அவமானத்துடன் ஒரு அரிவாள்

arivaal.jpg

மனிதர்களே.

உங்கள் மனங்களைக்
கூர்தீட்டி
தயவு செய்து எங்களை
துருப்பிடிக்க விடுங்கள்.

மொழிக்குள் மட்டும் இருக்கட்டும்
ஆயுத எழுத்து
அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று
அடம் பிடிக்காதீர்கள்.

உங்களைப் புரிந்து கொள்ள
முடியவில்லை.
என் முகத்துக்குக்
குருதித் திலகமிடுவதை
ஏன் வெற்றி என்கிறீர்கள் என்பது புரியவில்லை.

அறுவடைக்காய்
அரிவாள் எடுக்கச் சொன்னால்
தலைகள் தான் வேண்டுமென்று
தகராறு செய்கிறீர்கள்.

“வெட்டரிவா மீசை”
என்று சொல்லி
வீணான வீரத்தை
வளர்த்துக் கொள்கிறீர்கள்

மதத்துக்கும் ஜாதிக்கும்
சண்டையிட்டு சண்டையிட்டே
என் முதுகு மொத்தமும்
சர்வ மத சிவப்புத் துளிகள்.

உங்கள்
முதுகுக்குப் பின்னால்
சொருகப் பட்டு சொருகப் பட்டே
உங்கள் முதுகெலும்பாகிப் போனேன்
எனக்கு முதலுதவி செய்யுங்கள்.

ஆயுத பூஜைக்குத் தான்
என்னை தரையிறக்குகிறீர்கள்
பூஜை முடிந்ததும்
மீண்டும் என்னைப் பூசி மெழுகுகிறீர்கள்.

என்னை சகதியில் பூசுங்கள்
விறகுப் பொடிகளுக்குள் வீசுங்கள்
வேண்டுமானால்
கசாப்புக் கடைக்கு விற்றுவிடுங்கள்
இந்த மனித அறுவடைக்கு மட்டும்
அனுப்புவதை நிறுத்துங்கள்.

ஆயுதமாய் இருந்தால்
விவசாயிடம் இருக்கவே விருப்பப்படுவேன்.
ஜாதிப் பலகைகளில்
மதக் கோபுரங்களில்
அவசர இரத்தம் பூசும்
அதிகாரத் தூரிகையாவதில்
எனக்கு உள்ளத்தால் உடன்பாடில்லை.

சிரச்சேதங்களில் சேதப்பட்டு,
பாமரர்களை பாடைக்கு அனுப்பி,
இரத்தப் பொட்டுக்களால்
பல
சுமங்கலிப் பொட்டுக்கள் அழித்து
என் தேகமெங்கும்
சிதைந்து போன போன மனிதாபிமானத் துளிகள்.

போதும்.
இந்த அரிவாள் கலாச்சாரம்
நரைத்துப் போன
இந்த தலைமுறையோடு
மரித்துப் போகட்டும்.

மரணக் குரல் மட்டுமே கேட்டு
ரணமாகிப் போன என் மனதுக்கு
வயல் காட்டின் சலசலப்பை
அறிமுகப்படுத்துங்கள்

இல்லையேல்
சூரியன் தற்காலிகமாய்ச் செத்துப்போயிருக்கும்
இந்த இரவில்
தெற்குமூலையில் என்னைப் புதைத்து
ஓர்
தென்னங்கன்று நடுங்கள்.

அதுவும் இல்லையேல்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
எனக்கொரு
தூக்குக் கயிறு தயாராக்குங்கள்.

சச்சின்…

desam_paadal_sachin3.jpg
உன் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
ஒரு ஆச்சரியம்
மெல்ல பூச்சொரியும்.

உன்னை எப்படிப் பாராட்டுவது ?
எத்தனை வெப்பம்
விடுத்தாலும்
விடாமல்
தீ கக்கும் கதிரவனாய்
திக்கெட்டும் உன் புகழ்.

