கவிதை : குழப்ப முடிச்சுகள்

முக்கியமான பத்திரத்தில்
கவனமாய்
கையொப்பம் இடுகையில்
மட்டும்
கையெழுத்து நொண்டியடிக்கிறது.

எப்போதுமே
பையில் கனத்துத் தொங்கும்
சில்லறைகள்
தேவைப்படுகையில் மட்டும்
அகப்படாமல் போகிறது.

அவசரமாய்த் தேடுகையில்
தேடும் பொருள்
கிடைப்பதேயில்லை
தேவைப்படாத போது
தானாய் வந்து அறிமுகம் செய்கிறது.

சிந்தாமல் சாப்பிடு என்று
யாரேனும் எச்சரிக்கையில்
கொஞ்சமேனும்
தவறாமல் சிந்துகிறேன்

தாடியில்லாமல் வள்ளுவரை
யாரேனும்
வரைந்திருக்கிறார்களா ?
என
தமிழறிஞர் கூட்டத்தில்
உள் மனம் கேள்வி கேட்கிறது.

ஆறு மாதம் காத்திருந்து
வாங்கி வந்த பொருள்
அடுத்த மாதமே
தள்ளுபடியில் பல்லிளிக்கிறது.

விற்கும் வரை
அடிமட்டத்திலிருக்கும்
பங்கு
அடுத்த மாதமே
அசுர வளர்ச்சி அடைகிறது.

எனக்கு மட்டுமே
இது நேர்கிறதா ?
இல்லை
இது சர்வதேச சங்கதியா ?