்டோ ம். இரண்டுமே ஒரே போல் இருக்கின்றன ஆனால் அதன் விளக்கம் தெரியவில்லை’ என்றனர்.

‘இவ்வளவு தானா சங்கதி… கனவை என்னிடம் சொல்லுங்கள். கனவின் பலன் கூறும் திறமையைக் கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். உங்கள் கனவுகளின் பயனை நான் சொல்கிறேன்’

மதுபரிமாறுபவன் தன் கனவைச் சொன்னான்,’ மூன்று திராட்சைக் கிளைகள் நிற்கக் கண்டேன். அவை பழுத்துத் தொங்கின. நான் அவற்றைப் பிழிந்து கிண்ணத்தில் வடித்து மன்னனுக்குக் கொடுத்தேன்’ இதுவே கனவு.

‘ஆஹா… இது நல்ல கனவல்லவா. இன்னும் மூன்று நாட்களில் நீ விடுதலை செய்யப் படுவாய். மீண்டும் உனக்கு மதுபரிமாறும் வேலை கிடைக்கும். நீ மீண்டும் வேலையில் அமர்ந்ததும் மன்னனிடம் எனக்காகப் பரிந்து பேசி என்னை சிறையிலிருந்து விடுதலை செய். ஏனெனில் நான் நிரபராதி’ என்றான்.

மதுபரிமாறுபவன் மகிழ்ந்தான். அப்பம் சுடுபவன் தன் கனவைச் சொன்னான்.

‘என் தலையில் மூன்று அப்பக் கூடைகள் இருந்தன. அவற்றைப் பறவைகள் வந்து தின்றுவிட்டன’ இதன் விளக்கம் என்ன? என்றான்

‘ஐயோ… சகோதரனே.. சோகமான செய்தியைச் சொல்ல வைத்து விட்டாயே. இன்னும் மூன்று நாட்களில் நீ கழுமரத்தில் ஏற்றப்படுவாய். உன் தலையை கழுகுகள் வந்து கொத்தும். உன் நிலையை நினைத்து நான் வருந்துகிறேன்’ என்றான்.

அப்பம் சுடுவோன் மிகவும் கலக்கமுற்றவனாக இடிந்து போய் அமர்ந்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், யோசேப்பு சொன்னதன் படியே அவர்கள் இருவருக்கும் நடந்தது. ஆனால் மதுபரிமாறுபவன் யோசேப்பை மறந்தான். அவனுக்கு உதவிசெய்யவில்லை. யோசேப்பு சிறையிலேயே கிடந்தான்.

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மீண்டும் கனவு ! இப்போது கனவு கண்டது மன்னன் !! இரண்டு கனவுகள்.

மன்னனின் கனவில் நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறி வந்தன. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி வந்து முதலில் வந்த அந்த ஏழு கொழுத்த பசுக்களையும் தின்று விட்டன.

ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

இந்த இரண்டு கனவுகளும் மன்னனின் தூக்கத்தைக் கெடுத்தன. இதன் பலனை அறிய நாடெங்கும் மன்னன் மந்திரவாதிகளையும், குறி சொல்வோரையும் வரவழைத்தான். ஆனால் யாராலும் அந்த கனவுகளின் விளக்கத்தைக் கணிக்க முடியவில்லை. மன்னனின் வருத்தம் அதிகரித்தது. ஏதாவது புரிகிறதா என்று தன் அரசவையில் இருக்கும் அனைவரிடமும் கேட்டான். பயனில்லை.

அப்போது தான் மன்னனின் மது பரிமாறுவோனுக்கு யோசேப்பின் நினைவு வந்தது. அவன் மன்னனிடம் சென்று
‘அரசே… நான் ஒன்று கூறுவேன். தவறெனில் மன்னியுங்கள்.’

‘சொல்.. என்ன விஷயம் ? கனவின் விளக்கம் உனக்குத் தெரியுமா ?

‘எனக்குத் தெரியாது அரசே. ஆனால் சிறையில் யோசேப்பு என்றொருவர் இருக்கிறார். அவர் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொல்வார்’

‘என்ன ? கனவுகளுக்கு விளக்கம் சொல்பவன் ஒருவன் சிறையில் இருக்கிறானா ? நம்பும்படியாக இல்லையே ?’ மன்னன் சந்தேகக் குரலில் கேட்டான்.

‘அரசே.. உண்மையிலேயே அவன் கனவுகளுக்குச் சொல்லும் பலன்கள் மிகவும் சரியாக இருக்கும். நானும் அப்பம் தயாரிப்போனும் சிறையில் இருந்தபோது எங்கள் கனவுகளுக்குச் சரியான விளக்கம் சொன்னான். அதன்படி நான் விடுதலையானேன், அப்பம் தயாரிப்போன் கழுமரம் ஏறினான்.’

