ஏலி ஏலி லெமா சபக்தானி

(திண்ணை – மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசாக ரூ.10000/- பெற்ற, சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை)
தன்னுடைய கையிலிருந்த வாட்சை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்  அந்த இருவரும். சரியான காலத்துக்குத் தான் வந்திருக்கிறார்கள். இனிமேல் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். எங்கும் எந்தப் பிசிறும் நேரக்கூடாது. ஏதாவது தப்பிதம் நடந்தால் மரணம் தான். தப்பிக்கவே முடியாது’

‘நாம் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டிலிருந்து வந்ததாக இங்கிருக்கும் யாருக்கும் தெரியக் கூடாது. அது ரொம்ப முக்கியம்’

‘அதெல்லாம் மறக்க மாட்டேன். என்னோட மூளையோட நான்காவது அறையில இருக்கிறதைத் தான் இப்போ என்னோட ஞாபகத் தளமா வெச்சிருக்கேன். அதனால தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. நம்ம உடை கூட இந்தக் காலத்து உடை போல தானே டிசைன் பண்ணியிருக்கோம். அதனால கவலையில்லை’

‘சரி சரி.. லாங்குவேஜ் செலக்ஷன் மாட்யூல் ஆக்டிவ் ஆக்கிடு நாம வேலையை ஆரம்பிக்கலாம்’ அவர்கள் பேசிக்கொண்டே தங்கள் மணிக்கட்டில் இருந்த சின்ன வாட்சில் ஆள்காட்டி விரலில் நுனியிலிருந்து வந்த ஒளிக்கற்றையால் சில செட்டப் களை செய்து கொண்டார்கள்.

சரி வா.. போகலாம். அவர்கள் இருவரும் நடந்தார்கள்.

‘இயேசுவைத் தெரியுமா ?’ எதிர்ப்பட்ட நபரிடம் விசாரித்தார்கள்.

‘இயேசுவா ? அவனைத் தான் ஊருக்கே தெரியுமே. நீங்க யாரு ? எங்கிருந்து வரீங்க ? ‘

‘நாங்க பக்கத்து கப்பர்நகூம் ஊரில இருந்து வரோம். இயேசுவைப் பாக்கணும். அதான்….’ அவர்கள் இழுத்தார்கள்.

‘அவன் எங்கேயாவது சுத்திட்டு இருப்பான். அவனை ஒரு இடத்துல பார்க்க முடியாது. நாலஞ்சு பேரைக் கூட்டிக் கிட்டு மலை, காடு ந்னு அலைஞ்சிட்டு இருப்பான்’

‘அவரு நிறைய அற்புதங்கள் செய்ததா எல்லாம் பேசிக்கிறாங்களே’

‘அவனா ? எனக்கென்னவோ அதுல நம்பிக்கையில்லை. உண்மையைச் சொன்னா அவன் ஒரு பைத்தியக்காரன். என்ன பேசறோம். எங்கே பேசறோங்கற விவஸ்தையே இல்லை. யாரைப் பாத்தாலும் சண்டை போட்டுட்டு தேவையில்லாம வம்பை விலைக்கு வாங்கிட்டு நடக்கிறான். யார் கையிலயாவது அடிபட்டுச் சாகப் போறான்.’

‘அப்படியா ? ஆனா கப்பர்நாகூம்ல அவருக்கு நல்ல பேராச்சே !’

‘அங்கே யாரையோ சுகப்படுத்தினதா பேசிக்கிறாங்க. தம்பி, உங்களைப் பார்த்தா நல்ல பசங்களா தெரியுது. நீங்களும் சும்மா அவன் பின்னாடி சுத்தி உங்க வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. ஏற்கனவே நாலஞ்சுபேரு வீட்டையும் விட்டுட்டு தொழிலையும் விட்டுட்டு அவன் பின்னாடி சுத்திட்டிருக்காங்க. நீங்க ஒழுங்கா உங்க குடுமத்தைக் கவனியுங்க. அவன் போற போக்கும் சரியில்ல, பேசற பேச்சும் சரியில்லை’

‘அப்படியா சொல்றீங்க ? அவனுக்கு இங்கே நல்ல பேரு இல்லையா ?’