பாருக்குள் பாரதப் பெயரை
உயரப் பறத்தினாய்
நீ
சளைக்காமல் அடிக்கும்
சிக்ஸர்கள் போல.

சுற்றி இருந்த
அத்தனைக் கைகளும்
இந்திய மானத்தைத் துகிலுரிந்து
சேலை விற்றுச் சம்பாதித்த போது
நீ மட்டும்
சத்தமில்லாமல் சுத்தமாய் நின்றாய்.

ஒவ்வோர் முறை
நீ
மட்டை தொடும் போதும்
எனக்குள்
பிரவாகமும்
பிரார்த்தனையும் சரிவிகிதத்தில்.

நீ விலகினால்,
சூரியக் கைக்குட்டை
பனி துடைத்துச் சென்ற
பச்சை இலைகளாய்,
அரங்கத்தின் அத்தனை
இருக்கைகளும்
தனிமையாய்க் கிடக்கும்.

தோல்விகள் உன்
கால் வெட்டுவதும் இல்லை,
வெற்றிகள் உன்னை
கர்வக் கிரீடத்துள்
பூட்டுவதும் இல்லை.

வரலாறுகள் என்று
வரையறுக்கப்பட்டவை எல்லாம்
உன்னால்
அறுத்தெறியப்பட்டு,
நீ
எழுதுபவையே வரலாறுகளாகின்றன.

சின்னக் கோடுகளின்
அருகே
நீ
பெரிய கோடுகள் வரைந்து வரைந்தே
எங்களை
பெருமைக் கடலுள்
பயணிக்க வைக்கிறாய்.

நீ
ஆடுவது சதுரங்கமல்ல.
ஆனாலும்
ஒவ்வொரு தடைகளாய் வெட்டி வெட்டி
நீ
முன்னேறுவதில்
சளைக்காத சதுரங்க லாவகம்.

ஈன்ற பொழுதில் பெரிதுவந்தாளா
உன் தாய் ?
நீ
ஈன்ற வெற்றிகளில்
பெரிதுவக்கிறாள்
நம் பாரதத் தாய்.

தலைவனாய் தான் இருப்பேனென்று
நீ
தர்க்கம் செய்ததேயில்லை.
அடம் பிடிக்க நீ ஒன்றும்
அரசியல் வர்க்கம் இல்லை.

அனுமர் வாலாய்
அவராதமெடுக்கும்
அதிசய ஓட்டக் கணக்கு
உனது.

நீ,
பிரபஞ்சத்தின் பரபரப்பு.
வியாபாரச் சந்தையில்
ஏலமிடப்படாத
விளையாட்டுப் புயல்.

நீ
ஆடவில்லையென்றால்
ஆட்டம் காணும் நம் அணி,
ஆட்டம் போடும் எதிரணி.

தேகத்துக்காய் வாழ்வோர்
நிரம்பிய தேசத்தில்,
நீ
தேசத்துக்காய் வாழ்கிறாய்.

உன்
ஒவ்வோர் நூறுக்குப் பின்னும்
பட்டாசு கொளுத்தத் தவறாத
என் மனசு,
உன்
தந்தையின் கல்லறை காயும் முன்
வந்து நீ,
பெற்றுத் தந்த வெற்றியில்
மட்டும் கண்ணீர் விட்டு
இன்னும் அதை ஈரமாக்கி விட்டது.

மலைபோல் பணிகள்
இமை தொற்றிக் கிடந்தாலும்,
மழலை கண்டால்
மனம் விரிகிறாய்.

அசோகச் சக்கர ஆரங்களில்
இருந்தாலும்
ஆரவாரமில்லாமல் இருக்கிறாய்.

உனக்கு விடுக்கப்படும்
ஒவ்வோர் கொலை மிரட்டல்களிலும்
என் உயிர்
மிரண்டு போகிறது.
நீயோ
மிருதுவாய்ச் சிரிக்கிறாய்.

