தேவசகாயம் பிள்ளை நினைவிடம்

x3

செயற்கைக் காற்றாலைகள் சுழன்று மின்சார உற்பத்தியை நடத்திக் கொண்டிருக்கும் அழகுடன், எங்கும் பச்சைப் பசேல் என காற்றுக்குக் கரியமில வாயு தட்டுப்பாடு வருமளவுக்கு உயிர்வளி உறையும் இடமாக பரந்து பிரமிப்பூட்டுகிறது ஆரல்வாய்மொழி.

இயற்கை தனது செல்வத்தின் சுருக்குப் பையைத் திறந்து கொட்டியிருக்கும் இந்த ஆரல்வாய் மொழியில் மௌனத்தின் சின்னமாய் கிடக்கிறது மறை சாட்சி தேவசகாயம் பிள்ளையின் நினைவிடம். ஸ்வாகதம் என மலையாளத்தில் வரவேற்கும் இந்த காற்றாடி மலையை தேவசகாயம் மலை என்றே அழைக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலில் வந்தால் கூட சில்லென காற்று வீசும் இந்த நிழல் மலைப் பிரதேசத்தில் 1752ம் ஆண்டு கிறிஸ்தவத்தைத் தழுவியதற்காக சுட்டுக் கொல்லப்பட்டவர் தான் தேவசகாயம் பிள்ளை. இந்த படுகொலையை நிகழ்த்தியது திருவிதாங்கூர் அரசு.

அந்நாட்களில் மதம் மாறியவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டார்களா என்றால் இல்லை என்பதே பதில். எனில் தேவசகாயம் ஏன் கொல்லப்படவேண்டும் ? இந்த வினாவுக்கான விடையைத் தேடும்போது அகப்படுகிறது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நுரைக்க நுரைக்க நிரம்பி வழிந்திருந்த சாதீய அடக்குமுறை.

நீலகண்டம் பிள்ளையாய் பிறந்த தேவசகாயம் ஓர் கீழ்க்குலத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாய் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். காரணம் அந்நாட்களில் ஏராளம் மீனவ சமூகங்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவிக் கொண்டு தான் இருந்தனர் என்கிறது வரலாறு. ஆனால் அவர் பிறந்ததோ ஒரு நாயர் பெண்ணுக்கும், நம்பூதிரி ஆணுக்கும் !

z12நம்பூதிரி ஆண்கள் விரும்பும் போதெல்லாம் நாயர் குல பெண்கள் நம்பூதிரிகளின் அந்தப் புரத்தை அலங்கரித்தாக வேண்டும் எனும் அந்தக் கால சமூக சாதீய அமைப்பின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது தேவசகாயத்தின் பிறப்பும். தந்தை யார் என தெரியாமலேயே நாயர் குலத்தில் கணக்கின்றி பிள்ளைகள் பிறந்து கொண்டிருந்த சிக்கலைச் சரிசெய்ய “மருமக்கள் தாயம்” எனப்படும் தாய்வழி சாதீய முறை வழக்கத்தில் இருந்தது. அதனால் தான் தேவசகாயம் பிள்ளையும் நாயர் என்றே அறியப்படுகிறார்.

தாழ்ந்த குல ஆண்கள் கால் முட்டிக்குக் கீழே ஆடை அணியக் கூடாது, பெண்கள் மேலாடை போடக்கூடாது என தாழ்த்தப்பட்டவர்களாய் எண்ணப்பட்டவர்கள்  ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பின்னணியில் உயர் குலத்தில் பிறந்தார் தேவசகாயம்.

1712ம் ஆண்டு குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னுமிடத்தில் ஒரு இந்துவாப் பிறந்த நீலகண்டன் பிள்ளை, இந்துவாக வளரும் வரை அவருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. நல்ல ஆசான்களிடம் கல்வி கற்றார், போர்பயிற்சி பெற்றார், மன்னர் மார்த்தாண்டவர்மாவின் அரண்மனையிலேயே போர் வீரனாக பணியிலும் சேர்ந்தார்.