‘அப்படியா ? அப்படியானால் உடனே அவனை இங்கே அழைத்து வாருங்கள்’ என ஆணையிட்டான் மன்னன். யோசேப்பு மன்னனின் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.

‘நீ கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் வித்தகனா ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘நானல்ல… கடவுள் எனக்கு உணர்த்துவதை நான் சொல்வேன். அவ்வளவே…’ பணிவாய் பதில் சொன்னான் யோசேப்பு.

சரி இதோ நான் கண்ட கனவுகளைக் கேள்… இதற்கு விளக்கம் சொல்.

நைல் நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியேறின. அதைத் தொடர்ந்து ஏழு நலிந்த பசுக்கள் வெளியேறி கொழுத்த பசுக்களைத் தின்று விட்டன.
ஏழு செழிப்பான கதிர்கள் வயலில் விளைந்தன. அதன் பின் ஏழு கருகிய பயிர்கள் தோன்றி அந்த ஏழு செழிப்பான கதிர்களையும் விழுங்கி விட்டன.

‘இவையே கனவுகள். விளக்கம் தெரிகிறதா ?’ மன்னன் வினவினான்.

‘தெரிகிறது மன்னா. ஏழு கொழுத்த பசுக்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நலிந்த பசுக்கள் அதைத் தொடர்ந்து வரும் ஏழு வறட்சியான, பஞ்சத்தின் ஆண்டுகளைக் குறிக்கும். பயிர்களின் விளக்கமும் இதுவே.’

‘ஒரே பொருளில் ஏன் இரண்டு கனவுகள் வந்தன என்பதைப்பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா ?’

‘தெரியும் அரசே. ஒரு கனவு உண்மையை உங்களுக்கு கடவுளால் அறிவிக்கப் பட்டது. இன்னொரு கனவு அதை உறுதி செய்கிறது’

‘அப்படியானால் உன்னுடைய விளக்கத்தின்படி இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் கடுமையான பஞ்சம் வரும் என்கிறாய். அப்படித்தானே ?’

‘ஆம் அரசே. ஆனால் அந்தப் பஞ்சத்திலிருந்து நாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது’

‘என்ன வழி ?’

‘மன்னா, வரும் ஏழு ஆண்டுகள் நமக்கு வளமானதாக இருக்கும். அதன் பின்பு தான் பஞ்சத்தின் ஆண்டுகள் வரப் போகின்றன. எனவே இந்த பஞ்சத்திலிருந்து எகிப்து தப்பவேண்டுமெனில் இப்போதிருந்து ஏழு ஆண்டுகள் நாம் நகரெங்கும் தானியங்களைக் களஞ்சியங்கள் கட்டிச் சேமிக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தானியங்களைச் சேமித்தோமென்றால், அடுத்த ஏழு ஆண்டைய கொடிய பஞ்சத்திலும் எகிப்து பசியாறும்’ யோசேப்பு சொன்னார்

யோசேப்பின் விளக்கங்களும், வழிமுறைகளையும் கேட்ட மன்னன் வியந்தான். ‘ இதோ… அறிவும், திறமையும், கடவுள் அருளும் கொண்ட உன்னையே நான் அதற்குப் பொறுப்பாளியாக்குகிறேன். நீ இனி எகிப்து முழுவதற்கும் ஆளுநன் ஆவாய். நான் மட்டுமே உனக்கு மேலதிகாரி. மற்ற அனைவருக்கும் நீயே மேலதிகாரி. நீ சொன்னபடி எகிப்தில் தானியங்களை சேமிக்கும் பணியைத் துவங்கு. எதிர்காலப் பஞ்சத்திலிருந்து நாட்டைக் காப்பாற்று’ மன்னன் ஆணையிட்டான்.
யோசேப்பு மகிழ்ந்தார். அடிமையாய் விற்கப்பட்ட தான் எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆனது கடவுளின் செயல் தான் என உறுதியாய் நம்பினார்.

எகிப்து நகர் முழுவதும் ஏழு ஆண்டுகள் கணக்கின்றி தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பின் கீழ் சேமிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் முடிந்தபோது எகிப்தின் தானியக் கிடங்குகள் எல்லாம் நிரம்பி வழிந்தன.

நாட்டில் பஞ்சம் துவங்கியது.

பஞ்சம் தன் கொடிய நகங்களை நீட்டி மக்களைப் பிராண்டியபோதும் எகிப்து மட்டும் எந்தக் குறைவும் இன்றி மகிழ்ந்திருந்தது. யாருக்கும் எதுவும் குறைவில்லை. மக்களுக்குத் தானியங்கள் யோசேப்பின் கண்காணிப்பில் குறைவின்றி வழங்கப்பட்டன. மக்கள் எல்லோரும் யோசேப்பின் திறமையைக் கண்டு வியந்தனர்.