நான்,
விருதென்றால் என்னவென்று
விளங்கிக் கொள்ளாத வயதில்
நீ
விருதுகள் வாங்கி
விருதுகளைப் பெருமைப்படுத்தினாய்.

நான்
வரலாறு கற்கவே விரும்பாத வயதில்
நீ
சரித்திரங்களைச் சரிசெய்தாய்.

ஒவ்வோர் வெற்றிக்குப் பின்னும்
பிறக்கும்
உன் புன்னகையில்,
பாரதம் விழித்தெழுகிறது.

குடும்பத்தை நேசிக்கிறாய்
விளையாட்டை சுவாசிக்கிறாய்
எதிரயை வாசிக்கிறாய்
வெற்றிகளைப் புசிக்கிறாய் – நீ
வரலாறுகளில் வசிக்கிறாய்.

உன்
தொடர் வளர்ச்சிக்கு வாழ்த்துக்களோடும்,
உனக்கு
வயதாகுதே எனும் கவலையோடும்.
– ஒரு ரசிகன்

ஒரு கடிகாரம் நேரம் பார்த்துக் கொள்கிறது

clo.jpg

பூக்களுக்கு மரியாதை
பூமி முழுதும் உண்டு
முட்களுக்கு மரியாதை
என்னிடம் மட்டும் தான்

என் கால்களில் ஆணிஅறைந்து
வட்ட அறைக்குள்
வட்டமிட வைத்து விட்டார்கள்.

நான் கிணற்றுத் தவளையாய்
இருப்பதில் மட்டுமே
வணக்கம் பெற்றுக் கொள்பவன்

என் வினாடிகள் கடப்பதை
இதயத்துடிப்போடு பார்க்கிறது மானுடம்.
இன்றைய விடியலில் துவங்கி
மறுநாள் விடியல் வரை !!!

நான் கொஞ்சம் நொண்டியடித்தால்
அலுவலகங்கள் ஆமையாகும்
வேகமானால்
பரபரப்புகள் பரிமாறப்படும்.

காந்தியின் இடுப்பு முதல்
மாடசாமியின் மணிக்கட்டு வரை
என் வழிகாட்டல்
என் கால்களால் தான்
நடக்கிறது மனிதகுலம்.

என் வினாடிகள் கடப்பதை
பார்த்துப் பார்த்தே
காத்திருக்கும் காதலர்களுக்கு
வருடங்கள் கிழியும்…

பாதை மாறாமல் பயணம் செய்வது
நில உலகில்
நிழலும் நானும் மட்டும் தான்.

என் வருகைக்குப் பின்
துயிலெழுப்பும் வேலையிழந்த
சேவல்கள்
நிம்மதியாய்த் துயில்கின்றன.

அட்டவணைக்குள் அடைக்கப்பட்ட
மனிதனின் வாழ்க்கையை
என் அலாரச் சத்தம் தான்
ஆரம்பித்து வைக்கிறது

நான் இல்லையென்றால்
ஆக்ஸிஜன் வற்றிப்போன சுவாசம் போல
மூச்சுத்திணறி மானுடம்
நிலை தடுமாறிப் போகும்

பாவம்…
இப்போதெல்லாம் மனிதர்கள்
அவர்களை நம்புவதில்லை
என்னைத் தான் நம்புகிறார்கள்

அவர்களின் ஆனந்தம் எல்லாம்
என் எல்லைகளுக்குள்
விதைக்கப்பட்டு
என் முட்களின் முகம் பார்த்துத் தான்
அறுவடையாகின்றன.

என் பாதப் பதிவுகளில்
மணிபார்த்துக் கொள்ளும் மனிதர்களே
என் நேரத்தைச்
சரிபார்த்துக் கொள்ளவேண்டும்
மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா ?

ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது.

kalappai.jpg

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பச்சையைக் கட்டி வைத்திருந்த
கிராமம்
தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு
காங்கிரீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது.