‘நல்ல பேரா ? தம்பி அவன் பொறப்பே சரியில்லைன்னு அரசல் புரசலா ஒரு பேச்சு. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பொண்ணுக்குப் பிறந்தவன் அவன்.’

‘அது கடவுளோட அருளினாலன்னு….’

‘சொல்றவங்க எல்லாம் சொல்லுவாங்க. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்லை. இப்படியே ஒரு நாலு கல் தொலை நடந்தீங்கன்னா ஒரு தொழுகைக் கூடம் வரும். அனேகமா இப்போ அவன் அங்கே தான் இருப்பான்’

‘சரி… ஐயா. நாங்க அங்கே போய் பாத்துக்கறோம். ஆனா, ஒரே ஒரு கேள்வி கூட. அவரு ஐஞ்சு அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தாராமே…. அதுவும் பொய்யிங்கறீங்களா ?’

‘தம்பி… எல்லாரும் நிறைய சாப்பாடு கொண்டு வந்திருப்பாங்க. அவங்க கொண்டு வந்ததை பகிர்ந்து சாப்பிட்டிருப்பாங்க. இதெல்லாம் சும்மா. அப்படி ஒரு சக்தி அவனுக்கு இருக்குன்னா அவன் இங்கே வந்து தெருவில இருக்கிற ஏழைங்களுக்கெல்லாம் நிறைய அப்பங்களைக் கொடுத்துட்டுப் போகலாம் இல்லையா ?’ அவர் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

‘என்னடா இது ? இயேசுவை இப்படி கரிச்சு கொட்டிட்டு போறான் ?’

‘வாழற காலத்துல யாருக்கும் மரியாதை இருந்ததில்லை. அதுக்கு இயேசு மட்டும் விதிவிலக்கா என்ன ?’

‘சரி.. இன்னும் எத்தனை நாள் இருக்கு நம்ம திட்டத்தை நிறைவேற்ற ?’

‘இன்னும் ஒரு நாலஞ்சு நாள் தான் இருக்குன்னு நினைக்கிறேன். அப்போ தான் பாஸ்கா விழா வரப்போகுது…’

‘ஓ.. நாலு நாள் போதுமா நம்முடைய திட்டத்தைச் செயலாற்ற ?. நாம யார் மூலமா காரியத்தைச் சாதிக்கிறது ? பிலாத்துவா ? இல்லே ஏதாவது ஆலய குருக்களா ?’

‘பிலாத்துவை நேரடியா சந்திக்க முடியுமா தெரியலை.. ஒரு ஆலய குருவைப் பிடிக்கிறது உத்தமம்’

சரி… அப்படின்னா நாம எருசலேம் ஆலயத்துக்கே போவோம். அங்கே போய் தலைமைக்குரு ஒருத்தரைப் புடிச்சு காரியத்தை முடிக்கலாம். அன்னா, காய்பா ந்னு இரண்டு பேர் இருப்பாங்க. அவங்க இயேசுவுக்கு எதிரிகள் தான். அவர்களைப் பிடிச்சா காரியத்தைச் சாதிக்கலாம்.

‘இல்லேன்னா நாம ஒண்ணு பண்ணுவோம். பேசாம யூதாசைப் பிடிச்சு காரியத்தை முடிப்போம். அவன் தானே இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் ? என்ன சொல்றே ?’

‘சரியா வருமா ?’

‘கண்டிப்பா… நம்ம திட்டப்படி கிறிஸ்தவ மதம் ந்னு ஒரு மதம் இந்த உலகத்துல இருக்கவே கூடாது. அதுக்கு நாம பண்ண வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். இயேசுவைச் சிலுவையில் அறைய விடக்கூடாது. இயேசு சிலுவையிலே அறையப்படலேன்னா உயிர்த்தெழுந்தார்ன்னு யாரும் கதை விட முடியாது. எத்தனையோ இறைவாக்கினர்களைப் போல அவரும் ஒரு இறைவாக்கினர் ந்னு மக்கள் நாலு வருஷம் பேசிட்டு மறந்துடுவாங்க. கிறிஸ்தவ மதம் இருக்காது. திரும்பி நாம புறப்பட்ட இடத்துக்குப் போகும்போ கிறிஸ்தவ மதம் இருக்காது.’

‘ம்ம்.. கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. அப்போ அமெரிக்கா எப்படியிருக்கும்ன்னு யோசிச்சுப் பார்த்தா ஒண்ணும் புரியலை.’