யோசேப்பின் சகோதரர்களையும் பஞ்சம் பிடித்துக் கொண்டது !

யாக்கோபு தம் பத்து மகன்களையும் அழைத்து,’ எங்கும் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் எகிப்தில் மட்டும் பஞ்சம் இல்லையென்று கேள்விப்பட்டேன். நம்மிடம் உண்பதற்குத் தானியங்கள் ஏதும் இல்லை. என்வே நீங்கள்  எகிப்திற்குப் போய் நமக்கு உணவு வாங்கி வாருங்கள்’ என்று அவர்களை எகிப்திற்கு அனுப்பினார். தங்கள் சகோதரன் தான் எகிப்து தேசத்தின் ஆளுனர் என்பதை அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை.

இளையவன் பென்யமினை மட்டும் அவர் அவர்களோடு அனுப்பவில்லை. யோசேப்பை இழந்த துயரத்திலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இந்த இளையவனையும் இழந்து விடக் கூடாதே என்னும் கவலை அவரிடம் இருந்தது.

அவர்கள் அனைவரும் எகித்து நாட்டுக்குச் சென்று யோசேப்பின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். சகோதரர்களைப் பார்த்த யோசேப்பு திடுக்கிட்டார். சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அவருடைய முகத்தை உற்று நோக்கவில்லை. ஆளுநரின் முகத்தை யாரும் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது என்பது அங்கே எழுதப்படாத விதி.

சகோதரர்கள் தான் வந்திருக்கிறார் என்று அறிந்தும் யோசேப்பு அறியாதவர் போல் நடித்தார். அவர்களிடம் கடுமையாய் பேசினார்.
‘நீங்கள் யார். ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் உளவாளிகள் தானே ? எகிப்து நாட்டை வேவு பார்க்கத் தானே நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்று கர்ஜித்தார்.

அவர்களோ,’ தயவு செய்து மன்னியுங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. பஞ்சத்தால் நாங்களும் எங்கள் தந்தையும் மிகவும் அவதியுற்றோம் அதனால் தான் நாங்கள் உமது பாதத்தில் வந்து மண்டியிடுகிறோம்’ என்றனர்.

யோசேப்போ’ உங்களை எப்படி நம்புவது ? உங்களைப் பார்த்தால் உளவாளிகள் போலதான் தெரிகிறது’ என்றார்.

‘தயவு செய்து எங்களை நம்புங்கள். நாங்கள் உளவாளிகள் அல்ல. கருணை காட்டுங்கள். நாங்கள் பன்னிரண்டு பேர் உண்டு. ஒருவன் இறந்து விட்டான். இன்னொரு இளையவனை எங்கள் தந்தை எங்களோடு அனுப்பவில்லை. அதனால் தான் நாங்கள் பத்து பேரும் உம்மிடம் வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் மக்கள்’ என்றனர்.

‘ என்னால் நம்பமுடியவில்லை. உங்களைப் பார்த்தால் எகிப்து நாட்டில் பாதுகாப்பு இல்லாத இடங்களைப் பார்வையிட வந்தவர்கள் போலத் தான் தெரிகிறது. யாரங்கே… இதோ இவர்களைப் பிடித்து மூன்று நாள் சிறையில் அடையுங்கள்’ யோசேப்பு ஆணையிட்டார். அவர்களுக்குச் சிறையில் உணவுக்கு எந்தக் குறையும் வராமல் ரகசியமாய் கவனித்துக் கொண்டார்.

மூன்று நாட்களுக்குப் பின் யோசேப்பு அவர்களிடம் வந்து. ‘ நீங்கள் சொன்னவற்றையெல்லாம் யோசித்துப் பார்தேன். ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாய் கூட இருக்கலாம். எதற்கும் நீங்கள் போய் உங்கள் இளைய சகோதரனை அழைத்து வாருங்கள். அவனை நீங்கள் அழைத்து வந்தால் நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று நான் அறிந்து கொள்வேன்.’

‘சரி நாங்கள் சென்று அவனை அழைத்து வருகிறோம்.’

‘ஆனால், உங்களை எப்படி நம்புவது ? தம்பியை அழைத்து வருகிறேன் என்று சொல்லி நீங்கள் தப்பிப் போக நினைக்கலாம் இல்லையா ? அதனால் உங்களில் ஒருவன் இங்கே இருக்கட்டும் மற்றவர்கள் போய் இளையவனை அழைத்து வாருங்கள்’ யோசேப்பு சொன்னார்.

அவர்களுடைய சகோதரர்களில் ஒருவரான சிமியோன் மட்டும் சிறையில் இருக்க, மற்றவர்கள் புறப்படத் தயாரானார்கள்.