இதோ
இங்கிருந்து துவங்கி
சர்ப்பக் குளத்தின் எல்லைவரை
மொத்த நிலத்துக்கும் நான் தான்
வியர்வை வடிய உழவு செய்திருக்கிறேன்.

அதோ அங்கிருந்த வாய்க்காலில்
வால் நனைத்து ஓடுகின்ற நாய்கள்.

கால்வாயில் கண்திறந்து
வாய்க்காலில் வழுக்கிவிழும்
அயிரை மீன்கள்
எதிரேறும் இடம் பார்த்து
அரைக்கால் சட்டையோடு காத்திருக்கும்
பள்ளிச் சிறுவர்கள்.

நெடிய வரப்பின் அடியில் ஒளிந்து
பீடி குடிக்கும்
கைலி இளைஞர்கள்.

வெட்கத்தில் முகம் செய்து
பாத நிழலைப் பார்த்து நடக்கும்
முனியம்மாக்கள் .

வயலின் நிறம் பார்த்து வியாதிசொல்லும்
வெற்றிலைப் பெரிசுகள்
களை பிடுங்கி வயல் வளர்க்கும்
கூனல் கிழவிகள்

வாழை மரத்தில் உட்கார முயன்று
தோற்றுத் தோற்று
வரப்புக் குச்சிகளில் அடைக்கலமாகும்
சலவை செய்த கொக்குகள்

சலசலக்கும் சிறு குருவிகள்
சருகு மிதிக்கும் அணில் குஞ்சுகள்
சேறு மிதித்து நடக்கும் தவளைகள்

எதுவும் இன்று காணவில்லை !!!
நான் மட்டும்
வடக்குப் புறத்தின்
விறகுக் கூட்டுக்கிடையில்…

சிறுவர்கள்
சக்திமானுக்கும் சச்சினுக்கும் காத்து
தொலைக்காட்சி பெட்டியைத்
தொட்டுக்கொண்டு நிற்கிறார்கள்

அந்த கால்வாய்
அதில் தான் லாரிகளில் மண் கொண்டு
கொட்டுகிறார்கள் !!!

வயல்கள் எல்லாம் ஈரம் விற்று விட்டன
வாழைகள் எல்லாம்
நிலத்தை விட்டு நகர்ந்து
வேலிகளுக்குள் விழுந்து விட்டன

வெட்கம் உடுத்திய பெண்களும்
களை பிடுங்கும் கிழவிகளும்
தொலைந்து போன வெறுமையில்
அந்த ஒற்றைத் தென்னை மரமும்
காய்ப்பதை நிறுத்திவிட்டிருக்கிறது

இயற்கையின் கவிதை மேல்
செயற்கையின் கட்டிடங்கள்
காலூன்றி விட்டன

விவசாயின் தோள்களோடு
சொந்தம் கொண்டாடிய நான்
இன்று விறகுகளோடு முதுகு உரசுகிறேன்…

கலப்பை- ன்னா என்னப்பா ?
ஈரம் விட்டுப் போன காதில்
ஏதோ கான்வெண்ட்
ஈயம் பாய்ச்சுகிறது

ஒன்று மட்டும் புரியவே இல்லை
இயற்கையின் அழகை புதைத்து விட்டீர்கள்
சுகாதாரச் சூழலை சிதைத்து விட்டீர்கள்
அதெல்லாம் இருக்கட்டும்
அரிசியை என்ன
இண்டர்நெட்டிலிருந்தா
இறக்குமதி செய்யப் போகிறீர்கள் ?

தண்ணீர்.. தண்ணீர்…

water.jpg( இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை ) 

மனித உடல் எழுபத்து ஐந்து விழுக்காடு தண்ணீரினால் ஆனது. மூளையில் எழுபத்து நான்கு விழுக்காடு தண்ணீரும், குருதியில் எண்பத்து மூன்று விழுக்காடும், சிறுநீரகத்தில் எண்பத்து இரண்டு விழுக்காடும், எலும்புகளில் இருபத்து இரண்டு விழுக்காடும் என தண்ணீரினால் கட்டப்பட்ட சிலை போல இருக்கிறான் மனிதன்.

ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் கூட வாழ முடியாது. இதுவே வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தத்தை நமக்கு விளக்குகிறது.

ஒரு சராசரி மனிதன் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரை உடலிலிருந்து வெளியேற்றுகிறான். உடலிலிருந்து தண்ணீர் வெளியேறும் அளவுக்குத் தக்கபடி அவனுடைய உடல் தண்ணீரை எதிர்பார்க்கும், அதை மனதில் கொண்டு சுத்தமான தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது நம்முடைய உடலிலுள்ள செல்கள் தண்ணீரின் தேவைக்காக இரத்தத்தை நாடுகின்றன. உடனே இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்குகிறது.

இதனால் சிறுநீரகம் தன்னுடைய பணியான இரத்தத்தைத் தூய்மையாக்கும் செயலை முழுமையாகச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே சிறுநீர கத்தின் பணிகள் லிவர் போன்ற மற்ற உறுப்புகளுக்குத் தாவுகின்றன. உடலே ஒரு அழுத்தமான சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

இத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு என்னவென்று நினைக்கிறீர்கள் ? தீர்வு, மிக மிகச் சுலபம். சுத்தமான தண்ணீரை அவ்வப்போது அருந்தி வருதல் ! அவ்வளவே.

சிறுவயதிலிருந்தே தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து வளர்பவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், உடல் சுருக்கங்களற்றும் வாழ்வார்கள் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது பெரும்பாலான நோய்களைக் குணமாக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா ?

இருமல், ஆஸ்த்மா, சிறுநீரகக் கற்கள், சிலவகைப் புற்று நோய்கள், மலச்சிக்கல், தலைவலி, சர்க்கரை நோய், கண் நோய்கள் உட்பட ஏராளமான நோய்களை இது தீர்த்துவிடும் என்கிறார் ஐ.பி.என் சினா நிறுவன மருத்துவர் மொகமது ஹுசைன். அவர் தரும் தண்ணீர் மருத்துவம் இது தான்.

* காலையில் எழுந்தவுடன் உடனடியாக, பல் தேய்ப்பதற்கு முன்பே, ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* தண்ணீர் குடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், குடித்தபின் ஒருமணி நேரமும் எந்த உணவும் உண்ணக் கூடாது என்பதை கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.

* நல்ல சுத்தமான தண்ணீரை குடிக்கப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை பயன்படுத்துதல் நலம்.

* முதலில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது சிரமமாகத் தான் இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். பழகும் வரை முதலில் நான்கு கப் தண்ணீர் குடித்துவிட்டு ஒரு இரண்டு நிமிட இடைவெளி விட்டு இரண்டு கப் தண்ணீர் குடிக்கலாம்.

இந்த மருத்துவத்தைக் கடைபிடித்தால் மலச்சிக்கல் ஒரு நாளிலும், அசிடிடி இரண்டு நாட்களிலும், சர்க்கரை நோய் ஏழு நாட்களிலும், புற்றுநோய் அறிகுறிகள் ஆறு வாரங்களிலும், உயர் இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், டி.பி நோய் மூன்று மாதங்களிலும் சரியாகி விடுமென்று சொல்லி வியக்க வைக்கிறார் அவர்.

ஹீமேடோ பெய்ஸ் என மருத்துவத் துறையில் அழைக்கப்படும் இந்த முறையின் மூலமாக இரத்தம் மிகவும் தூய்மைப்படுத்தப்படுகிறது. உடலின் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. உடலும், குடலும் சுறுசுறுப்பாகிறது. அரோக்கியம் நம்மை அண்டிக் கொள்கிறது, செலவில்லாமலேயே.

