பட்டிக்காட்டான்

பட்டிக் காடென்று
பரிகசிக்கிறார்கள்.
எதுவும் தெரியாதென்று
ஏளனம் செய்கிறார்கள்.

உண்மை தான்
எதுவும் தெரிந்திருக்கவில்லை
எனக்கு.

கடைக்குச் சென்ற
கால் மணி நேரத்தில்
வீடு புகுந்து திருடுவர்
என்பதும்

தடுமாறி விழுந்த
சைக்கிள் காரனை
தூக்கி விடாமல்
வசைபாடுவான் என்பதும்

சிரித்துக் கொண்டே
வருபவர்கள்
அழவைப்பார்கள் என்பதும்
தெரிந்திருக்கவில்லை.

சுனாமியில் மிதந்த
பிணங்களின் கழுத்துகளில்
சங்கிலி பிடுங்கும்
கரங்கள்
பரிச்சயமான பின்

அவமானமாய் இருக்கிறதெனக்கு
பட்டிக் காடென்று
என்னை யாரேனும்
பரிகசிக்காமல் போகையில்.