யோசேப்பு பணியாளனை அழைத்து,’ இவர்களுடைய அனைத்து தானிய மூட்டைகளிலும் தானியங்களை நிறைத்து அனுப்பு’ என்று ஆணையிட்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள். சகோதரர்கள் தங்கள் மூட்டைகளோடு பயணமானார்கள்.

வழியில் ஒரு சத்திரத்தில் இளைப்பாறினார்கள். அவர்களுடைய கழுதைகளில் ஒன்று மிகவும் களைத்துப் போய் இருந்தது.

‘சரி… ஒரு மூட்டையைத் திறந்து கொஞ்சம் தானியம் எடுத்து கழுதைக்குக் கொடுப்போம்’ சொல்லிக் கொண்டே அவர்கள் தானிய மூட்டையைத் திறந்தார்கள். அதிர்ந்தார்கள். அவர்களுடைய தானிய மூட்டையில் தானியத்தோடு சேர்ந்து தானியத்துக்காய் அவர்கள் கொடுத்த பண முடிப்பும் இருந்தது.

‘நாம் தானியத்துக்காகக் கொடுத்த பணம் எப்படி இங்கே வந்தது ?’

‘ஒரு வேளை தவறுதலாக வைத்துக் கட்டியிருப்பார்களோ’ அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டே வீட்டை வந்தடைந்தார்கள்.

நேராக தந்தையிடம் சென்று தங்களுக்கு நடந்தவற்றை அனைத்தையும் கூறினர். பென்யமினை கூட்டிக் கொண்டு சென்றால் தான் சிமியோன் விடுவிக்கப் படுவான் என்றும் சொன்னார்கள்.

தந்தை புலம்பினார். ‘முதலில் ஒரு மகனை இழந்தேன். இப்போது இன்னும் ஒருமகனை இப்போது இழந்து விட்டேனே. அவன் சிறையில் என்ன பாடு படுகிறானோ ? அவனுடைய உயிருக்கு உத்தரவாதம் கூட இல்லை.  நீங்கள் ஏன் இன்னும் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னீர்கள் ? அதைச் சொல்லாமல் இருந்திருக்கக் கூடாதா ? இப்போது நீங்கள் பென்யமினையும் கொல்லப் பார்க்கிறீர்களா ?’  என்று கதறினார்.

‘இல்லையப்பா… அவர் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தைப் பற்றியும் துருவித் துருவி விசாரித்தார்… உங்களைப் பற்றி நிறைய கேட்டார். நீங்கள் உயிரோடு நலமாக இருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டார். அவரிடம் பொய்சொல்லித் தப்புவிக்க முடியவில்லை .. மன்னியுங்கள்’ சகோதரர் தலை கவிழ்ந்தனர்.

‘ஆளுநன் விசாரிக்கத் தான் செய்வான். அதற்காக எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவதா ?’ தந்தை நிறுத்தாமல் தவித்தார்.

‘கவலைப்படாதீர்கள் அப்பா. நாங்கள் ஏதாவது வழி செய்து அவனைக் கூட்டி வரலாம். நீங்கள் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்திருக்கும் தானியத்திலிருந்து கொஞ்சம் எடுத்து சமைக்கலாம்’

சொல்லிக் கொண்டே அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தானிய மூட்டைகளைப் பிரித்தார்கள்.  தங்கள் தானிய மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது எல்லா மூட்டைகளிலும் பணமுடிப்பு இருந்தது. அதைக் கண்டு அவர்கள் இன்னும் அதிகமாக அச்சமடைந்தனர்.

யாக்கோபு அழத் துவங்கினார். ‘என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்களே ? முதலில் யோசேப்பு இறந்து போனான், இப்போது சிமியோனையும் விட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். இனிமேல் நான் பென்யமினையும் இழக்க வேண்டுமா ? முடியவே முடியாது. ராகேலுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் யோசேப்பை இழந்து விட்டேன். இனி இருப்பது பென்யமின் மட்டுமே அவனையும் இழக்க நான் தயாராக இல்லை’. என்று பிடிவாதமாய் மறுத்து விட்டார்.

ஆனால் அவருடைய பிடிவாதம் நீண்ட நாட்கள் நிலை நிற்கவில்லை. கொண்டு வந்த தானியங்கள் தீரத் துவங்கின. மேலும் எகிப்திற்குச் சென்று ஏதேனும் வாங்கி வந்தால் தான் உண்ண முடியும் என்னும் நிலமை. அங்கே செல்ல வேண்டுமென்றால் பென்யமினைக் கொண்டு போயாகவேண்டும் ? என்ன செய்வதென்று தெரியாமல் சகோதரர்களும், தந்தையும் திகிலுற்றார்கள்.