உட்கொள்ளும் உணவிலுள்ள சத்துப் பொருட்களை பெற்றுக் கொள்ளவும், உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உடலுக்குத் தண்ணீர் மிகவும் தேவையாகிறது. சரியான அளவுக்குத் தண்ணீர் உட்கொள்ளாதபோது பல்வேறு உபாதைகள் மனிதனைப் பிடிக்கின்றன. சோர்வு, தலைவலி, கவனமின்மை என பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்து விடுகின்றன.

உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மன, உடல் புத்துணர்ச்சிக்கும், கழிவுகளை அகற்றவும், தோலை பாதுகாக்கவும், உடல் எடை குறைக்கவும், தலைவலி, சோர்வுகளை அகற்றவும், சரியான செரிமானத்தைத் தரவும் அனைத்திற்கும் நாம் பலவேளைகளில் முக்கியத்துவம் தராத தண்ணீரே முன்னிலையில் இருக்கிறது.

தினமும் ஆறு கப் தண்ணீருக்கு மேல் குடிப்பவர்களுக்கு இதய சம்பந்தமான நோய் வருவதற்கான வாய்ப்புகள் பாதியாகக் குறைந்து விடுகின்றன என்கிறது அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட மெகா ஆய்வு ஒன்று. அலர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய் உடையவர்களுக்கு உடலில் ஏற்படும் பிராண வாயு குறைபாட்டையும் நாம் அருந்தும் தண்ணீர் தீர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார் பேட்மேங்கலிட்ஜி எனும் மருத்துவர். ஆரோக்கியம் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ள இவர், நமக்குப் பசிக்கும்போதெல்லாம் உண்ண வேண்டுமென்று நினைக்காமல் அவ்வப்போது தண்ணீரைக் குடிப்பது மிகச் சிறந்தது என்கிறார்.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கும், மழலைகள் உள்ள தாய்மார்களும் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். அதுபோலவே உடல் வியர்க்க வேலை செய்பவர்களும், விளையாட்டு வீரர்களும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.

எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீரைக் கையிலேயே வைத்திருந்து அவ்வப்போது குடித்துக் கொண்டே இருங்கள். அதிகாலையில் முதல் வேலையாக ஒரு டம்ளர் தண்ணீராவது கண்டிப்பாகக் குடியுங்கள்.

தேனீர் குடிப்பதற்குப் பதிலாக அவ்வப்போது வெந்நீர் குடியுங்கள். அப்படியே தேனீர் குடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தேனீர், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்திய பின் ஒரு கப் தண்ணீர் அதிகமாகவே குடியுங்கள்.

உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருப்பதில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிப்பேன் என்னும் மனநிலையிலிருந்து மாறி, தாகம் எடுக்காமல் இருக்க தண்ணீர் குடிக்கும் எண்ணம் கொள்தல் நலம் பயக்கும்.

ஒருமுறை தண்ணீர் குடித்தபின் அடுத்து எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என முடிவெடுத்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் குடியுங்கள்.

பாட்டில் தண்ணீரே தூய்மையானது என்றும், மற்ற தண்ணீர் சுத்தமற்றது என்றும் நமக்குள் ஒரு தவறான எண்ணம் எழுவதுண்டு. அமெரிக்காவின் Natural Resources Defense Council (NRDC) வெளியிட்ட ஒரு அறிக்கையில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பாட்டில் தண்ணீரில் முப்பத்து மூன்று சதவீதம் தூய்மையற்ற தண்ணீர் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே இந்த நிலை எனில் இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கும் தண்ணீர் இதை விட அதிக விழுக்காடு தூய்மையற்றதாகவே இருக்க வாய்ப்பு உண்டு.

ஒரு லிட்டர் பாலை விட அதிக விலை கொடுத்து ஒருலிட்டல் பாட்டில் தண்ணீர் வாங்கும் நிலமைக்கு நம்மை வர்த்தகம் கொண்டு போய் விட்டிருக்கிறது. எனவே விழிப்புடன் காய்ச்சி ஆறவைத்த தண்ணீரைப் பயன்படுத்துதலே உடலுக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லது.