‘அதெல்லாம் நாம போய் பார்த்துக்கலாம். கவலைப்படாதே… நாம இப்போ யூதாஸைப் புடிப்போம்’

அவர்களுடைய திட்டம் இப்போது இயேசுவுக்குச் சிலுவைச் சாவு என்னும் தீர்ப்பை வழங்கியவர்களை விட்டு விட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் பக்கம் திரும்பியது. எருசலேம் தேவாலயத்துக்கு அருகே யூதாஸும், இயேசுவின் மற்ற சீடர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

‘யூதாஸ்…. இங்கே வாயேன்..’

யூதாஸ் திரும்பினான். இதுவரை சந்தித்திராத இரண்டு மனிதர்கள் அவருக்கு எதிரே நின்றிருப்பதைக் கண்டு நெற்றி சுருக்கினான்.

‘என்ன விஷயம்… நீங்க யாரு ?’

‘அதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்போதைக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன் கவனமா கேளு. உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் தரலாம்’

‘என்ன விஷயம் ? அதைச் சொல்லுங்க முதல்ல’

‘நீ.. இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் போறதாக் கேள்விப்பட்டோ ம் உண்மையா ?’

‘அ…அது உங்களுக்கு எப்படித் தெரியும் ?’

‘அதெல்லாம் இந்த உலகத்துக்கே தெரியும். இப்போ விஷயத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ. நீ இயேசுவைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். இயேசுவை அவங்க கொன்னுடுவாங்க..’

யூதாஸ் சத்தமாகச் சிரித்தான். ‘அதான் உங்க கவலையா ? அடப்பாவிகளா ? இயேசுவை அவர்களால கொல்ல முடியாது. இதுக்கு முன்னாடியும் நிறைய தடவை இப்படி அவரைக் கொல்லப் பார்த்தாங்க. ஆனா முடியல. அவர் பெரிய ஆளுப்பா… நான் சும்மா அவரைக் காட்டிக் கொடுத்துட்டு போயிடுவேன். அவர் மறைஞ்சு போயிடுவார். எனக்குக் கிடைக்கிற முன்னூறு வெள்ளிப்பணம் மிச்சம்’

‘முன்னூறா ? முப்பதில்லையா ?’

‘முப்பது வெறும் அட்வான்ஸ் தானே !….’

‘ஓ… அந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது. ம்… சரி… அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு வேணும்ன்னா ஐநூறு வெள்ளிப்பணம் தரோம். நீ அவரைக் காட்டிக் கொடுக்காதே…’

‘யோவ்… சுத்த பைத்தியக்காரர்களா இருக்கீங்களே. நான் இன்னிக்கு ராத்திரி அவரைக் காட்டிக் கொடுத்தாகணும். இல்லேன்னா என்னை அவங்க எல்லாரும் சேர்ந்து கொன்னுடுவாங்க…’

‘இல்லேன்னா கூட நீ தற்கொலை தானே பண்ணிக்க போறே !’

‘உங்களுக்கென்ன பைத்தியமா ? நான் ஏன் தற்கொலை செய்யணும் ?’

‘உன்னோட தலைவர் இயேசு அடிபட்டுச் சாகிறதையும். சிலுவையில தொங்கறதையும் நீ பார்ப்பியா என்ன ?’

‘இயேசு சாகிறதா ? ம்ம்… உங்களுக்கு ஏதோ மன நோய்… இரண்டு நாள் கழிச்சு இயேசு கிட்டே வாங்க. சரியாக்கிடலாம்’ யூதாஸ் சிரித்துக் கொண்டே சென்றான். அவர்கள் இருவரும் குழம்பினார்கள்.

‘ம்ம்… இப்போ என்ன பண்றது ? நமக்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. இன்னிக்கு இயேசுவைப் பிடிச்சுடுவாங்க. அப்புறம் நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கெல்லாம் கொன்னுடுவாங்க. நமக்கு ரொம்ப கொஞ்ச நேரம் தான் இருக்கு… ‘

‘ம்ம்.. இப்போதைக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது. அதிகாலையில போய் பிலாத்து கிட்டே பேசலாம்’

அவர்களுடைய முதல் திட்டம் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் ஆலய ஓரமாய் அமர்ந்தார்கள்.