அப்பா,’ நாங்கள் பென்யமினைக் கூட்டிக் கொண்டு போகாவிடில் நாங்கள் ஆளுநரிடம் சொன்னதெல்லாம் பொய்யென்று ஆகிவிடும். பிறகு சிமியோனை மீட்கவும் முடியாது, நாங்களும் சிறையிலடைக்கப் படுவோம்… தயவு செய்து பென்யமினை அனுப்புங்கள். எப்படியாவது அவருடைய காலில் விழுந்து சிமியோனையும் விடுவிக்கச் செய்து, தானியங்களையும் வாங்கி வருகிறோம்’ சகோதரர்கள் தந்தையிடம் விண்ணப்பம் வைத்தனர். ஆனாலும் பென்யமினுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்னும் பயம் அவர்களுக்குளும் இருந்தது.

யாக்கோபுக்கு பென்யமினை அனுப்புவதில் சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அவனை அனுப்பாமல் ஏதும் நடக்கப் போவதில்லை என்பது அவருக்கும் புரிந்தது. என்ன செய்வது என யோசித்தார்.

‘சரி… பென்யமினை அழைத்துக் கொண்டு போங்கள். ஆனால் அவனுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவன் திரும்பாவிடில் நீங்கள் என்னை உயிருடன் பார்க்க முடியாது. இன்னொன்றும் சொல்கிறேன்… போனதடவை உங்கள் பணம் உங்கள் மூட்டையிலேயே இருந்தது இல்லையா ? அது ஒரு வேளை தவறுதலாகவோ, அல்லது உங்களைச் சோதிப்பதற்காகவோ வைத்ததாக இருக்கலாம். அதனால் இந்தமுறை அதையும் சேர்ந்த்து இரண்டு மடங்கு பணத்தைக் கொடுங்கள். கூடவே நிறைய அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் கொண்டு போங்கள். எல்லோரும் பத்திரமாய் போய்வாருங்கள். நீங்கள் பத்திரமாய் திரும்பி வரும் வரை என்னுடைய உயிர் என்னிடம் இருக்காது.. கவனம்….’ யாக்கோபு கண்ணீரோடு கையசைத்தார்.

அவர்கள் பதட்ட மனத்தோடு எகிப்தை வந்தடைந்து யோசேப்பின் முன் வந்து நின்றார்கள். அவர்களைக் கண்ட யோசேப்பு மகிழ்ந்தான். அவர் தன்னுடைய பணியாளனை நோக்கி,’ இவர்களை என் வீட்டுக்குக் கூட்டிப் போ. இவர்களுக்கு நல்ல கொழுத்த கன்றை அடித்து விருந்து ஏற்பாடு செய். என்னோடு இவர்களும் இன்று மதிய உணவு உண்ணட்டும்’ என்று ஆணையிட்டார்.

சகோதரர்களுக்கோ பயம் மேலும் அதிகரித்தது. அவ்வளவு தான் நாம் தொலைந்தோம். ஏதோ ஒரு சதித் திட்டத்தோடு தான் இந்த விருந்து நடக்கிறது. இனிமேல் நாம் தப்பவே முடியாது. நம் உடமைகளைப் பறித்து இவர் நம்மை சிறையில் தான் அடைக்கப் போகிறார் என்று நடு நடுங்கினார்கள். நடுங்கிக் கொண்டே அந்த பணியாளரிடம்,’ ஐயா… கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நாங்கள் தானியம் வாங்க வந்தபோது நீங்கள் தவறுதலாக எங்கள் பணத்தையும் அதிலேயே போட்டு கட்டி விட்டீர்கள் போலிருக்கிறது. எனவே அந்தப் பணத்தையும் சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம்’ என்றனர்.

பணியாளன் சிரித்தான்,’ அப்படியெல்லாம் இருக்காதே. உங்கள் பணம் என்னிடம் வந்து விட்டது. நீங்கள் உளறாமல் வாருங்கள்’ என்றார். சகோதரர்கள் ஏதும் புரியாமல் விழித்தார்கள்.

எல்லோரும் யோசேப்பின் வீட்டில் வந்து பயத்தோடு காத்திருந்தனர். கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தனர். யோசேப்பு வந்ததும் அவரிடம் காணிக்கைகளைக் கொடுத்து அவருடைய மனதைக் குளிர வைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

யோசேப்பு மிடுக்குடன், ஆளுநர் உடையில் வந்தார்.

அவர்கள் அவரை ஏறிட்டுப் பார்க்காமல் காணிக்கைகளை அவர்முன் வைத்துவிட்டு தரையில் விழுந்து வணங்கினார்கள்.

‘ எழுந்திருங்கள்… உங்கள் தந்தை நலம் தானே ?’

‘ எங்கள் தந்தை நலமாய் இருக்கிறார்.’

‘ எங்கே … உங்கள் இளைய தம்பி ? பென்யமின் ?’