1941 ம் ஆண்டு குளச்சல் போரில் டச்சு வீரர்களுக்கு எதிரான போரில் மன்னன் மார்த்தாண்ட வர்மா வெற்றி பெற்றார். அந்தப் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டார் டிலனாய் எனும் டச்சு தளபதி. அவரைச் சந்திக்காமல் இருந்திருந்தால் தேவசகாயம் நீலகண்டன் பிள்ளையாகவே மிச்சம் மீதி நாட்களையும் அரண்மனையில் உல்லாசமாய் செலவிட்டிருக்கக் கூடும்.

y4

டி-லனாய் தேவசகாயம் பிள்ளைக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப் படுத்தினார். வாழ்வின் கவலை சூழ் காலம் தேவசகாயத்தைப் பற்றியிருந்த காலம் அது. கிறிஸ்தவத்தின் மேல் சிந்தனை பற்றிக் கொள்ளவும் அது ஒரு காரணியாயிற்று. ஆனால் கிறிஸ்தவத்தைத் தழுவிய தேவசகாயம் கிறிஸ்தவத்துக்காய் உயிரை விடவும் தயாராய் இருப்பார் என டிலனாயே நினைத்திருக்க மாட்டார்.

ஓர் உயர் ஜாதி இந்து, அதுவும் அரசனின் அருகே இருப்பவன், அரசவைப் பணியாளன் கிறிஸ்தவம் தழுவியது உயர்குல இந்துக்களுக்கு எரிச்சலைக் கிளப்பியது. தேவசகாயத்தை பின்வாங்க கட்டாயப்படுத்தியது அந்தக் கூட்டம். தேவசகாயம் உறுதியாய் இருந்தார்.

தேவசகாயத்தின் உறுதி உயர்சாதி இந்துக்களுக்கு அதிகபட்ச ஆத்திரத்தை உருவாக்க,  அவர் மீது போலியாக் குற்றங்கள் சுமத்தப்பட்டன ! அவர் பந்தாடப்பட்டார். தோவாளை, விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம், பத்மநாபபுரம் என எல்லா அதிகாரிகளின் முன்னிலையிலும் தண்டனையும் அவமானமும் பெற்றார். எருக்கம் மாலை ஊர்வலம், எருமை ஊர்வலம் போன்றவை அவற்றில் சில.

அவமானத்துக்குப் பயந்து பின்வாங்காத தேவசகாயம் பின்னர் வன்முறைத் தாக்குதலுக்கும் ஆளானார். நான்கடி நீளம், இரண்டடி உயரமுள்ள பெட்டியில் வைத்து பூட்டப்பட்டார். பாம்புகளுக்கிடையே போடப்பட்டார், குரங்குகளின் கூட்டில் கட்டி வைக்கப்பட்டார், சுண்ணாம்பு சூளையில் எறியப்பட்டார் என அவர் மீதான வன்முறைத் தாக்குதல்களை வலியுடனும், குருதி வாசனையுடனும் வரைந்து வைத்திருக்கிறது வரலாறு.

z9தேவசகாயம் கொல்லப்பட்ட இடத்துக்கு சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புலியூர் குறிச்சி என்னுமிடத்தில் வைத்து அவர்மேல் காயங்கள் ஏற்படுத்தி மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்தினர். அவர் தாகத்தில் தண்ணீர் கேட்டபோது வீரர்கள் தண்ணீர் வழங்காததால், கையின் முட்டியால் பாறையை இடித்து தண்ணீர் உருவாக்கினாராம். அந்த இடத்தில் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது, இன்னும் அந்த இடத்தில் பாறைத் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது. அந்த இடம் “முட்டிடிச்சான் பாறை” என அழைக்கப்பட்டு வழிபாட்டு நிலையமாகி விட்டது.

தேவசகாயம் கொல்லப்பட்ட மலையில் அமைந்துள்ள நினைவிடம், அவர் சுடப்பட்ட இடம், வீழ்ந்த இடம், பாறையில் முழங்கால் படியிட்டு செபித்த இடம் என பல பாகங்களுடன் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
அவருக்கு நோய்தீர்க்கும் வல்லமை இருப்பதாகவும், அவருடைய நினைவிடத்தில் செபித்தால் அதிசயங்கள் நடக்கும் எனவும் மக்கள் அளிக்கும் சாட்சியங்களை வைத்து கத்தோலிக்கத் திருச்சபை அவருக்கு புனிதர் பட்டம் வழங்கலாமா எனும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது. z6

 

தேவசகாயம் பிறந்த நட்டாலம், பாறையில் நீரூற்று ஏற்படுத்திய புலியூர்குறிச்சி, அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு ஆலயம், காற்றாடி மலையிலுள்ள அவருடைய நினைவிடம் என குமரிமாவட்டத்தில் தேவசகாயத்தின் நினைவு இன்னும் மக்கள் மனதில் உயிரோட்டமாகவே இருக்கிறது.

சட்டென்று சில நூற்றாண்டுகள் பின்னோக்கித் தாவி தேவசகாயத்தின் காலத்தில் உலவிய பிரமை பீடிக்கிறது மலையை விட்டுக் கீழிறங்கி நடக்கும்போது !