க‌விதை : கடைசிக் கவிதை

இது என்
கடைசிக் கவிதையாகி
விடக்கூடாதெனும்
அச்சத்துடன் தான் எழுதுகிறேன்
ஒவ்வொரு கவிதையையும்.

இந்தக் கவிதையின்
சகோதரனோ
சகோதரியோ
நாளையோ
நான்காண்டுக்குப் பின்போ
வரவேண்டும் என்னும்
வேண்டுதலோடு.

ஆயினும்
ஏதேனும் ஓர் கவிதை
என்
கடைசிக் கவிதையாகி விடும்
என்னும்
உண்மையின்
திரைச் சீலைகள் அசைகின்றன.

எது
கடைசிப் பகலென்று அறியாத
ஒரு
காலையைப் போல
மலர்ந்து கொண்டிருக்கிறேன்.

கடைசிக்குப் பின்
முதல் என
பருவங்களும் மாறுகின்றன.

நான்
நடக்காத தெருக்களிலும்
பூக்களை உதிர்க்கும் மரங்கள்
ஏராளமாய்
வளர்கின்றன.

தோழி

நீ வருவதாகச் சொன்ன
அந்த நாளின்
இமைகள் பிரிந்திருந்த
இரவில்,
நீ வரவேயில்லை.

பின்னிரவுப் பொழுதொன்றில்
யாரோ
வீட்டைத் தட்டும்
ஓசை கேட்க,

வெளியே
உனக்குப் பதிலாய்
உற்சாகமாய் நின்றிருந்தாள்
உன் தோழி.

தயக்கங்கள் ஏதுமின்றி
சட்டென்று தழுவி
என்
உடலெங்கும் நழுவினாள்.

அவளிடம் இருந்த
இரவு நேர வெட்கத்தின்
வசீகரத்தின்
என்
காத்திருத்தலில் தவிப்பெல்லாம்
கரையத் துவங்கியது.

கரைந்து வழிந்து கொண்டிருந்தேன்
நான்
அவளது காலடிகளில்.

சண்டையிடவோ,
கோபித்துக் கொள்ளவோ
அவளிடம் ஏதுமிருக்கவில்லை.
பிரியும் வரை
இறுக்கமாய் நின்றிருப்பதைத் தவிர.

அன்று நிம்மதியாய்த்
தூங்கினேன்.
இனிமேல்
உன் தோழியை
அடிக்கடி அனுப்பி வை
என்னும் டைரிக் குறிப்போடு.

சட்டென்று சன்னல் திறந்து
நன்றி சொல்லி
கையசைத்து
சாரல் தெரித்துச் சிரிக்கிறாள்
தோழி.

க‌விதை : கலையாத சுவடுகள்

புதிய வெளிச்சங்கள்
பழைய பிரமிப்புகளை
புறக்கணிப்பின்
பக்கமாய்
புரட்டிப் போடுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தைத்
துவங்குகையில்
அழகாய்த் தெரிந்த
சென்னை விமான நிலையம்
திரும்பி வருகையில்
அழகின்றிக் கிடந்தது.

அனுமன் தோள்
சஞ்சீவி மலைபோல,
காலம் தன் தோளில்
பல
வருடங்களைச்
சுருட்டிக் கட்டிப் பறந்தபின்

எனக்கு
ஆனா ஆவன்னா அறிமுகப்படுத்திய
ஆரம்பப் பாடசாலைக்குச்
சென்றிருந்தேன்.

கடலெனத் தெரிந்த
பள்ளி மைதானம்
இப்போது
கையளவாய்த் தோன்றியது.

பெரிதாய்த் தெரிந்த
பெஞ்சுகள்
முழங்காலின் பாதியை
எட்டிப் பிடிக்க முயன்று
தோற்றுக் கிடந்தன.

அந்த பெரிய மரமும்,
கழிப்பறையும்
வராண்டாவும்
வித்தையில் சுருங்கிய
விளையாட்டுப் பொருட்களாய்த்
தெரிந்தன.

வாழ்வின் நிலையாமை குறித்த
நிர்ப்பந்த எண்ணங்கள்
நெட்டித் தள்ள
திரும்பினேன்.

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
கதர்வேட்டியில்
கணக்கு வாத்தியார்.
சற்றும் உயரம் குறையாமல்.