‘இதோ….’ அவர்கள் பென்யமினை சுட்டிக் காட்டினார்கள்.

தம்பியைக் கண்டதும் யோசேப்புவின் உள்ளம் பாசத்தால் உருகியது. இமைகளை உடைத்துக் கொண்டு கண்ணீர் வெளியேறியது. உடனே உள் அறைக்குச் சென்று சிறிது நேரம் அழுது விட்டு மீண்டும் ஆளுநர் மிடுக்கில் அவர்களிடம் வந்தார்.

‘சரி…. வாருங்கள் உண்போம்…’ என்று சொல்லிக் கொண்டே யோசேப்பு அவர்களை மூத்தவன் துவங்கி பென்யமின் வரை வயது அடிப்படையில் வரிசையாக அமர்த்தினார். அதைக் கண்ட சகோதரர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டனர்.

எல்லோரும் திருப்தியாக உணவு உண்டு மதுவும் அருந்தினார்கள்.

இப்போதும் யோசேப்பு தன்னை யாரென்று சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம் என்று முடிவெடுத்து, பணியாளனை தனியே அழைத்தார்.

‘எல்லாருடைய மூட்டையிலும் தானியத்தையும், அவர்கள் தந்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு. பென்யமினுடைய பையில் மட்டும் என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் வைத்துக் கட்டு. அவர்கள் போகட்டும். கொஞ்ச தூரம் சென்றபின் நீ அவர்களைத் துரத்திப் பிடித்து இங்கே கூட்டி வா’ என்றார்.

பணியாளன் ஏதும் புரியாமல் விழித்தான் ஆனாலும் யோசேப்பு சொல்வதைச் செய்வது தானே அவனுடைய வேலை ! அதைச் செய்தான்.

அவர்கள் தானிய மூட்டைகளோடு சென்று புறப்பட்டார்கள். சற்று நேரப் பயணத்துக்குப் பின் அவர்களைத் தொடர்ந்து சென்ற பணியாளன் குரல் கொடுத்தான்.

‘நில்லுங்கள்’

பணியாளனின் குரல் தங்களுக்குப் பின்னால் ஒலிப்பதைக் கேட்டதும் வழியில் வந்து கொண்டிருந்த சகோதரர்கள் நின்றார்கள்.

‘சொல்லுங்கள்… ஐயா…’

‘என்ன இப்படி செய்து விட்டீர்கள் ? உங்களை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்ட எங்கள் தலைவரிடமே நீங்கள் உங்கள் வேலையைக் காட்டி விட்டீர்களே ?’

‘ஐயா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? புரியவில்லையே ?’

‘புரியவில்லையா ? எங்கள் தலைவனின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடி வந்து விட்டீர்களே…’

‘நாங்களா ? தலைவரின் வெள்ளிக் கிண்ணத்தைத் திருடினோமா ? இல்லவே இல்லை… இப்படியெல்லாம் வீண் பழி சுமத்தாதீர்கள். நாங்கள் அப்படி பட்டவர்கள் அல்ல’

‘பொய் எல்லாம் வேண்டாம். எங்கள் தலைவர் குறி பார்ப்பதில் கெட்டிக் காரர். வெள்ளிக் கிண்ணம் காணவில்லை என்றதும் குறிபார்த்தார். அது உங்களிடம் தான் இருக்கிறதாம்.. உங்களை நான் சோதனையிட்டாக வேண்டும்’

‘தாராளமாக எங்களைச் சோதனையிடுங்கள். எங்களில் யாரிடமாவது அந்த வெள்ளிக் கிண்ணம் இருந்தால் நீங்கள் அவனைக் கொன்று விடலாம்’ சகோதரர்கள் சொன்னார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அது பென்யமினின் மூட்டைக்குள் இருக்கிறது என்னும் ரகசியம்.

மூட்டைகள் ஒவ்வொன்றாய் அவிழ்க்கப் பட்டன. பென்யமினின் மூட்டை அவிழ்க்கப் பட்டபோது பளிச்சிட்டது வெள்ளிக் கிண்ணம்.

சகோதரர்கள் அதிர்ந்தார்கள். எல்லோரும் யோசேப்பின் முன்னிலையில் இழுத்து வரப்பட்டார்கள்.

‘திருடர்களே… உங்களுக்கு விருந்து தந்து உபசரித்தேன்.. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா ‘ யாக்கோபு போலியாய் கர்ஜித்தார்.

‘ஐயா… எப்படிச் சொல்வது ? அது எப்படி வந்ததென்றே எங்களுக்குத் தெரியாது… என்ன சொல்லி உங்களை நம்பவைப்பேன். நாங்கள் அப்படிப் பட்டவர்கள் அல்ல. நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்’ சகோதரர்கள் அழுதார்கள்.