உணவு உண்ட பிறகு மிகவும் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் உணவிலுள்ள எண்ணைப் பொருட்களை கெட்டியாக்கி உடலில் கொழுப்பாகச் சேமித்து விடுகிறது. இது புற்று நோய்க்கு வழி வகுக்கும். எனவே உணவு உண்டபின் இதமான சூடுள்ள தண்ணீரைக் குடிப்பதே மிகச் சிறந்தது.

அதே நேரத்தில் மாத்திரைகள் உண்ணும்போது சூடான தண்ணீர் குடிப்பது மிகவும் ஆபத்தானது. குளிர்ந்த நீர் மட்டுமே குடிக்க வேண்டும். மாத்திரைகளுடன் பழரசங்கள், குளிர்பானங்கள், சூடான பானங்கள் இவற்றைக் குடிப்பது உடலுக்கு மிகவும் தீங்கானது.

நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தண்ணீர். அந்த தண்ணீரை சரியான விதத்தில் பயன்படுத்தி வந்தாலே மருத்துவரை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்க்க முடியும் எனும் விழிப்புணர்வுடன் தண்ணீரைப் பயன்படுத்துவோம்.

சில்மிஷச் சன்னலும், மோகக் கதவுகளும்

r4.jpg

விழிகள் இரண்டில் தாகமிட்டு – பின்
வழியும் மூச்சில் மோகமிட்டு
இரவில் விரலால் கோலமிட்டு – எனை
கொல்வாய் சேலைத் தூக்கிலிட்டு

r3.jpg

கனவில் புரளும் மெல்லிசையில் – சிறு
இசையாய் கசியும் மெல்லிடையில்
இதழின் ஊர்வலம் நடத்திடவே – விழி
துயிலா இரவுகள் தூதுவிடும்.

r1.jpg

தூங்க இரவுகள் விழிக்கையிலே – நம்
விழிக்கா பகல்கள் தூங்கையிலே
சில்மிசச் சன்னல் மூடுகையில் – முழு
மோகக் கதவுகள் திறந்துவிடும்

r5.jpg

ஏதே எதுவோ நிகழ்கையிலே – உள்
நாக்கும் மெளனம் சுமக்கையிலே
பரவச மின்னல் பாய்ந்து வரும் – பின்
நழுவும் உயிரிடை துயில்தழுவும்.

எங்கிருக்கிறாய் நீ.

thinking.jpg

பிரியமே,
என்
முகவரியைத் தொலைத்துவிடு.

உன்
கடிதங்களுக்காய்
இனிமேலும்
காத்திருக்க முடியாது.

ஒவ்வோர்
வெளிச்ச விடியலிலும்
எதிர்பார்ப்புகளோடு எழுந்து,

கருப்பு விழுதுகள்
பூமியை
கவ்விப்பிடிக்கும் வரை
கனவுகளோடே வாழ்ந்து,

பின்
ஏமாற்றத்தின் படுக்கைக்குள்
எத்தனை நாள் தான் புதைவது ?

என் முகவரி
உன் டைரியின் பக்கங்களிலிருந்து
இன்னும்
மனசின் பக்கத்துக்கு
எதிரேறவில்லையென்றால்
அதை எரித்து விடு.

எத்தனைக் காலம் தான்
திமிங்கலத்தைப் பிடிக்க
கடற்கரையில்
வெற்றுக் கால்களோடு
உலா வருவேன் ?

எத்தனை காலம் தான்
சூரியனை தரிசிக்க
இரவில் மட்டுமே
யாத்திரை செய்யும்
ஆந்தையாய் அலைவேன் ?