‘ஐயா… நீங்க இரண்டு பேரும் யாரு ? உங்களை நாங்க பார்த்தேயில்லையே ?’ கேட்ட மனிதர் நடுத்தர வயதைத் தாண்டியிருந்தார்.

‘நாங்க ரொம்ப தூரத்துல இருந்து வரோம். ஒரு காரியம் ஆகணும். ஆனா அதுல சில சிக்கல்கள் இருக்கு. அதான் யோசிச்சிட்டு இருக்கோம்’

‘என்ன சிக்கல் சொல்லுங்க. நான் வேணும்னா உதவி பண்றேன்’

‘இயேசு ந்னு ஒரு மனிதர் இங்கே இருக்காரில்லையா ?’

‘யோவ்… அவரை மனிதர்ன்னு சொல்லாதே அவர் கடவுளின் மகன்’ அவருடைய முகம் சிவந்தது.

‘ச…சரி… சரி… அவரை நாளைக்கு கொல்லப் போறாங்க தெரியுமா ?’

‘என்ன இயேசுவைக் கொல்லப் போறாங்களா ? என்ன சொல்றே’

‘நான் உங்கிட்டே மட்டும் உண்மையைச் சொல்றேன். நீ இதை யார் கிட்டேயும் சொல்லிடாதே. நாங்க கி.பி ல இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டுல இருந்து வந்தவங்க’

‘அப்படிண்ணா ? புரியலையே ?’

‘கிறிஸ்துவின் இறப்புக்குப் பின் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தாண்டியதுக்கு அப்புறம்’

‘என்னது ? எனக்கு ஒண்ணுமே புரியலை. அதுயாரு கிறிஸ்து ? அதென்ன இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு அப்புறம் ?’

‘நீங்க கொண்டாடற இயேசு தான் அந்தக் கிறிஸ்து. அவரை நாளைக்கு கொன்னுடுவாங்க. அதுக்கு அப்புறம் அவர் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவார். அதுக்கு அப்புறம், பேதுருங்கற அவரோட சீடர் இயேசுவின் பெயரில் ஒரு குழு ஆரம்பிப்பாரு. அது உலகெங்கும் பரவும். இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டில கிறிஸ்தவர்கள் அல்லாத எல்லாரையும் கொல்லணும்ன்னு ஒரு சட்டம் வருது உலக சபைல. அதனால மிகப்பெரிய போர் வரும். உலகமே அழியும். அதைத் தடுக்கணும்ன்னா கிறிஸ்தவ மதம் தோன்றவே கூடாது. கிறிஸ்தவ மதம் தோன்றாம இருக்கணும்ன்னா இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாகக் கூடாது. அதனால நாளைக்கு இயேசுவுக்கு மரண தண்டனை வழங்க இருக்கிறதைத் தடுக்கணும். அதற்காகத் தான் நாங்க இங்கே வந்திருக்கிறோம்’

‘எனக்கு நீங்க சொல்றது எதையும் என்னால புரிஞ்சுக்கவே முடியலை. என்னோட அண்ணனுக்கு நாளைக்கு சிலுவை மரணம் தண்டனை இருக்கு.. அந்தக் கவலைல நான் இருக்கேன். நீங்க என்னடான்னா இயேசுவைச் சிலுவையில அறையப் போறதா சொல்றீங்க’

‘ஓ.. அப்படியா ? மிகவும் வருந்துகிறேன். உன் அண்ணன் பெயர் என்ன ?’

‘பரபாஸ்’

‘ப….ப…பரபாஸ் ? அந்த கலகக் காரனா ? நாளைக்கு அவனுக்கு விடுதலையாச்சே. இயேசுவை தான் அவருக்குப் பதிலா சிலுவையில் அறையப் போறாங்க !’

‘என்ன சொல்றீங்க. இயேசுவுக்குப் பதிலா என்னோட அண்ணனுக்கு விடுதலையா ?’ அவனுடைய முகத்தில் மெல்லிய ஆனந்தம்.