‘சரி எல்லோரும் போங்கள். கிண்ணத்தைத் திருடிய பென்யமின் மட்டும் இங்கே நிற்கட்டும்’ யோசேப்பு சொன்னார்.

‘ஐயா… தயவு காட்டுங்கள். பென்யமின் இல்லையேல் எங்கள் தந்தை இறந்தே விடுவார். இவனைப் பத்திரமாகத் திருப்பி ஒப்படைப்போம் என்று நாங்கள் எங்கள் தந்தைக்கு வாக்களித்திருக்கிறோம். கருணை காட்டுங்கள். ஏற்கனவே அவர் தன்னுடைய ஒரு மகனை இழந்து அழுது கொண்டே இருக்கிறார்’ என்றார்கள்.

யோசேப்புவால் இதற்கு மேல் தன்னை மறைக்க முடியவில்லை. பணியாட்களை வெளியே அனுப்பிவிட்டு சகோதரகள் முன்னிலையில் சத்தமிட்டு அழுதார். சகோதரர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.

பின்பு தன்னுடைய தலைப்பாகையை எடுத்து விட்டு, சகோதரர்களே… ‘என்னை நன்றாக உற்றுப் பாருங்கள்… நான்தான் யோசேப்பு ! உங்கள் சகோதரன்’ என்றார்.

சகோதரர்கள் ஆனந்தமாய் அதிர்ந்தார்கள். அவரை முதன் முதலாய் உற்றுப் பார்த்தார்கள். அவர்களிடம் மகிழ்ச்சியும், அச்சமும் பீறிட்டது,

‘யோசேப்பு.  எங்களை மன்னித்து விடு. நாங்கள் உனக்கு மிகப் பெரிய கொடுமை செய்தோம். நீ இப்படி பெரிய ஆள் ஆனதைக் காணும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்களை மன்னித்து விடுவாயா ? ‘ சகோதரர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர்.

யோசேப்பு சிரித்தார். ‘ கவலைப் படாதீர்கள். நீங்கள் எந்த தப்பும் செய்யவில்லை… இது எல்லாம் கடவுளின் சித்தம். அவர் எல்லோருக்கும் ஒவ்வொரு இடத்தைத் தயாராக்கி வைத்திருக்கிறார். நீங்களெல்லாம் அதைச் செயல்படுத்த அவரால் தெரிந்து கொள்ளப் பட்டீர்கள். அவ்வளவே’ என்றார்.

அனைவருக்கும் செல்வமும், ஏராளம் வண்டிகளில் தானியங்களும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சகோதரர்கள் நாடு திரும்பி, நடந்ததையெல்லாம் தந்தையிடம் சொன்னார்கள். தந்தை ஆனந்தம் மேலிட உற்சாகமாய் சத்தமிட்டார். அவரிடம் சிறிது காலமாய் காணாமல் போயிருந்த உற்சாகம் திரும்ப வந்தது. யோசேப்பு தந்தையையும் சகோதரர்களையும் எகிப்து நாட்டிற்கு வரவழைத்தார். இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யோசேப்பின் தந்தை யாக்கோபு எகிப்திற்கு வந்தார். அங்கே இஸ்ரயேலில் குலம் பலுகிப் பெருகியது. அவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.
0

கி.மு : அழகு தேவதை தீனா

தீனா ! கொள்ளை அழகு என்பார்களே அதற்கு உதாரணம் வேண்டுமென்றால் தீனாவைக் கூறலாம். அவ்வளவு அழகும் அற்புதக் கட்டுடலும் கொண்டவள். அவளும் அவளுடைய தந்தை யாக்கோபும், அவளுடைய சகோதரர்கள் எல்லோரும் கானான் நாட்டிலுள்ள சாலேம் என்னும் நகரில் குடியிருந்தார்கள். அந்த நாட்டை செக்கேம் என்னும் மன்னன் ஆண்டுவந்தான்.

தீனா ஒருநாள் தன்னுடைய தோழிகளைப் பார்க்க நகருக்குள் வந்தாள். சாலைகளில் அவள் நடந்து திரிந்தபோது அந்த ஊரிலுள்ள ஆண்களின் பார்வை மொத்தமும் அவள் பின்னால் அலைந்து திரிந்தது. அவளுடைய அழகைப் பற்றிய பேச்சு மன்னன் செக்கேமின் காதுகளுக்கும் எட்டியது.

தீனாவின் மேல் அவனுக்குள் மோகம் குடியேறியது. அவன் மன்னனல்லவா!. வலுக்கட்டாயமாக தீனாவைக் கடத்திக் கொண்டு போய் அவளை பலாத்காரம் செய்து விட்டான். அத்துடன் அவனுடைய ஆசை தீர்ந்து போய்விடவில்லை. தீனாவின் அழகு அவனைக் கட்டிப் போட்டு விட்டது. அவனுடைய சிந்தனைகள் எல்லாம் அவளைச் சுற்றியே கிடந்தன.

