படிகளில் காத்திருக்கும் கதைகள்.

கிராமத்து வீட்டின்
வாசல்படிகளில்
அமைதியாய் அமர்ந்திருக்கின்றன
கதைகள்.

படிகளில் அமர்ந்து
பேன் பார்க்கையில்
பாட்டி சொன்னவையாய் இருக்கலாம்.

சிறுகல் பொறுக்கி
பாறை விளையாடுகையில்
சகோதரி சொன்ன
கதைகளாகவும் இருக்கலாம்.

கரிக்கட்டையால் கோடு கிழித்து
படிகளில்
புரண்டு விளையாடுகையில்
தம்பி சொன்னதும் இருக்கலாம்.

குளித்து விட்டுக்
குதித்தோடுகையில்
வழுக்கி விழுந்து உடைந்துபோன
என்
முன் பல்லின் கதையும் அதிலே ஒன்று ! 

யாரேனும் வந்தமர்ந்தால்
சொல்லி விடும் துடிப்புடன்
எதிர்பார்ப்புகளின் ஏக்கத்தில்
காத்திருக்கின்றன அவை !

நகரத்தில் நடப்பட்டு
ஆண்டுக்கோ ஆவணிக்கோ
கிராமம் திரும்பும் பிள்ளைகளுக்கு
படிகளில் அமர்வது
கௌரவக் குறைச்சலாகி விட்டது.

அவர்கள் உதறிப் போட்ட
செருப்புகளுக்கு அடியில்
நசுங்கியே கிடக்கின்றன
நேசம் சுமந்த
கதைகளின் தொகுப்புகள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்.

ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.

ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.

வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும்  பங்கெடுப்பதுண்டு.

‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.

பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.

பின்,
அந்த மேய் மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன்
நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.

அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.

நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.

கடந்து விட்டது
கால்நூற்றாண்டு

இப்போது பார்த்தால்,
‘மணி என்னாச்சு’ என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.

கவிதை : மருதாணிக் கனவுகள்

old

அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,

பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,

ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,

அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை

விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,

கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,

படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.

எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.

புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.

தமிழிஷில் வாக்களிக்க…

வாங்க, எங்க ஊரைச் சுத்திக் காட்டறேன்.

(வீட்டின் பின் பகுதி)

வீட்டைச் சுற்றி மரங்கள் என்று சொல்வதை விட மரங்களுக்கு நடுவே ஒரு வீடு என்று சொல்லலாம் எங்கள் வீட்டை. அதே அக்மார்க் கிராமத்து வீடு. ஒரு கோடை வாசஸ்தலம் போல இருக்கிறது கிராமம். இன்னும் அடையாளங்களையும், சுவாரஸ்யங்களையும், மனிதநேயத்தையும் முழுமையாய் அவிழ்த்து விடாமல்.

வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புளியமரத்தடி ஓண காலத்தில் எங்களுக்கு ஊஞ்சல். மாலை நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் எங்களுக்குப் பல்லாங்குழி ஆடும் மைதானம். சுற்றி அமர்ந்து கதை பேசினால் சிரிப்புச் சத்தம் புளியங்காய்கள் கொட்டுவதைப் போல தொடரும்.

எப்போது போனாலும் பழைய சிரிப்பொலிகளை மீண்டெடுக்க முடிகிறது.

 

(தம்பி தேங்காய் தொலிப்பதில் கில்லாடி )

இன்னும் வஞ்சகமில்லாமல் காய்த்துக் கொண்டிருக்கின்றன மரங்கள். ரிலயன்ஸ் பிரஃஷ்கள் எட்டிப்பார்க்காத தோப்புகளில் கிடைக்கின்றன கலப்படமில்லாத காய்கறிகள்.

எங்கள் ஊரின் பெயர் பரக்குன்று. பரந்த குன்றுகள் நிறைந்த ஊர் என்பதால் அந்தப் பெயர் வந்ததாய் சொல்கிறார்கள். இன்னும் ஊரில் பெரிய குன்றுகள் நிறையவே இருக்கின்றன. ஒரு பெரிய மலையடி வாரத்தில் தான் எங்கள் வீடு இருக்கிறது.

 

ஊருக்குப் போகும்போதெல்லாம் மலையில் செல்வேன்.

 

“அங்கெயெல்லாம் எதுக்கு பிள்ளே போறே… கண்ணாடிச் சில்லு கெடக்கும் என பாசமாய் தடுக்கும் வயதான குரல்கள்.

 

கூவத்தின் கரையில் கூடுகட்டி வாழ்பவனுக்குத் தான் தெரியும் மலையின் மகத்துவம்.

 

மலையிலிருந்து நாலாபுறமும் விரிந்து கிடக்கும் பச்சை நகருக்கு இடம் பெயரும் வரை வியப்பை ஏற்படுத்தியிருந்ததே இல்லை. தூரதேசம் சென்றபின் தான் புரியும் தாயின் பாசமும், தந்தையின் நேசமும். அதேபோலவே இயற்கையில் உன்னதமும்.

 

புறுத்திச்சக்கை என எங்கள் ஊரில் பெயரிட்டு அழைக்கப்படும் அன்னாசிப்பழம், பைனாப்பிள், வேலிகளில் பயிரிடப்பட்டு வேண்டுவோர் பறித்துச் செல்லலாம் எனும் நிலமையில் தான் இருக்கின்றன இன்னும்.  பழுத்து அணில் கடித்துத் தின்ற மிச்சமே மனிதர்களுக்கு வாய்க்கிறது !

 

 

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எடுத்த புகைப்படம் இது. வறட்சி என்றால் என்ன என்பதை அறியும் வாய்ப்பு இந்த கிராமத்துச் செடிகளுக்கு இல்லை. சிரித்துக் தலைகுலுக்கி வரவேற்கும் வாய்ப்பு மட்டுமே வாய்த்திருக்கின்றன இவற்றுக்கு.

மலைகள் மட்டுமல்ல, நீரோடைக்குச் செல்லவேண்டுமெனிலும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை. கொஞ்சம் தான்…

டோராவையும், புஜ்ஜியையும், டாம் அண்ட் ஜெர்ரி வகையறாக்களையும் தொலைக்காட்சியில் பார்த்து பொழுதைப் போக்கும் எனது மகளுக்கு ஊருக்குச் சென்றால் ஒரே கொண்டாட்டம் தான். அவளது தோழமை ஆடு, கோழி, முயல், அணில் இவற்றோடு தான்.

 

கிராமத்தின் தலையில் நகரத்தின் கலாச்சாரம் கூடுகட்டியதன் அடையாளமாய் எங்கள் கிராமத்தின் ஓலைக்கூரைகளும் தாங்கி நிற்கின்றன டிஷ்களை !

ஒரு கிராம முகம். எதைக்குறித்தும் கவலையற்ற, பதட்டமற்ற, அட்டவணைகளைப் பற்றியெல்லாம் யோசிக்காத, அறிவுஜீவித் தனமான பதில்களுக்காக நூல்களைப் புரட்டாத ஒரு எளிய மனிதர். கிராமத்து பிதாமகன் போல இருந்ததால் கிளிக்கினேன்.

“ஊர்ல இருக்கிற எல்லாரையும் போட்டோ எடுப்பே.. என்னை எடுக்கமாட்டியோ என வின்செண்ட் பூவராகன் ஸ்டைலில் கேட்ட தம்பியில் புகைப்படம்