‘ஆமா… ஆனா.. இயேசுவை எப்படியாவது விடுவிக்கணும். அதுக்காகத் தான் நாங்க இங்கே வந்திருக்கோம். அப்போ தான் கிறிஸ்தவ மதத்தை வளர விடாமல் தடுக்க முடியும். ‘

‘பரபாஸை விடுதலை செய்ய எந்த ஒரு வாய்ப்பும் இருக்கிறதா தெரியலை எனக்கு. நீங்க சொல்றதை என்னால நம்ப முடியலை’

‘இயேசுவா ? பரபாஸா ? யாரை நான் விடுதலை செய்யணும்ன்னு பிலாத்து நாளைக்கு மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப் போறான். அப்படிக் கேட்கும்போ பரபாஸ் தான் விடுதலையாகணும்ன்னு மக்கள் சொல்வாங்க. அப்படித் தான் பரபாஸ் விடுதலையாவான். இயேசு சிலுவையில அறையப்படுவார்’

‘அடப்போங்கப்பா… இயேசுவா ? பரபாஸான்னு கேட்டா இந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து இயேசு தான் வேணும்ன்னு சொல்லுவாங்க. உங்களுக்குத் தெரியாதா ?’

‘அதுக்காகத் தான் நாளைக்கு பொழுது விடியறதுக்குள்ளே இயேசுவுக்குத் தண்டனை கொடுக்கப் போறாங்க. மக்கள் காலைல தூங்கி விழிக்கும் போ இயேசுவுக்கு தண்டனை கொடுத்துடுவாங்க. விடியற்காலம் மூணுமணிக்கெல்லாம் அவரைப் புடிச்சு, காலைல ஒன்பது மணிக்கு முன்னாடி சிலுவையில அறைஞ்சிடுவாங்க’

‘நிஜமாவா சொல்றீங்க ? இயேசுவைச் சிலுவையில் அறையப்போறது நிச்சயமா ?’

‘ஆமா. அது நிச்சயம் நடக்கும். அவரோட சீடர்கள் மத்தேயு, பேதுரு.. எல்லோருமே அதைப்பற்றி எழுதியிருக்காங்க. அவருக்கு இரண்டு பக்கத்திலயும் இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறையப் போறாங்களாம்’

‘அவங்க யாரு தெரியுமா ?’

‘அது தெரியலை.’

‘அது நீங்க இரண்டு பேரும் தான்…’ அவன் ஒரு கோரமான புன்னகையைச் சிந்தியபடி சொல்ல அவர்கள் இருவரும் அதிர்ந்தார்கள்.

‘நா….நாங்களா ?.’

‘ஆமா. என்னோட அண்ணன் விடுதலையாவான்னா ? அதுதான் எனக்கு முக்கியம். அதுக்கு இடஞ்சலா நீங்க இரண்டு பேரும் இருப்பீங்கன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது. இன்னிக்கு இயேசு கைது செய்யப்படட்டும். நாளைக்கு சாகட்டும். எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை’ சொல்லிக் கொண்டே அவன் தன்னுடைய மூர்க்கத் தனமான கையினால் அவர்கள் இருவரையும் தாக்க இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்து மயங்கினார்கள்.

மறு நாள் காலை ஒன்பது மணி.

இயேசு சிலுவையில் தொங்க, அவருக்கு இரு புறமும் இவர்கள் இருவரும் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘இயேசுவே… நீர் கடவுளின் மகனானால் என்னையும் விடுவித்து நீயும் தப்பித்துக் கொள்ள வேண்டியது தானே’ ஒருவன் கேட்டான்.

இயேசு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘இயேசுவே தப்பு செய்து விட்டேன். நான் இங்கே வந்திருக்கவே கூடாது. என்னை மன்னியும்’ இன்னொருவன் சொன்னான்.

‘இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு அப்புறமிருந்து வந்தால் கூட நீங்க அதே பழைய வசனங்களையே பேசுகிறீர்கள். இதெல்லாம் கடவுளின் சித்தம். கடவுள் நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது’ இயேசு சொல்ல அவர்கள் இருவரும் மரணத்தின் விளிம்புக்கு நழுவினார்கள்.

‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னதென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசு சொல்ல சிலுவைக்குக் கீழே நின்றிருந்த வேடிக்க பார்க்கும் மக்கள் ஏதோ முணுமுணுத்தார்கள்.

மதியம் மூன்று மணி… இயேசு உரக்கக் கத்தினார்.

‘ஏலி ஏலி லாமா சபக்தானி’