இப்படி ஒரு அழகிய பெண்ணா ? இவளை நான் கண்டிப்பாக திருமணம் செய்தே ஆகவேண்டும். என்று மனசு அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தது. தீனாவின் குடும்பமோ மிகப் பெரியது. செல்வச் செழிப்பும், சகோதரர்கள், வேலையாட்கள், கால்நடைகள் என மிகவும் பெரியது. அவர்கள் அந்த ஊருக்கு சபீபத்தில் தான் வந்து குடியேறியிருந்தார்கள்.

மன்னன் தன்னுடைய தந்தையிடம் சென்றான். ‘ நீங்கள் என்ன செய்வீர்களோ , என்ன சொல்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் தீனா எனக்கு மனைவியாக வேண்டும்’ என்றான்.

இதற்கிடையில் தன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று தெரிந்ததும் தீனாவின் சகோதரர்கள் அனைவரும் கொதித்தெழுந்தனர். தங்கையை அவமானப் படுத்தியவனையும் அவனுடைய இனத்தினரையும் கொன்று குவிக்க வேண்டும் என உள்ளுக்குள் உறுதி கொண்டனர். அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே மன்னனின் தந்தை அங்கே வந்தான்.
‘ வாருங்கள் அமருங்கள். என்ன விஷயம் ?’ சகோதரர்கள் விரோதத்தை மனசுக்குள் மறைத்து வைத்துக் கேட்டார்கள்.
‘ நான் உங்கள் மன்னனின் தந்தை. மன்னனுக்கு உங்கள் சகோதரி தீனா மீது கொள்ளை ஆசை. அவளையும் மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார்.  அவளை நீங்கள் அவருக்கு மணமுடித்து வையுங்கள்’

‘மன்னருக்கு எங்கள் சகோதரியை மணமுடித்து வைக்கக் கசக்குமா என்ன ? ஆனாலும்….’

‘என்ன ஆனாலும் ? ஏதாவது சொல்லவேண்டுமென்றால் மறைக்காமல் சொல்லுங்கள்
‘ நாங்கள் விருத்தசேதனம் செய்யும் இனத்தினர். நீங்களோ விருத்த சேதனம் செய்யாதவர்கள். விருத்த சேதனம் செய்து கொள்ளாத இனத்தினருக்கு எங்கள் த??கையை மணமுடித்து வைப்பது என்பது நடக்காதே….’ சகோதரர்கள் இழுத்தனர்.

‘ மன்னன் தீனாவின் மேல் பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அவருக்கு தீனாவைக் கொடுத்து விடுங்கள்’ மன்னனின் தந்தை மீண்டும் கேட்டார்.

‘அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நீங்களும் உங்கள் இனத்தவர் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்ளுங்கள். அப்படிச் செய்து கொண்டால் நாம் ஒன்றுக்குள் ஒன்றாகிவிடுவோம், நமக்குள் திருமணங்கள் நடத்தலாம், நாங்களும் இங்கே வியாபாரம் செய்வோம், நாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி வாழலாம்’  தீனாவின் சகோதரர்கள் கபடமாகப் பேசினார்கள்.

மன்னனின் தந்தை அதற்கு ஒப்புக் கொண்டார். தீனாவை எப்படியும் அடையவேண்டும் என்னும் வெறியில் இருந்த மன்னன் எதையும் யோசிக்கவில்லை. ஊரிலுள்ள அனைவரும் உடனே விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆணையிட்டான். அதன்படி ஒட்டுமொத்த ஆண்களும் அன்றே விருத்தசேதனம் செய்து கொண்டார்கள்.

விருத்த சேதனம் செய்துகொண்ட மூன்றாவது நாள், ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் வலியினால் அவதிப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்தனர். இந்த சந்தர்ப்பத்துக்காகத் தான் தீனாவின் சகோதரர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் ஊருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டிக் கொன்றனர். ஊரையும் கொள்ளையடித்தனர். நாடு யாக்கோபின் குடும்பத்தினரால் முற்றிலும் நிர்மூலமாக்கப் பட்டது. படைவீரர்களும் விருத்த சேதனம் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்களாலும் திறமையாகப் போரிட முடியவில்லை. தீனாவின் சகோதரர்கள் அரண்மனையை முற்றுகையிட்டார்கள்.

மன்னன் வெட்டி வீழ்த்தப்பட்டான்.

தங்கள் தங்கையைப் பலாத்காரம் செய்த மன்னனையும், அவனுடைய அரண்மனைவாசிகள் அனைவரையும் தீனாவின் சகோதரர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்