இன்னும் இந்த
அன்னக் கவிதைகளோடு
திண்ணைத் தூணில்
கண்களை அலையவிட்டு
காத்திருப்பது
அவசியமில்லையென்று படுகிறது.

தலையை வெளித்தள்ளி
ஓடாமல் ஒடுங்கிக் கிடக்கும்
ஆமை வாழ்க்கை
இனியும்
எனக்கு ஒத்துவராது.

ஒரு
துலங்காத ராத்திரியில்
கும்பகர்ண நித்திரையில்
கண்ட
நீள்கனவாய் நினைத்து
கலைத்துவிடப் போகிறேன்.

கால்களைக் கட்டிக் கிடந்த
உன்
நாணல் நினைவுகளை
நறுக்கிவிடப் போகிறேன்.

இன்னும் எத்தனை நாள் தான்
தலைகீழ் தவம் ?
வெளவால் வாழ்க்கையை
இதோ
முடித்துக் கொள்ளப் போகிறேன்.

அதற்கு முன்
ஒன்றே ஒன்று.

நீ நலமா
என்பதை மட்டும்
ஒற்றை வரியில்
தெரிவித்து விடேன்.

நம்பாதீர்கள் மஹாஜனங்களே

fox.jpg 

இரவில்
நாய் ஊளையிட்டால்
எமன் வருகிறான்
என்கிறீர்கள்.

கல்யாணத்தைக்
கனவில் கண்டால்
துர்பலம்
நிச்சயம் என்கிறீர்கள்.

நிறைவேறா ஆசைகளோடு
செத்துப் போனவர்கள்
ஆவியாய் அலைவது
தவிர்க்க இயலாது
என்றும்

வீட்டில்
தேன் கூடு இருந்தால்
உயிர்சேதம்
உருவாகும் என்றும்
அடித்துச் சொல்கிறீர்கள்.

திருந்தவே மாட்டீர்களா
என்று
திட்டித் தீர்க்கிறேன்

வாஸ்து படி கட்டிய
புது வீட்டு
வாசலில் அமர்ந்து கொண்டு.

கூந்தல் காலம்

hair.jpg

அடடா…
அவள் மிகவும் அழகி,
கூந்தல் நீளம்
முழங்காலை எட்டித் தொடும்,
நிறமோ
உருகி ஓடும் இரவு.
வியந்தாள் பாட்டி.

சிக்கெடுக்க
சிரமப்பட்டதால்
பாதி முதுகோடு
நின்று போயிற்று
அடுத்த தலைமுறையின் கூந்தல்.

காதுகளைத் தாண்டிவிட்டாலே
கத்தரிக்கப்படுகிறது
இப்போது.

வெள்ளைமுடியைக் கருப்பாக்க
சாயம் பூசிய
சாயங்காலங்கள்
சாய்ந்து விட்டன.

கருப்பாய் இருக்கக்
கவலைப்பட்டு
இப்போதெல்லாம்
கொடிகள் போல
அசைகின்றன
பலவண்ணக் கூந்தல்கள்.

நீளமான
கருப்புக் கூந்தலோடு
யாரேனும்
நடந்தால்
சிரிக்கக் கூடும்
எதிர்கால வீதிகள்

smile3.jpg

எப்படிச் சொல்வேன் காதலை

smile.jpg

காலைக் கட்டிக் கொள்ளும்
மழலையை
விலக்கி விட்டு
அலுவலகம் விரைவதாய்
கனக்கின்றதன
நீ
கையசைத்து விலகும் மாலைகள்.

மீண்டும் சந்திக்கும்
காலைகளில்
பொம்மை கிடைத்த
மழலை போல
பளீரிடுகின்றன உன் கண்கள்.

தேவதைக் கனவுகளில்
விளையாடும்
ஓர்
மழலையின் புன்னகை
உனக்கும் வாய்த்திருக்கிறது.

ஒரு
மழலையிடம் எப்படிக்
காதலைச் சொல்வதென்று
தெரியாமல் கழிகிறது
என் இளமை.